Advertisement

அத்தியாயம் – 31

 

வீரா கிளம்பிச் சென்ற பின்னே ஒருவாறு சுயவுணர்விற்கு வந்த அய்யாத்துரை மெதுவாய் நடந்து அவர் அறைக்கு வந்து சேர்ந்திருந்தார்.

 

அங்கு சூசையும் இன்னும் ஒருவரும் அவருடன் இருந்தனர். அய்யாத்துரை தெளிவில்லாமல் நடந்து வருவதை கண்டுவிட்டிருந்தனர்.

 

மற்றவர்களுக்கு எப்படியோ சூசைக்கு அய்யாத்துரை பற்றி அரசல்புரசலாய் தெரியும். அவர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி தான் இருப்பார் என்பதை அவர் அறிவார்.

 

ஆனால் என்ன ஒன்று அவர் அப்படிப்பட்ட பெண்களை தேடிப்போவார் என்று தான் அவருக்கு தெரியும். இப்படி தன் வழியில் சென்று கொண்டிருக்கும் பெண்ணிடம் வம்பு செய்திருப்பார் என்பதை அவர் அறியவில்லை.

 

அய்யாத்துரைக்கு வீரா பேசிக்கொண்டிருந்ததே இன்னமும் காதில் ஓங்கி கேட்டுக் கொண்டிருந்தது.

 

அவன் சொன்னது சாதாரணம் போலிருந்தாலும் அதன் அர்த்தம், தான் யார் என்பதை அவருக்கு விளக்கியது. அக்கணம் மிக அவமானமாக உணர்ந்தார் அவர்.

 

சூசை வந்து சாப்பிட அழைக்க உணவை மறுத்தார். மாத்திரை மட்டும் போட்டு படுத்துவிட எண்ணியவர் தனக்கிருந்த மனக்குழப்பத்தில் அந்த மாத்திரை அட்டையில் மீதமிருந்த அத்தனை மாத்திரையையும் விழுங்கி வைத்தார் அவர்.

 

அவருக்கு உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இரண்டும் உண்டு. தூக்கத்திற்காய் அவர் எடுக்கும் மாத்திரையை தான் அன்று அதிகம் விழுங்கி வைத்திருந்தார்.

 

அதீத மன உளைச்சலே அதற்கு காரணமாகிப் போனது. ஏனோ ஊருக்கு செல்ல வேண்டும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று வேறு அவருக்கு தோன்றியது.

 

ஒரு புறம் அவர்களை பார்க்க தோன்றினாலும் மறுபுறம் எந்த முகத்தை வைத்து அவர்களை பார்ப்பது.

 

அவர்களை பார்த்தால் வீரா சொன்னது தானே ஞாபகத்திற்கு வரும் என்று எண்ணியவாறே படுத்தவர் தான், விடிந்த அந்த பொழுதில் சூசை வந்து அவரை எழுப்ப அவ்வுயிர் உடலை விட்டு பிரிந்திருந்தது.

 

தூக்கத்திலேயே அவர் மரணம் நிகழ்ந்து விட்டிருந்தது. மருத்துவர் வந்து பரிசோதித்து அவர் இறப்பை உறுதிப்படுத்த அவர் உடல் குலையன்கரிசலுக்கு வந்து சேர்ந்தது.

____________________

 

அந்த செய்தி கேட்டு வீரா சற்று ஆடித்தான் போனான். கடந்த நிமிடம் வரை அவன் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றே முழுதாய் நம்பியிருந்தான்.

 

ஆனால் இந்த நிமிடம் தான் அவரிடம் அதிகமாய் பேசிவிட்டோமோ!! சற்று நிதானித்திருக்க வேண்டுமோ!! என்று உள்ளுக்குள் பதறியது அவனுக்கு.

 

விஷயம் கேள்விப்பட்டதுமே சக்திவேல் நண்பரின் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். மனைவி பிள்ளைகளை சற்று பொறுத்து வரச்சொல்லி கிளம்பி சென்றுவிட்டார்.

 

அவர் சென்ற சில மணித்துளிகளில் வீட்டிற்குள் அதிரடியாய் நான்கு பேர் நுழைந்தனர். “இங்க வீராபாண்டியன்??” என்று அவர்கள் கேட்க மனோரஞ்சிதம் “என் பையன் தான் நீங்க??” என்றார்.

 

“எங்க அவன்??” என்று முன்னே வந்து நின்றான் ஒருவன்.

 

அவர்களின் தோரணையே அடித்துவிடுவது போலிருக்க கொஞ்சம் கலவரமாய் தோன்றிய போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் யார் எங்கிருந்து வருகின்றனர் என்று விசாரித்தார் அவர்.

 

வந்திருந்தவர்களில் ஒருவன் சற்று தன்மையாகவே பதில் சொன்னான். அவனின் பெயர் மற்றும் ஊரை அவன் சொல்லிமுடிக்க மற்றவன் அவனை முறைப்பாய் பார்த்தான். “இதெல்லாம் இப்போ இவங்களுக்கு சொல்லியே ஆகணுமா”

 

“முதல்ல வந்த வேலையை பார்ப்போம்..” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வீரா உள்ளிருந்து வந்திருந்தான்.

அவனை பார்த்ததும் ஒருவன் பாய்ந்து வந்து அவன் சட்டையை கொத்தாக பற்றிக்கொண்டான்.

 

“என்னலே செஞ்சே?? எங்க வீட்டு பொண்ணை?? என்னலே செஞ்சே??” என்றவாறே அவனை முறைத்தான்.

 

“எந்த பொண்ணு?? நான் யாரையும் எதுவும் செய்யலையே?? முதல்ல சட்டையில இருந்து கையை எடுங்க??” என்றான் அவன்.

 

அவர்களுடன் வந்திருந்த ஒருவனும் “என்னலே இப்படி சட்டையில கை வைக்குற, பேசத் தானே வந்தோம். பொம்பளை புள்ள விவகாரம் பார்த்து பேச வேணாமா” என்றார்.

 

சட்டையை பிடித்திருந்தவனும் கையை எடுத்துவிட்டான். ஆனாலும் அவன் கேள்வியை விடவில்லை.

 

“சொல்லு என் தங்கச்சி கண்மணியை என்ன செஞ்சே??”

 

“கண்மணியா… எனக்கு அந்த பேர்ல யாரையுமே தெரியாதே?? எதுவா இருந்தாலும் புரியற மாதிரி பேசுங்க”

 

“உனக்கு புரியாதுலே நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியவே புரியாதுலே… நீயும் அக்கா தங்கச்சியோட பிறந்திருக்கணும்லே”

 

“அப்போ தான் புரியும் உனக்கு அந்த வலி. எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குனியோ?? கணக்கு தெரியலையோ உனக்கு??”

