Advertisement

அத்தியாயம் – 19

 

செவ்வந்தி கையில் இருவருக்குமான உணவை சுமந்துக் கொண்டு பின் வீட்டிற்கு வர வீராவோ கீழே இருந்த ஹாலில் இருந்த சோபாவில் ஹாயாக வாசலை நோக்கி படுத்துக் கொண்டு இவள் வரவை எதிர்பார்த்திருந்தான்.

 

அவள் உள்ளே வரவும் எழுந்து வந்து அவளிடத்தில் இருந்ததை வாங்கி அங்கிருந்த டிபாயின் மேல் வைத்தான்.

 

“எவ்வளவு நேரமா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

 

“அதான் வந்துட்டேன்ல”

 

“உட்காரு, ஆமா எதுக்கு ரெண்டு தட்டு எடுத்திட்டு வந்தே??”

 

“நீங்க தானே சொன்னீங்க ரெண்டு பேருக்கும் கொண்டு வரச்சொல்லி அதான் எடுத்திட்டு வந்தேன்”

 

“ரெண்டு பேருக்கும் தான் எடுத்திட்டு வரச்சொன்னேன், ஆனா ரெண்டு தட்டு எல்லாம் வேணாம்… ஒரே தட்டு தான் ஒழுங்கா ஊட்டிவிடு” என்று வம்பு செய்தான்.

 

“நான் செம பசில இருக்கேன், சும்மா விளையாடாம சாப்பிடுங்க” என்றாள்.

 

“அப்போ இரு” என்றவன் ஒரு தட்டை எடுத்து அதில் இரு சப்பாத்திகளை வைத்து குருமாவை ஊற்றியவன் அதை பிய்த்து குருமாவில் தோய்த்து அவளுக்கு ஊட்டினான்.

 

மறுக்காமல் அதை வாங்கிக்கொண்டவளுக்கு கண்கள் கசிந்து விட்டது. யாரும் அதிகம் அவளுக்கு ஊட்டிவிட்டதாய் ஞாபகமில்லை.

 

உடம்பு சரியில்லை என்றால் கூட கஞ்சி வைத்து அதில் ஒரு ஸ்பூனை போட்டு கொடுத்துவிடுவர். அதை அவளே தான் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

 

தங்களை தாங்களே தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது மதுராம்பாள் சொல்வார். அதனாலேயே சிவகாமி மகளிடம் நெருங்கி வந்தால் கூட அதை எட்ட நின்றே செய்துவிட்டு செல்வார்.

 

அவள் தந்தை இருந்தவரை எல்லா சலுகையும் அனுபவித்தவள் அவள். அவர் வீட்டிலிருந்தால் அவர் தான் அவளுக்கு ஊட்டிவிடுவார்.

 

செவ்வந்தி ஏற்கனவே சாப்பிட்டுவிட்டால் கூட அவர் உணவருந்தும் நேரம் அருகில் அவளிருந்தால் மகளுக்கு ஊட்டாமல் இருக்க மாட்டார் அவர். அந்த ஞாபகம் வந்து கண்ணை கரிக்க வைத்தது அவளுக்கு.

 

“ஹேய் என்னாச்சு??” என்றவன் மற்றொரு கையால் அவள் கண்ணீர் துடைத்தான்.

 

“என்ன ஆனந்த கண்ணீரா!!” என்றான் தொடர்ந்தவாறே.

 

“ஒண்ணுமில்லை!!”

 

“இதெல்லாம் எப்பவும் கிடைக்காது கிடைக்கும் போது அனுபவிச்சுக்கணும்”

 

“ஏன்?? ஏன் கிடைக்காது??”

 

“எப்பவும் ஊட்டிவிட முடியுமா!!”

 

“நானா உங்களை ஊட்டிவிட சொல்லி கேட்டேன், நீங்களா தானே ஊட்டிவிட்டீங்க!!”

 

“அதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்க வீட்டில இருந்தா நீங்க தான் எனக்கு ஊட்டிவிடணும்” என்றாள்.

 

“ஹா… ஹா…” என்று சிரித்தவன் “ரொம்ப நன்றி” என்று கண் சிமிட்டினான்.

 

‘எதுக்கு சிரிக்கறார்?? எதுக்கு கண்ணடிச்சார்?? நாம போய் சிக்கிட்டமோ!!’ என்று யோசித்தாள்.

 

“போதும் நெறைய சாப்பிட்டேன்” என்றாள் அவன் அடுத்து ஊட்டும் போது.

 

“அஞ்சு சப்பாத்தி தான் சாப்பிட்டிருக்கே!! அதுக்குள்ள போதுமா”

 

“என்னது அஞ்சா!!”

“ஆமா”

 

“நான் எப்பவும் ரெண்டு தான் சாப்பிடுவேன், நீங்க ஊட்டவும் நெறைய சாப்பிட்டேன் போல!! போதும் ஆளைவிடுங்க” என்றாள்.

 

“ஹலோ மேடம் எங்க எழுந்து போறீங்க!! இனி உங்க டர்ன் ஒழுங்கா வந்து ஊட்டிவிடு”

 

“கையை கழுவிட்டு வந்திடறேன்” என்றவள் “நீங்க என்ன அங்க உட்கார்ந்திட்டு கையை காய வைச்சுட்டு இருக்கீங்க வந்து கையை கழுவுங்க” என்றாள்.

