Advertisement

அத்தியாயம் – 28

 

பத்து நாட்களாய் இருந்த அலைச்சல் எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போனதாக உணர்ந்தான் வீரா.

 

மனைவியின் ஒற்றைச்சொல் செய்த மாயம் அவன் களைப்பை விரட்டி சுறுசுறுப்பாக்கி இருந்தது. அவன் பார்வை முழுதும் மனைவியையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது.

 

அது தெரிந்தும் தெரியாதது போல அவளும் சுற்றிக்கொண்டிருந்தாள். அன்று எல்லாம் முடிந்து அவர்கள் வீடு வந்து சேர நள்ளிரவாகிப் போனது.

 

சக்திவேல் முன்பே வீட்டிற்கு கிளம்பிவிட்டதால் கதவை அடைத்துக்கொண்டு அவரை படுத்துவிட சொல்லியிருந்தான் வீரா.

 

வண்டியை உள்ளே நிறுத்தி பூட்டியவன் மனைவியை அழைத்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த வழியில் பின் வீட்டிற்கு சென்றான்.

 

அவள் உடைமாற்றி கட்டிலில் வந்து படுக்கவும் அவளருகே நெருங்கியிருந்தான் வீரா.

 

‘இப்போ எதுக்கு பக்கத்துல வர்றாரு’ என்று எண்ணியவளுக்கு என்றும் இல்லா திருநாளாய் அன்று மனம் படபடவென்று அடித்துக்கொண்டது.

 

செவ்வந்தி அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக் கொள்ளவும் கணவனின் கரம் அவளை அணைத்தவாறே இடையில் பதிந்திருக்க செவ்வந்திக்கு தான் அவஸ்தையாக இருந்தது.

 

அவன் கரம் அணைத்திருந்ததே தவிர வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை. அதுவே அவளுக்கு அவன் மீதான நேசத்தை அதிகப்படுத்துவதாய் இருந்தது.

 

தன்னையுமறியாமல் அவன் கரத்தின் மீது தன் கரத்தை வைத்துக் கொண்டவளுக்கு நிம்மதியானதொரு உறக்கம் வந்திருந்தது.

 

திருமணம் முடிந்து தன்னைப்போல மேலும் பத்து நாட்கள் கடந்திருந்தது. கணவன் தன்னிடத்தில் முல்லை திருமணம் பற்றி சொல்லுவான் என்று அவளிருக்க அவள் கேட்காமல் சொல்வதில்லை என்று அவனிருந்தான்.

 

அவள் வீட்டிலேயே இருப்பது புரிய அன்று காலையில் அவளிடம் கேட்டான். “நீ என்ன வீட்டில இருக்க, அடுத்து என்ன பண்ணலாம்ன்னு உனக்கு ஐடியா” என்றான்.

 

“மேலே படிக்கணும்” என்றாள்.

 

“சரி படிக்க வேண்டியது தானே… என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல” என்றான் ஆதங்கமாய்.

 

“அதான் இப்போ சொல்லிட்டனே”

 

“சரி எங்க படிக்க போறே மதுரையா??” என்றான் கேள்வியாய்.

 

“இல்லை யூஎஸ்ல போய் படிக்க போறேன். எம்எஸ் பண்றேன்” என்று கூலாக அவன் கண்ணை பார்த்து சொன்னாள்.

 

“சரி போயிட்டு வா” என்றான் அவன் அவளையும் விட கூலாக. ஆனால் அவன் சொன்னதில் பொய்யில்லை, அவளுக்கு விருப்பம் அதுவென்றால் அனுப்பி வைக்கும் எண்ணம் தான் அவனுக்கு.

 

“ஹான்” என்று திகைத்தவள் “ஓ!! அவ்வளோ கொழுப்பாடா உனக்கு!! என்னை ஊருக்கு அனுப்பிட்டு நீ என்ன பண்ணுறதா உத்தேசம்”

 

“பெரிய தியாகி இவரு… நாங்க ஊருக்கு போறோம்ன்னு சொல்லுவோமாம்… இவரு சூர்யவம்சம் சரத்குமாரு போயிட்டு வாம்மான்னு படிக்க அனுப்பிருவாராம்”

 

“அவராச்சும் புள்ளைக்குட்டி பெத்ததுக்கு அப்புறம் அனுப்பினாரு. உனக்கென்ன நினைப்பு??” என்று முறைத்தாள் அவள்.

 

அவள் கேட்டதில் நிஜமாகவே அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவளை சீண்டுவதென முடிவு செய்து “அப்புறம் வேறென்ன பண்ணணும்??” என்றான்.

 

“போடா??” என்றவள் இப்போது முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவளருகே சென்று அவளை தன்புறம் திருப்பினான். “அப்போ நாம குழந்தை பெத்துக்கலாமா??”

 

“ஹான்” என்றவள் “நான் எப்போ அப்படி சொன்னேன்??” என்றாள்.

 

“அப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தமாம்!!”

 

“ஹா… அது…” என்றவளுக்கு மேலே பேச முடியாமல் முகம் சிவந்து போனது.

 

“ஒண்ணுமில்லை” என்று எழப்போனவளின் கரம் பற்றியிழுக்க அவன் மீது வந்து விழுந்திருந்தாள்.

 

“விடுங்க” என்று மெல்லியதாய் முணுமுணுத்தாள்.

