Advertisement

அத்தியாயம் – 22

 

வீராவுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை செவ்வந்தி தங்களுடன் வந்ததை. பின்னே அவளை சம்மதிக்க வைப்பதற்குள் பெரும்பாடாகியிருந்தது.

 

“அப்பா நீங்க சொல்லுங்க” என்று தந்தையின் பொறுப்பில் விட்டதுமே அவர் மருமகளிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.

 

“ஏம்மா வீரா சொல்றதும் சரி தானே!! உன்னை பார்க்க தான் அவன் இங்க வந்திருக்கான். நீ ஹாஸ்டல்ல அவன் ஹோட்டல்ன்னு ஏன் இருக்கணும்”

 

“அதுக்கு தானேம்மா சொல்றான். நீ எதுக்கும்மா தயங்குற சரின்னு சொல்லு” என்றார்.

 

“இல்லை மாமா எங்க ஹாஸ்டல்ல அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க!! ஹாஸ்டல் இன்சார்ஜ் திட்டுவாங்க!!”

 

“அதுவும் இல்லாம நான் ஹோட்டல்ல இருந்து டெய்லி எப்படி ஆஸ்பிட்டல் போயிட்டு வருவேன். அதெல்லாம் சரியா வராதுங்க மாமா”

 

“உங்க ஹாஸ்டல் இன்சார்ஜ்கிட்ட நான் வந்து பேசறேன்” என்றான் வீரா. செவ்வந்தி இப்போதும் தயங்க “ஆஸ்பிட்டலுக்கு நானே உன்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வர்றேன்” என்றான் தொடர்ந்து.

“ஆமாம்மா அதுவும் சரி தானே!! இதுக்கு மேல எதுக்கும்மா யோசிக்கறே!!” என்றார் சக்திவேல்.

 

“அவரென்ன எனக்கு செக்யூரிட்டி கார்டா மாமா என்னை கூட்டிட்டு போய் கூட்டிட்டு வர்றதுக்கு. அதெல்லாம் வேணாம் மாமா”

 

“ஆமாம்மா அவன் தான் இனி உனக்கு கார்ட்!! இவளோ நாளா இந்த நாட்டை காக்குற கார்டா இருந்தான். இப்போ உனக்கு அவன் தானேம்மா கார்டா வரமுடியும்” என்று அவர் திருப்பிக்கொடுக்க வீராவோ மனதிற்குள் ‘அப்பா பின்னுறீங்களேப்பா’ என்று அவருக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொண்டிருந்தான்.

 

அதன்பின் அவர்கள் அவள் ஹாஸ்டலுக்கு சென்று பேச அங்கிருந்த இன்சார்ஜ் எந்த மறுப்பும் சொல்லவில்லை. “உங்க மனைவியை நீங்க கூட்டிட்டு போறீங்க, இதுக்கு எதுக்கு சார் என் பர்மிஷன் கேட்கறீங்க”

 

“எங்களுக்கு இன்பார்மேஷன் கொடுத்தா போதும். நீங்க போயிட்டு வாங்க… ஏன் செவ்வந்தி ஒரு வாரம் தானே அதுக்கு மேல ஆகும்ன்னா எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லிடும்மா” என்று மட்டும் சொன்னார் அவர்.

 

வீரா அவன் தந்தையை காரிலேயே இருக்குமாறு பணித்து அவன் மட்டுமே உள்ளே வந்திருந்தான். இன்சார்ஜ் சொன்னதை கேட்டதுமே அவனுக்கு புரிந்து போனது.

 

செவ்வந்தி தன்னை மறுக்கவே அப்படி சொல்லியிருக்கிறாள் என்று. திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க அவளோ அவன் பார்வையை தவிர்த்து அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள்.

 

இதோ தங்களுடன் கிளம்பியும் வந்துவிட்டிருந்தாள். குளியலறையில் நீர் விழுகும் ஓசை கேட்டது. வந்ததுமே குளிக்க சென்றுவிட்டாள்.

 

வீராவுக்குள் லேசான பதைப்பு எப்படி அவளிடம் பேச ஆரம்பிக்கலாம் என்று.

 

என்னவோ முதல் முறை காதல் வயப்பட்டவன் அப்பெண்ணிடம் பேசத் தயங்குவது போல் இருந்தது அவன் உணர்வுகள்.

 

அவன் எப்படி ஆரம்பிப்பது என்று தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க குளியலறைக்குள் இருந்தவளும் அந்நேரம் அதே ஒத்திகையை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

எப்படியும் இன்று பேச்சை ஆரம்பிப்பான் என்று அவளுக்கு தெரியும். இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது அவன் பேசித்தான் தீருவான் என்றறிவாள்.

 

இத்தனை நாளாய் மனதிற்குள் வைத்திருந்த கோபமாயிற்றே!! பேசினால் கோபம் குறைந்துவிடும் என்றே பேசாமல் இருந்தாளே!!

 

மீண்டும் நடந்தவைகளை நினைவிற்கு வர அவளின் கோபத்தில் நீரு பூக்க ஆரம்பித்தது.

 

குளித்துவிட்டு அவள் வெளியில் வரவும் அவள் கைபேசி அழைத்து தன் இருப்பை உணர்த்த அதை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

 

அவள் பேசி முடித்து உள்ளே வரவும் ரூம் சர்வீஸ் வெளியே செல்லவும் சரியாக இருந்தது. வந்தவள் அங்குமிங்கும் எதையோ தேடிக் கொண்டிருக்க என்ன தேடுகிறாள் என்பதாய் பார்த்துக் கொண்டிருந்தான் வீரா.

