Advertisement

அத்தியாயம் – 26

 

“அக்கா… அக்கா… அக்கா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தாள் முல்லை.

 

“வாடி வரும் போதே எதுக்கு குரல் கொடுத்திக்கிட்டே வர்றே” என்று தங்கையை முறைத்தாள் செவ்வந்தி.

 

“ஹ்ம்ம் ஒரு வேளை நீயும் மாமாவும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும் போது நான் கரடி மாதிரி உள்ளே நுழைஞ்சிட்டேன்னா!! அதுக்கு தான் ஒரு சவுண்டு கொடுத்தேன்” என்றாள் அவள்.

 

வீரா அப்போது தான் பின் வீட்டில் இருந்து முன் வீட்டிற்குள் நுழைந்தான். ‘எங்களை பார்த்தா எல்லாருக்கும் எப்படி தெரியுது, இதே வேலையா தான் நாங்க இருப்போமா என்ன!!’

 

‘இங்க ஒரு பார்வைக்கே வழியை காணோமாம்!! இதுல ரொமான்ஸ் வேற!!’ என்று எண்ணி பெருமூச்சு விட்டான் அவன்.

 

“அக்கா இங்க என்னமோ அனல் அடிக்கிற மாதிரி இருக்கு” என்றவளின் முதுகில் ஒன்று வைத்தாள் செவ்வந்தி.

 

“ஒழுங்கா சின்ன பிள்ளையா லட்சணமா இரு, பெரிய பேச்செல்லாம் பேசாதே!!” என்றாள் தமக்கையாய்.

 

“ஹ்ம்ம் சரி” என்றவளின் முகம் சட்டென்று வாடியது.

“இப்போ எதுக்கு அவளை திட்டுற, சின்ன பொண்ணு தானே. ஏதோ விளையாட்டா பேசுறா?? அத்தோட விடுவியா!!” என்று முல்லைக்கு வக்காலத்து வாங்கினான் வீரா.

 

செவ்வந்தியோ திரும்பி கணவனை முறைத்தாள். ‘பார்வை ஒன்றே போதுமேன்னு கேட்டேன் தான் ஆனா அது இந்த பார்வையில்லை’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“சரி நீ எதுக்கு வந்தே?? வந்த விஷயத்தை சொல்லாம வெட்டியா என்னடி பேச்சு” என்றாள் செவ்வந்தி.

 

சக்திவேல் வீட்டிலில்லை அப்போது, காலையிலேயே வெளியில் கிளம்பிவிட்டார்.

 

“பாரு நான் வந்த விஷயத்தையே மறந்திட்டேன்… இந்தாக்கா இதுல வெள்ளப்பனியாரம் இருக்கு. அம்மா உனக்கும் அத்தானுக்கும் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க” என்றாள்.

 

“ஹேய் அது தான் எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு எடுத்திட்டு வந்தே??” என்று தங்கையிடம் பொரிந்து கொண்டிருந்தாள் தமக்கை.

 

“உனக்கு யாரு எடுத்திட்டு வந்தா, உனக்கு வேணாம்ன்னா போ… நான் அத்தானுக்கு கொடுத்துக்கறேன் வெள்ளைப்பனியாரத்தை” என்று சொல்லிக்கொண்டே வீராவின் முன் சென்று சென்றாள்.

வீராவிற்கோ அந்த வார்த்தையை கேட்டதும் அதை எங்கோ கேட்ட ஞாபகம் வந்தது அவனுக்கு.

 

அவன் நினைவடுக்கில் அதை தேடிக்கொண்டிருக்க அதற்கு அவசியமே இல்லாமல் முல்லையே பதிலை எடுத்துக் கொடுத்தாள் அவனுக்கு.

 

“ஆனா அக்கா உனக்கு ஞாபகமிருக்கா அந்த வெள்ளைப்பனியாரம் மேட்டர்… சின்ன வயசுல யாரோ ஒரு அண்ணா உன்னை வெள்ளைப்பனியாரம்ன்னு கூப்பிட்டாங்களாம்”

 

“அதைக்கேட்ட நானு எனக்கு அந்த வார்த்தை சொல்ல வராம அன்னையில இருந்து உன்னை வெள்ளை பன்னின்னு கூப்பிட்டேனாம்”

 

“அதுல இருந்து தான் உனக்கு வெள்ளைப்பனியாரம் பிடிக்காம போச்சுன்னு அம்மா கூட சொன்னாங்க”

 

“ஆனாலும் நீ இத்தனை வருஷமா அதை மறக்காம ஞாபகம் வைச்சிருக்க கூடாதுக்கா”

 

“போதும் வாயை மூடுடி”

 

“பார்றா வெள்ளைப்பனியாரத்தை பத்தி பேசினா வெள்ளைப்பன்னிக்கு கோபம் வர்றதை”

 

“செம அடி வாங்க போறே நீ?? மரியாதையா போட்டி பேசாம??” என்று தங்கையை பார்த்து முறைப்பாய் சொன்னாள்.

