Advertisement

UD:5

“என்னங்க…? என்னாச்சு …? ஏன் கோவமா இருக்குதீக…? குடிக்க தண்ணி கொண்டாரவா…” என்று பதற்றத்துடன் கேட்க, அவரை முறைத்து பார்த்தவர்,

 

“ஏன் கோபமா இருக்குதேனா…? அதைய உம் மவ கிட்ட கேளு… எங்க அவ…?” மகள் மேலிருந்த கோபத்தை மனைவியிடம் காட்டி பாய்ந்தவரின் விழிகள் வீட்டை அலசியது மகளை தேடி…

 

அவளோ, நிமிர்ந்த நடையுடன் மெல்ல அசைந்தாடியபடி கொல்லைபுறத்து வாசல் வழியாக உள்ளே வந்தவளை கண்டதும் காயத்ரிக்கு புரிந்துவிட்டது எதையோ செய்து வைத்துள்ளால் என்று, ஆனால் இப்பொழுது இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்றுதான் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார்…

 

அருகில் வந்த சைந்தவி, “என்ன ஆத்தா… என்னைய அழைச்ச மாதிரி இருந்துச்சு…?”

 

“ஏய் என்ன திமிர் காட்டுதியோ… அய்யன்னு கொஞ்சங்கூட மட்டு மரியாதை இல்லாம ரொம்ப துள்ளுற… கால கைய ஒடைச்சு வீட்டுல போட்டுருவேன் ஜாக்கிரதை… என்ன காரியம்ல பண்ணி வச்சுயிருக்க…?” விஷயத்தை நேராக கேட்டதால் சைந்தவியும் நிமிர்ந்து அவரை நேருக்கு நேராக பார்த்து,

 

“அப்படி என்னத்தைய பண்ணிப்புட்டேன்னு இந்த குதி குதிக்குறீக…?”

 

“அடிங்க.. பொட்ட கழுத… உனக்கு வாய் நீளுதோ கொன்னுடுவேன் நாயே… யார கேட்டு அந்த பழனிக்கு மூன்னு லட்சம் குடுத்த…?” என்று கோபத்தில் கத்தினாலும் சைந்தவி பொறுமையின் சிகரமாக இருந்தாள்…

 

“யாரை கேட்கணும்…?”

 

“என்னய கேட்கனும்… அந்த காசை சம்பாதிச்சது நான்… என்னய கேட்கணும்… கண்ட பரதேசி பயலுக்கு எல்லாம் சும்மா தூக்கி குடுத்து இருக்க அம்புட்டு பெரிய தொகைய… பணம் என்ன மரத்துல காய்க்குதுன்னு நினைச்சியோ…”

 

“கண்டிப்பா இல்ல… பணம் மரத்துல எல்லாம் காய்க்காது… அதுக்கு பயங்கரமா உழைக்கனும்… தேவைக்கு பணம் இருக்கணும்… அதிகமா இருந்தா உதவி கேட்குறவங்களுக்கு உதவனும் அப்பதேன் அதுக்கும் மதிப்பு உழைச்சவனுக்கும் மதிப்பு… சக மனுசனுக்கு தராத மதிப்பு பணத்துக்கு மட்டும் குடுத்தா அது முட்டாள் தனம்…” என்ற மகளின் வார்த்தையில் சீனம் கொண்டவர்,

 

“ஏய்ய்ய்… பொட்ட கழுத… யார பார்த்து முட்டாள்ங்குற…” என்ற கையை ஓங்க நடுவில் வந்தார் காயத்ரி,

 

“என்னங்க வேண்டாம்ங்க… சின்ன புள்ள வெவரம் இல்லாம பேசிபுட்டா விட்டுருங்க…” என்று அவரை தடுக்க முயல, முருகவேல் அடிக்க ஓங்கியதை பார்த்து பதறிய விக்கி ஓரடி எடுத்து வைக்கும் முன் அவனது பார்வையில் விழுந்தது மாடியில் உணர்ச்சிகள் அற்ற கவியின் உருவம்…

தங்கையை அடிக்க கை ஓங்கியும் அதை தடுக்க எண்ணாமல் பார்த்திருப்பவனை விக்கியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை…’அடேய்… என்னடா பார்த்துட்டு இருக்க வந்து என்ன ஏதேன்னு பேசி சமாதானம் பண்ணாம நின்னு வேடிக்கை பார்க்குறான் பாரு… என்னாச்சு இவனுக்கு லூசாயிட்டானா… நாம போனா இந்த வெள்ளை வேட்டி நம்மளையும் வச்சு செய்யும் ஏற்கனவே நம்மளை பார்க்குற பார்வையே சரியில்ல… அய்யோ இந்த சைந்து ஏன் வாய் குடுத்து வாங்கி கட்டிக்குறா…’ உடன் பிறக்காத தங்கைக்காக அவன் மனம் துடித்தது பாசத்தினால்…

