Advertisement

அத்தியாயம் – 21

 

“உள்ள வாப்பா??” என்றவருக்கு மகன் வந்துவிட்டான் என்று ஒரு புறம் சந்தோசம் இருந்தாலும் அவன் வேலையை விட்டு வந்துவிட்டானே என்று ஓரமாய் ஒரு வருத்தம் இருந்தது.

 

வந்ததும் கேட்க வேண்டாம் என்று அமைதியானார் அவர். வீராவும் எதுவும் சொல்லவில்லை, அவன் அறைக்கு சென்று குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவன் கட்டிலில் வந்து அமர்ந்தான்.

 

அவன் நினைவுகள் முழுதும் இப்போது செவ்வந்தியே ஆக்கிரமித்திருந்தாள். கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு அவளின் கோபம் ஏன் என்று இன்னும் புரிபடவில்லை.

 

என்னவென்று அவளாய் சொன்னால் தானே அவனால் அறியமுடியும். நடந்து முடிந்ததை வைத்து அவனால் எதுவும் ஊகம் செய்ய முடியவில்லை.

 

ஆனால் அன்று நடந்த ஏதோவொன்று தான் அவளை பாதித்திருக்கிறது என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. தந்தை சொன்னதை வைத்து அவனால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

 

ஓரளவிற்கு மேல் அவரால் மகனிடம் சொல்ல முடியாதல்லவா அவர் மேம்போக்காய் சொன்னதை வைத்து யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை அவனுக்கு.

மனம் கடந்த நாட்களை நினைக்க ஆரம்பித்தது. தினமும் அவன் செய்யும் அழைப்புகளை அவள் ஏற்காமல் விட்டதில் வெறுத்து போய் போன் செய்வதை விட்டுவிட்டான்.

 

அப்படியே அவளை விட முடியாது என்றெண்ணியவன் அவனுக்கு சிக்னல் கிடைக்கும் சமயங்களில் தினம் ஒரு செல்பி எடுத்து வாட்ஸ்அப்பில் மனைவிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தான்.

 

ஏனோ என்னவென்று கேட்டு மெசெஜ் செய்தால் நிச்சயம் அவளிடம் இருந்து ரிப்ளை வராது என்பதை எண்ணித்தான் அவளை வேறுவிதமாய் அணுக முடிவு செய்து போட்டோ அனுப்பி வைத்தான்.

 

ஏதாவதொரு விதத்தில் தன்னை அவளுக்கு உணர்த்தவே அதை செய்தான். அவள் பார்த்ததிற்கான அறிகுறி தென்பட்டதே தவிர அது அவளை எவ்விதத்திலும் பாதித்ததாக அவனுக்கு தெரியவில்லை.

 

இப்படி சென்று கொண்டிருந்த நாட்களில் அவர்களின் முதல் திருமண நாளும் வந்திருந்தது. விடிந்தால் அவர்களின் திருமணநாள், இப்போதாவது தன்னிடம் பேசுவாளா என்றிருந்தது அவனுக்கு.

 

எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறாள், அவளையே நினைக்க வைக்கிறாள் என்று லேசாய் அவள் மேல் கோபமும் வந்தது. காலையில் ஒரு எதிர்பார்ப்புடனே அவன் கைபேசியை பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.

சரி நாமாவது போன் செய்வோம் என்று தோன்ற கையில் போனை எடுத்தவன் அப்படியே வைத்துவிட்டான். போன் எடுக்கவில்லை என்றால் வருத்தமாயிருக்கும் என்று தோன்ற கையில் எடுத்த போனை கீழே வைத்துவிட்டான்.

 

மீண்டும் அதை கையில் எடுத்தவன் அவர்கள் இருவரும் இணைந்து திருமணத்திற்கு எடுத்த புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி “ஹாப்பி ஆனிவர்சரி பொண்டாட்டி” என்று அனுப்பினான்.

 

“இந்த போட்டோல நாம கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்ல” என்று அடுத்த மெசெஜ் தட்டிவிட்டான்.

 

“இப்படி ரொமாண்டிக்கா இருந்திருக்கலாம்” என்று டைப் செய்து இருவரும் மூணாறில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவளுக்கு அனுப்பினான்.

 

‘பார்ப்போம் இதுக்காச்சும் ரிப்ளை வருத்தான்னு’ என்று எண்ணிக்கொண்டே அவன் அறையை விட்டு வர எதிரில் ரியாஸ் வந்துக் கொண்டிருந்தான்.

 

“என்னடா காலையில போனை நோண்ட ஆரம்பிச்சுட்ட, இன்னும் உங்க பஞ்சாயத்து தீரலையா!!” என்ற அவனின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் மௌனமாயிருந்தான் வீரா.

 

“என்னடா?? என்னாச்சு?? ஏன் ஒரு மாதிரி இருக்கே??” என்று நண்பனின் தோளின் மீது ஆதரவாய் கைப்போட்டான் ரியாஸ்.