முல்லையின் பேச்சில் வீராவிற்கு புரிந்துவிட்டது. மனதிற்குள் ஏனோ ஒரு சந்தோசம் உடனே பரவியது. மனைவியை கிண்டல் செய்ய ஆசை பிறந்தது.

 

முல்லையோ “எப்படியோ போங்க??” என்றுவிட்டு கையோடு கொண்டு வந்த டிபன் பாக்சை அங்கேயே வைத்துவிட்டு சென்றாள்.

 

முல்லை சென்றதும் அதை கையில் எடுத்து திறந்த வீரா ஒரு பனியாரத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டான்.

 

‘இவரு எதுக்கு இதை கையில எடுத்து வைச்சுக்கிட்டு சாப்பிடாம என்னைய பார்க்குறாரு. முல்லை மாதிரி இவரும் என்னை கிண்டல் பண்ணுவாரோ…’

 

‘ஹான் பக்கத்துல வேற வர்றான்… எதுக்கா இருக்கும்’ என்றெண்ணிக் கொண்டிருக்க வீராவோ “பனியாரம் ரொம்ப ருசி” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டு.

 

‘இதென்ன இப்படி பார்க்குறாரு, சரியில்லையே’ என்றவளுக்கு அடிவயிற்றில் இருந்து எதுவோ உருண்டு வந்து தொண்டைக் குழியில் நிற்பதாக தோன்றியது.

 

“வெள்ளைப்பனியாரம் ரொம்ப நல்லா இருக்கு… நல்லா மெத்து மெத்துன்னு ரெண்டு கன்னம் மாதிரி” என்று சொன்னவனின் பார்வை முழுதும் அவள் மேலேயே இருப்பதை உணர்ந்தவள் ‘அடப்பாவி’ என்ற பார்வை பார்த்தாள்.

 

அத்தோடு விட்டானா அவளை பார்த்துக்கொண்டே மேலும் வம்படித்தான். “இதை பார்த்தா அந்த ரெண்டு சின்ன…”

 

“என்ன??” என்று அலறினாள் அவள்.

 

“எதுக்குடி கத்துற?? ரெண்டு கண்ணு மாதிரி இருக்குன்னு சொல்ல வந்தேன்… நான் அப்படி தப்பா எல்லாம் பேச மாட்டேன்… மீ ஆல்வேஸ் குட் பாய், நம்பும்மா”

 

“ஹ்ம்ம் நம்பிட்டாலும்” என்று முணுமுணுத்தாள் அவள்.

 

“வெள்ளைப்பனியாரம்… மை டியர் லவ்லி வெள்ளைப்பனியாரம்…” என்று கூப்பிட செவ்வந்திக்கு சுர்ரென்று வந்தது.

 

“யாரை சொல்றீங்க??”

 

“உன்னை தான் சொன்னேன்”

 

“எனக்கு அப்படி சொன்னா பிடிக்காது”

 

“எனக்கு பிடிக்குமே”

 

“டேய்…”

 

“அப்போ கூட நீ இப்படி தான் திட்டியிருப்ப” என்று அவன் சொல்லவும் செவ்வந்தி திருதிருத்தாள்.

 

“என்ன?? என்ன சொன்னீங்க இப்போ??”

 

“ஒண்ணும்மில்லை… ஹ்ம்ம் ஆமா உன்னை அப்படி யாரு கூப்பிட்டாங்க” என்றான் வெகு முக்கியமாய்.

 

“அது ஒரு தடிமாடு, நல்லா உசரமா வளர்ந்து கெட்டவன் அவன்…”

 

வீராவுக்கு புரையேறியது… “பார்த்து திட்டும்மா…” என்றவன் “ஆமா உனக்கு அவனை ஞாபகமிருக்கா!! இப்பவும்”

 

“அவனையெல்லாம் யாருக்கு ஞாபகமிருக்கு… என்னை அந்த பக்கி வெள்ளைபனியாரம்ன்னு சொன்னது மட்டும் தான் ஞாபகமிருக்கு”

 

“அவன் பாட்டுக்கு கூப்பிட்டு போய்ட்டான். இந்த சின்னக் கழுதை அது என்னமோ பேருன்னு நினைச்சு அன்னையில இருந்து என்னைய வெள்ளைப்பன்னின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டு”

 

“ரொம்ப நாளைக்கு அப்படி தான் கூப்பிட்டு கிடந்தா… அதுனாலேயே என்ட நெறைய அடி வாங்கியிருக்கா அவ” என்றாள் செவ்வந்தி.

 

“ஆமா இப்போ இந்த கதை உங்களுக்கு எதுக்கு??”

 

“உன்னை வெள்ளைப்பனியாரம்ன்னு கூப்பிட்ட அந்த நெடுமரம் நானே தான்…”

 

“எ… என்ன… அவன்…. அது நீங்களா?? எப்படி??”

