Advertisement

அத்தியாயம் – 14

 

ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொண்டனர் அவள் பேசியதை கண்டு.

 

தாமரையின் மாமியார் இன்னமும் சமாதானமடையவில்லை அவள் பேச்சில். “என்ன தாமரை உன் மதினி இப்படி சொல்லுது”

 

“உனக்காச்சும் புரியுதா இல்லையா எடுத்து சொல்லு உம் மதினிக்கு” என்று மருமகளை இழுத்தார் அவர்.

 

தாமரை ஒன்றும் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தவள் மாமியார் சொல்லவும் செவ்வந்தியை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“வேணாம் அண்ணி நான் ஊருக்கு போறேன், உங்களால முடியாது. என்னால உங்க படிப்பு கெட வேணாம்” என்றாள் நலிந்து போன குரலில்.

 

“எதுக்கும்மா இப்போ அண்ணியை கேட்கறீங்க?? இது எங்களோட கடமை தானே, நாங்க எல்லாம் சிறப்பா செஞ்சு அனுப்புவோம்”

 

“நீங்க அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம்” என்று தாமரையின் மாமியாருக்கு பதில் கொடுத்தாள்.

 

பேத்தியின் பேச்சைக் கேட்டு வியந்து போய் தான் அமர்ந்திருந்தார் மதுராம்பாள். இடையில் புகுந்து பேச அவர் விரும்பவில்லை.

அவள் தன்னிச்சையாய் செயல்படுவதை ரசித்துக் கொண்டிருந்தார் அப்பெண்மணி.

 

“அதெப்படிம்மா முடியும், நீயே சின்ன பொண்ணா இருக்கே!! உன் தலையில வேலையை சுமத்துறது குருவி தலையில பனங்காயை வைச்ச மாதிரி ஆகிப் போகாதா!!”

 

தாமரையின் மாமியாரின் முகத்தில் இப்போதும் திருப்தி இல்லை. வாய் திறந்து சரி என்று சொல்ல அவர் விழையவில்லை.

 

“எனக்கென்னமோ இதெல்லாம் சுத்தமா சரியா வராதுன்னு தோணுது. நான் சொல்றதை கேளுங்க நான் அங்க இருக்கேன் நான் பார்த்துக்குவேன் என் மருமகளை” என்றார் தாமரையின் மாமியார்.

 

அதற்கு மேலும் பேசாமல் இருந்தால் சரியாய் இராது என்று எண்ணிய வீரா மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பேச ஆரம்பித்தான்.

 

“என்ன அத்தை சொல்றீங்க?? ஏன் எங்களால பார்த்துக்க முடியாதுன்னு சொல்றீங்க?? அவ இந்த வீட்டு பொண்ணு, என்னோட தங்கை அவளை எங்களால பார்த்துக்க முடியாதுன்னு நீங்க ஏன் நினைக்கறீங்க??”

 

“ஏன்பா இப்போ தான் உனக்கு பேசணும்ன்னு தோணுதா!! நீங்க யாரும் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசலை, நீங்க சொல்லியிருந்தா பரவாயில்லை”

“அந்த புள்ளைய பேசவிட்டு வேடிக்கை பார்க்கறீங்க!!” என்று சொன்னவரின் பேச்சு வீராவுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.

 

தாமரைக்காக அமைதியாய் இருந்தவன் “என் பொண்டாட்டி பேசாம வேற யாரு பேசுவா!! நான் வேற அவ வேற இல்லை!!”

 

“நான் பேசினாலும் அவ பேசினாலும் ஒண்ணு தான்… இவ்வளவு நேரம் நீங்க மட்டும் தான் பேசிட்டு இருந்தீங்க. மாமாவோ ரவியோ வாயை திறக்கலையே”

 

“பெண்கள் பேசிகிட்டு இருக்கும் போது இடையில புகுந்து பேச வேணாம்ன்னு தான் அமைதியா இருந்தேன். அதுக்காக நீங்க பேசிக்கிட்டு இருக்கறது சரின்னு நாங்க இருந்ததா நினைக்க வேண்டாம்”

 

“தாமரை இங்க தான் இருப்பா!! நாங்க அவளை நல்லாவே பார்த்துப்போம். என்னப்பா பேசாம இருக்கீங்க சொல்லுங்க அவங்ககிட்ட” என்று தந்தையை துணைக்கழைத்தான் அவன்.

 

சக்திவேலுக்கு செவ்வந்தியின் படிப்பு பாதியில் விடுவது பிடித்தமில்லை என்றாலும் இவ்வளவு நடந்த பிறகு மகனையும், மருமகளையும், மகளையும் அவரால் விட்டுக் கொடுக்க முடியாதே.

 

“என் பொண்டாட்டி போயி இன்னைக்கு தான் காரியம் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள எல்லாரும் உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்தா என்ன அர்த்தம்”

“தாமரை இங்க தான் இருப்பா!! செவ்வந்தி சொன்ன மாதிரி குழந்தை பிறந்து அஞ்சு மாசம் கழிச்சு தான் அவளை அனுப்புவோம்” என்று அவர் சொல்லவும் தாமரையின் மாமியார் கப்சிப்பென்று அடங்கினார்.

