Advertisement

அத்தியாயம் – 30

 

படியேறி வந்திருந்தவள் அந்த அறைக்கதவில் சாய்ந்து நின்றவாறே மதுராம்பாளை பார்த்தாள். அவள் வந்து நின்றது கூட தெரியாமல் அவர் சிந்தனை முழுதும் எங்கோ இருந்தது.

 

இதுநாள் வரை அவரிடம் எப்போதும் குடிக்கொண்டிருக்கும் அந்த கம்பீரம் தொலைந்திருந்தது அவரிடத்தில்.

 

அவருக்கு வயது ஏறிக் கொண்டிருக்கிறது என்பதை இதுநாள் வரை உணர்ந்ததேயில்லை அவள். தேனீ போன்ற சுறுசுறுப்பு உள்ளவர் சோர்ந்து போயிருந்ததில் மூப்பு தெரிந்தது அவரிடம்.

 

தான் அவரை சரியாய் கவனிக்காமல் விட்டோமோ என்ற கவலை இப்போது அவளை பிடித்துக்கொண்டது. முல்லையின் திருமணத்திற்கு முன்னர் இருந்தே அவரின் தலையீடு அதிகம் இல்லையோ என்பது இப்போது தான் உறைத்தது.

 

திருமண வீட்டில் கூட அவர் அதிகம் முன்னிருந்து கவனிக்கவில்லை தான். ஆனால் அவர் எப்போதுமே இப்படி காரியங்களில் முன் நிற்க மாட்டார் என்பதால் பெரிதாய் அதைப்பற்றி அவள் நினைத்திருக்கவில்லை.

 

அப்போது அவள் எண்ணமெல்லாம் திருமணம் பற்றிய குழப்பமும் கோபமும் தானே!! அதனால் எதைப்பற்றிய சிந்தையும் இல்லாதிருந்தாள்.

வெகு நேரமாய் அவள் சிந்தனையிலேயே இருக்க அவள் வந்ததை உணர்ந்த அந்த மூத்த பெண்மணியின் பார்வை வாயிலை நோக்கியது.

 

லேசாய் ஒரு மலர்ச்சி தென்பட்டதோ என்பது போல் தோன்றிய மறுகணமே அது தொலைந்து போயிருந்தது.

 

வேக எட்டில் கட்டிலை வந்தடைந்திருந்தாள். “ஆச்சி…” என்று அவள் அழைக்க அவர் முகத்தில் லேசாய் ஒரு புன்னகை.

 

அவளுக்காய் தோன்றினால் மட்டுமே அவள் அவரை ஆச்சி என்றழைப்பது, இல்லையென்றால் கிழவி என்பது தான் அவள் வாயில் வரும் வார்த்தை.

 

“என்னவாச்சு உங்களுக்கு?? ஏன் இப்படி டல்லா இருக்கீங்க??” என்றவளிடம் உண்மையிலேயே அவ்வளவு அக்கறை இருந்தது.

 

ஒரு கணம் ஒரே கணம் அவர் கண்கள் லேசாய் கலங்கித்தான் போனது. “நல்லா இருக்கேன்” என்றவரின் கை அவளின் மீது படிந்து அவளை தடவிக்கொடுத்தது. என்றுமில்லாத வருடல் இது என்று அவளால் உணர முடிந்தது.

 

“நீ நல்லாயிருக்கியா!!”

 

இப்படியெல்லாம் அவளிடம் அவர் அதிகம்  கேட்டதேயில்லை. தலை தன்னையுமறியாமல் ஆடியது. “நல்லாயிருக்கேன் ஆச்சி” என்றாள்.

“எப்போமே என்னை கிழவின்னு தானே கூப்பிடுவே!! இதென்ன புதுசா!!” என்றவர் முழுதும் இயல்பிற்கு திரும்பியிருந்தார் போல் இருந்தது.

 

செவ்வந்தி பதில் சொல்லாமல் அவரை முறைத்து பார்க்க அவரோ கனிவாய் பார்த்தார்.

 

“என்ன பார்க்கறே?? நீ அப்படி கூப்பிடுறதை நான் எவ்வளவு ரசிச்சிருக்கேன் தெரியுமா!!” என்ற சொன்ன மதுராம்பாளின் பேச்சு அவளுக்கு புதிது.

 

அவரையே வியப்பாய் பார்த்தாள். “நெஜமா தான் சொல்றேன்… நீ பண்ணுற ஒவ்வொரு குறும்பும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்”

 

“முல்லைக்கிட்ட சின்ன குழந்தை மாதிரி சண்டை போடுறதுல இருந்து என்னை கிழவின்னு நீ சொல்றது வரை பிடிக்கும்”

 

“நீ செஞ்ச குறும்பு விளையாட்டை நான் நிறைய ரசிச்சிருக்கேன். நீ பண்ண குறும்புலயே நான் அதிகம் ரசிச்சது எது தெரியுமா??”

 

“நீ தப்பா சரியா பண்ணது அது தான். இப்போவும் அதை நினைச்சு நான் சந்தோசப்படுறேன்” என்றார் அவர்.

 

அவளுக்கு யோசனை அவர் எதை சொல்கிறார் என்று. குழப்பமாய் ஆச்சியை ஏறிட்டாள். பின்னே சிறு வயதில் இருந்து அவள் செய்த சேட்டைகள் ஒன்றா ரெண்டா கணக்கில் வைத்துக்கொள்ள அது இருக்கிறது கணக்கிலடங்கா எண்ணிக்கை.

