Advertisement

அத்தியாயம் – 25

 

மனைவியின் கைப்பிடித்து அவன் நெஞ்சை நீவிக்கொண்டிருந்தான் இன்னமும்.

 

“கையை விடுங்க” என்றாள் செவ்வந்தி.

 

“மருந்து போடுங்க” என்றான் அழிசாட்டியமாய்.

 

“என்ன வம்பு பண்ணுறதுக்கு தான் இங்க வந்தீங்களா??” என்ற அவளின் பேச்சு அவனை உசுப்பிவிட்டது.

 

அப்போது தான் அவன் வந்த வேலை நினைவிற்கு வர தலையை சிலுப்பி நிகழ்வுக்கு வந்தான்.

 

“நான் எதுக்குங்க டாக்டர் உங்ககிட்ட வம்பு பண்ணப் போறேன். நிஜமா தான் கேக்குறேன் இதுக்கு எதுவும் மருந்திருக்கா??”

 

“நீங்க உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?? வேணுமின்னே வந்து கலாட்டா பண்றீங்களா??” என்றதும் அவன் நிதானமெல்லாம் பறந்தது.

 

“நான் கலாட்டா பண்ண வந்தேனா!! என்னை பார்த்தா உனக்கு அப்படியா தெரியுது!! நான் கலாட்டா பண்ண வந்திருந்தா நடக்கறதே வேற மாதிரி இருக்கும்”

 

“இவ்வளவு பொறுமையா எல்லாம் பேசிகிட்டு இருக்க மாட்டேன். இப்போ என்ன சொல்லப் போறே அதை மட்டும் சொல்லு” என்றவனின் பேச்சில் அவ்வளவு சூடு இருந்தது.

 

“என்ன தெரியணும் உங்களுக்கு??”

 

“நடிக்காதடி” என்று பல்லைக் கடித்தான் அவன்.

 

“நான் எதுக்கு நடிக்கணும்??”

 

“அப்போ நான் என்ன கேட்க வந்தேன்னு உனக்கு தெரியாதுன்னு சொல்றியா??” என்றவனுக்கு பொறுமை கரைந்து கொண்டு வந்தது.

 

செவ்வந்தி இப்போது அவனுக்கு பதில் சொல்லவில்லை அமைதியாய் இருந்தாள்.

 

“இளக்காரம் இல்ல!! நானே வந்து கூப்பிடுறேன்ல அதான் உனக்கு இளக்காரம் அதானே!!” என்று அதீத கோபத்தில் கத்தினான்.

 

“எதுக்கு இப்படி கத்துறீங்க?? கொஞ்சம் மெதுவா பேசுங்க…” என்றவள் “நீங்க ஒண்ணும் என்னை கூப்பிடலையே!!” என்றாள் அலட்டாமல்.

 

“கத்தாம உன்னை கொஞ்ச சொல்றியா?? முடிவா கேட்கறேன் உன்னால அங்க வரமுடியுமா?? முடியாதா??” என்று சத்தமாகவே தான் கேட்டான்.

 

“அன்னைக்கு என் கண்ணு முன்னாடி வராதே போன்னு சொன்னீங்க??” என்று அவன் கேட்டதிற்கு நேராய் பதில் சொல்லாமல் பழைய கதையை இழுத்துவிட்டாள் அவள்.

 

“உன் மனசாட்சியை அப்பப்போ எங்காச்சும் அடகு வைச்சிருவியா நீ!! அன்னைக்கு உன் வழியில நான் குறுக்க வர்றேன்னு நீ சொன்னே… அதனால அன்னைக்கு நான் அப்படி பேசினேன்”

 

“இந்த ரெண்டு மாசமா உன்னை ஏதாவது விதத்துல தொல்லை பண்ணியிருக்கேனா?? ஒரு போனாச்சும் பேசி இருப்பேனா உனக்கு??”

 

“அன்னைக்கு பேசினது ஒண்ணும் மாறிடலையே… இப்போவும் நீங்க அதானே செய்யறீங்க” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

 

“ஆமாடி இப்போவும் அதான் செய்யறேன். இப்போ என்னங்குற?? நீ ஒண்ணும் நான் கட்டினதை தூக்கி போட்டிறலையே கழுத்துல தானே சுமந்திட்டு இருக்க!!”

 

“அதனால தான் நான் உன் வழியில குறுக்க வர்றேன். என்ன பண்ணப் போறே இப்போ அதுக்கு. நேத்தே உன்னை தரதரன்னு வீட்டுக்கு இழுத்திட்டு போயிருக்கணும்”

 

“அப்போவே பேசாம விட்டது என்னோட தப்பு தான். அதுக்கு தான் என்னை நிக்க வைச்சு கேள்வி கேட்குற??” என்று அவன் சொன்னதும் ‘அப்போ நேத்து இவர் என்னை பார்த்திட்டு தான் போனாரா’

 

‘நாம தான் கவனிக்காம விட்டிட்டோமா’ என்றே எண்ணியவளுக்கு உள்ளுக்குள் ஏனோ ஒரு குளிர் பரவியது. வீராவோ அவன் பேச்சை தொடர்ந்தான்.

