Advertisement

UD:1

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

கண்ணோடுதான் ஆட,

பார்வை பூத்திட பாதைபாத்திட்டு

பாவை ராதையோ வாட,

இரவும் போனது பகலும் போனது

கண்ணன் இல்லையே கூட,

இளையகன்னியின் இமை இமைத்திடாத

கண் இங்கும் அங்கும் தேட,

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ,

ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ ….

 

என்று அலைபேசியில் அலாரத்திற்கான பிரத்தியேக பாடல் ஒழிக்க,

 

போர்வைக்குள் இருந்து மென்கரம் ஒன்று நீண்டு தன் அலைபேசியை தேடி துளாவி கண்டு பிடித்து அதை அனைத்து வைத்தது…

 

ஓட்டுக்குள் ஒடுங்கும் நத்தையை போல் மீண்டும் போர்வைக்குள் நுழைந்தது அந்த மென்கரம்…

 

அலாரம் அடித்து ஒருமணி நேரம் கழிந்த நிலையில் லேசாக அசைந்த அந்த மென்கரத்திற்கு சொந்தமான உருவம் மெல்ல போர்வையை நீக்கி விட்டு, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்ததும், கண்களை திறவாமல் பக்கவாட்டில் இருந்த அலைபேசியை எடுத்து பார்க்க, அதில் மணி ஏழே கால் என்று காட்டியது….

 

அதை பார்த்து அதிர்ந்து,”என்னது ஏழே கால்’லா…. இன்னைக்கும் தூங்கிட்டேனா…என்ன கொடும டி நிஷா இது….”என்று தலையில் அடித்துக் கொண்டு அவசரமாக படுக்கையை விட்டு எழுந்தவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தூக்கம் முழுவதும் கலையாத நிலையில் குழம்பினாள்…

 

பின் அவசரமாக சமையலறை சென்றவள், இடுப்பில் கை வைத்துக் கொண்டு மிக தீவிரமான முகத்துடன்,”என்ன சமைக்கலாம்…? டைம் வேற ஆச்சு… ஈஸியா பண்ணிட்டா வேலை மிச்சம்… ம்ம்ம்… என்ன பண்ணலாம்… என்ன பண்ணலாம்….?”என்று யோசித்தவளுக்கு என்ன செய்வது என்று தான் புரியவில்லை…

 

“அய்யோ இப்படி நின்னுட்டு இருந்தா வேலைக்கு ஆகாது… ம்ம்ம்… எப்பவும் போல் நம்ம இன்ஸ்டன்ட் சாப்பாடே சாப்பிட்டுக்கலாம்….”என்று இறுதியில் ஒரு தீர்மானத்துடன் மீண்டும் படுக்கை அறையினுள் நுழைந்தவள் வேக வேகமாக தயாராக தொடங்கினாள்….

 

மணி சரியாக எட்டே கால் என்று காட்டும் சமயம், அறையை விட்டு வெளியே வந்தாள் தேவதையாக….

 

சாம்பல் நிறமும், வெந்தையத்தின் நிறமும் கலந்த காட்டன் சுடிதார் அணிந்து, முதுகு வரை இருந்த கருங்கூந்தலை உச்சியில் ஒரு கேச் கிலிப்பில் சிறிதளவு முடியை அடக்கி மற்றதை மயிலிறகு போல் விரிய விட்டு இருந்தாள்…. நெற்றியில் சிறிதாக ஒரு பொட்டு, கழுத்தில் ஒரு மெல்லிய தங்க சங்கிலி, வலது கையில் அலங்கார பிரேஸ்லெட், இடது கையில் சாம்பல் நிறத்தில் லேடிஸ் பாஸ்டிரேக் வாட்ச் அணிந்து இருந்தவளை காண காண திகட்டவில்லை …

 

எளிமையில் எத்தனை அழகு என்று அவளை காணும் யாவருக்கும் தோன்றும், தோன்ற வைத்துவிடும்… முகத்தில் எப்பொழுதும் நிறைந்து இருக்கும் குழந்தை தனமும், புன்னகையும் எதிரில் இருப்போரை சுண்டி இழுக்கும் வல்லமை கொண்டதாலோ என்னவோ பல பேர் அவள் பால் சுண்டி இழுக்க பட்டனர் ஆனால் அது அவளை பெருமைப்படும் அளவிற்கு அல்லாமல் போனது தான் கொடுமை…

