Advertisement

UD:16 Part 1

அவளது வார்த்தையில் தான் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்து மிரண்டு போனான். அவளை சமாளிக்கும் பொருட்டு அதை சொன்னானே தவிர அது அவன் மனதில் தோன்றியவை அல்ல.ஆனால் அதே வார்த்தை அவள் வாயால் கூறியதும் அவள் அமைதிக்கு காரணத்தை புரிந்து கொண்டான் .

 

அவள் மேல் முதலில் கோபம் கொண்டவன் தான், இப்பொழுதும் கோபம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் அதை விட அவள் மேல் நேசமும், மொட்டிட்ட காதலும் அதிகமாக இருக்க.அன்று அவள் பேசியது தவறு என்றும், அதை உணர்த்த வேண்டும் என்றே எண்ணினான். முதலில் கோபம் கொண்டு தண்டனையின் மூலம் பாடம் கற்பிக்க எண்ணியவன், நெஞ்சில் பூத்த காதல் மொட்டால் அன்பு கொண்டு பாடம் கற்பிக்க எண்ணினான்.

 

எந்த சூழ்நிலையிலும் அவளை வருத்த எண்ணவில்லை. இப்பொழுது அவன் பேசிய வார்த்தைகள் அவளை எவ்வளவு வதைத்து இருக்கும் என்று புரிந்துகொண்டவன், அதிர்ந்தது என்னவோ ஓர் நொடி தான் பின் சுதாரித்து அவளுக்கு புரியவைக்கும் நோக்கோடு பேச வாய் திறக்கும் முன் அவளுக்கு அடுத்த புடவையை வைத்துக்காட்ட கடை ஊழியர் ஆன பெண் ஒருத்தி வர. அவளை கை நீட்டி தடுத்து, சிறிது நேரம் கழித்து வருமாறு பணிந்துவிட்டு அனைவரையும் ஓர் பார்வை பார்க்க. இவர்களை சுற்றி இருந்த அனைத்து ஊழியர்களும் சுற்று தள்ளி போய் நின்றுக் கொண்டனர்.

 

அவனது செயலை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி நிதானமாக வந்தவன், மெல்லிய குரலில், “நீ நினைக்குற மாதிரி இல்ல ஸ்ரீ. நான் ஸ்டேட்டஸ் பார்க்குற ஆளு இல்ல…. அப்போதைக்கு உன்னை சமாளிக்கணும்னு சொன்னேனே தவிர மனசுல இருந்து வரல…. நான் பொறுமையா பேசி இருந்தா அதை நீ காதுல கூட வாங்கி இருக்க மாட்ட… அதான் அப்படி சொன்னேன் அதும் மனசறிஞ்சு சொல்லல மா…. ” என்று மென்மையாக கூறியும் அவள் மௌனமாக இருக்க….

 

இவளிடம் தன்மையாக பேசினால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்தவன், அவளை சீண்ட ஆரம்பித்தான்.

 

“இப்படி பேசாட்டி நீ உன் டபரா வாய்யை திறந்து அந்த டிக்ஸ்னரி சைஸ் புடவை தான் வேண்ணும்னு மல்லுக்கு நின்னு இருப்ப…. ” என்றவனை முறைத்து பார்த்தவள், “என்னடா திமிரா… யார பார்த்து டபரா வாய்ன்னு சொன்ன கொன்னுருவேன் டா …” என்றவள் போருக்கு தயாராக..,

 

பழைய ஸ்ரீ   மீண்டதில் நிம்மதி அடைந்தவன், “கிழிப்ப…. சும்மா கத்திட்டு இருக்காம ஒழுங்கா நில்லு…” அவளிடம் பேசிய வாரே அந்த பெண்ணை பார்க்க, அவனது பார்வையை புரிந்து அடுத்த புடவையை எடுத்துக் கொண்டு மஹாவின் அருகில் வந்தார்.

 

மற்றவர்களும் தங்கள் இடத்திற்கு வந்து பணியை தொடர்ந்தனர். பின் நந்தனும், மஹாவும் இணைந்து(சண்டையிட்டு) புடவையை தேர்ந்து எடுத்து முடிக்கவும், மற்றவர்கள் வரவும் சரியாக இருந்தது.

