Advertisement

UD:16
நடுகூடத்தில் கனியின் தங்கைக்கு நலங்கு வைத்து சீர் வைத்து கொண்டிருக்க, வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியில் பந்திகள் படுஜோராக நடந்துக் கொண்டிருக்க, சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர் மும்முரமாக வேலையில் கவனமாக இருக்க, சிலர் உலக கதை வீட்டு கதை தெரு கதையில் இருக்க, இளவட்டங்கள் சிலது கண்களில் தூது விட்டுக்கொண்டும் இருந்த அந்த வீட்டில் ஒரு ஓரத்தில், சம்மனமிட்டு வெற்றிலை பாக்கை இடித்துக் கொண்டே தீவிரமான முகத்தில் பாவனையோடு என்பது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டியிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தான் விக்கி…
அவனை கண்டதும் கவி, “என்ன இவன், அவனோடு பார்ட்டி கூட எஸ் ஆயிட்டோனோன்னு பார்த்தா பாட்டிக் கூட பாக்கு இடிச்சுட்டு இருக்கான்…” என்று முணுமுணுக்கும் போது இவனை தாண்டி சென்ற கனிமொழி விக்கியை சுட்டெரிக்கும் பார்வையில் பார்த்து சென்றதை கவனிக்க வேண்டிய விக்கி கவனிக்காமல் போக கவியழகன் அதை கவனித்து விட்டான்…
‘ஓஓஓ… அப்ப இந்த நாதாரி வந்ததுல இருந்து பாக்கு தான் இடிச்சுட்டு இருக்கு போல… ஆமா இவனா போய் பேசிட்டு இருக்கானா இல்ல இழுத்து வச்சு பேசிட்டு இருக்கா இந்த பாட்டி…. ம்ம்ம்…’ என்று யோசித்தவன் கனியின் உஷ்ன பார்வையை கண்டு,
‘ஏதோ ஒண்ணு ஆனா இதுக்காக உனக்கு வருங்காலத்துல சேதாரம் அதிகமா இருக்கு ராசா…’ என்று எண்ணி மனதில் சிரித்துக் கொண்டான்…
பின் நேரமாவதை உணர்ந்து, விக்கியின் அருகில் செல்ல, “என்ன வெளங்குச்சா…? இப்பத்தேன் எல்லாங் மாறி போச்சு முன்ன மாதிரியெல்லாம் இப்ப யாரு செய்யுறா… எல்லாம் காலுல பம்பரத்த கட்டிக்கிட்டு சுத்துராக….” என்று ஒரு பெருமூச்சுடன் கூறி முடிக்க, விக்கி
“நல்லா புரிஞ்சுது பாட்டி….” என்று மண்டையை ஆடிக் கொண்டிருக்க அருகில் வந்த கவி
“டேய் மச்சான்… இங்க என்னடா பண்ணுற… உன்னை எங்க எல்லாம் தேடிட்டு இருக்கேன் தெரியுமா…?” என்று வினவும் அவனுக்கு விக்கி பதில் அளிக்கும் முன், கதை பேசிய பாட்டி முந்திக் கொண்டது…
“ஆமா உனக்கு இங்குட்டு என்னவே ஜோலி… உங் அப்பனுக்குத்தேன் இந்த குடும்பம்னா ஆகாதே பொறவு என்னத்துக்குவே வந்த….?” என்று சந்தேகமாக பார்க்கவும்,
“ம்ம்ம்… உனக்கு என்ன கிழவி வந்துச்சு…? நான் தங்கச்சிக்கு சீர் செய்ய வந்தேன்…”
“ஆஆ…. என்னவே சொன்ன தங்கச்சியா…? என்னவே புதுசு புதுசா உறவு கொண்டாடிட்டு வந்திருக்கவ… என்ன உங் அப்பன் ஏதாச்சும் திட்டம் போடுதானோ… ” என்று கேட்டபடி தடுமாறி எழுந்து நிற்க முயற்சிக்கவும், அவரை கைபிடித்து தூக்கி நிற்க வைத்த கவி,
“அதுசரி…. உன்னைய இப்ப நான்  ஆச்சினுட்டு கூப்பிட நீ என் சொந்த ஆச்சியா இருக்கணுமா என்ன… எல்லாம் அதுமாதிரி தான்…” என்று கூறி ஒற்றை கண்ணை சிமிட்ட, அந்த பாட்டியோ ‘ஆஆஆ…’ என வாய்பிளந்து அவனை பார்த்திருந்தார்…
அவரை பார்த்து பெரிதாக தன் இதழ் விரித்து சிரித்தவன், விக்கியின் புறம் திரும்பி, “மச்சான் நேரமாச்சு… நான் மில்லுக்கு போறேன்… ஒரு முக்கியமான வேலை இருக்கு… நீ என்கூட வரியா இல்ல வீட்டுக்கு போறியா…?” என்று கேட்டபடி அவனை அழைக்க, விக்கி பாட்டியின் புறம் திரும்பி
“ஓகே பாட்டி… பாய்… எனக்கு ஏதாச்சும் தேவைனா உங்களை வந்து மீட் பண்ணுறேன்… டாடா…” என்று அவர் கண்ணம் கிள்ளி ஒரு முத்தம் வைத்தவன் வேகமாக நண்பனுடன் நகர்ந்துவிட்டான்….
