Advertisement

UD:19
“எம்புட்டு தைகிரியம் இருந்தா என்ற கைய புடிப்பான்… இன்னைக்கு செத்த டா மவனே…” என்று திரும்பி பார்த்தவளின் வாய் அப்படியே மூடிக் கொண்டது…
அவளது கையை பிடித்து இழுத்தவன் அதே வேகத்தில் அவளை இழுத்து சென்று, திருவிழாவிற்கென்ற போட பட்டிருந்த ஷீட் கடையின் பின்னே நிற்க வைத்தான்…
அவளை அந்த தற்காலிக சுவரில் சாய்த்து நிற்க வைத்தவன், வேகமாக யாரேனும் பார்த்தார்களா என்று தன் கண்களை சுழற்றி பார்த்தான் எச்சரிக்கைகாக…
தன் கையை இழுத்தது ராசு அல்ல, கவியழகன் என்று கண்டதும் பூங்குழலிகுள்ள ஒருவித அமைதி, படபடப்பு…
ஏனோ முன்தினம் அவனை வேட்டி சட்டையில் கம்பீரமாக பார்த்ததில் இருந்து அவளது மனம் மேலும் அவன்பால் சரிந்தது…
அதோடு இல்லாது நிலத்தை மீண்டும், முன்பு குத்தகைக்கு எடுத்தவரிடமே நியாயமான விலைக்கு குடுத்தது அவளை மிகவும் கவர்ந்தது என்பதே அவளால் மறுக்க முடியாத உண்மை…
சில நொடி பொழுதில், பார்வையை சுற்றிலும் சுழல விட்டவனின் முன் சிறு இடைவேளையில் அவனை பார்த்து நின்றிருந்தவளின் கண்களில் அத்தனை காதல் பொங்கி வழிந்தது அவள் அறியாமலே… ஆனால் அதை கவனியாத கவிக்கு துரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்…
சில நொடிகள் கழித்து, ஒரு நிம்மதி மூச்சு விட்டவன் அப்பொழுது தான் குனிந்து, தலை கவிழ்ந்திருக்கும் பூங்குழலியை கண்டு புருவம் சுருக்கினான்…
ஆம், கவியழகன் பெருமூச்சு விட்டவுடன் அம்மணி உஷாராகி தலையை கவிழ்ந்துக் கொண்டாள் தன் முகத்தை மறைத்துக் கொள்ள…
“என்ன முட்டக்கண்ணி… அமைதியா இருக்குற…?” என்றவன் மேலும் அவளை நெருங்கி நின்று அவள் சாய்ந்து நின்றிருந்த சுவற்றில் தன் இடது கையை ஊன்றியபடி நின்றான் அவள் மேல் உருவான கிரக்கத்தில்…
அவனது வார்த்தையில் அவளுள் இருந்த படபடப்பு சட்டென ஓடி சென்று கோபத்தை வரவழைத்தது அவனிடம்,
“ஏய்… அப்படி கூப்பிடாதேனுட்டு சொல்லுத்தேன்ல… லூசு…” என்று விரல் நீட்டி மிரட்டியவளின் கருவிழி அழகை உள்வாங்கியபடி மேலும் நெருங்கி மெல்லிய குழைந்த குரலில்,
“குழலி… எனக்கு ஒரு ஆசை…” என்றவனின் நெருக்கம் சுத்தமாக பேதைக்கு புரியவில்லை…
இனி அவன் இதுபோல் தன்னை அழைக்க கூடாது என்னும் தீவிரம் மட்டும் அவளுள் இருந்ததால் அவனது நெருக்கத்தையும் குரல் வேறுபாட்டையும் உணராது போனாள்…
“உமக்கு என்ன ஆச இருந்தா என்ன இல்லாட்டி எனக்கு என்னவே… நீரு இனி என்னைய அப்படி கூப்பிட கூடாது… என்ன வெளங்குச்சா…?” என்று கண்கள் உருட்டி கேட்டவளின் அழகை ரசித்துக்கொண்டே,
“உன் முட்டக்கண்ணுக்கு ஒரு முறை முத்தம் கொடுத்துக்கட்டுமா… பிளீஸ் டி…” என கோரிக்கை வைத்தவனை விழி விரித்து வாய் பிளந்து அதிர்ந்து பார்த்தவளின் முகத்தை சிறு புன்னகையுடன் அளந்தவன்,
அவளது அனுமதிக்காக காத்திருக்காது அவளது விரிந்த விழியழகில் முத்தமிட நெருங்க, நொடியில் சுதாரித்தவள் அவன் நெஞ்சில் தன் இருகைகளை அழுத்தி பதித்து அவனை தன்னை விட்டு தள்ளிவிட முயன்றாள் தன் பலம் மொத்ததையும் கூட்டி…
காதல் மயக்கத்தில் இருந்த கவி அதை எதிர்ப்பார்க்காததால் அவளது செயலில் சற்று பின்னோக்கி தடுமாறி விழப்போனான் பிடிமானமின்றி…
தன்னைவிட்டு விலக்கி நிருத்த நினைத்து தள்ளியவள், அவன் விழ போகிறான் என்று புரிந்ததும் சட்டென அவன் சட்டை காலரை பற்றி,
“ஏய்ய்ய்…”என்று சிறு அலறலோடு அவனை வேகமாக தன்னை நோக்கி இழுக்க, பின்பக்கமாக விழ போனவன் இப்பொழது முன்பக்கமாக அவள் மேல் விழுந்தான் அவளது இழுப்பினால்..