 

பின் மாப்பிள்ளைக்கு எடுக்க வேண்டியதை எடுக்க சென்றனர்…. முதலில் பட்டு வேட்டி, சட்டை எடுத்த பின்னர், வரவேற்புக்கு தகுந்த உடையை தேர்ந்தெடுக்கும் சமயம் ஒவ்வொரு உடையை அணியும் போதும் கண்களால்  அவளிடம் கேட்டவனுக்கு, முதலில் வேண்டுமென்றே நன்றாக இல்லை என்றும் வாந்தி வருவது போலும் சைகை செய்து கொண்டு இருந்தவள், அவன் ஒவ்வொரு முறையும் ஆடையை அணியும் தோரணையிலும் அதை கண்ணாடியில் தன்னை பார்த்தவாறே அவளை கண்களால் கேட்டவனையும் கண்டு கொஞ்சம் கொஞ்சமாக உருகி போனாள் என்பதே உண்மை.

 

அப்பொழுது அவளுக்கு ஃபோனில் ஒரு அழைப்பு வர சற்று தள்ளி நின்று பேச சென்றாள்.

 

தொலைவில் இருந்த ஆடை ஒன்று அவன் கவனைத்தை கவர , அதையே எடுப்பதென முடிவானது. அப்பொழுது திரும்பி மஹாவை பார்க்க  அவள் அப்பொழுது தான் ஃபோனில் பேசி விட்டு வந்துகொண்டு இருக்கவும்…. அனைவரும் கிளம்பவும் சரியாக இருந்தது. என்னவென்று அவள் கேட்டதற்கு நந்தனுக்கு ஆடை எடுத்தாகி விட்டதாக கூற,

 

‘நான் ஓகே சொல்லவே இல்லையே… ‘ஒருவகை ஏமார்ற்றம்  மனதில் குடிகொள்ள, உதட்டை பிதுக்கி சிணுங்கிக் கொண்டே வந்தாள் வழிமுழுக்க.

 

‘சும்மா பேச்சுக்கு முதலில் கேட்டு இருப்பான்…. நான் எதுவுமே நல்லா இல்லைனு சொன்னதும் என்னை கேட்காமலே முடிவு பண்ணிடான் போல காண்டாமிருகம்….. இரு இரு அந்த டிரெஸ்ல ஏதாச்சும் ஆகணும்னு முட்டை சுத்தி வைக்குறேன்….’ பலமான அர்ச்சனை நடந்தது நந்தனுக்கு.

 

பின் முகூர்த்த உடைகள் எடுத்து முடிந்ததும். ஒரு நல்ல ஹோட்டலில்  உணவை முடித்து விட்டு இரு குடும்பமும் அந்த அழகிய திருமண நிகழ்விற்காக காத்து இருக்க தொடங்கியது.

 

அதில் ஒரு இதயம் தவிப்பிலும், ஒரு இதயம் எதிர்ப்பார்ப்பிலும் பயனித்தது உண்மை நிலவரம் அறியாமல். அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கழிந்தது. இதில் வேலையின் பழுவால் நந்தன் மஹாவை தொடர்பு கொள்ளவில்லை…. மஹாவும் தன் எண்ண போக்கில் இருந்ததால் அவளும் தொடர்பு கொள்ளவில்லை. வாரங்கள் நாட்களாகி, நாட்களின் முடிவில் திருமண நாளும் வந்தது…..

 

‘இப்பவே நம்ம கண்ணுல இப்படி தண்ணி வருதே இனி வாழ்நாள் முழுக்க இப்படி தான் இருக்குமோ…? இது தான் பட்ச்சின்னு சொல்லுவாங்களா….? ‘ மனதில் எண்ணங்கள் ஓட, வாயும் கையும் அதான் போக்கில் அதன் வேலையை செவ்வென செய்து கொண்டு இருந்தது.

 

“அய்யரே… பாருங்கோ மாப்பிள்ளைக்கு கண்ணு வேர்க்குறது…. மேகப் கலையுதோனோ….. கொஞ்சம் புகையை கம்மி பண்றேளா… ” கிஷோர் தன் நண்பனை கேலி பேச, அவனை முறைக்க முயன்று தோற்றான் நந்தன்.

 

“அடேய் சும்மா இருடா… நான் எங்கடா மேகப் போட்டேன்….?” போலியாக சலித்துக் கொள்ள,

 

“அப்ப போடலையா? கொஞ்சம் அழகா தெரிஞ்சியா…அதான் மேகப் போட்டு இருப்பியோன்னு நினைச்சேன்…. ஈ…ஈ…” கேலி பேசி இளித்து  வைத்தான் கிஷோர்.

