Advertisement

அத்தியாயம் – 12

 

அவள் தோழி மயிலிடம் பேசி வைக்கவும் அவளுடன் பயிலும் கிரேசி போன் செய்தாள் அவளுக்கு. “ஹேய் எப்படிடி இருக்க புதுப்பொண்ணு!!” என்று கிண்டல் செய்தாள் அவள்.

 

“என்னடி கொழுப்பா உனக்கு!!”

 

“யாருக்கு கொழுப்பு எங்களுக்கா!!”

 

“ஆமா உனக்கு தான் வேற யாருக்கு!!”

 

“ஏன்டி சொல்ல மாட்டே!! நானா கல்யாணம் ஆனதை மறைச்சேன்” என்றாள் அவள்.

 

“கிரேஸ் உண்மையை சொல்லு நான் உன்ட்ட சொல்லலை!! நீ தான் அதை நம்பலை!! அதுக்கு நான் என்ன செய்ய!!”

 

“ஏன்டி நீ அன்னைக்கு ஏப்ரல் பூல் பண்ணுற மாதிரி சொல்லி வைச்ச, அப்புறம் எப்படிடி நம்புறது உன்னைய!! அதுக்கு முத வட்டம் இப்படி தான் யாரையோ லவ் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்துன!!”

 

“அப்படிதானாக்கும்ன்னு நானும் நினைச்சுட்டேன்!! இதுக்கு தான் பொய்யான விளையாட்டை உண்மையா விளையாடக் கூடாதுங்கறது. இப்போ பாரு நீ உண்மை சொல்லி எனக்கு அது பொய்யா தெரிஞ்சிருக்கு”

 

“சரி அந்த கதை விடு, எப்படி இருக்கார் என்னோட கே.எம்” என்றாள் கிரேசி.

 

“ஹ்ம்ம் இருக்கார்!! இருக்கார்!!” என்ற செவ்வந்திக்கு அப்போது தான் அவனை பார்க்க வேண்டும் என்று தோன்ற மேடையை நோக்கி பார்வையை செலுத்தினாள்.

 

வீரா குனிந்து அவன் நண்பனின் காதில் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். கிரேசியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவள் கண்கள் அவனையே சுற்றி வந்து கொண்டிருந்தது அப்போது.

 

அவளின் பார்வை அவனை விட்டு வேறு எங்கும் போகவில்லை இப்போது. அதை அவள் சுத்தமாய் உணரவேயில்லை.

 

அவன் மேல் இருந்த கோபமெல்லாம் எங்கேயோ அடகு வைத்தார் போல் அது இப்போது அவளிடத்தில் காணாமல் போயிருந்தது.

 

“ஹேய் என்னடி கே.எம் சைட் அடிக்கிறியா!! அப்பப்போ ஆப் ஆகிடுற!!” என்றாள் கிரேசி.

 

“ஹ்ம்ம் அடிக்கிறாங்க இவரை சைட்டு!! போடி” என்று சலித்தாள்.

 

“அப்பாடா ரொம்ப சந்தோசம்டி அப்போ நான் சைட் அடிச்சுக்கறேன்டி… இருந்தாலும் இந்த சுமார் மூஞ்சி குமாரிக்கு அவர் கொஞ்சம் அதிகம் தான்டி” என்று தோழியை கிண்டல் செய்தாள் கிரேசி. இருவருமே இப்படி தான் ஒருவருக்கொருவர் தங்களை வாரிக்கொள்வர்.

 

“என்னை மாதிரி ரொம்ப சுமார் மூஞ்சி குமாரிக்கு கிடைச்சிருந்தா கூட ஓகே!! கிடைக்கிறது கிடைக்காம போகாது!! கிடைக்காதது கிடைக்காமையே போய்டும்!!” என்று வாய்க்கு வந்ததை எடுத்துவிட்டாள் செவ்வந்தியின் தோழி.

 

“ஆமாடி ரொம்ப சுமார் மூஞ்சி குமாரி!! நீயே சைட் அடிச்சிக்கோ!! பதிலுக்கு அவர் உன்னை அடிச்சா நான் ஏன்னு கூட கேட்க மாட்டேன்!!”

 

“ஓ!! கையை வைப்பாரா என் கருத்த மச்சான்” என்று கருத்த என்பதில் அழுத்தம் கொடுத்தாள் அவள்.

 

ஏனோ கிரேசி மீண்டும் மீண்டும் அவனை என் என்று சொல்லி சொல்லும் போது உள்ளே எதுவோ செய்தது.

 

சிறிது நேரம் தோழியிடம் அவள் பேசிவிட்டு வைக்கவும் வீரா அவளருகே வந்திருந்தான். “கொஞ்சம் மேல வா!! என் பிரண்டு உன்னை பார்க்கணும்ன்னு சொல்றான்”

 

“அவனுக்கு கிப்ட் கொடுத்திட்டு போட்டோ எடுத்திட்டு வந்திடலாம்” என்று அழைக்கக் எதுவும் மறுப்பு சொல்லாமல் அவன் பின்னே எழுந்து சென்றாள்.

