Advertisement

UD:15
மறுநாள் காலை படுக்கையில் அமர்ந்து தன் மடிக்கணினியில் தீவிரமாக வேலையை பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி… அப்பொழுது அறையினுள் நுழைந்த கவி,
“மச்சான்… இந்தா டா… கிளம்பு சீக்கிரம்…” என்று ஒரு கவரை அவனிடம் கொடுத்துவிட்டு தன் உடைகளை மாற்ற பக்க வாட்டு அறைக்கு சென்றவனிடம்,
“டேய்… என்னது இது…” என்ற கேட்டவனின் முகம் அஷ்ட கோணலாக இருந்தது…
அறையில் உடை மாற்றிக் கொண்டே, “ஏன்டா… என்னாச்சு… சைஸ் பிராப்ளம் இல்லையே அப்புறம் என்ன…?”
“அய்யோ எனக்கு முத இந்த டிரெஸ்ஸே செட் ஆகாது மாப்ள…. இதுல சைஸ் எப்படி இருந்தா என்ன..? ..” என்னும் போது வெளியே வந்திருந்தான் கவி…
“டிரை பண்ணு மச்சான்… எல்லாம் கரெக்டா செட் ஆகும்…” என்றவன் விக்கியுடன் வாக்குவாதம் செய்து மல்லுக்கட்டி அவனை தயார் செய்து தானும் தயாராகி வீட்டில் இருந்து கிளம்ப ஒருமணி நேரத்திற்கு மேல் ஆனது ஆண்களுக்கு…
தன்னுடைய புல்லட்டை செல்லுதிக் கொண்டு இருந்த கவி, “உன்னோட ஒரே ரோதன மச்சான்… ஒரு வேட்டி சட்டை போட்டு ரெடியாக ஒருமணிநேரம் தண்டமா போச்சு… இனி எங்க போனாலும் உன்ன கழட்டி விட்டுட்டு தான் போகணும்…” என்று எரிச்சலாக கூற, அவன் தோளில் கை வைத்த விக்கி,
“விட்றா விட்றா… வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் டா…” என்று அசால்ட்டாக சொல்லியவனை லேசாக தலையை திருப்பி கவி முறைக்க, நண்பனை பார்த்து பல்லை காட்டி இளித்தவன்,
“ஈஈஈஈ…. சரி விட்றா… அதான் கிளம்பியாச்சுல… அப்புறம் என்ன… விடு… முன்னாடி தெருவ பார்த்து ஒழுங்கா வண்டிய ஓட்டு…”என அவன் தலையை திருப்பி விட்டான் சமாளிப்பாக…
பத்து நிமிடத்தில், வாசல் முன் தோரணம் கட்டி திருவிழா போல் இருந்த வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் கவியழகன்… அந்த வீடு கவியழகனின் வீட்டை ஒத்து சற்று மாளிகை போல் தான் காட்சியளித்தது…
அதை இருவரும் பார்த்துக்கொண்டே வண்டியை விட்டு இறங்கும் சமயம், இவர்களை பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து ஒருவன் இறங்கி வேகமாக இவர்களை நோக்கி வந்தான் வண்டியை வாங்க…
“குமாரு… வண்டியை ஓரமா நிப்பாட்டிட்டு, கார்ல இருக்குறத உள்ள கொண்டு போய் வச்சுட்டு சாவிய என்கிட்ட கொடுத்துட்டு நீ கிளம்பு….” என்று உத்தரவிட,
“சரிங்க சின்னயா…” என்று பணிவுடன் அவனது புல்லட்டை வாங்கியவன் அதை அவ்விடம் விட்டு தள்ளிக் கொண்டு போக, விக்கி
“வீடு செம்மல மச்சான்…” என்று முன்தோற்றத்தை பார்த்து கூற,
“உன் மாமனார் வீடுல செம்மையா தான் இருக்கும் உனக்கு…” என்று சட்டையில் இருந்த கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டவன், வாயிலை நோக்கி நடக்க தொடங்கினான்…
நண்பனின் கூற்றுக்கு மிக சற்றே வழிந்த விக்கி தன்னவளை காணும் ஆவலில் கவியுடன் இணைந்து உள்ளே நுழைந்தான்… அங்கு வரவேற்பில் எவருடனோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தார் ஜெயசீலன்…
