Advertisement

UD-12  

அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை தவிர்த்தனர்…

தேவையில்லாத எண்ணங்களை ஆசையை தங்களுக்குள் ஏற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை… ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் காளையர்கள் இல்லை என்பதை உணரவில்லை என்பதே பரிதாபம்…

“என்னடா இப்படி நான் ஸ்டாபா பேசுறாளுங்க… இவங்க எப்ப இந்த இடத்தை விட்டு நகருவாங்க…” பெண்கள் இருவரும் முற்றத்திலேயே அமர்ந்து கதையடிக்க பொருத்து பார்த்த விக்கிக்கு சற்று சலிப்பு உண்டாக, அந்த அறையில் இருந்த நாற்காலியை சத்தம் எழுப்பாமல் எடுத்து கதவின் அருகில் போட்டு அமர்ந்துக் கொண்டான்…

“தெரியல மச்சான்… கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி பேசுனாங்கன்னா நம்ம நிலம ரொம்ப கஷ்டம் டா… அது மட்டும் உறுதி….” என்று பதில் அளித்தவனின் பார்வை கண்களை உருட்டி காதில் இருக்கும் குடை ஜிமிக்கி ஆட ஓயாமல் பேசும் அந்த மதி முகத்தையே ஆசை தீர பருகிக் கொண்டிருந்தான்…

‘எத்தன வருஷம் பாரு டி முட்டக்கண்ணி… குட்டியா இருக்கும் போது கொழு கொழுன்னு இருந்த இப்ப அது குறைஞ்சு போச்சு… ஆனா அந்த கண்ணு தான் அப்படியே இருக்கு… எப்ப உன்னை உரிமையா பக்கம் இருந்து கொஞ்ச போறேனோ…ம்ம்ம்…. வாயாடி….’ என்று எண்ணங்களோடு பெருமூச்சு விட்டவனுக்கு தெரியவில்லை இன்னும் சிறிது நாளில் தாம் அவளை வெறுத்து ஒதுக்க போகிறோம் என்று…

அப்பொழுது பூங்குழலி, “ஆங்ங்… வா நான் காட்டுதேன்… புடிச்சு இருந்தா இதேபோல கட்டிக்கலாம் புதன் அப்ப…” என்று கனியை தன் அறைக்கு கூட்டிச் செல்ல, சட்டென சுதாரித்த கவி, அவர்கள் இருவரும் பூங்குழலியின் அறைக்குள் நுழைந்த நொடி கவி வேகமாக அறையை விட்டு வெளியேறினான்…

கனிமொழியை எவ்வாறு அனுகுவது என்ற சிந்தனையில் ஆழ்ந்து இருந்த விக்கி, திடீரென அறையை விட்டு வெளியேறியதை எதிர்ப்பார்க்காததால் அரண்டு போனான் நொடியில்…

‘அடபாவி நாயே… இப்படி தனியா கழட்டி விட்டுட்டு ஓடிட்டான்… அய்யோ யார் கண்ணுலையாச்சும் சிக்குனா சின்னாபின்னாமாயிருவேனே… ‘ என்று மனதில் புலம்பியபடி, அறையை விட்டு வெளியேற முயல்கையில் அவனையும் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் கவியழகன்…

“எரும மாடே… ஏன்டா இப்படி வந்து மோதுர…” என்று கொஞ்சம் குரலை உயர்த்தி கத்தியவனை, “ஷ்ஷ்ஷ்… கத்தாதடா மாட்டிக்க போறோம்…”

“இப்ப என்ன கலட்டி விட்டுட்டு ஓடுனியே அப்ப மட்டும் நான் மாட்டியிருந்தா என்னவாயிருக்கும்… ஏன் டா பரதேசி சொல்லாம கொல்லாம ஓடுன…” இப்பொழுது குரல் சற்று தணிந்து வந்தாலும் அதில் கோபம் அதிகமாகவே இருந்தது…

“நான் எப்படா கலட்டி விட்டுட்டு போனேன் லூசு… இதை எடுக்கதான் போனேன்…” என்று கையில் இருந்த இரெண்டையும் காட்ட, அப்பொழுது தான் விக்கி அவன் கைகளில் இருந்ததை கவனித்து முகம் மலர்ந்தான்…

“மாப்ள… செம்ம செம்ம…” என்று குதுகலித்தவன் கவியின் கையில் இருந்ததை வாங்கி சுவைக்க தொடங்கினேன்…

