Advertisement

அத்தியாயம் – 23

 

சக்திவேல் மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவள் தன் வீட்டுக்கு வாராமல் போன அண்ணனை நேரில் பார்த்து கேட்டுவிடுவதென தந்தையுடன் கிளம்பி வந்திருந்தாள் அவள்.

 

அவளிடம் பேச்சு கொடுக்கக் கூடாதென முடிவு செய்திருந்த அவளின் மாமியார் கூட வாயை திறந்து சொல்லிவிட்டார் போகாதே என்று ஆனால் அவளுக்கு தான் ஏதோ பிடித்து ஆட்டுக்கிறதே யார் பேச்சையும் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்தவள் போலிருந்தாள் அவள்.

 

“தாமரை அன்னைக்கு உன்னை அடிச்சதே தப்புன்னு நினைச்சுட்டு இருக்கேன் நானு. ஆனா நீ இன்னும் மாறின மாதிரி தெரியலை”

 

“அண்ணனை பத்தி உனக்கு நல்லா தெரியும், நீ எதாச்சும் பேசி அவனோட உறவே இல்லாம பண்ணிக்காத அவ்வளவு தான் சொல்வேன்” என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தார் சக்திவேல் தகப்பனாய்.

 

“ஓ!! அண்ணன் அப்படி வேற செய்யுமா!! பார்ப்போம்ப்பா!!” என்றவள் வீம்பாய் பிடிவாதம் பிடித்து அவருடன் ஹோட்டலுக்கு வந்திருந்தாள்.

 

ரவிக்கு போன் செய்து அண்ணனை பார்க்க போவதாக கூறிவிட்டிருந்தாள். அண்ணனுடன் வீட்டிற்கு வந்துவிடுவதாக கூறியிருந்தாள்.

ரவி கூட கேட்டுவிட்டான். “உங்கண்ணன் தான் நம்ம வீட்டுக்கு வரலைல. நீ எதுக்கு போகணும்ன்னு கிடந்து துடிக்கிற” என்றான்.

 

“அது இல்லைங்க, அண்ணன் வந்து என்னை பார்க்கக்கூட இல்லை. என்ன ஏதுன்னு கேட்க வேண்டாமா!! இப்படியே இருந்தா எனக்குன்னு யாருங்க இருக்கா” என்றாள் கணவனிடம்.

 

“உனக்கு இனி யாரு வேணும் தாமரை, நான் உன்கூட தானே இருக்கேன். என்னமோ நீ பண்ணுறது சரின்னு எனக்கு தோணலை உன்னிஷ்டம்”

 

“குழந்தையை எல்லாம் தூக்கிட்டு போகாதே!! பச்சைக்குழந்தை விட்டுட்டு போறே, காலாகாலத்துல வீட்டுக்கு வந்து சேரு”

 

“சீக்கிரம் வந்திடறேங்க, அண்ணன் கூடவே வந்திடறேன்” என்றாள் அவள்.

 

“அவ்வளவு நம்பிக்கை உனக்கு” என்று முணுமுணுத்தவாறே போனை வைத்தான் அவன்.

 

கணவனை மாமியாரை எல்லாம் சமாளித்து இரண்டு குழந்தைகளை மாமியாரின் பொறுப்பில் விட்டு தந்தையுடன் ஹோட்டலுக்கு வந்திருந்தாள்.

 

அவர்கள் வந்து அரைமணி நேரம் கழித்தே வீராவும் செவ்வந்தியும் வந்து சேர்ந்திருந்தனர்.

 

தந்தையுடன் தங்கையை கண்டதும் அந்த அறைவாசலிலேயே நின்றுவிட்டான் அவன். செவ்வந்தியும் உடன் நின்றிருப்பதை கவனித்தவன் “கீ இந்தா” என்று அவளிடம் கொடுத்தான்.

 

“நீ உள்ள போய் ரெப்ரெஷ் பண்ணு” என்று சொல்ல அவளோ நகராமல் அங்கேயே நின்றிருந்தாள். “வந்தி உன்கிட்ட தான் சொன்னேன், நீ ரூமுக்கு போ” என்றான் கொஞ்சம் அழுத்தமாய்.

 

அவன் முகத்தில் இருந்த கடினத்தன்மை கண்டு சாவியை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் அவள்.

 

மனைவி அப்புறம் நகர்ந்ததும் அந்த அறைக்குள் நுழைந்து கதவை லேசாய் சாற்றினான். “சொல்லு தாமரை எப்போ வந்தே?? நல்லா இருக்கியா??” என்று வெகு சாதாரணமாய் விசாரித்தான் அவன்.

 

தாமரைக்கு அவன் பேச்சு புரிந்ததோ இல்லையோ சக்திவேலுக்கு புரிந்தது மகனின் போக்கு. ஏதோ பெரிதாய் நடக்கப் போகிறது என்று மட்டும் புரிந்தது அவருக்கு.

 

மகன் சாதாரணமாய் பேசுவதே சற்று வித்தியாசமாய் தோன்றியது அவருக்கு.

 

“ஓ!! உனக்கு இப்போ தான் தங்கச்சி நினைப்பே வருதா அண்ணா” என்று பிள்ளையார்சுழியை தாமரையே போட்டாள்.

 

தந்தையின் கண்ஜாடை எல்லாம் அவள் பொருட்படுத்தவேயில்லை. தான் நினைத்ததை பேசிவிடும் எண்ணத்துடன் தான் அவள் கிளம்பியே வந்திருந்தாள்.

 

பெற்றவர்களை விட உடன் பிறந்தவர்களுக்கு தெரியுமே மற்றவரின் குணம், வீராவிற்கு தாமரையின் பிடிவாத குணம் நன்கு தெரியும்.

 

அவள் ஒன்றை நினைத்தால் அதை கேட்டு முடித்தால் தான் அவளுக்கு தூக்கமே வரும் என்று அவனுக்கு நன்றாக தெரியுமே.

 

அதனால் தான் அவன் அவளின் வீட்டிற்கு செல்லாமல் அவளை அங்கு வரவைத்திருந்தான்.

 

வேண்டுமென்றே தான் அவளின் வீட்டிற்கு அவன் செல்லவில்லை. அவனுக்கு தன் தங்கையை நன்றாய் தெரியும் அவள் வருவாளென்று அறிவான்.

 

ஆனால் இன்றே வருவாள் என்று அவன் நினைக்கவில்லை. அவள் வீட்டிற்கு செல்ல அவனுக்கு நேரமாகாது.

 

அங்கு சென்று அண்ணன் தங்கை ஒருவரை ஒருவர் பேசிக்கொள்வது வேண்டாம் என்பது அவன் எண்ணம்.

 

தங்கையை அவள் வீட்டினர் முன்னே விட்டுக்கொடுப்பதென்பது அவனால் இயலாதே!! அவனுக்கு அவளை கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. அவள் வீட்டில் வைத்து அதையெல்லாம் கேட்க அவனால் முடியாதே!!

 

“எனக்கு தங்கச்சி நினைப்பெல்லாம் இருக்கு தாமரை, அதிலென்ன உனக்கு சந்தேகம்” என்றான் நிதானமாய்.

 

மகனின் இவ்வளவு பொறுமையே சக்திவேலுக்கு மேலும் கலக்கம் கொடுத்தது.

 

“வீரா நேரமாச்சுப்பா அவளுக்கு!! அவளை கொண்டு போய் வீட்டில விட்டு வாப்பா” என்று அப்போதைக்கு அந்த பேச்சை தடுக்க முயன்றார் சக்திவேல்.

 

எங்கே தாமரை அதற்கு விட்டால் தானே “அப்பா நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா வீட்டுக்கு போன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க” என்று குதித்தாள்.

 

சக்திவேலுக்கே பொறுமை பறந்துவிடும் போலிருந்தது. ‘இதற்கு மேல் தான் இதில் தடுக்க ஒன்றுமில்லை’ என்ற எண்ணம் வந்துவிட்டது அவருக்கு.

 

நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் அவர் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டார்.

 

வீரா அதெல்லாம் பார்த்துக் கொண்டுதானிருந்தான். தந்தை கட்டிலில் அமர்ந்ததும் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு தாமரையிடம் திரும்பியவன் “சொல்லு தாமரை என்ன கேட்டே!!”

 

“ஏன் அண்ணா உனக்கு என்னை சுத்தமா மறந்து போச்சா!! அம்மா போனா எல்லாரும் என்னை அப்படியே விட்டிருவீங்களா!!”

 

“இவ்வளவு தூரம் வந்திட்டு நீ ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கே!! அப்படி என்னண்ணே நான் உனக்கு வேண்டாதவளா போயிட்டேன்”

 

“நான் உன்னை வேண்டாதவள்ன்னு எப்போ சொன்னேன் தாமரை” என்றவனின் குரலில் இப்போதும் பொறுமையே!!

 

அது பொறுமையா இல்லை அடக்கப்பட்ட கோபமா இல்லை புயலுக்கு முந்தைய அமைதியா என்று சத்தியமாக புரியவில்லை சக்திவேலுக்கு.

 

அமைதியாய் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு பார்வையாளராக.

 

“நான் வேண்டான்னு நினைச்சு தானே அண்ணே, இங்க வந்து ரூம் போட்டிருக்க… இப்படியெல்லாம் நீ செய்யற ஆளே இல்லை” என்றாள் அவள்.

 

செவ்வந்தி அறைக்குள் சென்றிருந்தவள் அவசரமாய் ஒரு குளியலை முடித்து நேராக அங்கே வந்துவிட்டிருந்தாள் என்னாகுமோ ஏதாகுமோ என்ற எண்ணத்தில்.

 

முதலில் போக வேண்டாம் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் வீராவின் பேச்சு அவளுக்கு கலக்கத்தை கொடுத்தது. அதனாலே அவசர குளியல் போட்டவள் அறைக்கு வந்திருந்தாள்.

 

அவள் வந்து நிற்கவும் தாமரை அவளை பார்த்து “இவங்க தான் சொல்லிக் கொடுத்தாங்களா இங்க ரூம் போடச்சொல்லி” என்று கேட்க அப்போது தான் வீரா அவனுக்கு பின்னே திரும்பி பார்த்தான்.

 

“நீ எதுக்கு இங்க வந்தே??” என்றான் மனைவியை முறைப்பாய்.

 

“இல்லை அது அண்… அண்ணி…” என்று இழுத்தாள்.

 

“இவ உன்னை என்ன பேசறான்னு கேட்க வந்தியா!! இல்லை உன் அண்ணிக்கு சப்போர்ட் பண்ண வந்தியா!! இங்க யாரும் உனக்கு இனிமே அண்ணி இல்லை”

 

“எனக்கு தங்கச்சின்னு ஒருத்தர் இருந்தா தானே அவங்க உனக்கு அண்ணி. இனிமே உனக்கு அண்ணின்னு ஒருத்தர் இல்லவே இல்லை எப்போமே!!”

 

“என்னங்க…” என்றாள் செவ்வந்தி சற்று அதிர்ச்சியாய். சக்திவேலுக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை வீரா இதை தான் சொல்லுவான் என்று அவ்வளவு நேரமாக ஊகித்திருந்தார்.

 

“என்ன?? என்ன அண்ணா சொன்னே?? இவளுக்காக கூட பிறந்த தங்கச்சியவே வேண்டாம்ன்னு நீ சொல்லுவியா!!”

 

“ஏன் அண்ணே உனக்கு பழசு எல்லாம் மறந்து போச்சா?? நீ வேண்டாம்ன்னு இவ ஓடிப் போக பார்த்தவ தானே?? இவளுக்காகவா கூடப்பிறந்தவ வேண்டாம்ன்னு சொல்றே??” என்று ஆங்காரமாய் கேட்கவும் வீரா நிதானமிழாந்தான்.

 

“வாயை மூடு தாமரை… விட்டா ரொம்ப பேசிட்டே போறே!! என்ன சொன்னே?? நீ என்ன சொல்றேன்னு தெரிஞ்சு தான் அப்போ நீ பேசியிருக்கே?? யார் உனக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தா தாமரை”

 

“உனக்கு அண்ணன் வேணும், ஆனா என் பொண்டாட்டி உனக்கு வேணாமா!! அப்படி என்ன உனக்கு இவ மேலே துவேஷம் தாமரை”

 

“உன்னை பார்த்துக்கிட்டதுக்கு நீ காட்டுற மரியாதை இது தானா!! இவளுக்கு இதெல்லாம் பார்த்துக்கணும்ன்னு என்ன தலையெழுத்தா!!”

 

“நானோ அப்பாவோ இவளை கட்டாயப்படுத்தலை. இவளா தான் உன்னை பார்த்துக்கணும்ன்னு நினைச்சா அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு அவளுக்கு நல்ல மரியாதை பண்ணியிருக்க நீ!!”

 

“என்ன தெரியும் உனக்கு இவளைப்பத்தி. இவளை தப்பா பேச உனக்கு யார் அதிகாரம் கொடுத்தா தாமரை”

 

“யாருக்கூடவோ ஓடிப்போக பார்த்ததா சொன்னியா நீ!!”

 

“எப்படி உன்னால இப்படி பேச முடிஞ்சுது??”

“எங்களுக்குள்ள எது நடந்தாலும் அது எங்க புருஷன் பொண்டாட்டி விவகாரம். அதுல நீ ஏன் தலையிடுற!! உன்னை இப்படி எல்லாம் நம்ம வீட்டுல வளர்க்கலையே!! அம்மா இருந்திருந்தா நீ பேசின பேச்சை கேட்டு ஒரு முறை செத்திருப்பாங்க”

 

“அப்போ நான் பயந்த மாதிரியே நடந்து போச்சுல… அம்மா போனதும் எல்லாரும் என்னை விட்டு போக முடிவு பண்ணிட்டீங்கள்ள!!” என்ற தாமரைக்கு அடக்க முடியாமல் அழுகை வர ஆரம்பித்தது.

 

செவ்வந்தி அவள் அழுவது பொறுக்காமல் அருகே சென்றவள் “அண்ணி” என்றவாறே அவள் தோளில் கைவைக்க தாமரை சட்டென்று தட்டிவிட்டாள்.

 

“உன்னால தான் எல்லாமே உன்னால தான்டி!! என்னை கை நீட்டி அடிக்காத என் அப்பா என்னை அடிச்சிட்டார். தங்கச்சின்னா உயிரையே விடுற எங்கண்ணன் என்னை நிக்க வைச்சு கேள்வி கேட்குது”

 

“எல்லாத்துக்கும் நீ தான் காரணம். நீ வந்தபிறகு எங்கம்மாவும் என்னைவிட்டு போனாங்க!! என் கண்ணு முன்னாடி நிக்காத நீ போ!!” என்று இன்னும் இன்னும் ஆங்காரமாய் அவள் கத்த செவ்வந்தி அப்படியே நின்றுவிட்டாள்.

 

“அறிவிருக்கா உனக்கு, அவ முன்னாடி நீ வர வேணாம்ன்னு தானே உன்னை ரூமுக்கு போகச் சொன்னேன். இங்க எதுக்கு நீ வந்தே இப்போ!! இவ பேச்சை சந்தோசமா கேட்கவா”

“அப்புறம் என்கிட்டே வந்து பஞ்சாயத்து பண்ணவா!! சொன்னா யாருமே கேட்கமாட்டீங்களா!! அப்படி என்ன உங்களுக்கு பிடிவாதம்ன்னு எனக்கு தெரியலை!!” என்று அவன் மனைவியை பார்த்து கத்திக் கொண்டிருக்கும் போதே திறந்திருந்த கதவின் வழியே ரவி கோபமாய் நுழைந்திருந்தான்.

 

வந்தவன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளே வந்திருந்தவனை தாமரை அதிர்ச்சியாய் பார்த்திருந்தாள்.

 

அவளருகே வந்தவன் ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். “அறிவிருக்காடி உனக்கெல்லாம்!! அங்க நீ பெத்த புள்ளைங்க கதறு கதறுன்னு கதறிட்டு இருக்கு”

 

“இங்க உன்னை கொஞ்சம் கூட மதிக்காத உறவுகளை தேடி வந்து நீ கெஞ்சிகிட்டு நிக்கறியா!! கொஞ்சமாச்சும் நீ பெத்த புள்ளைங்க மேலே அக்கறை இருக்கா உனக்கு”

 

“பச்சை குழந்தைகளை விட்டுட்டு வந்திருக்கோமேன்னு ஒரு பதைபதைப்பு இருக்கா உனக்கு!!” என்றவனுக்குள் அவ்வளவு கோபம்.

 

வீரா எதுவும் சொல்லவில்லை, வெறுமே நின்றிருந்தான். தன் கண் முன்னே தங்கை அடிவாங்குவது கஷ்டமாக இருந்த போதும் அவளுக்கு இது தேவை தான் என்று ரீதியில் நின்றிருந்தான்.

 

சக்திவேலும் அதை எண்ணியே பேசாமலிருந்தார். ஆனாலும் மனம் கேட்கவில்லை அவருக்கு. “இல்லை மருமகனே!!” என்று அவர் ஏதோ ஆரம்பிக்க ரவி திரும்பி அவரை முறைத்தான்.

 

“அண்ணா அது வந்து…” என்று அருகே வந்த செவ்வந்தியை பார்த்தவன் “எனக்கு உன் மேல நெறைய மரியாதை இருக்குமா”

 

“ப்ளீஸ் இதை பத்தி எதுவும் பேச வேணாம்…” என்றவனின் கண்களில் தீ ஜுவாலையாய் கோபமிருந்தது. அதற்கு மேல் செவ்வந்தி ஒன்றும் வாயே திறக்கவில்லை.

 

“வா…” என்று ஒற்றைச்சொல்லை உதிர்த்தவாறே மனைவியை அங்கிருந்து இழுத்துச் சென்றான்.

 

ரவிக்கு அவ்வளவு கோபம் வந்திருந்தது. பின்னே அவன் வீட்டிற்கு வந்து சேரும் போது இரு குழந்தைகளும் அழுத அழுகை அப்படி.

 

குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த தாய் வேறு ஒரு புறம் அழுது கொண்டிருந்தார் அழும் குழந்தைகளை பார்த்து.

 

அந்த ஆத்திரம் மேலோங்க அன்னையிடம் விசாரித்துக் கொண்டு ஹோட்டலுக்கு வந்திருந்தான். வரவேற்ப்பில் அறை எண்ணை விசாரித்து வந்திருக்க அவன் மனைவியோ அழுதுக்கொண்டு நின்றிருக்கிறாள் அங்கு.

 

மற்றவர்கள் அதை வேடிக்கை பார்க்க பொறுமையாய் பேசும் எண்ணமெல்லாம் கைவிட்டு போனது அவனுக்கு. அவன் குழந்தைகள் அங்கு கதறிக்கொண்டிருக்க இவள் வீட்டிற்கு வராத அண்ணனை கெஞ்சிக் கொண்டு நிற்கிறாளே என்ற ஆத்திரம் அவனுக்கு.

 

ரவியும் தாமரையும் அங்கிருந்து சென்ற பின்னே அங்கு பயங்கர அமைதி நிலவியது.

 

“நீ ரூமுக்கு போ” என்று அவன் மனைவியை பார்த்து சொல்ல அவள் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

 

“அப்பா…” என்றழைத்தான்.

 

“சொல்லுப்பா வீரா”

 

“நான் தப்பா பேசிட்டேன்னு நினைக்கறீங்களா!!”

 

“தெரியலைப்பா…”

 

“அவளுக்கு இப்படி எதாச்சும் ஷாக் கொடுத்தா தான்ப்பா சரியாவா!! அதான் அப்படி பேசினேன்!! இனி கொஞ்சம் அவ யோசிப்பான்னு நினைக்கிறேன்ப்பா”

 

“ரவிகிட்ட நான் நேர்ல போய் பேசிக்கறேன்ப்பா!! அவர் புரிஞ்சுக்குவார்” என்றான்.

 

“நான் போகலைன்னாலும் நீங்க அப்பப்போ போய் அவளை பார்த்துக்கோங்கப்பா… இல்லைன்னா ரொம்ப வருத்தப்படுவா!!” என்றான் உள்ளார்ந்து.

 

“நீ என்னை சமாதானப்படுத்த எதுவுமில்லைப்பா!! கூடப்பிறந்தவளை உனக்கு புரியும் போது நான் பெத்த பசங்களை பத்தி எனக்கு தெரியாதா!!”

 

“நீ போய் செவ்வந்தியை பாருப்பா” என்றார் அவர்.

 

“பார்க்கறேன்ப்பா நீங்க சாப்பிட வாங்க!! உங்களுக்காக தான் நானும் சாப்பிடாம இருக்கேன்”

 

“செவ்வந்தி??”

 

“அவளை சாப்பிட வைச்சு தானப்பா கூட்டிட்டு வந்தேன்” என்றான்.

 

தந்தையுடன் சாப்பிட்டுவிட்டு அவர்கள் அறைக்குள் நுழைய செவ்வந்தி மல்லாக்கப் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்திருந்தாள்.

 

‘இவ வேற என்ன கச்சேரி வைக்க போறாளோ’ என்று உள்ளே லேசாய் ஒரு பயம் எட்டிப்பார்க்கத் தான் செய்தது அவனுக்கு.

 

‘நிஜமாவே பொண்டாட்டியை சமாளிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான் போல்… அதான் எல்லாவனும் கல்யாணத்துக்கு அப்புறம் புலம்புறாங்களோ!!’ என்று மனதிற்குள்ளாக தான் சொல்லிக்கொண்டான்.

 

இதை வெளியில் வேறு சொல்லிவிட்டு அவளிடம் வேறு அவன் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா என்ன!!

 

‘இவளை என்னன்னு கேட்கலாமா!! வேண்டாமா!! எதுவும் கேட்டாலும் ஆப்பு கேட்கலைன்னாலும் ஆப்பு எனக்கு தான்’ என்று யோசித்துக்கொண்டிருக்க இவன் வந்த சுவடறிந்தவள் எழுந்தமர்ந்திருந்தாள்.

 

‘ரைட்டு இவளே எழுந்திட்டா, ரெடி ஒன், டூ…’ என்று அவன் கவுண்டிங்கை ஸ்டார்ட் செய்யும் போதே ஆரம்பித்தாள் அவன் மனைவி.

 

“உங்களுக்கு கொஞ்சமாச்சும் எதாச்சும் இருக்கா மண்டையில” என்று கேட்டவாறே.

 

“ஹேய் என்ன கொழுப்பா உனக்கு” என்று முறைத்தான் அவளை.

 

“நிஜமாவே உங்களுக்கு மூளைங்கறதே கிடையாது” என்று பட்டாசாக பொரிந்தாள் அவன் மனைவி.

 

‘இவ எதுக்கு இப்போ என்னை திட்டுறா’ என்று திருதிருத்தான் வீரா.

 

“என்னடி எதுக்கு இப்போ இப்படி சொல்றே?? என்ன பண்ணிட்டேன் நான் இப்போ”

 

“தாமரை அண்ணிகிட்ட ஏன் அப்படி சொன்னீங்க நீங்க??”

 

“உனக்கு மண்டையில எதுவும் அடிபட்டிருச்சா செவ்வந்தி. எதுக்கு இப்படி லூசு மாதிரி நீ ஆகிட்ட” என்றவன் அவள் தலையை இப்படியும் அப்படியுமாக திருப்ப அவன் கையை தட்டிவிட்டாள் அவன் மனைவி “விடுங்க” என்றவாறே.

 

“எனக்கு ஒண்ணும் அடிபடலை உங்களுக்கு தான் அடிப்பட்டிருக்கும். அவங்க என்னை தானே பேசுறாங்க, பேசிட்டு போகட்டுமே உங்களுக்கு என்ன வந்திச்சு” என்றதும் வீரா பயங்கரமாக முறைத்தான்.

 

“அப்புறம் எதுக்குடி என்கிட்ட வந்து பஞ்சாயத்து வைக்குற?? என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. என்ன நினைச்சுட்டு இருக்க நீ உன் மனசுல” என்றான் சற்றே குரலை உயர்த்தி.

 

“உங்ககிட்ட நான் என்ன பஞ்சாயத்து வைச்சேன்”

 

“நான் தான் ஊர்பூரா உன்னை பத்தி தப்பா பேசிட்டு வர்ற மாதிரி நேத்து அந்த குதி குதிச்ச, இப்போ என்ன இப்படி பேசிக்கிட்டு இருக்க”

 

“தாமரை எப்படி பேசுறா பார்த்த தானே!! அதை பார்த்திட்டு என்னை சும்மா இருக்க சொல்றியா!! என்னமோ பேய் பிடிச்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்கா அவ!! உன்னை திட்டிட்டு இருக்கா நீ என்னமோ பேசாம இருக்கே!!”

 

“நானும் அப்படியே இருக்கணும்ன்னு நினைக்கிறியா நீ!! என்னால அது முடியாது” என்றான்.

 

“அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியாம எல்லாருமா சேர்ந்து அவங்களை இப்படி ஒதுக்கி வைச்சா அவங்க பிரச்சனை மேல மேல அதிகமாகிட்டு தான் போகும்”

 

“அவங்களுக்கு ஏதோ ஒரு இன்செக்யூர் பீல் அதான் அப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணுறாங்க. அதை ஏன் உங்களால புரிஞ்சுக்க முடியலை” என்றாள்.

 

“நான் ஒண்ணும் டாக்டர் இல்லை” என்றான் அவன் பதிலாய்.

 

“அப்போ பேசாம இருக்க வேண்டியது தானே எதுக்கு தங்கச்சி இல்லை அது இல்லை இது இல்லைன்னு பேசச் சொன்னது”

 

“இங்க பாரு மரியாதையா பேசாம போயிரு!! இருக்கற கடுப்புக்கு என்ன செய்வேன்னே தெரியாது எனக்கு. லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்க நீ”

 

“ஏன்டி இப்படி என் உயிரை வாங்குற!! என்ன தான் நான் பண்ணணும்ன்னு நீ நினைக்கிற!! பேசினா பேசாதேங்கற, நீயா எதையோ நினைச்சு என்கிட்டே பேசாம இருக்கே”

 

“எதுக்குமே நான் பேசாம இருக்கணுமா!! என்ன தான் வேணும் உனக்கு!! எப்போ பாரு என்னையவே போட்டு வறுத்தெடுக்குற!!” என்றவன் கோபமாய் அவளை நெருங்கி நின்றான்,

 

“என்ன அடிக்க போறீங்களா?? எங்க அடிங்க பார்ப்போம், நேத்து அடிச்சப்போ வாங்கிட்டு போன மாதிரி பேசாம போவேன்னு நினைச்சீங்களா!! பதிலுக்கு பதில் கொடுக்காம போக மாட்டேன்” என்று சிலிர்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

 

“ஓ!! நான் அடிச்சா நீயும் அடிப்பியா!!” என்றான் அவன் நிதானமாய்.

 

“ஆமா அடிப்பேன்”

 

“எங்க அடிச்சி பாருடி”

 

“டி சொல்லாதடா, நான் அடிக்க மாட்டேன்னு எல்லாம் நினைக்காதே!! நீ அடிச்சா நானும் அடிப்பேன்டா”

 

“சரி நானே அடிக்கறேன்” என்றவன் இருகைகளாலும் அவள் முகத்தை தன் புறம் இழுத்து பேசும் அவள் அதரங்களை சிறை செய்திருந்தான்.

 

அவள் அவனிடமிருந்து திமிற முயற்சிக்க அவள் முயற்சி எல்லாம் வீண் தான் ஆனது அவனிடத்தில்.

 

வீராவோ சில நொடிகளுக்கு அவளை விடுதலை செய்யாமல் நீண்டதொரு முத்த யுத்தம் செய்தான் அவள் இதழுடன்.

 

மேலும் சில நொடிகள் கடந்த பின்னே அவளை அவன் விடுவிக்க செவ்வந்திக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ‘இவன் முன்னாடி அழணுமா!!’ என்று அழுகையை உள்ளிழுக்க பார்க்க அதுவோ வழிந்தேவிட்டது.

அவளருகே நெருங்கி நின்றிருந்தவன் அவளை தன் மேல் சாய்த்துக்கொள்ள முயல அவனை பிடித்து தள்ளிவிட்டாள் அவள்.

 

அதை எதிர்பாராதவன் தடுமாறி கட்டிலில் விழுந்திருந்தான். பின் அதில் நன்றாய் ஏறி படுத்தவன் “என்ன அடிப்பேன்னு சொன்னே திருப்பி அடிக்கவே இல்லை. இதான் உன் தைரியமா!!” என்றான் கிண்டலாய்.

 

“அடிக்கிறதுன்னா திருப்பி அடிச்சிக்கோ!! நான் உன்னை மாதிரி தள்ளி எல்லாம் விடமாட்டேன்!!” என்றவன் இப்போது உல்லாச மனநிலைக்கு வந்திருந்தான்.

 

ஆனால் அவன் மனைவி இப்போது காளி அவதாரம் எடுத்திருந்தாள். “நீயெல்லாம் என்ன மனுசன்டா நான் பேசிகிட்டே இருக்கேன். நீ என்ன செய்யற?? என் மனசை என்னைக்கு தான் நீ புரிஞ்சுக்குவ??”

 

“என்னை பத்தி யோசிக்கவே மாட்டியா நீ!! எப்போமே உன்னை பத்தி தான் யோசிப்பியா!! இதுல என் மேல அக்கறை இருக்க மாதிரி எதுக்கு இந்த நடிப்பெல்லாம்”

 

“ஹேய் என்ன பேசுற நீ?? நீ தான் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற!!” என்று அவன் சொல்ல வருவதை கேளாமல் கைக்கொண்டு நிறுத்தச் சொன்னாள்.

 

“எதுவும் பேசாதீங்க நீங்க!! எனக்கு உங்ககிட்ட பேசவே இஷ்டமில்லை!! இப்போ என்ன?? உனக்கு நான் தான் வேணுமா?? அப்போ எடுத்துக்கோ?? இப்படி கொஞ்சம் கொஞ்சமா என்னை வதைக்காத!!” என்று சொல்லவும் எழுந்து நின்றிருந்தான் அவன்.

 

“என்ன ரொம்ப தான் பேசிட்டே போறே!! இப்போ உன்னை என்ன பண்ணிட்டாங்கன்னு இந்த குதி குதிக்கிற!!”

 

“ஆமா உன்னை கிஸ் பண்ணிட்டேன். அதுல என்ன தப்பு இப்போ. என் பொண்டாட்டிங்கற உரிமையில தானே செஞ்சேன்”

 

“நீ தான் எனக்கு வேணும்ன்னா நான் இவ்வளவு காத்திருக்க வேண்டிய அவசியமே எனக்கில்லை. என்னை பத்தி என்னைக்கு தான் நீ நல்லவிதமா புரிஞ்சுக்குவ”

 

“அப்படி தான் உன்னை தொடுவேன்!! என்ன பண்ணுவ நீ??” என்று அவன் கேட்க ‘கொழுப்பு கொழுப்பு எப்படி பேசறான் பாரு’ என்று மனதிற்குள்ளாக அவனைத் திட்டினாள்.

 

“உன்னை புரிஞ்சுக்கலை புரிஞ்சுக்கலைன்னு சொல்றேல!! நீ என்னைக்கு என்னை புரிஞ்சுக்கிட்ட அதை சொல்லு முதல்ல!! என்னை எப்பவுமே இப்படி வில்லனை போல பார்க்கறதை நிறுத்து”

 

“உங்ககிட்ட இனிமே நான் பேசுறதா இல்லை” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று விழுந்தாள்.

அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு படுத்தவள் உதட்டை பிதுக்கி பார்க்க அவனின் செய்த அலும்பலில் கன்றி சிவந்து வீங்கியிருந்தது அவள் உதடுகள்.

 

வீராவும் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அவளருகே படுத்திருந்தான். திரும்பி அருகே படுத்திருந்தவனை முறைத்தாள்.

 

‘என்ன மறுபடியும் முத இருந்தா… இப்போ எதுக்கு முறைக்கிறான்னு தெரியலையே!!’ என்று ஆயாசமாக தானிருந்தது அவனுக்கு.

 

மறுநாள் அவன் எழுவதற்கு முன்னரே எழுந்திருந்தாள். அவள் கிளம்பி தயாராய் நின்றிருந்த வேளையில் தான் வீரா எழுந்திருந்தான்.

 

“சாரி கொஞ்சம் லேட்டாகிடுச்சு எழுந்திருக்க” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் குளியலறை புகுந்துக் கொண்டான்.

 

ஐந்து நிமிடத்தில் பல் துலக்கி முகம் கழுவி அவன் வெளியே வர அந்த அறையில் யாருமேயில்லை.

 

“எங்க போயிருப்பா” என்று எண்ணிக்கொண்டே வெளியில் வந்து பார்க்க தந்தையின் அறையில் அவளின் பேச்சுக் குரல் கேட்டது.

 

“என்ன பண்ணி வைக்க காத்திருக்கா தெரியலையே இவ” என்று சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டே அங்கு சென்றான் அவன்.

“மாமா நான் ஹாஸ்டல்க்கு கிளம்புறேன், அவர்கிட்ட சொல்லிட்டேன். நான் போயிட்டு வர்றேன் மாமா” என்று தந்தையிடம் அவள் சொல்லுவது வெளியில் கேட்டது.

 

அப்படியே அவளை தரதரவென்று இழுத்துக்கொண்டு குலையன்கரிசலுக்கு சென்றுவிடலாமா என்று கூட தோன்றியது அவனுக்கு.

 

அவள் வெளியில் வரும் அரவம் கேட்க சட்டென்று அந்த அறையைவிட்டு தள்ளி நின்றான்.

 

அறையில் இருந்து வெளியில் வரவும் வீரா எதிரில் வந்து நின்றான். அவனை கண்டுக்கொள்ளாது அவனை தாண்டிச்செல்ல முயல அவள் கையை பிடித்து அவர்கள் அறைக்குள் இழுத்திருந்தான் அவன்.

 

அவள் வெளியில் செல்ல முடியாதவாறு அறைக்கதவை அடைத்தவாறே நின்றிருந்தான் அவன்.

 

“கையை விடு” என்றாள்.

 

“விடமுடியாது என்ன பண்ணுவே??”

 

“கத்துவேன்”

 

“எங்க கத்து பார்க்கலாம்” என்று சொல்லவும் சற்று அமைதியடைந்தாள்.

 

“உனக்கு என்ன பிரச்சனை இப்போ??”

 

“நீங்க தான் இப்போ என்னோட பிரச்சனை. என்னை விலகிப்போக விடாம வழியை மறிச்சு நிக்கறீங்க. என் வாழ்க்கையில தடையா நிக்கறதே நீங்க தான். வழியை விடுங்க நான் போகணும்” என்றாள்.

 

“நான் உனக்கு தடையா இருக்கேன்னு நீ நினைக்கறியா??”

 

“ஆமா!!”

 

“நிஜமா தான் சொல்றியா!!”

 

“ஆமா!!”

 

“அப்போ போ!! இனிமே என் கண்ணு முன்னாடியே வராதே போ!! என் வேலையை விட்டுட்டு உனக்காக வந்தேன் பாரு நீ இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ!!”

 

“இப்போ சொல்றேன் உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கலை!! என் கண்ணு முன்னாடி நிக்காதே போய்டு இங்க இருந்து” என்று கத்தினான் அவன்.

 

அவள் செல்லுவதற்கு வழியை விட்டவன் அறைக்கதவை திறந்துவிட்டிருந்தான். செவ்வந்திக்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருக அங்கிருந்து சென்றுவிட்டாள் அவள்…

Advertisement