Advertisement

அத்தியாயம் – 9

 

“எதுக்கும்மா அழற??” என்ற ரஞ்சிதத்தின் குரலில் அவளுக்கு இன்னும் அழுகை கூடியது.

 

“எதுக்குலே அழுதுக்கிட்டு விடும்மா…” என்றார் அவள் கையை பிடித்தவாறே.

 

“ஏம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா” என்ற சக்திவேலை அழுகையினூடே நிமிர்ந்து பார்த்தாள்.

 

“என்ன பேசப் போறீங்க, அவளே அழுதுகிட்டு கிடக்கா, அவ அப்பா பேச்சை ஆரம்பிச்சு அழ வைச்சுட்டீங்க இன்னும் என்ன” என்ற சத்தமாகவே முணுமுணுத்தார் கணவரிடம்.

 

“சொல்லுங்க மாமா” என்றாள் செவ்வந்தி.

 

“உள்ளார போய் பேச அனுமதிப்பாங்களாம்மா… இல்லை வெளிய அங்கன பெஞ்சு கிடக்கே அங்கன போயிருவோமா” என்றார் அவர்.

 

“உள்ள அனுமதிக்க மாட்டாங்க மாமா… அத்தை மட்டும்ன்னா பரவாயில்லை… நாம அங்க போயிருவோம்” என்றாள் அவள்.

 

அவள் ஹாஸ்டலின் வெளியில் அமைந்திருந்த அந்த சிறிய பார்க் போன்ற இடத்தில் சென்று மூவரும் அமர்ந்து கொண்டனர்.

 

‘இவரு என்னத்தை பேசப் போறாரு’ என்று ரஞ்சிதம் அவரையே பார்த்திருக்க செவ்வந்தியும் அவர் என்ன பேசப் போகிறார் என்றே பார்த்திருந்தாள்.

 

“உனக்கு எங்க மேல கோவம் எதுவும் இருக்காம்மா??”

 

“எதுக்கு கோவம் மாமா??” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.

 

“உங்களை நம்பாம கல்யாணம் பண்ணி வைச்சுட்டோமேன்னு…” என்று இழுத்தார் அவர்.

 

“கோவமில்லை மாமா வருத்தம் தான் இருக்கு” என்றாள் மனதை மறையாமல்.

 

“நாங்க உங்களை நம்பலைன்னு உனக்கு…” என்று முடிக்காமல் நிறுத்தினார் அவர்.

 

“நீங்க எங்களை நம்பாம இதை செஞ்சிருக்க மாட்டீங்கன்னு தெரியும்” என்றாள் அவள்.

 

மனைவியை திருப்தியாக ஒரு பார்வை பார்த்தவர் மருமகளிடம் திரும்பி “எங்களை மன்னிப்பியாம்மா” என்றார்.

 

“என்ன மாமா பேசறீங்க?? நீங்க என்ன தப்பு செஞ்சீங்கன்னு உங்களை மன்னிக்க சொல்றீங்க… எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை”

 

“வருத்தம் கூட உங்க மேல எனக்கு கிடையாது மாமா… அத்தை உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்… நீங்களா எதாச்சும் நினைச்சு வருத்தப்பட்டு கிடக்காதீங்க”

 

“இல்லைம்மா மனசுல இருக்கறதை சொல்லிடலாம்ன்னு தான் இப்போ பேசிக்கிட்டு இருக்கேன். அப்பா மாதிரின்னு சொல்லிட்டு இதை சொல்லாம இருக்க என்னால முடியலைம்மா”

 

“உனக்கே தெரியும் வீரா கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிட்டு இருந்தான். தாமரையும் கல்யாணம் ஆகிப்போய்ட்டா…”

 

“பெத்தவங்களோட சந்தோசமே பிள்ளைங்க கல்யாணம் குடும்பம் குழந்தைன்னு இருக்கறதை பார்க்கறது தானே…”

 

“அந்த கொடுப்பினையை எங்க வீரா கொடுக்காமலே இருந்ததுல இனி அவனுக்கு எந்த சந்தோசமுமே கிடையாதோன்னு மனசு வெம்பி போய் தான் கிடந்தோம்”

 

“ஏன் மாமா அவர் கல்யாணமே வேணாம்ன்னு இருந்தார்??”

 

“அதை நீ அவன்கிட்டயே கேளும்மா… அவன் நாட்டுக்காக சர்வீஸ் பண்ணிட்டே இருக்கணுமாம். குடும்பம் குழந்தைன்னு போய்ட்டா அவனால இதெல்லாம் செய்ய முடியாதாம்”

“இது காரணமாயிருக்கும்ன்னு நீங்க சொல்றீங்க நானும் நம்பிக்கறேன்” என்றவளை மெச்சுதலாய் பார்த்தார்.