 

“ஆரு.. இவளா சின்ன பொண்ணு… பண்ணுறது எல்லாம் திமிரு தனம்… வாய் கொழுப்பு வேற…” என்று எகிறியவர், மகளின் புறம் திரும்பி,

 

“ஏய்… ஆர கேட்டு நீ அந்த பழனியோட பொண்ணுக்கு மூணு லட்சம் குடுத்த… ஒழுங்கா போய் அதைய திரும்பி வாங்கிட்டு வா… இல்ல வகுந்துடுவேன்… உதவி பண்ணுறதுக்கு கூட ஒரு தராதரம் இருக்கணும்…” என்று கோபத்தில் கத்த, சைந்தவியோ

 

“ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்கோங்க… இந்த சொத்துல, பணத்துல எனக்கும் பங்கு இருக்கு… நான் என் பங்குல இருந்து மூணு லட்சம் குடுத்தேன் தான்… ஆனா கடனாவோ வட்டிக்கோ குடுக்கல… ஒரு அவசர உதவியாத்தேன் குடுத்தேன்… இன்னைக்கு திருப்பி குடுத்துறதா சொல்லியிருக்கா…”

 

“ஓஓஓ.. அம்மணி வீட்டுல பெரியவங்க கிட்ட கேட்காமா பெரிய தொகய அவசர உதவிக்கு குடுக்குற அளவுக்கு வளந்துடாங்களோ..?” என்று நக்கலாக மொழிந்தவர், “இங்க பாரு… நீ என்னவேணா பண்ணிட்டு போ ஆனா பணம் கைக்கு வந்தாகனும்… இல்லாட்டி…” என்று இழுக்க, அவரையே நிதானமான பார்வையில் பார்த்தவள், “இல்லாட்டி என்ன பண்ணுவீகளாம்…?” என்று கேட்கவும் அதற்கு பதில் கூறும் முன், அவ்வீட்டின் வேலையால் ஒருவர் வந்து,

 

“ஐயா… பாப்பாவ பார்க்க அதோட சிநேகிதி வந்துருக்குங்க… உள்ள அனுப்பட்டுங்களா…?” என்று கைகட்டி தலைகுனிந்து பவ்வியமாக கேட்க, சைந்தவியை முறைத்துக் கொண்டே

 

“ம்ம்ம்… வர சொல்லு…”என்றவர் அதே கோபமான முகத்துடன் முற்றத்தில் இருந்த பெரிய சோஃபாவில் நடுநாயகமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்…

 

உள்ளே வந்த மஞ்சு, தன் தோழி சைந்தவியை பார்த்ததும் முகமெல்லாம் மலர, வேகமாக சென்று அவள் கையை பிடித்து “ரொம்ப நன்றி புள்ள… நீ மட்டும் இல்லைன்னா என்னாயிருக்கும்னே தெரில…” என்று மனமார்ந்த நன்றியை உறைத்தவள் தன் பையில் இருந்த மூன்று லட்சத்தை எடுத்து அவளிடம் நீட்ட, சைந்தவியோ அதை வாங்காமல் தன் தந்தையை நிமிர்ந்த கர்வ பார்வையொன்றை அவர் மீது செலுத்தினாள்…

 

ஆனால் அதற்கெல்லாம் திருந்துபவர் முருகவேல் இல்லையே, அதனால் ஒரு அலட்சிய பார்வையோடு, ‘நான் எவ்வளவு பார்த்திருப்பேன்…’ என்னும் இகழ்ச்சி புன்னகையொன்றை சிந்திவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்…

 

‘இவரையெல்லாம் திருத்த முடியாது…’ என்ற சலிப்போடு தோழியிடம் இருந்து அந்த பணத்தை பெற்றுக் கொண்டவள், “எல்லாம் சொக்கியமா நடந்து முடிஞ்சுதா புள்ள… ஒன்னும் குழப்பமில்லையே…”

 

“இல்ல புள்ள… இன்னைக்கு காலைல போய் ஆத்தா வீட்டுல இருந்து பணத்த எடுத்துட்டு வந்துட்டாக… ஆனா நீ காலேஜு போயிருப்பியே அதேன் இப்ப வந்தேன்…” என்று புன்னகையுடன் கூற,