 

அவர் எதை சொல்லியிருப்பார் என்று அனுமானத்திற்கு வந்திருந்தாள் அவள். அது வீராவுடனான தன் திருமணம் என்று புரிந்துவிட்டது அவளுக்கு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரையே பார்த்திருந்தாள் இப்போது.

 

“என்னன்னு யோசிக்கிறியா!! நாம செஞ்சதுல எதுன்னு யோசிக்கறியா!!” என்று பழைய மதுராம்பாளாய் பேத்தியை சீண்டினார்.

 

ஆனால் அவளுக்கு தான் அவர் மேல் கோபம் வரவில்லை இப்போது. தான் அவரை சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்று தான் தோன்றியது.

 

“நானே சொல்றேன்” என்றவர் “நீ வீரா வீட்டு சுவர் ஏறி குதிச்சது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச உன்னோட குறும்பு”

 

“தெரியாம பண்ண அது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா!! வீரா போல ஒருத்தனை தேடி கண்டுப்பிடிக்க முடியாது”

 

“உனக்கு நானே ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செஞ்சு வைச்சிருந்தாலும் இப்படி ஒருத்தனை கண்டிருக்க மாட்டேன்”

 

கணவனின் பேச்சு அவளுக்கு அவ்வளவாக உவக்கவில்லை. இரண்டும் கூட்டு களவாணிகள் என்று தான் தோன்றியது அவளுக்கு.

 

“என்ன சத்தமே காணோம்??”

 

“நான் உங்களைப்பத்தி கேட்டா நீங்க வேற ஏதோ பேசுறீங்க??” என்றாள்.

 

“என்னைப்பத்தி என்ன தெரியணும் உனக்கு?? திடீர்ன்னு என் மேல என்ன அக்கறை??” என்றார் அவளை ஊடுருவிப் பார்த்தவாறே.

 

‘கிழவிக்கு குசும்பு போகலையே!!’ என்று மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்தவள் ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னைவிட்டு போகலை’ டயலாக் வேறு ஞாபகம் வந்து தொலைத்தது.

 

மனதில் தோன்றிய எண்ணங்களை ஒதுக்கி வைத்து அவருக்கு பதிலாய் “ஏன் இருக்கக்கூடாதா??” என்றாள்.

 

“இருக்கலாமே…” என்றார் ஒரு மாதிரிக்குரலில், கிண்டலாக சொல்லியிருப்பாரோ என்ற யோசனை அவளுக்கு.

 

“அவ்வளவு சீக்கிரம் எனக்கு எதுவும் ஆகாது. ஒண்ணுக்கு ரெண்டா நம்பிக்கை துரோகத்தை பார்த்திருக்கேன். கல்லு மாதிரி தானே இருக்கேன் இப்போவும்”

 

இவர் எதைச் சொல்கிறார்?? என்ன கஷ்டம் இவருக்கு?? யாரால்?? என்னாலா?? என்ற கேள்வி பிரவாகம் அவளுக்குள்.

 

“நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா!!”

 

“நிச்சயம் இல்லை… உன்னால நான் சந்தோசத்தை தான் அனுபவிச்சிருக்கேன். சரி நீ கேட்க வந்ததை கேளு??”

 

“என்ன??” என்றாள் அவள் புரியாமல்.

 

“என் மேல கோபமா இருக்கியே?? அதைப்பத்தி என்கிட்ட பேசத்தானே வந்தே??” என்றார் அவர்.

 

பழைய மதுராம்பாள் திரும்பியிருந்தார் இப்போது. அனைத்தையும் சரியாய் கணிக்கும் மதுராம்பாள் தன்னையும் கணித்து கேட்கிறார் என்பது புரிந்தது.

 

அவர் மேல் ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலும் அவரிடம் எப்போதுமே அதை வெளிப்படுத்தியதில்லை. இப்போதும் கூட அவரிடம் காட்டிக்க கொள்ள விருப்பமில்லை அவளுக்கு.

 

அவரிடம் கேட்க முடியாதென்பது இல்லை. அவரே சோர்ந்து கவலையாய் தெரிகிறார் மேலும் அவரை கஷ்டப்படுத்த மனதில்லை அவளுக்கு.

 

“இல்லையே” என்றாள் மனதை மறைத்து. “நிச்சயம் ஏதோ இருக்கு??” என்றார் அவர் உறுதியான குரலில்.

 

“நிச்சயம் உனக்கு என் மேல கோபமிருக்கு. என் மேல மட்டுமில்லை வீரா மேலயும் உனக்கு கோபமிருக்கு அப்படி தானே!!” என்று நேரில் பார்த்தது போல் கேட்டார்.

 

அவனைப்பற்றிய பேச்சில் அசட்டை காட்டினாள் அவள். “அவரைப்பத்தி இப்போ எதுக்கு?? உங்களுக்கு என்னாச்சுன்னு தான் நான் கேட்க வந்தேன்”

 

லேசாய் ஒரு புன்னகை ஓடியது அவர் முகத்தில். “வீராவுக்கு தப்பு பண்ணுறவங்களை தட்டிக்கேட்க தெரியும். ஆனா காட்டிக்கொடுக்க தெரியாது”

 

“அது உனக்கு தெரியலை!!” என்றவர் அர்த்தமாய் அவளை பார்த்துக்கொண்டே தொடர்ந்தார். “இன்னைக்கு நேத்திக்கு இல்லை. அவன் எப்போமே அப்படி தான், நீ எப்போ புரிஞ்சுப்பே அதை”

 

செவ்வந்திக்கு அவர் சொன்னது சுத்தமாய் புரியவில்லை. ஆனாலும் வீராவை பற்றி அவள் அவரிடம் பேச விரும்பவில்லை.