அந்த பாட்டியோ முதலில் கவியின் பதிலில் திகைத்து இருக்க இப்பொழுது விக்கியின் செயலில் அதிர்ந்து பின் லேசாக வெட்கம் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “கோட்டிபயலுக….” என்றவர் அடுத்த வேலையை பார்க்க சென்றார்…
“மாப்ள… எனக்கு டவுன்ல கொஞ்சம் வேலை இருக்கு நீ மில்லு போ நான் கார்ல டவுன்க்கு போய்ட்டு வந்துறேன்…” என்றவனை பார்த்து,
“டவுன்லையா…? என்னடா வேல…?” என்றவனுக்கு பதிலளிக்காமல்,
“என்னடா இந்த பக்கம் போற வழி அந்த பக்கம் டா…” என்ற விக்கியின் தோளில் கை போட்டு,
“டேய்… என்ன மச்சான் ஆச்சு… ஒரு டைப்பா இருக்க… இந்த ஊர்க்கு வந்ததுல இருந்து சாப்பாட்டை வஞ்சனம் இல்லமா கொட்டிக்குற…. இப்ப விஷேச வீட்டுக்கு வந்துட்டு பந்தில உட்கார்ந்து ஒருபிடி பிடிக்காம அப்படி என்ன தீவிரமான யோசனை அப்புறம் அப்படி என்ன வேல டவுன்ல…?” என்றவனுக்கு தலையை கோதி பல்லை காட்டியவன்,
“ஏன் மாப்ள அவ்வளவு அப்பட்டமா சாப்பாட்டு ராமன் மாறியா தெரியுது…?” என்று கேட்கவும்,
“கொஞ்சம் இல்ல ரொம்பவேஏஏஏ….” என்று இழுத்து சொல்லவும் பந்தி நடக்கும் இடத்தில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து அமர்ந்தனர்…
கவி, “சரி சொல்லு அப்படி என்ன யோசனை…?”
“அது ஈவினிங் தெரியவரும் சோ அதுவரை வெய்ட் பண்ணு…” என்று பீடிக்கை போட்டவனை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
“பார்க்கலாம் அப்படி என்னதான் பண்ணுறன்னு…” என்றவன் இழையில் இருந்த பதார்த்தங்களை கண்டு புருவம் சுருக்கினான்… பின் தனக்கு இன்னொரு பக்கம் அமர்ந்திருந்தவரின் இழையை நோட்டமிட்டவனுக்கு கோபம் வர, ஆவேசமாக தலை நிமிரும் போது அவன் முன் தோன்றினாள் பூங்குழலி…
“ஆஆஆ… நம்ம முட்டக்கண்ணி….” என்று கண்ணாடியை கழட்டி விட்டு அவளை பார்த்து வசீகரமாக சிரிக்க அவளோ ஒரு வெறுமையான பார்வையோடு அவனை தாண்டி சென்றாள்…
இங்கு விக்கியோ, தனக்கு முன்னால் அழகு பதுமையாக சேலை உடுத்தி நின்றிருந்த கனிமொழியை கண்டு முகம் பிரகாசமாக, ‘ஆஆஆ….’ என வாய் பிளந்து பார்த்தவனை முடிந்த மட்டும் முறைத்தவள் அவனுக்கு அடுத்து இருந்த கவியின் புறம் நகர, விக்கியின் பார்வையும் அவளையே தொடர்ந்து…
இங்கு வந்ததில் இருந்து அவன் கண்ணில் படாமல் இருந்தவளை இல்லை இல்லை இவன் கருத்தில் கொள்ளாது தன் காரியத்தில் கண்ணாக இருக்க போய் கனியை பற்றி மறந்து போனான்…
இப்பொழுது அவளை பார்க்கவும் ‘வட போச்சே…’ என்னும் எண்ணம் அவனுள்…’சே… முன்னாடியே பார்த்திருந்தா கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண டிரை பண்ணியிருக்கலாம்… இப்படி சொதப்பிட்டியே டா விக்கி…’ என்று உள்ளுக்குள் கண்ணீர் வடித்தவன் வெளியே விழிகளை அவள் பின்னே தொடர விட்டான்…
பின் இருவரும் உணவில் ஒரு பாதி கவனமும் தங்கள் துணையின் மீது பாதி கவனமும் வைத்திருந்தார்கள் காளையர்கள்…
“ஏன் டா… என் மாமனார் குடும்பத்தை பார்த்தா கொஞ்சம் பெருசா தெரியுது ஆனா விஷேசம்கு சாப்பாட்டுல இவ்வளவு கஞ்சமா இருக்காரு…” என்றவாறே உணவை வாயில் அடைத்தான் விக்கி….
