Advertisement

அத்தியாயம் – 8

 

வீட்டிற்கு வந்த செவ்வந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா இரவு வரும் எப்போதடா அவனிடம் பேசுவோம் என்றிருந்தது.

 

அவளின் பரபரப்பு பார்ப்பவருக்கு ஆசையாய் கணவனிடம் பேச காத்திருப்பவள் போன்றே தோன்றும். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

 

இரவு மூவருமாக உணவு உண்டு முடிக்கவும் சக்திவேல் அவர் எண்ணில் இருந்து மகனுக்கு அழைத்தார். சம்பிரதாய நலவிசாரிப்புக்கு பின் மனைவியிடம் போனை கொடுத்தார் அவர்.

 

மனோரஞ்சிதமும் மகனை நலம் விசாரித்ததும் “ஏலே பாண்டி செவ்வந்திகிட்ட போனு இல்லையாம்ல… நீ ஏம்ல சொல்லாம விட்டே” என்று ஆரம்பித்தார்.

 

‘இதென்ன புது கதை இவகிட்ட போன் இல்லையா. போன் இல்லாமையா ஒரு பிள்ளை இருப்பா… இல்லை இவ சும்மா சீனை கீனை போட்டு வைக்குறாளோ’ என்று எண்ணிக் கொண்டிருந்தான் அவன் மறுமுனையில்.

 

“என்னலே நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் பேசாம இருக்க” என்றார் அவர் விடாமல்.

 

செவ்வந்தியோ கேளுங்க கேளுங்க நல்லா கேளுங்க என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள் அவரை.

 

‘வாங்குடா மகனே’ என்று சந்தோசமாய் அவனை மனதிற்கு திட்டிக்கொண்டிருந்தாள்.

 

மகன் என்ன பதில் சொல்வதென்று விழிப்பான் என்பதையறிந்த சக்திவேல் தான் மனைவியை அமைதிப்படுத்தினார்.

 

“ரஞ்சிதம் என்னா பேசிக்கிட்டு இருக்க, அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுல… சும்மா அவனை கேள்வி கேட்டுக்கிட்டு, பேச வேண்டிய விஷயத்தை முத பேசு”

 

“நீ சொல்லுவன்னு தானே போனை உன்கிட்ட கொடுத்தேன்” என்று அவர் லேசாய் சத்தமிடவும் “க்கும் உன்னைய சொன்னா உங்கப்பாவுக்கு பொறுக்காது. எப்படியோ போங்க”

 

“மருமகளுக்கு போனு வாங்கியாச்சு. செவ்வந்தி உன்கிட்ட பேசணும்ன்னு பிரியப்படுது, அப்பா உனக்கு நம்பர் அனுப்புவாங்க, உடனே போன் போட்டு பேசு” என்றுவிட்டு மேலும் ஓரிரு நிமிடம் பேசிவிட்டு போனை வைத்தார் அவர்.

 

‘அத்தே கடைசில இப்படி சொதப்பிட்டீங்களே அத்தே’ என்று மனதார பேசிக்கொண்டிருந்தது செவ்வந்தியே. பின்னே அவள் என்ன அவனுக்கு பிரியமாய் பேசவா நினைத்தாள்…

 

‘இவள் இங்கு இப்படி யோசிக்க அங்கு அவனோ என்ன கச்சேரி பண்ண போறான்னு தெரியலையே!! பிரியமா வேற பேச காத்திருக்கான்னு சொல்றாங்க!!’

 

‘அப்படி இருக்க வாய்ப்பே இல்லையே’ என்று எண்ணிக்கொண்டே அவன் தந்தை அனுப்பப்போகும் எண்ணுக்காய் காத்திருந்தான்.

 

“மாமா அவரோட நம்பர் கொடுங்க, நானே போன் பண்ணுறேன். இதுல இருந்து ப்ரீ கால் தானே ஒரு மாசம் வரைக்கும்”

 

“நான் போட்டு பேசறேன் மாமா…” என்றாள்.

 

“அதுவும் சரி தான்மா” என்றவர் மகனின் எண்ணை மருமகளிடம் கொடுத்தார்.

