Advertisement

அத்தியாயம் – 20

 

போன் பேசிவிட்டு வந்தவர் மருமகளை நோக்கி “செவ்வந்தி நீயும் உங்கம்மா வீட்டுக்கு போம்மா, வீரா வந்த பிறகு இங்க வந்தா போதும்”

 

“என்ன மாமா சொல்றீங்க?? நான் எதுக்கு மாமா அங்க போகணும். அதெல்லாம் வேண்டாம் மாமா”

 

“நீ இங்க தனியா இருக்க வேண்டாம்மா, நீ அங்க இருக்கறது தான் சரி. வீரா வர்ற வரைக்கு தானே!!”

 

“மாமா நீங்க தனியா இருப்பீங்க, நான் எங்கயும் போகலை இங்கவே இருக்கேன்” என்றாள்.

 

நான் தனியாக இருப்பேன் என்று மகளுக்கு வருத்தமாயில்லை… மருமகள் வருத்தப்படுகிறாள்… என்று லேசாய் ஒரு விரக்தி எழுந்தது அவருக்கு.

 

மகளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் “நான் எங்கம்மா போகப் போறேன், இங்க தானே இருக்கப் போறேன். நீ இங்க இருக்கறதுக்கு பதில் அடுத்த வீட்டில இருக்க போறே அவ்வளவு தானே!!”

 

“அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க மாமா!!”

 

“அவசரமான முடிவில்லை இது, அவசியமான முடிவுன்னு நான் நினைக்கிறேன்” என்றவர் மேலே எதுவும் பேசவில்லை.

 

ஆனால் அவர்கள் பேசிக்கொள்வது கேட்டு தாமரைக்கு தான் எரிந்தது. தான் அப்படி என்ன முக்கியம் இல்லாமல் போனோம் என்று.

 

“அப்போ உங்களால எங்களை பார்த்துக்க முடியாம நீங்க திருப்பி அனுப்பறீங்களா” என்றாள் கன்னத்தை பிடித்துக்கொண்டே!!

 

“ஆமா பார்த்துக்க முடியலை!! முடியலைன்னு சொல்றது விட முடியாதுன்னு தான் சொல்லணும்!! நீ இதுக்கு மேல எதுவும் என்கிட்ட பேசாதே!! உன்கிட்ட பேச நான் தயாராவே இல்லை!!” என்று முகம் திருப்பினார் அவர்.

 

தாயுமில்லை, தந்தையும் இப்படி முகம் திருப்பினால் என்ன செய்வாள் அவள். அவளின் கோபம் மொத்தமும் மீண்டும் செவ்வந்தியின் மீதே திரும்பியது.

 

“எல்லாம் உன்னால தான்!! கடைசில என்னை கெட்டவளாகிட்டல!!” என்று கத்தியவளுக்கு லேசாய் தலை கிறுகிறுக்க நிற்க முடியாமல் கண்ணை இறுக மூடி அருகிருந்த சோபாவை பற்றுதலாய் பிடித்தாள்.

 

கையில் குழந்தையுடன் நின்றிருந்த செவ்வந்தி அப்போது தான் தாமரையை பார்க்க அவள் நிற்க முடியாமல் தள்ளாடவும் “மாமா அங்க பாருங்க” என்று சக்திவேலை அழைத்தாள்.

 

அதற்குள் அவரும் அருகே வந்துவிட “நீங்க பாப்பாவை பிடிங்க” என்றவள் தாமரையின் அருகே சென்றாள்.

 

அவள் கைப்பற்ற முயற்சிக்க அந்த ரணகளத்தில் கூட அவள் கையை தட்டிவிட செவ்வந்தி அதை சுலபமாய் முறியடித்து அருகிருந்த சோபாவில் அவளை அமர வைத்தாள்.

 

உள்ளே சென்று அவளுக்கு பருக நீர் கொண்டு வந்தவள் மாமனாரிடம் கொடுத்தாள். ‘நீங்க கொடுங்க மாமா’ என்று வாயசைத்து அவரிடம் கொடுத்தாள்.

 

“தாமரை என்ன செய்யுது உனக்கு, இந்தா இந்த தண்ணீயை குடி” என்று கொடுத்தார்.

 

அதை வாங்கி மளமளவென அருந்தியவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் அப்படியே வாந்தி எடுத்துவிட்டாள். சக்திவேல் பயந்து தான் போனார்.

 

செவ்வந்தி அந்த இடத்தை உடனே சுத்தம் செய்தவள் “மாமா அவங்களை உள்ள கூட்டி போய் படுக்க வைங்க!! நான் என்னோட ஸ்டெத் எடுத்திட்டு வந்து பார்க்குறேன்” என்றுவிட்டு வேகமாய் பின்னால் சென்றாள்.

 

குழந்தையை தொட்டிலில் கிடத்தியவர் சோபாவில் சாய்ந்திருந்த தாமரையை கைத்தாங்கலாய் எழுப்பி வந்து கட்டிலில் படுக்க வைத்தார்.

 

“என்னாச்சும்மா தாமரை?? என்ன செய்யுது உனக்கு??” என்றார்.

 

“தெரியலைப்பா… தலை சுத்துற மாதிரி இருக்கு… பாப்பா வயித்துல இருக்கும் போதே பிரஷர் கொஞ்சம் இருந்துச்சு எனக்கு”

 

“அப்பப்போ கொஞ்சம் தலைசுத்தல் இருக்கும். இப்போ ஒரு ரெண்டு மூணு நாளா அப்படி தான் இருக்குப்பா” என்றாள் உள்ளே போன குரலில்.

 

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே செவ்வந்தி உள்ளே வந்திருந்தாள். ஸ்டெத்தை மாட்டியவள் தாமரையின் சுவாசத்தை பரிசோதித்தாள்.

 

கையோடு கொண்டு வந்திருந்த பிரஷர் கருவியின் உதவியுடன் அவளுக்கு பிரஷர் செக் செய்தாள். எப்போதும் இருப்பது விட சற்று கூடுதலாகத் தான் பிரஷர் இருந்தது.