 

அவளுக்கு புரிந்தது அவன் இவர்களுக்கு சொன்ன பதிலை அவர் அவளிடம் சொல்லியிருக்கிறார் என்று. மகனை தெரிந்தாலும் அவர் அதை யாரிடமும் பகிர்ந்ததில்லை.

 

“சரி அவன் விஷயம் என்னன்னு நீயே தெரிஞ்சுக்குவ, நான் உனக்கு சொல்லணும்ன்னு அவசியமில்லைம்மா…” என்றவரின் எண்ணம் மகனே அவன் மனைவியிடம் பேசிக் கொள்ளட்டும் என்பதாய் இருந்தது.

 

“கல்யாணம் வேணாம்ன்னு இருந்த அவனோட வாழ்க்கையில நீ எப்படியோ உள்ள வந்திட்டம்மா… உன்னை விட எங்களுக்கு மனசில்லை”

 

“சுயநலம் எங்களோட சுயநலம் அதுக்கு உன்னை பலியாக்கிட்டோம்… அது தப்பு தானேம்மா… எங்க பிள்ளைக்காக நாங்க பார்த்தது சரியா இருக்கலாம்”

 

“உன்னை பொறுத்தவரை உனக்கு நாங்க செஞ்சது சரியில்லை தானே… எங்களை மன்னிச்சிரும்மா”

 

“மாமா ப்ளீஸ் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்காதீங்க… அதுவும் என்கிட்ட போய், நீங்க செஞ்சது சரியான்னு எனக்கு சொல்ல தெரியலை… நிச்சயம் அது தப்பில்லை…” என்றதும் தான் அவர் முகமே சற்று தெளிந்தது.

 

“நீ பிரண்டோட பொண்ணுங்கறது எனக்கு இன்னும் சந்தோசமா இருந்துச்சு. அவனோட மொத்த தொடர்பும் விட்டுப்போச்சுன்னு நினைச்சேன். உன்னை மருமகளா கூட்டிட்டு வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்மா…”

 

“இப்படி ரெண்டு பேரும் வேணாம்ன்னு சொல்ல சொல்ல கல்யாணம் பண்ணி வைச்சுட்டமே இவங்க வாழ்க்கை எப்படியிருக்குமொன்னு மனசுக்கு கஷ்டமாயிருந்துச்சு”

 

“இப்போ எங்களுக்கு அந்த கவலை இல்லைம்மா… உன்னை பார்க்கும் போது எல்லாம் சரியாகிடும் நல்லாயிருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு”

 

செவ்வந்தி எதுவும் பேசவில்லை. அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த திருமணத்தில் பெரிதாய் விருப்பமில்லை தான்.

 

அவள் வருத்தமெல்லாம் வேறு. அதை யார் புரிவரோ!! கட்டியவன் புரிந்தால் சரி செய்வானோ!! ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடத்தில் இருந்து.

 

தெரிந்தோ தெரியாமலோ தன் மாமனாரிடம் “உங்க நம்பிக்கை காப்பாத்துவோம் மாமா… உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்” என்றாள் ஆறுதல் படுத்தும் விதமாய்.

 

“ஏம்மா நெசமாவே உனக்கு கோவமில்லை தானே” இது மாமியார்.

 

“உங்க மேல எனக்கு கோவமே வராது அத்தை. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு… நீங்க ரொம்ப ஸ்வீட் அத்தை” என்றாள் மனதார. சக்திவேல் அவள் பேச்சை கேட்டு சிரித்துவிட்டார்.

 

“ஏன் மாமா சிரிக்கறீங்க??”

 

“உங்க அத்தை எப்பவும் காரமா தான் பேசுவா நீ வேற ஸ்வீட்ன்னு சொல்றியேம்மா”

 

ரஞ்சிதம் கணவரை முறைத்தார். “நான் காரமாவா பேசுறேன்” என்று.

 

“அத்தை மாமாக்கு கொஞ்சம் பொறாமை விடுங்க. நீங்க ஸ்வீட் தான்” என்றாள் மருமகள்.

 

சட்டென்று ஏதோ தோன்றியவளாய் செவ்வந்தி “ஏன் மாமா உங்களுக்கும் எங்க அப்பாக்கும் இடையில என்ன பிரச்சனை” என்றாள்.

 

சக்திவேல் அதற்கு பதில் சொல்லவில்லை. அமைதியாய் பார்த்தார் அவளை.

