Advertisement

அத்தியாயம் – 16

 

கார்த்திக் கல்லூரியில் செவ்வந்திக்கு சீனியர். கார்த்திக்கிற்கு தூத்துக்குடி தான் சொந்த ஊர். அவன் தந்தையும் தாயும் மருத்துவர்களே.

 

செவ்வந்தி கார்த்திக்கிற்கு அழைத்ததுமே அவன் அன்னைக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்திருந்தான்.

 

தாமரையை உள்ளே அழைத்து வரும் போதே அவளின் வலியின் அளவு அதிகரித்திருந்தது. கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு செவ்வந்தியும் பிரசவ அறைக்குள் நுழைந்திருந்தாள்.

 

உள்ளே செல்லும் முன் கணவனிடம் வந்தவள் “ரவி அண்ணாக்கும் அம்மாக்கும் போன் பண்ணி சொல்லிடுங்க…” என்றாள்.

 

வீராவுக்கோ தங்கையின் கதறல் எதுவோ செய்ய “ஒண்ணும் ஆகாதுல்ல… நல்லபடியா பேபி பிறந்திடும்ல, ரொம்ப அழறாளே” என்றான் மனைவியை பார்த்து.

 

“ஒண்ணும் ஆகாது, எல்லார்க்கும் நடக்கறது தானே… அத்தைக்கும் இப்படி தானே இருந்திருக்கும். நீங்க கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்கறேன்” என்றவள் அவன் கையில் தன் கையை வைத்து ஆறுதலாய் பற்றி பின் உள்ளே சென்றுவிட்டாள்.

 

தாமரையோ செவ்வந்தியை அப்படி இப்படி நகரவிடாமல் அவள் கையை இறுக பற்றியிருந்தாள்.

 

உச்சபட்ச வலியில் அவள் பிரசவிக்க அவள் பற்றியிருந்த செவ்வந்தியின் கரம் கன்றி சிவந்து தாமரையின் நகம் பட்டு ரத்தம் கூட வர ஆரம்பித்திருந்தது.

 

பிறந்தது பெண் குழந்தை என்றதும் செவ்வந்திக்கு அவ்வளவு சந்தோசம். ரஞ்சிதம் மீண்டும் பிறந்து விட்டார் என்றே அவளுக்கு தோன்றியது.

 

தன்னருகில் இருக்கும் போது உயிரை விட்டவர், தன் முன்னேயே மீண்டும் பிறந்துவிட்டார் என்றே எண்ணினாள்.

 

குழந்தையை அவள் தான் முதலில் தன் கைகளில் வாங்கினாள். கண்களில் கண்ணீர் அரும்பியது அவளுக்கு.

 

தாமரையை அறைக்கு மாற்றியிருக்க செவ்வந்தி தான் உடனிருந்தாள். வீராவின் கண்கள் குழந்தையின் மீது இருந்தாலும் அவளை தூக்கி வைத்திருந்தவளின் மீதுமிருந்தது.

 

நிஜமாகவே செவ்வந்தியை அடைந்தது தன் வாழ்வின் வரமே என்று தோன்றியது அவனுக்கு. ரவியும் தன் அன்னை தந்தையுடன் வந்திருந்தான். அவர்கள் இருக்கட்டும் என்று செவ்வந்தி சற்று ஒதுங்கியிருந்தாள்.

வெளியில் வந்தவள் வீராவை பார்க்க சக்திவேல் சோர்ந்து போய் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார்.

 

அப்போது தான் நினைவு வந்தவளாய் “என்னங்க மாமாவை ஆச்சி அம்மாவையும் வீட்டில கொண்டுபோய் விட்டுட்டு வாங்க”

 

“முல்லை வேற தனியா இருப்பா வீட்டில” என்று வீராவை பார்த்து சொன்னாள்.

 

மதுராம்பாள் பேத்தியை ஆச்சரியத்துடன் தான் பார்த்துக் கொண்டிருந்தார். இவ்வளவு பொறுப்பாய் அவள் இருப்பாள் என்று அவர் எண்ணியிருக்கவில்லை.

 

“அம்மா மட்டும் வீட்டுக்கு போகட்டும், அப்போ தான் சமைச்சு எடுத்திட்டு வர சரியா இருக்கும்” என்று அவர் கூற செவ்வந்தி பிடிவாதமாய் மறுத்தாள்.

 

“வேணாம் நான் சமைச்சு கொண்டு வந்திடுவேன்…” என்று சொல்லவும் மதுராம்பாள் பேத்தியை முறைத்தார்.

 

‘இந்த பிடிவாதத்துக்கு மட்டும் குறையே கிடையாது’ என்று மனதிற்குள்ளாக பேத்தியை செல்லமாக திட்டிக் கொண்டார்.