 

அறையை விட்டு வெளியே வந்தவள் நேரே பூஜை அறைக்கு சென்று, கடவுளின் முன் கை கூப்பி நின்றவள் எப்பொழுதும் போல் ஒரு நிமிடம் இமைக்காமல் அனைத்து கடவுள் படங்களிலும் தன் விழியை ஓடவிட்டவள், பின்

 

“இப்பவரை உன்னை தான் நம்புறேன்… நீ என்ன பண்ணாலும் இடிதாங்கி மாதிரி நீ  கொடுக்குற  எல்லா அடியையும் ஒரு அடிதாங்கியா  வாங்கிட்டு நிக்குறேன்… அதுக்காக நீ கொஞ்சம் ஓவரா தான் போற… ஒருநாள்….”என்றவள் இப்பொழுது கூப்பிய கைகளை கீழே இறக்கிவிட்டு, நிமிர்ந்து நின்று தோரனையான ஒரு பார்வையில்

 

“ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் நான் பொங்கி எழுந்துருவேன்… அப்புறம் உன் சேதாரத்துக்கு நான் பொருப்பு இல்ல… புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்குறேன்…”என்றதும் சுவற்றில் இருந்த ஒரு பல்லி சத்தம் இட,அதை கேட்டவள்

 

“ம்ம்ம்… அது… அப்புறம் இன்னொரு விஷயம், இப்போ  நான் போய் சேருர வேலையாச்சும் உருப்படியா இருக்கனும்… இங்கையும் ஏதாச்சும் உன் வேண்டாத வேலைய பண்ணி வச்ச நீ காலி… “என்றதும் மீண்டும் பல்லி சத்தமிட,

 

“பாருடா… இன்னைக்கு என்ன ஓவரா இருக்கு… ம்ம்ம்.. பார்க்கலாம் இன்னைக்கு எப்படி போகுதுன்னு….”என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்துவிட்டு இல்லை இல்லை எச்சரிக்கையை வைத்துவிட்டு அங்கு இருந்த திருநீறை எடுத்து சிறுகீற்றாக நெற்றியில் வைத்துக் கொண்டவள் மீண்டும் கடவுளின் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, “பாய் காட்’ஸ்”என்றவள் அடுத்து சமையலறை நோக்கி நடந்தாள்,

 

தன் கைகடிகாரத்தை பார்க்க அது எட்டரை ஆக பத்து நிமிடங்கள் இருப்பதாக காட்டியது…

 

“இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு… போதும் நாம வயித்தை கவனிக்க… “என்று தனக்குதானே பேசியவள்,

 

பிரெட்டில் ஜாமை தடவி அதை வாய்க்குள் அடைத்துக் கொண்டே தன் கைப்பையில் வேண்டியவற்றை அடைத்துக் கொண்டு இருந்தாள்….

 

முழுதாக மூன்று பிரெட்டை உண்டதும், சிறிது தண்ணீரை பருகிவிட்டு தன் வண்டி சாவியையும் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு தன் குடியிருப்பின் கீழுள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு வந்தாள்….

 

தன் ஸ்கூட்டி பெப்பில் அமர்ந்தவள் வழக்கம் போல அதன் கண்ணாடியில் தன்னை ஒருதரம் பார்த்துவிட்டு தன் வண்டியில் பறக்கும் சிட்டானாள்…

 

மனதில் பற்பல எண்ணங்களுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தவள், ஒரு சிக்னலில் நிற்க…

 

அவள் முன் அவளது விருப்பமான கருப்பு நிற லம்போகினி கார் ஒன்று ஜம்பமாக நின்று இருந்தது…

 

‘ம்ம்ம்… குடுத்து வச்சவன் யாருன்னே தெரியல… நம்மளும் வாழ்கைல முன்னேறுரோம்… இதே மாதிரி கருப்பு கலர்ல லம்போகினி கார் வாங்குறோம்…’ என்று சபதம் எடுத்த அடுத்த நொடி எப்பொழுதும் தோன்றும் அதே எண்ணங்கள் தோன்றவும் மனதின் வலி அவளை பெரிதும் வதைத்தது…

