Advertisement

அத்தியாயம் – 7

பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் கௌதமனுக்கு நிம்மதியான உறக்கம் எனலாம்.. கண்விழிக்கும் போதே எதிரே யசோதராவின் முகம் தெரிய, அவள் உறங்கும் அழகை பருகிகொண்டிருந்தான்…

“ஹ்ம்ம் தூங்கும் போது கூட அழுத்தமா தான் தூங்குவா போல.. ”  என்று நினைக்கும் போதே அவளும் உறக்கம் கலைய மெல்ல புரண்டு படுத்தாள்..

இவள் கண் விழித்ததும் என்னதான் செய்கிறாள் என்று பார்க்கும் ஆவல் தோன்ற லேசாய் கண்களை மூடி உறங்குவது போல் இருக்க, அப்படி இப்படி புரண்டு இவன் புறம் திரும்பி இமைகள் திறந்தவள் அவன் முகத்தை கண்டு திடுக்கிடவே செய்தாள்..

பிறகே முதல் நாள் திருமணம் நடந்தது நினைவு வர “ஊப்ஸ்… கல்யாணம் ஆகிடுச்சுல” என்று லேசாய் கூறிக்கொண்டே அவன் முகம் பார்த்தவளுக்கு மனம் நிறைந்தது..

“கெளதம்” என்று மெல்ல கூறிக்கொண்டவள்.. அடுத்தடுத்து தான் செய்ய வேண்டிய வேலைகள் நினைவில் வர மீண்டும் முகம் அழுத்தத்தை சூடிக்கொண்டது.. அவனது உறக்கம் கெடாமல் எழ முயற்சித்தவளை கௌதமனின் கரம் தடுக்க

என்னவென்பது போல் திரும்பி பார்த்தாள்..

“குட் மார்னிங் ” என்றான் சிரிப்போடு..

பதிலுக்கு அவளும் சொல்ல அவனோ அவளது கைகளை விட்ட பாடில்லை…

“என்ன கெளதம்.. வேலை இருக்கு”

“வேலையா?? என்ன வேலை செய்ய போற.. இங்க எதுவும் மீட்டிங் அரேஞ் பண்ணிருக்கியா என்ன ??” என்று சீண்டினான்..

“ம்ம்ச்.. உங்களுக்கு இந்த இடக்கு தானே வேண்டாம்ங்கிறது.. நான் நேத்தே சொன்னேன்ல சித்தப்பா கிட்ட பேசணும்.. நான் கொடுத்த டாக்குமென்ட் உங்கட்ட  தானே இருக்கு ??”

“டாக்குமென்ட்டா ?? என்ன குடுத்த என்கிட்டே…?? ஹே யசோ என்ன சொல்ற ??” என்று அவன் கேட்க அவளோ முறைத்தாள்..

“நீங்க என்னை எப்படி தடுத்தாலும் நான் செய்ய நினைச்சதை செய்வேன் கௌதம்.. ”

“அது நீ என்னை கல்யாணம் பண்ணதுலையே புரிஞ்சுகிட்டேன்… ”

“எனக்கு தாலி கட்டினது நீங்க… ”

“அது உனக்கு நியாபகம் இருந்தா சரி… ”

“அதுக்காக உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது..”

“உன்ன ஆட எல்லாம் சொல்லல.. அந்த கன்றாவிய என்னால பாக்கவும் முடியாது.. கொஞ்சம் பொறுமையா போன்னு தா சொல்றேன்.”

கட்டில் யுத்தம் என்பது இவர்களுக்கு இது தான் போல.. விடியலே இருவரும் இப்படி முட்ட, அறையின் கதவும் தட்ட சரியாய் இருந்தது..  

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் எழ

“கொஞ்சம் புது பொண்ணு போல போ மா ” என்று நக்கலாய் கூறியவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் கதவை திறந்தாள்..

வெளியே தேன்மொழி நின்றிருக்க வேண்டுமென்றே அவரை இடித்துக்கொண்டு சித்துவும் வசுவும் எட்டி பார்த்தனர்.. அவர்கள் செய்ததை பார்த்து சிரிப்பு வந்தாலும் அதனை அடக்கி

“என்ன சித்தி ” என்றாள்.

