Advertisement

அத்தியாயம் – 18

 

ஆயிற்று இன்றோடு ஐந்து நாட்கள் ஓடிவிட்டது செவ்வந்தி தாமரையிடம் பேசி.

 

அன்று தாமரை சிதறவிட்ட வார்த்தைகளின் வலி இன்னமும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாய் தானிருந்தது.

 

அன்றைய நாள் மீண்டும் நினைவிற்கு வந்து போனது. தாமரை பேசியதும் பதிலுக்கு தான் பேசியதும் நினைவிற்கு வந்தது.

 

“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்று தாமரை சொல்லவும் செவ்வந்திக்கு முகம் கோபத்தில் சிவந்து போனது.

 

“அப்போ நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்ன்னு நீங்களே சொல்லுங்க எனக்கு விளங்கலை” என்றாள் தாமரையை பார்த்து.

 

தாமரைக்கு செவ்வந்தியின் இந்த கோபம் புதிது. இதுவரை அவளிடத்தில் செவ்வந்தி இப்படி பேசியதில்லையே!!

 

அவள் என்னவென்று சொல்லி அவளுக்கு விளக்குவாள். பதிலேதும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தாள்.

 

“பதில் சொல்ல முடியலைல அப்போ நீங்க சொன்னதுக்கு அர்த்தம் எனக்கும் ஒரு இழப்பு வரணும்ன்னு தானே!!”

 

“இல்லை… நிஜமாவே நான் அப்படி அர்த்தத்தில சொல்லலை” என்றாள் தாமரை மறுத்து. அவளுக்கே அவள் பேசிய வார்த்தை தவறென்று பட்டது.

 

“இதுக்கு மேல பேச ஒண்ணுமில்லை. ஆனா ஒண்ணு மட்டும் தெரியணும் எனக்கு!! உங்களுக்கு ஏன் என்னை பிடிக்கலை!!”

 

“ஏதோவொரு வெறுப்பு உங்களுக்கு இருக்கு என் மேல!! அதுக்கு என்ன காரணம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா!! அந்த வெறுப்பு காரணமா தான் நீங்க என்னை தொட்டதுக்கும் குற்றம் சொல்றீங்க!!” என்று பட்டென்று முகத்திற்கு நேரேவே கேட்டுவிட்டாள் அவள்.

 

தாமரை என்னவென்று சொல்லுவாள், அவளுக்கு செவ்வந்தியின் மீது தான் எந்த கோபமும் இருக்கவில்லையே!!

 

ஏதோவொரு இயலாமை தன்னை பேச வைக்கிறது என்று புரிந்தது அவளுக்கு. அதை செவ்வந்திக்கு எப்படி விளக்க என்று தெரியவில்லை அவளுக்கு.

 

மனதில் தோன்றிய குழப்பத்தை இப்போதாவது அவள் செவ்வந்தியிடம் பகிர்ந்திருக்கலாம்!! சொல்லியிருந்தால் மனம் லேசாகி முன்பு போல் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பாளோ!! என்னவோ!!

ஆனாலும் எதையும் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தாள் அவள். தன்னை விட சின்னப்பெண் இவளிடம் என்ன பேச என்ற ஈகோவும் கூட அவளுக்கு எட்டிப்பார்த்திருந்தது.

 

“பதிலே பேசாம இருந்தா நான் என்னன்னு எடுத்துக்கறது” என்றாள் செவ்வந்தி.

 

“நான் அந்த அர்த்ததுல சொல்லலை அவ்வளவு தான். இதுக்கு மேல நான் சொல்ல எதுவுமில்லை” என்று வீம்பாகவே முடித்தாள் தாமரை.

 

செவ்வந்தியும் பதிலேதும் பேசவில்லை. இருவரும் பேசிக்கொள்ளாமலே ஐந்து நாட்களும் ஓடியிருந்தது.

 

செவ்வந்தி தாமரைக்கு எல்லா வேலையும் செய்வாள், ஆனால் எதுவும் பேச மாட்டாள். செவ்வந்திக்கே அப்படி இருப்பது வெறுப்பாக இருந்தது.

 

வீட்டில் இருப்பது மொத்தமே நான்கு பேர். அதில் ஒன்று குழந்தை, சக்திவேலோ வேலை என்று வெளியில் சென்றுவிடுவார்.

 

வீட்டில் இருக்கும் இருவரும் ஆளுக்கொரு பக்கம் முகத்தை தூக்கி வைத்திருப்பது எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

 

செவ்வந்தியால் பேசாமல் மட்டுமே இருக்கவே முடியாது. இத்தனை நாட்கள் இருந்ததே அதிகம் என்று தான் தோன்றியது அவளுக்கு.

உண்மையிலேயே தாமரை அதை தெரியாமல் தான் கூறியிருப்பாள் நாம் தான் தேவையில்லாமல் அதை பெரிது படுத்திவிட்டோம்.

 

இதை இத்துடன் விட்டுவிடலாமே என்று தான் அவள் மனம் யோசித்தது. அதனாலேயே அவள் ஒன்றிரண்டு வார்த்தைகள் தாமரையுடன் பேசவாரம்பித்து நன்றாகவும் பேசினாள்.

