Advertisement

UD:11

அன்றைய நிகழ்வை நண்பனிடம் ரசனையுடன் கனவில் மிதந்தப்பது போல் கூறிக்கொண்டு வந்தவனின் நினைவுகளை நிகர்காலத்திற்கு இழுத்து வந்தான் விக்கி…

“மாப்ள….”

“ம்ம்ம்…”

“கொஞ்சம் பிரெஸன் டென்ஸ்க்கு(present tense) வாடா…” என்று கூறியதும் சட்டென சுதாரித்தவன் போல் திரும்பி விக்கியை பார்க்க, அவனோ முகத்தை பாவமாக வைத்திருந்தான் குழந்தையை போல்…

“ஏன் டா விக்கி…?”

“என்ன ஏன்டா…? நீ என் லவ்வூக்கு ஹெல்ப் பண்ணுறன்னு சொன்ன நானும் கொஞ்சம் நம்பினேன்… ஆனா இப்ப நீ பண்ணுறது எல்லாம் பார்த்தா உனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒருபுள்ளய பெத்த பின்னாடி தான் என்னைய பத்தி யோசிப்ப போல… இதுக்கு மேல உன்னைய நம்புறதா வேண்டாமான்னு யோசனையா இருக்கு…” முகத்தை திருப்பி கோபமும் சந்தேகமுமாய் சொல்ல, கவியோ தன் கண்ணாடியை அணிந்தபடி

“நீ இன்னுமா என்னைய நம்பிட்டு இருக்க…?” என்று நக்கலாக கேட்டபடி, அவனை மேலிருந்து கீழாக அழந்துவிட்டு, “தேராது ரொம்ப கஷ்டம்…”என்று உதட்டை பிதுக்கி சலிப்புடன் தலையை இடமும் வலமுமாக ஆட்டியபடி தன் காரை நோக்கி நடந்தான்…

அவனை அதிர்ச்சியாக பார்த்து நின்றிருந்த விக்கி லேசாக வாயை திறந்தபடி மனதில், ‘அடபாவி கிராதகா… சுயநலவாதி…துரோகி…’ என்று மேலும் அவனை வசைபாடிக் கொண்டிருக்கையில், கவி காரை அவன் அருகில் நிறுத்தி

“திட்டுனது போதும் வந்து கார்ல ஏறு…” என்க, அவனை முறைப்படியே காரில் ஏறியவன் மறந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை வீடு வந்து சேரும்வரை…

“என்ன புள்ள… அமைதியா வர…? அண்ணா பேசுனத நினைச்சுட்டு இருக்கியா…? அவருச்…” என்ற கனியின் பேச்சை தடை செய்தவள், கோபமாக திரும்பி

“யாருக்கு யாரு டி அண்ணா…?” என்று கேட்டவளை கண்டு மிரண்ட கனி…

“செரி செரி… மன்னிச்சுகோ புள்ள… தெரியாம சொல்லிபுட்டேன்… வா புள்ள போலாம்… ரொம்ப நேரமாச்சு…அத்த திட்டும்…” என்று கெஞ்சவும் சற்றே மலை இறங்கியவள், சைக்கிளை ஓட்டியபடி

“இன்னொருதரம் அவனை அண்ணே நொண்ணேனுட்டு சொன்ன நான் கொலகாறி ஆயிருவேன் பார்த்துக்க…” என்று எச்சரிக்க,

“தப்புதேன் இனி சொல்லல…” என்ற கனி அதன்பின் வாயை திறக்கவில்லை, பூங்குழலியும் தன் நினைவுகளில் உழன்றுக் கொண்டு இருந்ததால் அவளை பெரிதும் கண்டுக் கொள்ளவில்லை…

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், செல்லதாயி “ஏன்டி கூறுகெட்டவளுகளா… நேத்தே படிச்சு படிச்சு சொன்னோம்ல இன்னைக்கு சாயந்திரம் காலேஸு உட்டதும் ஒழுங்கா வூடு வந்து சேருங்கன்னு… இப்படி கொழுப்பெடுத்து ஊரு சுத்திட்டு வரிக…. கொஞ்சமாச்சும் பொட்டபுள்ளைகள போல நடந்துக்குறீகளா…?” என்று பொரிய தொடங்க, பூங்குழலியோ எதையும் காதில் வாங்காது தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்… ஆனால் கனிக்கு எங்கும் செல்ல வழி இல்லாததால் திருதிருவென விழித்தபடி அப்பத்தாவின் அத்தனை வசவுகளையும் வாங்கிக் கொண்டிருந்தாள் பாவமாக….

