Advertisement

அத்தியாயம் – 15

 

செவ்வந்தியிடம் பேசியதில் மனம் சற்று ஆசுவாசப்பட்டிருந்தது வீராவுக்கு. மெதுவாய் கீழிறங்கி சென்றிருந்தவன் மனோரஞ்சித செடியருகே சென்று நின்றுக்கொண்டான்.

 

அவன் கீழே வரவும் செவ்வந்தி உள்ளே சென்றிருக்கவும் சரியாக இருந்தது அவனும் கவனிக்கவில்லை அவளும் உள்ளே சென்றிருந்தாள்.

 

அந்த செடியை மெதுவாய் வருடிக் கொண்டிருந்தவனுக்கு இதே இடத்தில் நின்று அவன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.

 

ரஞ்சிதம் இறப்பதற்கு முதல் நாள் அன்று ஒரு மாலை நேரம் வீரா இதே போல் நின்றிருக்க தனியாய் நின்றிருந்த மகனின் அருகே வந்தார் ரஞ்சிதம்.

 

“என்னலே இங்க நிக்க?? உம் பொண்டாட்டியை கட்டி இழுத்திட்டு வந்த பூ இதானே, ஞாபகம் வந்திட்டாக்கும்” என்று மகனை வாரினார் அவர்.

 

“ம்மா!!” என்றான் ஆச்சரியமாய். பின்னே வெகு நாளைக்கு பின்னே மகனுடன் சகஜமாய் உரையாடுகிறாரே.

 

அதனால் வந்த ஆச்சரியம் அவனுக்கு, அவருக்கோ மகன் முன்பு போல் மாறிவிட்டான் என்பதில் அவரால் அவனுடன் இயல்பாய் பேச முடிந்தது. இருவருமே வெகு நாளைக்கு பின் சாதாரண மனநிலைக்கு வந்திருந்தனர்.

 

“அவளுக்கு இந்த பூ பிடிச்சி வந்திருக்கா… அதுக்கு நீங்க தானே காரணம்… இந்த பூவோட பேரு தானே உங்களுக்கும்” என்றான் அவன் பதிலாய்.

 

“அதை இங்க கொண்டு வந்து வைச்சது நீ தாம்லே”

 

“ம்மா… அதை நான் யார் ஞாபகமா கொண்டு வந்தேன், உங்களுக்காக தானே, அப்போ நீங்க தான் காரணம்” என்று திருப்பினான்.

 

“சரிலே பாண்டி நாம ரெண்டு பேரும் தான் காரணம் சரியா”

 

“ஹ்ம்ம்… ஓகே” என்று ஒத்துக்கொண்டான்.

 

“நல்ல பொண்ணுல” என்று மகனிடம் தூண்டில் போட்டு பார்த்தார் அவன் எண்ணம் அறிய.

 

யார் பிள்ளை அவன் உடனே “யாரைம்மா சொல்றீங்க??” என்றான்.

 

“உம் பொண்டாட்டியை தான்”

 

“உங்க மருமகளை சொன்னீங்களா!!”

 

“ரெண்டும் ஒண்ணு தாம்லே”

 

“உனக்கு அவளை பிடிக்க ஆரம்பிச்சுட்டு போல” என்று நேராகவே கேட்டுவிட்டார் மகனிடம்.

 

தாயின் கேள்வியில் அவன் முகத்தில் லேசாய் ஒரு வெட்கப் புன்னகை வந்தது.

 

“தெரியாது”

 

“என்னலே பதில் இது”

 

“ஹ்ம்ம் நிஜமாவே தெரியலைம்மா!! அவளை பார்த்திட்டே இருக்கணும் போல இருக்கு அவ்வளவு தான்!!” என்றான் அவன் மனதில் தோன்றிய எண்ணத்தை.

 

“அப்போ பிடிச்சிருக்கு”

 

“ம்மா அதான் தெரியலைன்னு சொன்னேனே!!”

 

“பிடிக்காம எல்லாம் ஒரு பொண்ணை பார்த்திட்டே இருக்கணும்ன்னு தோணாதுலே”

 

“உன்னைய எத்தனை வருஷமா பார்க்குறேன். நீ ஒரு பொண்ணை கூட நிமிர்ந்து பார்த்ததில்லை, கூட படிச்ச பிள்ளைகளோடவே நீ அதிகம் பேசினதில்லை”

 

“உன்னை எனக்கு தெரியாதா பாண்டி” என்றுவிட்டு அவனை பார்த்தார்.