 

நெற்றி சுருக்கி யோசித்தாள். பிரஷர் செக் செய்யும்போதும் அவள் இதயத்துடிப்பை அறிய முயன்ற போதும் அவள் உணர்ந்ததை உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் ஒரு முறை செக் செய்தாள்.

 

பின் ஒன்றும் சொல்லாமல் வெளியில் சென்றுவிட்டாள். சக்திவேல் மருமகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

‘என்னாச்சு இந்த பொண்ணுக்கு ஒண்ணுமே சொல்லாம போகுதே’ என்றெண்ணியவர் அவள் பின்னோடு சென்றார்.

 

“ஏம்மா செவ்வந்தி என்னாச்சும்மா தாமரைக்கு பிரஷர் எதுவும் கூடிப்போச்சா!! ரெண்டு நாளா இப்படி தான் இருக்குன்னு சொல்றா!!”

 

“என்ன சொல்றீங்க மாமா ரெண்டு நாளா இப்படி இருக்குன்னு அவங்க சொன்னாங்களா உங்ககிட்ட”

 

“ஆமாம்மா இப்போ தான் சொன்னா!! என்னம்மா விஷயம் தூத்துக்குடிக்கு வேணா போய் ஆஸ்பத்திரில காமிச்சுட்டு வருவோமா??” என்றார்.

 

“காட்டணும் மாமா, அதுக்கு முன்ன பிரகனன்சி டெஸ்ட் எடுக்கணும் மாமா” என்றாள்.

 

மருமகள் சொன்னது அவருக்கு உடனே புரியவில்லை “என்னம்மா சொன்னே??” என்றார்.

 

“அவங்க கர்ப்பமா இருக்காங்க மாமா அதை முதல்ல உறுதிப்படுத்திட்டு தூத்துக்குடிக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு சொன்னேன்” என்றாள் விளக்கமாய்.

 

அவருக்கு ஓரிரு நிமிடம் ஒன்றும் ஓடவில்லை. என்ன நடக்கிறது இங்கே என்பது போல் இருந்தது அவருக்கு.

 

தாமரையும் அவள் தந்தையின் பின்னே எழுந்து வந்திருந்தாள் செவ்வந்தி என்ன சொல்வாள் என்பது போல்.

 

செவ்வந்தி சொன்னதை கேட்டதும் அவளுக்கு பக்கென்று இருந்தது. தவிர விஷயத்தை மாமனாரிடம் சொல்லி முடித்த செவ்வந்தியின் பார்வை அவர் பின்னே நின்றிருந்த தாமரையின் மீது விழவும் ஒரு நிமிடம் அவள் கூனிக்குறுகி போனது உண்மையே.

 

செவ்வந்தி என்னவோ சாதாரணமாய் தான் பார்த்தாள். ஆனால் தாமரைக்கு தான் ‘நீயெல்லாம் என்னை பேசுகிறாயா’ என்பது போல் தோன்றியது.

 

அவ்வளவு நேரம் ஆங்காரமாய் பேசியவள் அப்படியே அடங்கியிருந்தாள். சக்திவேல் மகளை பார்த்தார், அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 

“இவ்வளவு அவசரம் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

 

செவ்வந்தி எப்போதோ அங்கிருந்து நகர்ந்திருந்தாள். சக்திவேல் அன்று முழுதும் வீட்டிலேயே தானிருந்தார். வெளியே சென்ற செவ்வந்தி மாமனாரை தேடி வந்தாள்.

 

“மாமா இதை அவங்ககிட்ட கொடுத்திடுங்க, டெஸ்ட் பண்ண சொல்லுங்க” என்றாள்.

 

பின் வெளியே செல்லப் போனவள் “மாமா அவங்களை நாளைக்கே அனுப்பணுமா??” என்றாள்.

 

“கண்டிப்பா நாளைக்கு அவ கிளம்பி தான் ஆகணும்மா?? அவ மட்டுமில்ல நீயும் தான்!!”

 

“என்னம்மா பார்க்குற?? வீரா வர்ற வரைக்கும் நீ உங்க வீட்டில இரும்மா!! நான் அப்போ சொன்னது தான் இப்போவும் சொல்றேன். அந்த முடிவுல எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

 

“உங்களுக்கு சாப்பாடு எல்லாம் மாமா…” என்று இழுத்தாள்.

 

“நீ பக்கத்துல தானேம்மா இருக்க, நீ கொண்டு வந்து கொடுக்க போறே!! இல்லன்னா நான் அங்க வந்து சாப்பிட்டு போறேன் அவ்வளவு தானே!!” என்று முடித்துவிட்டார் அவர்.

 

அன்று இரவு வீரா செவ்வந்திக்கு அழைக்க கைபேசியில் அவன் அழைப்பை வெறித்தவள் அதை எடுக்கக்கூட தோன்றாமல் அப்படியே பார்த்திருந்தாள். தொடர்ந்த அழைப்புகள் எடுக்கப்படாமலே ஓய்ந்தது.

 

காலையில் அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் சற்று முன் பின் வீட்டிற்கு சென்ற போது மொத்தமாய் கொட்டி தீர்த்திருந்தாள் அவள்.

 

அழுந்து ஓய்ந்தவளுக்கு மலையளவு கோபம் கணவன் மேல் எழுந்தது. யாருக்குமே தெரியாது அவள் வீட்டை விட்டு சென்றது என்று தான் இதுநாள் வரை அவள் நினைத்திருந்தாள்.

 

ஆனால் அந்த விஷயம் தாமரைக்கு தெரிந்திருக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம். அவன் சொல்லாமல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே!! ஒவ்வொரு முறையும் தான் பிறர் முன் அவமானப்பட்டு நிற்கிறோம் என்பதே அவளுக்கு பெரிய அவமானமாக இருந்தது. அவளுக்கு இருந்த கோபத்தை அவனிடம் பேசி தீர்த்திருக்கலாம், சண்டை போட்டிருக்கலாம்.

 

அதைவிட்டு அவளுக்கு இருந்த மன அழுத்தத்தில், தாமரையின் பேச்சு கொடுத்த வலியில் மாமனாரின் முன் கூனிக்குறுகி நின்றதில் உடைந்திருந்த அவள் மனது அவனிடம் பேச விரும்பவில்லை.

