Advertisement

அத்தியாயம் – 13

 

வீடு முழுவதும் உறவினர்கள் கூட்டம் கூடியிருந்தது. ஓரிரு நாளுக்கு முன்னர் தான் நல்லதிற்காய் கூடியிருந்த கூட்டம் இப்படி ஒரு நிகழ்விற்கு வருவோம் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டர்!!

 

ஆங்காங்கே கேட்ட அழுகுரலும் ஓலமிடும் சத்தங்களும் மனதை உருக்கி உடைத்துப் போடுவதாய் தானிருந்தது.

 

பாட்டோடு சேர்ந்த ராகத்தோடு ஒப்பாரியை வைத்துக்கொண்டு தாமரையை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தது தண்டட்டி அணிந்த ஒரு பாட்டி.

 

வீரா இறுகிய முகத்துடன் வாயிலில் நின்றிருந்தான். அவனருகில் பலர் வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

அவன் காதுகள் அதற்கு செவி மடுத்ததோ இல்லையோ கண்கள் மொத்தமும் உள்ளே படுத்திருந்தவரையே சுற்றி வந்தது.

 

போர்க்களத்தில் இருப்பவனுக்கு இழப்பென்பது புதிதல்ல தான். ஆனால் மனதிற்கினியவரை இழப்பதென்பது வேறாயிற்றே!!

 

நெஞ்சு முழுதும் ஏதோவொன்று அடைத்துக் கொண்டிருந்தது அவனுக்கு. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்ணாடி பேழைக்குள் அடங்கிவிட்டவரின் முகத்தை மட்டுமே பார்த்திருந்தான்.

மதுராம்பாளின் குடும்பமும் அங்கு தானிருந்தது. இப்படி ஒரு இழப்பை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

 

இழப்பு என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே!! எதிர்பார்த்தால் அது இழப்பில்லையே!! செவ்வந்தி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்!!

 

கேட்பவர்களுக்கு பதில் சொல்வதும் அவ்வப்போது தாமரையை தேற்றுவதும் என்று அவள் முழுக்க முழுக்க அதிலேயே இருந்தாள்.

 

அழுவதற்கு கூட அவளுக்கு அவகாசமில்லை. அதை செய் இதை செய் என்று யாராவதொருவர் அவளை ஏவிக் கொண்டிருந்தனர்.

 

கிடைத்த ஐந்து நிமிடத் தனிமையில் உள்ளிருந்து வெளியில் தான் பார்த்தாள். கண்களில் கடகடவென்று நீர் நிறைய ஆரம்பித்தது.

 

கொஞ்சம் உலுக்கினாலும் அவள் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எதற்கும் தயாராய் இருந்தது கண்ணீர்.

 

முதல் நாள் வரை சந்தோசமாய் சிரித்து பேசிக் கொண்டிருந்த ரஞ்சிதம் உயிற்றவராகிப் போனதை அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.

 

அவரின் மூச்சு நின்றுவிட்டது என்று உறுதிப்படுத்தியவளுக்கே இன்னமும் சந்தேகம் தான்!! அவர் எழுந்து வந்துவிட மாட்டாரா!! என்ற நப்பாசை அவளுக்கு. “செவ்வந்தி என்னம்மா பண்ணுற??” என்று கேட்கமாட்டாரா என்றிருந்தது.

 

அவள் அழுகை அணையுடைக்கும் முன் யாரோ அவளை அழைக்கும் சத்தம் கேட்கவும் வேகமாய் வெளியில் வந்தாள்.

 

“என்ன செவ்வந்தி எப்போ பாரு உள்ளார போய் உட்கார்ந்துக்கற, தாமரை ரொம்ப நேரமாய் அழுவுது பாரு!!”

 

“உள்ளார கூட்டிட்டு போய் படுக்க வை!! வயித்து புள்ளைக்காரி ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்க வேணாம்”

 

“அவங்க அம்மாவை பார்த்து ஏங்கி ஏங்கி அழுவறா!!” என்று ஒருவர் சொல்ல தாமரையின் அருகில் சென்றாள் அவள்.

 

“அண்ணி!! கொஞ்ச நேரம் உள்ள வந்து படுங்க அண்ணி!!” என்றழைத்தாள். தாமரையோ அழுகையைவிட்ட பாடில்லை.

 

“அண்ணி ப்ளீஸ் அண்ணி ரொம்ப அழுகாதீங்க!! நிறை மாசமா இருக்கீங்க!! பாப்பாவுக்காக கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அண்ணி”

 

“என்னால முடியலை மதினி!! இனிமே எங்கம்மாவை பார்க்க முடியாதுல்ல!! நான் இங்க இருந்து வரமாட்டேன்!!” என்றவளின் கண்ணீரை நிறுத்த முடியவில்லை.