முதல் அணைப்பு, எதிர்பாரா விதம் உண்டான முதல் அணைப்பு… இருவரும் ஒருவருக்கொருவர் அருகாமையை உணர்ந்த முதல் அணைப்பு… இருவர் இதயமும் அந்நொடி அவர்களை விட்டு மற்றவர் இதயத்தில் குடிபுகுந்த தருணம்…
தான் விழுந்து விடுவோம் என்று எண்ணியவன் குழலி தன்னை இழுக்கவும் பிடிமானத்திற்காக அவளை தோளோடு அணைத்துபிடித்தான் லேசாக…
குழலிக்கு இதயம் இப்பொழது ஹைஸ்பீடில் துடிக்க தொடங்கியது பதற்றத்தில்… தாம் அவனது கைவளைவிற்குள் இருக்கிறோம் என்ற எண்ணமே என்னவோ போல் இருந்தது பெண்ணவளுக்கு… ஏனோ அவனது பிடியில் இருந்து விலக தோன்றாது தன் கைகளால் பற்றிய அவனது காலரை இன்னும் இறுக்கிக் கொண்டாள் புதிதாக உண்டான உணர்ச்சி போராட்டத்தில்…
பட்டும் படாமலும் தன் நெஞ்சை உரசும் அவளது கன்னங்களின் ஸ்பரிசத்தை சில நொடிகள் கண்கள் மூடி  ரசித்து உள்வாங்கியவன், பின் இருக்கும் இடம் உணர்ந்து மெல்ல கைகளை விலக்கி தொட்டும் தொடாமலும் இருந்த அவளது வதனத்தை தன் இரு கைகளில் ஏந்தியவன் இறுக மூடியிருந்த அவளது விழிகளை கண்டு இதழ்கடையோரும் சிறு புன்னகையை சிந்தினான் அவளின் தோற்றத்தில்…
மெல்ல தன் கைகளுக்குள் பொதிந்திருந்த அவளது முகத்தை மேலும் இறுக்கி, தன் பெருவிரலால் அவளது கன்னத்தை மெல்ல வருடினான், சிறு வயதில் உதித்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு…
அப்பொழுது முகத்தை லேசாக சுருக்கியவன், “ஏன் டி சின்ன வயசுல இருந்த அந்த கொழு கொழு கன்னம் எங்க போச்சு…?” என்று மெல்லிய குரலில் கேட்கவும், பட்டென கண்களை திறந்த குழலி எதிரில் மிக அருகில் நின்றிருந்த கவியை கண்டு தெளிவடையவும், சடுதியில் கோபம் வர, அவன் கைகளை தட்டிவிட்டவள் அவனை விட்டு விலகி இரண்டடி தள்ளி நின்றாள் முறைத்துக் கொண்டே…
“ம்ப்ச்ச்… பரவாயில்ல… இதுவும் நல்லாதான் இருக்கு…”என்றவன் அவளது கோபத்தை பொருட்டு படுத்தாது ஒற்றை கண்ணை சிமிட்டி லேசாக கன்னம் தட்டி சொல்ல, பொங்கிவிட்டாள் பூங்குழலி…
“போடா லூசு… எங்கிட்ட உன் பொறுக்கிதனத்த காட்டுன தொலைச்சுபுடுவேன் தொலைச்சு…”என்று மிரட்டியவளை பார்த்து இப்பொழுது பல் வரிசை தெரிய சிரித்த கவி, மீண்டும் ஒற்றை கண்ணை சிமிட்டி
“எப்படி இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னை எனக்குள்ள தொலைய வச்சியே அந்த மாதிரியா…?” என்று புருவம் உயர்த்தி கேட்க,
ஏனோ அவளால் அவனிடம் தன் முழு கோபத்தை கூட காட்ட முடியாமல் திணறினாள்…  அந்த கடுப்பில் அவனை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு காலால் தரையை எட்டி உதைத்து முகத்தை சுருக்கியபடி லேசாக சிணுங்கியவள் அவனை தாண்டி செல்ல முற்ப்பட்ட போது அவளது கைபிடித்து தடுத்தான் கவியழகன்…
இங்கு பூங்குழலியை கவி கைப்பிடித்து இழுத்து செல்லும் போது கனிமொழி,
“ஏய்ய் புள்ள…” என்று கத்தி அவள் பின்னே செல்ல போகையில் இடையில் நந்தி போல் வந்து நின்றான் விக்கி…