 

“எப்படின்னா என்ன சொல்றது??”

 

“எப்படின்னு நீங்க சொல்லாம, எப்படி தெரியும் எனக்கு”

 

லேசாய் சிரித்தவன் “சாரி வந்தி எனக்கு உன்னை அப்போ அப்படி கூப்பிட்டது அவ்வளவா ஞாபகமேயில்லை. இப்போ முல்லை சொல்லவும் தான் அது நானாயிருக்கும்ன்னு தோணிச்சு”

 

“அப்படி பார்க்காத நிஜமாவே முல்லை சொன்ன பிறகு தான் ஞாபகம் வந்திச்சு. உன்னை தான் நான் அப்படி கூப்பிட்டேன்னு எனக்கு சுத்தமா நினைவிலேயே இல்லை”

 

“உன் ஞாபகமா இல்லை வெள்ளைப்பனியாரம் ஞாபகமான்னு தெரியலை. நான் நெறைய முறை அம்மாகிட்ட சொல்லி பனியாரம் செஞ்சு தரச் சொல்லியிருக்கேன்”

 

“என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் கூட என்னை அப்போ கிண்டல் பண்ணியிருக்காங்க… நான் எப்போ பார்த்தாலும் பனியாரம் சாப்பிட்டே இருக்கேன்னு”

 

“எல்லாரும் என்னை விபின்னே கூப்பிட்டாங்கன்னா பார்த்துக்கோ…”

 

“என்ன விபியா??” என்று விழித்தாள் அவள்.

 

“ஹ்ம்ம் விபின்னா வெள்ளைப்பனியாரம் ஷார்ட் பார்ம்” என்றான்.

 

“அச்சோ அப்போ அன்னைக்கு உங்க பிரண்டு உங்களை வி.பின்னு கூப்பிட்டது வீரபாண்டியனோட ஷார்ட் பார்ம் இல்லையா!!”

 

“ஹா ஹா… நீ அப்படி நினைச்சியா!! ஹ்ம்ம் அதுவும் கூட சரி தான் இல்லை” என்றான்.

 

“ஆனா வந்தி…” என்று இழுத்தவன் அவள் பக்கம் வந்து நின்றிருந்தான் இப்போது. மெதுவாய் “அப்போ நீ கொழுக் மொழுக்குன்னு எவ்வளவு அழகா இருப்பே தெரியுமா!!” என்றதும் அவனை முறைத்தாள்.

 

“ஏன் இப்போ நல்லாயில்லையா!!” என்று கேட்டுவிட்டாள்.

 

“ஹ்ம்ம் கொழுக் மொழுக் இல்லை தான்!! ஆனா இப்போ…” என்றவன் அவளை மேலிருந்து கீழாய் முழுவதும் ஆராய அய்யோ இவன்கிட்ட ஏன் இதை கேட்டோம் என்றிருந்தது அவளுக்கு.

 

அவன் பார்வை அவளை விழுங்குவதை உணர்ந்த போது உள்ளே கூசி சிலிர்த்தது அவளுக்கு.

 

“எனக்கு வேலையிருக்கு” என்று உள்ளே செல்லப் போனவளின் கைப்பிடித்து தடுத்தான்.

 

“கேட்காமலே போறே??” என்றதும் அங்கேயே நின்றாள்.

“அப்போவிட இப்போ இன்னும் அழகா இருக்கே!!” என்றதும் சிவந்து போனது அவள் முகம்.

 

ரசனையாய் பார்த்தவன் அவளருகே நெருங்கி நிற்க “எனக்கு வேலையிருக்கு” என்றாள்.

 

“நான் உன்னை பிடிச்சு இழுக்கலையே வெள்ளைப்பனியாரம்”

 

“ஹ்ம்ம் அப்படி கூப்பிடாதீங்க”

 

“இனிமே உன்னை அப்படி தான் கூப்பிடுவேன்…”

 

“அப்படி கூப்பிட்டீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

 

“என்ன செய்வே??”

 

“வாடா போடா சொல்லுவேன்”

 

“புதுசா எதுவும் ட்ரை பண்ணு வந்தி. இந்த வாடா போடா எல்லாம் உன் வாயில சகஜமா வருது. நானும் உன்கிட்ட இதை பத்தி கேட்கணும்ன்னு நினைச்சேன். அதென்ன என்னை பார்த்து ‘டா’ போட்டு பேசுற!! வயசுல பெரியவன்னு ஒரு மரியாதை இல்லாம!!”

 

“அது… அது எனக்கு தெரியலை… உங்ககிட்ட வம்படிக்கும் போது ஒரு ப்ளோவுல வந்திடுது”

 

“என்ன ப்ளோவுலையா??” என்றான்.

 

“ஹ்ம்ம் ப்ளோவுல கெட்ட வார்த்தை கூட வரும்” என்றாள் ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சியை போல்.

