Advertisement

அத்தியாயம் – 6

 

மறுநாள் மறுவீட்டு விருந்தென்று மணமக்கள் மற்றும் வீரபாண்டியனின் வீட்டினர் அனைவரும் செவ்வந்தி வீட்டிற்கு சென்றனர்.

 

முதல் நாள் அழுது வடிந்திருந்ததில் செவ்வந்தியின் முகம் சிவந்து லேசாய் வீங்கியது போலிருந்தது.

 

என்ன முயன்றும் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. வீட்டினர் எல்லாரும் சகஜமாய் இருந்த போதிலும் தான் மட்டும் தனிமைப்பட்ட உணர்வு அவளுக்கு.

 

“அக்கா என்னோட வாயேன்” என்று முல்லை அவளை அழைத்துச் செல்ல கடமைக்காகவே அவளுடன் எழுந்து சென்றாள்.

 

“ஏன்க்கா இப்படி இருக்க?? அத்தான் எதுவும் உன்னை திட்டினாரா?? எங்களை எல்லாம் மிஸ் பண்ணுறேன்னு பீல் பண்ணியா??” என்று சொல்லும் போதே முல்லைக்கு அழுகை வந்தது.

 

“ஹேய் அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள்.

 

“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன்க்கா… நீ இல்லாம எனக்கு ஒரு மாதிரியா இருக்குக்கா… உன்னோட சண்டை போடாம ஒரு நாள் போனது ஒரு யுகம் போல இருக்குக்கா” என்று செவ்வந்தியை கட்டிக்கொண்டு அழுதாள் முல்லை.

செவ்வந்தியின் மனது லேசானது தங்கையின் பேச்சில். தான் தனிமைப்படவில்லை என்ற உணர்வு அவளுக்கு வந்தது.

 

மூத்தவளாய் முதன் முதலாய் பொறுப்பான வார்த்தைகள் வெளி வந்தது அவளிடமிருந்து.

 

“இங்க பாரு முல்லை நீ சின்ன பொண்ணு இல்லை. காலேஜ் போக ஆரம்பிச்சுட்டே, என்னமோ சின்ன குழந்தை மாதிரி அழற”

 

“ஆச்சிக்கும் அம்மாக்கும் இனி நீ தானே கூடவே இருக்கணும். நல்லா படி அவங்களை நல்லா பார்த்துக்கோ. நான் ஒண்ணும் ரொம்ப தூரம் எல்லாம் போகலையே”

 

“இங்க இருக்கற பக்கத்து வீடு தானே. நீ நினைச்சா வந்து எட்டிப்பார்க்கற தூரம் தான் சரியா. எப்போ வேணாலும் வந்து என்னை பார்த்துப் போ” என்று ஆறுதல் செய்தாள்.

 

எதேச்சையாய் அங்கு வந்த மதுராம்பாள் பேத்தியின் பேச்சில் திருப்தியுற்றவராக அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

 

பின் அவள் உடைமைகள் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளுக்கு உள்ளிருந்து அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

 

அவள் முன்பிருந்த அறைக்குள் தானிருந்தாள். வீரபாண்டியன் வெளியே தனித்திருந்தான். “நீங்க உள்ளார போய் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லவும் வேறு வழியில்லாமல் அவன் அந்த அறைக்குள் நுழைந்தான்.

 

செவ்வந்தியோ குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள் அவள் அறையில்.

 

‘எதுக்கு இப்போ அழறா… தாமரை கல்யாணம் ஆகி போகும் போது அழுதாளே அது மாதிரி இருக்குமோ’

 

‘இவ என்ன அவளை மாதிரி வேற ஊருக்கு போகப் போறா இதோ இருக்கற பக்கத்து வீடு அதுக்கா இப்படி அலப்பறை பண்ணுறா’

 

‘ச்சே… ச்சே இருக்காது… அப்படி வீட்டை மிஸ் பண்ணுறவளா இருந்தா அவங்க வீட்டு ஆளுங்களை பார்த்து தானே அழணும்’

 

‘இப்படி தனியா வந்து அழ வேண்டிய அவசியம் என்ன… ஒரு வேளை என்னை கட்டிக்கிட்டது இவளுக்கு சுத்தமா பிடிக்கலை போல. ச்சே பெரிய தப்பு பண்ணிட்டோமோ’ என்று அவன் மனசாட்சி அவனை கொன்றது.

 

மீண்டும் ஒரு குற்றவுணர்வில் சிக்கித் தவிக்கிறோமே இதற்கு பரிகாரம் என்பதே கிடையாதே என்றிருந்தது அவனுக்கு.

 

அவளுக்கு விருப்பமிருந்தால் அவளுடன் வாழ அவன் தயாராகவே இருந்தான். அவன் யோசிக்க மறந்த ஒன்று வாழ்க்கை என்பது இருவருமே பிடித்து வாழ வேண்டும் என்பது.

 

ஏதோ செய்த தப்பிற்கு பரிகாரம் போல் இருந்தது அவன் எண்ணம். அது தவறென்று அவனும் உணரவேயில்லை.