ஜெயசீலனுடன் பேசிக் கொண்டு இருந்தவர், உள்ளே நுழைந்த கவியழகனை கண்டு அதிர்ந்து, ஜெயசீலனை சைகையால் அவனை சுட்டிக்காட்ட, சந்தேகமாக திரும்பி பார்த்தவர் திகைத்து நின்றுவிட்டார் அவனது வருகையில்…
அவர் அருகில் வந்தவன், இன்று காலை புதிதாக டிரிம் செய்த மீசையை முறுக்கி கொண்டே,
“என்ன சித்தப்பா சுகந்தானா…?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி பல் வரிசை தெரிய புன்னகையுடன் கேட்க, அவ்விடம் எதார்த்தமாக வந்த பெண்கள் சிலர் அவனுக்கு விசிறியாகி போயினர் அவனது செயல்களில்…
விக்கி மனதில், “இவன் ஒருத்தன், சும்மா சும்மா ஊர்ல இருக்குற எல்லாரையும் தாத்தா பாட்டி, சித்தப்பா, அத்த, மாமா ன்னு கூப்பிட்டு நம்மல குழப்புறான்… லூசு…’என்று வசைபாடினான்…
அவனது கேள்விக்கு பதில் சொல்லாது, வெறித்த பார்வையுடன் பார்த்து நின்ற ஜெயசீலனை பார்த்து மேலும் தொடர்ந்தான்…
“என்ன சித்தப்பா பதிலையே காணம்… நல்லா இருக்கீங்களா…?ன்னு கேட்டேன்… என்ன அப்படி பார்க்குறீங்க…?” என்றவன் தாடையை தடவி, யோசிப்பது போல் பாவனை செய்து பின் நினைவு வந்தவனாக
“ஓஓஓ…. புரிஞ்சுடுச்சு… அழையா விருந்தாளியா வந்து இருக்கேன்னு தானே பார்க்குறீங்க… என்ன சித்தப்பா பண்ண…? நீங்க ஊரையே அழைச்சு என் தங்கச்சிக்கு விஷேசம் பண்ணுறீங்க அதுல அண்ணா நான் இல்லன்னா நல்லா இருக்காது பாருங்க… அதான் நீங்க அழைக்காட்டியும் நானே அண்ணன் முறைய செய்ய வந்து இருக்கேன்…” என்று சொல்லும் போதே குமாரு அவனிடம் சாவியை கொடுத்துவிட்டு காரில் இருந்த சீர்வரிசை உள்ளே எடுத்த சென்றான் ஒவ்வொன்றாக…
அது வரையில் பல்லை கடித்து பொறுமை காத்த ஜெயசீலன் சீர்வரிசை உள்ளே எடுத்து செல்வதை பார்த்து, கோபத்தின் உச்சிக்கு சென்றவர், கவியின் சட்டையை கொத்தாக பற்றி
“டேய்… ஆரு வூட்டுக்கு வந்து என்னல பண்ணிட்டு இருக்கவ … ஒழுங்கு மரியாதையா கொண்டு வந்தத திருப்பி எடுத்துட்டு ஓடி போயிரு…. இல்ல வகுந்துருவேன் உன்னைய…” என்று கோபத்தில் கத்தினார் அவனது செயலின் காரணமாக…
அவர் நண்பனின் சட்டையை பிடித்ததும் அதிர்ந்து அருகில் வந்தவனை தன் கை அசைவில் தடுத்த கவி, ஜெயசீலனை நிதானமான பார்வையில் பார்வையிட்டவன், குனிந்து அவர் பிடித்திருந்த சட்டையையும் அவரையும் பார்த்து புன்னகைத்து விட்டு,
“சித்தப்பா… நீங்க கூப்பிடாம இங்க வந்து இருக்கேன் அதுக்காக இப்படிதான் என்னை வரவேற்க்கனும்னு இல்ல… சட்டைய விட்டுட்டு கூட வரவேற்கலாம்… சட்ட கசங்குது பாருங்க…” என்று புன்னகை முகமாகவே சொல்லவும் ஜெயசீலனுக்கு தன் தவறு புரிந்தது…
கவியை முறைத்துக் கொண்டே மெல்ல சட்டையை விட்டவர், யோசனை முகத்துடன் அவனை விட்டு விலகி நின்றார்… அவர் சட்டையை பிடித்ததும் அருகில் நின்றிருந்த சிலர் தடுக்க முயல்களையில் அவரே விலகவும் மற்றவர்களும் சற்று விலகி நின்றனர் பதற்றத்தில்…