“என்னடா சொல்லுற…?”
“இல்ல மாப்ள… இவ்வளவு பெருசா விஷேசத்த வச்சுட்டு சாப்பாட்டுல வெரைட்டி மட்டும் ரொம்ப கம்மியா இருக்கு…” என்று குறைப்பட்டவனை பார்த்து தன் நெற்றியில் அறைந்துக் கொண்டவன்,
“டேய் கொஞ்சம் அக்கம் பக்கமும் பார்த்து சாப்பிடு…” என்றதும் அவசரமாக தன் பக்கத்தில் இருந்த இழையில் நிரம்பி வழியும் பதார்த்தங்களை கண்டு கோபம் கொண்டவன், வேகமாக கண்களை சுழற்றினான் பரிமாற வருபவனிடம் சண்டையிட…
ஆனால் அவன் கண்களில் பட்டது என்னவோ, சற்று தொலைவில் முந்தானையை இடுப்பில் சொருகி, ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒரு கையை டேப்பிலை பிடித்து சாய்ந்து நின்று கொண்டு இவர்களை பார்த்து முறைத்தப்படி நின்றிருந்த பெண்கள் தான்…
அவர்களை பார்த்ததும் அமைதியாக குனிந்து சாப்பிட தொடங்க, “என்னடா பெருசா நிமிர்ந்து உட்கார்ந்த சண்ட போட போற மாதிரி… இப்ப என்னாச்சு இப்படி பம்மிட்டு உட்கார…?” என்று கேட்டபடியே உணவில் கவனமாக இருந்தவன் புறம் லேசாக சாய்ந்த விக்கி,
“மாப்ள… உன் தங்கச்சியும் என் தங்கச்சியும் தான் டா இப்படி நம்ம வர வேண்டிய ஐட்டம்ஸை பிளாக் பண்ணி வச்சு இருக்காங்க… அவங்க நிக்குற தோரணையே கோவை சரளா வடிவேலை அடிக்க வெய்ட் பண்ணுற மாதிரி இருக்கு…” என்று பாவமாக சொல்லவும்…
“அது எனக்கு முன்னமே தெரியும் அதான் அமைதியா போட்டதை சாப்பிடுறேன்…” என்றவனை ‘அடபாவி…’ என்னும் ரேன்ஜில் பார்த்து வைத்தான்…
உலகமே பிரண்டாலும் தங்களுக்கு சூடு சுரணை என்பது எல்லாம் கிடையாது என்னும் வகையில் சாப்பாட்டை ஒருபிடி பிடித்து விட்டது கண்களால் தங்கள் ஜோடியிடமிருந்து விடை பெற்றனர் காளையர்கள்…
“சரி மச்சான்… நீ டவுனுக்கு போய்ட்டு வீட்டுக்கு போயிரு… நான் மில்லுக்கு போயிட்டு தோட்டத்துக்கு போய் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வரேன்…” என்று தன் புல்லட்டில் ஏறி அமர்ந்தவன் தன் கண்ணாடியை மாட்டிக் கொள்ள,
“சரி டா மாப்ள… வேல முடிஞ்சா நானும் மில்லுக்கே வந்துரேன் வீட்டுக்கு போனா சும்மா தான் இருக்கணும்…”
“சரி… உன் இஷ்டம்… ஆனா மில்லுக்கு வரதுக்கு முன்னாடி ஒருமுறை கால்(call) பண்ணிட்டு வா…” என்றவன்,
“சரி மச்சான்….  நான் கிளம்புறேன்… பத்திரம்…” என்று அவனிடம் விடைபெற்று மில்லை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தவனுக்கு உள்ளுக்குள் ஏகப்பட்ட எண்ணங்கள்…
சிறிது நேரத்தில் மில்லிற்கு வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு, வேக நடையுடன் அலுவலக அறையை நோக்கி நடந்தான் தன் கம்பீரமான நடையில்…