 

அவளின் கணவன் ரவி அருகே வந்து அவளிடம் ஏதோ பேசவும் தான் அவள் அங்கிருந்து எழுந்து வந்தாள்.

 

உள்ளே வந்து படுத்திருந்தவளை நெருங்கி “எதுவும் வேணுமா அண்ணி!! காலையில இருந்து சாப்பிடாம இருக்கீங்க!! ஜூஸ் எடுத்துட்டு வரட்டுமா!!”

 

“வேணாம் மதினி!!” என்று லேசான விசும்பலுடன் சொன்னவள் “மதினி” என்று அழைத்துவிட்டு சுற்று முற்றும் பார்த்தாள்.

 

செந்தாமரை அப்படி பார்ப்பதை கண்டவள் அவளுமே சுற்றி பார்த்தாள். “சொல்லுங்க அண்ணி!!”

 

“நான் கொஞ்ச நேரம் அம்மா பக்கத்துல உட்காருறேனே!!” என்று பாவமாய் கேட்டவளை பார்த்து “என்னாச்சு அண்ணி??”

 

“உங்க அண்ணா என்னை சத்தம் போடுறாங்க!! நான் அழுதிட்டே இருந்தா அவங்க பிள்ளைக்கு எதாச்சும் ஆகிடுமாம்!!”

 

“என்னால அழாம எப்படி மதினி இருக்க முடியும். அவங்க எங்கம்மா… என் வயித்துல இருக்கற பிள்ளையை நான் கவனிக்காமலா இருப்பேன். சட்டுன்னு ஒரு மாதிரியா பேசுறாங்க” என்றவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை.

“அண்ணி ப்ளீஸ் அழாதீங்க!! நானும் கூட குழந்தைக்காக பார்க்க சொன்னேன் தானே. அண்ணாவும் அது போல தான் சொல்லியிருப்பாங்க”

 

“நீங்க கண்டதையும் போட்டு மனசை குழப்பிக்காதீங்க!! அத்தைக்கு நீங்க இப்படி இருந்தா பிடிக்காது அண்ணி… அவங்களும் இதை தான் சொல்லியிருப்பாங்க”

 

“பாருங்களேன் உங்களுக்கு நம்ம அத்தையே வந்து பிறக்க போறாங்க பாருங்க!!” என்று சமாதானம் செய்ய “நிஜமாவா அம்மா தான் பிறப்பாங்களா!!” என்றாள் வழிந்த கண்ணீருடன்.

 

“நீங்க மாமாவை யோசிச்சு பாருங்க!! உங்க அண்ணா இதுவரை வாயே திறக்கலை, யார்கிட்டயும் அவங்க பேசக் கூட இல்லை!!”

 

“நீங்களாச்சும் அழுது தீர்க்கறீங்க!! எனக்கு அவங்களை நினைச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு அண்ணி” என்று தாமரையின் எண்ணப் போக்கை வேறு புறம் திருப்பினாள் செவ்வந்தி.

 

அது ஓரளவிற்கு வேலை செய்தது. “எனக்கும் அப்பா நினைச்சா கவலையா தான் இருக்கு அண்ணி!! அண்ணாக்கு அம்மான்னா உயிர், எப்படி பீல் பண்ணுறாங்களோ” என்றாள்.

 

“நீங்க கவலைப்படாம இருங்க அண்ணி, நான் பார்த்துக்கறேன் அவங்களை. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, பசிக்குதுன்னா சொல்லுங்க அண்ணி”

“யாராச்சும் எதாச்சும் சொல்லுவாங்கன்னு பேசாம இருக்காதீங்க” என்று மெதுவான குரலில் தாமரையிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

மாலை நெருங்க யாரோ “நேரமாச்சுப்பா சட்டுபுட்டுன்னு எடுங்க” என்று கூற அதுவரை உள்ளே கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தது வெடித்து வந்துவிடும் போல் இருந்தது செவ்வந்திக்கு.

 

இதோ ஆயிற்று எல்லாம் முடிந்து போனது. மகராசியாய் சென்று சேர்ந்துவிட்டார் ரஞ்சிதம்.

 

செவ்வந்திக்கு உட்கார கூட நேரமில்லை. இவ்வளவு வேலைகள் செய்தும் பழக்கமில்லை. இருந்தும் எல்லாம் அவளே செய்தாள்.

 

தோழி மயிலும் தங்கை முல்லையும் அவள் வேலைகளை பகிர்ந்து கொண்டனர்.

 

இது நாள் வரை இவ்வளவு வேலைகளும் பொறுப்பும் அவளுக்கு இருந்ததில்லை. ரஞ்சிதம் இல்லாமல் போனதும் தானாய் அந்த பொறுப்புகளை எடுத்துக்கொண்டாள் செவ்வந்தி.