 

போட்டோ எடுத்துக்கொள்ள அவனருகே நிற்க அவன் தோளை இடித்துக்கொண்டு நிற்க வேண்டி இருந்தது. அவன் நண்பர்கள் அத்துணை பேரும் நெருக்கி நின்றிருந்தனர்.

 

“தோள் மேல கையை போடுங்கப்பா ஜோடி!! ஜோடியா!!” என்று யாரோ சொல்ல எல்லோருமே தத்தம் ஜோடியின் தோளில் கையை போட அவள் தோளில் அவன் கரம் விழவும் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

அக்கணம் அவனுமே அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குமே அவ்வளவு நேரம் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த கோபமெல்லாம் விலகியது போலிருந்தது.

 

வீரா உரிமையுடன் அவள் தோளில் போட்டிருந்த கரத்தை போட்டோ எடுத்த பின்னும் கூட எடுக்கவேயில்லை.

 

“கை” என்று அவள் சுட்டிக்காட்டி சொல்லவும் “ஓ!! சாரி!!” என்றவாறே அதை எடுத்தான் அவன்.

 

கல்யாண வீட்டில் சாப்பிட்டு அவர்கள் கிளம்ப அவளருகே வந்த வீரா “நீ மூணாருக்கு இதுக்கு முன்னாடி வந்திருக்கியா??”

 

“இல்லை” என்று அவள் சொல்லவும் “அப்போ நாம சுத்தி பார்ப்போமா!!” என்று சொல்லவும் “ஹ்ம்ம்” என்று தலை சட்டென்று ஆடி தன் சம்மதத்தை சொல்லிவிட்டது.

 

‘அச்சோ என் தலைக்கு என்னாச்சு அடிக்கடி என் பேச்சு கேட்காம ஆடி வைக்குது’ என்று எண்ணி தலையில் ஒரு குட்டு வைத்துக் கொண்டாள்.

 

“அப்போ நாம ரூம்க்கு போயிட்டு டிரஸ் மாத்திட்டு போய்டலாம்!! இந்த சாரி உனக்கு அன்கம்பர்டபிளா இருக்கும்” என்றான்.

 

‘இவன் எனக்காக எல்லாம் எப்போ யோசிக்க ஆரம்பிச்சான்!!’

 

இருவருமாக அவர்கள் அறைக்கு வந்து சேரவும் வீராவின் கைபேசி அடிக்க ஆரம்பித்தது.

 

அதை பார்த்ததுமே “அச்சோ மறந்திட்டேன் திட்டப் போறான்” என்று சொன்னவன் செவ்வந்தியை திரும்பி பார்த்து “வந்தி ப்ளீஸ் ப்ளீஸ் டிரஸ் மாத்தாத!!”

 

“என் கூட வேலை பார்க்கற ரியாஸ் உன்கிட்ட பேசணுமாம்!! நம்ம ரெண்டு பேரையும் செல்பி எடுத்து அனுப்பச் சொன்னான்”

 

“அவன் தான் கூப்பிடுறான், எனக்காக ஒரு பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்” என்றுவிட்டு போனை அட்டென்ட் செய்தான்.

 

“ஏன்டா ஒரு போன் எடுக்க இவ்வளவு நேரமா” என்று பொரிந்தது எதிர்முனை.

 

“இல்லை ரியாஸ் இப்போ தான் கல்யாணம் முடிச்சுட்டு ரூம்க்கு வந்தோம். உன்னை பத்தி சொல்லிட்டு இருந்தேன், நீயே கால் பண்ணிட்ட”

 

“அப்படியா நீ என்னைப்பத்தி தான் சொல்லிட்டு இருந்தியா!! சரி நம்பிட்டேன்” என்றவன் “உடனே வாட்ஸ்அப் வீடியோ கால்ல வா பேசணும்”

 

“ரெண்டு பேரோடவும்” என்று சேர்த்துச் சொன்னான்.

 

போனை வைத்தவன் “வாட்ஸ்அப்ல கூப்பிட சொல்றான்” என்றுவிட்டு வீடியோ கால் செய்தான்.

 

“இங்க வா!!” என்று அவள் கைப்பிடித்து அருகமர்த்தினான்.

 

‘அடப்பாவி கையை வேற பிடிக்கிறான்!!’ என்று எண்ணிக் கொண்டவளுக்கு அவன் பிடித்த இடம் மட்டும் ஜுரம் வந்தது போல் கொதித்தது.

 

“ஹலோம்மா எப்படியிருக்க??” என்று இயல்பாய் அவளுடனே நேரடியாக பேச ஆரம்பித்தான் ரியாஸ் பலநாள் பழகியவனை போன்று.