 

“செரி புள்ள… அதைய விடு நீ என்ன சாப்புடுற அத சொல்லு…”

 

“அய்யோ அதெல்லாம் வேணாம்… நேரமாச்சு புள்ள… பொழுது சாயிறத்துக்குள்ள வீட்டுக்கு வந்துறனும்னு பக்கத்து வீட்டு மல்லிய தொணைக்கு அனுப்பி வச்சு இருக்கு ஆத்தா… மல்லி வெளியதேன் எனக்கு காத்து கெடக்கு… நான் கிளம்புதேன் புள்ள… வெரசா வீட்டுக்கு போவோனும்… நா வாரேன்…” என்றவளுக்கு,

 

“செரி புள்ள… பாத்து பத்திரமா  வீட்டுக்கு போய் சேரு…” என்று சைந்தவி விடைக் கொடுக்க,

 

“வரேன் ஆத்தா… வரேன் அய்யா…” என்று காயத்ரி முருகவேல் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்… அவள் சென்றதும் காயத்ரி வேகமாக சைந்தவியின் புறம் திரும்பி,

 

“என்னதான் ஆச்சு கண்ணு… தெளிவாத்தேன் சொல்லேன்… பிரச்சன ஆகாதுல்ல…” என்று கலக்கம் சற்று தெளிந்த முகத்துடன் கேட்க, அவரை வாஞ்சையுடன் பார்த்தவள்,

 

“ஆத்தா… நேத்து கல்யாணத்துக்காக மஞ்சு புள்ளைக்கு நக வாங்க போறதா சொன்னா… பணம், அசலூர்ல இருக்குற அவ பாட்டி வீட்டுல இருந்து எடுத்துட்டு வரும் போது பை மாறிப் போச்சு… நல்ல நேரம் போறதுக்குள்ள நக வாங்கணுமேனு தவிச்சுட்டு இருந்தாங்க… நான்தேன் வீட்டுல இருந்து பணத்த எடுத்து குடுத்தேன்… நாளைக்கு தந்துறதா சொல்லிதேன் பணத்தை வாங்கி கிட்டாக… மத்தபடி ஒன்னுமில்ல ஆத்தா… பை மாறிட்டனால வந்த பிரச்சன… இப்ப பணத்த கொண்டாந்து குடுத்துட்டா அவ்வளவுதேன்…” என்றவள் தந்தையிடம் சென்று அந்த பணத்தை நீட்ட, பெற்றுக் கொண்டவர்….

 

“இந்த முற எந்த பிரச்சனயும் இல்லாம போச்சு… அதுனால விடுதேன்… ஆனா இன்னொரு முறை இந்த மாறி நடந்துச்சு அம்புட்டுதேன்…” என்று எழுந்து நின்று தோளில் இருந்த துண்டை உதறி மீண்டும் போட்டவர் அவளை தாண்டி செல்கையில்,

 

“பொறவு இன்னொரு விஷயம்…. காயத்ரி உன் பொண்ணு கிட்ட சொல்லிவை… நட்பா இருந்தாலும் ஒருதராதரம் வேணும்… கண்டவியகள வூட்டுக்குள்ள விட கூடாது… ஏற்கனவே ஒரு தண்டசோறு இருக்கு… பொட்டபுள்ள இருக்குற வீட்டுல யோசிக்காம உம் மவன் கூட்டியாந்திருக்கான்… அதுவே எனக்கு இஷ்டமில்ல… இதுல உம் பொண்ணு வேற வரவ போறவ எல்லாருக்கும் உதவுறேன்னுட்டு வீட்டுக்குள்ள விட்டுட்டு… இதுத்தேன் கடைசியா இருக்கனும் சொல்லிவை….” என்று முகம் இறுக பேசி விட்டு தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டார்….

 

அவரது வார்த்தையில் முகம் சுழித்த சைந்தவி தன் அறைக்குள் நுழைய, காயத்ரி அவசரமாக திரும்பி விக்கியை பார்த்தார்… திரும்பி நடந்துசெல்பவனை கண்டு மனம் கனக்க, ‘ஆத்தா துர்க்கையம்மா… இவருக்கு கொஞ்சமாச்சும் நல்ல புத்திய குடு ஆத்தா… இன்னும் எத்தன பேருத்தேன் இவரால கஷ்டப் படுறது… கடவுளே…’ என்று கடவுளிடம் புலம்பியவர், வேகமாக விக்கியின் பின் சென்றார் அவனை சமாதானம் செய்ய, ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்பது போல் இருந்தது அவன் செயல்,