 

குழந்தைக்கு ஸ்ரீவர்ஷினி என்று பெயரிட்டிருந்தனர் தாமரையின் வீட்டினர். நாட்கள் இப்படியே கடந்தது.

 

தாமரையும் செவ்வந்தியும் தனியே இருக்கும் போது தாமரை மற்றவளிடத்தில் வெகு இயல்பாகவே நடந்து கொண்டாள்.

 

அவள் மாமியாரோ அல்லது வீட்டிற்கு வேறு யாரும் வந்தாலோ அவள் செவ்வந்தியிடம் நடந்து கொள்ளும் முறையே வேறாக இருந்தது.

 

அவ்வப்போது சிடுசிடுப்பதும் எடுத்தெறிந்து பேசுவதுமாக இருந்தாள். அவள் ஏன் இப்படி மாறுபட்ட உணர்வுகளை காட்டுகிறாள் என்று நிச்சயமாக செவ்வந்திக்கு புரியவேயில்லை.

 

குழந்தைக்கு மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. குழந்தை அழகாய் குப்புற விழுந்து தலையை தூக்கி பார்க்க ஆரம்பித்திருந்தது.

 

ஆட்களை அடையாளம் கண்டு சிரிக்க ஆரம்பித்தது. வீரா கிளம்பி சென்று ஒரு பத்து நாட்கள் மட்டுமே அவளிடத்தில் பேசியிருந்தான்.

 

ஆயிற்று இத்தோடு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அவனிடத்தில் அவள் சரியாய் பேசி. எப்போதாவது போன் செய்வான் அதிலும் டவர் சரியாய் கிடைக்காது. ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேச வைத்துவிடுவர்.

 

செவ்வந்திக்கு வீராவை எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது. ஒருவேளை தினமும் பேசியிருந்தால் அப்படி தோன்றியிருக்காதோ!! என்னவோ!!

 

அவனிடம் சரியாய் பேசாததாலேயே அவனை அதிகம் நினைத்துக் கொண்டிருந்தாள். தாமரை சுருக்கென்று பேசும் சமயங்களில் மனதிற்கு கஷ்டமாயிருக்கும் அவளுக்கு.

 

சரி தான் போடி என்று கேட்டுவிடலாம் போல தோன்றினாலும் ஏதோவொரு தயக்கம் அவளை கேட்க விடாமல் செய்தது.

 

அதுவுமில்லாமல் இன்னும் இரண்டு மாதங்கள் தானே அவர்கள் வீட்டிற்கு போய்விட போகிறார்கள் என்று தன்னையே தேற்றிக் கொள்வாள் அல்லது மனோரஞ்சித செடியின் அருகில் சென்று நின்றுக் கொள்ளுவாள்.

 

அங்கு ஓரிரு நிமிடம் நின்றாலும் கூட அவளுக்கு மனம் சமனப்படும் எப்போதும். ஒரு முறை சக்திவேலே தாமரையை கேட்டுவிட்டார் அவளின் வித்தியாசமான செய்கையை கண்டு. அதுவும் அவர் செவ்வந்தியின் முன்னிலையில் கேட்டது அவளுக்கு அவமானமாகிப் போனது.

 

“தாமரை நானும் பார்த்திட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு படுத்தது படுத்தபடியே இருக்க, அங்க இங்க எழுந்து நடமாடு”

 

“செவ்வந்தி ஒத்தையில கஷ்டப்பட்டு கிடக்கா… நீயும் கூடமாட ஒத்தாசை பண்ணலாம்ல!!”

 

“ஏன்பா என்னைய நல்லா பார்த்துக்குவேன்னு சொல்லிட்டு என்னைய வேலை பார்க்க சொல்றீங்களா”

 

“அம்மா இருந்திருந்தா இப்படி தான் என்னை சொல்லியிருப்பாங்களா!! நான் பாட்டுக்கு என் மாமியார் வீட்டுக்கு போயிருப்பேன் நீங்க எல்லாரும் தானே என்னை இங்க இருக்க வைச்சீங்க!!”

 

“இப்போ வந்து இப்படி பேசறீங்க… உங்க மருமக இப்படி சொல்லச் சொல்லி உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாளா!!” என்று தந்தையை எதிர்த்து கேட்டாள்.

 

சக்திவேலுக்கு கோபம் வந்தது. செவ்வந்தியும் அங்குதானிருந்தாள், அவளுக்குமே தாமரையின் பேச்சை கேட்டு சரியான கோபம் வந்தது.

 

மாமனார் பேசிக் கொண்டிருக்கும் போது இடைபுகுந்து பேசுவது சரியில்லை என்று தோன்ற பல்லைக் கடித்து அமைதியாயிருந்தாள்.

“என்ன தாமரை பேச்செல்லாம் ஒரு மாதிரியா போகுது. அப்பாவை எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டீங்க போல!!” என்றார் அவர் ஒரு மாதிரியான குரலில்.

 

தந்தையின் குரல் கலவரத்தை கொடுத்தாலும் தாமரை சலிக்காமல் அவரிடம் பேசினாள். “உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தா என்னை எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க”

 

“எனக்குன்னு யாருமில்லையே இனி இந்த வீட்டில” என்று கண்ணீர் வடிக்கவும் செவ்வந்திக்கு ஒரு மாதிரியாகி போனது.

