Advertisement

UD:4

“டேய் மச்சான்… என்னடா சொல்லுற…? நாட்டுக்கடையா…? யார சொல்லுற…? இது நீ நினைச்ச மாதிரி சிட்டி இல்ல கிராமம்… தோல உரிச்சுருவாங்க…”

 

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்… நீ கவலை படாத மாப்ள…” என்று முகம் பிரகாசமாக மாற கனவில் மிதந்த படி சொல்ல, நெற்றியில் அறைந்துக் கொண்ட கவி,

 

“மச்சான்… அரகிறுக்காயிராத டா… உன்னை பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்… இல்லாட்டி உங்க அம்மாக்கு நான் பதில் சொல்ல முடியாது….” என்று சொல்லவும் தான் விக்கிக்கு அன்னையின் நியாபகம் வந்தது…

 

“அட ஆமால… அம்மா கிட்ட சொல்லணும்… நல்ல விஷயம் அப்பப்ப சொல்லிடணும்… நேரம் கடத்த கூடாது…”என்று அறைக்குள் சென்றவனின் பின் சென்றான் கவி…

 

“மச்சான் சீரியஸா தான் பேசுறியா…?” என்று வியந்து கேட்க,

 

“அட ஆமா மாப்ள… நான் பொண்ணுங்க பின்னாடி சுத்தி பார்த்து இருக்கியா…? இல்ல டைம் பாஸ்க்கு கடலை போட்டு பார்த்திருக்கியா…?“என்ற நண்பனின் கேள்விக்கு இல்லை என்று தலையை ஆட்டி பதில் அளிக்க, விக்கி மேலும் தொடர்ந்தான்…

 

“இல்லல்ல… அப்புறம் என்ன மாப்ள…? உண்மையா அவள பார்த்த பின்னாடி ஏதோ எனக்கானவன்னு ஒரு எண்ணம்… இவள மிஸ் பண்ணிற கூடாதுன்னு பயம்… அப்பவே முடிவு பண்ணிட்டேன்… இவதான்னு…” என்று பேசிக் கொண்டே அன்னைக்கு அழைப்பு விடுத்தவன், படுக்கையில் பொத்தென்று விழுந்தான் சந்தோஷமாக…

 

அவனது நிலையை கண்டு தலையை ஆட்டி சிரித்தவன் குளியலறைக்குள் புகுந்தான் குளிப்பதற்காக… விக்கியோ அன்னை அழைப்பெற்றதும்,

 

“ம்மா… என்னை பார்த்துக்க ஆள கண்டு புடிச்சுடேன்…” சந்தோஷ மிகுதியில் கூவ, அந்த பக்கம் அவனது அன்னையோ,

 

“என்ன டா சொல்லுற…?” என்று புரியாமல் கேட்கவும், காலையில் நடந்ததை விளக்கமாக சொல்லி முடிந்தவன் அவரது வார்த்தைக்காக ஆவலாக காத்திருந்தான்… ஆனால் அவரோ பொறுமையாக

 

“ம்ம்ம்… கண்டதும் காதலா…?” என்று கேட்க,

 

“அப்படிதான்மா…”என்று லேசாக குழைந்தபடி பதிலளித்தான் வெட்கத்தில்…

 

“ம்ம்ம்… ஒருவேளை அந்த பொண்ணு வேற யாரையாச்சும் லவ் பண்ணிட்டு இருந்தா…?” என்று கேட்கவும் படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தவன்,

 

“ய்ம்மாஆஆ….” என்று அதிர்ந்து அழைக்க,

 

“இல்ல காதலிக்கலைன்னு வச்சுக்கோ… ஒருவேளை வீட்டுல மாப்பிள்ளை பார்த்து வச்சு இருந்தா…?” என்று அடுத்த கேள்வியை கேட்க, இப்பொழுது சுருதி குறைந்த குரலில்,

 

“ம்மாஆஆ….”