 

சக்திவேல் பொதுவாய் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டார். அவராய் ஒன்று பேசினால் யாரும் அதை தட்ட முடியாது. ஊரில் கொஞ்சம் பெரிய மனிதர் அவர் அதனாலேயே தாமரையின் மாமியார் வாயை மூடிக் கொண்டார்.

 

மருமகளிடம் தொட்டதிற்கும் குற்றம் சொல்லும் அவர் தாமரையின் வீட்டினர் முன்பு அதிகம் பேச மாட்டார். இப்போது கூட செவ்வந்தி என்பதால் தான் அவ்வளவு இளக்காரம் அவருக்கு.

 

இடையில் வீராவும் சக்திவேலும் வருவார்கள் என்று அவர் எண்ணவில்லை.

 

செவ்வந்திக்கு வீரா பேசியது மிகுந்த சந்தோசமே!! அவ வேற நான் வேற கிடையாது  என்பது போல் அவன் பேசியது உள்ளத்தை குளிர்வித்தது.

 

கண்ணை மூடி மனதார தன் மாமியாரிடம் தான் பேசினாள். ‘அத்தை எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் நல்லபடியா பார்த்துப்பேன்னு நீங்க தான் என்னை வழி நடத்தணும்’

 

வீரா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன பண்ணிட்டு இருக்கா, சாமிக்கு தேங்க்ஸ் சொல்றாளா!! என் தங்கையை பார்த்துக்கறது இவளுக்கு அவ்வளவு சந்தோசமா!!’

 

‘இவளுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம் அதுவும் படிப்பைவிட்டு இதை செஞ்சே ஆகவேண்டி என்ன கட்டாயம்’ என்று யோசித்த போதும் தன் குடும்பத்திற்காய் அவள் பேசியது இதமாகவே இருந்தது.

 

அதற்கு மேல் தாமரையின் மாமியார் வீட்டினர் அங்கிருக்கவில்லை. ரவியும் அன்றே கிளம்பிவிட்டான் அவர்களுடனே.

 

செல்லும் முன் மருமகளிடம் பலவிதமாய் போதனைகள் செய்திருப்பர் போலும். அது விளைவிக்கப் போகும் வினைகளை யாரறிவர்.

 

கிட்டத்தட்ட வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே கிளம்பிவிட்டனர். வீட்டு மனிதர்கள் மட்டுமே வீடே அமைதியாகிவிட்ட உணர்வு.

 

தாமரை சோர்வாய் இருக்கிறதென்று அவள் அறைக்கு சென்றுவிட்டாள். சக்திவேல் ஹாலில் அமர்ந்திருந்தார். வீரா அப்போது தான் எழுந்து பின் வீட்டிற்கு சென்றான்.

 

“மாமா” என்றழைத்தாள்

 

“சொல்லும்மா”

 

“நான் பேசினது எதுவும் தப்பா மாமா!!”

 

“இல்லைம்மா, ஆனா உன் படிப்பு அதான் எனக்கு கவலையே!!” என்றார்.

 

“அதை நான் அப்புறம் கண்டினியூ பண்ணிக்கறேன் மாமா!! ஒரு ஆறு மாசம் தானே அதனாலென்ன மாமா!!”

 

“நீயே சின்ன பொண்ணும்மா, நீ எப்படி இதெல்லாம் செய்வேன்னு எனக்கு ரொம்ப கவலையா இருக்கும்மா!! உங்க அத்தை இருந்திருந்தா வேற, இப்படி பாதியில விட்டுட்டு போயிட்டாளேம்மா!!” என்றவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

 

“அந்த பேச்சை விடுங்க மாமா!! எல்லாம் என்னால பார்க்க முடியும், டாக்டர்க்கு படிக்கறேன், இது முடியாதுன்னு சொல்றீங்களே யாராச்சும் கேட்டா சிரிப்பாங்க மாமா” என்று பேச்சை இயல்பாக்க முனைந்தாள்.

 

“சரிம்மா நான் ஒண்ணும் சொல்லலை, உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்று முடித்துவிட்டார் அவர்.

 

வீரா வேறு என்ன சொல்லுவானோ அவனுக்கும் தான் படிப்பை நிறுத்துக்கிறேன் என்று சொன்னது எப்படி எடுத்துக் கொண்டிருப்பானோ என்று எண்ணிக்கொண்டிருக்க தாமரை அழைக்கும் சத்தம் கேட்டது.

 

“சொல்லுங்க அண்ணி” என்றவாறே அவள் முன் சென்று நின்றிருந்தாள் செவ்வந்தி.

