Advertisement

அத்தியாயம் – 5

 

கழுத்தில் விழுந்திருந்த தாலியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.

 

ஒரே நாளில் எல்லாமே தலைகீழ் என்ற நிலை தான் இப்போது என்று எண்ணிக்கொண்டாள்.

 

இருவருமாக சேர்ந்து மணவறை சுற்றி வந்ததோ அவன் அவள் கைப்பிடித்ததோ எதுவும் அவள் நினைவில் இல்லை. பார்வை முழுதும் கழுத்தில் புதிதாய் விழுந்ததிலேயே இருந்தது.

 

ஏதோவொரு கனம் கூடியது போல் ஒரு உணர்வு அவளுக்கு. வீரபாண்டியன் எதையும் மகிழ்ந்து செய்யவில்லை என்றாலும் முகம் சுளிக்காமலே எல்லாம் செய்தான்.

 

அவனுக்கு எப்படி இவளை சமாளிப்பது என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தாலும் வீட்டினரின் முகம் பார்த்து சடங்குகளை செவ்வனே செய்தான்.

 

செவ்வந்திக்கு தலை விண்விண்ணென்று வலித்தது. கொஞ்சம் படுத்தால் தேவலாம் என்றிருந்தது. திருமண வீட்டிற்கு வந்திருந்த கூட்டம் எல்லாம் கொஞ்சம் குறைந்திருந்தது.

 

வீரபாண்டியன் அவளையே தான் பார்த்திருந்தான். ‘கொடுத்த தூக்க மாத்திரை எப்பெக்ட் காட்டுதோ. தெரியாம கொடுத்திட்டேன்’

‘தலை வலிக்குது போல என்ன செய்ய’ என்று யோசித்திருந்தான். என்ன நினைத்தானோ “அம்மா” என்றழைத்தான்.

 

“என்னலே பாண்டி” என்றார்.

 

“கொஞ்ச நேரம் படுக்கணும்மா, நான் பின்னாடி வீட்டுக்கு போறேன்” என்று எழுந்திருந்தான்.

 

‘அப்பாடா நிம்மதி’ என்று எண்ணிக்கொண்டு செவ்வந்தியும் அவனுடன் எழுந்து நின்றாள்.

 

காலையில் அவள் அம்மா சொன்னது அது தானே உன் “உன் புருஷன் எங்கு செல்கிறாரோ அவருடன் செல்” என்று. அதை அவள் செவ்வனே செய்திருந்தாள் காலையில் இருந்து.

 

மனோரஞ்சிதமோ ஓரிரு நிமிடம் யோசித்தார் பின் “சரிப்பா போய் கொஞ்ச நேரம் படுங்க, சாயங்காலம் அவங்க வீட்டுக்கு போயிட்டு அப்புறம் திரும்பவும் நம்ம வீட்டுக்கு வரணும்” என்றவர் “தாமரை” என்று மகளை அழைத்திருந்தார் இப்போது.

 

“என்னம்மா” என்று வந்து நின்றவளை தனியே அழைத்துச் சென்று பேசினார். பின் தாமரை மட்டுமாக திரும்பி வந்தாள்.

 

“வாங்க மதினி போவோம்” என்று செவ்வந்தியின் கையை பிடித்துக் கொண்டவள் “என்னண்ணே பேசாம நிக்கற வா” என்றாள்.

‘இவ எதுக்கு இப்போ கூட வர்றா’ என்று யோசித்துக்கொண்டே வந்தான் வீரபாண்டியன்.

 

படியேறி அந்த அறைக்குள் நுழையும் வரை உடன் வந்தாள் தாமரை. “நீங்க போய் படுங்க மதினி” என்றுவிட்டு “அண்ணே” என்றழைத்தாள் வீராவை பார்த்து.

 

“என்ன தாமரை?? அம்மா என்ன சொல்லிவிட்டாங்க” என்றான்.

 

“எல்லாத்துக்கும் நேரம் காலம் இருக்காம், புரிஞ்சு நடந்துக்க சொன்னாங்க” என்றாள்.

 

“என்ன” என்றவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை பின் புரிந்ததும் தாமரையை முறைத்தான்.

 

“என்னை எதுக்கு அண்ணா முறைக்கிற, சொன்னது அம்மா நானில்லை” என்றுவிட்டு அவள் நகர்ந்தாள்.

