Advertisement

அத்தியாயம் – 7

 

“சொல்லுங்கத்தை” என்றாவாறே மனோரஞ்சிதத்தின் முன்னே நின்றிருந்தாள் செவ்வந்தி.

 

“கோவிலுக்கு கிளம்பச் சொன்னேனேம்மா, அவன்கிட்ட சொல்லிட்டியா கிளம்பி போய்ட்டு வந்திடுங்க” என்றார் அவர்.

 

“அவர்கிட்ட இப்போ தான் இறங்கி வரும் போது சொல்லிட்டு வந்தேன் அத்தை. நான் ரெடியா தான் இருக்கேன், அவர் வந்ததும் கிளம்பிடுறோம்” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தார் அவர்.

 

“என்ன அத்தை??” என்றாள் செவ்வந்தி கேள்வியாக.

 

“வேற சேலை கட்டிட்டு போம்மா… முத முத கோவிலுக்கு போறீங்க… பட்டுப்புடவை எடுத்து கட்டிட்டு நகை எல்லாம் போட்டு போம்மா”

 

“நான் பூ கட்டி வைச்சிருக்கேன், நீ வந்ததும் வைச்சு விடுறேன்” என்றார் அவர்.

 

‘பட்டுப்புடவையா!! அய்யோ!!’ என்றிருந்தது அவளுக்கு. “சரி அத்தை” என்று அவரிடம் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள்.

 

அவளுக்கு கோபமெல்லாம் அவள் வீட்டினரின் மீதும் கட்டியவனின் மீதும் தானே தவிர ரஞ்சிதத்திடமோ, தாமரை சக்திவேல் இவர்களின் மீதோ அல்ல என்பதால் அவர்களிடம் முகம் திருப்பாமல் நல்ல முறையில் பேசினாள்.

 

வீரபாண்டியன் கண்ணாடியின் முன் நின்றிருந்தான். தலையை படிய வாரி முன் பின் அசைத்து அழகு பார்த்தவாறு நின்றிருந்தான்.

 

“கொஞ்சம் வெளிய போங்க” என்றாள் செவ்வந்தி மொட்டையாய்.

 

வீரபாண்டியனுக்கு சுருசுருவென்று கோபம் வந்தது. ‘என்னையே வெளிய போகச் சொல்கிறாளே’ என்று.

 

செவ்வந்தியாவது சொல்ல வந்ததை முழுதாய் சொல்லியிருக்க வேண்டும். வீரபாண்டியனாவது எதற்கு என்று கேட்டிருக்க வேண்டும்.

 

இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டினர் அப்போது.

 

தேவையில்லாத வார்த்தை போர் ஒன்று உருவானது இப்போது. “என்ன என்ன சொன்னே??” என்றான் கோபமாய்.

 

“ஏன் காது கேட்கலையா?? கொஞ்சம் வெளிய போங்கன்னு சொன்னேன்” என்றாள்.

 

“ஏய் என்ன கொழுப்பா உனக்கு ரொம்ப… என் வீட்டில இருந்துகிட்டு என்னையவே வெளிய போகச் சொல்றியா!! எவ்வளவு திமிர் இருக்கும் உனக்கு” என்றான் உறுமலாய்.

 

அவன் பேச்சு செவ்வந்தியை உசுப்பேற்றியது. “ஆஹா அப்புறம் எதுக்கு இதை என் கழுத்துல கட்டினீங்க” என்றவள் தாலியை எடுத்து வெளியே நீட்டினாள்.

 

“அதுக்காக” என்றான் அவன்.

 

“உங்களுக்கு இந்த வீட்டில என்ன உரிமை இருக்கோ எனக்கும் அதே உரிமை இந்த வீட்டில இருக்கு. என்னை உங்கள்ள பாதியாக்கிக்கறேன்னு தான் நீங்க என் கழுத்துல இதை கட்டியிருக்கீங்க” என்றாள் அவள்.

 

‘எவ்வளவு திமிரா பதில் சொல்றா பாரு’ என்று அவன் கோபம் இன்னும் அதிகமாகியது. கோபத்தில் அவனும் அவன் உரிமையை கேட்டான்.

 

“நீ சொல்றது சரி தான். என் மனைவிங்கற உரிமையை நீ எடுத்துக்கும் போது மனைவிகிட்ட கணவன்ங்கற உரிமையை நானும் எடுத்துக்கலாம் தானே” என்றவன் அவளை நோக்கி எட்டு வைத்தான்.

 

‘அதானே பார்த்தேன், எல்லா ஆம்பளைகளுக்கும் பொண்டாட்டின்னா அதுக்கு மட்டும் தான் ஞாபகம் வருமா’ என்று எண்ணியவள் கொஞ்சம் கூட அசராமல் அவனுக்கு திருப்பிக் கொடுத்தாள்.

 

அவன் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டவள், “நான் ஒண்ணும் உங்க உரிமையை வேண்டாம்ன்னு தடுக்கலையே!!” என்றாள் அசட்டையாய்.