“இன்னைக்கு எங்க கல்யாண நாள் ரியாஸ்” என்றான்.

 

“அதை ஏன்டா இவ்வளவு சோகமா சொல்ற??”

 

“பின்னே சோகம் இருக்காதா, நான் ஒரு இடத்துல அவ ஒரு இடத்துல இருக்கோம். மெசெஜ் பண்ணேன் ரிப்ளை வருதான்னு பார்க்கறேன்”

 

“அதெல்லாம் வரும்டா நோ வொர்ரி மேன். இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்டா” என்றான் ரியாஸ் நண்பனை அழைத்து.

 

“ஆமா ஒரு போன் பண்ணி பேசேன்டா மெசெஜ் எதுக்கு தட்டிக்கிட்டு”

 

“எடுக்கவே மாட்டேங்குறாடா இன்னைக்கும் போன் பண்ணி ஏமாற வேணாம்ன்னு தான் மெசெஜ் பண்ணேன்”

 

“பூல் மாதிரி பேசாதே!! ஒழுங்கா போன் பண்ணு, அப்புறம் இன்னைக்கு ட்ரீட் உண்டு தானே” என்றான் அவன்.

 

“ட்ரீட் கொடுக்கறேன் ஆனா நான் வரலை”

 

“இது எப்போடா??”

 

“எப்பவோ!!” என்றான்.

 

“ஓகே யூ கேரி ஆன்”

ரியாஸ் நகர்ந்ததும் தன் எண்ணத்தை கைவிட்டு ரியாஸ் சொன்னது போல் மனைவிக்கு போன் செய்தான்.

 

தொடர்ந்த பத்து அழைப்புகளுக்கும் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக கைபேசியை தூக்கி எறிந்தான். அது சிதறி தன் உயிரைவிட்டது.

 

அதே நாளில் செவ்வந்தி காலையில் எழுந்து குளித்தவள் சக்திவேல் அவர்கள் திருமணநாளிற்காய் எடுத்து கொடுத்திருந்த புடவையை அணிந்து கொண்டாள்.

 

கைபேசியில் மொபைல் டேட்டா ஆன் செய்து பார்க்க எதிர்பார்த்தது போலவே கணவன் வாழ்த்து சொல்லி அனுப்பியிருக்க ‘பரவாயில்லை ஞாபகம் வைத்திருக்கிறார்’ என்று எண்ணிக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றாள்.

 

இருவருக்குமாய் சேர்த்து அர்ச்சனை செய்தாள். கழுத்தில் கனமாய் இருந்த தாலி சங்கிலியை வெளியில் எடுத்தாள்.

 

அது அவள் மாமியார் போட்டிருந்த சங்கிலியாம் மருமகளுக்காய் கொடுத்திருந்தார் சக்திவேல்.

 

மெல்லியதாய் ஒரு சங்கிலியில் போட்டிருந்த தாலியை மாற்றி போட்டுக்கொள்ள சொல்லி அவளுக்கே கொடுத்துவிட்டார்.

 

கையில் அந்த சங்கிலியை பற்றி அதில் கோர்த்திருந்த மாங்கல்யத்தில் குங்குமம் வைத்துக் கொண்டாள். விஞ்ஞானம் மட்டும்மல்ல மெய்ஞானமும் நம்பும் பெண் அவள்.

 

அவள் திருமணத்தின் போது தூரத்து உறவினர் ஒருவர் பேசியது தற்செயலாய் அவள் காதில் விழுந்திருந்தது. அவளின் குடும்பத்தின் பெண்கள் சீக்கிரமே வாழ்க்கையை இழந்து விடுவார்களாம்.

 

முதலில் மதுராம்பாள் பின் அவளின் அன்னை சிவகாமியே அதற்கு உதாரணம் என்று அவர்கள் பேசியது அப்போது மனதிற்கு வருத்தமாய் இருந்தாலும் அப்போது அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை அவள்.

 

ஆனால் இப்போதெல்லாம் அப்படி அவளால் இருக்க முடியவில்லை.

 

அவன் மேல் கோபமாய் இருந்தாலும் அவனையே அதிகம் நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு அவன் நீண்ட ஆயுளுடன் தேகபலத்துடன் நன்றாய் இருக்க வேண்டும் என்பதே எப்போதும் பிரார்த்தனையாய்.

 

கோவிலுக்கு சென்றுவிட்டு நேரே மருத்துவமனைக்கு செல்ல கார்த்திக் அவளை குறுகுறுவென்று பார்த்தான். ‘என்ன இன்னைக்கு இப்படி பக்தி பழமா வந்திருக்கா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

எதிரில் வந்தவளை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்து சென்றுவிட்டாள் அவள். கார்த்திக் அவள் பின்னேயே சென்றவன் “இன்னைக்கு எதுவும் விசேஷமா” என்றான்.