 

“விடுறேன் ஆனா பதில் சொல்லிட்டு போ”

 

“உனக்கு சம்மதம் தானா…”

 

“என்ன பேச்சு இது??” என்று பார்த்தாள் அவனை.

 

அவளை தன் மடியில் இருத்தியிருந்தவன் அவள் கண்களை கூர்ந்து பார்த்தான். அவன் பார்வையின் வீச்சு தாங்காமல் விழி தாழ்த்தினாள்.

 

“இதுக்கு நீ எப்படியும் பதில் சொல்ல போறதில்லை விடு” என்றவன் “சரி அப்போ நீ மேல என்ன பண்ணுறதா உத்தேசம்” என்றான்.

 

“ஹ்ம்ம் அது வந்து நான் பிராக்டீஸ் பண்றேன்” என்றாள்.

 

“கார்த்திக் ஆஸ்பிட்டல்ல பண்ணுறேன். தூத்துக்குடி தானே தினமும் போயிட்டு வரலாம்ல. எனக்கு ஒரு ஸ்கூட்டி மட்டும் வாங்கி கொடுத்திடுங்க நான் போயிட்டு வர்றத்துக்கு”

 

“கார்ல போ”

 

அவள் கண்களில் மின்னல் தெறிக்க “நிஜமாவா கார்ல போகவா…”

 

“ஹ்ம்ம் ஆமா போ, நீ நல்லா ஓட்டுறேன்னு அப்பா சொன்னார். நீ அதுலவே போ”

 

“வாவ் சூப்பர்… ரொம்ப தேங்க்ஸ்” என்றவள் அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்தாள். செய்த பின்னே தான் உணர்ந்தாள் தான் என்ன செய்திருக்கிறோம் என்று.

 

‘அச்சோ என்ன நினைப்பான் என்னை பத்தி!! இன்னைக்கு வரிசையா இப்படி உளறி வைக்குறோமே!!” என்றிருந்தது அவளுக்கு.

 

மெதுவாய் அவன் மீதிருந்து எழ முயல அவனோ இன்னும் அழுத்தமாய் அவளை பற்றியிருந்தான். “அன்னைக்கு ஒண்ணு சொன்னியே அதை திரும்ப சொல்லேன்” என்றான் அவன்.

 

“என்னது??” என்று விழித்தாள் அவள்.

 

“கல்யாண வீட்டில வைச்சு சொன்னியே!!”

 

அவன் என்ன கேட்கிறான் என்று புரிய “ஏன் சொல்லணும்??” என்று பிகு செய்தாள்.

 

“ப்ளீஸ் வந்தி சொல்லு”

 

“ஹூம்ஹூம் முடியாது… எனக்கா தோணும் போது தான் சொல்வேன்” என்று போக்கு காட்டினாள் அவள்.

 

அவர்களின் ஏகாந்த வேளையை கலைக்க அவன் கைபேசி அழைப்பு விடுத்திருந்தது.

 

அவள் அவன் மடி மீதிருந்து எழ கட்டிலின் மீதிருந்த கைபேசியை எடுத்து பார்க்க அழைத்தது முல்லை.

 

எடுக்கவா?? வேண்டாமா?? என்ற யோசனையுடன் மெதுவாய் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்திருந்தான் அவன்.

 

பொத்தானை அழுத்தி அழைப்பை ஏற்றவன் போனை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றான்.

 

எதிர்முனையில் முல்லை என்ன பேசினாளோ வீராவுக்கு லேசாய் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

 

“ஹ்ம்ம் சொல்லு… ஏன் பாரி இல்லையா?? எப்போ வருவான்?? என்ன ஒரு மாசமா?? ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை?? போக முன்னாடி நீயாச்சும் எனக்கு கால் பண்ணி சொல்லியிருக்கலாம்ல??”

 

“என்னவாம் அவருக்கு?? அவ்வளவு பேசுறாரா?? யார் வந்தாலும் கவலையில்லையாமா?? வீட்டுக்கு கூட்டிட்டு போகணுமா??”

 

“அதுக்கா கல்யாணம் பண்ணி வைச்சிருக்கு… நான் நேர்ல வர்றேன்… நீ ஒண்ணும் கவலைப்பட வேணாம்” என்றுவிட்டு போனை வைத்தவனுக்குள் பெரும் எண்ணக்குமிழ்கள்.

 

முல்லையின் திருமணம் குறித்த நிகழ்வுகள் கண்முன்னே வந்து போனது.

____________________

 

வீரா தோட்டத்தில் வேலையாயிருந்தான். புதிதாய் வைத்த ரோஜா செடிக்கு பதியன் போட வேண்டிய வேலையிருந்தது அவனுக்கு.

 

அவ்வப்போது அவன் எண்ணங்கள் காலையில் மனைவியை கிண்டல் செய்ததில் வந்து நின்றது. வெள்ளைப்பனியாரத்தின் ருசியை விட மனைவியின் சிவந்த முகம் கொடுத்த ருசிகரம் அவனுக்கு பிடித்தது.

 

அப்போது அவன் கைபேசி அழைக்க கையை துடைத்துக்கொண்டு கைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

 

“ஹலோ சொல்லுங்க”

“நான் கார்த்திக் பேசறேன்” என்றது எதிர்முனை.