 

மாமனாரிடம் கண்ஜாடை காட்டினாள் மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம் என்று. தனியே அவரிடம் தன் முன் தாமரையை கண்டிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.

 

எதுவாய் இருந்தாலும் தனியே கூப்பிட்டு பேசுமாறு சொல்ல சக்திவேலுக்கு மருமகளின் பக்குவம் குறித்து பெருமையும் ஆச்சரியமும்.

 

‘ரஞ்சிதம் நீ உன்னை மாதிரியே ஒரு பொண்ணை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்த திருப்தியில தான் எங்களை விட்டு நீ போயிட்டியா!!’ என்று மனதார மனைவியிடம் பேசிக் கொண்டார்.

 

அதிக வேலைகள் செய்து பழக்கமில்லாத செவ்வந்தி சற்றே மெலிந்து போனாள். கூடவே இருப்பவர்களுக்கு அந்த மெலிவு தெரியாமல் போனது.

தாய்க்கு தெரியாமல் போகுமா என்ன?? சிவகாமிக்கு மகளை குறித்து பெருங்கவலை, மதுராம்பாளிடம் சொல்லி வருத்தப்படுவாள்.

 

மகளிடம் கேட்டால் தான் தாயின் வாயை பேசியே அடைத்து விடுவாளே!! மதுராம்பாளுக்கு தெரிந்தாலும் அவர் அதை குறித்து ஏதும் பேசவில்லை.

 

பேத்தி வாயை திறக்காமல் தான் இதில் செய்ய ஒன்றுமில்லை என்பது ஒரு புறமும், வாழ்க்கை பாடத்தை பேத்தி படிக்க ஆரம்பித்திருக்கிறாள் என்ற காரணமுமாக அவர் எதுவும் சொன்னாரில்லை.

 

தாமரைக்கும் செவ்வந்திக்கும் அவ்வப்போது லேசாய் உரசல்கள் வந்தாலும் செவ்வந்தி பெரிது படுத்தாமல் செல்வதால் அது புஸ்வானமாகவே போனது.

 

விரைவில் அது வெடிக்கப் போகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.

 

தாமரையின் கணவன் வாரம் இருமுறை மனைவியையும் குழந்தையும் பார்க்க வீட்டிற்கு வந்துவிடுவான்.

 

ஒரு நேரம் அவன் வந்ததும் கவனிக்கவில்லை என்று செவ்வந்தியிடம் காய்பவள் மறுநேரம் இருவருக்கும் தனிமை கொடுக்காமல் அவ்வப்போது வந்து செல்கிறாள் என்று அதற்கும் காய்ந்து எடுப்பாள்.

 

செவ்வந்திக்கு மனம் ஒரு மரத்து போன நிலைக்கு போய்க் கொண்டிருந்தது. அது மதிய நேரமென்பதால் தாமரையும் குழந்தையும் உறங்கியிருந்தனர்.

 

செவ்வந்தி மெதுவாய் பின்பக்கம் வந்தவள் வழமை போல் மனோரஞ்சிதத்தின் முன்னால் சென்று நின்றாள். மெதுவாய் அதை தடவிக் கொடுத்து அதன் மேல் சாய்ந்து கொண்டாள்.

 

‘எதுக்கு இதெல்லாம்?? ஏன் இப்படி நடக்குது?? நல்லது தானே செய்யறோம், தப்பா எதுவும் செய்யறோமா!!’ என்ற வினாக்கள் எழுந்தது அவளுக்குள்.

 

என்றுமில்லா சலனம் அன்று மனம் அமைதியடைய மறுத்தது. கைபேசி ஒலிக்க அதில் தெரிந்த எண்ணை கண்டதும் சலனம் அகன்றது போல் இருந்தது.

 

“ஹலோ” என்றவளுக்கு மறுமொழி கொடுத்தவனின் குரல் கேட்டு அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது.

 

அழைத்தது வீராவே தான், கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிப்போனது அவள் குரல் கேட்டு. “எப்படியிருக்கீங்க??” என்றவளின் குரல் லேசாய் உடைந்திருந்ததுவோ!!

 

“ஹம்ம் நல்லாயிருக்கேன் வந்தி!! நீ எப்படி இருக்க??”

 

“ஹ்ம்ம் இருக்கேன்” என்று சலிப்பான குரலில் சொன்னாள்.

 

“என்னாச்சும்மா” என்றான்.

 

“ஒண்ணுமில்லையே, ஏன் அப்படி கேட்கறீங்க??”

 

“உன் வாய்ஸ் ஒரு மாதிரியா இருந்துச்சு அதான்”

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீங்க சொல்லுங்க”

 

“நீ எங்க இருக்க??”

 

“எங்க இருப்பேன் கண்டுபிடிங்க”

 

“அம்மா செடிகிட்டயா??”

 

“ஹ்ம்ம்”

 

“எப்பவும் அங்கவே தான் இருக்க!!”

 

“சும்மா தான் வந்தேன், இங்க வந்தா மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்குது அதான்!!”

