Advertisement

UD:17  

சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு வழி ஒன்றும் புலப்படாததால் மெதுவே எழுந்து தோப்பிற்கு சென்றார் பல வித சிந்தனைகளில்…

அப்பொழுது, “என்னவே முருகா… என்ன பகல் பொழுதே தோப்பு பக்கம் போராப்புல இருக்கு….?”

தன் சிந்தனையில் இருந்தவருக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லாததால், நெஞ்சை நீவியபடி , “ஆமா ராசு… செரி நான் அப்படியே போத்தேன்… பொறவு பேசுத்தேன் உன்கூட….” என்றவர் அப்பொழுது தான் அவரை முழுதாக பார்த்தார்…

“என்ன ராசு… எங்குட்டோ தொலவா கிளம்புறாப்புல இருக்கு…?” என்று கேட்கவும்,

“என்னப்பா முருகா, ஒண்ணும் தெரியாதாப்பல கேட்டுக்குத… நம்ம ஜெயசீலன வூட்டு விஷசத்துகுத்தேன் போயிவாரேன்….” என்றதும் பழைய நினைவில் குரல் சுருதி குறைய,

“ஓஓஓஓ….” என்று முருகவேல் சொல்லவும்,

“என்னப்பா இப்படி சொறத்தே இல்லாம இருக்க… ஆனா சும்மா சொல்ல கூடாதுயா…. நீரு பெரிய குடும்பத்த சேர்ந்தவியகன்னுட்டு காட்டிட்டியலே…”என்றதும் முருகவேல் அவர் என்ன கூறுகிறார் என்று புரியாமல்,

“என்னவே சொல்லுதீக…? எனக்கு ஒன்னும் விளங்கலையே…”

“அட என்னப்பா நீரு… உனக்கும் ஜெயசீலனுக்கும் ஆகாட்டியும் நீரு பெரிய குடும்பனுட்டு காட்ட சீர் வரிசைய எல்லாம் பலமால செஞ்சு அசத்திபுட்டிகலே… காலம் அம்புட்டையும் மாத்தும்ணுட்டு இப்ப புரியுதுயா…. “என்று சொல்லி பெரிதாக சிரித்து வைத்தார்…

அவர் கூறிய செய்தியில், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, பல்லை கடித்து, “என்னவே சொல்லுதீக… சீர் வரிசையா…? யாருல எங்வூட்டு சார்ப்பா பண்ணது…?”

அவரது இறுகிய முகமும், கோபத்தை அடக்கிய குரலையும் கண்டவர், ‘அடகொப்புறானே…. நம்மத்தேன் உளறிட்டோமோ…. அப்ப இவருக்கு தெரியாமத்தேன் தம்பி பண்ணுச்சோ… அய்யோ மாட்டி விட்டுட்டோமே…’ என்று எண்ணி கலங்கியவருக்கு தெரியவில்லை அங்கு கவியழகனுக்கும் ஜெயசீலனுகும் நடந்த வார்த்தை மோதல்கள்…

கவியழகன் கிளம்பும் போது அங்கு சென்றவர், அவனை கண்டு யோசனையுடன் நிக்கும் சமயம் அவர் அருகில் வந்தாள் அவரது மகள்… கனியின் தங்கையும் இவரது மகளும் தோழி என்பதால் அவள் முன்பே விஷச வீட்டிற்கு வந்திருந்தாள்…

“அய்யா… வாங்க…” என்று கையை பிடித்திழுக்க,

“ஆங்… வாரேன் தாயி…” என்றவர் மகளுடன் நடந்தபடி,

“இது பெரியவரோட மகனாச்சே…” என்று லேசாக முணுமுணுக்க, அது அருகில் வந்துக் கொண்டிருந்த சின்னவளின் செவியில் விழுந்தது தெளிவாக…

“ஆமாங்கய்யா… அந்த அண்ணே எம்புட்டு சீர் செஞ்சு இருக்கு தெரியுமா…?” என்று சீர் வரிசையை சொல்ல, அதை தவறாக புரிந்துக் கொண்டார் இந்த மனிதர்…