 

“நீங்க படுத்துக்கோங்க… குட் நைட்” என்று இருவருக்குமாக பொதுவாக கூறினாள்.

 

“நீ ஏம்மா அங்க தனியா படுக்குற, பாண்டி வரவரைக்கும் இங்கவே படுத்துக்கோயேன்” என்று தினமும் சொல்லும் அதே வாசகத்தை திருப்பிப் படித்தார் மனோரஞ்சிதம்.

 

“இருக்கட்டும் அத்தை நான் அங்கவே படுத்துக்கறேன். ஒண்ணும் கஷ்டமில்லை” என்று அவளும் வழக்கமான டயலாக்கை அடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அங்கு ஒருவனோ அவளின் எண்ணிற்காய் காத்திருக்க மணவாட்டியே அவள் எண்ணில் இருந்து அழைத்தாள்.

 

‘யாரு நம்பர் புதுசா இருக்கு. இவளா இருக்குமோ’ என்று எண்ணிக்கொண்டே போனை ஆன் செய்தான்.

 

“ஹலோ” என்ற குரலிலேயே தெரிந்துவிட்டது அவள் தான் என்று.

 

‘ஆமா இப்போ என்ன கேட்கணும் இவகிட்ட’ என்று எண்ணிக்கொண்டே அவனும் “ஹலோ” என்றிருந்தான்.

 

“இருக்கீங்களா” என்றாள்.

 

அவள் எப்படி இருக்கீங்க என்று கேட்டதாய் எண்ணிக்கொண்டு “நல்லா இருக்கேன்” என்றான் அவன்.

 

“நீங்க எல்லாம் நல்லா தான் இருப்பீங்க!! நான் தான் நல்லாவே இல்லை!!”

 

“இதை சொல்ல தான் கூப்பிட்டியா!!” என்றான் சலிப்பாய்.

 

“இல்லை அப்படியே ரொம்ப ஹாப்பியா இருக்கேன்னு சொல்ல கூப்பிட்டேன். ஆளை பாரு ஊருக்கு போனா அவ்வளவு தானா!!”

 

“எதுக்குய்யா என்னை கல்யாணம் பண்ணே!! என்னைய உங்க வீட்டில வைச்சு பூட்டி வைக்கவா!!”

“இல்லை தெரியாம தான் கேக்குறேன் என்ன நினைப்பு உனக்கு. நான் பாட்டுக்கு பேசாம ஊரை விட்டு போயிருப்பேன். குட்டிச்சாத்தானாட்டம் வந்து எல்லாம் கெடுத்துவிட்ட” என்று அவள் பொறிய ஆரம்பித்தாள்.

 

‘சிவகாசி பட்டாசா இருக்காளே இந்த வெடி வெடிக்கிறா!! யப்பா சாமி என்ன கச்சேரி வைச்சிருக்காளோ!! சண்டைய போட தான் கூப்பிட்டு இருக்கா போல. நம்ம மரியாதை ரொம்ப தேயுதே!!’

 

‘இந்தம்மா என்னடான்னா பிரியமா பேசன்னு சொல்லி வைச்சாங்க’ என்று எண்ணிக் கொண்டே அவள் பேச்சு காதில் விழாதவாறு போனை சற்று தள்ளி வைத்தான்.

 

அப்போது பார்த்து அங்கு உள்ளே வந்த அவனுடன் பணிபுரியும் அவன் நெருங்கிய நண்பன் “என்னடா போன்ல யாரு??” என்று கேட்க “யாரோ” என்று இவன் வாயசைக்க

 

“ராங் காலா!! அப்புறம் ஏன் பேசுற?? ஸ்பீக்கர்ல போடு, ஜாலியா இருக்கும்” என்றவாறே போனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டும்விட்டான்.

 

“ஹலோ என்ன நான் சொல்றது கேட்குதா இல்லையா!! பேசாம இருந்தா என்ன அர்த்தம். என்னை எதுக்கு கல்யாணம் பண்ணீங்க”

 

“உங்களால என் நிம்மதி தான் போச்சுன்னா இப்போ படிப்பும் போச்சு. எங்க ஆச்சியை பீஸ் கட்டச் சொன்னா, உம் புருஷன்கிட்ட கேளுங்குது”

“ஆளாளுக்கு என்னைய வைச்சு பூட் பால் ஆடுறீங்களா” என்றாள் அவள்.