‘என் கெரகம் இவகூட கூட்டு சேர்ந்துட்டு படாதபாடு படுதேன்… இந்த அப்பத்தா வேற ஓயவே மாட்டீங்குது… சே…’ என்று மனதில் புலம்பியவளின் முகம் அத்தனை நிர்மலமாக இருந்தது…

பூங்குழலி தன் அறையின் ஜன்னலின் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் எங்கோ இளக்கின்றி… அவளது மனம் முழுவதும் கவியழகனே நிறைந்திருந்தான்…

அவன் மீது அவளுக்கு பெரிதும் எந்த ஒரு ஈர்ப்போ, ஆசையோ இல்லையென்றாலும் இன்று அவனது செயல்களால்  அவளது மனதில் கல்லெறிந்து இருந்தான் கவியழகன்…

இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவனது நியாபகம் தன்னை ஏன் தாக்கவில்லை என்று யோசித்தவளுக்கு விடையாக வந்தார் முருகவேல்… அதில் யோசனை முகத்துடன் இருந்தவளின் முகம் இப்பொழுது இறுகி போனது பழைய நினைவுகளில்…

அவரால் தன் குடும்பம் பட்ட துன்பம்கள் எத்தனை, சிறிதும் கருணை இன்றி அவர் நடந்துக் கொண்ட விதம், தன் தாய் பட்ட துன்பம் தான் அனுபவித்த போராட்டம் எல்லாம் நினைவில் வருவும் கவியின் எண்ணங்கள் பின்னுக்கு தள்ள பட்டது…

“ம்ம்ம்… அந்த பெரியவர் மனசுல ஈவு இரக்கம் இல்லாமல் நடந்துக்குவாராம்… அவரு வாரிசு பொண்டாட்டின்னு உரிம கொண்டாட வருவாராம்… என்ன நினைச்சுட்டு இருக்காக ரெண்டு பேரும்… அந்த லூசு இன்னொரு முறை அப்படி சொல்லிட்டு வருட்டும் பொறவு இருக்கு கச்சேரி…” என்று புலம்பியவள், தன்முன் தொங்கிய ஐடையை தூக்கி பின்னால் வீசி, முகத்தை நொடித்துக் கொண்டாள் கோபமாக…

அறைக்குள் சென்று கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாகவும், பொறுமை இழந்த வசுந்தரா அவளது அறை கதவை தட்ட, சலிப்புடன் வந்து திறந்தவள்,

“இப்ப என்னத்துக்கு இப்படி தட்டுறீக…?” என்று கோபமாக கேட்கவும்,

“அடி கழுத… உள்ளுக்குள்ள போய் அரைமணி நேரமாச்சு, உடுப்பக் கூட மாத்தாம என்னவே பண்ணிட்டு இருந்த…? நானும் பாட்டியும் அண்ணா வீட்டுக்கு போகனும்னு சொன்னோமா இல்லையா…? நீ பாட்டுக்கு உள்ள போய் கெடக்க…” என்று வசுந்தரா கத்தவும் தன் மடதனத்தை எண்ணி திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் என்ன சொல்வதென்று புரியாமல்…  

அவளது முழியை சந்தேகமாக பார்த்தவர், “என்னல நினைச்சுட்டு இருக்க, வர வர ஆளும் செரியில்ல முழியும் செரியில்ல… என்னவே ஏத்தாச்சும் சண்டைய இழுத்து விட்டிருக்கியோ…? மரியாதையா சொல்லு டி…” என்று சந்தேகமாக கேட்டு மிரட்டவும் முதலில் அரண்டவள் பின் இதுயென்ன நமக்கு புதுசா என்னும் ரேன்ஜில் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“இப்ப என்னத்துக்கு இம்புட்டு சந்தேகம் உங்களுக்கு… கொஞ்சம் தலை வலியா இருந்துச்சு அதான் அசந்து தூங்கிட்டேன்… இப்ப என்ன அதுக்கு…?” என்று கேட்டபடி வசுந்தராவை தாண்டி, வீட்டின் முற்றத்திற்கு வந்தவள் அங்கு தூணின் அருகில் பல்லியை போல் ஒட்டி அமர்ந்திருந்தவளை பார்த்து சிரித்த பூங்குழலி,