“ஏன் மதினி நிஜமாவே உங்களால என்னை பார்த்துக்க முடியுமா?? அத்தை என்னென்னமோ சொல்லிட்டு போறாங்க”

 

“அங்க இருந்தா அவங்க தினமும் எதாச்சும் ஒண்ணு பேசிட்டே இருப்பாங்க அண்ணி. அதை செய்யாதே இதை செய்யாதேன்னு”

 

“இப்போ கூட அங்க போயிருவேன், ஒரு நேரம் இல்லன்னா ஒரு நேரம் உங்க வீட்டில பார்க்கலைன்னு சுருக்குன்னு பேசிருவாங்க”

 

“அதுக்காகவும் தான் நான் அங்க போக விரும்பலை. உங்களால முடியும் தானே!!” என்று கண்ணீர் முட்டிய விழிகளுடன் கேட்டாள் அவள்.

 

“அண்ணி என் மேல நம்பிக்கை வைங்க, நீங்களும் பாப்பாவும் என் பொறுப்பு”

 

“நல்லபடியா உங்களை கவனிச்சு உங்க வீட்டுக்கு அனுப்பி வைப்போம். நீங்க கவலையே பட வேண்டாம் சரியா!!”

 

“மனசை போட்டு குழப்பிக்காம கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருங்க அண்ணி” என்றாள் செவ்வந்தி.

 

தாமரை அவள் சொன்னதை கேட்டிருக்கலாம், அவள் எண்ணமெல்லாம் தன் வீட்டினர் எதுவும் குறை சொல்லி விடுவார்களோ!! அப்படியாகிவிடுமோ!! இப்படியாகிவிடுமோ!! என்பதிலேயே உழன்று மாறிப் போயிருந்தாள்.

 

ஹாலில் வந்து அமர்ந்தவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. வீராவும் அதே நினைவுகளில் தான் இருந்தான் அவனறையில்.

 

____________________

 

“அத்தை” என்று வேகமாய் ஓடிவந்து ரஞ்சிதத்தை கட்டிக்கொண்டிருந்தவளை சற்று பொறாமையோடு தான் பார்த்திருந்தான் வீரா.

 

பொறாமை யாரின் மேல் எதற்காய் என்று அவன் அறிய முற்படவில்லை.

 

“அம்மா போதும் போதும், ரொம்ப ஓவரா தான் இருக்கு. ரொம்ப பசியில இருக்கேன் சாப்பாடு வைங்க” என்று சிடுசிடுத்தான்.

 

“என்னலே வரும் போதே வெந்நீரை எதுவும் கொட்டிக்கிட்டியா இப்படி கடுக்கறவன்” என்றவர் “வாம்மா சாப்பிட போவோம்” என்றார் மருமகளிடம்.

 

“சாப்பாடு கேட்டது நானு!!”

 

“அதான் வைக்கிறேன்னு சொல்லிட்டேன்லய்யா”

 

“அப்போ உங்க மருமகளை சாப்பிட போவோம்ன்னு வான்னு சொன்னீங்க”

‘என்னாச்சு இவனுக்கு பொறாமை படுறானா, எதுக்கு’ என்று யோசித்துக்கொண்டே உள்ளே சென்றார் அவர்.

 

“ரெண்டு பேரும் வந்து உட்காருங்க சாப்பிடுவீங்க”

 

இருவருக்குமாய் அவர் உணவை எடுத்துவைக்க “அத்தை நீங்க சாப்பிட்டீங்களா??” என்றாள் செவ்வந்தி.

 

“இனிமே தான் சாப்பிடணும்”

 

“மாமா சாப்பிட்டு போயிட்டாங்களா??”

 

“அப்போமே வந்து சாப்பிட்டு கிளம்பிட்டாங்கம்மா, நீங்க சாப்பிடுங்க” என்றவர் பரிமாற ஆரம்பித்தார்.

 

“நீங்களும் எங்களோடவே சாப்பிடுங்க அத்தை” என்றவள் மற்றொரு தட்டை தூக்கி வந்து அவர் முன் வைத்தாள்.

 

“நானும் உட்கார்ந்திட்டா யாரு பரிமாற”

 

“நாம தான் ஒருத்தருக்கொருத்தர் போட்டுக்குவோம்”

 

“நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிடுறேன், என்னிக்குமே இவ்வளவு சீக்கிரம் நான் சாப்பிட்டதேயில்லை”

 

“ஹ்ம்ம் அத்தை சொன்னா கேளுங்க” என்று அவரை அதட்டலாய் பார்த்தவள் அவருக்கும் உணவை வைத்து சாப்பிடச் செய்தாள்.

வீரா எதுவும் பேசவில்லை, அமைதியாய் பார்த்திருந்தான் நடப்பவற்றை.

 

அன்றைய பொழுது இனிமையாய் சென்றுவிட மறுநாள் காலையில் வீரா செடிகளுக்காய் இயற்கை உரம் வாங்கவென்று வெளியில் சென்றுவிட்டான்.

 

மாமியாரும் மருமகளுமாய் மட்டுமே வீட்டிலிருந்தனர். வெளியில் சென்றுவிட்டு வீரா உள்ளே வரவும் செவ்வந்தி தலைவிரி கோலமாய் அவள் அன்னையின் முன் அமர்ந்திருந்தாள்.