 

‘என்னடா இதெல்லாம்’ என்ற ரீதியில் அருகிருந்தவன் வாயசைத்துவிட்டு ஸ்பீக்கரை ஆப் செய்து அவனிடம் கொடுக்க ‘சாரி, பேசிட்டு வர்றேன்’ என்று அவனுக்கு கைக்காட்டி வீரபாண்டியன் வெளியேற ‘இங்க தான் இருப்பேன்’ என்று நண்பனும் வாயசைத்தான்.

 

‘இவ பண்ணுற இம்சை இருக்கே’ என்று எண்ணிக்கொண்டு நண்பனுக்கு தலையாட்டி வெளியில் சென்று அமர்ந்தான் அவன்.

 

வெளியில் வந்து ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் “என்ன பிரச்சனை உனக்கு?? எதுக்கு இப்படி பஜாரி மாதிரி கத்துற??” என்று கேட்டுவிட்டான்.

 

அவன் அப்படி சொன்னதும் அவள் சும்மா விடுவாளா என்ன… “என்ன?? என்ன?? நான் பஜாரியா?? என்னை பார்த்து எப்படி அப்படி சொல்லுவீங்க நீங்க??”

 

“நான் பாட்டுக்கு நான் உண்டு என் வழியுண்டு போயிருப்பேன்ல… நானா உன்கிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன்”

 

“என்னைக் கொண்டு போய் எங்க வீட்டுல விட்டுட்டு மறுநாள் ஒண்ணுமே தெரியாத மாதிரி என் கழுத்துலயும் தாலி கட்டினது நீ தானே”

 

“அதை சொன்னா நான் உனக்கு பஜாரியா தெரியறனா!!” என்று இன்னமும் கோபமாய் குரலுயர்த்தினாள்.

 

‘ஒரு நிமிஷம் மரியாதையா சொல்றா, அடுத்த நிமிஷமே மரியாதை இல்லை… என்ன பொழைப்புடா வீரா உன்னோடது. இவளை பேசாம எங்கயும் போகட்டும்ன்னு விட்டிருக்கணும்’ என்று எண்ணிக்கொண்டான்.

 

“நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே பேசாம உம்முனாமூஞ்சியா இருந்தா என்ன அர்த்தம்”

 

‘இவளிடம் கத்தி பேசினால் வேலைக்கு ஆகாது’ என்று புரிந்து போனது அவனுக்கு. “என்ன பிரச்சனை உனக்கு அதை முதல்ல சொல்லு” என்று அவனே இறங்கி வந்துவிட்டான்.

 

“எங்க என்னை பேசவிட்டீங்க நீங்க??”

 

“சரி இப்போ கேக்குறேன் சொல்லு??”

 

“எனக்கு பீஸ் கட்டணும்”

 

“என்ன பீஸ் எனக்கு புரியலை?? தெளிவா சொல்லு”

 

“என்னோட ஹாஸ்டல் பீஸ் அப்புறம் எக்ஸாம் பீஸ்”

 

“ஹாஸ்டல் பீஸா!! ஏன் ஏன் ஹாஸ்டல்ல இருக்க, நம்ம வீட்டில இருந்து போகலாம் தானே” என்றான் அவள் எங்கு படிக்கிறாள் என்ற விவரம் அறியாதவனாய்.

“எப்படி நம்ம வீட்டில இருந்து தினமும் மதுரைக்கு போயிட்டு வரவா” என்று நக்கல் குரலில் கேட்டாள் அவள்.

 

“என்ன மதுரையா!!” என்றவன் “ஹ்ம்ம் அப்போ சரி, ஆனா அங்க தாமரை வீட்டில” என்று ஆரம்பித்து பாதியில் நிறுத்தினான்.

 

“அதெல்லாம் சரியா வராது…” என்று அவள் சொன்னதை அவனுமே நினைத்திருப்பான் போலும் “நானும் அதான் நினைச்சேன்” என்றான்.

