Advertisement

UD:22  
வசுந்தராவின் வெட்கத்தை காண அத்தனை அழகோவியமாக இருந்தது ராஜேந்திரனுக்கு… தன்னை கண்டு ஒருத்தி வெட்கம் கொள்கிறாள் அதுவும் இது எனக்கு சொந்தமான வெட்கம் என நினைக்கையில் இவள் தன்னவளாக வேண்டும் என்று மனம் கிடந்து துடித்தது…
ராஜேந்திரன், “என்னை பிடிச்சிருக்கா…?”
“…….”, அவரது கேள்வியில் அவளது மௌனம் அவளது வெட்கத்தையும் பதற்றத்தையும் அத்தனை அழகாய் காட்டியது அவருக்கு…
சிறு புன்னகையுடன், “சொல்லு வசு… நான் உங்கள மாதிரி பணக்காரன் இல்ல… எனக்குன்னு உறவுகள் கிடையாது… நீ சரின்னு சொன்னா என் வாழ்க்கையில வர முதல் சொந்தம் நீ… என் உலகமா நீயா மட்டும் தான் இருக்க போற… ஒருவேலை இப்ப இவங்க சொன்ன மாதிரி உனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு எண்ணம் வந்துர கூடாது… அப்படி வந்துட்டா அதை என்னால தாங்கிக்க முடியாது… அதுக்காக நான் உன்னை நல்லா பார்த்துக்க மாட்டேன்னு அர்த்தம் இல்ல… என்னால முடிஞ்சவரைக்கும் என் வீட்டுல என் உலகத்துல உன்னை மகாரணியா பார்த்துப்பேன்… என்னால முடிஞ்ச எல்லா சந்தோஷத்தையும் குறையில்லாம மொத்தமா தருவேன்… எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… எனக்கு எல்லாமுமா நீ இருப்பன்னு ஏதோ ஒரு எண்ணம் வருது அதை என்னால கட்டுபடுத்த முடியல… இப்ப நீ தான் முடிவு பண்ணனும்… உன்ன நான் கட்டாயபடுத்தல உனுக்கு என்ன தோணுதோ அதையே சொல்லு…” தன் மனதில் இருந்ததை வெளிபடையாக சொல்லி முடித்ததும் வசுந்தராவின் முகத்தையே ஆழமாக பார்த்தவர், “பிடிச்சுருக்கா….?” என்று கேட்க,
முன்பிருந்த வெட்கம் அவரது வார்த்தைகளை கேட்க கேட்க முகம் மாறுபட ஆரம்பித்து, தீவிர பார்வையுடன் தரையை வெறித்து பாய்த்திருக்க… கடைசியாக ராஜேந்திரனின் “பிடிச்சுருக்கா…?” என்னும் கேள்விக்கு, இறுக கண்களை மூடி திறந்தவள், ஒருமுறை கடினப்பட்டு தலையை உயர்த்தாது விழியை மட்டும் உயர்த்தி பார்த்தவள்,
“உங்களுக்கு எல்லாமுமாக நா இருப்பேன்னு உங்களுக்கு எப்படி தோணுச்சோ அதேத்தேன் எனக்கும் தோணுது…” என்று மெல்லிய குரலில் கூறவும், முதலில் அவளது வார்த்தைகளை காதில் வாங்க உன்னிப்பாக கவனிக்க முற்ப்பட்டவருக்கு சற்று நேரம் கழித்தே வசுந்தராவின் வார்த்தையின் பொருள் உணர்ந்து முகம் மகிழ்ச்சியில் பிரகாசமானது தன் மனதை பிரதிபலிக்கும் வகையில்…
தன் மன்னவனின் ஒளிர்ந்த முகத்தை கண்டு வசுந்தராவிற்கும் முகம் வெட்கத்தில் சிவக்க தொடங்க அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தவித்தார் வசுந்தரா…
போவதா வேண்டாமா என்ற வெட்கம் கலந்த குழப்பத்தில் புடவையின் முந்தானையை திருகிக் கொண்டு இருக்க, அதை ரசனையுடன் ரசித்து நின்றார் ராஜேந்திரன்…
வேற ஏதேனும் பேசுவாரோ என்று பொறுத்து பார்த்த வசுந்தரா சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்க்க ராஜேந்திரன் கண்ணில் வழியும் ரசனையில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று இதயத்தை தாக்க… அதை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் நேர்கொண்ட விழியில் ராஜேந்திரனை பார்த்து பேய் முழி முழித்து நின்றார் வசுந்தரா…
அதை பார்த்து ராஜேந்திரன் சிரிக்கவும் சுயத்திற்க்கு வந்த வசுந்தரா அடுத்து அங்கு நில்லாமல் சட்டென வெட்கம் கொண்டு ஓடினார் தன் உணர்வுகளை மறைக்க…
அதன் பின் அனைவர் சம்மதத்தோடு வசுந்தரா ராஜேந்திரன் திருமணம் இனிதாக நிச்சயிக்கப்பட்டது பெரியவர்கள் முன்னிலையில்…
தனிமையில் செல்லதாயின் தூண்டுதலின் காரணமாக காயத்ரி வசுந்தராவிடம், “வசுந்தரா, உனக்கு நெசமாலுமே இந்த கல்யாணத்துல இஷ்டமா…? எதுவா இருந்தாலும் தகிரியமா சொல்லு.. நா உன் அண்ணன்கிட்ட பேசுத்தேன்…”என்று கேட்க..
