Advertisement

அத்தியாயம் – 3

 

“ஹச்… ஹச்…” என்றவள் குனிந்து தும்மிக் கொண்டிருந்தாள்.

 

அவன் அவளை பார்க்கலாம் என்று திரும்ப சரியாக தும்மிவிட்டாள். “என்னாச்சு செவ்வந்தி தும்மிட்டு கிடக்க” என்ற மதுராம்பாள் குரல் கொடுக்க “ஒண்ணுமில்லை” என்றாள் பதிலுக்கு.

 

அந்த குரல் ஏதோ தேனீ ரீங்காரம் செய்வது போல் இனிமையாய் இருந்ததுவோ!!

 

‘டேய் வீரா என்னாச்சு உனக்கு. எதுக்கு இப்படி எல்லாம் உனக்கு தோணுது’ என்று தன்னை லேசாய் குட்டிக்கொண்டு கவனத்தை வண்டி ஓட்டுவதில் செலுத்தினான்.

 

திருநெல்வேலி செல்லும் வரை அவன் பார்வை இங்குமங்கும் திரும்பவேயில்லை. இடையில் ஓரிரு முறை லேசான செருமல் சத்தம் கேட்டது போல் இருந்தது.

 

அவன் ஏன் திரும்பி பார்க்கிறான், இடையில் ஓரிடத்தில் நிறுத்தி அவர்களுக்கு தாக சாந்திக்கு பழச்சாறு வாங்கி கொடுத்தான். அப்போதும் அவளை திரும்பி பார்க்கவில்லை.

 

நேரே ஆரெம்கேவி வாசலில் சென்று வண்டியை நிறுத்தினான். முதலில் முகூர்த்த பட்டை எடுத்துவிடுவதென முடிவு செய்தவர்கள் நேராக பட்டுப்புடவை இருக்குமிடம் நோக்கிச் சென்றனர்.

 

“நீங்க பாருங்கம்மா நான் அப்படி உட்கார்ந்திருக்கேன்” என்று சொல்லி அவன் நகரப்பார்க்க “பாண்டி முகூர்த்த புடவை நீ வந்து பாருய்யா” என்று மனோரஞ்சிதம் அழைத்தார்.

 

“அம்மா ஏம்மா இப்படி படுத்தறீங்க!!”

 

“நீ நல்லா செலக்ட் பண்ணுவேன்னு தானே உன்னை பார்க்க சொல்றேன். உன் தங்கச்சியும் உன்ட்ட சேலை கேட்டாளே அதும் உன் பொறுப்பு தானே” என்றவரை லேசாய் முறைத்து “வாங்க” என்று நகர்ந்தான்.

 

“ஏலே பாண்டி நீயும் அந்த பொண்ணுமா உங்களுக்கு பிடிச்சதை பார்த்து எடுங்க. நாங்க அப்படி போய் பார்த்திட்டு இருக்கோம்” என்று நகர்ந்த மனோரஞ்சிதம் மகனை பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

 

வீரபாண்டியன் அருகில் அவளிருக்கிறாளா இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை. அவன் பார்வைக்கு பளிச்சென்றிருந்த சில புடவைகளை எடுத்து போடச்சொல்லி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மீண்டும் ஒரு செருமல் சத்தம் அவனருகே கேட்டது, வண்டியில் கேட்டது போலவே. மெதுவாய் திரும்பி பார்த்தான்.

 

அவள் தான் நின்றிருந்தாள் அன்று பார்த்த போது இதை விட சின்ன பெண்ணாய் தெரிந்தாள். இன்று புடவை எல்லாம் கட்டி பெரிய பெண் போல தெரிகிறாளோ!!

 

பரிசம் போட்ட அன்று அவளை சரியாக பார்த்த நினைவு அவனுக்கில்லை. அவன் ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருக்க அவன் எண்ணத்தை கலைக்கும் விதமாய் “எவ்வளவு நேரம் கூப்பிடுறது உங்களை” என்று சிடுசிடுத்தாள் அவள்.