 

“நேத்து என் தங்கச்சி தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணா தெரியுமா?? காட்டுக்கு விறகு வெட்ட போன பொண்ணு முகம் சரியில்லாம வந்தா??”

 

“வந்தவ இப்படி செஞ்சா எப்படியிருக்கும் தெரியுமா??” என்றார் அவர் ரௌத்திரம் சுமந்த விழிகளுடன்.

 

வீராவுக்கு புரிந்தது அவர்கள் யாரை பற்றி பேசுகிறார்கள் என்று புரிந்தது. அது தானில்லை என்று சொல்ல அவனால் முடியும்.

 

அப்படி சொன்னால் அது யாரென்று சொல்ல வேண்டி வரும், அது இப்போது பிரயோஜனம் இல்லை என்றாலும் இவர்கள் அங்கு சென்று எதுவும் கலாட்டா செய்தால்…

 

ஏற்கனவே அங்கு ஒரு உயிர் போய்விட்டது… இனி மானமும் அல்லவா சேர்ந்து போகும் என்று எண்ணியவன் பேசாமலே இருந்தான் எதுவும் நடக்கட்டும் என்று…

 

மனோரஞ்சிதம் மகனின் முகத்தை ஆராய்ந்தார். அவன் தவறு செய்தவனாய் அவருக்கு தெரியவில்லை, செய்யவும் மாட்டான் என்றறிவார் அவர். பின் முடிவெடுத்தவராக அவர்களிடம் பேசினார்.

 

“எதைவைச்சு சொல்றீங்க இவன் தான் தப்பு பண்ணான்னு??” என்று அவர்களை பார்த்து கேட்டார்.

 

“விறகு வெட்டப் போன பொண்ணு டிரஸ் முள்ளுல பட்டு கிழிஞ்சிருச்சுன்னு யாரோ கொடுத்தாங்கன்னு ஒரு சட்டையை போட்டுட்டு வந்துச்சு”

 

“நாங்களும் சரின்னு விட்டுட்டோம், ஆனா ராவுல கயித்தை கட்டி அதுல தொங்கவே போயிருச்சு. அப்போ தான் என்ன ஏதுன்னு விவரம் கேட்க அழுதுகிட்டே இருந்த பொண்ணு எதுவுமே சொல்லலை”

 

“ஆனா அது போட்டிருந்த சட்டையில இவன் ஐடி கார்ட் இருந்துச்சு, அதை வைச்சு தான் இங்க வந்தோம்” என்றார் அவர்.

 

அதை கேட்டதும் மனோரஞ்சிதம் வெகு நிதானமாக “அப்போ என்ன நடந்துதுன்னு உங்க பொண்ணை கேளுங்க”

 

“பாண்டி நிச்சயம் எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டாம்லே. சொன்னீங்க… சட்டையில் ஐடி கார்ட் இருந்துச்சுன்னு தப்பு செஞ்சவன், செய்யணும்ன்னு நினைக்கிறவன் இப்படி ஈசியா உங்ககிட்ட மாட்டணும்ன்னு நினைப்பானாலே??” என்றார் அவர்.

 

“பாண்டி தப்பு பண்ணலை ஒருவேளை உங்க பொண்ணை அவன் காப்பாத்தி இருக்கலாம்லே. அதை உங்க பொண்ணுக்கிட்ட விசாரிங்க முதல்ல”

 

“அதைவிட்டு தேவையில்லாம என் புள்ளைய குறை சொல்லாதீங்கலே” என்று ஆணித்தரமாக பேசியவரை வந்தவர்கள் மட்டுமல்ல வீராவும் ஆச்சரியமாய் தான் பார்த்திருந்தான்.

 

‘என் மேல் இவ்வளவு நம்பிக்கையா அம்மா உனக்கு’ என்ற பார்வை அது.

 

வந்தவர்களும் ஏதோ யோசிப்பது போல் தோன்ற ரஞ்சிதமே பேசினார். “எதுவா இருந்தாலும் அந்த புள்ளைக்கிட்ட பேசுங்க”

 

“இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்யாதீங்கலே… நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போகப்போற பொண்ணு”

 

“யாருக்கு தெரியும் அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை இந்த ஊர்ல கூட அமையலாம். நீங்க செய்யற விஷயம் நாளைக்கு தப்பா அந்த பொண்ணு மேல திரும்பும் யோசிங்க” என்றார் அவர்.

 

வந்தவர்களும் எதுவும் சொல்லாமல் திரும்பினர், ஒருவர் மட்டும் அருகே வந்து இருவரிடமும் மன்னிப்பு கேட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.

 

அவர்கள் சென்ற பின்னே தாயும் மகனும் மட்டுமே தனித்திருந்தனர். வீராவுக்கு குற்றவுணர்ச்சியாயிருந்தது. “அம்மா” என்றழைத்தான்.

 

“உனக்கு என்கிட்ட எதுவும் கேட்க தோணலையா??”

“சொல்லணும்ன்னு நினைச்சிருந்தா… என்கிட்ட சொல்ல வேண்டிய விஷயமாயிருந்தா… நீயே சொல்லியிருப்பலே”

 

“நீ ஒண்ணை சொல்லாம இருக்கேன்னா அது நீ தப்பு பண்ணதுனாலன்னு நான் எப்படிலே நினைப்பேன். என் பாண்டி தப்பு பண்ண மாட்டான்லே. எனக்கது தெரியும்” என்றவரின் குரலில் அவ்வளவு உறுதி.

 

‘என்ன தவம் செய்தனை யசோதை’ என்றொரு பாடல் வரும் வீராவுக்கோ ‘என்ன தவம் செய்தனை யான் இவரை போல் அன்னையை பெற’ என்றே தான் தோன்றியது.

 

பின்னர் அவர்கள் மதுராம்பாளின் வீட்டிற்கு சென்றனர். வீராவுக்கு அங்கு போக வேண்டும் போலவும் வேண்டாம் போலவும் பலவித குழப்பங்கள்.

 

கண்ணாடி பேழைக்குள் இருந்தவரின் அருகே சென்றுவிட்டிருந்தவனுக்கோ நெஞ்சு உலர்ந்துவிட்டது. அருகில் அமர்ந்திருந்தார் சிவகாமி, அவர் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

 

தன்னை இப்படி விட்டுச் சென்றுவிட்டாரே என்று அவர் கதறியது அவனை ஈட்டியாய் குத்தியது.

 

தந்தையின் இழப்பை பற்றி அதிகம் உணர்ந்திராத சிறு குழந்தை முல்லை, அவள் தாயிடம் சென்று “அம்மா பசிக்குது” என்ற சொன்னதும் வீராவிற்கு உயிரே போய்விட்டது.

