Advertisement

அத்தியாயம் – 4

 

‘அச்சோ இப்போ என்ன பண்ணுறது’ என்று எழுந்தமர்ந்திருந்தான் வீரபாண்டியன்.

 

மெதுவாய் வெளியில் வந்து அறையை இழுத்து பூட்டியவன் தன் மற்றைய வேலைகளை முடித்து சன்னலின் வழியே எட்டிப்பார்க்க செவ்வந்தி இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

‘ஒன்னரை மாத்திரைக்கே இவ்வளவு நேரம் தூங்குறாளே, சமயத்துல எனக்கு நாலு மாத்திரை போட்டாலும் கூட தூக்கமே வராது’

 

‘நல்ல வேளை சீரகத் தண்ணி இருந்துச்சு இல்லன்னா இவளை அந்த தண்ணிய குடிக்க வைச்சிருக்க முடியாது. டாக்டர் வேற கண்டுப்பிடிச்சாலும் கண்டுப்பிடிச்சிருப்பா’

 

‘இப்போ மட்டும் என்ன கண்ணு முழிச்சதும் எப்படியும் ஒரு கச்சேரி வைப்பா அவங்க வீட்டில. நம்மளை கேள்வி கேட்கும் போது பார்த்துக்கலாம்’ என்று எண்ணிக்கொண்டு கீழே இறங்கி வந்தான்.

 

சுற்று முற்றும் பார்த்தவன் அடுத்த வீட்டில் எதுவும் சத்தம் கேட்கிறதா என்று சற்று கூர்ந்து கவனித்தான்.

 

எப்போதும் போல அங்கு அமைதியாய் இருக்க இன்னும் அவளை தேடியிருக்க மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு முன் வீட்டிற்கு சென்றான்.

இவளை யாருக்கும் தெரியாம இங்க இருந்து எப்படி கூட்டிட்டு போறது என்று யோசித்துக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.

 

அவனிருந்த தோட்ட வீட்டில் இருந்து முன் வீட்டை பார்க்க வீட்டில் இருந்த அசாத்திய அமைதி யாருமில்லை என்பதை உரைத்தது.

 

‘எப்படி வீட்டில யாருமில்லை. ஒரு வேளை இன்னும் எழுந்திருக்கலையா, பந்தல் போட அதுக்கு இதுக்குன்னு இந்நேரம் வீடு பரபரப்பா இருக்கணுமே’ என்று யோசித்தவாறே நின்றிருந்தான்.

 

“என்னண்ணே அங்க நின்னுக்கிட்டு என்ன யோசனை. உள்ளார வாண்ணே. என்ன அண்ணா இவ்வளவு நேரமா தூங்கிட்ட, நாலு மணிக்கே எழுந்திருக்கற ஆளு மணி ஆறாகப் போகுது இப்போ தான் இங்க வர்றே” என்றாள் தாமரை.

 

தங்கையின் பேச்சை கவனித்தாலும் வீட்டின் அமைதியை கவனித்தவன் “அம்மா அப்பா எங்கே??”

 

“கோவிலுக்கு போயிருக்காங்க… நீ வந்ததும் அம்மா டிபன் வைக்க சொன்னாங்க. அதான் அப்பபிடிச்சு உன்னைய காணோமேன்னு பார்த்திட்டு இருக்கேன்” என்றாள்.

 

“மச்சான்??”

 

“அவர் என்னைக்கு வீட்டில இருந்திருக்காரு, தூத்துக்குடி வரை போயிருக்காரு” என்றாள்.

 

“வீட்டுக்கு யாரும் வரலையா சொந்தக்காரங்க?? பந்தல் போடுற ஆளை கூட காணோம்” என்றான்.