கவியும், வசுந்தரா பூங்குழலி கனிமொழி இருவருக்கும் செய்து வைத்த பணியாரம் கார சட்டினியை அனுபவித்து ருசித்து உண்ண ஆரம்பித்தான்..,

“ம்ம்ம்… அத்த கைபக்குவமே தனி தான் டா… சின்ன வயசுல சாப்பிட்டது அப்புறம் இப்ப தான் சாப்புடுறேன்…” என்று பெருமூச்சுவிட்டபடியே உண்ண, அவனது பேச்சில் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தான் விக்கி…

“என்னடா சொல்லுற…? அத்தையா…?” வாயில் பாதி பணியாரமும் கையில் மீதியும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்க, அவனை நிமிர்ந்து பார்த்த கவி யோசனையோடு, அதே சமயம் மிகவும் எதார்த்தமாக தோளை குழுக்கி,

“ஆமா பூங்குழலியோட அம்மா… எனக்கு அத்த…” என்றபடி அவன் வாயில் தொங்கிக் கொண்டு இருந்த மீதி பணியாரத்தை திணித்தான்…

அதில் நிலைபெற்ற விக்கி, “ஓஓஓ… நீ அப்படி வரியா…? சரி சரி நீ நடத்து ராசா…” ஒரு தினுசாக ராகம் இழுத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்…

அதை எதையும் கண்டுக் கொள்ளாமல் சிவனே என்று உண்டுக் கொண்டிருந்த கவியின் நினைவுகள் முழுவதும் சிறு வயதில் வேண்டும் என்றே பூங்குழலியிடம் வம்பு வளர்த்து அவளது பணியாரத்தையும் சேர்த்து உண்பதை நினைவு கூர்ந்தவனுக்கு சிரிப்பாக இருந்தது…

அவனது முகத்தை கவனித்த விக்கி, “மாப்ள…”

“ம்ம்ம்….”

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே…?”

“ம்ஹூம்…”

“உண்மையா அந்த பொண்ண நீ லவ் பண்ணுறியா…?” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில் ‘ஏன் இப்படி ஒரு கேள்வி…?’ என்னும் பாவனை இருக்க, அதை புரிந்து கொண்ட விக்கி,

“இல்ல டா… உனக்கு அந்த பொண்ண முன்னாடியே தெரியும் ஓகே… சட்டுன்னு எப்படி லவ்…? நானும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் தான் பட் உன்னோடது இடிக்குதே டா… அந்த பொண்ணு என்னடான்னா அந்த மொறமுறைக்குறா நீ இப்படி வழியுற… அதான் கிளேரிபை(clarify) பண்ணிக்கலாம்னு நினைச்சேன்… ”

அவனை கண்ணிமைக்காமல் பார்த்த கவி, “ம்ம்ம்… சின்ன வயசுல புடிக்கும் டா… அது எதுனாலன்னு தெரியாது… ஆனா குட்டியா ரெட்ட ஜட போட்டு, முட்ட கண்ணுக்கு மை வைச்சு, குண்டு குண்டு கன்னம்ன்னு எப்பவும் துறுதுறுனு ஓடிட்டே இருப்பா… அவ நடக்குறதே அபூர்வம் மாதிரி தான் பார்க்கனும்… அது எனக்கு ரொம்ப புடிக்கும்… அதும் என் கிட்ட கோப படும் போது என்னை நிமிர்ந்து பார்த்து கண்ணை உருட்டி முறைக்குறது அவ்வளவு அழகா இருக்கும்… சின்ன வயசுல வந்தது ஒரு ரசிப்புதன்மை… அப்புறம் ஊரைவிட்டு போன பின்னாடி, அப்பப்ப நினைச்சு பார்த்தேன் ஒரு ஈர்ப்பு மாதிரி, அப்புறம் மறந்துட்டேன்… ஆனா இன்னைக்கு இத்தன வருஷம் கழிச்சு அவளை பார்த்ததும் என் மனசு சொல்லுச்சு இவ என் முட்டக்கண்ணின்னு… ‘என் முட்டக்கண்ணி…’ னு நினைக்கும் போது அந்த உரிமைய புரிஞ்சுக்கிட்டேன்… அவ என்னை பார்த்துட்டே போகவும் தான், என்னை இவளும் அடையாளம் தெரிஞ்சுக்கிட்டான்னு அப்ப முடிவு பண்ணினேன் இவளை விட்டுற கூடாதுன்னு…” என்று அந்த சுகத்தில் கண்கள் மலர பேசியவனை பார்த்து மெல்லிதாக புன்னகைத்தான் விக்கி…

