Advertisement

அத்தியாயம் – 2

 

“சக்தி நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. நான் உன்னை விரும்பலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு யோசிச்சு சொல்லு” என்று தமக்கையை கிண்டல் செய்தது வேறு யாருமல்ல முல்லை தான்.

 

“வர வர உனக்கு ரொம்ப கொழுப்பாகிப் போச்சுடி. என்னைய கிண்டல் பண்றியா??”

 

“அக்கா நான் இப்போ சொன்ன டயலாக் அலைப்பாயுதே படத்துல மாதவன் ஷாலினி பார்த்து சொல்றது ஓகே வா. அத்தான் எப்படி தெரியுமா சொல்லுவாரு”

 

“சக்தி நான் உன்னை பார்க்கலை. உன்னை எனக்கு தெரியவே தெரியாது. ஆனா நமக்குள்ள கல்யாணம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு. என்னை ஆளைவிட்டிரு” என்று அவள் சொல்லவும் செவ்வந்தி அவள் தலையில் கொட்டினாள்.

 

“இப்போ எதுக்குடி என்னை கிண்டல் பண்ற, நானா அவனை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தக்கால்ல நிக்கறேன்”

 

“எல்லாம் வீட்டில இருக்கவங்க பார்த்த வேலை. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்”

 

“நீ எதுவும் பண்ண முடியாது தானே. ஏன்னா இந்த விவகாரத்துக்கு பிள்ளையார்சுழி போட்டதே நீ தானே!!”

“பாவம் நீ என்ன பண்ண முடியும்” என்று தொடர்ந்து செவ்வந்தியை ஓட்டினாள்.

 

“அச்சோ உன்னை கிண்டல் பண்ணதுல நான் எதுக்கு வந்தேன்னு சொல்லாம விட்டுட்டனே!! உடனே கீழ வா எல்லாருக்கும் நீ தான் சாப்பாடு போடுவியாம்!! ஆச்சி உன்னைய கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றாள் முல்லை.

 

“என்னால வரமுடியாது போடி!! இந்த கிழவி மத்த சம்பிரதாயமெல்லாம் கரெக்ட்டா செய்யுதுல. எந்த வீட்டில கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு பரிமாறியிருக்கு”

 

“போ!! போ!! போய் நானெல்லாம் வர முடியாதுன்னு சொல்லு அந்த கிழவிகிட்ட” என்று தங்கையை விரட்டினாள்.

 

“முல்லை இன்னும் என்ன பண்றீங்க அங்க அக்காளை கூட்டிட்டு கீழ வா!!” என்றவாறே அங்கு வந்து சேர்ந்தார் மதுராம்பாள்.

 

“வாக்கா சும்மா வாயடிச்சுக்கிட்டு இருப்ப!!” என்ற முல்லை தமக்கையை இழுத்துச் சென்றாள்.

 

“அக்கா என்ன மசமசன்னு நிக்கற. இந்தா போய் எல்லார்க்கும் நீயே இனிப்பை வை” என்று தமக்கையின் கையில் இனிப்பை திணித்தாள்.

 

மதுராம்பாள் வீட்டிற்குள் ஒரு ஆண் மகனை சேர்க்க மாட்டார். சொந்தங்கள் என்று யார் வந்தாலும் வீட்டின் முதல் கட்டோடு பேசி அப்படியே அனுப்பிவிடுவார்.

 

வெகு கட்டுக்கோப்பாகவே வைத்திருந்தார். அதனாலேயே வீட்டில் ஒரு விசேஷம் நடக்கும் போதும் அவர் ஒருவரையும் அழைத்திருக்கவில்லை.

 

வேறு ஆண்கள் இல்லாத வீடென்பதால் அக்காவும் தங்கையுமே அனைவருக்கும் பரிமாற வேண்டியதாகி போனது.

 

“அக்கா போய் அத்தானுக்கு முதல்ல இனிப்பை வை!! இன்னைக்கே சந்தோசமா ஆரம்பிங்க” என்ற முல்லையை முறைத்து பார்த்தாள் செவ்வந்தி.