 

பிரச்சனையை அவன் பார்வையில் இருந்து பார்த்தவனுக்கு அவளுக்கு என்ன பிரச்சனை என்பதை உணரவேயில்லை. அதை அவள் உணர்த்தவும் அவன் அவகாசம் கொடுக்கவில்லை.

 

ஊருக்கே நல்ல பிள்ளையாக இருந்தாலும் பெற்ற தாயை மதிப்பவனாய் இருந்தாலும் கட்டிய மனைவிக்கு எவன் மரியாதை செய்கிறானோ அவன் மட்டுமே நல்ல கனவானாக இருக்க முடியும்.

 

வீரபாண்டியன் அவளிடத்தில் தவறினான். தெரிந்து அல்ல தெரியாமல் தான் தவறினான். புரிந்தால் என் செய்வான்??

 

அழுதுக் கொண்டிருந்தவளை சமாதானம் செய்யாமல் வெறுமே அவளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

யாரோ ஒரு பெண் அழுகிறாள் என்று பரிதாபப்படுவது போல் பார்த்து கொண்டிருந்தான். செவ்வந்திக்கு அவன் அறைக்கு வந்ததோ தன்னையே வெகுநேரமாய் பார்த்துக் கொண்டிருப்பதோ தெரியாது.

அவள் விசும்பல் தானாய் அடங்கி ஒருவாறு அவள் தன்னை சமாதானம் செய்து நிமிர்ந்து பார்க்க வீரபாண்டியன் அமர்ந்திருப்பது கண்ணில்பட்டது.

 

‘இவர் எப்போ வந்தார்’ என்று எண்ணிக்கொண்டு குளியலறை சென்று முகத்தை அடித்து கழுவியவள் அவள் பெட்டியை எடுத்து வைத்திருந்தாள்.

 

‘நான் அழுத்திட்டு இருந்ததை வேடிக்கை பார்த்தாரா இவர்… என்னை சமாதானம் செய்யணும்ன்னு தோணவேயில்லையா…’ என்று லேசாய் ஒரு சுணக்கம் மனதில்.

 

‘என் வீட்டில இருக்கவங்களுக்கே என்னை பத்தி கவலையில்லை. இவனுக்கு மட்டும் இருக்குமா என்ன!!’ என்ற எண்ணம் எழவும் அவனை கண்டுக்கொள்ளாமல் வெளியேறினாள்.

 

முதலிரவன்று அவனிடம் பேசியது தான் அதன்பின் அவனிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை. அதிகபட்சமாய் இருவருமே ஆம் இல்லை என்பதான பேச்சுக்களையே பகிர்ந்து கொண்டிருந்தனர்.

 

மறுநாள் அவன் ஊருக்கு கிளம்ப வேண்டும். முதல் நாளிரவு வீட்டினர் அனைவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

 

வீராவும் அவன் தந்தையும் முதலில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். பின்னர் பெண்கள் சாப்பிட்டு எழவும் வீரா பேச்சை ஆரம்பித்தான்.

“நாளைக்கு நைட் நான் ஊருக்கு கிளம்பறேன்” என்றுவிட்டு அவன் இடைவெளி விட அனைவரின் பார்வையும் செவ்வந்தியை தொட்டு நின்றது.

 

‘இதென்ன எல்லாரும் என்னை பார்க்கறாங்க. என்னமோ நான் தான் அவரை துரத்தி விடுற மாதிரி. எனக்கே இப்போ தானே தெரியுது’ என்று எண்ணிக்கொண்டவள் அவர்களிடம் எனக்கு தெரியாது என்று பதில் பார்வை கொடுத்தாள்.

 

“ஏலே பாண்டி உன் மனசுல என்னலே நினைச்சுட்டு இருக்க, கல்யாணம் முடிச்சு முழுசா ரெண்டு நாள் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள ஊருக்கு போகணும் சொல்ற, உன் மனசுல என்னலே நினைச்சுட்டு இருக்க நீ” என்று பொரிந்தார் மனோரஞ்சிதம்.

 

“அம்மா என் வேலை அப்படி எனக்கு உடனே கிளம்பியாகணும்” என்றான்.

 

“அப்பா அம்மாக்கு சொல்லுங்க” என்றுவிட்டு அவன் எழுந்தான்.

 

“வீரா கொஞ்சம் உட்காருய்யா” என்றார் அவன் தந்தை சக்திவேல்.

 

எதுவும் பேசாமல் உடனே அமர்ந்தான். ‘ஓஹ் இவருக்கு அப்பாகிட்ட தான் கொஞ்சம் பயம் போல’ என்று எண்ணிக்கொண்டாள் செவ்வந்தி.

 

“உடனே கிளம்பி தான் ஆகணுமா!!” என்றார் அவன் சொன்னதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன்.

 

“ஆமாப்பா!!”

 

“ஹ்ம்ம் சரி!! அப்போ மருமகளையும் கூடவே கூட்டிட்டு போகலாமே!!” என்று அவர் கூற வீராவின் பார்வையும் செவ்வந்தியின் பார்வையும் ‘என்ன என்பதாய்’ ஒரு முறை தொட்டு நின்றது.