 

‘இவ என்ன சொல்றா!!’ என்று முதலில் புரியாமல் விழித்தவன் புரிந்ததும் ‘இவ என்ன மாதிரி பொண்ணு எப்படி எல்லாம் யோசிக்காம பேசி வைக்கிறா’

 

‘கொஞ்சம் கூட கூச்சமோ பயமோ எதுவுமே இல்லை’ என்பதாகத் தான் இருந்தது அவன் யோசனை எல்லாம். அவள் பதிலில் அவன் சற்று அசந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

 

‘இவக்கிட்ட பேசினா எனக்கு தான் தலைவலி’ என்று எண்ணியவன் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

 

அவன் சென்றதும் “போடா” என்று முணுமுணுத்துவிட்டு வேறு சேலை மாற்றிக்கொண்டு அவள் கீழே இறங்கி வந்திருந்தாள்.

 

கணவன் மனைவி இருவர் மட்டுமாக கோவிலுக்கு கிளம்ப ரஞ்சிதத்திற்கு அவர்கள் இருவரின் பொருத்தம் பார்த்து உள்ளுக்குள் அவ்வளவு ஆனந்தம்.

 

‘போயிட்டு வந்ததும் சுத்தி போடணும்’ என்று எண்ணிக்கொண்டார். செந்தாமரையும் அப்போது அங்கே வந்தவள் அதையே தான் நினைத்திருந்தாள்.

 

“அம்மா அவங்க கோவிலுக்கு போயிட்டு வந்ததும் மிளகாய் சுற்றி போட்டிரும்மா” என்றதும் “நானும் அதுதேன் தாமரை நினைச்சேன்” என்றார் அவர்.

 

“இவன் எங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டானோன்னு ரொம்ப பயமா போச்சு. ஏதோ அந்த தாயி மனசு வைக்க போயி இந்த மகராசி இங்க வந்திருக்கா” என்றார் அவர்.

 

“இனி ரெண்டு பேரும் சேர்ந்து நல்லபடியா குடும்பம் நடத்தி குழந்தை குட்டின்னு பார்த்திட்டா போதும் எனக்கு” என்று அவர் சொல்ல தாமரை அமைதியானாள்.

 

‘ரெண்டு பேரும் பிடிக்காம கல்யாணம் பண்ணியிருக்காங்க. தாயே பத்திரகாளியம்மா இவங்க ரெண்டு பேரு மனசும் மாறி எல்லாம் நல்லதா நடக்கணும்’

 

‘எல்லாம் நல்லபடியா நடந்தா நான் தீச்சட்டி எடுக்கறேன் தாயே’ என்று வேண்டிக்கொண்டிருந்தாள் அவள்.

 

இவர்களின் வேண்டுதலுக்கு அந்த பத்திரகாளியம்மன் தான் அருள் செய்ய வேண்டும்.

 

மறுநாள் வீரபாண்டியன் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ரஞ்சிதம் தான் மருமகளை அவனுக்கு உதவி புரியுமாறு அனுப்பி வைத்திருந்தாள்.

 

அவள் வந்து உதவி எல்லாம் செய்யவில்லை. வெறுமே வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

வீரபாண்டியன் தன் போக்கில் எல்லாம் எடுத்து அடுக்கி முடித்திருந்தான். “நான் கிளம்பறேன்” என்று அவளிடம் சொன்னான்.

 

அது மட்டும் தான் அவளிடம் பேசியிருந்தான். செவ்வந்தியும் பதிலேதும் சொல்லவில்லை.

 

எல்லாம் எடுத்துக்கொண்டு முன் வீட்டிற்கு வந்திருக்க எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான். செவ்வந்தியை பார்த்து எதுவும் சொல்லவில்லை.

 

செவ்வந்தி யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் ‘போறியா போயிட்டு வா’ என்ற ரீதியில் அவனை பார்த்திருந்தாள்.

 

வீரபாண்டியன் ஊருக்கு போவது மதுராம்பாளும் அறிந்திருக்க அவர்களும் வாயிலுக்கு வந்திருந்தனர்.

 

அவர்களை பார்த்தும் தலையசைத்தவனின் அருகே வந்து ஓரிரு நிமிடம் பேசிவிட்டு சென்றார் மதுராம்பாள்.

 

‘இந்த கிழவி இவன்கிட்ட என்ன பேசிட்டு போகுது’ என்று எண்ணிக்கொண்டாள் செவ்வந்தி.

 

வண்டியில் ஏறியதும் பொதுவாய் எல்லாருக்கும் தலையசைத்து வைத்தான் அவ்வளவே. அவளை மறந்தும் பார்க்கவில்லை. (நல்ல புருஷன்ய்யா…)

இதோ பத்து நாட்கள் ஓடிவிட்டது வீரபாண்டியன் ஊருக்கு சென்று.