 

அவள் முகக்கடுப்பு அவனுக்கும் வந்தது. “அப்படியா எப்படி கூப்பிட்டே?? பேர் சொல்லி கூப்பிட்டியா!!” என்றான்.

 

“வண்டியில வைச்சே கூப்பிட்டது உங்களுக்கு தெரியாதா!! ரொம்ப ஓவரா பண்ணாதீங்க. அவங்க எல்லாம் பக்கத்துல இல்லை எனக்கு உங்ககிட்ட பேசணும்” என்றாள்.

 

“சரி வா வெளிய போய் பேசுவோம்”

 

“இல்லையில்லை புடவை பார்த்திட்டே பேசுவோம். எங்க ஆச்சி தூரமா இருந்தாலும் அது கவனமெல்லாம் இங்க தான் இருக்கும்”

 

‘என்ன பேசப் போறா’ என்று யோசித்துக்கொண்டே “சரி சொல்லு” என்றான்.

 

“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை”

 

“எனக்கும் தான் பிடிக்கலை. நீ தானே எல்லாத்துக்கும் காரணம்” குறை சொன்னான்.

 

“நான் என்ன பண்ணேன், சும்மா ஆளாளுக்கு அதையே சொல்லி என்னை படுத்தறாங்க. நான் அப்படி ஒண்ணும் பெரிய தப்பெல்லாம் பண்ணலை”

 

“தப்பு பெரிசோ சிறுசோ அதனால பாதிக்கப்பட்டது நானு”

 

“நீங்க மட்டுமில்லை நானும் தான்”

 

“இப்போ என்ன சொல்லணுமோ அதை சட்டுன்னு சொல்லி முடி. நீயா நானா பேச்சு வேணாம்ன்னு நினைக்கிறேன்”

 

“முதல்ல கல்யாணத்தை நிறுத்துங்க” என்றாள்.

 

“என்ன!! என்ன சொன்னே!!”

 

“காது கேட்கலையா உங்களுக்கு. கல்யாணத்தை நிறுத்தச் சொன்னேன்”

 

“நான் ஏன் நிறுத்தணும்??” என்றான்.

 

“பிடிக்கலைன்னு சொல்றீங்க!! அப்புறம் ஏன் நிறுத்தணும்ன்னு கேட்கறீங்க” என்று பொரிந்தாள்.

 

“உன்னால தானே எல்லாம். நீயே போய் எல்லாத்தையும் நிறுத்திக்கோ” என்றான்.

“ஆம்பிளைன்னு திமிர் உங்களுக்கு எல்லாம். உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்ன்னு நினைக்கறீங்க. நான் உன் கால்ல விழுந்து கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்லணும் அதானே” என்றாள்.

 

“ஹேய் என்ன ஓவரா பேசிட்டு இருக்க. பல்லை உடைச்சிருவேன் ராஸ்கல். போனா போகுது சின்ன பொண்ணாச்சேன்னு பொறுமையா பேசிட்டு இருக்கேன்”

 

“ரொம்ப திமிரா பேசிட்டு போற. எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லை தான். வீட்டிலையும் சொல்லி பார்த்திட்டேன். நிறுத்த மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

 

“எனக்கு இங்க இருந்து எல்லாத்தையும் விட்டுட்டு போக அஞ்சு நிமிஷம் கூட ஆகாது தான். ஆனா வீட்டில இருக்கவங்களை அவமானப்படுத்திட்டு எல்லாம் என்னால போக முடியாது”

 

“உனக்கு வேணாம்ன்னா நீயே நிறுத்திக்கோ. உங்க வீட்டில இருக்கவங்களை ஒரு முறை அவமானப்படுத்தினது போதாதுன்னு நீ நினைக்கிற போல. ஓகே அதை பத்தி எனக்கு தேவையில்லாதது”

 

“உன்னிஷ்டம் நீயே கல்யாணத்தை நிறுத்திக்கோ” என்றுவிட்டு “இந்த புடவை நல்லாயிருக்கு. இதை முகூர்த்ததுக்கு எடுத்துக்கலாம்” என்று அவளிடம் சொல்லிவிட்டு அந்த புறம் நகர்ந்தான்.