“எனக்கு இஷ்டந்தேன் மதினி… ஒருவேளை நா வேண்டாம்னுட்டு சொன்னாத்தேன் பின்னாடி கஷ்டபடுவேன்… என்னமோ அவர் கூடத்தேன் சந்தோஷமா இருப்பேனுட்டு தோணுது… “என்று வெட்கத்துடன் சொல்ல, நாத்தனாரின் முகத்தை கைகளால் வழித்து திருஷ்டி கழித்தார் சந்தோஷத்தில்…
அதன்பின் அனைத்து வேலைகளும் வேகமாக நடந்தேற, வசுந்தராவோ அழகிய கல்யாண வாழ்க்கை கனவோடு வலம் வந்து கொண்டிருந்தார், அதை பார்த்த செல்லதாயிக்கு மனதில் இருந்த பயம் கூட விலகி மகளது சந்தோஷத்தை கண்டு தானும் சந்தோஷம் கொண்டார்…
திருமணமும் நன்முறையில் நடந்தேற,  சீர்வரிசைகளை செய்த முருகவேல் ஒருபங்கு நிலத்தை வசுந்தராவிற்கு தருவதாக சொல்ல, அதை மறுத்துவிட்டார் ராஜேந்திரன்… பின் நாளில் வரப்போகும் துயரத்தை பற்றி அறிந்திருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருப்பாரோ என்னவோ விதி தான் இவ்விடத்தில் தன் லீலையை காட்டியிருந்தது…
“ஏன் மாப்பிள என் தங்கச்சிக்கு நா செய்யுத்தேன்… அதை ஏன் தடுக்குதீக…?” என்று முருகவேல் கேட்கவும்,
“இல்ல மச்சான் தடுக்கணும்ன்னு நினைக்கல… எனக்கு விவசாயம் பார்க்க தெரியாது… வசுவை வேலை செய்ய வைக்க எனக்கு எந்த விருப்பமும் இல்ல… வீணா அந்த நிலத்தை எங்களுக்கு தரதை விட நீங்களே பார்த்துக்கோங்க… எனக்கு வசுந்தராவை பார்த்துக்க என்னோட சம்பளமே போதும்… நான் என் மனைவிய சந்தோஷமா பார்த்துபேன்…”என்று கூறியதை கேட்டு முருகவேல் மனதில் வெற்றி புன்னகை ஒன்றை சிரித்துக் கொண்டார்…
இதற்காக தானே படித்த, விவசாயம் தெரியாத மாப்பிள்ளையை அவசரமாக பார்த்து… முருகவேல் சொத்தை பங்கு போட விருப்பம் இல்லாமல் இவ்வாறு யோசித்து திருமணம் பேச, ராஜேந்திரனோ பணம் இல்லாமல் போனாலும் குணம் நிறைந்தவராய் இருந்தார்…
அவரது வார்த்தையில் செல்லதாயிக்கு இஷ்டமில்லை என்றாலும் ராஜேந்திரன் மேல் நல்மதிப்பு பெரிதும் உண்டானது…
அதன்பின் ராஜேந்திரன் வசுந்தராவின் வாழ்வில் வசந்தம் மட்டுமே வீசியது என்று தான் சொல்லவேண்டும்… அன்பிற்கு அடங்கி வாழும் வசுந்தராவும் ராஜேந்திரன் காட்டிய காதலில் முழுவதும் நனைந்து வாழ்க்கையின் அழகான நாட்களை அவர் புத்தக ஏட்டில் வரைந்தார்…
நாத்தனாரின் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் காயத்ரி கற்பம் தரிக்க, முருகவேல் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டார்… தன் வாரிசு என்று மகிழ்ந்தவர், அதன் வரவை ஆவலாக காத்திருந்தார்….