 

சிவகாமி தான் சும்மா இல்லாமல் “ஏன் செவ்வந்தி அம்மா செஞ்சு கொடுத்தா உங்களுக்கு இறங்காதோ!! நீ இங்க ஆஸ்பத்திரியில கூட இருப்பியா!! இல்லை வீட்டுக்கு போய் சமைப்பியா!! அப்படி என்ன வீம்பு உனக்கு எங்ககிட்ட” என்று கேட்டு கண் கலங்கினார்.

 

“ம்மா… நான் என்ன சொன்னா நீ என்ன சொல்ற?? இப்போ என்ன சாப்பாடு தானே நீங்களே எடுத்திட்டு வாங்க!!”

 

“ஆனா அது நாங்க ஆஸ்பிட்டல்ல இருக்க வரை தான்… வீட்டுக்கு வந்திட்டா நானே தான் செஞ்சுக்குவேன்…”

 

“அங்க வந்து நான் செய்யறேன் நீ செய்யாதன்னு சொன்னா எனக்கு கோவம் வந்திரும்” என்று மிரட்டிக் கொண்டிருந்த மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான் வீரா.

 

செவ்வந்தி இந்த மட்டும் சரி சொன்னதே அவருக்கு பெரிதாய் தோன்றியிருக்க சரியென்றவர் வீராவுடன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.

 

தாமரைக்கு சுகப்பிரசவத்திலேயே குழந்தை பிறந்திருந்ததால் மறுநாளே டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாக சொல்லியிருந்தனர்.

 

அடுத்த நாள் மாலை டிஸ்சார்ஜ் என்றிருந்த வேளையில் காலையில் ரவியும் அவன் அன்னையும் அங்குவிட்டு செவ்வந்தி வீராவுடன் வெளியில் கிளம்பியிருந்தாள்.

 

தாமரை உறங்கிக் கொண்டிருந்ததால் ரவியிடம் கூறிவிட்டு அவர்கள் கடைக்கு சென்றிருந்தனர்.

 

தூக்கத்தில் இருந்து விழித்த தாமரை கணவனிடமும் மாமியாரிடமும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவள் செவ்வந்தியை எங்கே என்று கேட்டாள்.

 

“உங்க அண்ணனும் அண்ணியும் வெளிய போயிருக்காங்க” என்று அவளின் மாமியார் பதில் கொடுக்கவும் தாமரையின் முகம் சட்டென்று சுருங்கிப் போனது.

 

மற்றவர்களின் முன்னால் முகத்தை சாதாரணம் போல் வைத்துக் கொண்டாள்.

 

வெளியில் சென்றிருந்த வீராவும் செவ்வந்தியும் தாமரைக்கு சில உடையும் குழந்தைக்கு உடைகளும் மற்றும் அத்தியாவசியம் நிறைந்த பொருட்களும் வாங்கியிருந்தனர்.

 

“ஏங்க நகைக்கடைக்கு வண்டி விடுங்களேன்??”

 

“இப்போவே எதுக்கு??”

 

“நீங்க ஊருக்கு போய்ட்டா நான் மட்டும் வந்து வாங்க முடியாது, ப்ளீஸ் ப்ளீஸ் இப்போவே கூட்டிட்டு போங்க”

 

வீரா எந்த மறுப்பும் சொல்லாமல் அவளை நகைக்கடைக்கு அழைத்துச் சென்றான். “ஏங்க குழந்தைக்கு அத்தை காப்பு வாங்கட்டுமா??”

 

“உன்னிஷ்டம்” என்றான் அவன்.

 

“உன்னிஷ்டம் சொல்றதுக்கா உங்ககிட்ட கேட்குறேன்” என்றதும் அவனை முறைத்தாள் அவள்.

 

“ஹேய் நிஜமாவே எனக்கு இதுல எந்த ஐடியா இல்லைம்மா…”

 

“அப்புறம்… வந்து… என்கிட்ட கேஷ் குறைவா தான் இருக்கு இப்போ?? ஆஸ்பிட்டல்க்கு கட்டவும் அதில்லாம கூட ஒரு டென் தவுசண்ட் தான்மா இருக்கும். அதுக்கு ஏத்த போல வாங்கு” என்றதும் கணவனை பார்த்து முறைத்தாள்.

 

“எதுக்கு முறைக்கிற??”

 

“நான் உங்களை காசு கேட்டனா??”

 

“பின்ன கடைக்காரன் என்ன உன் மாமனா!! மச்சானா!! ஓசில கொடுக்க??” என்று கிண்டலடித்தான்.

 

“என்கிட்ட கேஷ் இருக்கு…”

 

“நான் ட்ரான்ஸ்பர் பண்ணது உன் செலவுக்கு அதை எடுத்து செலவு பண்ணாதே”

 

“நான் இப்போ இன்டர்ன்ஷிப் தானே பண்ணுறேன். எனக்கு பேமென்ட் வரும். அத்தைக்கு தான் முதன் முதல்ல வாங்கி தரணும்ன்னு நினைச்சேன்” என்றவளின் கண்கள் லேசாய் கலங்கியது.