அவனது அறையின் முன் அமர்ந்திருந்தவர்கள் அவனது வெள்ளை வேட்டி சட்டை முறுக்கு மீசை, கருப்பு கண்ணாடி, கையில் ஏறிய தங்க காப்பு என்று நிமிர்ந்த நடையில் வருபவனை பார்த்து வாயடைத்து பார்த்திருக்க தங்களையும் அறியாது ஒரு மரியாதை உணர்வு ஊந்த தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர் வணக்கம் வகைக்கும் முனைப்பில்…
ஆனால் அவர்கள் அருகில் வந்ததும் தன் கண்ணாடியை கழட்டியவன், இருகரம் கூப்பி, “வணக்கம்…மன்னிக்கணும்…ஒரு விஷேசத்துக்கு போயிருந்தேன் அங்க இருந்து கிளம்பி  வர கொஞ்சம் தாமதம் ஆயிருச்சு…” என்று பணிவுடன் பேச, அங்கு இருந்த மூவருக்கும் உள்ளுக்குள் கவியழகனின் மரியாதையான அணுகுமுறை பரம திருப்தியை அளித்தது…
அதுமட்டுமின்றி தங்கள் பிரச்சினை தீர்ந்து விடும் என்னும் நம்பிக்கையும் உள்ளுக்குள் சட்டென தோன்றியது அவனை கண்டதும்…
“வணக்கம்ங்க…. பரவாயில்லைங்க தம்பி… இதுல போய் என்ன இருக்கு…” என்றவர்களை,
“சரி… உள்ள வாங்க…” என்று அறையை திறந்து அவர்களை உள்ளே செல்ல சொல்லியவன், அவர்கள் வந்ததும்
“உட்காருங்க…” என்றவன் தானும் தன் இருக்கையில் அமர்ந்து, அவர்களை நோக்கி நிமிர்ந்து பார்த்தவன்
“அன்னைக்கு நீங்க சொன்னதை யோசிச்சு பார்த்தேன்… எனக்கு உங்க நிலமைய நல்லா புரிஞ்சுக்க முடியுது… அதான் திரும்ப நிலத்த உங்களுக்கே குத்தகைக்கு குடுக்கலாம்னு இருக்கேன்…” என்றதும் மூவர் முகத்திலும் அத்தனை சந்தோஷம்…
“ரொம்ப சந்தோஷம் தம்பி… எங்க பொழப்பு அந்த நிலத்த நம்பித்தேன் இருக்கு தம்பி… அதைய விட்டா எங்களுக்கு வேற பொழப்பு இல்லைங்க… உங்க அப்பாரு கிட்ட எம்புட்டோ சொல்லி கெஞ்சி பார்த்தோம் ஆனா மனுஷன் புரிஞ்சுக்கவே மாட்டிங்கிறாரு…” என்று வருத்தப்பட,
“சரி விடுங்க… அதான் நான் முடிவ சொல்லிட்டேனே… இனி அப்பா அதை உங்ககிட்டு வந்து வாங்க நினைக்க மாட்டார்… அதுக்கு நான் உத்திரவாதம் தரேன்… இனி நீங்க நிம்மதியா இருக்கலாம்…” என்றவனுக்கு,
அவர்கள் கரம் கூப்பி, “ரொம்ப நன்றி தம்பி…” என்று முகம் மலர கூறியவர்களை யோசனையுடன் பார்த்தவன் மெல்ல,
“இனி எப்பவும் போல அந்த நிலத்த உங்களுக்கு குத்தகைக்கு நான் தரேன்… ஆனா ஒரு கண்டிஷன்…” என்றவனை பார்த்து விழித்தனர் மூவரும்….
“என்னது தம்பி…?” என்று கேட்கவும், அதுவரை இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவன் இப்பொழுது சாய்ந்து அமர்ந்து ஒரு கையை நாற்காலியின் கைப்பிடியில் முட்டுக்கொடுத்து,
“இப்பவரைக்கும் உங்களுக்கு குடுத்துட்டு இருந்த நிலத்துல தென்னைமரமும், நெல்லும் தான் போட்டுட்டு இருக்கீங்க சரிதானே…?” என்றவனின் கேள்வி தோரணை தான் ஒரு வியாபாரி என்று காட்டியது அது அந்த மூவருக்கும் விளங்காமல்,
“ஆமாங்க தம்பி…” என்று ஒப்புக்கொள்ள,
“ம்ம்ம்… இதுவரை வந்த விளைச்சல வெளிய சந்தைல குடுத்து தான் உங்களுக்கு பழக்கம் அப்படிதானே…?”
“ஆமாங்க தம்பி….”