 

“ஹ்ம்ம் சரி எவ்வளவு பீஸ் கட்டணும்ன்னு சொல்லு அப்பாகிட்ட சொல்றேன்” என்றான்.

 

“ஏன்?? எதுக்கு?? எதுக்கு மாமாவை கட்டச் சொல்றீங்க, நீங்க தானே என்னை கட்டுனீங்க அப்போ பீஸும் நீங்க தானே கட்டணும்” என்று வியாக்கியானம் பேசினாள்.

 

‘அப்படியே இவ பல்லை பேத்து கையில கொடுக்கணும். வாய் வாய் வாய் ஓயுதா பாரு. என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்காம நொன நொன பேசிட்டு’ என்று கோபம் வந்தது அவனுக்கு.

 

“கொஞ்சம் வாயை மூடு, என்ன சொல்ல வர்றேன்னு கேட்காம நீ பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்க”

 

“நானே நேரா வந்தா பீஸ் கட்ட முடியும். அப்பாக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுவேன், அவர் உனக்கு பீஸ் கட்டிடுவார் போதுமா”

“இவ்வளவு தானா இல்லை வேற எதுவும் இருக்கா” என்றான்.

 

“ஹ்ம்ம் இருக்கு”

 

“வேற என்ன??” என்றான் அவன் சலிப்பு குரலில்.

 

“பீஸ் கட்டினா போதாது, என் செலவுக்கு யார் காசு கொடுப்பா நீங்க தானே தரணும்” என்றாள் தொடர்ந்து.

 

‘யப்பா இப்பவே கண்ணை கட்டுதே’ என்று எண்ணிக்கொண்டு கண்ணை மூடித் திறந்தான் அவன்.

 

‘எப்படி தான் இவளை இவங்க வீட்டில சமாளிச்சாங்களோ!! ஒரு வேளை இவ தொல்லை பொறுக்க முடியாம தான் என் தலையில கட்டிட்டாங்களா!!’ என்று யோசித்து கொண்டிருந்தான்.

 

“ஹலோ என்ன மைன்ட் வாய்ஸா!! கேள்வி கேட்டா பதில் சொல்லாம என்ன யோசனை வேண்டி கிடக்கு”

 

“சும்மா ஒண்ணொன்னுக்கு என்னால கேட்டிட்டு இருக்க முடியாது. அங்க எங்க வீட்டில ஆச்சி என் அக்கவுண்ட்ல காசை போட்டிருவாங்க”

 

“இல்லை நானே பீரோ திறந்து எடுத்துக்குவேன். இப்போ என்ன புதுசா நியாயம் பேசிட்டு இருக்கு அந்த கிழவி. என்னைக்காச்சும் என்கிட்ட மாட்டாமலா போயிரும் அப்போ பேசிக்கறேன் கிழவிய” என்று எங்கோ ஆரம்பித்து எதையோ இழுத்தாள்.

“ஹேய் உனக்கு கொஞ்சம் கூட மரியாதையா பேச வராதா. பெரியவங்களை இப்படி தான் பேசறதா!!”

 

“எல்லாம் எங்களுக்கு தெரியும், அது எங்க ஆச்சி நான் எப்படி வேணா பேசுவேன். சும்மா வெட்டியா பேசிட்டு இல்லாம காசை அக்கவுன்ட்ல போட்டு விடுங்க”

 

“என்னோட அக்கவுன்ட் நம்பர் எல்லாம் வாட்ஸ் அப்ல அனுப்பறேன். வாட்ஸ் அப்ல இருக்கீங்க தானே, அதெல்லாம் இருப்பீங்க” என்று அவளே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டாள்.

 

“சரி போனை வைக்குறேன் எனக்கு தூக்கம் வருது” என்று சொல்லி மேலே அவனை எதுவும் பேச விடாமல் போனை அணைத்துவிட்டாள்.

 

‘இவளை என்ன செய்ய’ என்ற ரீதியில் தான் அவனுக்கு யோசனை போனது. ‘நாளைக்கு அப்பாகிட்ட பேசுவோம்’ என்று எண்ணிக்கொண்டு அவன் அறைக்குள் நுழைய அவன் நண்பன் ரியாஸ் அமர்திருந்தான்.