இக்குடும்பம் குடும்பத்தலைவனை இழந்துவிட்டதே!! தன்னால் தானே எல்லாம்!! இதற்கு தான் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி வண்டாய் குடைந்தது அவனை.

 

அவன் பேசியது தவறென மண்டையில் யாரோ ஓங்கி அடித்து சொல்வது போல் இருந்தது. தன் பேச்சினால் ஒரு குடும்பம் இப்படியாகிவிட்டதா!!

 

அவர் எப்படி இறந்து போனார் என்று இப்போது வரை அவனறியவில்லை. தான் பேசியதால் தான் அவருக்கு ஏதோவாகிவிட்டது என்று உறுதியாய் நம்பினான்.

 

முல்லை மீண்டும் மீண்டும் சிவகாமியிடம் செல்வதை பார்த்தவனுக்கு அடிவயிறு கலங்கிப் போனது. அன்னைக்கு ஜாடை காட்டி அருகே அழைத்தவன் முல்லையை தூக்கி வருமாறு சொன்னான்.

 

அவர் குழந்தையுடன் வரவும் “அம்மா பாவம்மா குழந்தைக்கு பசிக்குது போல நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு கொடுப்போம்” என்றான் வீரா.

 

மகனைப் பார்த்தவர் “சரிப்பா போகலாம்” என்று மகனுடன் சென்றார்.

 

“அம்மா ஒரு நிமிஷம்… மாமாவோட இன்னொரு பொண்ணு அவளையும் கூட்டிட்டு வாங்கம்மா” என்று கூற ரஞ்சிதம் அவளைத் தேடி சென்றார்.

 

அவளோ வரமுடியாது என்றுவிட மகனிடம் வந்தவர் “அந்த புள்ள வர மாட்டேங்குதுப்பா” என்றார்.

 

“சரி விடுங்கம்மா” என்றவன் முல்லையை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான், உன் வாழ்க்கை என் பொறுப்பு என்று அப்போதே முடிவு செய்து கொண்டான் போலிருந்தது.

 

மீண்டும் முல்லையை வீட்டிற்கு விட வரும் போது தான் செவ்வந்தியை பார்த்தான். முல்லைக்கு சுத்தமாய் விபரம் தெரியவில்லை என்றால் செவ்வந்தியோ புரிந்தும் புரியாத குழந்தையாய் நின்றிருந்தாள் அங்கு.

 

தந்தையின் அருகில் சென்று “எழுந்து வாங்கப்பா?? எவ்வளவு நேரம் தூங்குவீங்க??” என்று ஒரு நேரம் கேட்பவள் அடுத்த நொடி “நீங்க சாமிகிட்ட போயிட்டீங்கன்னு சொல்றாங்கப்பா”

 

“அப்போ வரவே மாட்டீங்களாப்பா??” என்று கண்ணில் நீருடன் கேட்கும் போது அவனால் தாங்க இயலவில்லை.

 

அதற்கு மேல் அங்கிருக்க அவன் நினைக்கவில்லை. கால்கள் தன் போக்கில் வெளிநடப்பு செய்திருந்தது அங்கிருந்து.

 

மனம் போன போக்கில் நடந்தவன் ஊருக்கு வெளியே வந்துவிட்டிருந்தான். ‘இது தான் நான் எடுக்க வேண்டிய முடிவா!! இறைவா!! இங்கிருந்து செல்வது தான் எனக்கு நிம்மதியா!!’

‘நிம்மதி இனி எனக்கது இல்லை… ஆனாலும் தினமும் இவர்களை பார்க்கும் போது எனக்கெழும் குற்றவுணர்வு…”

 

‘தினம் தினம் நரக வேதனை தான் எனக்கு.. முடியாது என்னால் இனி இந்த ஊரில் இருக்கவே முடியாது’ என்று தீர்மானித்தவன் அன்றே அவன் ஹாஸ்டலுக்கு கிளம்ப முடிவு செய்தான்.

 

வீட்டிற்கு வந்து குளித்து முடிக்க அவன் அன்னை வந்திருந்தார். ஊருக்கு செல்வதாக அவரிடம் சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பிவிட்டான் அவன்.

 

விடுமுறைக்கு கூட அவன் ஊருக்கு வருவதேயில்லை. ஏன் அவர்கள் புது வீடு மாறிய போதும் அவன் வந்தானில்லை. ரஞ்சிதம், தாமரை, சக்திவேல் மூவரும் தான் வந்து அவனை பார்த்து செல்வர்.

 

மகன் ஊருக்கு சென்ற மறுநாள் மனோரஞ்சிதம் மகனை தேடி வீடு வந்தவர்கள் பற்றிய விபரமுரைத்திருந்தார் கணவரிடம்.

 

சக்திவேல் அதைப்பற்றி விசாரிக்க அந்த ஊருக்கே சென்றுவிட்டார். மகன் சொல்லாத விஷயத்தை அங்கு சென்று விசாரித்து தன்னாலே தெரிந்து கொண்டார் அவர்.

 

சக்திவேலுக்கு மகனின் போக்கை குறித்து பெரும் கவலை. அவராலும் எதுவும் சொல்ல முடியவில்லை. தன்னைப் போலவே மகனும் தன் நண்பனை பற்றிய ரகசியத்தை முழுங்கிவிட்டிருக்கிறான் என்பது புரிந்தது அவருக்கு.

 

அவனை அதிகம் அவரும் தொல்லை செய்யவில்லை, அவன் மனநிலை புரிந்தது அவருக்கு. மனைவியிடத்தில் எதையும் சொல்லவில்லை அவர்.

 

மறுவருடம் அவன் படிப்பை முடித்திருக்க ஒரு முடிவுடனே அவன் அப்போது ஊருக்கு கிளம்பி வந்திருந்தான்.

 

“என்னப்பா படிப்பு முடிஞ்சுட்டு இனி என்ன செய்யப் போறே??” என்றார் சக்திவேல்.

 

“நான் ஆர்மில சேரலாம்ன்னு இருக்கேன்ப்பா… அதுக்கு தேவையானது எல்லாம் பண்ணிட்டேன்” என்றான்.

 

மனோரஞ்சிதம் மகனை கூர்மையாய் பார்த்தார், அவர் பார்வையின் வீச்சை தாங்காதவன் அவர் பார்வையை தவிர்த்தான்.

 

ரஞ்சிதம் வேண்டாம் என்று சொன்னால் அவனால் செல்ல முடியாது என்று தோன்றியது அவனுக்கு. அதனாலேயே அவர் பார்வையை எதிர்க்கொள்ளவில்லை அவன்.

 

எடுத்த முடிவில் உறுதியாயிருக்கிறான் அவன். ஒருவழியாய் பேசி வீட்டினரை ஒத்துக்கொள்ள செய்தும்விட்டான்.