 

“என்னை பத்தி சொல்லியிருக்கேன்னு சொன்னான், என்ன சொல்லி வைச்சுருக்கான்ம்மா”

 

“நான் நல்லாயிருக்கேன் அண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க??” என்றாள். அவன் தலையசைப்பாய் பதில் கொடுக்கவும் “நீங்க ரியாஸ் அண்ணா, அவரோட தான் வேலை பார்க்கறீங்க”

 

“ஹ்ம்ம் அவ்வளவு தான் சொன்னானா!!”

 

“வேற சொல்ல அவர் என்கூட இல்லையே!! உடனே ஊருக்கு வந்திட்டாரே அண்ணா!!” என்று கணவனுக்காய் வக்காலத்து வாங்கினாள்.

 

வீரா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்த்தது அவளுக்கு தெரியாது ஆனால் எதிர்முனையில் இருந்தவன் அதை கண்டுக்கொண்டிருந்தான்.

 

“ஹலோ சார் ரொம்ப ஜொள்ஸ் வழியுது, துடைச்சுக்கோங்க!!” என்று கூறவும் தான் பார்வையை திருப்பினான் வீரா.

 

“ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு பார்க்கணும்ன்னு தோணிச்சும்மா!! அதான் இவனை ஊருக்கு போனதும் போட்டோ எடுத்து அனுப்புடான்னு கேட்டேன்”

 

“ரெண்டு பேரும் பொருத்தமா இருக்கீங்க!! உங்களுக்கு சுத்திப் போடுற பழக்கமுண்டுல அப்போ சுத்திப் போட்டிருங்க” என்றான் ரியாஸ்.

 

செவ்வந்திக்கு ரியாஸின் பேச்சில் லேசாய் கன்னம் சிவந்தது. “டேய் இதெல்லாம் உனக்கு ஓவரா இல்லை!! நான் ப்ளாக் அவ வைட் இது பொருத்தமா உனக்கு!! எதுக்கு ஓவரா இப்போ ஐஸ் வைக்குற!!” என்றான் வீரா.

‘ஹ்ம்ம் இவர் ஏன் இப்போ லூசுத்தனமா உளர்றாரு…’ என்று எண்ணியவளின் மனம் அவன் சொல்லியதை ஒரு முகச்சுளிப்புடன் பார்த்தது.

 

அதை பார்த்துக் கொண்டுதானிருந்தான் ரியாஸ். “இவன் தான்ம்மா லூசு மாதிரி உளர்றான். நீங்க பொருத்தமான ஜோடி தான். அதுல அப்பிலே இல்லைம்மா” என்று அவளுக்கு சமாதானம் போல் சொன்னவன் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு போனை வைத்தான்.

 

அவன் வைத்ததுமே “நாம செல்பி எடுத்து உடனே அனுப்பலை அடுத்த கால் போட்டிருவான். வா இந்த டிரஸ்ல வெளிய போய் கொஞ்சம் போட்டோஸ் எடுப்போம்” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

 

‘நான் என்ன இவன் கூப்பிடுற இடத்துக்கு எல்லாம் போறேன். தப்பாச்சே!!’ என்று அவள் புத்தி தடுத்து பார்த்தாலும் மனம் போ என்று சொல்லியிருக்க அவனுடன் நடந்தாள்.

 

அங்கு போடப்பட்டிருந்த ஊஞ்சலொன்றில் அவன் அமர்ந்துக்கொள்ள அவளை அருகே இழுத்து அமர்த்தினான்.

 

அவள் தோளில் கைப்போட்டு நெருக்கமாய் போட்டோ எடுக்கும் வரை ஒன்றுமே உணராதவனாய் இருந்தவன் அவள் விலக ஆரம்பிக்கவும் தான் நெருக்கத்தை உணர்ந்தான்.

 

உள்ளே சிலுசிலுவென்று சுகமாய் ஒரு தென்றல் வீச அவள் இடக்கரத்தை பற்றிக்கொண்டான். முதலில் போட்டோவிற்கு என்று நினைத்துக்கொண்டவள் அவன் எழவும் ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருந்தாள்.

 

“கை… கையை விடுங்க… நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்” என்று அவன் கையை விலகிப் போக முயல அவன் தான் அவளை இரும்பாய் பற்றியிருந்தானே!! அவளால் விலக்க முடியவில்லை.

 

‘என்ன இப்படி செய்யறான்… என்னமோ ஆசையா கட்டிக்கிட்டவன் மாதிரி!!’ என்று எண்ணியவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்வது போல் இருந்தது.

 

‘வேணாம் சக்தி இதெல்லாம் வேணாம்!! இவன் மேல நீ கோவமா இருக்கே!! நேத்து இவன் தண்ணியடிச்சுட்டு வந்திருக்கான்!! அதை பத்தி நீ கேட்க மறந்துட்டே!!’ என்று மனசாட்சி எடுத்து கொடுத்தது.

 

“கையை விடச்சொன்னேன்…” என்று அவனை பார்த்து முறைக்க முயன்றாள்.