 

“திமிர் பிடிச்சவன்” என்று மனதிற்குள் அவள் திட்டிக்கொண்டிருக்கும் போதே மற்றவர்கள் வந்து சேர்ந்தனர். “என்னம்மா இந்த புடவை பிடிச்சிருக்கா. இதையே எடுத்திறலாமா!!” என்றார் மனோரஞ்சிதம்.

 

அவள் எங்கே புடவையை பார்த்தாள். “ஹான் பிடிச்சிருக்கு” என்றாள்.

 

வீரபாண்டியன் அவன் தங்கைக்கு புடவையை பார்த்து எடுத்துக் கொண்டிருந்தான். “யாருக்கு அத்தான் இந்த புடவை எடுக்கறீங்க அக்காக்கா” என்று வந்து நின்றாள் முல்லை.

 

“இல்லைம்மா என் தங்கை தாமரைக்கு. கல்யாணத்துக்கு என்கிட்ட கேட்டிருந்தா அதான் எடுத்திட்டு இருக்கேன்” என்றான் அமைதியாய்.

 

“ஏன் அத்தான் எனக்கெல்லாம் எடுத்து தரமாட்டீங்களா!!” என்றாள் அவள்.

 

“முல்லை!!” என்று அதட்டினார் மதுராம்பாள்.

 

“இருக்கட்டும் அவளும் எனக்கு தாமரை போல தான்” என்றவன் “உனக்கு புடவை தான் வேணுமா இல்லை சுடிதாரா” என்றான்.

 

“நிஜமாவா அத்தான்!! நீங்க எனக்கு எடுத்து தர்றீங்களா!! தேங்க்ஸ் அத்தான்”

 

“எனக்கு எங்கப்பா ஞாபகமே இல்லை. கூட பிறந்த அண்ணன் தம்பின்னு வீட்டில யாருமேயில்லை!! உரிமையாய் அப்பாகிட்டயோ அண்ணாகிட்டயோ கேட்க முடியலைன்னு பல நேரம் நினைச்சிருக்கேன். அதான் ஏதோ ஒரு உரிமையில உங்ககிட்ட கேட்டுட்டேன் அத்தான்”

 

“தப்பா எடுத்துக்க மாட்டீங்களே, நீங்க எடுத்து தர்றேன்னு சொன்னதே ரொம்ப சந்தோசமா இருக்கு அத்தான்” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.

 

வீரபாண்டியன் ஒரு கணம் கண்களை இறுக மூடித்திறந்தவன் “உனக்கு எப்போ என்ன வேணும்னாலும் என்கிட்ட நீ கேளும்மா!!” என்றான்.

 

“தேங்க்ஸ் அத்தான்!!” என்றாள் அவள் மீண்டும்.

 

“சரி உனக்கு என்ன வேணும்ன்னு நீ சொல்லவேயில்லையே!!”

 

“புடவை வாங்கிக்கறேன் அத்தான். காலேஜ்க்கு கட்டிட்டு போவேன். கல்சுரல்ஸ்டே வருதுன்னு சொன்னாங்க அதுக்கு புடவை தான் கட்டணுமாம்” என்றாள்.

 

“சரி வா உனக்கு பிடிச்சதை பார்ப்போம்” என்று அவளை அழைத்தவன் அவளுக்கு பிடித்தமானதை எடுத்துக்கொடுத்தான்.

 

‘பக்கி என்கிட்ட மட்டும் தான் முறைக்கிறான். இந்த முல்லைகிட்ட எவ்வளோ சாப்டா பேசுறான் பாரு’ என்று முறைத்தாள் அவள். ஒரு வழியாக எல்லா ஜவுளிகளும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

 

நெல்லை சரவணபவனில் மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பினர். அதுவரையிலும் கூட அவன் தந்தை வரவேயில்லை.

 

அவர் வரமாட்டார் என்று அவனறிவான். அவனை அனுப்ப இது ஒரு உத்தி என்று அவனுக்கு தெரியாதா என்ன!!

