Advertisement
அத்தியாயம் – 8
தென்னை மர கீற்றுகளின் சர சரப்பையும், வாய்கால் நீரோடும் சலசலப்பையும் தாண்டி யசோதராவின் இதய துடிப்பு கேட்கத்தான் செய்தது அவளுக்கு.. யாராக இருந்தாலும், எப்படி பட்டவராய் இருந்தாலும் நேருக்கு நேர் பார்த்து பேசி சமாளிக்கும் திடம் படைத்தவள் தான்..
ஆனால் ஏனோ அவள் கணவன் கேட்ட கேள்விக்கு உடனே பதில் கூற அவளால் முடியவில்லை..இதே கேள்வியை தானே அவளும் தனக்கு தானே கேட்டுகொள்கிறாள்.. அவளுக்கே பதில் கிடைக்காத ஒன்றுக்கு எப்படி அவனுக்கு பதில் உரைப்பாள்??
அத்தனை குளுமையையும் தாண்டி லேசாய் வியர்ததோ.. ஆனால் கௌதமனோ விடாமல் அவளைத்தான் பார்த்தப்படி நின்றிருந்தான்..
“என்ன யசோ நான் கேட்டதுக்கு பதிலே இல்லையா.. இல்லை பதில் சொல்ல தெரியலையா??”
“இல்லை கெளதம் அது.. அது வந்து…”
“ஹ்ம்ம் சொல்லு யசோ…”
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் கண்களை இறுக மூடினாள், எங்கே அழுகை வந்துவிடுமோ என்றுகூட இருந்தது.. இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து கண்களை இறுக மூடி நின்றவளை காண அவனுக்கே பாவமாய் தான் இருந்தது..
ஆனால் ஒரு நொடி கௌதமன் அயர்ந்தால் போதும் இவள் புள்ளியில் நுழைந்துவிடுவாள் கோலத்தில் தப்பித்துவிடுவாளே ..
“ம்ம் சொல்லு யசோ.. எவ்வளோ நேரம் இப்படி தியானம் பண்ண போற ??”
அவனது கேலிப்பேச்சில் பட்டென்று இமைகள் திறந்தவள் முறைத்தாள்..
“முறைப்பெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்.. பதில் சொல்லு.”
“நீங்க வக்கீல் தானே.. எப்படி பதில் கொண்டு வரணும்னு உங்களுக்கு தெரியாதா.. இல்லை உண்மை என்னன்னு உங்கனால புரிஞ்சுக்க முடியாதா ??” என்றாள் ஆற்றாமையாய்..
“என்னால ஈஸியா கண்டுபிடிக்க முடியும் மேடம்.. பதிலும் கொண்டு வர முடியும்.. பட் இது பப்ளிக் பிளேசாச்சேன்னு பார்க்கிறேன்.. இல்லை நான் கேட்கிற விதமே வேறையா இருக்கும்..”
அவன் குரலிலும் முகத்திலும் தெரிந்த மாறுதல்கள் அவளுக்கு புரியாமல் இல்லை..
“என்ன கெளதம் இது.. நீங்க இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்லையே..”
“ஓ!! இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் பேசுற உரிமை இல்லை.. டீசண்டா பேசினா என்னை என்னன்னு நினைச்ச யசோ..?? உன்னை லவ் பண்றதுனால நீ சொல்றதுக்கு எல்லாம் தலையை உருட்டுவேன்னு நினைச்சியா.. ஒழுங்கா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்று அவளது கைகளை இறுக பற்றினான்..
“ஸ்ஸ் வலிக்குது கெளதம்…”
“எனக்கு இங்க வலிக்குது டி..” என்று தன் நெஞ்சை தொட்டு காட்டியவன் “உன் மனசில என்ன இருந்தது எதுக்கு நீ என்னை கல்யாணம் பண்ண கேட்டன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா..?? எல்லாமே சித்தாராக்காக தானே…” என்று அவன் கூறியதும் தன் குட்டு வெளியானதை உணர்ந்து யசோதரா தவித்து தான் போனாள்..
“என்ன முழிக்கிற.. இத்தனை நாள் நான் ஏன் அமைதியா இருந்தேன் தெரியுமா… நீயா உண்மையை சொல்லுவன்னு தான்.. சோ உனக்கு சித்தாரா விசாகன லவ் பண்றது முன்னமே தெரியும் அப்படிதானே…”
….