 

“ம்ப்ச்ச்… நடந்த கூத்துல வடைய மறந்து வச்சுட்டு போயிட்டேன்… அப்ப சூடா இருந்துச்சு இப்ப பாரு ஆறி போச்சு… பரவால்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…” என்றபடி சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து பாதியில் விட்டு போன வடையை உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தான்…

 

இவனை இமை கொட்டாமல் பார்க்கும் காயத்ரியை கண்டு, “ஆன்ட்டி ஒரே ஒரு ஹெல்ப் பிளீஸ்…”என்று கேட்கவும் இரண்டடி பக்கம் வந்து காயத்ரியிடம் தனக்காக வந்த டீ கப்பை நீட்டி,

 

“சூடு ஆறி போச்சு… இத குடிச்சா கிக்கா இருக்காது… அதுனால ஒரு டீ மட்டும் போட்டு தர முடியுமா… ?” என்று முகத்தை பவ்பாவியாக வைத்துக் கொண்டு கேட்டவனை பார்த்து நெற்றியில் அறைந்து கொண்டவர்…

 

“அட லூசு பயலே… ஆரிய கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருப்பானாம்…. அந்த மாதிரியில்ல இருக்கு… “என்று அங்கலாய்த்த படி டீயை போட உள்ளே சென்றவர்க்கு விக்கி எதையும் பெரிதுபடுத்தவில்லை என்பது சற்று நிம்மதி அளிக்க அது அவர் முகத்திலும் பிரதிபலித்தது, அதை கண்டு  புன்னகைத்து கொண்டான் விக்னேஷ்…

 

சில நிமிடங்களில் சுட சுட வடையுடன் டீயும் வர, “வாவ்… செம்ம… சூப்பர் ஆன்ட்டி… ” என்று முழு தட்டையும் தன் பக்கம் இழுக்க, அவன் கையில் ஓங்கி ஒன்று போட்டார்…

 

“ஸ்ஸ்ஸ்… ஆன்ட்டி….”

 

“கைய எடுல… இது என் மவனுக்கு…”

 

“ரொம்ப தான்… உங்க மவன் பாடிய (body) பிட்டா (fit) வச்சுக்கனும்னு எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்கான்… அவனுக்காக கொண்டு போறீங்க… சாப்பிடுறேன்னு சொல்லுறவன் கிட்ட இருந்து வடைய புடிங்கிட்டு சாப்பிடாதவன் கிட்ட போய் குடுக்குறேன்னு சொல்லுறிங்க… இது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்…”என்று பாவம் போல் நடிக்க, அவன் மண்டையில் ஒன்றை நங்கென்று வைத்தார்…

 

“ஏன்டா குரங்கு பயலே… என்வாயில இருந்து எதையும் வாங்கிகட்டிக்காம திங்குற ஜோலிய பாருல…”என்றவர் மகனை காண சென்றார்…

 

அறையின் பால்கனியில் நின்றிருந்த கவியழகனின் தோளில் கை வைத்த காயத்ரி, “என்ன ராசா…? முக ஏன் இம்புட்டு வாடி போய் இருக்கு…?” என்று கவலையுடன் கேட்க, பதில் கூறாமல் அன்னையை உற்று பார்த்தான்…

 

அவனது பார்வைக்கான கேள்வி புரிந்திருக்கும் போல காயத்ரிக்கு… முகத்தை தெருவின் புறம் திருப்பி, “இத்தன வருஷமா அந்த மனுஷன் கூட மல்லுகட்டிடேன் இனியும் முடியாது ராசா… பல வருஷமா உள்ளுக்குள் உறுத்திட்டு இருக்கு… என்னால ஒண்ணுத்தையும் பண்ண முடியல… இனி நீத்தேன் எல்லாத்தையும் பார்த்துப்பன்னு நம்புதேன்… நம்பலாமா ராசா…?” நெஞ்சை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையை அவன் புறம் நீட்டி கேட்க, அவர் முகத்தையும், கையையும் மாறி மாறி பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன், அவர் கையை இருகரங்களாலும் பற்றியபடி

 

“கண்டிப்பா ம்மா….” என்று கூறவும் அவரது முகம் பூவாக மலர்ந்தது…

 

“சந்தோஷம் ராசா… செரி வா உனக்கு புடிச்ச வடைய சுட்டு கொண்டு வந்திருக்கேன்… சாப்பிடு…” என்றழைக்க,

 