 

“இப்போ மட்டும் என்ன அத்தைக்கு தானே வாங்குறேன்” என்றவள் குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கியதும் அங்கிருந்து கிளம்பியவர்கள் மருத்துவமனையை வந்தடைய மதியமாகி இருந்தது.

 

தாமரை இருந்த அறைக்குள் மருத்துவர் ஆய்விற்காக சென்றிருந்ததால் மற்றவர்கள் வெளியே நின்றிருந்தனர். செவ்வந்தி என்னவென்று விசாரித்துவிட்டு அவள் நேரே உள்ளே சென்றுவிட்டாள்.

 

கார்த்திக்கின் அன்னை தான் தாமரைக்கு பிரசவம் பார்த்திருந்தார். ஒவ்வொரு முறையும் அவரே நேரில் வந்து தாமரையை பார்த்து சென்றார்.

 

செவ்வந்தி அவரிடம் தாமரையின் உடல் நிலை குழந்தை பற்றி விசாரித்தவள் வேறு சில தகவல்களும் கேட்டு முடிக்கவும் அவர் வெளியில் சென்றார்.

 

அவர் சென்றதும் செவ்வந்தி தாமரையின் அருகில் படுத்திருந்த குழந்தையை தூக்கப் போக “ஏன் மதினி பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு இப்படி தான் என்னை தனியாவிட்டு சொல்லாம கொள்ளாம போவீங்களா” என்று சுருக்கென்று கேட்டாள்.

 

‘என்ன இப்படி எல்லாம் பேசுகிறார்கள்’ என்று அதிர்ந்து தான் போய் பார்த்தாள் தாமரையை.

 

“அண்ணாவும் அம்மாவும் இங்க இருந்தாங்க… நீங்க தூங்கிட்டு இருந்தீங்க அதான் அவங்ககிட்ட சொல்லிட்டு போனேன் அண்ணி. நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க”

 

“உங்களால முடியாதுன்னா அன்னைக்கே சொல்லியிருக்கலாம்ல, இப்போ மட்டும் என்ன நான் அவங்களோடவே ஊருக்கு போய்டறேன்”

 

“என்னால எதுக்கு சிரமம்” என்றாள் ஒட்டாத குரலில். செவ்வந்திக்கு அய்யோவென்றிருந்தது.

 

“அண்ணி ப்ளீஸ், எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க?? இனிமே இப்படி நடக்காது அண்ணி… நான் உங்களைவிட்டு எங்கயும் போக மாட்டேன் போதுமா” என்றாள்.

 

குழந்தை ஆடையை நனைத்துவிட்டது அறிந்து அவள் மாற்றிக்கொண்டிருக்க அறைக்குள் நுழைந்திருந்தான் வீரா.

 

“ஹேய் தாமரை முழிச்சிட்டியா!! இங்க பாரு இதெல்லாம் உனக்கும் உன் பொண்ணுக்கும் வாங்கிட்டு வந்தோம்”

 

“இப்போ தான் உன் மாமியாருக்கு காமிச்சேன், வாயெல்லாம் பல்லு அவங்களுக்கு” என்றவன் குழந்தைக்கு வாங்கியிருந்த நகைகளை காட்டினான்.

 

தாமரை எல்லாவற்றையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். “இவ இப்போவே வாங்கி ஆகணும், நீங்க ஊருக்கு போய்ட்டா அண்ணியை தனியா விட்டு என்னால போக முடியாதுன்னுட்டு என்னை கடைக்கு கூட்டிட்டு போய்ட்டா” என்று சொல்லவும் தாமரையின் முகம் ஒருமாதிரியாகி போனது.

 

நிமிர்ந்து செவ்வந்தியை பார்க்க அவளோ குழந்தைக்கு துணி மாற்றுவதிலேயே கவனமாய் இருந்தாள். ‘அச்சோ எனக்காக பார்த்தவங்களை போய் இப்படி பேசிட்டமே!!’ என்று எண்ணினாள் தாமரை.

 

அவளின் மனதில் உள்ள பயம் தன் வீட்டில் தனக்கு உரிமையில்லையோ என்ற எண்ணம் அவளின் மாமியாரின் பேச்சு எல்லாமே சேர்ந்து அவளை குழப்பி அப்படி பேச வைத்திருந்தது.

 

இன்னமும் பேச வைக்கும் என்பதை அவளே அறியவில்லை. செவ்வந்தியும் அதை எதிர்பார்த்து இருக்கவில்லை.

 

நடப்பதை யார் தடுக்க முடியும், காலம் தான் அனைத்திற்கும் விடை சொல்லும். தாமரையை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.

 

வீரா அவன் விடுப்பை மேலும் ஓரிரு நாட்கள் நீட்டித்திருந்தான். தாமரையின் குழந்தை பகலில் எல்லாம் நன்றாக தூங்கிவிட்டு இரவில் கண் விழித்து கலாட்டா செய்வாள்.

