Advertisement

அத்தியாயம் – 17

 

சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.

 

செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன என்ற பாவத்தில் அன்று இருந்தவளுக்கு இன்று அவன் கிளம்பிச் செல்வது பெரும் சுமையொன்று மனதிற்குள் கூடியதாய் இருந்தது.

 

இப்போதே செல்ல வேண்டுமா!! எப்போது திரும்பி வருவான்!! என்பது போன்ற எண்ணங்கள் அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.

 

மதுராம்பாளின் வீட்டிற்கே சென்று விடைபெற்று வந்தவன் பின் தங்கள் வீட்டில் இருந்தவர்களிடம் விடைபெற்றான்.

 

அனைவருமே வாயிலில் வந்து நின்றிருந்தனர் அவனை வழியனுப்ப!! வாயிலில் நின்று திரும்பி பார்த்தவனுக்கு அன்னையின் நினைவில் லேசாய் கண்கள் கலங்கியது.

 

பிறர் அறியாவண்ணம் அவன் அதை மறைத்தாலும் அவனை சட்டென்று கண்டுக்கொண்டிருந்தாள் அவன் மனைவி. அவன் எதை நினைத்து கலங்கியிருப்பான் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.

 

சக்திவேலுக்கு என்ன தோன்றியதோ மகளை அழைத்தார்.

 

“தாமரை அண்ணன் கிளம்பட்டும், வா நாம உள்ள போவோம். குழந்தையை வைச்சுட்டு ரொம்ப நேரம் வெளிய நிற்க வேணாம்” என்று சொல்லி மகளை அழைத்து சென்றார்.

 

“ஏன்பா நாம அண்ணன் கிளம்பினதுமே உள்ள போவோமே!!” என்றாள் அண்ணனையும் செவ்வந்தியையும் பார்த்தவாறே.

 

“சொன்னா சரின்னு கேளும்மா தாமரை!! அண்ணன் கிளம்புறான் அவங்க தனியா பேசிக்குவாங்க!!” என்று தாழ்ந்த குரலில் கண்டிப்பாய் சொல்ல தாமரை உள்ளே சென்றாள்.

 

“ரெண்டு பேரும் உள்ள போய்ட்டாங்க!!” என்றான் அவளருகில் வந்தவன்.

 

“இப்போ பேசு” என்றான்.

 

‘எப்போ வருவீங்க!! போகாதீங்க!!’ என்று மனம் சொல்லச் சொல்லி அவளை தொந்திரவு செய்ய அதை ஒதுக்கி அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“பார்த்திட்டே இருந்தா எப்படி?? பேசு” என்றவன் அவளை இன்னமும் நெருங்கி இடித்துக் கொண்டு நின்றான்.

 

“என்ன பண்றீங்க நீங்க வாசல்ல நின்னுக்கிட்டு” என்றவள் சற்று தள்ளி நின்றாள் அவனை இடிக்காதவாறு அதே சமயம் அதிக தூரமும் தள்ளி நிற்கவில்லை.

 

“அப்போ வீட்டுக்குள்ள இப்படி இருந்தா ஓகேவா…” என்று அவன் கேட்டு வைக்க அவளுக்கு முகம் சிவந்து போனது.

 

“என்ன இப்படி எல்லாம் பேசறீங்க!!” என்றாள்.

 

“சரி வா உன்கிட்ட நான் ஒண்ணு கொடுக்க மறந்திட்டேன், பின்னாடி ரூம்ல இருக்கு. எடுத்து கொடுத்திட்டு போறேன்” என்றவன் அவள் கைப்பிடித்தான்.

 

“அச்சோ என்னங்க பண்றீங்க நீங்க!! வண்டி வேற உங்களுக்காக காத்திட்டு இருக்கு இப்போ போய் எதையோ எடுக்க போறேன்னு சொல்றீங்க”

 

“அப்படி அதை என்கிட்ட கொடுக்க என்ன அவசரம் உங்களுக்கு. நீங்க அது எங்க இருக்குன்னு சொல்லுங்க நீங்க கிளம்பின பிறகு அதை நானே தேடி எடுக்கறேன்” என்றாள்.

 

“அதெல்லாம் தேடி கண்டுப்பிடிக்கிற விஷயமில்லை” என்று லேசாய் முணுமுணுப்பாய் சொன்னது அவள் காதில் விழவில்லை.

 

“என்னன்னு கேக்கறேன் பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்” என்றாள்.