 

அவளாக சொல்லுவாள் என்று அவன் அமைதி காத்தது தான் மிச்சம். அவளாக அவனிடத்தில் பேசவேயில்லை. சரி நாமே கேட்போம் என்று நினைத்தவன் “என்ன தேடுற??” என்றான்.

 

“எதுவோ??”

 

“அந்த எதுவோ என்னன்னு சொன்னா நானும் கூட சேர்ந்து தேடுவேன்ல”

 

“குளிச்சுட்டு நான் போட்ட பழைய டிரஸ் தான் தேடுறேன்”

 

“பழைய டிரஸ் இப்போ எதுக்கு?? அதுல எதுவும் முக்கியமானது வைச்சிருந்தியா??” என்றவனை மேலிருந்து கீழாக பார்த்தாள்.

 

“இல்லை அதை இப்போ தான் லாண்டரிக்கு போட்டேன்”

அவன் சொல்லி முடிக்கவும் அவளுக்கு வந்ததே கோபம். கோபத்தில் பல்லைக் கடித்தாள் அவள்.

 

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க?? உங்களை யாரு அதை துவைக்க போட சொன்னாங்க”

 

“ஏன் இப்படி பண்றீங்க நீங்க??” என்று கத்தினாள்.

 

“ஹேய் என்னாச்சு?? எதுக்கு இப்போ கத்துற?? என்னோட டிரஸ் கூட லாண்டரி போடணும், சரி நீயும் பழைய டிரஸ் வைச்சிருந்த அதான் ரெண்டும் சேர்த்து போட்டிட்டேன்”

 

“உங்களுக்கு ஏதாச்சும் அறிவிருக்கா??” என்றதும் நிஜமாகவே அவனுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘இதென்ன நல்லது செய்தாலும் கோபப்படுக்கிறாள்’ என்று அவனுக்கும் சுருசுருவென்று வந்தது.

 

“இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு கத்துற, வாய்க்கு வந்தது எல்லாம் ஏன் பேசுற?? என்ன நடந்துச்சுன்னு சொல்லு அப்போ தானே எனக்கு புரியும்”

 

“நீ பாட்டுக்கு எதுவும் சொல்லாம கத்தினா நான் என்ன செய்ய?? அதுல எதுவும் முக்கியமானது வைச்சிருக்கியா?? நான் வேணும்னா அவங்களை துணியை திருப்பி எடுத்திட்டு வரச்சொல்லவா” என்றான்.

 

“உங்களை…” என்று பல்லைக்கடித்தவள் கட்டிலில் சென்று அமர்ந்துக்கொண்டாள் தலையில் கை வைத்தவாறே. வீராவுக்கு நிஜமாகவே புரியவில்லை. தான் என்ன தவறு செய்தோம் என்று.

 

மெதுவாகவே அவளிடத்தில் கேட்டான், “நிஜமாவே எனக்கு தெரியலை. நான் என்ன தப்பு பண்ணேன்??” என்று பாவமாய் கேட்டான்.

 

“எல்லா துணியும் துவைக்க போட்டுட்டீங்க தானே!! எவனாச்சும் இப்படி செய்வானா!! எல்லாமேவா போடுவாங்க!! என்னை கேட்காம உங்களை யாரு போடச் சொன்னது” என்று மீண்டும் பொரிந்தாள்.

 

இன்னமும் அவனுக்கு புரியவில்லை எதற்காக திட்டுகிறாள் என்று.

 

“என் மானத்தை வாங்குறதுன்னே முடிவு பண்ணி பண்றீங்களா நீங்க!! இன்னும் என்னலாம் பண்ணப் போறீங்கன்னு சொல்லிடுங்க”

 

“மொத்தமா என் மானம் போகட்டும், தனிதனியா வாங்குறதுக்கு பதில் இப்படி செஞ்சிட்டா நிம்மதியா இருப்பேன்ல நானு”

 

வீரா தான் என்ன செய்தோம் என்று மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்க்க அவள் எதற்கு கத்துகிறாள் என்று புரியவும் சட்டென்று அமைதியானான்.

 

“சாரிம்மா நெஜமாவே எனக்கு அதெல்லாம் தோணலை. ப்ளீஸ் வந்தி தெரிஞ்சு நான் இப்படி செய்வேனா”

 

“ஏன் தெரிஞ்சே தானே உங்க தங்கச்சி முன்னாடி என் மானத்தை வாங்கிட்டீங்க… இதுக்கு மேல என்ன இருக்கு செய்யறதுக்கு” என்று அதுவரை அழுத்திக் கொண்டிருந்த விஷயத்தை கேட்டே விட்டாள்.

 

“என்ன பேசற நீ?? எதுக்கு எதை சேர்த்து பேசுற??”

 

“நான் என்ன பேசுறேன்னு உங்களுக்கு தெரியவே இல்லைல?? நான் கல்யாணம் வேணாம்ன்னு போன அன்னைக்கே அப்படியே போகட்டும்ன்னு என்னை விட்டிருக்க வேண்டியது தானே!!”

 

“உங்களை யாரு பெரிய இவராட்டாம் என்னை போகவிடாம தடுத்து தூக்க மாத்திரை கலந்து கொடுக்கச் சொன்னது”

 

“கொடுத்தது தான் கொடுத்தீங்க கொஞ்சம் விஷம் வாங்கி கொடுத்திருக்கலாம்ல நிம்மதியா செத்தாச்சும் போயிருப்பேன்”

 

“என்ன வார்த்தை பேசுற நீ?? போதும் கொஞ்சம் வாயை மூடு, விட்டா பேசிட்டே போறே??” என்றான்.