 

“இல்லை அம்மா சொல்லியிருக்காங்க நீங்களும் அப்பாவும் ரொம்ப வருஷம் பிரண்ட்ஸ்ன்னு. எனக்கு நினைவு தெரிஞ்சு நான் உங்களை எங்க வீட்டில பார்த்ததில்லை”

 

“அம்மா கல்யாணம் ஆகி வந்த புதுசுல தான் உங்களை பார்த்திருக்காங்களாம். அதுக்கு அப்புறம் தான் உங்க வீட்டோட தொடர்பே விட்டு போச்சுன்னு சொன்னாங்க”

 

“ஹ்ம்ம் ஆமாம்மா உங்க அம்மாவை கல்யாணம் பண்ணி கூட்டி வந்த புதுசுல வருவேன் உங்க வீட்டுக்கு. அப்புறம் வந்ததில்லை” என்று ஒத்துக்கொண்டவர் என்ன பிரச்சனை என்பதை மட்டும் சொல்லாமலே இருந்தார்.

 

“சொல்ல முடியாத விஷயம்ன்னா சொல்ல வேணாம் மாமா… ஆனா எங்கப்பாவுக்கு லேட்டா கல்யாணம் ஆச்சா மாமா” என்றாள்.

 

“லேட் எல்லாம் இல்லைம்மா. எனக்கும் அவனுக்கும் மூணு வயசு வித்தியாசம் இருக்கு. நான் அவனை விட பெரியவன் தான்”

 

“ஆனாலும் எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு இருந்துச்சு. நாங்க இதே ஊரு தான்னாலும் முத எங்க வீடு மேற்கால தான் இருந்துச்சு”

 

“அப்போ தான் உங்கப்பாருக்கும் எனக்கும் பழக்கமாச்சு. அப்படியே நட்பு வளர்ந்து இறுகிடுச்சு. இடையில என்னென்னமோ ஆகி எப்படியோ போச்சு”

 

எதையோ யோசித்தவர் “உனக்கு உங்கப்பான்னா ரொம்ப இஷ்டமாம்மா…”

 

“அப்பாவை பிடிக்காதாவங்க யாரும் இருப்பாங்களா மாமா… ஒருத்தர் இருக்கும் போது விட இல்லாத போது தான் மனசு அவங்களை தேடும்”

 

“அப்படி தான் அவர் இல்லாததாலேயே அவரை இன்னும் அதிகமா நான் நினைக்கிறேன் மாமா” என்றவளின் கண்களில் இருந்து லேசாய் கண்களில் நீர் அரும்பியது.

 

மனோரஞ்சிதம் அவள் கண்களை துடைத்துவிட்டார். “நாங்க இருக்கோம்ல உனக்கு. மாமாவை உங்கப்பாவா நினைச்சுக்கோம்மா” என்றார் அவர்.

 

“அப்படி தான் நினைச்சுக்கறேன் அத்தை. அதனால தான் என்னால மாமாக்கிட்ட எந்த தயக்கமும் இல்லாம பேச முடியுது” என்றாள்.

 

“தாமரை கூட என்கிட்ட இப்படி நின்னு பேசினதில்லைம்மா… ஏன் வீரா கூட இப்படி சகஜமா பேசினதில்லை…”

 

“அவங்க ரெண்டு பேருக்கும் என் மேல பாசமுண்டு மரியாதை உண்டு. அவங்க அம்மாகிட்ட இருக்கற அந்த இயல்பை என்கிட்ட காட்டினதில்லை”

 

“சில சமயம் எனக்கு கூட கொஞ்சம் பொறாமையா இருக்கும். அம்மாக்கிட்ட உரிமையாய் பேசுற அளவுக்கு நம்மகிட்ட இல்லையேன்னு”

 

“அந்த கவலை எல்லாம் இப்போ உன்னால போச்சும்மா. மனசுக்கு நிறைவா இருக்கு” என்றவரை ரஞ்சிதம் ஆச்சரியமாயும் செவ்வந்தி புன்னகையுமாயும் நோக்கினர்.

 

கணவரின் மனதில் இவ்வளவு இருக்கிறது என்றே ரஞ்சித்திற்கு இன்று தான் புரிந்தது. வீட்டிற்காய் உழைப்பார் பிள்ளைகளிடத்தில் கனிவாய் கண்டிப்பாய் மனைவியிடத்தில் கரிசனையாய் என்றிருப்பவர்.