 

“வரும் வரும்… வாய் மேலயே ஒண்ணு போட்டா எப்படி வரும்ன்னு பார்க்குறேன்” என்று அவன் சொல்ல அவளுக்கோ எங்கே அன்று ஹோட்டலில் செய்தது போல் செய்துவிடுவானோ என்றெண்ணி கலவரமாய் பார்த்தாள்.

 

“எதுக்கு இப்படி கண்ணை விரிக்கிற??”

 

“ஒண்ணுமில்லை எனக்கு வேலையிருக்கு, உள்ள போறேன்”

 

“இதையே தான் ரொம்ப நேரமா சொல்லுற, எங்க போற மாதிரியே தெரியலையே… உன்னோட கருத்த மச்சானை சைட் அடிச்சிட்டே நிக்குற”

 

“யாரு நானு!! உங்களை!! சைட் அடிச்சேன்!!” என்று ஒரு தினுசாய் கேட்டாள்.

 

“ஆமா நீ தான், இல்லைன்னு எல்லாம் பொய் சொல்லாத!! அப்புறம் கிஸ் பண்ணிருவேன்”

 

“ஹான்…” என்று வாய் பிளந்து அவள் நிற்க “இப்படி நின்னாலும் அதையே தான் செய்வேன்” என்று அவன் சொல்ல “போடா” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

 

இருவருக்குமே அந்த காலைப் பொழுது உற்சாகமான பொழுதாய் தானிருந்தது.

 

வீரா தோட்டத்திற்கு கிளம்பிச் சென்றுவிட செவ்வந்தி வேலை முடித்து வீட்டை சுற்றி வந்தாள்.

 

அங்கிருந்த பூக்கள் செடிகளில் மனம் லயித்து போனது அவளுக்கு. ஏதேதோ எண்ணங்கள் வந்து போய் கொண்டிருக்க அவளைத் தேடி அவள் தோழி வந்தாள்.

 

வாசலில் அழைப்புமணி சத்தம் கேட்கவும் தோட்டத்தில் இருந்து முன் வீட்டிற்குள் நுழைந்து கதவை திறந்தவள் எதிரில் நின்ற மயிலை கண்டதும் சந்தோசத்தில் கட்டிக்கொண்டாள் அவளை.

 

“மயிலு எப்படிடி இருக்கே??”

 

“நாங்க எல்லாம் நல்லா தான் இருக்கோம்ட்டி, உனக்கு தான் எங்களைய எல்லாம் கண்ணுக்கே தெரிய மாட்டேங்கு… பெரிய டாக்டர் ஆகிட்டீங்க” என்று நொடித்தாள் அவள்.

 

“ஹேய் என்னடி ஒரு மாதிரியா பேசுற, நான் அப்படியாட்டி உன்னை நினைப்பேன்”

 

“தெரியும் செவ்வி… சும்மா தான் உன்கூட விளையாண்டேன்… அப்புறம் சொல்லு, நீ எப்படி இருக்க?? உனக்கென்ன சந்தோசமா தான் இருப்பே!! அண்ணனும் ஊர்ல இருந்து வந்துட்டாங்க… சந்தோசம் தானேடி”

“ஹ்ம்ம் ஆமா வந்துட்டாரு”

 

“ஏன்டி மறுபடியும் டல்லா பேசுறவ… அதான் தாமரை அக்கா வீட்டுக்கு போயாச்சுல…”

 

“எப்போ உங்க வாழ்க்கையை தொடங்க போறீங்க??” என்று மயிலு கேட்டப்பின்னே செவ்வந்தி அவளை பார்த்து முறைத்தாள்.

 

“என்ன நான் தப்பா கேட்டுட்டேன்னு முறைக்கிறவ??”

 

“தப்பா கேட்கலை, ஆனா அதுக்குள்ளவா!!” என்றவளை கொலைவெறியாக தான் பார்த்தாள் மயிலு.

 

“இந்த அண்ணன் சரியில்லை அதான் நீ ரொம்ப ஆடுறவ…”

 

“ஹேய் நான் என்னடி பண்ணேன்??”

 

“பின்ன என்னடி அதுக்குள்ளவான்னு கேட்குற?? அப்போ நீங்க எப்போ உங்க வாழ்க்கையை ஆரம்பிக்குறதா உத்தேசம் சொல்லு”

 

“நான் மேல படிக்கணும்…”

 

“படி புள்ளைய பெத்துகிட்டு படி யாரு வேணாம்ன்னு சொன்னா…”

 

“அடியே மயிலு நெசமாவே நீ தான் பேசுறியா!! எனக்கென்னமோ இதெல்லாம் எங்கம்மா பேசுற மாதிரியும் நீ அதுக்கு வாயசைக்குற மாதிரியும்ல தோணுது”

 

‘ஆத்தி இவ என்ன கூட வந்து பார்த்தவ மாதிரி கரெக்ட்டா சொல்லி வைக்குறா… அசந்தா கண்டுக்குவா!! நைசா எஸ்கேப் ஆகிடணும்’

 

“என்ன உங்கம்மாவா!! உங்கம்மா என்னைக்கு என்கிட்ட இதெல்லாம் சொல்லியிருக்காங்க. நீ என்ன என் பேச்சை தட்டாம கேக்குறவளா என்ன” என்று திருப்பிப் போட்டாள் மயிலு.