“இல்ல ம்மா… நான் இப்ப அதிகம் ஆயில் ஐட்டம் சாப்பிடறது இல்ல…” என்றபடி அன்னை இழுத்த இழுப்பிற்கு உடன் செல்ல, அறைக்குள் நுழைந்த இருவருள் காயத்ரி வாயை பிளந்தபடி பார்த்திருக்க, கவியோ வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டு இருந்தான்…

 

முதலில் தன்நிலைக்கு வந்த கவி, “டேய் மச்சான்… என்னடா இது…?” என்று கேட்கவும், படுக்கையில் லேசாக சாய்ந்த கையில் தட்டுட்டுன் தீவிரமாக வடையை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்த விக்கி இருவரையும் பார்த்து,

 

“மாப்ள… நான் ஆன்ட்டி கிட்ட சொன்னேன்… அவன் சாப்பிட மாட்டான்னு கேட்கவே இல்ல… சரி கஷ்டப்பட்டு மேல் எடுத்துட்டு வந்ததை சாப்பிடலைன்னா வடைக்கு மனசு கஷ்டப்படுமேன்னு அதோட குறைய தீர்த்துட்டு இருக்கேன்… ” என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு கூற, காயத்ரி

 

“அட கிறுக்கு பயலே…” என்று இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு வாயில் ஒரு கையை வைத்து ஆச்சரியமாக பார்க்க, “ஆன்ட்டி… இப்படி எல்லாம் பார்க்காதீங்க… கண்ணுப்பட்டு போயிரும்…” என்றவனை இப்பொழுது வாஞ்சையாக பார்த்திருந்தார்…

 

“மச்சான்…” சற்றே உள்ளே சென்ற குரலில்,

 

“சொல்லு டா மாப்ள… வடை வேணுமா…?”

 

“இல்ல டா… அப்பா அப்படி பேசுனதுக்கு மன்னிச்…” வார்த்தையை முடிக்கும் முன்,

 

“மாப்ள… என்னடா இது… நான் எல்லாம் தப்பாவே எடுத்துக்கல… ஏன்னா அவரோட இயல்பு என்னன்னு இன்னைக்கு மில்லுல வச்சே நான் தெரிஞ்சுக்கிட்டேன்… அதுனால ஒன்னும் பிரச்சினை இல்ல மாப்ள…” என்று கூறவும்,

 

” தேங்க்ஸ் டா மச்சான்…” என்று கட்டி அணைத்து கொள்ள, காயத்ரி இருவரையும் கைகளால் திருஷ்டி கழித்து அவனிடம் அவரது வார்த்தைக்கு மன்னிப்பு வேண்ட,

 

“ம்ம்ம்… உங்க மன்னிப்பை ஏத்துக்க மாட்டேன்… ஆனா அதுக்கு பதில் அடையும், அவியலும் செஞ்சு குடுங்க….” என்று பெருந்தன்மையாக கூறவும், அவன் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டை வைத்தவர்,

 

“உன்ன கட்டிக்க போறவ ரொம்ப குடுத்து வச்சவ…” என்றபடி அறையை விட்டு வெளியேற எண்ணுகையில், விக்கி

 

“அப்படியா ஆன்ட்டி…?எதை வச்சு சொல்லுறீங்க…?”

 

எதுவா இருந்தாலும் உனக்கு சோத்தை போட்டா அமைதியாயிருவியே….”என்று காலை வாரி விட்டு செல்ல, கவி லேசான முனுமுனுப்பில், “அசிங்க பட்டான் ஆட்டோ காரன்…” என்றது விக்கியின் செவியில் தெளிவாக விழவும் நண்பனுடன் குஸ்தி சண்டையில் இறங்கினான் படுக்கையில்…

 

“பூங்குழலி…” மெல்லிய குரலில் அழைத்த கனிமொழி சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே நுழைய,

 

“ம்ம்ம்… சொல்லு புள்ள…” என்று அவளும் அதே மெல்லிய குரலில் பேச,

 

“நான் இப்ப வீட்டுக்கு வரல புள்ள… நா நாளைக்கு பொழுது சாயும் போது வரேனே…” என்று கெஞ்சலாக கேட்டவளை திரும்பி பார்த்து முறைத்து வைத்தாள்…

 

