Advertisement

அத்தியாயம் – 27

 

செவ்வந்திக்கு இன்னமும் நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. முல்லையின் கழுத்தில் தாலி ஏறியதை கண்ணிமைக்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

எதற்கு இந்த அவசரம்?? ஏனிந்த பரபரப்பு?? என்று அவளுக்கு சுத்தமாய் விளங்கவேயில்லை.

 

பெண் பார்க்க வந்த நடந்த நிகழ்வுகள் அவள் கண்முன் வந்து போனது.

 

முல்லையை பெண் பார்க்க வந்தது வேறு யாருமல்ல சிவகாமியின் தம்பி சிதம்பரம் தான் தன் மகனுக்காய் பார்க்க வந்திருந்தார்.

 

உள்ளே வந்தவர்களை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு செவ்வந்திக்கு. ஆனால் சட்டென்று அவர்களை அவளால் இனம் கண்டுக்கொள்ள முடியவில்லை.

 

என்றும் இல்லா திருநாளாய் அவள் அன்னை வெளியில் வந்து எல்லோரையும் வரவேற்க ‘இதென்ன புதிதாய்’ என்று தான் பார்த்திருந்தாள் அவள்.

 

பொதுவாய் சிவகாமியும் சரி மதுராம்பாளும் சரி இது போன்ற விசயத்திற்கு முன்னே சென்று நிற்க மாட்டார்கள்.

 

அவர்கள் இன்னமும் பழமை விரும்பிகளே!! அதே கிராமத்து பெண்மணிகளே!! அதனாலேயே அவர்கள் வருவதில்லை. ஏன் செவ்வந்தியை பார்க்க வந்த போது கூட முதலில் வரமறுத்தவர்கள் தானே அவர்கள்.

 

‘அம்மாவுக்கு தெரிந்த இடமா!! அம்மாவின் முகமெல்லாம் பல்லாய் இருக்கிறேதே!!’ என்று தான் பார்த்தாள் அவள்.

 

வீராவும் வந்தவர்களை கைக்கூப்பி வரவேற்றான். செவ்வந்தியின் தோளை அவன் இடிக்க அவளும் பொதுவாய் எல்லோரையும் பார்த்து புன்னகைத்து வைத்தாள்.

 

மதுராம்பாள் வெளியில் வந்திருக்கவில்லை. எல்லாமே புதிராக இருந்தது செவ்வந்தி. ‘என்னடா நடக்குது இங்க??’ என்பது போல தான் பார்த்திருந்தாள்.

 

செவ்வந்தியின் பார்வை இதில் யார் மாப்பிள்ளை என்ற ரீதியில் அங்கிருந்தவர்களை கண்களால் அலசினாள்.

 

வந்திருந்தவர்களில் சிகப்பாய் அழகாய் இளைஞன் ஒருவன் இருந்தான். தன்னைவிடவும் அவன் நிச்சயம் பெரியவனாய் தான் இருப்பான் என்று தோன்றியது அவளுக்கு.

 

இருபத்தைந்து அல்லது இருபத்தியாறு வயதிருக்கும் அவனுக்கு. ஆள் பார்க்க திடகாத்திரமாய் தானிருந்தான். தங்கைக்கு பொருத்தமாய் தான் இருப்பான் என்று மனதிற்கு தோன்றியது.

‘இவரே ஓகே தான்!! ஆனா கல்யாணம் மட்டும் இவ படிப்பை முடிச்ச பிறகு வைச்சுக்கலாம்ன்னு சொல்லிடணும்’ என்று எண்ணிக்கொண்டாள்.

 

வீரா அவளை அழைக்கும் குரல் கேட்டது. “செவ்வந்தி முல்லையை கூட்டிட்டு வா!!” என்று பணித்தான்.

 

திரும்பி அவனை ஒரு முறைத்துவிட்டு உள்ளே சென்றாளவள். செவ்வந்தி வந்து தான் முல்லையை தயார் படுத்த வேண்டும் என்று அன்னை சொல்லியிருந்தார்.

 

ஆனால் காலையில் இவள் வரும் முன்பே அவள் தயாராகித் தான் நின்றிருந்தாள். வீட்டிற்கு வந்ததுமே வந்ததுமே தங்கையிடம் கேட்டுவிட்டாள் “எதுக்கு முல்லை நீ இதுக்கு ஒத்துக்கிட்ட??” என்று.

 

“அக்கா பெரியவங்க பார்த்து எது செஞ்சாலும் எனக்கு ஓகே தான்…” என்றிருந்தாள் அவள்.

 

“பெரியவங்க எல்லாருமா சேர்ந்து கிணத்துல குதின்னு சொன்னா குதிச்சிருவியா நீ??” என்று இடக்குமடக்காய் கேட்டாள் அவள்.

 

“குதிச்சிருவேன்” என்றாள் அவள் செவ்வந்திக்கு சளைக்காத தங்கையாய்.

 

“உனக்கென்னடி இப்போ கல்யாணத்துக்கு அவசரம்”

 

“அ… அது… அதைப்பத்தி என்… என்னை கேக்காதக்கா… எதுவா இருந்தாலும் அத்தான்கிட்ட கேட்டுக்கோ” என்று சொல்லிவிட “அந்த மனுஷன் பதில் சொன்னா தானே” என்று முணுமுணுத்தாள் தமக்கை.

 

“ஏன் முல்லை நீ லவ் எதுவும் பண்ணுறியா?? இல்லை அந்த பையன் வீட்டுல விஷயம் தெரிஞ்சு போய் கலாட்டா ஆகி அப்படி எதுவுமாடி”

 

“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடி?? நான் பார்த்துக்கறேன், உங்க அத்தான்கிட்ட வேணாலும் நான் பேசுறேன்” என்றாள் அவள்.

 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்க்கா…”

 

“என்னமோ எனக்கு எதுவோ சரியாப்படலை… எல்லாரும் சேர்ந்து என்கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி தோணுது”

 

“கத்திரிக்காய் முத்தினா கடைவீதிக்கு வந்து தானே ஆகணும், பார்க்கறேன்…” என்றுவிட்டு அப்போதைக்கு போயிருந்தாள்.