 

ஒரு ஆசுவாசப் பெருமூச்சு வேறு அவளிடத்தில். “என்னமோ போ நீ செய்யறது ஒண்ணும் சரியா தெரியலை எனக்கு. காலமிருக்குன்னு எல்லாத்தையும் தள்ளி போட்டுக்கிட்டு இருக்காத”

 

“பின்னாடி நீ வருத்தப்படுற மாதிரி ஆகிடப் போகுது அவ்வளவு தான் சொல்லுவேன்” என்றவளுக்கு ஏதோ தோன்ற “ஏன் செவ்வி உனக்கு அண்ணனை பிடிக்கலியாடி??”

 

“மயிலு!!”

 

“சொல்லு செவ்வி, அதான் இப்படி இருக்கியா!! உங்களுக்கு கல்யாணம் ஆகி வருஷம் ஒண்ணு திரும்பிட்டு!! ஆனா உனக்கு இன்னும் அண்ணன் மேல கோபம்…” என்று இழுக்க

 

“அதெல்லாம் இல்லை”

“அப்புறம் என்னடி??”

 

“ஒண்ணுமில்லை மயிலு!!”

 

“உங்களுக்குள்ள எதுவும் சண்டையா!!”

 

“ஒண்ணுமில்லை மயிலு சொன்னா நம்புடி!!”

 

“புருஷன் பொஞ்சாதி விவகாரம் நான் அதிகம் தலையிட முடியாது தான். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன்டி அண்ணன் மாதிரி ஒரு ஆளு கிடைக்கவே கிடைக்காது”

 

“இறுக்கி பிடிச்சிக்க, விட்டுட்டா இழப்பு உனக்கு தான்!!” என்றாள் செவ்வந்தியின் மீது அக்கறையுள்ள தோழியாக!!

 

தோழிக்கு பதிலேதும் கொடுக்கவில்லை அவள், ஆனால் ஏதோவொரு குழப்பம் அவளுக்கு. தன்னை எது வந்து தடுக்கிறது என்று புரியவில்லை.

 

தோழி கிளம்பிச் சென்ற பின்னும் ஒரே யோசனை அவளுக்கு. வீரா ஒன்றும் தப்பானவன் இல்லையே!! தன் மேல் விருப்பமிருக்கிறது என்று முகத்துக்கு நேரே சொன்னவன் அவன்!!

 

ஆரம்பத்தில் அவனை பிடிக்காமலிருந்தது என்னவோ சரி தான். அவனை பிடிக்காமல் என்பதில்லை, அவசரத் திருமணத்தினால் அவனை பிடிக்காமல் போனது என்பது தான் உண்மை.

 

எனக்கும் இப்போ அவரை பிடிக்குது, ரொம்பவே பிடிக்குது ஆனா என்னமோ மனசுல என்னவோ ஒரு குழப்பம்.

 

அது குழப்பமா!! இல்லை என்னோட எதிர்பார்ப்பா!! என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் அவள்.

 

வாதியும் பிரதிவாதியுமாய் அவளே அவனுக்காயும் அவளுக்காயும் பேசி களைத்து போனது தான் மிச்சம்.

 

சக்திவேல் மாலை வீட்டிற்கு வரவும் அவருடன் பேசிக்கொண்டிருந்தாள். வீரா எப்போது வருவான் என்று அவளுக்கு தெரியவில்லை.

 

“மாமா அவர் எப்போ வருவார்??” என்று சக்திவேலிடம் கேட்டாள்.

 

“ஏழு மணி போல வீட்டுக்கு வருவான்ம்மா… என்னாச்சும்மா உனக்கு எங்காச்சும் வெளிய போகணுமா!!” என்றார்.

 

“அதெல்லாம் இல்லை மாமா சும்மா தான் கேட்டேன். நைட்க்கு நானே சமைக்கவா இல்லை உங்க பிள்ளைய சமைக்க சொல்லணுமா” என்று சொல்லி மாமனாரை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

 

அவள் பார்வையில் அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. “ஏன் மாமா அன்னைக்கு அப்படி சொன்னீங்க?? அவர் அவ்வளவு மோசமா ஒண்ணும் சமைக்கலையே”

அக்கம் பக்கம் பார்த்துவிட்டு “சூப்பரா வேற செஞ்சிருந்தார். உங்க பேச்சைக் கேட்டு அவரை அன்னைக்கு ரொம்ப ஓவரா ஒட்டிட்டேன்”

 

சக்திவேல் வாய்விட்டு சிரித்தவர் “நான் அப்படி சொல்லப் போய் தான் நீ வீட்டுக்கு திரும்பி வந்தியோ என்னவோ!!” என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.