 

“அதுக்கென்ன இப்போ!!” என்று அவன் பதில் சொல்லவும், ‘இவன் என்ன லூசா!! ஏன் இப்படி எல்லாம் பேசி வைக்குறான்’ என்று எண்ணிக் கொண்டு அவனை நன்றாகவே முறைத்தாள் இப்போது.

 

அவன் கையில் இருந்து தன் கையை உருவிக்கொள்ள அவள் எடுத்துக் கொண்ட முயற்சி எல்லாம் வீணாகியது.

‘இதென்ன இவன் கை வைச்சிருக்கானா!! இல்லை இது கடப்பாறையா!!’ என்று எண்ணியவளுக்கு இப்போது கோவமாக வந்தது அவன் மேல்.

 

அவனோ இது ஏதோ விளையாட்டு போல வெகு சுவாரசியமாய் அவள் கையை பிடித்திருந்தான். அவளுடன் பேசி மல்லுகட்டுவதும் இப்போது பேசாமல் மல்லுகட்டுவதும் கூட பிடித்திருந்தது.

 

அவள் முகபாவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வெகு நேரமாய் இரும்பை போல அழுந்தி பற்றியதில் கை வலிக்க ஆரம்பித்தது.

 

“கை வலிக்குது விடுறீங்களா ப்ளீஸ்!!” என்று அவள் சொல்லவும் தான் அவள் கையை விட்டான்.

 

ஒன்றும் சொல்லாமல் வேகமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தவள் அவர்கள் அறைக்குள் சென்று மறைந்தாள்.

 

வீராவோ அவ்விடம் விட்டு நகராமல் அவள் சென்ற திசையையே வெறித்திருந்தான். ஏதோவொரு இனிய மாற்றம் தன்னுள் நிகழ்வதை அவனால் உணர முடிந்தது.

 

இது சரியா!! தவறா!! முறையா!! என்று பல கேள்விகள் வரிசைகட்டி நின்றது அவனுள்.

 

எவ்வளவு கேள்வி எழுந்த போதும் அவளுடனான நெருக்கத்தில் மனம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாய் தொலைக்க ஆரம்பித்ததை உணர்ந்தே தான் இருந்தான்.

பற்றியிருந்த அவள் உள்ளங்கையின் மென்மையை இன்னமும் அவன் விரல்களில் உணர முடிந்தது.

 

ஊசியாய் உடலை துளைக்க முயன்ற குளிரை அவளின் நினைவுகள் கொடுத்த தகிப்பு போ வென்று விரட்டியடித்திருந்தது.

 

லேசாய் தூறிய தூவானம் அவனை நனவுலகுக்கு கொண்டு வரவும் தான் எழுந்து அவர்கள் அறைக்குள் செல்லத் தோன்றியது அவனுக்கு.

 

செவ்வந்தி உடைமாற்றி சோபாவில் சாய்ந்திருந்தாள். உள்ளே வரவும் தான் அவளை வெளியில் கூட்டிச் செல்வதாய் சொன்னது நினைவிற்கு வந்தது.

 

“ஒரு பைவ் மினிட்ஸ் டிரஸ் மாத்திட்டு வந்திடறேன், நாம கிளம்பலாம்” என்றுவிட்டு அவன் ஒரு வி காலர் நெக்கில் புல் ஹேன்ட் டிசர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு ஜீன்ஸ் சகிதம் அவள் முன் வந்து நின்றான்.

 

“போகலாம்” என்று அவன் வந்து அவள் முன் சொடக்கு போடவும் “நான் வரலை” என்றாள் சற்று முன் அவன் நடந்து கொண்ட முறையில் கலவரம் கொண்டு.

 

“ஏன்?? என்னாச்சு?? உடம்புக்கு எதுவும் முடியலையா??” என்றவன் அவள் நெற்றியில் கழுத்தில் என்று கையை வைத்து பார்த்தவன் அவள் கையை பற்றிக் கொள்ளவும் ‘இதுக்கு இவன் கூட போயே இருக்கலாம் போலயே’ என்று அவள் எண்ண வேண்டியதாய் போனது.

 

“இல்லை ஒண்ணுமில்லை போகலாம்” என்று அவள் சொல்லவும் “உனக்கு முடியலைன்னா சொல்லு டாக்டர்கிட்ட போகலாம்” என்று அவன் சொல்லவும் அவளுக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

 

“எதுக்கு சிரிக்கிற??”

 

“என்கிட்டயே டாக்டர்கிட்ட போகலாம் சொல்றீங்க!!” என்று அவள் சிரிப்புடன் கேட்கவும் “ச்சே ஆமால, ஏதோ ஞாபகம்!! உடம்பு சரியில்லையோன்னு ஒரு பதட்டம் அதான்”

 

“நிஜமாவே உனக்கு ஒண்ணுமில்லையே!! வெளிய போகலாம் தானே!!”

 

“ஹ்ம்ம் போகலாம்”

 

பின் அவளை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றான். மூணாரின் அழகை இருவருமாய் ஒன்றாய் ரசித்தனர்.