“ம்ம்ம்… சரி நல்லா கேட்டுக்கோங்க… நிலத்த உங்களுக்கு குத்தகைக்கு தரேன்… ஆனா இனி அதுல விளையுற தேங்காயும், நெல்லும் எங்கிட்ட தான் விக்கணும் சந்தைக்கு போக கூடாது…” என்றதும் கலங்கி போயினர் மூவரும்…
“என்ன தம்பி இப்படி சொல்லுதீக.. சந்தைக்கு போனாளே எங்களுக்கு லாபம்னுட்டு ஒருகைபிடித்தேன் வரும்… இப்ப உங்கிட்ட வித்தா சந்தைல விக்குற விளைல கொறைச்சுத்தேன் பேசுவீக… பொறவு நாங்க எப்படி பொழப்ப பார்க்குறது தம்பி…?” வார்த்தையில் லேசான அங்கலாய்ப்பும் வருத்தமும் இலையோடியது…
“எனக்கு உங்க கஷ்டம் நல்லாவே புரியுது அய்யா… அதுக்கு தான் இந்த வழிய சொல்லுறேன்… இப்ப நீங்க சந்தைல வித்தாலும், அவங்க என்ன விலைய நிர்ணயம் பண்ணுறாங்களோ அதுக்குதான் நீங்க கொடுத்தாகனும்… அதுக்கு பதில் என்கிட்டையே வித்துருங்க… நியாயமான விலைக்கு நான் வாங்கிக்குறேன்…” என்றவனுக்கு பதிலளிக்காமல் மூவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க, அவர்களது குழப்பத்தை கண்ட கவியழகன்
“அய்யா… உங்க சந்தேகம் எனக்கு புரியுது… ஒருவேல நான் உங்க கிட்ட கம்மி விளைக்கு வாங்கி அதை சந்தைல அதிக பணத்துக்கு வித்துருவேன்னு நீங்க நினைக்கலாம்…” என்க,
“அய்யோ அப்படியில்ல தம்பி…அ… அது… அது வந்து, நீர் இந்த தொழிலுக்கு புதுசு… உங்களைய நம்பி நாங்க இம்புட்டு வருஷமா பழக்கம் வச்சுக்கிட்டு வந்தவிகல விட்டுபுட்டு வந்தா பொறவு எங்களுக்கு ஏதாச்சும்னா உதவிக்குன்னு யாரு கிட்ட போவோம் தம்பி…” என்று மூவருள் ஒருவர் தயங்கி தயங்கி கூற,
“எனக்கு புரியுது அய்யா… ஆனா யோசிங்க… இத்தனை வருஷம் ஒருதர்கிட்ட தானே வித்துட்டு இருந்தீங்க… உங்களுக்கு அதுல லாபம் வந்துச்சா… எனக்கு தெரிஞ்சு இல்ல… அதுவும் இல்லாமல் நான் புதுசா ஒரு ஆயில் மில் தொடங்க போறேன்… அதுக்கு தான் உங்களை நேரடியா பொருள் தர சொல்லுறேன்… நீங்க சந்தைல கிடைக்குறதை விட ரெண்டு மடங்கு இங்க உங்களுக்கு லாபம் கிடைக்கும்…” என்றதும் ஒரு நொடி அவர்களது முகம் மலர்ந்ததையும் பின் யோசனையில் ஆழ்ந்ததையும் கவனித்தவன், மேலும் தொடர்ந்தான்…
“ஒண்ணும் அவசரம் இல்லை… ஒருநாள் டைம் தரேன்… நல்லா யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க…” என்றவன் சாவகாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கூற, அந்த மூவருள் ஒருவர் மெல்லிய குரலில்
“செரிங்க தம்பி… அப்ப அந்த நிலம்…?” என்று இழுக்க,
“கவலைபடாதீங்க அய்யா… அது என்ன ஆனால் உங்களுக்கு தான் குத்தகைக்கு தருவேன்… அதே மாதிரி பொருளும் என்கிட்ட தான் விப்பீங்க… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…” என்று நிமிர்ந்து தெளிவாக பேசியவனை கண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள்,
“செரிங்க தம்பி…அப்போ உத்தரவு வாங்கிக்குறோம்… யோசிச்சு நாளைக்கு சொல்லுதோம்…” என்று நகர்ந்தவர்களை எழுந்து நின்று இருகரம் கூப்பி,
“சரிங்க அய்யா… போயிட்டு வாங்க… ” என்று விடைக் கொடுத்தான் கவியழகன்…
பின் இருக்கையில் அமர்ந்தவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்கினான்… பின் ஒருமணி நேரம் தந்தை இதுவரை யாருடன் தொழில் ஒப்பந்தம் செய்துள்ளார் அவர்கள் யார் எப்படி பட்டவர்கள் என்று ஒரு அலசலில் இறங்கினான், அங்கு மேனேஜராக பணிபுரியும் சண்முகத்தின் உதவியோடு…
தனதறையில் சண்முகத்திடம் தீவிரமாக பேசிக்கொண்டு இருக்கையில், புயல் போல் உள்ளே நுழைந்தார் முருகவேல் உடன் அவரது தொழில் முறை நண்பரான பத்திரிநாத்துடன்…
