Advertisement

அத்தியாயம் – 1

 

அந்தி வானம் சூரியனின் கிரணங்களால் சிவந்து தன் வெட்க ஆடை போர்த்துக் கொண்டிருந்தது.

 

லேசாய் வீசிய தென்றல் காற்றில் தோட்டத்தில் இருந்து மல்லியும் ஜாதியும் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.

 

“அம்மா பூ பறிச்சு கட்டி வைச்சுட்டேன். மணி ஆறாக போகுதும்மா நாம கிளம்ப வேணாமா” என்று வந்து நின்றாள் அந்த வீட்டின் இளவரசி செந்தாமரை.

 

“பூவை தட்டுல வைச்சுடு நீ சீக்கிரம் ரெடியாகு மாப்பிள்ளையும் ரெடி ஆகிட்டாரா பாரு. நான் போய் உங்கண்ணன் என்ன பண்றான்னு பார்த்து அவனை கிளப்பிவிட்டு வர்றேன்”

 

“ஹ்ம்ம் சரிம்மா நீங்க போய் அண்ணனை பாருங்க. நான் கிளம்பி வந்திடறேன் ஆறரைக்கு நாம கிளம்பணும் சொன்னீங்களே” என்றுவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

மனோரஞ்சிதம் வீட்டில் இருந்து வெளியில் வந்தவர் தோட்டத்தை நோக்கி நடந்து சென்றார். தோட்டத்தின் நடுவில் இருந்த அந்த வீட்டின் அறைக்கதவை தட்டினார்.

 

“பாண்டி ஏய்யா பாண்டி கதவை திறய்யா நேரமாச்சு கிளம்பணும்ல” என்ற அவரின் குரல் அவனுக்கு கேட்காமலில்லை. அந்த குரலுக்கு செவி சாய்க்க அவனுக்கு பிடிக்கவில்லை.

 

அவனுக்கு பிடித்த அந்த வீட்டின் தனிமை இப்போது அவனுக்கு உவப்பானதாய் இல்லை. அவன் அறையில் இருந்த சன்னலின் வழியே தோட்டத்தையே வெறித்திருந்தான்.

 

பல வண்ணங்களில் பலவிதமாய் பூத்திருக்கும் பூக்கள் போலவே அவன் எண்ணங்களும் பலவித யோசனைகளில் பூத்திருந்தது.

 

அவன் சிறு வயதில் ஆசையாய் வைத்திருந்த மனோரஞ்சித செடியில் இருந்து அதிக மணம் வீசிக்கொண்டிருந்தது மனோரஞ்சிதப்பூ.

 

அந்த மணத்தில் இருந்து தன்னை மீட்டவனுக்கு அவன் அன்னை மனோரஞ்சிதத்தின் நினைவு வரவும் நிகழ்காலத்திற்கு வந்தான்.

 

இன்னமும் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்க சலிப்பாய் கீழே இறங்கிச் சென்றான் கதவை திறக்க.

 

“என்னப்பா பாண்டி நீ இன்னும் கிளம்பாம இருக்க நேரமாச்சு கிளம்பி வா!! எல்லாரும் காத்திட்டு இருப்பாங்க. உங்கப்பா எப்பவோ கிளம்பி நிக்கறாரு”

 

“உர்ருன்னு முகத்தை வைச்சிக்கிட்டு இல்லாம முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைச்சுட்டு வாப்பா” என்று நகரப் போனவரை நிறுத்தினான்.

“அம்மா கண்டிப்பா இந்த கல்யாணம் நடந்தே ஆகணுமா??” என்று தொள்ளாயிரத்து தொண்ணுத்து ஒன்பதாவது முறையாய் கேட்டிருப்பான் வீரபாண்டியன்.

 

“ஏன் பாண்டி இதையே கேட்குறே?? இதுல பாதிக்கப்பட்டிருக்கறது அந்த பொண்ணோட வாழ்க்கை. நாம அதுக்கு பதில் சொல்லி தானே ஆகணும்”

 

“கல்யாணம் நடந்திட்டா யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேச மாட்டாங்க அதுக்கு தான் சொல்றோம் பாண்டி. எல்லாம் நல்லதுக்கு தான் சொல்றதை கேளு” என்றார் வீரபாண்டியனின் அன்னை மனோரஞ்சிதம்.

 

“என்ன ரஞ்சிதம்?? என்ன பிரச்சனை??” என்றவாறே அங்கு வந்தார் அவன் தந்தை சக்திவேல்.