 

“அப்படி என்ன தப்பு பண்ணேன் நான். எந்த வீட்டுக்கு போகலாம்ன்னு நடுரோட்டில நின்னு சிந்திக்கற அளவுக்கு நான் ஒண்ணும் உனக்கு எந்த கொடுமையும் பண்ணிடலையே”

 

“எங்கம்மா சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உன்னை தேடி நானே வந்தேன். இல்லன்னா சரி தான் போடின்னு போயிட்டு இருந்திருப்பேன்”

 

“என்னை மதிக்காதவங்களை மதிச்சு எனக்கு எப்பவும் பழக்கமில்லை. எங்கம்மா சொன்னது இப்பவும் என் மனசுல இருக்கு. நீங்க அடிச்சிகிட்டாலும் புடிச்சிக்கிட்டாலும் அது இந்த வீட்டோட தான் இருக்கணும்”

 

“நீ கோவிச்சுகிட்டு போறது, அந்த புள்ளை கோவிச்சுக்கிட்டு போறது எந்த காலத்துலயும் செய்யாதீங்க!! விட்டுக்கொடுத்து போன்னு சொன்னாங்க”

 

“எங்கம்மா பண்ண ஒரே தப்பு சொன்னதை என்கிட்ட மட்டும் சொல்லிட்டு போனது தான். உனக்கும் ஒரு கிளாஸ் எடுத்திருக்கணும் அவங்க” என்று வார்த்தைகளை கடித்து துப்பாத குறையாகத் தான் பேசினான்.

 

“அப்போ அத்தை சொன்ன வார்த்தைக்காக தான் வந்திருக்கீங்க!! எனக்காக எல்லாம் என்னைத் தேடி நீங்க வரலை அப்படி தானே!!” என்றவளுக்கு வீரா தனக்காக வரவில்லை என்ற கவலை வந்து விழியில் நீர் நிறைத்தது.

 

“உனக்காக இங்க வராம வேற யாருக்காக இப்போ வந்திருக்கேன் இங்கே… ஆனா நீ எனக்காகன்னு கூட எதுவும் பார்க்கலை தானே”

 

“உனக்கு வேணா நான் முக்கியமா இல்லாம இருக்கலாம். எனக்கு எங்க அம்மா சொன்னது ரொம்ப முக்கியம்”

 

“உனக்கு என்னோட சண்டை போடணும்ன்னா நீ நம்ம வீட்டில இருந்தே போடு… நான் வேணாம்ன்னு சொல்லலை”

 

“ஊர்ல போற வர்றவங்க எல்லாம் என்னை பார்த்து கேள்வி கேட்குற மாதிரி நீ இங்க வந்து உட்கார்ந்தா என்ன அர்த்தம்” என்று அவன் சொன்னது இப்போது அவளுக்கு கோபத்தை கொடுத்தது.

 

“ஓ!! அப்போ ஊர்ல இருக்கவன் பேச்சை தான் இப்பவும் கேட்பீங்களா!! என்னால இங்க இருந்து வரமுடியாது உங்களால ஆனதை பார்த்துக்கோங்க” என்று அவளும் வீம்பாய் தான் பேசினாள்.

 

“என்னடி முடியாது அப்படியே பல்லை பேத்துருவேன் பாரு. இதான் உன் முடிவுன்னா நான் சொல்றதையும் கேட்டுட்டு முடிவு பண்ணு. இன்னைக்கு இப்போ நீ வரலைன்னா அடுத்து நமக்குள்ள நடக்கப் போறது டிவோர்ஸ் தான்”

 

“உனக்கு தான் என்னோட வாழ பிடிக்கலைல அப்போ நான் உனக்கு டிவோர்ஸ் கொடுத்திர்றேன். நீயாச்சும் நிம்மதியா இரு!! உன்னை கஷ்டப்படுத்த நான் விரும்பலை”

 

“என்ன மறுபடியும் டிவோர்ஸ்ன்னு ஆரம்பிக்கறீங்களா?? என்னை ப்ளாக்மெயில் பண்ணி பார்க்கறீங்களா??” என்று கத்தினாள் ஆங்காரமாய்.

 

“உன்னை ப்ளாக்மெயில் பண்ணவேண்டிய அவசியம் எனக்கில்லை. இப்பவும் சொல்றேன் உன் நிம்மதி தான் எனக்கு முக்கியம்”

 

“எங்க உறவு வேணுமா வேணாமான்னு இப்போ நீயே முடிவு பண்ணு” என்று அவன் அவளை விடவும் ஆங்காரமாய் தான் கூறினான்.

 

“எப்பவும் எல்லாருமா சேர்ந்து என்னை இக்கட்டுல கொண்டு நிறுத்தறதே பழக்கமா போச்சு. இதுல என் நிம்மதி தான் முக்கியம்ன்னு டயலாக் வேற” என்றவளுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

 

“என்னைக்கு என் நிம்மதி பத்தி நீங்க யோசிச்சு இருக்கீங்க… இப்போ கூட நான் இங்க நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலை அதான் அதை கெடுக்க வந்திருக்கீங்க” என்றாள் உடைந்த குரலில்.

வீராவோ அவள் அழுகைக்கெல்லாம் தயை பார்க்கவில்லை. “என்ன உன்னால இப்போ மருந்து போட முடியுமா முடியாதா”

 

“என்னடா மருந்து வைச்சிருக்கே?? என்ன வைச்சிருக்கே?? கொஞ்சம் விஷம்…” என்று ஆரம்பித்துவிட்டு அவன் தீப்பார்வையில் அப்படியே அடங்கினாள்.

 

“என்னால ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது. உன்னோட பதில் என்ன சொல்லு??”

 

“ஏன்?? ஏன் இருக்க முடியாது??”