“கோவிலுக்கு போகணும் யசோ அதான் எழுப்பி விடலாம்னு வந்தேன் ” என்றவர் தயங்கி தயங்கி அவள் முகம் பார்க்க

அவளோ “கொஞ்ச நேரத்தில ரெடி ஆகிட்டு வரோம் சித்தி.. சித்தப்பா எங்க ?? ” என வினவ வேகமாய் எழுந்து வந்த கெளதமன்

“மாமாவ அவர் வேலையை பார்க்க சொல்லுங்க அத்தை. நாங்க கோவிலுக்கு ரெடி ஆகிட்டு வரோம் ” என்று அவசரமாய் கூற யசோதரா அவனை என்ன செய்யலாம் என்பது போல முறைத்தாள்..

தேன்மொழி சித்தராவையும், வசுவையும் இழுத்துக்கொண்டு செல்ல யசோதரா “திஸ் இஸ் யுவர் லிமிட் கெளதம் ” என்றால் பல்லை கடித்து..

“லிமிட்டா.. என்ன லிமிட் பத்தி பேசுற யசோ.. இன்னும் நான் உன்னை கிஸ் பண்ணது கூட இல்லை. அப்படி இருக்கிறவன் கிட்ட லிமிட் பத்தி பேசினா எப்படி     ” என்று கண்ணடித்தான்..

அவன் செய்த பாவனையில் ஒரு நொடி மயங்கி தான் போனாள் யசோ.. ஆனாலும்

“இப்படி எல்லாம் பண்ண நான் மயங்கிடுவேணா ?? ” என்றாள் கெத்தாய்..

“ஓ !! இப்படி பண்ணினா தான் நீ மயங்குவியா??” என்றான் அவனும் அதே தொனியில் கேட்க பதில் எதுவும் சொல்லாமல் குளிக்க சென்றுவிட்டாள்..

சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றுவிட்டு வர, வேத மூர்த்தி அவளுக்காய் காத்திருந்தார்..

“என்ன யசோ மா சித்திகிட்ட என்னை கேட்டியா ??” 

கெளதமனை ஒரு வெற்றி பார்வை பார்த்தவள் “ஆமா சித்தப்பா.. கொஞ்சம் முக்கியமா பேசணும்..” என்றாள்..

“அப்படியா யசோ மா.. நான் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன்… அங்க போய் எல்லாம் பார்க்கணுமே.. ”என கூற

அவசரமாய் கெளதமன் “அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா.. நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க.. ஊருக்கு வந்து கூட யசோ பேசிக்கட்டும் ”  என்றான். அதற்குள் அவளது முடிவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில்.

ஆனால் யசோதராவோ “இல்லை சித்தப்பா.. இத இப்போவே இங்கவே பேசினா தான் நல்லது.. அத்தை சித்து எல்லாம் இங்க தானே இருக்காங்க ” என்று கூறி அனைவரயும் அருகே வருமாறு அழைத்தாள்..

கௌதமன் யசோதராவை முறைத்தபடி அமர அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை.. கலைவாணி அடுத்து இவள் என்ன சொல்லி அசரடிக்க போகிறாளோ என்பது போல் பார்க்க தேன்மொழியோ என்னவென்பது போல் கணவரின் முகத்தை பார்த்தார்.

“இது இப்போ பேசுறது தான் சரின்னு தோணிச்சு சித்தப்பா அதான்.. இந்த முடிவு என் மனசுக்குள்ள ரொம்ப நாளாவே இருந்தது.”

“சரி யசோமா. எதுவா இருந்தா என்ன சொல்லுமா பண்ணிடலாம்”

“ஒரு நிமிஷம் ” என்று அறைக்குள் சென்றவள் வரும் போது கையில் சில கோப்புகளுடன் வந்தாள்..

“சித்தப்பா.. இது பாட்டியோட உயில்.. உங்களுக்கே தெரியும். இருந்தாலும் சொல்றேன், பாட்டியோட உயில்படி இந்த சொத்து முழுசும் மூணு பங்கு அதாவது எனக்கு, சித்து வசுக்கு.. அப்படிதானே சித்தப்பா” என்றாள்..