அவனை கண்டதும் அதிர்ந்து விழியை அகல விரித்தவள் பின் நொடியில் முகத்தை உரென்று மாற்றி விக்கியை முறைத்துவிட்டு விலகி, தோழியை தேடி நடக்க தொடங்கினாள்…
ஆனால் அதற்குள் கவி குழலியை பக்கமிருந்த கடையின் பின் நிருத்தியிருக்க… இங்கு கனி கண்களால் சுற்றும் முற்றும் தேடிய போதும் ஓரமாக ஒதிங்கிய இரு தலையும் இவளது கண்களுக்கு புலப்படவில்லை…
அவளது அருகில் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி நின்றிருந்த விக்கி அவளையே கண்களால் விழுங்கும் வேலையை செவ்வென செய்ய தொடங்கினான் முன்தினம் செய்ய தவறிய வேலையை…
“நீ என்ன தேடுனாலும் அவங்க உன் கண்ணுல சிக்க மாட்டாங்க… இந்நேரத்துக்கு லவ் சீனை ஆரம்பிச்சு இருப்பாங்க…” என்று சிரிப்புடனே பேசியவனை தேடுவதை நிறுத்திவிட்டு முகத்தை திருப்பி ஒரு கடுமையான பார்வை(முறைப்பை) வீசி விட்டு, தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்தாள் அடி மேல் அடி வைத்து நடந்தவாரே…
அதற்கும் புன்னகையை சிந்தியவன், அவளுடன் இணைந்து மெல்ல நடந்தபடி, “கோபமா….?” என்று கேட்டவனை புரியாது கேள்வியாக ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள் கனிமொழி…
அவளையே கவனித்துக் கொண்டு வந்தவன், “ப்ப்பா… கண்ணாலையே கேள்வி கேட்குற… வாய் திறந்து பேச மாட்டீயா…?”
இப்பொழுது சுத்தமாக அவனை கண்டுக்கொள்ளாது தன் தாவணியின் நுனியை திருகிபடி பார்வையால் தோழியை தேடினாளே தவிற அவன்புறம் மறந்தும் திரும்பவுமில்லை நடப்பதை நிறுத்தவுமில்லை…
“ம்ம்ம்ம்ம்… சோ… என்மேல கோபமா தான் இருக்க… அதுக்கு என்ன பண்ணலாம்…?இல்ல நான் என்ன பண்ணட்டும்…” என்று தாடையை தடவியபடி யோசிப்பது போல் பாவையில் கனியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே கேட்டான் கள்வன்…
கனிக்கு உள்ளுக்குள் என்னவோ போல் இருந்தது, அது என்னவென்று தான் அவளால் பகுத்தறிய முடியவில்லை… ஏன் அதை அறிந்துக்கொள்ளவும் அவள் விரும்பவில்லை… ஆனால் அவன் என்ன பேசுகிறான் என்று கவனித்தபடி, தோழியை தேடுவது போல் விழிகளை சுழல விட்டு போக்கு காட்டினாள்…
அவளின் திருட்டுதனத்தை ஓரளவுக்கு தெரிந்துக் கொண்ட விக்கி, “சரி நீ தான் சொல்ல மாட்ட… நானே என்ன பண்ணுறதுன்னு யோசிக்குறேன்… ம்ம்ம்… ஓகே… இன்னைக்கு இங்க நீ சாப்புற, வாங்குற எல்லாத்துக்கும் நான்தான் காசு குடுப்பேன்… ஓகேயா….?” என கேட்டதும் கனிமொழிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது…
“என்னவே வம்பு பண்ணுதீயா…?” என்று அவன்புறம் திரும்பி கையை கேள்வி கேட்பது போல் காட்டி கேட்க, விக்கி
“அப்பாடா பேசிட்டியா… இப்ப தான் நிம்மதியா இருக்கு… எங்க நேத்து நடந்ததுக்கு கோவமா பேசாம இருப்பியோன்னு நினைச்சு பயந்துட்டேன்…” ஏதோ பலநாள் பழகியவன் போல் அவன் பேசியது கனிக்கு சற்று வியப்பை அளித்தாலும் எரிச்சலை உண்டாகியது ஒரு பக்கம்…
யார் என்னவென்று அறியாத ஒருவன் தனக்கு உரிமையுள்ளவன் போல் காசு தரேன் என்பதும், பேசுவதும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