 

“டாக்டரம்மா ரொம்ப தான் சுத்தம் போங்க” என்று சலிப்பது போல் சொன்னாலும் அவள் சொன்னதை செய்தான்.

 

அவனும் சாப்பிட்டு முடிக்கவும் “நான் இதை கழுவிட்டு வர்றேன்”

 

“அதை அப்புறம் செய்யலாமே!!”

 

“இப்போவே செய்யணும்” என்று எழுந்திருந்தாள் அவள்.

 

“அப்போ அங்க போகப்போறியா??”

 

“இல்லை இங்கவே வாஷ் பண்ணுறேன்” என்றுவிட்டு அங்கிருந்த வாஷ்பேசின் அருகே சென்றாள்.

 

“நான் உதவி பண்றேன்” என்றவன் அவளுக்கு உதவ கொண்டு வந்தவற்றை இருவருமாக அலம்பி வைத்தனர்.

 

“தூக்கம் வருது தூங்கலாமா!!” என்றவளை பார்த்து முறைத்தான்.

 

“எனக்கு பதில் சொல்லாம நீ தூங்கிடுவியா!!” என்றவன் அவளை தள்ளிக்கொண்டு படியேறினான்.

 

“எதுக்கு இப்படி அடிச்சு பிடிச்சு தள்ளிட்டு வர்றீங்க”

 

“நீ பாட்டுக்கு ஓடிட்டா என்ன செய்ய!!”

 

“அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளை இழுத்து இறுக அணைத்திருந்தான் அவன்.

 

வீராவின் பார்வை அவளையே சுற்றி வருவதை செவ்வந்தி உணர்ந்து தானிருந்தாள். அவன் எதிர்பார்ப்பு என்னவென்பதும் அவளுக்கு புரிந்தே தான் இருந்தது.

 

அடிவயிற்றில் ஏதோ ஒரு பயம் எழுந்தது. வேண்டுமென்றே தான் அவள் நேரத்தை கடத்தியிருந்தாள் அவ்வளவு நேரமும்.

 

எப்படியும் எல்லாம் முடிந்து அவனிடம் சென்று சேர்ந்து தானே ஆகவேண்டும். இதோ அவனிடம் மாட்டிக்கொண்டாயிற்று.

 

‘என்ன பதில் சொல்ல’ என்று யோசிக்கும் முன்னே அவளை அணைத்திருந்தான்.

 

அவனின் அணைப்பில் அவளும் நெகிழ்ந்து கொண்டிருக்கும் போதே அவளுடன் சேர்ந்து கட்டிலில் சாய்ந்திருந்தான் அவன்.

 

அவளின் முகம் முழுதும் முத்திரைகள் பதித்தவன் அவள் இதழ்களை எடுத்துக் கொண்டான் இப்போது.

 

அவன் மேலும் மேலும் முன்னேற ஆரம்பிக்க செவ்வந்தியால் அவனுடன் முழுதாய் ஒன்ற முடியவில்லை. அவனை விலக்கவும் முடியவில்லை உதட்டை அழுந்த கடித்துக் கொண்டிருந்தாள்.

 

மனைவியிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை என்றதும் நிமிர்ந்து அவளை பார்த்தான் என்னாச்சு என்பது போல்.

 

“இப்… இப்போ வேணாமே!!” என்று திக்கி திக்கி சொன்னாள்.

 

ஒரு நிமிடம் கண்ணை மூடித்திறந்தவன் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி எழுந்து அமர்ந்தான்.

 

அவளிடம் எந்த காரணமும் கேட்கவில்லை “சரி விட்டிருவோம்” என்றான் சாதாரண குரலில்.

 

அவன் சொல்லியது நிஜமாகவே அவளுக்கு ஆச்சரியம் தான் எப்படி இப்படி சாதாரணமாக பதில் சொல்கிறார்.

‘கோபம் வரவில்லையா என் மேல்’ என்று தான் தோன்றியது அவளுக்கு. அதை அவனிடமே அப்படியே கேட்டாள்.

 

“கோபமா எதுக்கு வரணும்??”

 

“நிஜமாவே உங்களுக்கு கோபம் வரலையா”

 

இல்லையென்பதாய் தலையசைத்தான். “எனக்கு ஒண்ணு மட்டும் தெரியணும்” என்றான் சீரியசான குரலில்.

 

“என்ன??”

 

“உனக்கு என்னை பிடிச்சிருக்கா!!” என்றான்

 

“என்ன கேள்வி இது??”

 

“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு, பிடிச்சிருக்கா!! இல்லையா!! பிடிக்காம உன்னை நான் கஷ்டப்படுத்தினதா இருக்கக்கூடாது அதான் கேட்கறேன்”

 

“எனக்கு பிடிக்காம தான் உங்க பக்கத்துல இருக்கேனா!!” என்றாள் அழும் குரலில்.

 

“இல்லை உன்னை கட்டாயப்படுத்தினது போல தோணிச்சு. அதனால தான் கேட்டேன், வேற எந்த காரணமும் இல்லை”

 

அவன் அப்படி சொன்னதும் அவனருகில் நெருங்கி அமர்ந்தாள் அவள். அவனை தன் புறம் திருப்பியவள் அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

 

“ஹேய் என்ன சர்ப்ரைஸ் பண்ணுற??” என்றான்.