 

“ஹ்ம்ம் ஆமாம்”

 

“என்ன விசேஷம்??”

 

“எங்க முதல் கல்யாண நாள்” என்று சொல்லும் போது குரல் கனிந்து கணவன் நினைவு வந்துவிட கழுத்தில் இருந்த தாலியை பற்றிக் கொண்டாள்.

 

‘ச்சே!! இது ஏன் எனக்கு அடிக்கடி மறந்து போகுது. கார்த்திக் அவ இன்னொருத்தன் பொண்டாட்டி போதும். இனி எப்பவும் அவ உனக்கு இல்லை’ என்று உள்ளே கேட்ட குரலில் விழித்து எழுந்தான் கார்த்திக்.

 

ஆம் கார்த்திக் அவள் ஒரு தலையாய் காதலித்திருந்தான். அவளுக்கு சீனியராய் இருந்ததில் இருந்தே காதலித்தான்.

 

அவளிடம் காதலை சொல்லி அவள் மறுத்திருந்தாலும் அவனால் அவளை விட முடியவில்லை.

 

படிப்பு முடிந்த பின்னும் எப்படியோ அதே மருத்துவமனையில் வேலைக்கும் சேர்ந்திருந்தான். அவனுக்காய் அவன் பெற்றவர்கள் கட்டிய மருத்துவமனையை விட்டு அவளுக்காய் தவமிருந்தான்.

 

அவள் படிப்பு முடிந்ததும் அவள் வீட்டிற்கு சென்று பெண் கேட்பது என்று அவன் முடிவெடுத்திருந்த வேளையில் தான் வீராவுடனான அவள் திருமணம் பற்றி அறிய நேர்ந்தது.

 

இன்னமும் நம்ப முடியவில்லை அவனுக்கு. அவள் வீராவின் மனைவி என்று. நம்பத்தான் முயற்சிக்கிறான் மனம் தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

 

அவளை நேருக்கு நேராய் நோக்க செவ்வந்தியின் கண்களில் தெரிந்த நேசத்தை கண்டுக்கொண்டான். ‘கொடுத்து வைத்தவன்’ என்று வீராவை மனதார சொல்லிக்கொண்டு நகர்ந்தான்.

 

____________________

 

நினைவுகள் கலைந்து வீரா கீழே இறங்கி வந்தான். அடுத்து அவன் நேரே சென்றது மனோரஞ்சிதத்திடமே!!

 

‘உங்க மருமக என் மேல ஏதோ கோவமா இருக்காம்மா!! போன் பண்ணா கூட என்கிட்ட பேச மாட்டேங்குறா!!’

 

‘கொஞ்சம் எனக்காக அவகிட்ட பேசுங்கம்மா, அவளுக்கு என் மேல என்ன கோபம்ன்னு என்கிட்ட சொல்லச் சொல்லுங்கம்மா உங்க மருமகளை!!’

 

‘அவ மனசு வாடாம பார்த்துக்கச் சொன்னீங்க!! இப்போ எங்க ரெண்டு பேரோட மனசும் வாடிப் போய் தான்ம்மா இருக்கு!!’

 

‘உங்க மருமகளுக்கு தெரிஞ்சது கூட இத்தனை வருஷத்துல நான் தெரிஞ்சுக்காம விட்டுட்டேன்ம்மா!! அப்பாவுக்காகவும் உங்க மருமகளுக்காகவும் நான் வேலையை விட்டுட்டு வந்திட்டேன்’

 

‘போன முறையே என்னையும் கூட்டிட்டு போங்கன்னு சொன்னா!! கூட்டிட்டு போயிருக்கணும்ன்னு இப்போ தோணுதும்மா!!’

 

‘நேர்ல வந்து சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சேன், இப்போ நான் தான் சர்ப்ரைஸ் ஆகிப்போயிருக்கேன். சீக்கிரமே எல்லாம் சரி பண்ணப் பார்க்குறேன்ம்மா’ என்று மனதார அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தான்.

 

அங்கே எவ்வளவு நேரம் நின்றானோ அதற்குள் சக்திவேல் அவனை அழைக்க வேகமாய் முன்னறைக்கு சென்றான்.

 

“சொல்லுங்கப்பா” என்றவன் அப்போது தான் அங்கிருந்த முல்லையை பார்த்தான்.

 

“எப்போம்மா வந்தே?? எப்படியிருக்க??” என்றான்.

 

“நீங்க எப்படியிருக்கீங்க அத்தான்?? எப்போ வந்தீங்க?? ஒரு போன் கூட உங்களால எங்களுக்கு பண்ண முடியலைல” என்றாள்

 

“இல்லைம்மா எனக்கு கொஞ்சம் வேலை அதான் யார்கிட்டயும் சரியா பேச முடியலை. நாங்க இருக்க இடத்துல சமயத்துல டவர் கூட கிடைக்காது உனக்கு தான் தெரியுமேம்மா…” பின் அவளிடம் சம்பிரதாயமாய் நலம் விசாரித்தான்.