 

அந்த வலி அவள் முகத்திலும் பிரதிபலிக்க, புன்னகை குடி இருந்த அவள் முகத்தில் வேதனை அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்துக் கொண்டு அவளை பார்த்து கைக்கொட்டி சிரித்தது…

 

இவை அனைத்தும் சில நொடிகள் தான்… பின் தன்னை சமன் செய்துக் கொண்டவள் முன்பு போல் ஒரு புன்னகையை முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்டாள்…

 

சரியாக அப்பொழுது சிக்னலில், நின்றுக் கொண்டு தானே இருக்கிறோம் என்று இலகுவாக இருந்தவளின் வண்டியின் மீது ஒரு கார் பின் இருந்து இடிக்க, இவளோ இடித்த வேகத்தில் சற்றே இடைவெளி விட்டு நின்று இருந்த அந்த லம்போகினி காரின் மீது மோதி தடுமாறி நின்றாள்….

 

நொடி நேரத்தில், நிகழ்ந்தது என்னவென்று உணர்ந்தவளுக்கு கோபம் கண்ணா பின்னாவென எகிறவும்….

 

வேகமாக வண்டியை விட்டு இறங்கி பார்க்க, தன் பெப்பின் பின் இருந்த ஹெட் லைட் இடித்த காரினால் உடைந்து இருக்க, முன்பக்க ஹெட் லைட் இடித்த வேகத்தில் முன் இருந்த வண்டியில் உடைப்பட்டு இருந்தது…

 

அதை பார்த்தவள் தன் வாயில் வலது கையால் அடித்து கொண்டே, “அய்யோ… அய்யோ… அய்யோ … என் செல்லத்தை இப்படி பண்ணிட்டானே …. எவன்டா அவன்  கண்ணு தெரியதா கபோதி…. “என்று வேகமாக இடித்த காரை நோக்கி பாய, அதற்குள் அந்த காரில் இருந்து இறங்கியவன்,

 

“ஓஓஓ…ஷிட்….”என்று தலையில் கைவைக்க,

 

கோபத்தின் உச்சியில் இருந்தவள், தன் ஷாலை ஒருபக்கமாக முடிந்துக் கொண்டு,”ஆமா டா…ஷிட் தான்… ஏன்டா கண்ணு தெரியல…. ஆடி கார்ல வந்தா பெரிய அம்பானின்னு நினைப்போ… உன்னக்கெல்லாம் யாருடா காசு வாங்கிட்டு லைசென்ஸ் குடுத்தது….” என்று ஹை பிச்சில் எகுற,

 

கார்காரனோ, “ஹே… சாரி பேபி… இட்ஸ் ஜெஸ்ட் ஆன் ஸ்மால்….”என்று விளக்கம் கொடுக்கும் முன்,

 

“அடி செருப்பால… யாருக்கு யாருடா பேபி…? நீ தான் என்னை பெத்தியா… கண்ணு தெரியாதவனே… “

 

“ஹே… ரொம்ப பேசாத… தெரியாம நடந்த தப்பு இது…” அவனுக்கும் சற்று கோபம் எட்டிப்பார்த்து, காரணம் அங்கு கூடி இருந்த கூட்டத்தின் நடுவில் தன்னை ஒரு பெண் திட்டுவதை அவனால் பொருத்துக் கொள்ள முடியவில்லை…

 

“என்னது தெரியாம நடந்துச்சா… ஏன்டா சிக்னல் போட்டு இருக்குறது தெரியல… பார்த்தா ஹை கிளாஸ் மாதிரி இருக்க… என்ன காலைலேயே மப்பா…? “

 

“டோன்ட் டாக் டூ மச்… இடிச்சது தப்பு தான்… அதுக்கு நானே உன் வண்டியை சரி பண்ணி தரேன்….” என்று சமரசம் பேசினான்… ஏனெனில் அவள் கூறியது போல் சற்று குடியின் போதையில் தான் இருந்தான் ஆனால் முன்தினம் நண்பர்களுடன் பார்ட்டியில் அடித்த தண்ணீரின் போதை இன்னும் சற்று அவனிடம் மீதம் இருந்தது…