 

“உங்களுக்கு ஏன் கோபம் வரலை” என்று மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றாள்.

 

“ஏன் வரணும்??” என்றான் அவள் பதில் கேள்வியாய்.

 

“நான் அப்படி சொன்னது கஷ்டமாயில்லையா!!”

 

“இல்லை!! உன்னோட மனநிலை அதுக்கு தயாரா இல்லாம இருந்திருக்கலாம். அதுக்காக நான் உன்னை கோவிக்க முடியுமா!!”

 

‘இவ்வளவு நல்லவனா நீ!!’ என்று மனதிற்குள் நினைத்தாலும் அவளால் அவன் சொன்ன காரணத்தை முழுதாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

அவன் பதில் அவளுக்கு திருப்தி தான் ஆனால் அதில் வேறு ஏதோவொன்று இருக்கிறது என்று உள்ளுக்குள் தோன்றியது.

 

“நான் சொன்னதை நீ நம்பலைன்னு நினைக்கிறேன்” என்றான் அவள் கண்களை பார்த்து.

 

“ஆனா அது தான் நிஜம். உன்னை எதுக்காகவும் நான் கஷ்டப்படுத்த மாட்டேன்”

“எங்கம்மாகிட்ட சொல்லியிருக்கேன் உன்னை எப்பவும் கஷ்டப்படுத்த மாட்டேன்னு”

 

‘இது எப்போ’ என்ற ரீதியில் அவனை பார்த்தாள்.

 

“எப்பவோ??”

 

“எப்பவோன்னா??”

 

“எப்பவோ தான்… அதை விடு வேற எதாச்சும் பேசு”

 

“நீங்க ட்ரிங்க் பண்ணுறது…” என்று இழுத்தாள்.

 

“என்னைக்கு எங்கம்மா பேரை சொல்லி அதை விடச் சொன்னியோ அன்னையோட அதை நிறுத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்”

 

“அம்மா போனபிறகு முடிவு பண்ணதை செயல்படுத்த ஆரம்பிச்சுட்டேன்” என்று சொல்ல அவனை பெருமிதமாக நோக்கினாள்.

 

தூரத்தில் எங்கோ சர்ச் மணியோசை பன்னிரண்டு முறை அடிக்கவும் தான் செவ்வந்திக்கு தாமரையின் நினைப்பே வந்தது.

 

“நான் அங்க போறேன் மணி பன்னிரண்டாச்சு” என்று எழுந்து நின்றாள்.

 

“ஆகட்டும் அதுக்கென்ன இப்போ??”

 

“அண்ணி பாவம் தூக்கத்தை விட்டு பாப்பாவை பார்த்திட்டு இருப்பாங்க”

 

“அதே தூக்கம் உனக்கும் வரும் தானே!!”

 

“இதென்னங்க இப்படி பேசறீங்க!! அவங்களை நாம பார்த்துக்குவோம்ன்னு சொல்லி தானே இங்க இருக்க வைச்சிருக்கோம்”

 

“அத்தை இருந்திருந்தா இப்படி தான் செய்வாங்களா என்ன!! பேசாம என்னோட வாங்க” என்றுவிட்டு இறங்கி முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

 

“இரண்டு மாசத்துல அவங்க வீட்டுக்கு போன பிறகு யார் பார்ப்பாங்களாம்” என்று முணுமுணுத்தான் அவன்.

 

“நம்ம வீட்டில இருக்க வரை நான் பார்த்துப்பேன். அங்க போனா அந்த அம்மா பார்த்துப்பாங்க அண்ணி அண்ணா எல்லாரும் இருப்பாங்க பார்த்துப்பாங்க போதுமா” என்றாள் அவளும் நடந்துக் கொண்டே!!

 

“ரொம்ப கண்ணு முழிச்சு உன் உடம்பை நீ கெடுத்துக்கறன்னு தோணுது!!” என்றான் விடாமல்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, டாக்டர்ஸ் எல்லாம் கண்ணு முழிக்க சிரமப்படக் கூடாது. அப்படி சிரமப்பட்டா எப்படி உயிர்களை காப்பாத்துறதாம்” என்று பதில் கொடுத்தாள்.

 

“எனக்கு சொல்றதுக்குன்னே பதில் தயாரா வைச்சிருப்ப போல” என்றவனும் அவள் பின்னேயே வந்தான்.

 

அவர்கள் முன் வீட்டிற்கு வரும் வரை தாமரை விழித்தே தானிருந்தாள். அவர்கள் வரும் அரவம் கேட்கவும் தான் கண்ணை மூடி உறங்குவது போன்ற பாவனை செய்தாள்.

 

அவளருகில் இருந்த குழந்தை கவிழ்ந்து படுத்துக்கொண்டு தலையை தூக்கி பார்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

 

வேகமாய் வந்த செவ்வந்தி அவளை பார்த்து பொக்கைவாய் காட்டி சிரித்த குழந்தையை அள்ளி தோளில் போட்டுக் கொண்டாள்.

 

சத்தமில்லாமல் வெளியில் வர வீரா தரையில் விரித்து அமர்ந்திருந்தான். “கொடு அவளை” என்று கையை நீட்ட வர்ஷினி அவனிடம் தவ்வினாள்.