ரஞ்சிதம் எதுவும் பேசவில்லை, மகன் தன்னிடம் சொல்லவில்லை என்று வருத்தம் தான் அவருக்கு.

 

தாய்க்கும் மகனுக்கும் இடையில் சின்னதாய் ஒரு இடைவெளி அங்கு தான் உண்டானது.

 

இரண்டு நாளில் அவன் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றுவிட்டிருந்தான். அதுவும் பெற்றவர்களுக்காய் தான் அதை ஒத்துக் கொண்டிருந்தான்.

 

இல்லையென்றால் அவனால் அங்கு இருக்க முடியாதே!! முன்பாவது அவர்கள் வேறு வீட்டில் இருந்தனர். இப்போது மதுராம்பாள் வீட்டிற்கு அடுத்த வீட்டிலேயே இருந்தனரே!!

 

அவனுக்கு அங்கிருப்பதே முள் மேல் அமர்ந்திருப்பது போலிருந்தது. வீடு பால் காய்ச்சும் போது இந்த காரணத்திற்காய் தான் அவன் வரவில்லை.

 

இப்போது தான் வந்திருக்கிறான். எவ்வளவு நேரம் தான் வீட்டிலிருப்பது வெளியில் சென்று வந்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது.

 

அவனுக்கு அடுத்த வீட்டிலிருப்பவர்களின் நலம் தெரிய வேண்டி இருந்ததும் ஒரு காரணம். கால்கள் மெல்ல எட்டி நடைப்போட்டது.

 

ஊரையே சுற்றி வந்தவன் மீண்டும் வீட்டிற்கு செல்லப் போக “வீரா” என்றொரு அழைப்பு. சுற்று முற்றும் பார்த்தான் யாருமில்லை.

மீண்டும் நடையை எட்டிப்போட்டான். “வீரா… நான் தான்ப்பா கொஞ்சம் இங்க வாயேன்…” என்று வெளியில் வந்து நின்றிருந்தார் மதுராம்பாள்.

 

தன்னையா அழைக்கிறார், ஏன்?? என்று எண்ணிக்கொண்டே அவரருகில் சென்றவன் “சொல்லுங்க” என்றான்.

 

“உள்ளே போய் பேசலாம்ப்பா” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.

 

அவனுக்கு கடைசியாய் அந்த வீட்டிற்கு வந்த ஞாபகம் வந்து தொலைத்தது. இதோ இங்கு தானே கண்ணாடி பேழைக்குள் அவரிருந்தார்.

 

என்னால் தானே எல்லாம்!! இப்போது இந்த வீட்டிற்குள் நுழையும் என்னால் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதைப்பு அவனிடத்தில்.

 

மதுராம்பாள் முன்னில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்றவர் உள்ளே சென்றதும் அவனை அமரச் சொன்னவர் அறைக்கதவை அடைத்துவிட்டார்.

 

வீராவுக்கு உள்ளுக்குள் லேசாய் ஒரு திகில் பரவியது. எதற்கு கதவை அடைக்கிறார் என்று. விஷயம் தெரிந்து போயிருக்குமா என்றும் ஒரு எண்ணம்.

 

“உட்காருப்பா ஏன் நிக்கறே??” என்று அவனை அமரச் சொன்னார்.

 

எச்சில் கூட்டி விழுங்கியவன் “சொல்லுங்க ஆ… ஆச்சி” என்றான்.

 

“எங்கேப்பா போனே இவ்வளவு நாளா??”

 

‘இவங்க எதுக்கு இதை கேட்கறாங்க?? அப்போ நிச்சயம் ஏதோ தெரிஞ்சிருக்கு இவங்களுக்கு!!’ என்று மட்டும் தோன்றியது அவனுக்கு. உள்ளுக்குள் ஒரு பதைபதைப்பு ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவன்.

 

“ஊருக்கு போயிருந்தேன்” என்றான் மெதுவாய்.

 

“ஹ்ம்ம்” என்றவருக்கு தான் பேச வந்ததை எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனை அவருக்கு. ஆனாலும் அவனிடம் பேச வேண்டும் என்று தான் அவனை அழைத்திருந்தார்.

 

வீரா பேசத் தயங்கும் அவரை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ஏன்?? எதற்கு?? என்னிடம் இந்த தயக்கம் இவருக்கு??

 

என்ன?? எதற்கு இவர் கண்கள் கலங்குகிறது, தெரிந்துவிட்டதா!! உண்மையிலேயே எல்லாம் இவருக்கு தெரிந்துவிட்டதா!! எப்படி?? யாரால்?? என்ற யோசனை அவனுக்குள்.

 

மதுராம்பாள் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர் “உனக்கு என்ன கவலை??” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டார்.

 

‘இதென்ன நாம் இவரை பற்றி யோசித்தால் இவ நம்மை பற்றி கேட்கிறார்’ என்று எண்ணியவன் “கவலையா!!” என்றான் அவருக்கு மறுமொழியாய்.

 

“ஆமா கவலை தான். ஆனா அது உனக்கு தேவையில்லாததுப்பா… உனக்கு குற்றவுணர்வும் கவலையும் எப்போமே வேண்டாமே…” என்று சொல்லியே விட்டார்.

 

அப்படியென்றால் நிச்சயம் நாம் எண்ணியது சரி தான் இவருக்கு தெரிந்திருக்கிறது எப்படி?? எப்படி தெரிந்தது இவருக்கு?? தெரிந்து எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என்றும் அவனுக்கு தோன்றாமலில்லை.

 

அவரை அவன் கண்கள் அளவெடுத்தது. அவரின் ஓய்ந்த தோற்றமே சொன்னது அவரின் வலியை.

 

இந்த வயதான காலத்தில் இவருக்கு ஏன் இத்தனை கவலையும் வருத்தமும் இதெல்லாம் என்னால் தானே என்று மனம் மீண்டும் அவனையே குற்றம் சாட்டியது.

 

அவருக்கு பதில் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை அவனுக்கு. ஆனாலும் பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்று தோன்றியது.

 

பின்னே அவர் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாரே பதில் சொல்ல வேண்டுமே!!

 

“உங்களுக்கு??” என்று இழுத்தான்.

 

“கண்மணி…” என்றார் ஒற்றைச் சொல்லாய்.

 

‘கண்மணியா?? எப்படி?? எப்படி சொல்லியிருப்பாள் அவள்?? தான் அவ்வளவு தூரம் அவளிடம் சொல்லியிருந்தோமே!! சொல்ல வேண்டாம் என்று!! அதை மீறி எப்படி சொல்லியிருப்பாள் அவள்!!’ என்று எண்ணினான்.