“ஆமா யசோ.. இது தான் முன்னமே தெரியுமே.. இப்போ என்ன டா..??”

“நல்லது சித்தப்பா.. அப்புறம் இது.. என்னோட JMD பதவிய நான் ரிசைன் பண்றேன்.. அதோட ரிசைக்னேசன் லெட்டர்.. ஆனா இதை கொடுக்கிறதுக்கு முன்ன சித்துக்கு ஒரு அப்பாயின்மென்ட் லெட்டர் குடுக்கிறேன்.. இனிமே சித்தாரா வேதமூர்த்தி தான் மூர்த்தி இண்டஸ்ட்ரீஸ் ஓட JMD.. யசோதரா கௌதமன் இல்லை. அப்புறம் என் பேர்ல இருக்க எல்லா சொத்தையும் சித்து வசு நேம்க்கு சரி பங்கா பிரிச்சு எழுதியிருக்கேன்” என்று கூறவும் அங்கே அனைவருக்குமே அதிர்ச்சி..

அம்பிகா மகனை என்னடா இது என்பது போல பார்க்க அவனோ தரையை பார்த்தான்..

கலைவாணிக்கு மனதில் சந்தோசம் தான் என்றாலும் இதற்கு பின் வேறு எதாவது காரணம் இருக்குமோ என்று பொறுமையாய் இருந்தார்.. வேத மூர்த்தி பதில் எதுவும் கூறாமல் இருக்க தேன்மொழி தான்

“யசோ என்ன மா இதெல்லாம்.?? ஏன்டா இப்படி பண்ற.. என்ன கோவமா இருந்தாலும் பேசிக்கலாம் டா.. இதெல்லாம் வேண்டாம்.. சித்துக்கு என்ன தெரியும்.. அவ சின்ன பொண்ணு.. உன் அளவுக்கு விவரம் தெரியாது” என்று கூற

யசோதராவின் “அப்பிடியா சித்தி ???” என்ற கேள்வியிலேயே வாயடைத்து போனார்.,.

“என்ன சித்தப்பா அமைதியா இருக்கீங்க ??”

“வேண்டாம் யசோ.. ஏன் டா இப்படி பேசுற???”

“இது தான் நல்லது சித்தப்பா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. நான் என் குடும்பத்தை பார்க்க வேணாமா?? அதை விட்டு மீட்டிங்ஸ்,  டீலிங்ஸ், ஸ்டாக்ன்னு பார்த்துட்டு இருக்க முடியுமா?? எனக்கு இதெல்லாம் வேண்டாம்.. நான் என் குடும்பத்தை பாக்கணும்” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல அவள் என் குடும்பம் என்று கூறவுமே கௌதமனுக்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது..

சித்தாரா வேகமாய் வந்து  அவளது கரங்களை பற்றி “அக்கா ப்ளீஸ் கா.. இப்படி எல்லாம் பேசாத, உனக்கு ஹெவி வொர்க்கா சொல்லு நான் ஹெல்புக்கு வரேன்.. இப்படி ஒரேடியா ஒதுங்கிறது வேணாம்க்கா.” என்றாள்

“அப்படியா சித்து.. நான் தான் ஒதுங்கினேனா ??” என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க விசாகனுக்கோ எல்லாமே தன்னால் தானோ என்று இருந்தது..

“யசோ நீ எதை மனசில வச்சிட்டு இப்படி பேசுறன்னு எனக்கு தெரியல.. ஆனா நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.உனக்கு பிடிக்காட்டி நீ ரிசைன் பண்ணு. அதுக்கு ஏன் சித்துவை அப்பாயின்ட் பண்ற ??” என்றான் வேகமாய் விசாகன்..

அவன் பேசியது அனைவருக்குமே ஆச்சரியம் தான்.. அதிலும் யசோதராவை எதிர்த்து பேசியது மிகவுமே ஆச்சரியம் தான்..

சித்துவோ இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. அதிலும் தனக்கு பரிந்து யசோதராவை எதிர்த்து பேசுவான் என்று.. அவனை விழி விரித்து பார்த்தாள்..

