Advertisement

அத்தியாயம் – 11

 

“இவ்வளவு நேரமா நீங்க வர்றதுக்கு” என்று கும்பலாய் சேர்ந்து அனைவரும் கேட்டு அவர்களே சிரித்துக்கொண்டனர் தங்களுக்குள் ஏதோ பேசி.

 

செவ்வந்திக்கு சற்றே எரிச்சலாக வந்தது. ‘என்ன நினைத்து சிரித்திருப்பர்’ என்று உணர முடிந்தது அவளால். வீரா ஏதோ சொல்லி அவர்களை சமாளிப்பது புரிந்தது.

 

அங்கிருந்தவர்கள் அனைவருமே செவ்வந்தியைவிட வயது கூடியவர்களாகவே இருந்தனர். அவளுக்கு தான் யாருடனும் ஒட்டவும் முடியாமல் தள்ளி நிற்கவும் முடியாமல் பெரும் அவஸ்தையாக இருந்தது.

 

எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகையை மட்டுமே காட்டி தப்பித்துக் கொண்டிருந்தாள். அவன் நட்பு குழாமில் ஒருவன் “ஏன் வி.பி. உன் பொண்டாட்டிகிட்ட வாயே திறக்கக் கூடாதுன்னு மிரட்டி கூட்டிட்டு வந்தியா”

 

“இவ்வளவு அமைதியா இருக்காங்க அவங்க… ஒரு சின்ன புள்ளைய நீ ஏமாத்தி கட்டிக்கிட்டன்னு மட்டும் தெரியுதுடா” என்று ஒருவன் வீராவை வாரினான்.

 

செவ்வந்திக்கோ ‘அதென்ன வி.பி??’ என்ற ஆராய்ச்சி ஒரு புறம் தோன்றினாலும் வீராவை பார்த்து அவன் நண்பன் கேட்ட கேள்வியை எண்ணி லேசாய் ஒரு சந்தோசம் அவளுக்குள்.

 

‘இவனுக்கு நல்லா வேணும்’ என்று தோன்றியது அவளுக்கு. அந்த எண்ணத்தோடே அவனை பார்க்கவும் தவறவில்லை அவள்.

 

வீராவோ “யாருக்கு இவளுக்கா பேசத் தெரியாது… அதெல்லாம் நல்லா பேசுவா… உங்களை பார்த்து தான் பயந்து போய் அமைதியா இருக்கா…” அவனும் பதிலுக்கு திருப்பிக் கொடுத்தான்.

 

“ஏன்டா எங்களை பார்த்தா அவ்வளவு டெர்ராவா இருக்கு… உன்னை விட நாங்க எல்லாரும் அவ்வளவு மோசமில்லையே!!” என்று பதில் கொடுத்தான் ஒரு நண்பன்.

 

இப்படியாக ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் ஏதோ மௌன பாஷை பேசிக் கொள்வது போன்று தங்களுக்குள் எதையோ பரிமாறிக் கொள்வது அவள் கண்களில் விழுந்தது.

 

மெதுவாய் ஒவ்வொரு ஆண்களாய் எழுந்து சென்றனர். மற்றவர்கள் தத்தம் மனைவியரிடம் கண்ஜாடை காட்டியதை செவ்வந்தி பார்த்துக் கொண்டு தானிருந்தாள்.

 

அங்கிருந்து நகர்ந்த வீராவோ அவளிடம் எங்கு செல்கிறோம் என்றெல்லாம் சொல்லவில்லை. “நீ ரூம்க்கு போய்டு” என்று மெதுவாய் சொல்லிவிட்டு அவள் பதில் சொல்லும் முன்னே அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

 

‘எங்க போறாங்க எல்லாரும்’ என்று லேசாய் குழப்பமும் ஒருவித பய உணர்வுமாய் கலந்து அவள் அமர்ந்திருக்க வீராவின் நண்பர்களின் மனைவி குழந்தைங்கள் எல்லாரும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

 

அவளாக அவர்களிடம் சென்று பேச ஒரு மாதிரி இருந்த போதும் வேறு வழியில்லாத காரணத்தால் அவளாகவே வலியச் சென்று பேசினாள் அவர்களிடம்.

 

ஆனாலும் அவர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்று கேட்க தயக்கமாய் இருக்க அதைவிட்டு சாதாரணமாய் மட்டுமே பேசினாள். அவர்களுடனே சேர்ந்து உணவருந்தி முடித்திருந்தாள்.

 

உணவருந்தி முடித்த பின்னும் அவர்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர். செவ்வந்தி அவர்களின் குழந்தைகளிடமும் பொருந்தி விளையாட ஆரம்பித்திருந்தாள்.

 

உள்ளுக்குள் அவன் எங்கு சென்றிருப்பான் என்று ஒரு ஊகம் லேசாய் எழத்தான் செய்தது, இருந்தாலும் அப்படியெல்லாம் இருக்காது என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

 

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் கலந்திருந்தாள். கூட்டத்தில் ஒருத்தி “இவங்க இப்போ போனா அவ்வளவு சீக்கிரம் வர மாட்டாங்க…”

 

“நாம எல்லாம் ரூமுக்கு போகலாம்ப்பா… பசங்களை தூங்க வைக்கணும்… காலையில வேற எழணும்” என்று ஒவ்வொருவராய் எழ செவ்வந்தியும் அவர்களுடன் எழுந்தாள்.