“என்ன தம்பி என்ன செஞ்சு வச்சு இருக்கீக…?” என்று முருகவேல் கடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, அவரை நிதானமாக பார்வையில் அளந்தவன் பத்திரிநாத்யையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, சண்முகத்தை கண்ஜாடையில் கிளம்பும் படி உத்தரவிட்டான்…
அதை புரிந்துக்கொண்டு அவரும் சென்றுவிட, பத்திரிநாத் “என்னப்பா இது…? நீரே இன்னைக்குத்தேன்  பொறுப்ப எடுத்திருக்கீக, அது என்ன ஏதுன்ட்டு மொத கத்துக்கிட்டு பொறவு முடிவெடு… யாரா கேட்டு எனக்கு வர வேண்டிய நில குத்தகைய நீர் மாத்தி குடுத்தீரு….?” என்று ஆத்திரமாக கேட்கவும்,
இருக்கையில் இருந்து எழாமல் மேலும் நன்றாக சாய்ந்தமர்ந்து, கால் மேல் கால் போட்டு “யார கேட்கணும்…?” என்று அசால்ட்டாக கேட்கவும் பத்திரிநாத்க்கு அவமானமாக போயிற்று…
முகம் இறுக அவனை பார்த்திருந்த அதே சமயம், முருகவேல் “என்னைய கேட்கணும்வே…” என்று அடக்கிய கோபத்தோடு உறுமினார்… அந்த விவசாயிகளிடம் இருந்து வந்த லாபத்தைவிட பத்திரியிடம் இருந்து வரும் லாபம் இரண்டு மடங்கு அதில் மண்ணள்ளி போட்டதால் மகனின் மீது வந்த கோபம் அவரை பேச வைத்தது…
இப்பொழுது கவியின் பார்வை தன் தந்தை மேல் அழுத்தமாக படிந்திருக்க, அவரது பார்வையும் மகனின் மீது தான் படிந்திருந்தது ஆழமாக…
சில நொடிகள் அமைதியாக கழிய, கவி சற்று செறுமி, பத்திரியின் புறம் திரும்பி “நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா…? நாங்க பெர்சனலா பேசணும்…” என்று தன்மையாக அதே சமயம் நக்கலாக கேட்கவும், மேலும் அவமானமாக உணர்ந்த பத்திரி அதை முருகவேலிடம் காட்டினார்…
“என்னவே முருகவேலு… அப்பன் பையனுமா சேர்ந்து என்னைய அவமான படுத்தி, ஏமாத்தலாம்னுட்டு திட்டம் போடுதீகளோ… நீ என்னமோ நிலத்த எனக்கு குடுக்குறாப்பல குடுத்து அதைய உம்மவன் புடுங்கி இன்னொரு பயலுக்கு கொடுக்கான்… என்னைய என்ன கேன்னைனு நினைச்சியோ….” என்று அவரிடம் சண்டைக்கு நின்றார் மீசையை முறுக்கியபடி….
“இல்ல பத்திரி… நான் போய் அப்படி செய்வேனா… அந்த நிலங் உனக்குத்தேன்… அதுல எந்த மாத்தமும் இல்ல… தம்பிக்கு நான் உனக்கு குடுத்த வாக்கு தெரியாதுல அத்தேன் இப்படி பண்ணிருச்சு… நான் பேசி புரிய வைக்க முயலுத்தேன்…” என்று பத்திரிக்கு புரிய வைக்க முயன்று, தன் மகனிடம் திரும்பினார்…
“என்ன தம்பி இதெல்லாம்… ம்ப்ச்ச்… எதுவா இருந்தாலும் வூட்டுல போய் பேசிக்கலாம்… இப்ப அந்த நிலத்த இவிகளுக்கே குத்தகைக்கு குடு மத்ததைய பொறவு பார்க்கலாம்… இவர்த்தேன் இத்தனை வருஷம் அதைய பார்த்துக்கிட்டு வந்தவியக…” என்று அவசரத்தில் வார்த்தையை விட்டுவிட அதை பார்த்து முகத்தை சுழித்தான் கவி,..
“ப்பா….” என்று இருக்கையில் இருந்து எழுந்து தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன், இருகைகளையும் கட்டிக்கொண்டு
“உங்க மேல மதிப்பு மரியாத அளவுக்கு அதிகமாக வச்சு இருக்கேன் அதைய பொய் சொல்லி கெடுத்துக்காதீங்க….” என்று நிர்மலமான குரலில் கூறியவனின் வார்த்தையில் மறந்தும் பாசம் என்று சொல்லை சொல்ல எண்ணவில்லை…
அதை காட்டும் அளவிற்கு அவரிடம் தகுதி இல்லை போலும்… அதை அவர் எப்பொழுது உணர்வாரோ…. மகனது வார்த்தையில் சற்று தடுமாறினாலும் தன்னை சட்டென மீட்டுக் கொண்டு,
“பொய்யா… என்னவே சொல்லுத….? நீர் இந்த பொறுப்பெல்லாம் எடுத்துக்கிட்டு முழுசா ஒருநாள் பொழுது கூட இல்லவே… இதுக்கு முன்னவர நாத்தேன் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டேன் நான் சொல்லுதைய பொய்யுனுட்டு சொல்லுத….”