 

“ம்ம்ம்… அப்புறம்… நீ சரி பண்ணி தர வரைக்கும் நான் இப்படியே ரோட்ல நின்னுட்டு இருக்கனுமா… “என்று நக்கலாக கேட்க,

 

“நான் உன்னை எங்க டிராப் பண்ணனுமோ அங்க டிராப் பண்ணிடுறேன்… போதுமா…”

 

” போடாங்கு… டிராப் பண்ணுறானாம்… கொய்யால….. என் வண்டிய இடிச்சதும் இல்லாம என்னை டிராப் வேற செய்வியா… இதுதான் சாக்குன்னு ரூட் விட பார்க்குறியா… கொன்னுருவேன்… இங்க பாரு உன்னால என் வண்டியோட  பின்பக்க ஹெட் லைட் போச்சு, எரும மாதிரி மோதி பாவம் முன்னாடி இருந்த காருலையும் இடிச்சு என் வண்டி முன்னாடி ஹெட் லைட்டும் போச்சு… “என்று தன் வண்டியை சுட்டிக் காட்டி கொண்டு வந்தவள் அப்பொழுது தான் ஒன்றை கவனித்தாள்….

 

தனக்கு முன் நின்று இருந்த லம்போகினி காரின் மேல் சாய்ந்து நின்று நெஞ்சின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு இவளையே குறுகுறுவென பார்த்து இருந்தவனை பார்த்தவளுக்கு வாய் 144 தடா உத்தரவு தானாக பிறப்பிக்க பட்டது…

 

அலையலையாக அடர்ந்த கேசம், கோதுமை நிறத்தில், கூர் விழிகள், நேர் நாசி, அளவாக வெட்டப்பட்ட கத்தையான மீசை, லேசாக சிவந்து இருந்த அதரங்கள் என ஆறடி உயரத்தில் வெளிர் நீறநில சட்டையும் சந்தன நிற பேண்ட்டும் அணிந்து இருந்தவனை கண்டவளுக்கு சத்தியமாக சுயநினைவு இல்லாமல் போனது…

 

இமைக்க மறந்து தன்னையே பார்த்து கொண்டு இருந்தவளை கண்டு ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி ‘என்ன..’வென்று கேட்டகவும், சுயத்திற்கு வந்தவள்

 

சட்டென தன் தலையை குனிந்துக் கொண்டாள், ‘அட லூசே… இப்படியா பார்த்து வைப்ப… ச்சே… ச்சே … நிஷா இப்படி ஷெம் ஷெம் பப்பி ஷெம் ஆயிருச்சே டி….’என்று தன்னுள் புலம்பிக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் ஒரு ஜீவன் அனாமத்தாக கத்திக் கொண்டு இருந்தது காதில் விழுந்தது….

 

அதில் சுதாரித்து அவன் புறம் திரும்பவும், போக்குவரத்து போலிஸ் வரவும்   சரியாக இருந்தது,

 

“என்ன இங்க பிரச்சினை…. எதுக்கு இப்படி கூட்டம் போட்டு இருக்கீங்க… டிராப்பிக் ஆகுறது தெரியல…? காலைல பீக் ஹவர்ல என்ன சண்டை எதுக்கு டிராஃபிக் கிரியேட் பண்ணிட்டு இருக்கீங்க….?” என்று அவர் சத்தமிட,

 

அந்த லம்போகினி கார்காரனை கண்டுக் கொள்ளமால் போலிஸிடம் நடந்ததை கூறி, தன் வண்டியின் சேதாரத்திற்கு இடித்தவனிடம் இருந்த சில தொகையை பெற்றுக் கொண்டவள், அங்கு இருந்து நகரும் முன், அந்த போலிஸிடம் லம்போகினி காரை காட்டி,

 

“சார் அந்த லூசுனால இந்த வண்டிக்கும் தான் சார் அடிப்பட்டு இருக்கு…”என்று இலவசமாக போட்டு கொடுத்து ஒரு இலவச சேவையை செய்தவள் அந்த லம்போகினி கார்காரனை ஓர் பார்வை பார்த்துவிட்டு வேகமாக அங்கு இருந்து நகர்ந்தாள் தன் வண்டியில்…

 

போலீஸ் அவள் கூறியவரிடம் என்னவென்று விசாரிக்க, “நத்திங் சார்… ஐ கான் ஹன்டில் இட்….”என்றவனும் விடைபெற,

 

போலீஸ், இடித்தவனை எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டு, அங்கு இருந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய தொடங்கினார்….