 

மொட்ட மொட்ட விழித்திருந்து விளையாடுவாள். முதல் இரண்டு நாட்கள் கண்விழித்து பார்த்த தாமரைக்கு தூக்கம் கண்ணை சொக்கியது. குழந்தையுடன் விளையாட நினைத்தும் கண்ணை சொக்கிய தூக்கத்தை அவளால் தள்ள முடியாமல் கண்ணயர்ந்தாள்.

 

இரண்டு நாளாய் அவனும் பார்த்திருந்தான் செவ்வந்தி தான் ஓடி ஓடி செய்துக் கொண்டிருந்தாள் எல்லாம். தாமரையும் இரவில் எழும் போதெல்லாம் செவ்வந்தியையே தொந்திரவு செய்துக் கொண்டிருந்தாள்.

 

அன்று தாமரை நன்றாய் உறங்கிவிட குழந்தையின் குரல் கேட்கவும் செவ்வந்தி விழித்திருந்தாள். வீரா குழந்தை வந்ததில் இருந்து வீட்டின் ஹாலிலேயே படுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான்.

 

உள் அறையில் செவ்வந்தி குழந்தையுடன் பேசும் குரல் கேட்கவும் உள்ளே வந்து எட்டிப் பார்த்தான்.

 

“பேபி தூங்கலையா??”

 

“ஆமாங்க… இவ நைட்ல தான் விளையாடுறா”

 

“குழந்தையை தூக்கிட்டு வா!! தாமரை தூங்குறா டிஸ்டர்ப் பண்ண வேணாம்” என்று சொல்லிவிட்டு அவன் வெளியில் சென்றுவிட்டான்.

 

‘என்னது தூக்கிட்டு வரவா!! என்னாச்சு இந்த மனுஷனுக்கு என்ன ப்ளான் பண்ணுறார்ன்னு தெரியலையே!!’ என்று எண்ணிக்கொண்டு குழந்தையை தூக்கி தோளில் போட்டவாறே வெளியில் வந்தாள்.

 

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தவன் இங்கே வா என்பது அவனருகில் இருந்த இடத்தை காட்ட அவனருகில் சென்று அமர்ந்தாள்.

 

“செல்லக்குட்டி தூக்கம் வரலையா உங்களுக்கு நைட்ல தூங்காம என்ன விளையாட்டு உங்களுக்கு” என்று அவன் கேட்கவும் “ங்கா… ங்கா…” என்றது குழந்தை.

 

“என்ன பேசறீங்க செல்லக்குட்டி மாமாக்கு புரியலையே” என்றவன் பேசிக்கொண்டே செவ்வந்தியை நெருங்கி அமர்ந்திருந்தான்.

 

குழந்தையை தொடும் சாக்கில் மனைவியின் மீது அவன் கை படத்தான் செய்தது.

 

செவ்வந்திக்கு தான் அவன் செயல் மூச்சடைப்பதாக இருந்தது. ‘இவன் தெரிஞ்சு தான் எல்லாம் பண்றான் போல இருக்கே!!’

 

‘இதான் இவன் பிளானா வந்து சிக்கிட்டமோ!!’ என்று எண்ணினாலும் அவன் அருகாமை அவளுக்கு ஒருவித மயக்கத்தையே கொடுத்தது.

 

தள்ளி உட்காரவெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை. “இன்னும் ஒரே ஒரு முழு நாள் தான் நாளை மறுநாள் நான் ஊருக்கு கிளம்பிடுவேன்” என்று அவன் சொல்லும் வரை அவளின் மயக்கம் இருந்தது.

அவன் அப்படி சொன்னதுமே பொங்கிய பாலில் தெளித்த நீர் போல் ஆகினாள் அவள்.

 

“நான் சொன்னது காதுல விழுந்துதா??” என்றான்.

 

“ஹ்ம்ம் விழுது”

“பதிலே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்”

 

அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே தாமரையின் குரல் உள்ளே கேட்க குழந்தையுடன் எழுந்து நகர்ந்தாள் அவள்.

 

பின்னோடு வீராவும் வந்தான். “என்ன தாமரை??” என்றவாறே.

 

“இல்லை அண்ணியை காணோமேன்னு…” என்று இழுத்தாள் அவள்.

 

“நீ நல்லா தூங்கிட்டு இருந்த, குழந்தை முழிச்சு விளையாடுறா!! அதான் வெளிய தூக்கிட்டு வந்தா நானும் கூட விளையாடலாம்ன்னு உங்கண்ணியை குழந்தையை வெளிய கூட்டிட்டு வரச் சொன்னேன்”

 

“நீ தூங்கு தாமரை, பகல்ல தான் பாப்பா உன்னை தொல்லை பண்றால்ல!! நீ தூங்கு நாங்க பார்த்துக்கறோம்” என்று அவன் கூற தாமரை அவனை மறுத்துப் பேசவில்லை.