 

“ம்மா!! என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு”

“இப்படி போட்டு தாக்குறீங்க!! நீங்க இப்படி பேசி எவ்வளவு வருஷம் ஆகுது”

 

“நீயும் தாம்ல அம்மாட்ட நின்னு பேசி வருஷமாகுது. மனசுவிட்டு பேசணும், உங்கப்பா மாதிரி சில விஷயங்களை மனசோட போட்டுக்கறது”

 

“அம்மா எப்பவும் போல தான் இருக்கேன், நீ தாம்லே தள்ளி நிக்க”

 

“அம்மா அப்படிலாம் இல்லைம்மா”

 

“அந்த பொண்ணு நல்ல பொண்ணுலே பாண்டி!! எந்த ஒளிவு மறைவும் அதுகிட்ட கிடையாது!!”

 

“நீ அதே போல அந்த பிள்ளைக்கிட்ட இரு, ஒளிவு மறைவு வேணாம் உங்களுக்குள்ள!!”

 

“பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு நேரா சொல்லு!! உன் பொண்டாட்டி அவ, அவளை நீ தான் பார்த்துக்கிடணும்…”

 

“அவ கொஞ்சம் மனசு சுணங்கினாலும் குடும்பத்துக்கு நல்லதில்லை. நீ கோடி கோடியா ஜெயிச்சாலும் உனக்கு சந்தோசம் கிடைக்காது”

 

“பொண்டாட்டி மனசை மட்டும் ஜெயிச்சு பாரு ஒட்டு மொத்த சந்தோசமும் உனக்கு வந்து சேரும்”

 

“அம்மா இதெல்லாம் இப்போ ஏன்மா சொல்றீங்க”

“நீ தெரிஞ்சுக்கணும்ன்னு தான் சொல்றேன்… உனக்கு முதல்ல பொண்ணு பார்க்க நினைச்சப்போ அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்ன்னு ஆயிரம் கற்பனையோட இருந்தேன்”

 

“நீ கல்யாணம் வேணாம்ன்னு சொன்னப்ப தாம்லே எம்மவனுக்கு கல்யாணம் ஆனா போதும்ன்னு நினைச்சேன்”

 

“நானா தேடி பிடிச்சிருந்தாலும் இவளை போல கிடைச்சிருக்க மாட்டா பாண்டி!! எம் மருமவ தங்கம்” என்றார்.

 

“ஹ்ம்ம் பார்றா ஓவரா மருமக புராணமா இருக்கு. எவ்வளவு சொக்குப்பொடி போட்டான்னு தெரியலையே, இன்னும் இருக்காம்மா உங்க மருமக புராணம்”

 

“ஏம்லே கிண்டல் பண்ணுற, உனக்கு அவளை பத்தி கேக்க ஆசைன்னா நேரா கேளு சொல்லிட்டு போறேன்”

 

“உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன் சொல்லுங்க சொல்லுங்க” என்று பிகு செய்தான்.

 

“ரொம்ப பண்ணாதலே!!”

 

“ம்மா சொல்லுங்கம்மா” என்றான் இப்போது சுவாரசியமாய்.

 

“என்ன சொல்லணும்”

 

“ம்மா…” என்று கெஞ்சல் பார்வை பார்த்தான்.

 

“அவளோட நீங்க இருந்தது கொஞ்ச நாள் தான் இருக்கும் அதுக்குள்ள உங்களுக்கு அவளை தெரிஞ்சிடுச்சாம்மா” என்றான்.

 

“ஏன் தெரியாம??” என்றவர் “தெரியாம தாம்லே இத்தனை வருஷத்தை ஒட்டிட்டேன்…”

 

“இந்தா இருக்க பக்கத்து வீடு, உனக்கு பொண்ணு இங்க தான் இருக்கான்னு தெரிஞ்சிருந்தா, வாட்டி எங்க வீட்டுக்குன்னு மருமகளை கூட்டிட்டு வந்திருப்பேன்”

 

“ஹா… ஹா… அம்மா அப்படி எல்லாம் கூப்பிட்டா அவ வந்திருப்பாளா என்ன”

 

“ஹ்ம்ம் நான் கூப்பிட்டா வந்திருப்பாலே” என்றவர் “உன்னைய நினைச்சு தான் கவலையா கிடந்தேன். உன் வாழ்க்கை எப்படி இருக்க போகுதோன்னு”

 

“இன்னைக்கு தான் மனசுக்கு நிறைவா இருக்குலே… அந்த புள்ளைய எப்பவும் விட்டுக்கொடுத்திறாத, இனி அவ தான் உனக்கு எல்லாமே” என்றவருக்கு கண்கள் கலங்கியது.

 

“அம்மா என்னம்மா நீங்க… நான் அவளை நல்லா  பார்த்துக்குவேன்ம்மா நீங்க விடுங்க…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே செவ்வந்தி அங்கு வந்தாள்.