 

மீண்டும் முகத்தில் ஒரு சுளிப்பை கொடுத்தாள் அவள். “உனக்கு வீரா பத்தி பேசப்பிடிக்கலையா!! இல்லை கேட்க பிடிக்கலையா!!”

 

“ரெண்டும் தான்” என்றாள் மனதை மறையாமல்.

 

“ஆனா இன்னைக்கு நான் சில விஷயங்கள் உன்கிட்ட சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா வீராவா உன்கிட்ட இதைப்பத்தி இப்போ இல்லை எப்பவும் சொல்ல மாட்டான்” என்ற அவரின் பேச்சு அவளை முற்றிலும் குழப்பியது.

 

“உன்கிட்ட மட்டுமில்லை, யார்கிட்டயும் சொல்ல மாட்டான். இன்னைக்கு நீ இதை கேட்கலைன்னா இதை சொல்ல நான் இருப்பேனோ!! மாட்டேனோ!!” என்று அவர் சொல்ல என்னவோ!! ஏதோவென்ற பதட்டம் அவளுக்கு.

 

“ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?? நீங்க இன்னும் எவ்வளவு நாளைக்கு இருக்கப் போறீங்க பாருங்க”

 

“என்னை வளர்த்த மாதிரி என் குழந்தையை வளர்ப்பீங்க பாருங்க” என்றாள் அவள்.

 

“என் மேல உனக்கு அவ்வளவு ஆசையா!!”

 

“இருந்ததில்லை தான்!! ஆனா எப்பவும் உங்க மேல ஒரு மதிப்பு எனக்கு உண்டு!!” என்றாள் மனதில் தோன்றிய எண்ணத்தை.

 

“நீ நடிக்கலைன்னு எனக்கு தெரியுது!! வீராவும் உன்னை மாதிரியே தான்!!” என்று அதற்கும் அவனையே இழுத்தார் அவர்.

 

“உனக்கு ஒண்ணு தெரியுமா!! நீ அப்படியே என்னை மாதிரி!!”

 

‘நானு உங்களை மாதிரி இருக்கவே முடியாது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“இல்லைன்னு உனக்கு தோணுதா!! அதுல தப்பில்லை. நீயும் நானும் எப்பவும் எதிரும் புதிருமா தானே இருப்போம்”

 

“ஒரே துருவங்கள் எப்படி இணையும்!! சின்ன வயசுல நான் பண்ணதெல்லாம் நீ பண்ணுற!!”

 

“உங்க தாத்தா இறந்து போனபிறகு எனக்கு வந்த பக்குவம் உங்க அத்தை இறந்துப் போனப்பவே உனக்கு வந்திருந்ததை பார்த்தேன்”

 

“இப்போ சொல்லு நீயும் நானும் ஒரே மாதிரி தானே!!”

 

‘ஆமாவா’ என்ற யோசனை அவளுக்குள்.

 

“தெரியலை!! உங்க அளவுக்கு எல்லாம் என்னால எப்பவும் எல்லாம் தெரிஞ்சு பதில் சொல்ல முடியாது. எதையும் கணிக்க தெரியாது உங்க அளவுக்கு”

 

“அது காலம் எனக்கு கத்துக்கொடுத்த பாடம்!! உனக்கும் அது தன்னால வந்திடும்”

 

“நான் உங்களை மாதிரி எல்லாம் ஆக வேண்டாம்” அவசரமாய் சொன்னாள்.

 

“ஹா… ஹா…” என்று வாய்விட்டு சிரித்தார்.

 

“எதுவும் கத்துக்கொடுத்து வர்றதில்லை. உனக்கு அது தானா தான் வந்திருக்கு”

 

“அதான் வீராவை போல ஒருத்தன்கிட்ட வந்து சேர்ந்திருக்க!!” என்று மீண்டும் அவள் கணவன் புராணமே பாடினார் அவர்.

 

‘என்ன இன்னைக்கு கிழவி அவன் பாட்டே பாடுது!! கொஞ்சம் மதிச்சு பேசினது தப்போ!!’ என்ற யோசனை அவளுக்கு.

 

ஆனாலும் அவர் என்ன தான் சொல்கிறார் என்று கேட்கும் ஆவலும் அவளுக்கு அதிகமாய் இருந்தது.

 

இங்கு மதுராம்பாள் அவனைப்பற்றி சொல்ல ஆரம்பித்திருக்க தோட்டத்தில் இருந்த அந்த ஒற்றயறையில் இருந்த கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்த வீராவுக்குள்ளும் பழைய நினைவுகள்.

 

அவன் இதுநாள் வரை மறந்திருந்ததாய் நினைத்திருந்த நினைவுகள் மனைவியின் பேச்சில் கீறப்பட்டு ரணமாகி மேலெழுந்தது அவன் எண்ணங்கள்…

____________________

 

கண்ணாடியின் முன் தன் சிகையை படிய வாரி அப்படியும் இப்படியும் திரும்பி அழகு பார்த்துக்கொண்டிருந்தான் கட்டிளம் காளையான வீரா.

 

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பத்தொன்பது வயது நிரம்பிய இளைஞன் அவன். அரும்பு மீசையும் லேசாய் வளர்ந்திருந்த தாடியுமாயிருந்தான் அவன். கண்களில் எப்போதும் குறும்புத்தனமிருக்கும் அவனிடம்.