 

இருவருக்குமே அதில் உடன்பாடில்லை. ‘இவளை இப்போது கூட்டிட்டு போக முடியாது’ என்று அவனும் ‘இவரோட போனா என் படிப்பு என்னாகுறது’ என்று அவளும் எண்ணிக் கொண்டனர்.

 

“அப்பா நினைச்சவுடனே எல்லாம் கூட்டிட்டு போக முடியாதுப்பா. அதுக்கு சில பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கு” என்றான்.

 

“எவ்வளோ நாளாகும்” என்றார் அவர் நாள் கணக்கில்.

 

“எவ்வளோ நாளாகும்ன்னு எல்லாம் சொல்ல முடியாது. நான் எல்லாம் ரெடி பண்ணிட்டு சொல்றேன்ப்பா” என்றான்.

 

“சரி சீக்கிரம் கூட்டிட்டு போகுற மாதிரி இருக்கட்டும். ஆளுக்கொரு பக்கம் எல்லாம் இருக்கறது சரியில்லை” என்றுவிட்டு அவர் எழுந்து சென்றுவிட்டார்.

 

“இந்த மனுஷன் என்ன இப்படி சொல்லிட்டு போறார். அவனை அதட்டி ஒரு மாசம் இருக்க சொல்லுவாருன்னு பார்த்தா என்னென்னமோ சொல்லிட்டு போறார்” என்று வாய்விட்டு புலம்பினார் மனோரஞ்சிதம்.

 

மருமகளை பார்த்து “நீ ஒண்ணும் விசனப்படாதேம்மா!! நான் உங்க மாமாகிட்ட பேசறேன்” என்றார் அவர்.

 

“அத்தை விடுங்க எதுவும் பேச வேணாம் அவர் எப்போ கூட்டி போறாரோ அப்போ போய்க்கறேன்” என்றாள் பெரிய மனம் படைத்தவள் போல்.

 

“அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அப்பப்போ இப்படி தான் கிறுக்கு பிடிச்சுக்கும்” என்றார் அவர்.

 

“விடுங்க அத்தை நீங்க பீல் பண்ணாதீங்க” என்றாள்.

 

“அத்தை தாமரை அண்ணி எங்க??”

 

“அவளுக்கு முடியலைம்மா அதான் படுத்திருக்கா” என்றார் அவர்.

 

“அச்சோ மறந்திட்டேன் பாரேன், இந்த தாமரை கைசுத்தல் முறுக்கு கேட்டா, அந்த மாரியம்மாகிட்ட சொல்லி செய்யச் சொல்லணும் நான் மறந்திட்டேன் பாரு. நான் போய் அவட்ட ஒரு எட்டு சொல்லிட்டு வந்திடறேன்” என்றார்.

 

“அத்தை உங்களுக்கு செய்யத் தெரியாதா??” என்ற மருமகளிடம் “தெரியாதும்மா எனக்கு” என்றார் அவர்.

“நான் செஞ்சு தரட்டுமா??”

 

“உனக்கு தெரியுமாம்மா??” என்றார் அவர் ஆச்சரியமாய்.

 

“ஹ்ம்ம் தெரியும் அத்தை ஆச்சி செய்யும் போது பார்த்திருக்கேன். நானும் அவங்களோட சேர்ந்து செஞ்சிருக்கேன்”

 

“அப்போ என்ன பண்ணணும் சொல்லும்மா நான் உனக்கு உதவி பண்றேன்” என்றவருடன் சேர்ந்து என்னனென்ன வேண்டும் என்று சேர்ந்து பேசி தயார் செய்தனர் இருவரும்.

 

வீரபாண்டியன் அவன் அறைக்கு சென்று இன்னும் செவ்வந்தி வரவில்லையே என்று அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தான்.

 

அவளோ தன் மாமியாருடன் சேர்ந்து முறுக்கு சுற்றி எண்ணையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

செவ்வந்தி பதமாய் மூவிரல் கொண்டு அழகாய் முறுக்கி முறுக்கி எடுத்து வைக்க ரஞ்சிதம் அவற்றை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தார்.

 

இருவருமாய் வேலை முடித்து எழும் போது நேரம் மாலை நெருங்கி இருந்தது. இடையில் வீரபாண்டியனுக்கு ஒரு முறை அவள் உணவை எடுத்துக்கொண்டு பின் வீட்டுக்கு சென்று பரிமாறிவிட்டு வந்திருந்தாள்.

 

‘இவ்வளவு நேரமாக அவள் எங்கே சென்றாள்’ என்று கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் வாய்க்குள் வந்ததை உணவோடு சேர்ந்து விழுங்கிவிட்டான்.

 

அவள் தன் கடமை போல் அவனுக்கு உணவை வைத்து அவன் சாப்பிட்டதும் எழுந்து சென்றுவிட்டாள்.