 

ஊருக்கு சென்ற மறுநாள் வீட்டிற்கு அவன் போன் செய்திருக்க செவ்வந்தி அங்கிருந்ததால் ரஞ்சிதம் போனை அவளிடம் கொடுத்து பேசச் சொன்னார்.

 

‘அய்யோ இது வேறயா’ என்று எண்ணிக்கொண்டவள் என்ன பேசுவது என்று புரியாமல். “சரிங்க ஹ்ம்ம் ஓகே அத்தைகிட்ட கொடுக்கறேன்” என்று அவளாகவே பேசி ரஞ்சிதத்திடம் போனை கொடுத்துவிட்டாள்.

 

அவளின் பேச்சில் உண்மையிலேயே வீரபாண்டியன் விழித்துக் கொண்டிருந்தான். ‘என்ன ஏதுன்னு கூட கேட்கலை… அவ பாட்டுக்கு பேசிட்டு போனை கொடுத்திட்டு போய்ட்டா’

 

‘ஆமா இவ பேசிட்டாலும் முத்தா கொட்டிரும். இவ பேசுறதை கேக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம்’ என்று எண்ணிக்கொண்டான்.

 

அவன் போன் செய்யும் தருணங்களை கண்டுகொண்டவள் அந்த நேரத்தில் அங்கில்லாதவாறு பார்த்துக் கொண்டாள்.

 

ரஞ்சிதமோ இருவரும் தனியாக பேசிக்கொள்வார்களாக இருக்கும் என்று அவராகவே எண்ணிக்கொண்டார்.

 

அவர்கள் பேசிக்கொள்ளவில்லை என்று தெரிந்திருந்தால் அவர் போனை நிச்சயம் மருமகளிடம் கொடுத்திருப்பார்.

 

வீரபாண்டியன் கிளம்பிய இரண்டே நாளில் செந்தாமரையும் அவள் மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

 

செவ்வந்தியும் ரஞ்சிதமும் மட்டுமே வீட்டில். மாமியாருக்கு பூக்கட்டிக் கொடுப்பது சமைப்பது என்று அவள் தன் பொழுதை கழித்தாள்.

 

வாழ்க்கையே போரடிப்பது போல் ஒரு உணர்வு அவளுக்கு. கோவிலுக்கு சென்று வரலாம் மனம் சற்று மட்டுப்படும் என்று தோன்ற ரஞ்சிதத்திடம் சொல்லிக்கொண்டு கோவிலுக்கு சென்றாள்.

 

அங்கு எதேச்சையாய் அவள் தோழி மயிலைக் கண்டாள். “டி மயிலு எங்கடி போனவ, ஒரு வாரமா நீ ஊர்ல இல்லையா” என்றாள் செவ்வந்தி.

 

“உன்னை கடைசியா பார்த்தேன்ல அன்னைக்கு நைட் எங்க சித்திக்கு உடம்பு சரியில்லைன்னு திருநெல்வேலிக்கு போய்ட்டோம்டி, நேத்து நைட் தான் வந்தேன், வந்தா இப்படின்னு சொல்றாங்க”

 

“எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு… அடியே நீ என்னடி பண்ணி வைச்சிருக்க பக்கி”

 

“ஹேய் மயிலு அதை பத்தி பேசாதடி” என்றாள் செவ்வந்தி.

 

“ஏன் ஏன் பேசக் கூடாது நான் தான் அன்னைக்கு உன்கிட்ட சொன்னேன்ல தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணி இப்போ இதெல்லாம் தேவையாடி உனக்கு” என்றாள் மயிலு ஆதங்கமாய்.

 

“இங்க பாரு மயிலு நான் மறக்கணும்ன்னு நினைக்கிற விஷயத்தை நீ இனி பேசாத. இதான் விதின்னா என்ன செய்ய முடியும்”

 

“இனிமே இதைப்பத்தி என்கிட்ட பேசாத, வேற ஏதாச்சும் பேசு” என்றாள் செவ்வந்தி முடிவாய்.

 

மயிலுக்கு அவள் பேச்சு லேசாய் வருத்தம் கொடுத்தது. எப்படி ஜாலியா இருக்க பொண்ணு இப்படி பேசுறாளே என்றிருந்தது அவளுக்கு.

 

“சரி நான் பேசலை, ஆமா நீ இப்போ என்ன பண்ணுறதா உத்தேசம். அண்ணனோட ஊருக்கு போகப் போறியா!! இல்லை இங்கவே இருக்க போறியா!!”

 

“படிப்பையும் விட்டுட்ட போல’ என்றாள் மயில்.

 

“என்ன என்ன சொன்னே??” என்றவளுக்கு அவள் கல்லூரி ஞாபகம் அப்போது தான் வந்தது. நடந்த களேபரத்தில் அதை சுத்தமாய் மறந்திருந்தாள்.

