Advertisement

அத்தியாயம் – 32

 

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை தோட்டத்தை விட்டு வெளியில் வந்திருந்தனர். பத்தடி தூரம் நடந்திருப்பர் அருகில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

 

வீரா மெதுவாய் திரும்பி பார்க்க அதிலிருந்து பாரியும் முல்லையும் இறங்கினர்.

 

செவ்வந்தி அவர்களை கண்டதும் முகத்தை திருப்பிக்கொள்ள வீரா தான் அவர்களை வரவேற்கும் விதமாய் தலையசைத்தான்.

 

“என்னாச்சு அண்ணா நடந்து போறீங்க!! கார்ல போகலாமே!! உள்ள வாங்களேன்” என்று அவன் சொல்லவும் தான் வீராவிற்கு அவன் வண்டியின் ஞாபகமே வந்தது.

 

‘இவளால நான் எல்லாமே மறக்கறேன்’ என்று மனதிற்குள்ளாக அவளை திட்டிக்கொண்டான் செல்லமாய்.

 

“அச்சோ என்னோட வண்டி தோட்டத்துலயே இருக்கு??” என்றான்.

 

“வந்தி நீ வேணா கார்ல போய்டு… நான் வண்டி எடுத்திட்டு வர்றேன்” என்று அவன் சொல்லவும் அவனை முறைத்த முறைப்பில் எல்லோருமே பொசுங்கினர்.

‘எதுக்குடி இப்படி முறைக்கிறவ??’ என்று எண்ணிக்கொண்டு பதிலுக்கு அவனும் முறைத்தான்.

 

“நீங்க கூட்டிட்டு போறதுன்னா கூட்டிட்டு போங்க… இல்லைன்னா நடந்தே போறேன்” என்றாள்.

 

‘பிடிவாதம்… பிடிவாதம்… அடங்காதவ…’ மறுபடியும் அவன் மனதின் குரல் தான். ‘அன்பானவள்… அசராதவள்… அடங்காதவள்…’ சொல்லிக்கொண்டான் தனக்குள்.

 

‘அன்பானவள்’ என்று யோசிக்கும் போது மட்டும் இது சரி தானா என்று நினைத்தான். மற்ற இரண்டும் வெகு பொருத்தம்…

 

நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்று நினைத்தாலும் அவளை பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால்.

 

“நீங்க வீட்டுக்கு போங்க, நாங்க வந்திடறோம்” என்று அவர்களுக்கு சொல்லிவிட்டு வேகமாய் சென்று அவன் வண்டியை எடுத்துக்கொண்டு வந்து அவள் முன் நின்றான்.

 

“ஹ்ம்ம் ஏறு போகலாம்”

 

‘பக்கி… பக்கி…’ என்று மனதிற்குள் கணவனை திட்டிக்கொண்டே ஏறி அமர்ந்தாள் அவள்.

 

எதற்கு இந்த திட்டு என்று தானே யோசனை அவள் முதல் முறையாய் வண்டியில் வருகிறாளாம் அதை அவன் கண்டு கொள்ளவில்லையாம்.

 

வண்டியில் அமர்ந்தவள் பிடிப்பிற்காய் நெருக்கமாய் அமர்ந்து வேண்டுமென்றே அவனை அணைத்தவாறே பற்றிக்கொண்டாள்.

 

‘அடிப்பாவி… தெரிஞ்சு தான் செய்யறாளா இல்லை என்னை உசுப்பேத்தி ரணகளம் ஆக்க பார்க்கறாளா!! இவளோட ஒரே அக்கப்போரா இருக்கே’

 

‘ஆண்டவா இவகிட்ட இருந்து என்னை காப்பாத்து’ என்று வேண்டிக்கொண்டே அவளின் அணைப்பு கொடுத்த சுகத்தில் வண்டியை வெகு நிதானமாய் ரசித்து ஓட்டினான் வீரா.

 

எவ்வளவு மெதுவாக ஓட்டி வந்த போதும் வீடு வந்தேவிட்டது அடுத்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே. சலித்துக்கொண்டே தான் வண்டியை நிறுத்தினான்.

 

‘இவ மேல கோபமா இருந்தாலும் இப்போ அது இருந்த இடம் தெரியாம போச்சே!! என்ன மாய மந்திரம் போட்டாளோ தெரியலையே!!’ என்று புலம்பிக்கொண்டே தான் கீழறங்கினான்.

 

அங்கு இவர்களுக்கு முன் பாரியும் முல்லையும் இவர்கள் வரவிற்காய் காத்திருந்தனர். சக்திவேல் வீட்டிற்கு வந்திருக்காததால் வீடு பூட்டியிருந்தது.

 

செவ்வந்தி அவர்களை தாண்டி வேகமாய் செல்லப் போக “இரு வந்தி எதுக்கு அவசரமா போறே” என்றவன் வண்டியை நிறுத்திவிட்டு வந்திருந்தான்.

 

“கால் வலி இப்போ எப்படி இருக்கு??” என்று கேட்டுக்கொண்டே அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.

 

“நீங்க வாங்க” என்று பின்னால் திரும்பி அவர்களை வரவேற்கத் தவறவில்லை.

 

“என்னாச்சு கால் எதுவும் அடிப்பட்டிருக்கா அண்ணிக்கு” என்றான் பாரி.

 

முல்லையும் “என்னாச்சுக்கா” என்றிருந்தாள்.

 

“ஒண்ணுமில்லை அங்க தோட்டத்துல வண்டு ஒண்ணு கடிச்சிருச்சு. லேசா வீக்கம் அவ்வளவு தான்” என்றான் வீரா.

 

வீட்டிற்குள் வந்தவர்களை அமரச்சொல்லி விட்டு மனைவியை பார்க்க அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் பார்த்திருந்தாள். வந்தவர்களை வாவென்று மட்டும் சொன்னாள் அவ்வளவே.

 

“வந்தி” என்றான் அழுத்தமாய்.