 

“என்ன பேசிட்டேன் இப்போ நானு?? இப்போ நான் என்ன தப்பா பேசிட்டேன்னு நீங்களே சொல்லுங்க”

 

“அன்னைக்கு யாருக்குமே தெரியாம தானே என்னை கொண்டுபோய் எங்க வீட்டில விட்டதா சொன்னீங்க. ஆச்சிக்கு மட்டும் தான் தெரியும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்”

“இப்போ தாமரை அண்ணிக்கும் தெரிஞ்சிருக்கு. நீங்க சொல்லாம அவங்களுக்கு எப்படி தெரியும். சொல்லுங்க நீங்க தானே சொன்னீங்க அவங்ககிட்ட” என்றாள் அவனருகே வந்து நின்று அவன் கண்களை ஊருடுவியவாறே.

 

“ஆமா நான் தான் சொன்னேன்” அவள் கண்ணை நேராகவே பார்த்துச் சொன்னான்.

 

“எதுக்கு சொன்னீங்க?? என்னைய அசிங்கப்படுத்தவா??”

 

“நான் அப்படி எல்லாம் எதுவும் நினைக்கலை வந்தி… ப்ளீஸ் புரிஞ்சுக்கோயேன். அவ இப்படி உன்னை கேட்டு வைப்பான்னு எனக்கு தெரியாதும்மா”

 

“யாருக்கும் தெரியாம தான் உன்னை கூட்டிட்டு போய் விடணும்ன்னு நினைச்சேன். ஆனா அவளுக்கு சொல்ல வேண்டியதா போச்சு”

 

“நான் இங்க வந்து இப்படி நிக்கறதுக்கு காரணமே நீங்க தான். மொத்தமா என்னை அவமானப்படுத்திட்டீங்க, அன்னைக்கு இன்னும் என்னெல்லாம் கேட்டாங்க தெரியுமா அவங்க”

 

“ஹேய் நான் என்னம்மா பண்ணேன். அவ லூசுத்தனமா பேசினதுக்கு என் மேலே ஏன் கோபப்படுற?? தாமரைகிட்ட நான் சொன்னதுக்கு கூட எந்த காரணமும் இல்லாம இருக்கும்ன்னு நீ நினைக்கிறியா”

 

“உன்னை அசிங்கப்படுத்தினா அது எனக்கும் தானே அவமானம். நானே அப்படி செய்வேன்னு நீ நினைக்கிறியா!!”

 

“ஆமா நீங்க தான்!! அப்படி தான் செய்வீங்க!! செஞ்சிருப்பீங்க!! வேற யாரும் செய்ய முடியாது. இந்த அக்கறை எல்லாம் எப்போ வந்துச்சு உங்களுக்கு என் மேல” என்று அவன் மேல் இருந்த கோபத்தில் பேசினாள்.

 

“பிடிக்கலை வேணாம்ன்னு சொல்லிட்டு எப்படி திடீர்ன்னு வந்திச்சு இந்த அக்கறை உங்களுக்கு. உங்களுக்கு பிடிச்சதும் என் மேல அக்கறை தானா வந்து ஒட்டுக்கிச்சி இல்ல”

 

“அன்னைக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேனே எதுக்கு சொல்றா… ஏன் சொல்றான்னு யோசிச்சீங்களா!! உங்களை பத்தி மட்டும் தானே யோசிச்சீங்க!!”

 

“உங்க வீட்டு ஆளுங்களுக்கு அவமானம் வந்திடக் கூடாதுன்னு தானே யோசிச்சீங்க. நான் வேணாம்ன்னு சொன்னது பத்தி நீங்க யோசிக்கவே இல்லை தானே!!”

 

“நாம இதைப்பத்தி ஏற்கனவே பேசிட்டோம் வந்தி”

 

“எப்போ பேசினோம் தாமரை அண்ணி வீட்டுல இருந்து கிளம்பி வரும் போது பேசினதை சொல்றீங்களா!! நல்லா யோசிச்சு சொல்லுங்க அன்னைக்கும் உங்களுக்கு என்கிட்ட சொல்ல சரியான காரணம் இல்லை”

“இப்போவும் உங்களுக்கு காரணம் இல்லை தான். நான் ஒரு பொண்ணு அங்க அவமானப்பட்டு நிக்கறேன் அது உங்களுக்கு பெரிசா தெரியலை. உங்க குடும்பம் அவமானப்பட்டு நின்னுட கூடாது அது மட்டும் தான் உங்களுக்கு பெரிசா தெரிஞ்சுது”

 

“எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு நான் அசிங்கப்பட்டாச்சு. கூனிக்குறுகி நின்னாச்சு இப்போ சந்தோசம் தானே உங்களுக்கு”

 

“அவங்க கேட்கறாங்க ந… நடுவீட்டில நின்னுட்டு ரெண்… ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சுட்டு நின்னீங்களே அசிங்கமா இல்லையான்னு. அப்படியே நாக்கை பிடிங்கிட்டு சாகலாமான்னு இருந்துச்சு”

 

“மாமாவும் அங்க இருக்காங்க என்னை பத்தி யோசிச்சு பார்த்தீங்களா!! உங்களுக்கு என்ன உங்களை யாரும் எதுவும் சொல்லப் போறதில்லையே!!”

 

“காலங்காலமா எந்த அவமானமா இருந்தாலும் எங்களுக்கு தானே வந்து சேரும்”

 

வீராவால் அவள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. தந்தை முழுதாய் சொல்லாமல் விட்டதை மனைவியிடத்தில் இருந்து கேட்டவனுக்கு நடந்த விஷயங்கள் புரிந்தது.

 

அவனுக்கு தாமரை மேல் அவ்வளவு கோபம் வந்தது. வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்தது போல் தான் ஆனது அவன் நிலை.

எல்லாம் நன்றாய் போய் கொண்டிருக்கிறது என்று அவன் இருக்க தாமரை அதில் ஓட்டையை போட்டு மொத்தமாய் கொட்டி கவிழ்த்துவிட்டாள் அவன் தங்கை.