 

“சரி சரி முறைக்காத உன்னிஷ்டம் போல பண்ணு. ஆச்சி கேட்டா நீ முறைச்ச விஷயத்தை சொல்லிடறேன்” என்று சொல்ல “நீ அடங்கவே மாட்டியாடி” என்றுவிட்டு புடவை முந்தியை இழுத்து செருகிக்கொண்டு இனிப்புடன் வந்திருந்தவர்களை கவனிக்கச் சென்றாள்.

 

ஒவ்வொருவராக அவள் இனிப்பை வைத்துக் கொண்டு வர சக்திவேலும் அடுத்து அமர்ந்திருந்த மனோரஞ்சிதமும் மருமகளிடம் நலம் விசாரித்தனர்.

 

வேறு வழியில்லாமல் அவர்களுக்கு இன்முகத்தை காட்டி நகர்ந்தாள் அவள். இனி பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் இவங்க தானே எனக்கு உறவு என்ன செய்ய சிரிச்சு வைச்சுக்குவோம் என்ற மனநிலை அவளுக்கு.

 

வீரபாண்டியன் கடைசியாக அமர்ந்திருந்தான் போலும். அவள் இலையை பார்த்து மட்டுமே இனிப்பை வைத்துக்கொண்டு வர அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் இனிப்பை வைக்க “எனக்கு இனிப்பு பிடிக்காது” என்றான்.

 

அது எவன்டா அதிசயப்பிறவி இனிப்பு பிடிக்காதுன்னு சொல்றவன் என்ற ரீதியில் நிமிர்ந்து அவனை பார்க்க அவன் இலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘எனக்கெல்லாம் இனிப்புன்னு எழுதிக் கொடுத்தாலே சாப்பிட்டிருவேன். இப்படி ஒரு பிறவியை யாரு பெத்தாங்களோ!!’ என்றவள் அப்போது தான் அவனை ஒழுங்காக பார்த்தாள்.

 

‘ஆஹா சிடுமூஞ்சி!! இவருக்கு இனிப்பு பிடிக்காதாமாம். இருடா உன்னை இன்னைக்கு இனிப்பு திங்க வைக்கிறேன். எல்லாம் உன்னால தானே!!’ என்று மனதிற்குள் கருவியவள் நாலைந்து இனிப்பு வில்லைகளை எடுத்து வைத்துவிட்டு அவள் போக்கில் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

வீரபாண்டியனுக்கு ஒரு பழக்கமுண்டு இலையில் வைத்ததை வீணடிப்பதில்லை என்று. வேண்டாம் என்றால் முன்னாலேயே சொல்லிவிடுவான்.

 

தெரியாமல் எதுவும் வைத்துவிட்டால் பிடிக்காவிட்டாலும் கஷ்டப்பட்டு விழுங்கிவிடுவான். இப்போது அவன் பார்வை இலையில் வந்து விழுந்திருந்த இனிப்பு வில்லைகளையே பார்த்துக் கொண்டிருந்தது.

 

வேண்டாம் என்று சொல்லியும் வைத்து போகிறார்களே என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தான். மதுராம்பாள் அதை கண்டிருப்பார் போல முல்லையை அனுப்பி வைத்தார்.

 

“அத்தான் நல்ல விஷயம் பேசி முடிச்சிருக்காங்க. ஒரு வில்லையாச்சும் எடுத்து வாய்ல போட்டுக்கோங்க. மிச்சத்தை நான் எடுத்திர்றேன்” என்று முல்லை கூற அவளை நிமிர்ந்து பார்த்தான்.

 

“என்னத்தான் எடுத்திறவா??” என்றாள்.

 

“வேணாம் இருக்கட்டும். இலையில வைச்சதை எடுக்கறது எனக்கு பிடிக்காது. பிடிக்கலைன்னாலும் நான் எதையும் வேஸ்ட் பண்றதில்லை” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அந்த இனிப்புகளை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

 

“சாரி அத்தான்!! அக்காக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும் அதான் அந்த பாசத்தை உங்க மேல கொட்டிட்டா!!” என்றுவிட்டு எழுந்து சென்றாள் முல்லை.

 

‘வைச்சது அந்த குள்ளவாத்து தானா!!’ என்று எண்ணிக்கொண்டவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ஒருவழியாக அவர்கள் சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பித் தயாராகினர்.