 

அப்பொழுது பொண்ணை அழைத்து வர அய்யர் சொல்ல, தன் நண்பனை மறந்து தன் கொசுக்குட்டிக்காக அவள் வரும் வழியினை நோக்கி விழிகள் பதித்திருந்தான் நந்தன். நண்பனை கேலி செய்து கொண்டு இருந்த கிஷோர்,

 

“அடேய் நான் ஒருத்தன் இங்க உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்….” நண்பனின் முகத்தை தன் புறம் திருப்ப முயற்சிக்க, தோல்வியே கிட்டியது.

 

“டேய்…. எல்லாரும் உன்னை தான் டா பார்க்குறாங்க… கொஞ்சம் பொறு டா சிஸ்டர் வந்துடுவாங்க….” அவன்  சொன்னது  அவன்  காதில்  விழுந்தால்  தானே

 

நந்தனை மேலும் தவிக்க வைக்க விடாமல், அடர் குங்கும நிறத்தில் தங்க ஜரிகை வைத்த பட்டு உடுத்தி, அதற்கு தோதான அணிகலன்கள் அணிந்து, பியூட்டி பார்லரில் இருந்து வந்த பெண்களின் கை வண்ணத்தில் தேவதையை போல் மிளிர்ந்தாள் மஹா.

 

இமைக்க மறந்துப் பார்த்திருந்தான் நந்தன். அனைவரும் அவளின் அழகை கண்டு பிரமித்துப் போயினர். ஏனோ திருமணம் நாள் நெருங்கவும் ஒரு வித பய உணர்வு தோன்ற, மீண்டும் திருமணத்தை நிறுத்திவிடலாமா என்று யோசனை தோன்றவும்….. சந்தியாவும், ரம்யாவும் பேசி அவளை சமாதானம் செய்தனர். மணமேடையை ஏறும் வரை அவளின் மனம் சஞ்சலத்தில்  இருக்க, நந்தனின் பார்வையை உணர்ந்து அனைத்தும் மறந்து, பெண்ணிற்கே உரிய வெட்கம் தோன்றி தலை கவிழ்ந்து மென்னடையிட்டு நடந்து வந்து  அவனின் அருகில் அமர்ந்தாள்.

 

மஹா தன் அருகில் அமரும் வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், கிஷோர்” டேய்….. இப்படியா டா ஓப்பனா சைட் அடிப்ப ? சிஸ்டர் எங்கையும் போக மாட்டாங்க… சோ உன் சைட்(side) வியூ ஆங்கிளை கொஞ்சம் மாத்து….” என்று அவன் காதில் கிசுகிசுக்க.

 

லேசாக சிரித்தபடி தன் பார்வையை திரும்பியவன், “உன்னக்கு பொறாமை டா மச்சான்… கண்ணு வைக்காத டா…. ” நக்கலடிக்க, “டேய்…” கிஷோர் பல்லை கடிக்கும் சத்தம் கேட்டு நமட்டு சிரிப்பை உதிர்த்தான் நந்தன்.

 

தாலி கட்டும் நேரமாகவும், அய்யர் தாலியை எடுத்து நந்தனிடம் தந்து மஹாவின் கழுத்தில் கட்ட சொல்ல, மஹாவின் புறம் திரும்பியவன், அவள் தலை கவிழ்ந்து அமைதியின் சுருபவமாக இருப்பதை கண்டு மனம் கேளாமால், “ஏய்…. கொசுக்குட்டி… கண்டிஷன்ஸ் நியாபகம் இருக்குல்ல…? இல்ல ஒருமுறை நியாபக படுத்தனுமா…?” என்று குறும்பு கொப்பளிக்க கேட்டவனை நிமிர்ந்து ஏறிக்கும் பார்வை பார்த்தவள்,

 

“டேய் காண்டாமிருகம்… ஓவரா பண்ற… பிச்சிருவேன் டா ராஸ்கல்…..” சிரித்தவாறே பல்லை  கடித்துக் கொண்டு மெல்லிய குரலில் கூறியவளை கண்டு,

 

‘அப்பாடி இப்ப தான் கொசுக்குட்டி மாதிரி இருக்கா….’ என்று மனதில் நினைத்தவன். சிரித்துக் கொண்டே அவள் அடுத்து திட்டும் முன் அவளது சங்கு கழுத்தில், மங்கல நாணலை கொண்டு மூன்று முடிச்சிட்டு மஹாவை தன் மனைவி என்று ஊர் அரிய ஏற்றுக் கொள்ள, நந்தனை தன் கணவனாக ஏற்று கொண்டாள் மஹா.  