 

இப்போது வீரா முல்லையை அழைத்துவர சொல்லியிருக்க தங்கையின் அறையை நாடிச் சென்றாள் அவள். “போகலாம் முல்லை” என்றாள் தங்கையிடம்.

 

“எல்லாரும் வந்திட்டாங்களாக்கா??” என்றாள் அவள் ஒருவித பதட்டத்துடன்.

“ஹ்ம்ம் வந்தாச்சு” என்றாள் செவ்வந்தி சுரத்தேயில்லாமல்.

 

“நீ அவங்களை பார்த்தியாக்கா??”

 

“பார்த்தேன்”

 

“மாப்பிள்ளை வந்திருக்காரா??”

 

“ஓ!! அவ்வளவு அவசரமா உனக்கு” என்று தங்கையை முறைத்தாள்.

 

“இல்லக்கா அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா!!”

 

“யாருக்கு தெரியும்?? என்கிட்ட யாரு சொன்னாங்க??” என்றவளின் பேச்சில் அவ்வளவு காரமிருந்தது.

 

“அக்கா அவங்க நம்ம மாமா தான்க்கா…” என்று தங்கை சொன்னதை கேட்டு திரும்பி அவளை பார்த்தாள் செவ்வந்தி.

 

“என்ன மாமாவா?? எந்த மாமா??”

 

“நம்மோட சொந்த தாய்மாமா தான்” என்று பதில் கொடுத்தாள் முல்லை.

 

செவ்வந்தி தங்கையை மீண்டும் கேள்வி கேட்கும் முன் வீரா தன் மனைவியை அழைத்தான்.

 

“வா போகலாம்” என்றுவிட்டு தங்கையை அழைத்துச் சென்று கீழே விரித்திருந்த விரிப்பில் அவளை அமர வைத்து தானும் அவளருகே அமர்ந்தாள்.

 

மெதுவாய் கணவனருகே நெருங்கி அமர்ந்தவள் “இவங்க என்னோட தாய் மாமாவா??” என்றாள்.

 

“ஆமா”

 

“இவங்களை எப்படி உங்களுக்கு தெரியும்?? எனக்கே இவங்களை தெரியாதே??”

 

“எப்படியோ தெரியும்… என்னைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு அவங்களா தான் வந்து பெண் கேட்டாங்க. அத்தைக்கிட்ட கேட்டேன் அவங்களுக்கு ரொம்ப சந்தோசம்”

 

“எந்த அம்மாவுக்கு தன்னோட பொண்ணை தான் பொறந்த வீட்டுல கட்டிக்கொடுக்கறது சந்தோசமா இருக்காது  சொல்லு” என்றான் மெல்லிய குரலில்.

 

“இவ்வளவு நாளா இல்லாத உறவு இப்போ என்ன?? நாங்க பெரிய மனுஷி ஆனப்போ கூட சீர்செனத்தின்னு வந்து செய்யாதவங்களுக்கு இப்போ என்ன திடீர் அக்கறை” என்று அடுத்த கேள்வி கேட்டாள்.

 

‘கடவுளே இவளுக்கு நீ ஏன் இவ்வளவு வாயை கொடுத்தே!! பேசாம தைச்சு விட்டிருக்கலாம்ல!! கேள்வி கேட்டே சாகடிக்குறா!!’ என்று மனதார புலம்பினான் வீரா.

“நம்ம கதையை அப்புறம் பேசுவோமா”

 

“முடியாது இப்போவே சொல்லுங்க” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் பேசினார்.

 

“ஏம்மா செவ்வந்தி உனக்கு மாமாவை ஞாபகமிருக்கா??” என்று.

 

‘அச்சோ இவரு வேற நேரம் காலம் பார்க்காம ஏழரையை இழுத்துவிடுறாரே!!’ என்று யோசித்த வீரா ‘ச்சே நம்ம பொண்டாட்டியை நாமே ஏழரைன்னு சொல்லுறதா தப்பாச்சே’ என்று தலையை சிலுப்பிக் கொண்டான்.

 

செவ்வந்தியோ “தெரியலைங்க நீங்க இங்க அடிக்கடி வந்து போயிருந்தா ஞாபகமிருக்கும்” என்று பதில் கொடுத்தாள் அவள்.

 

அவரோ அவளென்னவோ பெரிய ஜோக்கை சொன்னது போல் ஹா ஹாவென்று சிரித்தவர் “அதான் இனிமே நாம அடிக்கடி பார்க்க போறோம்ல”

 

“என்ன இருந்தாலும் மூத்த பிள்ளைக்கு தான் நாங்க கேட்டிருக்கணும். ஆனா உனக்கு தான் கல்யாணம் ஆகிட்டே என்ன செய்ய அதான் சின்னவளை கேக்கோம்”

 

“உங்க அத்தானுக்கும் வயசாகுதுல, சொந்தத்துல பொண்ணு இருக்கும் போது எதுக்கு போய்க்கிட்டு அசல்ல பார்க்க” என்று இளித்தார் அவர்.

வீராவுக்கு அவர் பேச்சு சற்றே எரிச்சலை கொடுத்தது, பின்னே செவ்வந்தியை கேட்டிருப்பேன் என்று சொன்னால் அவனுக்கு எரிச்சல் வராதா!!

 

“அதெல்லாம் இப்போ எதுக்குப்பா… வந்த விஷயத்தை பார்ப்போமே!!” என்றான் அவன்.

 

“மவன் சொல்லுறதும் சரி தான்… என்ன வடிவு பேசாம இருக்க போய் தட்டுல இருக்க பூவை எடுத்து மருமவளுக்கு வைச்சு விடு” என்று அவர் கூற அவர் மனைவி வடிவு முல்லைக்கு பூ வைத்துவிட்டார்.