 

“அதை நானே உன்கிட்ட கொடுக்கணும்ன்னு அர்த்தம் வா!! எதுவும் பேசாதே!!” என்றான்.

 

அவர்கள் வீட்டு வழியாய் செல்லாமல் பக்கவாட்டு வழியில் அவளை பின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

படிகளில் ஏறும் போதும் அவள் எங்கே சென்றுவிடுவாளோ என்ற ரீதியில் விடாமல் பற்றியிருந்தவன் உள்ளே வந்து கதவை அடைத்த பின்னே தான் கையை விட்டான்.

 

“எங்க இருக்குன்னு சொல்லுங்க நானே தேடுறேன், டைம் வேற ஆகுது” என்றாள் அவள் பதட்டமாய்.

 

“நான் உன்னை கட்டிக்கட்டுமா!!” என்றான் அவன் அவள் கேட்பதை பொருட்படுத்தாமல்.

 

என்னவோ சொல்லுகிறான் என்று அவனை பார்த்தவள் அவன் சொன்னதை கேட்டதும் விழித்தாள்.

 

‘இதென்ன புதுசா என்கிட்ட கேட்டுக்கிட்டு’ என்ற ரீதியில் தான் யோசித்தாள் அவள்.

 

“நான் கேட்டேன்” என்று சொல்லி அவளுக்கு ஞாபகப்படுத்தினான்.

 

“இதெல்லாம் என்கிட்ட கேட்கறீங்க!!” என்று திக்கினாள்.

“உன்கிட்ட நான் கேட்கலாம் தப்பில்லை வேற யாருகிட்டயும் கேட்டா தான் தப்பு”

 

“என்கிட்ட கேட்டு தான் நீங்க எல்லாம் செய்யறீங்களா என்ன!!” என்றாள் இதற்கு முன் அவன் அணைத்ததை மனதில் வைத்து.

 

“அதெல்லாம் ஆறுதல் தேடுறதுக்காகவும் ஆறுதல் சொல்றதுக்காகவும் செஞ்சது. அதை யாரு வேணா செய்யலாம். ஆனா இது அப்படி இல்லை” என்றவன் அவளை குறுகுறுவென பார்த்தான்.

 

‘இதுக்கு தான் என்னை இங்க அழைச்சுட்டு வந்தாரோ!!’ என்று தோன்ற ஆரம்பித்தது அவளுக்கு. வாயில் இருந்து வார்த்தை வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.

 

“உன் மௌனம் சம்மதம்ன்னு எடுத்துக்கறேன்” என்று அவன் சொன்னது மட்டும் தான் தெரியும் அடுத்த நொடி அவளை இறுக அணைத்திருந்தான்.

 

செவ்வந்தியின் கரங்கள் எப்போது அவனை அணைத்தது என்பதை உணராமல் அவளும் அவனுடன் ஒன்றியிருந்தாள்.

 

சட்டென்று நினைவு வந்தவன் போல் அணைப்பினூடே அவளை நிமிர்ந்து பார்த்தவன் “நான் உனக்கு ஒண்ணு கொடுக்கணும்ன்னு சொன்னேனே!! இப்போ கொடுக்கறேன்” என்றவன் குனிந்து அவள் இதழை தன் வசப்படுத்திக்கொண்டான்.

சில நொடிகளோ அல்லது நிமிடங்களோ அங்கு இதழ்கள் மட்டுமே தங்கள் இணைகளுடன் பேசிக்கொண்டிருந்தது.

 

தாமரையின் “மதினி” என்ற குரல் கேட்கும் வரையிலும் செவ்வந்தி முழுவதும் அவன் வசத்தில் இருந்தாள்.

 

தன்னிலை உணர்ந்தவள் அவனிடம் இருந்து பிரிய முயல அவனோ இன்னும் அழுத்தமாய் அவளை பற்றியிருந்தான்.

 

அவனை விட்டு விலகவும் முடியாமல் ஒன்றவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.

 

தாமரையோ மீண்டும் “மதினி” என்று இம்முறை சற்று உரக்கவே அழைக்க வீராவுக்கு செவ்வந்தியை விட மனதில்லை.

 

ஏகாந்த வேளையில் குறுக்கீடு வந்தது சற்று கடுப்பாகியிருந்தான் அவன். செவ்வந்தியின் இதழ்களை மெதுவாய் விடுவித்தவன் “நீ இரு” என்றுவிட்டு பால்கனிக்கு சென்றான்.