 

அவரை கண்டதும் வீரபாண்டியன் வாயை மூடிக்கொண்டான்.

 

“ஒண்ணுமில்லை கிளம்ப சொல்லிட்டு இருந்தேன்”

 

“வேற ஏதோ பேசிட்டு இருந்தது மாதிரி இருக்கே??”

 

“அது வேற ஒண்ணுமில்லை கல்யாணம் வேணுமான்னு…” என்று இழுக்க சக்திவேல் வீரபாண்டியனை பார்த்தார்.

 

“நடந்திருக்கற வேலைக்கு இதெல்லாம் நாம யோசிக்கற நிலைமையிலையா இருக்கோம்”

 

“நான் தான் கல்யாணமே வேணாம்ன்னு சொன்னேன்ல. அப்புறம் எதுக்கு இதெல்லாம்”

 

“இவ்வளவு நாள் நீங்க சொன்னதுக்கு நாங்க எதுவும் சொல்லாம தானே இருந்தோம். இப்போ நீங்க பண்ணி வைச்ச காரியத்துக்கு நாங்க என்ன பண்ண முடியும்”

 

“என்னை பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி பேசலாமா”

 

“நாங்க நம்பலாம் ஊரு நம்பணும்ல”

 

“அதுக்கு நான் தான் கிடைச்சனா!!”

 

“யாரும் யாரையும் பழி தீர்த்ததா பேசிடக் கூடாது. அதுக்கு தான் சொல்றேன் கிளம்புங்க இன்னும் அஞ்சு நிமிஷம் தான் உங்களுக்கு டைம்”

 

வேண்டா வெறுப்பாய் உள்ளே சென்றவன் வெள்ளை வேட்டி சட்டையுடன் வந்தான். “பேன்ட் சட்டை போட்டிருக்க வேண்டியது தானே” என்று அவனருகே வந்து நின்றாள் அவன் தங்கை செந்தாமரை.

 

அவளை திரும்பி ஒரு முறை முறைக்கவும் தாமரையின் கணவன் ரவி அவளருகே வந்து நிற்கவும் கையை பிசைந்தவாறே வெளியே சென்றுவிட்டான்.

 

“அண்ணா ஏன் ஒரு மாதிரி இருக்கே??” என்று அவன் பின்னோடே வந்தாள் செந்தாமரை.

 

“உனக்குமா தாமரை புரியலை?? அந்த பொண்ணு வயசென்ன என் வயசென்ன இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை தாமரை” என்று அப்பட்டமான மறுப்பை தெரிவித்தான் தங்கையிடம்.

 

“என்ன பெரிய வயசு உனக்கு முப்பது அவங்களுக்கு இருபத்திரண்டு அவ்வளோ தானே அண்ணே இதெல்லாம் ஒரு காரணமா சொல்லு”

 

“ஆமா இன்னும் எத்தனை வருஷத்துக்கு முப்பதுன்னு சொல்லிட்டு இருப்பீங்க எனக்கு முப்பதொண்ணே முடியப் போகுது”

 

“அண்ணே வயசெல்லாம் ஒரு காரணமே இல்லை. நம்ம அம்மா அப்பாவை எடுத்துக்கோ அவங்களுக்கு இடையில பன்னிரண்டு வயசு வித்தியாசம் தெரியுமா உனக்கு” என்று பதில் கொடுத்தாள் தங்கை.

 

“அவங்க இளவயசுல கல்யாணம் முடிச்சுட்டாங்க”

 

“நீயும் முடிச்சிருக்கணும் இப்போ வந்து ஆச்சா போச்சான்னு சொன்னா என்னண்ணா பண்ண முடியும்”

 

“எனக்கு அந்த பொண்ணை சுத்தமா பிடிக்கலை.” என்று ஆகாத மாமியார் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்ற ரீதியில் காரணங்களை தேடி அடுக்கினான்.