 

“கண்ணா… உனக்கு ஆச வந்தது தப்பில்ல ஆனா அந்த பொண்ணை பத்தி எதுவும் தெரியாம நீ ஆசைய வளர்த்துகிறது தான் தப்பு…” என்று சொல்ல மகனிடம் இருந்து பதிலில்லை என்றதும் மேலும் தொடர்ந்தார்…

 

ஏன்னா அது உன்னையும் கஷ்டப்படுத்தும், அந்த பொண்ணையும் பாதிக்கும்… இப்படி என்கிட்ட சொன்ன மாதிரி வேற யாரு கிட்டையும் சொல்லிட்டு இருக்காத… ஏன்னா அது அந்த பொண்ணு க்கு பிரச்சினையா மாறிட கூடாது… புரிஞ்சுதா…?” என்று கேட்க, தீவிரமாக யோசித்தவன் அன்னை கூறியது சரியென்று தோன்றவும்,

 

“நல்லா புரிஞ்சுது ம்மா… முதல்ல அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சுக்குறேன்… அந்த பொண்ணு படிச்சுட்டு இருக்கா… சோ இப்ப கல்யாணம் பேச வாய்ப்பில்ல பார்க்கலாம்…” என்று சொல்லவும்,

 

“டேய் லூசு…” விசாரிக்கிறேன் என்ற பெயரில் எந்த பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ள கூடாதே என்ற பயம் அவருள்…

 

“கூல் ம்மா … என்னால அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராது, நானும் எந்த பிரச்சனையிலும் மாட்டிக்க மாட்டேன்…” என்றவன் மென்மையான குரலில், “என் மனசில பதிஞ்ச முதல் பொண்ணு ம்மா… விட்டுட கூடாதுன்னு தோணுது… அவ எனக்கானவன்னு தோணுது… இதுவரை கண்ணியமா இருந்து இருக்கேன்… இன்னைக்கு முதல் முறையா என் மனசு அவ பின்னாடி தான் போயிருக்கு… அதை மாத்தனும் தோணல ம்மா…” என்று தன்நிலையை எடுத்து கூறவும், அவருக்கோ இது ஒன்றும் டீன்ஏஜில் வரும் ஈர்ப்போ பொழுதுபோக்கிற்கோ என்று தோன்றவில்லை மகனது பேச்சில்… அதனால்,

 

“ம்ம்ம்… அந்த பொண்ணோட வாழ்க்கை கொரங்கு கைல தான் மாட்டனும்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும்…” என்று பெருமூச்சு விட, கடுப்பாகி போனான் விக்னேஷ்…

 

“என்னது கொரங்கா… உங்களுக்கு என் ஆள பார்த்து பயம் எங்க உங்க பவர் போயிருமோன்னு அதுனால இப்படி எல்லாம் சொல்லுறீங்க…” என்று சட்டென மென்மையில் இருந்து கடுமைக்கு குரலை மாற்றியவனுக்கு அப்பொழுது தான் அன்னை மறைமுகமாக சம்மதம் சொல்லியது புரிந்தது…

 

“ஆஆஆ… ம்மா… அப்ப உங்களுக்கு ஓகேயா… ரொம்ப தேங்க்ஸ் மா…? லவ் யூ ம்மா….” என்று துள்ளியவன், ஃபோனில் சில முத்தங்களை வைக்க,

 

“டேய்… போதும் நிறுத்து டா… எனக்கு பயமும் இல்ல ஒன்னும் இல்ல… ஆனா சும்மா எல்லாம் சம்மதம் சொல்ல முடியாது… நேர்ல பார்க்கனும்…  நிறைய டெஸ்ட் எல்லாம் வைக்கனும்… அப்புறம் தான் ஓகே யா இல்லையான்னு நான் சொல்ல முடியும்…” என்று கராறாக சொல்ல,

 

“ம்ம்ம் நீங்க என்ன நம்ம கம்பெனிக்கு வேலைக்கா ஆள் எடுக்குறீங்க…? கடுப்பேத்தாதீங்க ம்மா…”

 

“டேய்… என் பையன் வாழ்க்கை எனக்கு முக்கியம் இதுல எல்லாம் நீ தலையிடாத… இப்ப போய் வேலைய பாரு… என்னை தொல்லை பண்ணாத… ” என்றவர் அவன் அடுத்து பதில் கூறும் முன், அழைப்பை துண்டித்திருந்தார்…

 

“ஹலோ… ம்மா… மா… மோய்…”என்று அழைப்பு துண்டிக்கப்பட்ட அலைப்பேசியில் கத்திக் கொண்டு இருக்கையில் குளியறையில் இருந்து வெளிவந்த கவி,

 

“டேய் அறிவுகெட்டவனே ஏன்டா இப்படி கத்திட்டு இருக்க…” என்று சத்தமிடவும், அமைதியான விக்கி மீண்டும் படுக்கையில் மல்லாக்க படுத்து இமைகளை மூடி தன்னவளின் பின்பத்தை மீண்டும் அலசிக் கொண்டு இருந்தான்…

