Advertisement

அத்தியாயம் – 29

 

“ஹேய் என்ன சர்ப்ரைஸ்?? நீ இங்க எப்படி வந்தே??” என்று இயல்பாய் கேட்டான் வீரா.

 

அவள் முகமே சொன்னது ஏதோ பெரிதாய் கேட்க போகிறாள் என்று, தன்னையும் இலகுவாக்கி அவளையும் இலகுவாக்கவே (?) அப்படி கேட்டு வைத்தான்.

 

அவன் கேள்விக்கு அவள் முறைத்த முறைப்பில் இருந்த அனல் அத்தோட்டத்தில் உள்ள பூக்களை எல்லாம் கருக்கச் செய்துவிடும்.

 

“ஷப்பா எவ்வளவு அனல் வீசுது” என்று அவன் சொல்லியேவிட்டான்.

 

“இன்னைக்கு நீங்க எங்க போனீங்க??” என்று சூடாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

 

‘யாராக இருக்கும்??’ என்று அவன் அதிகம் யோசிக்கவில்லை. சிவகாமி தான் மகளிடம் சொல்லியிருப்பார் என்று அவனுக்கு நன்றாக தெரிந்தது.

 

“முல்லை வீட்டுக்கு” என்று அலுங்காமல் பதில் சொன்னான்.

 

“ஏன் என்கிட்ட சொல்லலை??”

 

“சொன்னா நீ என்ன பண்ணுவே??”

“என் மாமனுக்கு நல்லா கொடுத்திருப்பேன் நாலு அடி”

 

“ஹா… ஹா…” என்று வாய்விட்டு சிரித்தான் வீரா.

 

அவன் சிரிப்பு அவளுக்கு எரிச்சலை கொடுத்தது. “இப்போ எதுக்கு சிரிக்கறீங்க??”

 

“என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?? அவ கல்யாணத்துல என்ன குழப்பம்ன்னே இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியலை”

 

“யாராச்சும் ஒருத்தராவது என்கிட்ட அதைப்பத்தி சொன்னீங்களா?? நானும் பார்த்திட்டு தான் இருக்கேன் யார் தான் சொல்லுவீங்கன்னு”

 

“இந்த லட்சணத்துல என் மாமன்காரன் பஞ்சாயத்து வேறயா!! என்ன வேணுமாம் அந்தாளுக்கு. அவ்வளவு பேசுவானா அவன்”

 

“அவன் முல்லையை கூட்டிட்டு போகச் சொன்னா நீங்க அதுக்கு பதில் எங்கம்மாவை அங்க விட்டுட்டு வர்றத்துக்கு பார்ப்பீங்களா” என்று எண்ணெயில் இட்ட கடுகாய் பொரிந்தாள்.

 

அவளின் கோபம் புரிந்தவன் வீண் பேச்சை விடுத்து சட்டென்று தணிந்து போனான்.

 

“நாம வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா”

 

“ஏன் இப்போவே சொன்னா என்ன?? அதுக்குள்ள வேற என்ன காரணம் இவகிட்ட சொல்லலாம்ன்னு தேடப் போறீங்களா??” என்றாள் கோபமாய்.

 

“நிச்சயமா இல்லை வந்தி… நீ எந்தளவுக்கு விஷயம் தெரிஞ்சு வந்து என்கிட்ட பேசுறேன்னு எனக்கு தெரியலை… நானே இன்னைக்கு உன்கிட்ட பேசுறதா தான் இருந்தேன்”

 

“எதுவா இருந்தாலும் நாம வீட்டுக்கு போய் பேசுவோம்… கண்டிப்பா சொல்றேன்ம்மா… ப்ளீஸ் நீ வா” என்று அவள் கைப்பிடித்தான்.

 

அவன் கையை தட்டிவிட்டவள் அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் முன்னே நடந்தாள். அவனும் வேக எட்டுக்கள் போட்டு அவளுடன் இணைந்து கொண்டான்.

 

வீட்டிற்கு வந்த பின்னே இருவருமே பேசிக்கொள்ளவில்லை. இரவு உணவு முடிந்து அவர்கள் அறைக்கு சென்றவன் மனைவிக்காய் காத்திருந்தான்.

 

வேண்டுமென்றே நேரம் கழித்து உள்ளே வந்தாள். கோபமாகவே முகத்தை வைத்திருந்தாள் இன்னமும்.

 

“வந்தி” என்றழைத்தான், பதிலில்லை அவளிடத்தில்.

 

“வந்தி ப்ளீஸ்!! என்னைக் கொஞ்சம் பாரு!!”

 

“என்ன வைச்சிருக்கீங்க எனக்கு… சொல்லுங்க என்ன வைச்சிருக்கீங்க…”

“எல்லா விஷயமும் என்கிட்ட மறைச்சு வைச்சது தவிர என்ன வைச்சிருக்கீங்க நீங்க??” என்று உச்சஸ்தாயில் கத்தினாள்.

 

“இங்க பாரு மெதுவா பேசு. கோபப்படாம நான் சொல்றதை கேளு!!” என்றவன் முல்லை விஷயத்தை ஆதியோடந்தமாக சொல்லி முடிக்க அவள் முகம் ரத்தம் நிறம் கொண்டிருந்தது கோபத்தில்.