 

“உனக்கு சாய்ஸ் கொடுத்து பொண்ணு காட்ட நீ தான் எங்களுக்கு வழியே விடலையே”

“இப்போ வந்து பிடிக்கலன்னா நான் என்னண்ணா பண்ண முடியும். இனி இது தான் உனக்குன்னு விதிச்சது பார்த்து நடந்துக்கோ”

 

“இல்லை தாமரை அந்த பொண்ணு ஒரு இடத்தில நிக்கறாளா பாரு. அவ கால் தரையிலேயே படாது எப்பவும். அதுவும் இல்லாம வாய் வாய் ஊர்ப்பட்ட வாய் பேசுறா”

 

“அண்ணே நானெல்லாம் அடிக்காத வாயா அவங்க அடிக்கறாங்க. இதெல்லாமா சொல்லுவாங்கண்ணே, கல்யாணத்துக்கு பிறகு நான் அமைதியாகிட்ட மாதிரி அவங்களும் ஆகிடுவாங்க பாரேன்”

 

“எது எப்படி இருந்தாலும் இதுக்கெல்லாம் காரணம் அவ தானே. நான் பாட்டுக்கு நிம்மதியா தானே இருந்தேன், எல்லாரும் பழி சொல்ற மாதிரி ஆக்கி வைச்சுட்டாளே”

 

“அதை இதை நினைச்சு குழப்பிக்காதண்ணே காலம் எல்லாத்தையும் மாத்தும்ண்ணே கவலைப்படாதே. நீ சந்தோசமா இருப்பே பாரேன்” என்றாள் அவன் தங்கை உள்ளார்ந்த அக்கறையுடன்.

 

அவளுக்கு ஒரு விரக்தி புன்னகையை கொடுத்துவிட்டு திண்ணையில் அமர்ந்தான். சற்று நேரத்தில் வீட்டு பெரியவர்கள் வந்துவிட எழுந்து நின்றான்.

 

“போகலாமா” என்ற சக்திவேலின் கேள்விக்கு தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான்.

 

“நம்ம நாட்டாமையை வரச்சொல்லியிருக்கேன் அவர் வரவும் கிளம்ப வேண்டியது தான்” என்றார் அவர் சத்தமாய்.

 

‘எல்லாம் அந்தாளால வந்தது தான். பூனையை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்க்க கிளம்பின கதை தான் அந்தாளை கூட்டிட்டு போறது’ என்று மனதிற்குள்ளாக அவருக்கு அர்ச்சனை செய்தான் அவன்.

 

____________________

 

“செவ்வந்திதி…………..”

 

“எதுக்குடி என் பேரை இப்படி ஓலம் போடுற!! என்னை சக்தின்னு கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்றது உனக்கு”

 

“அம்மா அப்பா உனக்கு செவ்வந்தின்னு தானே பேரு வைச்சிருக்காங்க. என்னால வேற பேரு எல்லாம் சொல்லி கூப்பிட முடியாது” என்றாள் செவ்வந்தியின் தங்கை முல்லை.

 

“கூப்பிடலைன்னா போ ஆனா செவ்வந்தின்னு இனி கூப்பிடாதே சொல்லிட்டேன்”

 

“அப்படி தான் கூப்பிடுவேன்… செவ்வந்தி!! செவ்வந்தி!! செவ்வந்தி!!” என்று கத்தினாள் முல்லை

 

செவ்வந்தி அவளை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு செல்லவும் அவள் அன்னை சிவகாமி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

 

“செவ்வந்தி நீ இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க, அவங்க எல்லாம் இன்னும் அரைமணி நேரத்தில இங்க வந்திடுவாங்க, போ போய் புடவையை கட்டு”

 

“அம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க என்னால முடியாதும்மா” என்று சிணுங்கினாள்.

 

“முடியாதுன்னு சொல்ற அளவுலய இருக்கு நீ பண்ணி வைச்ச காரியம். எதாச்சும் பேசின அத்தையை கூப்பிட்டு விடுவேன்” என்று மிரட்டினார் அவர்.

 

“மதுரத்துகிட்ட சொல்றதுக்கு என்னைய பிடிச்சு அந்த கிணத்துல தள்ளிவிட்டிரு. அந்த கிழவி வாயை திறந்தா மூடி தொலையாது நான் கிளம்பறேன்” என்று சட்டென்று பணிந்தாள் செவ்வந்தி.

 

அந்த பயம் இருக்கட்டும் என்ற ரீதியில் பார்த்தார் சிவகாமி. “ஆனா அம்மா நான் படிக்கணுமே என்னோட படிப்பு பாதியில விட முடியுமாம்மா”

 

“ஊர்க்காரங்களுக்கு வேலை இல்லாம சொல்றதெல்லாம் நீங்க கேட்பீங்களா!! பெத்த பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா!!” என்று மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்தாள் அவள்.

“எங்களுக்கு நம்பிக்கை இல்லாமையா உங்களை பட்டணத்துக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம்” என்ற மதுராம்பாளின் கம்பீரக்குரலில் அமைதியானாள் செவ்வந்தி.