ராஜேந்திரன் வசுந்தரா இருவரும் சிறிது நாட்களுக்கு அதாவது தன் சம்பாத்தியத்தில் தங்களுக்கென ஓர் வீட்டை கட்டும் வரை குழந்தை பிறப்பை தள்ளி வைக்க முடிவெடுத்தனர்…
அதன் காரணமாக காயத்ரி முருகவேல் இருவருக்கும் கவியழகன் பிறந்து வருடங்கள் கழித்து தங்கள் செல்வ புதல்வி பூங்குழலியை ஈன்றெடுத்தனர்… தன் ஒட்டுமொத்த அன்பையும் தன் மகளுக்கு கொடுத்தவர், காதலால் மனைவியை குளிர்விக்கவும் அவர் தவறவில்லை…
அதன்விளைவு, சுட்டியாக பூங்குழலி வளர, கோபகாரியாக மாறினார் வசுந்தரா… வெளியில் மற்றவர்களுடன் சண்டையிடுபவள் வீட்டில் சண்டைக்கு தன் அன்னையை தேர்ந்தெடுத்தாள்… இருவருக்கும் சண்டையிடுவதிலேயே பாதி நேரம் போக, இவர்களது சண்டையை பார்த்து ராஜேந்திரனின் பாதி நேரம் கழிந்து விடும்…
வாழ்க்கை அதன் போக்கில் அழகாக செல்ல, விதி தன் விளையாட்டை ஆரம்பிக்க முடிவெடுத்தது… பூங்குழலிக்கு ஒன்பது வயதிற்கும் போது தூக்கத்திலேயே மாரடைப்பு வர தன் அழகிய வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார் ராஜேந்திரன்…
ஒன்பது வயதில் ஒன்றும் புரியாமல் தந்தையின் அருகிலேயே இருந்த பூங்குழலி தன்னை கண்விழித்து பார்க்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்க, அதை பார்த்த வசுந்தராவிற்கு வேதனை தாளவில்லை… கடைசியாக தன் தந்தையை எங்கோ தூக்கி செல்கிறார்கள் என்று அந்த பிஞ்சுக்கு புரிந்ததும் தான் அவளது விழிகளில் கண்ணீர் கரைபுரண்டு ஓட, தந்தையை அணைத்துக் கொண்டாள் தன் தளிர் கைகளால்…
அருகில் இருந்த மஞ்சுளா, வசுந்தராவின் தோழி தான் அவளை ராஜேந்திரனின் பூத உடலை விட்டு பிரித்தெடுக்க, மகள் மற்றும் மனைவியின் பெறும் கதறலோடு அவரது உடல் இடுகாட்டை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தது…
அவரது இந்த எதிர்பாராத இழப்பை வசுந்தராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை… அவரது இறுதி ஊர்வலத்தில் அவர் அழுது புலம்பியதை பார்த்த அனைவருக்கும் நெஞ்சம் பிசைந்தது வலியில்….