“ஏம்ள இப்படி உட்கார்ந்து இருக்கவ… ?” என்று கேட்டபடி அவள் அருகில் அமர்ந்தவளை முடிந்த மட்டும் முறைத்து பார்த்த கனிமொழி அவளுக்கு பதில் கூறவில்லை… உள்ளுக்குள் அத்தனை கோபம், பின்னே அப்பத்தாவிடம் வாங்கிய திட்டுகள் அப்படி…

“உடம்பு பூராவும் திமிரு… நீ வா நாம போவோம்… இதுங்களை எல்லாம் திருத்த முடியாது…” என்ற செல்லதாயி இருவரையும் ஒருமுறை முறைத்துவிட்டு வசுந்தராவுடன் ஜெயசீலன் வீட்டை நோக்கி நகர்ந்தனர் நாளை மறுநாள் நடக்க போகும் கனி தங்கையின் பூப்புநீராட்டு விழாவிற்கு தேவையான ஏற்ப்பாடுகளை செய்ய…

அவர்கள் சென்றதும், பூங்குழலி “என்னாச்சு புள்ள…? ஏன் இங்கேயே இப்படி உட்கார்ந்து இருக்கவ…?”

“போடி அங்குட்டு… எல்லாம் உன்னாலதேன்… கொலவெறில இருக்கேன்… பேசாம போயிடு…” என்று சுள்ளென்று வார்த்தையை கொட்ட, குழம்பி போனாள் குழலி…

“நான் என்னதவ பண்ணினேன்…?”

“நீ என்னதைய பண்ணல சொல்லு புள்ள…? அங்குட்டு அவிகளோடு சண்டைய போட்டு பொழுத ஓட்டுனது நீ, இங்குட்டு வீட்டுக்கு வந்ததும் நீ பாட்டுக்கு ரூம்க்கு போய் தாழ் போட்டுகிட்ட இங்குட்டு அந்த அப்பத்தா என்னைய போட்டு உருட்டுது…” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்…

கனி கூறியதை கேட்டு சிரிப்பை அடக்கிய பூங்குழலி அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்… அங்கு இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில், வீட்டின் கொல்லைப்புறத்து மதில் சுவரை எகிறி குத்திருந்தனர் இருவர்…

“டேய்… வீட்டுல யாருகிட்டையாச்சும் மாட்டுனோம் செத்தோம்… இது சரியான வீடு தானா…? உனக்கு நல்லா தெரியுமா…?” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கவியை பின்தொடர்ந்தான் விக்கி…

பாஸ் ஸ்டாப்பில் இருந்து கிளம்பிய இருவரும் வீட்டை சென்றடைந்தனர் தங்கள் துணையின் நினைவில்… வீட்டிற்குள் நுழைந்ததும் விக்கி யாரிடமும் எதுவும் பேசாது அமைதியாக தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டான்…

அவனை பார்த்திருந்த காயத்ரி, “என்னாச்சு ராசா…? ஏன் அந்த புள்ள ஒருமாதிரி இருக்காப்பல… உங்க ரெண்டு பேத்தும் ஏதாச்சும் தகராறா ராசா…?” என்று பதமாக கேட்டார் அவன் மீது கொண்ட அக்கரையில்…

“ஒன்னுமில்ல சும்மா தான் ம்மா… இன்னைக்கு வெளில அலைஞ்சோம்ல… அதான் ஒருமாதிரி இருக்கான்… நான் பார்த்துக்குறேன்… ஆமா அப்பா எங்க…?” என்று சமாளித்தபடி தந்தையை விழிகளால் அலசினான்…

அன்று பொறுப்பை தன்னிடம் ஒப்படைப்பதாக சொல்லிவிட்டு சென்றவர்… அதன்பின் இதை பற்றி ஒரு வாத்தைக்கூட பேசவில்லை… நாள் தள்ளி போக போக பிரச்சினையை தீர்க்க முடியாது என்று எண்ணியவன், இது குறித்து தந்தையிடம் மீண்டும் பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்…

“எங்குட்டோ முக்கியமான ஜோலி இருக்குன்னுட்டு போனாகவ இன்னும் வீடு திரும்பல ராசா…” என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தார் வாடிய முகத்துடன்…

அதை கவனித்தவன் அமைதியாக இருந்தான் தன் நினைவுகளின் ஓட்டத்தில்… அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து முடிவெடுத்த பின் சற்று நிம்மதியாக உணரும் போது கையில்  ஒரு தட்டுடன் வந்தார் காயத்ரி…