 

“நான் வேணாம்ன்னு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்கே!! நீ வேணும்ன்னு நான் இங்க வந்திருக்கேன்!! வித்தியாசம் புரியலையா உனக்கு”

 

“வந்தா என்ன தப்பு”

 

“நான் என்ன தப்பு பண்ணேன் உன்னை தேடி நான் இங்க வர, நானா உன்னை போகச் சொன்னேன்”

 

“இல்லை, ஆனா மாமா அன்னைக்கு…”

 

“கொஞ்ச நாள் உங்க வீட்டில இருன்னு சொன்னார். நான் வந்ததும் வரச் சொன்னார் தானே” என்று அவன் சொன்னதிற்கு அவளிடம் பதிலில்லை தலை குனிந்தாள்.

 

வீராவின் பொறுமை முற்றிலும் பறந்து விட்டிருந்தது. ‘நான் இவ்வளவு நேரம் கரடியா கத்திட்டு இருக்கேன், எனக்கென்னன்னு இருக்காளே’ என்ற ஆத்திரம் அவனுக்கு.

 

வந்த ஆத்திரத்தில் நேரே அவளருகே வந்து நின்றான். “என்ன சொல்றே இப்போ??” என்றான் அவளிடம் இருந்து ஏதாவதொரு பதிலை வாங்கிடும் நோக்குடன்.

 

“என்ன??” என்றவள் அவன் அருகே வந்திருந்ததில் மிரட்சியாய் அவனை பார்த்தாள்.

 

“மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத??” என்றான் அவள் கண்களை ஊடுருவியவாறே.

 

“வரமுடியாதுன்னு சொன்னா விட்றவா போறே??” என்றாள் அவளும் அவன் கண்ணைப் பார்த்து.

 

“விடமாட்டேன் தான்… உன்னை என்னால விடவும் முடியாது… உனக்கு நான் வேணாம்ன்னு சொல்லு அப்போ விட்டிறேன்… அது வரைக்கும் உன்னை விடமாட்டேன்…”

 

“இப்போ சொல்லு டிவோர்ஸா!! இல்லை காம்பிரோமைஸா!!”

 

“ஏன்டா இப்படி வன்முறையா பேசுற??”

 

“நீ ரொம்ப நேரம் கடத்துற… பேசிட்டே இருந்தா அப்படியே தூக்கிட்டு போய்டுவேன் பார்த்துக்கோ”

“ஓ!! தூக்கிட்டு போடுவியா நீ!! இது எங்க வீடு அன்னைக்கு ஹோட்டல்ல பண்ண மாதிரி எல்லாம் அழிசாட்டியம் பண்ண முடியாது இங்க உன்னால” என்று சவாலாய் பேச அது போதுமே வீராவுக்கு அவள் வார்த்தை அழகாய் உசுப்பேற்றியது அவனை.

 

ஒன்றும் சொல்லாமல் அவளுக்கு வெகு நெருக்கமாய் வந்திருந்தான். “எதுக்கு இப்போ பக்கத்துல வர்றே?? நான் கத்தினா எல்லாரும் வந்திடுவாங்க” என்றாள் சற்றும் பயமில்லா குரலில்.

 

அவளை பார்த்து ஒரு கேலி புன்னகை சிந்தினான் அவன். ‘இப்போ எதுக்கு இந்த நக்கல் சிரிப்பு சிரிக்கறான்’ என்று அவள் யோசித்து முடிக்கும் முன்னே இருகைகளாலும் அவளை தூக்கியிருந்தான்.

 

“விடு… விடுடா…” என்று அவள் திமிற அவனோ அவளை தூக்கிக்கொண்டு ஹாலுக்கே வந்துவிட்டான். ‘இவளுக்கு அதிரடி தான் சரி’ என்ற முடிவிற்கு வந்துவிட்டான் அவன்.

 

மதுராம்பாள் அப்போது தான் உள்ளிருந்து வெளியில் வந்தார். “அச்சோ விடுங்களேன் ப்ளீஸ்” என்றவளின் குரலில் இப்போது மரியாதை வந்துவிட்டிருந்தது கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டான்.

 

“நான் இறக்கிவிட முடியாது, இப்படியே உன்னை தூக்கிட்டு வீட்டுக்கு போய்டுவேன். நீ எதுக்கும் சரிபட்டு வரமாட்டேங்குற” என்றான்.

 

“என்னை அசிங்கப்படுத்தாதடா இறக்கிவிடு முதல்ல, மானம் போகுது” என்று அடிக்குரலில் அவனிடம் பேசினாள்.

 

இப்போது இருவருமே தங்களுக்குள் மெதுவாய் தான் உரையாடிக் கொண்டிருந்தனர். அது உரையாடல் அல்ல மெது குரலில் தங்கள் சண்டையை போட்டுக் கொண்டிருந்தனர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

 

“உன்னை இதுக்கு முன்னாடி உங்க வீட்டு வாசல்ல இருந்து உன் பெட் ரூம் வரை தூக்கிட்டு போனவனுக்கு இந்த வீட்டில இருந்து அடுத்த வீட்டுக்கு தூக்கிட்டு போறது ஒண்ணும் பெரிய கஷ்டமில்லை”

 

“நல்ல நேரம் காலம் பார்த்த என்னை தூக்கிட்டு போக, இறக்கி விடுடா” என்று அவன் காதில் கிசுகிசுத்தாள்.