 

“என்ன பேச்சே வரலையா உங்களுக்கு!!”

 

ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டவன் “சரி இதுல நான் உன்னை எங்க அவமானப்படுத்தினதா நீ நினைக்கிற” என்றான் நிதானமாய்.

 

“நான் இவ்வளவு நேரம் என்ன பேசின்னேன்னு உங்களுக்கு புரியலையா!! உங்க காதுல எதுவும் விழலையா!!” என்று கத்தினாள்.

 

“தாமரை பேசினப்போ நீயே அவளை திருப்பி கேட்டிருக்க வேண்டியது தானே. எம் புருஷன் நாங்க கொஞ்சிக்குவோம் என்ன வேணா பண்ணிக்குவோம்ன்னு அதை ஏன் நீங்க கேட்கறீங்கன்னு கேட்க வேண்டியது தானே”

 

“அப்போலாம் பேசாம இருந்திட்டு ஒட்டுமொத்தமா எல்லா கோபத்தையும் என்கிட்ட காட்டினா எப்படி?? ஒத்துக்கறேன் நீ கோபத்தை என்கிட்ட தான் காட்ட முடியும் ஒத்துக்கறேன்”

 

“ஆனா அவ அவ்வளவு பேசினதுக்கு பதிலுக்கு திருப்பி உன்னால ஒரு வார்த்தையும் சொல்ல முடியலையா!! நீ ஒண்ணும் பேசாதவ எல்லாம் இல்லையே”

 

“அவங்க தான் ஏதோ புரியாம மாமா முன்னாடி பேசினாங்கன்னா நானும் பதிலுக்கு அப்படி கேட்டு வைக்குறதா!! அதுவும் மாமா முன்னாடியே!!”

 

“எப்படி கொஞ்சம் கூட கூச்சமேயில்லாம நான் அப்படி பேசணும்ன்னு நீங்க எதிர்பார்க்கறீங்க” என்று அவனை முறைத்தவாறே கேட்டாள்.

 

“இப்போ என்ன தான் உன் பிரச்சனை??”

 

அவளோ பதில் சொல்லாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள். ‘இவனென்ன லூசா’ என்ற ரீதியில்.

 

“நான் தான் உனக்கு பிரச்சனை இப்போ!! அப்படி தானே!!” என்றதும் நிமிர்ந்து அவனை பார்த்தாள். ‘நான் எப்போ அப்படிச் சொன்னேன்’ என்பதாய்.

 

“அப்போ நான் தாமரைக்கிட்ட சொன்னதும் அதை அவ அப்பா முன்னாடி சொன்னதும் தான் இப்போ உன்னோட பெரிய பிரச்சனை அப்படி தானே!!”

 

‘இதை தானேடா அப்போ பிடிச்சு சொல்றேன்’ என்று மனதிற்குள் நினைத்தவாறே அவனை பார்த்தாள்.

 

“என்ன பண்ணலாம் இப்போ அதுக்கு??”

 

“உன் கால்ல விழுந்து நான் மன்னிப்பு எதுவும் கேட்கணும்ன்னு எதிர்பார்க்கறியா!!” என்றவனை முறைத்தாள்.

“நான் என்ன தான் பண்ணணும் அதையும் நீயே சொல்லிடு. யார் எது சொன்னாலும் அதுக்கு நான் தான் பழியாகுறேன்”

 

“எல்லா இடத்திலையும் நீ தான் அவமானப்பட்டு நிக்கறதா சொல்றே!! இதுநாள் வரைக்கும் உனக்கு ஒண்ணுண்ணா அது எனக்கும்ன்னு தான் நான் நினைச்சுட்டு இருக்கேன்”

 

“அதெல்லாம் பொய்ன்னு நீ சொல்ல வர்றே அதானே!!”

 

“நான் அப்படி எல்லாம் எதுவும் சொல்லலை!! நீங்களா உங்க இஷ்டத்துக்கு பேச வேண்டாம். என்னை அப்படியே விடுங்க, என் மனசு என்னைக்கு ஆருதோ ஆறட்டும்”

 

“எப்போ ஆரும்??”

 

“தெரியாது”

 

“அதுவரைக்கும் நான் என்ன பண்ணணும்??”

 

“இதென்ன கேள்வி??”

 

“தெரியாம தான் கேட்கறேன், பதில் சொல்லு??”

 

“நான் என்ன சொல்லணும்ன்னு நீங்க எதிர்பார்க்கறீங்க”

 

“அதை தான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன்”

 

“நீங்க பேச்சை திசை திருப்புறீங்க… தப்பெல்லாம் என் மேல தான்னு சொல்ல வர்றீங்க அதானே!! நான் தான் தப்பு பண்ணிட்டேன் போதுமா!!”

 

“வீட்டை விட்டு தப்பிச்சு போறதுக்கு பதிலா எதையாச்சும் குடிச்சு செத்து போயிருக்…” என்று அவள் முடிக்கவில்லை அவள் கன்னம் எரிந்தது மட்டும் தான் அவளுக்கு தெரிந்தது.

 

அடித்தானா வீரா அவளை அடித்தானா என்ன எதற்கு அடித்தான். பேசிக் கொண்டிருக்கும் போதே எதற்கு அடித்தான் ஒரு கணம் ஒன்றும் ஓடவில்லை அவளுக்கு.

 

“பேசாதே இனிமே எதுவும் பேசாதே!! நானும் பார்த்திட்டே இருக்கேன் ஆன்னா ஊன்னா செத்திருக்கணும் செத்திருக்கணும் சொல்ற!!”