 

“அப்போ நீங்க அந்த கார்த்திக் மடையன் எல்லாருமா சேர்ந்து இந்த விஷயத்தை என்கிட்ட மறைச்சுட்டீங்க இல்ல!!” என்றவளுக்கு வீரா தன்னிடம் சொல்லாதது பெரும் வலியாய் இருக்க கண்களில் நீர் கோர்த்து.

 

“நீங்க என்கிட்ட சொல்லலைன்னு வருத்தப்படவா இல்லை என் தங்கச்சிக்கு நல்லது பண்ணிட்டீங்கன்னு சந்தோசப்படவான்னு கூட எனக்கு தெரியலை!!”

 

“எனக்கு கோவம் தான் வருது உங்க எல்லார் மேலயும்!! அவ என் கையில சிக்கியிருந்தா அவளை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன்” என்று தன் ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தினாள் அவள்.

 

பின் எதுவோ யோசிக்க “என்னைத்தவிர எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியும் அப்படித்தானே!!” என்று சொன்ன போது நீர் மணிகள் உருண்டு தெறித்தது.

 

அவள் கோபமாக பேசினால் கூட பரவாயில்லை, எதற்கு அழுகிறாள் என்று புரியாமல் வீராவிற்கு உள்ளம் பதைத்தது.

“இல்லை எங்க நாலு பேரு தவிர வேற யாருக்கும் தெரியாது” என்றான் நலுங்கிய குரலில்.

 

“இருக்காதே உங்களைத் தவிர இந்த விஷயம் தெரிஞ்சவங்க இன்னும் ஒருத்தர் கூட இருப்பாங்களே!! எல்லாம் தெரிஞ்சு தெரியாத மாதிரி இருப்பாங்களே அவங்க” என்றாள் அவள் கேள்வியாய் புருவம் உயர்த்தி.

 

வீரா அமைதியாய் இருக்கவும் “எங்க ஆச்சிக்கு தெரியாம இருக்கவே முடியாது” என்று ஆணித்தரமாய் சொன்னவளின் குரலில் அப்படி ஒரு ஆங்காரம் தொனித்தது.

 

“அவங்களுக்கு தெரியும்” என்று அவன் உடனே ஒத்துக்கொள்ளவும் அவளின் ஆத்திரம் கோபம் எல்லாம் பன்மடங்கானது, வலி ஏமாற்றத்தின் வலி அவள் முகத்தில்.

 

ஆத்திரம், ஆத்திரம் மட்டுமே இருந்தது அவளுக்கு. அதை அடக்கும் வழி அவளுக்கே தெரியவில்லை. ஓரிரு நிமிடம் கண் மூடி அதை அடக்க முயல அவளால் அது சுத்தமாய் முடியவில்லை.

நம்பிக்கை கொண்டவர் தம்மை நம்பாமல் போன ஏமாற்றம் அவளுக்கு. முல்லை கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை என்பதை அவளால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

செவ்வந்தியின் அமைதி வீராவிற்குள் பெரும் பிரளயத்தை கொடுத்தது. அவள் முகபாவங்களை பார்த்துக் கொண்டு தானிருந்தான் அவன். தன்னை அடக்க அவள் முயற்சி செய்வது புரிந்தது.

 

பெரிய தப்பு செய்துவிட்டோம் என்று புரிந்தது, அதை எப்படி சரி செய்வது அவளை எப்படி சமாதானம் செய்வது என்பது மட்டும் கேள்விக்குறியாய் அவனிடத்தில்.

 

தனக்கு வேண்டப்பட்டவர்களே தன்னை ஒதுக்கி தன்னிடம் எதையும் சொல்லாமல் விடுத்தது அவளுக்கு எந்தளவுக்கு ஆத்திரத்தை உண்டாகியதோ அந்த அளவிற்கு வேதனையை கொடுத்தது.

 

“வந்தி” என்று மெதுவாய் அழைத்தான் வீரா, பதிலில்லை அவளிடத்தில்.

 

பதில் கொடுக்க விருப்பமில்லை அவளுக்கு. வீராவோ அவள் எல்லாம் பேசி திட்டிவிட்டாள் தேவலாம் என்றிருந்தது.

 

அவன் முயற்சியை கைவிடாதவனாக அவளை மீண்டும் அழைத்தான் வந்தி என்று, ஆனால் இம்முறையும் அவள் அவனுக்கு பதில் கொடுக்கவில்லை.

 

வேறு வழியில்லாமல் அவளை போட்டு உலுக்கியவாறே வந்தி என்றழைக்க திரும்பி பார்த்தவளின் பார்வையில் வீரா பொசுங்காதது மட்டுமே நிஜம்.

 

“என்ன வேணும் உங்களுக்கு?? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுல?? இன்னும் என்ன வேணும் உங்களுக்கு??” என்றவளின் கண்ணில் இருந்து கண்ணீர் பொங்கி பிரவாகமெடுத்தது.

 

“ப்ளீஸ் வந்தி இவ்வளவு கோபம் வேண்டாம்மா” என்றவனுக்கு அலட்சியமாய் முகத்தை திருப்பினாள்.

 

“ஆமா உங்க ஆச்சி இதுக்கெல்லாம் எதுவும் சொல்லலையா?? என்னை மட்டும் தான் அவங்க எப்பவும் கேள்வி கேட்பாங்களா??”

 

“அவங்க செல்லப்பேத்தி முல்லையை எதுவுமே கேட்கலையா அவங்க… நான் தான் எல்லாருக்கும் இளிச்சவாய் அப்போ!!”