பெரியவரின் வார்த்தையில் தான் இவை அனைத்தும் நடந்தது என்று… அதன் பின் அவர் அதை பற்றி யாரிடமும் கேட்கவும் இல்லை அதை பற்றின பேச்சும் இவர் காதுக்கு வரவில்லை…

அதுவே இப்பொழுது முருகவேல் முன் மாட்டிக்கொண்டு முழிக்க காரணமாக போயிவிட்டது…

“என்னவே… கேட்டதுக்கு பதில சொல்லாம முழிக்குதீக…?” என்று மீசையை முறுக்கி கடுமையாக கேட்கவும்…

திக்கி திணறி,”இல்ல முருகா… அது ந..நம்ம கவி தம்பிய பார்த்தேன்…”என்றதும் முருகவேலின் கண்கள் சிவந்தது கோபத்தில்,

“எங்கவே பார்த்த…?”

“ஜெயசீலன் வூட்டு விஷேசத்துலத்தேன்…” என்று பதில் அளித்தவருக்கு அப்படியொரு தர்மசங்கடம்…

“நெசமாத்தேன் சொல்லுதியா…? நீரு நெருல கண்டீரா….?” என்று மீண்டும் உறுதி படுத்திக் கொள்ள கேட்க ,

“ஆமா முருகா… உமக்கு தெரிஞ்சுத்தேன் வந்துருப்பாகன்னுட்டு நெனச்சேன்… விட்டுருப்பா… பக அம்புட்டும் நம்மோட போகட்டும்… அவிகளாச்சும் நட்போட இருக்கட்டும்யா… தம்பியும் அதையத்தேன் நெனைச்சு வந்து சீர் செஞ்சுட்டு போயிருக்கும்னுட்டு நினைக்குத்தேன்…” என்று முருகவேலுக்கு புரிய வைக்க முயல, அவரை முடிந்த மட்டும் முறைத்து பார்த்த முருகவேல வேகமாக தோப்பை நோக்கி நடக்க தொடங்கினார்…

அத்தனை கோபம் அவருள்… நில விஷயத்தில் தன் பேச்சை மீறி நடந்துக் கொண்டது ஒருவகையில் கோபம் என்றால் இப்பொழுது அவனது இச்செயல் முருகவேலின் கோபத்தை பண்மடங்கு அதிக்கரிக்க செய்தது…

தோப்பு வீட்டிற்கு வந்தவர் ஆவேசமாக குறுக்கும் நெருக்குமாக நடந்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்று முடியாமல், “என்னவே நினைச்சுகிட்டு இருக்கான்… அவேன் பாட்டுக்கு நிலத்த மாத்தி குடுக்கான்… எனக்கு பகனுட்டு தெரிஞ்சும் சீர் செய்ய போயிருக்கான்… அம்புட்டு எகத்தாலமாயி போச்சோ… இன்னைக்கு கேட்குத்தேன் எந்த நினைப்புல இருக்கானுட்டு…” என்று தன்போக்கில் புலம்பியவருக்கு ஆத்திரம் மட்டும் நடங்கவில்லை எத்தனை நேரம் கடந்தும்…

“மன்னிச்சுக்க தம்பி… உன்ற அப்பாருக்கு தெரிஞ்சுத்தேன் இது அம்புட்டும் செய்யுறதா நினைச்சு உன்ற அப்பாரு கிட்ட பேசிப்புட்டேன்…” என்று சங்கடமாக தலையை குனிய,

“அய்யோ அங்கிள்… என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க… விடுங்க… நான் பார்த்துக்குறேன்… நான் அங்க போகணும்னு முடிவு பண்ண அப்பவே எனக்கு தெரியும் யாருச்சும் அப்பா கிட்ட சொல்லுவாங்கன்னு… எப்படி இருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலை வந்து இருக்கும் நான் அத பார்த்துக்குவேன்… யாரோ சொல்லி தெரியுறது நீங்க சொல்லி தெரிஞ்சு இருக்கு அவ்வளவு தான் … இதுக்கெதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்குறீக…” என்று கவி சமாதானம் செய்ய முயற்சிக்க,