 

ஆனால் அவள் முகம் சுருங்கியதோ என்று செவ்வந்திக்கு ஓர் எண்ணம். அவள் படுக்கையில் அமரப் போக “நீ வெளிய வா!! நான் இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கப் போறேன்”

 

“குழந்தை கூட விளையாடிக்கறேன்” என்று சொல்லி மனைவியை அழைக்க தாமரையை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளிடம் தலையசைத்து சென்றாள் செவ்வந்தி.

 

வெளியில் வந்ததும் அவளை தன்னருகில் அமர வைக்க அவளோ சோபாவில் அமராமல் தரையில் அமர்ந்து கொண்டாள்.

 

வீராவும் அவளருகே அமர்ந்து கொண்டான். ‘அய்யோ இவர் ஏன் இப்படி இம்சை பண்ணுறாரு’ என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை”

 

“என்ன சொல்லணும்??”

 

“நான் ஊருக்கு கிளம்பறேன் உனக்கு வருத்தமாயில்லையா!!”

 

‘இதுக்கு என்ன பதில் சொல்ல, தெரிஞ்சுக்கிட்டே கேட்கறாரே!!’

 

“என்ன பதில் சொல்லாம அமைதியா இருக்கே” என்றவன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

 

செவ்வந்தி குழந்தை கை காலை அசைத்து விளையாடட்டும் என்று அப்போது தான் கீழே விரித்து படுக்க வைத்திருந்தாள்.

 

வீராவோ அது தான் சமயம் என்று அவள் கைப்பற்றியிருந்தான்.

 

“எப்போமே பேசியே காதுல ரத்தம் வரவைப்ப, இப்போ மட்டும் இவ்வளவு அமைதியா இருக்கே”

 

‘வாயை திறந்தா வெறும் காத்து தான்டா வருது!! நீ என்னை வெறுப்பா பார்த்தா கூட என்னால தாங்கிக்க முடியும்’

 

‘ரொமான்ஸ் பண்ணுறேன்னு பார்த்து வைச்சா எனக்கு பேச்சே வரமாட்டேங்குதே!!’ என்று மனதார புலம்பி தீர்த்தாள்.

 

“வந்தி ப்ளீஸ் ஏதாச்சும் பேசு!! எனக்கு நீ பேசுறதை கேட்கணும் போல இருக்கு!! அங்க போய்ட்டா இப்படி போல பேச முடியாது”

 

“நான் எப்போ எங்க இருப்பேன்னும் என்னால உறுதியா சொல்லா முடியாது. டவர் கிடைக்காத இடத்துக்கு போய்ட்டா ரொம்ப கஷ்டம்”

 

“இதெல்லாம் தான் என்னோட மெமரீஸ் ப்ளீஸ் ஏதாச்சும் பேசு” என்றான். அவன் சாதாரண குரலில் தான் சொன்னான் ஆனால் அது கெஞ்சுவது போல தோன்றியது அவளுக்கு.

“எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க?? திடீர்ன்னு உங்களுக்கு என்னாச்சு… நீங்க பேசுறதை சட்டுன்னு என்னால அக்செப்ட் பண்ண முடியலை”

 

“ஏன்?? ஏன்?? அக்செப்ட் பண்ண முடியலை??”

 

“உங்களை நான் எப்போ டிஸ்டர்ப் பண்ணேன் எனக்கே தெரியலை… நீங்க பேசுறதெல்லாம் விடலைப் பையன் பேசுறது போல இருக்கு”

 

“எனக்கே தெரியுது நான் கொஞ்சம் அதிகமா ரியாக்ட் பண்ணுறேன்னு… அந்த வயசை கடந்து வந்தப்போ கூட நான் பேஸ் பண்ணாத ஒரு விஷயம் இது”

 

“இதெல்லாம் நடக்கும்ன்னு நானே எதிர்பார்க்கலை. இப்படி உன்கிட்ட பேசுறது கூட எனக்கு புதுசா இருக்கு” என்றவன் தன் இடக்கரத்தால் தலையை கோதிக் கொண்டான்.

 

“ஒண்ணே ஒண்ணு சொல்றேன், நான் ஊருக்கு போய்ட்டா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். அன்னைக்கு சொன்னது தான் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு”

 

“உன்னை கட்டாயப்படுத்தலை… உனக்கு பிடிக்கற வரை காத்திட்டு இருப்பேன், ரொம்பவும் காக்க வைச்சுடாதே வந்தி ப்ளீஸ்…” என்றான்.

 

‘என்னடா இது இவன் வெளி தோற்றத்திற்கும் இவன் பேச்சுக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லையே!! வளர்ந்த குழந்தையாய் என் முன் நிற்கிறானே!!’ என்றே தோன்றியது.

 

“வந்தி எதாச்சும் பேசிட்டு இரேன்”

 

“என்ன பேசுறதுன்னே தெரியலை??”

 

“நான் சொன்னதை பத்தி உனக்கு சொல்ல எந்த கருத்துமில்லையா!!”