 

“என்னை கேள்வி கேட்கறதுன்னா குற்றம் சாட்டுறதுன்னா எல்லாருக்கும் ரொம்ப படிக்கும்!! எல்லாருமா என் தலையில மிளகாய் அறைக்கிறீங்க அப்படி தானே!!”

 

“அது அப்படியில்லை வந்தி… உரிமை இருக்கற இடத்துல தானே கோவிச்சுக்க முடியும்!!”

 

“இந்த மொக்கை லாஜிக்கே எவ்வளவு நாளைக்கு சொல்லி ஏமாத்துவீங்க!!” என்று எரிந்து விழுந்தாள்.

 

“அந்த சின்ன கழுதை எவ்வளவு பெரிய வேலை பண்ணியிருக்கா!! அதை எப்படி என்கிட்ட மறைக்கணும்ன்னு உங்களுக்கு தோணுச்சு”

“ப்ளீஸ் வந்தி புரிஞ்சுக்கோ, நான் உன்கிட்ட சொல்லைன்னா அதுல காரணம் இருக்கும்ன்னு புரிஞ்சுக்கோயேன்”

 

“அப்போ இப்போ மட்டும் ஏன்டா சொன்னே என்கிட்ட?? சொல்லாமலே இருந்திருக்க வேண்டியதுத் தானே. என்கிட்ட சொல்லாததுக்கு நொண்டி சாக்கு சொல்லாதே” என்று அவனை தீயாய் பொசுக்கினாள் பார்வையில்.

 

“உன்கிட்ட சொல்லாமலே இருக்கணும்ன்னு நான் நினைக்கலை. உடனே சொல்ல வேண்டாம்ன்னு மட்டும் தான் நினைச்சேன். அதுக்கும் காரணமிருக்கு வந்தி”

 

“கார்த்திக் இந்த விஷயத்தை உன்கிட்ட முதல்ல ஏன் சொல்லலைன்னு ஒரு காரணம் சொன்னாரு…” என்றுவிட்டு இடைவெளிவிட்டான்.

 

“என்ன சொன்னான் அவன்?? அப்படி என்னத்தை சொல்லி கிழிச்சான்??” என்றவள் சுத்தமாய் மரியாதையை விட்டிருந்தாள்.

 

கோபம் கண்ணை தான் மறைக்கும் என்பார்கள் மரியாதையும் குறைக்கும் என்பதை வீரா உணர்ந்தான் அவள் பேச்சில்.

 

“வந்தி அவர் உனக்கு சீனியர், கொஞ்சம் மரியாதையா பேசு” என்று மெதுவாகவே சொன்னான்.

 

“அப்போ நீங்க கூட தான் சூப்பர் சீனியர் உங்களை மட்டும் எப்படி கூப்பிடுறேனாம்” என்று விதண்டாவாதம் செய்தாள் அவள்.

 

‘நாம என்ன சொன்னாலும் இவ விளாசுவா இதுக்கு மேல அட்வைஸ் எதுவும் வேண்டாம்’ என்று முடிவு செய்துக்கொண்டான்.

 

“அப்படி என்னா தான் சொன்னான் அவன்??” என்று ஆரம்பித்தாள்.

 

“நீ ரெண்டு மாசம் முன்னே நீ ஆஸ்பிட்டல்ல பார்த்த ஒரு பொண்ணோட கேஸ் பத்தி சொன்னார்” என்றுவிட்டு நிறுத்தினான்.

 

“அந்த பொண்ணுக்கு அவளை பார்த்திட்டு நிச்சயம் உறுதிபண்ணிட்டு போன மாப்பிள்ளை நிச்சயத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆக்சிடென்ட்ல இறந்திட்டார்”

 

“அந்த விஷயம் கேட்டு அந்த பொண்ணு மயங்கி விழுந்து ஆஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தப்போ தான் அவ கர்ப்பம்ன்னு தெரிஞ்சுது”

 

“அதுக்கு அப்புறம் அவளை எல்லாரும் பேசி பேசி டார்ச்சர் பண்ணதுல அந்த பொண்ணு சூசைட் அட்டென்ட் பண்ணிடுச்சு ஆஸ்பிட்டல்ல வைச்சே”

 

“ஏற்கனவே உன் பிரண்டு ஒரு பொண்ணை பத்தின கேரக்டர் அசாசினேஷன் உன்னை பாதிச்சிருந்த வேளையில திரும்பவும் உன் கண்ணு முன்னாடி அந்த பொண்ணோட மரணம்”

 

“உனக்கு தாங்கிக்க முடியாம நீ ரெண்டு நாள் வேலைக்கு கூட போகலை”

 

ஆம் வீரா சொன்னது உண்மை தான், செவ்வந்திக்கு அந்த பெண்ணை நினைத்து கவலை என்பதைவிட அப்பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவை நினைத்து தான் அவள் மொத்த வருத்தமும்.

 

தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பதை கூட அவளால் ஏற்றுக் கொள்ள முடியும். எந்த தவறுமே செய்யாமல் தண்டனை என்பதை அவளால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. அவள் வயிற்றில் கருவானது தவிர அது செய்த தவறென்ன!!

 

வருடக்கணக்காய் மணி வயிற்றில் தான் ஒரு பிள்ளைக்கனியை சுமக்க மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் பிள்ளையில்லாதோரின் வயிற்றில் உதித்திருக்கலாமே!!

