Advertisement

அத்தியாயம் – 10

 

“மதினி… மதினி…” என்ற தாமரையின் குரல் வெளியில் கேட்க வீரா எழுந்து வந்து கதவை திறந்தான்.

 

“என்ன தாமரை??” என்றான் வெளியில் நின்றவளை பார்த்து.

 

“மதினி…” என்று அவள் இழுக்க “பாத்ரூம்ல இருக்கா??” என்றான்.

 

“சாரி அண்ணா… அத்தை அப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கலை. மதினி வருத்தப்பட்டிருப்பாங்க சாரி அண்ணா…” என்றவளை புரியாமல் பார்த்தான் அவன்.

 

“என்ன சொல்ற தாமரை?? எதுக்கு சாரி?? அத்தை என்ன சொன்னாங்க??” என்றான்.

 

“மதினி எதுவும் சொல்லலையா அண்ணா??” என்றாள் அவள் கேள்வியாய்.

 

“இல்லையே” என்றதும் தாமரை அவள் மாமியார் பேசியதை சொல்ல வீராவுக்கு சுருசுருவென்று கோபம் வந்தது.

 

“என்ன நினைச்சுட்டு இருக்காங்க அவங்க?? எப்படி அவங்க அவளை அப்படி சொல்லலாம். இதுக்கு தான் எங்களை இங்க கூப்பிட்டீங்களா…” என்றவனின் குரலில் அப்பட்டமான கோபமிருந்ததை உணர்ந்தாள் தாமரை.

 

“நாங்க கிளம்பறோம், இனி ஒரு நிமிஷம் இங்க இருக்கறதா இல்லை”

 

“கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்த தான் அவங்க திட்டமா… நான் அவங்களை என்ன ஏதுன்னு கேட்காம விடப்போறதில்லை” என்று குரலுயர்த்தி பேசவும் தாமரைக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

 

“அண்ணா அதெல்லாம் வேணாம்ண்ணா… ப்ளீஸ் அண்ணா…” என்று ஏதோ சொல்லி கையை பிசைந்து நிற்க குளியலறை கதவை திறந்துக்கொண்டு செவ்வந்தி வெளியில் வந்தாள்.

 

வாசலில் தாமரையை கண்டதுமே என்னவோ ஏதோவென்று அவசரமாய் அறைக்கதவை நெருங்க வீரா கோபமாய் பேசிக்கொண்டிருப்பதும் தாமரை கலங்கி நிற்பதும் கண்ணில் விழுந்தது.

 

“என்ன அண்ணி??” என்று தாமரையை கேட்டவளின் பார்வை கணவனை நோக்கியே இருந்தது.

 

“இல்லை மதினி அத்தை பேசினது எதையும் நீங்க மனசுல வைச்சுக்க வேண்டாம். நீங்க வருத்தப்படப் போறீங்களேன்னு தான்…” என்று அவள் சொல்லவும் “எனக்கு எந்த வருத்தமும் இல்லை அண்ணி…”

 

“நீங்க அதையெல்லாம் நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்காதீங்க… நிம்மதியா இருங்க, இதுகெல்லாமா கண்ணு கலந்குறது” என்றவள் தாமரையின் கண்ணீர் துடைக்கவும் தான் வீராவிற்கு தாமரை அழுததே உரைத்தது.

 

“நீ ஏன் என்கிட்ட எதுவும் சொல்லலை??” என்றான்.

 

“என்ன சொல்லணும்??” என்றாள்.

 

“அத்தை உன்னை பேசினதை பத்தி”

 

“சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க??” என்றாள் அசட்டையாய்.

 

“அவங்களை ஒரு வழி பண்ணியிருப்பேன்… உன்னை எப்படி அவங்க பேசலாம், அதுவும் ஒழுக்கமா இருன்னு எப்படி சொல்லலாம்”

 

“அப்படி என்ன ஒழுக்கம் கெட்டுப்போய் நடந்ததை அவங்க பார்த்திட்டாங்க…” என்று சற்றே குரல் உயர்த்தி தான் பேசினான்.

 

“இதெல்லாம் இப்போ தான் தெரியுதா உங்களுக்கு. ஊர்ல எல்லாரும் பேசாததையா இவங்க சொல்லிட்டாங்க”

 

“என்ன பேசற நீ??” என்று சிடுசிடுத்தான் அவன்.

 

“அவங்க பேசினதை கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கா… அங்கெல்லாம் கேள்வி கேட்காம இவங்களை கேட்டா ஆச்சா…”

 

“எல்லாரையும் கேட்க முடியாது, இவங்களை என்னால கேட்க முடியும்… நான் கேட்டுக்கறேன்” என்று இன்னும் குதித்தான் அவன்.

 

“அதுக்கெல்லாம் அவசியமில்லை… அண்ணி அழுதிட்டு இருக்கறதை தான் உங்களுக்கு பார்க்கணுமா!! அப்படின்னா போய் கேளுங்க!!” என்றதும் அவன் வாயை மூடிக்கொண்டான்.

