Advertisement

அத்தியாயம் – 24

 

வீரா குலையன்கரிசலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடிவிட்டது. மதுரைக்கு சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவன் மீண்டும் ஒரு இறுக்கத்துடனே சுற்றி வந்தான்.

 

தகப்பனுக்கு மனைவியின் இழப்பை விட மக்களின் கவலையே பெரிதாகிப் போனது. ஒரு புறம் தாமரை மறுபுறம் மகன் என்று இருவருக்கும் இடையில் சிக்கி அவருக்கு மூச்சு முட்டியது போலிருந்தது.

 

எப்படியோ தாமரையின் கணவன் ரவியை அவர் சமாதானம் செய்துவிட்டிருந்தார். நிலைமையை எடுத்துக் கூறவும் அவனும் புரிந்து கொண்டிருந்தான்.

 

இதற்கு நடுவில் வீராவே அவனை நேரில் கண்டு பேச ரவிக்கு தான் இப்போது குற்றவுணர்ச்சி ஆனது. செவ்வந்தியை தன் மனைவி பேசியது அதுவரையிலும் தெரியாதிருந்தவன் தானே அவன்.

 

இப்போது சக்திவேலின் மூலமும் அவன் அன்னையின் மூலமும் அதை அறிந்திருந்தவன் வீராவிடம் வெகுவாய் வருந்தி மன்னிப்பு கேட்டிருந்தான்.

 

இடையில் செவ்வந்தி வேறு ரவியிடம் தாமரையை பற்றி பேச வேண்டும் என்று சொல்லி வெளியில் வரச்சொல்லியிருந்தாள்.

 

ரவி யோசனையுடனே அவளெதிரே அமர்ந்திருந்தான். ‘இவ என்ன பேசப் போறா தாமரை பத்தி. எதுவும் கம்பிளைன்ட் பண்ணுறதுக்கு தான் வரச்சொல்லி சொல்லியிருப்பாளோ!!’ என்ற யோசனை அவனுக்கு.

 

எதுவாக இருந்தாலும் அவளே ஆரம்பிக்கட்டும் என்று அமர்ந்திருந்தான் அவன். ஆர்டர் எடுக்க வந்திருந்தவரிடம் “ரெண்டு காபி” என்றான்.

 

“வேற எதுவும் சாப்பிடுறியாம்மா??” என்றான் அவளிடம் திரும்பி.

 

“இல்லன்னா வேணாம் காபி போதும்” என்றவள் இன்னமும் எதுவும் பேசியிருக்கவில்லை.

 

“என்னம்மா ஏதோ பேசணும்ன்னு சொல்லிட்டு அமைதியா இருக்கே??” என்று ரவியே ஆரம்பித்துவிட்டான்.

 

“அது வந்து அண்ணா… அண்ணி அண்ணி பத்தி தான் பேசணும். அதான் எப்படி ஆரம்பிக்கறதுன்னு…” என்று இழுத்தாள்.

 

“ஹ்ம்ம் தெரியும்மா… எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன். நானே இதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னு நினைச்சேன்ம்மா…”

 

“எப்படி உன்கிட்ட பேசன்னு தெரியாமதான் அமைதியா இருந்தேன்” என்றான் ரவி.

 

“அண்ணா நான் பேச வந்த விஷயம் அதில்லை. ஆனா நான் பேச வந்த விஷயத்துக்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கு” என்றாள் மீண்டும் பீடிகையாய்.

 

சத்தியமாக ரவிக்கு எதுவுமே புரியவில்லை அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று. “எதுவா இருந்தாலும் நேராவே சொல்லும்மா” என்று சொல்லியே விட்டான்.

 

“சரிண்ணா நானும் நேராவே சொல்லிடுறேன். அண்ணிக்கு கொஞ்சம் சின்ன ப்ராப்ளம் இருக்கு. அதாவது அவங்க கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க”

 

“என்ன ஸ்ட்ரெஸா??” என்றான் அவன்.

 

“ஹ்ம்ம் ஆமாண்ணா!!”

 

“நீ சொல்றது நிஜமாவே எனக்கு புரியலைம்மா, எதுனாலும் உடைச்சு சொல்லும்மா. மனசுக்கு ஏதோ கவலையாகுது” என்றான் நிஜமாகவே கவலையுடன்.

 

“அண்ணா இதுல பயப்பட ஒண்ணுமில்லை. இது பெரிய ப்ராப்ளமும் இல்லை. ஆனா அவங்களுக்கு உடனே பார்த்தாகணும்”

 

‘அய்யோ இவ வேற எதுவோ சொல்றாளே!! உடைச்சு சொல்லிட்டா நிம்மதியா இருக்கும் போல்’ என்று உள்ளுக்குள் தவித்தான் ரவி.

 

“சாரிண்ணா நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்”

அவன் பார்வை அதை ஆமோதிப்பாய் பார்த்தது. “தெளிவாவே சொல்றேன், அண்ணி என்னை பேசினதை எல்லாம் நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்க தானே!!”

 

“ஹ்ம்ம்”

 

“அவங்க இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் பேசி நீங்க கேட்டோ பார்த்தோ இருக்கீங்களா!!”