 

“அவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைச்சு என்ன புண்ணியம், உன்னைய சரியா வளர்க்கலைன்னு ஊர் பேச நீ தானே இடம் கொடுத்த”

 

“நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்னு இப்படி ஆளாளுக்கு குதிக்கறீங்க. இதெல்லாம் ஒரு குத்தம்ன்னு அந்த கிழவனை என் தலையில கட்ட பார்க்குறாங்க”

 

“என்ன பொம்பிளை பிள்ளைக்கு வாய் ரொம்ப நீளுது. ஆம்பிளைங்க இல்லாத வீடுன்னு அடக்க ஒடுக்கமா உன்னை இருக்க சொன்னதுக்கு அடங்காம திரிஞ்ச”

 

“இதோ எல்லாரும் ஒரு வார்த்தை சொல்ல இடம் கொடுத்திட்டு வந்து இப்போ பேசினா நாங்க என்ன பண்ண முடியும்”

 

“முல்லையும் நான் தானே வளர்த்தேன் அவ இப்படியா இருக்கா!!”

 

“போதும் சும்மா உங்க சின்ன பேத்திக்கு சப்போர்ட்டுக்கு வராதீங்க. இப்போ என்ன நான் கிளம்பணும் அவ்வளவு தானே இங்க இருந்து எல்லாரும் கிளம்புங்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் வந்திடறேன்” என்றுவிட்டு உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

 

அவள் உள்ளே சென்றதும் “என்னத்தை இப்படி வெடுக்கு வெடுக்குன்னு பேசுறா, இதெல்லாம் சரியா வருமா அத்தை எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என்று சிவகாமியை அர்த்தத்துடன் பார்த்தார் மதுராம்பாள்.

 

அந்த வீட்டிற்கே அவர் சிம்ம சொப்பனமாக இருப்பவர். புதுக்கோட்டை தான் மதுராம்பாள் பிறந்த ஊர், குலையன்கரிசல் அவர் வாழ வந்த இடம்.

 

வாழ வந்த இடத்தில் தனக்கென்று ஒரு தனி மரியாதையை உருவாக்கிக் கொண்டவர் அவர். இள வயதில் கணவரை இழந்த அவருக்கு அய்யாதுரை ஒரே மகன்.

 

அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் சிவகாமியை அவருக்கு மணமுடிக்க அவர்களின் மணவாழ்க்கைக்கும் ஆயுசு குறைவு போலும்.

 

முல்லைக்கு ஐந்து வயது இருக்கும் போது அய்யாதுரை இறந்து போனார். மதுராம்பாளுக்கு மருமகளின் மீதும் பேத்திகளின் மீதும் கொள்ளைப்பிரியம் உண்டு.

 

ஆனால் எப்போதும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். கடுகடுவென்றே அவர்களிடம் இருந்தாலும் அவர்களின் தேவை அறிந்து எல்லாம் செய்து முடிப்பார்.

 

அவர்கள் இருக்கும் வீட்டைக் கூட மதுராம்பாள் வீடு என்றே அழைப்பர்.

 

செவ்வந்தி புடவை அணிந்து வந்து கதவை திறக்க ஒரு நிமிடம் பேத்தியின் அழகை கண்ணார ரசித்தவர் சிவகாமியை நோக்கினார்.

 

“சிவகாமி என்னோட அறையில் ஒரு மரப்பெட்டி வைச்சிருக்கேன் அதை கொஞ்சம் எடுத்திட்டு வா” எனவும் மாமியார் பேச்சு தட்டாத மருமகளாய் உடனே சென்று கையோடு மரப்பெட்டியை கொண்டு வந்தார்.

 

“அதுல இருக்கற நகையில உம் மவளுக்கு பிடிச்சதா எடுத்து போட்டுவிடு. எல்லாத்தையும் போட்டா கூட நல்லா நம்ம ஊரு பத்திரகாளியம்மன் மாதிரி இருப்பா”

 

“அத்தனையும் போட மாட்டாளே உன் பொண்ணு. அதுக்கும்ல நம்ம கிட்ட சண்டைக்கு வருவா” என்று சொல்லிக்கொண்டே அவர் அங்கிருந்து நகர்ந்தார்.

 

“அம்மா அந்த கிழவி ரொம்ப துள்ளுதும்மா” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை சிவகாமி மகளின் வாய் மேலேயே ஒன்று போட்டார்.