 

இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கு கல்லூரி திறந்துவிடும். பீஸ் வேறு கட்ட வேண்டுமே என்று அப்போது தான் நினைவு வந்தது அவளுக்கு.

 

“மயிலு மயிலு எனக்கு ஒரு உதவி பண்ணுடி. எங்க வீட்டுக்கு போயி இந்த முல்லையை கோவிலுக்கு வரச் சொல்லேன்” என்றாள் அவள்.

 

“ஏன்டி நீ போக மாட்டியா அங்க??” என்றாள் மயில்.

 

“நானா போக மாட்டேன்… என் பேச்சை யாரும் கேட்காம கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்கள்ள அவங்ககிட்ட நான் என்ன பேச…”

 

“சரி நீ அதை விடு முல்லையை மட்டும் உடனே கோவிலுக்கு வரச் சொல்லேன்” என்றாள்.

 

“சரி நான் போய் சொல்லியனுப்பறேன்” என்றுவிட்டு அவள் கிளம்பிச் சென்றாள்.

 

அவள் சென்ற சிறிது நேரத்தில் முல்லை உள்ளே நுழைந்தாள். “போய் சாமி கும்பிட்டு வா, நாங்க இங்க உட்கார்ந்திருக்கேன்” என்ற செவ்வந்தியிடம் தலையசைத்து உள்ளே சென்றாள் அவள்.

 

சாமி கும்பிட்டு தமக்கையின் அருகில் வந்து அமர்ந்தாள் முல்லை. “சொல்லுக்கா எதுக்கு என்னை வரச்சொல்லி சொல்லிவிட்ட, ஏன் நீ வந்து என்னை பார்க்க மாட்டியா??” என்றாள் அவள்.

 

“நான் அங்க வரமாட்டேன், எனக்கு இஷ்டமில்லை. சரி அதை விடு, நான் பேச வந்த விஷயத்தை முதல்ல சொல்லிடறேன்” என்றாள்.

 

“ஹ்ம்ம் சொல்லு” என்றாள் முல்லை.

 

“எனக்கு பீஸ் கட்டணும் இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. ஆச்சிக்கிட்ட சொல்லி கட்டிட சொல்லு” என்றாள் அவள்.

 

“ஏன் ஆச்சி பீஸ் கட்டணும்??” என்ற முல்லையை எரித்துவிடுவது போல் பார்த்தாள் செவ்வந்தி.

 

“என்னக்கா பார்க்கற பதில் சொல்லு??” என்றாள் தங்கை.

 

“என்னடி கொழுப்பா உனக்கு?? எனக்கு யார் பீஸ் கட்டுவா எப்பவும், நான் ஊர்ல இருந்து வந்ததில இருந்து சொல்லிட்டு தானே இருக்கேன் பீஸ் கட்டச்சொல்லி”

 

“மறந்திடுச்சா என்னமோ புதுசா கேட்குற மாதிரி சொல்ற??” என்றாள் செவ்வந்தி.

 

“அப்போ நீ இந்த வீட்டு பொண்ணு?? இப்போ…”

 

“இப்போ மட்டும் நான் என்ன வேற வீட்டு பொண்ணா…”

 

“ஆமா இப்போ நீ அடுத்த வீட்டு பொண்ணு தானே. இனிமே இதெல்லாம் நீ அத்தான்கிட்ட தான் அக்கா கேட்கணும்” என்றாள் அவள்.

 

“என்னடி வாய் ரொம்ப நீளுது”

 

“உண்மையை பேசினா உனக்கு பிடிக்காதே”

 

“அப்போ நான் சிவகாமிக்கு பொண்ணு இல்லை. மதுராம்பாளுக்கு பேத்தி இல்லை அதானே” என்றவளுக்கு சுருசுருவென்று கோபம் உச்சந்தலை வரை ஏறியது.

 

“அப்படி நாங்க சொல்லலைட்டி, நீ தான் அப்படி நினைக்கிற” என்ற குரலில் சகோதரிகள் இருவருமே திரும்பினர்.

 

எதிரில் மதுராம்பாள் நின்றிருந்தார். “அப்போ பீஸ் கட்ட வேண்டியது தானே” என்றாள் செவ்வந்தி விடாமல்.

 

“பீஸ் கட்ட ஒரு நிமிஷம் ஆகாது, ஆனா அது நல்லா இருக்காது. நாளைக்கு உங்க வீட்டில ஒரு வார்த்தை வந்திடும்”

 

“இனி எதுவா இருந்தாலும் உனக்கு அவங்க தான் செய்யணும். உன் புருஷன்கிட்ட கேளு இல்லன்னா உங்க மாமியார் மாமனார்கிட்ட சொல்லு” என்றார் அவர்.