 

“அண்ணி நீங்க வருத்தப்பட தேவையில்லை. நான் ஒண்ணும் நினைச்சுக்கவும் இல்லை… சரியா!!”

 

“சரி நான் எதுவும் கேட்கலை, ஆனா இனி ஒரு நிமிஷம் கூட என்னால இங்க இருக்க முடியாது நாம கிளம்புவோம்…” என்றதும் தாமரை விசும்ப ஆரம்பித்துவிட்டாள்.

 

“கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டீங்களா நீங்க!! யாரோ என்னமோ சொல்லிட்டு போறாங்க, என்னை தானே சொன்னாங்க”

 

“உங்களை எதுவும் சொல்லலைல சும்மா கிடந்து எதுக்கு குதிக்கறீங்க!! யாருக்காக பார்க்கறோமோ இல்லையோ தாமரை அண்ணிக்காக பார்க்க வேண்டாமா”

 

“அண்ணி நீங்க எதுவும் விசனப்படாம போங்க… உங்க அண்ணனை நான் பார்த்துக்கறேன்” என்று தாமரைக்கு சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

 

“நீ என்ன லூசாடி??”

 

“நீ தான்டா லூசு” என்றாள் அவளும் மரியாதையை விட்டு.

 

“அவங்களை கேட்டா என்ன வந்திடும் இப்போ??”

 

“இப்போ அவங்களை கேட்டு தான் என்ன வந்திடும்ன்னு தான் நான் கேட்கறேன்” என்றாள் அவளும் சளைக்காமல்.

 

“சும்மா நடந்ததையே போட்டு கிளறிக்கிட்டு இருக்காம பேசாம இருங்க. என்னை சொன்னதுக்கு நீங்க ஏன் பாயறீங்க”

 

“என் பொண்டாட்டியை அவங்க எப்படி சொல்லலாம்”

 

“ஓ!! இப்போ நான் உங்க பொண்டாட்டி இல்லை அதனால தான் கேட்கணும்ன்னு தோணுதா உங்களுக்கு”

 

“நான் யாரோவா இருந்தப்போ உங்களுக்கு அதை பத்தி எல்லாம் கவலையில்லை அதானே!!”

 

“சும்மா எதையாச்சும் பேசி என் வாயை கிளறாதீங்க, அது உங்களுக்கு நல்லதில்லை” என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டாள் அவள்.

 

இரவு உணவு உண்ட போதும் அதன்பின் அவள் அறைக்கு வந்து அவனருகில் படுத்த பின்னும் கூட எதுவும் வாயே திறக்கவில்லை அவள்.

காலை உணவின் போது தாமரையின் கணவனும் தாமரையும் மட்டுமே உணவு மேஜையில் இருந்தனர். தாமரையின் மாமனாரும் மாமியாரும் அவர்கள் அறையில் இருந்தனர்.

 

தாமரை அவள் கணவன் ரவியிடம் என்ன சொல்லியிருப்பாளோ காலை உணவின் போது அவன் மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான் வீராவிடம்.

 

“தாமரை சொன்னா நைட் அம்மா ஏதோ பேசிட்டாங்களாமே!! அதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்க வேணாம்”

 

“ஏதாச்சும் புரியாம பேசியிருப்பாங்க மன்னிச்சிருங்க” என்று இப்போதும் வீராவை பார்த்தே சொன்னான்.

 

வீராவிற்கு ரவி தன்னிடம் மன்னிப்பு கேட்டது லேசாய் உறுத்த ஆரம்பித்தது. “அத்தை பேசினது என்கிட்ட இல்லை ரவி… செவ்வந்திகிட்ட” என்றான் அழுத்தமாய்.

 

ரவிக்கு வீராவின் பேச்சில் என்ன புரிந்ததோ!! “மன்னிச்சிரும்மா எதுவும் மனசுல வைச்சுக்க வேண்டாம்” என்றான் ஏதோ போனால் போகிறது என்ற ரீதியில்.

 

செவ்வந்தி மெதுவாய் “அண்ணா அதெல்லாம் நான் மனசுல வைச்சுக்கலை… தவிர அம்மா பேசினதை நான் தப்பாவும் எடுத்துக்கலை”

 

“மனசுல வைச்சுட்டு முகம் திருப்பிட்டு போறவங்களை விட முகத்துக்கு நேரே அவங்க பேசினதே ரொம்பவே எனக்கு நிம்மதி தான் அண்ணா” என்றவளை திடுக்கிட்டு தான் பார்த்தான் ரவி.

 

உண்மையில் ரவிக்கு செவ்வந்தியுடனான வீராவின் திருமணம் அவ்வளவு உவப்பானதாய் இருக்கவில்லை.

 

திருமணம் நடந்தவிதம் செவ்வந்தியின் மீதான மதிப்பை குறைத்திருந்தது. அவன் வாய் திறந்து பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே தவிர தாமரையிடம் மனதில் தோன்றியதை பகிர்ந்தே தான் இருந்தான்.