கலைவாணியோ “ஐயோ அவதான் போறேன்னு சொன்னா சந்தோசம் போய் தொலைன்னு சொல்றதை விட்டு எல்லாம் கெஞ்சிட்டு இருக்காங்களே.” என்று முனுமுனுக்க  தேன்மொழியும் வேதமூர்த்தியும் என்ன செய்வது என்று தெரியாமல் கெளதமனின் முகம் பார்த்தனர்..

ஆனால் யசோதரா “நல்ல கேள்வி விசுத்தான். ஆனா இதுக்கு நான் உங்ககிட்ட பதில் சொல்லவேண்டியது இல்லை.” என்றவள்

”என்ன சித்தப்பா இதுக்கு சம்மதம் தானே.. ” என்றாள்..

அவர் பதில் கூறும்முன் கெளதமன் “யசோ இதுக்கு யாரும் சம்மதிக்கலைன்னா என்ன பண்றதா இருக்க ??”  என்றான் ஒரு ஆவலில்

“பாட்டியோட உயில்படி இந்த  வீட்டோட முதல் வாரிசா, எல்லா சொத்துக்கள் மேலயும் முடிவு எடுக்கிற அதிகாரமும் உரிமையும் எனக்கு இருக்கு.. இத்தனை நாள் இதெல்லாம் நான் பெருசா நினைக்கல.. ஒருவேளை என்னோட இந்த முடிவுக்கு யாரும் சம்மதிக்கலைனா, மூர்த்தி குழுமத்தில இருக்க என்னோட எல்லா ஷேர்சையும் வேற யாருக்காவது சேல் பண்ணிடுவேன்..” என்றாள் அழுத்தமாய்..

அவ்வளோ தான் அங்கே ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அத்தனை அமைதி.. வேதமூர்த்தியோ தொப்பென்று அமர்ந்துவிட்டார்.. தேன்மொழிக்கு கண்களில் நீர் வரவே தொடங்கிவிட்டது.

இவளது இம்முடிவு கௌதமனே எதிர் பார்க்காத ஒன்று போல… அவனுமே அதிர்ச்சியாய் தான் பார்த்தான்.. ஆனால் எதை கண்டும் அசருவதாய் இல்லை யசோ..

“இதுல வருத்தப்படவோ அழவோ எதுவமே இல்லை. என்னை என் வழியில போக விடுங்க.. அவ்வளோ தான்.. இனிமே சித்தாரா எல்லாம் பார்த்துப்பா..” என்று கூறவும் கலைவாணி

“அப்படி சொல்லு டி என் அண்ணன் மகளே.. உனக்கு சொத்துல பங்கு வேண்டுமா நேரடியா கேளு.. அதை விட்டு விலகுற மாதிரி நடிக்க வேண்டாம்.” என்று அங்கலாய்க்க

“அத்தை இந்த சொத்து எனக்கு முக்கியமே இல்லை. அதுனால தான் வேண்டாம்னு சொல்றேன்” என்று அடுத்து அவள் எதுவோ சொல்ல போக

கௌதமன் “யசோ ”என்று அழைத்தான்..

இவன் என்ன சொல்ல போகிறானோ என்று அனைவரும் நோக்க

“ஒரு நிமிஷம் ” என்றுவிட்டு யசோதராவை இழுக்காத குறையாய் இழுத்து உள்ளே சொன்றான்..

“என்ன கெளதம் இது எல்லாரும் இருக்கும் போது இப்படி இழுத்துட்டு வரிங்க ” என்றாள் வேண்டுமென்றே குரலை மாற்றி..

“போதும் யசோ.. என்ன பண்ணிட்டு இருக்க நீ.. இதெல்லாம் என்ன யசோ.. அவங்க புரிஞ்சு பண்ணாங்களோ இல்லையோ ஆனா நீ இப்ப பண்றது ரொம்ப தப்பு.. எல்லாருமே ஹர்ட் ஆகுறாங்க பாரு” என்றான் ஒரு மாதிரி கண்டன குரலில்..