“அதில்ல தம்பி… உங்கப்பாரு ரொம்ப…” என்று கூறும் முன் இடைமறித்தான் கவி…

“தெரியும் அங்கிள்… அப்பா ரொம்ப கோவமா இருப்பாரு… அவரை நான் பார்த்துக்குறேன்… நீங்க கவலை படாதீங்க…” என்று தெளிவுடணும் கம்பீரத்துடணும் அவன் பேசிய விதம் ஏதோ அவருள் சமாதானம் ஆக செய்தது…

“ம்ம்ம்… செரிங்க தம்பி… அப்போ நான் போய்ட்டு வாரேன்…” என்று விடைபெற்றார் கவியழகனின் மில்லில் இருந்தது…

முருகவேல் கோபமாக தோப்பை நோக்கி செல்லவும் தவறு செய்ததாக உணர்ந்தவர், கவியழகனை கண்டு விஷயத்தை கூறி விடலாம் என நேரே அவன் இருக்கும் இடத்திற்கே சென்று நடந்ததை கூறி மன்னிப்பு வேண்ட, அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் கவியழகன்…

அவர் சென்றதும், “ம்ம்ம்… இன்னைக்கு திரும்பவும் ஒரு பைட் சீன் இருக்கு… கடவுளே…. எப்ப எல்லாம் சரியாகும்… ரெண்டாவது சண்டைக்கே நாக்கு வெளிய தள்ளிரும் போல….” என்று முணுமுணுத்தவன் தான் செய்துக் கொண்டிருந்த வேலை யை மேற்பார்வையிட தொடங்கினான் வர போகும் வாக்குவாத்தை எதிர் நோக்கி…

மாலை ஆறு மணி வாக்கில் வீட்டுக்குள் நுழைந்த கவியழகனை வேறவேற்றார் முருகவேல்…

“என்ன தம்பி எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா…?” என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேட்க,

தந்தை எதை கேட்கிறார் என்று தெரிந்தும் எதுவும் தெரியாததை போல், “எத ப்பா கேட்குறீங்க…?”

“ஏன் துரைக்கு நான் எதைய கேட்குத்தேன்னுட்டு தெரியாதோ…?”

ஏதோ சற்று யோசிப்பது போல் தாடைய தடவி விட்டு,”ஓஓஓ…. அந்த நில விஷயமா… கொஞ்சம் பேச்சு வார்த்தை நடந்திருக்கு ப்பா… அதுக்கு முடிவு நாளைக்கு தான் தெரியும்… பார்க்கலாம் என்ன சொல்லுறாங்கன்னு…” என்று அலசாட்டாக சமளிக்க, பொறுமையில்லாந்தார் முருகவேல்…

“என்ன தம்பி… என்னுட்டியே உங்க வேலைய காட்டுதீயலோ…. நான் நிலத்தைய பத்தி பேசலனுட்டு உங்களுக்கு தெரியும்…” என்று சற்று குரலை உயர்த்த, கவியழகனும் இப்பொழுது நிமிர்ந்து நின்று கைகளை கட்டிக் கொண்டு அவரை நேர்பார்வை பார்த்தான் எதையும் எதிர்க்கொள்ளும் முடிவுடன்…

“ஆமா தெரியும்… இப்ப அதுக்கு என்ன ப்பா…?”