 

“அத்தே உங்களை எங்க எல்லாம் தேடுறது, இங்க நின்னு வெட்டியா பேசிட்டு இருக்கீங்க” என்றாள்.

 

“ஏய்!! என்ன எங்கம்மா பேசுறது உனக்கு வெட்டியா தெரியுதா!!” என்று மனைவியிடம் கேட்டான்.

 

“அத்தை பேசுறது வெட்டியா தெரியலை… வெட்டியா இருக்க உங்ககிட்ட ஏன் பேசிட்டு இருக்காங்கன்னு தான் கேட்டேன்…” என்று அவனுக்கு பதில் கொடுத்தான்.

 

“அம்மா என்ன சொல்றா பாருங்கம்மா”

 

“விடுய்யா விடுய்யா” என்றுவிட்டு மருமகளுடன் சென்றுவிட்டார் அவர்.

 

அந்த செடியின் அருகில் நின்றிருந்தவனுக்கு அன்றைய நாளின் நினைவு இன்னமும் பசுமை மாறாமல் நெஞ்சுக்குள் வந்து போனது.

 

‘எங்களை விட்டு போக போறோம்ன்னு தெரிஞ்சு தான் இதெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு போனீங்களாம்மா’ என்றவன் செடியை பார்த்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

மேலும் ஒரு பத்து நிமிடம் போல் அதனருகே நின்றவன் மெதுவாய் வீட்டிற்குள் நுழைய அவனின் ஒன்றுவிட்ட மாமா ஒருவர் அவனை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

 

ஒருவழியாய் அவரிடம் இருந்து தப்பித்து அவர்கள் அறைக்கு படியேறி வர அறைக்கதவு திறந்திருந்தது. ‘உள்ள வந்திட்டாளா’ என்று எண்ணிக்கொண்டே லேசாய் திறந்திருந்த கதவின் உள்ளே சென்றான்.

 

கட்டிலில் செவ்வந்தி படுத்திருப்பது தெரிந்தது. ‘தூங்கிவிட்டாளா, எப்போ வந்தா… நான் இப்போ தானே கீழே போனேன்’ என்று எண்ணிக்கொண்டே அவளருகே வந்தான்.

 

அவள் உடல் லேசாய் குலுங்குவது தெரிய கட்டிலில் சென்று அவளருகே அமர்ந்தான். ‘அழுகிறாளா!! ச்சே!! இவளை என்ன கேட்டுவிட்டேன்!!’ என்று எண்ணியவனுக்கு தன் கேள்வி அபத்தமாய் தோன்றியது இப்போது.

 

“வந்தி…” என்றழைத்தான், அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

 

“ஹேய் இங்க பாரும்மா… ப்ளீஸ் அழாதே இங்க பாரு” என்று அவன் அழைக்க அவள் அழுகை இன்னும் கூடியது.

 

சட்டென்று அவள் தலையை எடுத்து தன் மடி மீது வைத்துக்கொண்டான்.

 

“நான் ஒரு முட்டாள் லூசுத்தனமா உன்னை அப்படி கேட்டுட்டேன்… உனக்கு எவ்வளவு வருத்தமிருக்கும்ன்னு எனக்கு புரியுது”

 

“நீ ஏன் வந்தி இப்படி இருக்க… யாரு முன்னாடியும் அழுதிட கூடாதுன்னு ஏன் நினைக்கிற?? அழுகை வந்தா அழுதிடு அதை கட்டுப்படுத்தாத” என்று அவன் சொல்லவும் அழுகையினூடே நிமிர்ந்து அவனை பார்த்தவாறே எழுந்து அமர்ந்திருந்தாள்.

 

‘என்ன சொல்றீங்க… என்னை முழுசா தெரிஞ்சவர் மாதிரி எப்படி சொல்றீங்க’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

 

“அன்னைக்கும் இப்படி தான் தாமரை வீட்டில அத்தை சொன்னதை நினைச்சு நைட் எல்லாம் அழுதிருக்க… நான் கூட நீ கல்யாணம் பிடிக்காம அழறேன்னு நினைச்சேன்”

 

“நம்ம கல்யாணம் முடிஞ்சு உங்க வீட்டுக்கு போயிருந்தப்பவும் இப்படி தான் தனிமையில உட்கார்ந்து அழுத அப்பவும் உனக்கு கல்யாணம் பிடிக்காம தான் அழறேன்னு நினைச்சேன்”

 

“தாமரை வீட்டில இருந்து கிளம்பின பிறகு உன்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம நீ வெடிச்சு அழுத… இப்பவும் அதே தான் செய்யற… ஏன்??”

 

அவளை சரியாக கணித்து சொன்னவனை வியந்து பார்த்தாலும் அவனுக்கு பதில் சொல்லும் மனநிலையில் அவளில்லை.