 

அவர்களின் குறையாவது தீர்ந்து போயிருக்குமே!! செய்த தவறுக்கு உன்னை தண்டித்துக் கொள்ள வேண்டுமானால் உனக்கு உரிமை இருக்கலாம் ஆனால் உன்னில் உதித்த காரணத்திற்காய் அந்த சிசுவிற்கு ஏன் தண்டனை!!

 

அதை நினைத்து நினைத்து அவள் மனம் ஆறவில்லை அன்றைய நாளில்!! கண் முன்னே நிகழ்ந்துவிட்ட அப்பெண்ணின் மரணம் அவளால் இந்த நிமிடம் கூட மறக்க முடியவில்லை.

 

மருத்துவ உலகில் மரணம் என்பதை பார்க்காதவள் இல்லை அவள். ஆனாலும் உலகிற்கே வாராமல் போன அந்த கருவை நினைத்தே அவளால் உறங்கவே முடியவில்லை.

 

எல்லோருக்கும் தெரிந்து இரண்டு நாட்கள் அவள் விடுப்பு எடுத்திருக்கலாம். ஆனால் பல நாட்கள் ஏன் இப்போது வரையும் கூட அந்த சிசுவின் தாக்கம் அவளுக்கு எப்போதுமே உண்டு.

 

இன்னமும் அவள் அன்றைய நாளின் நினைவில் இருக்க அடுத்து பேசிய வீராவின் பேச்சு அவளை கலைத்தது.

 

“எனக்கு புரியுது வந்தி, தப்பு ஆண் மேல இருந்தாலும் தப்புக்கு ரெண்டு பேருமே காரணமா இருந்தாலும் பாதிக்கப்பட போறது அந்த பொண்ணு தான்”

 

“அதனால தான் உன்கிட்ட சொல்லலைன்னு சொன்னார். எனக்கும் அவர் சொன்ன காரணத்தை மறுக்க தோணலை. உன்னோட நிம்மதி தான் எனக்கு எப்பவும் முக்கியம்”

 

“முல்லை விஷயம் தெரிஞ்சா நீ ரொம்ப கோபப்படுவேன்னு தெரியும், உன்னோட அவசரம்… அப்படி நீ பார்க்காத!!”

 

“உன்னோட பேச்சு செயல் சரியானதா இருந்தாலும் நீ ஒரு விஷயத்துல காட்டுற அவசரம் எனக்கு தெரியும்”

 

“நீ ஆத்திரத்திலும் அவசரத்திலும் வார்த்தையை விட்டா பாதிக்கப்பட போறது முல்லை தான்” என்றவனை அதீதமாய் முறைத்தாள் அவனை.

 

“முல்லை விஷயத்துல நான் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டேன் வந்தி”

 

“அன்னைக்கு நாம எந்த தப்புமே பண்ணலைன்னாலும் சூழ்நிலை, சுற்றி உள்ளவங்களால நீ தான் அதிகம் பாதிக்கப்பட்டன்னு எனக்கு அன்னைக்குவிட இன்னைக்கு நல்லா புரியுது வந்தி”

 

“சத்தியமா சொல்றேன் வந்தி அன்னைக்கு மட்டும் இந்த மாதிரி பேச்சுக்களை தவிர்க்க வழி தெரிஞ்சிருந்தா நிச்சயம் நான் அதை செஞ்சிருப்பேன்”

 

“எதுவும் நடக்காமலே நீ எந்தளவுக்கு கூனிக்குறுகி இருப்பேன்னு எனக்கு புரியுது. அன்னைக்கு உனக்கு செய்ய முடியாதை இன்னைக்கு முல்லைக்காக செஞ்சேன்”

 

“தப்பு நடந்திருக்குன்னு தெரிஞ்சதும் அதை மறைச்சு அந்த தப்பை சரியாக்க நினைச்சேன். அன்னைக்கு ஆஸ்பிட்டல்ல வைச்சு என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியலை”

 

“அப்போ முல்லை சொன்னது ஒரே வார்த்தை தான் அதுக்கு அப்புறம் நான் எதையுமே யோசிக்கவே இல்லை”

 

“என்ன சொன்னான்னு பார்க்கறியா!! நான் தப்பு பண்ணிட்டேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சா எங்க வீட்டு வளர்ப்பு சரியில்லைன்னு பேசுவாங்க”

 

“ஏற்கனவே எங்க அக்கா செய்யாத ஒண்ணை செஞ்சதா பேசினாங்க. அதுக்கு அவ எவ்வளவு துடிச்சிருப்பான்னு இன்னைக்கு என்னால உணர முடியுது. நான் இனி உயிரோட இருக்கறதுல அர்த்தமேயில்லைன்னு சொன்னா”

 

“அதுக்கு அப்புறம் தான் நான் பாரியை உடனே பெண் பார்க்க வரச்சொன்னேன். அவங்க கேட்டதுக்கு எல்லாம் சரின்னு சொன்னேன்”

 

“அப்படியே அவ சாகட்டும் விட்டிருக்க வேண்டியது தானே!!” என்றாள் ஆத்திரத்தில் தான் என்ன பேசுகிறோம் என்பதையும் மறந்து.

 

“செவ்வந்தி” என்ற வீராவின் கண்டிப்பான குரல் அவளை சட்டென்று அடக்கியது.

 

ஒரு கணம் மருத்துவமனையில் அப்பெண் செய்ததிற்கும் முல்லை சொன்னதிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

 

தேவையா இந்த அவமானம் யாருக்காய் இதெல்லாம் செய்தாள் என்ற குமுறல் அவளிடத்தில் அதிகமாய்.

