UD:29(1)

மஹா முதலில் ‘என்னை விட்டுரு ‘ என  கூறியதை கேட்டு கோபம் வர, அவன் அதற்கு  மறுத்து பேச வாய் திறக்கும் முன் பிற்பாதியை கேட்டு ஏனோ அவனுக்கு இப்பொழுது சிரிப்பு தான் வந்தது. மனதில் மானசீகமாக தன் நெற்றியில் அறைந்து கொண்டான்.

 

ஏனோ அவளுக்கு அதற்கு மேல் அங்கு மூச்சு முட்டுவது போல் இருக்க… அழுது தேம்பிய படி அவர்கள் அறையை விட்டு வேகமாக வெளியே ஓடினாள்.

 

அவள் செல்வதை பார்த்தவன் அவளை தடுக்க தோன்றாமல் படுக்கையில் அமர்ந்து கைகால் தலையை தாங்கி பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

 

அவனுக்கு ஏனோ தனிமை தேவை படுவது போல் தோன்றியது நிறைய சிந்திக்க வேண்டும் என்று எண்ணினான்….

 

அன்று பத்மாநந்தன் அவனிடம் ‘நீங்க தனியா இருக்கணும்ன்னு நாங்க தான் முடிவு பண்ணினோம்…”  தங்களுக்காக தான் செய்தேன் என்று கூறியதின் பொருள் இப்பொழுது தான் விளங்கியது நந்தனுக்கு. அன்று அவன் அவளை பார்த்த கண்ணோட்டம் தவறாக இருந்ததால் அவன் தந்தைதான் தான் இதை முடிவு செய்தேன் என்று கூறியதும் இதற்கு மஹா தான் காரணமாக இருப்பாள் என்று தவறாக எண்ணினான்…

 

அன்று காஃபி ஷாப்பிலும் அவள் தன் தோழியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே கோபம் வந்து அவ்விடம் விட்டு வெளியேறி விட்டான். ஆஃபிஸில் கிஷோர் தன்னிடம் கூறியபடி கேட்டு இருந்தால், இவ்வளவு குழப்பங்களை தவிர்த்து இருக்கலாம் என்று இப்பொழுது தோன்றியது நந்தனுக்கு….

 

அமைதியாக யோசிக்க யோசிக்க அவனுக்கு இப்பொழுது அனைத்தும் புரிந்தது…. அவள் பேசியதை ஒவ்வொன்றாக நினைத்து பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு ஒன்றை தவிர மற்ற அனைத்தும் விளங்கியது. அது, எதற்காக தன்னையும் வர்ஷுவையும் இணைத்து பேச வேண்டும் என்பது தான்…

 

யோசித்தவனுக்கு விடையாக கிடைத்து ‘யாது’ என்னும் அவளது அழைப்பு… இதுவரை விரல் விட்டு எண்ண கூடிய அளவே அவள் தன்னை அவ்வாறு அழைத்து இருப்பதும் அதுவும் அவள் உணர்ச்சி வசப்படும் போது மட்டும் அழைத்துள்ளால் என்பதை புரிந்தவனின் முகம் பிரகாசமாக மாறியது…

 

“அப்படினா கொசுக்குட்டிக்கு என்னை பிடிச்சு இருக்கு… அதான் வர்ஷு கூட கிளோஸா இருக்குறது பிடிக்காமா மாமா பொண்ணையே கட்டிக்க சொன்னாளா….? அடியே கொசுக்குட்டி… லூசு டி நீ…” வாய்விட்டு சொல்லி சிரித்தவன் அவளை இப்பொழுதே காண வேண்டும் அவளை இறுக அணைக்க வேண்டும் என்று அவன் கைகள் துடிக்க,

 

அறை முழுவதும் தன் கண்களை அலைய  விட, அப்பொழுது தான் அவள் அழுதுகொண்டே ஓடியது நினைவுக்கு வந்தது. தன் நெற்றியில் அறைந்து கொண்டவன் வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியே வர எங்கு சென்று இருப்பாள் என்று தெரியாமல் ஒரு நிமிடம் யோசித்தான்.