பின் அதிலிருந்து கலைத்தவன், “சரி மச்சான்… சீக்கிரம் சாப்பிடு கிளம்பலாம்… வீட்டுக்கு யாராச்சும் திரும்பி வந்துட்டா நாம் மாட்டிப்போம்… அது ரெண்டும் ரூம்ல இருந்து வரத்துக்குள்ள நாம வெளிய போயிரலாம்…” என்றதும் இருவரும் அவசரமாக மீதி பணியாரத்தை வாயில் அடைத்துக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறி பாத்திரத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, வந்த வழியாக செல்ல இருக்கையில் வசுந்தராவும் செல்லதாயும் வீட்டினுள் நுழைந்தார்…

வசுந்தரா கவனிக்கும் முன் ஆண்கள் இருவரும் கொல்லைபுறத்திற்கு சென்றிருக்க, அடுத்த நொடி மதில்சுவரை தாண்டி ஓட்டமும் நடையுமாக சாலையை அடைந்து இருந்தனர்…

“ஷப்ப்ப்பா…. கொஞ்சம் லேட் பண்ணி இருந்தோம்… நாம டங்குவாரு அந்து இருக்கும்…” என்று கவி கூற, பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு இருந்த விக்கி,

“ஆமா டா மாப்ள… பணியாரம் செம்ம டேஸ்ட் ஆனா இப்படி அவசரமா ஓடி வந்ததுல ஜீரணம் ஆயிருச்சு…” என்று வயிற்றை தடவியபடி பேசியவனை பார்த்து முறைக்க, விக்கியும் பாவமாக பார்த்துக் கொண்டு இருந்தான்… சில நொடிகளுக்கு பின் இருவரும் வாய்விட்டு சிரித்தபடி நடக்க தொடங்கினார்கள் வீட்டை நோக்கி…

இங்கு பூங்குழலி வீட்டிலோ ஒரு போர் நடந்துக் கொண்டு இருந்தது தீவிரமாக… வேறெதற்கு எல்லாம் பணியாரத்திற்கு தான்…

“சும்மா என்னைய கோபபடுத்தி பார்க்காத குழலி… நல்லா திண்ணு உடும்ப வளத்து வச்சு இருக்க… ஒன்னுத்துக்கும் ஒதவாமா… பேசாம போய் படு…” என்று வசுந்தரா கத்த, பூங்குழலி அதற்கு நிகரான கோபத்தில்,

“ஆத்தா சும்மா பொழுதினைக்கும் இப்படி சொல்லுற வேலைய வச்சுக்காதீக… பொறவு என்ன பண்ணுவேணுட்டு  தெரியாது…” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மிரட்ட,

“திமிரு பிடிச்ச கழுத… குரல ஒசத்தி பேசாதன்னு எத்தன தரம் சொல்லிருக்கேன்…” என்று கையில் வைத்திருந்த துணியை அவள் மேல் வீச, அது மேலே படாமல் இருக்க லாவகமாக விலகி நின்றவள், அன்னையை நோக்கி

“இப்ப என்னதேன் சொல்லுதீக… எனக்கு பணியாரம் சுட்டு தர முடியுமா முடியாதா…?”

“அம்புட்டு ஏத்தம் டி… முடியாதுல, என்ன பண்ணுவ… ஏற்கனவே ஒரு குண்டா முழுசும் சுட்டு வச்சுட்டு போனதைய ரெண்டு பேரும் திண்ணுட்டு இப்ப திரும்பவும் கேட்குறியவ… மனுசியா டி நீயெல்லாம்…?” என்ற அன்னையின் வார்த்தையில், தலையில் கை வைத்தபடி, சலிப்பான குரலில்

“அய்யோ ஆத்தா… நாங்க எதையும் சாப்பிடல ஆத்தா… நான் நெசந்தேன் சொல்லுதோம்… நீ வேண்ணும்னா கனிய கேட்டு பாரு… ” என்று தோழியை துணைக்கு அழைக்க, அவளோ கன்னத்தில் கை வைத்து பாவமான முகத்துடன் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்…

“ஆமா டி… திருடனுக்கு பயந்து வீட்டுக்கு திருடனையே காவலுக்கு வச்ச கததேன் போ…” என்று தலையில் கொட்டியவர், “ஒழுங்கு மரியாதையா ரெண்டு பேரும் போய் வெள்ளென்ன படுக்குற வழிய பாருங்க…”என்றவருக்கு பதிலளிக்காமல் பூங்குழலி தலையை தேய்த்து கொள்ள, கனியோ பரிதாபமாக அம்ர்ந்திருந்தாள்….