 

கிளம்புமுன் செவ்வந்தியை அழைத்து சொல்லிவிட்டே கிளம்பினர் வீரபாண்டியனின் குடும்பத்தினர்.

 

தாமரை சும்மாயில்லாமல் “அண்ணா அண்ணிக்கிட்ட போய் பேசிட்டு வர்றியா!! நான் வேணா ஆச்சிட்ட சொல்லவா!!” என்று முணுமுணுத்தாள்.

 

மதுராம்பாளின் காதில் அந்த முணுமுணுப்பு நன்றாகவே விழுந்துவிட “ஏன்ப்பா போய் பேசுறதுன்னா பேசுங்க!!” என்று கூற குசும்புக்கார பெண்மணியோ “இனி என்ன இருக்கு பேசுறதுக்கு”

 

“அதான் எல்லாம் ஆச்சே!!” என்று சொன்னவர் மதுராம்பாளின் தீப்பார்வையில் “அதான் எல்லாம் பேசி முடிச்சாச்சே!! இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் இடையில என்ன பேச்சு வேண்டி கிடக்குன்னு சொல்ல வந்தேன்” என்றார் காமாட்சி என்ற அப்பெண்மணி.

 

மதுராம்பாள் வீரபாண்டியனை பார்க்க “இருக்கட்டும் பேச எதுவுமில்லை. கிளம்பறோம்” என்று பொதுவாய் தலையசைத்து கிளம்பினான்.

 

உள்ளிருந்து செவ்வந்தி தான் கருவிக் கொண்டிருந்தாள். ‘ச்சே நல்ல சான்ஸ் இப்படி மிஸ் ஆகிப் போச்சே!! பேச வருவான் எதாச்சும் சொல்லி அவனை ஓட்டிவிட்டிறலாம்ன்னு பார்த்தா அந்த லூசு காமாட்சி கிழவி பேசவிடாம ஓட்டிவிட்டிருச்சே!!’

‘ஒண்ணுமே பண்ண முடியாதா அவ்வளவு தானா என் வாழ்க்கை. அப்போ என்னோட படிப்பு என்னாகறது!!’

 

‘பாதியில விட்டிற சொல்லுவாங்களோ!!’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள் மதுராம்பாளிடம் அதைப்பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

 

வீட்டிற்கு வந்ததும் வீரபாண்டி நேராக அவனின் தனிமை வாசமான தோட்டவீட்டிற்கு சென்றுவிட்டான்.

 

“என்னங்க இவன் இப்படி இருக்கான்?? நாளைக்கு ஜவுளி எல்லாம் எடுக்க ஆரெம்கேவிக்கு வேற போகணும். வருவானோ மாட்டானோ தெரியலையே. பேசலாம்ன்னா நிக்க மாட்டேங்கானே”

 

“விடு ரஞ்சிதம் அவனை ரொம்ப பிடிச்சு இருக்காதா. நாளைக்கு கதையை நாளைக்கு பார்ப்போம். இப்போவே விசனப்பட்டுக்கிட்டு கிடக்காத. போய் பேசாம தூங்கு” என்றுவிட்டு சக்த்திவேல் உள்ளே சென்றுவிட்டார்.

 

“ஏட்டி தாமரை உங்கப்பா சொன்னதை கேட்டியா?? உங்கண்ணன் இஷ்டப்படி விட்டு விட்டு தான் கல்யாணம் வேணாம் எதுவும் வேணாம்ன்னு பட்டாளத்துக்கு போய்ட்டான்”

 

“இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிற மாட்டோமான்னு நான் வேண்டாத தெய்வமில்லை. அந்த பத்திரகாளி இப்போ தான் என் புள்ளை விஷயத்துல கருணை காட்டியிருக்கா”

“அம்மா சும்மா புலம்பாதீங்கம்மா. அப்பா சொன்ன மாதிரி அண்ணனை விட்டு தான் புடிக்கணும். அதான் அப்பா சொல்லிட்டாருல நாளைக்கு கதைக்கு அவரு ஏதாச்சும் செஞ்சு வைச்சிருப்பாரு நீ வேணா பாரேன்” என்று சொல்லி அன்னையை சமாதானம் செய்தாள்.