 

இன்று தான் அவர் மனதிலும் இவ்வளவு எண்ணங்கள் இருப்பது அவருக்கு புரிந்தது. மருமகளிடம் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

 

நாட்கள் தன் போக்கில் மெதுவாய் உருண்டது. செவ்வந்திக்கு விடுமுறை விட்டால் போதும் உடனே ஊருக்கு கிளம்பிவிடுவாள்.

 

ரஞ்சிதமும் சக்திவேலுவும் எப்போது அவளிடம் பேசினாலும் எப்போம்மா வருவே என்று கேட்பதிலேயே அவர்கள் எவ்வளவு தனிமையை உணர்கின்றனர் என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

 

செவ்வந்திக்கு தேர்வுகள் எல்லாம் முடிந்து விடுமுறை முடிந்து அவள் இன்டர்ன்ஷிப்பை தொடங்கியிருந்தாள்.

 

தாமரைக்கு பேறுகாலம் நெருங்கி வந்ததால் இன்னும் இருபது நாட்களில் அவளுக்கு சீமந்தம் செய்வதென ஏற்பாடாகியிருந்தது.

 

அந்த இடைவெளியில் ஓர் நாள் செவ்வந்தி அழைக்காமலே அவள் கணவனிடத்தில் இருந்து அவளுக்கு போன் வந்தது.

 

எப்போதும் அவள் தான் அவனுக்கு போன் செய்து அது வேண்டும் இது வேண்டும் என்று அவனை எப்போதும் போல் வறுத்தெடுத்து வைப்பாள்.

 

இன்று அதிசயத்திலும் அதிசயமாக அவனே போன் செய்திருந்ததை அதிசயமாய் பார்த்தவள் பொத்தானை அழுத்தி “ஹலோ” என்றாள்.

 

சம்பிரதாய நலவிசாரிப்பின் பின் அவன் எதுவோ சொல்ல வந்து தயங்குவது போல் இருக்க “என்ன விஷயம் போன் பண்ணி இருக்கீங்க” என்று நேராகவே கேட்டுவிட்டாள்.

 

அவள் கேட்ட பின்னும் சொல்லாமல் தயங்குவது சரியில்லை என்றெண்ணியவன் “தாமரை சீமந்தத்துக்கு ஊருக்கு வருவேன்”

 

“சரி…”

 

“அதுக்கு ஒரு வாரம் முன்ன என்னோட க்ளோஸ் பிரண்ட் கல்யாணம்…”

 

“சரி…”

 

‘இவ என்ன எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லி வைக்குற…’ என்று எண்ணிக்கொண்டே “நாம போயிட்டு வரணும்” என்று சொல்லி முடித்துவிட்டான்.

 

அதற்கும் அவள் பதில் “சரி” என்பதாய் தான் இருந்தது.

 

“நான் என்ன கேட்டேன்னு புரிஞ்சு தான் சரின்னு சொன்னியா…”

 

“ஹ்ம்ம் புரிஞ்சுது…”

 

“நெஜமாவே என்னோட வர உனக்கு சம்மதமா”

 

“இந்த கேள்வி அபத்தமா உங்களுக்கு தெரியவேயில்லையா”

 

“இதிலென்ன அபத்தம்” என்று கேட்டவனின் குரலில் லேசாய் கோபம் எழுந்தது. அவன் தப்பாய் ஒன்றும் கேட்கவில்லையே என்பதாய் இருந்தது அவன் எண்ணம்.

 

“என்னை கல்யாணம் பண்ணிக்கும் போதே சம்மதம் கேட்கலையாம். இப்போ யார் கல்யாணத்துக்கு போறதுக்கோ சம்மதம் கேட்கறீங்க” என்றதும் அவள் எங்கு வருகிறாள் என்பது புரிந்தது அவனுக்கு.

 

‘எப்படி சூட சூட கேள்வி கேட்குறா’ என்றிருந்தது அவனுக்கு.

 

“இப்போ என்ன சொல்ல வர்றே??”

“எதுவும் சொல்லலையே”

 

“வரமுடியுமா இல்லையா”

 

“அதான் வர்றேன்னு சொல்லிட்டனே அப்புறம் என்ன கேள்வி”

 

“அதை புரியற மாதிரி சொல்ல மாட்டியா”

 

“நான் புரியற மாதிரி தான் சொன்னேன். உங்களுக்கு தான் புரிஞ்சுக்க தெரியலை”

 

அவள் பேச்சே அவனை வெட்டி விடுவது போல் இருக்க ‘இதுக்கு மேல பேசினா எனக்கு தேவையில்லாம கோபம் வரும் டென்ஷன் வரும்’ என்று எண்ணிக்கொண்டவன் “சரி நான் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு வந்திடுவேன்”

 

“சரி” என்றாள் மீண்டும் முதலில் இருந்து. அவள் பேச்சு கொஞ்சம் அயர்வாக இருந்த போதும் அதை கண்டுகொள்ளாது பேசினான்.