 

சில மாதங்கள் முன்பு வரை இதை செய் என்று சொன்னால் கூட செய்ய யோசிப்பவள், செய்ய முடியாது என்று நிர்தாட்சண்யமாய் பேசுபவள் வாழ்க்கையின் பாதைக்குள் அடித்து வைக்க ஆரம்பித்திருந்தாள்.

 

வேறு ஒருவர் பொறுப்புகளை கொடுத்து அதை சுமப்பதை விட, தானாய் சுமக்கும் பொறுப்புகளில் அதிக கவனமிருக்கும்.

 

ரஞ்சிதம் என்ற அடிவாழை சாய்ந்து குருத்தான செவ்வந்தியின் மீது தன் பொறுப்புகளை விட்டுச் சென்றிருந்தது.

 

அவளுக்குள் முதலில் தடுமாற்றம் இருந்தாலும் மெதுவாய் சமாளித்துக் கொண்டாள்.

 

எதை எப்படி செய்வது என்று வந்திருந்தவர்களிடம் கேட்க ஆளுக்கு ஒரு மாதிரி செய்ய சொல்லவும் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனாள்.

 

பின் முல்லையை விட்டு மதுராம்பாளிடம் கேட்டு வரச் செய்து தானாய் ஒவ்வொன்றாய் செய்யப் பழகினாள்.

 

கைக்கொடுத்து எழுந்து நடக்கும் பிள்ளையை விட தட்டுத்தடுமாறி விழுந்து எழும் பிள்ளையே விரைவில் நடக்கவும் ஓடவும் கற்றுக்கொள்ளும். செவ்வந்தியின் தற்போதைய நிலை அது தான்.

 

வந்திருந்தவர்களுக்கு உணவு வாங்கி வர ஆட்கள் சென்றிருந்தாலும் அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவளது என்று உணர்ந்தே தானிருந்தாள்.

 

ரஞ்சிதத்திடம் அவள் முதலில் கற்றுக்கொண்ட பழக்கம் ஒன்று உண்டென்றால் அது இது தான். வந்தவர்களை உபசரிப்பது.

வயிறு வாடாமல் பார்த்துக் கொள்வதும் உபசரிப்பும் முக்கியம் என்பது அவரை பார்த்து கற்றுக் கொண்டாள்.

 

வீட்டிற்கு செடிகளை வெட்டிவிட, குப்பைகளை அள்ள என்று வருவோரை கூட விட்டுவைக்க மாட்டார் ரஞ்சிதம்.

 

“காலையில என்ன சாப்பிட்ட பொன்னி!! கூழ் குடிச்சுட்டு போ!! இட்லியும் கறிகுழம்பும் வைச்சேன் சாப்பிடு!!” இப்படிதான் இருக்கும் அவர் பேச்சு.

 

செவ்வந்தி அங்கிருக்கும் வேளைகளில் அவரை உன்னிப்பாய் பார்த்திருந்தாள்.

 

அதனாலேயே அவளுக்கும் அந்த பழக்கம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டது. ரஞ்சிதம் வேலையாய் இருந்தாலும் செவ்வந்தி அவர்களை கவனிக்கக் கற்றுக் கொண்டிருந்தாள்.

 

“உன்னை மாதிரியே உன் மருமகளும்” என்று ஓரிருவர் சொல்லிச் சென்றது அப்போது அவளுக்கு நிறைவாய் இருந்தது.

 

ரஞ்சிதத்தின் பெயருக்கு எந்த களங்கமும் வராமல் நல்லவிதமாய் இருக்க வேண்டும் என்பதில் அவள் கவனமாய் இருந்தாள்.

 

இன்னும் சற்று நேரத்தில் இடுகாட்டிற்கு சென்றவர்கள் வந்துவிடுவர். விளக்கேற்றி வைக்கவேண்டும் வாசலில் நீர் எடுத்து வைக்க வேண்டும் இன்னமும் என்ன தான் செய்கிறார்களோ என்று யாரோ ஆரம்பிக்க வேகமாய் அங்கு விரைந்தாள்.

 

“இந்த புள்ளை இவ்வளவு சின்ன புள்ளையா இருக்கு எப்படி தான் இனி பார்த்துக்க போகுதோ!!” என்று சிலரும் “ரஞ்சிதம் மருமகளா இருந்திட்டு மசமசன்னு இருக்கா!! குறுக்கு வழியில வந்ததெல்லாம் இப்படி தான் இருக்கும்” என்று பேசுவது அவள் காதில் விழுந்து வைத்தது.