 

“என்னமோட்டி எனக்கு ஒண்ணும் புரியலை. கல்யாணம் நல்லபடியா நடக்கணும் எனக்கு அது தேன் வேணும்”

 

“எல்லாம் நல்லபடியா நடக்கும்மா. நீ சும்மா அண்ணனை தொல்லை பண்ணாத அப்புறம் அது பாட்டுக்கு லீவை கேன்சல் பண்ணிட்டு மிலிட்டரிக்கே போயிரும் அப்புறம் நீ தான் வருத்தப்படுவ” என்று கூற மனோரஞ்சிதம் அமைதியானார்.

 

“நீ போய் மருமவனை கவனி. என் கவலை பேச ஆரம்பிச்சா நான் நிறுத்த மாட்டேன். நீ போம்மா நேரமா படு. வயித்து புள்ளைக்காரி ரொம்ப நேரம் கண்ணு முழிக்காத போ” என்று சொல்லி மகளை அனுப்பி வைத்தார்.

 

ஆம் தாமரைக்கு இது ஐந்தாம் மாதம். அவள் திருமணம் முடிந்து ஓராண்டு கழித்து தான் பிள்ளை உண்டானாள். அதன் பொருட்டு அன்னை வீட்டில் சீராடிவிட்டு வரவென்று வந்திருந்தாள்.

 

வந்த இடத்தில் நடந்த களேபரத்தில் தான் வீரபாண்டியனின் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விடியல் எதையும் எதிர்பார்க்காமல் அழகாய் புலர்ந்தது.

 

வீரபாண்டியன் அவன் கூட்டை விட்டு இன்னமும் வெளியில் வந்திருக்கவில்லை. அவனுக்கு அந்த தனிவீடு மிகவும் பிடிக்கும்.

 

புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் எழுந்து சன்னலின் வழியே தோட்டத்தை பார்வையிடுவதும் மலர்ந்து மணம் வீசும் பூக்களின் நறுமணத்தை நுகர்ந்தவாறே தன் வேலைகளை செய்வது பிடித்தமான ஒன்று.

 

அவன் வீட்டில் இருக்கும் தருணங்களில் தோட்டத்தை செப்பனிடுவதும் நீர் பாயச்சுவதுமே அவனுடைய சிறந்த பொழுதுபோக்கு எனலாம்.

 

நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதோ கண்டபடி பொழுதுபோக்குவதோ அவனுக்கு பிடித்தமில்லை. அவன் நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களும் ஆளுக்கொரு வேலையை அவனுக்காக செய்துவிட்டே செல்வர்.

 

ஒரு வழியாய் அவன் திருப்பள்ளியெழுச்சி செய்து தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி குளித்து முடித்து அவன் முன் வீட்டிற்கு வர மணி காலை பத்தை எட்டியிருந்தது.

 

ரஞ்சிதம் கணவரிடம் ‘பேசுங்க’ என்பதாய் கண்ணை காட்டினார். “அம்மா டிபன் வைங்க” என்றான் வீரபாண்டியன்.

 

“டேபிள்ல உட்காருய்யா” என்றுவிட்டு அவர் உள்ளே சென்றார்.

“அம்மா எனக்கு கீழே உட்கார்ந்து சாப்பிடுறது தானே பிடிக்கும். தோசை தானே சுடப் போறீங்க. நான் உள்ள வந்தே சாப்பிடுறேன்” என்றவன் அவருடன் சமையலறைக்கு சென்று அங்கேயே அமர்ந்து கொண்டான்.

 

சாப்பிட்டு வெளியே வர சக்திவேல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்தான். தன்னிடம் ஏதாவது பேச வேண்டும் என்றால் தான் இப்படி தனக்காக காத்திருப்பார் என்று அவனுக்கு தெரியும்.

 

இருந்தும் எதுவும் பேசவில்லை அவராக பேசட்டும் என்று எண்ணிக்கொண்டு ஒற்றை சோபாவில் சென்று அமர்ந்தவன் தினசரியை எடுத்து புரட்டினான்.

 

“வீரா??” என்றார் அவர். எல்லோருக்கும் அவன் பாண்டி அல்லது பாண்டியா அவன் தந்தை மட்டுமே வீரா என்றழைப்பார். மகனை அப்படி கூப்பிடுவதில் அவருக்கு அவ்வளவு பெருமிதம்.