“என்னம்மா இது…?” என்றபடி தட்டை ஆராய, அதில் தேநீர் அடங்கிய இரு கோப்பையும் வெங்காய பக்கோடாவும் இருப்பதை கண்டு, முகம் பிரகாசமானது …

“விக்கி கண்ணாக்கு முகமே செரியில்ல ராசா… அதான் குடிக்க காஃபியும் சாப்பிட பக்கோடாவும் செஞ்சேன்…” என்றவர் மகனுக்கு தேரீரும் விக்கிக்கு காஃபியும் எடுத்து வந்தார்…

“சூப்பர் ம்மா… ரொம்ப தேங்க்ஸ்…” என்றவன் அன்னையிடம் இருந்து தனக்கான தேநீரை வாங்கியவன், “ம்மா… நானே அவன் கிட்ட குடுத்துக்குறேன்… நீங்க ஏன் ஒருமாதிரி இருக்கீங்கன்னு சொல்லுங்க மொத்தல்ல….?” என்று லேசாக தோளோடு அணைத்தபடி கேட்கவும்,

மனதை போட்டு அழுத்திய விஷயத்தை மகனிடம் கூறியதும் சற்று நிம்மதியாக உணர்ந்தவர், “ம்ஹும்… எல்லாம் நம்ம தலையெழுத்து ராசா… யார என்னனுட்டு குத்தம் சொல்ல முடியும் சொல்லு… எல்லாம் நல்லா இருந்து நடந்தா செரி… உங்கய்யனுக்கு எப்ப புத்தி தெளியும்னுட்டு தெரியல… செய்யுற ஜோலி தப்புன்னுட்டு தெரியாம புரிஞ்சுக்காம இப்படி எல்லாம் பண்ணுதாகவ… பார்க்கலாம் எல்லாம் எம்புட்டு தூரம் போகுதுன்னுட்டு…” என்று பெருமூச்சு விட்டு, “செரி ராசா நீரு எதையும் போட்டு குழப்பிக்காதீக… போங்க… போய் அந்த விக்கி பயலுக்கு இதைய குடுக…” என்றுவிட்டு அகலவும், கவியின் மண்டைக்குள் பல விஷயங்கள் ஓடியது தந்தையை எண்ணி…

சிந்தனையோடு நடந்தவன் முடிவில் அறையை வந்தடைய, அனைத்தும் மறந்துவிட்டு நண்பனை தேடினான்… விக்கியோ பால்கனியில் நின்று தன்னவளின் முகத்தையும் அதில் தெரிந்த பயம், பதற்றம், அவளது தோற்றம் என அனைத்தையும் மனதில் ரீவைண்ட் செய்து பார்த்திருந்தான்…

அவனை கண்ட கவி, ‘ம்ம்ம்… பையன் கனவுல இருக்கான் இப்போதைக்கு இதை சாப்பிட மாட்டான்… நம்மளே திம்போம்….’ என்று பக்கோடா முக்கால்வாசியை உள்ளே தள்ளியவனுக்கு அப்பொழுது தான் ஒரு யோசனை தோன்றியது…

அதில் முகம் பிரகாசமாக வாயில் பக்கோடாவை அடைத்துக் கொண்டே நண்பனை நோக்கி பாய்ந்தவன், “டேய் மச்சான்… ஒரு ஐடியா டா…” என்று கூவ, இனிய கனவுளகத்தில் இருந்த விக்கி பதறியபடி தன் மேல் பாய்ந்த நண்பனை திரும்பி பார்த்தவன்,

“பரதேசி நாயே… ஏன்டா இப்படி வந்து விழுற… சை… ஒரு செகண்ட் பயந்துட்டேன்…” என்று திட்டிய படி நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவன் அப்பொழுது தான் கவியை கவனித்தான்…

“என்னது டா வாய்ல…?”

“ஈஈஈ…” என்று இளித்தவனை பார்த்து,

“சீ… வாய மூடு… என்னத்த திங்குற என்னைய விட்டுட்டு…”

“வெங்காய பக்கோடா…”

“எனக்கு எங்க டா… நீ மட்டும் தனியா சாப்பிட்டுட்டு இருக்க…ஆமா நீதான் இதுவெல்லாம் சாப்பிட மாட்டியே…?”