 

“அண்ணே மூணாவது வீடு ராமையா தாத்தா தவறிட்டார் நேத்து நைட். பத்து மணிக்கு தான் எடுப்பாங்க போல, அதான் அப்பா பந்தல் போடுறவனை பத்து மணிக்கு மேல வரச்சொல்லிட்டாருண்ணே”

 

“வீட்டுக்கு ஆளுங்க எல்லாம் இரண்டு மணிக்கு மேல தான் வருவாங்க. ஆமா நீ ஏன் இதெல்லாம் கேட்குற” என்றாள் தாமரை.

 

“அப்போ வீட்டில யாருமில்லை தானே” என்றவன் ஓரிரு நிமிடம் யோசித்தவன் “சரி என்னோட வா” என்றான்.

 

“எதுக்குண்ணே எங்க கூப்பிடுற, நீ முத சாப்பிடு” என்றாள் அவள் சாவகாசமாய்.

 

“அப்புறம் சாப்பிட்டுக்கறேன் ஒரு முக்கியமான விஷயம் நீ இப்போ என்னோட பின்னாடி வா… முன்னாடி கதவை பூட்டிட்டு வா… வேற யாரும் வர மாட்டாங்களே” என்று அவன் போட்ட பீடிகையில் சற்றே கலவரமானாள் தாமரை.

 

“என்னண்ணே என்ன விஷயம் நீ ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கே” என்றாள்.

 

“அதை நீ நேர்ல பார்க்கும் போது தெரியும் வா” என்று சொல்லி அவளை கூட்டிச் சென்றான்.

 

‘என்னவாக இருக்கும்’ என்ற யோசனையுடனே படியேறி சென்றவளுக்கு செவ்வந்தியை அங்கு பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.

 

“என்ன அண்ணா இதெல்லாம்”

 

“அன்னைக்கு மாதிரியே…” என்று ஆரம்பிக்க “அன்னைக்கு மாதிரி ஒண்ணுமில்லை” என்றான் வீரா.

 

“அப்போ என்னாச்சு??”

 

“என்னை மாதிரியே இவளுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை”

 

“அதுக்கு”

 

“ஹ்ம்ம் இவங்க வீட்டை விட்டு ஓடிப்போக பிளான் பண்ணி நம்ம வீட்டு சுவர் ஏறி குதிச்சு பின்னாடி வழியா போகலாம்ன்னு பிளான் போல” என்றவன் முதல் நாள் நடந்ததை அவளிடம் விளக்கினான்.

 

“அண்ணா அம்மா அப்பாகிட்ட சொல்லிடலாம் எனக்கு என்னமோ பயமாயிருக்கு” என்றாள் தாமரை.

 

“அச்சோ தாமரை நீ வேற ஏன் புரிஞ்சுக்காம பண்ணுற… உனக்கு புரியும்ன்னு தான் உன்கிட்ட சொல்ல வந்தேன். நீ என்ன சொதப்புற” என்று சிடுசிடுத்தான்.

“அப்போ என்ன பண்ணுறதா உத்தேசம், இவங்க ஏன் இவ்வளவு நேரம் தூங்குறாங்க”

 

“இப்போதைக்கு நீ எனக்கு கொஞ்சம் உதவி பண்ணு அதான் வேணும். அப்புறம் இவ தூங்குறதுக்கு காரணம் தூக்க மாத்திரை”

 

“அதான் கொஞ்சம் முன்னாடி சொன்னேன்ல” என்றான் அவன்.

 

தாமரை கொஞ்சம் விவரமானவள் “தூக்க மாத்திரையா இங்க எப்படி வந்துச்சு??” என்று கேள்வி கேட்டாள்.

 

“என்னோட தூக்க மாத்திரை!!”

 

“என்ன!! நீ எப்போ தூக்க மாத்திரை எல்லாம் போட ஆரம்பிச்சே??”

 

“அச்சோ தாமரை அந்த விளக்கமெல்லாம் அப்புறம் பேசுவோம். இவளை இவங்க வீட்டில தேட ஆரம்பிக்கறதுக்குள்ள ஏதாச்சும் சொல்லி விட்டு வரணும்” என்று பரபரத்தான் அவன்.