 

நிச்சயம் தனிமை வேண்டும் என்று எண்ணி தான் எங்காவது சென்றிருப்பாள். அப்படி என்றால் எங்கு என்று முதலில் யோசித்தவன் கிட்சனாக இருக்குமோ என்று நினைத்து அங்கு போய் பார்க்க அங்கு இல்லாமல் போக. அடுத்து பூஜை அறையில் தேடி பார்க்க அங்கும் அவளை காணவில்லை. வெளியே சென்று இருப்பாளோ என்று வாயிலை நோக்கி ஓடியவன், கதவு உள் பக்கமாக பூட்டி இருப்பதை பார்த்து, ‘ஏய் எங்கடி போன… என்னை டென்ஷன் பண்ணுறதையே தலையாய கடமையா வச்சுகிட்டு சுத்துவா போல… ஒருவேலை சூசைட்(suicide) பண்ணிக்க ஓடுனாளோ…” மனம் அவளை காணாமல் எண்ணங்கள் தறிக்கெட்டு ஓட, சில நொடிகளிலேயே உடல் முழுவதும் வேர்த்து வழிந்தது நந்தனுக்கு.

 

பின், “அவ எல்லாம் லேசுல அப்படி பண்ணிக்க மாட்டா மத்தவங்களை தான் சாகடிப்பா…  அடியேய் கொசுக்குட்டி எங்கடி இருக்க…” மெல்லிய குரலில் வாய்விட்டு புலம்பியவன் ஒரு கையால் தன் தலையை கோதி யோசித்து கொண்டு இருக்க,

 

வெளியே இடி இடிக்கும் சத்தம் கேட்க, சட்டென நினைவு வந்தவனாக வேகமாக படிகளில் ஏறியவன் மாடியை நோக்கி ஓடினான்… அவன் நினைத்தது போலவே மஹா மாடியில் தான் இருந்ததாள்.

மாடியில் இருந்த நிழல் குடையின் கீழ் வித்யாவின் மடியில் தலை வைத்து படுத்து இருக்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிய, வித்யா மஹாவின் தலையை வருடியபடி தரையில் அமர்ந்து இருந்தார்.

 

தன் மனையாளை கண்டதும் நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் அப்பொழுது தான் தன் சித்தியை கவனித்தான்.

 

‘ஐயோ  சித்தி…. இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறாங்க? ஒரு வேலை இவ நியாயம் கேட்க கூட்டிட்டு வந்து இருப்பாளோ? எல்லாத்தையும் சொல்லி இருப்பாளா? சித்திக்கு இது எல்லாம் தெரிஞ்சா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்களே… ‘மனதில் ஒரு பக்கம் அவள் அவரிடம் சொல்லி இருப்பாளோ என்று யோசித்துக் கொண்டு இருந்தவன்,

 

மற்றொரு பக்கம் காதல் கொண்ட இதயம் தன் மனைவிக்காக பரிந்து பேசியது, ‘சே..சே… அப்படி எல்லாம் சொல்ல மாட்டா…’ என்றும் யோசிக்க,

 

‘இங்கையே நிக்குறது வேஸ்ட்… போய் பேசி பார்க்கலாம் அப்பதான் தெரியும்…’ மனதில் தோன்ற, அவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன்,

 

சித்தி பேசுவதை அறிந்து மீண்டும் தான் நின்று இருந்த தூணின் பின் நின்று கொண்டு அவர்கள் பேசுவதை கேட்க தொடங்கினான்.

 

“என்ன பாப்பா இது … இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே அழுந்துட்டு இருக்க போற…? பாரு மழை வேற பயங்கரமா பெய்யுது… இதுல நீ வேற அழுந்தா உடம்புக்கு முடியாம போயிர போகுது….” சமாதானம் செய்யும் பொருட்டு அவளிடம் பேச எதுவும் பயன் அளிக்கவில்லை…

 

“சரி எதுக்கு அழுறனாச்சும் சொல்லு  பாப்பா… பிரச்சினை என்னனு தெரிஞ்சாலாவது அதுக்கான தீர்வைப் பத்தி யோசிக்கலாம் இல்ல… அழுதுட்டே இருந்தா எல்லாம் சரி ஆயிருமா…“அவள் தலையை மென்மையாக கோதியப்படி கேட்க, அவளது அழுகை அதிகம் ஆனதே தவிர வாய் திறந்து எதுவும் கூறவில்லை.