 

கோபம் குறைந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று அவள் நினைத்து போனை எடுக்காமல் விட்டாள்.

 

மறுநாளைய பொழுதும் விடிந்தது. காலையிலேயே நல்ல நேரம் பார்த்து கிளம்பி வந்து விட்டிருந்தனர் தாமரையின் வீட்டினர்.

 

வந்தவர்களை வரவேற்று உபசரித்தாள் செவ்வந்தி. தாமரைக்கு முதல் நாளிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை.

 

முதல் நாள் கர்ப்பம் உறுதி செய்ய அவள் செய்திருந்த டெஸ்டின் ரிசல்ட் பாசிடிவ் என்று வந்ததுமே அவளைக்கு தலைசுற்றியது.

 

எப்படி சமாளிக்கப் போகிறோம். கையில் ஐந்து மாதக் குழந்தை இப்போது கருவில் ஒன்று, கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை ஆரம்பித்துவிட்டது அவளுக்கு.

 

இரவில் செவ்வந்தி உடன் படுந்திருந்த போதும் அவள் முகம் பார்க்க தயங்கி திரும்பி படுத்துக்கொண்டாள்.

 

காலையில் இதைக்கேட்கும் மாமியார் என்ன சொல்லுவாரோ என்ற கவலை இரவிலிருந்தே அவளை அரித்து எடுக்க இதோ காலையில் வந்து நின்றிருந்தவர்களின் முகம் நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.

 

அன்று மதியம் நான்கு மணிக்கு மேல் நல்ல நேரம் தொடங்குவதால் மதிய உணவு பின் அவர்கள் கிளம்புவதென இருந்தது.

 

அவர்களை வரவேற்று உபசரித்ததோடு சரி செவ்வந்தி எதுவும் வாயே திறக்கவில்லை. ஒரு அமைதியுடனே எல்லாம் செய்து கொண்டிருந்தாள். சக்திவேலும் வெளியில் எங்கும் செல்லவில்லை.

 

மீண்டும் ஒரு கலவரத்தை சந்திக்க அவர் தயாராக இல்லை. அதனாலேயே அவர் வீட்டிலிருந்தார்.

 

ரவியும் அவன் அன்னையுமே மட்டுமே அவர்களை அழைக்க வந்திருந்தனர். செவ்வந்தி அவர்களை உபசரித்து உள்ளே சென்றுவிட்டாள்.

 

தாமரையின் மாமியார் உள்ளே இருந்தவளை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்து அவளருகில் அமர்த்தினார்.

 

‘இதென்ன புதுசா இவங்க பண்ணுறாங்க’ என்று நினைத்தாலும் அவள் வாயே திறக்கவில்லை.

 

“அண்ணே உங்க மருமக மாதிரி பொறுமை யாருக்கும் வராது” என்று ஆரம்பித்தார் அவர்.

 

சட்டென்று அவர் ஆரம்பித்த பேச்சில் சக்திவேலும் நிமிர்ந்து அவரை தான் பார்த்தார்.

 

தாமரையின் முகமோ மாமியாரின் பேச்சில் லேசாய் கன்ற ஆரம்பித்தது. தாமரை கணவனின் முகத்தை பார்க்க அவனும் அன்னை பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தான் போலும்.

 

“என்னம்மா சொல்றீங்க??” என்றார் சக்திவேல்.

 

“நிஜமா தான் அண்ணா சொல்றேன். நீங்க கொடுத்து வைச்சவங்க தான். நான் கூட இந்த பொண்ணை ஆரம்பத்துல தப்பா தான் நினைச்சிருக்கேன்”

 

“வீட்டுக்கு வந்தப்போ கூட ஒரு மாதிரி சொல்லிட்டேன். அப்போ கூட எதுவும் சொல்லாம அமைதியா போய்ட்டா”

 

“இன்னைக்கு தாமரையும் குழந்தையும் நல்லபடியா பார்த்திருக்கான்னா அதுக்கு செவ்வந்தி தான் காரணம். தாயை போல கவனிக்க எங்க தாமரைக்கு இவ கிடைச்சிருக்கா!!

 

“வயசுல சின்ன பொண்ணு, பழக்கமில்லாத வேலை இதெல்லாம். அதையும் மீறி இந்தளவுக்கு பார்த்திருக்கான்னா இதுக்கு மேல என்ன சொல்ல எனக்கு வார்த்தையே வரலை அண்ணா” என்றார்.

 

“உங்களுக்கு தான் என்னை நல்லா தெரியுமே அண்ணா. நான் மனசுல தோணுறதை அப்படியே பேசிருவேன். நல்லதோ கெட்டதோ அதை உடனே சொல்லிருவேன்”

 

“அன்னைக்கு செவ்வந்தியால பார்க்க முடியாதுன்னு சொன்னதும் அந்த மாதிரி தான்”

 

“ரவி கூட சொல்லிட்டு இருந்தான், அந்த பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு வீரா தம்பிக்கு அமைஞ்சது பெரிய கொடுப்பினைன்னு”

 

“நீ தான் இந்த வீட்டுக்கு வரணும்ன்னு அந்த புண்ணியவதியோட விருப்பம் போலம்மா”

 

“போக முன்னாடி இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க ரஞ்சிதம் அண்ணி” என்று அவர் சொல்லவும் சக்திவேலுக்கு ஆச்சரியமே.

 

தனக்கு மட்டும் தான் அப்படி தோன்றியது என்று அவர் இதுநாள் வரை நினைத்திருக்க தாமரையின் மாமியாரின் பேச்சும் அதை உறுதிப்படுத்தியது எண்ணி அவருக்கு சந்தோசமே.

 

“அன்னைக்கு உன்னை புரியாம பேசிட்டேன்ம்மா, நீ அதெல்லாம் எதுவும் மனசுல வைச்சுக்காதேம்மா” என்று அவள் கைப்பிடித்து அவர் சொல்ல செவ்வந்தி உண்மையிலே நெகிழ்ந்து தான் போனாள்.

 

அவள் பார்வை தன்னையுமறியாமல் தாமரையை தொட்டு நின்றது. அவள் வேண்டுமென்றே எல்லாம் பார்க்கவில்லை. தாமரை என்ன நினைப்பாளோ என்ற ரீதியில் தான் நிமிர்ந்து பார்த்தாள்.