 

திரும்பி கணவனை பார்த்தவள் ‘என்ன’ என்பது போல் முறைத்தாள்.

வந்தவர்களை கவனி என்பதாய் அவன் பார்வை ஜாடை காட்ட அதை கண்டும் காணாமல் நின்றிருந்தாள் அவள்.

 

‘என்னாச்சு’ என்பது போல் பாரி வீராவை பார்க்க அவன் எல்லாம் தெரிந்துவிட்டது என்று பார்வையால் பதில் சொன்னான்.

 

பாரி எதையோ பேச வாயெடுக்கும் முன் முல்லை தன் தமக்கையின் அருகில் வந்திருந்தாள். செவ்வந்தியின் கையை பிடித்துக்கொண்டவளுக்கு பேச்சே வரவில்லை.

 

கண்களில் நீர் திரண்டு “அக்கா என் கூட பேச மாட்டியா!! நீயும் ஆச்சி மாதிரி தான் இருக்கப் போறியா?? என்னை மன்னிக்க மாட்டியா அக்கா” என்று சொல்லும் போதே விழி நீர் கரை உடைந்துவிட்டது.

 

செவ்வந்தி அதற்கெல்லாம் மசியவே இல்லை. மீண்டும் மீண்டும் அவள் பேசவும் செவ்வந்தி எதற்கும் பிடிக்கொடுக்காமல் பதில் கூட சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்.

 

முல்லையோ பதில் சொல்ல முடியாமல் அழுதபடியே நின்றிருந்தாள். அதை கண்டும் காணாமல் தான் பார்த்திருந்தாள் தமக்கை.

 

பாரிக்கு எரிச்சலும் லேசாய் கோபமும் எழுந்தது. உடன் பிறந்த தங்கை தானே மன்னித்தால் தான் என்ன என்ற வருத்தம் அவனுக்கு.

 

“அக்கா ப்ளீஸ் எதுவும் பேசு அக்கா… திட்டுறதுன்னா கூட திட்டேன் ப்ளீஸ்… பேசாம மட்டும் இருக்காதேக்கா” என்றவள் தேம்பவே ஆரம்பித்துவிட்டாள்.

 

உள்ளுக்குள் தங்கைக்காய் உருகினாலும் கல் போலவே நின்றாளவள்.

 

வீராவுக்கு முல்லை அழுவது பார்க்க முடியவில்லை. திரும்பி மனைவியை முறைக்க அவள் அவனை பார்த்தால் தானே!!

 

“வந்தி நீ பண்றது சரியில்லை, பாவம் பிள்ளைத்தாச்சி பொண்ணு. எதுக்கு வருத்தப்பட வைக்குறே!! அவ உன் தங்கை தானே மன்னிக்க மாட்டியா நீ!! அப்படி என்ன பிடிவாதம் உனக்கு” என்றான்.

 

திரும்பி அவனை முறைத்தாள் அவள். “நீங்க தலையிடாதீங்க இதுல!! உங்களை மாதிரி எல்லாம் என்னால எல்லாத்தையும் ஈசியா மன்னிக்க முடியாது”

 

“எனக்கு அவ்வளவு பெரிய மனசு எல்லாம் இல்லை. நான் சராசரி பெண் தான்…”

 

“இவ்வளவு நேரமும் நான் பேசாம இருந்ததுக்கு காரணம் நீங்க சொன்ன அந்த விஷயம் தான். இவ இப்போ பிள்ளைத்தாய்ச்சி பெண் என்பதால் தான்”

 

“இல்லன்னா நான் என்ன பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியாது” என்று கண்களில் கோபம் தெறிக்க பேசினாள் செவ்வந்தி.

“என் தங்கையா இப்படின்னு எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கு… அது தெரியுமா உங்களுக்கு!! என்னால அதை தாங்கிக்க முடியலை. நான் இப்படி தான் இருப்பேன்” என்றாள் வீம்பாய்.

 

“அக்கா ப்ளீஸ்க்கா என்கிட்ட எதாச்சும் பேசுக்கா” என்று மீண்டும் ஆரம்பித்தாள் முல்லை.

 

“நான் என்ன பேசணும் உன்கிட்ட அதான் உன்னிஷ்டப்படி எல்லாம் செஞ்சுட்ட!! இனி நீ செய்ய வேண்டியது என்ன இருக்கு!!”

 

“உனக்கு உங்க அத்தான் முக்கியம்… அதான் கூடப்பிறந்தவ ஞாபகம் வரலை உனக்கு”

 

“என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா நாங்க ரொம்ப சந்தோசப்பட்டிருவோம்ன்னு நினைச்சு சொல்லாம விட்டியோ என்னவோ!!” என்று வார்த்தைகளை நன்றாகவே குத்தும் படி தான் கேட்டாள்.

 

“அக்கா என்னக்கா இப்படி பேசற… என் நிலைமை அப்படிக்கா!! மத்தப்படி உன்கிட்ட நான் சொல்லாம இருப்பேனா!! இப்படி எல்லாம் பேசாதக்கா ரொம்ப கஷ்டமாயிருக்கு”

 

“உனக்கு நேத்து பார்த்த உங்க இந்த அத்தான் அப்புறம் உன் புருஷன் இவங்க எல்லாம் தான் கண்ணுக்கு தெரியறாங்க… என்னை உனக்கு தெரியலை தானே”

 

“எத்தனை முறை எனக்கு நீ அறிவுரை சொல்லி இருப்பே!! நீ என்னடி பண்ணிட்டு வந்த!! அப்போ ஊருக்கு தான் உபதேசம் எல்லாம் இல்லையா!!” என்று பொரிந்தாள் தமக்கை.

 

அவள் பேச்சு வீரா, பாரி இருவருக்குமே வருத்தமாக இருந்தது. என்ன இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று.

வீரா வாயை மூடிக்கொண்டான். பாரி எழுந்திருந்தான் இப்போது.