“என்ன தம்பி எங்கிட்டியே நெஞ்ச நிமித்தி சொல்லுதீக…விஷயம் தெரிஞ்சும் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்கீகன்னா… அம்புட்டுத்தேன் எனக்கு மருவாதையா…?  ஆரு வீட்டு பணத்துல ஆருக்கு சீர் செயுறது.. ம்ம்ம் …”என்று தான் அமர்ந்து இருந்த சோபாவில் இருந்து வேகமாக எழுந்தவர் கோபத்துடன் அவனை பார்த்து கேட்க, கவி நின்ற இடத்தில் இருந்து ஒரு இன்ச் அளவும் அசையாது அதே பார்வையுடன் தந்தையை பார்வையால் அளந்தபடி…

“எத நீங்க மரியாதைன்னு சொல்லுறீங்க ப்பா…? எனக்கு புரியல…இப்ப உண்மையான உங்க மரியாத எது தெரியுமா…?” என்று கேட்டு அவரை கூர்மையாக பார்க்கவும், முருகவேலும் மகனையே பார்த்திருக்க, மேலே தொடர்ந்தான்…

“பூங்குழலி உங்களுக்கு தரா பாருங்க அது தான் இப்ப உங்க நிலைக்கான மரியாதை…” என்று கூறவும் வெடித்து விட்டார் முருகவேல்…

“தம்பிஈஈஈ….” என்று கண்கள் சிவக்க மூக்கு வெடைக்க அவனை முறைத்து நின்றவர்,

“என்ன பேசுதீகன்னுட்டு புரிஞ்சுத்தேன் பேசுறீகளா…? அந்த திமிர் பிடிச்ச கழுத… உங்க அப்பார மரியாத குறவா நடத்துரா… அவளைய இழுத்து வச்சு நாலு விடாம… எங்கிட்டையே வந்து என்னைய குத்தம் சொல்லுதீக…”

அவரை அதே நிதான பார்வையில் அளந்தவன்,”தப்பு உங்க மேல இல்லன்னு மனசாட்சி தொட்டு சொல்லுங்க… நான் இந்த ஊர்ல இல்லாட்டியும் இங்க வந்த பின்னாடி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்… அதுனால எனக்கு எதுவும் தெரியாதுன்னு தேவை இல்லாம பூங்குழலியை எதுவும் சொல்லாதீங்க ப்பா…”

“ஓஓஓ… நினைச்சேன் உங்காத்த சொன்னாளோ…?அவளைய…” என்று பல்லை கடிக்க, அவரை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன்,

“இங்க நடந்த விஷயத்த அம்மா தான் சொல்லணும்னுட்டு அவசியம் இல்ல ப்பா… ஊர்ல எல்லாருக்கும் தெரியும்… இன்னும் சொல்ல போன எனக்கு வீட்டுல இருந்து நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயம் பத்துல ரெண்டு பகுதி கூட இல்ல…”

“இங்குட்டு பாரு தம்பி… நான் எது பண்ணாலும் அது உங்க நன்மைக்குத்தேன்…” என்று கூறவும் கவிக்கு கோபம் வர தொடங்கியது…

“எது ப்பா நன்மைன்னு சொல்லுறீக… இப்படி எல்லாரையும் வேதனை பட வச்சுட்டு எந்த நன்மைய எங்களுக்கு குடுத்தீங்க… நீங்க பண்ணுற வேலைல முதல்ல நம்ம வீட்டுல நான் வரதுக்கு முன்னாடி வரை எல்லாரும் நிம்மதியா இருந்தாங்களா…? சொல்லுங்க…?” என்று ஆவேசமாக கேட்டுவிட்டு விடைக்காக அவர் முகத்தை பார்த்திருக்க, முருகவேல் அவனை வெற்று பார்வை பார்த்திருந்தாரே ஒழிய பதில் கூறவில்லை…

“பதில் சொல்ல முடியலையா… நல்லா தெரிஞ்சுக்கோங்க ப்பா… இப்ப நீங்க சேர்த்து வச்சேன்னு சொல்லுற பணம் நம்ம வீட்டுல யாருக்கும் முக்கியமில்ல… அதுக்கு முக்கியதுவம் குடுத்த நீங்க பாசத்துக்கு முக்கியதும் குடுக்க தவறிட்டீங்க… அதுக்கு சைந்தவியே ஒரு உதாரணம்… வாழ்க்கைல எல்லா விஷயத்தையும் பணத்தால வாங்க முடியாது ப்பா…”என்றவன் அவரது பதிலையோ அல்லது அவரது விளக்கத்தையோ கேட்க ஒரு நொடி கூட அங்கு நில்லாமல் தன்னரை நோக்கி நடந்தான்….