 

“எல்லாரும் ஒரு நாள் சாக தான் போறோம், நான் இல்லைன்னு சொல்லலை. என்னோட வாழாம அவ்வளவு சீக்கிரம் நீ போயிடுவியா”

 

“நீ என்னோட வாழறதுக்கு தான் பிறந்திருக்க!! இனிமே இப்படி பேசினே நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”

 

“என்ன பிரச்சனை உனக்கு?? சொல்லு என்ன பிரச்சனை?? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை அதானே!! அப்கோர்ஸ் நாம நெறைய பேசிக்கலை அதிகம் பழகலை தான்!!”

“ஆனா என் மனசை திறந்து நான் பேசியும் உனக்கு என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வரவே இல்லையா!!”

 

“உனக்கு இவ்வளவு கோபம் என் மேல இருந்துச்சே, ஒரு வார்த்தை ஒரு வார்த்தை எனக்கு போன் பண்ணி கேட்கணும்ன்னு உனக்கு ஏன் தோணலை??”

 

“அவ்வளவு கோபம் இல்ல உனக்கு… ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாங்க. அந்த நேரத்துல உன்னை ஆட்டிப்படைச்ச கோபம் அப்படியே உனக்கு மலை போல வளர்ந்திட்டு அப்படி தானே”

 

“அழுகையை அடக்கி வைக்குற மாதிரி கோவத்தையும் அடக்கி வைச்சு என் மேல காட்டியிருக்க அதானே!!”

 

“எல்லா விஷயத்தை ஒண்ணா சேர்த்து வைச்சு மறுபடியும் முதல்ல இருந்து பேச ஆரம்பிச்சுட்ட அப்படி தானே”

 

“நான் தாமரைகிட்ட சொன்னது உண்மை தான். ஆனா எதுக்காக ஏன்னு கூடவா உனக்கு கேட்கத் தோணலை”

 

“நான் தப்பா எதுவும் செஞ்சிருக்க மாட்டேன்னு ஒரு ஓரத்தில கூட உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா”

 

“என்னைக்கு என் மேல நம்பிக்கை வருதோ அன்னைக்கு உனக்கு என்னை புரியும். பார்ப்போம் அதுவரைக்கும் நான் காத்திட்டு தான் இருப்பேன்” என்றவன் அதற்கு பின் அவளிடம் எதுவும் பேசவில்லை.

இரவு உணவை கூட அறைக்கே வரவழைத்து கொடுத்தான் அவளுக்கு. தந்தைக்கு வேண்டியதை கேட்டு அவர் அறைக்கும் உணவை வரவழைத்துக் கொடுத்தான்.

 

செவ்வந்திக்கு அவள் பேசியதில் எந்த தவறும் தெரியவில்லை. அத்தனை நாளாய் மனதில் தேக்கி வைத்திருந்ததெல்லாம் கொட்டிவிட்டதில் மனம் ஒரு புறம் லேசாகி இருந்தாலும் வீராவின் பேச்சு மீண்டும் கனக்க வைத்தது அவளுக்கு.

 

‘இவர் பண்ணது எல்லாம் சரி, நான் கேட்டது மட்டும் தான் தப்பா’ என்று தான் நினைத்திருந்தாள்.

 

‘அவனிடம் உடனே கேட்டிருக்கலாம் தான், ஆனால் இதெல்லாம் போனில் பேசவேண்டிய விஷயமா என்ன!! பேசினாலும் நன்றாய் இருக்குமா!!’

 

‘வெளியூருக்கு வேலைக்கு என்று சென்றிருக்கிறான். அவனிடத்தில் பிரச்சனைகளை சொல்லி அவன் வேலைக்கு இடையூறு செய்ய அவள் விரும்பவில்லை’

 

‘எங்கே அவனிடம் பேசினால் கோபம் காணாமல் போய்விடும் என்று தான் அவள் பேசாமல் இருந்ததும். ஆனால் இன்று அதுவே ஏன் என்று கேட்கும் இவனிடம் என்ன சொல்ல’ என்று தானிருந்தது அவளுக்கு.

 

யோசிக்க யோசிக்க தலைவலி வந்தது தான் மிச்சம். இரண்டு நாட்களாய் தொடர்ந்த வேலைகளில் தொலைத்திருந்த தூக்கம் அவளை ஆட்க்கொண்டது.

வீராவிடம் எல்லாம் கொட்டிவிட்டதினால் கூட நிம்மதியான உறக்கம் அவளை தழுவியிருக்கலாம்.

 

காலையில் அலாரம் வைத்து ஆறு மணிக்கு எழுந்தவள் குளித்து முடித்து ஏழு மணிக்கெல்லாம் தயாராகி இருந்தாள். வீராவை எழுப்பவெல்லாம் இல்லை.

 

அவள் விழித்ததுமே வீராவும் விழித்திருந்தான். உடன் எழுந்து குளித்து தயாராகினான் அவனும். மனைவியை தந்தையையும் அழைத்துக் கொண்டு உணவருந்தச் சென்றான்.

 

சாப்பிட்டு முடித்ததும் சொன்னது போலவே அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்று விட்டு வந்தான்.

 

அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவனுக்கோ ஆயாசமாய் இருந்தது.

 

‘ஏன் என் மேல் இவ்வளவு கோபம் அவளுக்கு. எங்கே என்னை புரிய வைக்க தவறினேன்’ என்ற கேள்வி தான் அவனுக்குள்.

 

‘தான் தான் அவளை சரியாக புரிந்து கொள்ளவில்லையா!!’ என்ற ரீதியில் யோசிக்கவும் அவளை ஓரளவிற்கு அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

‘அவளுக்கு யாரு முன்னாடியும் அவமானப்படக்கூடாது. அது தான் அவளோட பிரச்சனை அப்படி தானே!! இப்போ நடந்து முடிஞ்சதுக்கு நான் என்ன பண்ண முடியும். என்ன செஞ்சு அவளை மலையிறக்குறது’ என்பதானிருந்தது அவன் சிந்தனை முழுதும்.