 

தங்கையிடம் பேசிவிட்டு வீரபாண்டியன் திரும்பி வந்து பார்க்கும் போது செவ்வந்தி உறங்கியிருந்தாள்.

 

‘ரொம்ப களைப்பா இருந்திருப்பாளோ’ என்று எண்ணிக்கொண்டவன் பாய் ஒன்றை எடுத்து கீழே விரித்துக்கொண்டு படுத்துவிட்டான்.

 

அவனுக்குமே உறக்கமில்லாமல் அசதியாய் இருந்தது. படுத்ததும் உறங்கியும் விட்டான்.

 

எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ அறியான், யாரோ தன்னை உலுக்கி எழுப்பவும் உறங்க விடாமல் உலுக்கியதில் லேசாய் கோபம் எழ வேகமாய் காலை உதைத்து அவன் திரும்ப அவனை எழுப்பிக் கொண்டிருந்த செவ்வந்தி தடுமாறி அவன் மேலே இசகுபிசகாய் பொத்தென்று விழுந்து வைத்தாள்.

 

“எழுப்பினா எழுந்திருக்க வேண்டியது தானே. எதுக்கு பிடிச்சு என்னை தள்ளிவிட்டீங்க” என்று சிடுசிடுத்தவள் அவன் மேல் படுத்துக்கொண்டு “எழுந்திருங்க” என்றாள் கோபமாய்.

 

‘லூசா நீ’ என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.

 

“என்ன பார்வை வேண்டிக்கிடக்கு, எழுந்திருங்க” என்றாள் மீண்டும்.

 

அவள் எழுந்தால் தானே அவன் எழ முடியும். செவ்வந்தி இப்படி திடுதிப்பென்று அவன் மேல் வந்து விழுவாள் என்று அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

“நீ தான் என் மேல விழுந்திருக்க நான் ஒண்ணும் உன் மேல விழலை. முதல்ல நீ எழுந்திரு” என்றான்.

 

செவ்வந்தியும் அவன் பேச்சில் சுதாரித்துக்கொண்டு எழுந்து நின்று அவனை முறைத்தாள். வீராவும் படுக்கையை விட்டு எழுந்தவன் பாயை எடுத்து வைத்துவிட்டு அவளை கண்டுக்கொள்ளாமல் நேரே முகம் கழுவச் சென்றான்.

 

‘பக்கி என்னை கண்டுக்கறானா பாரு. எனக்கென்னன்னு போறான், இவன்ட்ட பேசணும்ன்னு வந்தா எஸ்கேப் ஆகுறானே’ என்று எண்ணிக்கொண்டு அவன் வரவிற்காய் கட்டிலின் மேலே அமர்ந்து காத்திருந்தாள்.

 

முகம் கழுவி வந்தவன் துவாலையை எடுத்து முகம் துடைத்து தலை சீவி முடிக்கவும் தாமரை அங்கு வந்து சேர்ந்தாள் “அண்ணே” என்று குரல் கொடுத்தவாறே.

 

“மதினி எழுந்திட்டீங்களா… வாங்க கீழே போவோம்” என்றாள் செவ்வந்தியை பார்த்து.

 

“தலை சீவலையா மதினி, இப்படி கலைஞ்சு கிடைக்கு” என்றவள் “அண்ணே அந்த சீப்பை கொடு” என்று வாங்கி செவ்வந்திக்கு அவளே தலை சீவி பின்னலிட்டாள்.

 

“நல்லா பெரிய முடி மதினி உங்களுக்கு” என்றாள் தாமரை. செவ்வந்தி எதற்குமே வாயை திறக்கவில்லை, அமைதியாய் இருந்தாள்(!).

 

வீரபாண்டியனுக்கு மட்டும் புரிந்தது இது புயலுக்கு முந்தைய அமைதி என்று. எதுவும் கண்டுக்கொள்ளாமல் அவன் இறங்கி கீழே சென்றுவிட்டான்.

 

செவ்வந்திக்கு புசுபுசுவென்று கோபம் வந்தது. ‘இங்க ஒருத்தி பேச உட்கார்ந்திருக்கேன் எனக்கென்ன போச்சுன்னு இவன் பாட்டுக்கு போறான்’ என்று கனன்றது அவள் கோபம்.

 

“போவோமா மதினி” என்ற தாமரைக்கு லேசாய் தலையசைத்து வைத்தாள்.