 

“என்ன தாமரை??” என்றான் அங்கிருந்தவாறே.

 

“என்னண்ணே நீ இன்னும் கிளம்பலியா?? மதினி எங்க போனாங்க??” என்றாள்.

 

“நான் என்னோட திங்க்ஸ் ஒண்ணு எடுக்க மறந்திட்டேன், அதை தான் அவ தேடிட்டு இருக்கா”

“கொஞ்ச நேரத்துல வருவா… நீ உள்ள போ தாமரை”

 

“நான் வேணா வந்து தேடி தரட்டுமா அண்ணா!!”

 

“வேணாம் நாங்க பார்த்துக்கறோம், எனக்கு டைம் ஆச்சு… நீ படி ஏறி மேல எல்லாம் வரவேண்டாம்” என்று அவளுக்கு பதில் கொடுத்துவிட்டு மேற்கொண்டு அங்கு நின்று பேசாமல் உள்ளே வந்துவிட்டான்.

 

செவ்வந்தி அதே இடத்திலேயே நின்றிருந்தாள். “என்ன சொல்லிட்டு இருந்தீங்க அண்ணிகிட்ட”

 

“தேடல் ஒண்ணு பாக்கி இருக்கு நாங்க தேடிகிட்டு இருக்கோம்ன்னு சொன்னேன்” என்றான் கூலாக.

 

“அச்சோ என்ன விளையாட்டு இது??” என்றாள் முகம் சிவந்து.

 

“நான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலை, அதுக்கே இப்படி சொல்றியே வந்தி” என்றான் அவன் பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு.

 

“சரி கிளம்புங்க நேரமாகுது”

 

“எப்போ ஊருக்கு கிளம்பினாலும் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுறதா பீல் பண்ணுவேன். இந்த முறை அம்மாவையே மிஸ் பண்ணிட்டேன்” என்றவனின் பேச்சு என்னவோ செய்ய அருகே வந்து அவளாக அவனை அணைத்துக் கொண்டாள்.

 

“அத்தை எப்பவும் நம்ம கூடவே இருப்பாங்க!! அதையே நினைக்காதீங்க!!”

 

“ஹ்ம்ம்” என்றவனும் அவளை அணைத்திருந்தான். “ஐ மிஸ் யூ வந்தி!! மிஸ் யூ லாட்!!” என்றவன் அவள் முகம் முழுதும் முத்தமிட்டான்.

 

பின் விலகியவன் “சீக்கிரம் வரப் பார்க்கறேன்… கிடைச்ச நேரத்துல உனக்கு போன் பண்ணுவேன். என்கிட்ட பேசணும், வேலை இருக்கு அது இருக்கு இது இருக்குன்னு சொன்னா எனக்கு கோவம் வந்திடும்”

 

“கிளம்பட்டுமா!!” என்றான்.

 

“ஹ்ம்ம்!!” என்று தலை மட்டும் தான் ஆடியது அவளுக்கு. வேறு வார்த்தை வரவில்லை, அழுதுவிடுவோமோ என்று வேறு தோன்றியது.

 

‘சென்ற முறை இப்படியே இல்லையே நான்!! என்னாவாயிற்று!!’ என்று கேள்வி கேட்ட மனதை அடக்கி கணவனை பார்த்தாள்.

 

விழிகளில் பளபளப்பாய் கண்ணீர் நிறைந்திருந்தது. அதை உள்ளே இழுக்க முயற்சித்தும் முடியாமல் அது வெளியேறிவிட்டது.

 

“ஹேய் என்ன நீ!! ஏன் இப்படி எமோஷனல் ஆகுற!! நான் சீக்கிரம் வர்றேன்!! வா போகலாம்” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வாயிலுக்கு வந்தான்.

 

மனைவியிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி அங்கிருந்து அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

அவன் கிளம்பியதுமே எதுவோ அவளைவிட்டு சென்றது போல் ஓர் உணர்வு. தனியானது போல் தோன்றியது. மெதுவாய் பின்னால் சென்றவள் அந்த மனோரஞ்சிதத்தின் முன் சென்று நின்றாள்.

 

செடியை மெதுவாய் வருடிக் கொடுத்தவளுக்கு மனோரஞ்சிதமே அருகில் இருந்தது போன்ற உணர்வு. “அவர் ஊருக்கு கிளம்பிட்டார் அத்தை!!”