“ஏய்… சொல்லிட்டு இருக்கேன்ல… எந்திரிச்சு போங்க டி…” என்று குரலை உயர்த்தவும் பெண்கள் இருவரும் இரவு உணவு இல்லையே என்ற சோகத்தில் படுக்கையில் விழுந்தனர்…

மூன்று ஆள் சாப்பிடும் அளவிற்கு பணியாரத்தை சுட்டு வைத்த வசுந்தரா அதை இவர்களிடம் சொல்லாமல் சென்றுவிட்டார் பூங்குழலியின் மேலிருந்த கோபத்தில்… குழலியும் கனியும் கிண்டல் அடித்து பேசி பொழுதை போக்கியவர்களுக்கும் தெரியவில்லை இரவு உணவை செய்து விட்டுதான் கிளம்பி இருக்கிறார்கள் என்று… வீட்டிற்கு வந்த வசுந்தராவோ அண்ணன் வீட்டுலேயே இரவு உணவை முடித்திருக்க இங்கு வந்ததும் படுக்க செல்கையில் தான் பெண்கள் இருவரும் வசுந்தராவிடம் கேட்க பணியாரம் இல்லை என்றதும் அன்னை தன்மேல் உள்ள கோபத்தில் தான் இப்படி செய்கிறார் என்று சண்டைக்கு நிற்க, கடைசி பட்டினியுடன் உறக்கத்தில் ஆழ்ந்தனர்…

வீட்டிற்கு வந்த வசுந்தரா பாத்திரம் அனைத்தும் காலியாக இருப்பதை கண்டு, இருவரும் தான் உண்டிருப்பார்கள் என்று எண்ணியிருக்க, மீண்டும் வந்து உணவை கேட்கவும், இரவு நேரத்தில் அதிகம் உணவு உட்கொள்ள கூடாது என்று திட்டி படுக்க அனுப்பி வைத்தார்…

இங்கு, அனைத்தையும் உண்டதோடு அல்லாது காயத்ரியும் ஆப்பம், தோசை என்று சமைத்து அவர்களது வயிற் வெடித்துவிடும் அளவிற்கு சாப்பிட்டு அறையில் மல்லாக்க படுத்து இன்றைய பொழுதின் இனிமைகளை அசைப்போட்ட படி உறக்கத்தில் ஆழ்ந்தனர் ஆண்கள்…

மறுநாள் விடியல் அனைவருக்கும் இனிமையாக விடிந்தது யாருக்கும் காத்திராமல்…

“ஆத்தா… நாங்க போயிட்டு வாரோம்…” என்று பூங்குழலி கத்த,

“அத்த… நாங்க போயிட்டு வாரோம்…” என்று கனிமொழி கத்த, வீட்டின் உட்புறத்தில் இருந்து கோபமாக வந்தார் வசுந்தரா,

“கிறுக்கிகளா… என்னத்துக்குவே இப்படி கூப்பாடு போடுதீக… இப்ப போகதீகன்னு சொன்னா அடங்கி இருக்க போறீகளா..?” என்று சீனத்துடன் கேட்டு, நக்கலாக முடிக்க,

பூங்குழலி, “ஆத்தா போய் வாரோம்னுட்டு தானே சொன்னோம்… அதுக்கு கூட திட்டுறீக… நாளைக்கு சின்ன குட்டிக்கு விஷேசம் இருக்குல்ல… அதான் என் சிநேகிதிய அழைக்க போறோம்…” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல, வசுந்தராவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது…

நாம் அதிகமாக திட்டுகிறோமோ என்று, அதனால் கொஞ்சமே கொஞ்சம் தணிந்த குரலில்,” செரி செரி வெள்ளன்னே போயிட்டு உச்சி பொழுதுக்கு முன்னாடி வாங்க…” என்று வழியனுப்பி வைத்தார்…