 

அவளின் அறையை தாண்டி தான் மற்றவர்களின் அறை போலும். அவள் அறை வந்ததும் அவளிடம் விடைபெற்று மற்றவர்கள் அவரவர் அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர்.

 

அவர்கள் அறையின் வாயிலின் முன் வந்து நின்ற பின்னே தான் அவளுக்கு ஞாபகம் வந்தது, அறையின் சாவி வீராவிடம் இருக்கிறது என்பது.

 

சாப்பிடத் தானே செல்கிறோம் எதற்கு கைபேசி என்று அறையிலேயே விட்டுவிட்டு வேறு வந்திருந்தாள் அவள்.

 

இதோ வந்துவிடுவான் அதோ வந்துவிடுவான் என்று எண்ணிக்கொண்டு அறை வாயிலிலேயே குறுக்கும் நெடுக்குமாய் நடை பயின்றாள்.

 

மற்றவர்களின் அறைக்கதவை தட்டி உதவி கேட்கலாமா என்று தோன்றினாலும் நேரமாகிய காரணத்தாலும் நாகரீகம் கருதியும் அவர்கள் அறைக்கதவை தட்டாமல் விடுத்தாள்.

 

ஒரு மணி நேரம் தன்னைப் போல கடந்திருக்க ஆள் நாடமாட்டம் வேறு குறைந்திருந்ததில் லேசாய் பயம் துளிர்விட ஆரம்பித்தது. குளிர் வேறு ஊசியாய் உடலைத் துளைத்தது.

 

வேறு வழியில்லை என்று எண்ணியவளுக்கு சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. ரிசப்ஷனில் எப்படியும் இந்த அறைக்கு மறு சாவியொன்று இருக்குமே அதை கேட்டால் என்ன!! என்று எண்ணிக்கொண்டு அங்கு சென்றாள்.

 

“எக்ஸ்க்யூஸ் மீ… ரூம் நம்பர் 107 கீ கிடைக்குமா!! என்னோட ஹஸ்பன்ட் வெளிய போயிருக்கார், கீ அவர்கிட்ட இருக்கு” என்று சொல்லி கேட்கவும் அங்கிருந்தவன் அவளை ஏற இறங்க பார்த்ததில் அவளுக்கு கூசியது ஒரு நிமிடம்.

 

“அந்த கல்யாணத்துக்கு வந்த ஆளுங்க தானே!! என்ன பேருல ரூம் புக் ஆகியிருக்கு சொல்லுங்க” என்று அவன் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்க செவ்வந்தியோ ஒன்றும் தெரியாமல் விழித்தாள்.

 

அந்த அறைகள் எல்லாம் மாப்பிள்ளையின் பெயரில் தான் பதிவாகியிருந்தது. வீரபாண்டியன் கல்யாணத்திற்கு போக வேண்டும் என்றானே தவிர அவன் நண்பனின் பெயரை எல்லாம் சொல்லியிருக்கவில்லை.

 

அவளுமே அவனிடத்தில் கேட்டிருக்கவில்லை. தன் முட்டாள்த்தனம் எண்ணி அப்படியே நின்றிருந்தாள். “எந்த பேர்ல புக் ஆகியிருக்குன்னு தெரியலையே!!” என்று கையை விரித்தாள்.

 

“சாரி மேடம் சாவி கொடுக்க முடியாது” என்று அவன் சொல்லவும் ஒன்றும் சொல்ல முடியாமல் அங்கு வரவேற்ப்பில்  இருந்த இருக்கையொன்றில் தொப்பென்று விழுந்தாள்.

 

வீரபாண்டியன் மட்டும் இப்போது அவள் கண்ணேதிரே இருந்திருக்க வேண்டும், நிச்சயம் அவனை எரித்து சாம்பலாக்கியிருப்பாள் அவள்.

 

பத்து நிமிடம் தன்னை போல் கடந்திருக்க ரிஷப்ஷனில் இருந்தவன் என்ன நினைத்தானோ அவளருகே வந்தான். “மேடம்” என்றழைக்க தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.

 

“நான் டோர் மட்டும் ஓபன் பண்ணிக் கொடுக்கறேன். நீங்க உள்ள போயிட்டு லாக் பண்ணிக்கோங்க… எதுவும் பிரச்சனை வந்திடாதுல்ல மேடம்”

 

“நீங்க கல்யாணத்துக்கு வந்த ஆளுங்க தானே” என்று அவன் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டான்.

 

“ஆமாங்க கல்யாணத்துக்கு வந்தவங்க தான்… உங்களுக்கு என் மேல எந்த சந்தேகமும் வேண்டாம்… நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடண்ட்!!”

 

“ரூம் ஓபன் பண்ணிக்கொடுங்க, நான் என்னோட ஐடி கார்ட் வேணாலும் காட்டுறேன்” என்று அவள் சொல்லவும் “அதெல்லாம் வேண்டாம் மேடம் நீங்க இவ்வளவு தூரம் விளக்கம் சொன்னதே போதும்”

 

“எதுவும் தப்பாகிட்டா என் வேலை போய்டும் மேடம்… அதான் இவ்வளவு விளக்கம் கேட்க வேண்டியதா போச்சு… சாரி மேடம் தப்பா எடுத்துக்காதீங்க… வாங்க போகலாம்” என்றான் அவன்.