மஹா எதுவும் தன் சித்தியிடம் கூறவில்லை என்று தெரிந்ததும், அவள் மீது காதலும் மதிப்பும் கூடியது நந்தனின் மனதில்… அவள் அழுவதை பார்த்து உனக்கு நான் இருக்கேன் என்று கூறி அவளை அணைத்து, கண்ணீரை தொடைக்க வேண்டும் என்று அவன் கைகள் பரபரத்தன. தான் இருக்கும் நிலை உணர்ந்து அவர்கள் புறம் மீண்டும் தன் கவனத்தைச் செலுத்தினான்…

 

எவ்வளவு கேட்டும் பதில் அளிக்காமல் அழுது கொண்டு இருப்பவளை என்ன செய்வது, அழுகைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தவருக்கு முதலில் தோன்றியது அவரும், மஹாவும் கண்ட காட்சி. அதை நினைத்து அழுகிறாளா அல்லது அவனிடம் இதை பற்றி பேசி சண்டையில் முடிந்ததா என்று சந்தேகம் எழுந்தது வித்யாவிற்கு.

 

காரணம், நந்தனும் வந்து அரைமணிநேரம் தான் இருக்கும் இவள் மாடிக்கு வந்து 15 நிமிடங்களுக்கு மேல் இருக்கும். அதற்குள் நந்தன் உறங்கி இருக்க வாய்ப்பில்லை என்று கணக்கிட்டவர். மஹா இவ்வளவு நேரம் காணாததை உணர்ந்து ஏன் அவன் தேடி வரவில்லை? அப்படி என்றால் இருவரும் சண்டையிட்டு உள்ளனர் என்று யூகித்தவர்… மஹாவிடம்,

 

“பாப்பா… நந்தன் கிட்ட வர்ஷு பத்தி பேசுனியா…?” சண்டையிட்டீர்களா என்று கேட்காமல் பேசினீர்களா என்று கேட்க,

 

அவரது கேள்வியில் அவள் சட்டென்று எழுந்து அமர்ந்து அவரை பதற்றமாக பார்க்க, அதிர்ச்சியாக நந்தன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

‘ஐயோ… அத்தை பார்துட்டாங்களா…?  நாங்க சண்டை போட்டு இருப்போம்ன்னு தெரிஞ்சு இருக்குமா…. இப்படியா அழுது காட்டி குடுப்ப… அறிவே இல்ல மஹா உனக்கு… ‘மனதில் தன்னை தானே திட்டிக் கொள்ள, வெளியே இன்னும் அதிர்ந்த முகத்தோடு அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

‘அப்ப சித்தியும் பார்த்து இருக்காங்க போல நாங்க வரும் போது… அவங்களும் தப்பா எடுத்துக்கிட்டு இருப்பாங்களா…’மனதில் யோசித்துக் கொண்டு இருக்க வித்யாவின் குரல் அவனை கலைக்க மீண்டும் அவர்கள் புறம் கவனத்தை திருப்பினான்.

“நீ இப்படி பார்க்குறத பார்த்தா அப்படி தான் போல…” என்று அவளை கூர்ந்து பார்த்து கேட்க, அதில் தன் தலையை கவிழ்த்து கொண்டவள் மெல்லிய குரலில்,

 

“அப்படி எல்லாம் இல்ல அத்தை… சும்மா தான்…. வீட்டு நியாயம் வந்துச்சு அதான் அழுந்துட்டேன்…” என்று சமாளித்தவளை நந்தன் பெருமையுடன் பார்க்க, வித்யாவோ மெச்சுதலாக பார்த்தார்.

 

“சரி பாப்பா… அழுதது போதும்… இப்ப போய் தூங்கு… நேரமாச்சு… “என்று அவர் கூறி முடிக்கும் முன்,

 

“நான் இங்கேயே  தூங்கிக்குறேன்… ரூம்க்கு போக மாட்டேன்…“குழந்தை போல் கையை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக்கொண்டு முகத்தை திருப்பியவளை பார்த்து வித்யாவிற்கு சிரிப்பு வர, சிரித்தும் விட்டார்.

 

நந்தன் அருகில் இருந்த தூணில் தன் தலையை முட்டிக் கொண்டான், “சரியான அரைலூசு… “.