 

“எப்போமே உங்ககிட்ட சொல்லிட்டு போவாராம்!! நீங்க இல்லைன்னு பீல் பண்ணிட்டு போறார்!! உங்களுக்கு அதுக்குள்ள என்ன அவசரம் அத்தை!!”

 

“எங்களை எல்லாம் விட்டு ஏன் போனீங்க!! நீங்க பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கும் போது எதுக்காக போனீங்க அத்தை” என்றவள் கண்ணீருடன் செடியை மேலும் வருடினாள்.

 

“மதினி எங்க தான் போவீங்களோ?? இன்னுமா வழியனுப்பி முடியலை!!” என்றவாறே அங்கு வந்து சேர்ந்தாள் தாமரை.

 

“இல்லை இதோ வர்றேன்” என்றவள் அவசரமாய் கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

“சொல்லுங்க அண்ணி”

 

“குழந்தைக்கு இருமலா இருக்கு… அதை பார்க்காம அப்படி என்ன குலாவல்ன்னு தெரியலை” என்று சட்டென்று கேட்டுவிட்டாள் அவள்.

 

செவ்வந்திக்கு அவள் பேச்சை கேட்டு ஒரு மாதிரி ஆகிப் போனது. சக்திவேல் வீட்டில் இல்லை வெளியில் சென்றுவிட்டார் போலும்.

 

செவ்வந்தி எதுவும் சொல்லவில்லை “இதோ வர்றேன்” என்றவள் உள்ளே சென்று மருந்தை கொண்டு வந்து குழந்தைக்கு புகட்டினாள்.

 

தாமரைக்கு என்னவாயிற்று!! ஏன்!! என்னவோ போல் அவர் பேசுகிறார் என்று யோசனை சென்றது செவ்வந்திக்கு.

 

சில நாட்களாகவே அவளின் செயல் இப்படி தான் வித்தியாசமாய் இருக்கிறது.

 

ஒருவேளை எனக்கு தான் அப்படி தோன்றுகிறதா, அவர் எப்போதுமே இப்படி தானோ நாம் தான் தேவையில்லாமல் யோசிக்கிறோமோ என்று எண்ணினாள்.

 

தான் இந்த வீட்டிற்கு புதிதாய் வந்தவள் அதுவுமில்லாமல் தாமரையுடன் அதிகம் பழகியதில்லையே, புரிந்து கொண்டால் சரியாகிவிடும் என்று நினைத்தாள்.

 

தாமரையின் வீட்டிற்கு சென்ற போது அவள் பார்த்த தாமரை வேறு என்பதை அக்கணம் அவள் மறந்து போனாள்.

 

அப்போதே யோசிக்க ஆரம்பித்திருந்தால் தாமரையின் மாறுபாட்டை உணர்ந்திருப்பாள், அவளை உடனே சரிப்படுத்த எண்ணியும் இருப்பாள்.

 

பின்னாளில் தாமரையின் செயல் அவள் மனதை கூறு போடும் என்றறிந்திருந்தால் செவ்வந்தி இன்னும் கொஞ்சம் கவனமாயும் இருந்திருப்பாளோ!! என்னவோ!!

 

எல்லாம் முன் கூட்டியே அறிந்தால் அடுத்தது என்ன என்ற சுவாரசியம் குறைந்து போகுமே!!!

 

அந்த வாரம் செவ்வந்தி மதுரைக்கு செல்ல வேண்டி இருந்தது. அவளின் இன்டர்ன்ஷிப் இடையில் நிறுத்துவதால் அதை பற்றிய விளக்கக் கடிதத்தை அவள் சென்று சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.

 

சக்திவேல் தனியாக பார்த்துக் கொள்ள முடியாது என்று உணர்ந்தவள் தன் வீட்டாரிடம் கேட்க யோசிக்க சக்திவேல் தாமரையின் மாமியாரை வந்து பார்த்துக் கொள்ள சொல்லலாம் என்றுவிட்டார்.

 

அவர் அப்படி சொன்னதும் தாமரையின் முகம் வாடியதோ என்று செவ்வந்திக்கு தோன்றாமல் இல்லை.

 

மறுநாளே அவர் காலையில் வீட்டிற்கு வந்துவிட அவர் வந்த பின்னே செவ்வந்தி மதுரை கிளம்பிச் சென்றாள்.

வீட்டில் எல்லா வேலையும் அவள் முடித்துவிட்டே சென்றிருந்தாள். அவள் வருவதற்கு மாலை கடந்து இரவாகி போனது.