 

‘எதாச்சும் பேசுறாளா பாரு. நல்லா அமுக்குணி மாதிரி இருக்கா’ என்று நினைத்துக்கொண்டான் வீரா. (இவரு அப்படியே பேசிட்டாரு)

 

“நீ போய் கொஞ்ச நேரம் படும்மா. இவன் வேற நாளைக்கே ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்கான். நீங்க சாயங்காலம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க” என்றுவிட்டு சென்றுவிட்டார் ரஞ்சிதம்.

 

‘இவரோட நான் கோவிலுக்கு வேற போகணும் அதான் ஒண்ணு குறையா இருக்கு இப்போ’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டவள் பின்னால் இருந்த வீட்டிற்கு சென்று அவர்கள் அறைக்குள் நுழைய அவன் கட்டிலில் உறங்கி விட்டிருந்தான்.

 

‘அப்போ நான் கீழ படுக்கணுமா இப்போ!! என்னால முடியாது, இடுப்பு வலிக்குது’ என்று எண்ணிக்கொண்டவள் சத்தமில்லாமல் கட்டிலின் மறுமுனைக்கு சென்று படுத்துக்கொண்டாள்.

 

மாலை அவள் விழித்து எழும் போது சுகமாய் தலையணைக்குள்(!) மீண்டும் முகம் புதைக்க குறுகுறுவென்றிருந்தது.

 

லேசாய் கண் விழித்து பார்த்தவள் கணவனின் மார்பில் ஒண்டியிருந்ததை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க நல்ல வேளையாக அவன் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான்.

 

‘அப்பாடா நல்ல வேளை இவர் பார்க்கலை’ என்று எண்ணிக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் முகம் கழுவி வந்து அந்த பால்கனியிலிருந்து அங்கிருந்த தோட்டத்து மரங்களையும் செடிகளையும் பார்த்தாள்.

 

அப்படி பார்த்துக் கொண்டிருப்பதே மனதிற்கு லேசாய் இருப்பது போன்ற உணர்வு அவளுக்கு. அங்கிருந்த மனோரஞ்சிதப்பூவை பார்த்ததும் தன் முட்டாள்த்தனம் நினைவிற்கு வந்தது அவளுக்கு.

 

ஆம் இந்த பூவிற்கு ஆசைப்பட்டு தான் அவள் இன்று வீரபாண்டியனுக்கு மனைவியாகிருப்பதே. அவள் நினைவுகள் அன்றைய நாளை அசைப்போட்டது.

 

____________________

 

செவ்வந்திக்கு அந்த பூவென்றால் கொள்ளைப்பிரியம் அவள் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போது அங்கிருந்த மனோரஞ்சித பூவை  பறித்து வைத்துக்கொள்வது அவளுக்கு பிடிக்கும்.

 

பல வகையான பழங்கள் சேர்ந்தது போன்றதொரு வாசனையை அவள் அதில் உணர்வாள். அந்த பூ அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தவள் தோழியுடன் ஊரை சுற்றி வந்தாள்.

 

“டி மயிலு நம்மூருல இந்த மனோரஞ்சிதமெல்லாம் கிடையாதாடி. இந்த மல்லி முல்லை தான் அதிகமிருக்கு”

 

“கனகாம்பரம் கூட நெறைய தட்டுப்படுது ஆனா இந்த மனோரஞ்சிதம் மட்டும் ஆப்புட மாட்டேங்குது. ஆனா பாரு எனக்கு தினமும் அந்த பூவோட வாசம் மட்டும் வருதுடி எங்க இருந்து வருதுன்னு தான் தெரியலை” என்றாள் தோழியிடம்.

 

“அடி இவளே உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டிலவே வைச்சுக்கிட்டு வாசமடிக்குதாம்ல. நல்லா தான்டி இருக்கு டாக்டரு” என்றாள் மயில் என்பவள்.

 

அந்த ஊரிலேயே வீரபாண்டியனின் வீட்டில் தான் மனோரஞ்சிதம் உள்ளது. அவன் அன்னையின் பால் உள்ள அன்பினால் அதை வாங்கி வந்து நட்டிருந்தான்.

 

“யார் வீட்டைடி சொல்ற அந்த மிலிட்டரிக்காரன் வீட்டிலையா இருக்கு. அங்க வெறும் மல்லி முல்லை தானேடி வைச்சிருக்காங்க. அவங்க பூ விக்கறவங்க தானே” என்றாள் செவ்வந்தி.

 

“அந்த வீட்டில ஒரு வளர்ந்து கெட்டவன் அதான் அந்த மிலிட்டரிக்காரன் இருக்கானே அவன் பின்னாடி தனியா ஒரு வீடு கட்டியிருக்கானாம்ல அதுக்கு பின்னாடி தான் இதுவும் இருக்காம்”

 

“நம்ம பின்னாடி தெரு கோபாலு தான் ஒரு வட்டம் என்ட்ட சொன்னான். ஆமா நீ எதுக்குடி அந்த பூவை கேட்குற”

 

“எனக்கு அந்த பூவை ரொம்ப பிடிக்கும்டி. எங்க ஹாஸ்டல்ல உண்டு, தினம் வாசமடிக்குதே எங்க கிடைக்குது வாங்கி வைப்போம்ன்னு தான் கேட்டேன்”

 

“அடியே உங்களுக்கும் அந்த வீட்டுக்கும் தான் ஆகாதே. அப்புறம் நீ எப்படிடி அந்த பூவை போய் வாங்குவ” என்றாள் மயிலு.