 

“கார்த்திக்…” என்று யோசித்தான் வீரா.

 

“சக்தியோட பிரண்டு, சாரி செவ்வந்தியோட பிரண்டு” என்று என்றான் அவன்.

 

“சாரி கார்த்திக், சட்டுன்னு எனக்கு அடையாளம் தெரியலை… சொல்லுங்க என்ன விஷயம் வந்திகிட்ட பேசணுமா??”

 

“இல்லை உங்ககிட்ட தான் பேசணும்… எப்படியோ உங்க நம்பரை அவகிட்ட வாங்கியிருக்கேன். நீங்க இப்போ தூத்துக்குடி வரை வரமுடியுமா??”

 

“முல்லை பத்தி ஒரு அவசர விஷயம் உங்ககிட்ட நேர்ல பேசியே ஆகணும்” என்றான்.

 

“என்ன முல்லையா??”

 

“ஹ்ம்ம் ஆமாம்… அவங்களும் அவங்களோட…”

 

“பாரியா??” என்றான் கேள்வியாய்.

 

“உங்களுக்கு அவரை முன்னாடியே தெரியுமா??”

 

“தெரியும்… சரி நான் உடனே கிளம்பி வர்றேன்” என்றவன் அடுத்த சில மணியில் அவன் சொன்ன இடத்தில் இருந்தான்.

 

கார்திக்கிற்கு அழைக்க அவன் உடனே வெளியில் வந்தான். “வாங்க” என்றவன் அந்த மருத்துமனைக்குள் அழைத்துச் சென்றான்.

 

அங்கே ஒரு அறையில் சென்று அமர்ந்தார்கள் அவர்கள். கார்த்திக்கே ஆரம்பித்தான், “இது என் பிரண்டு வேலை பார்க்கற ஆஸ்பிட்டல், அவங்களை பார்க்க தான் நான் வந்திருந்தேன்”

 

“இங்க முல்லையும் பாரியும் வந்திருக்காங்க” என்று சொல்லி அவன் இடைவெளி விட வீராவிற்கு குழப்ப ரேகைகள் உள்ளே ஒரு பரபரப்பு வேறு.

 

அடுத்து அவன் என்ன சொல்லுவான் என்று பார்த்திருந்தான். “அது… அது வந்து எப்படி சொல்றதுன்னு தெரியலை…” என்று அவன் இழுக்க வீராவிற்கு இதுவாக இருக்குமோ என்று தோன்றியது.

 

ஆனாலும் அவன் அதை வாய்விட்டு கேட்கவில்லை. எதுவாகினும் கார்த்திக் சொல்லட்டும் என்பதாய் பார்த்திருந்தான்.

 

“முல்லை கர்ப்பமா இருக்காங்க…” என்றதும் அப்பட்டமான அதிர்ச்சி வீராவின் முகத்தில். இருக்கலாம் என்று தோன்றிய போதும் இருக்காது சின்னப்பெண் அவள் என்று தன்னை தேற்றிக் கொண்டிருந்தான்.

 

ஆனால் அதை கார்த்திக் சொன்னதும் என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை அவனுக்கு. “அவங்க என்னோட பிரண்டு நந்தினிகிட்ட தான் செக்கப்க்கு வந்தாங்க…”

 

“எனக்கு முல்லையை தெரியும் ஆனா அவங்களுக்கு என்னை தெரியாது. முல்லையை பார்த்ததும் என்னோட பிரண்டுகிட்ட விபரம் கேட்டு தெரிஞ்சிகிட்டேன்”

 

“பார்க்கப்போனா இந்த விஷயத்தை நான் சக்… செவ்வந்திகிட்ட தான் சொல்லியிருக்கணும். ஆனா அவ இதை எப்படி எடுத்துக்குவான்னு எனக்கு தெரியலை”

 

“கொஞ்சம் கோபக்காரி அதான் அவகிட்ட சொல்றதை விட உங்ககிட்ட சொல்றது பெட்டர்ன்னு உங்களை கூப்பிட்டேன்”

 

வீரா இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. சிறு பெண், குழந்தை போல என்று அவன் எண்ணியிருக்க அவள் ஒரு குழந்தையை தாங்கியிருக்கிறாள் என்பதை கேட்டால் என்ன தோன்றும் அவனுக்கு.

 

சில நாட்களுக்கு முன் வீராவிடம் பேச வேண்டும் என்று வந்திருந்தவள் பாரியை விரும்பும் விஷயத்தை அவனிடம் சொல்லியிருந்தாள்.

 

வீராவும் படிப்பு முடிந்ததும் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான் அவளிடம். இடைப்பட்ட நாளில் பாரியை பற்றி விசாரித்தும் இருந்தான்.

 

நல்லவிதமாகவே கேள்விப்பட்டதில் முல்லை படிப்பு முடிந்ததும் பார்க்கலாம் என்றே எண்ணியிருந்தான் அவன். ஆனால் அவள் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடுவாள் என்று அவன் எண்ணவில்லை.

 

“நான் அவங்களை இப்போ அனுப்பறேன்… நீங்க பேசுங்க” என்றுவிட்டு அவன் நாசூக்காய் வெளியேறவும் பாரியும் முல்லையும் தயங்கிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.