 

வண்டியில் ஏறியதும் உண்ட மயக்கமும் தாலாட்டு போல சீரான வேகத்துடன் சென்ற வண்டியும் அவர்களுக்கு உறக்கத்தை கொடுக்க உறங்கியிருந்தனர் மற்றவர்.

 

செவ்வந்தியோ உறங்கவில்லை லேசாய் செருமினாள். இம்முறை அவளை திரும்பி பார்த்தான். “முடியுமா!! முடியாதா!!” என்ற அவள் வாயசைப்பிற்கு அவன் எந்த பதிலும் கொடுக்கவில்லை.

 

“நீ நல்லா கருப்பசாமி மாதிரி இருக்க, எனக்கு உன்னை பிடிக்கலை. எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். ப்ளீஸ் எதாச்சும் பண்ணேன்”  என்று மீண்டும் லேசாய் முணுமுணுத்தாள்.

 

“எனக்கும் உன்னை பிடிக்கலை. நீ பார்க்க சில்வண்டு மாதிரி இருக்க. எனக்கும் கல்யாணமே வேணாம் தான். வேணுமின்னா நீயே நிறுத்திக்கோ” என்று அவனும் அவளுக்கு வாயசைத்தான்.

 

“போடா பக்கி” என்று அப்பட்டமாய் வெறுப்பைக் காட்டி முணுமுணுத்தாள். அவன் எதையும் கண்டுக்கொள்ளாமல் வண்டியை ஓட்டினான். அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

திருமண வேலைகள் தன் போக்கில் வேகமாய் நடந்து கொண்டிருந்தது. புதனன்று தாலி செய்ய பொன்னுருக்கினர்.

 

வெள்ளிக்கிழமை காலை திருமணம் என்றிருக்க வியாழன்று காலை காணாமல் போயிருந்தாள் செவ்வந்தி.

 

முல்லை அவள் அறைக்கதவை வெகு நேரமாய் தட்டி பார்த்து அவள் திறக்காததால் சன்னலின் வழியே எட்டிப்பார்த்து தமக்கை இல்லை என்பதை உறுதி செய்து வேகமாய் ஓடிச் சென்றாள் மதுராம்பாளின் அறையை நோக்கி.

 

“ஆச்சி அக்கா அக்காவை அவ ரூம்ல காணோம்” என்றாள் அழுதுக்கொண்டே.

 

முல்லையின் குரல் கேட்டு வேகமாய் அருகே வந்தார் சிவகாமி. “என்ன முல்லை சொல்ற?? அத்… அத்தை என்னத்தை இதெல்லாம்!!”

 

“இப்படி அசிங்கப்படுத்திட்டாளே!! ஏற்கனவே எல்லாரும் தப்பா பேசினாங்களே!! இது தெரிஞ்சா இன்னும் என்னெல்லாம் பேசுவாங்களோ!!” என்ற சிவகாமி ஓவென்று அழ ஆரம்பித்தார்.

 

அவரை பார்த்த முல்லைக்கும் கண்ணீர் விடாமல் பெருக மனதிற்குள் தன் தமக்கையை சபித்தாள்.

 

“சிவகாமி, முல்லை ரெண்டு பேரும் எழுந்திருங்க… எழுந்திருங்கன்னு சொன்னேன். செவ்வந்தி வருவா!! நாளைக்கு கல்யாணம் நடக்கும்”

 

“நீங்க ரெண்டு பேரும் அழுது இங்க இருக்க எல்லார்க்கும் அவ வீட்டில இல்லைன்னு காட்டிறாதீங்க”

 

“உள்ள போங்க… போய் கல்யாண வேலையை பாருங்க… சிவகாமி உனக்கு தான் முக்கியமா சொல்றேன். நாளைக்கு உன் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும்”

 

“முல்லை அம்மா அழாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு. நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இருக்குல போ” என்றார் அவர்.