 

செவ்வந்தியின் தற்போதைய பேச்சு தாமரையும் நிமிர்ந்து பார்க்கச் செய்தது. வீரா மட்டுமே குழப்பமாய் பார்த்தவன் எதிரில் அமர்ந்திருந்த ரவியை பார்த்து எதையோ யூகிக்க முயற்சி செய்தான்.

 

அதன்பின் யாரும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை அங்கு. செவ்வந்தியும் வீராவும் காலை உணவுக்குப்பின் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாயினர்.

 

தாமரையின் மாமியாரிடம் சென்று சொல்லிக்கொண்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர்.

 

காரில் ஏறியமர்ந்தும் இருவரும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. அவரவர் சிந்தனையிலேயே உழன்றிருந்தனர்.

 

வீராவுக்கு முதன் முறையாய் செவ்வந்தியின் தைரியம் கண்டு வியப்பும் ஆச்சரியமுமே. ‘எப்படி எல்லாருக்கும் தகுந்த மாதிரி இவளால பதில் கொடுக்க முடியுது’ என்ற சிந்தனை அவனுக்கு.

 

அவளைப் பற்றி நல்லவிதமாய் அவன் மனதில் ஒரு வித்து விழுவதை அவனே உணரவில்லை.

 

செவ்வந்தியும் சிந்தனையிலேயே இருக்க அவளுக்கு வெகு நேரம் சிந்திக்க பிடிக்காமல் “கார்ல பாட்டு எதுவும் போட மாட்டீங்களா” என்று கேட்டேவிட்டாள்.

 

“சாரி ஏதோ ஞாபகத்துல இருந்தேன் அதான்…” என்றவன் “எனக்கு பிடிச்ச பாட்டா தான் இருக்கு, உனக்கு பிடிக்குமான்னு தெரியலை”

 

“நெக்ஸ்ட் டைம் உனக்கு பிடிச்ச பாட்டு எல்லாம் பதிஞ்சு வை… இப்போ இதை கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றான்.

 

“ஏதோ ஒண்ணை போடுங்க…” என்று சொன்னவளின் குரல் உடைந்திருந்ததோ என்று தோன்ற ‘அழுதிருப்பாளோ!!’ என்று எண்ணியவன் “செவ்வந்தி” என்றழைத்தான்.

 

“ஹ்ம்ம்” என்றாள் திரும்பாமலே.

 

“கொஞ்சம் திரும்பு”

 

“என்னன்னு சொல்லுங்க”

“என்னை பாருன்னு சொன்னேன்” என்றான் சற்று அழுத்தி.

 

“என்னன்னு சொல்லுங்க காது கேட்குது” என்றவளின் குரல் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது.

 

“அழறியா என்ன!!” என்றதும் திரும்பியவள் “இல்லை நான் ஏன் அழணும்” என்று வாய் தான் சத்தமாய் சொன்னதே தவிர அவள் கண்களில் அருவியாய் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

 

அவளின் கண்ணீர் கண்டதும் வீராவுக்கு என்னவோ போல் ஆகிவிட “என்னம்மா என்னாச்சு??” என்றவன் காரை ஓரம் கட்டி நிறுத்தியே விட்டான்.

 

“எல்லாம் உங்களால தான்” என்றவளுக்கு கட்டுப்படுத்த முடியாமல் அழுகை பீறிட்டது.

 

எதுவும் சொல்லத் தோன்றாமல் அவளை தன் மேல் சாய்த்துக் கொள்ள அவன் மேல் சாய்ந்திருக்கிறோம் என்ற உணர்வெல்லாம் இல்லாமல் அவள் அழுதுக் கொண்டே தான் இருந்தாள்.

 

“என்னன்னு சொல்லும்மா… இப்போ எதுக்கு நீ அழற??”

 

“நான் என்ன தப்பு பண்ணேன், ஒழுக்கமில்லாமையா நான் இருக்கேன்…” என்றவளின் கேவல் நின்றபாடில்லை.

 

வெகு நேரமாய் அவள் அழுகையை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அதனாலேயே பெரும் கேவலாய் வெடித்திருந்தது அவள் அழுகை.

 

“என்ன பேசறே நீ?? யாராச்சும் எதாச்சும் சொன்னா நீ அப்படி ஆகிடுவியா!! ரவிகிட்ட பேசும் போது கூட நல்லா தானே பேசினே!!”

 

“எனக்கே உன்னை பார்த்து ஆச்சரியமா தான் இருந்துச்சு… எவ்வளவு போல்டா தெளிவா பேசினே!! இப்போ நீ இப்படி அழலாமா!!” என்றான்.