 

இருவரும் நடுஹாலில் நின்று மற்றவர்களுக்கு ஷோ காண்பிக்கிறோம் என்பது கூட அறியாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

 

மதுராம்பாள் அவர்களை நெருங்கி வருவதை கண்டவள் குனிந்து அவனிடம் “நான் வர்றேன் ப்ளீஸ் இறங்கி விடுங்க” என்று தன் வாயால் சொன்ன பின்னே தான் அவளை இறக்கிவிட்டான் அவன்.

 

“என்னாச்சு செவ்வந்தி?? கால் எதுவும் வலிக்குதா??” என்றவாறே அருகே வந்தார் மதுராம்பாள்.

 

“ஹ்ம்ம் ஆ… ஆமா… லேசா வலிக்குதுன்னு சொன்… சொன்னேன்… அதான் இவர் பாட்டுக்கு தூ… தூக்கிட்டு வந்திட்டார்” என்றாள் திக்கித்திணறி.

 

ஆச்சியும் வீராவும் ஏதோ தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டது போன்ற உணர்வு அவளுக்கு.

 

அவள் பார்க்கும் முன்னே அவர்கள் இருவரின் பார்வையும் அவள் மீது தானிருந்தது. சிவகாமியும் மருமகன் வந்திருப்பது அறிந்து வெளியில் வந்தார்.

 

“வாங்க தம்பி!! ரெண்டு நாளா வீட்டுல சாப்பிடாம இருந்திட்டீங்களே!! எல்லாருக்கும் என்ன தான் பிடிவாதமோ!!”

 

“உங்களை எல்லாம் நினைச்சு எனக்கு தான் நெஞ்சு வலி வந்திடும் போல… யாருமே எங்களை பத்தி யோசிக்கறதில்லை” என்றவரின் கண்களில் கண்ணீர் அரும்பியது.

 

வீராவுக்கு அதைக்கண்டு என்னவோ போல் ஆனது. மனைவியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான் எல்லாம் உன்னால் தான் என்பது போல்.

 

“அத்தை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க!! உங்க பொண்ணு கையால சாப்பிடணும்ன்னு ஆசை. அவளை கூப்பிட்டா எங்கம்மா வீட்டுல ரெண்டு நாள் இருந்திட்டு வர்றேன்னு சொன்னா”

 

“சரி நீ வர்ற வரைக்கும் நானே செஞ்சுக்கறேன்னு சொல்லி நானும் அவளோட விளையாடினேன் அத்தை. உங்களை கஷ்டப்படுத்த எல்லாம் இப்படி செய்யலை”

 

“எங்க மேல எதுவும் தப்பிருந்தா மன்னிச்சிருங்க அத்தை” என்றான் உளமார.

 

“சிவகாமி எதுக்கு இப்படி எல்லாம் பேசிக்கிட்டு பாரு. அவுகளை மன்னிப்பு கேட்க வைச்சுக்கிட்டு. நீ எதுவா இருந்தாலும் உம் பொண்ணை தானே கேக்கணும்”

 

“அவ கேட்டா நான் எதுக்கு அத்தை மருமகன்கிட்ட கேக்க போறேன். நான் பேசினாலே இவ என் வாயை அடைக்க பார்க்குறா”

 

“பெத்தவளுக்கு கவலையா இருக்காதா!! இதை யாரு தான் புரிஞ்சுக்குவாங்க!!” என்றவர் இன்னமும் மூக்கை உறிஞ்சிக் கொண்டுதானிருந்தார்.

 

வீரா இப்போது வெளிப்படையாகவே மனைவியை முறைத்தான். ‘ஒழுங்கா அவங்ககிட்ட பேசி சமாதானப்படுத்து’ என்று அவளிடம் வாயசைத்தான்.

 

‘நீ என்ன சொல்றது??’ என பதிலுக்கு வாயசைத்தவள் அவள் அன்னையின் அருகில் சென்று நின்றாள்.

 

“ம்மா இப்போ எதுக்கு ஓவரா கண்ணீர் விடுற… என்ன நடந்து போச்சு இங்க… நான் இங்க வந்து ஒரு ரெண்டு நாள் இருக்கக் கூடாதா!! அதுக்கு என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்க”

“அதான் உன் மருமவன் சொன்னாருல அதெல்லாம் உண்மை தான். என்னை வீட்டுக்கு வரவைக்க ப்ளான் போட்டு தான் இப்படி எல்லாம் விளையாடி இருக்கார்”

 

“அது புரிஞ்சுக்காம நீ என்னமோ கண்ணீர் விட்டுக்கிட்டு இருக்க… கொஞ்சம் உன் அழுகையை நிறுத்தும்மா… இல்லைன்னா இதுக்கு வேற இவர்கிட்ட நான் ஓவர் டோஸ் வாங்கணும்”

 

‘யாரு நானு இவளுக்கு ஓவர் டோஸ் கொடுக்கறேன். இவ வளைச்சு வளைச்சு எனக்கு கொடுக்கறதுக்கு பேரு என்னவாம்… இவளை.. அடங்கவே மாட்டேங்குறாளே’ என்று பல்லைக்கடித்தான் வீரா.

 

“அம்மா நான் அங்க கிளம்புறேன் சும்மா அழுதிட்டு உடம்பை கெடுத்துக்காதம்மா” என்று சிவகாமியிடம் பேசி அவரை சமாதானம் செய்தாள்.

 

முல்லையும் உள்ளிருந்து வந்திருந்தாள் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே.