“இங்குட்டு பாருவே…. நானு யாரு என்னனுட்டு தெரியாம எங்கிட்ட வம்பு பண்ண முழுசா ஊர் போய் சேர மாட்ட… ஆமா நாங் கோபமா இருக்கேன்னுட்டு உங்கிட்ட சொன்னேனா… சொல்லுவே… நீ யாரு நானு கோவத்தைய காட்ட…? என்னமோ பொண்டாட்டிக்கு வாங்கி குடுக்குறப்பல நாங் காசு தரெனுட்டு சொல்லுத… வேண்ணாம்… தேவையில்லாம எங்கிட்ட வச்சுக்காத பொறவு என்ன பண்ணுவேனுட்டு எனக்கே தெரியாது…” என்று பொறிந்தவளை அதே கள்ள சிரிப்போடு எதிர்க்கொண்டவன்,
“ஹே… கூல் டி என் வில்லேஜ் பியூட்டி…” என்றதும் தான் தாமதம்…
“அடி செருப்பால… வெளக்கமாறு பிஞ்சு போயிரும்… யாருக்கு யாருவே வில்லேஜ் பியூட்டி…?” என்று முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு சண்டைக்கு நின்றாள் கனி அத்தனை கோபம் அவளுள்…
இருவரும் சண்டையிட்ட படி பேசினாலும் பிறர் கவனியாத வண்ணம் கம்மிய குரலில் தான் அவனது காதல் வார்த்தைகளும் அவளது ஆவேச பேச்சும் இருந்தது…
“நீதான்…. எனக்கு…”என்று தோளை குழுக்கி அசால்ட்டாக மீண்டும் சிரிக்க கனிமொழிக்கு அவனது வார்த்தையை விட அந்த சிரிப்பு அவளை ஏதோ தானாக எரிச்சலை உருவாக்கி வெறுப்பேத்தியது…
“கொடலை உருவிடுவேன்ல கோட்டி பயலே… என்னத்துக்குவே இப்ப சும்மா சிரிக்க…?” என கேட்டவளின் முகம் அத்தனை கோபத்தை தத்தெடுத்திருந்தது…
“ஏன் சிரிச்சா என்ன … ?”என கேட்டவன் தொடர்ந்து, “ஓஓஓ… மாமனோட சிரிப்பு உன்ன டிஸ்டர்ப் பண்ணுதா… ?” அவள் புறம் குனிந்து ரகசியம் போல் கேட்க,
அவன் அவள் புறம் சரியவும் கனி பின்புறமாக சரிந்து நிற்கும் சமயம் அவனது வார்த்தையில் முகத்தை சுழித்தவள்,”ஆஆஆ…. நெனப்புத்தேன் பொலப்ப கெடுத்துச்சாம்…” என்று முகத்தை தோள் பட்டையில் இடித்துக் கொண்டாள்…
அவளது ஒவ்வொரு செயலையும் ரசித்தவன், “ரொம்ப அழகா இருக்க கனி….” என்று கண்களில் காதல் பொங்க கூறியவன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைக்க, மிரண்டு விட்டாள் கனிமொழி…
‘அய்யோ ஆத்தி… என்ன இவீக இப்படி பண்ணுதாக பொது இடத்துல… வேண்ணாம்டி கனி குழலிய கூட சமாளிச்சகலாம் ஆனா இவீக கிட்ட மாட்டுனா அம்புட்டுத்தேன்… யாராச்சும் பார்த்து அப்பாருக்கிட்ட சொல்லிட்டா சங்குதான் டி உனக்கு… குழலி மாட்டுனா கூட அவ சமாளிச்சுக்குவா நான் நீ மாட்டுனா அவசரத்துக்கு வாயில இருந்து வார்த்தையே வராம அடித்தேன் வாங்குவ புள்ள…’ என்று வேகமாக  கணக்கிட்டவள், விக்கி சடுகுடு ஆடும் அவளது விழியழகை ரசித்துக்கொண்டிருந்த சமயம், எங்கு ஓடுகிறாள் எதை நோக்கி ஓடுகிறாள் என்று எதுவும் பார்க்காது விக்கியிடம் இருந்து விசுக்கென்று ஓட தொடங்கினாள்…
அவளது செயலை பார்த்து முதலில் புரியாது முளித்தவன், பின் புரிந்ததும் வாய்விட்டு பெரிதாது சிரித்தபடி மெல்ல அவளை பின் தொடர்ந்து ஓடினான்…
“ம்பச்ச்… விடுல எங்கைய… விடு விடுனு சொல்லுதோம்ல்ல… விடு…”என கவியிடம் சிக்கிய தன் கையை சிறு சிணங்கலுடன் விடுவித்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் நிமிர்ந்து அவன் முகம் காணாது…
சில நிமிடங்கள் தொடர்ந்த அவனது இந்த விளையாட்டை கைவிட்டான் கவி…
“சரி விடுறேன் ஆனா நீ ஓட கூடாது ஓகே யா…?” என்று டீல் பேச, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்
“பொறவு… ? இங்குட்டே நின்னு கத பேசுணுமாக்கும்…”
“நீ பேசுனா நான் கண்டிப்பா நிப்பேன் முட்டக்கண்ணி… பேசுறியா…?” என்று கண்ணடிக்க,
“ஏய்ய்ய்… அப்படி கூப்பிடாதலே… எனக்கு கெட்ட கோவம் வந்துரும் சொல்லிட்டேன்…” என்று அவனிடம் சிக்காத மற்றொரு கைவிரலை காட்டி மிரட்ட, அந்த விரலையும் தன் விரலால் கிடுக்கிப்பிடி போல் போட்டு வழைத்து பிடித்தவன்,
அவளை மேலும் தன்புறம் இழுத்து அவள் முகம் நோக்கி குனிய, அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவள் கவி தன்னை நோக்கி குனியவும், முகத்தை சுருக்கி தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் சட்டென…
அதை இதழ் மலர்ந்த சிரிப்போடு பார்த்தவன், “எனக்கு எப்பவுமே நீ  முட்டக்கண்ணி தான்… நான் அப்படி தான் கூப்பிடுவேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…”
அவனது வார்த்தையில் சுருங்கிய அவள் முகம் இப்பொழுது கோபத்தில் உருமாறியது தீவிரமாக…
“ம்பச்ச்… விடு டா என்னைய…” என்று அவனை தள்ளிவிட்டு நேராக நின்றவள் அவனிடம் இருந்து கையை விடபட முயற்சித்தவளுக்கு ஒன்று புரிந்தது, இவனுடன் பேசுவது வீண் என்பது…
“திரும்பவும் சொல்லுறேன்… உன் கைய விடுறேன் ஆனா நீ ஓட கூடாது…” என்றவனை உறுத்து விளித்தவள்,
‘இந்த வம்பு புடிச்சவன், நாம செரின்னுட்டு சொல்லாம விட மாட்டான்… பேசாம சொல்லி வைப்போம்… பொறவு அவன் அசந்த நேரத்துல ஓடிரலாம்…சே… இப்படி வந்து மாட்டிக்கிட்டியே குழலி… ‘ என்று எண்ணியவள் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து, எங்கோ பார்த்தபடி
“செரி…” என்க,
கவி, நமட்டு சிரிப்புடன் ” என்னது சரி…?” என்று வம்பிலுக்க,
அவனை பார்த்து முறைத்தவள், கவி புருவம் உயர்த்தி கேலியாக சிரிக்கவும் அவனது நோக்கம் புரிந்து  வேறுவழியின்றி “செரி… ஓட மாட்டேன்வே… போதுமா…”என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்லி வைத்தாள்…
அவளை அதே புன்னகையுடன் பார்த்திருந்தவன், இழுத்து முன்பு போல் சுவற்றில் சாய வைத்து மனமே இல்லாது அவள் கையை விடுவித்தான் தன் பிடியில் இருந்து…
அவன் விடுவித்ததும் பிடிப்பட்டிருந்த கைகளை நன்கு தேய்த்து கொண்டவளின் முகம் மட்டும் அவனை முறைக்க தவறவில்லை…
அவளது முறைப்பை கூட காதல் பார்வையாக ஏற்று எதிர்த்து காதல் பார்வையை வீசிய கவி அவளது இருபுறமும் தன் கைகளை அணையாக்கி நின்றான் அவள் முகம் பார்த்து…
அதை கண்டு, ‘இது எதுக்காம்…’ என எண்ணியவளின் விழியில் தெரிந்த கேள்வியை சரியாக புரிந்து கொண்டவன்,
“நீ எனக்கு டிமிக்கி குடுத்துட்டு ஓடிர கூடாதில்ல அதான்…”என்று ஒற்றை கண்ணை சிமிட்ட,
குழலி, உதட்டை சுழித்து “ம்க்கும்…..” என்க, அதையும் அவன் பார்வையால் உள்வாங்கிக் கொண்டிருந்தான்…
மேலும் சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தது இருவருக்குள்ளும், குழலி எங்கேங்கோ பார்வையை அழையவிட்டபடி அவனுக்கோ தன்னவளை ரசித்தபடி…
அவனுக்கு அவளது மனது  புரிந்தேயிருந்தது, இத்தனை நேரம் அவள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே, மேலும் அந்த அளவிற்கு அவளை சிறைப்பிடிக்கவும் இல்லை ஆனால் அதை எதிர்த்து அவள் போராட கூட முயற்சிக்காது தன் முன் நிற்பவளின் மனம் என்னவென்று புரிந்தது கவியழகனுக்கு…
அவளுக்கும் அதே நிலைதான் போலும்… ராசுவிடம் உண்டான கோபம் ஏன் இவனிடம் வர மறுக்கிறது… அவனும் தன்னை காதல் என்ற பெயரில் தொல்லை செய்பவன், இவனும் அதே நோக்கத்துடன் தன்னை இங்கு இப்படி நிறுத்தி சிறைப்பிடித்து வைத்துள்ளான்… ஆனால் ஏன் எனக்குள் இந்த வித்தியாசம் என்று ஆராய்ந்தவளுக்கு ஒரு நொடி கூட அதை காதல் என்று ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை…
அவனது தோற்றம் தனக்கு பிடித்து இருந்தது, தந்தையை போல் அல்லாது நில விஷயத்தில் அவன் நடந்துக் கொண்டதும் பிடித்திருந்தது அவ்வளவே அதற்கு மேல் காதல் என்று சொல்லும் அளவிற்கு அவள் சிந்தனை செல்லவில்லை… அதற்கு காரணம் முருகவேல் என்றும் அறியாமல் இருந்தாள் பெண்ணவள்…
சில நிமிடங்கள் சென்ற நிலையில் தன் யோசனையில் இருந்து வெளிவந்தவள், ஒரு பெருமூச்சுடன் “நாங் போவோணும்…” என்று எங்கோ பார்த்தபடி சொல்ல,
அதே இதழோரோ புன்னகையுடன், கவி “போலாமே…” என்று மையலோடு இழுத்து கூறவும் அவனை பார்த்து இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முறைத்து பார்த்தப்படி,
“இப்படி அண போட்டு வச்சா எப்படி போறதாம்… ” என அவளது இருபுறமும் இருந்த அவனது கையை பார்வையால் சுட்டிக்காட்டி கேட்க,
அவனும் தன் கைகளை ஒருமுறை பார்த்துவிட்டு மெல்ல ஓரடி அவளை நோக்கி முன்னேறினான் வலது கையை எடுத்துவிட்டு…
அவன் முன் வரவும் அனிச்சையாக பின் சென்று பல்லியை போல் ஒட்டிக் கொண்டவளின் கண் இமைகள் படபடக்க நின்றாள் அடக்க ஒடக்கமாக…
கவி தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்ததை அவளிடம் நீட்ட, அவள் புரியாது அவன் கையில் இருந்ததை பார்த்துவிட்டு நிமிர்ந்து அவனை கேள்வியாக பார்த்தாள், அந்த கேள்வியை படித்தவன் போல்,
“அன்னைக்கு பஸ் ஸ்டாப்ல சாய்ந்திரம் பார்க்கும் போது உன் கண்மை லேசா சைடுல இழுத்து இருந்துச்சு… உன் முட்டக்கண்ணுக்கு மை ரொம்ப ஆழாக இருக்கு டி… அதை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு… நீ என்ன பிராண்ட் யூஸ் பண்ணுறன்னு தெரியல… ஆனா இது நல்லா இருக்கும் 24ஹார்ஸ் அப்படியே இருக்கும்… அதான் உனக்காக வாங்கினேன்…” என்ற இதமாக பேசியவனை பார்த்து பேந்த பேந்த விழித்தாள் பூங்குழலி…
‘என்ன இவீக இப்படி பேசுறாக…. தப்பாச்சே…’ என்று யோசித்து தன்னை குழப்பிக் கொண்டாள் என்று தான் கூற வேண்டும்… அவனது செயல் அவளை கவரந்தது தான் ஆனால் வேண்டாம் என்று தான் தோன்றியது அவளுக்கு….