“என்ன அமைதியா இருக்க.. உன் சித்தப்பா சித்தி வேணா நீ சொல்றதுக்கு எல்லாம் ஆடலாம்.. ஆனா நான் கௌதமன்.. கேட்டதுக்கு பதில் சொல்லு யசோ..”
“ம்ம்.. ஆ.. ஆமா..”
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா விசாகன் அவளை ஈஸியா ஏற்துப்பான்னு.. அந்நேரம் பார்த்து எங்கம்மா எனக்கு பொண்ணு பாக்குற விஷயம் சொல்ல ஒன்னுக்கு ஒன்னு முடிச்சு போட்டு அழகா என்கிட்டயும் பேசி முடிச்சிட்ட.. பின்ன சும்மாவா பிசினஸ் டீலிங் பேசுறதுல சூரபுலியாச்சே..” என்று கண்கள் சிவக்க கோவமாய் பேசியவனை விழிகள் விரித்து பார்த்தாள் யசோ..
நிச்சயமாய் இப்படி ஒரு மாற்றத்தை அவனிடம் எதிர்பார்க்கவில்லை யசோதரா.. தான் யோசித்து எப்படி இவனுக்கு தெரியும் என்றும் அவளுக்கு புரியவில்லை..
“என்ன யசோ அப்படி பாக்குற ?? ஒருத்தரோட கண்ணை பார்த்தே என்ன நினைக்கிறாங்கன்னு என்னால சொல்ல முடியும்..அப்படி இருக்கும் போது உன்னை பத்தி எனக்கு தெரியாதா. ஆனா என்ன நீ நினைச்சது ஒன்னு நடந்தது இன்னொன்னு.. உன் சித்தி சித்தப்பாவே சித்துக்கு சப்போர்ட்டா இருந்து உன்னை விலக்குவாங்கன்னு நீ நினைக்கலை.. அதான் நீ என்கிட்டே… ”
“போதும் கெளதம்… ” என்று கத்தயேவிட்டாள்..
“இதுக்கு மேல நீங்க ஒரு வார்த்தை பேசக்கூடாது கெளதம்.. சும்மா வார்த்தைக்கு வார்த்தை சொல்றிங்க உன்னை பத்தி தெரியும் தெரியும்னு.. என்ன தெரியும் உங்களுக்கு என்னை பத்தி.. அப்படி தெரிஞ்சா இப்படி நிக்க வச்சு கேள்விகேட்க மாட்டிங்க..”
அவனது வேகத்திற்கும் கோவத்திற்கும் சற்றும் குறையவில்லை அவளது..
“ஆமா நான் இப்படி தான் முதல்ல யோசிச்சேன். ஆனா உங்களை கல்யாணம் பண்ணனும்னு யோசிக்கல..சிதப்பகிட்ட பேசி வேற யாரையாவது கல்யாணம் பண்ணும்னு தான் நினைச்சேன்.. ஆனா எனக்கே தெரியாம நிறைய விஷயம் நடந்துடுச்சு.. ஒரு பக்கம் விசுத்தான், இன்னொரு பக்கம் சித்து.. இப்படி மாறி மாறி ரியாக்ட் பண்ணி கடைசியில் எல்லார் முன்னாடியும் நான் தான் எதோ குற்றவாளி மாதிரி நின்னேன்..
அப்போ அந்த நேரத்துல எனக்கு ஆதரவா, அறுதல் சொல்லகூட யாருமில்லை.. எனக்கே எனக்குன்னு ஒரு உறவு வேணும்னு தோணிச்சு.. என்னோட பாதுகாப்புக்கு, என்னோட எல்லாத்துக்குமே, முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்குற உறவு வேணும்னு தோணிச்சு.. அப்போ என் மனசுல வந்தது நீங்க மட்டும் தான் கெளதம்.. இது லவ்வா என்னனு எல்லாம் எனக்கு தெரியாது..