“அச்சோ…” என்று தலையில் கை வைத்தவன், “நீ ஃபீல் பண்ணிட்டு இருந்தியா சரி குடுத்தாலும் சாப்பிட மாட்டனு நானே சாப்பிட்டேன் டா…” என்றவனை துரத்தி துரத்தி அடித்தவன் கடைசியாக அவனை படுக்கையில் தள்ளி wwf போல வெறித்தனமான ஒரு சுற்றை நிகழ்த்திய பின்னரே, இளைப்பாற சற்று விலகி படுத்தனர் மூச்சு வாங்க…

கவி, “நீ எல்லாம் நல்லா இருப்பியா டா எரும… ஒரு பக்கோடாக்கு போய் இப்படி அடிக்குற…” என்று மூச்சு வாங்க பேசியவனை முடிந்தமட்டும் முறைத்தவன்,

“டேய் நீ பண்ணதே தப்பு இதுல வியாக்கியானம் வேற பேசுற… சரி அப்ப ஏதோ கத்துனியே ஐடியான்னு என்னது அது…?” என்று கவிக்கு நினைவூட்ட, அவசரமாக எழுந்து அமர்ந்தான் கவியழகன்…

தனக்கு தோன்றியதை கூறியதும் அவனை கட்டிக் கொண்ட விக்கி, “செம்ம டா மாப்ள… சூப்பர்… இப்பவே போலாம் வா…” என்று பரபரத்தவன், அப்பொழுது தான் டேபிளில் மீதி இருந்த பக்கோடாவை பார்த்து அதை எடுக்க போக,

அவனது கைபிடித்து தடுத்த கவி, “வா டா போலாம்…” என்று கதவை நோக்கி இழுக்கவும் முகம் சுருங்க, மெல்லிய குரலில்

“மாப்ள… பக்கோடா…” என்று சிறுபிள்ளை போல் கைகாட்ட,

“மச்சான் ஆளு முக்கியமா இல்ல பக்கோடா முக்கியமா…?” என்று தீவிரமாக கேட்க,

முகத்தை பாவமாக வைத்த விக்கி, “மாப்ள அம்மா சொல்லி இருக்காங்க… ஒரு கண்ணுல வெண்ணையும் இன்னுரு கண்ணுல சுன்னாம்பும் வைக்க கூடாதாம்…”

“இப்ப உன்னை யாரு சுன்னாம்பு வைக்க சொன்னது…? நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற…?”

“இல்ல டா நீ கேட்டதுக்கு தான் பதில் சொல்லுறேன்… சாப்பாடு எனக்கு ஒரு கண்ணுனா என் விள்ளேஜ் பியூட்டி இன்னுரு கண்ணு…” என்றவனை பார்த்து துப்பியவன்,

“சீக்கிரம் திண்ணு தொல…” என்று அனுமதி குடுக்கவும் வேகமாக பக்கோடாவை வாயில் வைத்து அடைத்துக் கொண்டவன்,

“வா மாப்ள… போலாம்…” என்று சாப்பிட்டு கொண்டே கவிக்கு முன்பு வாயிலை நோக்கி வேக நடையெடுத்து வைத்தான்…

அதை சிரிப்புடன் பார்த்திருந்தவன் தன் அன்னையிடம் தாங்கள் வெளியே செல்வதாக கூறிவிட்டு, நண்பனுடன் பூங்குழலியின் வீட்டை நோக்கி நடந்தான்…

பூங்குழலி விட்டின் பின் பக்கமாக பதுங்கி பதுங்கி சென்றவனின் தோளை சுரண்டிய விக்கி, சுற்றும் முற்றும் பார்த்தபடி “மாப்ள இந்த ரிஸ்க் தேவையா..? முதல்ல நாம சரியான வீட்டுக்கு தான் வந்து இருக்கோமா…?”

“லவ்ல ரிஸ்க் இல்லைன்னா போர் அடிக்கும் டா… கரெக்டா தான் வந்து இருக்கோம்… நீ கொஞ்சம் அமைதியா வா…”

“சரி… பார்க்கனும்னா தெரு முனைல இல்ல பக்கத்துல எங்கையாச்சும் நின்னு பார்த்துக்கலாமே… இப்ப இங்க வீட்டுல யாராச்சும் பார்த்தா பிரச்சினை ஆயிராதா…?”