 

“இன்னொரு முறை அத்தையை மரியாதை இல்லாம பேசினே உன்னை கொன்னுருவேன் பார்த்துக்கோ. இந்தா இதுல இருக்கறதுல உள்ளதை எல்லாம் போட்டுட்டு வந்து நில்லு. முல்லை பார்த்துக்கோ” என்றுவிட்டு அவர் நகர்ந்தார்.

 

“எதுக்குக்கா இப்படி வாய் கொடுத்து வாங்கிக்கறே. பேசாம அவங்க சொல்றதை செய்ய வேண்டியது தானே”

 

“போடி” என்று முறைத்தாள் தங்கையை பார்த்து.

 

“செவ்வந்தி” என்று தங்கை மீண்டும் ஆரம்பிக்க “அதென்னடி ஒரு நேரம் அக்காங்கற ஒரு நேரம் பேரு சொல்லி கூப்பிடுற. இதுக்கு நீ பேசாம என்னை சக்தின்னு கூப்பிட்டு இருக்கலாம்ல”

 

“இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலைக்கா. நீ டாக்டருக்கு படிக்கிற ஒத்துக்கறேன். அதுக்காக நீ அலைபாயுதே சக்தி ஆகிடுவியா”

 

“உனக்கு பொறாமைடி”

 

“ஆமா ஆமை பொறாமை அடப்போக்கா”

 

“சரிக்கா சும்மா பேசிட்டு இருக்காம இந்த முத்து செட்டை எடுத்து போடேன் உனக்கு ரொம்ப அழகா இருக்கும்”

 

“நிஜமாவா சொல்ற இந்த செட் எனக்கு அழகாவா இருக்கும். எனக்கு எது நல்லா இருக்காது இந்த நகையில” என்றாள் செவ்வந்தி.

 

“இந்த கெம்புக்கல் அட்டிகை மட்டும் போடவே போடாத உனக்கு சூட்டே ஆகாது. ஓல்ட்டிஸ் போடுறது” என்றாள் முல்லை அசட்டை போல்.

 

“அப்படியா முல்லை சொல்ற” என்ற செவ்வந்தி அந்த அட்டிகையை எடுத்து முதலில் கழுத்தில் மாட்டினாள்.

 

முல்லை எதெல்லாம் நன்றாக இல்லை என்று சொன்னாளோ அதெல்லாம் எடுத்து அணிந்துக் கொண்டாள்.

 

தமக்கையை அறியாத தங்கையா அவள் வேண்டுமென்றே தான் நல்லாயில்லை என்று சொல்லி அவளுக்கு பொருத்தமானதை அணியச் செய்திருந்தாள்.

 

நகைகளை அணிந்து நிலைக்கண்ணாடியின் முன் நிற்கவும் தான் செவ்வந்திக்கு தான் ஏமாந்த உணர்வு ஏற்பட்டது.

 

‘இந்த பொடுசு என்கிட்ட விளையாடிருச்சே!! இப்போ இதெல்லாம் கழட்டி வைச்சாலும் நான் தோத்த மாதிரி ஆகிப்போகும். வேற வழியில்லை இதை போட்டுகிட்டே தான் ஆகணும்’ என்று பல்லைக்கடித்து சமாளித்தாள்.

 

அதற்குள் வாசலில் ஆள் அரவம் கேட்க மதுராம்பாள் முல்லையை வாசலுக்கு அனுப்பினார் வந்தவர்களை வரவேற்க.

 

நல்ல காரியத்திற்கு தானும் மருமகளும் முன்னால் சென்று நிற்க வேண்டாமே என்ற எண்ணத்தில்.

 

“ஆச்சி இல்லையாம்மா அம்மாவையும் ஆச்சியையும் வரச்சொல்லு” என்ற குரல் கேட்டது.

 

“இதோ வரச்சொல்றேன் மாமா” என்றுவிட்டு முல்லை உள்ளே வந்தாள்.

 

“ஆச்சி மாமா உங்களையும் அம்மாவையும் வரச் சொல்றாங்க. நீங்க வந்தா தான் உள்ள வருவாங்க போல நீங்க வாங்க” என்று அவர் கைப்பிடித்து அழைத்து சென்றாள்.

 

“வாங்க உள்ள வாங்க உள்ள வாங்க தம்பி” என்று அனைவரையும் கரம் கூப்பி வரவேற்றார் மதுராம்பாள்.

 

பல வருடத்திற்கு பிறகு அந்த வீட்டிற்குள் வருகிறான் வீரபாண்டியன். அந்த வீடு அவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல.