 

“எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும்” என்று பிடிவாதம் செய்தாள் அவன் தங்கை.

 

“அது மிலிட்டரில கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்தேன். அப்போ நான் எப்போவாச்சும் மாத்திரை போடுறது உண்டு. டாக்டர் சஜஸ்ட் பண்ணி தான் போடுறேன் போதுமா” என்றான்.

“நிஜமா”

 

“நிஜமா தான் தாமரை சொல்றேன்”

 

“இன்னும் ஒண்ணே ஒண்ணு அதுக்கு மட்டும் பதில் சொல்லுண்ணா ப்ளீஸ்”

 

“என்ன தாமரை??” என்றான்.

 

“உனக்கு தான் கல்யாணத்துல விருப்பமே இல்லையே அப்புறம் எதுக்கு இவங்களை போக விடாம தடுத்தே” என்றாள் அதிமுக்கிய சந்தேகமாய்.

 

ஒரு வேளை அண்ணனுக்கு பிடித்திருக்கிறதோ என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதில்.

 

“இப்பவும் சொல்றேன் எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை தான். ஆனா உங்களுக்கு எல்லாம் அப்படியா” என்று எதிர்கேள்வி கேட்டான் அவன்.

 

“எங்களுக்கு உன்னோட கல்யாணம் நடக்கணும்” என்றாள் தாமரை.

 

“உங்க சந்தோசத்தை கெடுக்க எனக்கு மனசில்லை அது தான் காரணம் போதுமா!!”

 

ஆனாலும் ஏதோவொன்று அவன் பதிலில் திருப்தியின்மையை அவளுக்கு கொடுத்தது.

 

“கல்யாணத்தை நிறுத்த எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. இவ்வளோ நாள் உங்களோட முகத்துல இவ்வளவு சந்தோசத்தை நான் பார்த்தில்லை”

 

“இப்போ அதை பார்க்கறேன், என்னால ஒரு தலைகுனிவு வேண்டாம்ன்னு தான் பேசாம இருக்கேன். இல்லன்னா முதல்ல ஊரைவிட்டு போன மாதிரி இப்பவும் போயிருப்பேன்” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

 

தாமரைக்கு இவனை ஏன் கேள்வி கேட்டோம் என்றானது. “தப்புன்னா மன்னிச்சிரு அண்ணா ஏதோ கேட்கணும் தோணிச்சு கேட்டுட்டேன்”

 

“சொல்லு என்ன பண்ணலாம்” என்றாள்.

 

“நைட் நேரத்துல இவ எப்படியோ போகட்டும்ன்னு விட முடியலை. நான் பார்க்காம போயிருந்தா வேற, நான் பார்த்தும் எதுவும் செய்யாம விட்டா தப்பில்லையா”

 

“வெளிய போனவளுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிப்போனா எனக்கு உறுத்தாதா” என்றான் மேலும் விளக்கமாய்.

 

“அண்ணே மன்னிச்சுரு தெரியாம கேட்டேன். நான் இதெல்லாம் யோசிக்கவே இல்லை, நீ சொல்லு நான் இப்போ என்ன பண்ணணும்”

 

“நான் போய் கார் எடுத்திட்டு வரேன். நான் இவளை வெளிய கூட்டிட்டு போன மாதிரி தான் காமிச்சுக்க போறேன்”

 

“என்னண்ணே சொல்றே எனக்கு ஒண்ணும் விளங்கலை”

 

“இவ காலையிலேயே கிளம்பி என்னோட வெளிய வந்திருக்கா… நாங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போனோம்ன்னு சொல்லிடறேன்…”

 

“அண்ணே நிஜமாவே நீ என்ன பண்ண போறே எனக்கு புரியலை. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு” என்றாள் தாமரை.

 

“அப்போ அன்னைக்கு நாங்க ஒண்ணா இருந்தோம்ன்னு எல்லாரும் நம்புனாங்க!! இதை நம்ப மாட்டாங்களா!!” என்று எதிர்கேள்வி கேட்டான் வீரா.