 

இது போன்ற பேச்சுக்களை எல்லாம் செவ்வந்தி எப்போதும் பொறுத்தது கிடையாது. பதிலுக்கு பதில் முகத்துக்கு நேரே கேட்டுவிடும் ரகம் அவள்.

 

அவள் வாய் பேச முடியாமல் எல்லார் முன்பும் அமைதியாய் நின்றது இதே வீட்டில் தான் என்பது ஞாபகத்திற்கு வந்தது.

 

அன்று அவளை பேசவிடாமல் செய்தது மதுராம்பாளும் அவள் அன்னையும். இன்று அவளாகவே பேசாமலிருப்பது ரஞ்சிதத்திற்காய்!!

 

வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. தினம் ஒரு வழிகாட்டியாய் இருப்பது நாட்களென்றால் மிகையாகாது.

 

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதாய் இருந்தாலும் செவ்வந்தியின் பேச்சில் எப்போதும் ஒரு நேர்மை இருக்கும், அவள் முடிவில் எப்போதும் தெளிவிருக்கும்.

ஆனால் அவளிடத்தில் எப்போதும் அதிகமில்லாதது பொறுமையும் நிதானமும். அந்த பாடத்தை காலம் அவளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.

 

பேசுபவர்களுக்கு எல்லாம் பதில் கொடுத்துக் கொண்டிருந்தால் வேறு வேலை பார்க்க முடியாது. நம் வேலையை நாம் பார்ப்போம் என்ற மனோபாவத்திற்கு வந்தவள் வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

வீட்டிற்கு வந்த வீராவோ யாரிடமும் பேசாமல் பின்னால் இருந்த வீட்டிற்கு சென்றுவிட்டான்.

 

தாமரையை சாப்பிட வைத்து சக்திவேலை சாப்பிட வைத்து ஓய்ந்து போய் அமர்ந்தவளுக்கு கணவனின் நினைவு வர ‘பாவம் காலையில இருந்து அவரும் சாப்பிடவே இல்லையே’ என்று எண்ணிக்கொண்டு அவனுக்கு உணவை எடுத்துக்கொண்டு பின்னால் சென்றாள்.

 

மயிலையும் முல்லையையும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டே நகர்ந்திருந்தாள். அங்கு பின் வீட்டில் கீழிருந்த ஹாலில் உறவினர்கள் ஆங்காங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

 

அங்கிருந்தவர்களை சம்பிரதாயமாக விசாரித்து படியேறி அவர்கள் அறைக்குள் சென்றாள். வீரா பால்கனியில் நின்றுக்கொண்டு இருளை வெறித்திருந்தான்.

 

அவனை இப்படி ஒரு நிலையில் இது நாள் வரை கண்டதில்லை அவள். அவனிடத்தில் எப்போதுமே ஒரு நிமிர்வு இருக்கும், ஆனால் இன்று அவனிடத்தில் அது இல்லை.

 

தளர்ந்து போய் நின்றிருந்தான் அவன், தாமரை சொன்னது ஞாபகம் வந்தது அவளுக்கு. அண்ணனுக்கு ரஞ்சிதத்தின் மேல் பிரியம் அதிகம் என்பது.

 

கையில் வைத்திருந்ததை அருகிருந்த டேபிளில் வைத்துவிட்டு “என்னங்க” என்று அவனை அழைத்து பார்த்தாள்.

 

அவனிடத்தில் எந்த அசைவுமே இல்லை. அவனருகே சென்று அவன் தோளில் தட்டி “என்னங்க” என்று அழைக்கவும் திரும்பி பார்த்தான்.

 

அப்போதும் எதுவும் பேசவில்லை. “சாப்பிட வாங்க” என்றழைத்தாள்.

 

“வேணாம்” என்றான் ஒற்றைச் சொல்லாய்.

 

“காலையில இருந்து நீங்க ஒண்ணுமே சாப்பிடலை, கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க!! இப்போவே தலைவலி வந்திருக்கும் உங்களுக்கு”

 

“ப்ளீஸ் எனக்கு எதுவும் வேணாம்” என்றான்.

 

“நீங்க கீழ தானே உட்கார்ந்து சாப்பிடுவீங்க!! அப்படியே சாப்பிடுங்க வேணாம்ன்னு மட்டும் சொல்லாதீங்க”

“நீங்க இப்படி இருக்கறது அத்தைக்குமே பிடிக்காது” என்று அவள் சொல்லவும் அவளை திரும்பி பார்த்தான்.

 

அவளருகே நெருங்கி வந்தவன் என்ன செய்யப்போகிறான் என்று யோசிப்பதற்குள் அவள் இருகைகளையும் பற்றி அவன் கண்ணில் வைத்துக் கொண்டான்.