 

செவ்வந்திக்கு தான் அவர் அப்படி சொன்னதும் உள்ளே குத்தியது. என்ன பிரச்சனை என்று அவர் கேட்கவில்லை.

 

ஏன் வரவில்லை என்றும் கேட்கவில்லை. ஏன் வந்தாய் என்று கூட கேட்கவில்லை. இதெல்லாம் கேட்டிருந்தாலாவது மனதுக்கு நிம்மதியாய் இருந்திருக்கும் போல.

 

அவர் எதுவும் சொல்லாமல் போனதே அவளுக்கு குத்தியது. அன்று வீரா வீட்டிற்கு வர வெகு தாமதமானது.

 

வீராவுக்கு அழைக்க தூத்துக்குடி டவுன் வரை சென்றிருப்பதாக சொன்னவன் வருவதற்கு தாமதம் ஆகும் என்றுவிட சக்திவேலை வற்புறுத்தி சாப்பிடச்சொல்லி படுக்கச் சொன்னாள்.

 

அவனுக்காய் அவள் காத்திருக்க வீரா பத்தரை மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். களைப்பாய் தோன்றினான்.

அவளிடம் எதுவும் பேசவில்லை அவன், நேராய் அவர்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

 

செவ்வந்தி இருவருக்குமாய் உணவை எடுத்துக்கொண்டு முன் வீட்டை பூட்டிவிட்டு பின்னால் சென்றாள்.

 

வீரா அதற்குள் குளித்து வந்திருந்தான். அவனுக்கு உணவை வைத்து தட்டை நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

 

செவ்வந்தி அவன் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள் எதுவும் பேசுவானோ என்று. எங்கே வீரா வாயே திறக்கவில்லை. அமைதியாய் உணவருந்தினான்.

 

‘என்னாச்சு இவருக்கு இம்புட்டு சீரியசா முகத்தை வைச்சிருக்காரு’ என்று எண்ணிக்கொண்டே அவளும் சாப்பிட்டு முடித்தாள்.

 

எஞ்சிய பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு அவள் வர வீரா கட்டிலில் அமர்ந்திருந்தான்.

 

அறைக்குள் வந்தவள் கதவை தாழிட்டு கட்டிலின் மறுமுனைக்கு சென்று படுத்துக்கொண்டாள்.

 

அவள் படுக்கும் வரை வேடிக்கை பார்த்தவன் போல் இருந்தவன் அவளை அழைத்தான்.

 

“செவ்வந்தி”

முதல் அழைப்பிற்கு சட்டை செய்யாமல் படுத்திருந்தாள். ‘இவரு வருவாரு, பேசாம உம்ன்னு சாப்பிடுவாரு நாம பேசாம இருக்கணும். இவரு பேசினா பேசணுமா’ என்று எண்ணி அமைதியாய் இருந்தாள்.

 

வீராவோ மீண்டும் “செவ்வந்தி” என்றழைத்தான்.

 

“ஹ்ம்ம்” என்றாள் முனகலாய்.

 

“கொஞ்சம் பேசணும்” என்றான் சீரியசான குரலில்.

 

“கேட்குது என்னன்னு சொல்லுங்க” என்றாள் படுத்த வாக்கிலேயே.

 

“முக்கியமான விஷயம் பேசணும்ன்னு சொல்றேன். படுத்துக்கிட்டு கேப்பியா, அவ்வளவு என்ன அலட்சியம் உனக்கு” என்று அவன் குரலுயர்த்தவும் எழுந்து அமர்ந்தாள்.

 

“என்ன முக்கியமான விஷயம்??” என்று அவள் கேட்கவும் ஒரு நிமிடம் தயங்கியவன் பின் சொன்னான்.

 

“நாளைக்கு காலையில முல்லையை பொண்ணு பார்க்க வர்றாங்க!!”

 

“என்ன??” என்றவளுக்கு அவன் சொன்னதை தான் தப்பாக காதில் வாங்கிக் கொண்டோமா!! இல்லை சரியாய் தான் காதில் விழுந்ததா!! என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கணவன் முகத்தை பார்த்தாள்.

 

“உன் காதில விழுந்தது சரி தான்… நாளைக்கு முல்லையை பொண்ணு பார்க்க வர்றாங்க. நாம நாளைக்கு காலையில அங்க போகணும்” என்றான்.

 

“என்ன சொன்னீங்க??” என்று சொன்னவளின் குரலில் லேசாய் கோபம் எட்டிப்பார்த்தது.

 

“திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க முடியாது. நான் சொன்னது உன் காதுல விழுந்துது தானே” என்றான் அவனும் முறைப்பாய்.