 

“நீ உங்கத்தைய பார்க்குற, அத்தை பெத்த பொண்ணையும் பார்த்துக்கற, ஏன் அவங்க பேத்தியை கூட நல்லா பார்த்துக்கற” என்றவன் நிறுத்தினான்.

 

“ஹ்ம்ம் சொல்லுங்க என்ன சொல்ல வந்தீங்க” என்றாள்.

 

“உங்க அத்தை பெத்த பிள்ளையை மட்டும் தான் நீ சரியாவே கவனிக்கறதில்லையாம்!!” என்றான்.

“சரி வாங்க இந்த முறை நீங்க வரும்போது நல்லா கவனிச்சிறலாம் சரியா!! தலைவாழை இலை போட்டு உங்களுக்கு விருந்து தான்”

 

“உங்களுக்கு பிடிச்ச எல்லாம் அயிட்டமும் செஞ்சு வரிசையா அடுக்கிடுறேன் போதுமா!!” என்றாள்.

 

“யாருக்கு வேணும் அந்த விருந்து, எனக்கு நீயே விருந்தா வேணும்!!” என்று சொல்லவும் அவள் முகம் சிவந்து நின்றாள்.

 

“என்… என்ன சொல்றீங்க!!”

 

“உன் காதுல விழுந்தது சரியா தான் விழுந்துச்சு… அடுத்து நான் அங்க வந்தா நீ தான் எனக்கு விருந்து… அதுக்கு எஸ் ஆர் நோ மட்டும் சொல்லு”

 

“அச்சோ பட்டப்பகல்ல என்ன பேச்சு இது!! உங்களுக்கு இன்னைக்கு லீவா வேற வேலை எதுவுமில்லையா!! ரியாஸ் அண்ணா உங்க பக்கத்துல இல்லையா!!” என்றாள் தொடர்ந்த கேள்விகளால்.

 

“ஹ்ம்ம் பதில் சொல்ல மாட்டே!! பேச்சை மாத்துற!! இருக்கட்டும் நீ இதுக்கு பதில் சொல்லி தான் ஆகணும்!! நேர்ல பார்க்கும் போது எனக்கு கட்டாயம் சொல்லியே ஆகணும்”

 

“அப்போ என்ன பண்ணுவேன்னு பார்க்கறேன்” என்றான் மர்மான சிரிப்புடன்.

 

“எதுக்கு சிரிக்கறீங்க??”

 

“ஹ்ம்ம் ஒண்ணும்மில்லை” என்றவன் “சரி எனக்கு உன்கிட்ட ஒண்ணு கேட்கணும் அதுக்கு ஒழுங்கா பதில் சொல்லு” என்றான்.

 

“ஹ்ம்ம் கேளுங்க”

 

“நான் இப்போ திடீர்ன்னு உன் முன்னால வந்து நின்னா உன்னோட ரியாக்சன் என்னவா இருக்கும்”

 

“ஏன் அப்படி கேட்கறீங்க??”

 

“அப்போ நீங்க இங்க வரப்போறீங்களா??” என்றாள் ஆர்வமாய்.

 

“நான் கேள்வி கேட்டேன் நீ பதில் சொல்லு”

 

“என்ன கேள்வி??”

 

“அடி வாங்க போறே நீ… ஒழுங்கா பதில் சொல்லு என்னை திடுதிப்புன்னு பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவ??”

 

ஒரு நிமிடம் யோசித்தவள் “தெரியலையே” என்றாள் பதிலாய்.

 

“அடிப்பாவி இப்படி சிம்பிளா பதில் சொல்லிட்ட!! நிஜமாவே உனக்கு ஒண்ணும் தோணலையா!!”

 

“ஒரு கட்டி புடிக்கிறது, முத்தம் கொடுக்கிறது, ஆனந்த கண்ணீர் விடுறது இப்படி எதாச்சும் ஒண்ணை சொல்லேன்” என்றான்.

 

“உங்க ஆசையை என்கிட்ட கேட்கறீங்களா நீங்க!!”

 

“அப்படி ஆசைப்பட்டா தான் என்ன தப்பு?? என்..” என்று அவன் ஆரம்பிக்க “என் பொண்டாட்டிகிட்ட தானே கேட்கறேன் வேற யாருக்கிட்ட போய் நான் கேட்க, இதானே உங்க வழக்கமான டயலாக்” என்று இடைபுகுந்து சொன்னாள் அவள்.

 

“போடி” என்றான்.

 

“போடி சொல்றீங்க?? அப்புறம் நான் போடா சொல்லுவேன்”

 

“நீ ஆல்ரெடி சொல்லியாச்சும்மா, புதுசா சொல்ல என்ன இருக்கு”

 

அவள் அவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே வாயிலில் வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

 

“என்னங்க ஒரு நிமிஷம் லைன்ல இருங்க, யாரோ வீட்டுக்கு வர்ற மாதிரி இருக்கு. நான் போய் பார்க்கறேன்” என்றாள்.

 

“ஏன் தாமரை அங்க தானே இருக்கா?? அவ போய் பார்க்கட்டும். நானே எவ்வளோ நாள் கழிச்சு போன் பண்ணியிருக்கேன்”

“என்னைவிட அது முக்கியமா உனக்கு”

 

“அண்ணி பாவம் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்காங்க… நான் போய் பார்க்கறேனே!!”