 

“அண்ணி உங்களுக்கு கோபம்ன்னா அதை என்கிட்ட காட்டுங்க. தப்பு செஞ்சது நான் தான்…”

 

“அதை தெரிஞ்சே தான் செஞ்சேன். எனக்கு இவ வேணும்ன்னு தான் செஞ்சேன். இவ உங்க தங்கை தானே மன்னிக்க முடியாதா உங்களால!! உங்க கோபத்தை என்கிட்ட காட்டுங்க அண்ணி!!” என்றான் அவன் செய்த தப்பை உணராமலே.

 

‘அவ சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவா, நீ வேற கோபத்தை என் மேல காட்டுன்னு சொல்ற… உனக்கு இன்னைக்கு ஏழரைடா பாரி…”

 

“யார் வந்தாலும் இன்னைக்கு உன்னை காப்பாத்த முடியாது… வாங்கு… வாங்கு…’ என்று பாரியை பார்த்து வீராவின் மனம் கேலி செய்தது.

 

செவ்வந்தி திரும்பி அவனை பார்த்து அதீதமாய் முறைத்தாள். முல்லை இன்னமும் அழுகையை விட்டபாடில்லை.

“ஓ!! அப்போ நீங்க தெரிஞ்சே தான் தப்பு செஞ்சீங்க. அது சரின்னு வேற சொல்றீங்க அப்படி தானே!!” என்றாள் அவனை முறைப்பதை விடாமல்.

 

“நான் அதை சரின்னு சொல்லலை. என்னை பொறுத்த வரை நான் செஞ்சது தப்பில்லை”

 

“கொஞ்சம் கூட உங்களுக்கு உறுத்தலையா!! உங்க மனசாட்சிக்கு இது தப்புன்னு தோணலையா!!”

 

“படிச்சிக்கிட்டு இருக்க பொண்ணு அவ… அவளோட மனசை கெடுக்கறோம், அவ வாழ்க்கையை கெடுக்கறோம்… அவ பேரை கெடுக்கறோம்ன்னு உங்களுக்கு தோணலையா!!” என்று காட்டமாகவே கேட்டாள்.

 

வீராவிற்கே அவள் பேச்சு ஒரு மாதிரியாகிப் போனது. “வந்தி வார்த்தையை பார்த்து பேசு”

 

“நான் சரியா தான் பேசிட்டு இருக்கேன். நீங்க தயவு செய்து பேசாம இருங்க. ஒண்ணு நீங்க பேசணும், இல்லை நான் பேசணும்”

 

“யாருமே பேசலைன்னா இவங்களுக்கு பண்ண தப்போட வீரியம் தெரியாது” என்றாள் முறைப்பாக.

 

‘போடி பெரிய இவ தான்!! என்னா பேச்சு பேசறா!! கடவுளே!! இவளுக்கு எங்க இருந்து இவ்வளவு வாய் வந்தது!!’ என்று தானிருந்தது அவனுக்கு.

 

“என்ன தப்புன்னு நினைக்கறீங்க நீங்க?? நான் தான் அதை தப்புன்னு ஒத்துக்கிட்டேனே!! புதுசா நீங்க எந்த தப்பை சொல்லப் போறீங்க” என்றான் பாரி.

 

‘சனி ஏறி உன் நடுநாக்குல உட்கார்ந்து நர்த்தனம் பண்ணுதுடா பாரி… அது புரியாம பேசிக்கிட்டு இருக்கியே…’ மறுபடியும் வீராவின் மனம் தான் பாரியை எச்சரித்தது.

 

அந்தோ பரிதாபம் வீராவின் டெலிபதி வேலை செய்யவில்லை பாரியிடம். முல்லையாவது பேசுவாள் என்று பார்த்தாள் அவள் மொத்த அழுகையை குத்தகைக்கு எடுத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள்.

 

‘என்னமோ பண்ணுங்க’ என்று சலித்து இருக்கையில் விழுந்தான் வீரா.

 

“இப்போ கூட உங்களுக்கு உங்க தப்பு தெரியலைல. தப்பு நீங்க ரெண்டு பேரும் தான் செஞ்சீங்க. ஆனா தண்டனை யாருக்குன்னு யோசிச்சீங்களா”. பாரி இவள் என்ன சொல்கிறாள் என்று பார்த்தான்.

 

“இதோ அழுதிட்டு நிக்கறாளே இது இதான் அது. நீங்க சுயநலமா எடுத்த முடிவுல எங்களோட ஒண்ணா சந்தோசமா இருக்க வேண்டியவ இப்போ தனியா நின்னுட்டு இருக்கா”

 

“அது புரியலையா உங்களுக்கு. உங்க வீட்டில எப்படின்னு எனக்கு தெரியாது. எங்க ஆச்சி எங்களை எப்படி வளர்த்தாங்கன்னு எனக்கு தெரியும், ஏன் இவளுக்குமே தெரியும்”

 

“அப்படி இருக்கும் போது இப்படி நீங்க செஞ்சது சரின்னு சொல்றீங்களா!! அதை நியாயப்படுத்த வேற செய்யறீங்க!!”

 

“ஏன் உங்களை பத்தி சொன்னா நான் சேர்த்து வைக்க மாட்டேனா!! எங்க வீட்டில உங்களுக்காக பேசியிருக்க மாட்டேனா!!”

 

“என்கிட்ட விடுங்க, இதோ நிக்கறாரே தியாகச் செம்மல் உங்க அண்ணன் தப்பு செஞ்ச பிறகும் அதை மன்னிச்சு பூசி மெழுகி கல்யாணம் நடத்தி வைச்சவரு. இவருகிட்ட சொன்னா உங்க விருப்பத்தை நிறைவேத்தி வைச்சிருக்க மாட்டாரா என்ன??”

 

“உங்க சுயநலத்துக்காக யோசிச்சீங்களே!! அதோட பின் விளைவுகளை பத்தி யோசிச்சீங்களா!! இவளை பத்தியும் கொஞ்சமும் யோசிக்காம நீங்க செஞ்சது சரின்னு இப்பவும் சொல்வீங்களா!!”

 

“என்கிட்ட இப்படி வந்து நின்னு கெஞ்சணும்ன்னு இவளுக்கு என்ன தலையெழுத்து சொல்லுங்க. எனக்கு அட்வைஸ் பண்ணுற பொண்ணுங்க இவ”

 

“இவளுக்கு ஒரு அவமானம்ன்னா அது உங்களுக்கு இல்லையா!! இவளோட மான அவமானத்துக்கு நீங்க தானே பொறுப்பு”

 

“தப்பு செஞ்சதோட மொத்த பலனும் இவ தானே அனுப்பவிக்கிறா!! இன்னைக்கு இவ என் முன்னாடி இப்படி நிக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா!!” என்றவளுக்கு கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.

 

அவள் பேச்சில் அதில் இருந்த நியாயத்தில் பாரி தன் தவறை உணர்ந்தான் என்றால் வீரா ஆச்சரியமாய் பார்த்தான், ஆணியடித்தது போல் இருந்தது அவளின் ஒவ்வொரு கேள்வியும்.

 

நியாயமான அவள் பேச்சில் இனி எப்போதும் தலையிடுவதில்லை என்று முடிவே செய்துவிட்டான். தன்னிடம் சொல்லவில்லை என்று அவள் ஏன் வருந்தினாள் என்பதை அவனால் முழுதாய் உணரமுடிந்தது.

 

பாரி இப்போது பேச்சற்று நின்றிருந்தான். அன்று வீராவிடம் உண்மையாக மன்னிப்பு கேட்டானோ இல்லையோ இன்று மனமார மன்னிப்பு வேண்டினான் இருவரிடமுமே!!

 

“இது உங்களுக்கு புரிய வைக்க தான் சொன்னேன், குத்தி காட்டுறதுக்கு இல்லை” என்றாள் செவ்வந்தி முற்றிலும் தணிந்திருந்த குரலில்.

 

“அக்கா…” என்றழைத்த தங்கையின் பொறுமையை அதற்கு மேல் சோதிக்க விரும்பவில்லை அவள்.

 

“உங்க தப்பை மன்னிக்க முடியுமான்னு எனக்கு தெரியலை. நான் அவ்வளவு பரந்த மனசு கொண்டவ இல்லை” என்று சொல்லும் போது வீராவை தான் பார்த்தாள்.

 

‘என்னைய எதுக்குடி பார்க்குற?? அவ்வளவு பெரிய என்ன சின்னதாவாச்சும் கொஞ்சம் மனசு இருந்திருந்தா என்னைய கண்டுக்காம இருப்பியா!!’ என்று அவன் மனது முதலில் கோபமாயும் பின் ஏக்கமாயும் கேட்டுக்கொண்டது.

 

“மன்னிக்க முடியாத ஒரு தப்பை செஞ்சுட்டு மன்னிச்சுடுங்கன்னு கேட்கறது அறிவீனம். எனக்கு மன்னிக்க மனசில்லை, மறக்கறதுக்கு மனசிருக்கு”

 

“காலம் எல்லாம் மாத்தும்ன்னு நம்பறேன். ஆச்சிக்கு உன் மேல இருக்கற பிரியம் அவங்களையும் மாத்தும். அதுவரைக்கும் காத்திட்டு இரு”

 

“அழாதே கண்ணைத்துடை!! யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு நம்பாதே!! அது சரியா தப்பான்னு யோசிச்சு முடிவு எடு” என்ற செவ்வந்தி தங்கையின் கண்ணீரை துடைத்தாள்.

 

“உங்களுக்குள்ள என்ன கட்டாயம் வந்துச்சுன்னு எனக்கு தெரியாது. கணவன் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை… தப்பாயிருந்தா சுட்டிக்காட்டலாம் தப்பில்லை”

 

“பாரிக்கு உன் மேல நெறைய பிரியம் இருக்குன்னு புரியுது. நீ சொன்னா அவர் மறுக்க மாட்டார், சோ நீ சொல்லி புரிய வை… என்கிட்ட மட்டும் எவ்வளவு வாயாடுவே!!”

 

“அந்த பேச்செல்லாம் உன் புருஷன்கிட்டையும் கொஞ்சம் காட்டு” என்று வேறு எடுத்துக்கொடுத்தாள்.

 

“ஆத்தி அண்ணி நீங்க என்ன இப்படி போட்டு கொடுக்கறீங்க!! நான் பண்ணது ஒரு தப்பு தான் அதுவும் இவ வேணும்ன்னு செஞ்சது தான். தப்பு மட்டுமே பண்றவனில்லை நானு”

 

“இவ சும்மாவே அட்வைஸ் அம்புஜம், நீங்க வேற சொல்லிட்டீங்க இனி என் காதுல ரத்தம் தான் வரும்” என்று கையெடுத்து கும்பிட்டான் பாரி.

 

‘இவ செய்யறதையே தங்கச்சிக்கு வேற சொல்லிக் கொடுக்கறா பாரு… இவளை என்ன தான் செய்ய…”

 

‘பொண்ணா இவ, ராட்சசி… பாயிண்ட் பரிமளா… கேள்வியா அடுக்கிட்டு இப்போ ஒண்ணுமே இல்லைன்னு தங்கச்சி கண்ணை துடைக்கிறதை பாரு’ என்று வீராவின் மனம் அவ்வப்போது எட்டிப்பார்த்தது.

 

‘இன்றுக்கு உனக்கு என்ன வந்தது இத்தனை முறை வெளியே வந்து படுத்துக்கிறாயே’ என்று அதை செல்லமாய் திட்டினான் அவன்.

 

பின் இருவரையும் அமர வைத்து தங்கைக்கு பிடித்ததை சமைத்து கொடுத்து அவர்களை நன்றாக உபசரித்தே அனுப்பினாள் செவ்வந்தி.