 

தனது வண்டியில் சென்று கொண்டு இருந்தவளுக்கு நினைவுகள் யாவும் லம்போகினி காரின் மேல் சாய்ந்து நின்று இருந்தவனின் தோரனையிலேயே நிலைத்து இருந்தது…

 

‘ஆளு நல்லா அம்சா இருக்கான்… அது அவனோட காரு போல… ம்ம்ம்… ஆனா ஏன் அப்படி பார்த்தான்…’என்று யோசித்துக் கொண்டு வந்தவள்,

 

‘ஆமா நீ பார்த்த லட்ஷனத்துக்கு உன்னை கேவலமா பார்க்காத வரை சந்தோஷ பட்டுக்கோ… லூசி….’என்று எண்ணியவளின் நினைவுகளில் அவள் வேண்டாம் என்று ஒதுக்கியும் சில விஷயங்கள் பல வருடங்கள் கழித்து உலா வந்தது….

 

‘சே… இப்ப எதுக்கு நான் தேவையில்லாததை எல்லாம் நினைச்சுட்டு இருக்கேன்… ஸ்ட்ராங் நிஷா ஸ்ட்ராங்…. ‘என்று தன்னை நிலைப்படுத்தி கொண்டு வண்டியை ஓட்டியவள் தான் வந்து சேர வேண்டிய இடம் வந்ததும் மற்றதை மறந்தாள்….

 

‘டெக்னோ மேக் ஸோலியூசன்’என்று பெயர் பொதிக்கப் பட்ட மூன்று மாடி கட்டிடத்தின் நுழைவாயிலில் வண்டியுடன் நின்றவளின் முகம் மலர்ந்து இருந்தது…

 

‘கடவுளே… நல்லா கேட்டுக்கோ… நான் இங்கையாச்சும் ஒழுங்கா வேலை செய்யனும்….இங்கையும் ஏதாச்சும் உன் கோக்கு மாக்கு வேலைய செஞ்சு வச்ச… அப்புறம் உனக்கு நான் எங்கையும் அர்ச்சனை தட்டுல காசே போட மாட்டேன் பார்த்துக்கோ…’என்று மனதில் கடவுளை எச்சரித்தபடி கட்டிடத்தின் கேட்(gate)டினுள் நுழைந்தாள்…

 

வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், தன் பெப்பின் கண்ணாடியில் தன்னை பார்த்தவள், “ஆல் தி பெஸ்ட் நிஷா செல்லம்…”தனக்கு தானே வாழ்த்துக்கள் கூறியவள் அலுவலகத்தை நோக்கி நடக்க தொடங்கினாள்…

 

ரிஷெப்சனிற்கு வந்தவள், அங்கு இருந்து பெண்ணிடம், “ஹாய்… ஐ’ம் நியூ….”என்று தன்னை அறிமுக படுத்தும் முன், அவளை ஒற்றை விரல் நீட்டி தடுத்த அப்பெண்,

 

வரவேற்பில் இருந்த ஃபோன்னை எடுத்து யாருக்கோ அழைத்து பேசலானாள்… அதற்கு,

 

“பாருடா திமிர….”என்று லேசாக முனுமுனுத்தவள், அப்பெண்ணை பார்வையாள் அளவிடும்​ வேலையை ஆரம்பித்தாள் நம் நாயகி….

 

செயற்கையாக சுருட்டி விடப்பட்ட கூந்தல் தோளில் புரள, முகத்திற்கு சற்றே அதிகமாக ஒப்பனையில், அடர் சிவப்பு நிறத்தில் உதட்டு சாயம் பூசி, இறுக்கி பிடித்த சுடிதாரில் ஷாலை ஒருபக்கமாக வழியவிட்டு இருந்த அந்த நவநாகரீக யுவதியை பார்த்தவள்,

 

“ப்ப்ப்பஅஅஅஅ….. என்ன பொண்ணு டா….”என்று முகத்தை சுழித்து பக்கவாட்டில் திரும்ப, அங்கு இவளையே பார்த்துக் கொண்டு இருந்த அந்த அலுவலக ஊழியர், இவளது முகபாவனையிலும், வார்த்தையிலும் பக்கென்று சிரித்து விட்டார்….