 

ஆனால் செவ்வந்தியின் பார்வை தாமரைக்கு ஏனோ குத்திக்காட்டுவது போல இருந்தது.

 

‘எல்லோரும் இவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களே!!’ என்று மீண்டும் அவள் கோப குணம் தலைத்தூக்கியது.

 

“நான் எதுவும் நினைக்கலைம்மா, நீங்க எங்க அம்மா மாதிரி. நீங்க சொல்றதை நான் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு” என்று பெருந்தன்மையாகவே பதில் கொடுத்தாள் செவ்வந்தி.

 

“இல்லைம்மா நான் கூட தாமரைகிட்ட உன்னைப்பத்தி தப்பா தான் பேசியிருக்கேன். உன் கூட நான் அதிகம் பேசினதில்லைம்மா, ஆனா உன்னை பார்த்திட்டு தான் இருக்கேன்”

 

“தாமரையை விட நீ வர்ஷினியை எப்படி பார்த்துக்கறேன்னு எனக்கு நல்லா தெரியும். எங்களால அதை நல்லாவே உணர முடியுது”

 

“அன்னைக்கு அம்மா தாமரையை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு சொன்னப்போ கூட நான் மறுக்கலை. ஏன்னா எனக்கும் நீ சின்ன பொண்ணு தானே உன்னால என்ன பெரிசா பார்த்துக்க முடியும்ன்னு அன்னைக்கு நினைச்சுட்டு இருந்தேன்”

 

“ஆனா நீ படிப்பை விட்டு அவங்களை நல்லபடியா கவனிச்சிருக்கே!! இதெல்லாம் நீ செய்யணும்ன்னே இல்லைம்மா” என்றான் என்றுமே அவளிடத்தில் அதிகம் பேசியிராத ரவி.

 

ரவி இவ்வளவு பேசியதை அவள் இன்று தான் கேட்கிறாள். செவ்வந்திக்கு முதல் நாள் ஏற்பட்ட மனக்காயத்திற்கு அவர்களின் பேச்சு புண்ணுக்கு தடவிய புனுகை போன்று இருந்தது.

 

மனம் சற்று லேசாகி போயிருந்தது அவளுக்கு. சக்திவேலுக்கும் மருமகளைக் குறித்து பெருமிதமாய் இருந்தது.

 

பேசிக்கொண்டிருக்கும் போதே மகளின் விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணினார் சக்திவேல். அதன் பொருட்டு மகளை நிமிர்ந்து பார்த்தார்.

 

“தாமரை” என்றழைத்தார்.

 

“என்னப்பா??”

 

“மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டியா??” என்றார்.

 

“எதைப்பத்திப்பா??”

 

“என்னம்மா மறந்திட்டியா!! நீயே சொல்லிடு மாப்பிள்ளைகிட்டயும்!! உன் மாமியார்கிட்டயும்!!” என்று சொல்ல இருவருமே அவளை நிமிர்ந்து என்னவென்பது போல் பார்த்தனர்.

 

“என்ன தாமரை?? என்ன விஷயம்??” என்றான் ரவி.

 

தாமரைக்கு அதை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். மாமியார் என்ன சொல்லுவாரோ என்று உள்ளுக்குள் லேசாய் உதைத்தது.

 

சக்திவேலுக்கு கைபேசியில் ஏதோ அழைப்பு வர அவர் வெளியில் எழுந்து சென்றார். “நீங்க பேசிட்டு இருங்கம்மா நான் போய் மதிய சாப்பாட்டை பார்க்கறேன்” என்று நாசுக்காய் எழுந்து உள்ளே சென்றாள் செவ்வந்தியும்.

 

“என்ன தாமரை??” என்று இப்போது கேட்டது மாமியார்.

 

‘அச்சோ அத்தை வேற கேட்குறாங்களே!! இவங்ககிட்ட எப்படி சொல்ல… இவர்கிட்ட சொல்லிவிடலாம் அத்தைகிட்ட எப்படி இதை நான் சொல்லுறது’ என்ற யோசனையே இப்போதும் அவளுக்கு ஓடியது.

 

எதுவும் வாயை திறக்காமல் இன்னமும் அப்படியே நின்றிருந்தாள்.

 

“அம்மா கொஞ்சம் வர்றீங்களா!!” என்று சமையலறையில் இருந்து செவ்வந்தி அழைக்க அவரும் யோசித்துக்கொண்டே மருமகளை ஒரு முறை முறைத்துவிட்டு உள்ளே சென்றார்.

 

“சொல்லும்மா” என்றார் செவ்வந்தியை பார்த்து.

 

“அம்மா நான் ஒண்ணு சொல்வேன் நீங்க அதை எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியலை எனக்கு” என்ற அவளின் பீடிகையில் கண்ணை சுருக்கி யோசனையுடன் ஏறிட்டார் அவர்.

 

“எனக்கு சுத்தி வளைக்காம நேரா பேசுறது தான் பிடிக்கும்மா… நான் பேசுறது சரியோ தப்போ மனசுல வைச்சுக்காம கேட்டிருவேன்”

 

“நீ என்ன சொல்லப் போறியோ சொல்லு” என்றார் அவர்.

 

தாமரை அவ்வளவு பேசியும் அவளுக்கு தான் ஏன் இதெல்லாம் செய்கிறோம் என்று கூட அவளுக்கு புரியவில்லை. தாமரை மாமியாரிடம் சொல்லத் தயங்கிய விஷயத்தை அவளே அவரிடம் சொல்லி முடித்திருந்தாள்.

 

கணநேரத்தில் அவர் முகத்தில் தோன்றிய உணர்வுகளை கொண்டு அவரை அவளால் படிக்க முடியவில்லை.

 

மேற்கொண்டு அவர் எதுவும் சொல்லவில்லை மேற்கொண்டு அங்கு நில்லாமல் வெளியில் சென்றுவிட்டார். அதற்குள் தாமரை கணவனிடம் விபரம் சொல்லியிருப்பாள் போலும் இருவரும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

 

மாமியாரை கண்டதும் தாமரை பேச்சை அப்படியே நிறுத்தினாள். அவர் பார்வையே சொன்னது அவருக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று.