 

“ஆமா பெரிய இந்தியா பாகிஸ்தான் சண்டை. ஏதோ உப்பு பெறாத விஷயத்துக்கு தான் பெரிசுக சண்டை போட்டிருக்கும். அதெல்லாம் நாம கண்டுக்கறதா” என்றாள் செவ்வந்தி அலட்சியமாய்.

 

“எதுக்கும் உங்க ஆச்சிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்க. உங்களுக்கு என்ன உங்களுக்கு இருக்க வசதிக்கு ஒரு மரத்தையே பிடுங்கி வந்து உங்க வீட்டுல நட்டு வைக்கலாமே” என்றாள் அவளின் தோழி.

 

“எங்க நட்டு வைக்க.. எங்க கிழவி, வாழை மரம் தென்னை மரத்தை தவிர வேற வைக்கவே வைக்காது. நான் சின்ன வயசுல இருந்து பல முறை சண்டை போட்டு பார்த்திட்டேன்”

 

“சரி அந்த கதை விடு, இப்போ எனக்கு அந்த பூ வேணும் என்ன செய்யலாம்”

 

“அடியே செவ்வி??”

 

“ஹேய் மயிலு என்னை அப்படி கூப்பிடாதன்னு எத்தனை முறை புள்ள உன்ட்ட சொல்றது. ஒழுங்கா சக்தின்னு கூப்பிடு” என்றாள்.

 

“அடி போடி செவ்வந்தியை நான் சின்ன வயசுல இருந்து செவ்வின்னு தான் கூப்பிட்டு இருக்கேன். நீ புதுசா ஹாஸ்டல் போயிட்டு வந்து சக்தின்னு கூப்பிட சொன்னா கூப்பிட்டுருவோமா” என்றாள் அவள்.

 

“எப்படியோ போ??” என்றாள் செவ்வந்தி.

 

“ஏன் செவ்வி அப்படி அந்த பூ வேணும்ன்னு என்ன பிடிவாதம் உனக்கு” என்று லேசாய் ஆரம்பித்தாள் மயிலு.

 

“தெரியலை ஒரு வேளை வாசம் வராம இருந்திருந்தா கூட அந்த நினைப்பு வந்திருக்காது. தினமும் அப்படி ஒரு வாசனை வருது கண்ணுல பட்டிருந்தா மொத்தமா பறிச்சிருப்பேன்” என்றாள் செவ்வந்தி மனதை மறையாமல்.

 

செவ்வந்தி சிறு வயது முதலே குறும்புக்காரி தான். முல்லையை போல் சொன்னதை கேட்கும் ரகமல்ல அவள். சொன்னதை செய்யவே கூடாது என்று வீம்பு செய்பவள்.

 

அவளுக்கு சரியென்று பட்டால் மட்டுமே அதை செய்வாள் இல்லையேல் பிடிவாதம் தான். ஆனால் அவள் பிடிவாதமெல்லாம் தவிடுபொடியாக்கினார் மதுராம்பாள்.

 

மதுராம்பாள் ஒருவருக்கே அவள் சற்று அமைதியாவாள். ஏனென்று தெரியாவிட்டாலும் அந்த குரலின் ஆளுமைக்கு அடிபணிந்தே அவளுக்கு வழக்கம்.

 

அவர் முன் சரியென்று தலையாட்டும் அவள் அவர் தலை மறைந்ததும் தன் பிடிவாதத்தை தொடங்கிவிடுவாள்.

 

“ஏன் செவ்வி அங்க சுவரு கிவரு ஏறி குதிச்சிறாத புள்ளை. உங்க ஆச்சிக்கு தெரிஞ்சுது அம்புட்டு தான் பார்த்துக்க, சொல்றது ஞாபகமிருக்கட்டும்”

 

“நீ பேசாம உங்க ஹாஸ்டல்ல போகும் போது ஒரு கிளையை ஓடிச்சு கொண்டு வந்து உங்க வீட்டுல வை அதேன் நல்லது” என்று செவ்வந்திக்கு அறிவுரை சொல்வதாய் நினைத்து அவள் சொல்ல செவ்வந்தி பேச்சின் முதல் பாதியை மட்டும் மண்டையில் ஏற்றிக் கொண்டிருந்தாள்.

 

‘ஆச்சிக்கு பிடிக்காததை செய்தா தான் என்ன’ என்று மண்டைக்குள் குறுகுறுவென்று ஓடியது அவளுக்கு.

 

தோழியிடம் கூட அதைப்பற்றி பகிராதவள் “சரி மயிலு நீ வீட்டுக்கு போ நாளைக்கு பார்ப்போம்” என்று அவளை வழியனுப்பி வைத்தவள் திட்டம் தீட்டியது அடுத்த வீட்டு சுவர் எப்படி ஏறி குதிப்பது என்று தான்.