 

அதை பார்த்தவள் லேசாக அசடு வழிந்தபடி, “கேட்டுடீங்களா….?” என்று கேட்க,

 

அதற்கு சிரித்துக் கொண்டே, “எஸ்…. எனிஹௌ…. ஐ’ம் கீதா… வெரி ஹாப்பி டூ மீட் யூ….” என்று கையை அவள் புறம் நீட்ட….

 

கீதாவையும் அவள் நீட்டிய கரத்தையும் ஒரு சில நொடிகள் பார்த்தவள், பின் தன் கரத்தை நீட்டி கைகுலுக்கிய படி,

 

“ஐ’ம் நிஷா… அனிஷா…. “என்க,

 

“நைஸ் நேம்…. ஆமா நீங்க இங்க….?”

 

“தேங்க்ஸ்….ஐ’ம் நியூ ஜாய்னி ஹியர்… இன்னைக்கு தான் ஜாயின் பண்ண வந்து இருக்கேன்… ” என்று கூற,

 

“வாவ்… சூப்பர்… வெல்கம் டூ அவர் கம்பெனி…. “என்று புன்னகை முகத்துடன் வரவேற்க, நிஷாவிற்கு கீதாவை மிகவும் பிடித்து போனது…

 

கீதாவிற்கும் நிஷாவை பிடித்து போனது, பார்த்த சில நிமிடங்களிலேயே அவளது துடுக்கு தனத்தை புரிந்துக்கொண்டு கொண்ட கீதா அவளை ரசிக்க தொடங்கினாள்…

 

“ரொம்ப தேங்க்ஸ் கீது டியர்… இப்ப என்ன பிராசஸ் பண்ணனும்… இது கொஞ்சம் ஓவரா சீன் போடுது….” என்று மெல்லிய குரலில் கேட்க,அதற்கு கீதா சிரித்தப்படி அவள் பக்கம் குனிந்து மெல்லிய குரலில்,

 

“ஆமா கொஞ்சம் இல்ல ஓவர் சீன்… பேரு ரோஸ்லின்….இது போட்டுட்டு வர மேக்கப் பார்த்து பாதி பேர் ஆஃபீஸ்ல பயந்து ஓடுவாங்க… எவ்வளவு கிண்டல் பண்ணாலும் அப்படியே தான் வரும்….”

 

“அதான் பார்த்தாலே தெரியுதே… சரியான அல்டாப்பு ராணின்னு…”என்று அவளை பார்த்தே முகத்தை சுளிக்க அதற்கும் கீதா சிரிக்க, “சரி சரி போதும் ரொம்ப சிரிக்காத….”என்று நிஷா சீரியஸாக கூற,

 

கீதா,”ஏன்….?” என்று கேட்க,

 

நிஷா, “நான் சின்ன புள்ளையா இருக்குறச்ச என் பாட்டி சொல்லுவாங்க… ஓவரா சிரிச்சா அன்னைக்கு பொழுதுல அழுவாங்களாம்….”என்க,

 

“அப்படியா….?”என்று கீதா வியப்பாக கேட்கவும்,

 

“ம்ம்ம்….ம்ம்ம்….”என்று தலையை வேகமாக ஆட்டி வைத்தாள் நிஷா…

 

“ஓஓஓ…”என்று யோசனையாக இழுக்கவும், ரோஸ்லின் இவர்கள் புறம் திரும்பவும் சரியாக இருந்தது….

 

அதன் பின் செய்ய வேண்டிய விதிமுறைகளை முறையாக முடித்ததும் எம்.டி யை சென்று பார்க்குமாறு உரைத்தவள் தன் வேலையில் கவனம் ஆனாள்….