 

‘இவனுக்கு இவ்வளவு விளக்கம் எல்லாம் கொடுக்க வைத்தானே அவனை…’ என்று மனதிற்குள் வீராவின் மேல் வெகு கோபம் எழுந்தது அவளுக்கு.

 

‘வரட்டும் வைச்சுக்கறேன் அவனை…’ என்று பல்லைக் கடித்தாள். வரவேற்ப்பில் இருந்தவன் அவளுக்கு அறைக்கதவை திறந்துவிட அவனுக்கு நன்றி கூறியவள் “ஒரு நிமிஷம் இருங்க” என்றுவிட்டு அங்கிருந்த டேபிளில் இருந்த அவள் கை பையை எடுத்தாள்.

 

அதிலிருந்த அவள் ஐடி கார்டை எடுத்து அவனிடம் காட்டினாள். “மேடம் நான் தான் அதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேனே!!”

 

“இது உங்களுக்காக இல்லை, ஒரு வேளை ஏன் திறந்து விட்டேன்னு உங்களை யாரும் கேட்டா செக் பண்ணிட்டேன்னு நீங்க சொல்ல வசதியா இருக்கும் அதுக்கு தான்…”

 

“ரொம்ப தேங்க்ஸ் பிரதர் உங்க ஹெல்ப்க்கு…” என்று மனதார சொன்னாள். அவனும் லேசாய் புன்னகைத்து சென்றுவிட்டான்.

 

உள்ளே வந்து அறைக்கதவை இழுத்து சாத்தி தாழிட்டாள். வீரபாண்டியன் வரும் வரை விழித்திருக்க கூடாது அவனை வெளியிலேயே விட்டு குளிரில் காய வைக்க வேண்டும் என்று எண்ணினாள்.

ஆனால் அவளுக்கு தான் உறக்கம் வருவேனா என்றிருந்தது. வரும் வழியில் காரிலேயே வேறு அவள் சற்று தூங்கியிருந்தாள், பின்னர் அறைக்கு வந்து வேறு இருவரும் உறங்கியிருந்தார்களே!!

 

மணி பன்னிரண்டை தொடப் போகும் நேரம் அறைவாயிலில் அரவம் கேட்டது… கதவில் சாவியை நுழைப்பது போல் சத்தம் கேட்க பேசாமலே தான் இருக்க நினைத்தாள்.

 

ஆனால் முடியவில்லை, வேகமாய் எழுந்து சென்று கதவை திறக்க வெளியில் தட்டுத்தடுமாறி நின்றுக் கொண்டிருந்தான் அவன்.

 

அவன் மீதிருந்து வந்த மதுவாடையை தாங்க முடியாமல் உள்ளே வந்துவிட்டாள். “தேங்க்ஸ்” என்றவாறே உள் நுழைந்திருந்தான் அவன்.

 

கதவை கூட தாழிடாமல் அப்படியே வந்து அவன் கட்டிலில் விழ செவ்வந்தியே சென்று கதவை அடைத்துவிட்டு வந்தாள்.

 

அவனை பார்க்க பார்க்க கோபம் கோபமாக வந்தது. அவளிடம் எங்கு செல்கிறோம் என்று சொல்லாமல் சென்றது, சாவியை எடுத்துச் சென்றிருக்கிறோமே என்ன செய்வாள் என்று யோசியாமல் விட்டது.

 

எல்லாவற்றிற்கும் மேல் இப்படி தள்ளாடிக் கொண்டு வந்தது எல்லாம் பார்த்தவளுக்கு அவனை அப்படியே தரதரவென்று குளியலறைக்கு இழுத்துச் சென்று குளிர்ந்த நீரை அவன் தலைவழியே ஊற்றிவிட வேண்டும் போல் தோன்றியது.

 

அவனிடத்தில் எதுவுமே பேசவில்லை அவள், பேசவும் பிடிக்கவில்லை!! இப்போது பேசினால் அது எதுவும் ஏறாது என்று புரிந்து போனது அவளுக்கு.

 

கட்டிலில் ஒரு பூதம் போல் படுத்துக்கிடந்தான் அவன். அவளுக்கு அங்கு படுக்க இடம் கூட இல்லை. அப்படியே இடமிருந்தாலும் அவள் அங்கு படுத்திருப்பது சந்தேகமே!!

 

ஒரு தலையணையும் போர்வையும் எடுத்துக்கொண்டு அருகிருந்த சோபாவில் சென்று இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.

 

‘காலையிலே வைச்சுக்கறேன்டா உனக்கு கச்சேரியை’ என்று மனதிற்குள்ளாக சபதம் எடுத்துக்கொண்டு தான் உறங்கினாளே!!

 

அவன் எப்படியும் காலையில் சீக்கிரம் எழ மாட்டான் என்று எண்ணியிருந்ததால் அவள் ஆறு மணிக்கு அலாரம் வைத்திருக்க அவள் எண்ணத்திற்கு நேர்மாறாய் அவன் எழுந்திருந்தான் போலும்.