அனைத்து காரியங்களும் சடங்கும் முடிந்து அவரவர் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட, செல்லதாயி மகளுடன் அவளது வீட்டிலேயே தங்கிக் கொண்டார்… காயத்ரி முருகவேல், கவியழகனை கவனிக்க வேண்டி வீட்டிற்கு வந்து விட, மூன்று வேலை உணவையும் இங்கேயே கொண்டு வந்தார் காயத்ரி…
தந்தையின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த இளம் குருத்து தந்தை வேண்டும் என்ற அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் இரண்டு நாட்கள் காய்ச்சலில் விழுந்து விட சற்று உடம்பு தேறியதும், செல்லதாயி வற்புறுத்த தன் பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர் பூங்குழலியும், வசுந்தராவும்…
அங்கு சென்ற முதல் இரண்டு நாட்களும் அறையிலேயே அடைப்பட்டு இருந்தனர் வசுந்தராவும், பூங்குழலியும்… தாய் வீடே ஆயினும் திருமணம் என்ற ஒன்று ஆனதும் அது அந்நிய வீடாய் மாறும் வினோதம் பெண்களுக்கு மட்டுமே உண்டு…
பூங்குழலிக்கு தான் இருப்பு கொள்ளவில்லை… ஓரிடத்தில் அடங்கி இருக்கும் பழக்கம் இல்லாதவளுக்கு இரண்டு நாட்கள் அன்னையுடன் ஒரே அறையில் அடைப்பட்டு இருந்தது கஷ்டத்தை குடுக்க மெல்ல அறையை விட்டு வெளியேறினாள்…
அது ஒரு மதிய வேலை ஆனதால் பசியெடுக்கவே மெல்ல பூனை போல் பதுங்கி, சமையலறை நோக்கி நடந்தாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி… அப்பொழுது ஒருகை நீண்டு அவளது காதை பிடித்து திருக,
“ஆஆஆ… அயித்த… விடு…. விடு அயித்த…. வலிக்குது…” என்று அலற,
“என்னடி திருட்டு பூச(பூனை) கணக்கா பம்மிட்டே வரியவ…? என்ன திருகுதனம் பண்ணுத…?” என்று அதட்டவும்,
தந்தை தவறிய நாள் முதல் ஒருவித பயம், தடுமாற்றம் அந்த ஒன்பது வயது குழந்தையின் உள்ளுக்குள் துளிர்விட்டு இருக்க, இப்பொழுது அத்தையின் மிரட்டலில் பயந்து நடுங்கிய பிஞ்சு,
“நா எந்த திருகு தனமும் பண்ணல அயித்த… என்னைய விடுக நா ஆத்தாட்ட போத்தேன்…” என்று அவர் கையில் இருந்து நழுவி ஓட பார்த்தவளின் கையை பிடித்து நிறுத்திய காயத்ரி, அவளது இருகைகளையும் பிடித்து அவளது உயரத்திற்கு குனிந்து,
“உண்மைய சொல்லு புள்ள… என்னத்தைய பண்ண இருந்த…?” என்று முகத்தை இறுக்கமாக்கி மிரட்டவும், முற்றிலும் பயந்து போன பூங்குழலி, கண்கள் கலங்க உதடு துடிக்க,
“நா..நா ன்… பசிச்சுதா அ..அதேன் ஏதாச்சும் சாப்பிட இருக்குமான்னு பா…பாக்கவந்த்தேன் அயித்த… நா.. நா.. எந்த திருகு தனமும் பண்ண வரல… நா.. ஆ…ஆத்தா கிட்ட போ..போத்தேன்… விடு அயித்த… மாமா பார்த்தா எ..என்னைய திட்டும்…” என்று கண்ணீருடன் திக்கி திக்கி பேசிய சின்னவளை பார்த்த காயத்திரிக்கு அடிவயிறு வலித்தது வேதனையில்…
சின்னவளை வேகமாக தூக்கி கையில் வைத்துக் கொள்ளவும், மேலும் பயந்து போனவள், “ஆஆஆ… விடு அயித்த… நா இனி இப்படி பண்ண மாட்டேன்… விடு அயித்த… ஆத்தா…” என்று அவர் கையில் அடங்காமல் கைகால்களை உதறி நழுவ முயற்சித்தபடி அலற, சாப்பாட்டு மேஜையில் அவளை அமர வைத்தவர்,
“ஏய்… வாய மூடு டி…” என்று மிரட்ட,
“ஆஆஆ… விடு என்னைய விடு… நா ஆத்தா கிட்ட போத்தேன்…” என்று கண்ணீரோடு அலற, அறையில் இருந்த வசுந்தரா மகளின் அலறலில் சுயத்திற்க்கு வந்து பதற்றத்துடன் மகளை தேடி செல்கையில் அவர் பார்வையில் விழுந்தது மகளை அதட்டிக் கொண்டு இருந்த காயத்ரியும் எதிரில் கண்ணீருடன் இருந்த மகளும் தான்…