“நான் பண்றதுல எந்த தப்புமே இல்லை கெளதம்.. சித்தி சொன்னதை கேட்டிங்களா சித்து சின்ன பொண்ணாம்.. அவ வயசுலலையே நான் கம்பனிக்கு போக ஆரம்பிச்சுட்டேன். அவளும் ஒன் ஆப் தி போர்ட் மெம்பெர் தானே.. வரட்டும் வந்து பாக்கட்டும்.. நான் மட்டும் அழையணும்… சித்தாரா மட்டும் நல்லா ஜாலியா இருக்கணும்.. என்னால இனி முடியாது கெளதம்.. நான் இனிமே அத்தைக்கு ஹெல்ப்பா வீட்டுல இருக்க போறேன்.”

அவள் மூச்சு வாங்க கோவத்தை அடக்கி கூறவும் அவளையே கூர்மையாய் பார்த்தான் கௌதமன்..

“என்ன அப்படி ஒரு பார்வை??? ”

“அப்போ நீ நிஜமா இந்த ரீசனுக்காக தான் இப்படி பண்ற.. ”

“ஆமா அதுகென்ன ”

“ச்சே… நான் கூட சித்து மைன்ட் டைவேர்ட் பண்ணி அவளை கொஞ்சம் மெச்சூர் ஆக்க தான் இப்படி பண்றியோன்னு நினைச்சுட்டேன்.. ச்ச் ச்ச்”

அவனை பட்டென்று திரும்பி பார்த்தவள் பார்வையில் என்ன இருந்ததோ கௌதமன் முகத்தில் புன்னகை தாண்டவமாடியது

“இப்படி தத்து பித்துன்னு வெளிய வந்து உளறிக்கொட்டாதிங்க.. நான் எனக்காக மட்டும் தான் யோசிச்சேன். ” என்றால் சிறிதும் இறங்காமல்..

அவனது புன்னகை அதிகரித்ததே தவிர நின்ற பாடில்லை..

“ம்ம்ச் என்ன கெளதம் ??”

“இல்லை ஒண்ணுமில்ல.. போ.. போ எல்லாம் உனக்காக வெய்டிங்..” என்று வெளிப்புறம் நோக்கி கை நீட்ட.

“ச்சே ” என்று சலித்தவளுக்கும் சிரிப்பு வந்தது.

“ஒன்னுமட்டும் சொல்றேன் யசோ.. நீ உன்னோடதை யாருக்குனாலும் எழுதி குடு.. பட் எப்போவும் உன்னோட உரிமையை இழந்துடாத.. அங்க இருந்து வெளிய ஈசியா வந்துடலாம். ஆனா மறுபடி உள்ள போறதுங்கிறது கஷ்டம்.. இப்போ உனக்கு இருக்க மனநிலைல இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க.. நாளைக்கே எல்லாம் மாறலாம்.. உனக்கு உன் சித்தி சித்தப்பா பண்ணது தப்பில்லைன்னு தோணலாம்…         ”

“எனக்கு எப்போவும் ஒரே முடிவு தான் கெளதம்.. ”

“ஒரே முடிவுன்னா பிறகு எப்படி என்னை கல்யாணம் பண்ண ???”

“ம்ம்ச் அதுக்கும் இதுக்கும் என்ன இருக்க கெளதம்..?? ”

“இருக்கு யசோ.. நாளைக்கே என்கூட சண்டை வந்தா கூட உனக்கு உன் சித்திகிட்ட ஆறுதல் தேடி போக தோணும்.. அப்போ நீ எங்க கொண்டு போய் முகத்தை வைச்சுப்ப?? காலம் மாறும் போது எல்லாமே மாறும் யசோ..” என்றான் பொறுமையாய்..

அவன் சொல்வதிலும் எதுவோ இருப்பது போல தோன்ற.. சற்று நேரம் யோசித்தவள் எதுவும் கூறாமல் வெளியே சென்றாள்.. கௌதமனாவது யசோதராவை பேசி சரி செய்வான் என்று வெளியில் இருந்தவர்கள் காத்திருக்க,

யசோவோ “என்ன சித்தப்பா என்ன முடிவு பண்ணிருக்கிங்க ??” என்று முதலில் இருந்து ஆரம்பித்தாள்.

“இதுல நான் என்ன மா முடிவு பண்ண ?? அதான் எல்லாம் சொல்லிட்டியே..” என்று கூறும் பொழுதே அவரது குரல் நடுங்குவதை நன்றாய் உணர முடிந்தது..