 

ஐந்தரைக்கே அவளுக்கு விழிப்பு தட்டிவிட்டது. குளியலறையில் நீர் விழும் ஓசை கேட்க ‘அதுக்குள்ள எழுத்திட்டானா!!’ என்று எண்ணிக்கொண்டே எழுந்து அமர்ந்திருந்தாள்.

 

கையில் பிரஷை எடுத்து வைத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தாள். நீர் விழும் ஓசை நின்று கதவு திறக்கப்படும் அரவம் கேட்டது.

 

வெளியில் வந்தவன் முன்தினம் எதுவுமே நடவாதது போல “எழுந்திட்டியா!! குளிச்சுட்டு வந்து உன்னை எழுப்பலாம்ன்னு நினைச்சேன்!!” என்று சொல்ல அவளோ அவனை நிமிர்ந்து ஒரு முறை முறைத்தாள்.

 

பதிலேதும் சொல்லவில்லை. ‘எதுக்கு இப்படி முறைக்கிறா!!’ என்று எண்ணிக்கொண்டு தோளைக் குலுக்கி அவனும் நகர்ந்துவிட்டான்.

 

அவள் குளித்து நைட்டியுடன் வெளியில் வர அவன் அறையில் இல்லை. ‘எங்க போனான்’ என்று எண்ணிக்கொண்டே வேகமாய் வந்து கதவை திறந்து பார்க்க அவன் வெளியில் நின்றிருந்தான்.

 

‘இப்படி தான் கதவை திறந்து போட்டு வெளிய போவாங்களா!!’ என்று அவள் திட்டி முடிக்கவில்லை அதற்குள் “நீ டிரஸ் சேன்ஞ் பண்ணுவேன்னு தான் வெளிய நிக்கறேன்” என்று அவன் சொன்னது சில்லென்றிருந்தது.

 

‘இப்படி எல்லாம் கூட யோசிக்க தெரியுமா இவனுக்கு’ என்று எண்ணிக்கொண்டு எதுவும் பேசாமல் கதவை அடைத்து தாழிட்டவள் பட்டுச்சேலைக்கு மாறியிருந்தாள் இப்போது.

 

தலைவாரி பின்னலிட்டு அவள் முழுதாய் தயாரான பின்னே தான் கதவையே திறந்தாள். ஆனால் வெளியில் அவனில்லை. ‘எங்க தான் போய் தொலைவான்னு தெரியலையே’ என்று திட்ட ஆரம்பித்தாள்.

 

‘நேத்து பண்ணத்துக்கு அவனை ஒரு வழி பண்ணணும்ன்னு நினைச்சோமோ!! இன்னைக்கு விடக் கூடாது அவனை’ என்று எண்ணிக்கொண்டு கதவை திறந்து வைத்து கட்டிலில் அமர்ந்து கொண்டு வாயிலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“ஓ!! டிரெஸ் பண்ணிட்டியா!! லேட் பண்ணிட்டேனே!!” என்று வந்தவனின் கைகளில் மல்லிகை பூவிருந்தது.

 

“பூ வாங்கிட்டு வரத்தான் போயிருந்தேன் கடைக்கு” என்றவன் அதை அவளிடம் நீட்ட மறுக்காமல் கைகள் அதை உடனே வாங்கியிருந்தது.

 

இவ்வளவு நேரமாக வீரா அவள் பேசவில்லை என்பதை உணரவேயில்லை. அவள் அவன் சொன்னதை கேட்கிறாள் என்ற எண்ணம் மட்டும் தானிருந்தது அவனுக்கு.

 

‘பாவி!! பாவி!! தலைக்கு வைக்க பூ வாங்குவானா!! அதைவிட்டு பூக்கு வைக்க என் தலையை தேடியிருக்கான் போலவே!! இப்படி இது ஆறேழு முழம் இருக்கும் போலவே’

 

‘இதை வைச்சுட்டு போனா திருவிழாவுல சிங்காரிச்சு வைச்ச மாவிளக்கு குடம் மாதிரியே இருக்காது’ என்று எண்ணிக்கொண்டே அதை பல கிளிப்கள் போட்டு தலையில் வைத்துக் கொண்டிருந்தாள்.

 

முதன் முதலாய் அவனாய் பூ வாங்கி கொடுத்திருக்கிறான், வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை.

 

அதனாலேயே வாங்கி சூடிக்கொண்டிருந்தாள். “நெறைய வாங்கிட்டனோ” என்றான் அவள் கஷ்டப்படுவதை பார்த்து.

 

“இல்லை அன்னைக்கு அம்மா பத்து முழத்துக்கு மேல வைச்சுவிட்டாங்கள்ள அதனால தான் கொஞ்சம் குறைச்சு வாங்கினேன்”

 

“ஆனா அதுவே அதிகம்ன்னு இப்போ தான் தெரியுது” என்றான் விளக்கமாய். ‘வீரா நீ இவ்வளவு பேசமாட்டியே, என்னாச்சு உனக்கு’ என்று அவன் மனசாட்சி எங்கேயோ கேள்வி கேட்க ஆரம்பித்தது.

 

அவள் அப்போதும் எதுவும் பேசவில்லை. ‘இப்போவாச்சும் தெரிஞ்சுதே’ என்று மனதிற்குள்ளாக நொடித்துக் கொண்டாள். அவனை திட்டித் தீர்க்கும் வரை மனதோடு தான் பேசுவதென அவள் முடிவு.