 

“மாமாவுக்கு டிபன் கொடுத்திட்டு போகலாம்ன்னு வந்தேன். பார்த்தா நீங்க வந்திருக்கீங்க. நான் போய் உங்களுக்கும் எடுத்திட்டு வந்திடறேன் அத்தான்” என்றுவிட்டு அங்கிருந்து மறைந்தாள் அவள்.

 

சொன்னது போலவே அவனுக்கும் டிபன் எடுத்து வந்தவள் இருவருக்குமாய் பரிமாறி அவர்கள் சாப்பிட்ட பின்னே தான் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

“மாமா வீட்டுக்கு வாங்க… உங்களை பார்த்தா அம்மாவும் ஆச்சியும் சந்தோசப்படுவாங்க” என்றாள்.

 

“நான் அப்புறம் வர்றேன்ம்மா… எனக்கு கொஞ்சம் வெளிய போற வேலையிருக்கு” என்று முடித்துவிட்டான் அவன்.

 

முல்லை சென்ற பின்னே தந்தையிடம் பேச நினைத்தான். “அப்பா” என்றழைக்க “சொல்லுப்பா” என்றார் அதை எதிர்பார்த்தவராய்.

 

“நான் வேலையை விட்டுட்டு வந்திட்டேன்னு உங்களுக்கு கோபமாப்பா??”

 

“தெரியலைப்பா… ஆனா நீ தப்பா ஒரு முடிவெடுக்க மாட்டேன்னு தெரியும்”

 

“சொல்லுப்பா வீரா… என்ன விஷயம்?? இப்படி நீ திடுதிப்புன்னு வேலையை விட்டு வந்திருக்கியே”

 

“ஒரு வார்த்தை முன்னாடியே எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்ல. செவ்வந்திகிட்ட சொல்லிட்டியா!!” என்றார் அவர்.

 

“ஹ்ம்ம் தெரியும்ப்பா” என்று பதில் சொன்னவன் ‘அவ தான் என்கிட்ட பேசவே மாட்டேங்குறாளே!! நான் என்ன சொல்ல!! எப்பவும் போல அவளுக்கு மெசெஜ் அனுப்பியிருக்கேன், ஆனால் பதில் தான் இல்லை’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

“அப்பா இந்த முடிவு நான் இப்போ எடுத்ததில்லை. அம்மா இறந்து போனப்போவே எடுத்தது… ஆனா இவ்வளவு சீக்கிரம் வரணும்ன்னு அப்போ நான் நினைக்கலை. அதனால தான் உங்ககிட்ட எல்லாம் சொல்லலை”

 

“செவ்வந்தி உங்களுக்காக யோசிச்சது கூட நான் யோசிக்கலைன்னு நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சுப்பா!!”

 

“அதான் வேலையை எழுதி கொடுத்திட்டேன். நீங்க இங்க பிரச்சனை பத்தி சொல்லவும் என்னால அங்க இருக்கவே முடியலை”

 

“அதனால தான் உடனே கிளம்ப முடிவெடுத்தேன். ஆனா உடனே என்னால அப்போ கிளம்ப முடியலை. என்னால அங்க இருந்து உங்ககிட்ட உடனடியா பேசவும் முடியலை. சிக்னல் கூட கிடைக்காத இடத்துல இருந்தோம்”

 

“அதான் எதுவும் சொல்ல முடியலை, அங்க இருந்து வந்ததுமே நேரா இங்க வந்திட்டேன்ப்பா”

 

“ஆனா வீரா உனக்கு ஏன்பா வேலையை விடணும்ன்னு தோணிச்சு” என்றார் வருத்தத்துடன்.

 

“அப்பா நீங்க இதை புரிஞ்சுக்கணும்ப்பா ப்ளீஸ். உங்க ஆசைப்படி நான் இவ்வளவு நாள் அங்க இருந்தேன். எனக்கு தெரியும் நான் சர்வீஸ் பண்ணுறது உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு”

 

“ஆனா நான் படிச்ச படிப்புக்காகவும் அம்மாவோட ஆசைக்காகவும் விவசாயம் பண்ணலாம்ன்னு இருக்கேன்பா. சர்வீஸ் முடிச்சு வந்து இதை தான் செய்யணும்ன்னு நினைச்சேன்”

 

“என்ன கொஞ்சம் முன்னாடியே வந்திட்டேன்” என்றான் அவன். இதற்கு தான் என்ன சொல்ல முடியும் என்பது போல் அமர்ந்திருந்தார் அவர்.

 

“கோவமாப்பா??”

 

“இல்லைப்பா… ரொம்ப சந்தோசமா இருக்கு… நீ நினைச்சதை நீ பண்ணு”

 

“நிச்சயம் நல்லா வருவே. என்னாலான உதவியை நான் உனக்கு பண்றேன்” என்றார் அவர்.

“ரொம்ப சந்தோசம்ப்பா… நீங்க எப்படி எடுத்துப்பீங்களோன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். நீங்க இப்படி சொன்னதும் நிறைவா இருக்குப்பா”

 

“இதே போல மருமககிட்டயும் சொல்லிருப்பா”

 

“ஹ்ம்ம் நான் பார்த்துக்கறேன்ப்பா” என்றவன் “அப்பா நீங்க இன்னைக்கு பீரியா??”

 

“என்னப்பா?? என்ன விஷயம்??”

 

“மதுரைக்கு போகணும்ப்பா, போயிட்டு வருவோமா!!” என்றவன் தன் மனைவியை எண்ணியே அதை அவரிடம் கேட்டிருந்தான்.

 

தான் மட்டும் நேரே சென்று நின்றால் அவள் தன்னிடம் பேச மறுப்பாள் என்று தெரியும் அவனுக்கு. அவளின் பிடிவாதம் தான் இத்தனை மாதங்களாய் பார்க்கிறானே!!

 

தந்தை உடன் வந்தால் அவருக்காகவாவது தன்னிடம் பேசவில்லை என்றாலும் முகம் திருப்பாமல் இருப்பாள் என்பது அவன் திண்ணம்.

 

அவளிடம் நேரே சென்று பேசிவிடுவான் தான் ஆனால் அவள் பேசாமல் போனால் மற்றவரின் முன் வீண் காட்சியாய் போகும் என்றெண்ணினான்.

 

இவன் இப்படி எண்ணியிருக்க மகன் சொன்னதை கேட்ட சக்திவேலுக்கு பக்கென்றிருந்தது. தாமரை வீட்டிற்கு சென்று எதுவும் சண்டை சச்சரவு நடக்குமோ என்றிருந்தது அவருக்கு.

 

மகனை நன்கறிவார் அவர், அவன் கோபத்தை சட்டென்று காட்ட மாட்டான். அவன் கோபத்தை வெளிபடுத்தினால் அதை தாங்க முடியாததாய் இருக்கும் என்று மட்டும் தெரியும் அவருக்கு.

 

கோபமாய் எல்லாம் பேச மாட்டான், ஆனால் அவன் பேசும் வார்த்தைகள் அடுத்தவருக்கு வலிக்கச் செய்யும்.

 

இப்போது வந்ததுமே மதுரை போகலாம் என்கிறானே என்ன முடிவெடுத்திருக்கிறான் என்று தெரியவில்லையே என்பது தான் அவரின் கவலையே.

 

“என்னப்பா ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க?? நீங்க பிசின்னா நான் மட்டும் போயிட்டு வந்திடறேன்”

 

“நீங்க வந்தா நல்லாயிருக்கும்ன்னு பார்த்தேன்” என்றான்.

 

“நான் வர்றேன் வீரா” என்றார் அவர்.

 

“ஆனா என்ன விஷயமாப்பா??”

 

“கணக்கு தீர்க்க வேண்டியிருக்குப்பா!! பேசி தீர்க்கணும்” என்று முணுமுணுத்தவன் “உங்க மருமகளை பார்க்க வேணாமப்பா!! அதுக்கு தான் போறோம்” என்று அவன் சொன்னதும் சற்றே ஆசுவாசப்பட்டவருக்கு தாமரை பற்றி அவன் எதுவும் சொல்லவில்லையே என்றும் தோன்றியது.

 

‘அதை கேட்கலாமா!! வேண்டாமா!!’ என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீரா அழைத்தான்.

 

“அப்பா”

 

“சொல்லுப்பா”

 

“ஒரு… ஒரு வாரம் அங்க தங்க முடியுமாப்பா உங்களால” என்றான்.

 

“என்னப்பா என்ன விஷயம்??”

 

“என்னோட பிரண்டு ரியாஸ் உங்களுக்கே தெரியுமே!!”

 

“ஆமா உன்னோட வேலை செய்யற புள்ளை தானே!!”

 

“ஆமாப்பா!! அவனுக்கு சொந்த ஊரு மதுரை தானே!! அவங்க வீட்டுக்கு போகணும். அதுவும் இல்லாம அவனும் இன்னும் கொஞ்சம் நாள்ல இங்கவே வந்திடுவான்”

 

“அதுக்காக கொஞ்சம் வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டி இருக்குப்பா. நீங்களும் கூட இருந்தா நல்லா இருக்கும், அதான்” என்று வாய்க்கு வந்ததை சொன்னான் பாதி உண்மையுடன்.

 

அவனுக்கு செவ்வந்தி எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என்பது பற்றிய சிந்தனை தான். அவளிடம் பேசும் வரை அவனுக்கு வேறு சிந்தனை வராது என்பதை அறிந்தே இருந்தான்.

 

“சரிப்பா கிளம்பலாம்…” என்றவர் ஏதோ கேட்க நினைப்பது புரிந்தது அவனுக்கு.

 

“தாமரை வீட்டுக்கு போறது பத்தி யோசிக்கறீங்களா!! போகணும் கண்டிப்பா அங்கயும் போகணும்” என்று ஒரு மாதிரிக் குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

மதிய உணவுக்கு பின் தந்தையை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான். வண்டியில் கிளம்பியதில் இருந்து இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீரா தான் “அப்பா” என்றழைத்தான்.

“ஹ்ம்ம்” என்று அவர் பதில் சொல்லியதிலேயே தெரிந்தது அவனுக்கு தந்தை யோசனையிலிருக்கிறார் என்று.

 

“என்னப்பா என்ன யோசனை??”

 

“ஒண்ணுமில்லைப்பா… தாமரைக்கு குழந்தை பிறந்திருக்கு உனக்கு தெரியும் தானே!!”

 

“நான் ஊர்ல இருக்கும் போதே சொன்னீங்களேப்பா”

 

“டெலிவரில கொஞ்சம் கஷ்டமாயிடுச்சுப்பா”

“ஹ்ம்ம்” என்றவன் என்ன என்றெல்லாம் கேட்கவில்லை. உள்ளுக்குள் பதைத்தாலும் வாய்விட்டு கேட்கவில்லை அவன்.

 

தந்தை ஏற்கனவே சொன்ன செய்தி தானே என்ற ரீதியில் அமைதியாயிருந்தான்.

 

“செவ்வந்தியும் கூடவே இருந்தா, அன்னைக்கு இதை நான் உன்கிட்ட சொல்லலை” என்றார் அவர் மெதுவாய்.

 

இந்த செய்தி அவனுக்கு புதிது. அவ்வளவு நடந்திருக்கிறது பிறகும் இவள் தன் தங்கைக்கு செய்கிறாள் என்றால் என்ன சொல்லுவான் அவன்.

 

எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தான். “தாமரைக்கு மருமக வந்தது முதல்ல தெரியாது. குழந்தை எல்லாம் பிறந்தபிறகு தான் தெரியும்”

 

‘இதை எதுக்கு சொல்றார், அப்போ தாமரைக்கு இவ்வளவு செஞ்சும் புத்தி வரலையா!! என் பொண்டாட்டியை திரும்பவும் தப்பா பேசினாளா’ என்று கொதித்தது அவனுக்கு.

 

திரும்பி தந்தையை பார்த்தான். அவரின் தயங்கிய பார்வையே நடந்தது அது தான் என்று சொன்னது அவனுக்கு.

 

“என்ன சொன்னாப்பா??”

 

“அன்னைக்கு மாதிரி கொஞ்சம் பேசிட்டாப்பா?? அவங்க மாமியாரையும் சேர்த்து எதிர்த்து பேசிட்டா!! அவளுக்கு என்னாச்சுன்னே எனக்கு தெரியலை”

 

“இப்படி நடந்துக்க கூடிய பொண்ணும் இல்லை அவ… உங்கம்மா இருந்திருந்தா ரொம்ப வருத்தப்பட்டிருப்பா” என்றார் வருத்தத்துடன்.

 

“விடுங்கப்பா அதான் நீங்களே சொல்லிட்டீங்களே இப்படி நடந்துக்கற பொண்ணில்லைன்னு. நான் பேசிக்கறேன் அவகிட்ட” என்றான்.

 

தாமரையின் பேச்சு முடிந்ததும் அவன் மனம் மீண்டும் மனைவியையே சுற்றி சுற்றி வந்தது. இதுநாள் வரை அவள் இப்படியில்லையே!!

 

எதற்கு இப்படி நடந்துக் கொள்கிறாள் என்றும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. ஏதோ யோசனையில் இருந்தவனுக்கு செவ்வந்தி எண்ணம் வந்ததும் தந்தையிடம் கைபேசியை கேட்டான்.

 

“அப்பா உங்க போன் கொடுங்க” என்றவன் அதை வாங்கியதும் செவ்வந்திக்கு அழைத்தான். முதல் அழைப்பிலேயே எடுத்தவள் “சொல்லுங்க மாமா எப்படி இருக்கீங்க” என்றாள்.

 

வெகு நாளைக்கு பின் கேட்ட மனைவியின் குரலை உள்வாங்கி ஆழ்ந்து ரசித்தான் அவன். மீண்டும் மீண்டும் அவள் ஹலோ என்றதை ரசித்து கேட்டவன் அழைப்பை துண்டித்தான்.