 

அவன் பெயரை போல வீரனாக இருக்கிறான் என்ற இறுமாப்பு எப்போதும் அவருக்கு உண்டு. நாட்டை காக்கும் போர் வீரன் தன் மகன் என்பதை உரக்கவே சொல்லி பெருமைபடுவர் அவர்.

 

அப்பேற்பட்ட தன் மகனின் பெயருக்கு எந்த களங்கமும் வந்துவிடுவதை அவர் விரும்புவதில்லை. அதன் பொருட்டே அவன் திருமணம் அவசர அவசரமாக நிச்சயிக்கப்பட்டது.

 

“சொல்லுங்கப்பா”

 

“இன்னைக்கு கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்கணும்ன்னு உங்கம்மா திருநெல்வேலிக்கு போகணும்ன்னு சொன்னா”

 

“கூட போயிட்டு வந்திடுய்யா, எனக்கு தூத்துக்குடி டவுன்ல ஒரு வேலை வந்திடுச்சு. நான் போய் அதை முடிச்சுட்டு நேரே ஆரெம்கேவிக்கு வந்திடுறேன்”

 

“உன் தங்கச்சியை கூட்டிட்டு அவ்வளவு தூரம் கார் பிரயாணம் எல்லாம் போக முடியாதுப்பா. நீ அம்மா கூட போயிட்டு வந்திடு, பத்தரை மணி போல போகணும் சரியாப்பா…”

 

“பொண்ணு வீட்டில இருக்கவங்களையும் கூட்டிட்டு போங்க. ஆம்பிளைக இல்லாத வீடு அவங்களும் பாவம் தனியா போக முடியாது. நீங்க போகும் போது கூட்டிட்டு போயிட்டு வந்திடுங்க” என்றார்.

 

வீரபாண்டியன் எதையும் மறுத்து பேச முடியாதவாறு சொல்லியவரை அவனால் என்ன செய்ய முடியும். எந்த பதிலும் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

 

“என்னய்யா பதிலே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்??” என்றார் சக்திவேல்.

 

“நீங்க என்னை போயிட்டு வான்னு தானே சொன்னீங்க… போக முடியுமா முடியாதான்னு கேட்கலையே!! உங்க பேச்சை நான் என்னைக்கு மறுத்து பேசியிருக்கேன்” என்றவன் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றான்.

 

“என்னங்க இப்படி சொல்லிட்டு போறான். இப்போ என்ன பண்றது எப்படி ஜவுளி எடுக்கறது” என்றார் ரஞ்சிதம்.

 

“ரஞ்சிதம் வீரா கடைக்கு வர்றேங்கறதை தான் அப்படி சொல்லிட்டு போறான். நீ போய் கிளம்பு நான் மதுரம்மாகிட்ட போன் பண்ணி சொல்லிடறேன் தயாரா இருக்கச் சொல்லி. நான் தூத்துக்குடிக்கு கிளம்புறேன் சரியா” என்றுவிட்டு சக்திவேல் நகர்ந்தார்.

 

“எதாச்சும் புரியற மாதிரி பேசுறாங்களா, இவரு சொன்னதும் புரியலை அதுக்கு அவன் சொன்ன பதிலும் புரியலை” என்று தன்போக்கில் புலம்பிக்கொண்டு கிளம்பினார் மனோரஞ்சிதம்.

 

“என்னம்மா தனியா என்ன புலம்பிட்டு இருக்க” என்றாள் தாமரை. “உங்கண்ணனை கடைக்கு கூட்டிட்டு போக தான் வேற என்ன??” என்றார் மனோரஞ்சிதம்.

 

“மதியத்துக்கு சமைச்சு வைச்சிருக்கேன் தாமரை. மாப்பிள்ளை காலையிலேயே யாரையோ பார்க்கணும்ன்னு கிளம்பி போயிருக்காரு. நாங்களும் இப்போ கிளம்பிருவோம்”

 

“அவரை போன் பண்ணி வரச்சொல்லிரும்மா. நீ தனியா இருக்க வேண்டாம். அவர் வர்ற வரைக்கும் நான் நம்ம பழனியம்மாவை உனக்கு துணைக்கு இருக்கச் சொல்றேன் சரியா!!”