 

வித்யா சிரிப்பதை பார்த்து அவர் புறம் திரும்பி, “இப்ப எதுக்கு சிரிக்குறீங்க… என் நிலமையை பார்த்தா உங்களுக்கு சிரிப்பு வருதா அத்தை….” கோபத்தில் கேட்க,

 

“ஒன்னும் இல்ல பாப்பா…”சிரிப்பை நிறுத்தி விட்டு வாஞ்சையாக அவள் தலையை வருடியவர், “மஹா…” என்று அழைக்க,

 

இதுவரை அவர்  நிதானமாக பேச வேண்டிய நேரங்களில் மட்டுமே தன்னை பெயர் சொல்லி அழைப்பதை உணர்ந்தே இருந்தாள்…

 

“சொல்லுங்க அத்தை… ” அவர் முகம் பார்த்து கேட்க,

 

அழுது வீங்கி, சிவப்பேரிய கண்களுடன் கலை இழந்த முகத்துடன் இருப்பவளை கண்டு மனம் கனக்க, “உனக்கும் உன் ஹஸ்பண்ட்க்கும் நடுவில் நடந்ததை வெளிய இருக்குறவங்களுக்கு தெரிய கூடாதுன்னு நினைக்குற அது நல்ல விஷயம்தான்…” அவர் பேசி முடிக்கும் முன் ஏதோ தவறு செய்த குழந்தையைப் போல் தலை குனிந்துக் கொண்டாள்.

 

அவளது முகத்தை நிமிர்த்தி தன்னை காண செய்து, “இதுல தலை குனிய ஒன்னுமே இல்ல மஹா… சில விஷயங்கள் நமக்கு நம்பிக்கையானவங்க கிட்ட பகிர்ந்துகிட்டா மனசுல இருக்க பாரமும் குறையும், பிரச்சினைக்கான தீர்வும் கிடைக்க வாய்ப்பு இருக்கு….” அவள் யோசிப்பதை கண்டவர் சிறு புன்னகையுடன் மேலும் தொடர்ந்தார்,

 

“உன்னை கட்டாய படுத்தலை மஹா… நீங்க இப்ப தான்   வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சு இருக்கீங்க… அதுல தவறுகள் நடக்கலாம்… சரியான வழி காட்டுதல் இருந்தா அந்த தவறுகளை சரி செய்து கொள்ள ஒரு சந்தர்ப்பமா அமையும்… ” என்றவரை பார்த்து சினேகமாக புன்னகைத்தவள், மீண்டும் அவர் மடியில் தலைசாய்ந்து கொள்ள,

 

அவர்களின்  முதல் சந்திப்பு, இருவரும் போட்டுக் கொண்ட கண்டிஷன்ஸ், வரவேற்பன்று அவன் அறையில் நடந்த விவாதம், தான் சாப்பிடாமல் இருந்த ஒரு வாரம், ஊருக்கு வந்த பின் அவன் செய்த அலப்பறைகள் என அனைத்தும் கூறியவள் பின் தயங்கி தயங்கி அவன் வர்ஷுவுடன் நெருங்கி பழகுவது என்று அனைத்தையும் கூறி முடித்து அமைதி காத்தாள்…

 

அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்தவருக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. மனம் நிறைய காதலும்,அன்பும், பாசமும் வைத்து இருப்பவர்கள் அதை வெளி காட்டாமல் அவர்களே அறியாமல் ஈகோவிற்கு முக்கியதுவம் அளித்து, வாழ்க்கையின் நிம்மதியை அழித்து கொள்கிறார்கள் என்று.

 

அவர் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தவள் அவர் முகத்தை பார்த்து,”ஆனா அத்தை அந்த கண்டிஷன்ஸை ஏன் போட்டேன்னு யோசிச்சா அதுக்கு காரணம் தேடுனாலும் அதை ஒத்துக்க முடியலை… அவருக்கு என் மேல பொறுப்பே இல்ல… ஒரு பொண்ணு கல்யாணம் ஆனா என்ன எதிர் பார்ப்பா..? பாதுகாப்பு… எனக்கு அவங்க அதை தரலை… அப்புறம் அக்கறை… இதுவரை என்னை பத்தி கவலை பட்டதே இல்லை… அப்புறம் நம்பிக்கை… அதுவும் இல்ல கண்ணனோட என்னை… எப்படி அப்படி நினைக்கலாம்….அப்புறம் இங்க வந்த பின்னாடி எல்லார் முன்னாடியும் என்னை கேலி பொருளா நிக்க வச்சுடாங்க…. நல்லா ஹஸ்பண்ட்னா அந்த இடத்துல எனக்காக பேசி இருக்கணும்ல….ஆனா அவங்க அப்படி பண்ணலையே அத்தை…….. .” என்றவள் பின் தலை குனிந்து,