 

ஆம் வீராவே தான்!! அவன் வீடு தேடி அப்பெண்ணின் ஆட்கள் வந்த போதே முடிவு செய்திருந்தான். அப்பெண்ணை சந்தித்து பேசுவது என.

 

குலையன்கரிசலில் இருந்து கிளம்பி ஹாஸ்டலுக்கு சென்றிருந்தவன் நான்கு நாட்கள் கடந்திருந்த வேளை அப்பெண்ணை தேடிச் சென்று அவளிடம் பேசினான்.

 

அவள் வீட்டினர் வந்து சென்ற விபரம் சொல்லியிருந்தவன் அய்யாத்துரை பற்றியும் சொல்லி அவள் வீட்டினர் யாரும் அவர் வீட்டுக்கு செல்ல வேண்டாமென கேட்டுக்கொண்டிருந்தான்.

 

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று அறியாதவள் மெதுவாய் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள். ஏனெனில் முதல் நாள் தான் அவள் மதுராம்பாளிடம் அவ்விஷயத்தை பற்றி பேசியிருந்தாளே!!

 

வீரா மதுராம்பாளின் முகத்தை பார்த்திருந்தான். அடுத்து அவர் என்ன சொல்லுவார் என…

 

“ஏன் வீரா எதுக்காக இதெல்லாம் மறைச்சே??” என்றவரின் கண்களில் அவ்வளவு வலியும் வேதனையும் இருந்ததை அவனால் நன்றாக உணர முடிந்தது.

 

ஒழுக்க சீலன் என்று நம்பிக்கை வைத்திருந்த மகனின் செயலறிந்த அப்பெரியவர் உடைந்து மொத்தமாய் வீழ்ந்திருந்தார்.

 

வீராவுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. குற்றவுணர்வாய் அவர் முகம் பார்த்திருந்தான்.

 

“அய்யாத்துரையோட வேலை பார்த்த சூசையும் வந்திருந்தான். அந்த பொண்ணு பத்தி சூசை தான் சொன்னான்”

 

“சூசைக்கு அந்த பொண்ணு வீட்டு ஆளுங்க தான் சொல்லியிருக்காங்க. அவனுக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு போனான்”

 

“போனேன்… நானும் போனேன்… அந்த பொண்ணை தேடி போய் அவகிட்ட விஷயத்தை கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்” என்றவரின் கண்கள் கசிந்திருந்தது.

 

வீராவால் அவர் நிலையை உணர முடிந்தது. எவ்வளவு கஷ்டமாயிருந்திருக்கும் அவருக்கு. இது போன்ற விஷயத்தை சம்மந்தப்படாத நபர் சொல்லி கேட்கும் போதே மனம் வலிக்குமே!!

 

ஆனால் இதில் இவர் நேரிலேயே சென்று அந்த பெண்ணிடமே கேட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு கஷ்டமாயிருந்திருக்கும் அவருக்கு என்று புரிந்தது அவனுக்கு.

 

“என் பிள்ளையா இப்படி!! என்னால நம்பக்கூட முடியலை” என்றவரின் குரல் உடைந்திருந்தது.

 

“இவனைப்பத்தி தெரிஞ்சு தான் சக்தி என் பிள்ளைக்கிட்ட இருந்து விலகி இருக்கானா!! என்கிட்ட அவன் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லலை”

 

“சொல்லியிருந்தா நான் எப்படி சரி பண்ணுறதுன்னு யோசிச்சிருப்பனே!! உங்கப்பன் நான் வருத்தப்படுவேன்னு சொல்லியிருக்க மாட்டான்.. நீயும் உங்கப்பாவை கொண்டிருக்க…”

 

“சொல்லியிருக்கணும் உங்கப்பா என்கிட்ட துரையைப் பத்தி சொல்லியிருக்கணும்”

 

“பொண்ணுங்க வாழ்க்கையில விளையாடினா நாளைக்கு பாதிக்கப்பட போறது அவனோட பொண்ணுங்க வாழ்க்கை தான்னு நான் அவனுக்கு புரிய வைச்சிருப்பேன்”

 

“பாவம் செஞ்சிட்டு அவன் போய் சேர்ந்திட்டான். இனி நான் எப்படி என் பேத்திகளை கரை சேர்ப்பேன். அந்த பாவம் இவங்களை தானே பிடிக்கும்” என்று கண் உடைந்து அழுதவரை சமாதானப்படுத்த வழி தெரியாது விழித்தான் வீரா.

அவரின் நிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் மகன் செய்தது நம்பிக்கை துரோகம் தானே!! அவரே எல்லாம் என்று இருந்த குடும்பத்திற்கு அவர் செய்தது துரோகம் தானே!!

 

மதுராம்பாள் பெரிதும் ஓய்ந்திருந்தார். வீராவிற்கு இன்னமும் அதிகமாய் குற்றம் செய்த உணர்வு.

 

“ஆனா ஆச்சி… தப்பு என் பேருல…” என்று ஆரம்பித்தவனை இடைமறித்தார் அவர்.

 

“எதுய்யா நீ அய்யாத்துரையை பேசுனதா!! அதுல என்ன தப்பு இருக்குன்னு நீ நினைக்கிற”

 

“என் வார்த்தையை தாங்கிக்க முடியாம தானே அவருக்கு இப்படி ஆச்சு. நான் தான் எல்லாத்துக்கும் காரணம்”

 

“இல்லை அவன் முடிவுக்கு அவன் மட்டுமே தான் காரணம். தப்பெல்லாம் செஞ்சது அவன், பழி மட்டும் உனக்கு ஏன்??”

 

“உப்பு தின்னவன் தண்ணி குடிக்க வேண்டியது தானே நியாயம்!! அவனுக்கு விதி போய் சேர்ந்திட்டான். தப்பு செஞ்சான் தண்டனையை கடவுள் கொடுத்திட்டார். இதுல நீ எதுவுமே செய்யலைப்பா. உனக்கு எப்பவும் எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம்”

 

“இல்லை நான் பேசினதும் தப்பு தானே!!” என்றான் அவன் உள்ளார்ந்து.

“அதனால தான் அவருக்கு இப்படி ஆகிப்போச்சு” என்றவன் தலைகுனிந்திருந்தான்.