 

“இல்லைம்மா!! எங்கம்மா அவளை பேசினா கூட அதைப்பத்தி எல்லாம் என்கிட்ட அவ குறை சொன்னது கிடையாது. அவ நெறைய பேசுவா தான் ஆனா அதெல்லாம் என்கிட்ட மட்டும் தான். வேற யாரையும் அவ பேசி நான் பார்த்ததில்லை” என்றான்.

 

“உங்களுக்கே தெரியும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்க வீட்டுக்கு வந்தப்போ அம்மா ஏதோ ஒரு வார்த்தை சொல்லிட்டாங்கன்னு என்கிட்ட அண்ணி மன்னிப்பு கேட்டாங்க”

 

“ஹ்ம்ம் ஆமாம்மா”

 

“அப்படிப்பட்டவங்க என்னை திடீர்ன்னு ஏன் இப்படி பேசுறாங்கன்னு நீங்க யோசிக்கலையா??”

 

அவன் இப்போதும் அவளை புரியாமல் தான் பார்த்தான். “ஏதோ ஒரு பயம் அண்ணா அவங்களுக்கு. நீங்களே சொன்னீங்களே அம்மா பேசினா கூட உங்ககிட்ட அவங்க சொன்னதில்லைன்னு”

 

“அவங்களோட குணம் மாறிப்போனது எப்போன்னு தெரியுமா!! அத்தை இறந்து போனதுக்கு அப்புறம்.. பொதுவா பெண்களுக்கு கர்ப்பகாலத்தில அம்மாவோட அருகாமை தேவைப்படும்”

 

“அவங்க சந்தேகத்தை எல்லாம் மனம்விட்டு அவங்க அம்மாகிட்ட தான் கேட்பாங்க. அம்மாவோட கைமணத்துக்கு மனசு ஏங்கும்”

 

“அவங்க ஒரு குழந்தையை சுமந்துகிட்டு இருக்கற அந்த நேரத்துல அம்மாவோட மடி சாய்ஞ்சுக்கணும்ன்னு தோணும்”

 

“ஆனா அது அவங்களுக்கு கிடைக்கலை. எங்க கல்யாண நேரத்துல தான் அவங்க சேர்ந்தாப் போல ஒரு அங்க கொஞ்ச நாள் இருந்தாங்க”

 

“அதுக்கு முன்னாடி நீங்க இங்க கூட்டிட்டு வரலை. அப்கோர்ஸ் டிராவல் கூடாதுன்னு கூட்டி வந்திருக்க மாட்டீங்க”

 

“அதுக்கு பிறகு எங்க கல்யாணம், அதுக்கு வந்த பிறகு திரும்பி போனவங்களை சீமந்தத்துக்கு தான் கூட்டிட்டு வந்தோம்”

 

“அதுவும் கூட ஒன்பதாம் மாசம் தான் கூட்டிட்டு வந்தது. ஏழாம் மாசமே கூட்டிட்டு வந்திருந்தா அத்தை கூட அவங்க கொஞ்ச நாள் இருந்திருப்பாங்க”

 

“அம்மாவை இழந்து தவிக்கிற நேரத்துல முதல் பிரசவத்தை பற்றிய பயம் இருக்கற நேரத்துல யாரு என்ன சொன்னாலும் அதை நினைச்சு மனசு கிடந்து பயப்படும்”

 

“அதைப்பத்தியே அதிகம் யோசிக்கும். அந்த நேரத்துல தான் அம்மா அண்ணியை வீட்டுக்கு கூட்டுட்டு போறோம்ன்னு சொன்னாங்க”

 

“என்னால பார்த்துக்க முடியாதுன்னும் அதனால கூட்டிட்டு போறதாவும் சொன்னாங்க. அண்ணிக்கு இங்க இருக்க ஆசை”

 

“அதை நீங்க யாரும் அப்போ புரிஞ்சுக்கலை. அவங்க மனசு பூரா குழப்பம் எப்படியோ அவங்களை எங்களோட வைச்சுக்கிட்டோம்”

 

“அப்போ அம்மா பேசுனது எல்லாம் அவங்க மனசுல பதிஞ்சு போச்சு. என்னால பார்த்துக்க முடியாதுங்கறதையும் சேர்த்து தான் சொல்றேன்”

 

“அதுல ஆரம்பிச்சது தான் எல்லாமே அந்த பயம் தான் அவங்களை அதிக பிரஷர் கொடுத்து அவங்களுக்கு லேபர் பெயின் வந்திடுச்சு நம்ம வர்ஷினியும் பிறந்திட்டா”

 

“அவங்களோட பயமே என்னால பார்த்துக்க முடியாதோங்கறதுல ஆரம்பிச்சது. அப்பப்போ அவங்க என்கிட்ட அது மாதிரி பேசும் போது என்னாச்சு இவங்களுக்குன்னு மட்டும் தான் யோசிச்சேன்”

“சமயத்துல அவங்களுக்கு பதிலுக்கு பதிலும் கொடுத்திருக்கேன். அப்போ கூட எனக்கும் தெரியலை அவங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு”

 

“அவங்ககிட்ட நான் கொஞ்ச நாள் பேசாம கூட இருந்திருக்கேன். அதுக்கு பிறகு நான் பேச ஆரம்பிச்சப்போ சில விஷயங்களை உணர்ந்தேன்”

 

“நாங்க ரெண்டு பேரு மட்டும் இருக்கும் போது எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வந்ததில்லை தெரியுமா!!”