பட் எனக்கு இப்படி ஒரு உணர்வு தோணினதும் என் மனசுல வந்த முகம் உங்களோடது தான்.. போதுமா.. அதான் நீங்க பீச்ல வந்து நின்னதுமே நான் கொஞ்சம் கூட யோசிக்காம அப்படி கேட்டேன்.. ஆமா உங்ககிட்ட பேச நான் ஏன் யோசிக்கணும்..?? எனக்கு தோணிச்சு கேட்டேன்.. உடனே நீங்களும் தானே சரின்னு சொன்னிங்க.. இப்போ என்னை மட்டும் கேக்குறிங்க” என்று பொரிந்து தள்ளவும் கௌதமன் வேகமாய் சிரிக்க தொடங்கிவிட்டான்..
இவன் என்ன லூசா என்பது போல பார்த்தவள் “ஹலோ இப்போ ஏன் சிரிக்கிறிங்க?? இப்போ நான் சொன்னது எல்லாம் சிரிக்கிற மாதிரி இருக்கா என்ன ??”
“பரவாயில்ல யசோ…. உன்னை நான் என்னவோன்னு நினைச்சேன் கொஞ்சம் உதார் விட்டதுக்கே உள்ளதை எல்லாம் சொல்லிட்டியே…” என்று கூறி மீண்டும் நகைத்தான்..
“என்ன ??!!!!!”
“ஹா ஹா ஹா… இவ்வளோ நேரம் நான் பேசினது எல்லாம் என்னனு நினைச்ச பேபி.. ஜஸ்ட் போட்டு வாங்கினேன்.. நீ என்னடான்னா ரைம்ஸ் சொல்ற மாதிரி கட கடன்னு சொல்லிட்ட.. வெரி குட்.. இப்படி தான் இருக்கணும்” என்று அவள் கன்னம் தட்ட அவளோ வாழ்கையில் முதல் முறையாய் ஞே என விழித்தாள்..
“அப்போ இவ்வளோ நேரம் நீங்க கோவமா பேசினது ??”
“அடடா.. என்ன யசோமா இது வக்கீல் பொண்டாட்டி ஷார்ப்பா இருக்க வேணாமா ?? என்னை பத்தி உனக்கு தெரியும்னு நினைச்சேனே..” என்று கைகளை விரித்தவனை, முறைத்தவள் விறு விறுவென்று நடையை கட்ட தொடங்கிவிட்டாள்..
“ஹேய் யசோ நில்லு ” என்று அவள் பின்னே ஓடினான் கௌதமன்..
அவளோ அவனை விட வேகமாய் சென்றாள்..
“நில்லுன்னு சொல்றேன்ல.. இங்க இருந்து வீடு ரொம்ப தூரம்…” என்றபடி அவளது வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தான்..
“ஏய் நில்லு டி…. உன்னைய விட ஏழு வருஷம் மூத்தவன்.. மூச்சு வாங்குது யசோ ” என்றவனை பார்த்து ஒரு நொடி நின்றவள் அவனை மேலிருந்து கீழ் பார்த்து நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் நடையை கட்டினாள்.
“ஓய்.. இப்போ எதுக்கு நக்கலா சிரிச்ச…”
“அதெல்லாம் சொல்ல முடியாது… ”
“சரி சொல்லாத.. வண்டியில ஏறு வீட்டுக்கு போகலாம்..”
“எனக்கு இளநிர் குடிக்கணும்… ”
“அதை தோப்புக்கு உள்ள இருக்கும் போதே சொல்லவேண்டியது தானே.. ரோடுக்கு வந்து சொல்ற..”
“அப்போ நடந்தே போறேன்… ” என்று கிளம்பியவளை இழுத்து பிடித்து நிறுத்தினான்..
அங்கே அக்கம் பக்கத்தில் நடந்து போனவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தபடி செல்ல, தெரிந்த பெண்மணி ஒருவரோ
“என்ன புது மாப்பிள்ள பொண்டாட்டிய தோப்புக்கே இழுத்து வந்துட்டியா??” என்று நக்கலடிதப்படி சென்றார்..
“பாருங்க எல்லாம் உங்கனால தான் கெளதம் ” என்று வேகமாய் அவனை குற்றம் சாற்றினாள்..
“ஆமாமா என்னால தான் எல்லாம் ” என்றான் நக்கலாய்.
எத்தனை கோவமாய் ஆரம்பித்தாலும் இறுதியில் இவர்களது பேச்சு சிரிப்பிலும் கேலியிலும் முடிவது இருவரும் அறிந்த ஒன்றே.. பாம்பு ஒன்றை ஒன்று சீரிக்கொண்டாலும் பின்னி பிணைந்து தான் இருக்குமாம்.. அது போல தான் இருவரும்..