“ம்ப்ச்ச்… டேய் வீட்டுல யாரும் இல்ல அதுனால தைரியமா வா…” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தபடி பின்பக்க கதவினை திறக்க முற்பட்டான்…

“டேய்… நீ என்ன லூசா… யாரும் இல்லாத வீட்டுல நம்ம போய் என்னடா பண்ணுறது… ” என்று கடுப்புடன் கேட்டவனை திரும்பி பார்த்து,

“ஷ்ஷ்ஷ்… ஏன்டா கத்துர பரதேசி… பெரியவங்க யாரும் இல்ல அதுங்க ரெண்டும் இங்க தான் இருக்கு… போதுமா…? பேசாம வந்து தொல…” என்று சீறியவன், கதவை தள்ள அது மெல்ல திறந்து கொண்டது…

அதில் முகம் மலர்ந்தவன், முன் செல்ல முற்படுகையில் அவனை தடுத்து திருந்தியவன், “உனக்கு எப்படி டா தெரியும்…? யாரு சொன்னா…?”

“ம்ப்ச்ச்… டேய் உன்னை கலட்டி விட்டுட்டு வந்து இருக்கனும்… தெரியாம கூட்டிட்டு வந்துட்டேன்… கேள்வி கேட்டு இம்ச பண்ணுற… அம்மா தான் சொன்னாங்க… அம்மாக்கு யாரு சொன்னாங்கன்னு கேட்காத அவங்க கடைக்கு போகும் போது என் ஆளோட அம்மா யாரு கிட்டையோ பேசிட்டு இருந்ததை கேட்டிருக்காங்க… போதுமா… இல்ல இன்னும் ஏதாச்சும் கேள்வி இருக்கா…?” என்று எரிச்சலோடு கேட்டான் கவியழகன்…

“ஹீஹீஹீ… வேற சந்தேகம் இல்ல மாப்ள… நாம பிரோசீட் பண்ணலாம்…” என்றுவன் முகத்தை தீவிரமாக்கி பார்வையை வீட்டினுள் அழையவிட்டான் அவனது விள்ளேஜ் பியூட்டியை எதிர்பார்த்து…

அதை பார்த்து தன் நெற்றியில் அறைந்துக் கொண்டவன், “வந்து தொல…” என முன்செல்ல அவனை பின்தொடர்ந்தான் விக்கி…

பின் பக்க வாசல் வழியாக நுழைந்தவர்கள், அமைதியாக பூனையை போல் பதுங்கி பதுங்கி முன்னேற, முற்றத்தில் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை கண்டுக்கொள்ளவும் காளையர்கள் இருவர் முகமும் அத்தனை சந்தோஷத்தை தத்தெடுத்தது…

எதையும் காட்டிக் கொள்ளாமல் ஆண்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு பெண்கள் பார்க்காதவாரு பக்கவாட்டில் இருந்த அறைக்குள் நுழைந்து கதவின் பின்னே நின்றுக் கொண்டு இவர்கள் பேசுவதையும் பேசும் தங்களது துணையையும் கவனிக்க தொடங்கினர்…

“ஏய்… ரொம்ப பண்ணாத புள்ள… என்னமோ நாதேன் வேண்ணும்னுட்டு அப்பத்தா கிட்ட உனக்கு வசவு வாங்கி கொடுத்தமாதிரி பேசாதல… அதேன் தெரியாம தூங்கிட்டேனு சொன்னேன்ல…” என்று சமாதானம் செய்ய முயற்சித்து முடியாமல் போகவும் சற்று குரலை உயர்த்தினாள்…

“ஓஓஓ.. அப்ப நீ நெசமாளுமே தூங்குன…?” என்று பார்வையை பூங்குழலியின் மீது அழுத்தமாக பதித்து கேட்க, கொஞ்சம் திணறி போனாள் குழலி…

“என்ன புள்ள முழிக்குத…? அப்ப நீ தூங்கல அறைய சாத்திக்கிட்டு கவி அண்ணே பேசுனத நினைச்சுட்டு இருந்த செரிதேன…?” என்று கேட்கவும் மாட்டிக் கொண்ட திருடனை போல் முழித்து ‘ஆம்…’ என்று காட்டிக் கொடுத்தாள் குழலி…

அதை பார்த்து, கனி “ஒங்முழி ஆம்’ன்னுட்டு சொல்லுதே…?” என்று தாடையில் கை வைத்து அவளது முகத்தை ஆராய்ச்சிறாக பார்க்க, குழலி அவசரமாக

“அதெல்லாம் இல்ல புள்ள… நீ பாட்டுக்கு லூசுதனமா யோசிக்காத…” என்று சமாளிக்க முயற்சித்தாள்…