 

“அவங்க முன்னாடி நான் அழுதிருந்தா தான் நான் தப்பா தெரிஞ்சிருப்பேன். நான் எந்த தப்பும் பண்ணலைன்னு எனக்கு தெரியும்”

 

“நானும் மனுஷி தானே… எவ்வளவு தான் எல்லாத்தையும் தூக்கி போட்டு இருக்கணும்ன்னு நினைச்சாலும் ஏன் அப்படி சொன்னாங்கன்னு நினைக்க தோணுமா இல்லையா”

 

“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். சொன்னேன்ல இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்ல…” என்றவள் இருகைகளாலும் அவன் மார்பில் குத்தினாள்.

 

“கல்யாணம் நிறுத்தி இருந்தா எல்லாம் சரியாகி இருக்குமா” என்றான்.

 

“ஹ்ம்ம் நான் சரி பண்ணியிருப்பேன்” என்றாள் அழுகையினூடே

“எப்படி??”

 

“அதான் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சே!! நான் சொன்னதை கேட்டிருக்கலாம்ல, அவங்க சொன்னது சரிங்கற மாதிரி நீங்களும் இப்படி செஞ்சிட்டீங்களே!!” என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே

 

“அவங்க எல்லாரும் சொன்னதுக்காக தான் இந்த கல்யாணம் நடந்திச்சுன்னு நீ நினைக்கறியா!!”

 

“இல்லை… ஆனா இப்படி நடந்திருக்க வேணாம்ன்னு நினைக்கிறேன். உங்க அம்மா அப்பாக்காக நீங்க செஞ்சீங்க சரி…”

 

“ஆனா எந்த பழியும் இல்லாம எதை செஞ்சிருந்தாலும் முறையா செஞ்சிருக்கலாம்ல…”

 

“உனக்கு தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே!! அப்புறம் ஏன் உன்னை குழப்பிக்கிற!! யாரோ ஏதோ சொல்றாங்கன்னு காதுல வாங்காம போயேன். எதுக்கு அதுக்கெல்லாம் இம்பார்டன்ஸ் கொடுக்கற??”

 

“யாராச்சும் நம்மை தப்பா பேசுறது உங்களுக்கு ஈசியான விஷயமா??”

 

“இங்க பாரு அது ஈசின்னு சொல்லலை, அதுக்கு அர்த்தமில்லாதப்போ எதுக்கு அதை பெரிசா எடுத்துக்கணும்ன்னு தான் சொல்றேன்”

 

“நீங்க எப்படின்னு எனக்கு தெரியாது… நான் இப்படி தான்… ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்ன்னு நினைக்கிறவ நான்”

 

“அதுக்காக என் உயிரை மாய்ச்சுக்க மாட்டேன்… ஏற்கனவே என்னோட பிரண்ட் ஒருத்தி இந்த மாதிரி பேச்சுக்களை தாங்க முடியாம முட்டாள்த்தனமா அவ உயிரை மாய்ச்சுக்கிட்டா!!”

 

“என்னை நான் நிரூப்பிச்சிருப்பேன் அதுக்கான சந்தர்ப்பத்தை யாருமே எனக்கு கொடுக்கலை. எங்க வீட்டில இருக்கவங்களும் சரி நீங்களும் சரி என்னைப்பத்தி நினைக்கவே இல்லை” என்றாள் மூக்கை உறிஞ்சிக்கொண்டே

 

“சரி தப்பு தான் மன்னிச்சுடு” என்று கரம் கூப்பினான்.

 

“ஓ!! சாரின்னு கேட்டா தப்பெல்லாம் சரியாகிப் போகுமா!!” என்றாள் நக்கல் குரலில். அழுகை இப்போது சுத்தமாய் நின்றிருந்தது.

 

அவன் மேல் சாய்ந்திருந்தவள் நிமிர்ந்திருந்தாள். “அப்போ நான் என்ன பண்ணணும்ன்னு சொல்லு. எப்போ பார்த்தாலும் என்னை தான் காய்ச்சி எடுக்கற”

 

“எங்கம்மா அப்பா மேல எல்லாம் உனக்கு கோபம் இருக்க மாதிரி தெரியலை. அவங்ககிட்ட நல்லா தானே பேசுற, என்கிட்ட மட்டும் சண்டை போட்டுட்டே இருக்கே” என்றவன் தான் ஏன் இதெல்லாம் அவளிடம் கேட்கிறோம் என்று உணரவேயில்லை.

“உங்ககிட்ட நல்லா வேற பேசுவாங்களா!!”

 

“அம்மா தாயே ஆளைவிடு!! எப்படி பேசினாலும் நீ என்னைத் தான் கடிச்சு குதற போறே!! என்னமோ பேசிட்டு போ!!” என்றவன் வண்டியை கிளப்பியிருந்தான்.

 

அதன்பின் அவன் வாயே திறக்கவில்லை. பிளேயரில் பாட்டை போட்டுவிட்டு அவனுமே அமைதியாகத் தான் வண்டியை செலுத்தினான்.

 

பார்வை மட்டும் அவ்வப்போது அவளின் மேல் திரும்பியது ஏன் என்றே தெரியாமல்.

 

அவளுக்கும் அது தெரிந்திருந்த போதும் அவனிடம் வம்பு பேச முடியவில்லை, அமைதியாகவே வந்தாள்.