இப்படியே பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டு மீண்டும் தோப்பினுள் சென்று இளநீர் குடித்த பிறகே வீட்டை அடைந்தனர்..
ஆனால் இவ்விருவரையும் ஒரு ஜோடி கண்கள் கொன்று தீர்த்துவிடும் ஆத்திரத்தோடு பார்த்ததையும் அவர்களை சற்றே இடைவெளி விட்டு தொடர்ந்ததையும் அறியாமல் போனது யாருடைய விதியோ தெரியவில்லை..
கௌதமனுக்கு வீட்டிற்கு சென்ற பிறகு அடுத்ததடுத்து போனில் அழைப்புகள் வரவே அவன் அதில் மூழ்கிவிட்டான்..
யசோதரா தன் அத்தையோடும் சித்தியோடும் சேர்ந்து அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு இருந்தாள்..
அம்பிகாவோ “நீ எதுக்கு யசோ இதெல்லாம் செய்யற.. போ கொஞ்சம் ரெஸ்ட் எடு.. ஆள் இருக்கு இதெல்லாம் செய்ய..” என்று கரிசனமாய் கூற
“இல்ல அத்தை இருக்கட்டும். அப்புறம் இதெல்லாம் நானும் தான் எப்போ பழகுறது.. அங்க சித்தியும் என்னை ஒருவேலை செய்ய விடாம இருந்து வீட்டில என்ன நடக்குதுன்னே தெரியாம பண்ணிட்டாங்க” என்று சிரித்தபடி தான் கூறினாள்.
ஆனால் அவளது பேச்சோ நெருஞ்சியாய் குத்தியது தேன்மொழியை.. உண்மை தான் யசோதராவை ஒன்று செய்ய விட்டது இல்லை தான். ஆனால் சித்தாராவை அப்படி வேலை வாங்குவார்.. இதனாலே என்னவோ யசோவிற்கு வெளி வேலைகள் தெரிந்த அளவு வீட்டு வேலைகள் அத்தனை சுளுவாய் செய்ய வராது.
அன்று யசோ இதெல்லாம் பெருமையாய் நினைத்தாள் தான்.. ஆனால் இன்று அவள் யோசிக்கும் பொழுது தான் அனைத்திலும் ஒதுக்கப்பட்டு, தன்னை மலுங்கடித்ததாகவே நினைத்தாள்..
அம்பிகாவிற்கு யசோதரா என்ன கூறுகிறாள் என்று புரிந்தாலும் பதில் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க தேன்மொழியோ யசோவின் கரங்களை பிடித்துகொண்டு
“யசோ மா நீ நினைக்கிறது போல எல்லாம் இல்லை டா.. ”என்று அவர் எதுவோ கூற விளைய
“சித்தி நான் உங்களை எதுவுமே சொல்லல சித்தி… நீங்க ஏன் இதுக்கு போய் கவலை படுறிங்க” என்று சமாதானம் செய்வது போல சொல்லிச்சென்றாள்..
அந்த பக்கம் எதோ எடுக்க வந்த கௌதமனின் பார்வையில் இவையனைத்தும் பட அறைக்கு வந்தவளிடம்
“யசோ நீ பண்றது கொஞ்சம் கூட சரியே இல்ல. எதுக்கு வார்த்தைக்கு வார்த்தை அவங்களை குத்தி காட்டுற??” என்றான் சற்றே கடினமாய்..
“நான் சாதரணமா தான் சொன்னேன் கெளதம்..”
“நீ சாதாரணமா பேசுறதுக்கும் இப்படி பேசுறதுக்கும் வித்தியாசம் எனக்கு தெரியாதா ?? கொஞ்சம் அவங்க வயசை நினைச்சு பாரு யசோ.. உங்க சித்தப்பா சித்தி பண்ணது தப்பு சரின்னு சொல்ல வரலை. ஆனா நீ இப்போ பண்ணிட்டு இருக்கிறது தப்புன்னு சொல்றேன் ”
“ஏன் கெளதம்… சின்ன வயசுல இருந்து என்னை அவங்க தான் வளர்த்தாங்க.. அம்மா அப்பா இருந்திருந்தா கூட இந்தளவுக்கு பாசம் காட்டியிருப்பாங்கலான்னு எனக்கு தெரியாது. ஆனா கெளதம் ஒரு ஸ்டேஜ்ல நம்ம உண்மைன்னு நம்புன எல்லாமே பொய்ன்னு தெரியும் போது அதோட வலி என்னனு உங்களுக்கு தெரியுமா ?? பெருசா பேச வந்துட்டிங்க” என்றபடி முகத்தை சுளித்துகொண்டு அமர்ந்தாள்..