“உங்களால முடியாது அதானே. நான் உங்களுக்கு யாரோ அதானே சொல்ல வர்றீங்க. போதும் இனி நீங்க எதுவும் பேச வேண்டாம்”

 

“என்ன பண்ணணுமோ நானே பார்த்துக்கறேன். ரொம்ப சந்தோசம் நீங்க பேசினதெல்லாம் கேட்டு எனக்கு அப்படியே குத்தாலத்துல குளிச்ச மாதிரி ஜில்லுன்னு இருக்கு” என்றவளின் பேச்சு காட்டமாய் வந்தது.

 

செவ்வந்தியின் தலை மறைந்ததும் முல்லை ஆச்சியை பார்த்தாள். “ஏன் ஆச்சி பீஸ் தானே கட்டணும், கட்டியிருக்கலாம்ல”

 

“பாவம் அக்கா, எனக்கே ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

 

“நீ சும்மாகிடட்டி இதுக்கெல்லாம் போய் கலங்குவாங்களா!! பீஸ் கட்டணும்ன்னு உங்கக்கா சொன்னப்போ உனக்கு என்ன தோணிச்சு”

 

“அத்தான்ட்ட கேட்டியான்னு தானே கேட்டே, இது ஏன் அந்த உங்கக்காளுக்கு தெரியலை”

 

“அக்கா தான் பிடிக்காம கட்டிக்கிச்சுல”

 

“அதுக்காக அப்படியே இருந்திட முடியுமா!! எல்லாம் சரியாகும் நீ வா!!”

 

“அக்காவோட படிப்பை நிறுத்திட்டா!!” என்றாள் அவள் சந்தேகமாய்.

“அப்படியெல்லாம் நடக்காது, உங்கக்கா சும்மா இருக்க மாட்டா… அவ காரியத்தை அவளே சாதிச்சுக்குவா” என்று சொல்லி சின்ன பேத்தியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார் அப்பெண்மணி.

 

இனி எதுவாயிருந்தாலும் அவள் கணவனையோ அவர் வீட்டினரையோ தான் கேட்க வேண்டும் என்பதை உணர்த்தவே அவர் அப்படி சொல்லியிருந்தார்.

 

அது செவ்வந்தியிடத்தில் நன்றாகவே வேலை செய்தது. வீட்டிற்கு சென்றவள் குறுக்கும் நெடுக்குமாய் நடை பயின்றாள்.

 

என்ன நினைத்தாளோ ரஞ்சிதத்தின் முன் சென்று நின்றாள். “அத்தை அவர்கிட்ட பேசணும்” என்றவாறே.

 

“யாருகிட்டம்மா??” என்றார் அவர் ஏதோ வேலையாய் இருந்தவர்.

 

“உங்க மகன்கிட்ட தான் அத்தை” என்றதும் அவர் திரும்பி அவளை பார்த்தார்.

 

“என்னாச்சும்மா உன் போன்ல சார்ஜ் இல்லையா”

 

“போனே இல்லை அத்தை என்கிட்ட??” என்றதும் அவருக்கு திக்கென்றிருந்தது.

 

“என்னாச்சும்மா உன் போனுக்கு”

 

“அது அந்த போன் அம்மாகிட்ட கொடுத்திட்டேன் அத்தை. அங்க எனக்கும் முல்லைக்கும் மட்டும் தான் செல் போனு”

 

“வீட்டில BSNL தானே, அதுவும் அடிக்கடி ரிப்பேர் ஆகுதா, அதான் என் போனை அம்மாகிட்ட கொடுத்திட்டேன்” என்றாள் அவள்.

 

“என்ன பொண்ணும்மா நீ!! உன்கிட்ட போனு இருக்குன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். இப்படி தெரிஞ்சிருந்தா அவன் போன் பண்ணும் போது நான் உன்கிட்ட கொடுத்திருப்பேனே”

 

“இப்போ அவனுக்கு போன் பண்ண முடியாதேம்மா, நைட் போல தான் பேசணும். அதுக்கு முன்ன முத உனக்கொரு போன் வாங்கணும்” என்றார்.

 

“என்ன இந்த புள்ளை இப்படி பண்ணிட்டு, ச்சே எனக்கும் தோணவேயில்லையே. இவருக்கு போனை போட்டு முத ஒரு போனை வாங்கிட்டு வரச் சொல்லணும்” என்று தனக்குள்ளாக பேசிக்கொண்டே போனை எடுத்து காதில் வைத்தார்.

 

“அத்தை அதெல்லாம் வேணாம்… மாமாவை இந்த நேரத்துல தொல்லை பண்ண வேணாம் அத்தை…” என்றாள் செவ்வந்தி.

 

“இதிலென்ன தொந்திரவும்மா மருமகளுக்கு வாங்கி கொடுக்க முடியாதா என்ன” என்றவர் சற்றும் தாமதிக்காமல் கணவரை அழைத்தார்.

‘அச்சோ தொல்லை பண்ணிட்டமோ, பேசாம மயிலு போனை வாங்கி பேசியிருக்கலாம் போல’ என்று எண்ணிக்கொண்டு அங்கேயே அமர்திருந்தாள் செவ்வந்தி.