 

முல்லைக்கு வீராவை நிமிர்ந்து பார்க்க துணிவில்லை. பாரியும் அமைதியாகவே அமர்ந்திருந்தான். வீரா இருவரையும் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.

 

முல்லையை அவன் பார்த்த பார்வையில் அவள் அடக்கிக் கொண்டிருந்த அழுகை பொங்கிய சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.

 

“அத்தான்…” என்றவளுக்கு மேலே பேசவே முடியவில்லை. கண்ணீர் மட்டுமே பெருகிக் கொண்டிருந்தது.

 

பாரி அவளை பார்த்து கண்ஜாடை காட்டியவன் தானே பேசவாரம்பித்தான். “அண்ணா” என்று அவன் ஆரம்பிக்கும் போதே வீரா முறைக்க ஆரம்பித்திருந்தான்.

 

அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் நன்றாய் அவனை அடிக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு.

 

“அவளை கோவிக்காதீங்க அண்ணா… தப்பு என் பேர்ல தான். நான் தெரியாம பண்ணிட்டேன்னு எல்லாம் சொல்லி தப்பிக்க பார்க்க மாட்டேன்”

 

“அவளுக்கு வேணா இது தெரியாம நடந்த விஷயமா இருக்கலாம். ஆனா நான் தெரிஞ்சே தான் இந்த தப்பை செஞ்சேன்” என்றவனை அடிக்க கையை ஓங்கிவிட்டான் வீரா.

 

“நீங்க அடிச்சாலும் வாங்கிக்க நான் தயாரா தான் இருக்கேன்” என்று அவன் சொல்லவும் கையை பின்னுக்கிழுத்தான் அவன்.

 

“என்னால இவளை விட்டுக்கொடுக்க முடியாது. எங்கப்பா எனக்கு வசதியான வீட்டு பொண்ணு பார்க்கணும்ன்னு ஆரம்பிச்சுட்டார்”

 

“எனக்கு ஆச்சி பத்தி தெரியும் அவங்க கொஞ்சம் கவுரவம் பார்ப்பாங்க. அப்பா எதுவும் வாயை விட்டா அவங்க சர் தான் போங்கடான்னு இருப்பாங்க”

 

“என்னால முல்லையை விட்டுக்கொடுக்க முடியாது அண்ணா. அவ வேணும்ன்னு தான் இப்படி செஞ்சேன்” என்று தீர்க்கமாய் சொன்னவனை ஒன்றும் செய்ய இயலாமல் தான் பார்த்தான் வீரா.

 

முல்லை “அத்தான்” என்று அழைக்க “நான் உன்கிட்ட பேச விரும்பலை முல்லை. ஒரு அப்பா மாதிரி நினைச்சு நீ பாரியை விரும்பறதை பத்தி சொன்னப்போ எவ்வளவு சந்தோசப்பட்டேன்தெரியுமா!!”

“இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா!! உன் அக்காவுக்கு கணவனா மட்டும் இருந்திருந்தாலோ உனக்கு அண்ணானா இருந்திருந்தாலோ ஏன் இப்படி செஞ்சேன்னு உன்னை அடிச்சிருப்பேன்”

 

“நானும் உன்னை தாமரைக்கும் மேல நினைச்சுட்டு இருந்தேன். நீ எனக்கு பொண்ணு மாதிரின்னும் நினைச்சிருக்கேன். எல்லாமே மொத்தமா கெடுத்துவிட்டுடம்மா!!”

 

“அவங்க ஆயிரம் காரணம் சொல்லலாம், உனக்கு எங்க போச்சு புத்தி!! இதை நான் உன்கிட்ட சுத்தமா எதிர் பார்க்கலை” என்றவன் அதற்குமேல் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

 

முல்லையோ அவன் சொல்லச் சொல்ல குலுங்கி குலுங்கி அழுதாள். காலையில் சந்தோஷமாய் வீரா வீட்டிற்கு பனியாரம் கொடுக்க சென்ற பெண் காணாமல் போயிருந்தாள்.

 

பாரியை பார்க்க தூத்துக்குடிக்கு வந்த பெண்ணுக்கு உடல் நிலை ஒத்துழைக்காமல் போக அவளை மருத்துவமனை கூட்டி சென்ற பின்னே தான் விபரமறிந்தனர்.

 

இதோ இப்போது வீராவின் முன் தலைகுனிந்து நிற்கின்றனர். வீராவின் பார்வை இப்போ பாரியை நோக்கித் திரும்பியது.

 

“நீ என்ன பண்ணுவியோ!! ஏது பண்ணுவியோ!! தெரியாது பாரி உங்க வீட்டில இருந்து எனக்கு போன் பண்ணணும் நாளைக்கே நீங்க பொண்ணு பார்க்க வீட்டுக்கு வரணும்”

 

“இந்த விஷயத்தை??” என்றவன் கேள்வியாய் நிறுத்தினான்.

 

“யாருக்கும் தெரியாது”

 

“தெரியாம எப்படி இருக்கும்??” என்றான் மீண்டும் கேள்வியாய்.

 

“எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வைக்க பார்க்குறேன் அண்ணா”

 

“இவளோட அக்காவுக்கு தெரிஞ்சா உண்டு இல்லைன்னு பண்ணிருவா!! அவ டாக்டர் வேற”

 

இப்போது பாரி அவனை பரிதாபமாய் பார்த்து வைத்தான். உங்களை எல்லாம் என்ன செஞ்சா தகும் என்ற ரீதியில் இருவரையுமே கொலைவெறியாய் தான் பார்த்து வைத்தான் வீரா.