 

தாமரை கப்பென்று வாயை மூடிக்கொண்டாள். “ரெண்டு பேருமே ஒரு தப்பும் பண்ணலைன்னு நம்ம வீட்டுக்கு தெரிஞ்சு இருந்தும் யாரும் எதையும் கேட்கலை தானே” என்றான்.

 

“சரி நீ சொல்றதை செய்யறேன்” என்ற தாமரை அறையை விட்டு வெளியேற போக “தாமரை வீட்டில பூ எதுவும் கட்டி வைச்சு இருக்கீங்களா”

 

“எதுக்குண்ணே கேட்குற??”

 

“நீ எடுத்திட்டு வா” என்று அவளை அனுப்பினான். சற்று நேரத்தில் அவன் கேட்டதை கொண்டு வந்தாள் தாமரை.

 

“நீ இவளுக்கு லேசா தலை சரி பண்ணிவிடு” என்றான்.

 

“தாமரை இதை யார்கிட்டயும் சொல்லிடாத, இவளுக்குமே உனக்கு தெரியுங்கற விஷயம் தெரிய வேணாம்” என்று சேர்த்து சொன்னான் வீரா.

 

“சரிண்ணா” என்று தலையாட்டினாள் தாமரை.

 

தாமரை அவள் தலையை லேசாய் சரி செய்ததும் வீரபாண்டியன் அவளை இருகைகளாலும் தூக்கிக் கொண்டான்.

 

‘இரண்டு பேருக்கும் பொருத்தமா தானே இருக்கு. அப்புறம் என்ன ரெண்டும் கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்காங்க’

 

‘கடவுளே நடந்தெல்லாம் தெரிஞ்சு நடந்திச்சோ தெரியாம நடந்திச்சோ இவங்க ஒண்ணு சேர்ந்து சந்தோசமா அவங்க வாழ்க்கையை தொடங்கணும்’ என்று மனதார பிரார்த்தனை செய்தாள் தாமரை.

 

“தாமரை கார் கதவை திற” என்று சொல்லவும் அவள் திறந்தாள்.

 

முன்பக்கம் ஓட்டுனர் இருக்கைக்கு அடுத்திருந்த இருக்கையில் அவளை அமர வைத்தான் வீரபாண்டியன்.

 

“மறந்திட்டேன் பாரு அந்த பூவை எடுத்து அவ தலையில வைச்சு விடு” என்றான்.

 

“எதுக்கு??” என்று விழித்தாள் அவள்.

 

“கொஞ்சம் ப்ரெஷா தெரியும் அப்போ… உள்ளே சாமிக்கிட்ட விபூதி இருக்கும் எடுத்திட்டு வந்து பூசிவிட்டிரு” என்றான்.

 

‘என்னவோ சொல்ற, நான் செய்யறேன்’ என்று நினைத்துக்கொண்டே அவன் சொன்னதை செய்தாள் தாமரை.

 

“சரி தாமரை நான் இவளை வீட்டுல விட்டுட்டு வர்றேன். நம்ம அம்மா அப்பா கேட்டா கூட நாங்க ஒண்ணா வெளிய போனதாவே சொல்லிடு”

 

“அதுக்கு மேல யாரு என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு காரை கிளப்பி சென்றான். அவன் வீட்டின் பின் வாயிலின் வழியே அவன் சென்றதால் யாரும் அவர்களை பார்த்திருக்கவில்லை.

 

செவ்வந்தி அவன் தூக்கும் போதே லேசாய் விழிப்பு தட்டிய போதும் முழு விழிப்பு ஏற்படாததால் விழியை திறக்க முடியாமல் இருந்தாள்.

 

ஏதோ பேச்சு சத்தம் மட்டும் அவள் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் என்ன பேசினார்கள் என்பது அவளுக்கு புரியவில்லை.

வீரபாண்டியன் பின் பக்க வழியே சுற்றிக்கொண்டு மதுராம்பாளின் வீட்டு முன் வாயிலை அடையும் போது மணி ஏழாகியிருந்தது.

 

நல்ல வேளையாக அங்கு கூட்டம் ஒன்றுமில்லை. ராமையா தாத்தாவின் வீட்டில் கூட்டம் மொத்தமும் கூடியிருந்ததால் தெருவில் அதிகம் ஆட்கள் நடமாட்டமில்லை.

 

அவன் காரை கண்டு வாயிலில் இருந்தவன் எதுவும் சொல்லாமல் கதவை திறந்தான்.

 

முல்லை பதட்டமாக அப்போது தான் முன் வாயிலுக்கு வந்து கொண்டிருந்தவள் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள்.

 

வீரபாண்டியனை கண்டதும் ‘அச்சோ அத்தான் எதுக்கு வர்றார்ன்னு தெரியலையே’ என்று யோசித்துக்கொண்டே முன்னே நடந்தாள்.

 

காரை நிறுத்திய வீரபாண்டியன் “முல்லை” என்றழைத்தான்.

 

அவளை அருகே அழைத்து ஏதோ சொல்லவும் முல்லை வேகமாய் உள்ளே சென்றவள் ஆச்சியுடன் திரும்பி வந்தாள்.

 

“வாங்கய்யா… உள்ள வாங்க” என்றார் அவர்.

 

“செவ்வந்தியை நான் தான் கோவிலுக்கு கூட்டிட்டு போனேன். தூத்துக்குடி வரை போயிட்டு வந்தோம். செவ்வந்தி வண்டியிலேயே தூங்கிட்டா” என்றவன் கார் கதவை திறந்துவிட முல்லை அவளை எழுப்பினாள்.

 

எழுப்ப எழுப்ப எழும்பாமல் இருந்தவளை முல்லை ஒரு உலுக்கு உலுக்க லேசாய் உறக்கம் கலைந்தவள் “என்னை எதுக்குடி எழுப்பற இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன்” என்றாள்.

 

செவ்வந்திக்கு என்ன முயற்சித்தும் கண்ணை திறக்கவே முடியவில்லை. இன்னும் தூங்கேன் என்று தான் அது கெஞ்சிக் கொண்டிருந்தது.

 

“உள்ள வந்து தூங்குக்கா” என்று பல்லைக்கடித்தவாறே சொல்லிய முல்லை ஆச்சியை பார்க்க இருவருமாய் அவளை உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

இருவருமாக முன்கட்டு வரை அவளை அழைத்து செல்வதற்குள் இரண்டு முறை அவர்கள் பிடி தளர்ந்து அவள் கீழே விழப்பார்த்தாள்.

 

“நீங்க ரெண்டு பேரும் அவளை விடுங்க” என்றவன் சட்டென்று அவளை தூக்கிக் கொண்டான்.

 

“எங்க படுக்க வைக்கணும்” என்று கேட்க முல்லை ஆவென்று வாயை திறந்து பார்த்திருந்தாள்.

 

மதுராம்பாளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சிவகாமியும் அப்போது அங்கு வந்திருந்தார் அவருமே அப்படியே பார்த்துக்கொண்டே தான் நின்றிருந்தார்.

 

“ஆச்சி” என்றழைத்தான் அவன் நீண்ட நாளைக்கு பின்.

 

சில வருடங்கள் கழித்து அவன் அழைக்கு அழைப்பு அது. செவ்வந்தியுடனான நிச்சியத்தின் போது கூட சாதாரணமாய் பேசியவன் தான் ஆனால் உரிமையான அழைப்பை சொல்லி பேசவில்லை என்று நினைத்திருந்தார் மதுராம்பாள்.

 

“இவ ரூம் எங்க” என்றான்.

 

“முல்லை அத்தானுக்கு காட்டு” என்றார் அவர்.

 

முல்லை உடன் சென்று வழிகாட்ட அங்கு வலதுபுறமிருந்த கட்டிலில் அவளை படுக்க வைத்தான்.

 

பின் வெளியில் வந்து மூவரையும் பார்த்தான். “யார் கேட்டாலும் என்னோட கோவிலுக்கு வந்ததாவே சொல்லிடுங்க”

 

“பார்த்துக்கோங்க” என்று விட்டு அவன் வெளியேற “பாண்டி கொஞ்சம் நில்லுய்யா” என்றார் மதுராம்பாள்.

 

“இவளை எங்க பார்த்தய்யா??”

 

“ஆச்சி அதெல்லாம் இப்போ எதுவும் பேச வேண்டாம்”

 

“அவங்க ரெண்டு பேருக்கும் தெரியலைன்னா பரவாயில்லை. எனக்கு தெரிஞ்சாகணும்” என்றவரை தனியே கூட்டிச் சென்று விஷயத்தை சொல்லிவிட்டான் அவன்.

 

“இப்படி அவ கிளம்பிட்டான்னு யாரும் பேசாம பார்த்துக்கோங்க”

 

“இன்னைக்கு சாயங்காலமே எங்க வீட்டில இருந்து பொண்ணை அழைச்சிட்டு போக வந்திடுவாங்க. அதுவரைக்கும் பார்த்துக்கோங்க” என்றுவிட்டு வெளியேறினான்.

 

“ஒரு நிமிஷம் நில்லுய்யா” என்றவரின் குரலுக்கு பணிந்து நின்றான் அவன்.

 

“எல்லாத்துக்கும் நன்றிய்யா” என்றார் அவர் குரல் தழுதழுக்க.

 

அவர் குரல் ஏன் உடைகிறது, இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று எண்ணியவன் “ஆச்சி எதுக்கு உணர்ச்சி வசப்படுறீங்க” என்றான்.

 

சட்டென்று தன்னை சரிப்படுத்திக்கொண்டவர் “ஒண்ணுமில்லை நல்லா இருக்கேன். நீங்க போயிட்டு வாங்க” என்று அவனை அனுப்பி வைத்தார்.

 

வீரபாண்டியன் வெளியில் செல்லும் வரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.

 

மதுராம்பாளுக்கு பழைய நினைவுகள் முட்டிமோதிக் கொண்டு வந்தது. தன்னை நிதானப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

 

அதற்குள் முல்லையும் சிவகாமியும் சேர்ந்து செவ்வந்தியை குளியலறை கூட்டிச் சென்று தலை வழியாக தண்ணீரை ஊற்றி ஒரு வழியாக அவளை விழிக்கச் செய்திருந்தனர்.

 

செவ்வந்தியும் ஓரளவு தெளிந்து எல்லோரையும் பார்க்க “ஏன்க்கா அப்படி என்ன உறக்கம் உனக்கு… மாமா கோவிலுக்கு கூப்பிட்டார்ன்னா சொல்லிட்டு போக மாட்டியா” என்று முறைத்தாள்.

 

‘கோவிலுக்கா நான் எங்க கோவிலுக்கு போனேன்’ என்ற ரீதியில் விழித்தாள் செவ்வந்தி. இன்னமும் தூக்கம் அவளை முழுதாய் விட்டு செல்லாததில் தலை வேறு கனத்தது.

 

“என்ன அவகிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. போங்க அப்படி. அவ நேத்து நைட் சொன்னா நான் தான் மறந்திட்டேன்” என்ற மதுராம்பாள் சிவகாமியையும் முல்லையையும் உள்ளே போகச் சொன்னார்.

 

அவர்கள் சென்றதும் அந்த அறையின் கதவை அடைத்துவிட்டு வந்தவர் “எதுக்கு வீட்டை விட்டு போக முடிவெடுத்த??” என்றார் பேத்தியை பார்த்து.

 

செவ்வந்திக்கு அவர் அப்படி கேட்டதும் தான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவிற்கு வர ஆரம்பித்தது. ‘பாவி… பாவி கடைசில அவன் தான் ஏதோ சதி பண்ணி என்னை இங்க கூட்டிட்டு வந்து விட்டு போனானா…’

 

‘நைட் குடிக்கற தண்ணியில எதுவும் கலந்திருப்பானோ… இல்லை ஸ்ப்ரே எதுவும் அடிச்சிட்டானா… அவன் தான் என்னமோ பண்ணியிருக்கான்’ என்று மட்டும் புரிந்தது அவளுக்கு.

 

‘சட் இப்படி ஏமாத்திட்டானே, அவனை போய் நம்பினது என்னோட முட்டாள்த்தனம் தான்’ என்று எண்ணிக்கொண்டவள் எதிரில் தன்னையே அளப்பது போல பார்த்திருந்த மதுராம்பாளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

 

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலை” என்றார் அவர்.

 

“எனக்கு கல்யாணம் பிடிக்கலை”

 

“இங்க இப்போ பிடிக்குதா பிடிக்கலையான்னு கேட்கறத்துக்கு நீங்க முதல்ல இடம் கொடுக்கலை”

 

“அது ஏன் ஞாபகம் இல்லை உனக்கு. ஏற்கனவே நீ பண்ண காரியம் இப்போ இந்த நிலையில வந்து நிக்குது. இப்போ வீட்டை விட்டு வேற போகப் பார்த்திருக்க”

 

“இதனால என்ன ஆகும்ன்னு கொஞ்சம் யோசிச்சியா… உனக்கு எப்பவும் உன்னை பத்தி மட்டும் தான் கவலை. நாளைக்கு உனக்கு பின்னால இருக்கவ நிலைமை பத்தி நீ யோசிக்கவே இல்லைல” என்றார் சற்றே காட்டமாகவே.

 

“ஒஹ் அப்போ உங்களுக்கு உங்க செல்லப் பேத்தி பத்தி மட்டும் தான் கவலை என்னைப்பத்தி நீங்க ஏன் கவலைப்பட போறீங்க” என்று வெடுக்கென்று கேட்டாள் அவள்.

 

“எனக்கு என்னோட ரெண்டு பேத்தி வாழ்க்கையும் நல்லா இருக்கணும். ஒரு கண்ணுல வெண்ணெய் இன்னொரு கண்ணுல சுண்ணாம்புன்னு நான் நினைக்கறதில்லை” என்று பதில் கொடுத்தார் அவர்.

 

“அப்போ என் இஷ்டப்படி விடுங்க எனக்கு கல்யாணம் வேணாம்” என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள் அவள்.

 

“இதுக்கு மேல நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் உன்னிஷ்டம். ஒண்ணு நாளைக்கு உன்னோட கல்யாணம் நடக்கும்”

 

“இல்லைன்னா நாளைக்கு எங்க மூணு பேருக்கும் கருமாதி நடக்கும். எது நடக்கணும்ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்றுவிட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார்.

 

செவ்வந்திக்கு தலைவலித்தது. இப்படி ஒரு நெருக்கடியில் சிக்க வைத்தவன் மட்டும் கையில் கிடைத்தால் நிச்சயம் அவனை ஒரு வழி செய்திருப்பாள்.

‘எதுவோ நடந்து தொலையட்டும், நானே பலியாடு ஆகிறேன்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள் அவள்.

 

சிறிது நேரம் கழித்து அறைக்குள் வந்த முல்லையோ தமக்கையை ஏற இறங்கப் பார்த்தாள்.

 

“என்னடி எதுக்கு இப்படி பார்க்குற” என்று சிடுசிடுத்தாள் அவள்.

 

“இல்லை மாமாவை பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு இன்னைக்கு அவர் கூட தனியா கோவிலுக்கு போயிட்டு வந்திட்டியே” என்றாள் அவள்.

 

“நீ பார்த்தியா நான் கோவிலுக்கு போனதை”

 

“போகாமயா மாமா உன்னை கார்ல கூட்டிட்டு வந்து விட்டாரு. தலை நிறைய மல்லிகை பூவை வைச்சுகிட்டு நெத்தியில பட்டையா விபூதி பூசிட்டு வந்தியே எப்படியாம்” என்றாள்.

 

“சும்மா சொல்லாதக்கா நானும் உங்க ரெண்டு பேரையும் புடவை கடையில இருந்தே பார்த்திட்டு தான் வர்றேன். நீங்க குசுகுசுன்னு பேசிட்டு வந்தது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியாக்கா” என்றாள் அரைகுறையாய் பார்த்ததை வைத்து.

 

“ஹ்ம்ம் ஆமா எனக்கு ரொம்ப ஆசை அவர் மேல அதான் ரகசியம் பேசிட்டு இருந்தேன். பேசாம இங்க இருந்து போடி, எனக்கு எரிச்சலை கிளப்பாத” என்று கத்தினாள்.

“சரி தான் போக்கா” என்று சொல்லிவிட்டு முல்லையும் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

வீரபாண்டியனின் வீட்டு முன் வாயிலில் பந்தல் போடப்பட்டிருந்தது. அனைத்து சொந்த பந்தங்களும் இல்லாவிட்டாலும் முக்கிய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

 

எல்லோருமே காலை திருமணத்திற்கு தான் வந்திருந்தனர். வீரா மணவறையில் வந்து அமர்ந்துவிட்டான். பெண்ணைத் தான் அழைத்து வர உள்ளே சென்றிருந்தனர்.

 

வீரபாண்டியன் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. வந்தவர்களை வரவேற்கும் விதமாய் கூட பார்த்து வைக்கவில்லை.

 

எங்கே அவர்களை பார்த்தால் என்னவோ அவன் குற்றம் செய்து வைத்த தினுசில் பார்க்க அவனுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை.

 

செவ்வந்தியை அழைத்து வரும் அரவம் தெரிந்தது. “ஏ புள்ள தாமரை என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கவ, உன் மதினிக்காரியை உட்கார வைய்யி” என்றார் ஒரு பெண்மணி.

 

‘மதினியா’ என்று நிமிர்ந்து தாமரையை பார்த்தாள் செவ்வந்தி. நிச்சயம் தாமரைக்கு செவ்வந்தியை விட கூடுதல் வயதிருக்கும்.

 

‘எப்படியும் மூன்று அல்லது நான்கு வயது மூத்தவளாய் இருக்கும் தாமரைக்கு நான் மதினியா, என்ன கொடுமை இது…’ என்று யோசித்தவளுக்கு தன் வயது சற்றே கூடிவிட்டார் போன்று ஒரு பிரமை.

 

சட்டென்று மனதில் அப்படி ஒரு கோபம் எழுந்தது மணவறையில் அமர்ந்திருந்தவன் மீது.

 

‘இவனும் கல்யாணத்தை நிறுத்த மாட்டான். என்னையும் நிறுத்த விடாம பண்ணிட்டானே’ என்று ஒரு ஆங்காரம் எழுந்தது அவளுக்கு.

 

அவள் வீட்டை விட்டு கிளம்பியதில் இருந்து முதல் நாள் அவன் வந்து வீட்டில் விட்டு சென்றது அதன் பின் நடந்தது என்று அவள் நினைவுகள் சென்றது.

 

வீரபாண்டியனும் அவள் முகத்தை பார்த்ததும் அதை தான் நினைக்க ஆரம்பித்தான் போலும். அருகே வந்து அமரும் வரை கூட அவள் முறைப்பை விடவேயில்லை.

 

‘அடிக்கிற வெயிலு பத்தாதுன்னு இவ வேற பொசுக்குற பார்வை பார்க்கறா’ என்று நினைத்துக்கொண்டான்.

 

பெரியவர்கள் ஆசிர்வதித்து கொடுக்க செவ்வந்தியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து மூன்று முடிச்சு போட்டு அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் வீரபாண்டியன்….

 

Advertisement