 

மகனையும் மருமகளையும் ஒரு பார்வை பார்த்தார். வேறு எதுவும் பேசவில்லை. பின் வர்ஷினியை தூக்கிவைத்துக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்துவிட்டார்.

 

அவர் பார்த்த பார்வையை தாமரைக்கு உள்ளூர குளிரை பரப்பியது. கணவனிடம் ஜாடை காட்டினாள்.

 

அதற்குள் சக்திவேல் போன் பேசிவிட்டு வந்திருந்தார். மதிய உணவு தயாராகி இருக்க அவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.

 

அவர்கள் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்க செவ்வந்தி “அம்மா” என்றழைத்தாள்.

 

“என்னம்மா??” என்றார் அவர்.

 

செவ்வந்திக்கு ஏனோ மனது கேட்கவில்லை. இன்றே தாமரையை அழைத்து செல்லத்தான் வேண்டுமா என்றிருந்தது அவளுக்கு.

 

கர்ப்பமாக வேறு இருக்கிறார் அவ்வளவு தூரம் காரில் பயணம் செய்ய வேண்டும், உடம்பு தாங்குமா!! என்ற யோசனை அவளுக்கு. முதல் நாள் நடந்த விஷயதிற்காய் அவளுக்கு தாமரையின் மீது ஆயிரம் வருத்தங்கள் உண்டு தான், அதற்காக மாமனார் எடுத்த முடிவு சரி என்று எடுத்துக்கொள்ளலாம்.

 

தான் ஒரு மருத்துவர் என்ற முறையில் அவளால் தாமரையை அன்றே அனுப்பி வைக்க மனதில்லை.

 

“என்னம்மா கூப்பிட்டு என்ன யோசனை??” என்றார் அவர்.

 

“இல்லைம்மா அண்ணியை இன்னைக்கே கூட்டிட்டு போகணுமா??” என்று சொல்லியவளை பார்த்து தாமரை முறைத்தாள்.

 

‘செய்வதும் செய்துவிட்டு பேச்சை பார். இவளால் தானே அப்பா இன்றே அனுப்பி வைக்கிறார்’ என்ற கோபம் அவளுக்கு.

 

சக்திவேலோ இவளென்ன மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறாள் என்று தான் தோன்றியது. அவரும் மருமகளைத் தான் பார்த்திருந்தார்.

 

“இல்லை நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அப்புறம் நீங்க என்ன முடிவேடுக்கறீங்களோ!! நான் தடுக்கலை” என்றுவிட்டு நிறுத்தினாள்.

 

“அவங்க உடம்பு கண்டிஷன் எப்படி என்னன்னு தெரியாம இன்னைக்கே அவங்களை அழைச்சுட்டு போகணுமா??”

“அவ்வளவு தூரம் நீங்க கார்ல போகணும், அதுக்காக தான் சொல்றேன். இதை ஒரு டாக்டரா நான் சொல்லித் தான் ஆகணும்”

 

இதை கேட்டதும் தாமரைக்கு சற்று கலக்கம் வந்தது. காரில் பயணம் செய்தால் எதுவுமாகிவிடுமா என்று.

 

அவள் கலக்கம் முகத்தில் தெரிந்ததுவோ என்னவோ செவ்வந்தியே விளக்கம் கொடுத்தாள். “இல்லை பயப்படத்தேவையில்லை”

 

“ஆனாலும் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கலாமேன்னு தான் சொல்றேன். பள்ளம் மேடு பார்த்து ஓட்டிட்டு போகணும். கொஞ்சம் கவனம் எடுத்து போகணும்” என்று மேலும் சொல்ல அங்கு அமைதி நிலவியது.

 

சக்திவேலுக்கோ மருமகள் சொல்லும் காரணம் சரியென்றுபட்டாலும் மகள் அவ்வளவு தூரம் மருமகளை பேசிய பின் இருவரும் ஒன்றாய் இருப்பது சரியென படவில்லை அவருக்கு.

 

இவ்வளவு நடந்த பிறகும் மருமகள் மகளுக்காய் பேசியதை நினைத்து அன்றைய நாளில் மீண்டும் பெருமை கொண்டார் அவர்.

 

அவரால் வேண்டாம் என்றும் மறுக்க முடியவில்லை சரியென்றும் இருக்க முடியவில்லை. தாமரையின் மாமியாரே முடிவெடுக்கட்டும் எது நடக்கிறதோ அது நன்மைக்கே என்று நினைத்துக்கொண்டு அமைதியானார்.

 

“நீ சொல்றதெல்லாம் சரி தான்மா!! இப்போவே குழந்தைக்கு அஞ்சு மாசம் ஆச்சு. அங்க அக்கம் பக்கத்துல எல்லாம் எப்போ குழந்தையை கூட்டிட்டு வரப் போறேன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க”

 

“அண்ணன் நேத்து போன் பண்ணியிருக்கலன்னா நானே இந்த வாரத்துல பண்ணியிருப்பேன். வந்து இவங்களை கூட்டி போயிருப்பேன்”

 

“இப்போ என்ன தாமரையை அலுங்காம குலுங்காம கூட்டி போகணும் அவ்வளவு தானே!! அந்த காலத்துல நாங்க எல்லாம் இல்லையா!! நான் பார்த்துக்க மாட்டேனாம்மா!!”

 

“உங்கண்ணிக்கு ஒண்ணும் ஆகாது நாங்க பத்திரமா கூட்டிட்டு போறோம் சரி தானே!!” என்று முடிவாய் கூறிவிட்டார் தாமரையின் மாமியார்.

 

“சரிங்கம்மா உங்க இஷ்டம்!!” என்றவள் “ஊருக்கு போனதும் டாக்டர் போய் பாருங்க, எதுவும் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுங்க”

 

“மதுரை ஆஸ்பத்திரில என்னோட பிரண்ட்ஸ் நிறைய பேரு இருக்காங்க” என்றாள்.

 

அவர்கள் கிளம்புகிறார்கள் என்றறிந்ததுமே குழந்தையை தூக்கி கையில் வைத்துக்கொண்டாள்.