 

‘இவனுக்கு என்ன பதில் சொல்ல’ என்ற யோசனையோடு உள்ளே நுழைந்தான் அவன்.

 

“என்னடா எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு நல்லா யோசனை பண்ணிட்டியா!!” என்றான் அவன் கிண்டலாய்.

 

‘அடப்பாவி மனசுல இருக்கறதை அப்படியே படிக்கிறானே’ என்று எண்ணிக் கொண்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா, எப்படி சொல்றதுன்னு தெரியலை” என்று ஆரம்பித்தவன் அவன் திருமணம் நடந்த சூழலை சொல்லி முடித்திருந்தான் நண்பனிடம்.

 

“ஏன்டா இதுக்காக எல்லாம் கூட கல்யாணம் பண்ணி வைப்பாங்களாடா!! முத உங்க ஊருக்கு நான் வரணும்டா எனக்கும் இப்படி ஒரு கல்யாணம் நடந்தா நல்லா தான் இருக்கும்” என்றான் ரியாஸ் கிண்டல் தொனியில்.

 

“நீ வேற ஏன்டா படுத்துற, அங்க அவ படுத்துற பாடு தாங்க முடியலை என்னால. ஏன் கல்யாணம் பண்ணோம்ன்னு இருக்கு” என்று சலித்து.

 

“சரி ஒண்ணு கேட்கறேன் தப்பா எடுத்துக்க மாட்டியே” என்று பீடிகை போட்ட நண்பனை ஏறிட்டான் வீரபாண்டியன்.

 

“என்ன சொல்லு??” என்றான்.

 

“உண்மையை சொல்லணும்” என்றான் இன்னமும் விஷயம் என்னவென்றே சொல்லாமல்.

 

“என்ன நீயும் என் தங்கை மாதிரி நான் அவளை லவ் பண்ணானான்னு தானே கேட்க போறே!! அடப்போடா நீ வேற!!”

 

“எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. நான் அவளை பார்த்து ரொம்ப வருஷங்கள் இருக்கும்”

“சின்ன வயசுல அவங்க வீட்டு சுவர் ஏறி குதிச்சு போய் தான் எப்பவும் விளையாடுவேன். அப்போ அவளை பார்த்திருக்கேன் அவளோ தான் ஞாபகமிருக்கு”

 

“அதுக்கு பிறகு நான் அவளை இப்போ தான் பார்த்தேன். அவ எங்க வீட்டு சுவர் ஏறி குதிச்ச பிறகு தான்” என்றான் வீரா நீளமாய்.

 

‘உண்மையை தான் சொல்றானா’ என்று நண்பனின் முகத்தை பார்த்தவனுக்கு அதில் பொய்யில்லை என்று புரிந்தது.

 

“எப்படியோ விடு உன் கல்யாணம் நல்ல படியா நடந்திடுச்சுல அதுவே சந்தோசம் தான். என்னை விட பெரியவன் இன்னும் கல்யாணம் ஆகாம நீ இருக்கியேன்னு தான் நானே இன்னும் கல்யாணம் பண்ணாம இருந்தேன்”

 

“டேய் ரியாஸ் அவ்வளவு நல்லவனாடா நீ!! டேய் உனக்கும் எனக்கும் ஒரு வயசு தானே வித்தியாசம். என்னமோ நான் தான் உன் கையை பிடிச்சு கல்யாணம் பண்ணிக்காதன்னு சொன்ன மாதிரி எதுக்குடா இவ்வளவு பில்டப்பு” என்றான் நண்பன்.

 

“சரி சரி அரசியல்ல இதெல்லாம் சாதாரணம். எங்க சிஸ்டர் போட்டோவை காட்டு என்கிட்ட”

 

“சிஸ்டரா” என்று கேட்டவனின் முதுகில் ஒன்று வைத்தான். “இப்போ நீ தான்டா ஓவரா அலம்பல் பண்ணுற, உன் பொண்டாட்டி போட்டோ காட்டு” என்றான்.

 

“ரியாஸ் இப்போ என்கிட்ட எந்த போட்டோவும் இல்லைடா” என்றவனை பார்த்து ரியாஸ் முறைத்தான்.