நான்கடி முன் சென்றவன் சட்டென நின்று, இடது கை பெருவிரலால் தன் நெற்றியை நீவியபடி, மெல்ல திரும்பி “அப்புறம் இன்னொரு விஷயம்…”என்றவன் நிமிர்ந்து தந்தையை நேருக்கு நேர் பார்வையில்,” இன்னைக்கு நான் சீர் செஞ்சது எல்லாம் என் சம்பாதியத்துல வாங்குனது நீங்க சேர்த்து வச்ச பணத்துல இல்ல…”என்றவன் திரும்பி வெடுவெடுவென தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்…

முருகவேலுக்கு அத்தனை அவமானமாக இருந்தது… ஒன்று தன் மகன் தன்னை எதிர்த்து ஜெயசீலன் வீட்டு விஷேசத்தில் கலந்துக் கொண்டது என்றால் கடைசி மகன் உரைத்த தன் பணம் என்ற வார்த்தையில் மேலும் குன்றி போனார்…. தனக்கு தெரிந்து மகன் எந்த ஒரு விஷயத்திற்கும் பணத்தை எதிர் பாராது தன் சம்பாதித்த பணத்தில் அவன் செலவு செய்வது மன கஷ்டத்தையும் அவமானத்தையும் உண்டாகியது…

அது சில நொடிகளில் கோபமாக மாற, வேகமாக வீட்டை விட்டு வெளியேற வாசல் நோக்கி செல்ல, அப்பொழுது கோவிலுக்கு சென்று திரும்பிய  காய்திரியும் சைந்தவியும் உள்ளே நுழைந்தனர்…

சைந்தவி தந்தையை ஓர் பார்வை பார்த்துவிட்டு வேறெதும் பேசாது ஏன் சிறிதும் கண்டுக்கொள்ளாது முன்நோக்கி சென்றவிட, அவளை பார்த்திருந்த முருகவேலுக்கு மகனது வார்த்தை இப்பொழுது நினைவுக்கு வரவும் செல்லும் மகளையே விழியெடுக்காது பார்த்திருந்தார்…

அவரது பார்வையை கண்டு காயத்ரி, “என்னாச்சுங்க…? என்ன பாக்குதீக…?” என்று தன்மையாக கேட்க,

“ஒண்ணுமில்ல…” மனைவியின் கேள்வியில் சற்றே மிக சற்றே தனித்திருந்த கோபம் மீண்டும் தலை தூக்க, வெடுக்கென்று பதிலுறைத்துவிட்டு வெளியர,

‘என்னாச்சு இந்த மனுஷனுக்கு…?’என்று இரண்டொரு நொடி நின்று பார்த்திருந்தவர் பின் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்…

வீட்டை விட்டு வெளியேறினாலும் முருகவேலின் எண்ணங்கள் முழுவதும் மகனுது வார்த்தையிலேயே சுழன்று கொண்டிருந்தது…

சிறு வயதில் சைந்தவிக்கு தந்தையென்றால் அத்தனை பிரியம்… முருகவேல் அவளை பெரிதும் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் பாசம் இருக்கதான் செய்தது… வெளியே எப்பொழுது சென்றாலும் மகளுக்கென்று ஏதேனும் உண்ண வாங்கி வருவார்… ஆனால் சற்று விவரம் தெரிய ஆர்மபித்து தந்தையின் செயல்கள் அனைத்தும் தெரிய வரவும் தந்தையிடம் இருந்து விலக தொடங்கினாள் சைந்தவி… அவர் வாங்கி வருவதையும் தவிர்க்க தொடங்கினாள்… தன் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற எதற்கும் அவள் பணமென்று நின்றதில்லை அதுவும் அன்னையிடம் தான் நிற்ப்பாள் தந்தையை கண்டுக்கொள்ளவே மாட்டாள்…