 

அதை கண்ணாடி வழியாக பார்த்த கவி, “டேய் மச்சான்… ஏன்டா கிறுக்கன் மாதிரி பண்ணிட்டு இருக்க… சீக்கிரம் கிளம்பி வா… சாப்பிட போலாம்… அப்படியே ஊர ஒரு சுத்து சுத்திட்டு வரலாம்… ” என்றவன் நண்பனை உருட்டி மிரட்டி தயார் செய்து கீழே அழைத்து வருவதற்குள் ஒருவழியாகி விட்டான் கவியழகன்…

 

“குட் மார்னிங் ம்மா…” என கவியும், “குட் மார்னிங் ஆன்ட்டி…” என விக்கியும் கூவியபடி டைனிங் டேபிளில் அமர்ந்தனர் காலை உணவிற்காக…

 

“ம்ம்ம்… உட்காருங்க ராசா…சாப்பாடு எடுத்து வைக்குதேன்…” என்றவர் சமையலறைக்குள் சென்று உணவு பதார்த்தங்களை எடுத்து  வந்தவர் இருவருக்கும் வேண்டியதை பார்த்து பார்த்து பரிமாரவும் வஞ்சனையின்றி ஒருபிடி பிடித்தனர் கவியும், விக்கியும்…

 

அப்பொழுது காய்த்ரி, “ராசா… சாப்பாடு எப்படி இருக்கு…? புடிச்சுருக்கா…?

 

“சூப்பர் ம்மா… செமயா இருக்கு…” என்று உச்சுக்கொட்டி சாப்பிட,

 

“ஆமா ஆன்ட்டி… உண்மையா செமையா இருக்கு… தேங்காய் சட்டினி தான் மாஸ் போங்க…” என்று கூற, மேலும் கொஞ்சம் சட்டினி அவன் தட்டிற்கு குடிபுகுந்தது…

 

“ம்மா… சைந்து எங்க…?

 

“காலேஜுக்கு போயிருக்கா ராசா…”

 

“ஓஓஓ… இன்னும் ஆறு மாசம் இருக்குல்ல…” என்று உணவை கவனித்துக் கொண்டே பேசியவனிடம்,

 

“ஆமா ராசா… பொறவு ராசா… உன்ற அப்பாரு மில்க்கு போயிருக்காரு… உன்னால முடிஞ்சா அங்குட்டு போய் என்ன நடக்குதுன்னுட்டு ஒரு பார்வ பார்த்துட்டு வா ராசா… ஏன்னா இனியெல்லாத்தையும் நீதானே ராசா பார்த்துக்கணும்… ” என்று வாழைபழத்தில் ஊசி கொண்டு மருந்திடுவது போல் விஷயத்தை கூற, ஒரு நொடி கவியின் கரங்கள் உண்பதை நிறுத்தி விட்டு மீண்டும்  உண்ண தொடங்கினான்…

 

அதை கவனித்த காய்த்ரி, “ஏன் ராசா…?” என்று தலையை கோத,

 

“இப்ப என்னம்மா அவசரம் அதுக்கு…?” இத்தனை வருடம், படிப்பு, வேலை, சொந்த தொழில் என்று சுத்திவிட்டு இப்பொழுது தான் சொந்த ஊரில் நுழைந்து இருக்கிறோம்… இப்பொழுதும் இடைவெளியின்றி அடுத்து உழைக்க வேண்டுமா என்னும் எண்ணம் அவனுள்…

 

“இல்ல ராசா… நீ கொஞ்சம் பார்த்துக்க ஆரம்பிச்ச உன்ன அப்பாருக்கு உதவியா இருக்குமேன்னுதேன் சொன்னேன்… ”

 

“புரியுது ம்மா… சரி… நான் மில்லுக்கு போய் பார்க்குறேன்…” என்று அரை மனதாய் ஒப்புக்கொள்ள காய்த்ரிக்கோ பெரும் சந்தோஷம்…

 

இனி மகனது கைக்கு அனைத்தும் வந்துவிட்டால் அனைத்து பிரச்சனையும் ஒருமுடிவுக்கு வந்துவிடும் அவர் எண்ணியதும் நிறைவேறி விடும் என்ற சந்தோஷம் கலந்த நம்பிக்கை அவருக்கு… அதன் வெளிப்பாடாக,

 