 

“ரொம்ப வாலா வருவான்னு நினைக்கிறேன். தாமரை மாதிரி எல்லாம் இருக்க மாட்டா!! செம சுறுசுறுப்பு” என்று மருமகளை அவன் புகழ அவன் பேச்சு உள்ளிருந்த தாமரைக்கு கேட்டுக் கொண்டு தானிருந்தது.

 

‘அப்போ நானென்ன சோம்பேறியா!! இந்த அண்ணனுக்கு ஏன் இப்படி எல்லாம் புத்தி போகுது. என்னைப்பத்தி அவகிட்ட ஏன் பேசணும்’ என்று மனதிற்குள்ளாக எண்ணியவள் செவ்வந்தியின் மரியாதையை குறைத்திருந்தாள்.

குழந்தையிடம் இருவருமே சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க, விளையாடி களைத்த குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தது.

 

“குழந்தையை உள்ளே படுக்க வைச்சுட்டு வா!!” என்றான் மெதுவான குரலில்.

 

எழுந்து சென்று படுக்க வைத்துவிட்டு அவள் வரவும் அவளை இழுத்து தன் மடி மீது போட்டுக் கொண்டான்.

 

“அச்சோ ஏன் இப்படி பண்றீங்க” என்றாள் அவன் சட்டென்று இழுத்த பதற்றத்தில்.

 

“ஒண்ணுமே பண்ணலை வந்தி… இது கூட செய்யக் கூடாதா!!”

 

“நான் ஒண்ணும் சொல்லலை, என்னன்னு சொல்லுங்க”

 

“நாளைக்கு நாம தூத்துக்குடி வரை போறோம், காலையில ஒரு பத்து மணிக்கா கிளம்பணும் ரெடியா இரு”

 

“யாரெல்லாம் போறோங்க!!”

 

“நீயும் நானும் தான்”

 

“அண்ணி பாப்பா வீட்டில தனியா இருப்பாங்களே!! எப்படிவிட்டு போறது”

 

“இதென்ன கேள்வி!! தாமரை வீட்டில தானே இருப்பா, அவ குழந்தையை பார்த்துக்க மாட்டாளா!!”

 

“தனியா எப்படி பார்த்துக்க முடியும்”

 

“நீ சொல்றது உனக்கே சரின்னு தோணுதா!! அவங்க வீட்டுக்கு போயிட்டாலும் நீ கூடவே போய் பார்த்துக்குவியா என்ன!!”

 

‘அச்சோ இவருக்கு எப்படி புரிய வைக்குறது. இவர்கிட்ட சொன்னா நேத்து படக்குன்னு சொன்ன மாதிரி சொல்லி வைப்பாரு. என்ன பண்ண’ என்று விழித்தாள்.

 

“அத்தை…” என்று அவள் ஆரம்பிக்கும் போதே கையமர்த்தினான்.

 

“அம்மா இருந்திருந்தான்னு சொல்ல போறே அதானே!! நான் ஒண்ணும் உன்னை தூத்துக்குடிக்கு நாடு கடத்தப் போறதில்லை”

 

“ஒரு வேலையா அங்க போறோம், முடிஞ்சதும் வந்திடுவோம்… காலையில போனா மதியம் வீட்டில இருப்போம் அவ்வளவு தானே”

 

“அதுவரை அவளால தனியா இருக்க முடியாது அப்படின்னு நீ நினைச்சா அப்பாவை வீட்டில இருக்க சொல்லுவோம்”

 

“மாமாவுக்கு வேலை இருக்குமே!!”

 

“இந்த தெருவுல தான் எங்க ஒண்ணுவிட்ட சித்தி வீடு இருக்கு. அவங்களை கூட்டிட்டு வந்து இருக்க சொல்லுறேன் போதுமா” என்றான்.

 

இன்னமும் செவ்வந்தி யோசிப்பதை பார்த்தவன் ‘எதுக்கு இவ்வளவு யோசிக்கறா!!’ என்று நினைத்தான்.

 

“இங்க பாரு இதுக்கு மேல எல்லாம் உனக்கு விளக்கம் கொடுக்க முடியாது. பேசாம போய் படு, காலையில நீ என்கூட வர்றே” என்றான்.

 

“என்னை கட்டாயப்படுத்த மாட்டேன்னு சொன்னீங்க”

 

“கஷ்டப்படுத்த மாட்டேன்னு சொன்னேன்”

 

“இப்போ வரச்சொல்லி சொல்றது என்னை கஷ்டப்படுத்துற மாதிரி தானே!!”

 

“அப்படியே இருந்தாலும் அது எந்த விஷயத்துக்கு அப்படிங்கறதை பொறுத்து. விட்டு கொடுக்க வேண்டிய இடத்துல விட்டுக்கொடுக்கணும்”

 

“தேவையில்லாம பேசி எனக்கு கோபத்தை வரவைக்காத, நாளைக்கு நீ வர்றே” என்றவன் மேலே எதுவும் பேசவில்லை.

 

செவ்வந்தி எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். மறுநாள் சொன்னது போல மனைவியை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி சென்றான்.