 

அவள் வந்ததுமே தாமரையை பார்க்க அவள் சிடுசிடுவென்று முகத்தை வைத்திருந்தாள்.

 

தாமரையின் மாமியாரோ குழந்தையை தூக்கி வைத்திருந்தார்.

 

“என்ன இவ்வளவு நேரமாகிடுச்சு?? இதுல நான் நல்லா சிறப்பா பார்த்துக்குவேன்னு எதுக்கு எல்லார்கிட்டயும் சொன்னீங்க??” என்று சிடுசிடுவென்றே கேட்டாள்.

 

நல்ல வேலையாய் அவளின் மாமியார் அப்போது உள்ளே இல்லை. வெளியில் அமர்ந்திருந்தார்.

 

“என்னாச்சு அண்ணி?? ஏன் ஒரு மாதிரியா பேசறீங்க?? அம்மா எதுவும் சொன்னாங்களா??” என்றவாறே தாமரையின் முன் வந்து நின்றாள் செவ்வந்தி.

 

“அவங்க எப்பவும் பேசுவாங்க, இதுல அவங்களுக்கு சாக்கு கொடுக்கற மாதிரி தான் நீங்க நடந்துக்கறீங்க” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

 

“அம்மா என்ன சொன்னாங்க!! நான் வேணா அவங்ககிட்ட பேசறேன்” என்ற செவ்வந்தி நகரப்போக “நீங்க ஏற்கனவே பண்ணி வைச்சது பத்தாதா!!”

 

“இன்னும் வேற எனக்கு அவங்ககிட்ட பேச்சு வாங்கி கொடுக்கணுமா உங்களுக்கு!! எங்கம்மா இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா!!” என்று அழுகுரலில் சொல்லவும் செவ்வந்தி பதறித்தான் போனாள்.

 

‘இப்போ நானு என்ன தப்பு செஞ்சேன், வேலை இருந்துச்சு வெளிய போனேன்… பார்த்துக்க அவங்களை வரச் சொன்னது தப்பா போயிடுச்சா, இல்லை நான் வெளிய போனது தான் தப்பா போயிடுச்சா!!’

 

நிஜமாகவே அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “சாரி அண்ணி!! இனிமே இப்படி நடக்காது நான் பார்த்துக்கறேன், நீங்க வருத்தப்படாதீங்க” என்று அவளருகே சென்று ஆறுதல் சொன்னாள்.

 

தாமரையும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. நடந்தது இது தான் காலையில் வீட்டிற்கு வந்த தாமரையின் மாமியார் செவ்வந்தி எப்படி பார்த்துக் கொள்கிறாள் என்று மருமகளிடம் லேசுபாசாக விசாரித்தார்.

 

அவரின் விசாரணையே ஏதோ நம்பாதா தன்மை போலிருக்க தாமரைக்கு அவர் எதுவும் சொல்லிவிடுவாரோ என்று பீதி லேசாய் கிளம்பியது.

 

தனக்கென்று ஆட்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அவரிடம் கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

 

உண்மையிலேயே தாமரையின் மாமியார் அதை யதார்த்தமாகத் தான் கேட்டிருந்தார். தாமரை தான் அவர் எப்போதும் போல் குத்தலாக கேட்டதாக எண்ணிக்கொண்டாள்.

 

அனைத்திற்கும் காரணம் அவர் அன்னை இறந்த போது பேசியது தான் காரணம். அதை இன்னமும் அவள் மனதிலேயே வைத்திருந்தாள்.

 

அந்த எண்ணமெல்லாம் தான் அவளின் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியிருந்தது. செவ்வந்தியிடம் ஒரு நேரம் சாதரணமாய் பேசுபவள் மறு நேரம் காய்ந்து விழுவாள்.

 

தாமரையின் மாமியார் அதிசயமாக செவ்வந்தியிடம் நல்ல விதமாகவே பேசினார்.

 

செவ்வந்திக்கு தாமரையின் போக்கும் பிடிபடவில்லை அவளின் மாமியாரின் போக்கும் பிடிபடவில்லை.

 

தாமரை இப்போதெல்லாம் ஒரு நேரம் நன்றாய் பேசுவதும் ஒரு நேரம் வேறு மாதிரி பேசுவதுமாக தானிருந்தாள்.

 

வீட்டில் செவ்வந்திக்கு உதவியாய் அவள் ஒரு வேலையும் செய்வதில்லை. குழந்தையின் துணி ஈரமாகிவிட்டால் மாற்றிவிடுபவள் அந்த துணியை தனியாக எடுத்து வைத்துவிடுவாள்.