“இப்போ நீ என்ன பெருசா கண்டுட்ட.. ”
“ம்ம்ச் முதல்ல மத்தவங்களுக்கு சப்போர்ட் பண்ணி என்னை திட்டுறதை விடுங்க.. யு ஆர் மை ஹஸ்பன்ட், சோ எனக்கு தான் எப்பவும் நீ சப்போர்ட்டா இருக்கணும்”
“அப்படி எல்லாம் என்னால முடியாது.”
“உங்களுக்கு என் வேதனை புரியாது கெளதம்..”
பதிலேதும் கூறாமல் கௌதமன் யசோதராவை தன் மீது சாய்த்துக்கொண்டான்… அவளது மன உணர்வுகள் புரிந்தாலும் என்ன ஏதென்று கேட்கவில்லை.. அவளே கூறட்டும் என்று அமைதியாய் இருந்தான்..
“சித்தி, சித்தப்பா என்னை சின்ன வயசுல இருந்து திட்டினதில்ல, ஏன் எதுக்குனு கேள்வி கேட்டதில்ல, எல்லாமே என் விருப்பம் தான்.. ஆனா சித்துக்கு அப்படி இல்லை.. எது சரி எது தப்புன்னு சொல்லி சித்தி திட்டுவாங்க.. டிரஸ் வாங்க போனா கூட எனக்கு பிடிச்சத வாங்கிட்டு அவளுக்கு சித்தி தான் பார்த்து எடுப்பாங்க.. வீட்டிலையும் அப்படி தான்.. அப்போ எல்லாம் எனக்கு ஹேப்பியா இருந்தது கெளதம் ..
ஆனா இப்போ யோசிக்கும் போது, அவங்க என்னை கண்டுக்கவே இல்லைன்னு தோணுது கெளதம்.. உனக்கு என்ன விருப்பமோ செய், நான் தலையிட மாட்டேன்னு ஒதுங்கி நின்னு இருக்காங்க. சரி அதை கூட விடுங்க, இவங்கதானே என்னை வளர்த்தாங்க அப்போ என்னை பத்தி தெரியாத..??
சித்து வாழ்க்கைக்கு நான் என்ன தடுதலாவா இருப்பேன்.. ஒருவார்த்தை எதுவும் சொல்லாம பண்ணிட்டு கடைசியல் நடந்த எல்லாத்துக்கும் என்னை காரணம் சொல்லிட்டாங்க. இதேது நான் அவங்க பெத்த பொண்ணா இருந்தா என்னை அப்படி நினைக்க தோணுமா கெளதம்..?? என்னை ஒதுக்கி வச்சிட்டு ஒரு நல்லது செய்வாங்களா கெளதம்?? அப்போ என் மேல இருந்த பாசமெல்லாம் பொய் தானே கெளதம்” என்று பேசியவள் இருக்க இருக்க அளவே தொடங்கிவிட்டாள்..
“ஹேய்!! என்ன யசோ.. இங்க பாரு.. ஏன் டா அழற.. அழாத யசோம்மா” அவளை தன் புறம் திருப்பி..
ஆனால் அவளோ விடாமல் தன் உள்ளக்குமுறலை கொட்டினாள்
“வசு அரம்பத்தில இருந்தே ஹாஸ்டல் தான். ஆனா சித்து அப்படி இல்லை.. எல்லாத்துக்குமே நான் தான் வேணும் அவளுக்கு அப்படி இருக்கும் போது என்னைய போய் எப்படி கெளதம் அப்படி நினைக்க தோணிச்சு..?? நான் என்ன அப்படிய கெளதம்?? நீங்களே சொல்லுங்க” என்று முகத்தை சுருக்கி சிறுமி போல் கண்ணீர் சிந்துபவளை கண்டு அவன் உள்ளம் உருகித்தான் போனது..
அவளது முகத்தை கைகளில் ஏந்தி “என்ன யசோ இது.. நான் உன்னை தைரியமான பொண்ணுன்னு நினைச்சா இப்படி அழுமூஞ்சி பாப்பாவா இருக்க..” என்று கண்களை துடைத்துவிட்டான்…
“ஹும்.. நான் ஒன்னும் அழுமூஞ்சி பாப்பா இல்லை.. நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன் அவ்வளோ தான் ” என்று அப்பொழுதும் கெத்து காட்டினாள் அவன் மனைவி..
அவளை ஒருவாறு சமாதனம் செய்து, தான் மார்பில் கிடத்தி தட்டி தடவி கொடுத்தவனுக்கு, அவள் அயர்ந்து உறங்கியது கூட உணரவில்லை.. வெகு நேரமாய் அவளை தன் மீது சாய்திருந்தவனை அவனது அலைபேசியே விழிப்புற செய்தது.
“இந்த நம்பர் யாருக்கு தெரியும் ?? புது நம்பர் வேற வருதே ” என்ற யோசனையில் அழைப்பை ஏற்றான்..
“ஹலோ… ”
“அலோ…. என்னலே வக்கீலு.. புது மாபிள்ள கோலம் கட்டிருக்கியோ…??”
“ஹலோ ஹூ இஸ் திஸ்… ”
“ஹா ஹா.. துரைக்கு நான் யாருன்னு தெரிய வாய்ப்பே இல்லையே… ஆனா உம்ம நல்லா தெரியும்வே எனக்கு..”
“இங்க பாருங்க.. தேவையில்லாம பேசிட்டு என் நேரத்தை கெடுக்காதிங்க..” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்..
“ச்சே.. நேரங்கெட்ட நேரத்துல பேசுவானுங்க” என்று கூறி முடிக்கவில்லை மீண்டும் அவனது அலைபேசி சிணுங்கியது..
எடுப்பதா வேண்டாமா என்று ஒருமுறை யோசித்தவன் பிறகு யசோதராவை மெல்ல மெத்தையில் கிடத்திவிட்டு, அவள் தூக்கம் கெடாதவாறு எழுந்து வெளியே சென்றான்..
“ஹலோ யாருங்க நீங்க ?? உங்களுக்கு என்ன வேணும் ??”
“வேற என்னலே.. உம்ம உசுருதே வேணும்.. தருவியோ சடுதியா ??”
“வாட் ???”
“வாத்துமில்ல, கோழியுமில்ல.. புது மாபிள்ளல.. அதான் கவுச்சி நோங்குது.. புது பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்கீய போல.. ”
“ஹேய்.. தைரியம் இருந்தா நீ யாருன்னு சொல்லிட்டு, இல்ல என் முன்னாடி வந்து பேசு.. பொழுது போகாம என்னை எரிச்சல் பண்ணாத” கோவமாய் அதே நேரம் அழுத்தமாய் கெளதமனது குரல் வெளிப்பட்டது..
“என்னலே இளரெத்தம் சூடேருதோ… இல்ல சம்சாரம் கிட்ட இருக்கோ அதான் சவடால் பேசுதியா?? இங்க பாருலே நல்லா கேட்டுக்க.. உன் நிம்மதி உன் சந்தோசம் எல்லாம் இப்போ என்கிட்டே..”
“சரி நீயே வச்சிக்கோ அதை.. நான் புதுசா வாங்கிக்கிறேன் நிம்மதி சந்தோசம் எல்லாத்தையும்”
“ஹா ஹா.. லச்சமிருந்தாலும் சின்ன வயசுல அதான் தம்பி நக்கலடிக்குதீக.. ஆகட்டும் ஆகட்டும்.. ஆனா ஒன்னும் நீயும் உம்ம ரெண்டாவது சம்சாரமும் இனிமே நிம்மதியா தூங்கவே முடியாதுவே.. நியாபகம் வச்சிக்கோ…”
“ஏய்… வார்த்தையை அளந்து பேசு டா…” என்று அவன் மேலும் பேசுவதற்குள் அழைப்பு துண்டிக்க பட்டிருந்தது..