 

கிளம்பும் முன் வீராவிடம் தனிமையில் பேசினான் பாரி. “சாரி அண்ணா நான் பண்ண தப்பு எல்லாரையும் இவ்வளவு கஷ்டப்படுத்தும் நினைக்கலை”

 

“அது சரியாடுச்சுன்னு எனக்கு ஒரு மிதப்பு தான். ஆனா முல்லையோட சந்தோசத்தை அதுக்கு அடகு வைச்சதை நான் உணரவேயில்லை”

 

“உண்மையிலேயே அண்ணி கிரேட் அண்ணா!! நீங்க கொடுத்து வைச்சவரு…” என்று நெகிழ்ந்து சொன்னான் அவன்.

 

வீராவுக்கும் அவன் பேச்சு பெருமையாகவே உணரவைத்தது. “ஆனா நீங்க கொஞ்சம் பாவமும் தான் அண்ணா” என்றவனை புருவம் சுருக்கி என்னவென்று பார்த்தான்.

 

“அண்ணி இப்படி பேசினா உங்க பாடு திண்டாட்டம் தான் போங்க” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

 

‘என் பொழைப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே’ என்றிருந்தது வீராவிற்கு.

 

அவர்கள் கிளம்பிச் சென்ற பின்னே தான் அவனுக்கு அவள் காலுக்கு மருந்திடவில்லை என்பது ஞாபகம் வந்தது.

 

“வந்தி காலுக்கு மருந்து போடவேயில்லையே. எங்க இருக்கு சொல்லு எடுத்திட்டு வர்றேன்” என்றான்.

 

“நானே போய் எடுத்துக்கறேன்” என்றுவிட்டு அவள் பின்னே செல்ல உடன் அவனும் சென்றான்.

 

காலில் நல்ல வீக்கம் கண்டுவிட்டது அதற்குள். மருந்திட்டு இருவருமாய் இறங்கி வர “ஆமா ஏன் தோட்டத்துல வண்டெல்லாம் இருக்கு”

 

“பூவிருந்தா வண்டு இருக்க தானே செய்யும்”

 

“அது தான் இருக்குன்னு தெரியுதுல அப்புறம் எதுக்கு அதை விரட்டாம வைச்சு வளர்க்கறீங்களாக்கும்”

 

“ஆமா வளர்க்கறேன்”

 

“என்ன??”

 

“நிஜம் தான் வளர்க்கறேன்”

 

“எதுக்கு?? உங்களுக்கு என்ன பைத்தியமா??”

 

“ஏய்!!”

 

“யாராச்சும் இப்படி செய்வாங்களா??”

 

“நான் செய்வேன்… இப்போ என்னங்குற… பூவிருந்தா வண்டு இருக்கறது இயல்பு தானே. நம்ம தோட்டத்துல வண்டு மட்டுமில்லை தேனீக்களும் இருக்கு”

 

“எதுக்குன்னு தானே கேட்கறேன், புரியற மாதிரி சொல்ல மாட்டீங்களா!!”

 

“மகரந்த சேர்க்கை கேள்விப்பட்டதில்லையா நீ!!”

 

“என்ன!!”

 

“கேள்விப்பட்டிருக்கியா!! இல்லையா!!”

 

“ஹ்ம்ம் கேள்விப்பட்டிருக்கேன்”

 

“அதுக்காக தான் நம்ம தோட்டத்துல நான் அதெல்லாம் விரட்டலை”

 

“அது கடிச்சா நல்லதா”

 

“இல்லை தான்… ஆனா எனக்கு எப்படி முன்னெச்சரிக்கையா இருக்கறதுன்னு தெரியும். நீ சொல்லாம கொள்ளாம வந்ததுனாலே உன்னை கடிச்சு வைச்சிருச்சு, நானென்ன செய்ய”

 

“ஒண்ணும் செய்ய வேணாம்” என்றாள். இருவருமே பேசிக்கொண்டே முன் வீட்டிற்கு வந்திருந்தனர். சக்திவேல் அப்போது தான் உள்ளே நுழைந்தார்.

 

இருவரும் ஒன்றாய் இணைந்து வருவதை பார்த்தும் பார்க்காதது போல கண்டுக்கொண்டார் அவர்.

 

இருவருமே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவரால் அவர்களுக்கிடையில் இருந்த விலகலை உணர முடிந்திருந்தது.

 

மகனும் மருமகளும் நடிகர்கள் என்றால் அவர் மகாநடிகர் என்பதை காட்டிக்கொண்டார்.

 

செவ்வந்தி இரவு உணவை கவனிக்கச் செல்ல வீரா தான் பார்த்துக்கொள்வதாக கூறி அவளை ஓய்வெடுக்கச் சொன்னான்.

 

மறுத்த செவ்வந்தியை அவன் முறைக்க அவளும் விட்டுவிட்டாள். சக்திவேல் முகம் கழுவி வர செவ்வந்தி அங்கே அமர்ந்திருப்பதை பார்த்தார்.

 

“என்னாச்சும்மா வீரா இன்னைக்கு சமையல் பார்க்குறான்”

 

“அது ஒண்ணுமில்லை மாமா, இன்னைக்கு இவரை பார்க்க தோட்டத்துக்கு போயிருந்தேனா அங்க ஒரு வண்டை இவர் வளர்த்திட்டு வர்றாரு” என்று கதை சொல்ல ஆரம்பித்தவளை உள்ளிருந்து எட்டிப்பார்த்தான் வீரா.

 

‘கொழுப்பை பாரு இவளுக்கு’ என்று பார்த்தவன் அடுத்து என்ன சொல்கிறாள் என்று கவனித்தான்.

 

“என்னை பழிவாங்குறதுக்காக ரொம்ப நாளா வளர்த்திட்டு வர்றாரு போல மாமா. அவர் எண்ணம் இன்னைக்கு பலிச்சிருச்சு, அந்த வண்டு என் கால்ல கடிச்சிருச்சு”

 

“அதனால என் கால் வீங்கி போச்சு மாமா. அதுக்கு பனிஷ்மெண்ட்டா தான் எனக்கு சேவகம் பண்றார்” என்று சிரிக்காமல் சொன்னவளை ஓங்கி ஒன்று வைக்க வேண்டும் என்று அவன் கை பரபரத்தது.