அவர் அருகில் செல்கையில், “ஏய்… கத்துன அவ்வளவு தான் வாய் மூடுடி… மூடுடி’ன்னு சொல்லுத்தேன்ல..காப்படி அளவு இருந்துட்டு ஊரையே கூட்டுற அளவுக்கு கத்துறவ…” என்று காயத்ரி குரலை உயர்த்தி மிரட்டவும் நடுங்கி விட்டாள் சின்னவள்…
அவளது அத்தை கூறியது போல் வாயை இருகைகொண்டு மூடிக்கொண்டவளின் சிவந்து வீங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்கவில்லை…
இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த வசுந்தராவிற்கு இதயம் வெடித்துவிடும் அளவிற்கு வலித்தது… வேகமாக செல்ல இருந்தவரின் கால்கள் அடுத்து காயத்திரி பேசியதை கேட்டு அப்படியே தடைப்பட்டு போனது…
“எதுக்கு டி கண்ணுல தண்ணி வருது இப்ப…? ஆளையும் முழியையும் பாரு… இங்க பாரு நா போய் உனக்கு புடிச்ச பருப்பு சாதமும், உருள உருவளும் கொண்டாறேன்… சும்மா ஆழாம இங்குட்டே இரு… சமையகட்டு பக்கம் வந்து உன் வால அங்குட்டு காட்டாத எண்ணைய காச்சு வச்சிருக்கேன் மேல பட்டுரும்… என்ன புரிஞ்சுதா…?” என்று மிரட்ட, முதலில் ஒன்றும் புரியாமல் முழித்த சின்னவள் பின் ஏதோ புரிந்ததை போல் வேகமாக தன் மண்டையை ஆட்டி வைத்தாள்…
அதை பார்த்து மெல்லிதாக சிரித்த காயத்ரி, அழுது கண்கள் சிவக்க கலங்கி இருந்த கண்களை அழுத்தி துடைத்துவிட்டு, “எங்கையும் போய் கிறுக்குதனம் பண்ணாம இருக்கணும்… ” என்று எச்சரித்துவிட்டு சின்னவளுக்கு உணவை எடுத்துவர உள்ளே சென்றுவிட்டார்…
அதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த வசுந்தராவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது ஆனால் அந்நிமிடம் அவர் மனதில் ஒரு நெருடல் உண்டாக ஆரம்பித்தது அவர் அதை புறம் தள்ள முயன்றும்…
அதே யோசனையில் திரும்பி பார்க்க, ஒன்பது வயதான சின்னவளின் காதின் இருபக்கமும் முயலின் காதை போல் போட்டு இருந்த கொண்டையில் ஒன்று நலுங்கி, தலை கலைந்து கண்கள் கலங்கி, உடை கசங்கி இருந்த மகளை பார்க்க மனம் வலித்தது அவருக்கு…
மேஜையின் மீது அமர்ந்து இருந்தவள் இப்போது சற்று தெளிந்த முகத்தோடு, சம்மனமிட்டு அமர்ந்து இருந்தவளுக்கு கால்கள் துருதுருவென இருக்க, மெல்ல மேஜையை விட்டு வழுக்கி கொண்டு கீழெறங்கியவள்அந்த நீட்ட மேஜையின் ஒவ்வொரு நாற்காலியிலும் அமர்ந்து எழுந்து அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து என விளையாடிக் கொண்டு இருந்தாள் அனைத்தையும் மறந்து… அப்பொழுது,
“ஏய்…” என்ற கர்ஜனையில் மிரண்ட சின்னவள் சுற்றும் முற்றும் பார்க்க கண்களில் கோபக்கனலை கக்கியபடி நின்றிருந்தார் முருகவேல்…
அண்ணன் எதற்காக கோபமாக இருக்கிறார் என்று புரியாமல் வசுந்தரா பார்த்திருக்க, மாமனின் கோபத்தை கண்டு பயந்து இருக்கையில் இருந்து எழுந்து நின்ற சின்னவள் அவரை பார்த்து நடுங்கியபடி இருக்க…
வேகமாக அவள் அருகில் வந்த முருகவேல், “என்ன மெதப்பு இருந்தா இங்குட்டு உட்காருவ… என்னல தகுதி இருக்கு உனக்கு… ஒன்னும் இல்லாத அன்னகாவடிக்கு என்ற இருக்கை கேட்குதோ… தோலை உறிச்சுபுடுவேன்… ஜாக்கிரதை…” என்று சின்னவளின் கைபற்றி இழுத்து மிரட்டியவர் அவளை ஆவேசமாக தள்ள, நான்கடி போய் விழுந்தாள் இருக்கையை பற்றியபடியே….