“ஏலே பாண்டி?? இன்னும் எம்புட்டு நேரம்ல நீ கிளம்புறதுக்கு. நேரமாகிட்டே எப்போலே சாப்புட போறே??” என்றவாறே மகன் முன் வந்து நின்றார் மனோரஞ்சிதம்.

 

“என்னம்மா இப்படி சொல்லிட்டே!! நான் தலையை சீவ வேணாமா!!”

 

“க்கும்… இருக்கற அரையடியை எதுக்குலே இம்புட்டு நேரமா சீவிக்கிட்டு கிடக்க!! உனக்கு டிபன் வைச்சுட்டு நான் நம்ம வீடு கட்டுற இடத்துக்கு வேற போகணும்லே, விரசா வந்து சாப்பிடுய்யா!!” என்றுவிட்டு நகர்ந்தார் அவர்.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் அன்னையின் முன் நின்றிருந்தான் வீரா.

 

“அந்த டேபிள்ல உட்காருய்யா தோசையை ஊத்தி எடுத்திட்டு வர்றேன்” என்றவரை முறைத்தான் அவன்.

 

“சரி சரி முறைக்காத நீ கீழவே உட்காரு” என்றவர் அவனுக்கு சுடச்சுட தோசை வார்த்து கொண்டு வந்தார்.

 

“ஏம்லே நீ இப்படி இருக்கே??”

 

“எப்படிம்மா??”

 

“ஒரு பிள்ளையவும் நீ பாக்க மாட்டேங்கியாம்??”

 

“யார்ம்மா அப்படி சொன்னாங்க??”

“நான் சொல்லுதேன்??”

 

“நீ என்னை சரியா கவனிக்கலைம்மா!!”

 

“சரி அப்போ இதுக்கு பதில் சொல்லு. அன்னைக்கு உன் சினேகித புள்ளைங்க எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்திச்சுங்கல”

 

“ஆமா அதுகென்ன இப்போ??”

 

“அதுல அந்த சிவப்பு கலரு சுடிதார் போட்டு ஒரு பொண்ணு வந்திச்சே, அது பேரு கூட என்னமோ… ஷாலு…”

 

“ஷாலினிம்மா”

 

“ஹான் ஷாலினி… அந்த பொண்ணு கண்ணு பூரா உன் மேலவே இருந்துச்சுய்யா!! எதுவும் லவ்வு கிவ்வு”

 

“ம்மா… நான் போய் லவ் பண்ணுவேன்னு நினைக்கிறியா நீ!!”

 

“நீ எந்த பொண்ணை பார்க்கறியோ அந்த பொண்ணைத் தான் நான் கட்டிக்கிடுவேன்”

 

“எத்தனை நாளைக்கு தாம்லே அம்மா முந்தியே பிடிச்சிட்டு அலைவே!! நாளைக்கு உனக்குன்னு ஒருத்தி வந்திட்டா அப்போ தெரியும் சேதி”

 

“ம்மா!! நீ வேணா பாரேன், நாளைக்கு எனக்குன்னு வர்றவளும் உன் முந்தியே பிடிச்சிட்டு அலையப் போறா!!” என்று வீரா சொல்லிய தினுசில் ரஞ்சிதம் சிரித்துவிட்டார்.

 

“சரி அந்த சிவப்பு சுடிதார்??”

 

“அவ என் பிரண்டும்மா!! அவளைப் போய் நான் எப்படி?? அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு இருந்தா இன்னையோட அவளோட பிரண்ட்ஷிப் கட்டு” என்றான்.

 

“இப்படி இருந்தா எப்படிலே உனக்கு பொண்ணு கிடைக்குறது… அதெல்லாம் உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாம்மா!!”

 

“எப்போமே அம்மா!! அம்மா!! தாம்லே உனக்கு” என்று செல்லமாய் சலித்துக்கொண்டார் அவர்.

 

“அம்மா அந்த வீடு எப்போ தாம்மா கட்டி முடியும். நான் பின்னால பெரிய தோட்டம் வைக்கணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்”

 

“அதான் கிட்டத்தட்ட எல்லாம் முடிச்சிடுச்சுல, நீ வேணா உன் ஆசை தீர பூந்தோட்டம் வைச்சுக்க!!”

 

“ம்மா!! எல்லா வேலையும் முடிஞ்சு நாம அங்க போன பிறகு தான் வைக்கணும்… இல்லைன்னா தூசு தும்பு படியும் செடியில”

 

“நாம பக்கத்துல இருந்து பார்க்கற மாதிரி ஆகாதும்மா!!”

“அப்படி என்ன செடி எல்லாம் வைக்க போறே??”

 

“முதல்ல நான் வைக்கப் போறது மனோரஞ்சிதம் தான்”

 

“ஏம்லே அப்புறம் செடி பின்னாலவே சுத்தி சுத்தி வரப்போறியா!!” என்றார் அவர் சிரித்துக்கொண்டே!!

 

“ஆமா சுத்தி தான் வருவேன். எங்கம்மா மேல இருக்கற பிரியத்துல வைக்குறது, எங்கம்மா பின்னாடி சுத்தி வர்ற மாதிரி தான் செடியும் சுத்தி வருவேன்” என்றான் அவன்.

 

வீராவுக்கும் அவன் அன்னைக்குமான பிணைப்பு என்பது இமைக்கும் கண்ணுக்குமானது. அவ்வளவு நெருக்கமிருக்கும் அதில்.

 

வீரா மனம்விட்டு தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது அவன் அன்னையிடம் மட்டுமே!! தந்தை மீது எப்போதும் மரியாதை உண்டு பாசமுண்டு!!