அவர் சட்டையை விட்டதும் மேலும் தன் புன்னகையை பெரிதாக விரித்தவன், கசங்கிய தன் சட்டையை நீவி விட்டுக் கொண்டே, “பாருங்க சித்தப்பா… உங்க கோபம் எல்லாம் என் அப்பா மேல் தானே நான் என்ன பண்ணினேன் சொல்லுங்க… இத்தனைக்கும் நீங்க கூப்பிடாமலே நான் என் கடமைய செய்ய வந்து இருக்கேன்… என்னைய போய் இப்படி வரவேற்க்குறீங்க… நியாயமா சொல்லுங்க…” என்று அவன் நியாயம் கேட்க, அதுவரை கோபமாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தவர், அவனை பார்த்து நக்கலாக சிரித்தவர்,
“இங்குட்டு ஆரும் உங்க வூட்டு சீரை எதிர்ப்பார்த்து இல்ல தம்பி… நீர் கொண்டு வந்ததை நீரே எடுத்துட்டு போலாம்…” என்க,
“ஓஓஓ… அப்ப சித்தப்பாக்கு அது தான் பிரச்சினையா ..?” என்று மேலும் பேசும் முன், இடைபுகுந்தார் ஜெயசீலன்
“யாருக்கு யாருவே சித்தப்பா… இன்னொரு மொற அப்படி கூப்பிட்ட பொறவு என்ன நடக்கும்னுட்டு எனக்கு தெரியாது …” என்று தன் தோளில் இருந்த துண்டை எடுத்து உதறி அவனை அடிக்க செல்வது போல் பாய, அருகில் இருந்த சில வெள்ளை வேட்டிகள் அவரது கைபிடித்து தடுத்தனர்….
“பொறுங்க சித்தப்பா… ஏன் இவ்வளவு கோவம்…” என்னும் போதே,
ஜெயசீலன், “ஏய்ய்ய்….”
கவி, “இது என்னடா வம்பா போச்சு… பூங்குழலிக்கு நீங்க மாமானா எனக்கு சித்தப்பா தானே… அதவிடுங்க சித்தப்பா… நீங்க நினைக்குற மாதிரி இது என் வீட்டுல இருந்து வந்த சீர் வரிசை இல்ல…” என்று நிறுத்தியவன் எதிரில் இருந்தவரின் யோசனை முகத்தை பார்த்து,
“இது எல்லாம் என்னோட சம்பளத்துல வாங்கியது… அண்ணா மொறைன்னு நான் வாங்குனது… நானே என் வீட்டு காச வாங்குனது இல்ல எனக்காக, அப்படி இருக்கும் போது என் தங்கச்சிக்கு அந்த காசுல வாங்குவேனா…?” என்று முக பாவனையுடன் அவரிடமே நியாயம் கேட்க, அவரோ அமைதி காத்தார் தன்னுள் வந்த யோசனையால்…
அவரது அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டவன் மீண்டும் கண்ணாடியை போட்டுக் கொண்டு அவர் அருகில் நெருங்கி, “சித்தப்பா ஒரு பழமொழி உண்டு தெரியுமா…” என்று ரகசியம் பேசுவது போல் பாவனை செய்தவன்,” அதுதான் சித்தப்பா… ஏதோ சொல்லுவாங்களே “ஆடு பக, குட்டி உறவு…”ன்னு அப்படி வச்சுக்கோங்க…” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்தவன், சற்று விலகி “ம்ம்ம்…”என்று தலையை ஆட்டி சம்மதமா என்று கேட்டுவிட்டு, வீட்டினுள் நுழையும் முன், தாடையை தடவிக் கொண்டே, திரும்பி விக்கியின் தோளில் கை போட்டு, அவனது நெஞ்சில் கை வைத்து, ஜெயசீலனை பார்த்து
“அப்புறம் சித்தப்பா இது நம்ம பிரெண்டு… பேரு விக்னேஷ்… ஊர்ல பெரிய பிஸ்னஸ்மேன்… இங்க ஊர் திருவிழாக்கு  வந்து இருக்கான்…” என்று அறிமுக படுத்தி வைக்க, ஜெயசீலன் யோசனை முகம் சற்றும் மாறவில்லை அது மேலும் இறுகதான் செய்தது…
நண்பன் சட்டென தன்னை அறிமுகம் செய்து வைக்கவும் தடுமாறிக் கொண்டே இருகரம் கூப்பி, “வணக்கம் அங்கிள்…” என்றவனை ஒற்றை பார்வையில் சுட்டெரிக்க முயற்சித்தார் ஜெயசீலன் …
அதில் விக்கி, ‘அம்மாடியோ… மனுசன் செம்ம ஃபார்ம்ல இருக்காரு… மாமனாரே நம்ம மீட்டிங் இப்படியா இருக்கணும்… எல்லாம் இவனால வந்தது… அடேய் பக்கி…’ என்று மனதில் நண்பனை வறுக்க தொடங்கும் போது, கவி
“சரி சித்தப்பா நாங்க உள்ள போறோம்…” என்று அதே புன்னகையுடன் கூறியவன், மீசையை முறுக்கியபடி உள்ளே சென்றான் நண்பனுடன்…