இன்னும் கொஞ்சம் நேரம் தானே குழந்தையை தான் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் குழந்தையை கீழே விடாமல் வைத்திருந்தாள்.

 

தன்னை பார்த்து அடையாளம் கண்டு சிரிக்கும் அந்த பிஞ்சுமலரின் சிரிப்பை இனிமேல் காணமுடியாது என்று எண்ணம் எழுந்ததும் அழுகை பொங்கிக் கொண்டு தான் வந்தது.

 

ஒருவழியாக அவர்கள் பேசி முடித்து கிளம்ப ஆயத்தமாயினர்.

 

செவ்வந்தியின் கையில் இருந்த குழந்தையை தாமரையின் மாமியார் வாங்கிக்கொண்ட வேளை கட்டுப்படுத்த முயன்றும் எப்போதும் யார் முன்னும் அழாதவளின் கண்ணில் இருந்து குழந்தையை பிரிய முடியாமல் அழுகை வந்திருந்தது.

 

தாமரையின் மாமியாருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ஏன் தாமரைக்கு கூட அந்த கணம் சற்று பொறாமையாக தானிருந்தது. தன்னைவிட தன் குழந்தையை மேல் பாசம் வைத்திருக்கிறாளே என்று.

 

“இதுக்கெல்லாம் எதுக்கும்மா கலங்கிட்டு இதெல்லாம் காலங்காலமா நடக்கறது தானே!! சீக்கிரமே நீயும் ஒண்ணை பெத்துக்கோ அடுத்த வருஷமே!! உன் மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்” என்றுவிட்டு போனார் அவர்.

 

தாமரைக்கு மாமியாரை குறித்து ஆச்சரியமே யாரையுமே அவ்வளவு எளிதில் அவர் பாராட்டிவிட மாட்டார். அவரிடம் பாராட்டு வாங்குவது வசிஷ்டரிடம் இருந்து பிரம்மரிஷி பட்டம் வாங்குவதற்கு சமம்.

 

வந்ததில் இருந்து இவளை ஓவராக புகழ்ந்து தள்ளிய இவர் தானே அன்று எனக்கு அவ்வளவு தூபம் போட்டது என்று எண்ணினாள் அவள்.

 

அவர்கள் கார் கிளம்பியது, அந்த கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்திருந்தாள் செவ்வந்தி.

 

உள்ளே வந்த மறுகணமே சக்திவேல் “செவ்வந்தி நீ உனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைச்சுக்கோம்மா!!”

 

“நான் உன்னை கூட்டி போய் வீட்டில விட்டிறேன்” என்றார்.

 

“மாமா ப்ளீஸ் மாமா அதெல்லாம் வேணாமே!!” என்றாள் அவள் மறுப்பாய்.

 

“சொல்றதை கேளும்மா நீ கிளம்பு நான் வந்து விட்டுட்டு வர்றேன்” என்றார் அவர் பிடித்த பிடியை விடாமல்.

 

சக்திவேல் அவள் பேச்சையும் கொஞ்சம் கேட்டிருக்கலாம். அவருக்கு என்ன தெரியும் போன மருமகளை திருப்பி அழைத்து வர பிரம்மபிரயத்தனப்பட வேண்டியிருக்கும் என்று. தெரிந்திருந்தால் விட்டிருப்பாரா என்ன!! செவ்வந்தியை கொண்டு அவள் வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

 

ஆயிற்று இத்தோடு பத்து நாட்கள் ஓடிவிட்டது. தினமும் அழைக்கும் வீராவின் அழைப்பை ஏற்காமல் அவன் மேலான கோபத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.

 

வீராவும் ஓரிரு நாட்கள் நூறு அழைப்புகள் கூட விடுத்திருக்கிறான். ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது போக உள்ளுக்குள் பெரிய கலவரமே உண்டானது அவனுக்கு.

 

இரண்டு நாட்கள் பொறுத்தவன் மூன்றாம் நாள் தந்தைக்கு அழைத்தான்.

 

வீராவின் எண்ணை கண்டதும் சற்றே பதட்டமானார் சக்திவேல். எப்போதும் இந்த நேரத்தில் மகன் அழைக்க மாட்டான் என்று அவருக்கு தெரியும் அதனால் வந்த பதட்டம் தான் அவருக்கு.

 

“சொல்லுப்பா வீரா” என்றார் மகனிடம்.

 

“வீட்டில என்னப்பா பிரச்சனை” என்றான் எடுத்ததுமே.

 

மகன் அப்படி கேட்டதுமே அவருக்கு ஒரு மாதிரியாகிப் போனது. மருமகள் சொல்லியிருப்பாள் அதனால் தான் கேட்கிறான் போலும் என்று எண்ணினார்.

 

“செவ்வந்தி சொல்லியிருப்பாளேப்பா…” என்று ஆரம்பிக்க அதற்கு இடைமறித்தான் அவன்.

 

“அவன் போன் எடுத்தா தானேப்பா என்கிட்ட பேச” என்று மகன் சொன்னதும் ‘இதென்ன புதுக்கதை’ என்று தானிருந்தது அவருக்கு.

 

பின் அவரே நடந்த விஷயத்தை தயங்கி தயங்கி மகனிடம் சொல்லி முடித்திருந்தார். அவர் சரியாய் சொல்லாது விடுத்த விஷயத்தை அவனால் உணர முடிந்தது.

 

அவர் பேசி முடிக்கும் வரை அவன் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. பின்னர் “தாமரை எங்கப்பா??”

 

“அவங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சாச்சுப்பா!!”

 

“அப்போ செவ்வந்தி எங்கப்பா??”

 

“நீ வர்ற வரைக்கும் அவ தனியா இருக்க வேணாம்ன்னு அவங்க வீட்டில இருக்கச் சொன்னேன்ப்பா!! நீ வந்ததும் போய் அழைச்சுக்கலாம்”

 

“ஹ்ம்ம்” என்றவன் யோசனையானான்.

 

“ஏன்ப்பா நான் எதுவும் தப்பா முடிவெடுத்திட்டனா!!”