 

“ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதேம்மா… அவ உன்னோட தங்கை அவ நல்லா இருக்கட்டும்ன்னு நினை”

 

“அவ நல்லாயிருக்கக் கூடாதுன்னு நான் நினைப்பேனா அப்போ” என்று ஆத்திரமாய் கத்தினாள்.

 

“நான் அப்படி சொல்லலை”

 

“வேற எப்படி சொன்னே??” என்று முறைத்தாள்.

 

வீராவுக்கு அயர்வாகவே இருந்தது, இன்னும் என்ன சொல்லி இவளை மலையிறக்க என்பது மட்டும் அவனுக்கு புரியவேயில்லை.

 

“ஆகமொத்தம் நல்லா கதை சொல்றீங்க நீங்க. இந்த சப்பை காரணம் தான் உங்களுக்கு கிடைச்சுதா என்கிட்ட சொல்ல!! சரி கல்யாணம் முடியற வரை தான் நீங்க என்கிட்ட சொல்லலை!!”

 

“ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகும் கூட நீங்களா என்கிட்ட சொல்லவேயில்லையே!! இப்போ நானா கேட்டபிறகு தானே சொல்றீங்க”

 

“இதுக்கும் எதுவும் உப்பு பெறாத காரணம் வைச்சிருப்பீங்க சொல்லுங்க அதையும் நான் கேட்டுக்கறேன். நான் இளிச்சவாய்ன்னு தானே எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்களே!!”

 

“நீ கேட்கலைன்னாலும் இன்னைக்கு நான் இந்த விஷயத்தை நிச்சயம் உன்கிட்ட சொல்லியிருப்பேன் வந்தி”

 

“சொல்லியிருக்க மாட்டீங்க!! ஏன்னா உங்களுக்கு நான் முக்கியமே இல்லை!!”

 

“எல்லாருக்கும் எப்பவும் நான்னா இறக்கம் தான் எங்க ஆச்சியில இருந்து நீங்க வரை அதை தான் செய்யறீங்க” என்றவளுக்கு தன்னை மீறி அழுகை வெளியில் வந்து கேவலாகியது.

 

தெரியும் அவளுக்கு அவளை சுற்றி உள்ளவர்கள் அவளின் நல்லதிற்காய் தான் எதையும் செய்திருப்பர் என்று. ஆனாலும் அதை மீறி அவளுக்கு இருந்த கோபம் அவளை அப்படி பேச வைத்தது.

 

மதுராம்பாள் முல்லையிடம் காட்டிய அக்கறையை தன் மீது காட்டியிருக்கவில்லை என்ற கோபம் சிறு வயதிலிருந்தே அவளுக்கு உண்டு. ஆனால் அது ஏன் என்று அவள் எப்போதுமே யோசித்ததில்லை.

 

இன்று வீராவும் அவளின் தங்கைக்காக தன்னிடம் ஒன்றை மறைத்திருக்கிறான் என்பது அவளின் நீறுப்பூத்திருந்த கோபத்தை பற்றி எரியச் செய்திருந்தது.

 

வீராவுக்கு அழும் அவளை எப்படி சமாதானம் செய்ய என்று தான் புரியவில்லை.

 

அவளருகே நெருங்கி அவளை அணைத்து ஆறுதல் சொல்ல முற்பட நெருங்கும் அவனை தள்ளினாள். அவள் தள்ளியதில் சற்றே பின் சாய்ந்திருந்தான் அவன்.

 

பின் அவளாகவே அவனை நெருங்கி அவன் சட்டையை கொத்தாய் பிடித்தவள் “ஏன்டா அப்படி செஞ்சே?? உனக்கு கூட நான் முக்கியமில்லையா!!” என்றவளின் கண்களில் தெரிந்த வலியை உணர்ந்தவனுக்கு நெஞ்சு உலர்ந்து தான் போனது.

 

“உங்களுக்கு இருக்கற அக்கறை என் தங்கச்சி மேல எனக்கு இருக்காதா” என்று அழுதுகொண்டே கேட்டவள் அவன் மீது சாய்ந்திருந்தாள்.

 

“எனக்கு உன்னைவிட எதுவும் முக்கியமில்லைன்னு உனக்கு எப்போ புரியும் செவ்வந்தி”

 

அவளுக்கோ அவன் மீது கோபம் வருத்தம் எல்லாம் சேர்ந்து கொள்ள “இல்லை உங்களுக்கு எப்பவும் நான் முக்கியமில்லை” என்றாள்.

 

“என்னை யாருமே ஒரு மனுசியா கூட மதிக்கலை. கூடப்பிறந்தவளுக்கு அக்கான்னு ஒருத்தி இருக்கறது மறந்து போச்சு”

 

“எப்பவும் முல்லை தான் செல்லப்பேத்தின்னு இருக்க ஆச்சி புதுசா எதுவும் என்கிட்ட பேசிடப் போறதில்லை”

“எங்கம்மா எடுப்பார் கைப்பிள்ளை யார் என்ன சொன்னாலும் அதுக்கு தலையாட்டுற ரகம். நீங்க யாருமே என்னை ஒரு ஓரமா கூட நினைச்சும் பார்க்கலை” என்றவளின் பேச்சில் அவ்வளவு வலி இருந்தது.

 

யோசித்து பார்த்தால் அவளுக்கு உண்மை விளங்கும் என்றாலும் பல நாளின் வலி மொத்தமாய் அவனைத் தான் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

 

அது அவனுக்கு மட்டுமே வலி கொடுக்காமல் அவளுக்குமே வலிக்கும் என்பதை பொருட்படுத்தவில்லை அவள். எல்லாம் பேசி முடித்துவிடும் வேகம் அவளுக்கு.

 

“நீ தான் எனக்கு முக்கியம்ன்னு நான் எப்படி நிருப்பிக்கணும்ன்னு சொல்லு வந்தி. நீ இல்லாம யாருமே எனக்கு உறவாகிடலை. முக்கியமா நீ இல்லைன்னா அவங்க யாரும் எனக்கு முக்கியமில்லை”

 

“இதை நீ எப்போ புரிஞ்சுப்ப வந்தி. எனக்கொரு உண்மை சொல்லு தாமரை உன்னை அவ்வளவு பேசியும் எதுக்கு பொறுத்துகிட்ட” என்றவனின் பேச்சில் மனைவி தன்னை புரிந்த கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தெரிந்தது.

 

இதே ஆதங்கம் தான் அவளுக்கும் என்பது அவனுக்கும் புரியவில்லை. அவன் ஆதங்கத்தை அவளும் புரிந்துக் கொள்ளவில்லை

 

“அ… அது அத்தை… மாமா…” என்று இழுத்தாள்.

“அந்த அத்தையும் மாமாவும் ரெண்டு வருசம் முன்னாடியும் இங்க தான் இருந்தாங்க. அப்பவும் தாமரை உன்னை பேசியிருந்தா நீ இப்படி தான் இருந்திருப்பியா” என்று கேட்டதும் அமைதியானாள்.

 

“எனக்கு தெரியலை வந்தி, உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு எனக்கு தெரியலை. நான் எனக்கு சரின்னு பட்டதை தான் செய்யறேன். ஆனா அதெல்லாம் உன்னை வருத்தப்படுத்து அப்படிங்கற போது எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை”

 

“முல்லை விஷயம் மட்டுமில்லை உனக்கு என் மேல எப்பவும் ஒரு வருத்தமிருக்கு அது ஏன்னு எனக்கு இப்போவரை தெரியலை”

 

“உன்னை சந்தோசப்படுத்த நான் எதுவும் எப்பவும் செய்ய நினைச்சதில்லை ஒத்துக்கறேன். ஆனா உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நான் செய்யறது எல்லாம் உன்னை கஷ்டப்படுத்துன்னு நீ பேசும் போது எனக்கு வலிக்குது”

 

“நமக்குள்ள இடைவெளி இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா நமக்குள்ள இப்போவரைக்கும் அந்த இடைவெளி தான் அதிகமா இருக்கு”

 

“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு, உன்னை மட்டும் தான் பிடிச்சிருக்கு. எனக்கு தெரியலை உனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க எனக்கு தெரியலை. உன்கிட்ட எனக்கு நடிக்க தெரியலை”

 

“முல்லை விஷயம் உன்கிட்ட சொல்லாம போனது தப்பு தான், இல்லைன்னு நான் எப்பவும் சொல்லவே மாட்டேன்”

 

“கார்த்திக் சொன்னது மட்டும் தான் என் எண்ணத்துல ஓடிச்சு. அந்த நிமிஷம் உன்னோட நிம்மதி மட்டும் தான் எனக்கு முக்கியமா பட்டுச்சு, வேற எதுவும் தோணலை”

 

“உனக்குன்னு ஒரு விஷயம் செய்யணும்ன்னா நான் வேற எதையும் யோசிக்கறதில்லை. இதை நீ நம்புவியான்னு கூட எனக்கு தெரியலை”

 

“எனக்கு எப்பவும் யாரையும் கஷ்டப்படுத்தி பழக்கமில்லை”

 

“யாரு நீங்களா?? உங்களால மாமாவும் அத்தையும் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பாங்கன்னு உங்களுக்கு தெரியுமா!! நீங்க பாட்டுக்கு எனக்கென்னன்னு கிளம்பி வடக்க போயிட்டீங்க”

 

“ஒவ்வொரு நாளும் அவங்க உங்களுக்காக எவ்வளவு துடிச்சிருப்பாங்கன்னு ஒரு நாளாச்சும் நினைச்சிருப்பீங்களா!!” என்றாள்.

 

“அது… அதைப்பத்தி பேச வேணாம்”

 

“ஏன்?? ஏன் பேசக்கூடாது?? ஏன்னா நீங்க பண்ணது தப்பு. அதனால அதை நான் பேசக்கூடாது அப்படி தானே!!” என்று குத்தினாள்.

 

“ஆமாடி பேசக்கூடாது இப்போ என்னாங்குற அதுக்கு… நான் ஏன் ஊரைவிட்டு போனேன் எதுக்கு போனேங்கறது என்னோடவே போகட்டும்” என்று இப்போது கத்துவது அவன் முறையானது.

 

திடிரென்று அவன் போட்ட சத்தத்தில் விழித்தவள் அவன் பேச்சில் வெகுண்டெழுந்தாள். “இன்னும் கூட நீங்க என்கிட்ட சில விஷயங்களை மறைக்கிறீங்க அப்படி தானே!!”

 

“சோ உங்களுக்கு இப்போ வரைக்கும் என் மேல நம்பிக்கையே இல்லை, அப்படி தானே”

 

“நான் அப்படி சொல்லலை வந்தி. ஏன் இப்படி குத்தி குத்தி என்னோட வலியை அதிகப்படுத்துற” என்றான்.