 

கிளம்பும் முன் தாமரையின் முகம் கருத்திருந்தது. வீரா தான் அவளிடம் வெளியே போவது பற்றி சொன்னான்.

 

அவன் முன்பு ஒன்றும் சொல்லாதவள் செவ்வந்தி தனியே வந்து அவளிடம் சொல்லி செல்ல அப்போது முகத்தை காட்டினாள்.

 

“ஜாலியா ஊர் சுத்த கிளம்பிட்டீங்க போல!!” என்றாள் நக்கல் குரலில்.

 

சட்டென்று ஒன்றும் புரியாமல் அவளை திரும்பி பார்க்க “போங்க போங்க உங்க புருஷன் காத்திட்டு இருப்பார். ரொம்ப எல்லாம் சீன் போடாதீங்க உங்களுக்கு போகவே இஷ்டமில்லாத மாதிரி” என்று சொல்லவும் செவ்வந்திக்கு சுள்ளென்று கோபம் வந்தது.

 

“நான் எதுக்கு சீன் போடணும். என் புருஷன் கூப்பிடுறார் நான் வெளிய போறேன், இதுல ஒண்ணும் தப்பில்லையே!!”

 

“ரவி அண்ணா வந்தா நான் என்ன இந்த ரூம்லவே இருந்து உங்களை தொல்லை பண்ணுறனா என்ன!! உங்களுக்குன்னா மட்டும் பிரைவசி வேணும் எங்களுன்னா மட்டும் கூடாதா!!” என்று தாமரையை நறுக்கென்று கேட்டுவிட்டே கிளம்பினாள் அவள்.

 

இரண்டு நாட்கள் சென்றதே தெரியவில்லை. இதோ வீரா இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவான். செவ்வந்திக்கு கண்ணை கரித்தது.

 

எப்போதும் போல் அதை மறைத்து சுற்றி வந்துக் கொண்டிருந்தாள். “வந்தி கொஞ்சம் வா உன்கூட பேசணும்” என்று அவளை அழைத்தான்.

 

அவன் முன்னே செல்லவும் செவ்வந்தி ஏதோ வேலையாய் இருந்தவள் அதை முடித்துவிட்டு பின்னே செல்ல சோபாவில் அமர்ந்திருந்த தாமரை சும்மாயில்லாமல் “எப்பவும் போல எதையாச்சும் மறந்து வைச்சிருப்பாரு”

 

“அதைபத்தி கொஞ்சம் பேச கொஞ்சி பேச தான் கூப்பிடுறாரு போங்க போங்க” என்று கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தாள்.

 

செவ்வந்தி இருந்த மனநிலையில் அவளுக்கு நின்று பதில் கொடுக்க தோன்றவில்லை.

 

தாமரையை கண்டுகொள்ளாமல் அவள் பின்னே சென்றாள். படியேறி மாடிக்கு செல்ல வீரா அவன் உடைமைகளை அடுக்கி முடித்திருந்தான்.

 

செவ்வந்தி வரும் அரவம் கேட்கவும் திரும்பி பார்த்தான். “என்ன வந்தி இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சுட்டு இருக்க??” என்று கேட்டது தான் தாமதம் அவளால் அடக்க முடியவில்லை அவன் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

 

அவளை சமாதானப்படுத்த முடியவில்லை அவனால். “இனிமே இப்படி இரண்டு நாள் மூணு நாள் லீவுக்கு எல்லாம் நீங்க இங்க வராதீங்க!! எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு, என்னால முடியல” என்றாள் அழுதுக்கொண்டே!!

 

“ஏன் வந்தி?? உன்னை பார்க்க வர வேணாம்ன்னு சொல்ற??”

 

“நான் அப்படி சொல்லலை ரெண்டு நாள் மூணு நாள்ன்னு வந்து போகாதீங்க. நெறைய நாள் இருக்க மாதிரி வாங்க”

 

“ஏன் நான் வந்தது உனக்கு சந்தோசமா இல்லையா!!”

 

“வந்தப்போ சந்தோசமா இருந்துச்சு, ரெண்டு நாள்ல கிளம்புறப்போ கஷ்டமா இருக்கு” என்றவளின் அழுகை குறைந்திருந்தது.

 

கண்களை துடைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். “என்னையும் கூடவே கூட்டிட்டு போங்க” என்றாள் சற்றும் யோசிக்காமல்.

 

அவனுக்கு புரிந்தது எதையும் யோசியாமல் மனதில் தோன்றியதை தான் பேசுகிறாள் என்று. யோசித்தால் இப்படி பேசுவாளா என்ன!!

 

“ஹ்ம்ம் சரி கிளம்பு போகலாம்” என்றான்

 

“ஹான் அப்போ மாமா, அண்ணி, வர்ஷு??” என்றாள்.

 

“அவங்களைவிட்டு வா!!”

 

“அதெப்படி முடியும்”

 

“அப்போ நான் என்ன செய்ய சொல்லு!! உன்னை பார்க்க தான் ஆசையா வந்தேன் நீ இப்படி சொல்லுற!! இனி லாங் லீவ் எடுத்திட்டு தான் வருவேன் போதுமா!! ஒரு வருஷம் ஆகும் இனி நான் இங்க வர்றதுக்கு” என்றான்.

 

அவன் அதை சொல்லாமலே இருந்திருக்கலாம் போலும், அவள் முகம் இன்னமும் வாடிப்போனது.