 

“நீங்க ரொம்ப பேச மாட்டீங்களா, அமைதியா மதினி” என்றாள் தாமரை.

 

செவ்வந்தி கடுப்பாக வந்தது ‘இவங்க வேற மதினி மதினின்னுட்டு என் மென்னியை பிடிக்கறாங்களே’ என்று நினைத்தவள் “நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்றாள்.

 

“சொல்லுங்க மதினி” என்றாள் தாமரை.

 

“நான் உங்களை விட சின்ன பொண்ணு தானே நீ வா போன்னே கூப்பிடலாமே, அப்புறம் இந்த மதினியும் வேண்டாமே” என்றாள்.

 

“நீ வா போன்னு வேணா கூப்பிடுறேன் ஆனா மதினின்னு கண்டிப்பா கூப்பிடுவேன். என்ன இருந்தாலும் என் அண்ணாவோட மனைவி நீங்க”

 

“எங்கம்மாவும் வேற திட்டுவாங்க அதுனால மதினி கூப்பிடுறேன் உன்னை போதுமா” என்றாள் தாமரை.

 

“தேங்க்ஸ் அண்ணி” என்றாள் செவ்வந்தி.

 

“நான் உனக்கு அண்ணியா” என்ற தாமரையிடம் “பின்ன இல்லையா” என்றாள் மற்றவள்.

 

“மதினின்னு கூப்பிடலாமே”

“எனக்கு அப்படி கூப்பிட ஒரு மாதிரி இருக்கு. இப்படியே கூப்பிடுறேனே” என்றாள்.

 

“நாம ரொம்ப நேரமா இங்க நின்னு பேசிட்டு இருக்கோம் வாங்க போவோம்” என்று அவள் கைப்பிடித்து அழைத்து சென்றாள் தாமரை.

 

வீரபாண்டியன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு டிவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘எல்லாரும் இயல்பா இருக்காங்க. எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்று எண்ணிக்கொண்டு தாமரையின் பின்னேயே சென்று கொண்டிருந்தாள்.

 

“மதினி நீங்க போய் அண்ணன் பக்கத்துல உட்காருங்க. எதுக்கு பாவம் என்னோடவே வர்றீங்க” என்றாள் தாமரை.

 

“பராவாயில்லை நான் உங்க கூடவே இருக்கேன்” என்றாள் மற்றவள்.

 

மனோரஞ்சிதம் அப்போது அவளருகே வந்தார் “ஏம்மா கொஞ்சம் திரும்பு” என்றவர் கையில் இருந்து மல்லிகை பூ மொத்தமும் அவளின் தலையில் வைத்துவிட்டார்.

 

கிட்டத்தட்ட பத்து முழம் பூவிருக்கும் அதில். டிவியில் பார்வையை பதித்து இருந்தவன் லேசாய் திரும்பி பார்த்து அதிர்ந்து போனான். ‘ஆத்தா மகமாயியே இறங்கி வந்த மாதிரி இருக்கு’ என்று எண்ணிக்கொண்டான்.

“சரி தாமரை அண்ணனையும் மதினியையும் அங்க கூட்டிட்டு போயிட்டு வாங்க. பால் பழம் கொடுத்து கொஞ்சம் நேரம் இருந்திட்டு கிளம்பி வாங்க” என்றார் மனோரஞ்சிதம்.

 

மதுராம்பாளின் வீட்டிற்கு மணமக்கள் சகிதம் எல்லோரும் வந்தனர். சிவகாமிக்கு இருவரையும் சேர்ந்து பார்த்ததும் கண்கள் கலங்கிப் போனது.

 

மதுராம்பாள் தான் இரும்பு மனுஷியாயிற்றே எப்போதும் போல் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் ஒரு ஆனந்தத்துடன் இருவரையும் பார்த்திருந்தார்.

 

முல்லை இருவருக்கும் ஆலம் எடுக்க வீரபாண்டியனிடம் அதை கேள் இதை கேள் என்று சுற்றி இருந்தவர்கள் அவளை உசுப்பிவிட்டு கொண்டிருந்தனர்.

 

ஆலம் சுற்றி முடித்தவள் “உள்ள போங்க அத்தான்” என்றாள்.

 

“ஏய் இவ என்னடி இவ கூறுகெட்டவளா இருக்கா, ஆயிரம் ரெண்டாயிரம்ன்னு வாங்குவாளா உள்ள போங்கன்னு வழி விட்டுக்கிட்டு நிக்கா” என்றார் முல்லையின் உறவினர் பெண் ஒருவள்.