 

“அம்மா அழாதீங்கம்மா, ஆச்சி சொல்ற மாதிரி தான் நடக்க போகுதும்மா. அக்கா வந்திருவா பாரும்மா”

 

இங்கு வீரபாண்டியனின் வீட்டில் அவன் அவனறையில் கீழே படுத்திருந்தான்.

 

மெதுவாய் விழிப்பு வர கண்களை திறந்து பார்த்தான். பொழுது நன்றாக விடிந்திருந்தது. ‘அச்சோ கொஞ்சம் இருட்டுல எழுந்திருக்க நினைச்சோமே’

 

‘லேட் ஆகிருச்சே!! என்ன செய்யலாம்!!’ என்று எண்ணிக்கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தான்.

 

அவன் கட்டிலில் சுகமான உறக்கத்தில் இருந்தவளை கண்டு ஒரு புறம் கோபம் எழுந்தது அவனுக்கு. அவள் திருமணத்தை நிறுத்த வீட்டைவிட்டு போவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

முதல் நாள் இரவு வெகு நேரமாய் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவன் வெளியில் லேசாய் கேட்ட சலசலப்பில் எழுந்திருந்தான்.

 

அவன் அறையின் பால்கனி வழியே பார்க்க யாரோ மதிலில் ஏறிக்கொண்டிருப்பது தெரிய லேசாய் தெரிந்த வெளிச்சத்தில் அது செவ்வந்தி என்று புரிந்தது.

 

இவ இந்நேரத்தில இங்க எதுக்கு சுவர் ஏறி குதிக்குறா!! என்னை பார்க்க தான் வர்றாளோ!! என்று ஒரு கணம் யோசனை செல்ல பின் இருக்காது என்று அவன மனம் சொன்னது.

 

மெதுவாய் சத்தம் வராமல் கீழே இறங்கிச் சென்றான். இதுக்கு முன்னாடி ஒரு முறை குத்திச்சு தான் இன்னைக்கு இந்த நிலைமையில வந்து நிக்குது.

 

கொஞ்சம் கூட பயமே இல்லாம மறுபடியும் குதிக்குறாளே!! என்று எண்ணிக்கொண்டே சத்தம் வராமல் அந்த இருளில் நடந்தான்.

 

அவர்கள் வீட்டின் மதிலில் ஏறியிருந்தவள் இப்போது மறுபக்கம் காலை மெதுவாய் கீழே விட்டு சட்டென்று குதித்தாள்.

 

அவளருகே சென்றவன் சட்டென்று அவள் கைப்பற்றி அவள் அலறும் முன்னே அவள் வாயை பொத்தினான். ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று முதலில் திமிறியவள் அவன் அவளை தள்ளிக்கொண்டு தோட்ட வீட்டிற்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.

 

“எதுக்கு என்னை இங்க இழுத்திட்டு வர்றீங்க” என்றாள்.

 

“மெதுவா பேசு, எதுக்கு இப்போ சத்தம் போடுற” என்றான்.

 

“கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

 

“நீ இப்போ எதுக்கு இங்க குதிச்ச அதை முதல்ல சொல்லு. அன்னைக்கு ஒரு நாள் நீ பண்ண வேலை போதாதா மறுபடியும் இப்படி செஞ்சி இன்னும் என்ன ஏழரையை கூட்டி வைக்க போறே” என்று முறைத்தான் வீரா.

 

“நான் எங்க போனா உங்களுக்கு என்ன?? கல்யாணத்தை நிறுத்தச் சொன்னா முடியாதுன்னு, வேணுமின்னா நீயே நிறுத்திக்கோன்னு சொன்னீங்கள்ள”

 

“ஆமாம் சொன்னேன் அதுக்கு??” என்றான் கேள்வியாய்.

 

“வீட்டை விட்டு வெளிய போறேன்” என்றாள்.

 

வீரபாண்டியன் இதை எதிர்பார்க்கவில்லை. வீட்டில் சண்டையிடுவாள் இல்லை சும்மா கத்திவிட்டு அடங்கி விடுவாள் என்று எண்ணியிருந்தான் இப்படி வீட்டைவிட்டு வெளியே செல்ல நினைப்பாள் என்று எண்ணவில்லை.