 

‘என்ன இப்படி உட்கார்ந்திருக்கா’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே வந்தவன் சும்மாயில்லாமல் “அம்மா இதென்ன நம்மூரு பத்திரகாளியை தூக்கிட்டு வந்து நம்ம வீட்டுக்குள்ள வைச்சிருக்கீங்க”

 

ரஞ்சிதம் மகன் சொல்வது சட்டென்று புரியாமல் “என்னலே சொல்லுத விளங்கலையே!!”

 

“அத்தை உங்க புள்ளை என்னை தான் பத்திரகாளின்னு சொல்றார், என்னனு கேளுங்க அவருக்கிட்ட”

 

“எதுக்குலே அப்படி சொல்லுத, எம்மருமவ பத்திரகாளியா இருந்தாலும் அழகா இருக்கால்ல” என்றார்.

 

வீராவோ சத்தம் போட்டு சிரித்தான். “அத்தை இதுக்கு நீங்க என்னன்னு கேட்காமலே இருந்திருக்கலாம்”

“நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே கண்ணு”

 

“போங்க அத்தை” என்றவள் சட்டென்று உள்ளே எழுந்து சென்றுவிட்டாள்.

 

“ஏம்லே பாண்டி அவளை எதாச்சும் சொல்லிக்கிட்டு இருக்க, எண்ணெய் தேய்ச்சு விடுங்க அத்தைன்னு வந்தா… பாரு பாதியிலேயே உள்ள போய்ட்டா” என்றார்.

 

“போகட்டும் விடுங்க” என்றுவிட்டு அவனும் உள்ளே சென்றுவிட்டான்.

 

மகன் சென்ற பின்னே ரஞ்சிதம் யோசிக்காமல் இல்லை ‘என்னாச்சு இவனுக்கு அந்த புள்ளை கூட வம்புக்கு போறான், பிடிக்க ஆரம்பிச்சிருச்சு போல’ என்று எண்ணியவருக்கு உள்ளுக்குள் சந்தோசமே.

 

திருமணமே வேண்டாம் என்று சொன்னவனாயிற்றே!! பின் திருமணம் என்ற போதும் ஏதேதோ காரணம் சொல்லி வேண்டாம் என்று அழிசாட்டியம் செய்தவனாயிற்றே!!

 

எப்படி இருக்கப் போகிறது அவர்கள் வாழ்க்கை என்ற கவலை எப்போது அவரை அரித்துக் கொண்டிருந்தது.

 

செவ்வந்தியின் வாழ்க்கையை வேறு கெடுத்துவிட்டோமோ என்று சக்திவேலும் அவரும் வருந்தாத நாளில்லை.

 

இன்று மருமகளிடம் சீண்டி விளையாடும் மகனை இதுவரை பார்த்ததில்லை அவர். அவனின் இந்த மாற்றம் அவருக்கு புதிதல்ல.

 

எப்போதும் குறும்பாய் இருப்பவன் தான் அவன். சில வருடங்களாய் தான் குணம் மாறிப் போயிருந்தான். இன்று மீண்டிருக்கிறான் என்ற திருப்தி அவருக்கு.

 

அவர்கள் வாழ்க்கை நன்றாய் வாழ்வர் என்ற நம்பிக்கை ஒளி அவருக்கு பிறந்தது. மகனிடமும் சமயம் பார்த்து பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

 

மறுநாள் செவ்வந்தியை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வந்தான் வீரா. அந்த வார இறுதியில் தான் தாமரைக்கு சீமந்தம்.

 

ரஞ்சிதம் மருமகளை குலையன்கரிசலுக்கு வந்துவிடுமாறும் இங்கிருந்து நேராய் தாமரை வீட்டிற்கு எல்லோரும் ஒன்றாய் செல்லலாம் என்று கூறியிருந்தார்.

 

செவ்வந்தியால் உடனே விடுப்பு எடுக்க முடியாத சூழல் சென்ற வாரம் தான் வீராவின் நண்பனின் திருமணத்திற்காய் விடுப்பு எடுத்திருந்தாள்.

 

மாமியாரிடம் மெதுவாய் போனில் சொன்னாள். “அத்தை ப்ளீஸ் அத்தை என்னால இப்போ லீவு போட்டு உடனே வர முடியாது”

 

“போன வாரம் தான் லீவு போட்டிருக்கேன், நான் திங்கள்கிழமை வேற லீவு கேட்டிருக்கேன் அத்தை. எல்லாரும் ஒண்ணா வீட்டில இருக்கலாமே அதான்”

 

“நான் இங்க இருந்து நேரா தாமரை அண்ணி வீட்டுக்கு வந்திடறேனே ப்ளீஸ்” என்றாள்.

 

“என்னமோ போம்மா!! நீயும் வந்தா எல்லாரும் ஒண்ணா போகலாமேன்னு நினைச்சேன். சரி உனக்கு படிப்பிருக்கே அதையும் பார்க்கணும்”

 

“நீ மட்டும் தனியா தாமரை வீட்டுக்கு வரவேணாம். நான் பாண்டியை அனுப்பறேன் அவன் வந்து உன்னை கூட்டிட்டு வருவான். ரெண்டு பேரும் சேர்ந்து வந்திடுங்க” என்றார்.