 

“ஒண்ணுமில்லைப்பா விடுங்க” என்றவன் “ஏன்பா இவ்வளவு நடந்திருக்கு நீங்க ஏன் எனக்கு உடனே சொல்லலை”

“என்கிட்ட சொல்லணும்ன்னு உங்க யாருக்கும் தோணவேயில்லையா!! இல்லை எல்லாரும் சேர்ந்து என்னை தலைமுழுக்கிட்டீங்களா!!” என்றவனின் வார்த்தையில் வலியும் வேதனையும் இருந்ததை பெற்றவரினால் உணர முடிந்தது.

 

“இல்லைப்பா வீரா நடந்த எதுமே செவ்வந்தி என்கிட்ட சொல்லவேயில்லை. நான் வெளிய வேலையா போயடுறதால வீட்டை கவனிக்காம விட்டுட்டேன்”

 

“நடந்ததுல என் தப்பு தான்பா அதிகம். என்னை மன்னிச்சுடு வீரா!! நான் தெரிஞ்சே இதெல்லாம் செய்யலை”

 

“நான் கொஞ்சம் முன்னமே வீட்டுல என்ன நடக்குதுன்னு கவனிச்சிருந்தா தாமரையை அவ்வளவு தூரம் பேச விட்டிருக்க மாட்டேன்” என்று உண்மையாய் வருந்தி சொன்னார் அவர்.

 

“அப்பா நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு என்கிட்ட சொல்லலைன்னு தான் கேட்டேன்”

 

“இப்படி பிரச்சனை எல்லாம் நம்ம வீட்டுல நடக்கும்ன்னு நான் நினைக்கலைப்பா!! அதுவும் இல்லாம இதெல்லாம் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை”

 

“தாமரை அவ்வளவு பேசிட்டாப்பா!! எனக்கும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு!! செவ்வந்தி உன்கிட்ட சொல்லுவான்னு நினைச்சு தான் நான் எதுவும் சொல்லலைப்பா” என்றார் அவர் விளக்கமாய்.

 

“பரவாயில்லை விடுங்கப்பா” என்றவனின் குரல் முன்பு போல் இல்லை என்பதை உணர்ந்தே தானிருந்தார்.

 

“சரிப்பா நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான். இதோ ஒரு வாரமாய் மனைவிக்கு முயற்சித்து கொண்டிருக்கிறான் ஆனால் அவள் போனை எடுத்தபாடில்லை.

 

அவளின் செயலில் அவன் சற்றே வெறுத்து தான் போனான்.

 

என்ன கோபம் என்றாலும் என்னிடம் பேசி சண்டை போட வேண்டியது தானே அதைவிட்டு இப்படி செய்தால் என்னவென்று எடுத்துக்கொள்வது என்று அவனுக்கு அவள் மேல் கோபம் எழ ஆரம்பித்தது.

 

தொடந்த அழைப்புகளை விடுத்து எப்போதாவது அழைத்து பார்த்தான் அப்போதும் இதே நிலை தான் என்றதும். அழைப்பதையே நிறுத்திவிட்டான்.

 

தந்தைக்கு அழைத்து பேசினான், செவ்வந்தி வீட்டில் இருந்தால் தேவையில்லாத நினைவுகளில் குழப்பிக் கொள்வாள் என்றவன் அவளின் படிப்பை உடனே தொடர ஏற்பாடு செய்யச் சொன்னான்.

 

சக்திவேலுக்கும் அதுவே சரியெனபட உடனே கிளம்பிவிட்டார் மருமகளை பார்க்க.

செவ்வந்தி வீட்டிற்கு வந்ததில் இருந்து யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. என்ன என்றால் என்ன என்பது போல் தான் அவள் பேச்சு இருந்தது.

 

யாரிடமும் தான் எதற்காக வந்திருக்கிறோம் என்ன நடந்தது என்றெல்லாம் அவள் சொல்லவில்லை. ஏன் சக்திவேல் அவளை விட்டுச் செல்லும் போது கூட எதுவும் சொல்லியிருக்கவில்லை.

 

ஆனாலும் வீட்டு பெரிய பெண்மணிக்கு நடந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் இருக்குமா என்ன!! எப்போதும் போல் அவரும் வாயே திறக்கவில்லை.

 

சிவகாமிக்கு மகள் வீட்டிற்கு வந்ததில் சந்தோசமே!! கூப்பிட்டால் கூட அதிகம் வரமாட்டாள். வந்தாலும் ஒரு வாய் சாப்பிட்டு போ என்றால் கூட நிற்க மாட்டாள்.

 

இப்போது தான் வந்திருக்கிறாள் அவளை சீராட்ட அந்த அன்னையின் மனம் ஆசை கொண்டது. எப்போதும் தன்னிடம் நன்றாய் பேசும் மகள் இப்போது பேசாம இருப்பது அவருக்கு வருத்தத்தை கொடுத்தது.

 

மாமியாரிடம் கேட்டால் அவர் எப்போதும் போல் “ஒன்றும் இருக்காது சிவகாமி நம்மிடம் சொல்ல வேண்டும் என்றால் அவளே சொல்லுவாள்” என்றுவிட்டார்.

 

அவள் மாமனார் வந்திருக்கிறார் என்று முல்லை வந்து சொல்லவும் எழுந்து வெளியில் வந்தாள். “வாங்க மாமா” என்றாள்.

 

மருமகளின் முகம் வாடியிருப்பது அவருக்கும் தெரிந்தது. மகன் சொன்னது சரியே என்றும் உணர்ந்தார்.

 

“ஏம்மா நீ எதுக்கும்மா வீட்டிலேயே இருக்க, படிப்பு பாதியில நிக்குல. அதை தொடரலாமேம்மா… தாமரைக்காக தானே படிப்பை நிறுத்தி வைச்ச”

 

“இப்போ தான் தாமரை வீட்டுக்கு போயாச்சேம்மா!! எனக்கும் நீ படிப்பை தொடரலாமேன்னு தோணிச்சு. என்னம்மா சொல்ற, நான் வந்து உன்னைய காலேஜ்ல விட்டு வரவாம்மா” என்றார் அக்கறையாய்.