 

‘என்ன நினைச்சு இப்படி செய்யறா!! செம பார்ம்ல இருக்கா!!’ என்றவனுக்கு அவள் ஆச்சியிடம் பேசிவிட்டு வந்தது ஞாபகம் வந்தது.

ஒருவேளை என்று யோசித்தவனின் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன வலி அவனுக்கு எழுந்தது. என் மேல் இரக்கம் கொண்டு தான் வந்தாளா!! ஆச்சி என்னைப் பத்தி சொன்ன பிறகு தான் இப்படி நடந்துக்கறாளா!!

 

‘அப்போ அவளுக்காய் என்னை புரியவில்லையா!! என்றும் தோன்றாமல் இல்லை அவனுக்கு.

அந்த எண்ணம் வந்ததும் அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை. கை தானாய் வேலை பார்த்தாலும் மனம் தானாய் ஒரு போக்கில் சென்று கொண்டிருந்தது.

 

வெளியில் செவ்வந்தியோ தணிந்த குரலில் சக்திவேலிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“ஏன் மாமா?? நான் ஒண்ணு கேட்பேன் பதில் சொல்வீங்களா” என்றவளை அமைதியாய் பார்த்தார் அவர்.

 

“கேளும்மா”

 

“எங்கப்பாக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை மாமா??”

 

“அதைப்பத்தி பேசவே வேண்டாம்ன்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கேனேம்மா!!”

 

“ஹ்ம்ம் சரி மாமா” என்று அவள் சட்டென்று ஒத்துக்கொள்ள அவள் அத்துடன் முடித்துக் கொள்வாள் என்று நினைப்பதற்கு சக்திவேல் முட்டாள் அல்லவே!!

 

அடுத்து என்ன சொல்லப் போகிறாளோ என்று தான் பார்த்திருந்தார்.

 

“எப்படி மாமா இத்தனை வருஷமும் உண்மையை மறைச்சு பூமிக்குள்ள புதைச்சுன்னு இல்லையில்லை உங்க மனசுக்குள்ளவே புதைச்சுன்னு இருக்கீங்க” என்று கேட்டும்விட்டாள்.

 

அவளை திகைப்பாய் பார்த்தார் அவர். ஒன்றும் பதில் சொல்லவில்லை.

 

“ஆனாலும் நீங்க ரொம்ப அழுத்தம் மாமா… உங்களை மாதிரியே இருக்கார் உங்க புள்ளையும்…” என்றாள்.

 

“ஏம்மா…” என்று ஆரம்பித்தவருக்கு இவளுக்கு எப்படி தெரியும் என்று தோன்றியவுடனே மதுராம்பாளின் நினைவு வந்தது.

 

அவர் தான் சொல்லியிருப்பார், இப்பெண் இதை எப்படி தாங்கிக் கொண்டாள். வருத்தம் இருக்குமே என்ற ரீதியில் அவளை பார்க்க “நான் இதை எப்படி எடுத்துக்க போறேன்னு யோசிக்கறீங்களா”

 

“தெரியலை, நான் என்ன நினைக்கிறேன்னு எனக்கு சொல்லத் தெரியலை…” என்றவள் ஏதோவொரு விரக்தியில் பேசுவது தெரிந்தது அவருக்கு.

 

அவள் குரலில் எப்போதும் இருக்கும் துள்ளல் இல்லை. பெரும் ஏமாற்றம் தெரிந்தது. அதைப்பற்றி மருமகளிடம் மேற்கொண்டு பேசும் விஷயமல்ல அது என்பதால் அவர் அவளை சமாதானம் செய்ய முயற்சிக்கவில்லை.

 

இரவு உணவுக்கு பின் சக்திவேல் படுக்க சென்றுவிட வீராவும் செவ்வந்தியும் அவர்கள் அறைக்கு வந்தனர்.

 

செவ்வந்தி எப்படியும் இன்று தன்னிடம் எதுவும் பேசுவாள் என்று அவனுக்கு தெரியும்.

 

ஆனால் அவள் எதை எப்படி ஆரம்பிப்பாளோ என்ற கேள்வியே அவனுக்குள் பல கேள்விகளை உற்பத்தி செய்தது.

 

பால்கனிக்கு சென்றவன் சற்று நேரம் அதன் நீளத்தை அளந்தவாறே நடந்தான்.

அவனிடம் எப்படி பேச என்று தெரியவில்லை அவளுக்கு. ஆனால் பேச வேண்டும் அவனிடம் என்ற எண்ணம்.

 

செவ்வந்தி மெதுவாய் அவனிருக்குமிடம் வந்து நின்றாள். “என்னங்க…” என்றிருந்தாள்.

 

“ஹ்ம்ம்”

 

“உங்களுக்கு என் மேல கோபமா??” என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தாள்.

 

“எதுக்காக??”

 

“அப்போ கோபம் தான் இல்லையா??”

 

“எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை” என்று மறுத்தான்.

 

“எனக்கு தெரியும் உங்களுக்கு என் மேல கோபம் தான்”

 

“இல்லைன்னு சொல்றேன்ல” என்று கொஞ்சம் சத்தமாகவே உரைத்தான்.

ஒருவரை நீ ஏன் இன்று கவலையாய் தெரிகிறாய் என்று கேட்டால் முதலில் இல்லை என்பார்.

 

பின் திரும்ப திரும்ப அவரிடம் அக்கேள்வி உரைக்கப்படுமாயின் உண்மையாகவே அவருக்கு கவலை வந்துவிடுமே அது போன்ற மனநிலை வீராவுக்கு இப்போது.

‘கேள்வி கேட்டே கோபம் வர வைத்துவிடுவாள் போலிருக்கிறது. பொறுமையை சோதிக்கிறாள்’ என்று தான் தோன்றியது அவனுக்கு.