 

சீமந்தம் அன்று காலையிலேயே மகனை எழுப்பி மதுரைக்கு செல்லுமாறு கூறி அவனை அனுப்பிவிட்டார்.

 

அவன் கிளம்பி வந்ததும் “இந்த கவரை மறக்காம எடுத்திட்டு போய்டு புடவை இருக்கு” என்றவர் “இரு இரு” என்றவாறே கையில் மல்லிகை பூவை எடுத்து வந்தார்.

 

“ஏம்மா உங்க பிள்ளை பொண்டாட்டிக்கு பூ கூட வாங்கி தரமாட்டான்னு முடிவே பண்ணிட்டீங்களா!! உங்களால தான் மூணார்ல கூட தேடிப்பிடிச்சு பூ வாங்கி கொடுத்தேன் உங்க மருமகளுக்கு”

 

“நிஜமாவா நீ பூ வாங்கி கொடுத்தியா எப்போலே பாண்டி இதெல்லாம் கத்துக்கிட்ட” என்று கிண்டலாய் பார்த்தார் அவர் மகனை.

 

“ம்மா!!” என்றான் சிணுங்கலாய்

 

“பூவை இங்கவே வைங்க நான் வாங்கி கொடுத்துக்கறேன். மதுரையில கிடைக்காத பூவா, மதுரை மல்லி எவ்வளவு பேமஸ்” என்றான்.

 

“இது நான் கட்டிக் கொடுக்கறது என் மருமகளுக்கு இதுவும் பேமஸு தான் எடுத்திட்டு போலே” என்று விரட்டினார் மகனை.

 

செவ்வந்தியின் ஹாஸ்டலுக்கு சென்று அவளிடம் கையில் கொண்டு வந்ததை எல்லாம் கொடுத்து அவள் கிளம்பி வந்த பின்னே தாமரை வீட்டிற்கு சென்றனர்.

 

தாமரைக்கு சீமந்தம் முடித்து இதோ அவளை வீட்டிற்கு அழைத்தும் வந்துவிட்டனர். உறவினர்கள் அனைவரையும் வேன் வைத்து அழைத்து சென்றிருந்தனர்.

 

மனமெல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருந்தது எல்லோருக்கும். செவ்வந்திக்கு வீட்டில் தாமரை வேறு இருக்கவும் இன்னமும் குஷியாகிவிட்டது.

 

எப்போதும் போல் அப்பாவும் பிள்ளையும் வெளியில் சென்றுவிட பெண்கள் மூவருமாக தங்கள் பொழுதை கழித்தனர்.

தாமரைக்கு பார்த்து பார்த்து தன் மாமியார் செய்வதை ஏனோ உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.

 

எதற்காய் பார்த்திருக்கிறோம் என்று தெரியாத போதும் எதற்கு ஏன் என்று அவர் செய்வதை கேட்டு அறிந்து கொண்டிருந்தாள் அவள்.

 

ஞாயிறு அன்று இரவு “அத்தை இன்னைக்கு நான் இங்கயே படுத்துக்கட்டும்மா” என்றாள்.

 

“என்னாச்சும்மா”

 

“நாம இங்க ஒண்ணா படுத்துக்கிட்டு கதை பேசணும்ன்னு ஆசையா இருக்கு அதான்” என்றாள் பாதி உண்மையும் பொய்யுமாக…

 

ரஞ்சிதம் ஒரு கணம் யோசித்தவர் பின் சரியென்று விட்டார். “ஏம்மா வீராகிட்ட சொல்லிட்டு வந்திரு” என்றார்.

 

‘அச்சோ அத்தை அங்க போக பயந்து தானே நான் உங்க கூட படுக்கறேன்னு சொல்றேன் நீங்க என்னைய அங்க போய் சொல்லிட்டு வரச் சொல்றீங்களே’ என்று மனதிற்குள்ளாக பேசிக்கொண்டாள்.

 

பின்னே அவளும் தான் என்ன செய்வாள், வீராவின் பார்வையின் வீச்சை இப்போது அவளால் தாங்கவே முடியவில்லை.

 

ஆளை விழுங்கி விடுவது போல் பார்த்து வைக்கிறான். நேற்று என்னடாவென்றால் வேண்டுமென்றே வம்பு செய்து பேசுகிறான் என்று பொருமினாள்.

 

இருந்தாலும் மாமியார் வேறு சொல்லிவிட்டாரே என்று பின்னால் சென்றாள். படியேறி மாடிக்கு செல்ல வீரா பால்கனியில் நின்றிருந்தான்.

 

‘அப்பா இதான் சரியான நேரம் சொல்லிட்டு அப்படியே ஓடிடணும்’ என்று எண்ணிக்கொண்டவள் “க்கும்…” என்று மெதுவாய் கனைத்து வைத்தாள், அவனை அழைக்கிறாளாம்.