ஜெயசீலனுக்கு தனிப்பட்ட முறையில் கவியழகன் மீது எந்த ஒரு பகையும் இல்லை ஆனால் முருகவேல் மீது கோபம் இருந்தது அது வசுந்தராவிற்காக உண்டான கோபம்… அதைதான் கவியின் மீது காட்டியது…
ஆனால் கவி அதை எதிர்க்காமல் புன்னகையுடனே பேசவும், இவன் அவன் தந்தையை போல் அல்ல என்பதை புரிந்து விலகி நின்றார்… ஆனால் அவனது சித்தப்பா என்ற அழைப்புக்கான காரணம் தான் அவர் மனதில் சந்தேகத்தை உண்டாக்கியது…
‘என்னத்துக்கு இவன் நம்ம பூங்குழலிய இதுல இழுக்குறான்… அந்த பயல வேற அறிமுக படுத்தி வைக்குதான்… ஏதாச்சும் இருக்குமோ…? செரியில்ல… என்னுட்டு பார்க்கனும்… ‘என்று எண்ணியவர் தன் நெஞ்சை நீவிக் கொண்டார் யோசனையோடு….
இங்கு வீட்டினுள் நுழைந்தும் விக்கி, “டேய் நீ என்ன லூசா…? உன்ன புரிஞ்சுக்கவே முடியல…” என்று தோளில் இருந்த அவன் கையை தட்டி விட்டு கேட்க,
கண்ணாடியை கழட்டி விட்டு விழிகளை அலைய விட்டபடி, “என்ன புரிஞ்சுக்க முடியல…?” என்று கேட்டவனின் முகத்தை திருப்பி தன்னை பார்க்க வைத்தவன்,
“அவர் உன் சட்டைய புடிக்குறாரு… நீ சிரிக்குற…? இதுல சம்மந்தமே இல்லாம என்னையும் இன்ட்ரோ குடுக்குற… எதுக்கு இந்த    அவசரம்…?” என்று புரியாமல் கேட்டவனை பார்த்து இதழ் விரித்தான் கவி…
பின் நிதானமான பார்வையில், “மச்சான்… அவருக்கு அப்பா மேல் கோவம்… அதுனால என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு… மத்தபடி என்மேல தனிப்பட்ட கோவமோ பகையோ கிடையாது… புரிஞ்சுதா…”
“ம்ம்ம்… ஆனா உங்க அப்பா அப்படி என்னதான் பண்ணாங்க இத்தன பேரோடு சண்டைய போட்டு வச்சு இருக்காங்க..” என்று ஆற்றாமையில் கேட்டுவிட்டான்…
அதற்கு கவியின் முகம் சட்டென இறுகியது ஏதோ ஒருவித அவமானம் அவனுள், பின் நொடியில் தன்னை சரி செய்து, “சரியா தெரியல மச்சான்… அம்மா கிட்ட கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்கிறாங்க… பார்க்கலாம் என்னதான் நடந்துச்சுன்னு…” என்று பெருமூச்சு விட்டவன், அங்கு கூடத்தில் இருந்த கனியின் தங்கையை பார்த்து மெல்ல புன்னகைத்து,
“மச்சான் இரு நான் போய் நலங்கு வச்சுட்டு வரேன்….” என்றவன் விக்கியின் பதிலையும் எதிர்ப்பார்க்காமல் முன்னெறினான்…
“டேய் என்னடா தெரியாத இடத்துல விட்டுட்டு போற… நில்லு டா எரும…” என்று மெல்ல கத்தியவனின் குரல் நிச்சயமாய் கவியை சென்றடையவில்லை மாறாக அருகில் இருந்த ஒரு பாட்டியை சென்றடைந்தது…
“என்னவே ஜோலி உங்களுக்கு இங்குட்டு… அந்த முருகவேலுக்கும்  இந்த குடும்பத்துக்கும்தேன் ஒத்த வராதே பொறவு என்னத்துக்குவே எங்குட்டு வந்திவிய…?” என்று முறைத்துக் கொண்டு கேட்க,
கடுப்பாகி போன விக்கி, “ம்ம்ம்… கரிசோறு போடுதாகளாம் அத்தேன் நல்லா திண்ணுப்புட்டு போவோம்ன்னுட்டு வந்தோம்… போதுமா…” என்று அவனும் பாட்டிக்கு ஈடு கொடுத்து இழுத்து பேசவும், அந்த பாட்டியோ சில நொடிகள் வாய் மீது கை வைத்து வியந்து பார்த்திருக்க அதை கலைத்தான் விக்கி…
“என்ன பாட்டி அப்படி பார்க்குற…?”