 

“கல்யாணம் மூணாறுல… வெள்ளிக்கிழமை தான் கல்யாணம்”

 

“சரி”

 

“எல்லாத்துக்கும் சரி சரின்னு சொன்னா என்ன அர்த்தம்”

 

“சரின்னு தான் அர்த்தம்” என்றாள் அவள்.

“உன்னால லீவ் போட முடியுமா, இல்லை எதுவும் கஷ்டமா இருக்குமா” என்றான்.

 

அவன் குரலில் என்ன தோன்றியதோ “ஹ்ம்ம் போடுறேன், என்னைக்கு போடணும்” என்றாள்.

 

“வியாழன், வெள்ளி மட்டும் போட்டா போதும்… சனிக்கிழமை உனக்கு லீவ் தானே”

 

“ஹ்ம்ம் ஆமா… சரி எப்போ கிளம்பணும், நான் எங்க வரணும்” என்றாள்.

 

“நான் வந்து அழைச்சுட்டு போறேன், புதன்கிழமை நான் அங்க வர்றேன். அன்னைக்கு நாம தாமரை வீட்டுல தங்கிட்டு மறுநாள் காலையில மூணாறு கிளம்பிடலாம்”

 

“வெள்ளிக்கிழமை கல்யாணம் முடிச்சு அங்க இருந்து கிளம்பி நம்ம ஊருக்கு வந்திட போறோம் இதான் ப்ளான்” என்றான்.

 

“தாமரை அண்ணி வீட்டுக்கு போகணுமா!!”

 

“ஆமா நாம சேர்ந்து அவங்க வீட்டுக்கு போகலைல, அதுவும் இல்லாம நீ போன முறை போனப்ப அவங்க மாமனார் மாமியார் எங்கயோ ஊருக்கு போயிருந்தாங்க”

 

“இப்போ அவங்களும் நம்மை பார்த்த மாதிரி இருக்கும் அதான் அம்மா அங்க போயிட்டு வரச் சொன்னாங்க” என்றான்.

அவள் எல்லாவற்றுக்கும் சரியென்று தலையாட்டி வைக்க வீரபாண்டியனுக்கு ஆச்சரியம் தான். சொன்னவுடன் சரியெங்கிறாளே என்று.

 

அவளிடம் பேசுமுன் முதலில் அவன் அன்னையிடம் தான் பேசி அவளிடம் பேசச்சொல்லி இருந்தான்.

 

ரஞ்சிதம் தான் நீயே உன் பொண்டாட்டியிடம் பேசிக்கொள் என்று சொல்லியிருக்க அவனே ஒருவழியாய் பேசி முடித்திருந்தான்.

 

வீரபாண்டியன் அந்த வார திங்களன்றே குலையன்கரிசலுக்கு வந்திருந்தான்.

 

இரு தினங்கள் அன்னை தந்தையுடன் இருந்தவன் மூன்றாம் நாள் சாப்பிட்டு கிளம்பியவன் மாலை மதுரையை அடைந்திருந்தான்.

 

அவன் நேரே அந்த மருத்துவமனைக்கே வந்திருக்க வாசலில் காரை நிறுத்திவிட்டு அவளுக்கு போன் செய்யலாம் என்று திரும்ப அவளே எதிரில் வந்து கொண்டிருந்தாள்.

 

செவ்வந்தியும் அவள் தோழி கிரேசியும் பேசிக்கொண்டே வெளியில் வர கிரேசி தோழியிடம் “ஹேய் சக்தி அங்க பாருடி ஒரு கறுத்த மச்சான் நம்ம ஆஸ்பிட்டல்குள்ள”

 

“ஆள் பார்க்க நல்லா இருக்கான்ல, கறுப்பா இருந்தாலும் நல்ல களையான முகம்டி. நல்ல ஹைட்டா இருக்கான்டி… போலீசா இருப்பானோ…” என்று அவள் தோழியிடம் வளவளக்க அவள் யாரை சொல்கிறாள் என்று பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

 

‘இவர் என்ன போன் கூட பண்ணாம நேரா வந்து நிக்கறார்’ என்று எண்ணிக்கொண்டே அவள் நடக்க அவளை கண்டவன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

 

“ஹேய்… ஹேய் சக்தி அங்க பாருடி அவன் நம்மளை பார்த்து தான் வர்றான்”

 

“அவனும் சைட் அடிக்கறானோ, எனக்கு படபடன்னு வருதுடி” என்று அவள் உண்மையிலேயே படபடப்பாய் பேச செவ்வந்தி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.