 

சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் வீரா. “அத்தை இன்னைக்கு என்னை அவங்களோட படுத்துக்க சொன்னாங்க, நான் இன்னைக்கு அங்க தான் படுக்க போறேன்” என்றாள்.

 

“சரி ஓகே!!” என்றவன் “அந்த பாட்டில்ல கொஞ்சம் தண்ணி மட்டும் பிடிச்சு கொடுத்திட்டு போறியா!!”

 

“ஏன் அதுல தண்ணி இல்லையா??”

 

“இல்லைன்னு தானே கேக்கறேன், வைச்சுக்கிட்டா கேட்குறேன்”

 

“ஹ்ம்ம் எடுத்திட்டு வர்றேன்” என்றவள் உள்ளே வந்திருக்க வீரா இப்போது அவள் பின்னே வந்து நின்றிருந்தான்.

 

“உண்மையை சொல்லு எதுக்கு என்னை பார்த்து ஓடுற”

 

“உங்களுக்கு தண்ணி வேணாமா!!”

 

“தண்ணி இருக்கு”

 

“அப்போ பொய் சொன்னீங்களா??”

 

“நீ உண்மை சொன்னியா” என்று திருப்பினான்.

 

“என்ன வேணும் உங்களுக்கு”

 

“பதில் சொல்லிட்டு போ!! என்னை கண்டு உனக்கு என்ன பயம்” என்றான் அவள் விலகி செல்வது பார்த்து.

 

“பிடிக்கலை”

 

“என்ன பிடிக்கலை?? என்னை பிடிக்கலையா??”

 

“நீங்க சும்மா வெறிச்சு வெறிச்சு பார்க்கறது பிடிக்கலை… ஒரு மாதிரியா இருக்கு எனக்கு…”

 

“இந்த ரூம்குள்ள இருக்கவே எனக்கு அன்ஈசியா இருக்கு. அன்கம்பர்டபிளா பீல் பண்ணுறேன் போதுமா”

 

“முன்னெல்லாம் இங்க வர்றதுன்னா எவ்வளவு சந்தோசமா வருவேன் தெரியுமா!! இந்த முறை என்னை இப்படி பீல் பண்ண வைச்சுட்டீங்க!! எப்போடா ஹாஸ்டல் போவோம்ன்னு தோண வைச்சுட்டீங்க” என்றாள் குறையாய்.

‘ச்சே!! இப்படி சொதப்பிட்டமோ!!’ என்று தலையில் தட்டிக்கொண்டவன் “சாரி இனிமே இப்படி நடக்காது” என்றான்.

 

அவள் பதிலேதும் பேசவில்லை, வெளிய செல்லப் போனாள். “அதான் சாரி சொல்லிட்டேன்ல”

 

“சாரி சொன்னா சரியாகிடுமா!! எனக்கு எப்போ ஈசியா பீல் ஆகுதோ அப்போ பார்க்கலாம்” என்றாள்.

 

“ரொம்ப பண்ணுற, நான் உன் புருஷன் தானே பார்த்தா என்ன தப்பு!!” என்றான் அவள் செல்கிறாளே என்று.

 

“ஓ!! புருஷன்னா பார்ப்பீங்களா!!”

 

“பார்த்தா என்ன தப்புன்னு தானே கேட்டேன்”

 

“எனக்கு பிடிக்கலை”

 

“எப்போ பிடிக்கும்??”

 

“தெரியாது… என்ன புதுசா பண்ணுறீங்க?? நம்ம கல்யாணத்தப்போ உங்களுக்கு என்னை பிடிக்கலை இப்போ மட்டும் பிடிக்குதா!!”

 

“எதுக்கு இப்படி எல்லாம் செய்யறீங்க?? என்னால நிம்மதியாவே இருக்க முடியலை, ஏன் இப்படி செய்யறீங்கன்னு யோசிச்சு யோசிச்சு தலை வலிக்குது”

 

“அப்போ பிடிக்கலைன்னா இப்பவும் அப்படியே இருக்கணுமா என்ன?? நான் தான் அப்போவே சொன்னேன்ல எனக்கு கல்யாணம் ஒரு முறை தான்னு”

 

“அதுக்கும் நீங்க சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்??”

 

“ஓ!! கல்யாணம் பண்ணிக்கிட்டமே அடுத்து புள்ளைகுட்டிக்கு வழி என்னன்னு யாரும் கேட்டாங்களோ!! அதான் இப்படி செய்யறீங்களா!!”

 

“நிஜமாவே எல்லாம் உங்களுக்கு என்னை பிடிக்கலை அப்படி தானே” என்று அவள் கேட்கவும் அவனுக்கு சட்டென்று கோபம் வந்தது.