 

“எப்போ யாராச்சும் புதுசா இடையில வர்றாங்களோ அப்போ தான் அவங்க அப்படி நடந்துக்க ஆரம்பிச்சாங்க”

 

“அவங்களுக்கு யாருமில்லைன்னு தோணியிருக்கலாம். ஈவன் அவங்களுக்கு பிரண்ட்ஸ் கூட யாரும் அதிகமில்லைன்னு நினைக்கிறேன்”

 

“எதையும் யார்கிட்டயும் அவங்க பகிர்ந்துகிட்டது இல்லை. அத்தை… அத்தை மட்டும் தான் அவங்ககிட்ட மட்டும் தான் அண்ணி மனசு திறந்து பேசியிருக்காங்க”

 

“உங்களுக்கு கூட பிறந்தவங்க யாரும் இருந்திருந்தா வீட்டில நாத்தனார் இல்லை உங்க தம்பி இல்லை அண்ணன் மனைவின்னு யாரும் இருந்திருப்பாங்க. அப்போ ஒரு வேளை அவங்க மனம்விட்டு பேசுற வாய்ப்பு கிடைச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்”

 

“அவங்களை பொறுத்தவரை நான் ரொம்ப சின்னவ, அது உண்மை தான். அதுனால என்கிட்ட எதையும் மனசுவிட்டு பேச அவங்களோட எண்ணம் தடுத்திருச்சு”

 

“நீங்க சொல்றதை பார்க்கும் போது அத்தைக்கு அப்புறம் அவங்க அதிகம் பேசி பழகுறது உங்ககிட்ட தான்னு தோணுது”

 

“நீங்களும் எப்போவாச்சும் தான் வந்து போவீங்க. அப்படி வந்து போற உங்ககிட்ட அவங்க மனசுவிட்டு பேசியிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்”

 

“நான் பார்க்க மாட்டேன், பார்க்கலைன்னா என்ன ஆகும்!! யாரும் குறை சொல்வாங்களா!! இப்படி ஆரம்பிச்ச அவங்களோட எண்ணம் முழுக்க என்னைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சுது”

 

“என்னை கண்காணிக்க ஆரம்பிச்சு என்னை குறை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க பேசினதுல எனக்கு வருத்தம் இருந்தாலும் என்னால அவங்க மேல கோபப்பட முடியலை”

 

“ஒரு டாக்டரா இருந்து அவங்களை பார்க்கும் போது அவங்களோட பிரச்சனை மட்டும் தான் தெரிஞ்சுது எனக்கு”

 

“கார்த்திக் அம்மாகிட்ட பேசினேன் அப்போவே. அவங்க அண்ணியை நேர்ல கூட்டிட்டு வரச்சொன்னாங்க. இது போல சில அழுத்தங்களை பெண்கள் தங்களோட பேறுகாலத்தில சந்திக்கிறதுண்டுன்னு அவங்க சொன்னாங்க”

 

“எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்கறதில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு மாதிரி பிரச்சனைகள் வர்றதுண்டு. சிலருக்கு எந்த பிரச்சனையும் இருக்கறதில்லை”

 

“தாமரை அண்ணியை பொறுத்தவரை அத்தையை இழந்தது தான் அவங்களோட பெரிய இழப்பே. அதுல ஆரம்பிச்சது தான் எல்லாமே”

 

“இப்போ நான் சொல்றது உங்களுக்கு புரியுதா அண்ணா. ப்ளீஸ் அவங்களை எதுவும் யாரும் திட்டாதீங்க. எனக்காக சப்போர்ட் பண்ணிக் கூட அவங்ககிட்ட பேசாதீங்க”

 

“அது என் மேல வெறுப்பை வரவைக்கிறது மட்டுமில்லை. அவங்க மேலே உங்களுக்கும் வெறுப்பு வர காரணமாகும்”

 

“அவங்களை தனிமைப்படுத்தும், இப்போவே அவங்க அது போல தான் பீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பத்தாததுக்கு இவர் வேற நான் உனக்கு அண்ணன் இல்லைங்கற மாதிரி பேசிட்டாங்க”

 

“நான் கார்த்திக் அம்மாகிட்ட பேசிட்டேன் அண்ணா. நீங்க தான் எப்படியாச்சும் அவங்களை கன்வின்ஸ் பண்ணி ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்” என்று அவள் சொல்லி முடிக்கவும் தலையில் கை வைத்து தான் அமர்ந்திருந்தான் ரவி.

 

முதலில் செவ்வந்தி பேசுவதை அவன் உள்வாங்கவே சற்று நேரமெடுத்து அவனுக்கு. அவள் பேசியது அவன் மூளையை சென்றடைந்த பின்னரே தலையில் இருந்து கையை எடுத்தான் அவன்.

 

‘தாமரை அவ்வளவு பேசியும் இந்த பொண்ணு அவளுக்காக பார்க்குதே. இதை என்னன்னு சொல்லுறது’ என்பது தான் அவனுக்கு ஆச்சரியமே!!