 

அதுவும் இந்த அர்த்த ஜாமத்தில் கிளம்புவாள் என்று எண்ணவில்லை.

 

“லூசா நீ??”

 

“நீ தான் லூசு” என்றாள் வெடுக்கென்று.

 

“ஆளையும் மூஞ்சியும் பாரு, அறிவுங்கறது இருக்கா இல்லையா உனக்கு. போறது தான் போறே எங்க வீட்டு சுவர் ஏறி எதுக்கு குதிக்கற” என்றான் அமைதியாய் ஆனால் கோபத்துடன்.

 

“எங்க வீட்டு வழியா எங்க இருந்து போகறது. அதான் வாசல்ல எப்பவும் ஒரு ஆளை போட்டு வைச்சிருக்கே எங்க வீட்டு கிழவி”

 

“அதான் சைடு வழியா வந்து உங்க வீட்டு மதில் ஏறி குதிச்சிட்டா இந்த தோட்டத்துக்கு பின்னாடி இருக்கற வழியா யாருக்கும் தெரியாம போய்டலாம்ன்னு வந்தேன்” என்றாள்.

 

“உங்ககிட்ட பேசிகிட்டு இருந்தா நேரமாகிடும், நான் கிளம்பறேன்” என்று நகரப் போனவளை தடுத்து நிறுத்தினான்.

 

“கையை விடுங்க” என்றாள்.

 

“உன் கையை பிடிச்சு நான் ஒண்ணும் பண்ணப்போறதில்லை. கொஞ்சம் வெயிட் பண்ணு போகலாம். இங்க லைட் எறியறது பார்த்து அங்க முன்னாடி இருக்கற எங்க வீட்டில லைட் போட்டிருக்காங்க”

 

“நான் இன்னும் தூங்கலையான்னு கேட்டு அம்மா இப்போ இங்க வருவாங்க” என்றவன் லேசாய் திறந்திருந்த சன்னலின் அருகே அவளை அழைத்துச் சென்று வெளியே காட்டினான்.

 

அங்கு அவன் அன்னை தோட்ட வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். “உங்களை யாரு இவ்வளவு நேரம் முழிச்சுட்டு இருக்கச் சொன்னது” என்று அவனை பார்த்து பொரிந்தாள்.

 

“ஹ்ம்ம் நேரம் நீ ஒரு கோட்டான் அங்க இருந்து இங்க குதிப்பேன்னு தான் காத்திட்டு இருந்தேன். ஆளைப் பாரு பேசாம உள்ள ரூம்ல போய் இரு. நான் அம்மாவை அனுப்பிட்டு வர்றேன்” என்றவன் கதவை திறந்து வெளியில் சென்று சிறிது நேரத்தில் உள்ளே வந்தான்.

 

“போயிட்டாங்களா” என்று அவன் முன் வந்து நின்றாள். “ஹ்ம்ம் போய்ட்டாங்க” என்றான்.

“சரி நான் கிளம்பறேன்” என்று மீண்டும் நகரப் போனவளை இம்முறையும் தடுத்தான் அவன்.

 

“என்ன??” என்றாள் சிடுசிடுப்பாய்.

 

“கொஞ்சம் உட்காரு உடனே கிளம்பினா சத்தம் கேட்டு எழுந்து வந்திடுவாங்க. அப்புறம் என்னால ஒண்ணும் பண்ண முடியாது” என்றான்.

 

அவன் சொல்லுவதும் சரியென்று தோன்ற அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். “கொஞ்சம் தண்ணி கிடைக்குமா” என்றாள்.

 

வீரபாண்டியன் அதற்காகவே காத்திருந்தார் போன்று உள்ளே சென்றவன் கையில் செம்புடன் வந்தான்.

 

செம்பை கையில் வாங்கியவள் “தண்ணி ஏன் இந்த கலர்ல இருக்கு” என்றாள்.