 

அவ்வப்போது அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து அவள் வயிற்றை நிறைத்தான் அவன். வண்டி இப்போது மூணார் செல்லும் பாதையில் சென்றுக் கொண்டிருந்தது.

 

பலமணி நேர மௌனம் அவனுக்கு நிச்சயம் வெறுப்பாய் தானிருந்தது. தனியாக வந்திருந்தால் வேறு உடன் ஒரு ஆளும் வந்திருக்கும் போது அமைதியாய் வண்டியை செலுத்துவது சலிப்பாக உணர்ந்தான்.

 

அவளுக்குமே அப்படி தான் இருந்திருக்கும் போலும், அவன் பேச எத்தனிக்கும் முன் “பாட்டை நிறுத்தறீங்களா!!” என்றிருந்தாள் அவள்.

 

“நீயும் பேச மாட்டே!! பாட்டை நிறுத்திட்டு என்ன செய்ய!!” என்றான் அவன்.

 

“வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க சொல்றேன்” என்றாள் அவள்.

 

“எதுக்கு வண்டியை நிறுத்தணும்??”

 

“நிறுத்தினா தான் சொல்லுவேன்”

 

‘திமிர் பிடிச்சவ’ என்று மனதிற்குள்ளாக அவளை திட்டிக்கொண்டே வண்டியை ஓரம்கட்டி நிறுத்தினான்.

 

“எனக்கு இங்க இருந்து கீழ பார்க்கணும்” என்றவள் வண்டியில் இருந்து இறங்கியிருந்தாள்.

 

“வேணாம் தலைசுத்தும்” என்று எச்சரிக்கை செய்தான்.

 

“எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்றாள் அவள்.

 

“சரி நீ போய் பார்த்திட்டு வா!!” என்றவன் இறங்கி வண்டி மேல் சாய்ந்து நின்றிருந்தான்.

 

அவள் சாலையை கடந்து அங்கிருந்த விளிம்பில் சென்று நின்றவள் அங்கிருந்தவாறே அவனை அழைத்தாள்.

 

“என்ன?? எதுக்கு கூப்பிட்டே??”

 

“அங்க நின்னு என்ன பண்றீங்க?? இங்க வாங்க” என்றாள் அதிகாரமாய்.

 

“அதான் எதுக்குன்னேன்??”

 

“ஒரு வேளை கீழ விழுந்தா நான் மட்டும் விழவா!! அதுக்கு தான் உங்களை கூப்பிடுறேன்” என்றாள்.

 

‘அவ்வளவு பயம் இருக்குல, அதை சொன்னா என்னவாம்!! அப்பவும் ஓவரா சீன் காட்டுறாளே’ என்று எண்ணிக்கொண்டு வண்டியை பூட்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டவன் அவளை நோக்கிச் சென்றான்.

 

“வா பார்ப்போம்” என்று அவன் கைக்கொடுக்க அவள் கைகள் தன்னையுமறியாமல் அவன் கைகளுக்குள் அடைக்கலம் ஆகியிருந்தது.

 

மெதுவாய் எட்டிப்பார்த்தவளுக்கு அம்மாடி என்றிருந்தது. “வாவ்… எவ்வளவு அழகா இருக்குல” என்றவள் இன்னும் கொஞ்சம் நகர்ந்து சென்று எட்டிப் பார்த்தாள்.

 

‘எவ்வளவு உயரம் விழுந்தால் என்னாவது’ என்று தோன்றிய மாத்திரத்தில் தலைக் கிறுகிறுக்க கண்கள் லேசாய் ஒரு மயக்கத்தை கொடுக்கவும் அவன் மேல் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 

“இதுக்கு தான் சொன்னேன் போக வேணாம்ன்னு” என்றவன் அவளை அணைத்தவாறே அங்கிருந்து அழைத்துச் சென்றான் காரை திறந்து அவளை உட்கார வைத்து சற்று ஆசுவாசப்படுத்தவும் தான் அவளால் இயல்புக்கு திரும்ப முடிந்தது.

 

“ஆர் யூ ஓகே!!”

 

“ஹ்ம்ம்” என்று தலையாடியது.

 

‘வாய் தான் ஓவர்… பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் போல’ என்று எப்போதும் போல் மனதிற்குள்ளாக தான் எண்ணிக்கொண்டான்.

 

அவர்கள் சென்று சேர வேண்டிய இருப்பிடம் வர மாலையாகியிருந்தது.

 

அவன் கார் உள் நுழையவும் “ஹேய்” என்ற இரைச்சல் வாயிலில் கேட்க செவ்வந்தி மெதுவாய் எட்டிப்பார்த்தாள்.

 

“ஒண்ணுமில்லை என் பிரண்ட்ஸ் தான் அப்படி கத்துறாங்க” என்று விளக்கம் கொடுத்தான்.

 

“எதுக்காம்!!”