 

“நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்றான் அதே முறைப்போடு.

 

“ஆமா நான் அப்படியே அவளை விரும்பி கட்டிக்கிட்டேன் பாரு. போட்டோவை பர்ஸ்லேயே வைச்சுட்டு சுத்த” என்றான் வீரா பதிலுக்கு.

 

“டேய் வீரா இதெல்லாம் ரொம்ப ஓவருடா, போனா போகுதுன்னு இன்னைக்கு உன்னை விடறேன். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. நாளைக்கு எனக்கு போட்டோ காட்டணும்” என்றான்.

 

“சரி நீ தூங்கு நான் கிளம்பறேன்” என்று அவன் கிளம்பப் போக “டேய் டேய் இரு இரு, அவளே போட்டோ போட்டு தான் வைச்சிருக்கா” என்று கைபேசியை நோண்டிக்கொண்டே நண்பனின் அருகில் வந்தான் வீரா.

 

“என்னடா சொல்ற??”

 

“அம்மிணி வாட்ஸ் அப்ல இருக்காங்க போல”

 

“போனு வாங்கி ஒரு நாள் முழுசா ஆகலை இங்க பாரு செல்பி எடுத்து அதுக்குள்ள ப்ரோபைல்ல போட்டிருக்கா பாரேன்” என்றவாறே கைபேசியை நண்பனிடம் காட்டினான்.

 

“நல்லா தான் இருக்காங்கடா சிஸ்டர், நல்ல மேட்ச் தான் உனக்கும் அவங்களுக்கும்” என்று பாராட்டு பத்திரம் வாசித்து அங்கிருந்து நகர்ந்தான் ரியாஸ்.

 

….. “ஏம்மா செவ்வந்தி இங்க கொஞ்சம் வாயேன்” என்று அழைத்த மாமனாரின் குரல் அவளுக்கு புதிது.

 

எப்போதும் மாமியாரே அவளை அழைத்து எதுவும் பேசுவார். மாமனார் எதற்காக அழைக்கிறார் என்ற யோசனையோடு அவள் அவர் முன் வந்து நின்றாள்.

 

“சொல்லுங்க மாமா”

 

“ஏம்மா உனக்கு காலேஜ்க்கு பீஸ் கட்டணுமா??” என்றார்.

 

“அ… அது வந்து ஆமா மாமா”

 

“ஏம்மா எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதாம்மா. அவன்கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொல்லலை, எங்கிட்டயும் சொல்லி இருக்கலாமே” என்றதும் ரஞ்சிதம் மருமகளை பார்த்தார்.

 

“என்ன பேசறீங்க நீங்க!! நம்மகிட்ட கேட்க சங்கடப்படுவால… என்ன இப்போ நம்ம புள்ளைகிட்ட தானே சொல்லியிருக்கா அதிலென்ன தப்பு”

 

“அவன்கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லுவா…” என்று மருமகளுக்காய் பரிந்தார் அவர்.

 

மாமனார் இப்படி கேட்பார் என்று செவ்வந்தி யோசிக்கவேயில்லை. அவளாகவே சொல்ல வேண்டும் என்று தான் எண்ணியிருந்தாள், ஏதோவொரு வேலையில் சொல்ல மறந்திருந்தாள்.

 

‘அதுக்குள்ள அவன் போட்டுக் கொடுத்திட்டான் போல’ என்று மறக்காமல் கணவனை மரியாதையின்றி மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.

 

மாமியார் அவளுக்கு பரிந்து பேசுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனிடம் அடித்து பேசுவது போல எல்லோரிடமும் பேச முடியாதே…

 

அவன் முடியாது என்று சொன்னால் என்ன செய்வது என்று பலவாறு யோசித்தவள் அவன் சரி என்றதும் சொல்லிக்கலாம் என்று இருந்துவிட்டிருந்தாள்.

 

மாமியாரும் மாமனாரும் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது. பதில் சொல்லாமல் இருந்தாள் நன்றாயிராது என்று உணர்ந்திருந்தாள்.