 

வந்தவன் இருவரின் முன்னேயும் வந்து நிற்க கிரேசி அவனை கிரேஸியாய் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

வீரபாண்டியனோ வாயை திறந்து எதுவும் கேளாமல் ‘போகலாமா’ என்பது போல் அவளை பார்த்து தலையசைத்தான்.

 

‘என்ன இது இந்தாளு வந்து எதுவும் பேசாம நிக்கறாரு’ என்று யோசித்துக் கொண்டே கிரேசி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“என்ன வேணும் உங்களுக்கு??” என்று அவனை பார்த்து கேட்கவும் செய்தாள் செவ்வந்தி அவள் கையை அழுத்தியதையும் பொருட்படுத்தாமல்.

“ஒண்ணும் வேணாமே” என்றான் அவன்.

 

“அப்புறம் எதுக்கு இங்க நிக்கறீங்க??” என்றாள் கிரேசி.

 

“ஏன் நின்னா என்ன தப்பு, யாரிவங்க??” என்று அவன் இயல்பாய் செவ்வந்தியை பார்த்து கேட்கவும் கிரேசி இப்போது தோழியை திரும்பி பார்த்தாள்.

 

“இவர் தான் என்னோட கே.எம் நீ சொன்ன கே.எம். என்னோட ஹஸ்பண்ட் வீரபாண்டியன்” என்று சத்தமாய் சொன்னவள் குனிந்து தோழியின் காதில் “நீ சொன்ன கறுத்த மச்சான்” என்றாள் கிண்டலாய்.

 

வீரபாண்டியனோ மனதிற்குள்ளாக ‘கே.எம்மா… அப்படின்னா’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன?? என்ன சொன்னே?? இவர் உன்னோட ஹஸ்பண்டா??” என்றாள் அவள் திக்கி.

 

“இவ என்னோட பிரண்ட் கிரேசி, ஹாஸ்டல் மேட்டும் கூட” என்று கணவனுக்கு அறிமுகம் செய்தாள்.

 

ஓரிரு நிமிடங்களில் தன்னை சுதாரித்துக்கொண்ட கிரேசியோ “ஹேய் என்னடி சொல்ற, உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு எங்க யாருக்குமே சொல்லலையே ஏன்??”

 

“கேக்குறாலே சொல்லுங்க” என்று கணவனை நோக்கி பார்வையை செலுத்தினாள்.

 

‘இவ ஒருத்தி எதுக்கு என்னைய கோர்த்து விடுறா’ என்று யோசித்துக்கொண்டே என்ன சொல்லலாம் என்று வார்த்தையை கோர்த்தவன் “அது அது கொஞ்சம் அவசரமா நடந்து முடிஞ்சு போச்சு. எனக்கு லீவ் கிடைக்காததுனால அவசரமா வைக்க வேண்டியதா போச்சு”

 

“ஏன் உங்களுக்கு என்ன அவசரம் அப்படி??”

 

அவன் தன் வேலை பற்றி சொல்ல “சரி கல்யாணம் அவசரமா நடந்திருச்சு அதுக்கு அப்புறம் நீயேன் என்கிட்ட சொல்லலை” என்றாள் தோழியை முறைத்தவாறே.

 

செவ்வந்தி இப்போதும் அவள் பதில் சொன்னாளில்லை அவனைத் தான் பார்த்தாள் சொல்லு என்பது போல்.

 

“சொல்ல தயக்கமா இருந்திருக்கும் நீங்க எல்லாரும் கிண்டல் பண்ணுவீங்கன்னு” என்று சமாளித்தான் அவன்.

 

“என்ன சொன்னாலும் எனக்கு இது ஏத்துக்கற மாதிரி இல்லை. அப்புறம் நீ என்னடி என் கூட இவ்வளவு நாள் பழகின” என்று தோழியை ஒரு பிடிபிடித்தாள் அவள்.

 

“அவர் சொன்னார்ல அதான் காரணம், உன்கிட்ட சொல்லாம இருக்கணும்ன்னு எல்லாம் நான் நினைக்கவே இல்லைடி”

 

“எனக்கு உன் மேல கோபம் தான்… என்னால இன்னும் நம்பவே முடியலை” என்று கொஞ்சம் கூட இறங்காமல் பேசினாள் கிரேசி.

 

“ப்ளீஸ் எதுவா இருந்தாலும் என்னை திட்டுங்க நான் தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றான் வீரபாண்டியன்.