 

“விளையாடுறீங்களா நீங்க?? அவளுக்கு என்ன வயசாச்சுன்னு இப்போ அவளுக்கு கல்யாணம் பண்ண நினைக்கறீங்க”

 

“யார் செஞ்ச வேலை இது எங்கம்மாவா?? இல்லை எங்க ஆச்சியா??”

 

“யாருமில்லை… நான் தான்…”

 

“என்ன?? நீங்களா?? உங்களுக்கு என்ன பைத்தியமா?? அவ சின்ன பொண்ணு அவளுக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்”

 

“நல்ல வரன் வந்திருக்கு முடிக்க வேண்டியது தானே!! அவங்களே தேடி வர்றாங்க!! அதுக்கு மேல என்ன வேணும்”

 

“யார் வேணா வரட்டும் எனக்கு கவலையில்லை அவ கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் வந்திச்சு”

“அவளுக்கு வயசாகுதுல பார்க்க வேண்டாமா!!”

 

அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு ஆத்திரம் வந்தது “நீங்க யாரு என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க?? என்னை கேட்காம நீங்க எப்படி அவ விஷயத்துல தலையிடலாம்” என்றாள் கோபமாய்.

 

“ஓ அப்படியா!! அப்போ என்னை கேட்டு தான் நீ என் தங்கச்சிக்கு எல்லாம் செஞ்சியா!! வீட்டில நடந்த விஷயம் எல்லாம் எனக்கு நீ தான் சொன்னியா!!”

 

“ரவிகிட்ட என்கிட்ட கேட்டு தான் நீ பேசினியா!! எல்லாம் உன்னிஷ்டத்துக்கு நீ செய்வ… முல்லைக்கு நான் மாப்பிள்ளை பார்த்தது மட்டும் குற்றமா”

 

“நான் பார்த்தது பார்த்தது தான்… என் தங்கச்சிக்கு நீ செஞ்ச மாதிரி உன் தங்கைக்கு நான் செய்யறேன்” அவ்வளவு தான் என்பது போல் அவன் முடித்தான்.

 

“நீங்க விதண்டாவாதம் பேசுறீங்க!!”

 

“நீ வாதம் பண்ணதுனால தான் நான் விதண்டாவாதமா பேசுறேன்” என்றான் அவனும் பதிலுக்கு பதிலாய்.

 

“தாமரை அண்ணியும் இவளும் ஒண்ணா!! ஏன்டா இப்படி பண்ணுற?? முல்லை இன்னும் படிச்சி கூட முடிக்கலை. அவ சின்ன குழந்தை அவளுக்கு இப்போ மாப்பிள்ளை பார்க்கணுமா!! படிக்கிற பொண்ணு மனசை கெடுக்கணுமா!!”

 

“அவளுக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம் இப்போ!! என்னையும் இப்படி தான் படிச்சு முடிக்க முன்னாடி தள்ளிவிட்டாங்க!! இப்போ அவளுமா!!”

 

“என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும். இதுக்கு எங்க வீட்டில இருக்கவங்க எப்படி ஒத்துக்கிட்டாங்க”

 

“யார் ஒத்துக்கிட்டாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். என் வாழ்க்கையை ஈசியா விட்ட மாதிரி என் தங்கை வாழ்க்கையை நான் விடமாட்டேன்” என்று கத்தினாள்.

 

“இங்க பாரு நாளைக்கு பொண்ணு பார்க்கத் தான் வர்றாங்க. சரியா, அவங்க வந்து பார்த்திட்டு போகட்டும். அப்புறம் முடிவு பண்ணிக்கலாம், நைட்ல இருந்தே கத்திட்டு இருக்காத, பேசாம படு” என்றவனை எரித்துவிடும் பார்வை பார்த்தாள்.

 

‘கடவுளே பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொன்னதுக்கே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறா!! வர்றவங்க நிச்சயம் பண்ண வர்றாங்கன்னு தெரிஞ்சா என்ன செய்வாளோ’ என்றெண்ணிக் கொண்டே வீரா கண்ணயர்ந்தான்.

 

செவ்வந்திக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. யாரைக்கேட்டு இதெல்லாம் செய்கிறார்கள், அதெப்படி இந்த ஆச்சி அம்மா என்று ஒருவருமே என்னிடம் சொல்லவில்லையே!!

 

காலையில் எவ்வளவு சந்தோசமாக வந்து சென்றாள் இந்த முல்லை. சின்ன குழந்தை அவள்!! அவளுக்கு போய் திருமணமா!!

 

இதெல்லாம் தெரிந்தால் அவளுக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று எண்ணி எண்ணி இரவெல்லாம் தூங்கா இரவாகப் போனது அவளுக்கு.

 

காலையில் எழுந்தும் கூட அவள் வீராவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. வீரா தன் தந்தையிடம் விஷயத்தை சொல்ல அப்போது ஒரு மூச்சு பாட்டு வைத்தாள் அவள்.