 

“அடடா இவுங்க லவுசு தாங்கலை சாமி. ஏன் அத்தான் இதுக்கு தான் அவ்வளவு சீனா நான் கூட ரொம்ப பயந்தே போயிட்டேன்”

 

“நீங்களும் அக்காவும் சண்டை தான் போட்டுக்கிட்டீங்களோன்னு… யப்பா ரெண்டு நாளா எங்களை எல்லாம் கதிகலங்க வைச்சுட்டீங்க நீங்க ரெண்டு பேரும்” என்றாள் அவள்.

 

அவளுக்கு லேசாய் ஒரு சிரிப்பை கொடுத்தவன் மனைவியை அழைத்துக்கொண்டு அவர்களிடம் விடைப்பெற்றான்.

 

சாப்பிட்டு செல்லுமாறு கூறிய சிவகாமியிடம் வீட்டில் சென்று சாப்பிட்டுக் கொள்வதாக கூறி அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

 

அவர்கள் வீட்டிலிருந்து செவ்வந்தி கிளம்பிவிட்டாள் தான், ஆனால் இப்போது கணவனுடன் அந்த வீட்டிற்குள் நுழைய அவ்வளவு யோசனை அவளுக்கு.

 

காலையில் மாமனாரிடம் கூறியதென்ன, இப்போது வீரா கூப்பிட்டதும் தான் வருவதென்ன… அவர் என்ன நினைப்பார் என்னைப்பற்றி என்ற யோசனை அவளுக்கு.

 

வீரா அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை, அவள் கைப்பிடித்து இழுக்காத குறையாகத் தான் இழுத்துச் சென்றான்.

 

அவர்களை பார்த்த சக்திவேலுக்கு தான் தூக்கிவாரிபோட்டது. இந்த வீரா சொன்னது போல இழுத்து வருகிறானே என்று லேசாய் ஒரு வருத்தம் அவருக்கு மகன் மேல்.

 

இருந்தாலும் அவர் அதைக்கண்டு கொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் போல் இயல்பாய் அவர் இருக்க செவ்வந்திக்கு நிம்மதியாய் இருந்தது.

 

“சாப்பிட்டீங்களா மாமா??”

 

“சாப்பிட்டேன்ம்மா”

 

“என்ன மாமா சாப்பிட்டீங்க??”

 

“வீரா சப்பாத்தி குருமா செஞ்சிருந்தான்ம்மா அதான் சாப்பிட்டேன்”

 

“அச்சச்சோ அதையா சாப்பிட்டீங்க, ஏன் மாமா?? இருங்க நான் வேணா உங்களுக்கு வேற செஞ்சி தரேன்” என்று அவள் சொல்லி முடிக்கவும் வீராவின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!!

 

சக்திவேலோ சிரித்துக் கொண்டிருந்தார் அவள் சொல்லிய தினுசில். சில மணி நேரங்களுக்கு முன் மருமகளிடம் மகனின் சாப்பாட்டை பற்றி அளந்து விட்டிருந்தாரே அது வேலை செய்துக் கொண்டிருந்தது அங்கு.

 

‘நாம என்ன அவ்வளவு மோசமாவா சமைக்கிறோம்’ என்று நொந்தான் வீரா.

 

“எனக்கு எதுவும் வேண்டாம்மா… சாப்பிட்டதே போதும் வயிறு டொம்ன்னு ஆய்டுச்சும்மா” என்று அவர் சொல்லவும் “ஏன் மாமா ரெண்டு நாளா அவர் செஞ்சதே சாப்பிடுறீங்களே வயித்துக்கு எதுவும் பண்ணுதா!! மாத்திரை எதுவும் கொடுக்கவா!!” என்று வேறு கேட்டு வைத்தாள்.

 

அதற்கு மேல் சக்திவேலால் முடியவேயில்லை. வாய்விட்டு நகைக்க ஆரம்பித்தார். சிரித்து சிரித்து கண்ணில் நீர் வந்துவிட்டது அவருக்கு.

 

வீராவோ உம்மென்றிருந்தான். ‘இவ மனசுல என்ன பத்தி என்ன தான் நினைச்சுட்டு இருக்கா!! என்னை டோட்டலா டேமேஜ் பண்ணுறாளே!! அதுவும் அப்பா முன்னாடியே’ என்று வேறு கவலை அவனுக்கு.

 

ஒன்றும் சொல்லாமல் சமையலறை புகுந்தவன் இரண்டு சப்பாத்தியை தட்டில் எடுத்து வந்து அவள் முன் நீட்டினான்.

 

“அய்யோ எனக்கு வேணாம்… மாமா சொல்லுங்க இவங்ககிட்ட” என்று தன் மாமனாரை வேறு துணைக்கழைத்தாள்.

 

“ஹேய் என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல… சாப்பிட்டு பார்க்காமலே ஓவரா கிண்டல் பண்ணுற… அப்பா சொல்லுங்க அவகிட்ட” என்றான்.

 

“செவ்வந்தி நீ அதை வாங்கி சாப்பிடு” என்றுவிட்டு அவர் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.

 

“சாப்பிடு” என்று கண்களால் மிரட்டினான் அவன்.

 

“முடியாதுடா” என்று பதில் மிரட்டல் கொடுத்தாள் அவளும் கண்களால்.

 

“நானே ஊட்டிவிட்டிருவேன்” என்று கண்ணோடு சேர்ந்து கையாலும் பாவனை செய்தான் அவன்.

 

அவளோ ‘உவ்வே’ என்று வாந்தி வருது போல செய்யவும் ‘மவளே ஓவரா சீன் போடுறியா நீ’ என்று எண்ணிக்கொண்டு அவளருகே வந்தவன் சப்பாத்தியை எடுத்து அவளுக்கு ஊட்டியே விட்டான்.