 

“ஜீரகம் போட்டு காய்ச்சின தண்ணி, உடம்புக்கு நல்லது தெரியாதா உனக்கு. டாக்டருக்கு தானே படிக்கிற இது தெரியாம இருக்குமா உனக்கு” என்றான்.

 

“எல்லாம் எங்களுக்கும் தெரியும்” என்றவள் மடமடவென்று தண்ணீரை பருகினாள். வீட்டிலிருந்து பயந்து பயந்து வெளியேறி சுவர் ஏறி குதித்தவளுக்கு தொண்டை தண்ணீர் வற்றி போயிருந்தது.

 

அதனாலேயே அவன் கொடுத்த மொத்த தண்ணீரையும் பருகி முடித்து செம்பை அவனிடம் திரும்பி நீட்டினாள்.

“தாகமா இருக்கா!! இன்னும் வேணுமா!!” என்றான்.

 

“இல்லை போதும், கிளம்பறேன்” என்று மீண்டும் ஆரம்பிக்க “உனக்கு சொன்னா புரியாதா நான் சொல்லி ஒரு பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது. அதுக்குள்ளே திரும்பவும் அதே சொல்ற”

 

“இன்னொரு பத்து நிமிஷம் ஆகட்டும் அப்புறம் கிளம்பு” என்று இப்போது அவன் சிடுசிடுத்தான்.

 

அவளுக்கு எரிச்சலாக இருந்தது இன்னும் கொஞ்ச நீம் உட்கார்ந்தால் அவளுக்கு தூக்கம் வந்துவிடும் போல தோன்றியது.

 

“முடியாது நான் கிளம்புறேன்” என்று அவள் எழ “சரி கிளம்பு நான் இங்க இருந்து உன்னோட ஆச்சியை கூப்பிடுறேன்” என்றவன் “ஆ…” என்று ஆரம்பிக்க “லூசா நீங்க”

 

“எதுக்கு அவங்களை கூப்பிடுறேன்னு சொல்றீங்க” என்றாள்.

 

“நீ இப்போ வெளிய போவே எங்கம்மா எழுந்து வந்து பார்த்திடுவாங்க. எல்லாருக்கும் தெரியறதுக்குள்ள நானே சொல்லிடுறேன் அதுக்கு தான்” என்றான்.

 

“இப்போ என்ன நான் இங்க இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கணும் அவ்வளவு தானே, இருக்கேன்” என்றவள் மீண்டும் இருக்கையில் சென்று சாய்ந்து அமர்ந்தாள்.

கண்களை இறுக்க முடி திறக்க முயற்சி செய்ய அதன்பின் அவளால் திறக்கவே முடியவில்லை விடியும் வரை.

 

வீரபாண்டியன் அவளுக்கு கொடுத்த தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்திருந்தான். அதன் பொருட்டே அவளை உறக்கம் தழுவியிருந்தது.

 

செவ்வந்தி இப்படி வீட்டை விட்டு வெளியேறுவாள் என்று அவன் நினைக்கவில்லை. இது வரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாதவனாய் தானிருந்தான்.

 

அவன் வீட்டினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவன் திருமண வேலைகளை செய்வதை பார்த்திருந்தவனுக்கு திருமணத்தை நிறுத்தும் எண்ணம் வரவில்லை.

 

அதன் பொருட்டே செவ்வந்தி கேட்டப்போது கூட நீயே நிறுத்திக்கொள் என்றிருந்தான்.

 

ஆனால் அவள் வீட்டை விட்டு வெளியேறப் போகிறாள் என்றதும் என்ன செய்து அவளை தடுத்த நிறுத்த என்று யோசித்தவன் எப்போதாவது அவன் எடுத்துக்கொள்ளும் தூக்க மாத்திரையுன் உதவியை நாடினான்.

 

விடிவதற்கு முன் எழுந்து அவளை எப்படியாவது அவள் வீட்டில் சேர்ப்பித்துவிட்டால் பின் நிம்மதி என்று எண்ணியிருந்தான். ஆனால் அவன் எழும் போதே பொழுது நன்றாய் விடிந்திருந்தது….. இனி…

 

Advertisement