“ஆஆஆஆ…” என்ற மகளின் அலறல் சத்தம் வசுந்தராவின் இதயத்தில் இரத்தம் கசிய, அண்ணனின் செயலில் விக்கித்து போய் நின்றாள்…
பூங்குழலிக்கு லேசாக விவரம் அறிய ஆரம்பித்ததில் இருந்து மாமன் தன்னிடம் காட்டும் கடுமையை புரிந்திருந்துக் கொண்டவள் அமைதியாக அவரிடம் இருந்து ஒதிங்கியே நின்றாள்…
அத்தையிடம் மட்டும் நேருக்கு நேர் சண்டையில் இறங்குவாள் காரணம் அவரது போலி கோபமும் மிரட்டலுக்கும் பின் இருக்கும் பாசம் அந்த பிஞ்சுக்கு புரிந்தே இருந்தது… குட்டியாக துறுதுறுவென இருக்கும் பூங்குழலியின் மீது அத்தனை பிரியம் காயத்ரிக்கு, சின்னவளுக்கும் அத்தையென்றால் அத்தனை நேசம்… அடி விழாத குறையாக சண்டை பிடிப்பவர்கள் சற்று நேரம் கழித்து பார்த்தால் ‘அத்தை மடி மெத்தையடி…’ என்னும் விதமாக மடியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் பொடிசு…
சத்தம் கேட்டு என்னவென்று  பார்க்க வந்த செல்லதாயி முருகவேலின் பேச்சையும், பேத்தி விழுந்ததையும் கண்டு பதைத்தவர்,
“ஆத்திஇஇ… என் ராசாத்தி… அய்யோ…” என்று ஓடிவந்து அவளை தூக்கி அணைத்துக் கொண்டவர், பேத்தி மாமனை கண்டு மிரண்டு பாட்டியை கழுத்தோடு கட்டிக் கொண்டவளை கண்டு மனம் வலிக்க, முருகவேலை முடிந்த மட்டும் முறைத்து விட்டு பேத்தியை சமாதானம் செய்வதே முக்கியம் என்பது போல் அவ்விடத்தை விட்டு அகன்றார் செல்லதாயி…
முருகவேலோ அவரது முறைப்பை சற்றும் பொருட்படுத்தாமல் தன் தோளில் இருந்த துண்டை உதறி மீண்டும் போட்டுக் கொண்டு , வேலையை பார்க்க சென்றுவிட்டார்… செல்லதாயோ அவரது பேத்தியை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்ய சிறிது நேரத்தில் தெளிந்தவள், பழையபடி தன் அன்னையின் அறைக்குள் பூனையை போல் நுழைந்து எதுவும் நடக்காததை போல் அமைதியாக சென்று அன்னையின் அருகில் அமர்ந்துக் கொண்டாள் மடியில் கையை ஊன்றிக் கொண்டு, தன் பாவாடையில் உள்ள மயில் தரியை நோண்டியபடி…
மகள் தன்னிடம் வந்து அமர்ந்ததும், சின்னவளையே இமைக்கொட்டாமல் பார்த்திருந்தவரின் மனம் முழுதும் தன்னவரின் இழப்புக்கு முன் மகள் இளவரசியை போல் அவர்களது வீட்டில் வலம் வந்தது நினைவிற்கு வர வேதனை தொண்டையை அடைத்தது…
இத்தகைய கொடுமைகளை அனுபவிக்க நேரிடும் என்று அறிந்துதான் ராஜேந்திரன் தன் ராணிக்கும் இளவரசிக்கும் சொர்க்கத்தை முழுவதுமாக காட்டினார் போலும் என்று எண்ணியவளுக்கு அழகை தொண்டையை அடைத்தது… ஆனால் அதை அடக்கியவள் மகளுக்காக அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினாள்…
அந்நேரம் அவர்களது அறைக்குள் நுழைந்த காயத்ரி, தரையில் அமர்ந்திருந்த வசுந்தராவை பார்த்து, “ஏன் வசுந்தரா தரையில் உட்கார்ந்து இருக்கவ… படுக்கைல உட்காரலாம்ல…” என்று கேட்டுக்கொண்டே வந்தவர் பூங்குழலியை பார்த்து,
“ஏய்… வாடி இங்க…?” என்று அழைக்க, சின்னவளோ அத்தையை பார்த்ததும் மேலும் அன்னையுடன் ஒன்றி அமர்ந்துக் கொள்ள, அதை பார்த்த காயத்ரி
“என்னடி திமிரா… வான்னுட்டு அழைக்குதோம்ல… அமுக்கினியாட்டம் உட்கார்ந்து இருக்குறவே… எந்திரிச்சு வாடி…” என்று மீண்டும் அழைக்க, ம்ஹூம் போவேனா என்னும் விதத்தில் அவரையே முறைத்தபடி அன்னையிடமே அமர்ந்திருந்தாள்…