 

சக்திவேல் கூட மகனிடம் கேட்டுவிட்டார் “இப்போ என்ன அவசரம் வீரா??”

 

“அவசரம்ன்னு இல்லைப்பா அவசியமா இருக்கு” என்றான்.

 

வீரா எதிலும் அவசரம் காட்ட மாட்டான், முடிவெடுக்கும் முன் பலமுறை யோசிப்பான் என்றறிவார் அவர். இப்போது மகனின் பேச்சு அவரை குழப்பியது.

 

அதற்கு மேல் எதுவும் அவர் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அவன் சொன்னது காதில் விழுந்திருந்த செவ்வந்தி தான் அவனிடத்தில் கேட்டாள்.

 

“என்ன அவசியம்??” என்று

 

வீரா பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும் “லவ்வு கிவ்வு பண்ணிட்டாளா அதுக்கு தான் இப்படி அவளுக்கு அவசர அவசரமா மாப்பிள்ளை பார்த்து முடிச்சுவிட நினைக்கிறீங்களா!!”

 

“சும்மா உன் கற்பனை குதிரை எல்லாம் பறக்கவிடாதே!! நல்ல இடம் தேடி வர்றாங்க, விட மனசில்லை அவ்வளவு தான்”

 

“நீ சீக்கிரம் கிளம்பு போகலாம்” என்றான்.

 

“என்னால வரமுடியாது??” என்று வீம்பு பிடித்தாள்.

 

“சரி அப்போ நான் போயிட்டு வர்றேன்” என்றவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.

 

“நான் இல்லாம நீங்க போய்டுவீங்களா??”

 

“போவேன்” என்றுவிட்டு அவன் நகர செவ்வந்திக்கு அவ்வளவு ஆத்திரம் அவன் மேல்.

 

அவன் வெள்ளை வேஷ்டியும் சட்டையும் அணிந்து தயாராய் நின்றிருக்க அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் செவ்வந்தி.

 

‘கிளம்பி ரெடியா வேற இருக்காரு’ என்று அவள் மனதார அவனை திட்டிக்கொண்டிருக்கும் போதே அவள் கைபேசி அடித்தது. அதை பார்த்ததும் கோபமாய் எடுத்தவள் “என்னம்மா” என்றாள்.

 

“கிளம்பிட்டீங்களாம்மா நீயும் மாப்பிள்ளையும்” என்றார் சிவகாமி.

 

“ஓ!! உங்களுக்கு உங்க மாப்பிள்ளை தான் பெரிசா போயிட்டாரா, பொண்ணு முக்கியமில்லை அப்போ உங்களுக்கு. செய்ங்க… செய்ங்க… உங்க இஷ்டப்படியே எல்லாம் செய்ங்க”

 

“நான் எதுக்கு உங்களுக்கு, என்னைய எதுக்கும்மா கேக்குற, உன் மாப்பிள்ளை வருவாரு. அவரை வைச்சே எல்லாம் செஞ்சுக்கோ” என்று கத்திவிட்டு போனை வைத்தாள்.

 

அவள் வைக்கவும் மீண்டும் கைபேசி அழைக்க அதை துண்டிக்க போனவள் பின் அட்டென்ட் செய்தாள்.

 

அவள் எதுவோ கத்த வாயை திறக்க எதிர்முனையில் “மதுராம்பாள் பேசுறேன்” என்ற கம்பீர குரலில் அமைதியானாள்.

 

“லைன்ல இருக்கன்னு தான் நினைக்கிறேன். இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளையா உன் தங்கச்சிக்கு அக்காவா ஒழுங்கா வந்து சேரு”

 

“நீ வந்து தான் முல்லையை தயார் பண்ணணும், போனை வைக்குறேன்” என்றுவிட்டு அவள் பதிலை கூட வாங்காமல் வைத்துவிட்டார் அவர்.

 

“கிழவிக்கு எவ்வளவு கொழுப்பு” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

“நீங்க என்ன இங்க நிக்கறீங்க, கிளம்புங்க போங்க…”

 

“நீ??”

 

“வந்து தொலையுறேன், வேற வழி”

 

“கோபப்படாதே, கொஞ்சம் நிதானமா இரு” என்று இலவச ஆலோசனை வழங்கியவன் அவள் பதிலை வாங்க அங்கில்லை.

 

செவ்வந்தி தயாராகி வரவும் தந்தையை அழைத்துக்கொண்டு மதுராம்பாள் இல்லத்திற்கு சென்றானவன்.

 

மாப்பிள்ளை வீட்டில் இருந்து பத்து பேர் போல ஒன்றாக வந்தார்கள். பெண்ணை பார்த்தார்கள், அடுத்த அரைமணி நேரத்தில் தட்டை மாற்றிக்கொண்டு நிச்சயமே செய்து முடித்துவிட்டனர்…. இனி…

 

Advertisement