 

“நீங்க உங்களோட மனவுணர்வுகளை பத்தி சொன்னீங்க…”

 

“அது உன்னை எந்தவிதத்திலையும் பாதிக்கலையான்னு தான் கேட்குறேன்” என்றான் அவள் கண்களை உற்று நோக்கி.

 

அவன் பார்வை தாங்காதவள் “நான்… பா… நா… யோசிக்கணும்… இப்போவே சொல்லணுமா!!” என்றாள் திக்கிக்கொண்டே!!

 

“அவசரமில்லை!! ஆனா அவசியம் நீ சொல்லியாகணும் சீக்கிரமே!! ஐ யம் வைடிங் பார் யூ!!” என்று ஆழமாய் சொன்னவனை இமைக்காமல் பார்த்தாள்.

 

தான் அவனை வெறித்து பார்க்கிறோம் என்ற உணர்வு தோன்ற சட்டென்று பார்வையை தழைத்தவள் “குழந்தை தூங்கணும் நா… நான் உள்ளே போறேன்” என்று எழப்போனவளின் கரம் பற்றி தன்னருகே அமர்த்தினான்.

“குழந்தை தூங்கும் போது போகலாம், இப்போ இங்கே இரு… பகல்ல உன்கிட்ட பேச முடியலை, இப்போ தான் பேச முடியுது, பார்க்க முடியுது வந்தி”

 

“குழந்தை பார்க்கறா!!” என்று உளறினாள்.

 

“அவளுக்கு நாம பேசுறது புரியும்ன்னு நினைக்கிறியா!!” என்று சொல்ல உதட்டை கடித்துக்கொண்டாள்.

 

“உனக்கு என்ன என்கிட்ட இருந்து தப்பிச்சு போகணும் அதானே!! போன்னு சொல்லிருவேன் இப்போ என்னால அதை சொல்ல முடியலை”

 

இருவருமே அந்த இரவில் ரகசியமாய் தான் பேசிக் கொண்டிருந்தனர். அவனுடன் பேசிய அந்த தருணங்கள் தான் அவளின் பொக்கிஷம் என்றறியாமல் அதை முழுதாய் அனுப்பவிக்க முடியாமல் தாமரையின் முகம் அவ்வப்போது வந்து போனது அவளுக்கு.

 

அதற்கு மேல் அவளை பிடித்து வைக்க அவனால் முடியவில்லை. “நீ உள்ள போ” என்றான்.

 

அவன் சொன்னதுமே அவள் சட்டென்று எழுந்திருந்தாள். உள்ளே செல்லும் முன் அவனை பார்க்க அவன் முகம் வாடியிருந்தது.

 

திரும்பி போய் பேசுவோமா என்று தோன்றிய எண்ணத்தை அழித்து குழந்தையை படுக்கையில் கிடத்திவிட்டு தானும் படுத்து உறங்க முயற்சி செய்தாள் அவள்.

வழக்கம் போலவே விடிந்த விடியல் மெதுவாய் நகர்ந்து இரவு வந்திருக்க செவ்வந்திக்கு பரபரவென்றிருந்தது.

 

‘இன்று அவனிடம் நிச்சயம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். நேத்து தான் பேசலை நாளைக்கு ஊருக்கு போய்டுவாரு’ என்று எண்ணியவள் இரவை அதிக ஆவலாய் எதிர்பார்த்தாள்.

 

முதல் நாள் அவள் சரியாய் பேசாமல் போனதால் வீராவோ அவளிடம் பேசும் எண்ணத்தை கைவிட்டு படுக்கையில் குப்புறப்படுத்திருந்தான்.

 

இரவு எப்போதும் போல் தாமரை உறங்கிவிட, குழந்தை விழித்துக் கொண்டு ‘ங்கா’ சொல்லி விளையாட ஆரம்பித்தது.

 

அவன் அழைப்பான் அழைப்பான் என்று காத்திருந்தவள் அரைமணி நேரத்திற்கும் மேல் கடந்திருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

 

அருகில் இருந்த குடிநீர் பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டவள் நேராய் வெளியில் வந்து விளக்கை போட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

 

பாட்டிலில் இருந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு வேறு நீர் பிடித்தாள். வெளியில் வந்தவள் கணவனை பார்க்க அவனோ இப்போதும் திரும்பியும் பாராமல் குப்புறப் படுத்திருந்தான்.

 

‘யோவ் கூப்பிடுவியா மாட்டியா…’ என்று மனதிற்குள்ளாக ஒரு நிமிடம் நின்று அவனை திட்டி அவனை கடந்து உள்ளே சென்றாள்.

 

‘நேத்து நான் சொதப்பினா இன்னைக்கு இவன் சொதப்புறானே!! என்ன செய்ய!! திரும்பவும் யோசிம்மா’ என்று மூளை அறிவுறுத்த மீண்டும் எழுந்து வெளியில் சென்றாள்.