 

‘அச்சோ வீரா சொதப்புறியே!!’ என்று தன்னையே நொந்துக் கொண்டான்.

 

“வந்தி ப்ளீஸ்ம்மா நீ இப்படி இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு!! சந்தோசமா என்னை வழியனுப்பி வை!! இப்படி இருந்தா நான் எப்படி கிளம்புறது”

 

“உன்னை போல தானே எனக்கும் மனசுக்கு கஷ்டமா இருக்கும்… என்னைப் பார்த்தா உனக்கு பாவமா தெரியலியா!!” என்றதும் தான் கொஞ்சம் இறங்கினாள் அவள்.

 

“நான் பேசிட்டே இருந்ததுல உங்களுக்கு ஹெல்ப் பண்ணவேயில்லை!! எல்லாம் பேக் பண்ணிட்டீங்களா!!” என்றாள்.

 

“ஹ்ம்ம் அப்போவே பண்ணிட்டேன். உனக்கு என்கிட்ட ஏதாச்சும் சொல்லணுமா??”

 

“ஏன்?? ஏன் அப்படி கேட்கறீங்க??”

“எதையோ நீ சொல்லாம உனக்குள்ளவே வைச்சிருக்க போல தோணுது!!” என்றான்.

 

“அப்படி எல்லாம் எதுவுமில்லை”

 

“ஹ்ம்ம் அப்போ சரி!! ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு, உடம்பு பழைய மாதிரி ஆகணும். வாங்கி கொடுத்த பாதாம், பிஸ்தா எல்லாம் சாப்பிடு”

 

“இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தான் ஓரவஞ்சனை உங்க தங்கச்சியை விட்டு என்னை கவனிக்கறீங்க” என்றாள்.

 

“அவளை தான் நீ பார்த்துக்கறியே!! அவளை மட்டுமில்ல எங்க எல்லாரையும் நீ தானே பார்த்துக்கற!! எங்களை எல்லாம் நல்லா பார்த்துகிட்ட எங்க அம்மாவை சரியா கவனிச்சுக்கலையோன்னு மனசுக்குள்ள எப்பவும் ஒரு கவலை எனக்குண்டு”

 

“இந்த வீட்டை அவங்களுக்கு அப்புறம் பார்த்து பார்த்து கவனிக்கிற உன்னை வேற யார் பார்த்துக்குவா!! நான் தானே பார்க்கணும். நான் கிளம்பிட்டா யார் பார்த்துப்பா!!”

 

“அம்மா இருந்திருந்தா நான் கவலையே பட்டிருக்க மாட்டேன். அப்பாவை எதுவும் சொல்ல முடியாது, அவர் வெளி வேலையா போற மனுஷன்”

 

“தாமரை பேச்சு முன்ன போல இல்லை. அவ உன்னை கவனிப்பான்னு எனக்கு தோணலை. அப்புறம் அப்பாகிட்ட சொல்லி துணி எல்லாம் துவைக்க ஒரு ஆளு போட சொல்லி இருக்கேன்”

 

“பாத்திரம் விளக்கி வைக்கவும் துணி துவைக்கவும் ஒரு ஆள் சீக்கிரம் வந்திடுவாங்க. ரொம்ப வேலை இழுத்து போட்டுக்காதே” என்று அவளுக்கு சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

அவன் ஊருக்கு சென்ற பின்னே இன்னும் அதிகமாக செவ்வந்தியை பேச ஆரம்பித்தாள் தாமரை.

 

இருக்காதா பின்னே வீரா தங்கையை விட்டு அவன் மனைவி இளைத்துவிட்டாள் என்று அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்ததை பார்த்தவளுக்கு கனல் கூடித்தான் போனது தாமரைக்கு.

 

‘தன்னைவிட நேற்று வந்தவள் பெரிதாய் போய்விட்டாளா என்று. கல்யாணமே வேண்டாம் என்று சொன்னதென்ன இப்போது இருவரும் நடந்து கொள்வதென்ன’ என்ற ஆத்திரம் அவளுக்கு.

 

அவள் ஆத்திரம் எல்லாம் ஒரு நாள் வெடித்தது சக்திவேல் மீண்டும் மருமகளுக்காய் பேச ஆரம்பித்த போது.

 

வேலைக்கு ஆட்கள் போட்டதும் பேச்சு இன்னமும் கூடிப் போனது. வீரா ஊருக்கு சென்று தன்னைப் போல ஒரு மாதம் ஓடிப்போயிருந்தது.

 

சக்திவேல் ரஞ்சிதத்தின் நினைவில் இருந்து தப்பிக்க வேலையில் தன்னை ஆழ்த்திக்கொள்ள அவருக்கு வீட்டில் நடப்பது அதிகம் தெரியவில்லை.

 

தாமரை ஏதோ புரியாமல் பேசுகிறாள் என்று தான் இது நாள் வரை அவர் நினைத்திருந்தார். ஆனால் ஒரு நாள் மதிய நேரம் அவரை தேடி வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண் வந்தாள்.

 

“என்னம்மா இந்த நேரத்துல இங்க வந்திருக்க” என்றார்.