“அப்பா இப்போ உங்க மருமக போன் பண்ணுவா!! நீங்க அவளை பார்க்க வந்திட்டு இருக்கறதா சொல்லுங்க. நான் வந்திருக்க விஷயத்தை இப்போ சொல்ல வேண்டாம்” என்றான்.

 

‘என்னவோ கணவன் மனைவி விளையாடிக் கொள்கிறார்கள்’ என்று எண்ணியவர் சரியென்று தலையசைக்க வீரா சொன்னது போல செவ்வந்தி போன் செய்தாள்.

 

“ஹலோ என்னாச்சு மாமா போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க!! நான் என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன், நல்லாயிருக்கீங்களா மாமா” என்றாள்.

 

“நல்லாயிருக்கேன்மா நான் உன்னை பார்க்க தான் வந்திட்டு இருக்கேன். நீ எங்கம்மா இருக்க??” என்றார்.

 

“இப்போ தான் டியூட்டி முடிஞ்சு கிளம்ப போறேன் மாமா!! நேத்து காலையில வந்தது. வேற டாக்டர்ஸ் இல்லை அதான் கண்டினியூ பண்ணிட்டேன்”

 

“ஹாஸ்டல் தான் கிளம்ப போறேன், நீங்க எங்க இருக்கீங்க மாமா!! என்னை பார்க்க தான் வர்றீங்களா!! தாமரை அண்ணியை போய் பார்த்தீங்களா!!” என்று அடுக்கினாள் அவள்.

 

“நீ அங்கவே இரும்மா, நான் வந்திட்டு இருக்கேன், வந்து பேசிக்கலாம்” என்றுவிட்டு போனை வைத்தார் அவர். அவர்கள் கிளம்பி இரண்டரை மணி நேரம் கடந்திருந்தது. மதுரையை தொட்டுவிட்டான் அவன்.

அவளிடம் பேசி முடித்த சில மணித்துளிகளிலேயே அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான் வீரா. வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு அவன் இறங்க சக்திவேல் முன்னமே இறங்கியிருந்தார்.

 

“எங்கப்பா வீரா போய் பார்க்கணும்??”

 

“நீங்க இங்க இருங்கப்பா நான் பார்த்திட்டு வர்றேன்” என்றுவிட்டு உள்ளே நகர்ந்தான்.

 

சக்திவேலை காரின் அருகில் விட்டு வீரா உள்ளே சென்றிருந்தான் அவளைத் தேடி.

 

சரியாக அதே நேரத்தில் வெளியில் வந்திருந்த செவ்வந்தி மாமனாரை கண்டுவிட்டு அவரை நோக்கி கையை ஆட்ட அவரும் இவளருகில் வந்தார்.

 

“எப்படிம்மா இருக்கே?? ஆளு ரொம்ப இளைச்சு போய்ட்ட மாதிரி இருக்கு. சரியா சாப்பிடுறியா இல்லையா!!” என்றார் அவர்.

 

“அதெல்லாம் நல்லா தான் மாமா சாப்பிடுறேன். இங்க வேலை அப்படி மாமா நான் கொஞ்சம் லீவு போட்டுட்டேன்ல”

 

“அதெல்லாம் சரிகட்டணுமே வேலை கொஞ்சம் கூட அதான் மாமா, வேற ஒண்ணுமில்லை”

 

“நீங்க மட்டும் தனியாவா மாமா வந்தீங்க” என்றாள். ஏனோ அவள் உள்ளுணர்வு வீரா வந்திருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தது.

 

இத்தனை நாட்களாய் இல்லாமல் இன்று மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கிறதே… அது எதனால் என்று புரியாமல் காலையில் இருந்து அவஸ்தையாக இருந்தது அவளுக்கு.

 

“ஹ்ம்ம் உன்னை பார்க்க தாம்மா வந்தேன். ஏன்ம்மா வரக்கூடாதா!!” என்று நாசுக்காய் அவள் கேட்ட கேள்விக்கான பதிலை நேரடியாய் சொல்லாமல் சொன்னார் அவர்.

 

“நீங்க என்னை பார்க்க வர்றதுக்கு கேட்கணுமா மாமா… சரி வாங்க ஹோட்டல்க்கு எங்காச்சும் போகலாம்” என்றாள் அவரிடம்.

 

சக்திவேலோ சட்டென்று அவளுக்கு பதில் சொல்லாமல் வீரா எப்போது வருவான் என்று திரும்பி ஒரு முறை பார்த்தார்.

 

நல்லவேளை வீராவே அப்போது எதிரில் வந்துக்கொண்டிருந்தான். தூரத்திலே வரும்போதே அவன் மனைவியை கண்டுக்கொண்டான்.

 

அவளைக் கண்டதும் கண்களும் உள்ளமும் குளிர்ந்து ஒரு புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுக்க பரபரப்பாய் இருந்தது அவனுக்கு. சந்தோசத்துடன் மனைவியை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான்…

பார்த்ததுமே அவளிடத்தில் தெரிந்தது அவளின் மெலிவு தான். அவன் சென்ற முறை பார்த்ததைவிட இன்னமும் மெலிந்திருக்கிறாள்.