சில நேரம் நெற்றியை சுருக்கி அலைபேசியின் திரையையே பார்த்தவனுக்கு மனதில் சட்டென்று ஒரு எண்ணம்
“ச்சே இதுக்கெல்லாம் நான் ஏன் டென்சன் ஆகணும்.. இதுபோல எத்தனை மிரட்டலை பார்த்திருக்க மாட்டேன்.. இடியட்ஸ் என் மூடையே ஸ்பாயில் பண்ணிட்டான்” என்று தன் தலையில் தட்டிக்கொண்டு மேற்கொண்டு ஆகா வேண்டிய வேலைகளை பார்த்தான்..
“யசோ என்ன இது சின்ன பிள்ள போல அடம் பண்ணிட்டு இருக்க ?? கிளம்பு.. ஊருல இருந்து வந்து நாலு நாள் ஆச்சு. இன்னும் நீ பாக்டரி பக்கமே எட்டி பாக்கல.. பாவம் உன் சித்தப்பா வேற நேத்து இருந்து போன் மேல போன் பண்ணிட்டார்” என்று கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தவளை எழுப்பிக்கொண்டு இருந்தான் கௌதமன்..
“முடியாது போங்க கெளதம்.. உங்களுக்கு வேலை இருந்தா நீஙக கிளம்புங்க.. இன்னிக்கு எதோ ஹியரிங் இருக்கு சொன்னிங்களே.. கிளம்புங்க..” என்று அவனை கிளம்புவதில் குறியாய் இருந்தாள் யசோதரா..
“நான் ரெடி தான் மா.. நீ ரெடி ஆனா அப்படியே உன்னை டிராப் பண்ணிட்டு நானும் போவேன்”
“ம்ம்ஹும் நான் வரலை” என்று தலையணையில் முகம் புதைத்து படுத்துகொண்டாள்.
“ஹோ!!! அஞ்சு வயசு பாப்பா தோத்து போயிடும் நீ பண்ற அலம்பல்ல.இப்போ நீ எந்திரிக்கல, அப்படியே தூக்கிட்டு போய் குளிப்பாட்டிருவேன்.. எப்படி வசதி..”
“ஹா ஹா முடிஞ்சா பண்ணுங்க, அப்புறமும் கிளம்பமாட்டேன்.. டோன்ட் கம்பல் மீ கெளதம்.. எனக்கு தோணும் போது நானே போவேன்..“
”அது போயிக்கோ.. இப்ப நான் சொல்றதுக்காக கிளம்பு..” என்று கைகளை பற்றி தூக்கினான். ஆனால் அவளோ எதிர்ப்புறமாய் பின்னே திரும்ப பிடி விலகி அவள் மீதே விழுந்து வைத்தான் கௌதமன்..
“ஹேய்!! என்ன டி இது.. என் ஷர்ட் எல்லாம் கசங்கி போச்சு.. ச்சு.. ”
“ஜட்ஜ் கேட்டா என் பொண்டாட்டி கசக்கிட்டானு சொல்லுங்க.. ”
“ஹ்ம்ம் வேணாம் யசோ என்னை சீண்டுறது உனக்கு நல்லதில்ல..” என்றவனின் சட்டையை பிடித்து இழுத்து..
“என்ன வக்கீல் நீ ?? கொஞ்சமாது ரொமான்ஸ் பண்ண தெரியுதா ?? சட்டை கசங்கிச்சுன்னு புலம்பிட்டு இருக்க ?? நிஜமாவே நீ சாமியார் தானா ?? ஆனா இப்போலாம் சாமியார் கூட இப்படி இல்லையே” என்று கேலியாய் புருவம் உயர்த்தினாள்.
முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் பார்த்தவனுக்கு இறுதியில் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது..
“யசோ… ???!!!!! ”
“யசோ தான்… என்ன வச்சிருகிங்க யசோக்கு ?? ம்ம்” என்றவள் நன்றாய் படுத்தே விட்டாள்..
“வேணா டி என்னை சீண்டி பார்க்காத.. என்னை பத்தி உனக்கு தெரியாது”
“வேற டைலாக் இருந்தா சொல்லுங்க வக்கீல் சார்.. ” என்று கூறி கலகலவென்று சிரித்தவளின் இதழை வேகமாய் சற்றே முரடாய் சிறை செய்தான் கெளதமன்..