“போட பொசகெட்ட பயலே நல்ல நாள்ட அதுவுமா கரி சோறு போடுவாகளா… முருகவேலு வூட்டுல இல்லாத சோறுக்கா இங்குட்டு வந்துருக்கீக… எங்குட்டு போய் வெளக்குமாத்து அடி வாங்க போறீகளோ தெரியல…” என்று அவனை பீதியாக்கிவிட்டு செல்ல இருக்கையில், அவரை தடுத்து நிறுத்தினான் விக்கி…
“என்னலே வேண்ணும்…?” என்று கடுகடுத்தவரின் தாடையை பற்றி,
“கோச்சுக்காத பியூட்டி… கொஞ்ச நேரம் அப்படி ஓரமா உட்கார்ந்து பேசுவோ வா…” என்று பாட்டியை தள்ளிக்கொண்டு போனான் ஓரமாக…
இங்க கவியோ கனியின் தங்கைக்கு சீர் செய்து சந்தனம் தடவி வாழ்த்தியவன், அங்கு இருந்த அனைவரது ஆச்சர்ய பார்வையை தவிர்த்து தன் முட்டக்கண்ணியை விழிகளால் தேட துவங்கினான் அந்த வீட்டில்…
ஆனால் அவன் கண்ணில் பட்டது என்னவோ வசுந்தராவும் கனியின் அன்னையும் தான்… அவர்களை கண்டதும் ஒரு நொடி ஸ்தம்பித்தவன் பின் தெளிந்த வேறுபுறம் நகர்ந்து சென்றான் கண்டும் காணாததை போல் ஒரு பாவனையில்…
அப்பொழுது படியின் பக்கவாட்டு சுவரில் வெளி புறத்தை பார்த்தபடி சாய்ந்து நின்று தன் தலையை கோதியவன், “ம்ப்ச்ச்… எங்க போனா இவ… எவ்வளவு கஷ்டப்பட்டு ரெடியாகி வந்து இருக்கோம்… ஆளை காணமே…” என்று மெல்லிதாக புலம்பியபடி இருந்தவனின் பின், படியில் இறங்கியபடி பேசிக் கொண்டே வந்த குழலியின் குரல் கேட்டு திரும்பியவன் அதிர்ந்து சிலையாகி போனான் அவளது அழகில்…
இளம் ரோஜா நிற பட்டில், மெல்லிய ஒப்பனையில், ஒற்றை பின்னலில் தலை நிறைய மல்லிகை சரம் வைத்து அருகில் இருந்த பெண்மணியிடம் பேசியபடி வந்தவளை இமைக்காது பாரத்திருந்தான் கவியழகன்…
“அக்கா இதைய வைத்திர அத்தகிட்ட குடுத்துடுங்க… ரொம்ப நேரமா அவிக கேட்டுக்கிட்டே இருந்தாக… மறந்துடாதீக… நான் போய் ஆச்சிய பார்த்துட்டு வாரேன் என்னத்துக்கோ கூப்பிட்டாக…” என்று கையில் இருந்த தாம்பாள தட்டை தனக்கு வலப்புறம் இருந்தவரிடம் குடுத்து அனுப்பிவிட்டு, கடைசி படியில் நின்றவள் பக்கவாட்டில் தனக்கு பின்னால் இடப்புறத்தில் படியின் சுவர் பின் நின்றிருந்த கவியை கவனிக்க தவறினாள் பேச்சு மும்முரத்தில்…
அவர் சென்றதும், “ம்ப்ச்ச்… சே… நான் அப்பவேன் சொன்னேன் இந்த ஆத்தா கிட்ட இந்த சீல வேண்டாம்னுட்டு கேட்டுச்சா…. பாரு நான்தேன் அவதி படுதேன்…” என்று தனக்குள் பேசி சிணுங்கியவள், சேலையின் மடிப்பை சரிசெய்ய போராடிக் கொண்டு இருந்தாள் எரிச்சலாக…
“அட இந்த மடிப்பு அடங்குதா பாரேன்…” என்று சேலையுடன் சண்டையிட்டு கொண்டிருந்த சமயம், அவளது சிணுங்களில் மயக்கம் தெளிந்த கவி அப்பொழுது தான் கவனித்தான் அவன் கண் எதிரில் விருந்தளித்த அவளது வெண்ணிற இடையை….
அதில் தடுமாறியவன் முயன்று தன்னை நிலைக் கொண்டவனாள் அவளை தீண்டாமல் இருக்க பெரும் போராட்டத்தை உள்ளுக்குள் எதிர்க் கொண்டான்…
‘அடேய்… அடங்கு டா… ஏற்கனவே சும்மா பக்கம் வந்ததுக்கே காளி மாதிரி பார்த்துட்டு முறைச்சுட்டு போயிட்டா… இப்ப மட்டும் உன் கை சும்மா இல்லாம வேண்டாத வேலை பண்ணுச்சு நீ செத்தடா மவனே…’ என்று எண்ணியவன் அவளது பளபளக்கும் சிற்றிடையை பார்த்து எச்சிலை விழுங்கியபடி தலையை கோதி பார்வையை திருப்பி இறுக்க கண்களை மூடி ஒரு பெருமூச்சை விட்டவன், தன்னை ஒரு நிலைக்கு மாற்றி இருந்தான்…
ஆனால் அவளை சீண்டும் எண்ணத்தை மட்டும் கைவிடவில்லை… அப்பொழுது சுற்றும் முற்றும் பார்த்தபடி மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் படி, கவி
நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
என்று கிரக்க குரலில் பாடவும், அருகில் கேட்ட குரலில் பதறிய குழலி அவசரமாக திரும்பி பார்க்க கவியை கண்டு திகைத்து போனாள்… அவனோ அவளது திகைத்து விரிந்த அந்த பெரிய மையிட்ட அழகிய கண்களை பார்த்தவாறே மெல்ல அவள் அருகில் சென்று அதே மெல்லிய குரலில்,
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
என்று அவளது இதழில் தன் பார்வையை படியவிட்டவன் பின் அவளை பார்த்து,
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா…
என்று தன் மீசையை கிராமத்தான் போல இடதுகையால் முறுக்கி ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க, பெண்ணவள் மொத்தமும் அவனிடம் சரண் அடைந்திருந்தாள்…
அவனது தோற்றம் ஆளுமை, பார்வையின் வீச்சு அனைத்தும் பெண் மனதை மொத்தமும் சாய்த்தது… அதிலும் தான் எத்தனை கூறியும் மீண்டும் மீண்டும் தன்னிடம் வந்து நிற்கும் கவியை ஏனோ குழலியால் இப்பொழுது ஒதுக்க முடியவில்லை… முன்தினம் தான் நினைத்தது என்ன என்பதையே மறந்து அவனை விழி விரிய பார்த்திருந்தாள் அவனது வசீகரிக்கும் தோற்றத்தில்…
அதை உணர்ந்த கவி, அவள் முன் சொடக்கிட்டு, “என்ன முட்டக்கண்ணி… அத்தான அப்படி பார்க்குற…” என்று மீண்டும் புருவத்தை உயர்த்தி கேட்கவும், தன்நிலைக்கு வந்தவள் படபடவென இமைத்தட்டி, பெருமூச்செடுத்து தன்னை நிலைபடுத்திக் கொள்ள முயற்சிக்க,
கவி, “என்ன டி புடிச்சிருக்கா…?” என்று கேட்கவும் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்து வைத்தாள் ஏதோ அவன் தன்னை கண்டுக்கொண்டதை நினைத்து…
“ஹே… முட்டக்கண்ணி நான் இந்த கெட்டப் சேன்ஜே புடிச்சு இருக்கான்னு தான் கேட்டேன்…” என்று பதறுவது போல் பாவனை செய்து கேட்கவும், தன் முறைப்பை சற்றே குறைத்துக் கொண்டவள், அவ்விடம் விட்டு விலகி செல்ல முயல்கையில்,