 

“அய்யா அந்தம்மா ரொம்ப பேசுறாங்க. சும்மா சும்மா அது சரியில்லை இது சரியில்லைன்னு ஒரு குத்தம் குறையா பேசிட்டு இருக்காங்க” என்றாள் யார் என்று தெளிவாய் சொல்லாமல்.

 

“யாரைம்மா சொல்ற??” என்றவருக்கு செவ்வந்தி பேசியிருக்க மாட்டாள் என்று தெரியும் தாமரை பேசியிருக்கலாம் ஆனால் இவள் சொல்வது போல இருக்காது என்றெண்ணியே கேட்டார்.

 

“தாமரைம்மா தாங்க!! உங்க மருமக எங்களை நல்லா கவனிக்குதுங்க, ரஞ்சிதம்மா எப்படி இருப்பாங்களோ அப்படியே தான் இவுங்க இருக்காங்க”

 

“தாமரைம்மா தான் தொட்டதுக்கும் குத்தம் சொல்றாங்க!! அவங்க பேசுற பேச்சுக்கு என்னால இனிமே இங்க வேலை செய்ய முடியாதுங்க”

 

“உங்க மருமக எப்படித்தான் அவ்வளவு பேச்சும் கேட்டுகிட்டு இருக்கோ தெரியலை!! ஒரு நேரம் அவங்களும் பொறுக்க முடியாம திருப்பித் தான் கொடுக்கறாங்க”

 

“ஆனாலும் இவுங்க ஏதாச்சும் பேசி அவங்களை ஒருவழியாக்குறாங்க. நாளையில இருந்து நான் வேலைக்கு வரலைங்க!!”

 

“நீங்க தான் என்னை வரச் சொன்னீங்க, அதனால தான் உங்ககிட்ட சொல்றேன். செவ்வந்தியம்மாகிட்ட ஏற்கனவே ரெண்டு மூணு தரம் சொன்னேன்”

 

“அவங்க கொஞ்சம் பொறுத்துக்கோன்னு சொன்னாங்க. என்னால இனிமே எல்லாம் பொறுக்க முடியாதுங்க. எனக்கு இந்த வீடு இல்லன்னா வேற வீடு அவ்வளவு தானே” என்றுவிட்டு அவள் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

 

சக்திவேலுக்கு மகளின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது. வீரா கூட ஊருக்கு செல்லும் முன் தந்தையிடம் சொல்லி தான் சென்றிருந்தான் தாமரையின் பேச்சு சரியில்லை என்று.

 

அப்போது கூட அவர் இந்தளவிற்கு நினைக்கவில்லை. வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து சொல்கிறாள் என்றால் என்ன தான் நடக்கிறது வீட்டில்.

 

தான் இதை இவ்வளவு நாள் கவனிக்காமல் விட்டது பெரும் தவறென்று புரிய அன்று எதையும் அவர் கேட்கவில்லை.

இரண்டு நாட்கள் அமைதியாய் நடப்பதை கவனித்தார். இரவிலும் காதுகளை தீட்டி அவர் கவனித்ததில் மகளின் போக்கு புரிந்தது அவருக்கு. விடிந்ததும் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி உறங்கினார்.

 

ஆனால் விடிந்த அந்த பொழுது நல்ல பொழுதாய் இல்லை. அது செவ்வந்தியின் மனதை அதிகம் காயப்படுத்தும் என்று அறிந்திருந்தால் அவர் மகளை தனியே கூப்பிட்டு பேசியிருப்பார்.

 

காலை உணவுக்கு பின்னே “தாமரை” என்று மகளை அழைத்தார் சக்திவேல். செவ்வந்தி அப்போது சமையலறையில் இருந்தாள்.

 

“என்னப்பா” என்றவாறே வந்து நின்றாள். குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள் அப்போது.

 

“என்ன நடக்குது வீட்டில??” என்றார் ஒரு மாதிரி குரலில்.

 

“என்ன நடக்குதுன்னா?? என்ன கேட்க வர்றீங்க எனக்கு புரியலை!!” என்றாள்.

 

“நீ வீட்டில ஒரு வேலையும் செய்யறதில்லை. செவ்வந்தியே தான் எல்லா வேலையும் செய்யறான்னு தான் வேலைக்கு ஆள் போட்டது”

 

“நீ அவங்களை பேசி விரட்டிவிட்டுட்ட!! என்ன தான் நினைச்சுட்டு இருக்க உன் மனசில” என்று காட்டமாகவே கேட்டார் அவர்.

அவரின் உயர்ந்த குரலில் பதறிப்போய் வெளியில் வந்தாள் செவ்வந்தி.

 

“அவ ஒழுங்கா வேலை செய்யலை… அதை சொன்னது ஒரு குத்தமா அதுக்காக அவ வேலையை விட்டு போனா நான் என்ன பண்ணுவேன்” என்றாள் மிதப்பாகவே.

 

“அப்போ நீயே ஒழுங்கா அந்த வேலையை செய்ய வேண்டியது தானே”

 

“அப்பா நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா!!”