 

“செவ்வந்தியை நான் பார்த்துக்கறேன்… நீ இப்போவே உங்கப்பாகிட்ட பேசு” என்றவன் அவன் முன்னேயே அவன் தந்தைக்கு பேச வைத்தான்.

 

பாரியும் அவன் தந்தையிடம் கட்டினால் அத்தை மகளைத் தான் கட்டுவேன் என்று சொல்லி வீராவிடம் உடனே பேசச் சொல்லி அவன் எண்ணையும் கொடுத்தான்.

 

சிதம்பரத்திற்கு பாரி ஒரே மகன் என்பதால் மகனின் விருப்பத்தில் அவர் குறுக்கே நிற்க விரும்பவில்லை. ஆனால் பெண் வசதியான வீட்டு பெண்ணாய் இருக்க வேண்டும் என்று மட்டும் உறுதியாய் விரும்பினார்.

 

தமக்கை வீட்டு வசதி முன்னரே அறிந்தவர் தானே. வசதியில்லாவிட்டால் தமக்கையை கட்டிக் கொடுத்திருப்பார்களா என்ன!!

 

எல்லாம் யோசித்து கணக்குபோட்டவர் அடுத்த பத்து நிமிடத்தில் வீராவிற்கு அழைத்து பேச வீராவும் மறுநாளே வீட்டிற்கு வருமாறு கூறிவிட காரியங்கள் விரைந்தேறி திருமணமும் முடிந்திருந்தது.

 

சற்று முன் போன் செய்தது முல்லையே. பாரி அவனின் அலுவலக ட்ரைனிங் விஷயமாய் ஒரு மாதம் பெங்களூருக்கு சென்றிருந்தான்.

 

சிதம்பரம் மருமகளிடம் ஏதோ குறை பேசியிருப்பார் போல!! பேசியவர் சும்மாயில்லாமல் புருஷன் தான் வீட்டில் இல்லையே நீ உன் அம்மா வீட்டிற்கு போய் இரு என்றிருப்பார் போல!!

 

உடனே கண்ணைக் கசக்கிக்கொண்டு அவள் வீராவிற்கு அழைத்திருந்தாள். வீரா அதே யோசனையுடன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்தான்.

____________________

கணவன் உள்ளே வராமல் இன்னுமா போன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிக்கொண்டு பால்கனியை எட்டிப்பார்த்தாள் செவ்வந்தி.

 

வீரா ஏதோ யோசனையுடன் பால்கனி சுவற்றில் சாய்ந்திருந்தது கண்ணில்ப்பட்டது.

 

“என்னாச்சுங்க?? கவலையா இருக்கீங்க??” என்று கேட்டவளின் குரலில் கலைந்தான் அவன்.

 

‘சொல்லிடலாமா இவகிட்ட?? சொன்னா ரொம்பவும் குதிப்பாளே?? பிரச்சனையை சரி பண்ணிட்டு சொல்லிருவோம்’ என்று எண்ணிக்கொண்டு அமைதியானான்.

 

“என்னங்க திடீர்ன்னு ஒரு மாதிரியாகிட்டீங்க?? எதுவும் பிரச்சனையா??” என்று அவனருகே வந்து அக்கறையாய் கேட்டவளிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

 

“இல்லைம்மா ஒண்ணுமில்லை…”

 

“அப்புறம் ஏன் கவலையா தெரியறீங்க??”

 

“அது கவலை இல்லை லேசா தலை வலிக்குது அதான்” என்று சமாளித்தான்.

 

“நிஜமாவே ஒண்ணுமில்லைல”

 

“ஒண்ணுமே இல்லை வந்தி…”

 

“ஹ்ம்ம் சரி…” என்றவள் “ஏங்க நான் இன்னைக்கே தூத்துக்குடி போயிட்டு வரட்டுமா?? கார்த்திக்கையும் அவங்கம்மாவையும் நேர்ல பார்த்து பேசிட்டு வந்திடட்டுமா??”

 

வீராவுக்கு அப்பாடா என்றிருந்தது, பின்னே அவளை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாதே.

 

நல்லவேளையாக அவளே கிளம்புகிறேன் என்று சொல்கிறாள் நல்லது என்று எண்ணிக்கொண்டான்.

 

“சரிமா போயிட்டு வா… கார் எடுத்திட்டு போ…”

 

“அப்போ நீங்க வெளிய போறதுன்னா??”

 

“நான் பார்த்துக்கறேன், வேணும்னா பைக்ல போய்க்குவேன்”

 

“அப்போ ஓகே”

 

செவ்வந்தி தூத்துக்குடிக்கு கிளம்பிச் சென்ற பின்னே வீரா மதுராம்பாளின் வீட்டிற்கு வந்தான்.

 

ஆச்சியிடம் ஏதோ பேசியவன் சிவகாமியை தன்னுடன் அழைத்துக்கொண்டு கிளம்பினான் முல்லை வீட்டிற்கு.

 

“உள்ளே வரலாமா??” என்று கேட்டு உள்ளே நுழைந்தவனை அலட்சியமாய் தான் பார்த்தார் சிதம்பரம்.