 

பின் திருமண சடங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறியது. ஒவ்வொரு விளையாட்டின் போதும் இருவருக்கும் நடுவில் போட்டி அனல் பறந்தது….

 

திருமணத்திற்கு வந்தவர்கள், தங்கள் பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்து விட்டு போக, கிஷோர், சந்தியா, ரம்யா மூவரும் திருமண ஜோடியை கேலி செய்து ஓட்டி தள்ளினர்….. சந்தோஷமும், விளையாட்டு, சிறு சிறு வெட்கமும், சீண்டலுமாய் அழகாய் நிறைவடைந்தது அந்த திருமண விழா.

 

கடைசியாக திருமண ஜோடியும், நண்பர்களும், சிறியவர்களும் உணவுன்ன பந்தியில் அமர்ந்தனர். அங்கும் நண்பர்கள் தங்கள் வேலையை காட்டி, அவர்களை ஒருவருக்கொருவர் ஊட்டி விட சொல்ல, முதலில் நந்தன் ஊட்டி  விட மஹா அவனது கை விரலை நன்கு கடித்து வைக்க, “ஆஆஆஆ….” என்று அலறிவிட்டான். அதில் அனைவரும் அவனை கண்டு சிரித்து கேலி பேச, அசடு வழிந்தப் படி மெல்லிய குரலில், “எதுக்கு டி இப்படி கடிச்சு? ” கோபத்தை அடக்கி கேட்டவனுக்கு,

 

“ம்ம்ம்…. காலைல ஓப்பன் சைட் அடிச்சல அதுக்கு தான் பனிஸ் பண்ணினேன்….” கூலாக கூறி கொண்டே தன் உணவில் கவனமாக இருந்தவளை அதிர்ந்து பார்த்தவன், “என்னது….? பாவி… அது என்னோட உரிமைடி…” என்று உரிமை குரல் எழுப்ப,

 

“மண்ணாங்கட்டி…. இனி இப்படி பார்த்த… கண்ணுல மிளாக பொடி போட்டுருவேன்… ஜாக்கிரதை…” என்று சிரித்துக் கொண்டே மிரட்டியவளை பார்த்து அரண்டவன் அவளை விட்டு ஒரு அடி தள்ளி அமர்ந்தான்.

 

அதற்கிடையில் மஹாவை நந்தனுக்கு ஊட்டி விட அனைவரும் கூற, ‘வாடி வா…. சிக்குனியா… ‘ மனதில் ஆவளாக காத்து இருந்தவன் வெளியே சிரித்த சாந்த முகத்துடன் இருக்க.

 

மஹா ஜாங்கிரியை சிறு துண்டாக பிட்டு, அவன் வாய்யருகே கொண்டு சென்றவள் அதை ஊட்டி  விடாமல், குளத்தில் கல் எறிந்து போல் அவன் வாயில் ஜாங்கிரியை போட அனைவரும்’ கொள்’ என சிரித்து விட, ஏமாற்றத்தின் உச்சியில் இருந்தான் நந்தன்.

 

மஹாவின் கைவிரலை ஒரு பதம் பார்க்க வேண்டும் என்று இருந்தவனுக்கு அவளது இச்செயல் ஏமாற்றத்தை அளிக்க, “ஒரு நாள் மாட்டுவ டி…. அப்ப இருக்கு டி உனக்கு கச்சேரி… ” என்று சிரித்துக் கொண்டே கூற, “அப்ப பார்கலாம் Mr.GM….” என்று நக்கலாக கூறி விட்டு உண்ண தொடங்கினாள்.

 

அனைத்து கலாட்டாக்கலும் முடிந்து, மதியம் 2 மணி போல் வீட்டிற்கு கிளம்பனர் அனைவரும்…. மஹா விட்டில் ஆர்த்தி சுற்றி நந்தனிடம் வம்பிலுத்து ஒரு தொகையை வாங்கிய பின்னரே இருவரையும் உள்ளே அனுமதித்தாள் அனிதா.