கெளதமன் அவளை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்..

“ஹ்ம்ம் சித்தப்பா…. என் முடிவு இது தான்.. ஆனா சித்து JMD.. நான் எப்போவும் போல அங்க வருவேன்.. உங்களுக்கு சித்துக்கு ஹெல்ப்பா இருப்பேன்.. தேட்ஸ் இனப்..” என்று கைகளை விரித்து மடக்கினாள்..

கலைவாணிக்கு அவள் கூறுவது எல்லாம் நடிப்பாகவே தெரிந்தது.. அம்பிகாவோ இது  அவர்கள் விஷயம் என்று ஒதுங்கி இருக்க

சித்தாரா “அக்கா ஏன் கா இப்படி எல்லாம் பேசுற.. நான் பண்ணது தப்பு தான் கா.. ஆனா ப்ளீஸ் என்னை இப்படி ஒதுக்கி வைக்காத.. நீயும் ஒதுங்கி போகாத.” என்று கண்ணீர் வடித்தாள்..

“இங்க பாரு சித்து.. உண்ட சோறுக்கு ஊறுகாய் எதுக்கு.. இனி ஆக வேண்டியதை பாரு..”

தேன்மொழி “அப்போ சொத்தெல்லாம் பிரிக்க வேண்டாம் தானே யசோமா” என்றார் ஆவலும் பயமுமாய்..

“இல்லை சித்தி.. பிரிச்சு இன்னின்னது இவங்களுக்குன்னு எழுதிடலாம்.. அது தான் நல்லது.. இனி சித்து வசு கல்யாணம் எல்லாம் இருக்கே.. யாரு எப்படின்னு சொல்ல முடியாது.. பிஸினெஸ்ல வர மட்டும் நாலு பங்கா போடலாம்..” என்று கூறியவள்

வசுவை நோக்கி “என்ன வசு உனக்கு இதுல சரி தானே ” என்று வினவினாள்..

“இந்த ஆட்டைக்கு நான் வரவே இல்லைக்கா.. அதான் அரம்பத்தில இருந்து எதுவும் பேசாம இருந்தேன்.. நீங்க சொத்தை பிரிங்க பிரிக்காம போங்க என்னவோ பண்ணுங்க.. எனக்கு என் படிப்புக்கு வேலை கிடைக்கும் அது போதும்” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.

யசோதரா இத்தனை இறங்கிவந்ததே போதும் என்பது போல இருந்தது அனைவர்க்கும்.. வேறு வழியில்லாமல் அவள் கூறியதை செய்ய அவர் சென்னை கிளம்ப, அவரோடு சேர்த்து கலைவாணியும் கிளம்பினார் மகனையும் பிடித்துகொண்டு..

வசுவும் தன் விடுதிக்கு கிளம்ப வேறு வழியில்லாமல் சித்தாராவும் கிளம்பினாள்.. தேன்மொழியும் அம்பிகாவும் மட்டும் புது ஜோடியோடு அங்கே தங்கினர்..

தான் நினைத்ததை முழுமையாய் செய்ய முடியவில்லை என்ற கோவம் இருந்தாலும் மனதில் எதோ ஒரு அமைதியாய் உணரத்தான் செய்தாள் யசோதரா..

ஆனால் கௌதமனோ “இவளை இப்படியே இவள் போக்கில் விட்டால் சரி வராது ” என்று நினைத்தவன் மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசனையில் ஆழ்ந்தான்..

மகனின் முகத்தை வைத்தே அம்பிகா கண்டுகொண்டார் என்ன யோசனை என்று..

“கொஞ்சம் விட்டுபிடி கெளதமா.. அவளும் சின்ன பொண்ணுதானே…”

“அவ சின்ன பொண்ணா மா.. எப்படி பேசினா பார்த்திங்கள்ள..  ஹப்பா… பாவம் அத்தையும் மாமாவும்..”

“அவ மனசில என்ன காயமோ டா.. பாவம் இல்லையா அவளும்..”