 

செவ்வந்தி வாயை இப்படியும் அப்படியுமாக திருப்பியதில் பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் விழுந்தது.

 

“ஒழுங்கா முழுங்கு, நான் ஒண்ணும் அவ்வளவு மோசமா எல்லாம் சமைக்க மாட்டேன். அப்பாக்கு செய்யறேன் அதெல்லாம் பார்க்க மாட்டேனா”

 

“எதுக்குடி ஓவர் ரியாக்ட் பண்ணுற??” என்றான்.

 

அவன் ஊட்டியதை கஷ்டப்பட்டு விழுங்கியவளுக்கு அதன் சுவை அப்போது தான் புரிந்தது. ஆனாலும் சட்டென்று அவனிடம் ஒத்துக்கொள்ள மனம் ஒப்பவில்லை.

 

இருவருக்குள்ளும் சகஜமான பேச்சு வார்த்தை தொடங்கியதை இருவருமே உணரவில்லை. இரவு கட்டிலில் சென்று விழும் போது இருவரும் ஒருவருக்கொருவர் முதுகுகாட்டியே படுத்தனர்.

 

இருவரும் தினமும் பேசிக்கொண்டாலும் இருவருக்குள்ளும் ஏதோவொரு விலகல் தன்மை இருந்ததை உணர்ந்தே தான் இருந்தனர்.

 

இருவருமே அந்த கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரவில்லை. வீராவும் சரி அவளும் சரி பேசிக்கொண்டாலும் வெகு நெருக்கமான பேச்சு அவர்களிடத்தில் இல்லை.

 

இந்நிலையில் ரவி ஒரு நாள் செவ்வந்திக்கு போன் செய்திருந்தான். தாமரையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது பற்றி அவளிடம் பேசினான்.

 

அவளின் யோசனைப்படி குழந்தைக்கு காட்ட வேண்டும் என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றதும் மருத்துவர் தாமரையிடம் இயல்பாய் பேச்சுக் கொடுப்பது போல் பேசி கொஞ்சம் கொஞ்சமாய் தாமரையை மாற்ற முயற்சிப்பதும் பற்றி கூறினான்.

 

செவ்வந்திக்கு அப்போது தான் மனதிற்குள் லேசாய் ஒரு நிம்மதி எழுந்தது.

 

ரவியிடம் பேசி முடித்தவளுக்கு ரஞ்சிதத்தின் நினைவு வர அவள் கால்கள் பின்னோக்கி நகர்ந்தன. மனோரஞ்சிதத்தின் முன் வந்து நின்றிருந்தாள் இப்போது.

 

மெதுவாய் அதன் மீது தன் தலையை சாய்த்தவளுக்கு அப்படியொரு நிம்மதி தோன்றியது.

 

“உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன் அத்தை” என்று வாய்விட்டே கூறினாள்.

 

இப்போதெல்லாம் அவள் மனோரஞ்சித பூவை பறிப்பதேயில்லை. அதை பறித்தால் அத்தைக்கு வலிக்கும் என்று அவளுக்கு ஒரு எண்ணம்.

 

பின்னே அந்த செடி வீராவுக்கு அன்னை என்றால் அவளுக்கு அத்தை தானே. இருவருமே அப்படி தான் எண்ணினர்.

 

மேலும் சில நொடிகள் அங்கு நின்றிருந்தவள் வீட்டை சுற்றி மெல்ல நடைப்போட்டாள். அப்போது தான் அவள் மனதை குளிர்விக்க செய்த ஒன்றை அவள் கண்டாள்.

 

அதை கண்டதும் உண்மையிலேயே அவள் உள்ளம் குளிர்ந்து தான் போனது. அங்கு அவள் கண்டது வேறொன்றுமில்லை.

 

வீரா வைத்திருந்த விதவிதமான நிறங்களில் இருந்த செவ்வந்தி பூக்கள் அவள் கண்ணில்ப்பட்டு கருத்தை நிறைத்து கண்களில் காதல் வழியச் செய்தது.

 

‘இது எப்போ வைச்சார் செடி நல்லா வளர்ந்திருக்கே!! இவ்வளவு பூ பூத்திருக்கு’ என்று எண்ணியவள் குனிந்து செடியின் அருகே அமர்ந்து கையில் இருந்த மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு அதைக்கண்டு. வீரா மட்டும் அருகிருந்தால் ஒருவேளை அவனை கட்டியணைத்திருப்பாள். அந்த புகைப்படத்தை அவளின் வாட்ஸ்அப்பில் ஏற்றினாள்…

 

வீரா தோட்டத்திலிருக்க அவன் கைபேசி ஓசையெழுப்பி தன் இருப்பை காட்டிக் கொண்டிருந்தது. பின் மாலை பொழுது நெருங்கியிருந்தது.

 

அங்கிருந்த குழாயை திறந்து கையில் ஒட்டியிருந்த மண்ணை எல்லாம் கழுவியவன் பின் முகம் கைகால் எல்லாம் கழுவிவிட்டு வந்தான்.

 

அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த சிறிய அறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்த துவாலையில் துடைத்துக்கொண்டு அவன் சட்டையில் வைத்திருந்த கைபேசியை எடுத்தான்.

 

ரியாஸ் தான் அழைத்திருந்தான் அவனுக்கு. ‘இவன்கிட்ட பேசி ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது. போன் பண்ணலைன்னு திட்டுவானே!!’ என்று எண்ணிக்கொண்டு நண்பனுக்கு அழைத்தான்.