 

செவ்வந்தி தான் அதை துவைப்பதும் உலர்த்துவதும் மடித்து வைப்பதும். ஏன் அவளின் உடைகளையே செவ்வந்தி தான் துவைப்பது.

 

இவ்வளவு அதிக வேலையை செவ்வந்தி இதுவரையிலும் செய்ததேயில்லை. அவர்கள் வீட்டிலிருந்தால் அவளின் துணிகளை மட்டுமே அவள் துவைப்பாள்.

 

மதுராம்பாள் அப்படி தான் பழக்கியிருந்தார். பின் சமையலுக்கு உதவி செய்வது சமையல் செய்வது சுத்தம் செய்வது என்று எல்லாம் படித்திருந்தாலும் இப்போது செய்வது அதிகப்படி.

 

தாமரைக்கு பத்தியமாய் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதால் ஓரிருநாள் தன் தாயுடனும் ஆச்சியுடனும் இருந்து அதை கற்றுக்கொண்டாள்.

 

பார்த்து பார்த்து தான் தாமரையை கவனித்துக் கொண்டாள். ஆனால் அவளைத் தான் யாரும் கவனிப்பாரில்லை, அவ்வப்போது சக்திவேல் மருமகளை கேட்பார் தான்.

 

ஆனாலும் அவள் நான் நல்லா தான் இருக்கேன் மாமா என்றுவிட்டு போய்விடுவாள்.

 

செவ்வந்தி இப்போதெல்லாம் தாமரையின் பேச்சை அவ்வளவாக பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏதோ அன்னையின் ஏக்கம் பேசுகிறார்கள் என்றுவிட்டு விடுவாள்.

ஓரிரு மாதங்கள் வேகமாய் கடந்திருந்தது. மயிலு எப்போதாவது வந்து அவளை பார்த்து செல்வாள். மதுராம்பாள் சிவகாமி அவள் தங்கை முல்லை என்று யாராவதொருவர் அவளை வந்து பார்த்துச் செல்வர்.

 

தாமரைக்கு இதெல்லாம் பார்த்தால் மனதில் லேசாய் ஒரு பொறாமை எழும். தனக்கும் எல்லோரும் வேண்டும், தன்னுடனே அவர் எப்போதும் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவள் எண்ணம் சென்றது.

 

செவ்வந்தி வீராவுடன் பேசி ஆயிற்று ஒரு மாதம். சென்ற முறை பேசிய போதே சொன்னான், இன்னும் ஒரு மாதமோ ரெண்டு மாதமோ ஆகும் அவனை தொடர்பு கொள்வதற்கு என்றிருந்தான்.

 

சிக்னல் ஒன்றும் கிடைக்காத உயரமான மலைப்பகுதிக்கு செல்வதாய் சொல்லியிருந்தான். அவனுடம் பேசாமலிருந்தது அவள் மனதிற்கு என்னவோ போலிருந்தது.

 

அன்று மயிலு செவ்வந்தியை பார்க்க வந்திருந்தாள். அவளை கண்டதும் அவ்வளவு சந்தோசம் செவ்வந்திக்கு.

 

“ஹேய் மயிலு எங்கடி போயிட்டவ இம்புட்டு நாளா!! இப்போ தான் என்னைய பார்க்கணும்ன்னு உங்களுக்கு தோணிச்சாக்கும்!!” என்றாள்.

 

“அதில்லை செவ்வி எங்க சித்திக்கு உடம்பு சரியில்லாம கிடந்துச்சுடி மறுபடியும். அதான் திருநெல்வேலிக்கு போயிருந்தோம். அதுக்கு பார்த்துக்க ஆளில்லாம கிடக்கு நானும் எங்கம்மையும் தான் அதுக்கு”

 

“எங்களோட வந்து இருன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குது. அதுக்கு என்ன புள்ளையா குட்டியா!!” என்று தன் கதை பேசியவள் “ஏன்டி செவ்வி நான் ஒரு பத்து நாளா தானே ஊர்ல இல்லை”

 

“என்னமோ வருஷக்கணக்கா இல்லாத போல சொல்லுற?? ஆமா அண்ணே எப்போ வர்றாங்களாம்??”

 

“தெரியலை மயிலு”

 

“பேசினியா??”

 

“இல்லைடி, எங்கயோ டவர் இல்லாத இடத்துக்கு போறதா சொன்னாங்க… ஒரு மாசமாச்சு பேசி” என்று வருத்தக்குரலில் சொன்னாள் அவள்.