 

“கிளம்பலாமா!! மத்தவங்க எல்லாம் கிளம்பி நடந்து போயிட்டு இருக்காங்க!! நாம தான் லேட்” என்றான்.

 

செவ்வந்தி இப்போது மறக்காமல் தன் மொபைல் ஹேன்ட்பேக் எல்லாம் எடுத்துக்கொண்டாள், முதல் நாள் பாடமாயிற்றே!! அப்போது வீராவிற்கு தோன்றியது ‘இவ என்ன இவ்வளவு அமைதியா இருக்கா!!’

 

‘இது சரியில்லையே!! புயலுக்கு முந்தையை அமைதி போல இருக்கே!!’ என்று தோன்றினாலும் எதுவும் சொல்லாமல் அவள் பின்னோடு வெளியில் வந்தான்.

 

கதவை பூட்ட சாவியை அப்போது தான் தேட ஆரம்பித்தான். செவ்வந்தி நிதானமாய் அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘மவனே நல்லா தேடுடா!! நேத்தெல்லாம் என்னைய தவிக்கவிட்டல்ல தேடு!! தேடு!! தேடிக்கிட்டே இரு!!’ என்று அவனை திட்ட அவன் கைபேசி வேறு அழைத்தது.

 

“இதோ வந்திடறேன்டா!! ஒரு பைவ் மினிட்ஸ் நடந்து வர்ற தூரம் தானே நாங்க வந்திருவோம்!! நீங்க போங்க!!” என்று அவன் பதில் சொல்வது தெரிந்தது.

 

போனால் போகிறது திருமணத்திற்கு நேரமாகிறது என்று தோன்ற வேகமாய் உள்ளே நுழைந்தவள் அவன் முன் தினம் அணிந்திருந்த பேன்ட்டை எடுத்து அதன் பாக்கெட்டில் கையை நுழைத்ததுமே கையில் அகப்பட்டதை வெளியில் எடுத்தாள்.

 

அவன் முன் கையை ஆட்டிக்காட்ட “அச்சோ பேன்ட் பாக்கெட்ல இருந்துச்சா!! மறந்தே போயிட்டேன்!!” என்றவனுக்கு அப்போதும் ஞாபகம் வரவில்லை முன்தினம் பற்றி.

‘தலையெழுத்து’ என்று மனதினுள் சொல்லிக்கொண்டு வெளியில் வந்து கதவை பூட்டி சாவியை அவனிடம் கொடுக்காமல் தன் பையுள் போட்டுக்கொண்டாள். (முன்னெச்சரிக்கை முத்தம்மா)

 

அவர்கள் ரிஷப்ஷனை கடந்து போக முன்தினம் அவளுக்கு உதவி செய்தவன் அங்கிருந்தான். இவர்களை கண்டதும் நேராய் அருகே வந்தான்.

 

“சார் தான் உங்க ஹஸ்பென்ட்டா!! என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க!! ரூம் சாவியை மேடம்கிட்ட கொடுக்காம கையோட எடுத்துட்டு போயிட்டீங்க!!”

 

“பாவம் மேடம் ரொம்ப சிரமப்பட்டு போய்ட்டாங்க!! நானும் வேற கொஞ்சம் அவங்களை டென்ஷன் பண்ணிட்டேன். எப்படியோ ரூம் கதவை திறந்து கொடுத்திட்டு வந்துட்டேன்” என்றவனை திகைப்பாய் பார்த்தான் வீரா.

 

‘அச்சச்சோ இவ அதுக்கு தான் பேசா விரதம் இருக்காளா!! செத்தேடா வீரா நீ செத்தே!! சும்மாவே பேசுவா!! நீயே உனக்கு எலுமிச்சைபழம் வைச்சு செய்வினை வைச்சுக்கிட்டியே!!’

 

“சாரி மறந்து போயிட்டேன்!! ரொம்ப தேங்க்ஸ் உதவி பண்ணதுக்கு” என்று அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அருகே பார்க்க செவ்வந்தி அவனை தாண்டிச்சென்று வெளியில் நின்றிருந்தாள்.

 

அவளருகே வந்தவன் “சாரி, நிஜமாவே எனக்கு சாவி என்கிட்ட இருந்த ஞாபகமேயில்லை… நீ எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல… உடனே கொண்டு வந்து கொடுத்திருப்பேன்ல”

 

“எப்படி தள்ளாடிட்டே வந்தா??” என்றவள் அவனை பார்வையில் எரிக்க அவனுக்கு குற்றவுணர்வாகிப் போனது.

 

அவன் செய்தது தவறு தானே அதனால் தான் வாயை மூடிக்கொண்டான். மீண்டும் அவளிடம் பேச முயற்சி செய்தான்.

 

“நேத்து நடந்ததுக்கு ரொம்ப சாரி செவ்வந்தி… நான் வேணும்ன்னு அப்படி செய்யலை”

 

“முதல்ல என் பேரை நீட்டி முழக்கி கூப்பிடுறதை விடுங்க…” என்றவள் “ஒரு வேளை நான் வேணாம்ன்னு தான் அப்படி செஞ்சிருப்பீங்களோ!! என்னவோ!!”