“ஹ்ம்ம் சரிம்மா நீங்க பார்த்து போயிட்டு வாங்க”

 

பின்னால் இருந்த வீட்டிற்கு சென்ற வீரபாண்டியன் வெளியே செல்ல கிளம்பி வந்திருந்தான். “கிளம்புவோமா” என்றவாறே.

 

“அண்ணே எனக்கு மயில் கழுத்து கலர்ல தான் புடவை வேணும். அம்மாக்கு சரியா பார்த்து வாங்க தெரியாது. நீ கொஞ்சம் பார்த்து வாங்குண்ணே” என்ற தாமரையிடம் “சரிம்மா வாங்கறேன்”

 

“நீ உன் கல்யாணத்துக்கு எனக்கு எதுவும் வாங்கி தர மாட்டியா!! உனக்கு இருக்கறது ஒரே தங்கச்சி தானே!! எனக்கிருக்கறதும் ஒரே அண்ணன் நீ தான்!!”

 

“எனக்கு கல்யாணமே நடக்காம போயிருந்தா என்ன பண்ணி இருப்ப!!”

 

“எதுக்குண்ணே இப்போ இப்படி பேசிகிட்டு. நீ எனக்கு எதுவும் எடுத்து தர வேணாம் சாமி. ஏதோ ஒரு ஆசையில கேட்டுட்டேன். அதுக்கு நீ இப்படி அபசகுனமா எல்லாம் பேசாதே” என்றவள் எழுந்து உள்ளே செல்லப் போனாள்.

 

“தாமரை எதுக்கு இப்போ கோபம். நான் எதுவுமே சொல்லக் கூடாதா!! இங்க எல்லாம் என் இஷ்டப்படியா நடக்குது. சரி அதை விடு, நான் உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன் சொல்லு”

 

“கண்டிப்பா உனக்கு பிடிச்ச மாதிரி உனக்கு புடவை எடுத்திட்டு வரேன் போதுமா. நீ போ உள்ள போய் ரெஸ்ட் எடு!!” என்று தங்கையை சமாதானப்படுத்திவிட்டு அன்னையை பார்த்தான்.

 

“நான் கிளம்பிட்டேன்ப்பா போகலாம், தாமரை பார்த்து இருந்துக்கம்மா!! நாங்க கிளம்பறோம்” என்று மகளிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி அவளுக்கு அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் பழனியம்மாவை துணைக்கு வைத்து கிளம்பினர்.

 

வீரபாண்டியன் வெளியில் வந்து காரை எடுக்க சக்திவேல் அழைத்தார். “சொல்லுங்கப்பா”

 

“ஹ்ம்ம் சரிப்பா கூட்டிட்டு போறோம், ஓகேப்பா நான் பார்த்துக்கறேன். ஹ்ம்ம் சரி, ஹ்ம்ம்… இருங்க கொடுக்கறேன்” என்றவன் போனை அவன் அன்னையிடம் கொடுத்தான்.

 

“சொல்லுங்க, சரி சரி நான் கூப்பிடறேன். அவன்கிட்ட சொல்லிட்டீங்கள்ள!! அப்போ நான் பார்த்துக்கறேன். மதுரம்மாவை நான் எப்படியாச்சும் கூட்டிட்டு போற மாதிரி பார்த்துக்கறேன்” என்றுவிட்டு போனை வைத்தார்.

 

“பாண்டி வண்டி அவங்க வீட்டுக்கிட்ட நிறுத்துய்யா!! அவங்களை கூட்டிட்டு கிளம்புவோம்” என்றார் மனோரஞ்சிதம். வீரபாண்டியன் எந்த மறுப்பும் சொல்லாமல் வண்டியை மதுராம்பாளின் வீட்டு முன் நிறுத்தினான்.

“வாப்பா போயிட்டு வந்திடுவோம்” என்று மகனை அழைக்க “நான் வரலை நீங்க போய் கூப்பிட்டு வாங்க” என்றவன் வண்டியில் இருந்து இறங்கவேயில்லை.

 

“ஏய்யா இப்படி பண்ணுற??”

 

“அம்மா நான் உங்க கூட அவ்வளவு தூரம் கடைக்கு வரணுமா இல்லை உள்ள வந்தா மட்டும் போதுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றான்.