 

“முதல்ல அது நம்ம வீட்டுக்கு வந்த வண்டி சத்தம் தானா?? இல்லை தெருவில கார் போற சத்தம் கேட்டுச்சா!!”

 

“சத்தம் கேட்டுச்சு, நம்ம வீட்டு பக்கம்” என்று இழுத்தாள் அவள்.

 

“அப்போ பேசாம இரு!!”

 

“யாராச்சும் வர்றதா இருந்தா பெல் அடிக்க போறாங்க அப்புறம் என்ன??” என்றான் அவன் சாவதானமாக.

 

“ஹ்ம்ம் சரி” என்று முணுமுணுத்தாள்.

 

வாசலில் காரில் வந்திறங்கியது வீரபாண்டியனே. மூன்று மாதமாக மனைவியிடத்தில் சரியாக பேசியிராததால் கிடைத்த மூன்று நாட்கள் விடுமுறையில் பிளைட் பிடித்து வந்துவிட்டான்.

 

செவ்வந்திக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணியே முதல் நாள் அவளிடம் ஓரிரு வார்த்தை பேச சந்தர்ப்பம் கிடைத்தும் பேசாதவன் கிளம்பி வந்திருந்தான்.

 

வண்டியில் இருந்து இறங்கியவன் பூனை நடைப்போட்டு வீட்டின் பக்கவாட்டு வழியாக மெதுவாக நடந்து வந்தான்.

 

செவ்வந்தியோ அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்ததால் அவனை பார்க்கவில்லை அவள்.

 

“வந்தி இப்போ நான் உன் முன்னாடி வந்து நிக்கறேன்னு நினைச்சுக்கோ என்ன செய்வ” என்று மீண்டும் ஆரம்பித்தான்.

 

“அதென்ன நினைச்சுக்கறது நீங்க வரும் போது பார்க்கலாம். நான் தான் அப்போவே சொன்னேன்ல என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாதுன்னு”

 

“சரி திரும்பி பாரு நானே தெரிஞ்சுக்கறேன்” என்று அவள் காதுக்கருகில் வந்து சொல்ல துள்ளி குதித்து திரும்பினாள் அவள்.

 

சத்தியமாக அவனை அவள் அந்த நேரத்தில் எதிர்ப்பார்க்கவேயில்லை. அதிர்ச்சி இருந்தாலும் அவனை பார்த்ததில் அவ்வளவு சந்தோசம் அவளுக்கு.

 

அதை சொல்லத் தெரியாமல் அருகில் நின்றிருந்தவனின் மீதே சாய்ந்து கொண்டாள்.

 

வீரா முதுகில் மாட்டியிருந்த பையை மெதுவாய் இறக்கி வைக்க அவனை இறுக்க கட்டிக்கொண்டாள். அவனை குறித்த அவளின் தேடலை அவன் சட்டையின் ஈரத்தில் உணர்ந்து கொண்டான் அவன்.

‘இவ்வளவு தேட வைச்சுட்டோமா இவளை!! ச்சே!!’ என்று தன் மீதே அவனுக்கு லேசாய் ஒரு கோபம் எழுந்தது.

 

அவளின் முதுகை மெதுவாய் வருடிக் கொடுத்தான் ஆறுதலாய். அவளின் மெல்லிய விசும்பல் மெதுவாய் அடங்கும் வரை அப்படியே தானிருந்தனர் இருவரும்.

 

அவள் முகவாயை நிமிர்த்தி “என்ன பண்ணுவேன்னு கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு செஞ்சே காட்டிட்டியேம்மா” என்றான் அவள் கண்களுக்குள் ஊடுருவி.

 

அவள் முகவாயை தாங்கியிருந்தவனின் கையை தட்டிவிட்டு “நான் அழறதை வேடிக்கை பார்க்கணுமா உங்களுக்கு!! அதுக்கு தான் இப்படி செஞ்சீங்களா!!” என்றாள் மூக்கை உறிஞ்சிக்கொண்டே!!

 

“இங்க பாரு உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு தான் முன்னாடியே சொல்லலை. அதுவும் இல்லாம எனக்குமே கடைசி நேரத்துல தான் லீவ்ன்னு தெரியும்”

 

“அதான் கிடைச்சதை விடாம ஓடிவந்திட்டேன். எதுக்காக வந்தேன்னு கேட்க மாட்டியா!!”

 

அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தாள். “ப்ச்!! கேளேன்”

 

“என்னவாம்!!”

 

“உன்னை பார்க்க மட்டும் தான் ஓடி வந்தேன்!!”

“பொய் தானே உங்களுக்கு வர்ஷினி பார்க்கணும்ன்னு தோணியிருக்கும்” என்று வேண்டுமென்றே அவன் சொன்னதை மறுத்து சொன்னாள் அவள்.

 

அவளுக்குமே தெரிந்திருந்தது அவன் அவளுக்காக தான் வந்திருக்கிறான் என்று. இருந்தாலும் அவனை வெறுப்பேற்றி அவன் என்ன சொல்கிறான் என்பதை தெரிந்து கொள்ள ஒரு ஆவல் அவளுக்கு.