 

உடன் தமக்கை வந்த போதிலும் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அடுத்த நொடியில் மீண்டும் அலட்சியத்தை காட்டினார் முகத்தில், நீயென்ன பெரிய ஆளா!! என்ற திமிர் தெரிந்தது அதில்.

 

அவருக்கு வீராவை சரியாக தெரியவில்லை. சிதம்பரம் கேட்டதும் பயந்து கொண்டு அவன் எல்லாம் செய்தான் என்று நினைத்திருந்தார்.

 

வீரா பொறுமை காத்தது முல்லைக்காக என்பதை அவர் அறியவில்லை அப்போது.

 

“வடிவு” என்று மனைவியை அழைத்தார். சிதம்பரத்தின் மனைவி வந்து தான் அவர்களை வரவேற்று அமர வைத்தார்.

 

“என்னப்பா உபசரிப்பு ரொம்ப பலமா இருக்கே??” என்று நக்கல் குரலில் கேட்டான் வீரா.

 

“வேற எப்படி உபசரிக்கணும் நடக்கும் போது பூப்போட்டு உபசாரம் செய்யணுமோ??” என்றார் அவர் அதைவிட நக்கல் குரலில்.

 

“முல்லை எங்கேம்மா??”

 

“கூப்பிடு உன் மருமவளை வீட்டுக்கு கூப்பிட்டு போக தான் வந்திருக்காங்க” என்றார் அவர்.

 

“வீட்டுக்கு கூட்டிட்டு போகணுமா?? எதுக்கு??”

 

“என் புள்ளை ஊருக்கு போயிருக்கான் அவன் வந்ததும் வரட்டும். அவனே இல்லை அப்புறம் இவ எதுக்கு இங்க இருக்கணும்”

 

“என்ன சொன்னீங்க எனக்கு புரியலை??” என்று அவன் சொல்ல அவர் மீண்டும் முதலில் சொன்னதையே சொன்னார்.

 

அதற்குள் முல்லை அழுது வடிந்த முகத்துடன் வர சிவகாமிக்கு ஒரு மாதிரியாகிப் போனது. உடன்பிறந்தவனின் பேச்சு தோணி சரியில்லாமல் போனதில் இருந்தே அவர் முகம் வாடிப் போனது.

 

கடைசியாய் அவர் சொன்னதை கேட்டதும் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது அவருக்கு.

 

“என்னடா பேசுற நீ??” என்று வாயை திறந்தார் அவர்.

 

“என்னக்கா பேசிட்டேன்… தப்பா ஒண்ணும் பேசலையே, நடப்பு என்னவோ அதை தானே சொன்னேன்”

 

“உங்க வீட்டுக்கு நாங்க வந்தப்போ இந்த மரியாதையை கூட நீங்க எங்களுக்கு கொடுக்கலையே!! உன் மாமியார் என்னவோ வாசல்ல வைச்சே விரட்டி விட்டாங்களே!!”

 

“அப்போ எல்லாம் நீ பேசாம தானே இருந்தே!! இப்போ வந்து கேள்வி கேட்குற”

 

“அப்போ நீ என்ன பண்ணி வைச்சேன்னு மறந்துட்டியா!!”

 

“என்ன பெரிசா பண்ணிட்டேன்!! இல்லை கேக்குறேன் என்ன பெரிசா பண்ணிட்டேன் நானு. அத்தான் கொடுத்த பணத்தை எனக்கு தேவைக்கு உபயோகப்படுத்திக்கிட்டேன் அது ஒரு குத்தமா”

 

“அதுக்கு போய் மொத்தமா எங்க உறவே வேணாம்ன்னு இல்லை தள்ளிவைச்சுட்டீங்க நீங்க!!”

 

“அதுக்கு பழிவாங்க தான் இப்படி செய்யறியா!!”

 

“நான் ஒண்ணும் பழிவாங்க நினைக்கலை. அப்படி நினைச்சிருந்தா உம் பொண்ணு இந்த வீட்டுக்கு மருமக ஆகியிருக்க முடியாது”

 

“அப்போ வேற என்ன பண்ணணும் உனக்கு”

 

“இவ பேருல இருக்க இடத்தை வித்திட்டு தூத்துக்குடி டவுன்ல வீடு வாங்கணும்”

 

“சரி அதுக்கும் நீ இப்போ சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்”

 

“அத்தை அதை நான் சொல்றேன்” என்று வீரா கூற சிவகாமி அவனை திரும்பி பார்த்தார்.

 

“முல்லை பேர்ல இடம் மட்டும் தான் இருக்கு, அதோட பவர் எல்லாம் என் பேர்ல இருக்கு. அதான் ரொம்ப சூடா இருக்கார் அத்தை இவரு” என்று வீரா சொல்லவும் சிதம்பரம் அவனை முறைத்தார்.

 

“ஏன் அவ்வளவு நம்பிக்கை எங்க மேல இல்லாதவங்க எதுக்கு இடத்தை எழுதி வைக்கணும். இந்த நடிப்பு எதுக்கு?? என் புள்ளை பேருல இடம் இருந்தா என்னவாம்??”

 

சிவகாமிக்கும் சிதம்பரத்தின் கேள்வி சரி எனவே பட்டது. “எதுக்கு எல்லா சொத்தையும் நீங்க வித்து அழிக்கவா??”