“அதுக்காக தான் மா நானும் சும்மா இருந்தேன்.. முதல்லையே என்கிட்டே சொன்னா தான்.. இருந்தாலும் இவ்வளோ பிடிவாதமா இருப்பான்னு நினைக்கல.. இப்போவே எல்லாம் பிரிச்சு எழுதனும்னு என்ன இருக்கு மா.. விஷயம் வெளிய தெரிஞ்சா நாளைக்கு நம்மள தப்பா பேசமாட்டாங்க..” என்றவனின் குரலில் லேசாய் வேதனை எட்டி பார்த்தது..

“டேய் கெளதம்.. நம்ம எனன் ஒன்னும் இல்லாதவங்களா ?? இல்லை நீ தான் வெறும் ஆளா ?? அதெல்லாம் யாரும் எதுவும் நினைக்கமாட்டாங்க.. அவ இந்த முடிவு எடுத்த அதுல அர்த்தம் இருக்கும்.. உனக்கு தெரியாதா அவளை பத்தி.. ” என்ற அம்பிகாவின் பேச்சில் சற்றே மனம் நிம்மதியானான் கௌதமன்..

இரண்டு நாட்கள் இப்படி செல்ல. மூன்றாவது நாள் அனைவரும் கிளம்புவதாய் இருந்தது..

“மா எல்லாம் ரெடி தானே.. அத்தை நீங்களும் எல்லாம் எடுத்து வச்சாச்சா..” என்று கௌதமன் கேட்டுகொண்டிருக்க 

யசோதரா ” சாயங்காலம் கிளம்ப இப்போ இருந்தே ஏன் எல்லாரையும் விரட்டிட்டு இருக்கீங்க கெளதம்” என்றாள்..

“அதுசரி.. அப்போ நீ எல்லாத்தையும் பார்த்துக்க.. நான் தோட்டம் வரை போய்ட்டு வரேன் ”

“நான் வருவேன் ” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் வேகமாய் சென்று அவனது பைக் பக்கத்தில் நின்று கொண்டாள்..

“இவளை எந்த லிஸ்ட்ல சேக்குறதுன்னு தெரியலை” என்றபடி வந்தவன் அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான்..

“வீட்டை விட்டு கிளம்பு போது எதுவோ முனுமுனுத்திங்களே என்ன அது ??”  என்றபடி அவனோடு தென்னந்தோப்பில் நடந்தாள் யசோ..

“ஒண்ணுமில்ல யசோ ”

“ம்ம்ச் சும்மா சொல்லுங்க..”

“அதுவா… கல்யாணம் ஆகி மூணு நாள்லயே இப்படி தலை சுத்துதே.. இதுனால தான் அந்த கெளதமர் கூட சந்நியாசம் போனாரோ என்னவோன்னு நினைச்சேன்” என்றான் நக்கலாய்..

அவன் சொன்னதை கேட்டவள் சிரிக்க தொடங்கிவிட்டாள்..

“இப்போ நீ ஏன் சிரிக்கிற ???”

“ஹிஸ்டரி தெரியலை நீங்க எல்லாம் என்ன வக்கீல் ???”

“இப்போ நான் எனன் தப்பா சொல்லிட்டேன்”

“கௌதம புத்தர் ஒன்னும் உடனே சந்நியாசம் போகல.. ஒரு பையன் பிறந்த பிறகு தான் போனார்.. சோ யு ஹேவ் டைம்..” என்று கூறி மீண்டும் சிரித்தாள்..

அவள் சொன்னது சற்றே மெதுவாய் புரிந்தாலும்

“அடி வாலு… லாஸ்ட்ல என்னை சாமியாரா போக சொல்றியா ???”

“ச்சே ச்சே அதுக்கெல்லாம் முகக்கூறு வேணும்.. அது உங்ககிட்ட இல்லை.. ”

“பேச்சை மாத்தாத யசோ.. ”

“என்ன ??”

“ஏதோ பையன் அப்படின்னு சொன்ன ??” என்றான் புருவம் உயர்த்தி..

இவன் இப்படி கேட்பான் என்று அவன் நினைக்கவே இல்லை..

“என்.. என்ன… நான்… நான் ஹிஸ்டரி பத்தி…” என்று இழுத்தாள்..

“நான் நம்மை பத்தி பேசினேன் யசோ.. சொல்லு.. என்னை ஏன் கல்யாணம் பண்ணிகிட்ட ???” 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement