Advertisement

அத்தியாயம் – 33

 

காலையில் வீரா அவர்கள் அறையில் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான். செவ்வந்தி உள்ளே வந்தவள் அவனை அவசரமாய் எழுப்ப அவனோ அவள் கைப்பிடித்திழுத்து தன் மேல் சாய்ந்திருந்தான்.

 

கட்டிலில் இசகுபிசகாய் விழுந்தவளின் அருகில் படுத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவளை பேசவிடாமல் தன் வேலையை தொடங்கியிருந்தான்.

 

பேச வந்த அவள் அதரங்களை மூடியவன் சில நொடிகள் கழித்து விடுவித்து “இப்போ சொல்லு என்னமோ சொல்ல வந்தியே!!” என்று சாவகாசமாய் கேட்க அவள் சொல்ல வந்ததையே மறந்திருந்தாள்.

 

“என்னடி முழிக்கிறவ?? என்ன சொல்ல வந்தே சொல்லு?? இல்லைன்னா இன்னொரு கிஸ் பண்ணிறவா அப்போ உனக்கு ஞாபகம் வந்திடுமா??” என்று கேட்க “போடா எல்லாம் உன்னால தான் என்ன சொல்ல வந்தேன் மறந்திட்டேன்” என்று சொல்லி அவனை இரண்டடி போட்டாள்.

 

“அதுக்கு தான் சொன்னேன், திரும்ப கிஸ் பண்ணா எல்லாம் ஞாபகம் வந்திடும்” என்றவாறே அவள் இதழ் நோக்கி குனிய சட்டென்று ஞாபகம் வந்தது அவளுக்கு.

 

அவனை பிடித்து தள்ளியவள் “ஞாபகம் வந்திருச்சு… கீழே உங்க பிரண்டு வந்திருக்காரு”

 

“பிரண்டா யாரை சொல்றே??”

 

“ரியாஸ் அண்ணா வந்திருக்காரு… உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணுமாம். நீங்க கொஞ்சம் எழுந்து வாங்க… வந்து பேசுங்க” என்றவள் கட்டிலை விட்டு இறங்கி நின்றாள்.

 

“சரி நான் வர்றேன் நீ போய் அவனை பாரு” என்று சொல்ல வாசலுக்கு வந்தவள் “ஏங்க அவங்க பேமிலியோட வந்திருக்காங்க” என்றாள்.

 

“என்ன பேமிலியோடவா!!” என்று யோசனைக்கு தாவினான் அவன்.

 

“எனக்கு…” என்று அவள் முடிக்காமல் விட “அதே சந்தேகம் தான் எனக்கும். நீ போய் வந்தவங்களை கவனி நான் வர்றேன்” என்று மனைவியை அனுப்பி வைத்தான்.

 

அவன் அவசரமாய் குளித்து உடைமாற்றி அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கிருந்தான். சக்திவேலும் இன்னமும் வெளியே கிளம்பியிருக்கவில்லை.

 

அவர் ரியாஸின் தந்தையுடம் பொத்தாம்பொதுவாய் பேசிக் கொண்டிருந்தார்.

 

வீரா வந்தவர்களை நலம் விசாரித்து பின் நண்பனை நோக்கித் திரும்பினான். “என்னடா என்ன விஷயம்??” என்று.

 

ரியாஸ் கூலாக “பொண்ணு பார்க்க வந்திருக்கேன்” என்றான்.

 

“என்ன??” என்றான் வீரா அதிர்ச்சியாய்.

 

உள்ளிருந்த செவ்வந்தியும் வெளியே எட்டிப் பார்த்தாள்.

 

“நீயும் இங்க கொஞ்சம் வாம்மா!!” என்று ரியாஸ் அவளை அழைத்தான்.

 

அடுப்பை அணைத்துவிட்டு வந்தவள் வீராவின் இருக்கைக்கு அருகில் சென்று நின்றுக்கொண்டாள்.

 

“என்னடா கேள்வி அவ்வளவு தானா?? யாரைன்னு கேட்க மாட்டியா??” என்று அவன் சொல்ல “மயிலா??” என்றாள் செவ்வந்தி.

 

“பாருடா என் தங்கச்சியை… நீயும் இருக்கியே… நாங்கலாம் எவ்வளவு புத்திசாலின்னு பாரு!! எங்களை பார்த்து கத்துக்கோ!!” என்று நண்பனை வாரினான் ரியாஸ்.

 

“அண்ணா இதெல்லாம் சரியா வராதுண்ணா!! நீங்க வேற ஆளுங்க அவங்க வேற ஆளுங்க எப்படி ஒத்துக்குவாங்கன்னு நினைக்கறீங்க” என்று நேரடியாய் விஷயத்திற்கு வந்துவிட்டாள் அவள்.

 

வீராவுக்கு அந்த கவலையெல்லாம் இல்லை ஆனால் அவன் வேறு யோசித்துக் கொண்டிருந்தான்.

 

“நீ என்னடா அமைதியா இருக்கே?? நீ எதுவும் சொல்லலையா??”

 

“அன்னைக்கு நீ விசாரிச்சப்பவே லேசா சந்தேகம் தான் எனக்கு… ஆனா இவ்வளவு சீரியஸா இறங்குவேன்னு நினைக்கலை…” என்று மட்டும் சொன்னான் வீரா.

 

“ஏன்டா இதெல்லாம் சரிவரும்ன்னு நினைக்கறியா??” என்றான் தொடர்ந்தான் அவன் மனைவியை போலவே.

 

“ஏன்பா ஒத்துவராது??” என்று கேட்டது ரியாஸின் அன்னையின் குரல்.

 

“அம்மா அது வந்து…”

 

ரியாஸின் அன்னை ஏதோ பேச வர “அம்மா நான் பேசிக்கறேன்” என்று தடுத்திருந்தான் ரியாஸ்.

 

“முதல்ல தங்கச்சிக்கு பதில் சொல்லிடறேன். என்னம்மா சொன்னே நாங்க வேற ஆளுங்க அவங்க வேற ஆளுங்களா!! இருந்திட்டு போகட்டுமே அதனாலென்ன!! அதுக்காக நான் கேட்க கூடாதா என்ன”

 

“இல்லை அண்ணா அது வந்து, மயிலு அவங்க அம்மா…” என்று இழுத்தாள்.

 

“ஒத்துக்க மாட்டாங்களா??” என்றான்.

 

“ஒத்துக்க நெறைய வாய்ப்பு இருக்கு. ஆனா நீங்க அவ மேல கோவத்துல இந்த முடிவை எடுக்கலையே?? அன்னைக்கு அவ உங்களை அப்படி கிண்டல் பண்ணான்னு இந்த முடிவுக்கு ஒண்ணும் வரலையே!!”

 

‘இருந்தாலும் இந்த பொண்ணுக்கு இவ்வளவு அறிவு இருக்கக் கூடாது. நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் அது தான்மா உண்மை’

 

‘என்னைய டோலக்கு மூஞ்சின்னு சொன்னவ, தினமும் இந்த மூஞ்சியை பார்க்க வைக்கணும்ன்னு தோணிச்சு அதான் உடனே முடிவு பண்ணிட்டேன்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

 

உண்மையாகவே அந்த காரணமில்லை என்பதை அவனே அக்கணம் உணரவில்லை. செவ்வந்தியிடம் “அப்படி எல்லாம் இல்லைம்மா, எனக்கு பிடிச்சிருந்தது அதான் வந்தேன்” என்றான் உண்மையை முழுதாய் சொல்லாமல்.

 

“ரொம்ப சந்தோசமாயிருக்கு அண்ணா…”

 

“அப்போ அவங்க வீட்டில ஒத்துக்குவாங்களா!!” என்று ஆர்வமாய் கேட்டான்.

 

“ஒத்துக்க நெறைய வாய்ப்புகள் இருக்கு. ஏன்னா அவங்க பேமிலி ரொம்ப கஷ்டப்படுற பேமிலி. என்னைப்போலவே அப்பா இல்லை அவளுக்கு” என்று சொல்லும் போது வீராவுக்கு லேசாய் குத்தியது போல் இருந்தது.

 

அந்த வார்த்தையை சொன்ன பின்னே தான் செவ்வந்தியும் உணர்ந்திருக்க வேண்டும். திரும்பி தன் கணவன் முகம் கண்டு சமாதானம் செய்தாள் கண்ணில்.

 

அவன் ஒன்றுமில்லை என்று ஜாடை காட்டவும் தன் பேச்சை தொடர்ந்தாள். “படிப்பும் பிளஸ்டூ தான். அதுக்கு மேல படிக்க வசதியில்லை”

 

“எங்க ஆச்சி உதவி பண்றேன்னு சொல்லியும் அவங்க மறுத்திட்டாங்க. இருக்கறதை கொண்டு எப்படி வாழறதுன்னு வாழ்ந்திட்டு இருக்காங்க”

 

“அவங்களுக்குன்னு இருக்கறது ஒரு சின்ன இடம் அதை குத்தகைக்கு விட்டு தான் அவங்க வாழ்க்கை போகுது. அவங்கப்பா உடம்பு சரியில்லாம தான் இறந்து போனாரு”

 

“அவர் போனப்பவே அவங்களுக்கு கொஞ்சம் கடனாகி போச்சு. அப்புறம் அவளோட தம்பி ஒருத்தனும் உடம்பு சரியில்லாம மூணு வருஷம் முன்னாடி தான் தவறிப் போனான்”

 

“அவங்களோட வைத்திய செலவை பார்த்துல திரும்பவும் அவங்களுக்கு கடன் தான். அவளுக்குன்னு எதையும் சேர்த்து வைக்கலை”

 

“அவளோட கல்யாணங்கறது கேள்வி குறியான ஒரு விஷயமா தான் இப்போ வரைக்கும் இருக்கு. அவங்க அம்மாவுக்கு ரொம்பவே வருத்தம் அவளை ஒரு நல்லவன்கிட்ட ஒப்படைக்கணும்ன்னு. ஆனா அதுக்கு அவங்ககிட்ட போதுமான வசதி இல்லை”

 

“குறைந்த பட்ச நகை போட கூட அவங்களால இப்போ முடியாது. நாங்க உதவி பண்றோம்ன்னு கை நீட்டியும் அவங்க பிடிவாதமா மறுத்திட்டாங்க”

 

“ஆச்சியும் மயிலுக்கு மாப்பிள்ளை தேடி தானா வருவாங்க… அப்போ நாம செஞ்சிக்கலாம் இப்போ அவங்க விருப்பப்படியே விட்டிருவோம்ன்னு ஒரு முறை சொன்னாங்க…”

 

“நீங்க தேடி போய் கேட்டா அவங்க அம்மா மறுக்க மாட்டாங்க… ஆனா இது தான் அவங்க குடும்ப சூழ்நிலை. இதுக்கு அப்புறம் முடிவெடுக்கறது உங்க பொறுப்பு” என்று முடிவை அவன் கையில் விட்டுவிட்டாள்.

 

ரியாஸ்க்கு அப்போது தான் அவன் முடிவு இன்னமும் உறுதிப்படுவது புரிந்தது. என்ன ஆனாலும் சரி கட்டினால் இவளை தான் கட்டுவது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டான். அவன் மனதும் லேசாய் புரிவது போல் இருந்தது அவனுக்கு.

 

“அம்மா” என்றழைத்தான்.

 

“நான் உனக்கு பொண்ணு தேடி களைச்சுப்போய்டேன் ஹென்றி. பொண்ணு உனக்கு பிடிச்சா அவங்களுக்கு பிடிக்கலை, அவங்களுக்கு பிடிச்சா உனக்கு பிடிக்கலை. ரெண்டு பேருக்கும் பிடிச்சா வேற தடைன்னு வரிசையா வருது”

 

“இனி கல்யாண விஷயத்துல உன் முடிவு தான். அது எந்த பொண்ணா இருந்தாலும் எங்களுக்கு ஓகே தான். வசதி நமக்கு முக்கியமில்லை” என்றார் அவன் அன்னை எஸ்தர்.

 

செவ்வந்தி அவசரமாய் குனிந்து தன் கணவனின் காதை கடித்தாள். “என்னங்க அண்ணாவோட பேரு ரியாஸ் தானே. அவங்கம்மா ஹென்றின்னு சொல்றாங்க” என்றாள்.

 

“அவன் பேரு ஹென்றியாஸ், நாங்க தான் ரியாஸ்ன்னு கூப்பிடுவோம்” என்று விளக்கினான்.

 

அதற்கு ரியாஸ் “அப்பா நீங்க…” என்று அவர் முகம் பார்த்தான்.

 

“எனக்கும் உன் விருப்பம் தான் முக்கியம் ஹென்றி” என்று அவரும் சம்மதம் கொடுத்தார்.

 

“அங்கிள் உங்களுக்கு இதுல எதுவும் மாற்று கருத்து இருக்கா அங்கிள்” என்று சக்திவேலையும் சேர்த்துக் கொண்டான் ரியாஸ்.

 

“நிஜமாவே உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்காப்பா??”

 

ரியாஸ் இப்போது உறுதியாய் சொன்னான் “ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள்”

 

“அப்போ இன்னும் என்ன பேசிக்கிட்டு போய் அங்கவே ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடுவோம்” என்று நேரடியாக விஷயத்திற்கே வந்துவிட்டார் அவர்.

 

“ஏன்டா உனக்கு எதுவும் சொல்லணுமா??” என்று நண்பனையும் கேட்டுக்கொண்டான் ரியாஸ்.

 

“இல்லை நாம போயிட்டு வருவோம்” என்றான் வீரா தன் நண்பனின் மனதை புரிந்தவனாய்.

 

“மயிலு… மயிலு…” என்ற செவ்வந்தி குரலில் உற்சாகமாய் வெளியில் ஓடி வந்த மயிலு அங்கிருந்தவர்களை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

 

கையில் அறைகுறையாய் வழித்திருந்த மாவை கழுவாமல் தோழியின் குரல் கேட்டு வெளியில் ஓடி வந்திருந்தாள் அவள்.

 

“என்னடி மசமசன்னு நிக்கறவ, வந்தவங்களை உள்ள கூப்பிட மாட்டியாட்டி” என்று தோழியை கடிந்தாள் செவ்வந்தி.

 

‘எதுக்கு வந்திருக்காங்கன்னே தெரியலை. இதுல நான் இவங்களை வாங்கன்னு வேற சொல்லணுமா’ என்று எதுவும் சொல்லாமல் பார்த்திருக்க மயிலின் அன்னை வெளியில் வந்தார்.

 

“வாம்மா செவ்வந்தி எப்படி இருக்கே??” என்று அவளை விசாரித்தவர் நெறைய பேர் இருப்பதை பார்த்து செவ்வந்தியை கேள்வியாய் நோக்கினார்.

 

“அத்தை எங்களை உள்ள கூப்பிட மாட்டீங்களா!!”

 

“உள்ள வாங்க” என்று அவர் கூப்பிட அனைவரும் உள்ளே சென்றனர்.

 

அன்னை வந்ததுமே மயிலு எப்போதோ உள்ளே சென்றிருந்தாள். வந்தவர்கள் தாங்கள் வந்த விஷயம் உரைக்க அவருக்கு மகிழ்வதா இல்லை மறுப்பதா என்ற எண்ணம்.

 

தங்களின் நிலை அவருக்கு தெரியும் தானே, அதை மெதுவாய் எடுத்துச்சொல்ல ரியாஸ் “உங்க பொண்ணு மட்டும் தான் வேணும்”

 

“அந்த சொத்தை மட்டும் நீங்க எனக்கு கொடுங்க. உங்ககிட்ட இருந்து நகை பணம்ன்னு வேற எதையும் எதிர்பார்க்கலை. எனக்கு அவளை பிடிச்சிருக்கு”

 

“முல்லை கல்யாணத்துல வைச்சு பார்த்தேன். பார்த்ததுமே பிடிச்சி போச்சு. வீட்டில சொல்லி அவங்க சம்மதத்தோட தான் வந்திருக்கேன்”

 

“என்னைப்பத்தி விசாரிக்கணும்ன்னா தாராளமா விசாரிச்சுக்கோங்க!! அப்புறம் இவனும் நானும் ஒண்ணா தான் வேலை பார்த்தோம்”

 

“நானும் சர்வீஸ் போதும்ன்னு எழுதி கொடுத்திட்டு திரும்ப இங்கவே வந்திட்டேன். அப்பாவோட ஹோட்டல் கடையை நான் தான் இனி பார்க்க போறேன்”

 

“அவருக்கு கொஞ்சம் உடம்பு முடியலை. ரெஸ்ட் கொடுத்தாகணும் அதனால தான் திரும்பி வந்திட்டேன்” என்று நீளமாக தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

 

இவர்கள் பேசிக்கொண்டிருந்த வேளை செவ்வந்தி மயிலை தேடிச் சென்றாள். அவள் பின்னிருந்த காலியிடத்தில் இருந்த கல்லில் சென்று அமர்ந்திருந்தாள்.

 

“என்னட்டி இங்க வந்து உட்கார்ந்திருக்க”

 

“என்னடி நினைச்சுட்டு இருக்கான் அந்த டோலக்கு மூஞ்சி!! நான் கிண்டல் பண்ணதை மனசுல வைச்சுட்டு இங்க வந்திருக்கானா!!”

 

“ஒழுங்கா மரியாதையா அவனை இங்க இருந்து ஓடிறச்சொல்லு இல்லை நடக்கறதே வேற பார்த்துக்கோ” என்று பொறிந்த மயிலை சிரிப்பாக பார்த்தாள் செவ்வந்தி.

 

“ஏன்டி அந்த அண்ணனை பார்த்து இப்படி சொல்ற??”

 

“பின்னே எப்படி சொல்றதாம் உங்க நொண்ணனை”

 

“இங்க பாரு அவருக்கு நிஜமாவே உன்னைப் பிடிச்சு தான் இங்க வந்திருக்கார். உனக்கு முன்னாடியே நான் எல்லாம் அவர்கிட்ட பேசிட்டேன், புரிஞ்சுக்கோட்டி சரின்னு சொல்லு”

 

“நீ என்னட்டி லூசா!! எங்க வீடு இருக்கற இருப்புக்கு எனக்கு கல்யாணம் ஒண்ணு தான் கேடா!! நான் கல்யாணம் முடிச்சு போய்ட்டா எங்கம்மாவை யாரு பார்த்துக்கறது”

 

“எனக்கு கல்யாணமே வேண்டாம்டி!! நான் கல்யாணமே பண்ணிக்கறதா இல்லை!!” என்று பதில் கொடுத்தாள்.

 

“ஏன் உங்கம்மாவை நம்மோட கூட்டிப் போய் வைச்சு நான் பார்த்துக்க மாட்டேன்னு நினைக்கறியா!!” என்ற குரலில் அங்கிருந்த இரு பெண்களும் திரும்பி பார்த்தனர்.

 

வீராவும் ரியாஸும் அங்கு நின்றுக் கொண்டிருந்தனர். பேசியது ரியாஸ், மயிலு பேசிய அவனை முறைத்தாள்.

 

“வந்தி” என்று வீரா அழைக்க அவள் அங்கிருந்து நகரப் போக அவள் கையை எட்டிப்பிடித்தாள் மயிலு.

 

“அவரை இங்க இருந்து போகச் சொல்லு செவ்வி. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. இந்த பரிதாபம் பச்சாதாபம் எல்லாம் எனக்கு வேணாம்”

 

“மரியாதையா இங்க இருந்து இந்த டோலக்கு மூஞ்சி போகலை அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று மெதுவாய் ஆரம்பித்து சத்தமாய் கூறி முடித்திருந்தாள்.

அவள் சொன்ன டோலக்கு மூஞ்சியில் லேசாய் அவனுக்கு சிரிப்பு எட்டிப்பார்த்தது.

 

‘லூசா இவன் திட்டுறேன் சிரிக்கறான்’ என்று முறைத்தாள் மயிலு.

 

“அண்ணா அவ சொல்றதை எல்லாம்”

 

“நான் சீரியஸா எடுத்துக்கலை”

 

“லூசாடா நீ?? நான் எவ்வளோ சீரியஸ் பேசறேன் நீ அப்படி எடுத்துக்கலைன்னு சொல்ற” என்று மரியாதையை விட்டிருக்க வீராவோ ‘தோழிங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் இருப்பாங்களா’

 

‘சுத்தமா மரியாதை தேயுதே!! அப்போ இது ஓகே ஆகிடும்!! பயபுள்ள பாடு இனி திண்டாட்டம் ஆகிடும்’ என்று மனதிற்குள் அவனாக சொல்லிக் கொண்டான்.

 

“இங்க பாரு எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. பரிதாபமெல்லாம் இல்லை. ஐ லவ் யூ போதுமா!! கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னை தான் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறேன்” என்று வீரா செவ்வந்தியின் முன்னேயே அவன் காதலை சொன்னான்.

 

“என்னை பிடிக்கலைன்னு சொல்லு, இல்லை நான் வேணாங்கறதுக்கு சரியான காரணம் சொல்லு நான் போய்டறேன்” என்று சொல்லி அவள் பதிலுக்காய் காத்திருந்தான் அவன்.

“ஆமா பிடிக்கலை”

 

“ஏன் பிடிக்கலை??”

 

“தெரியலை, அதுக்கெல்லாம் என்னால காரணம் சொல்ல முடியாது”

 

“சரி அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம். உனக்கு எப்போ பிடிக்குதோ அப்போ பிடிக்கட்டும், நான் வெயிட் பண்றேன்”

 

“செவ்வி…” என்று பல்லைக்கடித்தாள் மயிலு.

 

“லூசா நீங்க??”

 

“இது வரைக்கும் இல்லை. இனிமே ஆகிட்டாதே!!”

 

“என்ன இவரு இப்படி பேசுறாரு?? கொஞ்சம் சொல்லி புரியவைடி” என்று தோழியை துணைக்கழைத்தாள் மயிலு.

 

“நான் உனக்கு சப்போர்ட் பண்ணுறதா இல்லை மயிலு. அண்ணனை ஏன் வேணாம்ன்னு சொல்றே!! என்ன குறை கண்ட இவர்கிட்ட”

 

அப்போது உள்ளிருந்து “சித்ரமயிலு” என்று மயிலின் அன்னை அழைத்தார். ரியாஸ் விழிக்க செவ்வந்தி “அண்ணா அவர் பேரு சித்ரமயில் தான் உங்களை போல ரெண்டு பேரு தான்” என்றுவிட்டு தோழியுடன் உள்ளே சென்றாள்.

அங்கு அவள் அன்னை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க அங்கு வந்த ரியாஸ் அவள் சம்மதத்திற்காய் காத்திருந்தான்.

 

அவனிடமே மறுத்து சொன்னவள் அன்னை கேட்டதும் மறுப்பு சொல்லாமல் ஒத்துக்கொண்டாள்.

 

செவ்வந்தி கூட கேட்டாள் “எப்படிடி ஒத்துக்கிட்ட??” என்று.

 

“என்னை இக்கட்டுல நிறுத்தி சம்மதம் கேட்டா நான் என்னடி சொல்வேன். எங்கம்மா சொன்னா நான் எதையும் மறுத்திருக்கேனா!!” என்று வேதனையாய் அவள் சொன்னதை ரியாஸும் கேட்டிருந்தான்.

 

அப்போதைக்கு எதுவும் சொல்லாது அங்கிருந்து கிளம்பிவிட மறுநாளே வீராவின் வீட்டிற்கு வந்திருந்தான் அவன்.

 

“எனக்கு அவகிட்ட ஒரு பத்து நிமிஷம் பேசணும் செவ்வந்தி. ப்ளீஸ்ம்மா எப்படியாச்சும் பேச வை” என்று கேட்க செவ்வந்தி மயிலிடம் பேச வேண்டும் என்று சொல்லி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள்.

 

தோழியிடம் தான் பேசப் போகிறோம் என்று நினைத்து அவள் இந்த அறையில் இரு என்று சொல்லிவிட்டு போக அவளும் தோழிக்காய் அங்கு காத்திருந்தாள்.

 

அப்போது அங்கு வந்த ரியாஸை அவள் கோபமாய் பார்க்க அவன் அவளை எப்படியோ அதட்டி உருட்டி தன் மனம் புரிய வைத்து எப்படியோ அவள் சம்மதம் வாங்கிவிட்டான் ரியாஸ். இதோ அவன் திருமணமும் முடிந்துவிட்டது.

 

அவர்களுக்கு ஹனிமூன் புக் செய்யும் சாக்கில் வீரா தங்களுக்கும் புக் செய்திருந்தான். அதன் பொருட்டு தான் தம்பதியரின் பயணம் மூணாரை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

 

சக்திவேல் தனியாக இருப்பார் என்று செவ்வந்தி வருந்த சக்திவேலோ தாமரையை வந்து இருக்கச் சொல்லுக்கிறேன் என்று சொல்லி அவளை அழைத்தும் விட்டிருந்தார்.

 

தாமரையும் முன்பு போலல்லாமல் மாறியிருந்ததில் நீங்கள் சந்தோசமாக சென்று வாருங்கள் என்று சொல்லி செவ்வந்தியை சம்மதிக்க வைத்து அனுப்பினாள்.

 

வீராவின் கார் மூணாரை நோக்கிச் செல்லும் பாதையில் சென்றுக் கொண்டிருந்தது.

 

காரின் முன்னிருக்கையில் வீராவும் செவ்வந்தியும். எப்போதும் போல் சேவலும் கோழியும் ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டிருந்தது.

 

எதற்காம் இந்த முறைப்பு என்பது தானே கேள்வி!! வேறு ஒன்றுமில்லை தான் காரை ஓட்ட மாட்டேன் பின்னில் அமர்ந்து தான் வருவேன் என்று வீரா அடம் பிடித்திருந்தான் முடியாது என்று மறுத்திருந்தாள் அவன் மனைவி.

 

பின்னே பின்னிருக்கையில் புதிதாய் மணமுடித்த ரியாசும் மயிலும் இருக்கிறார்களே!! அதற்கு தான் இருவரும் சிறு சலசலப்பை தொடங்கியிருந்தனர்.

 

“அடேய் இதெல்லாம் உனக்கு நல்லாயிருக்காடா!! மாங்கு மாங்குன்னு ஒருத்தன் கார் ஓட்டிட்டு வர்றானே!! நான் எதுவும் ஹெல்ப் பண்ணவான்னு கேட்கறியா!!” என்று நண்பனின் திருவிளையாடல் கொடுத்த சத்தத்தில் திரும்பியும் பார்க்காமல் கேட்டான் வீரா.

 

“டேய் நீ எல்லாம் என்ன நண்பன்டா!! ஒருத்தனுக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கே அவன் சந்தோசமா இருப்பானேன்னு கொஞ்சம் அமைதியா வர்றியா!! சும்மா தொணதொணன்னு பேசிட்டு இருக்கே!!” என்றான் தோழன்.

 

“நீ எல்லாம் ரொம்ப நல்லாவே வருவேடா கடன்க்காரா!!”

 

“ஏங்க பேசாம இருக்க மாட்டீங்களா!! உங்களால முடியலன்னா சொல்லுங்க நானே வண்டி ஓட்டுறேன்” என்று தனக்கு தானே ஆப்பை தயார் செய்தாள் செவ்வந்தி.

 

மனதிற்குள் வேக கணக்கை போட்ட வீராவோ “ஹ்ம்ம் அப்போ சரி நீயே ஓட்டு” என்றவன் காரை நிறுத்திவிட்டான்.

 

“ஏன்டா இப்படி அக்கப்போர் பண்றீங்க?? மனுஷனை நிம்மதியா இருக்க விடுறீங்களாடா!! உங்களோட ஹனிமூன்க்கு வந்தேன் பாரு என்னைய சொல்லணும்” என்று தலையில் அடித்துக் கொண்டான் ரியாஸ்.

 

அவன் பாவத்தில் சிரித்துவிட்டாள் மயிலு “சிரிக்காதடி” என்று அவளை முறைத்தான் அவன்.

 

“போதும்டா மாப்பிள்ளை ஓவரா ரவுசு விடாத!! இவரு மட்டும் அக்கப்போரு பண்ணுவாராம் நாங்க மட்டும் வைக்கப்போரை திங்கவா!! போடா டேய் போடா” என்றவாறே கீழே இறங்கிய வீரா சுற்றி வந்து செவ்வந்தி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து கொண்டான்.

 

‘என்ன சொல்றாரு இவரு!! எதுவும் கோக்குமாக்கு பண்ணுவாரோ!! தெரியாம வாயை விட்டுட்டோமோ!!’ என்று எண்ணியவாறே அவனிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு வண்டியை இயக்கினாள்.

 

அவள் வண்டி ஓட்ட ஆரம்பித்து சீரான வேகம் செல்லும் வரை அமைதியாகவே தான் வந்தான் வீரா.

 

‘என்ன இது பயபுள்ளை ரொம்ப அமைதியா வருது… இது சரியில்லையே!!’ என்று எண்ணிக்கொண்டு திரும்பி பார்க்க அவன் பார்வை முழுதும் அவள் மேலேயே கண்டபடி பாய்ந்து கொண்டிருந்தது.

 

‘அடப்பாவி இதுக்கு தான் நீ ஓட்டுன்னு சந்தோசமா சொன்னானா’ என்று நினைத்தவள் காற்றில் பறந்துக் கொண்டிருந்த புடவையை இழுத்து நன்றாக சொருகினாள்.

 

‘கண்டுப்பிடிச்சிட்டா வீரா கண்டுப்பிடிச்சிட்டா இருந்தாலும் உன் பொண்டாட்டிக்கு இவ்வளவு புத்திசாலித்தனம் ஆகாது’ என்றவன் நிமிர்ந்து அவளை முறைத்தான்.

 

அவளோ அவனை கேலியாய் பார்த்தாள். பின் பின்னால் என்று அவர்களை ஜாடை காட்டினாள்.

 

“ஆமாடி நீ பின்னால ஆளிருக்குன்னு என்னைய பார்க்க விடாம பண்ணுற… முன்னால ஆளிருக்குன்னு அவன் பேசாமலா வர்றான். இதெல்லாம் உனக்கு ஓவரா இல்லை வந்தி” என்று சலிப்பாகவே கேட்டான் அவன்.

 

தலையிலடித்துக் கொண்டாள் அவள். “கொஞ்சம் பேசாம வாங்க!! உங்க எல்லார் உயிருக்கும் நான் தான் இப்போ கேரண்டியா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன்”

 

“இப்படி என்கிட்ட நீங்க உரன்டைய இழுத்தா நான் எப்படி வண்டி ஓட்டுறதாம்!!” என்றாள்.

 

“இல்லைன்னா மட்டும் இவுங்க ஆகா ஓகேன்னு சொல்லிருவாங்க” என்றவனை நன்றாகவே முறைத்தாள்.

 

சீராக ஓட்டிக்கொண்டிருந்த வண்டியை ஓரமாய் நிறுத்தினாள் அவள்.

 

‘புருஷனும் பொண்டாட்டியும் எங்களை நிம்மதியா இருக்க விடறதில்லைன்னு முடிவு பண்ணிட்டாங்க போல’ என்று எண்ணிக்கொண்டே “இப்போ என்னடா” என்றான் ரியாஸ்.

 

“நானில்லை உன் தொங்கச்சி” என்று செவ்வந்தியை கைக்காட்ட அவளோ “டி மயிலு நான் சொன்னேன்ல அந்த மலையுச்சில இருந்து பார்த்தோம்ன்னு”

 

“அது இங்க தான்டி வாட்டி போய் பார்ப்போம்” என்று சொல்ல தோழியின் குரல் கேட்டு கணவனின் பிடியில் இருந்து நழுவி கீழே இறங்கி செவ்வந்தியுடன் சேர்ந்து கொண்டாள் மயிலு.

 

இருவரும் சாலையை தாண்டி அங்கு சென்று வேடிக்கை பார்க்க நகர்ந்திருக்க ரியாஸ் தோழனை முறைத்தான்.

 

“என்னை ஏன்டா முறைக்கிற??”

 

“ஏன்டா நீ தான் அசமஞ்சமா இருக்கே நானாச்சும் நிம்மதியா இருந்திருப்பேன்ல வாடா மாப்பிள்ளை ஹனிமூன்க்கு சேர்ந்து போகலாம்ன்னு சொல்லி இப்போ என்னை தனியா உட்கார வைச்சிட்டியேடா!!”

 

“டேய் டேய் இதென்னடா நீயும் இதே வார்த்தை சொல்ற!! யாருடா சொல்லிக் கொடுத்தது இந்த வார்த்தை உனக்கு”

 

“என்ன வார்த்தை??”

 

“அசமஞ்சம்ன்னு”

 

“அதுவா பானு அக்கா சொன்னாங்க??” என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தான் வீரா.

 

“எதுக்குடா முறைக்கிறவன்??”

 

“ஏன்டா உங்களுக்கெல்லாம் என்னைய பார்த்தா எப்படி தெரியுது?? நான் என்ன அசமஞ்சமாவா இருக்கேன்”

 

“பின்னே நீ என்ன ஓவர் சுறுசுறுப்பாவா இருக்கே!! கல்யாணம் ஆகி வருஷம் ஒண்ணு திரும்பிட்டு இப்போ தான் இவரு வாழ்க்கையவே தொடங்குறாரு!!”

 

“இல்லையில்லை தொடங்க நாள் பார்த்துக்கிட்டு இருக்காரு. இதுல உன்னை அசமஞ்சம்ன்னு சொல்லாம சுறுசுறுப்பு திலகம்ண்ணா சொல்லுவாங்க”

 

“நீ தான் அசமஞ்சமா இருக்கேன்னா என்னையவும் உன்னைய மாதிரி ஆக்க பார்க்கறியேடா!! நானெல்லாம் எவ்வளவு ஸ்பீட் தெரியும்ல… முல்லை கல்யாணத்துல பார்த்தேன்”

 

“இதோ ஒரு மாசத்துல தாலி கட்டி ஹனிமூன்கே வந்திட்டேன்… நீ இப்படி ஸ்லோவா இருந்தா அசமஞ்சம்ன்னு சொல்லாம வேற என்ன தான்டா சொல்லுறது”

 

திரும்ப திரும்ப ரியாஸ் அந்த வார்த்தை சொன்னதில் வீரா சற்று கொலைவெறி ஆனான். “அடேய் யாருடா அந்த பானு அக்கா ஆளாளுக்கு என்னை அசமஞ்சம்ன்னு சொல்ல வைச்ச அந்த பானு அக்கா யாரு??”

 

“அவங்களை உனக்கு எப்படி தெரியும்?? இல்லை செவ்வந்தி சொன்னதை வைச்சு சொல்றியா??” என்றான் வீரா கடுப்பாய்.

 

“முல்லை கல்யாணத்துக்கு வந்திருந்தாங்களே நீ பார்க்கலையா!! ரொம்ப நேரமா உன் பொண்டாட்டிகிட்ட பேசிட்டு இருந்தாங்க”

 

“நான் பக்கத்துல தான் உட்கார்ந்திருந்தேன். என்னம்மா வருஷம் ஒண்ணாச்சே விசேஷம் இல்லையான்னு கேட்டாங்க”

 

“சிஸ்டரும் அதுக்கென்ன அவசரம் அக்கான்னு சொல்லுச்சு. அதுக்கு அந்த பானு அக்கா ஒரு வருஷமாச்சு இன்னும் என்னம்மா அவசரமான்னு கேக்குற”

“இருந்தாலும் உன் புருஷன் இவ்வளவு அசமஞ்சமா இருக்கக் கூடாதுன்னு சொன்னாங்க”

 

“எனக்கு அந்த வார்த்தை பிடிச்சு போச்சா!! அதான் கப்புன்னு பிடிச்சுக்கிட்டேன்” என்றவனை அடித்துவிடும் பார்வை பார்த்தான் வீரா.

 

“இதுக்கு என் பொண்டாட்டி ஒண்ணும் சொல்லலையா!!”