 

“ஏற்கனவே நீங்க என்ன செஞ்சீங்கன்னு எனக்கு தெரியும்… வல்லநாட்டு மாலையில கல் எடுக்கறேன் புதையல் எடுக்கறேன்னு நீங்க அழிச்ச சொத்தோட கணக்கு சொல்லவா” என்றதும் சிதம்பரத்தின் முகம் இருண்டது.

 

“சரி அந்த கதையை விடுங்க. இப்போ என்ன சொல்றீங்க எதுக்கு முல்லையை நாங்க எங்க வீட்டுக்கு கூட்டி போகணும் அதை சொல்லுங்க முதல்ல” என்று மீண்டும் ஆரம்பித்தான்.

 

“திரும்ப திரும்ப சொல்லணுமா அதை!! பாரி வர்ற அன்னைக்கு இவ இங்க வந்தா போதும்” என்று சத்தமாய் சொன்னவர் “அவன் இனிமே இங்க வரவே மாட்டான்” என்றார் முணுமுணுப்பாய்.

 

“அப்போ புருஷன் இல்லைன்னா அம்மா வீட்டில இருக்கணும் அதானே!!” என்றான் உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு.

 

“ஆமா அதை தானே அப்போல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்”

 

“சரி நீ கிளம்பு முல்லை போகலாம்” என்றவன் சிவகாமியிடம் திரும்பி “அப்போ அத்தை நீங்க உங்க தம்பி வீட்டில இருந்துகோங்க” என்றதும் அங்கிருந்த அனைவருமே திகைத்தனர்.

 

கிளம்பும் போதே வீரா சிவகாமியிடம் சொல்லியிருந்தான் தான் அங்கு எது பேசினாலும் மறுத்து பேசாமல் அமைதியாய் இருக்குமாறு.

 

சிவகாமியும் அவன் பேச்சிற்கு காரணம் இருக்கும் என்று அமைதியாய் இருந்தார் ஆனாலும் என்ன இப்படி சொல்லிவிட்டாரே என்றும் இருந்தது அவருக்கு.

 

சிதம்பரம் அவனை முறைப்பாய் பார்த்தார். “என்னப்பா அப்படி பார்க்கறீங்க. எங்க மாமா இறந்து பதினைஞ்சு வருஷமிருக்கும்”

 

“நீங்க சொன்ன மாதிரி பார்த்தா புருஷன் இல்லைன்னா அவங்க அம்மா வீட்டுக்கு தானே போகணும். அப்போவே விடாம போனது தப்பு தான்”

 

“அத்தை இப்போ இங்க இருக்கட்டும், நீங்க அவங்களை பார்த்துக்கோங்க. முல்லையை நான் கூட்டிட்டு போறேன்” என்று அவன் போட்ட போடில் சிதம்பரம் ஆடித்தான் போனார்.

 

வடிவிற்கு லேசாய் சிரிப்பு எட்டிப்பார்த்தது.

‘இது நம்ம லிஸ்ட்ல இல்லையே!!’ என்பது போல் தான் பார்த்திருந்தார் அவர். வீரா பேசியதை கேட்டு அவருக்கு நகைப்பே தோன்றியது. உள்ளுக்குள் இவருக்கு நன்றாக வேண்டும் என்றும் எண்ணத் தவறவில்லை.

 

கணவரின் செயலை ஆதரிக்கும் மனைவி அல்ல அவர். ஆனால் அவரை எதிர்த்தும் அவர் கேள்விகேட்டதில்லை.

 

மகனுக்கு மட்டுமே சற்று அடங்குவார் சிதம்பரம். முல்லை விஷயத்தில் அவன் தந்தையிடம் இறங்கி பேசியிருக்கக் அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் அவர்.

 

அவன் ஊரில் இல்லாத சமயத்தில் தான் தன் விளையாட்டை காட்ட முடியும் என்று தான் விளையாடிப் பார்த்தார்.

 

நிச்சயம் நடந்த அன்று வீரா அவ்வளவு பணிவாய் பேசியிருந்ததால் அவனை வெகு லேசாய் கணக்கிட்டுவிட்டார் அவர்.

 

அவர் இரண்டு நாட்களாய் தான் அவளை முணுமுணுவென்று பேசிக் கொண்டிருக்கிறார். முல்லையும் இங்கு நடக்கும் பிரச்சனை பற்றி மகனுக்கு தெரிவித்தது போல் தோன்றவில்லை அவருக்கு.

 

வேலை விஷயமாக ஊருக்கு சென்றிருப்பவனை தொந்திரவு செய்ய மாட்டாள் என்று புரிந்தது. அவள் தன் வீட்டாரிடம் பேசவேண்டும் என்று தான் அவள் வீட்டிற்கு போகச்சொல்லி அவர் சொல்லியிருந்தார், ஆனால் அதற்கு வீரா இப்படி ஒரு மறுமொழி சொல்லுவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

“என்னடா நினைச்சு பேசிட்டு இருக்க நீ??” என்று சத்தம் போட்டார் சிதம்பரம்

 

“என்ன எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டினான் எவ்வளவு கேட்டாலும் தருவான்னு நினைச்சிட்டீங்களா நீங்க!!”