 

அவளுக்கும் அதுவே சரியெனபட்டது. சும்மா இருந்தால் மனம் ஏதேதோ எண்ணி குழப்பம் கொள்கிறது என்பதை உணர்ந்தவள் அவர் சொல்லுவதை செய்வதென முடிவெடுத்தாள்.

 

“சரி மாமா!! ஆனா நீங்களும் அங்க வந்து என்னோட இருக்கணும்” என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டாள்”

 

“நானா!! நான் எதுக்கும்மா அங்க??”

 

“உங்களை பக்கத்து வீட்டுல தனியாவிட்டு இங்க இருக்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு மாமா. இதுல உங்களை இங்க தனியாவிட்டு போட்டு நான் மட்டும் அங்க போய் படிக்கவா மாமா”

 

“எனக்கு இந்த ஊரு புதிசுல்லைம்மா நான் தனியா இருந்துக்குவேன். நீ உன் படிப்பை பாரும்மா முதல்ல. இன்னும் கொஞ்சம் மாசம் தானே. அப்புறம் நீ வந்திட போறே!! அதுவரைக்கும் என்னால இங்க இருக்க முடியாதாம்மா”

 

“இல்லை மாமா அத்தை இருந்தா நான் இதெல்லாம் யோசிக்க மாட்டேன். நீங்களும் என்னோட வர்றதுன்னா சொல்லுங்க இல்லைன்னா விடுங்க” என்றாள் முடிவாய்.

 

இதற்கு மேலும் அமைதியாய் இருக்க மதுராம்பாள் நினைக்கவில்லை. “செவ்வந்தி இதென்ன பிடிவாதம் ஒரு மனுஷன் வந்து சொல்லுறாரு இப்படி பேசுற”

 

“உனக்கென்ன இப்போ பிரச்சனை உன் மாமனார்க்கு பார்த்துக்க ஆளில்லைன்னா!! ஏன் நாங்க இல்லையா பார்த்துக்க மாட்டோமா!!”

 

“இந்த வீடு ஒண்ணும் அவருக்கு புதுசில்லை. உங்கப்பா இருந்தப்போ என் கையால அவருக்கு நான் நிறைய முறை சாப்பாடு போட்டிருக்கேன். நாங்க பார்த்துக்கறோம்” என்றார் தீர்க்கமாய்.

 

“தேவையில்லை” என்றாள் ஒற்றைச்சொல்லி.

 

“ஏன்??” என்றார் அவர் அதையும்விட சுருக்கமாய்.

 

“நான் இருக்கும் போது அவர் இங்க வர்றதுக்கு தயக்கம் காட்ட மாட்டார். நான் இல்லைன்னா அவர் நிச்சயம் இங்க வரமாட்டார்” என்றாள்.

 

சக்திவேலுக்கே அவள் பேச்சு ஆச்சரியமே!! நிச்சயம் சக்திவேல் அப்படி தான் செய்திருப்பார். மருமகளே இல்லை அங்கு போய் எப்படி என்று யோசித்திருப்பார் தான்.

 

மதுராம்பாளும் இப்போது வாயடைத்து தான் போனார். எதுவுமே தெரியாது என்று நினைத்திருந்த பெண் இவ்வளவு தெளிவாய் யோசிப்பாள் என்று அவர் எண்ணவில்லை.

 

“நீ நினைக்கிற மாதிரி நடக்காதும்மா!! நான் தினமும் இங்க வர்றேன்ம்மா!!” என்று மருமகளுக்காய் தன்னை விட்டுக்கொடுத்தார். “அதெல்லாம் வேண்டாம் மாமா சரியா வராது”

 

“என்னாலயும் உங்க அத்தை இருந்த இடத்தை விட்டு வர முடியாதும்மா. உன்னோட படிப்பு தடைப்படுறது உங்க அத்தை விரும்ப மாட்டாம்மா!!” என்று அவர் சொன்னது அவளை லேசாய் அசைத்து பார்த்தது.

 

“ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க” என்றாள். அதற்கு பின் யாரும் அவளிடம் எதுவும் பேசவில்லை. நடந்ததை மகனிடம் அவர் சொல்ல செவ்வந்தியின் செயல் அவன் மனதை குளிர்வித்திருந்தது.

 

அவள் மேல் கொண்ட நேசம் இன்னும் அதிகமாவது உணர்ந்தான். என்ன தான் செய்கிறாள் பார்ப்போம் என்று அவனுக்குமே ஆவல் தான்.

 

இரண்டு நாளைக்கு பின் சக்திவேல் வீட்டில் ஏற்கனவே வேலைக்கு வந்துக் கொண்டிருந்த பெண்ணை மீண்டும் அழைத்து வந்திருந்தாள்.

 

காலை உணவு மட்டும் மதுராம்பாள் வீட்டில் இருந்து அவருக்கு செல்லும். மதிய உணவும் இரவு உணவும் அப்பெண் வந்து செய்துவிட்டு துணிமணிகளை துவைத்து போட்டு செல்ல ஏற்பாடு செய்திருந்தாள்.

 

தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச பூக்கள் பறிக்க எப்போதும் வந்து செல்பவரிடமே பொறுப்பை ஒப்படைத்தாள். அதன்பின்னே தான் நிம்மதியாய் மதுரை சென்றாள்.

 

ஆறு மாதங்கள் வேகமாய் ஓடி மறைந்திருந்தது. இரவு பகல் ஓயாத உழைப்பு அவளிடம் தேகம் இன்னும் மெலிந்து போனாள்.

 

அவள் அவ்வப்போது எடுத்திருந்த விடுப்பு தினம் எல்லாவற்றுக்கும் ஈடு செய்ய அவள் இன்டர்ன்ஷிப் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பாகியிருந்தது.

 

அன்று காலையில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்தில் யாராய் இருக்கும். வேலைக்கு இவ்வளவு காலையில் வர மாட்டார்களே!!’ என்று எண்ணிக்கொண்டு எழுந்து வந்து கதவை திறந்தார் சக்திவேல்.

 

எதிரில் நின்றவனை பார்த்து அவருக்கு ஆச்சரியமே!! “என்னப்பா பார்க்கறீங்க!! வேலையைவிட்டு வந்துட்டேன்ப்பா” என்றவாறே வீரா நின்றிருந்தான்….

Advertisement