 

‘என்ன இவ இப்படி பேசுறா’ என்று எண்ணிக்கொண்டவன் அதற்கு மேல் அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் எல்லாம் இறங்கவில்லை.

 

எத்தனை பால் போட்டாலும் இவள் சிக்ஸ் போர் என்று இறங்கி அடிப்பாள்!! அடி பலமாய் விழும் போலவே!! நமக்கு தாங்காதடா சாமி என்று முடிவெடுத்தவன் அமைதியாய் வந்தான்.

 

சட்டென்று அவன் அவளின் கைப்பிடிக்க அவன் கையை உதறினாள். “ரோடு கிராஸ் பண்ணணும் அதுக்கு தான் பிடிச்சேன்” என்று அவன் விளக்கம் கொடுத்தான்.

 

“நான் ஒண்ணும் குழந்தையில்லை கையை பிடிச்சு கிராஸ் பண்ணிவிட” என்று சிடுசிடுவென்று சொன்னாள்.

 

வீரா அதற்கு மேலும் எதையும் பேசக்கூடாது என்று எண்ணி அமைதியாய் நடக்க ஆரம்பித்தான். அருகே மேளச் சத்தம் கேட்கும் ஓசை கேட்டது.

 

பக்கத்தில் வந்துவிட்டோம் என்று புரிந்தது அவளுக்கு. இருவருமாக ஒன்றாய் உள் நுழைந்தனர். அவனுக்காய் அவன் நண்பர்கள் கூட்டம் வாயிலிலேயே காத்திருந்தது.

 

“இதான் நீங்க அஞ்சு நிமிஷத்துல வர்றதா!!” என்று ஒருவர் கேட்க மற்றொருவரோ “ரெண்டு பேரும் மேட்சா டிரெஸ் பண்ணிட்டு வர்றதுக்கு லேட் ஆகிட்டு போல” என்று கலாய்த்தார்.

 

இருவருமே அப்போது தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவளின் நீலமும் மயில் பச்சை வண்ணமும் சேர்ந்த பட்டுச்சேலைக்கு பொருத்தமாய் அவனும் அதே மயில் பச்சை வண்ணத்தில் சட்டை அணிந்திருந்தான்.

 

முழுக்கைச்சட்டையை அழகாய் மடித்துவிட்டு வெள்ளைவேட்டியில் இருந்தவனை அவள் கண்கள் அளவேடுத்தது.

அவனுமே அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். “அட வாங்கப்பா போவோம், இவங்க இப்போ தான் புதுசா பார்க்கற மாதிரி பார்த்துக்கிட்டு இருக்காங்க” என்று ஒருவர் கிண்டல் செய்யவும் தான் இருவரும் கலைந்தனர்.

 

அவர்களுக்கு எங்கே தெரியும், இருவரின் பார்வையும் இப்போது தான் புதிதான உணர்வில் பார்க்கத் துவங்கியிருக்கிறது என்று.

 

“உள்ளே போகலாமா!!” என்று அவன் கேட்க அவள் தலை தன்னையறியாமால் ஆடியது.

 

அவளுடன் சேர்ந்து நடந்ததை அவன் மனம் ஒரு மகிழ்வுடன் ரசிக்க ஆரம்பித்தது.

 

நடக்கும் போது லேசாய் கலகலத்த அவள் கை வளை, லேசாய் காற்றில் மிதந்து வந்த மல்லிகையின் மணம் இரண்டும் அவன் மனதில் புதுவித உணர்வை கொடுத்தது.

 

இதே போன்றதொரு உணர்வு இதற்கு முன்பும் தோன்றியது, எப்போது என்று அவசரமாய் அவன் உள்ளம் யோசிக்க ஆரம்பிக்க சட்டென்று புடவை எடுக்க சென்ற அன்றும் அவன் மனம் அவளை பார்க்காமலே இதே உணர்வை கொடுத்தது நினைவிற்கு வந்தது.

 

அவளறியாமல் அவளை கள்ளத்தனமாய் ரசிக்க ஆரம்பித்தது அவன் கண்கள். உடன் அழைத்து சென்றவளை அங்கு வந்திருந்த அவனின் மற்றைய நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துக் கொண்டிருந்தான்.

 

கிட்டத்தட்ட அங்கிருந்த பெரும்பாலானோர் அவனுக்கு முன்னமே அறிமுகமாகியிருந்தவர்கள் போலும். அவளுக்கு தான் அவன் பின்னேயே செல்லுவது எரிச்சலைக் கொடுக்க அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

வீரா அதை கவனிக்கவேயில்லை. வேறு யாருக்கோ அவளை அறிமுகம் செய்து வைக்க எண்ணி “ஹேய் இதான் என் வைப்டா, பேரு செவ்வந்தி…” என்று கூறவும் எதிரில் இருந்தவரோ “இவங்களா!!” என்றுவிட்டு மெதுவாய் சிரித்தான்.

 

“ஏன்டா சிரிக்கிற??”

 

“அங்க யாரு இருக்கான்னு பாரு!!” என்று அவன் கிண்டலாய் கூற திரும்பி பார்த்த வீரா அருகில் அவளில்லாததை கண்டான்.

 

‘அச்சோ எங்காச்சும் விட்டுட்டு போயிட்டமா!!’ என்று யோசித்தவன் “ஒரு நிமிஷம்டா!! கூட தான் வந்தா எங்க போனான்னு தெரியலை. நான் போய் பார்த்திட்டு வர்றேன்… அவளுக்கு வேற இங்க யாரையும் தெரியாது” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

 

அவளைத் தேடி நடக்க ஆரம்பிக்கவும் அவள் அங்கிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தது தெரிய வேகமாய் அவளருகில் சென்றான்.

அவளருகே சென்று காலியாய் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தவன் “சொல்லாம கொள்ளாம நீ பாட்டுக்கு இங்க வந்து உட்கார்ந்திட்ட, நான் பயந்தே போயிட்டேன்” என்றான்.

 

அவளோ நிதானமாய் “நான் மட்டும் தான் சொல்லாம கொள்ளாம போறனா!!” என்றாள் முன்தின நிகழ்வுகளை மனதில் கொண்டு.

 

“என்ன சொல்றே?? நான் பாட்டுக்கு என் பிரண்டுக்கு உன்னை இன்ட்ரோ பண்ணிட்டு இருக்கேன். நீ என்னடான்னா இங்க வந்து உட்கார்ந்திருக்க” என்றான்.

 

“நான் என்ன நீங்க புதுசா வாங்கினா காரா!! எல்லாருக்கும் கொண்டு போய் காட்டிட்டு வர்றதுக்கு!! நான் ஒண்ணும் பொருளில்லை, உயிருள்ள மனுஷி!!”

 

“இப்போ என்ன நடந்திச்சுன்னு இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற??”

 

“உங்க பிரண்டுக்கு எல்லாம் என்னை இன்ட்ரோ பண்ணீங்க சரி!! அவங்களை யாரும் எனக்கு இன்ட்ரோ பண்ணீங்களா!!”

 

“உங்களை பொறுத்தவரை நீங்க புதுசா கட்டினா பொண்டாட்டியை நீங்க வாங்கின ஒரு பொருளை காட்டுற மாதிரி காட்டிக்கணும் அதானே!!” என்று பொரிந்தாள் அவள்.

 

‘கடவுளே இவகிட்ட என்ன பண்ணாலும் நான் மாட்டிக்கறேனே!! நான் பண்ணதும் தப்பு தானே இவளுக்கு யாரையும் இன்ட்ரோ கொடுக்கவேயில்லையே!!’

 

“இப்படியே உட்கார்ந்து யோசிச்சுட்டே இருங்க!! உங்களுக்கு என்னைய எல்லாம் கண்டா எப்படி தெரியுது!!”

 

“உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கற பொம்மைன்னு நினைச்சீங்களா என்னை!! நேத்தும் இப்படி தான் நீங்க பாட்டுக்கு கிளம்பி போயிட்டீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம”

 

“எல்லாரும் எப்படி அவங்க வைப் கிட்ட சொல்லிட்டு போனாங்க!! என்னை வைப்பா நினைக்க வேணாம் கூட வந்த ஒரு ஜீவனா நினைச்சாச்சும் சொல்லிட்டு போயிருக்கலாம்ல”

 

“அந்த கர்டசி கூட இல்லாம போய்டுச்சுல உங்களுக்கு!!”

 

“நான் தான் உன்னை ரூம்க்கு போக சொன்னனே!!” என்றான் சற்றே உள்ளே போன குரலில்.

 

‘வா ராஜா வா!! அடுத்த பாயிண்டை நீயே எடுத்து கொடுத்திட்ட!!’ என்று அவனுக்காய் அவள் சபாஷ் போட்டுக்கொண்டு “ரூம்க்கு போக சொன்னீங்க சரி”

 

“கையோட ரூம் சாவியையும் எடுத்துட்டு தானே போய் இருக்கீங்க!! கொஞ்சம் கூட அதுக்காக நீங்க பீல் பண்ணவேயில்லைல!! நேத்து எவ்வளவு நேரம் வெளிய நின்னுட்டு இருந்தேன்னு தெரியுமா உங்களுக்கு!!”

 

“ரூம்க்கு வெளியில கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல நின்னுட்டு இருந்தேன், இதோ வந்திடுவீங்க, அதோ வந்துடுவீங்கன்னு நினைச்சு”

 

“கடைசியா அந்த ரிஷப்ஷன்ல உள்ளவர் மட்டும் ஹெல்ப் பண்ணலைனா என்னாகியிருக்கும்!!” என்றவளுக்கு கண்ணில் கண்ணீர் எட்டிபார்த்துவிட்டது.

 

‘அச்சோ ரொம்ப நேரம் நின்னிருக்கா போலவே!!’ என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அவள் கண்ணீர் கண்டதும் ‘எல்லாம் என்னால் தான்’ என்று மனம் தன்னை குட்டிக் கொண்டது.

 

“இப்போ என்ன உங்களுக்கு நான் உங்க கூட வரணும். என்னை எல்லார்கிட்டயும் காட்சி பொருள் ஆக்கணும் அதானே!! வாங்க போவோம்” என்று எழுந்து நின்றிருந்தாள்.

 

“இங்க பாரு நீ எங்கயும் வரவேண்டாம், ப்ளீஸ் உட்காரு” என்றான்.