 

“வர்ஷினி நம்ம வீட்டு குட்டி தான், அவளை பார்க்கணும்ன்னு எனக்கு ஆவல் இருக்கு தான். ஆனாலும் அவ எப்பவும் நம்ம வீட்டிலேயே இருக்கப் போறதில்லையே”

 

“ஆனா நீ அப்படியில்லையே!! என்னோடவே இருக்கப் போறவ!! உன்னைத் தான் நான் பார்க்க வந்திருக்கேன்னு தெரிஞ்சும் என்னை வெறுப்பேத்தி பார்க்கறே” என்றான் அவள் எண்ணத்தை அறிந்தவன் போல்.

 

ஆச்சரியமாய் அவனை பார்த்திருந்தாள். எப்போ என் மனசு எல்லாம் இவருக்கு புரிய ஆரம்பிச்சுது என்பதான ஆச்சரியப் பார்வை அது.

 

“போதும் கண்ணை பெரிசா டைனோசர் சைஸ்க்கு விரிக்காத!!” என்று அவன் சொல்லவும் செல்லமாய் அவனை முறைத்தாள்.

 

“நீ ஆளு ரொம்ப இளைச்சுட்ட மாதிரி இருக்கே!! சரியா சாப்பிடுறதில்லையா!! எல்லாரையும் கவனிக்கற, உன்னை நீ கவனிச்சுக்க மாட்டியா!!”

 

“என்னை கவனிக்க தான் நீங்க இருக்கீங்களே!!”

 

“நான் இல்லாதப்போ எனக்காக நீ தான் உன்னை கவனிச்சுக்கணும்”

 

“ஹ்ம்ம் போதும் போதும் நான் எப்பவும் போல தான் இருக்கேன். சும்மா சும்மா எல்லாரும் இதே சொல்றீங்க, நான் அதே வெயிட் தான் இருக்கேன் இப்பவும்” என்று அவள் கூற சட்டென்று அவளை இருகைகளாலும் தூக்கினான்.

 

வெயிட் பார்ப்பவன் போல் தூக்கி தூக்கிப் பிடித்து அவன் பார்க்கவும் “அச்சோ என்ன பண்றீங்க என்னை விடுங்க” என்றாள்.

 

“வெயிட் செக் பண்ணுறேன், நீ அஞ்சு கிலோ வெயிட் குறைஞ்சு இருக்கே இப்போ!!”

 

“ஹான் இவரு பார்த்தாரு ஆளை விடுங்க” என்று இறங்க முயற்சி செய்தாள்.

 

“நிஜமா தான் சொல்றேன் வந்தி நீ வெயிட் குறைஞ்சுட்ட, நான் இதுக்கு முன்னாடி உன் வெயிட் பார்த்திருக்கேன். உனக்கு மறந்து போச்சு போல” என்றான்.

 

“அதெல்லாம் இருக்கட்டும் நீங்க இப்போ என்னை இறக்கி விடுங்க, யாராச்சும் பார்க்கக் போறாங்க”

 

“அப்போ யாரும் பார்க்கலைன்னா பரவாயில்லையா!!” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு பின்னால் இருந்த வீட்டிற்குள் நுழைந்தான்.

 

“ஏங்க இப்படி சேட்டை பண்ணுறீங்க!! ப்ளீஸ் ப்ளீஸ் இறக்கிவிடுங்க!!” என்று கெஞ்சவே ஆரம்பித்தாள்.

 

இவர்கள் இங்கு இப்படியிருக்க ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த தாமரை அவர்களின் நிலையை கண்டுவிட்டு முகம் கன்ற உள்ளே சென்றதை அவர்கள் அறியவில்லை.

 

“அண்ணி இப்போ எழுந்திடுவாங்க!! ப்ளீஸ் இறக்கிவிடுங்க… பாப்பா கண்ணு முழிச்சிட்டா என்னை தேடுவா!!” என்று ஏதேதோ சொல்லி அவனிடம் இருந்து தப்பித்து முன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

 

வீராவும் “சரி போ ஆனா நான் போன்ல ஒண்ணு சொன்னேன். அந்த விருந்து மேட்டர் அதுக்கு எனக்கு இன்னைக்குள்ள பதில் தெரிஞ்சாகணும்” என்று சொல்லி அவளை முகம் சிவக்க வைத்து தான் அனுப்பினான்.

 

உள்ளே வந்த செவ்வந்தி தாமரையின் அறையை எட்டிப்பார்க்க நல்லவேளையாக அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்(?).

 

‘அப்பாடா’ என்று பெருமூச்சை வெளியேற்றியவள் அங்கிருந்து நகர்ந்து சென்றாள். சக்திவேலுக்கு போன் செய்து வீரா வந்த விஷயத்தை சொல்ல அவர் உடனே வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டார்.

 

அரைமணி நேரம் கழித்து அப்போது தான் கண்விழிப்பவள் போன்று எழுந்து வந்தாள் தாமரை. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததை செவ்வந்தி உணரவில்லை.

 

வீரா குளித்து முடித்து வரவும் சக்திவேல் வரவும் சரியாக இருந்தது. தந்தையுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க தாமரை அப்போது உள்ளிருந்து வந்தாள்.