 

மனோரஞ்சிதம் ஒரு பெருமூச்சு விட்டு கொண்டு வந்ததை வண்டியிலே மறந்துவிட்டு உள்ளே சென்றார்.

 

அவன் அன்னை சென்றதும் தான் பின்னால் திரும்பி பார்த்தான். அவர் கையோடு கொண்டு வந்திருந்த பூவை விட்டுச் சென்றிருக்கிறார் என்று.

 

ஒரு கணம் எடுத்து போய் கொடுக்கலாம் என்று தோன்ற மறு நிமிடமே எதுக்கு என்று மனம் அழிசாட்டியம் செய்தது.

 

ஓரிரு நிமிடம் மனதிற்குள்ளாக பட்டிமன்றம் நிகழ்த்திக்கொண்டு அவன் அன்னையை மனதோடு லேசாய் கடிந்துக் கொண்டு பூவை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

 

வீரபாண்டியன் உள்ளே வருவதை முல்லை தான் முதலில் பார்த்தாள். “ஆச்சி அத்தான் வர்றாங்க” என்று கூறியவள் நேரே அவனிடம் வந்து “உள்ள வாங்க அத்தான்” என்றாள்.

அவளுக்கு லேசாய் ஒரு புன்னகையை கொடுத்து “அம்மா” என்றழைத்தான். அவரும் வேகமாய் எழுந்து வர “இதை வண்டியில விட்டுட்டு வந்திட்டீங்க” என்று அவர் கையில் கொடுத்தான்.

 

“நீயே கொடுத்திரு பாண்டி” என்று அவர் கூற அவரை ஒரு பார்வை பார்த்தான். “உட்காருய்யா காபி சாப்பிடுவீங்க” என்று உபசரித்தார் மதுராம்பாள்.

 

“இருக்கட்டும், நான் வெளியே வெயிட் பண்றேன். ஒரு முக்கியமான போன் பேசணும். நீங்க கிளம்பி வாங்க, போயிட்டு வர்றேன்” என்று கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

மீண்டும் வந்து அவன் வண்டியில் ஏறி அமர்ந்திருக்க அவன் அன்னை வந்து கொண்டிருந்தார். மகனை பார்த்து கண் ஜாடை காட்டினார் போகலாம் என்பதாய்.

 

“நீ முன்னாடி போய் உட்காரும்மா” என்றுவிட்டு அவர் பின்னால் சென்று அமர்ந்தார்.

 

‘இந்தம்மா யாரை முன்னாடி ஏறச் சொல்றாங்க’ என்று யோசித்துக்கொண்டே அசுவாரசியமாய் திரும்பி பார்க்க அவன் வீட்டு மல்லிகையின் மணம் மெல்ல வீசியது.

 

அவன் அன்னையின் கைவண்ணத்தில் நெருக்கிக் கோர்க்கப்பட்ட மல்லிகை சரம் நீண்ட கூந்தலில் அழகாய் வைக்கப்பட்டிருந்தது.

 

கார்க்கதவை திறந்து வைத்துக்கொண்டு அவள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் போலும். கல்யாண பெண்ணின் தங்கையாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு பார்வையை விலக்கிக்கொண்டான்.

 

‘இருந்தாலும் நம்ம வீட்டு மல்லிக்கு இவ்வளவு வாசம் ஆகாது’ என்று எண்ணிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

 

“போகலாமாம்மா” என்றான்.

 

“எடுப்பா எல்லாரும் ஏறியாச்சு” என்று கூற வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

 

அருகில் அவ்வப்போது சலசலத்த வளையோசையும் மல்லிகை மணமும் ஏனோ அவன் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்தது.

 

‘என்னது என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவ்வளவு டிஸ்டர்பன்ஸ்’ என்று எண்ணிக்கொண்டு ரியர்வியு மிரர் வழியாக பார்க்க பின்னில் அவன் அன்னை மதுராம்பாள் முல்லை மூவரும் அமர்ந்திருந்தது கண்ணில் பட்டது.

 

‘அப்போ என் பக்கத்துல உட்கார்ந்திருக்கறது’ என்று எண்ணிக்கொண்டே மெதுவாய் பார்வையை தன் இடப்புறம் திருப்பினான்….

 

Advertisement