 

“என்னங்க”

 

வீராவின் பொறுமை காற்றில் கரைந்த கற்பூரமாகிக் கொண்டிருந்தது.

 

“என்ன??”

 

“கோபமா இருக்கீங்க தானே??” என்று மீண்டும் கேட்க உண்மையாகவே அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

 

“ஆமாடி கோபமா தான் இருக்கேன் என்ன பண்ணப் போறே இப்போ அதுக்கு!!”

 

“நானும் அப்போ பிடிச்சி பார்த்துக்கிட்டு இருக்கேன் அதையே கேட்டுக்கிட்டு இருக்கே?? என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல”

 

“பேசியே மனுஷனுக்கு கோபம் வரைக்குற. உனக்கு என்ன தான்டி வேணும்??” என்று கத்தினான்.

 

“கோபமா தானே இருக்கீங்க, அப்போ ஐ லவ் யூ சொல்லுங்க” என்று கூலாகச் சொன்னாள். அவள் சொன்னது முதலில் அவன் புத்திக்கு உரைக்கவில்லை.

 

அது அவன் மூளையை சென்றடையவும் அவளை பார்த்து முறைத்தான்.

“எதுக்கு இப்போ முறைக்கறீங்க??”

 

“நானாச்சும் கோபமா இருக்கும் போது ஐ லவ் யூ சொன்னேன். நீங்க இன்னும் அது கூட சொல்லலை எனக்கு” என்று அங்கலாய்த்தாள்.

 

‘இவளை எந்த கணக்குல சேர்க்க அடிக்கவா!! அணைக்கவா!!’ என்று பார்த்திருந்தான் அவன்.

 

‘அடிக்க ச்சே ச்சே அணைக்க வேண்டுமானால் செய்யலாம்’ என்று எண்ணியவனின் முகம் கனிந்திருந்தது.

 

“யோவ் இன்னும் எப்படி தான் நான் சொல்லணும்ன்னு எதிர்பார்க்கறே??”

 

“இப்படியே நீ இருந்தா நான் கிழவி ஆனா பிறகு தான் புள்ளை பெத்துக்குவேன் போல” என்று சொல்ல அதற்கு மேல் வீரா அமைதியாயில்லை.

 

செவ்வந்தி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள். சில நொடிகளுக்கு அவர்களின் இதழ்கள் மட்டுமே சங்கமித்துக்கொண்டது.

 

ஆம் பட்டாசாய் பேசும் அவளிதழை அணைத்திருந்தான் வீரா அவன் இதழ் கொண்டு. பின் விடுவித்தவன் அவளை தன்னிருந்து விலக்கி அவள் முகம் பார்க்க விழைய அவளோ நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவனை.

 

“அச்சோ வந்தி என்ன இது?? புதுசா இப்படி என்னை பார்த்து வெட்கமெல்லாம் படுற” என்று அவன் கேட்கவும் அவன் நெஞ்சில் லேசாய் குத்தினாள் சிணுங்கலுடன்.

 

“உங்க கோபம் போய்டுச்சு தானே” என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.

 

இதுவரை கேட்டது போல் விளையாட்டில்லை அது என்று அவளின் குரலிலேயே புரிந்தது அவனுக்கு. இந்த நிமிடம் எந்த கோபமும் இல்லை அவனுக்கு அவள் மேல்.

 

இவளுக்கு அன்பை கூட அடாவடியாய் தான் காட்டத் தெரியும் என்று புரிந்தது அவனுக்கு. சொல்லிகொண்டான் மனதிற்குள், அன்பானவள்!! அடங்காதவள்!! அசராதவள்!! என்று.

 

“எதுக்காக கோபம்??” என்றான் மறுமொழியாய்

 

“அன்னைக்கு நான் பேசினது…”

 

“அதை இப்போ என்னால புரிஞ்சுக்க முடியுது வந்தி… நானாச்சும் உன்கிட்ட சொல்லியிருக்கணும் முல்லை விஷயத்தை பத்தி”

 

“எப்படி உங்களால இப்படி இருக்க முடியுது??”

 

“எப்படி இருக்க முடியுது??”

 

“எதுவுமே நடக்காத மாதிரி… உங்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரி… நீங்க எதுவுமே பண்ணாத மாதிரி…”

 

“நான் நிஜமாவே எதுவும் பண்ணலைம்மா நம்பு”

 

“கேள்வி கேட்டா பதில் சொல்லாம எதுக்கு இப்படி சமாளிபிகேஷன்”

 

“சமாளிக்கலை… சரி விடு உனக்கு இப்போ என்ன தெரியணும் சொல்லு”

 

“நான் கேட்கறதுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லிடுவீங்களா!!”

 

“நீ கேட்காததுக்கும் சேர்த்தே சொல்றேன் போதுமா”

 

“கேட்டதுக்கு சொன்னா போதும்” என்று முறைத்தாள்.

 

“சரி சொல்றேன்… ஆனா அதை நீ கேட்கறதுக்கு முன்னாடி எனக்கொரு கேள்வி இருக்கு உன்கிட்ட அதுக்கு பதில் சொல்லு” என்றான் அவன்.

 

“என்ன??”

 

“ஆச்சி உன்கிட்ட பேசினது எனக்கு தெரியும். அதை கேட்ட பிறகு தான் உனக்கு என்கிட்ட பேசணும்ன்னு தோணிச்…”

 

“ஆஆ… அடிக்காதடி வலிக்குது… வந்தி ப்ளீஸ் விடு வலிக்குதும்மா…” என்று அவன் சொல்ல சொல்ல கேட்காமல் அவள் கைகளால் அவனை அடித்துக் கொண்டிருந்தாள்.

 

“எப்படிடா இப்படி கேட்பே நீ?? என்னை பார்த்து எப்படிடா அப்படி கேட்பே நீ?? உன்னைப்பத்தி எங்க ஆச்சி சொல்லி கேட்டபிறகு தான் நான் உன்கிட்ட பேசணும்ன்னு நினைச்சிருப்பேனா??”