 

“என்… என்னாச்சுங்க ஏன் இப்படி எல்லாம்” என்று “நீ…” என்று ஆரம்பித்தவன் அப்படியே நிறுத்திக்கொண்டான்.

 

பற்றியிருந்த அவள் கையை விட்டவன் அவளை பார்த்து “நீ சாப்பிட்டியா??” என்றான்.

 

இன்றைய பொழுதில் இதுவரை யாருமே அவளிடத்தில் இப்படி கேட்கவேயில்லை.

 

இல்லை என்பதாய் அவள் தலையசைத்தாள். “ஏன் சாப்பிடலை??”

 

“எல்லாரையும் பார்க்கணும்ல, இப்போ தான் தாமரை அண்ணி சாப்பிட வைச்சு, மாமாக்கும் சாப்பாடு கொடுத்திட்டு வர்றேன்”

 

“நீங்களும் சாப்பிட்டா கீழே போய் சாப்பிட்டுக்குவேன்” என்றாள்.

 

“என்னோடவே சாப்பிடு” என்றான்.

 

‘என்னாச்சு இவருக்கு புதுசா பேசுறாரு’ என்று முதன் முறையாய் அவளின் மனதிற்குள்ளும் அவனுக்கு மரியாதை கொடுத்து பேசிக்கொண்டாள்.

 

“இல்லை நான் அப்புறம் சாப்பிடுறேன், உங்களுக்கு மட்டும் தான் கொண்டு வந்தேன்” என்றாள்.

 

“நீ சாப்பிடுறதுன்னா சொல்லு நானும் சாப்பிடுறேன் இல்லைன்னா எடுத்திட்டு போய்டு” என்றான்.

 

“இல்லை பத்தாது அதுக்கு தான் சொன்னேன்…” என்று இழுத்தாள்.

 

“இருக்கறதை ஷேர் பண்ணிக்கலாம்”

 

“ஹ்ம்ம்” என்றவள் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க “உருட்டி கொடுக்கறியா!!” என்று வாய்விட்டு கேட்டான்.

 

‘என்ன’ என்று அவனை ஆச்சரியமாய் பார்த்தாலும் அவன் கேட்டதை அவள் கை செய்துக் கொண்டிருந்தது.

 

மெதுவாய் கேட்டாள் அவனிடத்தில். “அத்தை இப்படி செய்வாங்களா??” என்று.

 

அவளுக்கு பதிலேதும் சொல்லவில்லை அவன் பார்வை சொன்னது ஆம் என்று. இருவருமே கீழேயே அமர்திருந்தனர்.

 

அவனுக்கு கொடுத்து அவளும் கொஞ்சம் அவன் திருப்திக்காய் உண்டாலும் பெரும்பான்மையை அவனுக்கே கொடுத்திருந்தாள். இப்படி எல்லாம் தனக்கு எப்போது தோன்ற ஆரம்பித்தது என்று அவளுக்கே தெரியவில்லை.

 

சில விஷயங்கள் கற்றுக்கொடுத்து வருவதில்லை, தானாய் வந்துவிடும். அது போலவே அவனை உண்ண வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்கே அதிக உருண்டையை பிடித்து கொடுத்திருந்தாள்.

 

சாப்பிட்டு எழுந்தவன் “தேங்க்ஸ்” என்றான். அவனுக்கு ஒரு மென்னகையை சிந்திவிட்டு அங்கிருந்து நகரப்போனவள் “தலைவலிக்குதா டேப்லெட் எதுவும் கொடுக்கட்டுமா” என்றாள்.

 

“தூங்குறதுக்கு தான் வேணும், இருக்குமா”

 

“தூக்க மாத்திரை வேண்டாமே!! உங்களுக்கு தலைவலி போனாலே தூக்கம் தன்னால வந்திடும்” என்றவள் அங்கிருந்த மேஜை இழுப்பறையை திறந்து எதையோ தேடியவள் அவனிடம் அந்த மாத்திரையை கொடுத்து தண்ணீரையும் கொடுத்தாள்.

 

அதை வாங்கி விழுங்கியவன் தண்ணீர் பாட்டிலை அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.

 

அதுவரையிலும் அவன் முகத்தை தான் பார்த்திருந்தாள் அவள். உள்ளே நுழைந்த போது இருந்ததைவிட இப்போது அவன் முகம் சற்று தெளிந்திருந்ததை கண்டுக்கொண்டாள்.

 

மனதினுள் லேசாய் ஒரு நிம்மதி அதை கண்டு. “நீங்க படுங்க, நான் கீழே போறேன்” என்றவளின் கைப்பிடித்து தடுத்தான்.

 

“என்ன??” என்றாள் தயங்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டு.