 

“நீங்க எப்போமே இப்படி தான் அடுத்தவங்களை பத்தி நினைக்கறதேயில்லை. அவங்களோட வருத்தம் பத்தியும் உங்களுக்கு எப்பவும் கவலையுமில்லை”

 

“நீங்க செய்யணும்ன்னு நினைக்கறதை செஞ்சுட்டு அதுக்கு அப்புறம் நீங்க பீல் பண்ணா அதுல என்ன அர்த்தமிருக்கு” என்று சொல்லி இகழ்ச்சியாய் பார்த்தாள் அவனை.

 

வீரா வெகுவாய் சோர்ந்து போனான் அவள் பேச்சில். மறக்க நினைத்த மறந்திருந்ததாக நினைத்திருந்த விஷயங்கள் எல்லாம் பூதாகரமாய் கண் முன் தோன்றியது.

 

மொத்தமாய் வீழ்ந்திருந்தான் அவன். பேச்சில் அவளை வெல்ல அவனால் முடியவேயில்லை. உணர்வுகள் மொத்தமும் மரத்து போயிருக்க மெதுவாய் சொன்னான்.

 

“நானா என்னை உனக்கு புரிய வைக்க போறதில்லை வந்தி. நான் உன்கிட்ட எல்லாமே சொல்லிட்டேன்”

 

“ஆனாலும் உனக்கு என்னை புரியலை. பரவாயில்லை. ஆனா ஒண்ணு சொன்னியே என்னை பெத்தவங்களுக்கு என்னால கஷ்டம்ன்னு”

 

“அந்த கஷ்டத்தை நான் தான் கொடுத்தேன் ஒத்துக்கறேன். ஆனா அவங்களுக்கு என்னையும் அதுக்கு பின்னாடி இருந்த என்னோட வலியையும் நல்லாவே தெரியும்”

 

“என்னை பெத்தவங்க என்னை புரிஞ்சவங்க தான்!! எங்கம்மாவை உன்னைவிட எனக்கு அதிகம் தெரியும். நீ சொல்லி ஒண்ணும் நான் அவங்களை தெரிஞ்சுக்க வேண்டியதில்லை”

 

“நான் சொல்லாமலே என்னை புரிஞ்சுக்கிட்டவங்க என்னோட அம்மாவும் அப்பாவும். நான் இவ்வளவு சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிற நீ”

 

“என்ன இருந்தாலும் பெத்தவங்க!! பெத்தவங்க தான்!! பொண்டாட்டி!! பொண்டாட்டி!! தான்னு நிருப்பிச்சுட்ட நீ இன்னைக்கு”

 

“இனிமே உன்கிட்ட பேசி பிரயோஜனமில்லை. உனக்கா என்னைக்கு என்னை புரியுமோ அப்போ புரியட்டும்”

 

“எனக்கு உன்கிட்ட கேட்க வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். முடிஞ்சா என்னை மன்னிச்சுடு முல்லை விஷயம் உன்கிட்ட சொல்லாம நான் செஞ்சது தப்பு தான்”

 

“கல்யாணம் முடிஞ்ச பிறகாச்சும் சொல்லியிருக்கணும். உன்னை கஷ்டப்படுத்தாம எப்படி சொல்லன்னு நினைச்சு நான் தள்ளிப்போட்டது தப்பு தான். அதுக்காக என்னை மன்னிச்சுடு!!” என்றான்.

 

பேசி முடித்தவன் அதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை என்ற ரீதியில் அவளைவிட்டு எழுந்து சென்றான்.

 

அந்த நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு ஒரு மணித்துளியும் கொல்வதாகவே இருந்தது அவர்களுக்கு.

 

வீரா தோட்டத்தின் வேலையில் தன்னை மொத்தமாய் தொலைத்துக் கொண்டிருந்தான். சமயங்களில் இரவு நேரத்தில் அவன் தோட்டத்திலேயே படுத்துக்கொண்டான்.

 

இரவு வீட்டிற்கு வந்து உணவருந்தி செல்பவன் தந்தை படுக்க சென்ற பின்னே மீண்டும் தோட்டத்திற்கு சென்றுவிடுவான்.

 

அவளுடன் இருக்கும் பொழுதுகளை தவிர்த்துக் கொண்டிருந்தான். செவ்வந்திக்கு அவன் செய்வது மேலும் மேலும் கோபத்தையே விதைத்தது.

 

அவன் பேசிய அன்று உறங்காமல் விழித்திருந்தவள் இரவு முழுவதும் அவன் பேசியவைகளை தான் அசைப் போட்டாள்.

 

எல்லாம் அவளிற்காய் என்று அவன் பலமுறை எடுத்துச் சொன்னாலும் அது அவளின் மூளைக்கு புரிந்தாலும் மனதிற்கு மட்டும் அது புரியவேயில்லை.

 

மனம் இன்னமும் அலைபாய்ந்து கொண்டு தானிருந்தது. அதை கட்டுப்படுத்தும் வழியும் அவளுக்கு தெரியவில்லை.

 

இரண்டு நாட்களாய் வீரா கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடினான். அது இன்னமும் அவள் மனதை கீறியது.

 

மனதை அடக்க வழி தெரியாதவள் மறுநாள் காலையில் சக்திவேலும் வீராவும் வெளியில் சென்றபின்னே மதுராம்பாள் வீட்டிற்கு தான் சென்றாள்.