 

“பார்க்க அமைதியா இருக்கேன்னு இடக்குமடக்கு பண்ணிப் பார்க்கலாம்ன்னு நினைக்கறீங்களா!! அதுக்கெல்லாம் அசரமாட்டேன் நான்”

 

“எங்க பொண்ணுக்காக தான் அப்போ பேசாம இருந்தேன். அவளையே நீங்க வேணாம்ன்னு சொல்றீங்க இதுக்கு மேல நான் ஏன் பேசாம இருக்கணும்”

 

“இனி உங்க பிள்ளை எங்க வீட்டுக்கு வராம முல்லை இங்க வரமாட்டா!! முதல்ல உங்க மேல போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கறேன் நானு”

 

“என்ன??” என்று முழித்தார் அவர்.

 

“செஞ்சுடுவியா நீ?? செஞ்சு பாரு??” என்று வீராவேசமாக கத்தினார்.

 

“செய்யக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். நீங்க அத்தைக்கு தம்பிங்கறதுனாலையும் முல்லைக்கு மாமனாரா போய்ட்டீங்க அப்படிங்கறதாலையும் தான் பேசாம இருக்கேன்”

 

“எப்போமே எல்லாம் இவ்வளவு பொறுமையா இருக்க மாட்டேன்” என்று அழுத்தமாகவே கூறினான் அவன்.

 

“நீ வாம்மா” என்று முல்லையை அவன் அழைக்க சிவகாமிக்கு அங்கு இருப்பதா செல்வதா என்ற குழப்பம். மருமகனையும் தம்பியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

 

“தம்பி கொஞ்சம் நில்லுலே” என்ற குரல் தடுக்க திரும்பினான் வீரா. அழைத்தது சிதம்பரத்தின் மனைவி வடிவு.

 

அவர் அதிகம் பேசி பார்த்ததில்லை அவன். அதனாலேயே அந்த குரலுக்கு நின்றிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை அவன்.

 

“முல்லை இங்கவே இருக்கட்டும்லே, நான் பார்த்துக்கறேன். என்னை நம்பி நீ விட்டுட்டு போய்யா”

 

“நீ போலீஸ்க்கு போவேன்னு சொன்னதுனால நான் இதைச் சொல்லலை” என்றவர் தாழ்ந்த குரலில் அவனுக்கு மட்டுமே கேட்குமாறு “முல்லையை இந்த நிலைமையில அங்க கூட்டி போகவேணாம்” என்று சொல்ல அதிர்ச்சியாய் அவரை பார்த்தவனின் பார்வை இப்போது முல்லையை தொட்டு நின்றது.

“ஹ்ம்ம் நானும் அதெல்லாம் கடந்து தான் வந்திருக்கேன். நான் பார்த்துக்கறேன், பாரி வர்றதுக்கு ஒரு மாசம் எல்லாம் ஆகாது. நாளைக்கே வந்திடுவான்”

 

மீண்டும் அவன் பார்வையை முல்லையை நோக்க “முல்லைக்கும் தெரியாது அவன் நாளைக்கு வந்திடுவாங்கறது. நான் நேத்தே பாரிக்கிட்ட சொல்லிட்டேன் அவங்கப்பா பண்ணுறது எல்லாம்”

 

“நாளைக்கு அவனை நேர்ல வந்து உன்னை பார்க்கச் சொல்றேன். நீ இப்போ கொடுத்த ஏச்சு அவர்க்கு போதும் நினைக்கிறேன், கொஞ்சம் அடங்கியிருப்பார்”

 

“மிச்சம் மீதி இருக்கறதை பாரி வந்ததும் மொத்தமா அவன் அடக்கிடுவான்” என்று அவர் கூற வீராவிற்கு என்ன முடிவெடுக்க என்று புரியவில்லை.

 

அரைமனதாய் அவர் பேச்சுக்கு தலையசைத்து முல்லைக்கு அறிவுரை சொல்லி தைரியம் கொடுத்து சிவகாமியை அங்கிருந்து அழைத்துச் சென்றிருந்தான்.

 

………….தோட்டத்தில் புதிதாய் கொண்டு வந்து வைத்திருந்த செவ்வந்தியை ஒரு புறம் வரிசையாக வைத்தவன் இடையில் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் வரிசையாக வைத்துக்கொண்டே வந்தான்.

 

முல்லை வீட்டிற்கு சென்று மதியமே வந்திருந்தவன் நேரே தோட்டத்திற்கு சென்றுவிட்டான். அன்று மதிய உணவுவேளைக்கு கூட அவன் வீட்டிற்கு செல்லவில்லை.

அவனுக்கு முல்லை விஷயத்தை செவ்வந்தியிடம் பேசிவிட வேண்டும் என்றிருந்தது. ஆனால் அதற்கு முன் அதை அவளிடம் எப்படி பேச என்று ஒத்திகை பார்க்க வேண்டியிருந்தது.

 

அதனாலேயே வீட்டிற்கு செல்வதை தவிர்த்து தோட்டத்திற்கு வந்திருந்தான்.

 

கை காலில் ஒட்டியிருந்த மண்ணை எல்லாம் கழுவி அவன் நிமிரவும் எதிரில் உக்கிரமாய் அவன் ஊரின் பத்திரகாளி அவதாரமாய் அவனின் இல்லத்தரசி இதய தேவதை செவ்வந்தி ஆங்காரமாய் நின்றிருந்தாள்…

 

Advertisement