 

“நான் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிட்டு இருந்தேனாம்”

 

“இப்போ உன்னோட வர்றேன்னு சொன்னேன்ல அதுக்கு தான் ஆர்ப்பாட்டம் பண்ணுறானுங்க” என்று அவன் சொல்லி முடிக்கவும் “என்னடா புது மாப்பிள்ளை வண்டியை விட்டு இறங்க மனசில்லையா” என்றனர்.

“இறங்கிட்டே தான்டா இருக்கேன்” என்றவன் அவளை பார்த்து “இறங்கு” என்பதாய் தலையசைக்க அவள் இறங்கவும் சாரலாய் பெய்திருந்த மழை கொஞ்சம் வலுக்கத் தொடங்கியது.

 

அவசரமாய் அவர்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு அந்த காட்டேஜுக்குள் உள்ளே நுழையவும் மழை பெரு மழையாகியிருந்தது.

 

“வெல்கம் டு மூணார்” என்றான் ஒருவன்.

 

அவளுக்கு தான் யாரையும் தெரியாதே, சிரிக்கலாமா வேண்டாமா என்ற ரீதியில் பார்த்திருந்தவள் சிரிக்கிறேன் என்ற பெயரில் லேசாய் புன்னகைக்க முயன்றாள்.

 

“என்னடா வரும் போதே சிஸ்டரை பயமுறுத்தி கூட்டிட்டு வந்தியா!!” என்றான் அவன் நண்பன்.

 

“யப்பா சாமி நான் பயமுறுத்தறதா!! அவ்வளவு தான்” என்றவன் திரும்பி அவளைப் பார்க்க அங்கு அவளுக்கு சுருசுருவென்று வந்தது.

 

“எங்க உன்னோட மனைவி குழந்தை எல்லாம்” என்று அவன் நண்பனை கேட்க “எல்லாரும் உள்ள இருக்காங்க, நான் இவனுங்களை மட்டும் கூட்டிட்டு வெளிய வந்தேன் ஒரு தம்மை போடலாம்ன்னு”

 

“பார்த்தா நீ வர்றே!! அதான் எல்லாரும் சேர்ந்து ஒரு கோரசை போட்டோம்” என்றான் அவன்.

“என்னடா நீங்களும் பேமிலியா தானே வந்திருக்கீங்க” என்றான் வீரா மற்றவர்களையும் பார்த்து.

 

“பார்றா இந்த சாமியார் இப்போ தான் சம்சாரி ஆகியிருக்கார். அதுக்குள்ள நம்ம பேமிலியா வந்தோமா இல்லையான்னு விசாரிக்கறதை பாரேன்”

 

“இதுக்கு முன்னாடி எல்லாம் இப்படி நீ விசாரிச்சிருப்பியாடா!! குடும்பம்ன்னு ஆனதும் விசாரிக்கறதை பாரேன்” என்றான் மற்றொருவன்.

 

இன்னொமொருவனோ “ஏன்டா எங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி வைக்க மாட்டியா!! கல்யாணத்துக்கு தான் கூப்பிடலை” என்று அங்கலாய்க்க மற்றவர்களும் அதை வழி மொழிந்தனர்.

 

இப்போது அவர்கள் காட்டேஜின் உள்ளிருந்த வராண்டாவிற்குள் நுழைந்திருந்தனர்.

 

“இவங்க தான் என்னோட மனைவி செவ்வந்தி. வருங்கால டாக்டரம்மா” என்று அறிமுகம் செய்ய அவள் எல்லோரையும் பார்த்து புன்னகைத்து வைத்தாள்.

 

“இவங்க எல்லாரும் என்னோட யூஜி மேட்ஸ்…” என்றவன் எல்லோரையும் அவளுக்கு அறிமுகம் செய்தான்.

 

“உள்ளே போகலாமாடா!! ஆமா கல்யாண மாப்பிள்ளை எங்க” என்றவாறே பேசிக்கொண்டே நகர்ந்தனர்.

 

“இந்த ரூம் தான்டா!! நீ இங்க தங்கிக்க!! கொஞ்சம் ரெண்டும் பேரும் ரெஸ்ட் எடுங்க!! நைட் டின்னர்க்கு எல்லாரும் மீட் பண்ணலாம் அவங்கவங்க பேமிலியோட!!” என்றவாறே அவன் நட்புகள் கலைந்தனர்.

 

அவர்கள் அறைக்கு சென்றதும் அவன் உடைமைகளை உள்ளே வைக்க அவள் கதவை அடைத்துவிட்டு வந்து கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

 

“என்னாச்சு படுத்துட்ட??” என்றான்.

 

“டயர்டா இருக்கு”

 

“அவ்வளவு தூரம் கார் ஓட்டிட்டு வந்தது நானு, உனக்கு டயர்டா ஓவரா இல்லையா உனக்கு!!”

 

“நானா உங்களை ஓட்டிட்டு வர சொன்னேன். என்கிட்ட கொடுத்திருந்தா நானும் கொஞ்சம் டிரைவ் பண்ணியிருப்பேன்ல”

 

“உனக்கு டிரைவிங் தெரியுமா!!”