“அம்மா தாயி மகமாயி…. உனக்கு கோடானா கோடி நன்றி…” என்ற கடவுளுக்கு நன்றி யுரைத்தவர், “ரொம்ப சந்தோஷம் ராசா…” என்று தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்ய, அவரது செய்கைகளை வினோதமாக பார்த்திருந்தான்…

 

அதன்பின் இருவரும் உணவை முடித்துக் கொண்டு மில்லுக்கு கிளம்புமும் முன், காயத்ரி  பூஜை அறையில் இருந்து திருநீர் எடுத்துவந்து ஆசிர்வதித்து பூசிவிட,

 

” ஆன்ட்டி… இது என்ன ஆண்டி சும்மா மில்லுக்கு போய் பார்க்கதானே போறோம்..அதுக்கு இவ்வளவு எபஃட் எதுக்கு…?” என்று கிண்டலடிக்க…

 

“ம்ம்ம்….” என்று அவர் அவனை பார்த்து முறைக்க, “ஓகே… ரைட்டு….” என்றவன் தன் வாயை மூடிக் கொண்டான் கையால்… அதன்பின் மீண்டும் மகன் புறம் திரும்பியவர், “நல்லா படியா போயிட்டு வா ராசா…” என்று புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார்…

 

“மாப்ள…. உன் காரா இது…? செம்ம டா… ஒருநாள் ராத்திரில பஞ்சர் ஓட்டி, வாஷ் பண்ணி குடுத்துட்டாங்க… உங்க அப்பா செம்ம பாஸ்ட் டா… ” என்று வியக்க,

 

“இல்ல மச்சான்… அப்பாக்கு எதுவும் தெரியாது… இது அம்மாவோட வேலை…” என்றபடியே காரில் ஏறி அமரவும் விக்கியும் அமர்ந்துக் கொண்டான்…

 

“ஏன் மாப்ள…? அப்பா கிட்ட சொல்லல…? அம்மா கூட இன்னைக்கு ஒரு டைப்பா இருந்தாங்க இல்ல…?” என்று வேடிக்கை பார்த்தபடி கேள்வி கேட்க, கவிக்கும் அதே கேள்வி தான்…

 

அதோடு இன்னும் சில கேள்விகளும் உள்ளுக்குள் அரித்துக் கொண்டு தான் இருந்தது… மீண்டும் வீடு திரும்பும் வேலை அனைத்தையும் அறிந்து மனம் கனக்க கூடும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்க வாயிப்பில்லை…

 

“என்னடா பதிலையே காணும்…?” என்று விக்கி நண்பனின் புறம் திரும்ப, அவனது யோசனை முகத்தை கண்டு, அவன் தோள் தொட்டு, “என்ன மாப்ள… அப்படி என்ன யோசனை…?

 

ஒண்ணுமில்ல டா… சும்மா அப்படியே பழசு எல்லாம் நியாபகம் வந்துச்சு… அதே நினைச்சுட்டு இருந்தேன்…” என்று சொல்ல அவனை நம்பாத பார்வை ஒன்றை பார்த்திருந்த விக்கியை கண்டு,

 

“டேய் நம்பு மச்சான்… ஆமா நீ என்னமோ கேட்டியே…? என்னது…?” என்று இடது கை விரலால் நெற்றியை நீவிய படி தன்னை தானே கேட்டுக்கொண்டவன் நினைவு வந்தவனாக,

 

“ஆங்ங்ங… அப்பாக்கு சொல்லலைன்னு கேட்டல்ல… அது அப்பாக்கு தெரிஞ்சா பெருசா பிரச்சினை மாதிரி ஆயிரும்… என்னை எதுவும் செய்ய விட மாட்டாரு… என் ஃபேவரைட் காரை நாசம் பண்ண அந்த ராட்சசிய நானே ஏதாச்சும் பண்ணனும்… எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவா… அதுவும் ஊருக்குள் நுழைச்ச கொஞ்ச நேரத்துல… அவளை சும்மா விட மாட்டேன்… “என்று நொடி பொழுதில் கோபம் தலைகேற கார் ஸ்டியரிங்கை தட்டிக் கொண்டான்…

 

அதில் விக்கி அவனது யோசனையின் காரணத்தை மறந்து, “சரி விடு மாப்ள… நேர்ல பார்க்கும் போது கவனிச்சுக்கலாம்…”

 