“எதுக்கு புள்ள… முறைக்குற…? நாம திருட்டு தனமா காலேஜு கட் அடிச்சுட்டு படம் பார்க்க போயிருக்கோம்… ஐத்த மட்டும் என்னைய உத்து பார்த்துச்சு எல்லாத்தையும் உளறிருவேன் புள்ள… அதுக்கு ஐத்த கிட்டையும் அடி வாங்கணும், உளறுனதுக்கு உங்கிட்டையும் அடி வாங்கணும்… என்னால முடியாது புள்ள… தயவு பண்ணி என்னைய விட்டுரு புள்ள…”என்று கெஞ்ச கெஞ்ச குழலி அவளை இழுத்துக் கொண்டு போனாள் வீட்டினுள்…

 

“நம்ம படம் பார்க்க போனதைய அந்த அழகேசன் பார்த்துபுட்டான் அவன் ஆத்தா கிட்ட சொல்லியிருந்தா இன்னைக்கு நல்லா பூச பண்ணும் உன் ஐத்த… அதைய நா மட்டும் தனியா அனுபவிக்கனுமா… அதேன் உன்னைய இங்க இருக்க சொல்லுதேன்… ”

 

“அடிப்பாவி… அடிவாங்கவே கூட்டியாந்தியா…? நீ எல்லாம் நல்லா வருவ டி ராட்சஸி…”என்று திட்டிக்கொண்டே முற்றத்தில் அமர்ந்தவளின் தலையில் கொட்டிவிட்டு அடுக்கலைக்குள் நுழைந்தாள்…

 

“ஸ்ஸ்ஸ்… தலைல அடிக்காத டி எரும…” என்றவாறே வீட்டை கண்களால் நோட்டம் விட்டாள்… வீட்டில் யாரும் இல்லையென்பதை உறுதியாகிக் கொண்டவளுக்கு அப்பொழுது மூச்சு சீராக வந்தது…

 

“இந்தா… ஆத்தா கார வட வச்சு இருக்கு… நல்ல ருசி…” என்று சப்புக் கொட்டி உண்டனர் இருவரும்…

 

அப்பொழுது வீட்டினுள் நுழைந்த வசுந்தரா இருவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே தன் வேலையை பார்க்க, “புள்ள… ஐத்தயோட பார்வையே செரியில்ல… நான் வூட்டுக்கு போறேன்… என்னயால அடி வாங்க முடியாதுடி ஆத்தா…” என்று காதில் கிசுகிசுத்தவள் தோழியின் பதிலை கூட கேட்காமல், “நேரமாச்சு ஐத்த… நா வாரேன்…” என்ற கத்தலோடு தன் வீட்டை நோக்கி ஓடினாள்…

 

“ஏய்… நில்லு புள்ள…” என்ற பூங்குழலியின் குரல் அவள் செவியில் விழுந்ததாக தெரியவில்லை… இதை கவனித்துக் கொண்டு இருந்த வசுந்தரா,

 

“என்னடி… ஆளும் முழியும் செரியில்ல… அந்த கூறுகெட்டவளும் என்னைய பார்த்து பம்மிட்டு ஓடுது… என்ன திருகு தனம் பண்ணுனீங்க இன்னைக்கு…?” என்று சற்று மிரட்டலாக கேட்கவும் திருதிருவென விழித்தவள்,

 

“உனக்கு எங்களை சந்தேக படுறதே பொழப்பா போச்சு… போ… எனக்கு தலைவலிக்குது நான் போய் படுக்குதேன்… ” என்று சமாளித்தவள், வேகமாக தன் அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்…

 

“போடி போ… நீ என்னத்த பண்ணாலும் எங் காதுக்கு வராமலா போகும்… அப்ப வச்சுக்குதேன் கச்சேரிய…” என்று இவரும் அவள் கேட்கும் படி கத்தியவர் தன் வேலையை பார்க்க சென்றார்…

 

இரவு உணவை அனைவரும் அமைதியாகவே உண்டனர் கவியழகனின் வீட்டில்… கவியழகனோ ஒரு முறை கூட தந்தையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை… அவர் கேட்ட அனைத்து கேள்விக்கும் தலையை ஆட்டியும் ஒற்றை வார்த்தையிலும் பதிலளித்தவன் அமைதியாகவே உணவை முடித்தான்… அவரும் மகனது மாற்றத்தை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை…

 

அனைவரும் உணவை முடித்துவிட்டு செல்ல, மெதுவாக அன்னையிடம் சென்றவன், இங்கு வந்ததில் இருந்து மனதில் அரித்து கொண்டிருந்த விஷயத்தை பற்றி கேட்க, அவரோ ஒற்றை வரியில் சுருக்கமாக சொல்லிவிட்டு சென்றார்…

 