 

மலையழகும் உடன் பொழியும் லேசான சாரல் மழையழகும் இருவரின் மனதிலும்  ஒரு ஏகாந்தத்தை கொடுத்ததென்றால் அது மிகையாகாது.

 

மூணாரில் சுற்றிப்பார்க்க நிறைய இடம் இருந்தாலும் அவர்கள் ஓரிரு இடம் மட்டுமே சுற்றிப்பார்த்தனர். அருகில் இருந்த ஓரிரு இடங்களை மட்டும் பார்த்துவிட்டு அவர்கள் அறைக்கு திரும்பவும் மழை சடசடவென்று பிடித்துக் கொண்டது.

 

“சரியான மழை பெய்யுது, இன்னைக்கு நைட் இங்கவே ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு விடியகாலையில ஊருக்கு கிளம்புவோம்” என்றான்.

 

“இல்லையில்லை இன்னைக்கே கிளம்பலாம். நாளைக்கு ஊருக்கு போனா எனக்கு ஊர்ல இருந்த மாதிரியே இருக்காது. திரும்பவும் சன்டே நான் ஹாஸ்டல் கிளம்பியாகணும்”

 

“லீவ் மூடே போய்டும், ப்ளீஸ் இன்னைக்கே கிளம்பலாம்” என்றாள்.

 

“என்ன விளையாடுறியா!! மழை எப்படி பெய்யுது பாரு!! நாம கிளம்பி வழியில எங்காச்சும் மாட்டிக்கிட்டா கஷ்டம்மா!! புரிஞ்சுக்கோ!!”

 

“நான் வேணும்னா திங்கள்கிழமை காலையில உன்னை நேரா ஹாஸ்டல் கூட்டிட்டு போய் விட்டிறேன், போதுமா??”

 

“இல்லை அத்தை வேற காத்திட்டு இருப்பாங்க!!” என்று இழுத்தாள்.

 

உடனே அவன் அன்னைக்கு போன் செய்து அவரிடம் பேசிவிட்டு அவளிடம் கொடுத்தான். “அம்மா தான் பேசறாங்க நீயே பேசு!!”

 

“ஹலோ அத்தை!! எப்படியிருக்கீங்க?? ஹ்ம்ம் இருக்கேன் அத்தை!!”

 

“இவங்க என்னை கூட்டிட்டு வர மாட்டேங்குறாங்க!! நீங்க கொஞ்சம் சொல்லுங்க அத்தை!!”

 

‘பார்றா எங்கம்மாவை சிபாரிசு பிடிக்கிறதை!!’ என்று எண்ணிக்கொண்டவன் அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் பார்வையை உணர்ந்தவளுக்கு அன்று அங்கிருப்பது உசிதமாகவே படவில்லை. மனோரஞ்சிதமும் மழையாக இருப்பதால் அன்று அங்கு தங்கிவிட்டு வருமாறு சொல்லிவிட்டார்.

 

முகம் வாடிப்போயிற்று அவளுக்கு. ஒன்றும் சொல்லாமல் போனை அவனிடத்தில் கொடுத்துவிட்டு உடைமாற்ற குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

 

‘என்னாச்சு இவனுக்கு ஆளும் பார்வையும் ஒண்ணும் சரியில்லையே!!’

 

‘ஊருக்கு போகலாம்ன்னு நினைச்சா மழை பெய்யுதுங்கறான்!! மழை பெஞ்சா ஊருக்கு போக முடியாதா!!’ என்ற ஆற்றாமை அவளுக்கு.

 

அவன் சொல்வது சரி தான் ஆனால் அதை இப்போது ஒத்துக்கொள்ள தான் அவளுக்கு மனமில்லை.

 

அரைமணி நேரம் கழித்து தான் குளியலறை கதவை திறந்து வெளியில் வந்தாள்.

 

“தூங்கி எழுந்திட்டியா!!” என்றான் அவன் கிண்டலாய்.

“என்ன??”

 

“உள்ள போனியே தூங்கிட்டியோன்னு பார்த்தேன், அதான் தூங்கி எழுந்திட்டியான்னு கேட்டேன்” என்றவனை முறைத்தாள்.

 

வேண்டுமென்றே அவள் தோழிக்கு போன் செய்து வெட்டியாக பேசிக் கொண்டிருந்தாள்.

 

அரைமணி நேரத்திற்குள்ளாக கால் கட்டாகி போனதில் காதில் இருந்த போனை எடுத்து பார்க்க காசில்லாமல் அது கட்டாகி போயிருந்தது.

 

“வேணும்ன்னா லேண்ட்லைன் போன் ட்ரை பண்ணு!! அது கட் ஆகாது, நாளைக்கு நம்ம ரூம் பில் தான் அதிகம் ஆகும்”

 

“என்ன போன் பண்ணி பேசறியா!!” என்று கிண்டல் செய்தான் வீரா.