 

அவன் தந்தை தாமரை வீட்டிற்கு செல்லலாம் என்று கூற வீராவோ தனக்கு வெளியில் கொஞ்சம் வேலையிருப்பதால் சற்று தாமதமாய் வந்து இணைந்து கொள்வதாக கூறிவிட சக்திவேல் அவர் மட்டுமாக தாமரை வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.

 

அங்கு சென்றவரோ ஏன் தான் சென்றோம் என்றளவிற்கு தாமரை அவரை பேசித் தீர்த்துவிட்டாள். தாமரையின் மாமியார் இப்போதெல்லாம் வாயே திறப்பதில்லை.

 

என்று மருமகள் எதிர்த்து பேச ஆரம்பித்தாளோ அன்றிலிருந்து அவர் பேச்சை குறைத்துக் கொண்டார்.

 

சக்திவேலுக்கு அந்த வீட்டின் மாற்றம் நன்றாகவே புலப்பட்டது. வந்தவரை சம்பிரதாயமாய் வரவேற்றவர் தான் அதன் பின் வெளியே வரவேயில்லை தாமரையின் மாமியார்.

 

மாமனாரோ கேட்கவே வேண்டாம் உடல்நிலை சரி இல்லாதவர், அதிகம் எழுந்து வெளியில் கூட வரமாட்டார்.

 

தாமரை அவர்கள் வீட்டிற்கு சென்ற இடைப்பட்ட இந்த காலத்தில் அவளுக்கு எட்டு மாதத்திலேயே குழந்தை பிறந்திருந்தது.

குலையன்கரிசலில் இருந்து வந்தபிறகு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய குழந்தை இரண்டு மாத கருவளர்ச்சியுடன் இருந்தது.

 

இதோ இருபது நாட்களுக்கு முன் தான் அவளுக்கு பனிக்குடம் உடைந்து மருத்துவமனையில் சேர்க்க பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு ஆபரேஷன் செய்து தான் குழந்தையை வெளியில் எடுத்தனர்.

 

அதிகாலையிலேயே செவ்வந்தியை அழைத்த போதும் தயங்காமல் வந்திருந்தாள் அவள். குழந்தையை சிறிது நாட்கள் வரை இன்குபேட்டரில் தான் வைத்திருந்தனர்.

 

சக்திவேல் தாமரையின் பிரசவத்தின் போது நடந்தவைகளை நினைவு கூர்ந்தார்.

____________________

 

சக்திவேலுக்கு அதிகாலையிலேயே போன் செய்துவிட்டிருந்தான் ரவி, தாமரையின் நிலைப்பற்றி.

 

சக்திவேலும் சற்றும் தாமதியாமல் வண்டியை டிரைவரை விட்டு எடுக்கச்சொல்லி கிளம்பியிருந்தார்.

 

அடுத்த சிலமணி நேரத்தில் அவர் மருத்துவமனையை வந்தடைந்திருக்க அதற்குள் தாமரையின் மாமியார் செவ்வந்தியை அழைத்திருப்பார் போலும் அவளும் அந்நேரம் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.

 

“நீ எப்போம்மா வந்தே??” என்றார் சக்திவேல்.

 

“இப்போ தான் மாமா ரவி அண்ணா போன்ல இருந்து அம்மா பேசினாங்க அண்ணிக்கு பனிக்குடம் உடைஞ்சு போச்சுன்னு”

 

“அதான் மாமா வேகமா கிளம்பி வந்தேன். நீங்க தனியாவா மாமா வண்டி எடுத்திட்டு வந்தீங்க!!”

 

“இல்லைம்மா வண்டியை முத்துராசு தான் ஓட்டிட்டு வந்தாப்புல!! தாமரைக்கு ஒண்ணும் ஆகாதுல்லம்மா” என்றார் பெற்ற தந்தையாக.

 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது மாமா!! நான் போய் பார்க்கறேன்” என்றவள் உள்ளே விரைந்தாள்.

 

அவள் கிளம்பும் முன்னரே கார்த்திக்கிற்கு அழைத்து விபரத்தை சொல்லியிருக்க அவன் அன்னையை உடனே மருத்துவமனைக்கு கிளம்ப சொன்னான் அவன். இரண்டு நாளுக்கு முன்னர் தான் அவர் மகனை பார்க்க வந்திருந்தார்.

 

மறுநாள் அவர் கிளம்புவதாக இருக்க செவ்வந்தி அவனுக்கு அழைத்து சொன்னதுமே அன்னையை தயாராகச் சொல்லி அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தான் அவன்.

 

தாமரைக்கு சுகப்பிரசவம் செய்ய முடியாது என்றும் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் சொல்ல அவளை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர்.

 

செவ்வந்தியும் சரியாய் அந்நேரத்திற்கு வந்திருக்க கார்த்திக்கின் அன்னையிடம் பேசி அவளும் உள்ளே சென்றிருந்தாள்.

 

சில மணித்துளிகளில் அழகான ஆண் குழந்தை பிறந்தது தாமரைக்கு.

 

தாமரைக்கு செவ்வந்தி வந்தது தெரியாது, அவள் மயக்கத்தில் இருந்தாள்.

 

செவ்வந்தியும் தினமும் வந்தாலும் தாமரை உறங்கும் போதே எட்டிப்பார்த்துவிட்டு செல்லுவாள்.

 

அன்று தாமரையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பும் நாள். தாமரையின் மாமியார் செவ்வந்திக்கு அழைத்து அவளை மருத்துவமனைக்கு வரச்சொன்னார்.