ஒரு கட்டத்தில் மகளும் தந்தையும் சில விஷயங்களில் எதிர் எதிர் நின்று சண்டையிட தொடங்க, விறுசல் பெரிதாக உருமாறியது இருவருக்கும் நடுவில்…

அனைத்தையும் எண்ணியவருக்கு ஏதோ தவறிளைத்து விட்டோமோ என்ற எண்ணம் உள்ளுக்குள் லேசாக துளிர் விட தொடங்கியது…

தந்தையிடம் குரலை உயர்த்தி பேசிவிட்டு அறைக்கு வந்தவனுக்கு இன்னும் கோபம் உள்ளுக்குள் இருக்கதான் செய்தது… அதை தனிக்க, குளியரைக்குள் புகுந்துக் கொண்டான் கவியழகன்…

ஷவரில் சில நிமிடங்கள் நின்றவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் வர தொடங்கியது அவனுள்… எண்ண அலைகள் தன் தந்தையிடம் தொடங்கி எங்கெங்கோ சென்று முடிவில் அடைக்கலம் புகுந்தது என்னவோ தன்னவளின் இடைபகுதியில் தான்….

“கொல்லுற டி முட்டக்கண்ணி…” என்ற புன்னகையுடன் முணுமுணுத்தவன் அவளது நினைவிலேயே சுகமான குளியலை முடித்துவிட்டு வெளி வந்தான்…

வெகுநேரம் பால்கனியில் தன்னை மறந்து பூங்குழலியின் நினைவில் நின்றிருந்தவனை கலைத்தது அப்பொழுது வீட்டினுள் நுழைந்த காரின் ஓசை…

“இவனை எப்படி மறந்தோம்…. எங்க போனான் என்ன பண்ணானு தெரியாம யோசிக்காம இப்படியா பேக்கு மாதிரி நிக்குறது… சே…” என்று தன்னை தானே கடிந்துக் கொண்டவன் அறையை விட்டு வெளியேற நினைக்கையில் அவனை தடுத்தது அலைபேசியின் சத்தம்…

எடுத்து பார்த்தவன் அதில் ஒளிர்ந்த பெயரை கண்டு, “நாளைக்கு வரை டைம் குடுத்திருந்தோமே எதுக்கு இப்பவே கால்(call) பண்ணுறாங்க…?” என்று காலையில் சந்தித்த மூவரையும் எண்ணியபடி அதை உயிர்பித்து காதில் வைத்தான் கவியழகன்…

“வணக்கம்… சொல்லுங்க அய்யா… என்ன விஷயம்…” என்று பணிவுடன் பேசியவனின் கம்பீரத்தில் முன்பு போல் இப்பொழுதும் கவர்ந்தவர்,

“வணக்கம் தம்பி… ஒண்ணுமில்லைங்க… யோசன பண்ணி சொல்ல சொன்னீகலே… அத்தேன், நிலத்த குத்துகைக்கு எடுத்து விலச்சல உங்கிட்டியே விக்கலாமுன்னுட்டு முடிவு பண்ணியிருக்கோம்… அத்தேன் ஒரு வார்த்த முன்னாடியே சொல்லிபுடுவோம்னுட்டு கூப்பிட்டேன் தம்பி… ” என்று பவ்யமாக தங்கள் முடிவை கூற,

“சந்தோஷங்க அய்யா… ஆனா அவசரபட்டு எதையும் சொல்லாதீக… நாளைக்குவர டைம் எடுத்துக்கோங்க… நல்லா தீர பேசி யோசிச்சிங்க அப்புறமும் சரின்னா நாளைக்கு ஆப்பீஸ்க்கு வாங்க அடுத்து செய்ய வேண்டியத செய்யலாம்….”என்றவனின் வார்தைகள் அவர்களின் உள்ளத்தில் நிம்மதி உண்டாகியது…காரணம்

இவன் அவனது தந்தையை போல் அல்ல என்பதே பெரும் நிம்மதியை உள்ளுக்குள் தோற்றவித்தது….