அவளை கண்டு, “என்னடி பார்வ வேண்டி கிடக்கு…? கூப்பிட்டா மகாராணி வர மாட்டீகளோ… குட்டி கழுத… வாடி…” என்று அவள் கையை பிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்தியவர் கையோடு கொண்டு வந்திருந்த சாதத்தை பிசைந்து அவளுக்கு ஊட்ட முற்ப்பட்டார்…
ஆனால் சின்னவளோ அதை வாங்காமல் அன்னையை பாவமாக திரும்பி பார்த்தாள் என்ன செய்வது என்று… மாமனிடம் வாங்கிய பேச்சு, அவளை அன்னையை நோக்கி அனுமதி வேண்டி நிற்க வைத்தது அத்தையின் கையால் உணவு உண்ண…
சின்னவளின் செயல் காயத்ரியின் இதயத்தை கூறுபோட்டது பல நூறாக…. சொந்த அத்தையிடம் பசியென்ற பிஞ்சிற்கு உணவை கூட உண்ண வைக்க முடியாத நிலை அவரை வதைத்தது என்றால்,
மகளின் மீதே பார்வையை செலுத்தி இருந்த வசுந்தராவிற்கு சின்னவளின் அனுமதி வேண்டிய பார்வையால் பெற்ற வயிறு பிசைந்தது… பின் அவளின் பசி அறிந்து உதட்டில் சிறு புன்னகை கீற்றை பதிலாக தர, சின்னவளுக்கு அது புரிந்ததோ என்னவோ சட்டென திரும்பி அத்தையின் கையில் இருந்த உணவு கவலத்தினை வாங்குவதற்காக வாய் திறக்க, காயத்ரியோ நாத்தனாரின் புன்னகையில் உறைந்து போனார்…
‘இது என்னமாதிரியான புன்னகையை…? தன் நிலை குறித்த காழ்ப்புணர்ச்சியா…? மகளின் பசி அறிந்து ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று வலியில் உண்டான இழச்சி புன்னகையா…? கடவுளே…’ அவரது ஒற்றை புன்னகை உண்மையான பாசம் கொண்ட காயத்ரியை பெரிதும் வாட்டியது உள்ளுக்குள்…
அவரையே கண்கள் கலங்க பார்த்திருந்த காயத்ரியின் ஒருவாய் உணவை வைத்திருந்த கை தானாக கீழ் இறங்கியது அவரையும் அறியாமல்…
அன்னையின் அனுமதி பெற்றதும் பசியால் அவசரமாக அத்தையின் கையருகே குருவியை போல் வாய் திறந்து காத்திருந்தவள் அவரது கை மெல்ல கீழ் இறங்கவும் சின்னவளும் கை போன போக்கில் வாயை திறந்துக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கோபம் வந்து விட்டது சின்னசிட்டுக்கு….
சின்னவளை கவனிக்காமல் நாத்தனாரையே பார்த்துக் கொண்டு இருந்த காயத்ரியை பார்த்து உதட்டை பிதுக்கி, சின்ன விழி ரெண்டையும் உருட்டி முறைத்துக் கொண்டு இருந்தாள்…
சில நிமிடங்களுக்கு பின் வசுந்தராவின் பார்வை மகளை விட்டு மாறாதிருப்பதையும், அவரது முகத்தில் இப்போது புதிதாக உருவாகி இருக்கும் நிமிர்வையும் பார்த்து பெருமூச்சு விட்டவர் பார்வையை பூங்குழலியின் புறம் திருப்ப,
சின்னவளின் முறைப்பை புருவம் சுருக்க பார்க்க, அவளோ அத்தையின் கையில் இருந்த பிடி உருண்டை சாதத்தையும் அவரையும் மாறி மாறி பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்…
அப்பொழுது தான் அவளது முறைப்பின் அர்த்தத்தை புரிந்து, “வாயில என்ன கொலுக் கட்டையா வச்சிருக்கவே… வா தொரந்து கூப்பிட்டா குறைஞ்சு போகுது அம்மணிக்கு…ழுழியபாரு…” என்று கன்னத்தில் ஒரு குத்து குத்திவிட்டு ஊட்டி விட ஆரம்பித்தார்…
சின்னசிட்டோ அதற்கும் முறைத்து விட்டு உணவில் கவனமானாள்… அத்தனை பசி போலும் வேகமாக உணவு உள்ளே இறங்கியது… அவளையும் வசுந்தராவின் மாறி மாறி பார்த்தபடியே உணவை ஊட்டிக் கொண்டு இருந்த காயத்ரியின் நினைவுகள் யாவும் கணவனின் செயலை தான் எண்ணிக் கொண்டு இருந்தது…