 

அவள் வீட்டில் இரவு பகல் என்று எந்நேரமும் முன் வாயிலில் ஒரு ஆள் இருந்து கொண்டே இருப்பர். இரவு நேரத்தில் முன் வாயிலில் இருக்கும் ஆள் பின் பக்கம் வரை வரமாட்டார்.

 

அவள் அந்த நேரத்தையே தனக்கு சாதகமாய் பயன்படுத்த திட்டமிட்டாள். எப்போதும் போல் உறங்க சென்றவள் இடையில் விழித்து சத்தமில்லாமல் எழுந்து சென்றாள்.

 

முதல் நாள் தோழியிடம் பேசிய பின்னேயே அவள் செய்திருந்த காரியம் ஒன்று. படிக்கட்டு இல்லாத அவள் வீட்டின் மொட்டை மாடிக்கு ஏணியை போட்டு ஏறியவள் அங்கிருந்து அவன் வீட்டை நோட்டமிட்டாள்.

 

அவன் வீட்டின் பின்புறத்தில் இருந்த மனோரஞ்சிதம் அவள் கண்களில் பட அதை எப்படி சென்று பறிக்க வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டாளவள்.

 

அது அவள் வீட்டின் முன் வாயிலுக்கும் பின் வாயிலுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்து ஏணி ஒன்றை போட்டு அங்கு போவதென்று அவள் முடிவெடுத்துக் கொண்டாள்.

 

அவளின் திட்டப்படி ஏணி போட்டு ஏறி இறங்கி பூவை பறித்து பின் திரும்ப அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள் என்று அவள் கணித்து வைத்திருந்தாள்.

 

அந்த செடி அவன் வீட்டின் பின்னால் பக்கவாட்டில் இருந்தது. செவ்வந்தி ஏணி போட்டு ஏறி பறிக்க கூடிய அளவிலேயே இருந்தது.

 

வெகு சுலபமாய் திட்டம் செய்தவளுக்கு அதில் பிழை நேரும் என்று தெரியாது. ஏணியை மெதுவாய் சத்தம் வராமல் சுவற்றில் சாய்த்தவள் செடியை எக்கிப்பிடிக்க முயல தூரத்தில் இருந்து பார்த்த போது அருகே தெரிந்த செடி இப்போது சற்று தள்ளி தெரிந்தது.

 

அவளால் எக்கி எடுக்க முடியாமல் போக மெதுவாய் ஏணியை பிடித்தவாறே இருவீட்டிற்கும் பொதுவாய் இருந்த அந்த சுவற்றின் மீது ஏறி அமர்ந்திருந்தாள் இப்போது.

 

அங்கு அமர்ந்தவாறே செடியை எக்கிப்பிடிக்க முயல இரு முறை முடியாமல் போக மூன்றாம் முறை எட்டிப்பிடித்திருந்தவள் வேகமாய் கீழே விழுந்திருந்தாள்.

 

விழுந்த வேகத்தில் எதிலோ இடித்துக்கொண்டது போல் இருந்தது. அதுவரை மட்டுமே அவளுக்கு ஞாபகமிருந்தது. பின் அவள் விழித்தது சில பலர் சேர்ந்து அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்த போது தான்.

 

செவ்வந்தியை போல் வீராவும் உறக்கத்தில் இருந்து எழுந்திருந்தவன் செவ்வந்தி தன் வீட்டு சுவர் ஏறி குதித்த அந்நாளை பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தான்.

 

ஏனோ அன்று மனம் சரியில்லாமல் இருந்தவன் வீட்டில் யாருமில்லை என்ற தைரியத்தில் மதுவை எடுத்துக்கொண்டிருந்தான்.

 

வீட்டிலிருந்தவர்கள் செந்தாமரையை அழைக்க மதுரை வரை சென்றிருந்தனர். காலையில் தான் அவர்கள் வருவார்கள்.

 

எப்போது வீட்டிற்கு வந்தாலும் அவனுக்கு இருக்கும் அதே உணர்வு அன்றும் ஆட்டிப்படைக்க தாளாமல் அதை மறக்க அவன் மதுவை நாடியிருந்தான்.

 

எப்போதையும் விட சற்று அதிகமாய் எடுத்துக்கொண்டிருந்தான் அன்று. வெகு நேரம் கழித்தே உறங்கிப் போனான் அவன்.

 

வீட்டில் யாருமில்லாத காரணத்தால் முன் வீட்டை பூட்டிக்கொண்டு பின் வீட்டையும் பூட்டிவிட்டு பின் வீட்டின் வெளியில் கயிற்று கட்டிலை எடுத்து போட்டு படுத்திருந்தான் அவன்.

 

அவன் கெட்ட நேரமோ இல்லை அவள் கெட்ட நேரமோ செவ்வந்தி உள்ளே குதித்த போது வீரபாண்டியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் மதுவின் தாக்கத்தால்.

 

கீழே விழுந்திருந்த செவ்வந்தியோ பின் வீட்டின் பக்கவாட்டு சுவருக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் விழுந்திருந்தாள்.