 

“எங்களுக்கு தலைக்குனிவு ஏற்ப்படுத்தினவன் போய் சேர்ந்திட்டான். எங்களை தலைநிமிர வைச்சுட்டு நீ ஏன்பா தலைகுனியற”

 

“அந்த பொண்ணோட வீட்டு ஆளுங்க உங்க வீட்டுக்கு வந்ததுக்கு பதில் எங்க வீட்டுக்கு வந்திருந்தா என்னாகியிருக்கும். இந்த ஊரு உலகம் என்னென்ன பேசியிருக்கும்”

 

“நீ ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலும் நாங்க மொத்தமா அவமானப்பட்டு தான் நின்னிருப்போம். எதுவும் செய்யாம எங்களை தலை நிமிர்ந்து நிக்க வைச்சுட்டய்யா நீ” என்றவர் அவன் கைகளை பிடித்து தன் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

அவர் கண்ணீர் அவன் கையை நனைக்க அவசரமாய் கையை விலக்கிக் கொண்டான். “வேண்டாம் ஆச்சி, இப்படி எல்லாம் செய்யாதீங்க. நான் எதுவுமே உங்களுக்கு செய்யலை”

 

“பார்க்கப் போனா என்னோட பேச்சால தான் இங்க ஒரு உயிர் போயிருக்கு. எனக்கு இன்னும் அது உறுத்தலா தான் இருக்கு. நீங்க வேற கண்ணீர் சிந்தி என் பாவத்தை கூட்ட வேண்டாம் ஆச்சி”

 

“விட்டுடுங்க எல்லாமே மறந்திடுங்க. நீங்க தான் இனி இந்த குடும்பத்துக்கு. நடந்து போனது நினைச்சு கவலை வேண்டாம் உங்களுக்கு எப்பவும்”

 

அதுவரை மதுராம்பாள் அவனுக்கு ஆறுதல் சொல்லியிருக்க இப்போது அவன் அவருக்கு தேறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

“என் வாயில இருந்து எப்பவும் இந்த உண்மை வெளிய வராது. நான் செத்தாலும் வராது. நான் போயிட்டு வர்றேன்” என்று சொன்னவன் அதன் பின் அந்த வீட்டின் வாயிலை மிதித்தது செவ்வந்திக்காக மட்டுமே.

____________________

 

மதுராம்பாள் சொன்னதை கேட்டு கண்ணில் நீர் வழிய அமர்ந்திருந்தாள் செவ்வந்தி.

 

தான் இதுவரை அறிந்திராத தன் தந்தையின் மறுப்பக்கம் தெரிந்ததினால் வந்த கண்ணீரா இல்லை தன் கணவனின் குணம் தெரிந்ததால் வந்த கண்ணீரா அவளறியவில்லை. ஆனால் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது.

 

“நீ இதுல அழறதுக்கு ஒண்ணுமில்லை செவ்வந்தி. உங்கப்பன் குணம் உன் தங்கைக்கும் கொஞ்சம் உண்டுன்னு அவ மேல நம்பிக்கை வைச்சிருந்த எனக்கு நிருப்பிச்சிட்டா அவ!!”

 

“முதல்ல அய்யாத்துரை அப்புறம் முல்லை ரெண்டு பேரும் எனக்கு நம்பிக்கை துரோகத்தை பரிசா கொடுத்திட்டாங்க!!”

 

“முதுகுல குத்திட்டாங்க… நான் ஏன் இந்த வீட்டுல யாரையும் சேர்த்துக்காம இருக்கேன். யாரும் வேண்டாம்ன்னு நினைச்சா அப்படி இருக்கேன்”

 

“உங்கப்பன் கூட இருக்கும் போதே சிதம்பரம் அவ்வளவு பண்ணான். உங்கப்பன் போனதும் மறுபடியும் வந்து ஒட்டிக்க பார்த்தான்”

 

“கூடவே உங்கம்மாக்கு தவறான போதனைகள் வேற செஞ்சாங்க சொந்தங்கள் எல்லாம். யாருமே வேணாம்ன்னு தான் அவங்களை எல்லாம் ஒதுக்கி வைச்சேன்”

 

“சொந்தத்தோட நிழல் விழாம அடுத்தவங்க நம்ம குடும்பத்தை தப்பா பேசாம உங்களையும் ஒரு கட்டுப்பாட்டோடையும் ஒழுக்கத்தோடையும் வளர்ந்தேன். இல்லை வளர்த்த தான் நினைச்சேன்…”

 

“ஆச்சி…” என்றாள் செவ்வந்தி.

 

“உன்னை சொல்லலைடா, பொதுவா சொன்னேன். அப்போ எனக்கிருந்த கர்வத்தை சொன்னேன். ரு என் பேத்திகளை போல வருமான்னு ஒரு கர்வம் எனக்கிருந்தது உண்மை தான். சரியா வளர்த்திருக்கேன்னு எப்பவும் நினைப்பேன்”

 

“எல்லாத்துக்கும் முதல் அடியா உன்னால ஒரு பிரச்சனை வந்துச்சு. ஆனா உண்மையில சொல்றேன் அன்னைக்கு நடந்த அந்த விஷயம் எனக்கு அவமானமாவே தெரியலை”

 

“வீராவை போல ஒருத்தன் கிடைக்க எப்படி அவமானமும் தாங்கிக்கலாம். வீராவை விட நல்லவன் உனக்கு கிடைக்க மாட்டான்னு தோணுச்சு”

 

“அதனால அன்னைக்கு உனக்கு ஒரு நல்லது நடந்துச்சு. அதுல இப்போவரை எனக்கு சந்தோசம் தான்”

 

“உன்னைப் போல முல்லைக்கிட்ட நான் அதிகம் கட்டுப்பாடு விதிக்கலை. நீ கூட நினைச்சிருப்ப என்னடா இந்த ஆச்சிக்கு முல்லை மேல மட்டும் பிரியம் அதிகம்ன்னு”

 

“அவ பிறந்ததுல இருந்தே கொஞ்சம் உடம்பு முடியாத குழந்தை. உங்கப்பா இறந்த பிறகு மஞ்சள் காமாலை, டைபாய்டுன்னு அடுத்தடுத்து அவளுக்கு உடம்புக்கு முடியாம போச்சு”

 

“அதனாலேயே அவளை பக்கத்துலயே வைச்சிருந்து பார்த்தேன். உன்னை எங்கயும் தைரியமா அனுப்ப முடிஞ்ச எனக்கு அவளை அப்படி அனுப்ப முடியலை”

 

“உங்கம்மாவும் அவளை அனுப்ப ஒத்துக்கலை. பத்தாதுக்கு வீராவுக்கும் முல்லைன்னா பிரியம். கடைசியா வீராக்கிட்ட என்கிட்ட பேசும் போது கேட்டது ஒண்ணே ஒண்ணு தான்”

“முல்லைக்கு எப்பவும் அப்பா இல்லைங்கற நினைப்பு வராம பார்த்துக்கோங்கன்னு சொன்னான். இப்போ அவனே அவளுக்கு அப்பனா இருந்து தான் எல்லாம் செஞ்சிருக்கான்”

 

“எனக்கு கூட முல்லை மேல நம்பிக்கை விட்டுப்போச்சு. வீராவுக்கு அவளை அப்படியே விட மனசில்லை”

 

“அவ என் பொறுப்பு நான் பார்த்துக்கறேன்னு சொல்லி அவனே தான் அவளோட கல்யாணத்தை முடிக்க எல்லாம் செஞ்சான்” என்று மனதில் இருந்த பாரத்தை எல்லாம் இறக்கினார் அவர்.