 

“தப்பா எடுத்துக்காதீங்க மாமா… அவர்கிட்ட பேசிட்டு அப்புறம் உங்ககிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன். காலையில எனக்கு சுத்தமா மறந்து போச்சுங்க மாமா”

 

“நான் சொல்லக் கூடாதுன்னு எல்லாம் நினைக்கலை. மாமா, அத்தை ரெண்டு பேரும் என்னை மன்னிச்சுடுங்க”

“அச்சோ மன்னிப்பெல்லாம் எதுக்கும்மா…” என்றார் சக்திவேல்.

 

“இல்லை மாமா நான் சொல்லாம விட்டது தப்பு தானே”

 

“ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமேன்னு தான்மா கேட்டேன். நீ எதுவும் தப்பா எடுத்துக்காத”

 

“ஆமாம்மா மதுரைன்னா நீ நம்ம தாமரை வீட்டுல தங்கலாமேம்மா” என்றார் சக்திவேல்.

 

“அதெல்லாம் வேணாங்க சரியா வராது. அவங்க மாமனார் மாமியாவோட கூட்டு குடும்பமா இருக்கா. ஒரு நாள் ரெண்டு நாள்ன்னா பரவாயில்லை”

 

“அங்கவே தங்குறது எல்லாம் சரியா வராது” என்று மறுத்தார் ரஞ்சிதம்.

 

ரஞ்சிதம் எளிதில் வேண்டாம் என்று ஒன்றை மறுப்பதில்லை. அவர் மறுத்தால் அதில் காரணமிருக்கும் என்பதால் சக்திவேல் மேலும் எதுவும் சொல்லவில்லை.

 

இரண்டொரு நாளில் அவள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதால் சக்திவேலுக்கும் ரஞ்சிததிற்கும் முகம் வாடிப் போனது.

 

வீட்டில வளவளவென்று பேசிக்கொண்டிருக்கும் பெண் அவளும் ஊருக்கு போகிறாள் மீண்டும் தங்களுக்கு தனிமையே வரமா இல்லை சாபமா என்ற ரீதியில் இருந்தனர் இருவரும்.

 

ஊருக்கு கிளம்பும் முன் செவ்வந்தியை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தனர் சக்திவேலுவும் ரஞ்சிதமும்.

 

அவர்கள் உடன் வந்ததாலேயே அவளும் அங்கு செல்ல வேண்டியதாகி போனது இல்லையென்றால் அவள் சென்றே இருக்க மாட்டாள்.

 

அன்னையிடம் மட்டும் தனியே சென்று விடைப்பெற்றவள் ஆச்சியிடமும் முல்லையிடமும் ஒரு தலையசைப்போடு நிறுத்திக் கொண்டாள்.

 

இருவருமாக மருமகளை கூட்டிச் சென்று மதுரையில் விட்டு வந்தனர். தாமரை வீட்டையும் காண்பித்து தேவைப்பட்டால் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.

 

தாமரைக்கு தான் அவளை அங்கு தங்க வைக்கவில்லை என்று வருத்தம். இருந்தாலும் அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

 

ஹாஸ்டலில் அவளை விட்டதும் அவள் கையில் நூறு ரூபாய் தாள் அடங்கிய கட்டு ஒன்றை கொடுத்தார் ரஞ்சிதம்.

 

“என்ன அத்தை இதெல்லாம்” என்றாள் அவள் திகைப்பாக.

 

“உங்க மாமா தான் கொடுக்க சொன்னாங்கம்மா… இங்க உனக்கு செலவிருக்கும்ல”

 

“மாமா அவர் அக்கவுன்ட்ல காசு போட்டிருக்காரு மாமா. நீங்க வேற எதுக்கு கொடுக்கறீங்க. எனக்கு அவ்வளவு செலவெல்லாம் இங்க இல்லை மாமா” என்று சொல்லி அதை ரஞ்சிதத்திடம் கொடுக்க முயன்றாள்.

 

“ஏம்மா எங்க மகன் கொடுத்தா தான் வாங்குவியா, மாமா கொடுத்தா வேனமாம்மா உனக்கு. உங்கப்பா இருந்திருந்தா கொடுத்திருக்க மாட்டாராம்மா” என்று சக்திவேல் சொன்னதும் செவ்வந்தியின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று உருண்டு வழிந்தது…..

Advertisement