 

அவள் கையில் இருந்ததை வாங்கி மேஜையில் வைத்தவன் எதிர்பாரா நேரத்தில் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

 

என்ன செய்யப்போகிறான் என்று எதிர்பார்க்கும் முன்னரே அணைத்திருந்தான். அவள் தோளில் ஈரம் படர்வதை அவளால் உணர முடிந்தது.

 

‘அழுகிறாரா’ என்று எண்ணியவளுக்கும் இப்போது அழுகை வரும் போல் இருந்தது.

 

ஆண் மகன் அழுவதை முதன் முதலாய் பார்க்கிறாள் இல்லையில்லை உணர்கிறாள் அவன் தான் முகத்தை அவள் தோளில் புதைத்திருக்கிறானே!!

 

“என்னங்க” என்றவளின் கரம் அவன் தலைமுடியை கோதுவதை அவளே உணரவில்லை.

 

பதிலுக்கு அவன் ஒன்றுமே பேசவில்லை. என்னைவிட்டு போகாதே என்பது போன்ற ஒரு இறுக்கத்தை கொடுத்தான்.

 

இருவருக்குமான முதல் அணைப்பு அது, ஆனால் அங்கு காமமில்லை. அரவணைப்பான அணைப்பு அது. வேறு யாரிடமும் அதிகம் பழகாதவன் அவன் என்பது அவளறிவாள்.

 

நண்பர்கள் அவனுக்கு உண்டென்றாலும் அளவோடு தான் பேச்செல்லாம் என்று ரஞ்சிதம் மகனை பற்றி சொல்லியிருக்கிறாரே.

 

முதன் முதலாய் அவன் ஆறுதல் தேடுகிறான் அதுவும் தன்னிடத்தில். அந்த நிமிடம் சட்டென்று அவள் மனதில் நுழைந்து அரியாசனம் போட்டு அமர்ந்துவிட்டான் அவன்.

 

அவன் தலைகோதியவாறே “ப்ளீஸ் நீங்க இப்படி இருக்காதீங்க”

 

“மனசுக்கு என்னமோ போல இருக்கு!! நீங்க அத்தையை எவ்வளவு மிஸ் பண்ணுறீங்கன்னு எனக்கும் புரியுது!! நீங்க தானே எல்லாம் பார்க்கணும்”

 

“இப்படி சோர்ந்து போனா எப்படி மாமாக்கும் தாமரை அண்ணிக்கும் ஆறுதல் சொல்வீங்க!!”

 

அவளை விடுவித்தவன் அவள் கண்களையே கூர்ந்து பார்த்தான்.

 

“உனக்கு எதுவுமே தோணலையா”

 

“என்ன கேட்கறீங்கன்னு புரியலை??” என்றாள்.

“அம்மா போனது பத்தி உனக்கு வேற…” என்று பாதியில் நிறுத்தினான்.

 

“வருத்தமாயில்லையான்னு கேட்கறீங்களா!!”

 

அவன் தலை தானாய் ஆடி ஆமென்றது. அவனுக்கு தெரியும் செவ்வந்திக்கு ரஞ்சிதம் மீது மிகுந்த பிரியம் உண்டென்று.

 

ஆனால் அவன் கவனித்த வரையில் இதுவரையிலும் கூட அவள் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை என்பது அவனுக்கு ஆச்சரியமே!!

 

அவரின் மேல் பிரியம் உள்ளவளால் எப்படி அப்படி இருக்க முடிகிறது. ஆண் மகன் என்னாலே தாங்க முடியவில்லை ஆறுதல் தேடுகிறேன். இவளானால் இப்படி இருக்கிறாளே என்பது தான் அவன் எண்ணம்.

 

அவள் கழுத்தை தொட்டுக் காண்பித்து “இதுவரைக்கும் அடைச்சுக்கிட்டு தான் இருக்கு… நான் அழறதுக்கு இது நேரமில்லை”

 

“நானும் அழுதிட்டு இருந்தா உங்களை எல்லாம் எப்போ பார்க்கறது” என்றாள் சாதாரணமாய்.

 

அந்த கணம் அப்படியே அவன் மனதில் இன்னும் அழுத்தமாய் பதிந்து போனாள் அவள். இதுநாள் வரை ஏதோவொரு ஈர்ப்பில் அவளை சுவாரசியமாய் பார்த்திருந்தான்.

 

அவள் தன் மனைவி என்று பார்த்திருந்தானா வேறு எதுவும் காரணமா என்றெல்லாம் அவனுக்கே தெரியவில்லை.