 

“அப்போ செவ்வந்தி மட்டும் ஏன் செய்யணும் அவ என்ன உனக்கு வேலைக்காரியா!! நானும் பார்த்திட்டு தான் இருக்கேன் தாமரை நீ செய்யுறது எதுவும் எனக்கு சரியாப்படலை”

 

“உன்னைவிட சின்னப்பொண்ணு அவளுக்கு இருக்கற பக்குவம் கூட உனக்கு இல்லை. உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலை தாமரை” என்று அவர் மருமகள் சார்பாய் பேச ஆரம்பித்தது தான் தாமதம்

 

தாமரைக்கு எங்கிருந்து தான் அவ்வளவு துவேஷம் வந்ததோ!! மனதில் இத்தனை நாளாய் தேக்கி வைத்திருந்ததை எல்லாம் ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிட்டாள்.

 

“ஓ!! உங்களுக்கு என்னைவிட நேத்து வந்தவ பெரிசா போய்ட்ட இல்லை!! அப்படி என்ன பண்ணிட்டா இவ”

“இல்லை கேக்குறேன் என்ன பண்ணிட்டா இவ!! குடும்ப மானத்தை வாங்கிட்டு எங்கயோ ஓடிப் போக பார்த்தா!! எங்கண்ணன் தலையெழுத்து இந்த வீட்டுக்குள்ள குதிச்சு எங்கண்ணன் கையால தாலி வாங்கிட்டு வந்திட்டா இவ நல்லவளா!!”

 

“தாமரை போதும் நிறுத்து” என்று கர்ஜித்தார் சக்திவேல்.

 

வார்த்தைகள் எல்லைமீறி சென்றுக் கொண்டிருக்கும் விபரீதம் புரிய மகளை அடக்கப் பார்த்தார்.

 

“என்னை எதுக்கு கத்துறீங்க?? என்னை எதுக்கு நீங்க கத்துறீங்க?? இவ நல்லவளா!! கல்யாணம் நிச்சயம் பண்ண பிறகும் ஓடிப் போக பார்த்தவ தானே!!

 

கல்யாணம் வேணாம்ன்னு ஓடிப்போக பார்த்தாளோ!! இல்லை எவன் கூடவோ ஓடிப் போக பார்த்தாளோ!!” என்று நாக்கில் விஷம் தடவியது போல் பேசினாள் அவள்.

 

“எங்கண்ணன் தான் அப்பவும் இவ குடும்ப மானத்தை காப்பாத்தி இவளை கூட்டி போய் அவங்க வீட்டில விட்டு வந்துச்சு” என்றாள் ஆங்காரமாய்.

 

தாமரையின் பேச்சை கேட்டு செவ்வந்தி கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருந்தாள். இந்த கணமே தான் புதைந்து போக மாட்டோமா என்றிருந்தது அவளுக்கு.

 

தான் திருமணமே வேண்டாம் என்று தானே போக இருந்தோம் போனவளை அப்படியே விட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்குமே!! எல்லாம் அவரால் தானே!!

 

தேவையா இந்த அவமானம் என்றவளுக்கு அழுகை வரப் பார்த்தது. எப்போதும் போல் அதை அடக்கி பல்லைக் கடித்து அமைதியாய் இருந்தாள்.

 

“தாமரை நிறுத்தப் போறியா இல்லையா!! ஏன் இவ்வளவு அநாகரிகமா பேசுற!!” என்ற அவர் கத்திய கத்தலில் குழந்தை திடுக்கிட்டு அழ ஆரம்பித்தது.

 

தாமரையோ அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை. செவ்வந்தி தான் ஓடிச்சென்று குழந்தையை தூக்கினாள்.

 

“கல்யாணம் வேணாம் வேணாம்ன்னு சொல்லிட்டு இருந்தவங்க தானே ரெண்டு பேரும். என்னமோ இப்போ ஒண்ணா கொஞ்சி குலவுறாங்க!! நடுவீடுன்னு கூட பார்க்காம கட்டிப்பிடிச்சுட்டு நிக்கறாங்க!!”

 

“அதெல்லாம் அநாகரீகமா தெரியலையா உங்களுக்கு. நான் பேசுறது தான் அநாகரீகமா!!” என்று இன்னும் குரலை உயர்த்தினாள் அவள்.

 

தாமரை பேசிய பேச்சில் மாமானாரின் முன்னால் கூனிக்குறுகி நின்றிருந்தாள் செவ்வந்தி. கணவன் மனைவி அன்னியோன்யம் சபையில் பேசப்படுவதில்லை.

ஆனால் அங்கு தாமரை அதை அரங்கேற்றம் செய்துக் கொண்டிருந்தாள். செவ்வந்திக்கு இந்த நிமிடமே செத்து விட மாட்டோமா என்றிருந்தது.

 

சக்திவேல் மருமகளை திரும்பி பார்த்தார். சற்றும் யோசிக்கவில்லை அவர், மேலும் மேலும் பேசிக்கொண்டிருந்த மகளை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.

 

“வாயை மூடு!! இதுக்கு மேல நீ பேசினே நான் கொலைக்காரன் ஆகிடுவேன்” என்றவர் அங்கிருந்த காலண்டரை எடுத்தார். எதையோ பார்த்தவர் பின் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்.

 

“நாளைக்கு நல்ல நாளா இருக்கு!! அஞ்சாம் மாசம் பிறந்திடுச்சே தாமரையை அழைச்சுட்டு போங்க” என்று மேலும் ஏதோ பேசிவிட்டு போனை வைத்தார்….

 

Advertisement