 

‘உண்மையாவே நீங்க மட்டும் தான் காரணம்’ என்ற ரீதியில் அவனை பார்த்தாள் அவன் மனைவி.

 

செவ்வந்தி ஒருவாறு தன் தோழியை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தாள். கிரேசி சகஜ நிலைக்கு திரும்ப “நாம கிளம்பலாமா” என்றான் வீரபாண்டியன்.

 

“ஹ்ம்ம் போகலாம்” என்றவள் “சரிடி நான் ஹாஸ்டல் போய் என்னோட பேக்ஸ் எடுத்துக்கிட்டு அப்படியே ஊருக்கு கிளம்பறேன் சரியா” என்று தோழியிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப கிரேசி அவளை நிறுத்தினாள்.

 

“ஒரு நிமிஷம் இருடி இதோ வர்றேன்” என்றவள் உள்ளே அவசரமாய் ஓடினாள்.

 

“எனக்கு ஏன் போன் பண்ணலை… இப்போ தேவையில்லாம எல்லாருக்கும் தெரிஞ்சிடும்” என்றாள் செவ்வந்தி.

 

“நான் காரை நிறுத்திட்டு போன் பண்ணலாம்ன்னு தான் நினைச்சேன். அதுக்குள்ளே நீ எதிர்க்க வரவும் உன்னை தேடி வந்திட்டேன். ஏன் இப்போ தெரிஞ்சா என்ன??”

 

“தெரிஞ்சா என்னவா… இவ இப்போ பிரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் பண்ணியிருப்பா எல்லாருக்கும்…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை அவளை நோக்கி ஒரு கூட்டமே வந்தது.

 

‘பார்த்தீங்களா இதுக்கு தான் சொன்னேன்’ என்பது போல் அவள் வீராவை பார்க்க அவனுக்கும் அய்யோவென்றிருந்தது.

 

வந்தவர்களில் ஒருவன் மட்டும் செவ்வந்தியை முறைத்து பார்க்க வீராவின் கண்களில் அது தவறாமல் விழுந்தது.

 

“சக்தி பிபிசி சொன்னது நிஜமா” என்றான் அவன் செவ்வந்தியை பார்த்து.

 

‘சக்தியா அது யாரு, இவளை ஏன் சக்தின்னு சொல்றாங்க’ என்று பார்த்தான் வீரா.

 

“ஏன் கார்த்திக் அவ பொய் சொல்றான்னு நினைக்கறீங்களா!!” என்று கேட்டவளை முறைத்து பார்த்தான் கார்த்திக்.

 

செவ்வந்தி அதையெல்லாம் ஒதுக்கி தள்ளியவளாய் “மீட் மை ஹஸ்பண்ட் வீரபாண்டியன்” என்று முறையாய் அறிமுகம் செய்வித்தாள் அனைவருக்கும்.

கார்த்திக்கின் பார்வை தன்னை குற்றம் சாட்டுவதை உணர்ந்திருந்தாள். அவன் புறம் பார்வையை திருப்பவேயில்லை அவள்.

 

ஒருவழியாய் அந்த கூட்டத்தில் இருந்து விடைபெற்று வெளியில் வர செவ்வந்தி வீராவை நன்றாய் முறைத்தாள்.

 

காரில் ஏறி அமர்ந்ததும் “ஒரு நிமிஷம்” என்றவன் பின் சீட்டில் இருந்து ஒரு கவரை எடுத்தவன் அதிலிருந்த பூவை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“என்ன இது??” என்றாள் அவள்.

 

“தெரியலையா பூ” என்றான் அவன்.

 

“அது தெரியுது ஏது??”

 

“அம்மா கொடுத்துவிட்டாங்க”

 

“ஏன் உங்களால உங்க பொண்டாட்டிக்கு ஒரு முழம் பூ கூட வாங்கி கொடுக்க முடியாதா” என்றாள் நக்கல் குரலில்.

 

‘வீரா இது உனக்கு தேவையா’ என்று தன்னையே திட்டிக்கொண்டு “உன்னோட மாமியாருக்கு அவங்க மருமகளுக்கு அவங்களே கட்டிக்கொடுத்தா தான் சந்தோசமாம்” என்று சொன்னதும் அவள் முகத்தில் லேசாய் ஒரு புன்னகை பூப்பதை பார்த்தான்.

 

‘நம்மளை தான் காய்ச்சி எடுக்கறா, அம்மா மேல பிரியமா தான் இருக்கா’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு பூவை மீண்டும் அவளை நோக்கி நீட்டினான்.

 

இம்முறை அவன் கொடுத்ததை மறுக்காமல் வாங்கி தலையில் சூடிக்கொண்டாள்.