 

செவ்வந்திக்கு தான் நிலைமை கைமீறி சென்றுக் கொண்டிருப்பது புரிந்தது. கணவனை கண்டிக்கும் பார்வை பார்க்க அவனோ முல்லையை பார் என்று சைகை காட்டினான்.

 

செவ்வந்தி திரும்பி முல்லையை பார்க்க அவள் முகத்தில் அப்படி ஒரு திருப்தி தெரிந்தது. அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.

 

“தட்டு மாத்திகிடுவோம்… நாங்க மூணு தேதி பார்த்திருக்கோம். அடுத்த பத்து நாள்ல ஒண்ணு, அடுத்து வர்றது ஒரு மாசம் கழிச்சு அதைவிட்டா மூணு மாசம் கழிச்சு தான் நல்ல நாள் வருது” என்றார் அவர்.

 

“அடுத்த பத்து நாள்ல வர்ற முகூர்த்தத்திலே முடிச்சிறலாம்ப்பா” என்ற வீராவை கண்ணகியாய் மாறி எரித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.

 

வீட்டளவில் சின்னதாய் பரிசம் போட்டார்கள். அவர்கள் எடுத்து வந்திருந்த புடவையை கொடுக்க முல்லை அதை அணிந்து வந்து அனைவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

 

வந்தவர்கள் வீட்டில் கை நனைக்க மளமளவென்று காரியங்கள் நடக்க இதோ அவளின் தாய்மாமன் மகன் பாரிவேந்தன் முல்லையின் கழுத்தில் தாலியை அணிவித்து தன்னில் பாதியாக்கியிருந்தான்.

 

செவ்வந்திக்கு வீட்டில் உள்ள அனைவர் மேலும் கோபம், கோபம், கோபம் மட்டுமே. மலை போல் வளர்ந்திருந்தது அவள் கோபம்.

 

பின்னே வீராவிடம் பேசலாம் என்றால் அவனோ “எதுவா இருந்தாலும் பத்து நாள் கழிச்சு கேளு, வேலை மலை போல கிடக்கு. உன் கூட நின்னு பேசவோ சண்டை போடவோ கூட எனக்கு நேரமில்லை” என்றான்.

 

தங்கையிடம் லேசுபாசாய் விசாரித்தாள் “முல்லை உனக்கெப்படி அந்த மாமாவை தெரியும்”

 

“அவங்க நம்ம வீட்டுக்கு வந்த ஞாபகமே இல்லையே எனக்கு. அப்பா இறந்த வீட்டுக்கு வந்தது தான்”

 

“நமக்கு விஷேசம் வைச்சப்ப கூட வரலையே!! ஏன் என் கல்யாணத்துக்கு கூட வரலையே!! உனக்கு மட்டும் எப்படி அவங்களை தெரிஞ்சுது” என்றாள் அதி முக்கிய சந்தேகமாய்.

“தெரியும் அக்கா பார்த்திருக்கேன். அம்மா கூட பங்ஷனுக்கு போகும் போது பார்த்திருக்கேன்” என்றாள்.

 

“எனக்கு தெரியாம அம்மாவும் நீயும் எந்த பங்ஷனுக்கு போனீங்க” என்று கூர்மையாய் பார்த்தாள் தங்கையை.

 

“அக்கா நீ தான் ஹாஸ்டல் போய்ட்ட, அப்போ அம்மா கூட நான் போயிருக்கேன்”

 

“உண்மை சொல்லு முல்லை, உனக்கு அவனை பிடிச்சிருக்கா!! லவ் பண்றியா!! சொல்லு முல்லை!! நான் ஒண்ணும் காதலுக்கு எதிரி எல்லாம் இல்லை”

 

“அக்காகிட்ட சொல்ல மாட்டியா!!” என்றாள் செவ்வந்தி.

 

முல்லையோ அதற்கு வாயே திறக்கவில்லை. “சொல்லமாட்டியாடி” என்று வலியோடு தங்கையை பார்க்கவும் “பிடிக்கும்க்கா” என்று மட்டும் ஒத்துக்கொண்டாள்.

 

அதன்பின் அவளிடம் இருந்து ஒரு வார்த்தையும் அவளால் வாங்கவே முடியவில்லை.

 

திருமணத்திற்கு தாமரை வீட்டினர் மொத்த பேருமே வந்திருந்தனர். வீராவும் செவ்வந்தியுமாக சேர்ந்து சென்று அவர்களை அழைத்திருந்தனர்.

 

வீரா மற்றவர்களிடம் சகஜமாக தான் பேசினான். தங்கையிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவேயில்லை.

திருமணத்திற்கு வந்திருந்த தாமரையிடம் மாறுதல்கள் இருப்பதை செவ்வந்தியால் உணரமுடிந்தது. அவள் இயல்பாய் தான் தாமரையிடம் பேசினாள். ஆனால் மற்றவளுக்கோ அவளுடன் இயல்பாய் உரையாட முடியவில்லை.

 

வீரா வீட்டிற்கு வந்த போதும் பேசவில்லை, இப்போது திருமணத்திற்கு வந்த போதும் பேசவேயில்லை அவளிடத்தில்.

 

உள்ளே வெகுவாய் வலித்தது தாமரைக்கு. அவள் வீட்டினரிடம் சாதாரணமாய் பேச முடிந்த அவனால் தங்கையிடம் ஓரிரு வார்த்தை கூட பேசவில்லை.

 

கண்கள் கலங்கி அண்ணன் பேசமாட்டானா என்று அவனையே பார்த்திருந்தாள் தாமரை. அவளருகே வந்து அவள் கையை ஆதுரமாய் பிடித்த செவ்வந்தி “அண்ணி” என்றழைத்தாள்.

 

“ஹ்ம்ம்”

 

“எதுக்கு இப்போ கண் கலங்குறீங்க??”

 

“அண்ணன் சொன்ன மாதிரி நான் வேணாம்ன்னு முடிவு பண்ணிருச்சு, இனிமே என்கிட்ட பேசவே பேசாதா??” என்றாள் உடைந்த குரலில்.

 

“அப்படிலாம் அவரால இருக்க முடியாது அண்ணி”

 

“இல்லை நான் தப்பு பண்ணிட்டேன், ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் பேசினது எல்லாம் தப்பு தானே!! அந்த கோபம் அண்ணனுக்கு இருக்க தானே செய்யும்”

 

“அண்ணன் பண்ணுறதும் ஒரு வகையில சரி தான். இவ்வளோ பண்ண எனக்கு ஒரு மன்னிப்பு கூட உங்ககிட்ட கேட்க தோணவேயில்லைல”

 

“அப்போ நான் இன்னும் மாறலை தானே… ஏன் மதினி உங்களுக்கு என் மேல கோவமே வரலையா!!” என்றாள் தாமரை.

 

“கோபமே உங்க மேல எனக்கு கிடையாது. கொஞ்சம் வருத்தம் தான் அது கூட இப்போ இல்லை… நீங்க கவலைப்படாதீங்க உங்க அண்ணன் சீக்கிரமே உங்ககிட்ட பேசுவாங்க பாருங்க” என்று தாமரையை சமாதானம் செய்தாள்.

 

செவ்வந்தி வேலையாக அங்குமிங்கும் அலையும் வேளையெல்லாம் முல்லையின் கணவனை பார்த்தால் முறைக்க தவறுவதில்லை.

 

அவளுக்கு அவன் மேல் ஏதோ இனம்புரியா கோபம். இந்த கல்யாணம் நிச்சயம் ஆனதில் இருந்தே ஏதாவது ஒரு பூதாகரம் கிளம்பிக் கொண்டே தான் இருக்கிறது.

____________________

 

ஐந்து நாட்களுக்கு முன் அவளை தேடி வந்திருந்த வீரா கையில் ஏதோ பத்திரத்தை நீட்டி “படிச்சுட்டு கையெழுத்து போடு வந்தி” என்றான்.

“என்ன இது??” என்று கேள்வி கேட்டாள் அவன் கொடுத்ததை வாங்காமல்.

 

“நான் தான் உன்னை படிச்சு பார்க்கச் சொன்னேன்ல”

 

“ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா??” என்று எதிர் கேள்வி தான் கேட்டாளே தவிர இப்போதும் அதை கையில் வாங்கவில்லை.

 

“ப்ராபர்டி டாக்குமென்ட்”

 

“யாரோடது??”

 

“முல்லைக்கு கொடுக்க வேண்டியது. நீ படிச்சுட்டு சைன் பண்ணு”

 

“என்ன விளையாடுறீங்களா?? அவளை மொத்தமா அத்துவிட ப்ளான் பண்ணுறீங்களா என்ன?? இப்போவே எல்லா சொத்தும் கொடுத்தனுப்ப என்ன அவசரம்” என்று கணவனை முறைத்தாள் அவள்.

 

“இங்க பாரு கோபப்படாமா நான் சொல்றதை கேளு… முல்லைக்கும் பாரிக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும்”

 

“அதான் அப்போவே கேட்டனே லவ்வான்னு அப்போ பேசாம இருந்துட்டு இப்போ சொல்றீங்க” என்று அதற்கும் முறைத்தாள்.

 

“இங்க பாரு எனக்கு நெறைய வேலை இருக்கு… சும்மா சும்மா குத்தி பேசுறது எல்லாம் வேண்டாம்” என்றவனுக்கு இப்போது கோபம் வரத் துவங்கியிருந்தது.

 

அதன்பின் அவள் வாயை திறக்கவில்லை, அமைதியாய் நின்றாள். அவள் அமைதியானதும் வீராவே தொடர்ந்தான்.

 

“உனக்கு தெரியுமோ தெரியாதோ எனக்கு அது தெரியாது. உன் மாமா கொஞ்சம் அலைச்சல் பேர்வழி. காசு தான் அவருக்கு உலகமே”

 

“அவர் இப்படி ஆளுன்னு தெரிஞ்சு தான் உங்க அப்பாவும் சரி உங்க ஆச்சியும் சரி அவரை அப்போவே நெருங்கவிடலை”

 

“உங்க வீட்டு விசேஷத்துக்கு எல்லாம் அவங்க ஏன் வரலைன்னு கேட்டியே, அதுக்கு காரணம் வேற ஒண்ணுமில்லை”

 

“யாரையுமே வீட்டு பக்கம் ஆச்சி அண்டவிடாததால நாம மட்டும் ஏன் எல்லாத்துக்கும் போகணும்ன்னு அவங்களும் ஒதுங்கிட்டாங்க ஓகேவா”

 

‘இந்த கதையெல்லாம் எனக்கெதுக்கு?? நான் கேட்டப்போ சொன்னியா??’ என்பது போல் அவனை முறைத்து பார்த்திருந்தாள் அவள்.

 

“பாரிக்கு அவர் அவசரமா நல்ல இடம் பார்க்கறேன்னு ஒரு வசதியான இடத்தை பார்க்க ஆரம்பிச்சார். அதுக்குள்ளே பாரி இடையில புகுந்து விஷயத்தை சொல்லவும் என்னைத் தேடி வந்து பொண்ணு கேட்டார். அப்புறம் நடந்தது தான் நான் உன்கிட்ட சொன்னனே” என்றான்.

 

‘இன்னும் முழுசா எதுவுமே சொல்லலை’ என்று மட்டும் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அப்போதும் எதுவும் வாயே திறக்கவில்லை அவள்.

 

‘இப்போ சொல்றதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்’ என்பது போல் அவனை பார்த்தாள். இடையில் பேச மாட்டாளாம் பார்வையாலே கேட்கிறாளாம்.

 

அவள் பேசாமல் இருப்பது கூட அவனுக்கு கோபம் வரவைத்தது. “ஒருத்தன் பேசுறனே எதாச்சும் பேசுறியா நீ??”

 

“நான் பேசினா தான் திட்டுறீங்களே!!”

 

“நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிர்றேன், அப்புறம் என்ன வேணா சொல்லு”

 

“உன் தங்கைக்கு இது ஒரு பாதுக்காப்புக்காக தான் செய்யறது. நாம ஒண்ணுமே இல்லாம அவளை அனுப்பிடலைன்னு சொல்றதுக்கு தான் இந்த சொத்து”

 

“அதுவும் அவ பேர்ல தான் இருக்கப் போகுது. நீ புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன்” என்று முடித்தான்.

 

அவளோ “மறுபடியும் கேக்குறேன், இப்போ சொத்து கொடுக்க வேண்டிய அவசியமென்ன!! எல்லாத்தையும் உடனே கொடுக்கணுமா!! இதுல நான் எதுக்கு சைன் பண்ணணும்!!” என்று நிறுத்தி நிதானமாய் கேட்டாள்.

 

“உனக்கு அப்போ சொத்து மேல தான் ஆசையா!! என் மேல நம்பிக்கை இல்லையா!! உன் தங்கச்சி தானே அவ!! அவளுக்கு கொடுக்க யோசிப்பியா!!” என்று அவன் சொன்னது தான் தாமதம் அவன் கையில் இருந்ததை வெடுக்கென்று பிடிங்கினாள்.

 

எதையும் படித்து பார்க்காமல் அவள் போட வேண்டிய கையெழுத்தை எல்லாம் போட்டு அவனிடம் நீட்டினாள்.

 

“இந்த கையெழுத்து உங்களுக்காக மட்டும் தான் போட்டேன். வேற யாருக்காவும் இல்லை” என்றுவிட்டு நகரப் போனவளை அப்படியே அணைத்து கொள்ளத் துடித்தது அவன் உள்ளம்.

 

“ஒரு நிமிஷம்” என்று செல்பவளை தடுத்தான். எதுவும் சொல்லாமல் நின்ற இடத்தில் அப்படியே நின்றாள். திரும்பி கூட அவனை பார்க்கவில்லை.

 

அருகே வந்திருந்தவன் பின்னிருந்து அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். “தேங்க்ஸ் வந்தி” என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் பதித்து பின் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

 

அவளை தன்புறம் திருப்பியவன் அவள் கண்களுக்குள் ஊடுருவி “என் மேல நம்பிக்கை வச்சதுக்கு தேங்க்ஸ்” என்றான் மீண்டும்.

“அந்த தேங்க்ஸ் நீங்களே வைச்சுக்கோங்க” என்று சொல்லிச் செல்பவளை மீண்டும் அணைக்க மனம் துடிக்க அவனுக்கு இருக்கும் வேலைகள் ஞாபகத்தில் வந்து அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

 

“தேங்க்ஸ் மட்டும் தானா உன்னையும் வைச்சுக்கறேன்” என்று அவன் சொல்ல போறபோக்கில் கையில் கிடைத்ததை அவன் மீது விட்டெறிந்து போக அவன் அதை கேட்ச் பிடித்திருந்தான் சந்தோசமாய்.

____________________

 

சொத்து எல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்ற காரணத்தினாலேயே அவளுக்கு அவளின் மாமன் குடும்பத்தை பிடிக்கவில்லை.

 

பாரி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் தானே வேண்டாமென்று என்பது அவளது வாதம். அதனாலேயே அவனை கண்டபோதெல்லாம் கண்களில் எரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

பாரிக்கு நிஜமாகவே செவ்வந்தியை பார்த்தாள் கொஞ்சம் பயமாகத் தானிருந்தது. ‘இவங்க என்ன இப்படி முறைக்காறாங்களே என்று’

 

அதை வீராவை அழைத்தும் கேட்டுவிட்டான். முல்லை அப்போது தான் வேறு உடைமாற்றுவதற்கு என்று அழைத்து சென்றிருந்தனர் பாரி மட்டுமே தனித்திருந்தான் அப்போது.

 

அருகே யாரிடமோ நின்று பேசிக்கொண்டிருந்த வீராவை அழைத்தான் “அண்ணா” என்று.

 

அவன் புறம் திரும்பிய வீரா “சொல்லு பாரி” என்றிருந்தான்.

 

“அண்ணா உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்” என்றான் தயங்கியவாறே.

 

‘இன்னும் என்னவாக இருக்கும்’ என்று யோசித்துக்கொண்டு “சொல்லு பாரி”

 

“இல்லை செவ்வந்தி என்னை பார்க்கும் போதெல்லாம் முறைச்சுட்டே போறா!!” என்று அவன் சொன்னதை கேட்டு வீரா இப்போது அவனை முறைத்தான்.

 

‘என் பொண்டாட்டியை அவ இவன்னு சொன்னதும் இல்லாம பேரு வேற சொல்லிக் கூப்பிடுறான்’ என்று சட்டென்று ஒரு ஆத்திரம் மூண்டு பாரியை முறைத்திருந்தான்.

 

‘அச்சோ இப்போ இந்த அண்ணன் வேற எதுக்கு முறைக்கிறாரு’ என்று எண்ணியவனுக்கு அவன் தவறு உடனே புரிபட “அச்சோ சாரி அண்ணா நான் செ… இல்லை மதினி என்னைவிட வயசுல சின்னவங்க”

 

“அந்த எண்ணத்துல பேசிட்டேன், நிஜமாவே சாரி அண்ணா” என்று சட்டென்று உணர்ந்தவனை வீராவுக்கு பிடிக்கத் தான் செய்தது.

 

“சரி விடு பாரி, நீ ஏதோ சொல்லிட்டு இருந்தியே” என்று அவனை பேச ஊக்கினான்.

 

“அதில்லை மதினிக்கு என் மேல என்ன கோபமோ தெரியலை. இதுவரை என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை”

 

“போகும் போது வரும் போதெல்லாம் என்னை முறைச்சிட்டே இருக்காங்க. அவங்களை பார்த்தாலே கொஞ்சம் பயமாயிருக்கு” என்றவன் ஓங்கு தாங்காய் வளர்ந்திருந்தான்.

 

வீராவுக்கு அவன் சொன்ன தினுசில் சிரிப்பு வந்துவிட்டது. “அவங்க என்னை பார்த்து ஏன்டா இப்படி பண்ணேன்னு திட்டிட்டா கூட பரவாயில்லை போல” என்றான்.

 

‘திட்டுவாங்குறதுக்கு தான் ஏகபோக உரிமையாய் நானிருக்கேனே!! அப்புறம் வேற யாரை திட்டப்போறா அவ’ என்று எண்ணிக்கொண்டவன் “நீ அதெல்லாம் பத்தி கவலைப்படாதே”

 

“இரு இப்போவே இதுக்கு ஒரு தீர்வு பண்ணிடுவோம்” என்றவன் அந்த புறமாக வந்த தன் மனைவியை அழைத்தான்.

 

“வந்தி இங்க கொஞ்சம் வாயேன்”

 

“என்னங்க” என்றவாறே அருகே வந்தாள் அவள். ‘அப்பாடா நல்லவேளை என்னடான்னு கேட்காம இருந்தாளே… அதுவே பெரிய விஷயம்’ என்று எண்ணிக்கொண்டவன் அவளிடம் பேச்சை தொடர்ந்தான்.

 

அவளோ அவனருகே வந்ததில் இருந்து பாரியை தான் முறைத்துக் கொண்டிருந்தாள். “வந்தி நீ பாரிகிட்ட பேசவே இல்லையாமே!!” என்று கணவன் சொன்னதும் திரும்பி அவனை முறைத்தாள்.

 

“உனக்கு என்ன கோபம் வேணா உன் தங்கை மேல இருக்கலாம். ஆனா அதெல்லாம் நீ காட்ட வேண்டியது அவகிட்ட தான் பாரிகிட்ட இல்லை”

 

“தெரிஞ்சோ தெரியாமலோ ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. யாரு உன் தங்கைக்கு மாப்பிள்ளையா வந்திருந்தாலும் நீ இப்படியேவா இருப்பே”

 

“இல்லை தானே!! என்னைக்கு இருந்தாலும் முல்லை உனக்கு தங்கை தான். அவளோட கணவருக்கு நீ கொடுக்கற மரியாதையை கொடுத்து தான் ஆகணும், புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்” என்றான்.

 

‘இதெல்லாம் இவன் முன்னாடி தான் சொல்லணுமா’ என்று அவளுக்கு தோன்றினாலும் கணவன் சொன்ன விஷயம் சரியென்பது உறைக்க பாரியை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“சாரி மதினி!! எந்த தப்பு நடந்திருந்தாலும் அதுக்கு காரணம் நான் தான்!! முல்லையை என்னால விடமுடியாது!! அவளை நான் நல்லபடியா பார்த்துக்குவேன் நம்புங்க” என்றான் அவளைப் பார்த்து.

 

‘என்னது நான் உனக்கு மதினியா!! என்னங்கடா கொடுமை இது. இவனை கல்யாணம் பண்ணாலும் பண்ணேன், என்னைவிட பெரியவங்க எல்லாம் என்னை மரியாதையா கூப்பிடுறாங்க’

 

‘இதுக்கு நான் சந்தோசப்படுறதா!! இல்லை நம்மை வயசானவளா ஆக்கிட்டாங்களேன்னு வருத்தப்படுறதா!!’ என்று அவளுக்கு கவலையே வந்துவிட்டது.

 

‘இவனை யாரு எல்லாருக்கும் பெரியவனா இருக்கச் சொன்னது…’ அதற்கும் அவனையே மனதிற்குள் திட்டினாள்.

 

“என்னை அப்புறமா திட்டிக்கலாம், நீ என்ன சொல்லப்போறேன்னு உன்னையவே பார்த்திட்டு இருக்கார், பேசு” என்று குனிந்து மனைவியின் காதில் கிசுகிசுத்தான் வீரா.

 

“நீங்க எதுக்கு என்கிட்ட சாரி சொல்றீங்க!! அதெல்லாம் வேண்டாம், என்னமோ ஒரு கோபம். தப்பு தான் நான் உங்ககிட்ட என் கோபத்தை காட்டியிருக்க கூடாது”

 

“சாரி…” என்றவள் “ஆமா நான் எப்படி கூப்பிடணும் உங்களை??”

 

“முறைக்கு அத்தான் தானே வருவீங்க…” என்று சொல்லும் போது வீரா அவளை முறைத்ததை திரும்பாமலே அவளால் உணர முடிந்தது. ‘ஓ!! கூப்பிட்டிடுவியாடி நீ!!’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டான் அவளை.

 

“இல்லை அதெல்லாம் வேணாம் நீங்க என்னை பேரு சொல்லி வேணாலும் கூப்பிடுங்க” என்றான் பாரி வீராவின் முகத்தை கண்டுவிட்டு.

 

‘தப்பிச்சேடி நீ!!’ என்றான் மனதிற்குள்.

 

“நீ மரியாதையா நீங்க வாங்கன்னு சொல்லி கூப்பிட்டாலே போதும். வேற ஒண்ணும் சொல்லி நீ கூப்பிட வேண்டாம்” என்று முடித்தான் வீரா.

 

“ஹ்ம்ம் சரி” என்று நகர்ந்தாள் அவள்.

 

அவள் சென்றதும் பாரி வீராவை பார்த்தும் நமுட்டு சிரிப்பு சிரித்தான். “ஏன் பாரி சிரிக்கிறே??”

 

“நீங்க லவ் மேரேஜா??” என்றான் அவன்.

 

“எங்க கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு முல்லை சொல்லலையா உன்கிட்ட”

 

“தெரியும், ஆனா…” என்று இழுத்தான்.

 

“ஆனா??” என்று கேள்வியாக்கினான் வீரா.