 

ரஞ்சிதம் கணவரிடம் என்ன பேசினாரோ அடுத்த அரைமணி நேரத்தில் கையில் நான்கு மொபைல் போனுடன் அவர் வீட்டிலிருந்தார்.

 

“ஏம்மா உன்கிட்ட போன் இல்லைன்னு சொல்லியிருக்க கூடாதா… இந்த வீராவும் சொல்லாம விட்டானே…” என்று எண்ணியவருக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது.

 

இவளிடம் கைபேசி இல்லை என்று அவனுக்கு தெரியாதா!! இல்லை தெரிந்து கொள்ளவில்லையா!! எல்லாம் நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது என்ற நம் எண்ணம் தவறோ!!

 

இருவரும் நன்றாய் இழைந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரியும் இருந்தாலும் பேச்சு வார்த்தை இருந்தது போல கூட தெரியவில்லையே!! என்று எண்ணியது அவர் மனம்.

 

இப்போதைக்கு இதை ஒத்தி வைப்போம். முதல்ல போன் கொடுத்து பேச வைப்போம் அப்புறம் பேசுவோம் என்று எண்ணிக்கொண்டு மனைவியை அழைத்தார்.

 

“ரஞ்சிதம்”

 

“வந்துட்டீங்களா!! ஒரு போன் வாங்க இவ்வளவு நேரமா உங்களுக்கு” என்று அரைமணிநேரத்தில் வீட்டிலிருந்த கணவரை பார்த்து கேட்டவரை சற்று சிரிப்புடன் பார்த்தாள் செவ்வந்தி.

 

“நீ போன் பண்ணி வைச்ச கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திருக்கேன்… நீ ஏன் பேச மாட்டே…” என்றவர் “சரி சரி போனு எல்லாம் மருமககிட்ட கொடு எந்த போன் வேணுமோ வாங்கிக்கட்டும்” என்றார்.

 

அவர் பேச்சில் செவ்வந்தி எழுந்து வந்திருந்தாள். “என்ன மாமா இதெல்லாம் கடையவே தூக்கிட்டு வந்திட்டீங்களா!!”

 

“இவ்வளவு போன் தூக்கிட்டு வந்திருக்கீங்க, கடைக்காரன் ஒண்ணுமே சொல்லலையா மாமா உங்களை”

 

“எல்லாம் நமக்கு தெரிஞ்ச கடைக்காரன் தான்ம்மா அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டான்” என்றார் அவர்.

 

“மாமா இந்த போன் எல்லாம் ரொம்ப விலை மாமா எனக்கு இதெல்லாம் வேணாம். பேசுறதுக்கு தானே சும்மா சிம்பிளா போதும் மாமா”

 

“இல்லைம்மா இந்த போன்ல ஏதோ வாட் அப் இருக்காம்ல அதுல பேசிக்க பெரிய போனு தான் வேணும்ன்னு கடைக்காரன் சொன்னான்”

 

“உங்கத்தையும் முத முத மருமகளுக்கு வாங்கித் தர்றது விலையை பார்க்காம நல்லதா எடுத்து வரச்சொன்னா அதான்ம்மா எடுத்து வந்தேன்”

 

“நீ விலையை பார்க்காத உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோம்மா” என்றார் அவர்.

 

“மாமா இவ்வளோ காசு போட்டு வேணாம் மாமா… எல்லா மொபைலும் ஒரே மாதிரி தான் மாமா. எதுக்கு காசை அதுல போட்டுக்கிட்டு வேற வாங்கிக்குவோம் மாமா” என்றாள் அவள்.

 

“ஏங்க நீங்க மருமகளை கூட்டிட்டு போய் பிடிச்ச மாதிரி வாங்கி கொடுங்க” என்று கணவரிடம் சொன்னார் ரஞ்சிதம்.

 

சக்திவேலுக்கும் அதுவே சரியென்று பட “ஆமாம்மா நீயும் வா உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ” என்றார் அவரும்.

 

“இல்லை மாமா நீங்களே…” என்று அவள் இழுக்கவும் “மாமா கூப்பிடுறாங்கள்ள செவ்வந்தி நீ போயிட்டு வா” என்றார் ரஞ்சிதம் அழுத்தமாக.

 

“ஹ்ம்ம் சரி அத்தை” என்று சட்டென்று அந்த குரலுக்கு அடிபணிந்தாள் அவள். “ஆனா அத்தை நீங்களும் வரணும்” என்ற கோரிக்கையுடன்.

 

சக்திவேல் இருவரையும் மாறி மாறி பார்த்தார். ‘நம்மோட தனியா வர்ற சங்கடமா இருக்கு போல’ என்று எண்ணிக் கொண்டவர் “ரஞ்சிதம் நீயும் கூட வா ஒரு எட்டு போயிட்டு வந்திடுவோம்” என்று கணவர் அழைத்ததும் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

 

மூவருமாக ஒன்றாக வெளியில் கிளம்பினர். கிளம்பி வெளியில் வந்தவள் “மாமா காரு யாரு ஓட்டுவாங்க” என்றாள்.