 

“தெரியும்”

 

“ஹ்ம்ம்” என்றவன் மேலே எதுவும் பேசவில்லை கட்டிலின் மறுபுறம் சென்று அவனும் விழுந்தான்.

 

இருவரும் எப்போது உறங்கினார்கள் என்றே அறியவில்லை. உறக்கம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. இந்த குளிருக்கு எவ்வளவு இதமா இருக்கு இந்த கம்பளி என்று இன்னும் அதனுள் புதைந்து போக லேசாய் கண்விழிந்தான் வீரா.

 

செவ்வந்தி தான் அவனருகில் உறங்கியிருந்தாள். அவன் மார்பில் ஒண்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

 

‘இதென்ன இங்க வந்து படுத்திருக்கா!! தெரிஞ்சு படுத்திருக்காளா!! இல்லை தெரியாமையா!!’

 

‘தெரிஞ்சு படுத்திற கிடுத்திற போறா!! தெரியாம உறக்கத்தில வந்திருப்பா!!’ என்று புரிந்தது. அவனுக்குமே அவள் அப்படி படுத்திருந்தது பிடித்திருந்தது.

 

அவளை சுகமாய் அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்ததை ஒரு ஆச்சரியத்துடன் உணர்ந்தான்.

 

குனிந்து அவளை பார்க்க இருவரையும் பார்த்தால் கருப்பு வெள்ளை புகைப்படம் போல் தோன்றியது அவனுக்கு.

 

வீரா அந்த கண்ணனின் நிறம் அவளோ கண்ணன் விரும்பி சாப்பிடும் வெண்ணையின் நிறத்தை கொண்டிருந்தாள்.

 

தன்னுள் ஏதோ ரசாயன மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவன் மனமும் உடலும் நன்றாய் உணர்ந்திருந்தது.

 

அவன் மார்பில் குழந்தையாய் உறங்கும் அவளை எவ்வளவு நேரம் பார்த்திருந்தானோ அவனே அறியவில்லை.

 

செவ்வந்தியின் உறக்கம் கலைவதை உணர்ந்தவன் சட்டென்று அவன் விழி மூடிக்கொண்டான். உறக்கம் கலைந்து விழித்தவள் அவள் இருக்குமிடம் உணர்ந்ததும் அவசரமாய் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

“ச்சே!! எனக்கென்ன இதே வேலையா போச்சு!! அன்னைக்கு ஊர்லயும் இப்படி தான் படுத்திருந்தேன். இங்கயும் இப்படி”

 

“நல்ல வேளை தூங்கிட்டு இருக்கான்!! முழிச்சிருந்தா மானமே போயிருக்கும்” என்று வாய்விட்டு மெதுவாய் அவள் முணுமுணுத்தது அவன் காதில் தெளிவாய் விழுந்தது.

 

‘ஓ!! இதே போல ஊர்லயும் நடந்திருக்கா, எப்படி எனக்கு தெரியாம போச்சு. அம்மிணிக்கு தூக்கத்துல பக்கத்துல வர்ற பழக்கம்’ போல என்றெண்ணிக் கொண்டவன் உடனே எழுந்து விடவில்லை.

 

அவள் எழுந்து சற்று பொறுத்து தான் கண் விழிப்பது போல காட்டிக்கொண்டான்.

 

எழுந்து அமர்ந்தவன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவளை பார்க்க அவனை நிமிர்ந்து பார்க்காமல் அவள் பார்வை வேறெங்கோ இருந்தது.

 

‘கொஞ்சம் பார்த்தா தான் என்ன??’ என்று அவன் மனம் ஏங்கியது. இந்த உணர்வு அவனுக்கு புதிது, சந்தோசமாகவும் இருந்தது அவனுக்கு.

 

கையில் துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான் அவன்.

 

அவன் உள்ளே சென்று மறைந்ததும் தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அவள் உறக்கம் கலைந்து எழுந்த சில நிமிடங்களிலேயே அவனும் எழுந்துவிட்டிருந்தான்.

 

ஒரு வேளை அவனுக்கு தெரிந்திருக்குமோ வேண்டுமென்று தான் கண் மூடி படுத்திருந்தானோ என்று நினைக்க நினைக்க அவளுக்கு கூச்சம் பிடுங்கி தின்றது.

 

அதனாலேயே அவன் எழுந்து அவளை பார்த்த போதும் கூட நிமிர்ந்து அவனை பார்க்க முடியாமல் தலை தாழ்ந்திருந்தாள்.

 

‘ம்ம்ஹூம் இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது. சக்தி இதெல்லாம் உனக்கு சரியா வராது. எப்பவும் போல நீ உன் கச்சேரியை ஸ்டார்ட் பண்ணு’ என்று மனசாட்சி எடுத்துக்கொடுக்க மனம் கொஞ்சம் சமனப்பட்டது.