 

இரண்டு மூன்று முறை அவள் விளக்கை போட்டு போட்டு அணைக்க அதற்கு லேசாய் பலனிருந்தது. வீரா திரும்பி படுத்தான்.

 

வேகமாய் வந்தவள் தெரியாமல்(?) அவன் காலில் மிதித்திருந்தாள்.

 

“என்ன பிரச்சனை உனக்கு உள்ள போறே!! வெளிய வர்றே!! லைட் போட்டு போட்டு ஆப் பண்ணுற!! நிம்மதியா தூங்க விடமாட்டியா!!” என்று சிடுசிடுத்தான்.

 

“ஹ்ம்ம் ஆமா நிம்மதியா தூங்க விடமாட்டேன்!! இப்போ என்னங்கறீங்க?? தூக்கம் வரும்தாம்ல தூக்கம்!! நேத்து பேசணும் பேசணும்ன்னு சொல்லிட்டு தூக்கம் வருதா!!”

 

“எனக்கு தூக்கம் வரலை அதான் இப்படி பண்ணுறேன், போதுமா!!” என்று மெதுவான குரலில் மனதில் இருந்ததை அப்படியே போட்டு உடைத்துவிட்டாள் அவள்.

 

“ஹேய் என்ன சொன்னே??” என்று ஆச்சரியமானவன் உள்ளே செல்லப் போனவளின் கரம் பிடித்து இழுக்க அவன் மேல் இசகுபிசகாய் விழுந்து வைத்தாள்.

 

“விடுங்க” என்று மெல்லிய குரலில் முணுமுணுக்க “முடியாது” என்றான் அவன்.

 

“பாப்பா முழிச்சுட்டு இருக்கா??” என்றதும் ஒரு நிமிடம் யோசித்தவன் அவளை இறுக்கி ஒரு முறை அணைத்து பின் விடுவித்தான்.

 

“போய் தூக்கிட்டு வா!!”

 

“ஹ்ம்ம்” என்று அவனுக்கு தலையாட்டி உள்ளே சென்று குழந்தையை தூக்கி வந்திருந்தாள்.

 

குழந்தைக்கு பாய் விரித்து அதன் மேல் ஒரு விரிப்பை போட்டு படுக்க வைத்தாள்.

 

“ஹ்ம்ம் சொல்லு” என்றவன் அவள் கையை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டான்.

 

உள்ளுக்குள் அவளுக்கு சிலிர்த்து போனாலும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

 

“பேசுன்னு சொன்னேன் வந்தி”

 

“என்ன பேசன்னு தெரியலை… நீங்க பேசுங்க நான் கேட்கறேன்” என்றாள்.

 

“பேசணும்ன்னு தானே வந்தே!!”

 

“நாளைக்கு நீங்க ஊருக்கு கிளம்பிடுவீங்க, உங்களுக்காக தான் பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு வந்தேன்” என்றாள் ஒளியாமல்.

 

“தேங்க்ஸ்” என்றவன் அவளை தன் நெஞ்சின் மீது சாய்த்துக் கொண்டான்.

 

அவனிடம் இருந்து விலக முற்படவில்லை அவள். ஏனோ அவளுக்கும் அவன் மீது சாய்ந்திருந்தது பிடித்தே தான் இருந்தது.

 

அவள் மனதை பற்றி ஆராய்ந்து அறிய அவளுக்கு நேரமில்லை. ஆனால் அவனை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் மனம் ஓத்துக்கொண்டிருந்தது.

 

“எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க??” என்றாள்.

 

“நீ தான் பேச மாட்டேங்குற, நான் என்ன கேட்கலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்”

 

“ஹான் ஞாபகம் வந்திடுச்சு” என்றவன் “கே.எம்ன்னா என்ன??” என்றான் மறக்காமல்.

 

‘அடப்பாவி பேச வேற விஷயமே கிடைக்கலியா இதான் ஞாபகம் வந்திச்சா!! அச்சோ!! இதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்’ என்றவள் திருதிருவென விழித்தாள்.

 

“என்ன முழிக்கிற??”

“அது… அது வந்து…”

 

“அதான் என்னன்னு கேட்டேன்??”

 

“இல்லை அன்னைக்கு நீங்க அங்க வரும் போது என்னோட பார்த்தீங்களே ஒருத்தி”

 

“உன் பிரண்டு”

 

“ஆமா என் பிரண்டு கிரேசி அவ நீங்க உள்ள என்டர் ஆனதும் உங்களை பார்த்திட்டு யாரு இந்த கருத்த மச்சான் நல்லாயிருக்கார்ன்னு சொல்லிட்டு இருந்தா”

 

“என்ன??” என்றவன் அவளை லேசாய் முறைத்தான்.

 

“அவளுக்கு நீங்க யாருன்னு தெரியாம தான் சைட் அடிச்சா, அதுக்கு நான் என்ன பண்ணுவேன். என்னை எதுக்கு முறைக்கறீங்க??”