 

மஹாவை அனியுடன் படுத்து ஓய்வெடுக்க சொல்ல, நந்தன் ஹரியுடன் ஓய்வெடுக்க உத்தரவு பிறப்பித்தது. இனிவர போகும் இரவை எண்ணி இருவரும் ஒருவகையான உணர்வுடன் ஓய்வெடுக்க சென்றனர்.

 

இரவு உணவு முடிந்ததும் நந்தன் முதலில் மஹாவின் அறைக்குச் செல்ல, மஹாவிற்கு ஓராயிரம் அறிவுரைகளை வழங்கினர் மூத்த பெண்மணிகள்,  அதை  கேட்டு   வயிற்றுக்குள்  ஏதோ  பிசைவதை  உணர்ந்தாள் மஹா. பின் அவளை அழைத்துக் கொண்டு அவள் அறைக்கு செல்ல, கால்கள் பின்னி கொண்டது மஹாவிற்கு.

 

அவளின் அறை கதவின் முன் நின்று உள்ளே போக சொல்ல, வெட்கமாக தலை குனிந்து நின்றவள், அவர்களை முதலில் போக சொல்ல, அவளின் கூச்சத்தை கண்டு வாழ்த்து தெரிவித்து விட்டு அவ்விடம் விட்டு நீங்கினர். அவர்கள் அனைவரும் சென்றதை உறுதி செய்துக் கொண்டவள், திரும்பி அறை காதவை ஏதோ மர்ம அரண்மனை வாசலில் நின்று அதன் கதவை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள் விழி விரித்து.

 

தன் அறை முன் நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தாள் யாராவது இருக்கிறார்களா தன்னை பார்க்கிறார்களா என்று…

 

மஹாவின் இதய துடிப்பு அவள் செவிக்கு எட்ட, மயக்கம் வருவது போல் இருந்தது அவளுக்கு. உள்ளே செல்ல தயங்கி 10 நிமிடங்கள் வெளியே நின்று என் செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்க, ‘சை….. என் ரூமுக்குள்ள போக எவ்வளவு யோசிக்க வேண்டியாத போச்சு…. எல்லாத்துக்கும் அந்த காண்டாமிருகம் தான் காரணம்…. எருமை மாடு….’ மனதில் திட்டிக் கொண்டே இருந்தவள், இனி இப்படியே நின்று இருந்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து,

 

மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி உதட்டை கடித்த படி அறையை நோட்டம் விட்டாள்.

 

நந்தன், சிறிது நேரம் பால்கனியில் நின்று இருந்தவன் பின் அறைக்குள் நுழைந்து படுக்கையை பார்க்க,  நிச்சயதார்த்தம் அன்று நிகழ்ந்ததை எண்ணி சிரித்தவன். அன்று போல் இன்றும் கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டு இருக்கும் போது அலங்கார மேசையின் மீது இருந்த நாவலை  எடுத்து புரட்டி பார்த்து கொண்டு இருக்க…. கதவு திறப்பதை கண்ணாடி வழியாக கண்டவன், மஹா தன் தலையை நீட்டி எட்டி பார்ப்பதை கண்டு லேசாக சிரித்து கொண்டே மீண்டும் புத்தகத்தில் கவனம் இருப்பது போல் பாவனை செய்ய தொடங்கினான்.

 

மனதிலோ அன்று ஆஃபிஸ்ஸில் அவள் லிஃப்டில் இருந்து எட்டி பார்த்ததை தன் கணினியில் கண்டது நினைவு வர, ’அடியேய் கொசுக்குட்டி….. உனக்கு சாதாரணமாக வரவே தெரியாத….?’ மனதில் எண்ணி சிரித்துக் கொண்டு இருந்த வேளை.

 

தன் அறையை நோட்டம் விட்டவள் நந்தன் கண்ணாடி முன்பு நின்று இருப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டு, ‘நல்லாதா போச்சு காண்டாமிருகம் பெட்டில் உட்கார்ந்து இருக்கல….’ எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்தவள் சத்தம் இடாமல் பூனை போல் நடந்து படுக்கையின் அருகில் வந்து, தன் கையில் இருந்த பால் சொம்பை சத்தம் வராமல் மெதுவாக மிகவும் மெதுவாக கவனமாக வைத்தவள். ஏதோ இமாலய வெற்றி பெற்றது போல் சந்தோஷம் பொங்க வாய் வழியாக மூச்சை விட்டாள்.

Advertisement