 

அவள் ஆச்சியை ஒரு பிடி பிடிக்காமல் விட்டால் அவள் செவ்வந்தி அல்லவே. அதனாலேயே அங்கு கிளம்பிச் சென்றாள். வீட்டில் அவள் அன்னை தான் இருந்தார். எப்போதும் அவள் வீட்டிற்கு வந்தால் முதலில் வரவேற்பது மதுராம்பாளாகத் தானிருக்கும்.

 

“என்னம்மா வீடு அமைதியாயிருக்கு??” என்றாள் சிவகாமியை நோக்கி.

 

“நீ எப்போலே வந்தே??”

 

“இப்போ தான் உள்ள வர்றேன்” என்றவள் “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை”

 

“ஆமா ஏன்ம்மா ஒரு மாதிரியா இருக்கே??”

 

“மனசே சரியில்லை, அத்தை சரியா சாப்பிட்டு ஒரு மாசமாகுது”

 

“ஏன்மா என்னாச்சு?? அவங்க எங்கே??”

 

“இப்போலாம் அத்தை கீழே இறங்கி வர்றதேயில்லை. உடம்புக்கு ஒரு மாதிரியா இருக்குன்னு மேலவே இருக்காங்க” என்றார் அவர்.

 

அன்னையின் பேச்சில் துணுக்குற்றாள் அவள். மதுராம்பாள் எப்போதுமே சோர்வாய் இருந்து அவள் பார்த்ததில்லையே!! ஏனாம்!! எதற்காம்!! அப்படியிருக்கிறார் என்ற யோசனை அவளுக்கு.

 

“அதுக்காக நீ பேசாம இருந்திடுவியாம்மா!! அவங்க கூட பேச வேண்டியது தானேம்மா!! நீ கவலையா இருந்தா அவங்க இப்படி தான் பார்த்திட்டு பேசாம போவாங்களா!!”

 

“ஏம்மா இப்படியிருக்க நீ!! இப்போ ஆச்சி சாப்பிட்டாங்களா!! இல்லையா!!” என்று பொரிந்துக் கொண்டிருந்த மகளை ஆச்சரியமாய் பார்த்தார் சிவகாமி.

 

வாய்க்கு வாய்க்கு கிழவி என்று பேசுபவள், இன்று அவருக்காய் துடிக்கிறாளே!! நான் அவருக்கு ஆதரவாய் பேசினால் கூட பொறுக்காதவள் தன்னையே கடிந்து தன் மாமியாரை எதிர்த்து பேசுபவளின் பேச்சு புதிதாய் இருந்தது அவருக்கு.

 

மகளின் இந்த மாற்றம் கூட நன்றாய் தானிருந்தது அந்த அம்மாவிற்கு. அவர் எடுப்பார் கைப்பிள்ளை போன்று இருக்கலாம், ஆனால் அவரும் உணர்வும் உயிரும் உள்ள மனுஷி தானே.

 

யாரையும் எதிர்த்து பேசி பழக்கமில்லை அவருக்கு. ஏனென்றால் அவர் வளர்ந்த விதம் அப்படி.

 

கணவர் இறந்த பின்னே தவறாய் வழிக்காட்டிய தன் உறவினர்களிடம் இருந்து தன்னை மீட்டு முழு ஆதரவாய் நின்ற மதுராம்பாள் எப்போதும் அவருக்கு தெய்வமே!!

 

தனக்கு இன்னொரு தாய் அவர் என்பதை சிவகாமி என்றும் மறந்ததில்லை. அதனாலேயே அவரின் பேச்சை எப்போதும் எதிர்த்து சொன்னதில்லை அவர்.

 

மகள் தன் மாமியாரை பேசினாலும் மகளைத் தான் கடிவார். இன்று அந்த மகளே தன் மாமியாரை புரிந்து பேசுவது அவருக்குள் அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.

 

“அம்மா கேட்டுட்டே இருக்கேன், பேசாம இருக்கே??”

 

“சாப்பிட வைச்சுட்டேன்ம்மா… அத்தை மேல தான் படுத்திட்டு இருக்காங்க நீ போய் பாரு!!” என்றார் அவர்.

 

“சரிம்மா நான் பார்க்கறேன்” என்றவள் “அம்மா ஆச்சிக்கு நம்மைவிட்டா யாருமில்லை. நீ பாட்டுக்கு எனக்கென்னன்னு பேசாம இருக்காதேம்மா”

 

“நாம தான் அவங்களை நல்லா பார்த்துக்கணும்” என்று இலவச ஆலோசனை வழங்கிய மகளை கோபம் வராமல் முறைத்தார் அவர்.

 

செவ்வந்தி படியேறி மாடி அறைக்கு வந்தாள். மதுராம்பாள் கட்டிலில் சோர்வாய் படுத்திருந்தார்.

 

அவரின் அறை கீழே தான் உண்டு, ஆனால் இப்போது எதற்கு இங்கு வந்து படுத்திருக்கிறார் என்று அவளுக்கு புரியவில்லை.

 

தனியொரு மனுஷியாய் இருந்து அக்குடும்பத்தை தாங்கிய ஆணிவேர் இன்று துவண்டு போயிருப்பது கண்டு அவளுக்குமே உள்ளம் துடித்தது என்னவாக இருக்கும் என்று… இனி…

 

Advertisement