 

“எப்படிம்மா உன்னால இந்த விஷயத்தை இவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியுது. யாரா இருந்தாலும் இப்படி யோசிப்பாங்களான்னு எனக்கு தெரியலை!!” என்று மனதில் இருந்ததை கேட்டான்.

 

“ஒருத்தர்க்கு உடம்பு சரியில்லைன்னா நாம அவங்க எப்படியோ போகட்டும்ன்னு விட்டிருவோமா என்ன!! அண்ணிக்கு மனசு சரியில்லை அண்ணா அவங்களை எப்படி என்னால விட முடியும்”

 

“அவ பெரிசா ஒண்ணும் உனக்கு செய்யலையேம்மா!! நீ யாரும்மா?? நீ எதுக்கும்மா இதெல்லாம் செய்யணும்?? இதெல்லாம் செய்யணும் உனக்கு எதுவுமில்லையேம்மா” என்று மற்றவர்கள் போலவே அவனும் அதையே சொன்னான்.

 

“நானும் இந்த குடும்பத்துல ஒருத்தி தானே அண்ணா!! நான் யாருன்னு இப்போ மறுபடியும் கேளுங்களேன்” என்றாள்.

 

“நீ யாரும்மா??”

 

“Mrs வீரபாண்டியன்

Daughter in Law of Mr சக்திவேல் & Mrs மனோரஞ்சிதம்

ரஞ்சிதம் இல்லம், குலையன்கரிசல்” என்றாள்.

 

அவள் சொன்ன பதிலே சொன்னது அவள் யார் எதற்காக இதெல்லாம் செய்ய நினைக்கிறாள் என்று. அந்த வீட்டின் அங்கமான என்னை போய் நீ யாரும்மான்னு கேட்டியே என்பது போல் இருந்தது.

 

“உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியலை. நன்றி எல்லாம் சொல்லி உன்னை தனியாக்க விரும்பலை”

 

“சீக்கிரமே அவளை டாக்டர்கிட்ட கூட்டி போய் காட்டுறேன். சரிம்மா நான் கிளம்பறேன், நீ எப்போம்மா ஊருக்கு கிளம்பறே??”

 

“நாளைக்கு கிளம்பறேன் அண்ணா. என்னோட இன்டர்ன்ஷிப் முடிஞ்சு போச்சு. அதான் உங்ககிட்ட இந்த விஷயம் பேசிட்டு ஊருக்கு கிளம்பலாம்ன்னு இருந்தேன்”

 

“இது கார்த்திக் அப்புறம் அவங்க அம்மா நம்பர்” என்று சொல்லி அவனை குறித்துக் கொள்ளச் சொன்னாள்.

 

ரவியும் அதை குறித்துக்கொண்டவன் “சரிம்மா பத்திரமா போயிட்டு வா” என்றுவிட்டு அவளிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான் ரவி.

____________________

 

அதிகாலையிலேயே ஊருக்கு கிளம்பியிருந்தாள் செவ்வந்தி. ‘எப்படியும் பத்துமணிக்குள்ள ஊருக்கு போயிருவோம். எங்க போறது அந்த வீட்டுக்கா!! இந்த வீட்டுக்கா!!’ என்ற குழப்பம் அவளுக்கு.

 

இன்னமும் வீராவின் மேல் இருந்த வருத்தம் அவளுக்கு போகவில்லை. அதெப்படி அவன் தாமரையிடம் சொல்லலாம் என்ற கேள்வி இன்னமும் அவளை சுற்றிவந்தது.

 

‘அவன் சொல்ல வந்ததை தான் கேட்கவில்லையே!! எதுவும் காரணமிருக்குமோ!!’ என்று ஒரு மனம் அவனுக்காய் பரிந்தது.

 

‘எந்த காரணமிருந்தாலும் சொல்லியிருக்க கூடாது’ என்று மறுமனம் அவனுக்கு எதிராய் குற்றம் சாட்டியது அவளிடம்.

 

படங்களிலும் கதைகளிலும் மட்டுமல்ல நம் மனதையும் முதலில் வெல்வது வில்லனாக தானே எப்போதும் இருக்க முடியும். அவளின் எதிர்மறை எண்ணங்களே வில்லனாகி இப்போது அவள் மனதை ஜெயித்தது.

 

மனதை ஜெயிக்க எதிர்மறை எண்ணங்களே முதலில் சிறு சலனமாய் தோன்றும்.

அதற்கு மதிப்பு கொடுக்காமல் நாம் நம் மனதை திடமாய் வைத்துக்கொண்டாள் அங்கு ஜெயிப்பது எப்போதும் நல்லெண்ணங்களே!!

 

சிறு சலனதிற்கும் மதிப்பு கொடுக்கும் பட்சத்தில் அதுவே முழு மனதையும் ஆட்டிப்படைத்துவிடும். செவ்வந்தியும் சலனத்திற்கு மதிப்பு கொடுத்துவிட்டாள்.

 

அதுவே ஒவ்வொரு விஷயத்திலும் வீராவிற்கு எதிராகவே பேசிக்கொண்டிருந்தது. பார்ப்போம் அவள் மனதில் வீராவை பற்றிய நல்லெண்ணங்கள் மேலெழுந்து அவள் மனதை ஜெயிக்குமா என்று.