“ஒழுங்கா நீ திரும்ப ஊருக்கு போகுறதுக்கு முன்னாடி அவள எனக்கு காட்டிட்டு போற… இல்லாட்டி கொன்றுவேன் உன்னை…” என்று மிரட்டியவனுக்கு தெரியவில்லை  விக்கி திரும்பி செல்லவிருக்கும் அதே நாளுக்கு முன்புதான் தன்னை கொடுமைபடுத்த விதி அவள் மூலம் சதி செய்ய காத்திருக்கிறது என்று…

 

“சரிடா நீ தேவையில்லாம டென்ஷன் ஆகாத… அது யாருனு நாளைக்கு பார்த்துறலாம்…” என்க, அவனை கேள்வியாக நோக்கி,

 

“அது எப்படி மச்சான் நாளைக்குனு சொல்லுற…?

 

“அதுவா இன்னைக்கு காலைல என் நாட்டுக்கட்டையோடு தான் அந்த பொண்ண பார்த்தேன்… ஏதோ படிக்குற பொண்ணுங்க மாதிரி தான் தெரிஞ்சுது… எப்படியும் நாளைக்கு இன்னைக்கு பார்த்த இதே நேரத்துக்கு நம்ம வெய்ட் பண்ணா அவங்க வரும்போது பார்த்துரலாம்… அப்படியே அவங்கள மடக்கி புடிச்சு யாருன்னு தெரிஞ்சுக்கலாம்… சிம்பிள் மாப்ள…” என்று தோளை குழுக்கியவனை பார்த்து கவி,

 

“மச்சான்… உனக்கு கூட டாப் போர்ஷன் இருக்கும்ன்னு நினைக்கும் போது ஆச்சர்யமா இருக்கு டா…” என்று சில்லாகித்து கூறவும், அவனது தோளில் இரண்டுக்கும் மேற்பட்ட அடிக்கள் விக்கியிடம் இருந்து கிடைத்தது…

 

“அது எல்லாம் நல்லாவே நிறையவே இருந்துச்சு மாப்ள… உன்கூட சேர்ந்ததுல இருந்து தான் இப்படி கெட்டு நாசமா போயிட்டேன்…”

 

“அடப்பாவி… நான் எல்லாம் நல்லவன் டா மச்சான்… இப்படி அபாண்டமா பேசாத…”

 

“யாரு..? நீ..? நல்லவன்…? அதுசரி… எல்லாம் நேரம்… என் அம்மா அப்பவே சொல்லுச்சு இவன் கூட எல்லாம் சேராதன்னு நான் தான் கேட்கல… இப்ப அனுபவிக்குறேன்…” என்று நெற்றியில் அறைந்துக் கொண்டு வேடிக்கை பார்க்க திரும்பவும் கார் நிற்கவும் சரியாக இருந்தது….

 

“ஏன் டா காரை நிறுத்துன.. கோபத்துல இப்படி நடுவழில இறக்கி விடுற வேலை எல்லாம் வச்சுக்காத சொல்லிட்டேன்…” என்று விரல் நீட்டி மிரட்டியவன் புறம் திரும்பிய கவி,

 

“அட சீ… அப்படியே காரை நிறுத்தாம ஓட்டிக்கிட்டே போக நீ என்ன என் லவ்ரா இல்ல வைஃப்பா… மில் வந்துருச்சு… இறங்கி தொல லூசு… ” என்று விட்டு காரில் இருந்து இறங்க, விக்கியும் “அதுக்குள்ள வந்துருச்சா… சொன்னாதானே தெரியும்… அதுக்கு எதுக்கு லூசுன்னு சொல்லணும்… வர வர இவன் ரொம்ப மோசம் ஆயிட்டான்… தள்ளியே நிக்கணும்…” என்று புலம்பியபடி காரை விட்டு இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான்…

 

சுற்றி வயல் வெளிகளாக இருக்க, பெரிய காம்பௌண்ட் சுவர்களுக்குள் இருந்தது இவர்களது அரசி ஆலயம்… ஆனால் அவனது பார்வை வட்டத்தில் சில பல சுற்றளவுக்கு எங்கும் வீடோ கடையோ இல்லை… ஊரின் எல்லையாக இருக்கும் என்று கணித்திருந்தான் விக்கி…

 

“டேய்… வாடா பராக்கு பார்த்துட்டே நிக்காத… உள்ள போலாம் வா…” என்று அழைக்க,

 