 

“எப்போ அண்ணா வந்தே??”

 

“கொஞ்ச நேரம் முன்னாடி தான் தாமரை. நீ எப்படி இருக்க?? ரவி எப்படி இருக்கார்?? வர்ஷு என்ன பண்ணுறா தூங்குறளா!!” என்றான்.

 

“ஹ்ம்ம் தூங்கிட்டு தான் அண்ணா இருக்கா!! அப்போவே வந்திருக்க வந்து என்னை ஒரு எட்டு பார்க்க முடியலையா உனக்கு” என்றாள் ஒரு மாதிரிக் குரலில்.

 

தாமரையின் குரலில் இருந்த வேறுபாட்டை சமையலறையில் இருந்த செவ்வந்தியால் உணர முடிந்தது.

 

‘அப்போ இவங்க அப்போவே நம்மை பார்த்திருக்கணும்’ என்று எண்ணினாள்.

‘என்னாச்சு இவங்களுக்கு?? ஏன் இப்படி வித்தியாசமாய் நடந்துக்கறாங்க!! அவர்கிட்ட சொல்லுவோமா!!” என்றெல்லாம் யோசித்தாள்.

 

‘ச்சே!! அவரே பாவம் நம்மளை எல்லாம் பார்க்க கிடைச்ச ரெண்டு நாள் லீவுல வந்திருக்கார். வந்தவர்கிட்ட போய் இதெல்லாம் சொல்லி அவரை குழப்ப வேணாம்’ என்று நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டாள் அவள்.

 

“என்ன தாமரை உன் பேச்சே ஒரு மாதிரியா இருக்கு??” என்று முகத்தில் அடித்தது போலவே கேட்டுவிட்டான் வீரா.

 

“நானெல்லாம் எப்பவும் போல தான் இருக்கேன். நீ தான் அண்ணா மாறிட்டா!! முன்னெல்லாம் ஊர்ல இருந்து வர முன்னாடி போன் பண்ணிருவ என்னை இங்க வரச்சொல்லி!!”

 

“இப்போ நீ பாட்டுக்கு திடுதிப்புன்னு வந்து நிக்குற… வந்ததும் என்னைய வந்து பார்க்கணும்ன்னு உனக்கு தோணவேயில்லைல!!” என்றதும் சக்திவேல் மகளை அதட்டினார்.

 

“தாமரை என்ன பேச்சு பேசுற!! அண்ணன் இன்னைக்கு தான் ஊர்ல இருந்து வந்திருக்கான். கொஞ்சம் பேசாம இரு” என்றார் கண்டிப்பாய்.

 

“இருக்கட்டும்ப்பா நான் பதில் சொல்லிக்கறேன்” என்று தந்தைக்கு சொன்னவன் தங்கையிடம் திரும்பினான்.

“நீ கூட தான் கல்யாணம் ஆகுற வரை என் கூட அவ்வளவு க்ளோஸா இருந்தே!! இப்பவும் அப்படியே இருக்கியா என்ன!!”

 

“அப்போ நீ என்ன சொல்ல வர்றே?? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு உன் பொண்டாட்டி தான் முக்கியம்ன்னு சொல்றியா!!”

 

‘நான் என்ன சொல்ல வர்றேன் இவ என்ன சொல்றா’ என்று எண்ணியவனுக்கு கோபம் வந்துவிட்டது.

 

“ஆமா அதுக்கென்ன இப்போ!!” என்றான்.

 

தாமரையின் முகம் சட்டென்று கூம்பிவிட்டது. அதை பார்த்ததும் மனம் கேளாதவன் “இங்க பாரு தாமரை நாம அப்போ இருந்தா போலவே எப்பவும் இருக்க முடியாது”

 

“அதை தான் உனக்கு சொல்ல வந்தேன். அதுவுமில்லாம நான் வந்ததுமே வந்தி கிட்ட கேட்டேன், நீயும் பாப்பாவும் தூங்குறீங்கன்னு சொல்லிட்டு இருந்தா”

 

“தூங்குற உன்னை தொந்திரவு பண்ணச் சொல்றியா!! அதனால தான் பேசாம இருந்தேன். இது ஒரு குத்தம்ன்னு நீயேன் மூச்சை பிடிச்சு பேசுற!!”

 

“நான் எப்பவும் உன்னோட அதே அண்ணன் தான் சரியா!! இனி இப்படி எல்லாம் யோசிக்காத!!” என்றவன் அவள் தலைவருடி சொல்ல அமைதியானாள் அவள்.

 

ஆனாலும் செவ்வந்தியின் மீது இப்போது லேசாய் கோபம் எழுந்தது. ‘என்னை விசாரித்த அண்ணனிடம் நான் தூங்குகிறேன் என்று ஏன் சொல்ல வேண்டும்’.

 

‘என்னையும் என் அண்ணனையும் பிரிக்கப் பார்க்கிறார்களா’ என்று தேவையில்லாத வன்மத்தை வளர்த்தாள்.

 

செவ்வந்தியோ ‘இவரு ஏன் என்னை வேற மாட்டிவிடுறாரு!! இந்த அண்ணி சும்மாவே என்னை பார்த்தா காண்டாகுறாங்க!! என்னாகப் போகுதோ!!’ என்று மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டாள்.