 

“என்னடா போன் பண்ணா எடுக்கறது இவ்வளவு நேரம். சார் ரொம்ப பிசியோ!! பின்ன நீ பிசியா தான்டா இருப்பே!!”

 

“பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணவே உனக்கு நேரம் சரியா இருக்கும்” என்ற ரியாஸை என்ன செய்வது என்பது போல தான் தோன்றியது வீராவுக்கு.

 

“ஆமாடா அப்படியே உன் தங்கச்சி கூட நாங்க ரொமான்ஸ் பண்ணிட்டாலும் அவங்க அப்படியே சந்தோசமா சரின்னு சொல்லிட்டாலும். ஏன்டா என்னை கிளம்பிவிடுற, நானே செம கடுப்புல இருக்கேன்”

 

“நீ வேற ரொமான்ஸ் அது இதுன்னு பேசிட்டு இருக்க… நேர்ல இருந்திருக்கணும் நீ செம மாத்து வாங்கியிருப்ப என்கிட்ட” என்றான் வீரா.

 

“ஏன்டா இன்னுமா உங்க பிரச்சனை தீரலை?? நான் அதெல்லாம் சரியாகிடுச்சுன்னு நினைச்சு தான்டா உனக்கு போன் பண்ணேன்”

 

“இவ்வளவு நாளா உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருந்ததுக்கும் அதான்டா காரணம். டேய் நீ என்கிட்ட சும்மா சொல்றியாடா” என்று ரியாஸ் கேட்க ஏகக்கடுப்பானான் வீரா.

 

“ஏன்டா நான் விளையாட்டுக்கு எதுவும் உன்கிட்ட சொல்லியிருக்கேனாடா எப்பவும்??”

 

“இல்லை, ஆனா செவ்வந்தி இவ்வளோ சிரிப்பா வாட்ஸ்அப்ல போட்டோ எல்லாம் போட்டிருக்காளேடா அதான் கேட்டேன்” என்று ரியாஸ் சொல்லவும் ‘என்ன வாட்ஸ்அப்ல போட்டோ போட்டாளா’

 

‘என்ன போட்டோ’ என்று அவன் யோசிக்க “இரு நான் உனக்கு அனுப்பறேன். இப்போ தான் DP நல்லாயிருக்கேன்னு மெசெஜ் பண்ணேன் செவ்வந்திக்கு”

“இதுவும் பாருங்கன்னு போட்டோஸ் போட்டு தள்ளிட்டா” என்று ரியாஸ் சொல்ல கட்டியவனுக்கு லேசாய்(!) புகைச்சலாய் தானிருந்தது.

 

“சரி ரியாஸ் நீ அனுப்பு நான் பார்க்கறேன். இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிடுறேன்டா”

 

“டேய்!! டேய்!! இரு!! இரு!! வைச்சுடாதா!! முக்கியமான விஷயம் சொல்லத் தான் கூப்பிட்டேன். நான் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு வர்றேன்”

 

“இந்த முறை பொண்ணு பார்த்து கல்யாணம் முடிச்சுட்டு தான் ஊருக்கு கிளம்புறதா இருக்கேன். நேரா மதுரைக்கு போயிட்டு அப்புறம் உன்னை பார்க்க வர்றேன்” என்று சொன்னவன் மேலும் ஓரிரு வார்த்தை பேசி பின் வைத்தான்.

 

அவன் போனை வைத்ததும் நெட்டை ஆன் செய்து ரியாஸ் அனுப்பிய போட்டோஸ் எல்லாம் பார்த்தான்.

 

‘அடிப்பாவி இந்த பூவெல்லாம் நீயே போய் பார்த்திட்டியா!! உனக்கு சர்ப்ரைஸ் பண்ணி நானே கூட்டிட்டு போய் காட்டணும்ன்னு நினைச்சேன்’

 

‘நீ பண்ண கூத்துல மறந்தே போச்சு!! இதை பார்த்து தான் அம்மிணிக்கு இவ்வளவு சந்தோசமா!! பார்றா எப்படி போஸ் கொடுக்கறா!!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அவளை ரசித்து தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘எனக்கு இப்படி முத்தம் கொடுத்திருப்பியா நீ!! நான் வைச்ச செடிக்கு தான் முத்தமெல்லாமா!! இதுக்கெல்லாம் உன்கிட்ட மொத்தமா வசூல் பண்ணலை நான் வீராவே இல்லை’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

 

மனம் சற்று லேசாகியிருந்தது அவனுக்கு. தோட்டத்தில் இருந்து கிளம்பியவன் காவலுக்கு இருந்தவரிடம் சொல்லிக்கொண்டு வேலியை அடைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

வீட்டிற்கு வந்தால் செவ்வந்தி ஏதோ அவனிடம் பேச நினைப்பது போல அவனுக்கு தோன்றியது. என்னவாக இருக்கும் என்று அவன் யோசிக்க சட்டென்று புரிந்து போனது அவனுக்கு.

 

வேண்டுமென்றே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான் அவன். இரவு உணவுக்கு பின் அவர்கள் அறைக்குள் நுழைந்திருக்க செவ்வந்தியோ மேலும் அரைமணி நேரம் கழித்து தான் அங்கு வந்தாள்.

 

வந்தவளுக்கு அவனிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கேட்கலாமா!! வேண்டாமா!! என்று குழம்பி தவித்து பின் மெதுவாய் ஆரம்பித்தாள்.