“மாப்ள… இந்த பிளேஸ் உண்மையா செமையா இருக்குல்ல… எவ்வளவு பிரெஷ் ஏர்… சிட்டில எல்லாம் இப்படி கிடைக்குறது ரொம்ப கஷ்டம்…” என்று மனம் உணர்ந்து சொல்ல அதை ஒரு புன்னகையுடன் தலையை ஆட்டி ஆம் என்று ஆமோதித்தான் கவியழகன்…

 

அப்பொழுது அங்கு வேலை செய்யும் ஒருவர் அவர்களை நோக்கி ஓடி  வர, கார் சாவியை குடுத்து, “ஆஃபீஸ்ல வண்டிய நிறுத்திருங்க… நாங்க உள்ள போய் பார்த்துட்டு வந்துறோம்….” என்று விட்டு நண்பனுடன் அந்த பெரிய காம்பௌண்ட் சுவரை ஒட்டி இருந்த கேட்டின் வழியாக உள்ளே சென்றனர்…

 

அன்றைய மதிய வேலை உணவு வீட்டில் இருந்து மில்லுக்கே மூவருக்கும் வந்துவிட, அன்றைய முழுநாள் பொழுது இருவருக்கும் அங்கேயே சென்றது….

 

மாலை அந்திசாயும் வேலையில் காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் நண்பர்கள் இருவரும்… கவியழகன் அமைதியின் சுயரூபமாக வந்துக் கொண்டு இருந்தான்…

 

அவனது மனநிலையில் தான் விக்னேஷும் இருந்திருக்க வேண்டும் அதனால் அவனும் எதுவும் பேசாது அமைதியாகவே வந்தான்…

 

கவியழகன் பொறியியல் படிப்பை முடித்ததுமே கம்பெனியில் வேலையில் சேர்ந்திருந்தான்… அவனது உழைப்பின் மதிப்பை கண்டுக்கொண்ட கம்பெனியும் அவனை வெளிநாட்டிற்கு செல்ல பரிந்துரை செய்ய, இரண்டு வருடங்கள் அங்கு வேலையில் இருக்க, அப்பொழுது பழக்கம் ஆனவனே விக்னேஷ்…

 

அங்கு ஒரு வருடமாக வேறு ஒரு கம்பெனியில் வேலையில் இருந்தான் விக்கி… அப்பொழுது அவனது அறைக்கு வந்து சேர்ந்தான் கவி… இருவரும் ஒரே வயதுடையவர்கள் என்பதால் சட்டென நண்பார்களாகி விட்டனர்..

 

விக்னேஷ், தமிழ்நாட்டில் ஒரு பிரபல தொழிலதிபரின் வாரிசு… தந்தையை சிறு வயதிலேயே இழந்தவனுக்கு அனைத்தும் அவனது அன்னை மட்டுமே… கல்லூரி படிப்பை முடித்ததும் தொழிலில் இறங்காமல் அனுபவம் வேண்டும் என்பதற்காக இங்கு பணியாற்றிக்கொண்டு இருக்கிறான்…

 

எப்பொழுதும் தான் வசதி படைத்தவன் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவருடனும் சரிக்கு சமமாக பழகும் குணம் கொண்டவன்… அதனாலோ என்னவோ கவிக்கும் அவனுக்கும் ஏக பொருத்தம் ஆயிற்று… வெளிநாட்டில் இருவருடங்கள் வேலை செய்தவன், பின் விக்னேஷுடன் இணைந்து தமிழ்நாட்டில் தங்கள் யோசனைகளை கொண்டு ஒரு கம்பெனியை சொந்தமாக நிறுவினர்…

 

அது ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் காட்டவும், தன் அனைத்து வேலைகளையும் துறந்து சொந்த ஊருக்கே திரும்பி இருந்தான் கவியழகன்… இதைபற்றி வெளிநாட்டில் இருக்கும் போதே  விக்னேஷிடம் சொல்லி இருந்ததால் அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை…

 

தொடர்ந்து வேலை, தொழில் என்று ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு மாற்றத்திற்காக நண்பனுடன் அவனது ஊர் சென்று பார்த்து சிறிது நாட்கள் அங்கு கழித்து விட்டு வரலாம் என்று கடைசி நிமிடத்தில் முடிவு செய்து கிளம்பி இங்கு வந்தும் சேர்ந்துவிட்டான்…

 

தொழிலில் நியாய தர்மம் பார்பவர்களுக்கு, இன்று அவர்கள் கண்டது சஞ்சலத்தை ஏற்ப்படுத்தியது உள்ளுக்குள்… இது நண்பனின் குடும்பம் மற்றும் தொழில் சம்பந்தமான விஷயம் இதில் மூக்கை நுழைக்க கூடாது என்று அமைதியை கடைபிடித்தான் விக்கி…