 

“எப்படி அய்யாத்துரை செஞ்சதை இன்னைக்கு வரைக்கும் என் மனசு ஏத்துக்கலையோ!! அதே போல தான் முல்லை விஷயமும்”

 

“அவளை என்னால மன்னிக்கவே முடியலை. என் கைக்குள்ள வளர்ந்த குழந்தை அவ, அப்படி தான் அவளை நினைச்சுட்டு இருந்தேன்”

 

“இப்பவும் அப்படி தான் நினைக்க தோணுது. ஆனா அவ செஞ்ச காரியம் முடியலைம்மா…” என்றவரின் குரல் கரகரத்தது. கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.

 

அவரை அணைத்து சமாதானம் செய்து ஆறுதல் சொன்னவளுக்கு அதற்கு மேல் அங்கு இருப்பு கொள்ளவில்லை.

 

வீராவை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. காலையிலேயே அவனைத் தான் தேடி முதலில் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

 

அவனை போய் பார்த்து உனக்கு என்னடா கொழுப்பு வீட்டிற்கு வராமல் அப்படி என்ன திமிர் உனக்கு என்று கோபமாய் அவனிடம் சண்டையிட வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

 

அவன் தோட்டத்திற்கு சென்றதால் மதுராம்பாளிடம் பேசிவிட்டு பின் அவனிடம் போய் பேசுவது என்று முடிவு செய்திருந்தாள்.

 

இப்போதும் அவனை போய் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது ஆனால் கோபமாய் இல்லை.

 

காலையில் உரிமையும் கோபமும் இருந்தவளுக்கு இப்போது அவன் மேல் உரிமை மட்டுமே இருந்தது.

 

வீட்டை விட்டு இறங்கியவள் மெதுவாய் நடக்க ஆரம்பித்தாள். கண்களில் கண்ணீர் வழிவதை துடைக்கக் கூட இல்லாமல் நடந்தாள் நடந்தாள் நடந்துக் கொண்டே இருந்தாள்.

 

நடந்தே வந்துவிட்டிருந்தாள் தோட்டத்திற்கு. வீராவை தேட அவன் கண்ணிலேயே படவில்லை. தோட்டத்தின் ஒரு மூலையில் திறந்திருந்த அறைக்கதவு கண்ணில்ப்பட்டது.

 

மெதுவாய் உள்ளே நுழைந்தாள் அவள். வீரா கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்திருந்தான் இப்போதும்.

 

அவள் உள்ளே வந்த போது லேசாய் கதவில் உராய்ந்திருக்க அந்த சத்தத்தில் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

 

‘என்னாச்சு?? இங்க வந்திருக்கா?? எதுவும் சண்டை போட வந்திருப்பாளோ!! என்று எண்ணியவனுக்கு அவள் தோற்றம் கலக்கத்தை கொடுக்க ஏன் இப்படி இருக்கா?? என்ற பதட்டம் எழுந்தது அவனுக்கு.

 

ஆனாலும் அவளிடம் ஏனென்று கேட்கவில்லை. “ஏன் வீட்டுக்கு வரலை??” ஆரம்பித்தாள் அவளே!!

 

‘ஆரம்பிச்சுட்டா!!’ என்று எண்ணிக்கொண்டவன் அவளுக்கு பதிலேதும் சொல்லவில்லை.

 

அவன் பதில் சொல்லுவான் என்று பார்த்தவள் ஏமாற்றம் கொள்ள அவனருகே சென்று அவனை இறுக்கிக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

 

“அப்படி என்ன கோபம் உங்களுக்கு என் மேல?? வீட்டுக்கு வராம இங்கயே இருப்பீங்களா!! நீங்க வீட்டுல வந்து படுத்து தூங்கி மூணு நாளாச்சு!!”

 

“என்னை பார்க்காமலே இருக்க முடியுமா உங்களுக்கு!! எப்படி இருப்பீங்க?? எப்படி இருப்பீங்க நீங்க??”

 

“என்னால முடியலை தெரியுமா!! அதான் உங்களை தேடி வந்தேன்” என்றவளின் குரல் உடைந்து கண்களில் கண்ணீர் அருவியாய் பொழிந்து அவன் போட்டிருந்த உடையை நனைத்தது.

 

அவளின் பேச்சும் கண்ணீரும் அவனை இளக்கி சட்டென்று குளிரச் செய்தாலும் அன்றைய பேச்சில் இருந்து அவன் இன்னமும் வெளி வந்திருக்கவில்லை.

 

அதனால் அவனால் இயல்பாய் உரையாட முடியவில்லை. அவளை அணைத்துக்கொள்ள கைகள் துடித்தாலும் செய்யவில்லை அவன்.

 

அவன் கைபேசி அந்நேரம் அழைக்க அவளை விலக்கி அதை எடுத்து பார்த்தவன் யோசனையானான்.

 

மெதுவாய் பொத்தானை அழுத்தி காதில் வைத்தவன் “சொல்லுங்க” என்றவாறே வெளியில் சென்றிருந்தான். பேசியது மதுராம்பாளே பேத்தியிடம் பேசியதை வீராவிடம் சொல்லவே அழைத்திருந்தார்.

 

அவர் பேசி வைத்ததும் வீராவுக்கு ஒன்றும் ஓடவில்லை. ஆச்சி அவசரப்பட்டுவிட்டாரோ என்று எண்ணினான்.

 

பின்னே அவனுக்கு தெரியாதா செவ்வந்திக்கு தன் தந்தையின் மீதான அன்பு!! அது எக்காலத்திலும் மாறிவிடுவதை அவனுமே விரும்பவில்லை!!

 

தன்னால் அது கெட்டுவிடக் கூடாது என்றும் எண்ணியிருந்தான். இது நாள் வரை அவள் அவரை பற்றி பேசினால் கூட அவன் எந்த பாவமும் காட்டாமல் அதை கேட்டிருப்பான்.

 

இன்று அவளின் நிலை என்னவாக இருக்கும் என்ற கவலை அவனுக்கு. தாங்குவாளா அவள்!!

 

என்னிடம் இப்போது கேள்வி கேட்டால் என்ன சொல்வேன் நான்!! நிஜமாகவே புரியவில்லை அவனுக்கு.