காரண காரியம் எதையும்  கூறமால் கேள்விக்கான விடையை மட்டும் கூறி தலையில் இடியை இறக்கி வைத்துவிட்டு போக, தலையை பிடித்து கொண்டான்…

 

‘ஆஆஆஆ…. என்னதான் நடக்குது இங்க… நான் நினைச்ச மாதிரி எதுவும் இல்ல… அப்ப இத்தன வருஷத்துல என்னதான் நடந்துச்சு… ஏன் அம்மா எதையும் தெளிவா சொல்லாம போனாங்க… சொல்ல விருப்பம் இல்லையோ… அம்மாவும் ஒருவேலை அப்பா மாதிரி யோசிக்குறாங்களோ… அப்படின்னா எதுக்கு மில்லுக்கு போக சொல்லனும்…? ஷ்ஷ்ஷ்… தலை வெடிச்சுரும் போலவே… நாளைக்கு அம்மா கிட்ட கேட்கணும்…. சொல்லுவாங்களா…? ஆனா எனக்கு தெரிஞ்சே ஆகனும்…. எப்படி இதை சாதாரணமா விட முடியும்…? இல்ல முடியாது நான் சரி பண்ணி காட்டுறேன்…’ என்று பலவாறு தனக்குள்ளே யோசித்துக் குழப்பிக் கொண்டவன் இறுதியில் ஒரு தீர்க்கமான முடிவுடன் தன் அறைக்கு சென்றான்…

 

உள்ளே நுழைந்தவன், விக்கியை பார்த்து சந்தேக குரலில் “மச்சான் என்னடா பண்ணுற…?”

 

பதிலில்லை, எப்படி இருக்கும்..? துறைதான் கனவில் தன் நாட்டுகடையுடன் டூயட் பாடிக் கொண்டு இருக்கிறாரே… படுக்கையில் தலையணையை கட்டிக் கொண்டு ஒரு காலை மடக்கி வைத்து அதன் மேல் மற்றொரு காலை வைத்து ஆடிக் கொண்டிருந்தான் கனவில் சஞ்சரித்த புன்னகை முகத்துடன்…

 

“டேய்…” என்று அவன் காலில் எட்டி ஒரு உதைவிட, தன்நிலைக்கு வந்த விக்கி, வாயெல்லாம் பல்லாக

 

“என்ன மாப்ள….?”

 

“என்னடா பண்ணுற…?” என்று கேட்கவும் தலையை சொரிந்த படி அசட்டு சிரிப்புடன்,

 

“உனக்கெல்லாம் சொன்னா புரியாது… நீ சின்ன பையன்… பேசாம படுத்து தூங்கு…” என்று சொல்லவும் கடுப்பாகி போனான் கவியழகன்…

 

“அடிங்க நாயே….” என்று அவன் மேல் பாய்ந்தான்… சில நிமிட சண்டைக்கு பிறகு பிரிந்த இருவரும் மூச்சு வாங்க தனி தனியாக மல்லாக்கப் படுத்திருக்க, கவியே தொடங்கினான்…

 

“மச்சான்… உண்மையாவே இருக்கியா…? இல்ல டைம் பாஸ்’கா…?” நண்பனை திரும்பி பாராமல்,

 

“இல்ல மாப்ள…. உண்மையா தான் இருக்கேன்… இதுவரை இப்படி ஒரு உணர்வு வந்ததே இல்ல… ஏன் நீயே சொல்லு நம்ம பார்க்காத பொண்ணுங்களா… ஆனா என் மனசு இப்படி துடிச்சதில்ல… முதல் முறை பார்க்குற பொண்ணுன்னு தோணாம ஒரு உரிமைய உணர்ந்தேன் டா… எப்படி என் பீலிங்சை சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியல… ஆனா கண்டிப்பா டைம் பாஸ் இல்ல மச்சி…” என்று தீவிரமான குரலில் கூற…

 

“ம்ம்ம்…ஏன்னா இது சிட்டி இல்ல டா ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு அப்புறம் வேண்டாம் பிரிஞ்சுரலாம்னு சொல்லி கைகுலுக்கிட்டு போக, கிராமம்.. ஒண்ணு பொண்ணு ஏதாச்சும் பண்ணிக்கும் இல்லாட்டி ஊர் ஒன்னு கூடி உன்னை ஏதாச்சும் பண்ணும்…” என்றவனை மிரண்டு போய் திரும்பி பார்த்தான் விக்கி…

 

“டேய் மாப்ள… நீ என் நண்பன் டா… நண்பனோட காதலுக்கு ஹெல்ப் பண்ணாமா நீயே ஊர்காரங்கிட்ட அடிவாங்க வச்சுருவ போல…” என்றவனை பார்த்து உதட்டோரம் ஒரு புன்னகையை சிந்தியவன்,

 

“மச்சான்… நான் நல்லதுக்கு மட்டும் தான் ஹெல்ப் பண்ணுவேன் தப்புக்கு துணை போக மாட்டேன்…” என்க, அவனை பார்த்து முறைத்து வைத்துதான் விக்கி…

 

“இப்ப எதுக்கு முறைக்குற…உண்மைய சொன்னது ஒரு தப்பா…?”