இருந்தும் அவளது முயற்சி அங்கு இருந்த மூவரிடம் தோற்று போனது… கனியின் கேள்வியில் ஆர்வமாக குழலியின் பதிலையும் முகத்தையும் எதிர்நோக்கி காத்திருக்க, அவளது முழியே அவனுக்கு பதில் அளிக்க இன்பமாய் அதிர்ந்து தான் போனான் கவியழகன்…

காரணம், அவளது இன்றைய உதாசிணம் மேலும் அன்று அன்னை கூறிய சில விஷயங்கள் எல்லாம் சேர்ந்து அவள் அத்தனை எளிதில் தன்மேல் காதல் கொள்வாள் என்று எண்ணவில்லை…

ஆனால் இப்பொழுது அவளது செயல் அவனதுக்கு சற்று தைரியத்தையும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற முடிவையும் அவளுள் உண்டாக்கியது…

“பொறவு வேற என்னவாம்…?” என்று அவள் தாடையை பிடித்து ஆட்டியபடி கேட்க,

அவளது கேலியை புரிந்துக் கொண்டவள் சற்று தெளிந்து நிமிர்ந்து பார்த்து, அவளது கையை விலகிவிட்டு, “வேற எதுவும் இல்ல… ஆனா உன்கிட்ட ஏதோ இருக்கே அம்மணி… அது என்ன…?” என்று புருவம் உயர்த்தி கேட்க, இப்பொழுது முழிப்பதும் நெளிவதும் கனியின் முறையாயிற்று…

இக்கேள்வியில் பரபரப்பான விக்கி அவர்களை உன்னித்து கவனிக்க தொடங்கினான்…

“என்ன…? என்ன இருக்கு…?” என்று கனி சற்று தடுமாற,

“அதைய நீதேன் சொல்லனும்… நான் அந்த கொரங்கு கூட சண்டை போட்டுட்டு இருக்கைல நீங்க சைடுல சைக்கிள் ஓட்டுனீகளே அது என்னது புள்ள…?” என்று கிண்டலாக கேட்க, விக்கி கவியை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பை உதிரித்து விட்டு தன் கவனத்தை கனியின் மீது செலுத்தினான்…

அவனது சிரிப்பில் கடுப்பான கவியழகன் சத்தமில்லாமல் அவனது மண்டையில் நங்கென்று ஒன்றை வைக்க அதை தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு பார்வையை மீண்டும் கனியின் மீதே பதித்தான்…

“ம்ப்ச்ச்… ஏய் நீ தேவையில்லாம எதையோ யோசிக்குத… நீ நினைக்குறாப்புல ஒன்னும் இல்ல… நான் சும்மாதேன் அவிகள பார்த்தேன் அதுவும் ஒருமுறதேன்…” முதலில் வீம்பாக பேச தொடங்கியவள், முடிவில் சிணுங்களாக முடிக்க, விக்கிக்கு உள்ளுக்குள் சில்லென்று ஓர் உணர்வு அவள் தன்னை கண்டுக் கொள்ளவில்லை என்று வருந்திக் கொண்டிருக்க இப்பொழுது தன்னை தனக்கே தெரியாமல் பார்த்திருக்கிறாள் என்று தெரிந்ததும் அத்தனை கொண்டாட்டம் அவனுள்….

அவளது தோளை தன் தோளால் இடித்த குழலி, “என்ன பெராம் சாருக்கு…?” என்று புருவம் உயர்த்தி கேட்க, லேசாக குழைந்தபடி

“விக்னேஷ் னுட்டு சொன்னாக… அம்புட்டுதேன் தெரியும்… வேற எதுவும் சொல்லல… அவிக கவியண்ணே கூட இருந்ததைய பார்த்தா அவிக பிரெண்டா இருக்கணும்…” என்று உதட்டை சுழித்து அவள் யோசனையாக கூற,

“ஓஓஓஓ….” என்று குழலி கேலி செய்ய,

தன் யோசனையில் இருந்து வெளிவந்தவள் குழலியை நிமிர்ந்து பார்த்து, “இங்குட்டு பாரு புள்ள… நீ நினைக்குறாப்ல ஒன்னும் கிடையாது… உனக்கு அய்யன பத்தி தெரியும்ல… நான் வீட்டுல சொல்லுற மாப்பிளயதேன் கட்டுவேன்… இவன் இன்னும் நாலு அஞ்சு நாளு இங்குட்டு இருப்பாக பொறவு அவிக ஜோலிய பார்த்துட்டு போயிருவாக… என்னால இந்த மாதிரி ஆளுகள எல்லாம் நம்ம முடியாது சாமி…” என்று கண்களை விரித்து பெருமூச்சு விட்டவள், தோழியை பார்த்து