 

“சித்தி நான் கேட்டா ஆயிரம் என்ன அத்தான் ஐயாயிரம் கூட கொடுப்பார். ஆனா எனக்கு அதெல்லாம் வேணாம் எனக்கு இனி அப்பா ஸ்தானத்தில அவர் தான்”

“அவர்கிட்ட எனக்கு கேட்கணும்ன்னு தோணிச்சின்னா நான் கண்டிப்பா கேட்பேன். என்ன அத்தான் கேட்கலாம் தானே” என்றாள்.

 

வீரா முல்லை தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை பார்த்து கொஞ்சம் அசந்து தான் போனான். ‘நான் இதற்கெல்லாம் தகுதியே இல்லாதவனாயிற்றே’

 

‘இப்பெண்ணுக்கு நான் அவளின் அப்பா ஸ்தானத்திலா!!’ என்று எண்ணியவனின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றுக் கொண்டிருந்தது.

 

முல்லையின் பேச்சை கேட்டு சந்தோசப்பட்ட ஜீவன்கள் இரண்டென்றால் அதை சகித்துக் கொள்ள முடியாத ஜீவனாய் வீராவின் அருகே நின்றிருந்தாள் முல்லையின் அக்காவான அவன் மனைவி செவ்வந்தி.

 

‘இவளுக்கு அறிவுங்கறதே கிடையாது ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம் இவளுக்கு அப்பா மாதிரி அண்ணன் மாதிரின்னு சொல்லிட்டு திரிவா’ என்று கடுப்பாய் இருந்தது அவளுக்கு.

 

முல்லை ஒன்றும் தெருவில் செல்பனை ஒன்றும் அப்படி சொல்லவில்லையே. அவளின் கணவன் என்பதாலேயே தானே அதைச் சொல்லியிருந்தாள் என்பதை அவளின் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

 

“அக்கா உள்ள வா” என்று முல்லை அழைத்தாள்.

 

‘உனக்கு என்னைய இப்போ தான் அடையாளம் தெரியுதாடி’ என்று மனதிற்குள் தங்கையை சபித்துக்கொண்டாள் அவள்.

 

உறவினர் பெண் ஒருவர் மாப்பிள்ளை பெண்ணுக்கு பால் பழம் கொடுத்தனர். மணவறையில் சிவகாமியும் மதுராம்பாளும் நிற்காத காரணத்தால் அவர்கள் இருவரையும் நமஸ்கரித்திருக்கவில்லை.

 

வீரபாண்டியன் அவள் அருகே அமர்ந்திருந்தவளை பார்த்து “கொஞ்சம் வா” என்று கூப்பிட அவளோ அவனை பார்த்து முறைத்தாள்.

 

அவளிடம் சொல்லியவன் எழுந்து சென்று மதுராம்பாளின் முன் நின்றான். செவ்வந்தி அவனருகே இன்னமும் வந்து நின்றிருக்கவில்லை.

 

“செவ்வந்தி” என்றழைத்தான்.

 

“ஆச்சிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்” என்று கூற வேறுவழியில்லாமல் அவளும் காலில் விழுந்தாள்.

 

மதுராம்பாள் இருவரையும் மனமார ஆசிர்வாதம் செய்தார். “அத்தை நீங்களும் ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று அவர் காலிலும் விழுந்தான்.

 

‘என்னடா இவன் ஓவரா பண்ணுறான். பிடிக்கலைன்னு சொன்னான் இப்படி பண்றானே. நடிக்கறானோ!! ஒரு வேளை இவனுக்கு என்னை பிடிச்சிருக்கோ!!’

 

‘எதுக்கு இப்படி எல்லாம் பண்றான்’ என்று யோசனையில் இறங்கினாள் செவ்வந்தி.

 

பின் மணமக்கள் அவர்கள் வீட்டிற்கு திரும்பினர். செவ்வந்தியை அலங்கரித்து வீரபாண்டியனின் அறையில் சென்று விட்டு வந்தாள் தாமரை.

 

‘கர்மமே இந்த கூத்து வேறயா’ என்று பல்லைக் கடித்து எல்லாம் பொறுத்திருந்தாள் செவ்வந்தி. எப்போது வேண்டுமானாலும் வெடித்துவிடும் போல் இருந்தாள் அவள்.