 

கவியின் உள்ளமோ, குட்டையில் எறிந்த கல்லாக கலங்கி இருந்தது… இதுவரை தான் கட்டி வைத்த எண்ணத்தின் கோட்டை லேசாக ஆட்டம் கண்டது… அதே நினைப்போடு வீடு வந்து சேர்ந்தவன் எதுவும் பேசாது அமைதியாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்…

 

அவனை பார்த்து பெருமூச்சு விட்ட விக்கி, அவனுக்கு உதவவோ அல்லது யோசனை சொல்லவோ முற்படவில்லை காரணம், இன்னும் அதை பற்றி தன்னிடம் அவன் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதால்… அனாவசியமாக மூக்கை நுழைத்து பிரச்சினையை பெரிது படுத்த அவன் விரும்பவில்லை அதனால் கவி அறைக்கு சென்றதும் தன் வேலையை பார்க்க சென்றான் அடுக்களையில்…

 

“ஏய் புள்ள… என்னத்த கனா கண்டுட்டு இருக்குறவ ஜோலிய பார்க்காம…? ஆளையும் தினுசையும் பாரு… போ… போய் அதைய இறக்கி வை…” என்று வேலை செய்யும் பெண்ணை மிரட்டிப் கொண்டு இருந்தார் காயத்திரி…

 

“ஆன்ட்டி… ஏன் டென்ஷன் ஆகுறீங்க…? கூல்… கூல்… இப்படி டென்ஷன் ஆனா உங்களுக்கு சீக்கிரம் வயசாயிடும்…” என்று பேசியபடி அவர் அருகில் சமையலறை மேடையின் மீது தாவி ஏறிக் அமர்ந்துக் கொண்டான்…

 

“ம்க்கும்… இனிதேன் வயசாக வேண்டி கெடக்கு பாரு…”என்று மோவாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டவர், சட்டென நினைவு வந்தவராக முகத்தில் எதிர்பார்ப்புடன், “ஏன் ராசா… ரெண்டு பேரும் மில்லுக்கு போனீகளே என்னாச்சு… கவி பய என்ன பண்ணுனான்…? எல்லாம் சரியாத்தேனே நடக்கு…?” என்று கேட்க அவரது முகத்தை கூர்ந்து பார்த்து,

 

“கரெக்டா சொல்ல தெரியல ஆன்ட்டி… ஆனா நீங்க எதை எதிர்பார்த்து எங்களை அனுப்புனீங்களோ அது கரெக்டா நடந்து இருக்குன்னு நினைக்குறேன்… ஏன்னா நான் புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை அவனும் புரிஞ்சிருப்பான்னு தோணுது…” என்று சொல்லவும் ஒரு பெருமூச்சு வெளியானது காய்த்ரியிடம்…

 

” ஆன்ட்டி கவி ரூம்ல தான் இருக்கான் போய் பார்த்து பேசுறதுன்னா பேசுங்க… அவனும் கொஞ்சம் தெளிவா யோசிக்க முடியும்ன்னு நினைக்குறேன்…” என்க,

 

விக்கியை ஒருமுறை திரும்பி பார்த்தவர், ‘இவன் சொல்லுறதும் செரித்தேன்… நாம சொல்லாம எப்படி புள்ளைக்கு விஷயம் தெரிய வரும்… வெளிய யாராச்சும் சொல்லுவாங்கத்தேன்… ஆனா அதுக்கு முன்னாடி நாமாளே சொல்லுறதுதேன் சரியா வரும்…என்று முடிவெடுத்தவர்,

 

“செரி ராசா நீ சொல்லுறதும் செரித்தான்… நா போய் பேசுதேன்…” என்றவர்,

 

“ஏய்… நா வாரத்துக்கு முன்னாடி இந்த வேலைய முடிச்சு இருக்கணும்… நின்னு கனா கண்டுட்டு இருந்த கொன்னுபுடுவேன்… புரிஞ்சுதா…”என்று மிரட்டி விட்டு செல்ல எத்தனிக்கையில், அவரை தடுத்தான் விக்னேஷ்…

 