“ஆமா ப்பா… நீங்க சொன்ன மாதிரி ஒருநாள் கூட இல்ல தான்… ஆனா நான் முதல் நாள் இங்க வந்து பார்த்தப்போ… இதுக்கு முன்னாடி நிலத்த குத்தகைக்கு எடுத்திருந்தவங்க உங்க கிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சுனதையும் நீங்க அவளை அவமதிச்சதையும் சாய்ந்திரம் இவருக்கு நிலத்த குத்தகைக்கு தரதா நீங்க பேசுனதும் நான் பார்த்தேன்…” என்றவன் மறந்தும் அன்று அந்த மூவரும் தன்னிடம் புலம்பியதை கூறவில்லை அவர்களுக்கு எந்த தீங்கும் பத்திரியால் ஏற்ப்பட கூடாதென்று.. இதை கேட்ட முருகவேல் திகைத்து விட்டார் அடுத்த இதை எவ்வாறு கையாள்வது என்று புரியாமல்…
“என்ன ப்பா… அமைதி ஆயிட்டீங்க…? உண்மை எனக்கு தெரிஞ்சு இருக்குன்னு ஷாக்கா…?” என்று நக்கலாக கேட்டபடி அவர் அருகில் வந்தவன், தந்தையை பார்த்து ஒரு  புன்னகையை சிந்திவிட்டு,
பத்திரியின் புறம் திரும்பி, “நேத்துவரை எல்லாமே அப்பாவோட கைல இருந்துச்சு ஆனா இன்னைக்கு அப்படி இல்ல… இனியெல்லாமே மாறும்…”என்றவனின் பார்வை ஒருநொடி தன் தந்தையை தழுவி விட்டு மீண்டும் பத்திரியிடம் வந்தது,
“நீங்க ஒருவேல உண்மையா அதுல விவசாயம் பண்ண கேட்டிருந்தா நான் இதுல தலையிட்டு இருக்க மாட்டேன்… ஆனா அந்த நிலத்த வாங்கி அதுல மில் கட்டி உங்க இல்லீகள் வேலை செய்ய அந்த நிலத்த கேட்டு இருக்கீங்க… அதுவும் அந்த நிலத்த நம்பி இருக்குற குடும்பத்தை பத்தி யோசிக்காமா…” என்று நிறுத்தியவனின் கூற்பார்வைக்கு பத்திரி ஒருநிமிடம் நடுநடுங்கி போனார்…
அவன் கூறுவது உண்மை என்பது போல் இருந்தது அவரது முழியும் அமைதியும்… ஆனால் கவிக்கு எப்படி இவை அனைத்தும் தெரிந்திருக்கும் என்று அவரது மூளை வேகமாக வேலை செய்ய தொடங்கியது…
“இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்குறீங்களா…?” என்று புருவம் உயர்த்தி, கைகளை கட்டி கொண்டு நிமிர்ந்து நின்று கேட்டவனை வெறித்து பார்த்தார் பத்திரி…
“இங்க வந்த முதல் நாள் இந்த விஷயம் தான் என் கண்ணுக்கு பட்டுச்சு ஊருக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு நாள் ஆயிருச்சு… விசாரிச்சு இருக்க மாட்டேனா இல்ல என்னால தான் முடியாதா…?”என்று மீண்டும் புருவம் உயர்த்த, முருகவேலுக்கு மகனை நினைத்து பெருமை படுவதா அல்லாது வருத்தபடுவதா என்று தெரியவில்லை…
இதற்கு முன் குடுத்த குத்தகை பணத்தை விட பத்திரி இரண்டு மடங்கு அதிகம் தருவதாக கூறியதாள் நிலத்தை அவருக்கு தர முடிவெடுத்தார் எதை பற்றியும் ஆராயாமல்… பத்திரி இந்த மாதிரியொரு திட்டத்தோடு நிலத்தை கேட்டிருப்பார் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை…
பின்நாளில் ஏதேனும் பிரச்சனை என்றால் நிலத்தின் சொந்தகாரர் என்று தன் பெயரும் உருளுமே என்ற பயம் அவருள்… ஆனால் இப்பொழுது மகன் அதை முறியடித்ததும் சந்தோஷம் கொண்டது என்னவோ ஒரு சில நொடிகள் தான் பின் பத்திரியின் ஆள் பலம் பண பலம் அவரை அச்சுறுத்தியது…
“வேண்ணாம் தம்பி… நான் யாருன்னுட்டு தெரியாம மோதுறீக… நல்லதில்ல சொல்லிப்புட்டேன்…” என்று பத்திரி எச்சரிக்க,