 

அறைக்குள் நுழைந்ததும் அப்படி ஒரு ஆத்திரம் அவளுக்கு. கையில் இருந்ததை அங்கிருந்த மேஜை மேல் வைத்தவள் தான் நேரே அவன் முன் வந்து நின்றாள் கோபமாய் முறைத்துக் கொண்டு.

 

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல” என்றவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

 

“நிச்சயமா உன்னை இல்லை”

 

“என்ன திமிரா??”

 

“அது எனக்கில்லை”

 

“அப்போ என்ன சொல்ல வர்றீங்க… எனக்கு திமிர்ன்னா…”

 

“நான் சொல்லலையே”

செவ்வந்திக்கு கோபம் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து கொள்ள அவன் சட்டையின் காலரை இருகையாலும் பற்றியிருந்தாள் இப்போது.

 

“நான் தான் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்ல அப்புறம் ஏன் அப்படி செஞ்சீங்க” என்று குரலுயர்த்தினாள்.

 

வீரபாண்டியன் அவள் பற்றியிருந்ததையே பார்த்திருந்தான். “கையை எடு” என்றான்.

 

“எடுக்கலன்னா என்ன பண்ணுவ” என்றவள் மரியாதையை விட்டிருந்தாள்.

 

“கையை எடுன்னு சொன்னேன்”

 

“முடியாது” என்று வீம்பாய் பதில் சொன்னாள்

 

சட்டென்று அவள் இருகையையும் பற்றி உதறிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான்.

 

“நான் கேட்டுட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு எனக்கென்னன்னு போனா என்ன அர்த்தம்” என்று அவன் முன் வந்து நின்றாள்.

 

“என்ன பிரச்சனை உனக்கு??” என்றான் அவள் கேட்டதே புரியாதது போல்.

 

“என்ன செஞ்சீங்க நீங்க?? எனக்கு தூக்க மாத்திரை கலந்தீங்களா!! இல்லை மயக்க ஸ்ப்ரே எதுவும் அடிச்சிவிட்டீங்களா!!”

 

“தூக்க மாத்திரை” என்றான்.

 

“என்ன??” என்று அவனை பார்த்து முறைத்தவள் “எதுக்கு அப்படி செஞ்சீங்க??”

 

“நீ எதுக்கு வீட்டை விட்டு போகப் பார்த்தே??”

 

“நீங்க என்ன லூசா கல்யாணத்தை நிறுத்த சொல்லி உங்ககிட்ட கேட்டேன். நீங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க, வேணுமின்னா நீயே நிறுத்திக்கன்னு சொன்னீங்க”

 

“அதுக்காக தானே வீட்டை விட்டு போனேன். எதுக்கு போக விடாம அப்படி பண்ணீங்க??” என்று கேள்வி கேட்டாள்.

 

“போறவ வேற பக்கம் குதிச்சு போக வேண்டியது தானே. எதுக்கு இங்க குதிச்சு வந்தே… அர்த்த ராத்திரில நீ பாட்டுக்கு போவே நான் பார்த்திட்டு சும்மா இருக்கவா”

 

“ஊரு கெட்டு கிடக்கு அதெல்லாம் யோசிக்காம எனக்கென்னன்னு கிளம்பி போற… வீட்டில எல்லாருக்கும் எவ்வளவு அசிங்கம் யோசிச்சு பார்த்தியா அதெல்லாம்”

 

“நீ என்ன அந்த கிழவி மாதிரியே பேசுற” என்றாள் வெடுக்கென்று.

 

“என்ன சொன்னே??” என்றவன் எழுந்து நின்றிருந்தான்.

 

“எங்க வீட்டு கிழவியும் இப்படி தான் பேசுது. நீயும் அதே சொல்ற” என்றாள் கோபமாய்.

 

“பல்லை பேத்துருவேன் மரியாதையா பேசக் கத்துக்கோ. இதே கடைசியா இருக்கட்டும் நீ இப்படி பேசினது” என்று அவன் உறுமலாய் சொல்லவும் சற்றே பின்னடைந்தாள் அவள்.