” ஆன்ட்டி… இருங்க… இருங்க… ஏன் அவசர படுறீங்க….? உங்க பையனை போய் பார்க்கலாம் ஆனா அதுக்கு முன்னாடி என்னை கொஞ்சம் கவனிச்சுட்டு போங்க…” என்று பல்லை காட்ட,

 

“என்னல கவனிக்கனும்… எனக்கு மொத என் பையந்தேன்… பொறவுதேன் மத்தவிக எல்லாம்… தள்ளு டா தடிபயலே…” என்று அவனை தள்ளிவிட்டு போக முயல்கையில் அவரை வழிமறித்தவன்,

 

” ஆன்ட்டி இது எல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்… ஒரு சின்ன பையன் வயித்தை காய போட்ட பாவம் உங்களுக்கு வேண்டாமேன்னு தான் கவனிக்க சொன்னேன் ஆனா நீங்க…? நல்லது பண்ணனும்னு நினைச்ச என்னையே தடிபயல்னு சொல்லிட்டு போறீங்க… இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்…”என்று நெஞ்சை நிமிர்த்தி நின்று வசனம் பேசியவனை சமையல் வேலை செய்துக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் பார்த்து சிரிக்க அதை கண்டுக் கொள்ளாதவனை கண்டு  நெற்றியில் அறைந்துக் கொண்ட காயத்ரி,

 

“உன்னைய எல்லாம் என்ற மவன் எப்படித்தேன் சமாளிச்சானோ தெரியல… “என்ற அங்கலாய்ப்புடன், தயாராக வைத்து இருந்த மாவில் வேகமாக வடையை சுட தொடங்கினார்…

 

“செம்ம ஸ்மெல் ஆன்ட்டி…”என்று வடையை நன்கு வாசம் பிடித்தபடியே வடையை உள்ளே தள்ள தொடங்க, வேலையால் ஒருவர் அவனுக்கு ஏலக்காய் டீ யை கொடுத்தார்…

 

வடையை வாயில் அடைத்துக் கொண்டே, “ஏன் ஆன்ட்டி மீதி மாவை அப்படியே வச்சிருக்கீங்க… மத்தங்களுக்கு தரலையா….?” என்று கேட்கவும்,

 

“இல்ல… நான் போய் ராசாவ பார்த்து பேசிட்டு வரேன்… மனசு என்னவோ போல இருக்கு… பேசுனாத்தேன் நிம்மதியா அடுத்த ஜோலிய பார்க்க முடியும்…” என்று முகம் கசங்க சொல்லியவறை பார்த்து உண்பதை நிறுத்தி விட்டு அவர் அருகில் வந்தவன்,

 

“தேவையில்லாம கவலை படாதீங்க… எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும்… அதான் கவி இருக்கான்ல அப்புறம் ஏன் கவலை படுறீங்க…?” என்றவனுக்கு பதில் கூறும் முன் முருகவேலின் குரல் வீட்டை நிறைத்தது…

 

“சைந்தவி……..”

 

“ஏய் காயத்ரி…….” என்று கோபமாக மகளையும் மனைவியும் அழைத்தவர் அவர்களது வரவிற்காக ஆவேசமாக நடுகூடத்தில் காத்திருந்தார்…

 

“சைந்தவி…..” என மீண்டும் அழைத்தவருக்கு பொறுமை தான் காற்றில் பறந்து கண் கொண்டு இருந்தது…

 

சமையலறையில் இருந்த அனைவரும் அதிர, கணவனை தேடி வேகமாக ஓட்டமும் நடையுமாக காயத்ரி செல்ல, விக்கி சற்று இடைவெளி விட்டு அவர்கள் நிற்கும் இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் என்னும் தூரத்தில் நிற்க, மாடியில் தன் அறை படுக்கையில் கைகளை கோர்த்து தீவிர யோசனையில் படுத்திருந்த இருந்த கவியும் தந்தையின் குரலில் அறையை விட்டு வெளியே வந்து எட்டி பார்த்தவன் கீழே சென்று என்னென்று கேட்கவில்லை கேட்க தோணவில்லை என்பதே உண்மை….

 

சைந்தவி மெல்ல நிமிர்ந்த நடையுடன் கொல்லை புறத்து வாசலின் வழியாக உள்ளே நுழைந்தாள் தன் தந்தையை பார்த்தவாறே…

 

கணவனின் அருகில் பதற்றமாக நின்றிருந்த காயத்ரிக்கு சூழ்நிலை தெளிவாக புரிந்தது… ஆனால் அவரால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை…

 

தொடரும்….

 

Advertisement