 

“டேய்….”என்று கவியின் கழுத்தை பிடித்து நெறிக்க, “ம்ப்ச்ச்…விடு டா எரும விட்டு தொல… சும்மா தான் டா சொன்னேன்… விட்டு தொலடா பரதேசி…” என்று அவனிடம் இருந்து தன் கழுத்தையும் உயிரையும் போராடி மீட்டுக் கொண்டவன் லேசான இருமலுடன்,

 

“நீயெல்லாம் நல்லா இருப்பியா நாயே… ஃபிகர் வந்ததும் நண்பனை கொல்ல பார்க்குற… சே…” என்று திட்ட, அவனை கோபமாக முறைத்தவன், பின் முகத்தை மிருதுவாக்கிக் கொண்டு மீண்டும் தலையணையை அணைத்தபடி படுக்கையில் விழுந்தான் தன்னவளின் நினைவில்…

 

அதை பார்த்து நெற்றியில் அறைந்து கொண்ட கவி, “இது முத்திருச்சு… ஒருநாள் பார்த்ததுக்கே இந்த பாடா… ஷ்ஷ்ப்பாபா….” என்று புலம்பியபடி பால்கனிக்கு செல்ல இருந்தவனை தடுத்து நிறுத்தினான் விக்கி…

 

“மாப்ள….”

 

“இப்ப என்னடா…?” அத்தனை சலிப்பு அவன் குரலில்,

 

“இல்ல… அது இனி அவளை ஃபிகர்’ன்னு சொல்லாத மாப்ள…” என்று நெளிந்தபடி கூற, அவனை ஒரு மார்க்கமாக பார்த்தபடியே,

 

“ஏன்னாம்…?”

 

“என்ன டா லூசு மாதிரி கேட்குற… நான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன்… அப்ப உனக்கு தங்கச்சி முறை ஆகுது… தங்கச்சிய போய்…”என்று முடிக்கும் முன், அவனை கை நீட்டி தடுத்தவன், தலைக்கு மேல் இருகைகளையும் கூப்பி,

 

“போதும் டா டேய்… இனி சொல்ல மாட்டேன்… போதுமா…?” என்று கேட்க,

 

“போதும் மாப்ள…”என்று பல் இளித்தவன் மீண்டும் தலையணையுடன் கனவிற்கு சென்றான் கவியோ, முனுமுனுப்பாக

 

“இன்னும் யாருனே தெரியாதவளுக்கு மரியாதை போராட்டம் பண்ணுறான்… ஒழுங்கா ஊர் போய் சேருமா இந்த பாடி (body)…” என்றவன் திரும்பி விக்கியை ஒருமுறை பார்க்க, அவனது முக்தி நிலையை கண்டு, “கஷ்டம் தான் போல…” என்று தனக்குத்தானே பேசியபடி ஒரு பெருமூச்சுடன் பால்கனிக்கு சென்றான்…

 

விக்கியின் வார்த்தையில் தன் நினைவடுக்கில் பல வருடங்கள் பின் நோக்கி பயணித்தவனுக்கு “உரிமை உணர்வு…” வை அனுபவித்த அந்த தருணத்தை நினைத்தவனின் முகம் பூவாய் மலர்ந்தது, அதோடு நண்பன் கூறிய “எப்படி என் பீலிங்சை சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியல… “என்று வார்த்தைகள் அவன் முகத்தில் புன்னகையை உண்டாக்கியது…

 

‘டேய்… நான் உனக்கு எல்லாம் சூப்பர் சீனியர் டா… அறியாத தெரியாத வயசுலையே அதை உணர்ந்தவன் நான்…’என்று எண்ணிக் கொண்டவனுக்கு தெரியவில்லை நண்பன் உருகி வழியும் பெண் யார்..? தான் பழிவாங்க துடிக்கும் பெண் யாரென்று…

 

தொடரும்….

 

Advertisement