 

அவள் அழுகை விசும்பலாகியிருந்தது இப்போது. அவளை இழுத்து தன்னோடு சாய்த்துக் கொண்டான்.

“இங்க பாரு நீ சொன்னது தான் நானும் சொல்றேன்… நீ சொன்னதுனால நான் இதை சொல்லலை ஓகே வா… ப்ளீஸ் நீ அழாதே!! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”

 

“இல்லைங்க அத்தை கடைசியா என்கூட தான் பேசினாங்க… என்னால இப்பக் கூட நம்ப முடியலை அவங்க இல்லைங்கறதை”

 

“ஏன் இப்படி பாதியில விட்டு போனாங்க… எனக்கு ஒண்ணும்மில்லை நீ பார்த்துக்கோன்னு சொன்னாங்க… அதுக்கு என்னங்க அர்த்தம்” என்று சொல்லி கதறியவளை தேற்ற முடியாமல் அவள் முதுகை வருடிக் கொடுத்தான்.

 

அவள் அழுகை கட்டுக்கு வந்ததும் “இங்க பாரு…” என்றான்.

 

அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அவன் நெஞ்சில் மீது சாய்ந்திருந்தாள்.

 

“கொஞ்சம் நிமிர்ந்து பாரு” என்றவன் அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான்.

 

“ஏன் எப்பவும் சேர்த்து வைச்சு தனியா போய் அழறே??”

 

“தெரியலை, சின்ன வயசுல இருந்து அப்படி தான்… யாராச்சும் ஏன் அழறன்னு கேட்டா என்ன ஒரு மாதிரியா இருக்கும்”

 

“அப்போல இருந்தே அப்படி தான்… திட்டினா கூட வீம்பா இருந்திட்டு உள்ள போய் அழுவேன்” என்றாள் தன்னைப்பற்றி அவனிடம் ஒளியாமல்.

 

“இனிமே அப்படி இருக்காதே… ஓவரா அழுத்தம் கொடுக்காத, ஒண்ணு உன் மனசுல உள்ளதை யார்கிட்டயாச்சும் சொல்லிரு. இல்லையா வாய்விட்டு உடனே அழுதிடு”

 

அவள் பதில் பேசாமல் அமைதியாய் இருக்க “யார்கிட்டயும் சொல்ல வேணாம் என்கிட்ட சொல்லு, அழறதா இருந்தாலும் என் முன்னாடியே அழு போதுமா”

 

“எப்போ பார்த்தாலும் உங்க முன்னாடி தான் அழுது வைக்குறேன்” என்றாள். இருவரும் தங்கள் கூட்டைவிட்டு இயல்பாய் பேசிக் கொள்ள ஆரம்பித்திருந்தனர்.

 

அதை எல்லாம் உணர்ந்து ஒரு இயல்பு வாழ்க்கை வாழத்தான் அவர்களுக்கு காலம் உடனே கைக்கொடுக்கவில்லை.

 

“சரி தூங்கு…”

 

“காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்”

 

“நான் எழுப்பறேன்… உனக்கு தலைவலிக்கலையா!! அழுததில தலைவலி வந்திருக்கும் நீயும் ஒரு டேப்லெட் போடு” என்றான்.

 

“நான் அதெல்லாம் போடுறதில்லை”

 

“ஏன் டாக்டரம்மா மத்தவங்களுக்கு தான் அட்வைஸ் எல்லாமா… இன்னைக்கு ஒரு நாள் போடு” என்றான்.

 

அவன் சொன்னதிற்காய் ஒரு மாத்திரையை எடுத்து விழுங்கிவிட்டு வந்து அவனருகே உறங்கிப் போனாள்.

 

வீரா உறங்கும் அவளையே பார்த்திருந்தான். ‘அம்மா நீங்க போகப் போறீங்கன்னு தெரிஞ்சு தான் இவளை கூட்டிட்டு வந்தீங்களா’ என்று மனதார தாயுடன் பேசினான்.

 

தங்கள் நினைவுக்கூட்டில் இருந்து இருவருமே நிகழ்காலத்திற்கு வந்தனர்…

____________________

 

செவ்வந்தி தைரியமாய் எல்லார் முன்னும் பேசிவிட்டாள் தான். எப்படி இதை செய்து முடிக்க போகிறோம் என்று சற்று மலைப்பாக இருந்தாலும் முடியும் என்ற நம்பிக்கை இருந்தது அவளுக்கு.

 

தாமரைக்கு பாலைக்காய்ச்சி எடுத்து சென்று கொடுத்துவிட்டு வந்தவள் வீராவிற்கும் எடுத்துச் சென்றாள்.