 

அவளுக்கு பழிப்பு காட்டிய நிஷா, கீதாவின் புறம் திரும்ப அவளும் நிஷாவின் சேட்டையை பார்த்து சிரித்தபடி, “கம் லெட்’ஸ் கோ…. “என்று அழைத்து சென்றாள்…

 

அப்பொழுது நிஷா,”கீது டியர்… இங்க ஆஃபீஸ் கேண்டின் நல்லா இருக்குமா… வெரைட்டியா இருக்குமா… இங்க ஸ்பெஷல் டிஸ் எது….? “

 

“ஹே… முதல் நாள் வேலைல சேர போற… கம்பெனி எப்படி… எம்.டி எப்படி… ஜாப் எப்படி… கஷ்டமா ஈஸியான்னு கேட்காமா… கேண்டினை பத்தி கேட்குற….”

 

“கீது டியர்…. இப்ப நான் இங்க வேலைக்கு சேர்ந்தாச்சு… இனி இந்த கம்பெனில எப்படி இருந்தாலும் நான் வேலை செஞ்சு தான் ஆகனும்… எம்.டி சொட்டையோ மொட்டையோ சொல்லுற வேலையை செய்யனும்… இனி இத மாத்த முடியாது… அதுனால அதை பத்தி பேசி என்ன ஆக போகுது ….? அப்புறம் முக்கியமானா ரெண்டு விஷயம் இருக்கு முதல் விஷயம் வேலையை இஷ்டப்பட்டு பண்ணா கஷ்டம் தெரியாது டியர்….” என்று பெரிய தத்துவத்தை கூற,

 

கீதா முதலில் எம்.டியை பத்தி கூறியதற்கு அதிர்ந்து வாயை பொத்திக் கொண்டவள், பின் அவள் கூறிய தத்துவத்தில் நிஷாவை லேசாக முறைத்துப் பார்த்து,

 

“சரி அது என்ன இன்னொரு விஷயம்….?” என்று கேட்க,

 

அதற்கு பதில் அளிக்க அவளை அருகில் ஒற்றை கண்ணடித்து அழைத்தவள், மெல்லிய குரலில், “நமக்கு எல்லாம் சோறு தான் முக்கியம்… வேலை எல்லாம் அதுக்கு அப்புறம் தான்…”என்றதும் தன் நெற்றியில் அறைந்து கொண்டாள் கீதா…

 

அதற்கு,” வொய் கீது டியர்… வாட் ஹாப்பன்…..?” என்று கரிசனத்தோடு கேட்க,

 

“ம்ம்ம்… நத்திங் டியர்… நீ இப்ப எம்.டியை  தானே பார்க்க போற… போ… போய் பார்த்துட்டு வா…. அப்புறம் பேசிக்கலாம்”என்று அவளுக்கு எம்.டி யின் அறையை சுட்டி காட்டி விட்டு தன் இருப்பிடத்திற்கு சென்றாள்…

 

நிஷாவிற்கு ஏனோ இந்த அலுவலகம் மிகவும் பிடித்து போனது… இதுவரை அவள் பணிபுரிந்த கம்பெனியின் எண்ணிக்கை ஐந்து. இதுவரை எங்கும் தோன்றாத ஒருவிதமான மனத்திருப்தியும், பாதுகாப்பையும் இங்கு உணர்ந்தாள்… மேலும் தன்னுடன் முதல் சந்திப்பிலேயே மிகவும் நெருங்கி விட்ட கீதாவையும் மிகவும் பிடித்துப் போனது அனிஷிவிற்கு…

 

அவளையும் அந்த அலுவலகத்தையும் சுற்றி பாஸிட்டிவ் அலைகள் இருப்பது போல் ஒரு தோற்றம் அவளுள் எழுந்ததை அவளால் உணர முடிந்தது…

 

புன்னகை முகத்துடன் ஒருவித அடக்கப்பட்ட துள்ளலுடன் எம்.டியின் அறையை தட்டிவிட்டு அனுமதிக்காக காத்து இருந்தாள் அனிஷா….

 

ஆனால் விதி எந்த ஒரு அனுமதியும் இன்றி அவள் வாழ்க்கையில் கபடி விளையாட இன்றுவரை அதன் பயனாக இவளும் ஆடிக்கொண்டு இருக்கிறாள்…

 

தொடரும் அன்பு தொல்லைகள்….

Advertisement