 

“அதான் நீங்க என்னோட கே.எம்ன்னு அவகிட்ட சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன!!” என்று அவனை சமாதானப்படுத்த முனைந்தாள். “என்ன உன்னோட கே.எம் மா அப்படின்னா”

 

“அ… அது… கருத்த மச்சான்க்கு ஷார்ட் பார்ம்” என்றாள்.

 

இப்போது மெதுவாய் வாய்விட்டு சிரித்தவன் “அப்போவே அப்படி சொன்னியா!! உனக்கு அப்போல இருந்தே என்னை பிடிக்குமா!!”

 

“நான் அப்படின்னு எப்போ சொன்னேன்??”

 

“நீ சொன்னதுக்கு அர்த்தமென்ன அப்போ??”

 

“நீங்க என் புருஷன் அதான் அப்படி சொன்னேன்”

 

உரிமையுணர்வு இல்லாமல் இந்த வார்த்தை வராது என்று அவன் உணர்ந்தாலும் இதற்கு மேல் கேட்டாலும் அவள் இல்லை என்பதற்கு ஏதாவது காரணம் கூறுவாள் என்று விட்டுவிட்டான்.

 

“எங்கம்மாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா??”

 

“இதென்ன அபத்தமான கேள்வி”

 

“கேட்டா பதில் சொல்லு”

 

“ரொம்ப பிடிக்கும்”

 

“அவங்க பிள்ளையை தான் இன்னும் பிடிக்கலை போல” என்றதும் சாய்ந்திருந்தவள் எழுந்து அமர்ந்திருந்தாள் இப்போது. “நான் எப்போ அப்படி சொன்னேன், நீங்களா முடிவு பண்ணி எதையும் சொன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை”

 

“சரி சரி கூல்…” என்றவன் அவளை மீண்டும் தன் மீது சாய்த்துக் கொண்டான். குழந்தை உறங்கியதையோ இடையில் தாமரை எழுந்து வந்து இருவரையும் பார்த்து சென்றதையோ அவர்கள் கவனிக்கவேயில்லை.

 

“நான் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றவனின் குரலில் அப்பட்டமான வருத்தம் தெரிந்தது.

 

“அவங்க தான் உன்னை எனக்கு கொடுத்திட்டு போயிருக்காங்கன்னு தோணுது எனக்கு” என்று அவன் சொல்லவும் அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

 

“உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா!! எப்போ இருந்து??”

 

“இந்த கேள்விக்கு நிஜமாவே என்கிட்ட பதில் இல்லை… உன்னோட பேச்சு பிடிக்க வைச்சுதா இல்லை உன்னோட குணமா இல்லை வேற எதுவுமான்னு எனக்கு தெரியலை…”

 

“ஒரு வேளை நீ நீயா இருக்கறது கூட பிடிச்சிருக்கலாம்” என்றான் அவள் கண்களை ஊருடுவி.

 

இரவு எவ்வளவு நேரம் பேசினார்கள் என்று இருவருமே அறியவில்லை. விடிய விடிய அவர்களின் பேச்சு நீண்டிருந்தது. ஸ்வீட் நந்திங்க்ஸ் என்பார்களே அது போல என்ன விஷயம் பேசினோம் என்று கூட அவர்களுக்கு ஞாபகமில்லை.

 

இருவரும் மனம்விட்டு பேசியது மட்டுமே அவர்களின் ஞாபகமாய் இனிமையாய் குளுமையாய் மனதை நிறைத்திருந்தது.

 

விடிகாலை மூன்று மணியளவில் செவ்வந்திக்கு தூக்கம் கண்ணை சுழற்ற பேசிக்கொண்டிருந்தவள் அவன் மீதே உறங்கியிருந்தாள்.

 

வீரா யோசியாமல் அவளை சற்று தள்ளி சோபாவின் மீது சாய்ந்தவாறே படுக்க வைத்தவன் குழந்தையை தூக்கிச் சென்று உள்ளே படுக்க வைத்தான்.

 

அப்படியே தாமரையை பார்வையால் நோட்டம் விட்டவன் தங்கை உறங்குகிறாள் என்பதறிந்து வெளியில் வந்தான்.

 

உறங்கும் மனைவியை கையில் தூக்கிக்கொண்டான். ஏனோ அவளை முத்தமிடும் ஆசை சட்டென்று தோன்ற குனிந்து அவள் இதழில் இதழொற்றி எடுத்தான்.

 

அவளை உள்ளே சென்று படுக்கவைத்து விட்டு வந்தவனை உறக்கம் இப்போது நிம்மதியாய் ஆட்கொண்டிருந்தது.

 

மறுநாள் கனத்த சுமையுடனே இருவரும் பொழுதை நகர்த்த வீரா கிளம்பும் தருணமும் வந்தது. சென்ற முறை அவன் ஊருக்கு சென்ற தருணம் இருவரின் நினைவிற்குமே வந்து போனது….

Advertisement