 

“லூசுடி நீ?? நான் என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேட்காம நீயா கண்டதும் யோசிச்சு பேசுற?? அப்படியே அறைஞ்சிருக்கணும் உன்னைய”

 

“புள்ளைக்குட்டி பெத்துக்க எனக்கு நீ தான் வேணும்ன்னு இல்லை டெஸ்ட் டியூப்ல கூட இப்போ குழந்தை பெத்துக்கலாம்”

 

“ஹான்” என்று வாயை பிளந்தவள் “அப்போ பெத்துக்க வேண்டியது தானே” என்று முணுமுணுத்தாள்.

 

“பல்லை உடைச்சிருவேன் வாயை மூடு”

 

“என்னை என்ன உன் பின்னாடியே சுத்துற பொறுக்கின்னு நினைக்கறியா!! அந்த வயசை எல்லாம் நான் எப்பவோ கடந்திட்டேன்”

“என் பொண்டாட்டியை தானே பார்த்தேன், அடுத்தவன் பொண்டாட்டியை ஒண்ணும் நான் பார்க்கலையே”

 

“என்னமோ பெரிய குத்தம் பண்ண மாதிரி சொல்லுற, உனக்கு பிடிக்கலைன்னு பேசாம இரு. நான் என்ன உன்னை டிஸ்டர்ப் பண்ணேனா” என்றான்.

 

“ஏன் இதுவே பேரன்ட்ஸ் பார்த்து வைச்சிருந்தா உனக்கு என்னை பிடிக்காம போயிருக்குமா!! உடனே பிடிக்கலைன்னாலும் கொஞ்ச நாள் கழிச்சு பிடிக்க ஆரம்பிச்சிருக்கும் தானே”

 

“நம்ம கல்யாணம் கிட்டதட்ட நம்ம பேரன்ட்ஸ் பண்ணி வைச்ச கல்யாணம் மாதிரி தான். அப்போ ஏதோ பிடிக்காம இருந்தேன்”

 

“இப்போ உன்னை பிடிச்சிருக்கு அதுக்கு என்னாங்குற!! உனக்கு பிடிச்சா பாரு இல்லைன்னா போ!! நான் அப்படி தான் பார்ப்பேன்” என்று அழிசாட்டியமாய் பேசினான்.

 

‘என்ன இப்படிலாம் பேசுறான், இவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு’ என்று முடிவு செய்து கொண்டாள் அவள்.

 

அவள் மீண்டும் கீழே செல்லப் போக திரும்ப “எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடி ஒளிஞ்சுகுவ… இங்க வந்து தானே ஆகணும்”

 

‘நீ தான் ஊருக்கு போயிடுவியே அப்போ கண்டிப்பா வருவேன்’ என்று பதில் சொல்லிக்கொண்டாள் மனதிற்குள்.

“நான் ஊருக்கு போனாலும் என்னோட சுவாசம் இங்க தான் சுத்திட்டு இருக்கும் உன்னால நிம்மதியா தூங்க கூடமுடியாது” என்றான் அவளின் எண்ணத்திற்கு பதிலாய்.

 

‘என்னாச்சு இன்னைக்கு இவ்வளவு பேசுறான். திடிர்னு லவ்வு கிவ்வு வந்திருச்சா இவனுக்கு என் மேல… ஆனா எப்படி வந்திச்சு ஏன் வந்திச்சு’ என்ற கேள்வி தான் அவளை குடைந்தது.

 

செவ்வந்தி கீழறங்கி சென்றவள் ரஞ்சித்திடம் சென்று வீராவிடம் சொல்லிவிட்டு வந்ததாக சொன்னவள் அவருடனே படுத்துக்கொண்டாள்.

 

அனைவரும் தூங்கி சில மணி நேரங்கள் கடந்திருக்கும். செவ்வந்திக்கு சட்டென்று விழிப்பு தட்ட கண் திறந்து பார்த்தாள்.

 

ரஞ்சிதம் ஏதோ முனகுவது போல் கேட்க பதறி எழுந்து அமர்ந்தவள் “அத்தை என்னாச்சு அத்தை” என்று அவரை உலுக்க வியர்த்து போய் படுத்திருந்தவர் நெஞ்சை பிடித்திருந்தார்.

 

“இங்… இங்க ஏ… ஏதோ கொஞ்சம் வலி…வலிக்குது…”

 

“ஹாஸ்பிடல் போகலாம் அத்தை, நீங்க எதுவும் டேப்லெட் எடுப்பீங்களா இதுக்கு”

 

இல்லை என்பதாய் அவர் தலை ஆடியது. அட்டாக்காக இருக்குமோ என்று தோன்றியது அவளுக்கு.

அவரின் நெஞ்சை அவள் நீவிவிட முயல “எனக்கு ஒண்ணும்மில்லை… நீ பார்த்துக்கோ…” என்றவர் அவள் கையை இறுக்கி ஒரு முறை பிடித்தார்.

 

அவ்வளவு தான் அவ்வளவே தான் அதற்கு பின் அவரிடம் எந்த வித அசைவுமில்லை. செவ்வந்திக்கு அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் எழுந்தது.

 

தாமரையை நிமிர்ந்து பார்க்க அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். “அத்தை… அத்தை” என்று அசைத்து பார்க்க அவரிடம் அசைவே இல்லை.