 

“இது ஒண்ணும் தமிழ்நாடில்லை நீ பாட்டுக்கு பேசிகிட்டு இருக்க, கேரளான்னு மறந்து போச்சு போல… அதான் ரோமிங்ல காசு தீர்ந்து போயிருக்கும்”

 

“தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தானே!! எதுக்கு இப்படி செய்யற இப்போ??” என்று நேராகவே கேட்டான்.

 

“எதுக்கோ??” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

 

“அப்போ ஏதோ இருக்கு அப்படிதானே, என்னன்னு சொன்னா தானே தெரியும்”

 

“ஓ!! சொன்னா உங்களுக்கு தெரிஞ்சுடுமா!!” என்றவள் அவனிடம் கேட்காமல் விட்டதை கேட்டு விடும் எண்ணத்தில் பதிலுக்கு பதில் பேசினாள்.

 

“என்னன்னு முதல்ல சொல்லு”

 

“எனக்கு கட்டில்ல படுக்க பிடிக்கலை” என்றாள் மொட்டையாய்.

 

“என்ன சொன்னே!! புரியலை எனக்கு!!”

 

“ஏன் காது கேட்கலையா உங்களுக்கு??”

 

“கேட்குது ஆனா எதுக்கு சொல்றேன்னு புரியலை எனக்கு”

 

“நேத்து நீங்க எப்படி வந்தீங்க அதை மனசுல வைச்சு தான் சொல்றேன்”

 

“சரி அதுக்கும் இப்போ நீ சொன்னதுக்கும் என்ன அர்த்தம்” என்றவனின் பார்வை சீரியசாக பார்க்கத் துவங்கியது அவளை.

 

“எப்படி உங்களால எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமா கேட்க முடியுது இதெல்லாம்!! கொஞ்சம் கூட உங்களுக்கு எங்கயும் குத்தவே இல்லையா!!” என்றதும் நிமிர்ந்து அமர்ந்தான்.

“ஒருத்தியை கூடவே கூட்டிட்டு வந்திருக்கோமே அவ என்ன ஆனா ஏதானா எதுவும் உங்களுக்கு முக்கியமில்லை. உங்க சந்தோசம் மட்டும் தான் முக்கியம்ன்னு கிளம்பிட்டீங்க”

 

“இவகிட்டலாம் ஏன் சொல்லிட்டு போகணும்ன்னு உங்களுக்கு ஒரு எண்ணம் அதானே!!”

 

“நான் அப்படி எல்லாம் நினைக்கலை” என்று மறுத்தான்.

 

“வேற எப்படி நினைச்சீங்கன்னு சொல்லவா!! நீங்க செய்றது தப்புன்னு உங்களுக்கே தெரியும், அதான் சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டீங்க”

 

“அப்படின்னா நான் திரும்ப நம்ம ரூம்க்கே வந்திருக்க மாட்டேன்!! எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை”

 

“அப்போ ஏன் சொல்லிட்டு போகலை!! என்னை ஈசியா ஏமாத்திடலாம்ன்னு நினைச்சீங்களா!! இல்லை இவ கேட்டா பார்த்துக்கலாம்ன்னு நினைச்சீங்களா!!”

 

“உங்ககிட்ட எனக்கு சொல்ல எந்த சரியான காரணமும் கிடையவே கிடையாது. இவகிட்ட ஏன் சொல்லிட்டு போகணும்ன்னு நினைச்சிருப்பீங்க”

 

“அட்லீஸ்ட் வெளிய போயிட்டு வர்றேன்னு கூட நீங்க என்கிட்ட சொல்லலை. அந்தளவுக்கு ஒண்ணும் நம்மகிட்ட பேச்சு வார்த்தை எல்லாம் இல்லாம போகலையே!!”

 

“இங்க பாரு உன்னிஷ்ட்டத்துக்கு கற்பனை பண்ணி பேச வேணாம். எனக்கு இப்படி சொல்லிட்டு போயெல்லாம் பழக்கமில்லை”

 

“அப்போ வேற எப்படி சொல்லிட்டு போய் உங்களுக்கு பழக்கம்” என்று நக்கலாய் கேட்டாள்.

 

“மத்த எல்லாரும் கூட பசங்களோட வந்திருக்காங்க, அவங்க ஒருத்தர்கொருத்தர் ஏற்கனவே அறிமுகமானவங்க!! நல்லா பேசிக்குவாங்க!! நான் அப்படியா!!”

 

“என்னைப்பத்தி ஏன் யோசிக்கலை. என்னை நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க… உங்க பிரண்டு கல்யாணத்துக்கு போகலாம்ன்னு சொன்னதும் எந்த மறுப்பும் சொல்லாம உடனே வந்தேன்ல”

 

“எனக்கு என்ன மதிப்பு கொடுத்தீங்க நீங்க!! நைட் முட்ட முட்ட குடிச்சுட்டு வந்து அப்படியே அந்த கட்டில்ல வந்து விழுந்து கிடக்குறீங்க!!”