பெண்களும் பொடி நடையாக கரும்பு காட்டு வழியாக கதை பேசியபடி நடந்து அவர்களது சிநேகிதி வீட்டை அடைந்தனர்… அங்கு மூவரும் பேசி அரட்டையில் இறங்கி அவளது வீட்டை ஒருவழியாக்கி கொண்டிருந்தனர் மூவரும்…

உணவு மேஜையில் அனைவரும் கூடி உணவருந்திக் கொண்டு இருக்கையில், முருகவேல், “ராசா, நான் வக்கீல் கிட்ட பேசி பத்தரம் அம்புட்டையும் தயார் பண்ண சொல்லிபுட்டேன்… நாளைக்கு நல்லா நாளா இருக்கு அதுனால நாளைக்கு ரெஜிஸ்டர் ஆஃபீஸ் போய் கையெழுத்து போட்டு மாத்திரலாம்… ” என்க, தலையை ஆட்டி ‘சரி…’ என்று ஆமோதித்தான் கவியழகன்…

காயத்ரியும், சைந்தவியும் குழப்பமாக மகனையும் கணவனையும் பார்த்தவர்கள் என்னவென்று விடை அறிந்து கொள்ள வேண்டி, “என்ன விஷயங்க….?” என்று காயத்ரி கேட்க, அவரை நிமிர்ந்து ஓர் பார்வை பார்த்த முருகவேல், மீண்டும் உணவில் கவனத்தை செலுத்தியவர்,

“சொத்து எல்லாத்தை ராசா பெயருக்கு மாத்தி எழுத போறேன் நாளைக்கு…” என்று விஷயத்தை அறிவித்தவர் ஓர் பார்வையில் மகளின் முகத்தை நோட்டம் விட்டார்…

ஆனால் அவளோ எதுவும் என் காதில் விழவில்லை என்னும் தோரணையில் உணவை உண்டுக் கொண்டிருக்க, முருகவேலுக்கு குழப்பத்தையும் மீறி சற்று நிம்மதியாக இருந்தது…

‘ம்ம்ம்… இப்படி எப்பவும் வாய் மூடிட்டு இருந்தா பிரச்சனயில்ல…’ என்று எண்ணியவர் மனைவியின் முகத்தை காண தவறிவிட்டார்…

ஒருவேலை கவனித்து இருந்தால் நிச்சயம் துணுக்குற்று சுதாரித்து இருந்திருப்பாரோ என்னவோ அவரது வாழ்வில் விதி விளையாட தொடங்கியது…

கணவர் சென்றதும், காயத்ரி முகம் மலர “அப்படியா ராசா….?” என்று கேட்கவும், அழகிய புன்னகையில்’ ஆம்…’ என்று பதில் வந்தது கவியிடம் இருந்து….

“எல்லா  இனி செரியா நடந்தா போதும்யா சாமி… இத்தன வருஷம் சேர்த்த பாவம் போதும்யா இனியாச்சும் அம்புட்டும் சீர் செஞ்சுருயா… அதுக்கு இந்த ஆத்தா என்ன உதவி வேணுமோ அதைய செய்யுதேன்…” என்று மகிழ்ச்சியில் திகழ்ந்தவரை பார்த்தவன், ” கண்டிப்பா ம்மா… எனக்கு உங்களால ஆக வேண்டிய வேலை ஒண்ணு இருக்கு… அப்ப கண்டிப்பா கேட்பேன்…” என்று விஷமத்துடன் கேட்க, மகனது வார்த்தையில் இருக்கும் உள்குத்தை அறியாத அந்த பேதை தாயும்,

“உனக்கு செய்யாம வேற ஆருக்கு செய்ய போறேன் ராசா… கண்டிப்பா செய்யுதேன்…” என்று வாக்களிக்க, அனைவர் முகத்திலும் ஒரு நிம்மதி புன்சிரிப்பு தவழ்ந்தது…

சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்து சென்று சைந்தவியை பின்தொடர்ந்தான் விக்கி…

“ஏய்… அருந்தவாலு…”

“என்ணணே …?”

“உனக்கு எந்த கஷ்டமும் இல்லல சொத்து எல்லாத்தையும் கவி பெருக்கு மாத்துறதுல…?” என்று மனதை அழுத்திய விஷயத்தை கேட்க, சைந்தவியோ

“கண்டிப்பா இல்லெண்ணெ… எனக்கு கவி அண்ணே பத்தி பெருசா தெரியாட்டியும் அவருக்கு எம்மேல பாசம் அதிகம்… எனக்கு அய்யன பத்தி நல்லா தெரியும் இந்த சொத்து பணம் நிலம் அம்புட்டும் அய்யன் கிட்ட இருக்குறதைய விட அண்ணே கிட்ட இருக்குறதுதேன் செரின்னுட்டு தோணுது… எனக்கு எதுவா இருந்தாலும் அண்ணே பார்த்துக்கும்… அதுவும் இல்லாம…” என்று சற்று இழுத்தவள்,

“ஒரு கொரங்க கூட அண்ணணா தத்தெடுத்து வளர்க்குதேன் அதனால எனக்கு ஏதாச்சும்னா அந்த கொரங்கு பார்த்துக்கும்…” என்று அவ்விடம் விட்டு ஓடு,

“ஹே… நான் கொரங்கா உனக்கு… உன்ன என்ன பண்ணுறேன் பாரு அருந்தவாலு…” என்று அடிக்க தொறத்தினான் அவள் பின்னே…

இதை எல்லாம் அடுத்து கை கழுவ வந்த கவியின் காதில் தெளிவாக விழ, உடலும் மனமும் சிலிர்த்து போனது… விவரம் தெரிந்த நாளில் இருந்து தங்கையுடன் அதிக அளவில் நேரம் செலவழித்ததுமில்லை, பெரிதாக கவனித்துக்  கொண்டதுமில்லை, இருந்தும் அவளுக்கு தன் மேல் இருக்கும் நம்பிக்கையையும், பாசத்தையும் கண்டு பிரம்மித்து போனான்… இந்த நம்பிக்கையை தாம் கடைசி மூச்சுவரை காப்பாற்ற வேண்டும், இனி தங்கையை நல்ல விதமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்னும் தீர்மானம் அவனுள் முகிழ்ந்தது…

அதன்பின் கவி, விக்கி இருவரும் மில்லுக்கு கிளம்புவதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பினர்…

“டேய் எங்கடா போற…?மில்லுக்கு அந்த பக்கம்ல போகனும்…?” கார் வேறு திசையில் பயணிப்பதை கண்டு சந்தேகமாக நண்பனை கேட்க, கவி அவனை திரும்பி பார்த்து விஷம புன்னகையுடன் ஒற்றை கண்ணை சிமிட்டியவனை கண்டு விக்கிக்கு அவனது நோக்கம் புரிந்து போனது…

“ஆமா இப்ப போற இடத்துக்கு இவங்க வருவாங்களா இல்ல அவங்க இருக்குற இடத்துக்கு நாம போறோமா…?”

“நேத்து அவங்க பேசும் போது கேட்டியா இல்லையா…?” என்ற கேள்விக்கு பல்லை காட்டியவனை கண்டு நெற்றியில் அறைந்துக் கொண்டவன்,

“ரொம்ப ஓவரா தான் டா ஜொல்லு விடுற… கொஞ்சம் கொறைச்சுக்கோ…” என்று கேலி பேசியவனை பார்த்து முறைத்து விக்கி,

“டேய் மாப்ள… உன்ன விட நான் கம்மியா தான் வழியுறேன்… இப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…” என்று முறுக்கிக் கொண்டான்…

“அது இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும் மச்சான்…” என்று சிரித்தபடி வண்டியை ஓரம் கட்டியவன், “வா டா… இனி நடந்து தான் போகனும்…” என்றதும் நண்பர்கள் இருவரும் பேசியபடி நடக்க தொடங்கினர்…

ஐந்து நிமிடம் நடை பயணத்தில் அவர்களின் எதிர் திசையில் தரிசனம் அளித்தனர் பெண்கள் இருவரும்…

“ஏம்புள்ள… உண்மைய சொல்லு, என்னைய விட்டுட்டு நேத்து நீதேனே பணியாரத்த தின்னது…” என்று சந்தேக பார்வையோடு கனியை அளந்தாள் பூங்குழலி…

அவளுக்கு மனம் ஆறவில்லை… பணியாரம் சுட்டு இருக்கிறார் என்றதற்கு அடையாளம் அடுக்களையில் இருந்தது… அதிலும் அது வைத்திருந்த பாத்திரம், சட்டினி குறைந்து இருந்தது என அனைத்தும் சந்தேகத்தை அவளுள் விளைவித்து இருக்க, தோழியிடம் கேட்டே விட்டாள்…

அதற்கு கனி, “ஏய் பைத்தியகாரி உங் பணியாரத்தை சாப்பிட்டு தான் நான் வாழனும்னுட்டு எனக்கு அவசியம் இல்ல… உம்மேல சத்தியமா நான் சாப்பிடல புள்ள… என்னைய நம்பு… நேத்து பூரா உங்கூடதேனே சுத்திட்டு இருந்தேன் யோசன பண்ணி பாரு…” என்றதும் நேற்றிய நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து கொண்டு இருக்க, அவர்களது வழியை மறித்தனர் காளையர்கள்…

தலைகுனிந்து யோசித்துக் கொண்டு வந்தவளுக்கு முன் தடை வரவும் எரிச்சலாக நிமிர்ந்து பார்த்தவள், கவியை கண்டு இமைக்க மறந்தாள்… அலையலையான கேசத்தை கோதியபடி குழலியை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க, பூங்குழலியின் இதயத்தில் பெரிய அளவிலான கல்லை ஏறிந்து முற்றிலும் குழப்பி அடித்தான்…

‘ஆத்தி… என்னதிது ஒருமாதிரி இருக்கு… இவனைய பழிவாங்கனும்னுட்டு நினைச்சுட்டு இருந்தா இப்படி கவுத்து விடுறான் நம்மளை…’ என்று யோசித்துக் கொண்டு இருந்தவளுக்கு இன்னும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லை…

‘ஆஆஆ… கிளி சிக்கிருச்சு போலவே…’ என்று எண்ணிய கவி அதே குறும்பு புன்னகையுடன் அவளை நோக்கி ஓரடி முன்னேரினான்…

விக்கியோ கனிமொழியின் மீது படிந்து தன் கண்களை அகற்றாமல் பார்த்திருக்க, முதலில் நொடி பொழுதில் அவனை தலை முதல் கால் வரை அலசியவள் சட்டென தன் கண்களை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்…

அவன் தன்னைதான் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று உள்ளுணர்வு ஊந்த, இரண்டடி இடைவெளியில் குழலிக்கு பின் வந்துக் கொண்டு இருந்த கனி இப்பொழுது மெல்ல சிலையென நின்றிருந்த தோழியின் பின் மறைந்து நின்றாள் நைசாக…

அதை கண்டு லேசாக இதழ் வளைத்து சிரித்தவன், அவளை பார்ப்பதற்கு வசதியாக நகர்ந்து நின்றான்…

‘என்ன இவுக, இப்படி பார்க்குறாக… யாராச்சும் பார்த்தா என்னத்துக்கு ஆவுறது…?’ என்று எண்ணி படபடத்தவள் மெல்ல தன்னை சுற்றி முற்றி பார்க்க அப்பொழுது தான் தன் எதிரில் நின்றிருந்த சிலையையும், கவியையும் கண்டு வாய் பிளந்தாள்…

பழிவாங்க துடித்தவள் மன்னவனின் விழி மொழி விசையீர்ப்பில் கட்டுண்டு கிடந்தாள் தன்னையும் அறியாது…

‘அடிபக்கி… ஒன்னுமில்லனு சொல்லிட்டு கண்ணுல காதல் படம் ஓட்டிட்டு இருக்கா… இவளைய….’ என்று எண்ணியவள், அவளது கையை நறுக்கென்று கிள்ளி வைக்க, அதில் பூங்குழலிக்கு சுரனை வர

“ஸ்ஸ்ஸ்….ஆஆஆ… லூசு…. ஏன் டி கிள்ளுத…?” என்று துள்ளியவள் தோழியின் புறம் திரும்பி கடுப்புடன் கத்தினாள் வலியில்…

“ம்ம்ம்… ஆசையா இருந்துச்சு புள்ள… அதேன் சும்மா வேடிக்கயா கிள்ளி பார்த்தேன்… “என்று நக்கலாக பதிலளிக்க சூடாகி போனாள் குழலி….

“அப்புறம்…. என்ன முட்டக்கண்ணி…. என்ன இந்த பக்கம் அதும் ஒத்தையா…?” குழலி கத்தவும் சுதாரித்த கவி, குழலியை வம்பிழுக்க ஆரம்பித்தான் உல்லாசமாக கையை மேலே தூக்கி சோம்பல் முறித்தபடி….