 

தோழியின் வருத்தம் போக்க எண்ணியவள் “பார்றா இந்த புள்ளைய!! கல்யாணம் வேணாம் வேணாம்ன்னு சொல்லிட்டு இருந்தா”

 

“இப்போ எங்கண்ணன் பேசலையாம் ஒரே விசனப்பட்டு கிடக்கா!! அவ்வளோ லவ்ஸ் எங்கண்ணன் மேல” என்று தோழியை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

 

செவ்வந்திக்கு அவள் பேச்சில் நிஜமாகவே முகம் சிவந்து போனது. அவளுக்கே அது நம்ப முடியாத விஷயம் தானே!!

தோழி சொன்னது போல தான் திருமணமே வேண்டாம் என்று சொன்னவள் தானே!! எப்படி எனக்குள் இப்படி ஒரு மாற்றம் என்று எப்போதும் போல் தன்னை பற்றியும் அவனை பற்றியும் ஆராய்ச்சி செய்தாள்.

 

வீராவை குறித்த அவளின் எண்ணம் எப்போது மாறியது என்று அவளுக்கே தெரியவில்லை. நிச்சயம் ஒரு சலனம் தன்னுள் உண்டு என்று புரிந்தது.

 

அப்படியே விட்டிருந்தால் அவள் உணர்ந்திருப்பாளோ என்னவோ!! ஆனால் அதை வெளியே கொண்டு வந்தவன் அவனே தான். அவளின் உள்ளம் கொள்ளை கொண்ட கள்வன் அவன் அவளின் கணவனே தான்.

 

“என்னடி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு கிடக்கேன், நீ என்னமோ ட்ரீம்க்கு போயிட்டவ!!”

 

“கனா கண்டேனடி தோழியா!! போதுமடி நீ கனா கண்டதெல்லாம் உன்னை கண்டுகிட நான் வந்தா நீ என்னடி இப்படி இருக்கவ” என்று அவள் மேலும் மேலும் தோழியை கிண்டல் செய்தாள்.

 

இருவரும் சந்தோசமாய் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து ஒரு குரல் “மதினி” என்று.

 

“இதோ வர்றேன் அண்ணி” என்றவள் “இருடி இதோ வர்றேன்” என்று தோழியிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

 

“குழந்தை முழிச்சுட்டு இருக்கா!! எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன். நீங்க பார்த்துக்கோங்க” என்றாள் செவ்வந்தியிடம்.

 

“சரி நீங்க தூங்குங்க நான் பார்த்துக்கறேன்” என்ற செவ்வந்தி குழந்தையை தூக்கப் போக “இங்கவே இருங்க வெளிய எல்லாம் தூக்கிட்டு போகாதீங்க” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

 

“ஹ்ம்ம் சரி” என்றவள் “ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்” என்றுவிட்டு வெளியே சென்ற செவ்வந்தி தோழியிடம் மேலும் ஓரிரு வார்த்தை பேசிக் கொண்டிருக்க அடுத்த சில நொடிகளிலேயே மீண்டும் அழைத்தாள் தாமரை.

 

“என்னாச்சு தாமரை அக்காக்கு?? எதுக்கு சும்மா சும்மா உன்னைய கூப்பிட்டு இருக்காங்க!! ரொம்ப வேலை பார்க்காத செவ்வி”

 

“உடம்பு இப்படி பாழாக்கி வைச்சிருக்க, எங்க அண்ணன் வந்தா அவருக்கு என்ன பதில் சொல்ல!!”

 

“எல்லாரையும் பார்க்கற மாதிரி உன்னையும் கொஞ்சம் கவனி” என்றாள் மயிலு.

 

தோழிக்கு பதில் சொல்வதற்குள் மீண்டும் தாமரையின் குரல் கேட்க மயிலோ “நீ போய் பாரு நான் கிளம்புறேன்”

 

“உன் கூட எப்போ பேச வந்தாலும் பேசவே முடியறதில்லை. நான் பேச ஆரம்பிச்சா போதும் தாமரை அக்கா உன்னை உள்ள கூப்பிடுறாங்க”

 

“என்னமோ சரியில்லை செவ்வி… என்னன்னு கவனி!! நீ ஏன் இப்படி இருக்கவன்னு எனக்கு தெரியலைட்டி!! பார்த்து இருந்துக்கோ!!” என்று மனதில் தோன்றியதை சொல்லிவிட்டு அவள் நகர்ந்து விட்டாள்.