 

அன்று போலல்லாமல் இன்று அவளை புதிதாய் பார்த்திருந்தான். ‘என்ன பெண் இவள் அழுகையை கட்டுப்படுத்துக்கிறாளா!! ச்சே எனக்கு ஏன் இதெல்லாம் தோன்றவில்லை’

 

வீட்டில் ஒரு பெண்மணி இல்லையென்றால் ஒரு குடும்பம் எப்படியாகும் என்பதை உணர்ந்தவனுக்கு அதை ஈடுகட்டும் விதமாய் செவ்வந்தி நடந்து கொண்டது இதமாய் இருந்தது.

 

அவன் நண்பர்கள் வந்த போது கூட தேடாத ஆறுதலை ஏனோ அவனால் மனைவியிடத்தில் மட்டுமே தேட முடிந்தது. அது ஏனென்று யோசிக்கக்கூட அவகாசமில்லை அவனுக்கு.

 

அவள் இறங்கி சென்றதும் மீண்டும் ஒரு வெறுமை தோன்றியது. ரஞ்சிதத்தை பற்றிய நினைவுகளில் முழ்கியவனை தூக்கம் மெதுவாய் ஆட்க்கொண்டிருந்தது.

 

ஆயிற்று இத்தோடு பதினாறு நாள் காரியங்களும் முடிந்து போனது.

 

இந்த பூமியில் பிறந்து ஒருவருக்கு மகளாய் இன்னொருவருக்கு மனைவியாய் இரு குழந்தைகளுக்கு தாயாய் கடமையாற்றியவர் தன் பணி முடிந்ததென்று போய் சேர்ந்து இன்றோடு பதினாறு நாட்கள் ஆனது.

 

வந்திருந்த உறவுக்கூட்டங்கள் கலைந்திருந்தது. முக்கிய சில உறவுகள் மட்டுமே இருந்தனர்.

 

அவர்கள் அங்கு இருந்ததிற்கான நோக்கம் அப்போது தான் வெளிப்பட ஆரம்பித்தது.

 

தாமரை ரஞ்சிதத்தின் இழப்பில் இருந்து இன்னமும் வெளி வந்திருக்கவில்லை.

 

எப்போதும் ஒரு சோர்வு அவளிடத்தில், அவளுக்கு மாதம் வேறு நெருக்கி வந்திருந்தது.

 

மருத்துவர்கள் அவளுக்கு கொடுத்திருந்த நாட்களோ ஒரு மாதத்திற்கும் மேல் இருந்தாலும் இன்னும் இருபது நாட்களுக்குள் அவளுக்கு பிரசவமாகிவிடும் என்பது செவ்வந்தியின் கணிப்பு.

 

தாமரையின் மேடிட்ட வயிறு நன்றாய் இறங்கி இருந்தது.

 

தாமரையின் மாமியார், மாமனார் எல்லோரும் அங்கிருந்தனர். அவர்கள் ஏதோ பேசத் தயாராய் இருப்பது போல் தோன்றியது செவ்வந்திக்கு.

 

வீராவும் சக்திவேலுவும் சோபாவில் அமர்ந்திருந்தனர். தாமரையின் மாமியார் தான் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

“தாமரையை நாங்க மதுரைக்கு கூட்டிட்டு போறோம். இனிமே அவ இங்க இருந்து என்னப் பண்ணப் போறா. நாள் வேற நெருக்கி வந்திட்டு, எந்த நேரமும் பிரசவம் ஆகலாம்”

 

“ஏன் மதுரைக்கு போகணும்?? தலைப்பிரசவம் தாய் வீட்டில தானே நடக்கணும்” என்று மறுத்து பேசினார் உறவினர் ஒருவர்.

 

செவ்வந்தி நிமிர்ந்து தாமரையை பார்த்தாள். அவளால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கண்களில் கண்ணீர் முட்ட அமர்ந்திருந்தாள்.

 

மதுராம்பாளும் முல்லையும் கூட அங்கு தானிருந்தனர். தாமரையின் மாமியார் பேசியதை கேட்ட மதுராம்பாளும் “என்ன பேசறீங்கம்மா!! அவளுக்கு நாங்க எல்லாம் இருக்கோமே”

 

“பார்க்க மாட்டோமா!! நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேணாம்” என்றார்.

 

“யாரு இருந்தாலும் பெத்தவ பார்க்குற மாதிரி ஆகாது. நீங்க சொல்றது சரியா வராதுங்க. அவங்க இருந்திருந்தா பரவாயில்லை”

 

“இப்போ அப்படி விட முடியாது!! எங்க வீட்டுக்கு முத வாரிசு அதை நல்லபடியா நாங்க பார்த்துக்கறோம். என்னங்க பேசாம இருக்கீங்க, சொல்லுங்க” என்று கணவரை பார்த்து சொன்ன தாமரை மாமியார் “ஏன்டா!! உனக்கென்ன வாயில கொழுக்கட்டையா இருக்கு”

“என்னையவே பேசவிட்டு எல்லாரும் தப்பா நினைக்க வைக்கணுமா உனக்கு!! உன் பிள்ளைக்காக தானேடா பேசறேன்” என்று மகனை பார்த்து சொல்லவும் அவர் தவறவில்லை.