“ஆனா உனக்கு அப்படியில்ல குழலி… கவி அண்ணே கண்ணுள்ள அம்புட்டு காதல் தெரியுது…” என்று கூறவும் அவளை முறைத்து பார்த்து,

“ஆமா நீ கண்ட பாரு…?” என்று நொடிந்துக் கொள்ள,

“ஆமா நான் கண்டேன் அவிகளையும் கண்டேன் உன் கண்ணுள்ளையும் எட்டி பார்த்த ஆசைய கண்டேன்…” என்று முகவாயை பிடித்து ஆட்டியபடி கண்ணடித்து கூற,

“அப்படியா…?” என்று அவள் கையை தட்டிவிட்டு, கனியின் தோளில் கை போட்டு, “அப்ப உன் கண்ணுலையும்தேன் நான் பார்த்தேன் அந்த ஆசைய…? காலைல பஸ்ல வச்சு அவிகள பார்த்தது பொறவு சாய்ந்திரம் நான் சண்டைய போட்டுட்டு இருக்கப்ப பார்த்ததுன்னு…” என்று புருவம் உயர்த்தி கேட்டவள், “எத்தன வருஷம் உங்கூட நான் சுத்திட்டு இருக்கேன் புள்ள… இது கூடவா எனக்கு தெரியாது…?” என்று பேசியபடி, எழுந்து அவள் கைகளை பிடித்து சுற்றியவள்,

“என்ன புள்ள உன்ற ஆசைய தூது விடுவோமா…?” என்று கேட்க, “ஆங்ங்… நீ நினைக்குறாப்புல ஒன்னுமில்ல டி… தூது விடுறதுன்னா கவியண்ணாக்கு விடு…” என்றவளின் மண்டையில் மணியடிக்க,

மெல்லிய குரலில்,

ஆசைய காத்துல தூது விட்டு….

என்று பாட, பூங்குழலி வாயை மூடி சிரித்தவள் தோழிக்கு உதவுவதற்காக, அவளுடன் நெருங்கி நின்று தோள்களை ஆட்டியபடி,

தும்சிக்கு தும்.. தும்சிக்கு தும்…

என்று பாட, ஆண்கள் அவர்கள் முதலில் பேசியதில் குழம்பி புரிந்து பின் தங்கள் இணையின் இதயத்தில் தங்களால் ஒரு சலனம் உண்டாகி இருப்பதை கண்டு மகிழ்ந்திருக்க அவர்களது இந்த பாட்டையும் அதற்கான எசபாட்டையும் கேட்டு முதலில் அதிர்ந்து பின் தெளிந்து பெண்களின் சந்தோஷத்தில் தாங்களும் அறையினுள் ஜோடி சேர்ந்து ஆடினர் பெண்களை போலவே…

கனி, ஆடிய பூவுல வாடை பட்டு….

பூங்குழலி, தும்சிக்கு தும் தும்சிக்கு தும்…

என்று கனி தன் தாவணி முந்தானையை பிடித்து ஆட, குழலி அவளது தோளை இடித்து எசப்பாட்டை பாட, இருவரும் மேற்கத்திய பாணியில் ஜோடியாக ஆடி மகிழ்ந்தனர் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல்… அறையினுள் ஆண்கள் இருவரும் பெண்களை போல் ஆடிக் கொண்டு இருந்தனர் தங்களையும் மறந்த நிலையில்…

பெண்கள் இருவருக்கும் ஆண்களின் மேல் பெரிதாக எந்த ஈடுபாடும் இல்லாததால் அப்பொழுதைய பொழுதை கிண்டலிலும் கேலியிலும் பேசி ஆடி பாடி மகிழ்ந்தனர் தங்கள் மனதில் அவர்கள் காலடி வைத்து விட்டதை அறியாமல்…

ஆண்களோ அதை புரிந்ததால் மகிழ்ந்து அத்தருணத்தை கொண்டாடிக் கொண்டு இருந்தனர்… அப்பொழுது எதர்ச்சையாக திரும்பிய கவியின் பார்வையில் விழுந்ததை நன்கு உற்று பார்த்தவனின் முகம் பிரகாசமாக மாற, நண்பனின் புறம் திருப்பி அமைதியாக இருக்கும் படி வாய் மேல் விரல் வைத்து சைகை செய்தவன் பெண்களை நோட்டம் விட்டான்…

தொடரும்….

Advertisement