 

“ஆனா உங்களை பார்த்தா பயங்கரமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி இருக்கு”

அவன் பேச்சு வீராவுக்கு இதமாக இருந்தது. பாரிக்கு ஒரு புன்னகையை கொடுத்து அங்கிருந்து நகர்ந்தான்.

 

ரியாஸ் அந்த திருமணத்திற்கு வந்திருந்தான். ஒரு வாரம் முன்பே அவன் ஊரிலிருந்து வந்திருந்தான். வந்த பின்னே வீரா இந்த திடீர் திருமணம் பற்றி சொல்லி நண்பனை அழைத்திருக்க அவனும் வந்துவிட்டான்.

 

“டேய் என்னடா கனவு லோகத்துல இருக்கியா!! இங்க ஒருத்தனை கூப்பிட்டோமே அவனை கவனிப்போம்ன்னு எல்லாம் கிடையாது” என்று அவனை கடந்து சென்ற வீராவை ரியாஸ் தடுத்து பேசினான் அவன்.

 

“இல்லைடா ஏதோ ஞாபகம்” என்று சமாளித்தான் வீரா.

 

“நான் வந்து ஒரு மணி நேரமாச்சு, இன்னும் உன் பொண்டாட்டி கூப்பிட்டு எனக்கு அறிமுகப் படுத்தவேயில்லை. நாங்களே மீட் பண்ணிட்டோம் தெரியுமா”

 

“அதான் பேசிட்டீங்களேடா, அதை சொல்லவா என்னை கூப்பிட்டே??”

 

“நான் இங்க எதுக்கு வந்தேன்னு நீ நினைக்கிற??”

 

“கல்யாணத்துக்கு வந்தே!!”

 

“அது கரெக்ட் தான், ஆனா கல்யாணத்துக்கு எதுக்கு வந்தேன்??”

 

“இதென்னடா லூசு மாதிரி கேட்குறே!! நான் கூப்பிட்டேன் அதனால தானேடா வந்தே!! உனக்கு மண்டையில எதுவும் அடிப்பட்டுடுச்சாடா”

 

“ஆமா இவரு கூப்பிட்டாங்கன்னு நாங்க அப்படியே ஓடி வந்திட்டோம் பாரு. ஏதோ என் கல்யாணத்துக்கு இங்க எதுவும் பொண்ணு சிக்குமான்னு தான் வந்தேன்”

 

“வந்தா இங்க பார்க்கற மாதிரி ஒண்ணு கூட இல்லை. இதுக்காடா என்னை கூப்பிட்டே” என்று வம்பு செய்தவன் முதுகில் ஒன்று வைத்தான் வீரா.

 

“ஏன்டா வேலையா போறவனை நிறுத்தி வைச்சு கேக்குற கேள்வியாடா இதெல்லாம், போடா…” என்று நண்பனை திட்டினான் அவன்.

 

“நான் பந்தியை கவனிக்க போறேன், நீயும் வர்றியா” என்று ரியாஸை அழைக்க “பின்னே வேற வழி எனக்கு இங்க யாரையுமே தெரியாதே” என்றவன் நண்பன் பின்னே சென்றான்.

 

அங்கு சென்றால் அவன் மனைவி பந்தியில் அமர்ந்திருந்தாள் உண்ணுவதற்கு. ‘அடிப்பாவி என்னைவிட்டு சாப்பிட வந்துட்டாளா இவ’ என்று எண்ணிக்கொண்டு அவளருகே சென்றான்.

 

செவ்வந்தியும் அவள் தோழி மயிலும் ஒன்றாக உணவருந்திக் கொண்டிருந்தார்கள். “ஏட்டி நான் வீட்டுல வேலைக்கிடக்கு கிளம்பப் போறேன். அதான் சாப்பிட வந்தேன், நீ எதுக்குட்டி என் கூட வந்தவ”

“உனக்கு வேலை கிடக்கு, எனக்கு பசிக்குதே!! உனக்கு கம்பெனி கொடுக்கலாம்ன்னு வந்தா ஓவரா தான் கேள்விக்குற!! போட்டி இவளே!!” என்று தோழியை முறைத்தாள் செவ்வந்தி.

 

“அடியே உனக்கென்ன அவசரம் நீயும் அண்ணனும் ஒண்ணா சேர்ந்து சாப்பிட வேண்டியது தானே!! நீ நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்ட போடி”

 

“இதுல என்னடி நல்ல சான்ஸ், நாங்க சாப்பிட போறோமா இல்லை டூயட் பாடப்போறமா”

 

“உன்னையெல்லாம் கட்டிக்கிட்டு எங்கண்ணன் என்ன கஷ்டப்படுறாங்களோ தெரியலை. ரொம்ப தான்டி ஓவரா போய்கிட்டு இருக்க, இதெல்லாம் சரியே இல்லை”

 

“நல்லா சொல்லும்மா, உனக்காச்சும் என் கஷ்டம் புரியுதே!!” என்று அவர்களருகே வந்திருந்தான் வீரா உடன் ரியாஸுடன்.

 

“ஏன் நான் வர்ற வரைக்கு காத்திட்டு இருக்க முடியாதா உன்னால” என்று மனைவியை பார்த்து நேராகவே கேட்டான் அவன்.

 

“எனக்கு பசிக்குது அதான் சாப்பிட வந்தேன், இது ஒரு குத்தமா என்ன??” என்று முறுக்கினாள் அவள்.

 

“சரி சாப்பிடு…” என்றுவிட்டு முகம் வாட அங்கிருந்து நகர்ந்தான் வீரா.

“டேய் யார்றா அந்த பொண்ணு??” என்ற ரியாஸை முறைத்தான்.

 

“எந்த பொண்ணுடா??”

 

“அதான் சிஸ்டர் பக்கத்துல இருந்த அந்த மைனா”

 

“அது மைனா இல்லை மயில்” என்று திருத்தினான் வீரா.

 

“மயிலோ!! குயிலோ!! அவ பேரு என்ன??”

 

“அவ பேரே மயில் தான்”

 

“ஹைய் அழகான பேரு”

 

“ஹலோ இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்டா சரியா வராது”

 

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்” என்றவன் நண்பனிடம் இருந்து கழன்று கொண்டான்.

 

“அச்சோ இவன் வேற ஏழரையை கூட்டிட போறான். அப்புறம் இவ வேற நம்மை தான் முறைச்சு வைப்பா” என்று முணுமுணுத்துக் கொண்டவன் மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

 

சாப்பிட அமர்ந்திருந்தாலும் செவ்வந்தியின் பார்வை முழுக்க வீராவின் மேலேயே இருந்தது. வந்தவர்களை கவனிப்பதென்பது சாதாரணமில்லையே!!

 

தனக்கே அது வராது, ஆனால் தன் வீட்டினரை அவன் சொந்தமாக பாவித்து உபசரிப்பவனை என்னவென்று சொல்வது.

 

கண்கள் அவனையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. “யோவ்” என்ற குரல் தன்னை கலைக்கும் வரை அவனையே தான் பார்த்திருந்தாள்.

 

திரும்பி பார்க்க மயிலு தான் யாரையோ யோவ் என்றிருந்தாள். “யாரைடி யோவ்ன்னு சொல்லுற??” என்று தோழியை இடித்தாள் செவ்வந்தி.

 

“அண்ணன் கூட வந்துச்சே ஒரு ஆளு டோலக்கு மூஞ்சி. என்னையவே பார்த்திட்டு இருக்கான்டி!! என்னமோ பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்த மாதிரி”

 

“அச்சோ அது அவர் பிரண்டுடி, ரொம்ப நல்ல அண்ணா”

 

“நல்ல நொண்ணா!! இவன் பார்வையையே சரியில்லை”

 

“ச்சே!! ச்சே!! அவர் அப்படிலாம் தப்பா பார்த்திருக்க மாட்டார்டி. ஆமா அதென்ன டோலக்கு மூஞ்சின்னு சொல்ற”

 

“அவன் மூஞ்சியை பார்த்தா அப்படி தான் இருக்கு”

 

“என்னைய கூப்பிட்டீங்களா” என்று அருகே வந்திருந்தான் ரியாஸ்.

 

“இல்லைண்ணா கூப்பிடலையே!!”

“இல்லைம்மா இவங்க என்னை ரொம்ப மரியாதையா யோவ்ன்னு கூப்பிட்டாங்க”

 

“அடியே அவருக்கு கேட்டிருச்சு போல” என்று தோழியை இடித்தாள் செவ்வந்தி.

 

“கேக்கட்டுமே என்னக்கென்னட்டி??”

 

“சொல்லுங்க மயில்”

 

“நீயா எனக்கு பேரு வைச்ச மயில்ன்னு கூப்பிடுற”

 

“அப்போ பேரு வைச்சவங்க தான் கூப்பிடணுமா என்ன?? பேரு வைக்கிறதே கூப்பிடுறதுக்கு தானே” என்று அவன் விதாண்டாவாதம் பேசினான்.

 

“அண்ணே ப்ளீஸ்” என்று செவ்வந்தி அவனை பார்க்கவும் போனால் போகிறதென்று அங்கிருந்து நகர்ந்தான் ரியாஸ்.

 

ஏதோ சுவாரசியமாய் பார்த்துவிட்டான். பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருக்க வேண்டியது தானே, இடக்கு மடக்கு பேசுகிறாள் என்று அவனுக்கும் கோபம் வந்தது. செவ்வந்தி ப்ளீஸ் எனவும் தான் நகர்ந்தான்.

 

சாப்பிட்டு எழுந்தவள் இன்னமும் அங்கேயே சுற்றி வந்துக் கொண்டிருந்த வீராவிற்கு கைக்காட்டினாள்.

 

அருகே வந்தவனிடம் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“சொல்லு” என்றவன் அவளைப் பார்க்க அவளோ சுற்றுமுற்றும் இருப்பவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு “கை கழுவ போறேன் அங்க வாங்க” என்றாள்.

 

‘இவளை’ என்று பல்லைக் கடித்துக்கொண்டே அவள் பின்னால் சென்றான்.

 

அங்கு செல்லவும் அவள் கை கழுவி வர பின்னோடு வந்த மயிலுக்கு கைக்காட்டி வாராதிருக்குமாறு சொன்னாள்.

 

“என்ன விஷயம் சொல்லு?? எனக்கு நெறைய வேலை இருக்கு” என்று சிடுசிடுத்தான் அவன்.

 

“ரொம்ப தான்”

 

“ஆமா ரொம்ப தான் என்னங்குற??”

 

“ஐ லவ் யூ…” என்றவள் அவன் சுதாரிக்குமுன்னே “சரி சரி ஏதோ வேலை இருக்குன்னு சொன்னீங்களே போய் பாருங்க” என்றுவிட்டு நகரப் போனாள்.

 

‘என்ன இவ குட் மார்னிங்ன்னு சொல்லுற மாதிரி ஐ லவ் யூன்னு சொல்லிட்டு நடையை கட்டுறா’ என்றெண்ணியவன் எட்டி அவள் கைப்பிடித்தான்.

 

“ஹேய் நில்லு என்னமோ சொல்லிட்டு நீ பாட்டுக்கு போற” என்றவன் முற்றிலும் குளிர்ந்திருந்தான் அவள் பேச்சில்.

“சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்”

 

“அதை இப்படியா சொல்லுறது” என்றான் விழிகளில் சுவாரசியத்தை தேக்கி.

 

“ரொம்ப கோபமா இருக்கனே உங்க மேல… அதெல்லாம் மீறி இதை சொல்லத் தோணிச்சுன்னு நினைச்சு சந்தோசப்படுங்க” என்றவள் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள்….

 

‘அடிப்பாவி கோபமா இருக்கும் போது ஐ லவ் யூ சொன்னாளா. கடவுளே இவ என்ன டிசைன்?? செய்யும் போது எதுவும் டிபெக்ட் பண்ணிட்டியா…’

 

Advertisement