“இவ்வளவு விசாரிச்ச எனக்கு உங்களை பத்தி தெரியாம போயிருமா…” என்று கேலியாக சிரித்தவன், “நானும் சொல்லுறேன் கேட்டுக்கோங்க… இந்த நிலத்த உங்களுக்கு குடுக்க முடியாது… குடுக்க விருப்பமும் இல்ல… மத்தபடி உங்களை சீண்டி பார்க்கணும் சண்டை போடணும்னு எனக்கு எந்த ஐடியாவும் இல்ல… சோ… நீங்க வேற இடத்தை பார்த்துக்கோங்க…” என்றவன் இருகரம் கூப்பி தன்மையாக தன் மறுப்பை தெரியப்படுத்தியவன் அதே மரியாதையுடன் அவருக்கு விடைபெறவும் சொல்லாமல் சொன்னான்…
ஒருவன் எதிர்த்து போராடினால் தாமும் போராடலாம், சண்டையிட்டால் எதிர்த்து சண்டையிடலாம், வாக்குவாதம் செய்தால் எதிர் வாதம் புரியலாம் ஆனால் சாமர்த்தியமாக பேசி மறுப்பை காட்டுபவனிடம் எவ்வாறு தன் பலத்தை காட்ட முடியும்…
பத்திரியும் அதே நிலையில் தான் கவியழகனையும், முருகவேலையும் முறைத்துக் கொண்டே வஞ்சத்தோடு அவ்விடத்தை விட்டு வெளியேறினார்…
அவர் சென்றதும் முருகவேல், “என்னத்த பண்ணிட்டு இருக்கீக தம்பி… அவரு நம்மலை விட பெரிய ஆளு…”
“இருந்துட்டு போகட்டும்…” என்று அலட்சியமாக பதில் அளித்தவன் தன் இருக்கையில் சென்று அமர, முருகவேலுக்கு கோபம் துளிர் விட்டது
“அந்த நிலத்த அவருக்கு விட்டிருந்தா நல்ல லாபம் வந்திருக்கும்ல…” என்றவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான்…
“எனக்கு புரியுது தம்பி அவரு தப்பான விஷயத்துக்குத்தேன் கேட்டிருக்காரு… ஆனா நம்ம பொறுமையா சொல்லி பொறவு நிலத்த குடுத்திருக்கலாம்… தம்பி இப்படி பண்ணீகனா நமக்கு லாபம் பார்க்க முடியாதுவே…” என்றவரை இப்பொழுது முழுவதுமாக நிமிர்ந்து பார்த்தவன்,
“ப்பா… சொல்ல கஷ்டமா இருக்கு ஆனா சொல்லிதான் ஆகணும்… இப்ப இந்த சொத்து எல்லாம் என் பொறுப்புல இருக்கு உரிமையுள்ள எனக்கு எது பண்ணும் பண்ண கூடாதுன்னு தெரியும்… சோ இனி நீங்க இதுல தலையிட வேண்டும்…” என்று உறுதியான குரலில் மொழிந்தவன், தான் பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை மூடிவிட்டு, எழுந்து அவர் அருகில் வந்து,
“லாபம்னு நீங்க சொல்லுறது பணத்துக்கு மட்டும் இல்ல ப்பா… மத்த எல்லா விஷயத்திற்கும் பொறுந்தும்… இப்படி மத்தது எல்லாத்தையும் விட்டுட்டு பணத்தை மட்டும் வச்சு என்னப்பா பண்ணுறது…?” என்று கேட்டவனின் பார்வையில் இருந்த கேள்வியின் நேர்மை முருகவேலை தானாக தலை குனிய செய்தது…
அதை ஒருவித வெறுமையோடு பார்த்தவன்,”இனி எல்லாமே மாறும் ப்பா… மாத்துவேன்… இனி இப்படி வந்து நிக்காதீங்க… தாத்தாக்கு அப்புறம் சொத்து உங்க கைக்கு வந்ததும் எல்லாமே உங்க முடிவுதான்… அப்படினா எனக்கும் அதே பொருந்தும்னு நினைக்குறேன்…” என்று தெளிவாக பேசியவனை அப்பொழுதும் நிமிர்ந்து பாராமல் தலைகுனிந்து இருந்தவரின் மனதின் ஓரத்தில் குற்றவுணர்வால் சுருக்கென்று ஒரு வலி… தந்தையின் நிலை பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் அவ்வறையை விட்டு வெளியேறினான்… முருகவேலோ அங்கிருந்த இருக்கையில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்…
‘இத்தன நாள் அமைதியா இருந்தப்பவே யோசிச்சு இருந்திருக்கணும்… இப்ப என்ன பண்ண… இவனைய எப்படி தடுக்குறது…’ என்று யோசித்த முருகவேலுக்கு மகனது அடுத்த நடவடிக்கை என்னவென்று தெரியாது குழம்பி தலைவலி வந்தது தான் மிச்சமாகிறது போனது…
தொடரும்….

Advertisement