 

“எனக்கு யாதுவை பிடிக்கும் அத்தை ஆனா… அவங்களுக்கு தான் என்னை பிடிக்கலை அதுவும் இங்க வந்த பின்னாடி சுத்தமா பிடிக்கலை போல. யாதுவோட மாமா பொண்ணு கூட தான் சுத்துறாங்க… ” மெல்லிய குரலில் குற்றப்பத்திரிகை வாசித்தவளை பார்த்து சிரிப்பு வர,

 

“அப்படியா….?”என்று கேட்க, உதட்டை பிதுக்கி ‘ஆம்’ என்று தலையை ஆட்டி வைத்தாள்.

 

அதை பார்த்து நன்றாக சிரிக்க, நந்தன் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது பாவனையில் தன்னை அவளிடம் தொலைத்து, “கொசுக்குட்டி… உன்னை மட்டும் தான் டி என் மனசு விரும்புது… தப்பு பண்ணிட்டேன்டி சாரிடி… நீ சோகமாக பேசும் போது கூட கொல்லுறியேடி…”மெதுவாக வாய்விட்டு கூறியவன் தன் நெஞ்சை லேசாக நீவி விட்டுக் கொண்டான்.

 

வித்யா, “அவன் உன் கிட்ட அப்படி சொன்னானா?” சிரித்த படியே கேட்க,

 

அவரை பாவமாக பார்த்து  இல்லை என்பது போல் இடமும் வலமுமாக தலையை ஆட்டியவள், “ஆனா அவங்க பண்ணுறது எல்லாம் அப்படி தானே இருக்கு…” என்றவளை பார்த்து பெருமூச்சு விட்ட வித்யா அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து அவளை கூர்மையாக பார்த்தபடி,

 

“மஹா ஏன் சிலருக்கு கல்யாண வாழ்க்கை தோல்வியில் முடியுதுன்னு தெரியுமா…?” என்று கேள்வி கேட்டவரை யோசனையாக பார்க்க. அவரே தொடர்ந்தார்,

 

“கணவன் மனைவி இரண்டு பேரும் மனசு விட்டு பேசாம இருக்குறதுனால தான் முதல் பிரச்சினையே ஆரம்பிக்குது… அப்புறம் ஈகோ பிரச்சினை, விட்டு குடுத்து போகதது …இதை எல்லாம் எதிர்த்து நின்னுட்டா வாழ்க்கை பிரச்சினைல முடியாது… ” என்றவரை யோசனையாக பார்க்க,

 

 

“நீ சொன்ன இத்தனை விஷயத்தில் ஒரு விஷயம் எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சுது… அது உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற ஸ்வீட் லவ்…” அவளது தாடையை பிடித்து ஆட்டிச் செல்லம் கொஞ்சி சொல்ல,

 

மஹாவிற்கு வெட்கம் வர தலையை குனிந்துக் கொண்டாள். அதை பார்த்து,

 

“பாருடா… வெட்கத்தை…” என்று மேலும் கிண்டல் அடிக்க,

 

“போங்க அத்தை…” என்று சிணுங்கிக் கொண்டே சொல்ல,

 

அவளது சிணுங்களில் ஒருவனுக்கு இதயம் எக்கு தப்பாக துடித்துக் கொண்டு இருந்தது…

 

கிண்டலை கைவிட்டவர் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, “நீ புத்திசாலி பொண்ணுன்னு எனக்கு தெரியும்… பார்த்து நடந்துப்பேன்னு நினைக்குறேன்… தப்பு யாரு பண்ணதுன்னு யோசிக்காதீங்க… நீ மட்டுமே தப்பு பண்ணல அவனும் தப்பு பண்ணி இருக்கான் தான்… நீ எடுக்குற முடிவால இரண்டு பேருக்கும் நல்லதுனா அதை பண்ணுறதுல தப்பு இல்லதானே…” என்று கேட்டவரை பார்த்து புன்னகைத்து,

 

“நிச்சயம் தப்பு இல்ல அத்தை…” தெளிவான முகத்துடன் கூறியவள் அவரை கட்டிக் கொண்டு “தேங்க்ஸ் அத்தை…” என்றவளை அவரும் அணைத்துக் கொண்டார்.