 

“நம்ம முத்துராசு தான்ம்மா, எனக்கு சரியா ஓட்ட வராதுன்னு வீரா அவனை தான் ஓட்டிச் சொல்லி இருக்கான்” என்றார் அவர்.

 

“நான்… நான் ஓட்டட்டுமா மாமா… நான் நல்லா ஓட்டுவேன் மாமா… என்கிட்ட லைசென்ஸ் எல்லாம் கூட இருக்கு” என்றாள் அவள்.

 

சக்திவேலுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை திரும்பி மனைவியை பார்த்தார். ரஞ்சிதமோ அவளே ஓட்டட்டுமே என்று கண்களால் கணவருக்கு ஜாடை செய்ய ஒரு  மனதாக அவரும் சரிம்மா என்றார்.

 

உடனே முத்துராசுவையும் அழைத்து சொல்லியவர் முத்துவை வீட்டுக்கு போய் வருமாறு அனுப்பி வைத்தார்.

 

“நாம முத முத வெளிய போறோம் மூணு பேராவா போறது” என்று ரஞ்சிதம் சொல்ல “அதுக்கென்ன அத்தை” என்றவள் சுற்றுமுற்றும் பார்க்க தூரத்தில் மயிலு தண்ணீர் குடம் தூக்கிக்கொண்டு வந்தாள்.

 

“டி மயிலு இங்க வா…” என்று குரல் கொடுத்தாள் செவ்வந்தி. மயிலு குடத்தை அவள் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு அவள் அன்னையிடம் சொல்லிக்கொண்டு செவ்வந்தியை நோக்கி வந்தாள்.

 

“என்னா செவ்வி எதுக்குட்டி என்னைய கூப்பிட்ட” என்றாள் அவள்.

 

“சும்மா தான் வண்டியில ஒரு ரைடு போலாம் வாட்டி… நான் தான் ஓட்டப்போறேன்” என்றவளை கலவரமாய் பார்த்தாள் மயிலு.

 

“மாமா அத்தை நீங்க ரெண்டு பேரும் ஜாலியா பின்னாடி உட்கார்ந்து பேசிட்டு வாங்க” என்றவளுக்கு அவ்வளவு சந்தோசம் தன்னையும் நம்பிய இரு ஜீவன்களை நினைத்து.

 

பின்னே சிறு வயதில் இருந்து அவள் எது செய்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருந்த அவளின் ஆச்சியும் மாமியார் சொல்லே மந்திரம் என்று படிக்கும் சிவகாமியும் அவளை குற்றம் சொல்லி சொல்லியே அவளுக்கு நெறைய விஷயங்களை துணிந்து செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு.

 

அதனாலேயே வீட்டிற்கு தெரியாமல் பைக்கும் காரும் ஓட்டப் பழகினாள். லைசென்ஸ் வாங்கும் போது விஷயம் வீட்டிற்கு தெரிய அவள் அதற்கு தனியாக ஏகப்பட்ட ஏச்சுகளை வாங்கியிருந்தாள்.

 

வீட்டில் அவளொன்று சொன்னால் அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்பது மதுராம்பாளாக தான் இருக்கும். அப்படியே இருந்து பழகியவளுக்கு மனோரஞ்சிதத்தின் வெகுளித்தனமான பேச்சும் அன்பும் சக்திவேலின் பாசமும் புதிதாய் தெரிந்தது.

 

“வண்டி எடுக்கட்டுமா மாமா” என்றாள் பின்னால் திரும்பி. அவர் மீசையை லேசாய் தடவிக்கொண்டே “சரிம்மா” என்றார்.

 

வண்டியை சீராக சாலையில் ஒட்டியவளை பார்த்து இருவருக்குமே திருப்தி தான். செவ்வந்தியின் அருகில் அமர்ந்து வந்த மயிலு முதலில் கலவரமாய் இருந்தாலும் அவள் நன்றாக ஓட்டியதில் பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தாள் இப்போது.

 

“ஆமா செவ்வி நாம ஊரை தாண்டி வந்துட்டோமே வண்டியை திருப்ப வேண்டியது தானேடி. இன்னும் எங்க ஒட்டிக்கிட்டு இருக்கவ” என்றாள் மயிலு.

 

“அட ஆமாமில்லை” என்ற செவ்வந்தி “மாமா நீங்க எங்க போகணும்ன்னு சொல்லவேயில்லையே”

 

“தூத்துக்குடிக்கும்மா”

 

“என்ன தூத்துக்குடிக்கா… அடியே என்னட்டி நடக்குது இங்க என்னைய இங்கவே இறக்கிவிடு. நான் நடந்தே வீட்டுக்கு போய்க்கறேன்” என்றாள் மயிலு.