 

உடைந்து போவாளே அவள்!! என்ற கவலை அவனை தொற்றிக்கொண்டது. தன்னைப்பற்றி அவள் என்ன நினைப்பாள்!! என்று எண்ணியவனுக்கு அப்போது தான் உரைத்தது தன்னை தேடி வந்ததாக தானே அவள் சொன்னாள் என்று.

 

இதைப்பற்றி கேட்கத் தான் வந்தாளோ!! கலக்கம் அவனுக்குள். அவள் கேட்கும் கேள்விக்களுக்கு எப்போதுமே என்னிடம் விடையிருந்ததில்லையே!!

 

இப்போது மட்டும் நான் என்ன செய்வேன்?? அவளை எங்கனம் சமாதானம் செய்ய?? என்ற கேள்வி அவனுக்குள்.

 

தன்னை தானே கேள்விக்கொண்டிருந்தான். இன்னமும் அவன் உள்ளே வந்திருக்கவில்லை. வாசலிலேயே நின்றிருந்தான் அவன் எண்ணத்திலேயே!!

 

மெதுவாய் அறைக்குள் நுழையவும் அவள் ஆவென்று கத்தவும் பதறிக் கொண்டு ஓடிவந்தான்.

 

“என்னாச்சு!! என்னாச்சு வந்தி!! என்னம்மா பண்ணுது!!” என்று அவன் கேட்க அவள் காலை பிடித்துக் கொண்டிருந்தாள்.

 

முகம் வலியை காட்டியது. “என்னமோ கடிச்சிருச்சு… வண்டு… வண்டுன்னு நினைக்கிறேன்… வலிக்குதுங்க” என்றாள்.

 

அவசரமாய் அவளருகே வந்து பார்க்க அந்த வண்டு இன்னமும் அவள் காலில் தானிருந்தது. அவள் முழங்காலுக்கு கீழே இன்னமும் அவளை இறுக்கிப் பிடித்திருந்தது அது.

 

அதை பிரித்து வெளியில் தூக்கி போட்டான் வீரா. செவ்வந்தியோ அதற்குள் வலியில் துடித்துப் போனாள்.

 

அவள் வலி கண்டு பொறுக்காதவன் “டாக்டர்கிட்ட போகலாமா… வீக்கமாக ஆரம்பிச்சுடுச்சு” என்றான் அந்த இன்னமும் அவள் காலை விடாமல்.

 

அவன் கேட்டுக்கொண்டிருக்க அவளிடமிருந்து பதிலில்லை. நிமிர்ந்து அவளைப் பார்க்க முறைத்துக் கொண்டிருந்தாள் அவனை!!

 

அவள் எதற்கு முறைக்கிறாள் என்பது புரியவும் “சாரி, பதட்டத்துல அப்படி கேட்டுட்டேன்”

 

“நீ தான் டாக்டராச்சே!! எதுவும் மருந்து இருந்தா சொல்லு நான் போய் வாங்கிட்டு வர்றேன்”

 

“வீட்டில எதுவும் ஆன்டிசெப்டிக் இருக்கா, வீட்டுக்கு போய்டுவோமா வந்தி” என்றான் அக்கறையாகவே.

 

“அதுவரைக்கும் என்னால நடக்க முடியாது, எனக்கு வலிக்குது” என்றாள் அவனைப் பார்த்துக் கொண்டே!!

 

‘தூக்கிட்டு போயேன்டா!! தூக்கிட்டு போறேன்னு சொல்லேன்!!’ என்று மனதிற்குள் வேண்டுதல் வைத்தவள் அவன் முகமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அதில் வலியையும் மீறி அவன் பால் கொண்ட அன்பே நிரம்பி வழிந்தது.

 

வீரா பதில் சொல்லக் கூட யோசிக்கவேயில்லை அருகே வந்து அவளை தூக்கிக்கொண்டான். “நான் தூக்கிட்டு போறேன்”

 

மனதிற்குள் சந்தோசம் ஆனாலும் வெளியில் “இப்படியே வா!!” என்று கேட்டு வைத்தாள்.

 

“ஏன் அதனாலென்ன??”

 

“உங்களுக்கு என் மேல கோபம் போயிடுச்சா!!”

 

“கோபம்ன்னு யார் சொன்னா” என்றவன் அவளை தூக்கிக்கொண்டே வெளியில் வந்திருந்தான்.

 

அவள் முகம் சற்று வாடியது. “இறக்கி விடுங்க நானே வர்றேன்” என்றாள்.

 

அவள் முகபாவம் கவனிக்கவில்லை அவன். “நடக்க முடியுமா உன்னால!!” என்றான்.

 

“ஏன் நீங்க தாங்கிக்க மாட்டீங்களா என்னை??” எதிர் கேள்வி கேட்டாள்.

 

அவன் பதிலேதும் சொல்லவில்லை, மெல்ல அவளை கீழறக்கினான். செவ்வந்தி தாங்கி நடக்க அவளை அவன் தாங்கிக் கொண்டான்.

 

அவள் கொடுத்த மரியாதை வேறு அவனுக்கு உறுத்தலாய் இருந்தது. பின்னே வாடா போடா என்பவள் ‘ங்க’ என்றழைத்தால் வித்தியாசமாய் இராதா அவனுக்கு.

 

அவள் பேச்சு அவனுக்கு இதத்தை கொடுக்கவில்லை, மாறாய் மேலும் வலியை கொடுத்ததுவோ!!

 

காலையில் அவன் வண்டியில் தான் அங்கு வந்தான் என்பதும் அதில் கூட வீட்டிற்கு செல்லலாம் என்பதும் அவனுக்கு மறந்தே போனது.

 

செவ்வந்தியும் அதை பற்றிய சிந்தனையில் இறங்கவில்லை. கணவனை நெருங்கி அவன் கைப்பிடித்து நடந்தாள்.

 

இப்படியே இவனுடன் வாழ்க்கை முழுதும் நடந்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.

 

“என் மேல உங்களுக்கு கோபமே வரலையா!!”

 

“எதுக்கு??” என்றானவன்.

 

“நான் பேசினதுக்கு!!”

 

“என்ன பேசினே??”

 

“அன்னைக்கு அவ்வளவு பேசினேனே!!”

 

“வீட்டில போய் பேசுவோமே!!” என்று முடித்துவிட்டான்.

 

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவளுக்கு யோசனை.

 

அன்றும் இதே போல் தான் சொன்னானவன். அன்று நான் கோபமாயிருந்தேன், இன்று இவன் கோபமாயிருக்கிறானோ!! என்ற எண்ணம் அவளுக்கு.

 

அவனுக்கு புரிந்தது செவ்வந்தி தன்னிடம் எதையோ எதிர்பார்க்கிறாள் என்று ஆனாலும் சட்டென்று அவன் தன்னை வெளிப்படுத்திவிடவில்லை…. இனி…

Advertisement