அவளது கைப்பிடித்து நிறுத்தியவன், மெல்லிய குரலில் “இந்த சேரில்(saree) சும்மா கும்முன்னு இருக்க டி… கட்டிக்கவா…?” என்று கிறக்கமாக கேட்கவும், முதலில் அவனது வார்த்தையில் கோபம் கொண்டு முறைக்க திரும்பியவள் பின் தொடர்ந்து வந்த அந்த வார்த்தையில் விதிர்விதிர்த்து போனாள் குழலி…
ஒருநொடி எண்ணமாக, கட்டிக்கொண்டால் என்ன மாதிரியாக இருக்கும் என்ற நினைவுகள் ஓடியதை முயன்று கட்டுப்படுத்தியவள் அவனது பிடியில் இருந்து தன் கையை உருவிக் கொள்ள போராடினாள் அவனை எதிர்த்து எதுவும் பேசாது…
அவளது அமைதி ஏதோ ஒன்று கவியழகனுக்கு உணர்த்த மேலும் மேலும் அவளை சீண்டி பார்க்க உந்தியது அவனுள் அதனால் அவளது கையை விடாது மேலும் இறுக பற்றி தன் புறம் லேசாக இழுக்க, கையை விடுவித்து கொள்ள போராடியவள்,
‘ஆத்தி… இப்படியே கட்டிக்குவாக போல… ம்ஹூம்… அப்படி மட்டும் கட்டிக்கிட்டா நான் மாட்டிக்குவேனே… கடவுளே காப்பாத்து…’என்று எண்ணங்களில் மூழ்கியவளை மேலும் நெருங்கி இருந்தான் காதல் பார்வையோடு…
இவளது போராட்டத்தையும், அவனது செயலையும் தூரத்தில் இருந்து பார்த்த ஒரு ஜோடி விழிகள் தீயை கக்கியது ஆத்திரத்தில், அதே ஆத்திரத்தில் அவனை அடித்து துவம்சம் செய்ய இவர்களை நோக்கி முன்னேறியது…
குழலிக்கு அவனது நெருக்கம் படபடப்பை தர, தலையை குனிந்துக் கொண்டு நின்றிருந்தவள் அவனது ஸ்பரிசத்தின் வாசனை அவளை எட்டவும் தன் உதட்டை கடித்து கண்களை இறுக மூடி திறந்து,
‘எதுக்கு மேல இங்குட்டு நின்னா வம்பாயிரும் புள்ள…பேசாம தள்ளிவிட்டு ஓடிரு….’ என்று மண்டையில் எச்சரிக்கை மணி அடிக்கும் சிறிதும் தாமதிக்காது தன் ஒரு கையை அவனது நெஞ்சில் அழுத்தமாக பதித்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தபடி…
தீடீரென தன் நெஞ்சில் உணர்ந்த அவளது கையின் சூட்டில் திகைத்து குனிந்து தன் நெஞ்சில் படிந்த அந்த மருதாணியிட்ட வெண்பஞ்சு கையை பார்த்து விட்டு, அவளை நிமிர்ந்து பார்க்கையில் அவளும் தன்னை பார்க்க, விழிகள் நான்கும் ஒன்றோடு ஒன்று கல்வித் கொண்டது…
சில நொடிகள் தொடர்ந்த அந்த பார்வையின் வீச்சை பெண்ணவளால் தாங்க இயலாமல் போங, இமைதட்டி கருமணியை உருட்டியவள் சுதாரித்து ஒரே தள்ளாக அவனை தள்ளிவிட, அவளது விழி மொழியை படிக்க முயன்றவன் குழலி இவ்வாறு செய்வாள் என்று எதிர்ப்பார்க்காததால் தன் பிடி தளரவும், நிலை தடுமாறி பின்னோடு இரண்டடி நகர்ந்து படியின் சுவரை பிடித்து நின்றான் சிறு கூவளோடு…
“ஏய்ய்ய்ய்….” என்று மெல்லிதாக தடுமாறிய குரலில் கத்தியவனை,  முறைத்து விட்டு திரும்பி நடந்தவளின் முகம் அத்தனை சிவப்பேறியிருந்தது உதட்டில் தோன்றிய சிறு புன்னகையுடன்…
செல்லும் அவளையே பார்த்து நின்றவன்,”முட்டக்கண்ணி தப்பிச்சுருச்சு…” என்று முனுமுனுப்புடன் அவள் ஸ்பரிசம் பட்ட தன் நெஞ்சை நீவியபடி விரிந்த புன்னகையுடன் அவளை பின் தொடர்ந்தான் காதல் மயக்கத்தில்…