 

ஊருக்கு அவள் வந்து இறங்கவும் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது.

 

வீராவை பார்த்து இரண்டு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அவனை பார்க்க வேண்டும் போலவும் பார்க்கக் கூடாது போலவும் மனம் இரண்டாய் அடித்துக்கொண்டது.

 

மெதுவாய் வீட்டை நோக்கி எட்டி நடைப்போட்டாள். வீட்டை நெருங்க நெருங்க மனதிற்குள் பெரும் பிரளயம் ஒன்று உண்டானது.

 

இருதலைகொள்ளி எறும்பை போல் இந்த மனம் தவித்தது. இங்கா அங்கா என்று கண்கள் இருவீட்டையும் அளந்து கொண்டிருந்தது.

 

‘ச்சே இரண்டு வீடும் ஏன் ஒன்றாக இருக்கிறது. அருகருகே இருப்பதால் தானே இவ்வளவு யோசனை. இதுவே இரண்டும் தனியாக இருந்திருந்தால் யோசிக்காமல் அம்மா வீட்டிற்கே சென்றிருக்கலாம்’ என்று தோன்றியது தான் தாமதம்.

 

அவள் எண்ணங்கள் வேறு எதையும் அதற்கு மேல் யோசிக்கவில்லை. அவள் கால்கள் மதுராம்பாள் வீட்டை நோக்கிச் சென்றது.

 

அவள் தன் கணவன் பின்னோடு வந்ததை காணவேயில்லை. மனைவி அவள் அன்னை வீட்டிற்கு செல்வதை கண்களில் ஒரு வலியுடன் தான் பார்த்திருந்தான் அவன்.

 

அவள் ஊருக்குள் நுழைந்த போதே கண்டுவிட்டிருந்தான் அவன். காலையில் எழுந்து ஊருக்கு வெளியே இருந்த தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச கிளம்பிருந்தவன் அவளை பார்த்துவிட்டிருந்தான்.

 

மனைவி யோசனையுடனே மெதுவாய் நடந்துக் கொண்டிருந்ததை பார்த்து அவள் பின்னேயே நடந்து வந்தவனை அவள் தான் கவனிக்கவில்லை.

 

வீட்டிற்குள் செல்லாமல் பத்து நிமிடத்திற்கும் மேல் அவள் எதுவோ யோசனை செய்ததையும் கண்டுக்கொண்டு தானிருந்தான்.

 

பின் அவள் மதுராம்பாள் வீட்டிற்கு சென்றதை கண்டதும் மனதில் வலி எழுந்தது அவனுக்கு. ‘அப்படி என்ன பிடிவாதம் இவளுக்கு??’

 

‘வரவைக்கிறேன் உன்னை எப்படி வரவைக்கிறேன்னு பாருடி’ என்று மனதிற்குள்ளாக சூளுரைத்துக் கொண்டான்.

 

முகத்தில் இருந்த எண்ணங்களை எல்லாம் தள்ளிவைத்து எப்போதும் போல் இறுக்க முகமுடி அணிந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

 

காலை சாப்பாட்டை எடுத்துக்கொண்டு முல்லை வந்திருந்தாள் போலும். அங்கு தான் அமர்ந்திருந்தாள்.

 

“என்ன அத்தான் இன்னைக்கு நேரமாகிடுச்சு போல?? உங்களுக்கு டிபன் பரிமாறத் தான் நான் வைடிங் அத்தான்” என்றவளுக்கு புன்னகையை பதிலாக கொடுத்து பின் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு வந்தான்.

 

“உட்காருங்க அத்தான்”

 

“இனிமே காலை சாப்பாடு அங்க இருந்து எடுத்திட்டு வரவேண்டாம்மா” என்றான் அவன்.

 

சக்திவேலும் அங்கு தானிருந்தார். ‘என்னாச்சு இவனுக்கு’ என்ற ரீதியில் தான் மகனை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“சரி அத்தான் நாளையில இருந்து கொண்டு வரலை. ஆனா எப்படி சாப்பிடுவீங்க, மதியம் சமைக்கிற அக்காவை காலையிலயும் சமைக்க சொல்லப் போறீங்களா!!”

 

“இல்லை நானே சமைக்க போறேன்” என்று குண்டை தூக்கி போட்டான்.

 

“என்னது நீங்களா!!” என்று வாய் பிளந்தாள் அவன் மனைவியின் தங்கை.

 

“ஏன்ம்மா எனக்கு சமைக்க தெரியாதுன்னு நினைச்சியா!! கொஞ்சம் கொஞ்சம் செய்வேன்”

 

“எதுக்கு அத்தான் இந்த ரிஸ்க் எல்லாம்”

 

“எப்பவும் யார் தயவும் எதிர்பார்த்திட்டே இருக்கக்கூடாதும்மா”

 

“புரியலை அத்தான்”

 

“உனக்கு இதெல்லாம் புரிய வேணாம் விடும்மா. சரி நீ வீட்டுக்கு கிளம்பு”

 

“இப்போ சாப்பிடுங்க நான் கிளம்புறேன்”

 

“வேணாம்ன்னு முடிவு பண்ண பிறகு அதை எதுக்கு நாளை வரை தள்ளிப் போட்டுக்கிட்டு இன்னைக்கே ஆரம்பிச்சுட வேண்டியது தானே”

 

“அத்தான் நீங்க இன்னைக்கு ஏதோ வித்தியாசமா பேசுறீங்க. எனக்கு புரியலை, எது எப்படி இருந்தாலும் போகட்டும் அத்தான் இன்னைக்கு மட்டும் சாப்பிடுங்க ப்ளீஸ்” என்றாள் அவள்.