 

“எனக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்களா!! இதெல்லாம் எனக்கு முன்னபின்ன பழக்கமில்லை, எங்க வீட்டில ஆம்பிளைங்களோட நாங்க வளரலை”

 

“டாக்டர்க்கு படிக்கறவளுக்கு இது ஒரு பெரிய விஷயமில்லை தான். ஆனா இங்க நான் ஒண்ணும் டாக்டரும் இல்லை நீங்க பேஷன்ட்டுமில்லை” என்றவளுக்கு மூச்சு வாங்கியது விடாமல் பேசியதில்.

“யாரா இருந்தாலும் சரி, நம்மை நம்பி நம்ம கூட வந்தவங்களை இப்படி அம்போன்னு விட்டுட்டு போறது ரொம்ப தப்பு”

 

“இதை எனக்காக மட்டும் சொல்லலை, தாமரை அண்ணி அங்க இருந்தாலும் சரி அத்தை இல்லை வேற யாரு இருந்தாலும் சரி இனிமே இப்படி செய்யாதீங்க” என்று தணிவாகவே சொன்னாள்.

 

“கடைசியா ஒண்ணு சொல்லணும்” என்றவள் இப்போது முற்றிலும் நிதானத்திற்கு வந்திருந்தாள்.

 

‘அதான் பேசு பேசுன்னு பேசு முடிச்சிட்டியே இன்னும் என்ன பாக்கி’ என்பது போல் நிமிர்ந்து அவளை பார்த்தான்.

 

“ஹ்ம்ம் சொல்லு…”

 

“நீங்க குடிப்பீங்கன்னு எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்துச்சு. அது இங்க வந்த பிறகு தான் உறுதியா தெரிஞ்சுது. நேத்து நீங்க அப்படி வந்த பிறகு தான் எனக்கு புரிஞ்சுது” என்றவள் அவன் முகம் பார்க்க அது கல்லாய் இறுகியிருந்தது.

 

அவன் நிமிர்ந்து அவளை கேள்வியாய் பார்த்தான். சந்தேகமா எப்படி என்பது போல்.

 

“வீடு கிளீன் பண்ணும் போது வீட்டில ரெண்டு மூணு பாட்டில் இருந்துச்சு. யாராய் இருக்கும்ன்னு தெரியாம தான் அதை அப்புறப்படுத்தினேன்”

“அத்தைகிட்ட சும்மா லைட்டா விசாரிச்சு பார்த்தேன், யாருக்காச்சும் குடிக்கற பழக்கம் இருக்கா அப்படிங்கற மாதிரி” என்று அவள் சொல்லவும் அவன் முகத்தில் லேசாய் கோபம் எட்டிப் பார்த்ததை உணர்ந்தாள்.

 

“யாருக்குமே அப்படி பழக்கம் இல்லைன்னு அவங்க சொன்னாங்க!! அதனால நானும் அன்னைக்கு இந்த விஷயத்தை பெரிசா எடுத்துக்கலை”

 

“அதுவும் இல்லாமல் நான் உங்க வீட்டு சுவர் ஏறி குதிச்ச அன்னைக்கும் கூட நீங்க ட்ரிங்க் பண்ணியிருந்தீங்க தானே!!” என்று மிகச்சரியாய் கணித்து கேட்டவளை உள்ளுக்குள் வியந்து பார்த்தான் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.

 

“அதனால தான் நான் கீழ விழுந்த சத்தம் கூட அன்னைக்கு உங்களுக்கு கேட்கலை!! அப்படித்தானே!! அப்படி தான் இருந்திருக்கணும்!!”

 

“நீங்க அதை ஏன் பண்றீங்கன்னு எனக்கு தெரியாது?? நான் அதை கேட்கவும் மாட்டேன்?? கேட்டாலும் அதுக்கு பதில் கிடைக்க போறதில்லை!! ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட்ங்கற முறையில சொல்றேன்”

 

“இனிமே இதெல்லாம் வேண்டாம்!! உங்க உடம்பை நீங்களே கெடுத்துக்காதீங்க!!”

 

“நீங்க இப்படின்னு தெரிஞ்சா அத்தை ரொம்ப வருத்தப்படுவாங்க!! மாத்திக்கோங்க அவங்களுக்காக உங்களை!!” என்று மட்டும் சொன்னாள்.

வீராவோ ஆம்!! இல்லை!! சரி!! ஹ்ம்ம்!! என்று எந்த விதமான வார்த்தையும் வெளிப்படுத்தவில்லை.

 

அவள் பேசி முடித்த பின் அமைதி மட்டுமே, அதன் பின் அவளாக அவனிடத்தில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் பேச்சு அவனிடத்தில் பெரும் போரை அவன் உள்ளத்தில் ஏற்படுத்தியது அவளறியாள்!!

 

உரிமையாய் அவனிடத்தில் எதற்காகவெல்லாமோ சண்டையிட்டியிருக்கிறாள் தான் ஆனால் இன்று அதை அவன் அன்னைக்காக நிறுத்து என்று அவள் சொன்னது ஏனோ அவனுக்கு பிடித்தது.