 

“என்னங்க” என்று.

 

வீராவோ வேண்டுமென்றே தலையை அங்கும் இங்கும் திருப்பி பார்த்தான். வேறு யாரையாவது கூப்பிட்டிருப்பாளாம். உறுதிப்படுத்திக் கொள்கிறாராம்.

“என்னையா??” என்று கேட்டவனை முறைப்பாய் பார்த்தாள்.

 

“முறைக்கிறன்னா கண்டிப்பா என்னை தான் கூப்பிட்டிருப்பே?? என்ன விஷயம்??”

 

“உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கணும்”

 

“ஹ்ம்ம் கேளு”

 

“இல்லை பின்… பின்னாடி நான் பார்த்தான்” என்று அவள் மொட்டையாய் சொல்லவும் “என்ன பின்னாடி, என் பின்னாடியா” என்றவன் வேண்டுமென்றே எழுந்து பின்னாடி என்ன இருக்கிறது என்பது போல் பார்த்தான்.

 

‘அடேய்!!’ என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டவள் “அந்த பின்னாடி சொல்லலை, நம்ம வீட்டு பின்னாடி”

 

“நம்ம வீட்டு பின்னாடி என்ன இருக்கு??”

 

“புதுசா நீங்க பூ கொண்டு வந்து வச்சிருக்கீங்கள்ள அதான்”

 

“ஓ!! அந்த சாமந்தி பூவா!! அதுக்கென்ன இப்போ!!” என்று அவன் சொல்லவும் ‘அடேய் அதுக்கு தான் அழகா செவ்வந்தின்னு ஒரு பேரு இருக்குல அப்புறம் ஏன்டா சாமந்தின்னு சொல்ற’

 

‘இந்த மண்ணாங்கட்டிக்கு எதுக்கு அந்த பூவை கொண்டு வந்து இங்க வைச்ச!!’ என்று திட்டித் தீர்த்தாள்.

 

அவனை நன்றாய் நாலு மொத்தலாம் போல தோன்ற அருகிருந்த தலையணையை கூட கையிலெடுத்துவிட்டாள்.

 

தான் செய்ய வருவது புரிய கையிலெடுத்த தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள் சமாளிப்பாய்.

 

“அது இங்க வைச்சு எவ்வளவு நாளிருக்கும்??”

 

“ஒரு இரண்டு மாசம் இருக்கும், மதுரை வந்துட்டு இங்க வந்த பிறகு வைச்சது” என்று அவன் சொன்னது அவள் வயிற்றில் பாலும் தேனும் வார்த்தது.

 

‘அவ்வளோ பிடிக்குமாடா உனக்கு என்னை!!’ என்று எண்ணி மனதார மகிழ்ந்தாள்.

 

“இரண்டு மாசமாவா!! ஆமா நீங்களே போய் வாங்கிட்டு வந்து வைச்சீங்களா!!” என்று ஆவலாய் கேட்டாள்.

 

வீரா அவளிடம் உன் ஞாபகமாய் தான் வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொல்லுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அவனோ “இல்லை பிரண்டு ஒருத்தன் கொடுத்தான்”

 

“அவன் வீட்டில உள்ளது அவன் வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகப்போறானாம். நாம தான் இங்க பூச்செடியா வச்சிருக்கோம்மேன்னு என்கிட்ட கொடுத்தான். அதை தான் பின்னாடி நட்டு வைச்சேன்”

 

“இன்னும் சில பூச்செடி கூட கொடுத்தான், எல்லாமே கொஞ்சம் கேப் விட்டு பின்னாடி தான் வைச்சிருக்கேன். நீ பார்க்கலியா!!” என்று கேட்க அவளுக்கு புசுபுசுவென்று கோபம் வந்தது.

 

‘போடா’ என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டு அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொண்டாள். வீரா அவளை வெறுப்பேற்றும் நோக்குடன் வேண்டுமென்றே கலாட்டா செய்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன செவ்வந்தி?? எதுவும் சொல்லாம பேசாம படுத்திட்ட?? தலையணை எடுத்து அடிக்கணும் போல இல்லையா உனக்கு…” என்றுவிட்டு அவன் சிரிக்க நிஜமாகவே தலையணையை அவன் மேல் வீசி எறிந்தாள் அவள்.

 

வீரா அதை எதிர்பார்த்திருந்தவன் அழகாய் கேட்ச் பிடித்தான். “அப்போ நீ சொன்னது எல்லாம் பொய்யா??” என்றாள்.

 

“எனக்கு பொய் சொல்லத் தெரியாது” என்று மேலும் சீண்டினான்.

 

கணவன் தன்னை சீண்டுகிறான் என்பது புரியவும் அவளுக்கு மனம் லேசானது. இன்னைக்கு சொல்லலைன்னா என்ன என்னைக்காச்சும் உன் வாயால சொல்ல வைக்குறேன்டா என்று சபதம் எடுத்துக்கொண்டாள் அவன் மனைவி….

 

வீராவுக்கும் செவ்வந்திக்கும் அன்று மனம் உண்மையிலேயே லேசாகிப் போனது. எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்ற ஒரு நிம்மதியான உறக்கம் அவர்களை தழுவியது.

 

மறுநாளே இருவரும் மீண்டும் முட்டி மோதிக்கொள்ளப் போவது அறியாமல் நிம்மதியாய் உறங்கினர் இருவரும்…

Advertisement