“ம்ம்ம்… மளிக சாமான வாங்க வந்தேன்…” என்று வீம்பாக இழுத்து பதில் கூறியவள்,

“இன்னொரு முற என்னைய முட்டக்கண்ணினு சொன்ன மண்டைய உடைச்சுருவேன் ஜாக்கிரத…” என்று எச்சரித்தவள் கனியின் புறம் திரும்பி,

“வா புள்ள போலாம்…” என்று அவர்களை தாண்டி செல்ல முயல்கயில், கவி குழலியின் கையை பிடித்து தடுத்திருந்தான்…

“ஏய்… என்ன பண்ணுதவ…? விடு எங்கைய… விடு…” என்று அவனது பிடியில் இருந்து விடுபட முயற்சிக்க, அவளது கோபம் கலந்த சிணுங்களை ரசித்த படி மெல்ல அவளை தன்பக்கம் இழுக்க தொடங்கினான் அவள் அறியா வண்ணம்…

இவர்கள் இருவரின் அலபரையை கண்டு, பதறியது என்னவோ அருகில் இருந்த அவர்களின் நட்புகள் தான்…

“டேய் என்னடா பண்ணுற… தேவையில்லாம பிரச்சினை பண்ணிறாத டா…” என்று கவியின் காதை விக்கி கடிக்க,

“அய்யோ கத்தாத புள்ள… ஆராச்சும் வந்துட போறாக…” என்று குழலியின் காதில் கனிமொழி கூற, எங்கிருந்தான் அத்தனை கோபம் வந்ததோ சட்டென திரும்பி தோழையை முறைத்தவளின் பார்வை வீசு அவ்வளவு சூடாக இருந்தது…

அதில் கப்பென்று வாயை மூடிக்கொண்டவள், மனதில் ‘இன்னைக்கு இவ நம்மளை கும்ம போறது சத்தியம் டி கனி…’ என புலம்ப மட்டுமே முடிந்தது…

கவியழகனோ நண்பனின் வார்த்தையை காதில் ஏற்றிக் கொள்ளாமல் எதிரில் இருந்த பூங்குழலியின் முகப் பாவனைகளை மட்டுமே ரசித்துக் கொண்டு இருந்தான்…

அதை கண்டு விக்கி, “ம்ஹும்… இது தேராது… எவங்கிட்டயாச்சும் மாட்டாம இருந்த சரி… நாம நம்மாளை பார்ப்போம்… ” என்று முனுமுனுத்தவனின் பார்வை கனிமொழியிடம் இடம்பெயர்ந்தது….

அவளோ இவனை காணாது கையை கட்டிக் கொண்டு, பக்கவாட்டில் இருந்த சோல கதிர்களை பார்வையிட்டுக் கொண்டு இருந்தாள்…

அதை கண்டு காண்டான விக்கி, நெற்றியில் அறைந்து கொண்டான், “இதுவும் தேராது… இதைய நான் கரெக்ட் பண்ணுறது ரொம்ப கஷ்டம் போல…”என்று புலம்பிய படி, அவள் அருகில் சென்றவன்,

அவளது சுழன்றாடும் கருவிழியும், குழந்தை முகத்தையும், உதட்டை வளைத்து, ஏதோ யோசிப்பது போல் இருந்த தோரணையும் அவனை கவர மேலும் மேலும் அவள் புறம் விழுந்தான் காரணம் இல்லாமலே… சில நொடிகள் ரசித்தவன், அவளிடம் பேசும் ஆர்வம் கொண்டு மெல்லிய குரலில் மென்மையாக

“கனி….”என்றழைக்க, ஒரு பக்கமாக திரும்பி நின்றிருந்தவள் தான் கேட்ட ஒளியில் கண்கள் விரிய ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க, அடுத்தநொடி சுயம் பெற்று வேகமாக விக்கியின் புறம் திரும்பினாள்…

விக்கியோ, தன்னவளை ரசித்துக் கொண்டு இருக்கையில், தனக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தவன் எதுவும் காணாமல் யோசனை முகத்துடன் பார்வையை சுழற்ற,

“தம்பி….” என்ற குரலில் அதிர்ந்து திரும்பி பார்த்தான் விக்னேஷ்…

தொடரும்…..

Advertisement