 

மாலை மங்கி இரவு வந்திருந்தது. சக்திவேல் சாப்பிட்டு படுக்கச் சென்றுவிட்டார். தாமரைக்கு எப்போதும் நேரமாகவே உணவளித்துவிடுவாள் செவ்வந்தி.

 

அன்றும் தாமரை சாப்பிட்டு உறங்க சென்றுவிட்டாள். ஆனால் உறங்கத்தானில்லை. வெளியில் சென்றிருந்த வீரா அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

நேரே சமையலறை நுழைந்தவன் பின்னிருந்து மனைவியை கட்டிக்கொண்டான்.

 

“இங்க என்ன பண்ணுற??” என்று ரகசியமாய் அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

 

“நீங்க தானா நான் பயந்துட்டேன்” என்றாள்.

 

“என்னைத் தவிர யார் உன்னை இப்படி கட்டிப்பிடிப்பாங்களாம்”

 

“கொஞ்சம் மெதுவா பேசுங்க சத்தம் வெளிய கேட்கப் போகுது”

 

“என் பொண்டாட்டி நான் கொஞ்சுறேன் யார் கேட்பா!!”

 

“ரொம்பவும் அலம்பல் பண்ணுறீங்க நீங்க” என்று அலுத்தாள் அவள்.

 

“சாப்பிடுங்க உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கேன்”

 

“ஹைய்யா ஜாலி” என்று சொன்னவன் “சரி அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்திட்டு பின்னாடி வா”

 

“ஐ யம் வைடிங் பார் யூ” என்றுவிட்டு அவள் கன்னத்தில் இதழ் பதித்து அங்கிருந்து வெளியேறினான்.

 

செவ்வந்தி இருவருக்குமாய் ஹாட்பேக்கில் உணவு எடுத்துக்கொண்டு வெளியில் வர தாமரை அழைக்கும் குரல் கேட்டது.

 

கையிலிருந்ததை ஓரமாய் இருந்த டேபிளின் மீது வைத்தவள் “என்னண்ணி??” என்றவாறே அவள் முன் சென்று நின்றாள்.

 

“குழந்தைக்கு அந்த பேம்பர்ஸ் கொஞ்சம் போட்டு விடுங்களேன்” என்றாள்.

அவளும் பீரோவில் இருந்து எடுத்து வந்து குழந்தைக்கு போட்டுவிட்டு வெளியில் செல்லப் போக “எங்க கிளம்பிட்டீங்க??” என்றாள்.

 

இவள் வேண்டுமென்றே தான் செய்கிறாள் என்று அவளுக்கு புரிந்து போனது. “உங்க அண்ணாக்கு சாப்பாடு எடுத்திட்டு போறேன்” என்றாள் அவள் பதிலுக்கு.

 

“ஏன் எடுத்திட்டு போகணும்!! அண்ணனை இங்க வந்து சாப்பிட சொல்லுங்க” என்றாள்.

 

‘அவர் என் புருஷன் நாங்க என்னவோ பண்ணிட்டு போறோம் உனக்கென்ன வந்தது!!’ என்று கத்த தோன்றிய மனதை அடக்கினாள் அவள்.

 

“உங்க அண்ணா தான் பின்னாடி கொண்டுட்டு வரச்சொன்னார்!! ஏன் அதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனையா!!” என்று பட்டென்று கேட்டாள் அவள்.

 

“எனக்கென்ன பிரச்சனை?? நான் எப்போ அப்படி சொன்னேன். என்ன உங்க புருஷன் வந்ததும் பேச்சு ஒரு மாதிரியா பேசறீங்க!!” என்றாள் தாமரை.

 

“பேசினா ஒண்ணும் தப்பில்லை. என் புருஷன் ரொம்ப நாள் கழிச்சு ஊர்ல இருந்து வந்திருக்கார். நான் அப்படி தான் இருப்பேன். சாப்பிட்டு இங்க வந்திடுவோம். நீங்க எனக்காக கண்ணு முழிக்காம படுத்து தூங்குங்க” என்றுவிட்டு நகரப் போனாள்.

 

“குழந்தை எழுந்திட்டா என்ன பண்ணுறது” என்று கேட்டவளை இழுத்து அறையத் தோன்றியது செவ்வந்திக்கு.

 

‘குழந்தையின் தாய் நீ தான் இங்கிருக்கிறாயே நானெதற்கு’ என்று கேட்கத் துடித்த நாவை கட்டுப்படுத்தி வேறுவிதமாய் கேட்டாள்.

 

“குழந்தைக்கு நான் பசியாத்த முடியாதே!! நீங்க தானே குழந்தைக்கு தேவை!! குழந்தை அழுதா நீங்க தானே பார்க்கணும்!!”

 

“அதுமில்லாம நாங்க அங்க ஒண்ணும் குடித்தனம் நடத்தப் போறதில்லை. சாப்பிட்டதும் இங்க வந்திடுவோம்”

 

“குழந்தை முழிச்சு விளையாடினா நான் வந்து பார்த்துக்கறேன்” என்று அழுத்தமாய் கூறிவிட்டு நில்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டாளவள்…

Advertisement