 

“எல்லாருக்கும் நான் ஒருத்தி கிடைச்சிட்டேன். என் வாழ்க்கை உங்களுக்கு எல்லாம் பந்து போல ஆகிருச்சு என்னை தூக்கி போட்டு எல்லாரும் உதைச்சு விளையாடுறீங்க”

 

“எனக்குன்னு எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இல்லையா!!” என்று சொல்லும் போதே அவள் குரல் உடைந்து அழத் தயாராகியிருந்தாள்.

 

“இங்க பாரு நீ எங்க போனாலும்  உன்னை தேடிப்பிடிச்சு எனக்கு தான் கட்டி வைச்சிருப்பாங்க. உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது”

 

“பிடிக்குதோ பிடிக்கலையோ இது தான் இனி நம்ம வாழ்க்கை” என்று அவன் சொல்லவும் “என்ன சொன்னீங்க இதான் வாழ்க்கையா”

 

“எனக்கு இந்த வாழ்க்கை வேணாம். நீங்களும் வேணாம். எனக்கு உங்களை பிடிக்கவேயில்லை” என்று கத்தினாள்.

 

“அதை பத்தி பேச இது நேரமில்லை. உன் வாழ்க்கையை நாங்க யாரும் வந்து கெடுக்கலை. நீ… நீ மட்டும் தான் அதுக்கு காரணம்”

 

“நீ அன்னைக்கு எங்க வீட்டு சுவர் ஏறி குதிக்காம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது, நானும் நிம்மதியா இருந்திருப்பேன்”

 

“என் வாழ்க்கையிலையும் கல்யாணம் அப்படிங்கற ஒரு விஷயம் இல்லாமலே போயிருக்கும். எல்லாரும் சேர்ந்து எல்லாம் முடிவு பண்ணின பிறகு எதையும் நிறுத்துறதுல எனக்கு இஷ்டமும் இல்லை”

 

“அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்னை போக விடாம தடுத்தேன்”

 

“அது மட்டும் தான் காரணமா?? நம்ப முடியலை… என்னை லவ் கீவ் எதுவும் பண்றீங்களா” என்று பட்டென்று கேட்டு வைத்தாள்.

 

‘எப்படி கொஞ்சம் கூட யோசிக்காம இப்படிலாம் பேசறா’ என்று ஆச்சரியமாக பார்த்தாலும் அவள் கேள்விக்கு பதிலை கொடுத்தான்.

 

“எனக்கு லவ் எல்லாம் இல்லவே இல்லை. உன் மேல லவ் கிடையவே கிடையாது போதுமா”

“வேற எந்த காரணமும் இல்லை” என்று அவளுக்கு சொன்னாலும் தன் மனதின் அடியாழத்தில் குழி தோண்டி புதைத்திருந்த சில நினைவுகளில் அதற்கான காரணம் ஒளிந்திருக்கிறது என்பதை மனம் உணரத் தான் செய்தது.

 

“அப்புறம் ஏன் என்னை போகவிடாம தடுத்தே??” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

 

“இப்போ என்ன வேணும் உனக்கு”

 

“எனக்கு உன்னை பிடிக்கலை… கல்யாணம் பிடிக்கலை… போதுமா…” என்று கத்தினாள் மீண்டும்.

 

“சரி உனக்கு என்னையும் பிடிக்கலை இந்த கல்யாணமும் பிடிக்கலை அவ்வளவு தானே”

 

“ஆமா” என்றுவிட்டு ஓய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தாள்.

 

“கொஞ்ச நாள் கழிச்சு நீ விரும்பின மாதிரி என்னை விட்டு போய்டலாம். டிவோர்ஸ் கொடுத்திர்றேன் போதுமா!!” என்று அவன் கூறவும் “என்னடா நினைச்சுட்டு இருக்க நீ” என்று ஆங்காரமாய் வந்து அவன் சட்டையை பிடித்தாள்.

 

“டிவோர்ஸ் கொடுக்கறானாம் டிவோர்ஸ். நான் கேட்டனா உன்னை, பெரிய இவனாட்டம் பேசற. கல்யாணத்தை நீ நிறுத்தி இருந்தா நல்ல மனுஷன்”

 

“இப்போ வந்து டிவோர்ஸ் கொடுக்கறேன்னு சொல்ற, பெரிய தியாகியா நீ… ஊருக்கெல்லாம் நீ நல்லவன் ஆகணும் நான் கெட்டவ ஆகணும் அதானே உனக்கு”

 