 

வீராவோ எதையோ தடுத்து பேச ஆரம்பித்தவன் அவனுக்குமே தாமரை அவள் மாமியாரின் வீட்டிலேயே இருப்பது சரியென்று தோன்றிவிட பேசாமல் இருந்தான்.

 

சக்திவேலுக்கு தான் உள்ளுக்குள் பதறியது. ரஞ்சிதம் எப்படியெல்லாம் மகளை சீராட்ட ஆசைப்பட்டார் என்பதை அறிந்தவராயிற்றே!!

 

அவர்கள் எல்லாம் பேசுவதை அவராலும் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது. தாயை போல யார் பார்க்க முடியும், தன்னால் முடியும் தான் ஆனால் பெண்களின் பிரத்யேக உணர்வுகளை எல்லாம் மகளால் தன்னிடம் பகிர முடியாதே!!

 

அதுமில்லாமல் செவ்வந்தியையும் இதில் நுழைக்க முடியாது, சிறு பெண் அவள்.

 

அவளுக்கு படிப்பு வேறு இருக்கிறது என்று பலதும் யோசித்து அவரும் தாமரையின் மாமியாரின் பேச்சுக்கு சம்மதம் என்பது போல் அமர்ந்திருந்தார்.

 

“இப்படியே ஆளாளுக்கு பேசிட்டு இருந்தா எப்படி!! என்ன ஏதுன்னு சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க!! அந்த புள்ளைக்கு தலைபிரசவம் வேற”

 

“நாளும் அதிகமில்லை, சரின்னா அவங்களுக்கும் ஊருக்கு காலாகாலத்துல கூட்டிட்டு போவாங்கள்ள” என்றார் உறவினர் ஒருவர்.

 

செவ்வந்தி எல்லோர் முன்னும் வந்து நின்றாள். “முடியாதுங்க எங்க அண்ணியை இப்போ அனுப்ப முடியாது”

 

“அவங்களை தாயும் சேயுமா தான் அனுப்புவோம். இந்த வீட்டில தான் அவங்க பிரசவம் நடக்கணும்” என்றாள் அழுந்ததிருந்தமாய்.

 

வீரா கூட அவள் பேச்சு கேட்டு ஆச்சரியமாய் தான் பார்த்தான். எப்படி முடியும் இவள் ஹாஸ்டலுக்கு சென்றுவிடுவாள்.

 

‘அப்பாவால் பார்த்துக் கொள்ள முடியாது. நான் உடனே வேலையை விட்டு வர முடியாது. எதை வைத்து இப்படி பேசுகிறாள்’

 

‘எல்லாம் யோசித்து தானே தாமும் பேசாமல் இருந்தோம், இவளானால் யோசியாமல் பேசுகிறாளே’ என்று ஆச்சரியமாய் தான் பார்த்தான்.

 

“அதெப்படிம்மா முடியும், இங்க யாரு இருக்கா பார்த்துக்கறதுக்கு!! நீ கொஞ்ச நாள் ஹாஸ்டல் போயிட போறே!! அப்புறம் எப்படி பார்த்துப்ப”

 

“நாங்க மதுரைக்கு கூட்டிட்டு போறோம், நீயும் ஹாஸ்டல்ல தான் இருக்கே!! வேணும்ன்னா தினம் வந்து பார்த்திட்டு போ” என்றார் செந்தாமரையின் மாமியார்.

 

“இல்லை தலைபிரசவம்ன்னு வந்திட்டு அவங்களை திருப்பி கூட்டிட்டு போறது சரியா படலை. அத்தை இருந்திருந்தா இப்படி செஞ்சிருக்க மாட்டீங்க தானே!!”

 

“என்னால பார்த்துக்க முடியாதுன்னு நினைக்கறீங்களா!! தாமரை அண்ணியை என்னால பார்த்துக்க முடியும். அத்தை எப்படி பார்த்து இருந்திருப்பாங்களோ அப்படியே என்னால பார்த்துக்க முடியும்”

 

“அண்ணிக்கு குழந்தை பிறந்து அஞ்சு மாசம் கழிச்சு தான் அனுப்புவோம். அதுவரைக்கும் நான் படிக்கப்போறதில்லை….” என்று அவள் சொல்லி முடிக்கவும் அப்படி ஒரு அமைதி நிலவியது அங்கு….

Advertisement