 

அவ்வளவு நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்த போதும் ஒருவருக்கொருவர் கேட்கும் அளவு மெதுவாய் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர்.

 

“இல்லை வாங்க போவோம்” என்று அவள் சத்தமாய் சொல்லவும் ஓரிருவர் திரும்பி பார்க்க அவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது. “போதும் ஓவரா சீன் போடாம பேசாம உட்காரு!!”

 

“எதுக்கு இப்போ இப்படி கத்தி பேசற, நான் செஞ்சது தப்பு தான்!! மன்னிச்சிரு, அதுக்காக இப்படி கத்தி எல்லாம் ஊரை கூட்டுறது எனக்கு பிடிக்காது!!” என்று அடிக்குரலில் உறுமினானா!! கத்தினானா!! என்று தெரியாத அளவிற்கு அவளை எச்சரித்து எழுந்து சென்றுவிட்டிருந்தான்.

 

‘ஓ!! நான் இப்போ கொஞ்சம் குரல் உசத்தி பேசுனது அசிங்கமா போச்சாமா இவருக்கு!! அன்னைக்கு அத்தனை பேரு சுத்தி நின்னாங்களே!! அப்போ ஒண்ணும் தோணலையாமா!!’ என்று மனதிற்குள்ளாக பொரிந்தாள்.

 

ஏனோ அழவேண்டும் போல் தோன்றியது அவளுக்கு!! அவள் மனம் விட்டு பேசும் நெருங்கிய தோழிகள் அதிகமில்லை அவளுக்கு.

 

சட்டென்று அவள் தோழி மயிலை பற்றிய எண்ணம் வந்தது. எப்போதெல்லாம் செவ்வந்திக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மயிலு உடனே அவளெதிரில் வந்துவிடுவாள்.

 

இப்போதும் செவ்வந்தியின் கைபேசியின் வழியாக மயில் வந்திருந்தாள். லேசாய் மனதிற்குள் ஒரு சந்தோசம் எழ “மயிலு” என்றவாறே தான் போனை காதில் வைத்தாள்.

 

“எப்படிடி இருக்கவ?? என்னைய மறந்திட்டியோன்னு நினைச்சேன்” என்று அவளாக பேசிக் கொண்டிருந்தாள்.

 

“செவ்வி!! பொறு!! பொறு!! நீ பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கவ, என்னையவும் பேசவிடுட்டி!!”

 

“சொல்லுடி!! நல்லா இருக்கியா!!”

 

“நான் நல்லாயிருக்கேன்!! நீ எப்படி இருக்க??”

 

“ஹ்ம்ம் இருக்கேன்!!” என்றவளுக்கு ஏனோ கண்ணீர் சுரந்தது. மெதுவாய் எழுந்து வாசல் புறம் சென்று பேசவாரம்பித்தாள்.

 

வீரா மாப்பிள்ளையின் அருகில் நின்றிருந்தான் இப்போது. நண்பனின் அருகில் நின்றிருந்தாலும் அவன் பார்வை முழுதும் செவ்வந்தியை சுற்றியே இருந்தது.

 

அவள் யாரிடமோ போனில் பேசுவது கண்ணில்பட்டது. அவ்வப்போது அவள் கண்கள் கலங்கி யாருக்கும் தெரியாமல் அதை அவள் துடைப்பது கண்ணில் விழுந்தது.

 

“இப்போ தான் மயிலு உன்னை நினைச்சேன், நீயே போட்டுட்டா!! எனக்கு மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும் போதெல்லாம் நீ வந்திடறடி!!” என்றாள் செவ்வந்தி.

 

“என்ன இப்போ உன் மனசுல!!” என்று தோழி கேட்கவும் நாக்கை கடித்துக் கொண்டாள் செவ்வந்தி.

 

“செவ்வி உன்ட்ட தான்டி கேட்டேன்!! அண்ணே எதாச்சும் உன்ட்ட வம்பு பண்ணுறாங்களா!! என்ன பிரச்சனை புள்ளை சொல்லுட்டி!!”

 

“ஒண்ணுமில்லை மயிலு!! யாருமில்லாம தனியா இருக்கற மாதிரி தோணிச்சு புள்ளை!! அதான் அப்படி சொன்னேன்”

 

“அண்ணன் உன்ட்ட நல்ல மாதிரி தானே இருக்காங்க!!”

 

“ஹ்ம்ம் இருக்காங்க!!”

 

“உன் குரலே சரியில்லை செவ்வி!! இப்படி நீ பேசுறவ இல்லை!!”

 

“இல்லை மயிலு நிசமாவே நான் நல்லா தான்டி இருக்கேன். அவங்க பிரண்டு கல்யாணத்துக்கு வந்திருக்கோம். அவங்க அவங்களோட பிரண்டு கூட இருக்காங்க”

 

“அதான் தனியா ஒரு மாதிரி இருந்துச்சு, உன்னைய நினைச்சேன். நீ போன் போட்டே” என்று சமாளித்தாள் அவள்.

 

“சீய்!! அதானா நான் ரொம்ப பயந்துட்டேன் செவ்வி… சரி நீ கல்யாணத்துல இருக்க, நீ அங்கன பாரு நாம பொறவு பேசுவோம்” என்றுவிட்டு அவள் போனை வைத்துவிட்டாள்….

 

Advertisement