 

“செம சண்டை போட்டாடா நானே பயந்துட்டேன் பார்த்துக்கோ!! உன்னைய யாரும் எதுவும் சொல்லிற கூடாதாம்!! மேடம்க்கு என்னா கோவம் வருது”

 

“பானு அக்காவை லேப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டான்னா பார்த்துக்கோ” என்று அவன் சொல்ல வீராவுக்கு லேசாய் பெருமிதம் ‘முழுசா கேட்டு சந்தோசப்படுடா  வெண்ணை’ என்ற ரியாஸின் டெலிபதி கேட்டுவிட “நீ என்னை திட்டுனியா” என்றான் வீரா.

 

“எதுக்கு இப்போ உனக்கு இவ்வளவு சந்தோசம்?? வெயிட் பண்ணு நான் இன்னும் சொல்லி முடிக்கவே இல்லை” என்றவன் தொடர்ந்தான்.

 

“ஆல் ரைட்ஸ் ரிசர்வ்ட் என்னைத் தவிர யாருமே அவரை எதுவும் சொல்ல நான் விடமாட்டேன்னு ஆச்சா போச்சான்னு என் காதுல கூட ரத்தம் வந்திடுச்சு”

 

“அவ்வளவு நேரம் கிளாஸ் எடுத்தா அவங்களுக்கு” என்று சொல்லி முடித்தான் ரியாஸ்.

 

‘இதை நீ என்கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம்’ என்று பார்த்தான் வீரா.

 

“சரி வா நாமளும் கீழ இறங்குவோம்” என்றவாறே வீரா இறங்கி இருந்தான்.

 

“வருவாங்கடா வரட்டும் நீ உட்காரு” என்ற ரியாஸ் இறங்கவில்லை.

 

“டேய் ஒரு நல்ல ரொமான்ஸ் சீனை மிஸ் பண்ணிராத சொல்றதை கேளு கீழே இறங்கு”

 

“என்னடா சொல்ற??”

 

“இன்னும் ரெண்டு நிமிஷத்துல ரெண்டு பேருமே தனித்தனியா நம்மை கூப்பிடுவாங்க பாரு”

 

“வாய் தான் என் பொண்டாட்டிக்கு… பெரிய வீரதீர பராக்கிரமசாலின்னு நினைப்பு அவளுக்கு. வேகமா இறங்கி போய் வேடிக்கை பார்க்க போனால்ல”

 

“இப்போ எட்டிப் பார்த்ததும் தலை சுத்தும் பிடிச்சுக்க நாம வேணுமே!! அதுனால கூப்பிடுவா!!”

 

“மயிலு இந்த வாலோட இருக்கறதால அவளுமே அப்படி தான்னு நினைக்கிறேன்” என்று அவன் முடிப்பதற்குள் மனைவிமார்கள் அழைத்தனர் தத்தம் கணவன்மார்களை.

 

‘அபயம் அளித்தோம்’ என்ற ரீதியில் இருவருமே ஓடிச்சென்றனர் அங்கு.

 

“என்னை தனியாவிட்டு அங்க என்ன வெட்டிப்பேச்சு உங்களுக்கு”

 

“எனக்கு தனியா எட்டிப்பார்க்க பயம்ன்னு தெரியாதா உங்களுக்கு” என்று கணவனை முறைத்தாள் செவ்வந்தி.

 

“நீ தான் என்னை கூப்பிடவேயில்லையே உன் பிரண்டு கூப்பிட்டு போனே!! சரி ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் துணைன்னு நானும் பேசாம இருந்தேன்” என்றான் வீரா வேண்டுமென்றே.

 

“நானும் அப்படி நினைச்சு தான் போனேன். ஆனா கொஞ்சம் பயமாகிடுச்சு ரெண்டு பேருக்குமே!!” என்றவள் அவன் மேல் சாய்ந்தவாறே எட்டிப்பார்த்தாள்.

 

வீராவோ வேண்டுமென்றே அவளை பிடித்து தள்ளுவது போல் செய்ய பயத்தில் முன்னிலும் அதிகமாக அவனை இறுக்கிக் கொண்டாள்.

 

“ஏன் இப்படி பண்றீங்க பயமாயிருக்குல்ல??”

 

‘இவளுக்கு பயமாம்!! கடவுளே உனக்கே சிரிப்பா வரலை இவ சொல்றதை கேட்டு!!’ என்று கேட்க அவரோ ‘எங்க நீ உன் மனசோட பேசுறது எல்லாம் கொஞ்சம் சத்தமா வெளிய பேசு’ என்று கிண்டல் செய்தார்.

 

‘சும்மா பேசிக்கிட்டு இருந்தேன்… நீங்க வேற ஏன் பயமுறுத்தறீங்க!!’ என்று மீண்டும் அவன் மனம் சொல்ல அவரோ ‘உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி உன் பொண்டாட்டிக்கு வந்தா ரத்தமா’ எனவும் ‘தெரியாம உன்னை கூப்பிட்டேன் நீ கிளம்பு’ என்று தட்டி உள்ளே அனுப்பினான்.

 

இருவரும் தத்தம் மனைவிமார்களை அழைத்துக் கொண்டு காருக்குள் வந்திருந்தனர். மீண்டும் அவர்களின் பயணம் தொடங்கியது.

 

வீராவின் மனமோ பின்னோக்கி பயணம் செய்தது. அன்றைய நிகழ்வுகளையும் அவன் மனம் அசைப்போட்டது.

Advertisement