 

“அண்ணி உங்க அண்ணாக்கு இதை கொடுத்திட்டு வந்திடறேன்… நீங்க தூக்கம் வந்தா தூங்குங்க, நான் பத்து நிமிசத்துல வந்திடுவேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு பின்னால் சென்றாள்.

தனியாய் இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்பது உண்மையாய்!! தாமரைக்கு அவள் மாமியார் சொல்லிச் சென்றது எல்லாம் கண்முன் வந்து போனது.

 

“உன் மதினியால எல்லாம் உன்னை அவ்வளவு நாள் பார்த்துக்க முடியாது… எப்போ உனக்கு சரியில்லைன்னு தோணுதோ உடனே வந்திரு”

 

“ஒழுங்கா மட்டும் பார்த்துக்காம இருந்தா, என்னை வேற மாதிரி பார்க்கக் வேண்டி வரும்” என்று இன்னும் என்னென்னவே அவர் சொல்லிவிட்டு சென்றிருந்தார்.

 

அதெல்லாம் அவளை போட்டு அழுத்திக் கொண்டிருந்தது. யாரும் குறை சொல்லும் படி இருந்துவிடக் கூடாது, கவனமாய் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் பலவாறாய் குழம்பிக் கொண்டிருந்தாள் அவள்.

 

செவ்வந்தி அவர்கள் அறைக்கு செல்ல வீரா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கையில் ஏதோவொரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான்.

 

“பால் எடுத்திட்டு வந்திருக்கேன் சாப்பிடுங்க” என்றாள்.

 

“என்ன புதுசா??”

 

“இல்லை அண்ணிக்கு கொடுத்தேன்… நீங்களும் மதியம் சரியா சாப்பிடலையா, அதான் உங்களுக்கும் கொண்டு வந்தேன்”

 

‘அப்போ என்னையவே கவனிக்கறாளா இவள்’ என்று எண்ணியவன் மறுக்காமல் அவள் கையில் இருந்ததை வாங்கி அருந்தினான்.

 

“ஹ்ம்ம் கேளுங்க” என்றாள் அவன் அருந்தி முடிக்கும் வரை பார்த்திருந்து.

 

“என்ன கேட்கணும்??” என்றான் அவன் புரியாமல்.

 

“இல்லை நான் இன்னைக்கு இப்படி பேசுனது பத்தி உங்களுக்கு என்கிட்ட கேட்க கேள்வி இருக்கும்… அதுக்காக தான் கேட்டேன்”

 

“தேங்க்ஸ்”

 

“எதுக்கு??”

 

“ஞாபகப்படுத்தினதுக்கு” என்றவன் “சொல்லு ஏன் அப்படி சொன்னே?? உன் படிப்பு முக்கியமில்லையா??”

 

“நீ மெரிட்ல படிச்சு வாங்கின சீட் அது!! ஆச்சி சொல்லியிருக்காங்க நீ ரொம்ப விரும்பி படிக்கிற படிப்புன்னு… அதை ஏன் பாதியில விட நினைச்சே”

 

“அதான் அத்தை அவங்க கூடவே தாமரையை கூட்டி போய் பார்த்துக்கறேன்னு சொன்னாங்கள்ள”

 

“அத்தை இருந்தா இப்படி விட்டிருப்பீங்களா!!” என்றாள்.

 

“நீயே சொல்லிட்டியே அம்மா இருந்திருந்தா விட்டிருக்கக் மாட்டோம் தான்… ஆனா அவங்க தான் இப்போ இல்லையே!! உன் படிப்பும் முக்கியமில்லையா”

 

“நீ அப்படி சட்டுன்னு சொன்னது எனக்கு வருத்தம் தான்… ஆனா ஏன் அப்படி செஞ்சே”

 

“அத்தை இல்லைன்னு அண்ணி எவ்வளவு பீல் பண்ணாங்கன்னு பார்த்தீங்கள்ள… அவங்களுக்கு அந்த ஏக்கத்தை வரவிடாம நாம பார்த்துக்க வேணாமா”

 

“தலைபிரசவம் இங்க தானே நடக்கணும்… அண்ணிக்கும் கூட அது தான் விருப்பம், அத்தையும் அதை தான் விரும்புவாங்க!!”

 

“அப்போ உன் படிப்பு”

 

“இன்டர்ன்ஷிப் தானே பார்த்துக்கலாம்… அண்ணி அவங்க வீட்டுக்கு போன பிறகு நான் செஞ்சுக்கறேன்… ஆறு மாசம் முன்னாடியே முடிய வேண்டியது தள்ளிப் போகும் அவ்வளவு தானே”

 

“அவ்வளவு ஈசியா உனக்கு படிப்பு”

 

“அவ்வளவு ஈசி இல்லையே ஒரு குழந்தை பிறப்பும்… அதுக்காக படிப்பு ஈசின்னு நான் சொல்லலை… எது முதல்ல முக்கியம்ன்னு பார்க்க வேணாமா”

 

“எனக்கு இப்போ அண்ணியை தான் முதல்ல பார்க்கணும்ன்னு தோணுது… தப்பா…” என்றாள்.