சொத்தின் மீது மோகம் கொண்டவர் தான் ஆனால் இந்த அளவிற்கு நடந்துக் கொள்பவர் என்று சிறிதும் எண்ணவில்லை… கலைந்த தலையுடன், வாயின் இருபக்கமும் உணவை அடைத்துக் கொண்டு உண்பதிலேயே குறியாக இருந்த சின்ன மொட்டை பாசமாக பார்வையால் வருடியவருக்கு கணவனின் செயலில் மிரண்ட நின்றவளை எண்ணி கண்கள் உடைப்பெடுத்தது… அவரும் தாயல்லவா, மேலும் அடுத்து ஒரு கருவையும் சுமந்து வருபவருக்கு அந்த வலியை நன்றாக உணர முடிந்தது…
இங்கு, செல்லத்தாயோ மீண்டும் வீட்டிற்கு வந்த முருகவேலிடம் தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் காட்ட, அவரோ தான் செய்தது சரியே என்னும் விதமாக வாதம் செய்ய, கடைசி ஒன்றும் முடியாமல் கண்ணீருடன் அமைதியாகி விட்டார்…
பூங்குழலி உண்டு முடித்ததும், தன் வாயை துடைத்துக் கொண்டே அவர் மடியில் இருந்து நழுவி, “இங்க பாரு அயித்த இன்னொரு முறை இந்த கன்னத்துல குத்துர சோலியெல்லாம் வச்சுக்காத….” என்று சின்னவிழி இரண்டையும் உருட்டி மிரட்ட,
“குட்டிக்கு திமிர பாரு… அப்படித்தேன் டி குத்துவேன் என்னல பண்ணுவ…?” என்று அவரும் பதிலுக்கு போலியாக முறைத்தபடி சின்னவளுடன் சரிக்கு சமமாக சண்டைக்கு நிற்க….
“ம்ம்ம்…” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தவளை பார்க்க அத்தனை ஆசையாக இருந்தது அள்ளி அணைக்க… ஆனால் அவளை சீண்ட வேண்டுமே என்ற எண்ணத்தில் அமைதி காத்தார் காயத்ரி,
“என்னடி முறைக்குறவ…? கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன்…”
” நோண்டுவீக நோண்டுவீக நா அதுவரைக்கும் சும்மாவா இருப்பேனாக்கும்… உங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிர மாட்டேன்…” என்று காதோரம் தொங்கிக் கொண்டு இருந்த ஒருபக்க முயல்குட்டி ஜடையை ஒயிலாக தட்டி விட, காயத்ரிக்கு சிரிப்பு தான் வந்தது…
“இங்க பாரு அயித்த… இன்னொருமொற இப்படி பண்ண… நீரு தூங்கும் போது படுக்கைல கட்டெரும்ப புடிச்சு போட்டுருவேன் ஜாக்கிரத…” என்று மிரட்டவும்,
“அடிங்கு… என் காப்படி சைஸ் சிருக்கிமவ… கட்டெரும்ப போடுவாளாம்ல… எப்படி போடுவான்னு நானும் பாக்குதோம்ல… வாடி இங்க… ” என்று முந்தியை எடுத்து உதறி இடுப்பில் சொருகி கொண்டு அவளை அழைக்க, சட்டென காயத்ரியிடம் இருந்து விலகி அன்னையை ஒட்டிக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள் பூங்குழலி…
“அடியேய்… என்ன பெருசா வாயடிச்ச இப்ப என்ன ஆத்தா பக்கத்துல போய் பம்மிக்கிட்டு இருக்குறவ…”என்றபடியே வசுந்தராவின் அருகில் வந்தவர்,
“வசுந்தரா, உள்ளுக்குள்ள கண்டதையும் போட்டு கொழப்பிக்காதவே. அம்புட்டும் சீக்கிரம் செரியாயிரும்…” என்றவருக்கு பதில் கூறாமல் தன்னை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த மகளை கையோடு சேர்த்து அணைத்தவர், அவளது உச்சியில் ஒரு முத்தம் வைத்து அதில் கன்னத்தை பதித்து கொண்டார்… இனி இவள்தான் தன் வாழ்க்கையென்பதை குறிக்கும்படி இருந்தது அச்செயல்…
தொடரும்….

Advertisement