 

அவளுக்கு தலையில் அடிபட்டு மயக்கம் வந்திருந்தாலும் காயம் எதுவும் இல்லை. லேசான வீக்கம் மட்டுமே இருந்தது.

 

விழுந்திருந்தவள் சாதாரணமாய் உறங்குது போல் தான் பார்ப்பவருக்கு தெரியும். அப்படி தான் தெரிந்தது அங்கு காலையில் வீரபாண்டியனின் வீட்டிற்கு அதே தெருவில் வசித்த மாரியம்மா பூப்பறிக்க வந்த போது.

 

முன் வாயிலில் இருந்து வெகு நேரமாய் குரல் கொடுத்து பார்த்த மாரியம்மா. யாரும் குரல் கொடுக்காது போனதால் அந்த மூங்கில் தட்டியை தள்ளித் திறந்து பக்கவாட்டில் நடந்து பின் பக்கம் வந்துக் கொண்டிருந்தாள்.

 

அவன் கட்டிலின் அருகே வந்தவள் “தம்பி தம்பி” என்று பலமுறை குரல் கொடுத்தும் அவன் எழுந்திருக்காதிருக்க ‘சரி நாமே பூவை பறிச்சுட்டு போயிருவோம்’

 

‘ரஞ்சிதக்கா வந்ததும் சொல்லிக்குவோம்’ என்று எண்ணிக்கொண்டு அவனை தான்டி பக்கவாட்டில் இருந்த மல்லியை பறிக்க போனவள் சடன்பிரேக் போட்டது போல் நின்றாள் செவ்வந்தியை பார்த்து.

 

‘இதென்ன இந்த பிள்ளை இங்கிட்டு விழுந்து கிடக்கு என்னாச்சு. ரெண்டு வீட்டுக்கும் தான் பேச்சு வார்த்தையே கிடையாதே’

 

‘அப்புறம் என்ன நடக்குது இங்க… இந்த புள்ளை இங்கன எப்படி விழுந்து கிடக்குது’ என்று எண்ணிக்கொண்டே சுவரை பார்க்க அவள் வீட்டின் புறச்சுவற்றில் சாற்றி வைத்திருந்த ஏணி கண்ணில் விழுந்தது.

 

‘ஏணி இங்கன இருக்கு அப்போ என்ன நடந்திருக்கும். இந்த பிள்ளை மிலிட்டரிக்கார தம்பியை பார்க்க வந்திருக்குமோ’

 

‘ஒரு வேளை இதுக ரெண்டும் விரும்புதுகளோ!! அதேன் யாருமில்லாத நேரத்துல இந்த புள்ளை தம்பியை பார்க்க வந்திருக்காளோ!! அப்படியும் இருக்குமா!!’ என்று எண்ணியவளுக்கு அது தான் உறுதி என்று தோன்றியது.

 

அவள் மனமோ ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கை போட்டுக்கொண்டிருந்தது. வேகமாய் வெளியில் வந்திருந்தவள் அடுத்த வீட்டு பழனியம்மாளை அழைத்து சொல்லியிருந்தாள்.

 

இப்படியே ஒன்று இரண்டாய் இரண்டு நாளாய் என்று விஷயம் வேகமாய் பரவியது.

 

பழனியம்மாளுக்கு மதுராம்பாளை நன்கு தெரியும் என்பதால் அவள் நேரே மதுராம்பாளிடம் விஷயத்தை சொல்ல அவர் வருவதற்கும் தாமரையை அழைத்துக்கொண்டு சக்திவேல் ரஞ்சிதம் தாமரையின் கணவர் என நால்வருமாய் வரவும் சரியாய் இருந்தது.

 

பழனியம்மாள் அதற்குள் செவ்வந்தியை எழுப்ப முயற்சி செய்ய அவள் தலையில் அடிப்பட்டிருந்ததில் வெகு நிதானமாய் தலையை பிடித்துக்கொண்டே விழித்து பார்த்தாள்.

 

“நீங்க எல்லாம் இங்க என்ன பண்றீங்க??” என்று அவள் கேட்டு வைக்க அவர்களோ “நீ என்ன செவ்வந்தி இங்கிட்டு பண்ணிக்கிட்டு இருக்க” என்றனர்.

 

“நான் எங்க வீட்டில தானே இருக்கேன்” என்றாள் அவள் வீட்டில் இருக்கும் ஞாபகத்தில். மற்றவர்களுக்கோ அவள் சொன்னது வீரபாண்டியனின் வீட்டை தன் வீடு என்று குறிப்பிடுக்கிறாள் என்று அர்த்தமாகியது.

 

அங்கிருந்தவர்கள் ஆளுக்கொன்றாய் கண் காது மூக்கு என்று பேச ஆரம்பித்திருந்தனர். வீரபாண்டியனும் கார் வந்த சத்திலேயே விழித்திருக்க செவ்வந்தியை அங்கு பார்த்து அவன் திருதிருவென்று விழித்தான்.