“சரிங்க தம்பி… அப்ப நாளைக்கு ஆப்பீஸ்ல பார்க்கலாம்…”என்று அழைப்பை துண்டித்தார்…

அடுத்து அவனது நினைவிற்கு வந்தது எல்லாம் புதிதாக தொடங்க போகும் எண்ணை மில், கோதுமை உற்பத்தி செய்யும் பேக்டிரியை பத்திதான்….

மேலும் பதினைந்து நிமிடங்கள் அடுத்து யாரை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று யோசித்து முடிக்க, “இன்னும் இந்த பக்கி ஏன் ரூம்க்கு வரல… வரவழில கிட்சன்ல செட்டில் ஆயிட்டானா….?” என்று யோசித்தபடி ரூமை விட்டு வெளியே வர, தந்தை அவரது அறை வாயிலில் முகம் இறுக நின்றிருப்பதை கண்டு புருவம் சுருக்கியவன்..

‘இவர் என்ன பண்ணுறாரு…?’ என்று யோசித்தபடி அருகில் சென்றவனுக்கு அறையினுள் இருந்த வந்த விக்கியின் குரலில் அவனது யோசனை முகம் புன்னகை முகமாக மாறியது…

“ஆண்ட்டி நீங்க சூப்பரா இருக்கீங்க இந்த ஃபோட்டோல… அங்கிள் கொஞ்சம் சுமார் தான்… ஏன் எப்பாரு சிடுசிடுணு இருக்காரு…?” என்று கேட்டபடி அறையில் மாட்டி இருந்த அவர்களது கல்யாண ஃபோட்டோவை பார்த்து வலக்கடித்துக் கொண்டிருந்தான்…

அவனது வார்த்தையில் முருகவேல் முகம் கோபத்தை காட்ட, கவியழகனோ வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்க,

தந்தையை கண்டவன்,’உனக்கு நேரம் சரியில்ல டா மச்சான்… கைமா ஆகுறது கன்பார்ம்…’என்று எண்ணியவனுக்கு அவனை காப்பாற்றும் எண்ணம் கூட இல்லாது காய்திரியுடன் அவன் பேசுவதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான் அவனது எதிர்காலத்தை நினைத்து….

இங்கு முருகவேலுகோ கோபம் இப்பொழுதோ அப்பொழுதோ விக்கியை நோக்கி பாய தயாராகிக் கொண்டிருந்து… காரணம் அவன் அறை வாயிலில் நிற்கும் முருகவேலை கவனிக்காது அவரையே கிண்டல் அடித்து பேசிக்கொண்டு இருந்தான், துணிகளை மடித்துக் கொண்டிருந்த காய்திரியிடம்…

முருகவேல் மனதில், ‘இவளுக்கு எம்புட்டு ஏத்தம்…. கூறுக்கெட்டவன் இவென்த்தேன் பேசுதானா இவளும் பல்ல காட்டி கத கேக்கா… நாலு சாத்து சாத்தணும் இவள…’என்று எண்ணியவர், அறைக்குள் நுழைய போக அவரை தடுத்தான் கவியழகன்…

“ப்பா…. வேண்டாம் போகாதீங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் மகனது குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க,

அவனோ, “இதை சீரியஸா எடுத்துக்காதீங்க ப்பா… அவன் சும்மா விளையாட்டுக்கு பேசுறான்…” என்று மெல்லிய குரலில் தந்தையை சமாதானம் செய்ய முற்ப்பட,