 

ஆனால் அவரிடம் கூட தான் ஒரு விஷயத்தை மறைப்போம் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

 

அன்னை மீது அதையும் விட ஆழமானதொரு அன்பு உண்டு அவனுக்கு. அவரிடம் விடைப்பெற்றவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தான்.

 

எங்கே பெரிதாய் செல்வான், முதலில் மதுராம்பாள் வீட்டருகில் அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு தான் செல்வான். அவன் தினசரிகளில் இதுவும் ஒன்று.

அன்னை சொன்னது போல வீடு கிட்டத்தட்ட முடிந்து தானிருந்தது. சொன்னது போலே தையிலே அவர்கள் புதுவீட்டிற்கு சென்றுவிடலாம்.

 

சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவன் வீட்டின் பின்புறமிருந்த காலியிடத்திற்கு வந்திருந்தான். நாம சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு இங்க ஒரு சின்ன வீடு கட்டணும்.

 

சுத்தி தோட்டம் நடுவுல வீடு நல்லாயிருக்கும்ல என்று தன் போக்கில் எண்ணிக் கொண்டிருந்தான். எதை எதை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும் என்று அவன் பார்வை கணக்கெடுத்தது.

 

பின் வேலை முடிந்தது என்பது போல் இருந்தவன் அங்கிருந்த மதில் சுவர் மேல் ஏறி அடுத்த வீட்டிற்குள் குதித்தான்.

 

இந்த வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்தே வீராவின் தினசரி வழக்கமிது. மதில் ஏறி குதிப்பது என்பது அவனுக்கு தண்ணீர்பட்ட பாடு. அனாயசமாக ஏறி குதித்துவிடுவான்.

 

அது மட்டுமல்ல கிடைத்த இடத்தில் கால் வைத்து இரண்டு மாடி வரை கடகடவென ஏறியும் விடுவானவன்.

 

மதுராம்பாளுக்கு அவனைத் தெரியும் அதனால் பெரிதாய் அதனை கண்டுக்கொள்ள மாட்டார் அவர். மதில் ஏறி குதித்திருந்தவன் அங்கிருந்த காய்கறி தோட்டத்தை பார்வையிட்டான்.

 

அங்கு மதுராம்பாள் வைத்திருக்கும் சிறிய காய்கறி தோட்டம் அவனுக்கு மிகப் பிடித்தம்.

 

தினமும் அதை காண்பது அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

 

பசுமையாய் ஆங்காங்கே முளைத்திருந்த அரைக்கீரை, சிறு கீரை, வெந்தய கீரை ஒரு புறமிருக்க, நீண்டு வளர்ந்து கொடி போல் படர்ந்திருந்த பீர்க்காங்காய் ஒரு புறம், பச்சை மிளகாய், தக்காளி என்று அவர் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மொத்தமும் அதில்.

 

அத்தனை சின்ன இடத்தில் இத்தனையும் வெகு நேர்த்தியாய் அழகாய் வைத்திருந்தார அவர்.

 

அதையெல்லாம் கண்டு ரசித்தவன் மீண்டும் சுவர் ஏறி அவன் வீட்டிற்கு குதிக்க போக மதுராம்பாள் வீட்டை ஒட்டியிருந்த மாடி வீட்டில் இருந்து அவன் பள்ளிக்காலத் தோழன் அவனை அழைத்தான்.

 

“இங்க என்னடா பண்ணுற??”

 

“ஏன்டா என்ன??”

 

“சரி வீட்டுக்கு வா” என்று அவன் தோழன் அழைக்க “இரு வர்றேன்” என்றவன் அங்கிருந்த திண்டின் மீதேறி கடகடவென்று மாடியேறி இருந்தான்.

“டேய் என்னடா இப்படி ஸ்பைடர்மேன் வேலையெல்லாம் பார்க்குற, வீட்டு காம்பவுன்ட் வழியா வருவானா இதென்னடா வேலை உனக்கு” என்றான் அவன் தோழன் அங்கிருந்தே.

 

தோழர்கள் இருவரும் அங்கே பேசிக்கொண்டிருக்க கீழேயிருந்த வீட்டில் அவன் தடதடவென்று ஏறிய சத்தம் கேட்டு என்னவென்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார் செவ்வந்தியின் தந்தை அய்யாத்துரை.

 

அவர் காட்டிலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அவ்வப்போது அவருக்கு பணி மாற்றங்கள் வருமென்பதால் அவர் விடுமுறையின் போதோ அல்லது விடுப்பு எடுத்துக்கொண்டோ தான் வீட்டிற்கே வருவார்.

 

அன்று அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு குடும்பத்தை பார்க்க வந்திருந்தார். தற்போது அவர் வல்லநாட்டில் தான் காட்டிலாகா அதிகாரியாக இருந்தார்.

 

“எல்லாம் நம்ம சக்தியோட புள்ளை தான் துரை. எப்பவும் இப்படி தான் ஏறி போவாப்புல!! வேற ஒண்ணும்மில்லை” என்று மகனுக்கு சொன்னார் மதுராம்பாள்.

 

“நம்ம சக்தி பையனா!!” என்று ஆச்சரியமாய் கேட்டவர் “நல்லா வளர்ந்திருப்பான்ல, நான் பார்த்து வருஷமாச்சு!!

 

“ஆமாலே அவன் எதிர்லயே வந்தாலும் உனக்கு அடையாளம் தெரியாது அம்புட்டு வளர்ந்திட்டான். நல்ல உசரம் என்ன நிறம் தான் கம்மி, ஆனாலும் களையான முகம் ராசா மாதிரி தான் இருப்பான்” என்றார் அவரும்.