 

‘இது யாரு இங்க எப்படி இவ வந்தா’ என்பதாய் அவன் பார்வை சென்றிருக்க அதற்குள் அங்கு வந்திருந்த பழனியம்மாள் எழுப்பியதும் அதற்கு செவ்வந்தியின் பதிலை கேட்டிருந்தவனும் ஒன்றும் செய்வதறியாது பார்த்திருந்தான்.

சக்திவேல் அதற்குள் அவனிடம் வந்து கேட்க தனக்கு தெரியாது என்று அவன் எவ்வளவோ சொல்லியும் ஆளாளுக்கு இருவரையும் ஒன்றாய் வைத்து பேச அவனுக்கு வெகுவாய் தலை கனத்தது.

 

அதுவரை அந்த வீட்டின் வாயிலை மிதிக்காத மதுராம்பாள் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார் தன் பேத்திக்காய்.

 

அவரை பார்த்ததும் வீரபாண்டியன் அப்படியே நிற்க அவனை ஒரு பார்வை பார்த்து கடந்து வந்தவர் செவ்வந்தியின் அருகே சென்றிருந்தார்.

 

அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டறிந்தவருக்கு அவளை ஓங்கி ஒரு அறை வைத்தால் என்ன என்று தான் தோன்றியது. அவள் சொல்லும் காரணம் நம்பும்படியாகவா இருந்தது. யாராவது கேட்டால் அதை நம்புவார்களா என்ன!!

 

அவர் கையை பிசைந்து நிற்க பேத்தியின் கையை பிடித்து இழுத்துச் சென்றார். யாரிடமும் எதையும் பேசவில்லை, வெளியில் செல்லும் முன் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து சென்றார் அவ்வளவே.

 

ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு விஷயம் கிடைத்தால் அது ஒன்று இரண்டு நாலு என்று பெரிதாகி பேசி வைப்பவர்.

 

அப்படி தான் ஆனது அவர்களின் விஷயத்திலும். செவ்வந்தி வீரபாண்டியனை பார்க்க வீட்டில் யாருமில்லா நேரத்தில் சுவர் ஏறி குதித்து வந்ததாகவும் கீழே விழும் போது மயங்கியிருப்பாள் என்றும் ஒரு சாரர் பேசினர்.

 

அவளுக்கு அவனின் மேல் தீராத காதல் இருந்ததாகவும் பேசிக்கொண்டனர்.

 

பத்தாததிற்கு அவள் சாற்றி வைத்திருந்த ஏணியும் வேறு அங்கேயே இருக்க ஊரார் பேச அவளே அவலை தூக்கி எல்லோர் வாயிலும் போட்டது போல் ஆனது.

ஒரு சாரர் அது எதனால் வந்த மயக்கமோ என்று பொடி வைத்து பேசினர். இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச்சு பெரிதாகிப் போனது.

 

இரண்டொரு நாளில் நடந்த விஷயத்திற்கு கை காலெல்லாம் முளைத்து குழந்தையே பிறந்துவிட்டது என்பதாய் இருவீட்டாரின் செவிகளுக்கு விஷயம் வர நாட்டாமை வீடு தேடி வந்து நாட்டாமை செய்துவிட்டு போனார்.

 

மதுராம்பாளும் ஒரு முடிவிற்கு வந்தவராய் சக்திவேலை கோவிலில் சந்தித்து பேசினார். மதுராம்பாளின் மகன் அய்யாதுரையும் சக்திவேலும் சிறுவயது நண்பர்கள். நண்பர்களுக்குள் ஏதோவொரு மனஸ்தாபம் அன்றிலிருந்து பிரிந்தவர்கள் தாம்.

 

அய்யாதுரையின் இறப்பின் போது அந்த வீட்டிற்கு சென்ற சக்திவேல் அதன் பின் அங்கு செல்லவில்லை.

 

இதுவரை யாருக்குமே தெரியாது இருவருக்கும் எதற்காய் மனஸ்தாபம் என்று. வெகு நாட்களுக்கு பின் மதுராம்பாளை பார்த்தவர் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவோம் என்று எண்ணி பார்த்திருக்கவில்லை.

 

மதுராம்பாளும் பழைய விஷயங்களை எல்லாம் கிளறாமல் நேரே விஷயத்திற்கு வந்துவிட்டார். அது வீரபாண்டியனுக்கும் செவ்வந்திக்கும் மணமுடிப்பது என.

 

சம்மந்தப்பட்ட இருவர் தவிர மற்ற எல்லோருமே முதலில் திருமண பேச்சை சங்கடமாய் ஆரம்பித்தாலும் முடிவில் சந்தோசமாகவே செய்தனர்.

 

செவ்வந்தியும் வீரபாண்டியனும் மட்டும் மீண்டும் மீண்டும் வேண்டாம் என்பதையே கூறிக்கொண்டிருந்தனர். இதோ எல்லாம் முடிந்து அவர்கள் இருவரும் கணவன் மனைவியாய்.

 

இருவருமே நினைவுகளின் பிடியில் இருந்து வெளியில் வர மனோரஞ்சிதம் கீழிருந்தவாறே மருமகளை அழைத்தார்…..

Advertisement