 

அவளும் ஏதோவொரு ஞாபகத்தில் கிளம்பி வந்தவள் தாமரையின் அறைக்குள் வந்திருந்தாள்.

 

உள்ளே நுழைந்த பின்னே தான் அவளுக்கு தெரிந்தது தாமரை விழித்திருக்கிறாள் என்று. போகலாமா வேண்டாமா என்று யோசனையுடனே உள்ளே வந்திருந்தாள்.

 

தாமரையோ அவளை கண்டதுமே கண்களில் வெறுப்பை தான் உமிழ்ந்திருந்தாள்.

 

“என்ன தாமரை உங்க அண்ணி வந்திருக்கு வாங்கன்னு சொல்ல மாட்டியா!! என்ன பழக்கம் படிக்கிற நீ” என்று செவ்வந்தியின் முன்னிலேயே அவர் கேட்டுவிட தாமரைக்கு சுள்ளென்று கோபம் வந்தது.

 

“என்ன கேட்கணும் நான் இவளை. வாம்மா மகாராணின்னு கேட்கணுமா!! இவளுக்கு எப்படி தெரியும் நான் இங்க இருக்கேன்னு” என்று முகத்திலடித்தது போல கேட்க தாமரையின் மாமியாருக்கு ஒரு மாதிரியாகி போனது.

 

“என்ன தாமரை பேசுற?? உனக்கு டெலிவரி அன்னைக்கு உன் கூடவே தான் செவ்வந்தி இருந்துச்சு. தினமும் உன்னை வந்து பார்த்திட்டு தான் போயிட்டு இருக்கா”

 

“அவளை போய் ஏன் இப்படி எல்லாம் பேசுற?? என்னாச்சு உனக்கு?? நீ பேசுற விதமே கொஞ்ச நாளா சரியில்லைன்னு நினைச்சேன்”

 

“இன்னைக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம உன்னோட அண்ணியை பேசுற?? இப்படியெல்லாம் பேச எங்க கத்துக்கிட்ட??” என்றார் அவர்.

 

“ஹ்ம்ம் எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டது தான். முகத்தில அடிச்ச மாதிரி பேசுறது தான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே”

 

“நாங்க பேசுனா உங்களுக்கு வலிக்குதோ!! என்னை கேட்காம உங்களை யாருக்கு இவளுக்கு போன் பண்ண சொன்னது”

 

“அன்னைக்கு மாமனாரும் மருமகளுமா சேர்ந்து என்னை எங்க வீட்டுக்கு விரட்டிவிட்டுட்டு இப்போ நீங்க சொன்னதும் ஒண்ணுமே தெரியாத மாதிரியா வந்திட்டாளா இவ!!”

 

“ஓ!! அப்போ தான் எல்லாரும் இவளை நல்லவன்னு சொல்லுவாங்கல்ல அதுக்கு தான் இந்த நடிப்பு” என்று கொஞ்சமும் யோசிக்காமல் பேசியவளை ஆவென்று தான் பார்த்திருந்தார் அவளின் மாமியார்.

 

இதுநாள் வரை மாமியாரை எதிர்த்து பேசியவளில்லை அவள். ஆனால் இன்று எதையும் யோசிக்காமல் பேசுகிறாளே என்று உள்ளே கொஞ்சம் உடைந்து தான் போனது அவருக்கு.

 

அவர் ஒரு கிராமத்து பெண்மணி, எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பேசியே அவருக்கு வழக்கம். இதுநாள் வரையிலும் கூட அவர் அப்படித்தானிருந்தார்.

 

அது இயற்கையிலேயே அவரின் குணம். சரி தப்பு இவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்றெல்லாம் அவர் யோசித்ததில்லை. இதுவரை யாரும் அவரிடத்தில் எதுவும் சொன்னதும் இல்லை.

 

இன்று மருமகளே எதிர்த்து பேசவும் அவருக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

 

செவ்வந்திக்கு தன்னை பேசியதை விட தாமரை அவளின் மாமியாரை பேசியது சற்று சங்கடமாகவே போனது.

“அம்மா நான் கிளம்பறேன், நீங்க எதையும் மனசுல வைச்சுக்காதீங்க” என்று தாழ்ந்த குரலில் அவரிடத்தில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டாள்.

 

அதன் பின் தாமரையின் மாமியார் தாமரையிடம் வீட்டிற்கு வந்ததும் கேட்க அதற்கு ஒரு ஆட்டம் அவள் ஆடித்தீர்த்துவிட்டாள்.

 

‘அவருக்கு மருமகளை பார்த்து சற்று அயர்ச்சியே!! தன்னால் தான் அவள் இப்படி மாறிவிட்டாளா!! நான் ஒண்ணும் செய்யலையே அவ நல்லதுக்கு தானே எதுவும் சொல்லியிருப்பேன்!!’

 

‘என்ன அதை எனக்கு தெரிஞ்ச அளவுல பட்டுப்பட்டுன்னு சொல்லியிருப்பேன் அவ்வளவு தானே. அதுவும் கூட அவளுக்கு நல்லதுன்னு நினைச்சு தானே!!’ என்று எண்ணி எண்ணி அவர் மனம் வெந்து தான் போனார்.

 

தாமரைக்கோ முதல் முறை எதிர்த்து பேசும் போது தான் தயக்கமெல்லாம் அதன் பிறகு எதையும் அவள் யோசிப்பதில்லை. யாரையும் அவள் கண்டுக்கொள்ளவுமில்லை.