 

“முல்லை சொன்னா புரிஞ்சுக்கோ!! நீ வீட்டுக்கு கிளம்பு” என்றவன் சமையலறைக்குள் புகுந்து கொண்டான்.

 

முல்லையோ அங்கிருந்த சக்திவேலை பார்க்க அவருமே புரியாமல் தான் நின்றிருந்தார் அங்கு. “நீ போம்மா நான் பார்த்துக்கறேன்” என்று அவளிடம் சொல்லி அனுப்பி வைத்தார். பின்னர் “வீரா” என்று அழைக்க மகன் வெளியில் வந்தான்.

 

முல்லை சென்றுவிட்டாளா என்று வெளியில் வரை சென்று பார்த்து உறுதி செய்த பின்னே தான் வந்தான்.

 

“சொல்லுங்கப்பா”

 

“என்னாச்சுப்பா எதுக்கு இப்படி வித்தியாசமா நடந்துக்கற??”

 

“இதுக்கு பதில் நம்ம வீடு தேடி வரும்ப்பா… இன்னைக்கோ இல்லை நாளைக்கோ கூட வரலாம்” என்றவன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சமையலறை சென்றவன் சிறிது நேரம் கடந்து உப்புமா போல் ஏதோ எடுத்துக்கொண்டு வந்தான்.

 

“வீரா இன்னைக்கு மட்டுமாச்சும் சாப்பிட்டு இருக்கலாம்ல”

 

“சாப்பிட்டு தான் இருப்பேன்… ஆனா வேணாம் எனக்கும் பிடிவாதம் உண்டுப்பா” என்றான்.

 

மகனின் பேச்சு அவருக்கு புரியவேயில்லை. மறுநாள் மகன் வெளியே சென்ற பிறகு வீட்டிற்கு மருமகள் வந்து நிற்கும் வரை.

 

“வாம்மா நீ எப்போ வந்தே?? சொல்லவேயில்லை சொல்லியிருந்தா வீராவை அனுப்பியிருப்பேன்ல. பஸ்ல வந்தியா!!” என்று கேள்வியாய் அடுக்கினார் அவர்.

 

“நேத்து காலையில வந்தேன் மாமா” என்று அவள் சொன்ன பதிலில் அவர் திகைத்து தான் போனார்.

 

“அப்போவே ஏன்மா நீ வீட்டுக்கு வரலை??” என்றார் பார்வையில் கூர்மையை தேக்கி.

 

“அது… அது” என்றவள் “நான் கொஞ்ச நாள் எங்க வீட்டில இருக்கேன் மாமா” என்றாள்.

 

அவர் முகத்தை பார்த்து அவளால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

 

“ஏன் மாமா வீட்டில சாப்பாடு வேணாம்ன்னு சொல்லிட்டீங்களாம்?? நம்ம வீட்டுக்கு சமைக்க வர்ற அக்காவையும் இனி வரவேணாம்ன்னு சொல்லிட்டீங்களாம்?? ஏன் மாமா??”

 

இதற்கு பதில் அவர் எங்கே சொல்ல முடியும், செய்தது வீராவாயிற்றே!!

“வீராவே சமைக்கிறான்ம்மா” என்று மட்டும் சொன்னார் அவர்.

 

“ஓ!!” என்றவள் “எதுக்கு மாமா அவருக்கு சிரமம்??”

 

“இதுல என்ன சிரமம் இருக்கும்மா!!” என்றார்.

 

“அவர் செஞ்சதா நீங்க சாப்பிடுறீங்க??”

 

“ரெண்டு நாளா அதான் சாப்பிடுறேன்”

 

“எப்படி செய்யறார் மாமா??”

 

“இப்போ தானே கத்துக்கறான், கொஞ்சம் முன்ன பின்ன தானே இருக்கும். பரவாயில்லைம்மா” என்றார் அவர் மருமகளை வெறுப்பேத்தும் நோக்குடன்.

 

வீரா நன்றாகவே தான் சமைத்தான், நிச்சயம் குறை சொல்லும் அளவிற்கு அவன் சமையல் இல்லை. மருமகள் இங்கு வரவேண்டுமே அதற்காகவே அப்படி சொன்னார்.

 

“இதெல்லாம் தேவையா மாமா?? நீங்க எப்பவும் போல அங்க வந்து சாப்பிடுங்களேன்” என்று அழைப்பு விடுத்தாள் அவருக்கு.

 

“அதெல்லாம் சரியா வராதும்மா, வீராக்கு பிடிக்காது” என்று ஒரு போடு போட்டார் அவர்.

 

செவ்வந்தியோ அமைதியாய் நின்ற இடத்தில் இருந்தே யோசிப்பதை பார்த்துக் கொண்டு தானிருந்தார்.

 

“நான் ஒண்ணு கேட்கலாமா??”

 

“கேளுங்க மாமா”

 

“உங்களுக்குள்ள என்னம்மா பிரச்சனை?? அது தாமரையாலயா??”

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா”

 

“அப்புறம் ஏன்மா நீ உங்க வீட்டில இருக்க??”

 

“அது அங்க நான் ரொம்ப இருக்கவே இல்லைல. அம்மா கூட இருக்கணும் போல இருந்துச்சு மாமா அதான். ஏன் மாமா நான் அங்க இருக்கக்கூடாதா??” என்று கேட்டாள்.

 

“நீ அம்மா வீட்டுக்கு போறது தப்புன்னு நான் சொல்லலை” என்றவர் சற்று இடைவெளி விட்டார்.

 

“நான் ஒண்ணு சொல்றேன்ம்மா அதை கேட்குறதும் கேட்காததும் உன்னிஷ்டம். இதை வீராக்கு அப்பாவா நான் சொல்லலை”

 

“என் பிரண்டோட பொண்ணுங்கற முறையில தான் உனக்கு சொல்றேன். நீ எனக்கும் மக மாதிரிங்கற உரிமையில தான் சொல்றேன்” என்று நிறுத்தினார் அவர்.

 

‘இவர் என்ன சொல்லப் போகிறார்’ என்று அவரை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

 

“உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. அது தாமரையாலயா அப்படின்னும் எனக்கு தெரியாது”

 

“ஆனா உங்க பிரச்சனை அப்போல இருந்து தான்னு என்னால ஊகிக்க முடியுது. எதுவா இருந்தாலும் பேசுங்க, பேசினா தீராதது எதுவுமில்லை”

 

“தனித்தனியா இருந்து எந்த முடிவும் செய்ய முடியாது. நீங்க சேர்ந்து இருந்த காலமே ரொம்ப குறைவு”

 

“இதுக்கு மேலேயும் தனித்தனியா இருக்கறது எனக்கென்னமோ சரியாவே படலை. சேர்ந்து பேசி சீக்கிரமே ஒரு நல்ல முடிவுக்கு வாங்க”

 

“நீங்க இப்படி இருக்கறது உங்க அத்தையும் விரும்ப மாட்டா” என்றவர் அதற்கு மேல் எதுவுமில்லை என்பது போல் அமைதியாகிவிட்டார்.

 

செவ்வந்தியும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை, அவரிடம் தலையாட்டி விடைபெற்றவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

 

முதல் நாள் அவள் வீட்டிற்கு வந்ததில் இருந்து சிவகாமி கேட்டுக்கொண்டு தானிருக்கிறார் இங்கு எதற்கு வந்தாய் என்று.

 

எங்கே அவள் பதில் சொன்னாள் தானே அவரிடம் குதர்க்கமாய் “ஏன் நான் இங்க இருக்கறது உனக்கு பிடிக்கலியா, மறுபடியும் ஹாஸ்ட்டலுக்கு போகணுமா!!” என்று கேட்டுவைக்க அவர் வாயை மூடிக் கொண்டார்.

 

வீரா காலை உணவு வேண்டாம் என்றதும் அதை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த முல்லைக்கு அப்போது தான் புரிந்தது வீரா ஏன் உணவை வேண்டாம் என்றான் என்று.

 

செவ்வந்தி வீட்டிலிருந்ததை கண்டு அவளுக்கு மகிழ்ச்சியே!! ஆனால் அவள் ஏன் இங்கு வந்திருக்கிறாள் அத்தான் வீட்டிற்கு போகாமல் என்று தான் யோசித்தாள்.

 

எதுவும் பிரச்சனையாய் இருக்குமோ இருவருக்கும் என்று தான் அவள் மனம் யோசித்தது. நேரே ஆச்சியிடம் சென்று விசாரிக்க அவரோ உன் வேலையாய் பார் என்றுவிட முல்லை அமைதியானாள்.

 

வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லாம் கேள்வி கேட்டுவிட எப்போதும் கேள்வி கேட்கும் மதுராம்பாள் அமைதியாய் இருப்பது செவ்வந்திக்கு ஆச்சரியமே.

 

மாலை வீட்டிற்கு வந்த வீராவிற்கு செவ்வந்தி வந்து போன விஷயத்தை கூறினார் தந்தை. அப்படியா என்று கேட்டுக்கொண்டவன் வேறு எதுவும் சொல்லவில்லை.

 

‘புருஷனும் பொண்டாட்டியும் எதுல ஒத்துமையோ இல்லையோ தெரியாது, ஆனா என்ன பிரச்சனைன்னு சொல்லாம இருக்கறதுல ரொம்ப ஒத்துமை’ என்று நினைத்துக்கொண்டார் அவர்.

 

‘ரஞ்சிதம் இவங்களை இப்படியே தனியா இருக்க விடாதே!! எதாச்சும் பண்ணு!! இந்த வீட்டில இனி சந்தோசம் மட்டும் தான் இருக்கணும்’ என்று எப்போதும் போல் பாரத்தை மனைவியிடமே போட்டார் அவர்.