அவ்வீட்டில் மற்றவர்கள் கவனம் தங்களை கவரா வண்ணம் தன் சீண்டலையும், சில்மிஷத்தையும் தொடர்ந்துக் கொண்டிருந்தான் கவியழகன்…. அவனிடம் முகத்தை திருப்புபவள் அவன் தொடராத தனிமையில் முகம் சிவப்பாள் வெட்கத்தில்…. அது அவனது கண்களில் படாது போனது அவனது துரதிஷ்டவசமே… பார்க்க வேண்டிய அவளது அழகிய சிவந்த வதனத்தை பார்க்காமல் போக யார் கண்களுக்கு பட கூடாதோ அவ்விருவர் கண்களுக்கு அழகாய் காட்சியளித்தது…
ஒருமணி நேரத்திற்கும் மேல் தன்னவளின் பின் சுற்றிக் கொண்டு இருந்தவனின் மனநிலை அழகாய் காதலில் லயத்திருந்தது அவனுக்கு அலைப்பேசியில் அழைப்பொன்று வரும்வரை…
“ஹலோ….”
……
“ம்ம்ம்… இல்ல இல்ல இன்னைக்கு முடிச்சரலாம்… நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க மில்ல இருப்பேன்…”
……..
“இல்ல வேண்டாம்… இப்ப எல்லாத்தையும் நான்தான் பார்த்துட்டு இருக்கேன் உன்னோட முடிவு தான் கடைசி அப்பா கிட்ட கேட்க வேண்டிய அவசியம் இல்ல… நான் மில்லுக்கு வந்த பின்னாடி பேசிக்கலாம்… ”
………
“சரிங்க… வச்சுட்றேன்…” என்று அழைப்பை துண்டித்தவனுக்கு எல்லாம் நல்லா படியாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் தான் ஓடியது…
பின் ஒரு பெருமூச்சுடன், கிளம்ப எண்ணியவன் தன்னவளிடம் சொல்லிவிட்டு செல்ல நினைத்து அவளை தேட குழலியை காணவில்லை…..
சிறிது நேர தேடலின் முடிவாக கண்ணில் பட்டால் பந்தி பரிமாறும் இடத்தில், அதில் புன்னகை விரிய சாப்பிட செல்ல அடியெடுத்தவனுக்கு அப்பொழுது தான் நண்பன் என்றொரு ஜீவன் உடன் வந்ததே நினைவிற்கு வந்தது…
“இவனை எப்படி மறந்தோம்…” என்று முனுமுனுப்புடன் மீண்டும் தேடலில் இறங்கினான் நண்பனாக….
வீடு முழுவதும் தேடியவனுக்கு விக்கி எங்கும் புலப்படாதது குழப்பத்தை தந்தது…
“எங்க போய் தொலைஞ்சான்… ஆமா கனிமொழி எங்க போனா ரொம்ப நேரமா அவளை பார்க்கல…” என்றபடி கண்களை அலையவிட்டவன், “அய்யோ… கூட்டிட்டு ஓடிட்டானா… ச்சே… அதுக்கு அந்த பொண்ணு ஒத்துக்காது அப்ப கடத்திட்டு போயிட்டானோ…” என்று புலம்பியவனுக்கு பக்கென்று இருக்க, அவசரமாக பால்கனிக்கு  சென்று தங்கள் கார் இருக்கிறதா என்று பார்த்தவனுக்கு அது நிறுத்திய இடத்தில் சமத்தாக இருப்பதை கண்டவனுக்கு அப்பொழுது தான் சற்று நிம்மதியாக இருந்தது…
“ஃப்பூ… கொஞ்ச நேரத்துல பீதியாக்கிட்டான் படுபாவி… எங்க தான் டா போய் தொலைஞ்ச…” என்று புலம்பியவன் தன் தலையை கோதியபடி படிகளில் இறங்கியவன் விழியில் தென்பட்டான் விக்னேஷ்…
கவியழகன் கண்ட காட்சியில், விழிகள் விரித்து அதிர்ச்சியாக பார்த்தவனுக்கு ‘அய்யோ….’என்றிருந்தது…
தொடரும்….

Advertisement