 

ரவி ஓரிருமுறை கண்டிக்கத் தான் செய்தான். அவன் கண்டித்தால் அந்நேரம் அமைதியாயிருப்பாள் அவ்வளவு தான். அவன் சென்ற பின்னே நீங்கள் தான் சொல்லிக் கொடுத்துவீட்டிர்கள் என்று மாமியாரிடம் சண்டையிடுவாள்.

 

தாமரையின் மாமியார் மருமகளிடம் பேசுவதை சுத்தமாய் நிறுத்தியிருந்தார்.

 

____________________

 

மகள் வீட்டிலிருந்து எப்போதடா கிளம்புவோம் என்று ஆகிப்போனது அவருக்கு. வீரா வந்துவிட்டால் கிளம்பிவிடலாம் என்று அவர் இருக்க வீரா அவருக்கு போன் செய்தான்.

 

“சொல்லுப்பா எங்க இருக்க?? எப்போ வர்றே??” என்றார் அவர்.

 

“அப்பா நான் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்ப்பா!! செவ்வந்தி வேற வந்திடுவா, நான் அவளை வேற கூட்டிட்டு வரணும். நீங்க நேரா கிளம்பி ஹோட்டலுக்கு வந்திடுங்கப்பா”

 

“அப்போ நீ தாமரை வீட்டுக்கு” என்று தாழ்ந்த குரலில் கேட்டார்.

“நாளைக்கு வந்து பார்த்துக்கறேன்ப்பா” என்று அவன் முடித்துவிட்டான்.

 

சக்திவேல் போனை வைத்துவிட்டு மகளை பார்த்தார். “என்னப்பா அண்ணன் என்ன சொல்லுது எங்க வீட்டுக்கு அது வருமா!! வராதாமா!!”

 

“அண்ணனுக்கு ஏதோ வேலை இருக்காம், நாளைக்கு வர்றேன்னு சொன்னான்ம்மா” என்றார் அவர்.

 

தாமரை சக்திவேலை நன்றாக முறைத்தாள்.

____________________

 

தந்தையிடம் பேசிவிட்டு செவ்வந்திக்கு அழைத்தான் வீரா. இதுநாள் வரை அவன் போன் செய்த போது எடுக்காதவள் இப்போது ஒரே அழைப்பிலேயே எடுத்திருந்தாள்.

 

எடுத்தவள் ஹலோ என்று கூட சொல்லவில்லை அப்படியே காதில் வைத்திருந்தாள்.

 

“செவ்வந்தி” என்றான் அவன். “ஹ்ம்ம்…” என்றாள் ஒற்றைச்சொல்லாய்.

 

“எப்போ உனக்கு டியூட்டி முடியும் சொல்லு. எனக்கு வேலை எல்லாம் முடிஞ்சுது”

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிரும். நீங்க ஒரு எட்டு மணி போல வாங்க” என்றாள்.

 

சரியென்று விட்டு போனை வைத்தவன் வண்டியிலேயே சற்று சுற்றியலைந்துவிட்டு ஏழே முக்காலுக்கே மருத்துவமனை வாயிலுக்கு வந்து சேர்ந்திருந்தான்.

 

மனைவிக்காக இப்படி காத்திருப்பது கூட ஒரு சுகம் தான் என்று அக்கணம் அவனுக்கு தோன்றியது.

 

எப்போதடா வருவாள் என்று வாயிலையே பார்த்திருந்தான். முதல் நாள் கோபம் அவனுக்கு இருந்தாலும் அதை மீறி உள்ளம் நிறைந்தவளின் வரவிற்காக காத்திருந்தான்.

 

செவ்வந்தி வெளியில் வரும் போது மணி எட்டரையை தொட்டிருந்தது. வீராவை கண்டதுமே “சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றாள் அவனைப் பார்த்து.

 

“ஹ்ம்ம் பரவாயில்லை” என்றவன் அவளை ஏற்றிச் சென்றான். வரும் வழியில் வண்டியை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.

 

“என்னாச்சு இங்க நிறுத்திட்டீங்க??”

 

“சாப்பிட்டு போகலாம்??”

 

“இப்போவா?? வேணாம் மாமா தனியா இருப்பாங்க போகலாம். நான் குளிச்சுட்டு தான் இனி சாப்பிடுவேன்” என்றாள்.

 

“மத்தியானம் எப்படி சாப்பிட்டே??” என்றான் குதர்க்கமாய்.

 

அவனை பார்த்து முறைத்தவள் எதுவும் சொல்லவில்லை. “ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு சாப்பிட வா” என்றான்.

 

“இல்லை ப்ளீஸ் எனக்கு வேணாம்”

 

“சொல்றதை கேளு” என்று அவன் அழுத்தமாய் சொல்லவும் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.

அவளுமே நல்ல பசியில் தான் இருந்தாள் அப்போது. அவன் சொன்னது போலவே கையை நன்றாக இரண்டு மூன்று முறை கழுவிவிட்டு வந்தவள் பின் உணவருந்தினாள்.

 

வீரா அவளை சாப்பிட வைத்தானே தவிர அவன் சாப்பிடவில்லை. “நீங்க சாப்பிடலையா!!”

 

“நான் அப்பா கூட சாப்பிட்டுக்கறேன், நீ சாப்பிடு. பசியோட இருப்பே” என்றான்.

 

செவ்வந்தி அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. அவள் சாப்பிட்டு எழவும் பில்லுக்கு பணம் செலுத்திவிட்டு அவளை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

 

சக்திவேல் அவர் அறைவாயிலை திறந்து வைத்தே அமர்ந்திருக்க வீராவும் செவ்வந்தியும் வந்து சேர்ந்தனர். தந்தையின் அறைக்கதவு திறந்திருக்கிறேதே என்று வீரா நின்று பார்க்க அவர் பின்னிருந்து தாமரை வெளியில் வந்தாள்…

Advertisement