 

உடனே திரும்பி தன் மூத்த மகளை “சக்தி” என்றழைத்தார். அய்யாத்துரைக்கு அவர் நெருங்கிய நண்பர் சக்திவேல் தன்னிடம் பேசாது போனாலும் அவர் மேல் இருந்த நட்பின் காரணமாய் மகளை சக்தி என்றே அழைத்து மகிழ்வார்.

 

“என்னப்பா??” என்று வந்து நின்றாள் மகள்.

 

“மேல வந்திருக்காங்கல அவங்களை கூட்டிட்டு வர்றியா??” என்றார்.

 

“ஹ்ம்ம் சரிப்பா” என்றவள் படியேறி மாடிக்குச் சென்றாள். வீரா இன்னமும் தோழனுடன் தான் பேசிக்கொண்டிருந்தான்.

 

அவன் கவனத்தை கலைக்கும் பொருட்டு “அண்ணே!!” என்றழைத்தாள் சிறுமி செவ்வந்தி.

 

‘என்ன அண்ணனா?? யார்றா அது??” என்று திரும்பி பார்த்தான் வீரா.

 

அங்கு வெள்ளையாய் அழகாய் கொழுக் மொழுக்கென்று சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள். அவளை இங்கு வரும் போது எப்போதாவது பார்த்திருக்கிறான் அவன்.

 

அவளைப் பார்த்ததும் நன்றாய் உப்பிய வெள்ளைப்பனியாரம் போல் தோன்றியது அவனுக்கு. அருகில் அன்று தான் பார்க்கிறான். “என்ன வேணும்??” என்றான் அவளைப் பார்த்து.

 

“உன்னை அப்பா கூப்பிட்டார்”

 

வீராவுக்கு அச்சிறுமியை சீண்டி பார்க்கும் எண்ணம் “வரமுடியாது போ”

 

சிறு வயதில் மட்டும் செவ்வந்தி எப்படியிருப்பாளாம்?? மாறுமா அவள் பதிலுக்கு பதில் கொடுக்கும் அவள் குணம். “ஏன்?? ஏன் வரமுடியாது?? எங்கப்பா கூப்பிட்டா வரணும்??” என்றாள் அவள்.

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஐந்து வயது நிரம்பிய முல்லை படியேறி வந்திருந்தாள். குட்டியாய் ஒரு கவுனை போட்டுக்கொண்டு இன்னமும் குழந்தைத்தனம் மாறாமல் இருந்த முல்லையும் செவ்வந்தியையும் அவனுக்கு பிடித்தது.

 

முல்லையை கண்டவன் அருகே சென்று அவளைத் தூக்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

 

“ஹேய் விடு அவளை!!”

 

“விடமுடியாது வெள்ளைப்பனியாரம்” என்றான்.

 

“எதுக்கு அப்படி சொல்ற??”

 

“நீ நல்லா மெத்து மெத்துன்னு பனியாரம் மாதிரி இருக்கேல அதான் அப்படி சொன்னேன்”

 

அதற்குள் வீராவின் மீது சாய்ந்திருந்த முல்லை அவன் சொன்ன வார்த்தையை புது வார்த்தை என்று நம்பி கற்றுக்கொண்டிருந்தாள். “வெள்ளை பன்னி” என்று.

 

“அப்படி சொல்லாதடா” என்றாள் கண்களை உருட்டி மிரட்டும் பாவனையில்.

 

“அப்படி தான்டி சொல்லுவேன்”

 

“டி சொன்னே அப்பாகிட்ட சொல்லிருவேன்”

 

“சொல்லிக்கோ நான் உன்னை தூக்கி அப்படியே கீழே போட்டிருவேன்”

 

“எங்க போடு பார்ப்போம்??” என்று மல்லுக்கு நின்றாள் அவனிடம்.

 

வீராவுக்கு சிரிப்பு வந்தது, அதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பவில்லை அவன். முல்லையை தூக்கிக்கொண்டே கீழே வந்தான்.

 

“வாப்பா வீரா” என்று வரவேற்றார் மதுராம்பாள்.

 

“ஏம்மா நீங்க சொன்னது நிஜம் தான். வீரா இப்போ ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டான். ஏன் வீரா மாமாவை உனக்கு அடையாளம் தெரியுதா!!”

 

லேசாய் சிரித்தவன் முல்லையை கீழே இறக்கிவிட்டு “ஏன் தெரியாம மாமா… எப்படியிருக்கீங்க??” என்றான்.

 

“நல்லாயிருக்கனப்பா… சக்தி எப்படி இருக்கான்??”

 

“நல்லா இருக்கார் மாமா”

 

“அப்புறம் என்னப்பா படிக்கிற??”

 

“விவசாயம் படிக்கறேன்”

 

“அப்படியா?? பரவாயில்லைப்பா!! எல்லா புள்ளைகளும் இன்ஜினியர்க்கு படிக்கறாங்க நீ விவசாயம் படிக்கற நல்லது தான்”

 

“ஆமா எந்த காலேஜ்ல”

 

“திருநெல்வேலில படிக்கறேன் மாமா”

 

“எப்படிப்பா தினமும் போய் வர்றியா??”

 

“இல்லையில்லை ஹாஸ்டல் தான்”

 

“அப்போ சரி…” என்றவர் அவனை உட்கார வைத்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

 

அவனும் அவருடன் இயல்பாய் உரையாடிக் கொண்டிருந்தான். உரையாடலின் போது தான் அவர் வல்லநாட்டில் இருக்கிறார் என்பது அவனுக்கு தெரிய வர, காட்டை சுற்றிப் பார்க்க ஆர்வம் கொண்டான் அவன்.