தப்பு என்று எப்படி சொல்லுவான். தன் தங்கைக்காய் அவள் பார்க்கிறாள் அதை தப்பென்று எப்படி அவனால் சொல்ல முடியும்.

 

தன் தாய் தனக்கு மட்டுமில்லாமல் தன் தங்கைக்கும் ஒரு தாயை விட்டுச் சென்றிருக்கிறார் என்றே தான் அந்த நிமிடம் அவனுக்கு எண்ணத் தோன்றியது.

 

“நான் கீழே போகட்டுமா??”

 

“ஹ்ம்ம் போ…”

 

“தேங்க்ஸ்” என்றாள் வாசலில் நின்று.

 

“எதுக்கு??”

 

“இன்னைக்கு காலையில நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணீங்க… நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை”

 

“ஏன்??”

 

‘ஏன்னு கேட்டா என்ன சொல்றது??’ என்று அவள் மனம் கேள்வி கேட்டது. ஏன் என்று அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.

 

அமைதியாய் நின்றிருந்தவளின் அருகே எழுந்து வந்திருந்தான். “உனக்கு யாருமில்லைன்னு நினைக்க வேண்டாம். நான் எப்பவும் உன் பக்கம் தான் இருப்பேன். என்னை நம்பு…”

“நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறேன். என்னை நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணு… எனக்கு நீ சொல்ற தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்”

 

“உனக்கு எப்போ என்ன வேணும்னாலும் தயங்காம என்கிட்ட சொல்லு… உனக்கு பீஸ் கட்டுறதை நான் சொல்லலைன்னு உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். என்கிட்ட மனம்விட்டு பேசு…”

 

“இதுவரைக்கும் நான் எப்படி இருந்தேனோ தெரியலை… இனி அப்படி இருக்க மாட்டேன்… உன்கிட்ட கண்டிப்பா ஷேர் பண்ணிக்குவேன்…” என்றவன் பேசிக்கொண்டே அவளருகில் வந்திருந்தான்.

 

அவன் பேச்சு இதமாய் தானிருந்தது அவளுக்கு. புதிதாகவும், அதே சமயம் பிடித்ததாகவும் இருந்தது…

 

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரு பெண் அதை மிகச்சுலபமாய் கையாண்டுவிடுவாள் கொண்டவனின் துணையிருக்கையில்.

 

செவ்வந்திக்கும் அப்படி ஒரு பலம் தான் வந்திருந்தது இப்போது. இந்த வார்த்தை போதுமே எது வந்தாலும் தாங்கிக் கொள்வாளே(!?)

 

“எதுவுமே பேச மாட்டேங்குற??”

 

“என்ன பேச??”

 

“சரின்னு சொல்லு, இல்லைன்னா இல்லைன்னு சொல்லு”

 

‘என்ன இல்லைன்னு சொல்லணும்’ என்று மனதிற்குள் சிணுங்கினாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

 

எப்போதும் அவன் முகத்துக்கு நேரே பேசிவிடுபவள் அவனின் பேச்சில் சந்தோஷித்திருக்க என்ன பேச என்று தெரியவில்லை அவளுக்கு.

 

“நான் கீழே போறேன் அண்ணி எனக்காக வெயிட் பண்ணுவாங்க”

 

“நான் இந்த வாரக்கடைசியில ஊருக்கு கிளம்பறேன்” என்றான்.

 

‘ஏன் நல்லா தானே பேசிட்டு இருந்தாரு… இதை எதுக்கு இப்போ சொல்றாரு…’ என்று எண்ணியவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த நிலை சட்டென்று மாறிப்போனது.

 

அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. கண்கள் லேசாய் கலங்குவதாய் இருந்தது. இன்னமும் வாயிலில் நின்றிருந்தவளின் இடக்கரத்தை மென்மையாய் பற்றியவன் தன்னருகே இழுத்திருந்தான் அவளை.

 

அவனருகில் வந்து நின்றும் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் குனிந்த தலையுடன் நின்றிருந்தாள். சில நாட்கள் முன்பு வரை தான் இப்படி இருந்திருப்போமா என்று அவளுக்கு தெரியாது.

ஆனால் இன்று ஏன் இப்படி செய்கிறது. அத்தையும் இல்லை இவரும் இப்படி சொல்கிறாரே என்றிருந்தது அவளுக்கு.