 

“அத்தை உங்களுக்கு ஒண்ணுமில்லை அத்தை, ஒண்ணும்மில்லை” என்று தொடர்ந்து முணுமுணுத்தவாறே அவரின் நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுத்து பார்த்தாள்.

 

அவளின் குரல் கேட்டு இப்போது தாமரை விழித்திருக்க “என்னாச்சு மதினி அம்மாக்கு என்னாச்சு??” என்று பதறி எழுந்தமர்ந்திருந்தாள் அவள்.

 

“ஒண்ணுமில்லை அண்ணி, நீங்க பதட்டப்படாதீங்க” என்றவள் மாமனாரை அழைக்க சென்றாள்.

 

வேகமாய் பின் வீட்டிற்கு சென்று கதவை தட்ட சிவந்த விழிகளுடன் கீழறங்கி வந்தான் வீரா.

 

“என்ன?? தாமரைக்கு பெயின் எதுவும் வந்திட்டா” என்றான் பதட்டமாய்.

 

“இல்லை அத்தை… அத்தைக்கு நெஞ்சு வலி… அத்தை…” என்று திணறினாள்.

 

“என்னன்னு சொல்லு??” என்று அவளை உலுக்கினான்.

 

“அத்தைக்கு ரொம்ப வேர்த்திச்சு… நெஞ்சு வலி, பேச்சு மூச்சில்லை. நான் போய் என்னோட ஸ்டெத் எடுத்திட்டு வர்றேன்” என்றவள் அவசரமாய் மாடியேறி சென்றாள்.

 

ஏறிய வேகத்தில் திரும்பி அவள் வந்திருக்க வீரா அங்கில்லை.

 

வேகமாய் முன் வீட்டிற்கு சென்றவள் ஏற்கனவே அவரின் கையில் நாடி பார்த்து சோதித்திருந்தாலும் ஸ்டெத்தின் உதவியுடன் அவரின் இதயத்துடிப்பை அறிய முயற்சி செய்தாள். அவரின் இதயம் முற்றிலும் நின்று போயிருந்தது…

 

தான் எதற்காய் அவருடன் அன்று படுத்துக்கொண்டோம் அவர் ஏன் அப்படி சொன்னார் என்று இன்று வரையிலும் புரியாமல் தான் போனது அவளுக்கு.

 

இருவருக்குமே அன்றைய நாள் வெகு கடினமான நாளாயிருந்தது. ரஞ்சிதத்தின் அடக்க காரியங்கள் நடந்து முடிந்த அன்று இரவு…

 

எல்லோரும் சாப்பிட்டு உறங்கச் சென்றிருந்தனர். தாமரையின் மாமியார் தாமரையுடன் படுத்துக்கொள்ள மேலும் சில உறவினர்கள் ஹாலில் படுத்திருந்தனர்.

 

வீராவிற்கு உணவு கொடுத்து வந்திருந்தவள் மயிலு முல்லையுடன் சேர்ந்து லேசாய் பெயருக்கு மீண்டும் கொறித்தாள்.

 

மயிலு அவள் வீட்டிற்கு சென்றுவிட முல்லையும் தமக்கையிடம் தலையாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தாள்.

 

செவ்வந்திக்கு இப்போது எங்கு படுப்பது என்று பெரிய கேள்வியாக இருந்தது. தாமரையுடன் படுத்துக்கொள்ளலாம் என்றால் அவளின் மாமியார் உடனிருக்கிறார்.

 

‘என்ன செய்ய’ என்று கையை பிசைந்தவாறே அவள் ஹாலில் உலவிக்கொண்டிருக்க சக்திவேல் சோர்வாய் அவர் அறையில் இருந்து வந்தார்.

 

“என்னம்மா இங்க இருக்க படுக்கலையா??”

 

“இல்லை மாமா எங்க படுக்க… அதான் யோசிச்சுட்டு இருக்கேன், காலையில வேற சீக்கிரம் எழணுமே” என்று இழுத்தாள்.

 

“உங்க ரூமுக்கு போம்மா, வீரா காத்திட்டு இருப்பான் பாரு. அங்க போ… காலையில சீக்கிரம் எழுந்துக்கலாம் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க நீ போ” என்று மருமகளை அனுப்பி வைத்தார்.

 

அவரிடம் தலையாட்டி அவர்கள் அறைக்கு செல்ல வீரா அங்கில்லை. எங்கு சென்றிருப்பான் என்று அவள் யோசிக்கவெல்லாம் இல்லை. தனிமையில் வந்து விழுந்ததும் தான் ரஞ்சிதம் பற்றிய எண்ணங்கள் பூதாகரமாய் எழுந்தது.

 

அது கொடுத்த அழுத்தம் தாங்காமல் அதுவரை கஷ்டப்பட்டு தேக்கி வைத்திருந்த கண்ணீர் மளமளவென்று கன்னங்களில் வழிந்தோட கட்டிலில் விழுந்தவளின் உடல் அழுகையில் குலுங்கியது……

Advertisement