 

அடர்ந்த காட்டிற்குள் சென்று பார்க்க அதீத ஆசை வந்தது அவனுக்கு. அவர் அனுமதித்தால் அங்கு சென்று பார்க்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.

 

அவன் எண்ணத்தை அப்படியே அவரிடம் கேட்க அவரும் ஒரு நாள் வருமாறு சொல்லி அவர் இருக்கும் இடத்தின் தொலைபேசி எண்ணை அவனுக்கு கொடுத்தார்.

 

அங்கிருந்து விடைப்பெற்று சென்றவன் பின் கல்லூரிக்கு சென்றுவிட்டான். ஒரு பத்து நாட்கள் வரை அவனுக்கு அதை பற்றிய ஞாபகமே இல்லை.

 

நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஓர் நாள் சுற்றுலா செல்லலாம் என்று பேசும் போது தான் அவனுக்கு வல்லநாடு ஞாபகம் வந்தது.

 

அவசரமாய் நண்பர்கள் கூட்டத்தில் இருந்து விடுப்பட்டவன் ஹாஸ்டலுக்கு செல்லும் வழியில் அய்யாத்துரை கொடுத்த எண்ணிற்கு போன் செய்து பேசினான்.

 

அவரும் வருமாறு சொல்லிவிட அவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. வல்லநாட்டில் தான் வெளிமான் சரணாலயம் உள்ளது. பார்ப்பதற்கு ஆடுகளை போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் அவைகள் மான்களே!!

வீரா மறுநாளே அங்கு கிளம்பிச் செல்ல அய்யாத்துரையே அவனுக்கு வெளிமான் சரணாலயம், காடு என்று எல்லாம் சுற்றிக் காண்பித்தார்.

 

அதிலிருந்து அவன் அவ்வப்போது அங்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு வருவான். மரங்கள் அடர்ந்த காடுகள் தனக்குள் பல ரகசியங்களை ஒளித்து வைத்துக்கொண்டுள்ளது போன்று எப்போதும் ஒரு எண்ணம் அவனுக்கு.

 

அவனறியவில்லை அவனும் ஓர் ரகசியம் அங்கு அறிவான் என்று. அதை அங்கே மட்டுமல்ல தன் மனதிற்குள்ளும் வைத்து புதைப்பான் என்று.

 

வல்லநாட்டு பயணம் அவன் வாழ்க்கை பயணத்தை மாற்றிவிடும் என்றறிந்திருந்தால் நிச்சயம் தன் பாதையை மாற்றியிருப்பான்.

 

மாற்றம் என்பது நிகழ்ந்து தானே தீரும். அதை ஏற்றுக் கொள்வதும் அதன் வழி நடக்கப் பழகிக்கொள்வதும் நம் கையில் தானே இருக்கிறது.

 

வீரா அவ்வப்போது அங்கு வந்து செல்வதால் அங்கிருப்போர்க்கு அவன் மிகப் பரிட்சயம். சக்திவேலுக்கு அவன் அவ்வப்போது அங்கு செல்வது தெரியும்.

 

சென்ற முறை வீட்டிற்கு வந்த போது எதையோ மகனிடம் சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்றெண்ணி விட்டுவிட்டார் சக்திவேல்.

அதெல்லாம் மகனிடம் பேசும் விஷயமல்ல என்று அப்படியே அதை விட்டார்.

 

வீராவால் மறக்க முடியாத மறக்க நினைக்கின்ற ஓர் நாள் அது…

 

எப்போதும் போல் சந்தோசமாக தான் அந்த காட்டிற்கு சென்றான். அவ்வப்போது வருபவன் தானே என்று அங்கிருப்பவர்கள் அவனை ஏதும் சொல்லவில்லை.

 

எப்போதும் அங்கிருக்கும் அய்யாத்துரை அன்று அங்கில்லை. அதைப்பற்றி அவர்களிடம் கேட்க நினைத்தான் ஆனால் அப்படியே விட்டுவிட்டான்.

 

ஒரு வேளை அவர் விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றிருப்பாராய் இருக்கும் என்று எண்ணிக் கொண்டானவன்.

 

மெதுவாய் கால் போன போக்கில் நடந்திருந்தவன் அடர்ந்திருந்த மரங்கள் அடங்கிய பகுதிக்கு வந்துவிட்டிருந்தான்.

 

யாரோ முனகுவது போலவும் அழுவது போலவும் அவனுக்கு சத்தம் கேட்டது. காட்டில் பொதுவாய் பறவைகளின் கீச்கீச்சென்ற ஒலிகள், சடசடப்புகள் தான் அதிகம் கேட்கும்.

 

அந்த அடர்ந்த கானகத்தில் பறவைகள் சத்தம் எதுவும் அப்போது கேட்கவில்லை. மெல்லிய விசும்பல் ஒலி இன்னமும் கேட்க படபடப்பாய் இருந்தது அவனுக்கு.

வேக எட்டுக்கள் போட்டு நடந்திருந்தவன் கண்ணில் கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியை ஒரு பக்கம் கொடுக்க அளவில்லா ஆத்திரத்தையும் சேர்த்தே கொடுத்தது.

 

அங்கு அய்யாத்துரை காட்டிற்கு விறகு வெட்ட வந்திருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உறவாட முயற்சி செய்து கொண்டிருந்தார்.