 

வெள்ளைக்கோட்டை கழற்றி கையில் வைத்துக்கொண்டிருந்தாள். கழுத்தில் மாட்டிய ஸ்டெத்துடன் அவளை முழுதாய் ஒரு மருத்துவராய் இன்று தான் பார்க்கிறான்.

 

அதுவரையிலும் அவன் மட்டுமே தான் பார்த்துக் கொண்டிருந்தான். செவ்வந்தி அவனை பார்க்கவில்லை.

 

“என்ன மாமா நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க பதில் சொல்லாம இருக்கீங்க. வாங்க மாமா எதாச்சும் ஹோட்டல்க்கு போய் சாப்பிட்டுட்டே பேசலாம்” என்றாள்.

 

செவ்வந்தியின் உள்ளுணர்வு ஏதோ கூற சட்டென்று அருகே திரும்பி பார்த்தவள் திகைத்து அப்படியே நின்றுவிட்டாள்.

 

உள்ளம் வேகமாய் குளிர்ந்து போனதை அவளால் உணர முடிந்தது. அவனை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள். வீராவுக்கு சென்ற முறை திடிரென்று அவளெதிரில் வந்து நின்ற போது வேகமாய் வந்து அவள் கட்டியணைத்தது எல்லாம் ஞாபகத்தில் வந்தது….

 

தன் யோசனையை விட்டு வீரா அவளிடம் “ஓ!! பேசலாமே!! உன் மாமாகிட்ட மட்டுமில்லை என்கிட்டயும் பேசலாம்” என்று கூற வெகு நாளைக்கு பின் கேட்ட அவன் குரலில் உள்ளம் பனியாய் குளிர்ந்து போனது. அவனை கண்டதில் உடலில் புதுரத்தம் கண்டு முகம் சிவந்தது அவளுக்கு.

 

சட்டென்று எதையும் வாயை திறந்து பேசவில்லை அவள். “என்ன போகலாமா??” என்றான். அவளோ பேசாமடந்தையாய் இருந்தாள். “போகலாம் மாமா” என்று கணவனின் கேள்விக்கு மாமனாரிடம் பதில் கொடுத்தாள்.

 

சக்திவேலுக்கு அவள் மகனிடம் பேசாமல் இருந்தது ஏதோ வித்தியாசத்தை கொடுத்தது. ‘கடவுளே இவர்களுக்கு இடையில் எதுவும் பிரச்சனையா!!’

 

‘அன்று நடந்த விஷயத்தினாலா!! என்னவென்று தெரியவில்லையே!! சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைத்திருக்க இதென்ன புதுக்கதை. ரஞ்சிதம் என்ன செய்வியோ தெரியாது’

 

‘இந்த புள்ளைங்க உன் பொறுப்பு… நீ தான் எல்லாம் சரி செய்யணும்’ என்று மனதார மனைவியிடம் பேசிக்கொண்டார் அவர்.

 

வீராவுக்கு உள்ளுக்குள் வலித்த போதும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை அவன். அவனுக்கு அவளிடத்தில் பேசியாக வேண்டும்.

 

அது மட்டுமே தான் அவன் எண்ணத்தில். சக்திவேல் வேண்டுமென்றே பின் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டவர் “நீ முன்னாடி உட்கார்ந்துக்கோம்மா” என்றுவிட்டார்.

 

அவள் ஏறிக்கொள்ளவும் வண்டியை கிளம்பினான் அவன். “உன் ஹாஸ்டலுக்கு போறோம் இப்போ, உனக்கு தேவையான டிரஸ் செட் மட்டும் எடுத்திட்டு வா”

 

‘எதுக்கு’ என்பது போல் அவனை பார்த்தாள். “நான் உன்னோட ஹாஸ்டல்ல வந்து தங்க முடியாது, ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கேன். நீங்க ஒரு வாரத்துக்கு எங்களோட இரு” என்றவன் தந்தையிடம் திரும்பி “அப்பா சொல்லுங்க” என்றான்.

 

அவனுக்கு தெரியும் இந்நேரம் அவன் தகப்பன் அவர்களை கண்டு கொண்டிருப்பார் என்று. அதனாலேயே அவரை மருமகளிடம் பேசச் சொல்லி துணைக்கழைத்தான் அவன்.

 

திரும்பி அருகிருந்தவளை பார்த்தான். ஆனால் அவள் கண்களில் தான் ஜீவனில்லை இப்போது. போனில் பேசிய போது இருந்த உற்சாகம் கூட இல்லை அவளிடத்தில்… யோசனை இப்போது அவனிடத்தில்… இனி என்னாகும்…

Advertisement