 

செல்லும் தோழியை நிறுத்த வழி தெரியாமல் அவள் பேச்சை மனதிற்குள் ஏற்றியவள் உள்ளே விரைந்தாள் “சொல்லுங்கண்ணி” என்றவாறே.

 

“ஏன் மதினி உங்களுக்கு எங்களைய பார்த்துக்கறதை விட உங்க பிரண்டு கூட பேசுறது தேன் முக்கியமா போச்சா!!”

 

“நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களை கொடுமையா படுத்துறோம். உங்களை யாருமே கவனிக்காத மாதிரி அவங்க பேசிட்டு போறாங்க”

 

“நீங்களும் பேசாமலே இருக்கீங்க!! நானே நீங்க கவனிக்கற நிலைமையில இருக்கேன். ஊருக்கு முன்னாடி நான் பார்த்துக்கறேன்னு சொன்னீங்க”

 

“இப்போ உங்களை கவனிக்கலைன்னு அவங்க சொல்றாங்க. நானும் என் பொண்ணும் இங்க இருக்கறது உங்களுக்கு கஷ்டம்ன்னா சொல்லிடுங்க… எங்க வீட்டுக்கே போயிடுறோம்”

 

“எதுக்கு அண்ணி இப்போ பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க?? நான் எதுவுமே சொல்லலையே உங்களை” என்றாள் தாமரை.

 

“நீங்க எதுவும் சொல்ல தான் இல்லை. உங்க பிரண்டு பேசுறது சரிங்கறது போல பேசாம தானே இருந்தீங்க!! எங்கம்மா இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா”

 

“என்னை யாராச்சும் ஒரு வார்த்தை சொல்ல விட்டிருப்பாங்களா!! எங்கம்மா இல்லாததுனால தானே எனக்கிந்த நிலைமை. உங்களுக்கும் இப்படி இருந்திருந்தா என் நிலைமை புரியும்” என்றாள் கொஞ்சம் கூட யோசியாமல்.

 

அவள் வார்த்தை சொன்ன சேதி செவ்வந்தியை தாக்க சட்டென்று நிமிர்ந்து தாமரையை பார்த்தாள்.

 

எப்போதுமே யாரும் எதுவும் சொன்னால் பதிலுக்கு பதில் பேசிவிடும் ரகம் தான் செவ்வந்தி.

 

தாமரை அது நாள் வரை பேசியதை எல்லாம் அவள் பொறுத்து போனதிற்கு காரணம் தான் அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறோம் என்பதும் தன் கணவனும் மாமனாரும் தனக்கு ஆதரவாய் நின்றதும் ஞாபகத்திற்கு வந்ததினாலே மட்டும் தான்.

 

அது எல்லாம் விட தாயின் ஆதரவு இருக்க வேண்டிய நேரத்தில் தாயை பிரிந்து வாடும் தாமரையின் நிலையை எண்ணியே அவள் பெரிதும் அமைதியாய் இருந்திருந்தாள்.

 

ஆனால் இப்போது அவள் சொன்னதிற்கு அர்த்தம் என்ன என்று யோசிக்க யோசிக்க நெஞ்சை அடைத்தது அவளுக்கு.

 

“இப்போ என்ன சொன்னீங்க” என்றாள் மெதுவாய்.

 

அதுவரையிலும் ஏதோ கண்டதும் பேசிக் கொண்டிருந்தவள் செவ்வந்தியின் கேள்வியில் என்ன என்பது போல் பார்த்தாள்.

 

“நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம் அண்ணி… உங்களை மாதிரியே எனக்கும் அம்…” என்றவளால் முடிக்க முடியவில்லை”

 

தாமரைக்கு அப்போது தான் அவள் பேசிய வார்த்தையின் அர்த்தம் புரிய “அச்சோ அப்படியில்லை… நான் அந்த அர்த்தத்தில சொல்லலை” என்று மறுத்தாள்.

 

“நீங்க என்ன மாதிரி நினைச்சு சொல்லியிருந்தாலும் நீங்க சொன்னதுக்கு அது தான் அர்த்தம்” என்றாள் அழுத்தமாய்.

 

அதற்கு பின் தாமரையிடம் அவள் எதுவும் பேசவில்லை. இரண்டு நாட்கள் மௌனவிரதம் போலவே இருவருக்கிடையில் பேச்சு வார்த்தையில்லாமல் போனது….

Advertisement