“இங்குட்டு பாரு… இந்த மாதிரி பேசுறது பண்ணுறது குடுக்குறது… இதெல்லாம் எங்கிட்ட வேண்டாம்… நாங் ஏதோ நீரு அந்த பெரியவர போல இல்லனுட்டுத்தேன் இம்புட்டு தூரம் அமைதியா இருக்கேன்… அதைய உனக்கு சாதகமா எடுத்துக்கிட்டு எங்கிட்ட வால் ஆட்ட நினைச்ச அதைய ஒட்ட நறுக்கிருவேன்… மருவாதையா வழி விடு இப்போ…” என்று தன் மனதில் இருந்ததை அப்படியே அவனிடம் காட்டினாள் ஒளிவு மறைவின்றி…
“ஆஹான்… ஓகே பைன்(fine)… அப்ப நான் என் அப்பா மாதிரி இல்லன்னு தெரிஞ்சுகிட்டல… அப்புறம் ஏன் என்கிட்ட முகத்த திருப்புற… கொஞ்சம் சிரிச்சு தான் பேசுறது… அப்படியே இதையும் வாங்கிக்குறது…” என்று மீண்டும் கையில் இருந்த காஜலை அவள் புறம் நீட்டினான்…
“இங்குட்டு பாருவே… எனக்கும் அந்த பெரியவருக்கும் ஆகவே ஆகாது… பொறவு எப்படிவே உங்கூட நட்பு வச்சுப்பேன்னுட்டு நினைக்க…? உங்கிட்ட பல்லை காட்டி பேசணும்னுட்டு எனக்கு அவசியமும் இல்ல… இந்த காஜலை உங்கிட்ட இருந்து வாங்கி ஆகணும்னு தேவையும் இல்ல… ஒழுங்கா வழிய விடு…” என்று தெளிவாக நிமிர்ந்து கண் பார்த்து பேசியவளை இப்பொழுது உற்றுப்பார்த்தவன் மனதில்,
‘சரி அவசர படாத… இப்ப இவ்வளவு தூரத்துக்கு மேடம் இறங்கி வந்து பேசுறதே பெரிய விஷயம் சோ கொஞ்சம் விட்டுபிடிப்போம்… எங்க போயிற போரா…?’ என்று முடிவெடுத்தவன்,
“சரி… உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்… இதை வாங்கிக்கோ… இரு இரு நான் முழுசா சொல்லி முடிச்சுறேன்… உனக்காக தான் இதை வாங்கிட்டு காலைல நில விஷயத்தை முடிச்சுட்டு, மதியத்துல இருந்து இங்கேயே காவல் கிடக்குறேன் நீ மெதுவா அஞ்சு மணிக்கு வர, எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணி இருக்கேன் அதுக்காச்சும் வாங்கிக்கோ… இல்லாட்டி காசு குடுத்து கூட வாங்கிக்கோ… பிளீஸ்…” என கெஞ்சவும், குறுகுறுவென அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் கடைசி வார்த்தையில் முகம் தெளிந்து யோசிக்க தொடங்கினாள்…
குழலியின் முகத்தையே பார்த்திருக்க, அதில் வந்த போன மாற்றங்களை கண்டு ‘ஆஹா கிளி சிக்கிருச்சு…’ என்று குதுகலப்பட அவளின் வார்த்தைக்காக காத்திருந்தான்…
சற்று யோசித்தவள் தனக்காக அவன் காத்திருந்தான் என்பது இதயத்தில் ஏதோ போல் இருக்க, அந்த காஜேலை மறுக்க தோணவில்லை இப்பொழுது அவளால்… சில நொடிகள் யோசித்தவள், அதை காசு குடுத்து வாங்கி கொள்ளலாம் என்னும் முடிவுடன் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க, அதுவரை அவளை காதல் பார்வையால் தழுவியவன் சட்டென ஆர்வமாக அவள் கூற போகும் வார்த்தைக்காக காத்திருப்பது போல் மாற்றினான் திருடன்…