 

“அண்ணி காத்திட்டு இருப்பாங்க நான் கீழே போறேன்” என்று மூன்றாம் முறையாக சொன்னவள் அங்கிருந்து கிளம்பிவிட எண்ணினாள்.

 

அவன் கரம் தான் அவளை இரும்பாய் பற்றியிருந்ததே. அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டவன் அவளை இறுக்கி அணைத்திருந்தான் ஆறுதலாய்.

 

இருவருமே ஒருவருக்கொருவர் ஆறுதல் தேடிக் கொண்டிருக்க வெளியில் தாமரையின் குரல் கேட்டது.

 

“நான் வர்றேன்” என்றவள் அவசரமாய் அவனிடமிருந்து விலகினாள். வாயிலில் நின்று ஒரு முறை அவனை பார்த்துவிட்டு வேகமாய் கீழறங்கி சென்றுவிட்டாள்.

 

சற்றே ஏமாற்றம் தோன்றியது போல் இருந்தது அவனுக்கு. பால்கனியில் நின்றுக்கொண்டு அவள் செல்வதை வேடிக்கை பார்த்தான்.

 

கீழறங்கி வந்த செவ்வந்தி இருட்டுக்குள் நின்றிருந்த தாமரையை நோக்கிச் சென்றாள் “சொல்லுங்க அண்ணி” என்றவாறே.

 

“ஏன் மதினி என்னை இப்படி தனியாவிட்டு எங்க போனீங்க… பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு காணாம போயிட்டீங்க…” என்றாள் செவ்வந்தியை பார்த்து.

செவ்வந்திக்கு அவளின் பேச்சு ‘நான் போய் ஒரு பதினஞ்சு நிமிஷம் தானே இருக்கும், அதுக்குள்ள இவங்க இவ்வளவு பீல் பண்ணுறாங்களே!! ச்சே பாவம்’ என்பதாய் தானிருந்தது அவள் எண்ணம்.

 

“உங்க அண்ணா பேசிட்டு இருந்தாங்க… நான் படிப்பை நிறுத்தி வைக்கறேன்னு சொன்னேன்ல, அதை பத்தி பேசிட்டு இருந்தாங்க அண்ணி… அதான் லேட் ஆகிட்டு”

 

“நீங்க இந்த இருட்டுல இருக்க வேண்டாம் வாங்க உள்ள போவோம்…” என்றவள் தாமரையை உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

“என்னை இப்படி இனிமே தனியா விட்டு போகாதீங்க மதினி. எனக்கு பயமாயிருக்கு” என்றாள் தாமரை.

 

பெற்றவளை இழந்திருக்கிறாள் மிகப்பெரிய இழப்பு. அதுவும் தாயின் துணையை பெரிதும் நாடும் இது போன்ற நேரத்தில்.

 

நாம் இனி இப்படி இருக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டு அவளுடன் சென்று படுத்துக்கொண்டாள்.

 

எதுவோ தோன்ற வாட்ஸ்அப் ஆன் செய்து வீராவை அன்று அங்கு வந்து படுத்துக்கொள்ள சொன்னாள்.

 

அவன் எதற்கு என்று கேட்க “ப்ளீஸ்” என்று மட்டும் பதில் வந்தது அவளிடமிருந்து.

 

“கதவை திறந்து வை” என்று பதில் அனுப்பினான்.

 

ஏனோ செவ்வந்திக்கு ரஞ்சிதம் இறந்த அன்று தோன்றியது போல் மனதில் ஒரு எண்ணம் எதுவோ ஒன்று கலக்கமான உணர்வு.

 

அன்று தற்செயலாகவோ அன்று அவள் வேண்டுமென்றோ ரஞ்சிதத்துடன் படுத்துக்கொண்டாள். தாமரைக்கு வேறு நிறை மாதமாக இருப்பதால் தான் அவளுக்கு அப்படி ஒரு எண்ணம்.

 

இரவில் எழுந்து சென்று அவனை எழுப்பி அழைத்து வருவதை விட அவன் இங்கேயே படுத்துக்கொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றியது அவளுக்கு.

 

அதனாலேயே அவனுக்கு மெசெஜ் அனுப்பி வரச் சொன்னாள். செவ்வந்தி படுக்கையில் இருந்து எழவும் தாமரை “என்ன மதினி??” என்றாள்.

 

“உங்க அண்ணாவை இங்க படுக்கச் சொன்னேன். அதான் போய் கதவை திறந்துவிட்டு வர்றேன்” என்றுவிட்டு எழுந்து சென்றாள் அவள்.

 

அவள் சென்று கதவை திறக்கவும் அவன் வரவும் சரியாக இருந்தது. “என்னாச்சு ஏன் இங்க வரச்சொன்னே”

 

“அண்ணிக்கு எப்பவும் பிரசவம் ஆகலாம் அதான் உங்களை கூப்பிட்டேன்” என்றாள்.