 

எனக்கு பிடிக்கலை என்று சொல்லியிருக்கலாம்!! எப்போதும் போல் உன்னால் தான் என் வாழ்வு பாழாகிவிட்டது என்று கூட சொல்லியிருக்கலாம்!!

 

எதுவும் சொல்லாமல் மிகச் சாதாரணமாய் அவள் பேசியது மனதில் ஒரு இதத்தை அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தது.

 

கோபமாய் ஆரம்பித்தது கூட இப்படி சொல்லாமல் கொள்ளாமல் பாதியில் விட்டு சென்றதினால் தான் என்று புரிந்தது.

 

தன் மீது உள்ள தவறு புரிந்தது ஆனால் அதை சட்டென்று அவளிடம் ஒத்துக்கொள்ள மனதில்லை அவனுக்கு.

யாரும் இதுவரை அவனை குறை சொல்வது போல் அவன் வைத்துக் கொண்டதுமில்லை. அதனாலேயே அவளிடம் எந்த பதிலும் சொல்லவில்லை.

 

செவ்வந்தி பேசி முடித்த பின்னே தான் நிம்மதியாக உணர்ந்தாள். மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.

 

அவள் இவ்வளவு பேசியும் அவன் அவளை எதிர்த்து பேசவோ கோபமாய் அடிக்க பாயவோ இல்லை என்பதை மனம் குறித்துக் கொண்டது.

 

‘இருந்தாலும் நாம இன்னைக்கு இவ்வளவு பேசியிருக்க கூடாது!! நேத்து அவன் மூச்சு முட்ட முட்ட அடிச்சிருப்பான், இன்னைக்கு அவனை நான் மூச்சு முட்ட முட்ட அடிச்சிருக்கேன்’ என்று கவுன்டர் டயலாக் வேறு மனதில் ஓடியது.

 

‘காலையில மாதிரி கத்தாம அமைதியா இருக்கான். எதுக்கு குடிக்கறான், அப்படி என்ன கவலை இவனுக்கு. எப்படியோ இருக்கட்டும், குடிக்காம இருந்தா சரி. அத்தைக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க’

 

‘அத்தைக்கு மட்டும் தான் வருத்தமா உனக்கில்லையா!!’ என்று உள்ளே ஒரு குரல் கேட்க ‘அப்படி எல்லாம் எதுவுமில்லை’ என்று அது தலையில் தட்டி தூர விரட்டினாள்.

 

மறுநாள் விடிகாலையிலேயே அறையை காலி செய்துவிட்டு வீராவின் நண்பர்களிடம் விடைபெற்று குலையன்கரிசலுக்கு கிளம்பினர்.

 

வீராவின் நண்பர்கள் இரண்டு நாட்கள் அங்கு இருந்துவிட்டு செல்வதாக இருந்ததால் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.

 

ஐந்து மணியளவில் அவர்கள் மூணாரில் இருந்து கிளம்பினர். இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

 

காரில் இளையராஜனின் இனிமை மிகுந்த பாடல்களின் இசை புளூட் வடிவில் ஒலித்துக் கொண்டிருந்தது. இருவருக்குமே மனம் லேசாகிப் போன உணர்வு.

 

இசை!! இசை கனவின் மாயாலோகம்!! இசைக்கு தன்னையே மறக்கடிக்கும் சக்தி உண்டென்றால் அது மிகையாகாது!!

 

இருவரின் மனதையும் இசை முழுதாய் ஆக்கிரமித்தது. ஒருவரை பற்றி மற்றவரின் சிந்தனையும் அவர்களின் சிந்தையை ஆக்கிரமித்தது.

 

வீராவின் பார்வை அவ்வப்போது அவளின் மீது விழுவதை அவளால் உணர முடிந்தது.

 

அப்படி அவன் பார்ப்பதை உணரும் தருணங்களில் தன்னையறிமால் அவள் முகம் சிவப்பதையும் அவளால் தடுக்க முடியவில்லை.

மனதிற்குள்ளாக பல கேள்விகள் இருவருக்குள்ளும் வந்து சென்றுக் கொண்டிருந்தது.

 

இருவருக்குமான இந்த மாற்றங்களை பற்றி நினைக்கக் கூட முடியாமல் இனி காலம் அவர்களை புரட்டிப் போட தயாராக இருந்ததறியாமல் இருவருமே தங்கள் மனதை பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்தனர்.

 

குலையன்கரிசலை அவர்கள் வந்தடையும் போது நேரம் மதியத்தை தொட்டுவிட்டிருந்தது.

 

வண்டியை விட்டு இறங்கியதுமே வாசலில் வந்து நின்ற மனோரஞ்சிதத்தை ஓடிவந்து “அத்தை” என்று கட்டிக் கொண்டவளை பொறாமையோடு பார்த்தான் வீரா…..

 

Advertisement