 

“அப்படி தான் நினைக்கறியா நீ??” என்றவள் அடிப்பதை நிறுத்தியிருந்தாள். விழிகள் நிறைந்து கண்ணீர் மளமளவென்று வந்துவிட்டது.

 

அவள் அழுவது கண்டு வீராவுக்கு பொறுக்கவில்லை. “சாரிம்மா ப்ளீஸ் வந்தி அழாதே!! நான் கேட்டது தப்பு தான் ப்ளீஸ் ப்ளீஸ் அழாதே!!” என்றவன் அவள் தள்ளிவிட விட அவளை அணைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

 

“எனக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னது சும்மா சொன்னேன்னு நினைச்சீங்களா” என்று வலியோடு கேட்ட அவள் குரலில் மொத்தமாய் வீழ்ந்து போனானவன்…

 

“வந்தி ப்ளீஸ்!! விடும்மா!!”

 

“முடியாதுடா உன்னை என்னால விடமுடியாது எப்பவும். நீ வேணும் எனக்கு… இப்போ மட்டுமில்லை எப்பவும் வேணும்”

 

“உன்னை பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருந்த என்னையை மாத்திட்டல்ல நீ!! போடா!!” என்றாள் இன்னமும் விசும்பலாய்.

 

“அதை எதுக்கும்மா இவ்வளவு சங்கடமா சொல்றே??” என்றான் வீரா.

 

அவள் பேச்சில் அவன் உள்ளம் குளிர்ந்ததென்றால் அது மிகையல்ல. அவனின் மனபாரம் இறங்கி மகிழ்ச்சி பெருக்கெடுக்க உல்லாச மனநிலை அவனுக்கு.

 

“ஹ்ம்ம் பின்னே வேற எப்படி சொல்வாங்களாம் போடா!! நான் உன்னை கலாட்டா பண்ணலாம்ன்னு பார்த்தா நீ என்னை பழிவாங்குற போடா!! கேள்வி கேட்கறானாம் கேள்வி போடா!!” என்றாள்.

 

“சரி சரி சமாதானம்… ஓகே வா!!”

 

“முடியாது”

 

“என்னை பார்த்தா உனக்கு பாவமாவே இல்லையா!! உன்கிட்ட எப்போ பார்த்தாலும் என்னை கெஞ்ச வைக்குறியேம்மா” என்றவன் அவளை நெருங்கி வந்தான்.

 

‘எதுக்கு இப்படி பக்கத்துல வர்றான்??’ என்ற யோசனை அவளுக்கு. ‘இப்படி பார்த்தா நமக்கு பேச வராதே!!’ என்றவள் நெருங்கும் அவனையே பார்த்திருந்தாள் விழியெடுக்காமல்!!

 

“இப்போ ஏன் இப்படி பார்க்கறீங்க??”

 

“பார்றா என் பொண்டாட்டி மரியாதையா பேசுறா!!”

 

“பக்கத்துல ஏன் வர்றீங்க??” என்றவளின் குரல் இப்போது உள்ளே இறங்கிவிட்டிருந்தது.

 

“பக்கத்துல வரலைன்னா அப்புறம் நீ என்கிட்ட சண்டை போடுவ!! நீ பாட்டி ஆகுற வரைக்கும் நான் காத்திருக்க வைக்கிறேன்னு”

 

“சொல்றதெல்லாம் சொல்லிட்டு இப்போ ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி கண்ணை விரிக்கிற” என்றவன் அவள் இடையில் கைக்கொடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தான்.

 

செவ்வந்திக்கு உள்ளுக்குள் லேசாய் உதறல் தான். வீரா அவளை அணைத்து அவள் தோளில் முகம் புதைத்திருந்தான்.

 

அவளின் இதயத்துடிப்பு வேகமாய் அடிப்பதை அவனால் உணர முடிந்தது. ‘வாயாடி… பேச்சு மட்டும் தான்…’ என்று செல்லமாய் மனதிற்குள் வைதான்.

 

“என்ன இவன் பேசாம இருக்கான்??” என்று மனதிற்குள் கேட்க வேண்டியதை சத்தமாகவே கேட்டுவிட்டாள்.

 

“அப்போ நீ ரெடி தானா??” என்றான் அவளை நிமிர்ந்து பார்த்து நமுட்டு சிரிப்புடன்…

 

“போடா!!”

 

“நோ பைட் மூட்!! நீ ரொமான்ஸ் மூட்க்கு வந்து வாங்க போங்க… நோ நோ போங்க சொல்லாத வாங்கன்னு மட்டும் சொல்லு”

 

“உங்களை வைச்சுகிட்டு நான் ரொமான்ஸ் பண்ணிட்டாலும்… பானுக்கா உங்களை அசமஞ்சம்னே சொல்லிட்டாங்க, நீங்க இப்படி பேசிக்கிட்டே இருந்தா அவங்க கன்பார்ம் பண்ணிடுவாங்க”

 

“அது யாரு பானு அக்கா?? என்னை பார்த்து அப்படி சொன்னவங்க??”

 

“அவங்க கோயமுத்தூர்ல இருக்காங்க. என்னோட வெல்விஷ்ஷர் அவங்க!! அதெல்லாம் நான் அவங்களை ரவுண்டு கட்டிட்டேன் அப்போவே!!”

 

“உங்களை திட்டுறதுக்கு முழுஉரிமையும் எனக்கு தான் இருக்குன்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன். இனி அவங்க வாயே திறக்க மாட்டாங்க(?)” என்று கதை பேசிக் கொண்டிருந்தாள்.

 

‘இவ நிறுத்த மாட்டா போலவே!! கேள்வி கேட்டது ஒரு குத்தமாய்யா, ஸ்டார்ட் மியூசிக்ன்னு ஆரம்பிச்சுட்டாளே!!’ என்று எண்ணியவன் தாமதிக்கவில்லை அவள் இதழணைத்தான் மீண்டும்…

Advertisement