 

“டாக்டர் தான் அவளுக்கு இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு சொன்னாங்களே!!”

 

“ஹ்ம்ம் இருக்கலாம், ஆனா சொல்ல முடியாது”

 

“நீ என்ன நினைக்கிறே??”

 

“இன்னைக்கே கூட ஆகிடலாம்” என்றவள் அவனுக்கு ஹாலில் படுக்கையை விரித்து கொடுத்தாள். தண்ணி பிடித்து அவனருகில் வைத்துவிட்டு குட் நைட் சொல்லி அறைக்குள் சென்று மறைந்தாள்.

 

செவ்வந்தியின் எண்ணம் சரியே என்பது போல் அன்று இரவே தாமரைக்கு வலி கண்டது.

அவளின் சிறு சத்தத்திற்கு கூட அவ்வப்போது விழித்த பார்த்த செவ்வந்திக்கு அவள் முகம் வாடி எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்ததுமே எதுவோ சரியில்லை என்று தோன்ற “என்னாச்சு அண்ணி?? என்ன பண்ணுது??” என்றாள்.

 

“வலிக்குது இங்க… ம்மா… அம்மா முடியலை” என்று அவள் கத்தவும் செவ்வந்திக்கு ஏனோ அது பிரசவ வலியாக இருக்கும் என்றே தோன்றியது.

 

அவசரமாய் ஹாலுக்கு சென்று கணவனை எழுப்பினாள். ஒரு குரலிலேயே அவன் எழுத்திருந்தான். “என்னமா??

 

“அண்ணிக்கு பெயினா இருக்குன்னு சொல்றாங்க… நீங்க பக்கத்துல இருங்க… நான் போய் ஆச்சியை கூட்டிட்டு வர்றேன்…” என்றவள் சக்திவேலையும் எழுப்பி உள்ளே அனுப்பிவிட்டு வெறும் காலுடன் வேகமாய் அடுத்த காம்பவுண்ட்ற்கு ஓடினாள்.

 

வாயில் கதவை தட்டிவிட்டு கதவை திறக்கவும் “ஆச்சி தூங்கிட்டாங்களா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே ஓடினாள்…

 

மதுராம்பாளின் அறை வாயிலை பார்த்தவாறே இருக்கும். வெளியில் கேட்ட பேத்தியின் குரல் அவர் காதுகளை எட்ட கதவை திறந்து வெளியில் வந்தார் அவர்.

 

“ஆச்சி அண்ணிக்கு வலிக்குதுன்னு சொல்றாங்க… எனக்கு பார்த்தா பிரசவ வலி மாதிரி தான் தெரியுது… நீங்க எதுக்கும் வந்து பார்த்து சொல்லிட்டா, உடனே ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய்டலாம்” என்றாள் பதட்டமாய்.

 

மகளின் குரல் கட்டு சிவகாமியும் எழுந்து வந்திருந்தார். மகள் பேசியதை அவரும் காதில் வாங்கியிருந்தார். “சிவகாமி நீயும் வா… போய் பார்த்திட்டு வந்திடலாம்”

 

“முல்லை இங்கவே இருக்கட்டும், ராசம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடு” என்றுவிட்டு சிவகாமி வந்ததும் இருவருமாக செவ்வந்தியின் வீட்டிற்கு வந்தனர்.

 

அவர்கள் உள்ளே வரவும் அது பிரசவவலி என்று அவர்களுக்கு உடனே புரிந்து போனது. பத்தாதிற்கு பனிக்குடம் வேறு உடைந்திருந்தது.

 

வீராவுக்கு நடப்பதை பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. என்ன செய்வது என்று கூட புரியவில்லை. தங்கையின் கையை பற்றி ஆறுதல் மட்டுமே அவன் அதுவரை சொல்லிக் கொண்டிருந்தான்.

 

உடன் சக்திவேலும் மகளிடம் ஆறுதலாய் பேசிக்கொண்டிருந்த தருணத்திலேயே செவ்வந்தி வந்துவிட்டிருந்தாள்.

 

வீராவை அந்த நேரத்தில் காரை எடுக்கச் சொல்லி தாமரையை ஏற்றிக்கொண்டவர்கள் தூத்துக்குடியை நோக்கிச் சென்றனர்.

 

வழியிலேயே செவ்வந்தி கார்த்திக்கிற்கு போன் செய்து அவர்கள் மருத்துவமனையிலேயே பார்க்கச் சொல்லி கேட்க அவன் உடனே அழைத்துவர சொல்லியிருந்தான். அங்கு செல்லவும் கார்த்திக்கும் வந்திருந்தான் அங்கு.

 

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தாமரைக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது….

 

Advertisement