 

அவன் வீட்டை அளப்பது போல் பார்ப்பதை மதுராம்பாள் கண்டும் காணாமல் பார்த்து வைத்தார். வீரபாண்டியனின் வீட்டிற்கும் மதுராம்பாள் வீட்டிற்கும் உள்ள தொலைவு அதிக பட்சம் பத்தே அடிகள் தான்.

 

அவன் வீட்டிற்கும் மதுராம்பாள் வீட்டிற்கும் இடையில் இருந்தது ஒரு குறுக்குச்சுவர் தான். அந்த மதிலில் ஏறி எத்தனையோ முறை அவர்கள் வீட்டிற்குள் குதித்த அந்த அனுபவம் எல்லாம் இன்னமும் அவனுக்குள் பசுமையாய் இருந்தது.

 

அந்த நினைவுகள் அவனுக்குள் பசுமையை மட்டும் கொடுக்கவில்லை. பெரும் சுமையையும் கொடுத்தது அவன் மட்டுமே அறிவான்(!?)

 

அவனுக்கென தனி இருக்கை போடப்பட்டிருக்க தான் ஒரு காட்சிப்பொருளாய் தனியே அமர்வது அவனுக்கு சங்கடமாய் இருந்தது.

இது தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்தான்.

 

“முல்லை அக்காவை கூட்டிட்டு வா” என்ற மதுராம்பாளின் குரலில் வீரபாண்டியன் சற்றே விரைத்தான்.

 

முல்லை விரைந்து உள்ளே சென்றாள். “அக்கா வா வா போகலாம்” என்று அவள் கையை பிடிக்க “விடுடி நான் வரலை” என்று மீண்டும் ஆரம்பித்தாள் செவ்வந்தி.

 

“அக்கா மாப்பிள்ளை சூப்பரா இருக்கார்க்கா. இவரை போய் வேணாம் சொல்லிட்டியே”

 

“சூப்பரா இருந்தா நீயே கட்டிக்க வேண்டியது தானேடி. என்னை ஏன் சிக்க வைக்க பார்க்கறீங்க”

 

“நீ எந்த சிக்கலும் பண்ணாம இருந்திருந்தா அவரும் என்னை கட்டிக்க சம்மதிச்சிருந்தா நான் ஏன் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க போறேன்” என்றாள் பதினெட்டு வயதே நிரம்பிய முல்லை.

 

“வாக்கா அங்க ஆச்சி உன்னைய கூட்டிட்டு வரசொல்லிச்சி” என்றதும் மறுபேச்சு பேசாமல் தங்கையுடன் சென்றாள்.

“பெரியவங்க எல்லாம் வந்திருக்காங்க அவங்களை கும்பிட்டுக்க” என்ற மதுராம்பாளின் குரலில் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்து அவர் சொன்னதை செய்தாள்.

 

வீரபாண்டியனோ குனிந்த தலையை நிமிரவேயில்லை. ஊர் நாட்டாமை வாயை திறந்தார். “தாய்மாமனை உட்கார சொல்லுங்க பரிசத்தை போட்டிருவோம்” என்றார்.

 

“அதான் அவங்க பக்கம் யாருமில்லைன்னு தெரியும்ல அப்புறம் எதுக்கு இதெல்லாம் கேட்டுகிட்டு இங்க என்ன எல்லாம் முறையோடவா நடக்குது” என்று உடன் வந்த வாய் துடிக்கான பெண்மணி பேச அங்கு பெருத்த அமைதி நிலவியது.

 

“பொண்ணுக்கு தாய்மாமனா நானே உட்கார்றேன். எங்க வீட்டு மாப்பிள்ளை என் புள்ளைக்கு தாய்மாமனா உட்காருவாரு” என்று சொல்லி சக்திவேல் அனைவரின் வாயையும் அடைத்தார்.

 

மதுராம்பாள் சக்திவேலை நன்றி பார்வை பார்த்தார் உடன் சிவகாமியும். அங்கு காரியங்கள் வெகு வேகமாக நடக்கத் தொடங்கியது.

 

இதோ அவர்கள் பரிசமும் போட்டு முடித்தாயிற்று. செவ்வந்தி பரிசப்புடவையை அணிந்து வந்து அனைவரின் காலிலும் விழுந்து எழுந்தாள்.

 

வீரபாண்டியனோ இயலாமையாய் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்!! இனி நடக்கப்போவது!!

 

Advertisement