 

அப்பெண் விறகு வெட்ட வந்தவளாகத் தானிருக்க வேண்டும் என்பது அவன் அனுமானம், வேறு ஏதேனும் வேலையாகக் கூட அவள் அப்பக்கம் வந்திருக்கலாம்.

 

அய்யாத்துரை அவனை பார்க்கவில்லை, அவர் செய்துக் கொண்டிருந்த கீழ் தரமான செயலின் இடையில் உலகமே வந்து நின்றாலும் அவருக்கு கண் தெரியாது.

 

முன்பொரு முறை இப்படி தான் சக்திவேலின் முன் பிடிப்பட்டிருந்தார். சக்திவேல் நண்பர் என்பதினால் அவருக்கு கடுமையாய் அறிவுரை செய்திருந்தார்.

 

நண்பனின் செயலில் அவருக்கு இருந்த எதிர்ப்பை காட்ட நண்பனுடனான நட்பை மொத்தமாய் முறித்துக் கொண்டிருந்தார் அவர்.

 

வீரா அவருக்கு நண்பன் அல்லவே, யாரோவும் அல்ல தான்!! தான் கண்ட காட்சியில் அவனுக்கு ரத்தம் கொதித்திருக்க அவன் வாயில் இருந்து “டேய்” என்று தான் வந்திருந்தது.

 

சத்தம் கேட்டு தன் உணர்வு வந்திருந்த அய்யாத்துரை அவசரமாய் எழுந்து அமர, அலங்கோலமாய் கிடந்தாள் அப்பெண்.

 

வீராவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவரருகே நெருங்கியிருந்தான் அவன்.

 

முதுகில் சுமந்திருந்த பையில் அவன் வீட்டிற்கு எடுத்து செல்ல வைத்திருந்த உடமைகள் இருக்க அதை திறந்தவன் கையில் கிடைத்ததை எடுத்து அப்பெண்ணின் அருகில் போட்டான்.

 

நிமிர்ந்து அய்யாத்துரையை பார்க்க அவர் அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் நின்றிருந்தார்.

 

வீராவுக்கு அவரை அடித்து விடும் வேகம் தான், ஆனால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். அவர் வயதையும் அவர் தன் தந்தையின் முன்னாள் நண்பர் என்பதாலும்.

 

அவன் கைகள் தான் அவனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததே தவிர அவன் நாவு அவன் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்திருந்தது.

 

“சீய்!! நீயெல்லாம் ஒரு மனுஷனா!! உனக்கெல்லாம் எதுக்கு ஒரு குடும்பம்!!”

 

“வீட்டில உனக்குன்னு ஒரு பொண்டாட்டி குழந்தைங்க எல்லாரும் இருக்காங்க தானே உனக்கு!!”

 

“இன்னொரு பெண்ணை இப்படி செய்ய உனக்கென்ன தைரியம் இருக்கும்”

 

“நாளைக்கு உன் பொண்ணும் பெரிய மனுஷியாகும் அப்பவும் உன் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாம அவகிட்ட இப்படி தான் தப்பா நடப்பியா!!” என்று சொல்லக்கூடாத வார்த்தையை அவரை கேவலமாக பார்த்தவாறே சொல்லி முடித்திருந்தான் அவன்.

 

அய்யாத்துரையை அந்த வார்த்தை குத்தி கிழித்தது என்பது உண்மை தான். ஓர் சொல் தான் ஆனால் வீரியம் நிறைந்தது அது என்பதை அவர் உணர்ந்திருந்தார். கூனிக்குறுகிப் போனார் அவன் சொன்ன சொல்லில்.

 

அதற்குள் வீரா போட்டிருந்ததில் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு எழுந்திருந்தாள் அப்பெண்.

 

அய்யாத்துரையின் அருகே வந்தவள் தூவென்று காரி உமிழ்ந்திருந்தாள் அவரை பார்த்து. வீராவை அவள் நன்றியுடன் பார்த்து அங்கிருந்து நகர முற்பட “நில்லுங்க நானே உங்களை கூட்டிட்டு வந்து விடுறேன்”

 

“நீங்க இவர் மேல எதுவும் கம்பிளைன்ட் கொடுக்க போறீங்களா!!” என்றான் அப்பெண் பார்த்து.

 

வீராவை திரும்பி பார்த்தாள் அவள். “நான் உங்களுக்கு துணையா இருப்பேன். நானே சாட்சி சொல்வேன் உங்களுக்கு பயம் வேண்டாம்” என்று நம்பிக்கை கொடுத்தான்.

“இல்லை வேணாம்…” என்று மறுத்தவளின் கண்களில் பயத்தின் சாயல்.

 

“பயப்பட வேண்டாமே!!”

 

“பயமில்லை எனக்கு!! ஆனா வேண்டாமே!!” என்று மறுத்தவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

 

“நில்லுங்க நானும் வர்றேன்” என்றவன் “என்னை உங்க கூடப்பிறந்தவரா நினைச்சுக்கோங்க!! இங்க நெறைய வெறிநாய்கள் வேட்டையாட காத்திட்டு இருக்கு!!” என்று அய்யாத்துரையை முறைத்தவாறே சொன்னவன் அவன் பையை எடுத்துக்கொண்டு அப்பெண்ணுடன் நடந்தான்.

 

மறுநாள் காலையில் வந்த செய்தியில் அவன் மொத்தமும் உருக்குலைந்து போனான்.

 

அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்திருந்த அந்த துக்கச்செய்தி அய்யாத்துரை இறந்துவிட்டார் என்பதே!! இனி…

Advertisement