“நான் அந்த அர்த்தத்தில சொல்லலை. உனக்கு பிடிக்கலைன்னா நீ உன் வழியில போலாம். அதை தான் சொல்ல வந்தேன்”

 

“கல்யாணம் வேணாம்ன்னு தான் இருந்தேன், நீ சுவர் ஏறி குதிச்சு என் லைப்ல உள்ள வந்திட்ட”

 

“என் லைப்ல வந்த முதலும் கடைசியுமான பொண்ணு நீயா மட்டும் தான் இருப்பே. என்னோட லைப்ல இனி வேற கல்யாணம் கிடையாது”

 

“சோ நீயும் அப்படியே இருக்கணும்ன்னு அவசியமில்லை. உனக்கு தான் என்னையும் பிடிக்கலை கல்யாணமும் பிடிக்கலை”

 

“அதனால தான் டிவோர்ஸ் கொடுக்கறேன்னு சொன்னேன். நியாயமா நீ இதுக்கு சந்தோசம் தானே பட்டிருக்கணும். எதுக்கு இப்படி என் சட்டையை பிடிச்சிட்டு இருக்க” என்றான்.

 

“என்னை என்ன மாதிரி பொண்ணுன்னு நீ நினைச்சிட்டு இருக்க… எனக்கும் கல்யாணம் லைப்ல ஒரு முறை தான். நான் படிச்ச பொண்ணா இருக்கலாம்”

 

“நான் நாகரீகமா நடத்துக்கறவளா இருக்கலாம். ஆனா பிடிக்கலைன்னா டிவோர்ஸ் பண்ணுறவ நானில்லை”

“எங்க வீட்டில என்னை ஒண்ணும் அப்படி வளர்க்கலை. பிடிக்காததை இலையில வைச்சா நீ வேஸ்ட் பண்ணாம சாப்பிடுறவனா இருக்கலாம்”

 

“நான் அதை அப்படியே முழுகிடுறவ… இது தான் என் தலைவிதின்னு நினைச்சு நான் வாழ பழகிக்குவேன். நீ மட்டும் அன்னைக்கு நீயே நிறுத்திக்கோன்னு சொல்லாம இருந்திருந்தா கூட நான் பேசாம தான் இருந்திருப்பேன்”

 

“நீ தானேடா சொன்னே அப்புறம் நீயே என்னை போகவிடாம தடுத்துட்டு இப்போ என்னமோ பெரிசா பேசுற” என்று கோபமாய் பொரிந்தாள்.

 

“கல்யாணம் ஆன முதல் நாளே எவனாச்சும் இப்படி பேசுவானா. உனக்கு என்னோட உணர்வுகளை புரியாது ஓகே, அதை மதிக்க கூடவா தெரியாது”

 

“நீ எல்லாம் நாட்டுக்கு என்ன சர்வீஸ் பண்ணுறன்னு எனக்கு தெரியலை. என் கண்ணு முன்னாடி நிக்காத எங்காச்சும் போய்டு, இன்னும் நல்லா திட்டி விட்டிருவேன்” என்று கத்திவிட்டு கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள்…

 

வீரபாண்டியனோ அவள் பேச்சில் சற்று அதிர்ந்து போய் தான் நின்றிருந்தான். ‘இவ என்ன மாதிரி பொண்ணு’ என்ற எண்ணம் லேசாய் மனதிற்குள் எழுந்து அவளை ஆராய்ச்சி செய்ய முற்பட்டது….

 

நிஜமாகவே அவனுக்கு புரியவில்லை அவளின் பேச்சு. எதற்கு கத்தினாள் எதற்கு கோபப்படுகிறாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை அவனுக்கு.

 

அவள் சொன்னது போல் தான் என்ன புரிந்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்குமே எழுந்தது.

 

இப்போ அவனுக்கு தலைவலிப்பது போல் இருந்தது. அவளை திரும்பி பார்க்க கட்டிலில் விசும்பலுடன் படுத்திருந்தாள்.

 

பாவமாக தோன்றியது அவளை பார்க்க… அவளை அன்றே போக விட்டிருக்கலாமோ என்ற குற்றவுணர்ச்சி லேசாய் எழுந்தது.

 

நாம இவ கண்ணுல பட்டுட்டே இருந்தா இன்னும் டென்ஷன் ஆவா. கண்ணுல படாம இருப்போம் என்று எண்ணியவன் அடுத்த இரண்டு நாளில் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டான்…

 

Advertisement