‘எதுவே வெளாட்டு என்னைய பத்தி மட்டாம பேசுறதா…’என்று மனதில் கருவியவர் பேச வாய் திறக்கும் போது, காயத்ரியின் குரல் இவர்களின் கவனத்தை திருப்பியது…

“போதும்லே என்ற புருஷன பத்தி கேலி பேசுனது… இது அம்புட்டும் அவரு காதுல விழணும் பொறவு தெரியும் உன்ற சங்கதி…என்ன சொல்லவா…?” என்றவரை பார்த்து மிரண்டவன்…

“அய்யய்யோ… ஆண்ட்டி…. என்ன இப்படி கட்சி மாறிட்டீங்க… சும்மாவே மொறைச்சுட்டு சுத்துராரு… நான் விளையாட்டுக்கு பேசுனத கேட்டாரு… நான் உசுரோடு ஊர் போய் சேர மாட்டேன்… நான் எங்க அம்மாக்கு ஒரே பையன்… வர போற பொண்டாட்டிக்கு ஒரே புருஷன்… அதுனால பாத்து பதமா பேசுங்க ஆண்ட்டி எதுவா இருந்தாலும்… நான் உங்க மகன் மாதிரி இல்ல…” என்று சமாதானம் செய்ய அவர் மோவாயை பிடித்து ஆட்ட, காயத்ரியோ அவன் கையை தட்டிவிட்டு

“இல்ல….”என்க,

“ம்ம்ம்… இனிமே உங்க ஹஸ்பண்டை பத்தி பேசவே மாட்டேன்…மன்னிச்சுக்கோங்க ஆத்தா…” என்று தலைக்கு மேல் கையை கூப்பி கெஞ்ச…

காய்த்ரி பெரிய மனதோடு, “ம்ம்ம்..செரி செரி… பொழச்சு போவே…” என்று புன்னகையுடன் கூறவும் தான் அவனுக்கு சற்று உயிரே வந்தது…

ஏற்கனவே தன்னை கண்டால் சுத்தமாக ஆகாது … எதிர்நாட்டு தீவிரவாதியை போல் பார்த்து வைப்பார் இதில் தான் கிண்டல் பேசியது மட்டும் தெரிந்தால் வேறே வினையே வேண்டாம்…

“எவ்வளவு பெரிய மனசு உங்களுக்கு…? ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி…” என்று உரைத்தவன், சற்று தயங்கிய குரலில்

“ஆண்ட்டி….” என்று அழைக்க,

“எதுக்குவே பம்முற… என்னவே வேண்ணும்..?” என்று சரியாக நாடிபிடித்து கேட்க…

“ஒண்ணுமில்ல ஆண்ட்டி… நான் … நான்… அது தப்பா எடுத்துக்காதீங்க…” எப்படி கூறுவது என்று தெரியாமல் தயங்கியவன் தன் காலுக்கடியல் இருந்த பையை எடுத்து காயத்ரியிடம் நீட்டினான்…

அவனது தயக்கத்தை வினோதமாக பார்த்தவர், அவன் நீட்டிய பையை வாங்காது, “என்னவே இது… நீ எதுக்குவே பம்மி பம்மி பேசுத…?” என்று கேட்கவும்,

“முதல்ல வாங்கி பாருங்க ஆண்ட்டி…” மேலும் பையை அவர் புறம் நீட்ட, காயத்ரி அதை யோசனையுடன் வாங்கி திறந்து பார்க்க கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது…

“என்னவே இது அம்புட்டும்…?” என்று கேட்டவரின் கேள்வியில் அத்தனை ஆச்சரியம்…

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த முருகவேல் கவியழகனுமே இதை பார்க்கவில்லை…

காயத்ரியின் கேள்விக்கு அவன் கூறியது தாயான காயத்ரிக்கு கண்கள் கலங்கி விட, முருகவேலுக்கோ முகம் கருத்து விட, கவியழகன் பெருமையில் சற்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான் ‘நண்பன் டா…’என்னும் ரேன்ஜில்…

தொடரும்…

Advertisement