 

தாமரையின் வீட்டிற்கு பழங்கள், இனிப்பு காரம் என்று வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டிற்குள் நுழைய தாமரை இருவரையும் வாயிலிலேயே எதிர்கொண்டாள்.

 

“வாங்க வாங்க எவ்வளவு நேரமா வாசல்லேயே உங்களுக்காக உட்கார்ந்திருக்கேன் தெரியுமா” என்றாள் அவள்.

 

“எப்படியிருக்கீங்க அண்ணி?? பேபி என்ன சொல்லுது” என்று கேட்டாள் செவ்வந்தி.

 

அவ்வப்போது தாமரைக்கு போன் செய்து அவள் உடல்நலம் குறித்து விசாரிப்பதும் தாமரை மருத்துவமனை செல்லும் போது அவள் உடன் செல்லுவதுமாய் இருந்தாலும் பொதுவான நலம் விசாரிப்பை கேட்டறிந்தாள்.

 

தாமரைக்கு இருவரையும் ஒன்றாய் பார்த்து அவ்வளவு சந்தோசம் அண்ணனும் அண்ணியுமாய் சேர்ந்து ஒன்றாய் அவள் வீட்டிற்கு வந்தது அவள் கண்களையும் உள்ளத்தையும் நிறைத்தது.

 

வீட்டிற்குள் சென்றதும் தாமரையின் மாமியார் மாமனாரின் காலில் விழுந்து வணங்குமாறு ரஞ்சிதம் சொல்லியிருந்ததால் அவர்களின் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர்.

 

வீராவின் திருமணத்தின் போது தாமரையின் மாமனாருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் அவர்கள் திருமணத்திற்கு வந்திருக்கவில்லை. அதனாலேயே அவர்களின் ஆசி பெற்றனர்.

 

“நீங்க உள்ள போங்க…” என்றவள் இருவருக்கும் தயார் செய்திருந்த அறையை காட்ட செவ்வந்தி அவள் உடமைகளை உள்ளே வைத்துவிட்டு வெளியில் வந்துவிட்டாள்.

 

“என்ன அண்ணி அண்ணன் எங்க போய்ட்டாங்க” என்றாள் தாமரையிடம்.

 

“இப்போ வந்திருவாங்க ஆபீஸ்ல இருந்து வர்ற நேரம் தான்” என்றாள் அவள்.

 

“ஏன் மதினி நீங்க ரெஸ்ட் எடுக்கலாம்ல” என்று கூற “அதெல்லாம் வேணாம் நீங்க தனியா வேலை பார்க்க நான் போய் ரெஸ்ட் எடுக்கவா” என்று மறுத்தாள் அவள்.

 

பின் அவளை தன்னுடன் அழைத்து சென்றவள் இரவு உணவு தயாரிக்க தாமரைக்கு உதவி செய்தாள். அப்போது தாமரையின் மாமியார் உள்ளே வந்தார்.

 

“என்ன டிபனா…” என்ற கட்டைக்குரலில் கேட்க “ஆமா அத்தை மாமாக்கு இட்லி அவிச்சுட்டு இருக்கேன்” என்றாள் அவள் பதிலாய்.

 

அவர் செவ்வந்தியை மேலிருந்து கீழாய் ஒரு பார்வை பார்த்தார். ஆம் கீழாகவே பார்த்தார் அவளை.

 

மாமியாரின் பார்வை உணர்ந்த தாமரை அதை மாற்றும் பொருட்டு “அத்தை எங்க மதினி டாக்டருக்கு படிச்சுட்டு இருக்காங்க”

 

“அப்போ நீங்க ஊர்ல இருந்ததால உங்ககிட்ட சொல்லலை. இங்க தான் நம்ம மதுரை ஆஸ்பத்திரியில தான் இருக்காங்க” என்றாள் சேர்த்து.

 

அவரோ “டாக்டருக்கு படிச்சா மட்டும் போதுமா… ஒழுக்கமாவும் இருக்கணும்” என்று பட்டென்று சொல்ல தாமரைக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

 

செவ்வந்திக்கு அந்த வார்த்தை சுருக்கென்று குத்தினாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் “கண்டிப்பா இருக்கேன்ம்மா” என்றாள் அவரிடம் சிரித்தவாறே.

 

“அத்தை நீங்க உள்ள போங்க நான் இப்போ டிபன் எடுத்திட்டு வந்திடறேன்” என்று அவரை அனுப்பிவிட்டு திரும்ப செவ்வந்தி அங்கில்லை…..

 

Advertisement