 

சற்று முன்னர் தான் ரவி அவனிடம் பேசியிருந்தான். செவ்வந்தி அவனை சந்தித்து பேசியது குறித்து சொன்னவன் அவளை அவ்வளவு சிலாகித்து பெருமையாய் பேசியிருந்தான் வீராவிடத்தில்.

 

வீராவுக்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘இவளை எந்த கணக்கில் சேர்த்துக்கொள்ள’ என்ற ரீதியில் தான் இருந்தான் அவன். ‘நான் என்ன தான் செய்யணும்ன்னு நிஜமாவே எனக்கு புரியலை’ என்ற புலம்பல் தான் அவனிடத்தில்.

 

மனதிற்குள் ஏதோ முடிவெடுத்தவன் போல் அமைதியாகவே நடமாடிக் கொண்டிருந்தான் அவன்.

 

சக்திவேலுக்கு மகன் நிம்மதியில்லாமல் தவிப்பது நன்றாகவே புரிந்தது. மனம்விட்டு பேசினால் தான் கருத்து கூறலாம் எதுவும் சொல்லாமலிருந்தால் அவரும் தான் என்ன செய்வார்.

 

அவருக்குமே வெளியே வேலை இருந்தும் செல்லப் பிடிக்காமல் மகனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.

முன்பாவது ரஞ்சிதம் வீட்டிலிருந்தார் அதனால் அவர் அதிக பொறுப்பை எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது மனைவி இல்லாததால் தான் தான் இருந்து பார்க்க வேண்டும் என்று உணர்ந்து தம் மக்களின் நலம் விரும்பினார் அவர்.

 

“அப்பா நான் பக்கத்து வீடு வரை போயிட்டு வர்றேன்” என்றான் அவன்.

 

“நானும் வரணுமாப்பா??”

 

“இல்லைப்பா நான் போயிட்டு உடனே வந்திடறேன்”

 

“மருமகளை…”

 

“இழுத்திட்டு வர்றேன்…” என்று அவன் சொல்லவும் சக்திவேல் ஆவென்று பார்த்திருந்தார்.

 

வீரா ஏதோ முடிவெடுத்துவிட்டான் என்பது புரிந்தது. நடப்பவை நல்லவைக்கே என்று எண்ணிக்கொண்டார் அவர்.

 

வீராவோ அதிரடியாய் தான் வீட்டிற்குள் நுழைந்திருந்தான். அவன் வேகமாய் வரும் போதே முல்லை கவனித்துவிட்டாள் அவனை.

 

“டாக்டர் இருக்காங்களா??” என்று தான் கேட்டான் அவன்.

 

“ஹான்…” என்றவள் “டாக்டரா??” என்று அவள் விழிக்கும் போதே மதுராம்பாள் வந்திருந்தார்.

“உள்ள வாப்பா…” என்றார்.

 

“டாக்டரம்மா இருக்காங்களா ஆச்சி??” என்றான்.

 

“உள்ள தான் இருக்காங்க” என்றார் அவரும் சளைக்காமல்.

 

“பார்க்கணுமே!! பார்க்கலாமா!!”

 

“ஓ!! போய் பாருங்க!!” என்றவர் அவள் அறையை நோக்கி கையை காட்டினார்.

 

“ஆச்சி… அத்தான்…” என்று இழுத்த முல்லையை இழுத்துக்கொண்டு அவர் உள்ளே சென்றார்.

 

“உள்ள வரலாமா??”

 

“யாரு??”

 

“பேஷன்ட்”

 

“என்ன???” என்றவள் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

 

வீரா இப்போது உள்ளே வந்திருந்தான்.

 

“என்ன விஷயம்??” என்றாள் சிடுசிடுப்பாய்.

 

“டாக்டரை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன். என் தங்கச்சிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி பீரியா அட்வைஸ் எல்லாம் பண்ணீங்களாமே!! எனக்கும் கூட கொஞ்சம் உடம்புக்கு முடியலை. அதான் காட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்”

 

‘இவர் என்ன சொல்றார். ரவி அண்ணாகிட்ட பேசியிருப்பாரோ!! உடம்பு சரியில்லைன்னு என்கிட்ட சும்மா சொல்றாரா!! இல்லை நிஜமாவேவா!!’ என்றவளின் கண்கள் அவனை மேலிருந்து கீழாக ஆராய்ச்சி செய்தது.

 

வெயிலில் வேலை செய்து களைத்து வந்தவனாயிற்றே களைப்பாய் தானிருந்தான் அப்போது. அருகே வந்தவள் அவன் நெற்றியில் கழுத்தில் என்று கை வைத்து பார்த்தாள்.

 

“உடம்பு சூடு ஒண்ணுமில்லையே!! உள்ளுக்கு எதுவும் குளிரெடுக்குதா!!  உடம்பு வலி எதுவும் இருக்கா!!” என்றாள் நிஜ டாக்டராகவே மாறி.

 

“வலி உடம்புல இல்லை மனசுல தான் வலிக்குது. என் வைப் என்னோட இல்லாம தனியா இருக்கா!! அதனால இங்க வலிக்குது” என்றவன் அவள் கைப்பிடித்து அவன் நெஞ்சில் வைத்து காட்டினான்…

 

Advertisement