“செரி… அதைய நாங் காசு குடுத்து வாங்கிக்குத்தேன்…” என்றவள் அவனிடம் காஜலை வாங்கியவள் அதன் விலையை பார்த்து கண்கள் விரிய தன் அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டினாள்…
“தேங்ஸ் முட்டக்கண்ணி…” என்ற அதை அவளிடம் தந்ததும் விலகி நின்றுக் கொண்டான் கன்னியமாக…
அவளது அதிர்ந்த முகத்தை பார்த்து, “என்னாச்சு முட்டக்கண்ணி…?” என்று கேட்க, அதிர்ச்சியில் இருந்தவள் அவனது அழைப்பில் நிமிர்ந்து முறைத்துவிட்டு, அந்த காஜலை அவனிடமே நீட்டி,
“எனக்கு இது வேண்ணாம்… இந்த வெலைக்கு எல்லாம் என்னால வாங்கிக்க முடியாது… எங்கிட்ட காசும் இல்ல… ஆத்தாக்கு தெரிஞ்சா தோல உரிச்சுடும்…” என்று கையை நீட்டியபடி முகத்தை சுருக்கி சொல்ல,
“ம்ம்ம்… சரி அப்ப அதோட பாதி விலையை மட்டும் குடு… உனக்கு ஆஃப்ர் தரேன்…” என்க,
“ம்ப்ச்ச்… ஏன் இப்படி இம்ச பண்ணுத…பாதி வெலைக்குனாலும் நூறு ரூபா வருது…. சாதாரண மைக்கு இம்புட்டு செலவு பண்ணுவாகளா… என்னால முடியாது சாமி…” என்று பலமாக மறுக்க,
“பிளீஸ் டி… நான் உன்கிட்ட காசை எதிர்ப்பார்க்கவே இல்ல… நீ வேண்டாம்னு சொன்னதால தான் காசு வாங்க ஒத்துக்கிட்டேன்… பிளீஸ்… உனக்கு நான் முதல் முறையா வாங்கி தரேன்… வேண்டாம்னு சொல்லாத டி…” என அடிமட்டத்திற்கு கெஞ்சவும், பூங்குழலியின் இதயத்தில் எங்கோ ஒன்று உருகியதை அவளால் உணர முடிந்தது…
“செரி… வாங்கிக்குத்தேன்…” என்று உதட்டை சுழத்து லேசான குழந்தையின் சிணுங்களோடு ஒத்துக் கொண்டவளுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது தன்னிடம் காசில்லை என்று… அதில்
“அய்யயயோ…” என்று தலையில் கை வைத்துக் கொள்ள,
“தேங்ஸ் முட்டக்கண்ணி… ஆனா இப்ப என்ன ஆச்சு…”
“அது…” என தயங்கியவள் மேலே தொடர்ந்தாள் “காசு அம்புட்டும் அந்த கனி புள்ள கிட்ட இருக்கு… இப்ப எங்கிட்ட காசு இல்ல…” என்று உதட்டை பிதுக்க, கவியழகன் மனம் கொஞ்சமே கொஞ்சம் வண்டி வழியை விட்டு தடம் மாறியது அவளது பிதுங்கிய இதழை கண்டு…
சட்டென தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், தலையை கோதியபடி “ஒண்ணும் பிரச்சினை இல்ல… பொறுமையா குடு… எங்க போயிற போரேன்..”என்றதும் அறைமனதாக சரியன தலையை ஆட்டியவள் மெல்ல அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றாள் அவனை ஓரவிழியில் பார்த்தபடி….
விக்கியிடம் இருந்து தப்பித்த கனிமொழி அவன் கண்ணில் சிக்காது போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் வெகநேரமாக… விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் அவனும் தேடிக் கொண்டிருக்க, ‘வீட்டுக்கே ஓடிட்டாளா…?’என்று எண்ணியபடி கண்களை அழைய விட்டவன் பார்வை வட்டத்தில் விழுந்தாள் அவனது வில்லேஜ் பியூட்டி…
தொடரும்….

Advertisement