 

இந்த பயணம் இருவருக்குமே ஒருவர் மேல் மற்றவருக்கு ஒருவித ஈர்ப்பை கொடுக்கப் போவதறியாமல் தங்களுக்குள் சபதம் எடுத்தனர் இருவரும்.

சபதத்தின் முதல் படியாய் இருவருமே ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து பேசவில்லை. குளித்துவிட்டு வந்தவன் வேறு உடைக்கு மாறி தயாராய் இருக்க அவர்கள் அறைக்கதவு தட்டப்பட்டது.

 

“செவ்வந்தி கதவை கொஞ்சம் திறயேன்” என்றான் அவன்.

 

அவன் பேச்சில் பழைய செவ்வந்தி திரும்பியிருக்க “ஏன் நீங்க திறந்தா என்ன??” என்றாள் அவள்.

 

“எதுக்கு இப்போ ஏட்டிக்கு போட்டியா பேசற?? கதவை தானே திறக்கச் சொன்னேன்”

 

“அதான் கேட்கிறேன் நீங்க ஏன் போய் திறக்கக் கூடாதான்னு” என்று வீண் விதண்டாவாதம் செய்தாள் அவள்.

 

கோபமான பெருமூச்சை வெளியிட்டவன் வாயிலை நோக்கிச் சென்றான். “இனிமே நீட்டி முழக்கி என் பேரை கூப்பிடாம சக்தின்னு கூப்பிடுங்க” என்றாள்.

 

‘நான் சொன்னா நீ கேட்க மாட்டே!! நீ சொன்னா நான் கேட்கணுமா!!’ என்று எண்ணிக்கொண்டவன் “ஓகே செவ்வந்தி” என்றான் வேண்டுமென்றே.

 

அவள் பல்லைக் கடிப்பதை உணர்ந்தவன் லேசாய் சிரித்துக்கொண்டே கதவை திறக்க அவன் நண்பன் ஒருவன் வெளியில் நின்றிருந்தான்.

 

“என்னடா இன்னும் என்ன பண்றீங்க… பின்னாடி ரெஸ்டாரண்ட் வந்திடுங்க… எல்லாரும் உங்களுக்காக தான் வைடிங்”

 

“வந்திடறோம்டா ஒரு பைவ் மினிட்ஸ்” என்று வீரா சொல்ல “நீங்க வாங்க நான் கிளம்பறேன்” என்றுவிட்டு அவன் நகர்ந்துவிட்டான்.

 

“ஆமா ஏன் உன்னை சக்தின்னு கூப்பிடணும். உன் பேரு செவ்வந்தி தானே” என்றான் நினைவு வந்தவனாய்.

 

“எங்கப்பா என்னை சக்தின்னு தான் கூப்பிடுவார். எனக்கு அது தான் பிடிக்கும். செவ்வந்தி என் பாட்டி எனக்கு வைச்ச பேரு” என்றாள்.

 

“அப்போ நான் இனிமே உன்னை செவ்வந்தின்னு தான் கூப்பிடுவேன்” என்றவன் “சரி வா போகலாம்” என்று கூற அவளோ “வரமுடியாது நீ போ” என்றாள்.

 

“வரலைன்னா குண்டுகட்டா தூக்கிட்டு போய்டுவேன் பரவாயில்லையா!! தேவையில்லாத ஷோவை எதுக்கு எல்லாருக்கும் காட்டணும்” என்று கூற செவ்வந்தி அவனை முறைத்தாள்.

 

‘இவன் என்ன இப்படி எல்லாம் பேசறான்’ என்று எண்ணியவள் முதல் ஆளாய் அந்த அறையை விட்டு வெளியேறி வெளி வாயிலில் நின்றுக் கொண்டாள்.

 

‘டேய் வீரா பரவாயில்லைடா உன்னாலயும் கூட இவ வாயை அடைக்க வைக்க முடியுது’ என்று எண்ணி அவனுக்கு அவனே சபாஷ் போட்டுக் கொண்டான். அவன் மனைவி இதெற்கெல்லாம் சேர்த்து வைத்து அவனை ஒருவழி ஆக்கப் போவது அறியாமல்….

 

“அதிசயம் ஆனா உண்மை” என்றான் நடந்து கொண்டே!!

 

‘என்ன’ என்பது போல் அவனை அவள் நிமிர்ந்து பார்க்க அவன் மனதில் நினைத்ததை சொல்லிவிட்டான். “நான் ஒண்ணு சொல்லி நீ மறுத்து பேசாம என்னோட வர்றியே!!” என்றான் அவன்.

 

‘ஓ!! அதுக்கு தான் அப்படி பேசினியா நீ!! மவனே உன்னை என்ன பண்றேன் பாரு!!’ என்று எண்ணிக்கொண்டவள் எதுவும் பேசவில்லை.

 

வீரா இப்போதும் அவள் அவன் பேச்சைக் கேட்டு அமைதியாகிவிட்டாள் என்று தான் எண்ணிக்கொண்டான்….

Advertisement