 

“ச்சு… சும்மா இருட்டி… கொஞ்ச நேரம் தான் போயிட்டு வந்திடலாம். நானே உங்க அம்மாகிட்ட சொல்லிடுறேன் போதுமா. இல்லை வேணாம் மாமாவும் அத்தையும்  சொல்லுவாங்க”

 

“அவங்க சொன்னா உங்கம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க ஓகே தானே” என்றாள் அவள்.

 

“நீ பண்ணுறது எல்லாம் ரொம்ப ஓவர்டி…” என்று அவள் முறைத்துக்கொண்டே தான் வந்தாள்.

 

கடைக்கு சென்று கடைக்காரனை ஒரு வழி செய்து அவள் சற்று விலை குறைந்த மொபலை தான் வாங்கினாள்.

 

அவளுக்குமே இதெல்லாம் ஆச்சரியமாக தான் இருந்தது. ‘நானு விலை குறையா ஒரு மொபைல் வாங்கியிருக்கேனா’ என்பது தான் அது.

 

இதுவே மதுராம்பாள் அவளை வாங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தால் ஒரு ஆப்பிள் ஐபோனை எடுத்து வைத்துக்கொண்டு அழிசாட்டியம் செய்திருப்பாள் வாங்கிக் கொடுத்தால் தான் ஆயிற்று என்று.

 

ஏனெனில் மதுராம்பாள் ஒரு விலை சொல்லி ஒன்றை எடுக்கச் சொன்னால் செவ்வந்தி அதைவிட அதிகமாக தான் எடுப்பாள்.

 

எடுத்து தரவில்லை என்றால் சண்டையும் போடுவாள். உடைகள் ஒன்று எடுக்க சொன்னால் இரண்டு அல்லது மூன்றாக தான் எடுப்பாள்.

 

நகைக்கு அவள் வைக்கும் வேட்டு கொஞ்ச நஞ்சமல்ல இரண்டு பவுனில் செயின் எடுக்கச் சொன்னாள் ஐந்து பவுனில் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு அழகாக இருக்கிறதென்பாள்.

 

வாங்கி தர முடியாது என்று சொன்னால் அப்போ எதுவுமே வேண்டாம் என்று விட்டு எழுந்து சென்றுவிடுவாள்.

 

மதுராம்பாள் மற்ற விஷயத்தில் அவளை கட்டுப்படுத்தினாலும் இது போன்ற விஷயத்தில் எல்லாம் அவர் அதிகம் கணக்கு பார்க்க மாட்டார்.

 

கண்டித்தாலும் அவள் விரும்பியதை கண்டிப்பாய் வாங்கிக் கொடுத்திடுவார்.

 

மொபைலும் சிம் கார்டும் வாங்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினர். சக்திவேல் “இன்னும் கொஞ்சம் விலை கூடவே வாங்கி இருக்கலாம்மா” என்றார்.

 

“இதுலவே எல்லாம் இருக்கு மாமா இதுவே போதும்” என்றவளை மயிலு தான் முறைத்தாள் ‘அவளா நீ’ என்பது போல்.

 

மருமகளின் பேச்சில் கணவனும் மனைவியும் தங்களுக்குள்ளாக பார்வையை பரிமாறிக்கொண்டனர்.

‘பார்த்தீங்களா என் மருமகளை’ என்பதான பார்வையை கணவரின் மீது வீசினார் ரஞ்சிதம்.

 

சக்திவேலுக்கும் செவ்வந்தியின் பேச்சில் சற்று மகிழ்ச்சியே. மகனுக்கு எப்படி பெண் அமைவாளோ எப்படியிருப்பாளோ ஒரே மகனாகிற்றே என்ற கவலை இருவருக்கும் எப்போதுமே உண்டு.

 

மகளை கட்டிக்கொடுத்த பின் இருவர் மட்டுமே தனித்திருந்ததில் சற்று அதிகமாகவே மகனின் திருமணம் குறித்தும் வரப்போகும் பெண் குறித்தும் அவர்களுக்கு கனவிருந்தது.

 

நடந்தது அதிரடியான திருமணம் என்ற போதிலும் சம்மந்தப்பட்ட இருவருக்கும் விருப்பமில்லாமல் இருந்த போதிலும் திருமணமே வேண்டாம் என்றிருந்த மகனுக்கு எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்றிருந்தவர்கள் எதையும் யோசிக்கவில்லை அப்போது.

 

செவ்வந்தியுடன் பழகிய இந்த சில தினங்களில் இருவருக்குமே மகனின் வாழ்க்கை குறித்த கவலை கொஞ்சம் குறைந்திருந்தது.

 

இருவருமே சேர்ந்து மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்துவார்கள் என்ற சந்தோசத்துடனே இருந்தனர் ரஞ்சிதமும் சக்திவேலுவும். அவர்களின் சந்தோசம் போல் நடக்குமா!! இனி…

Advertisement