Advertisement

அத்தியாயம் – 6

கலைவாணிக்கு, சித்தாரா கூறியதை கேட்டு மாரடைப்பே வந்துவிடும் போல் இருந்தது… அவர் போட்டு வைத்திருக்கும் திட்டம் எல்லாம் இவளது இம்முடிவில் தவிடு பொடியாகிவிடுமே.. அனைவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் முதலில் சுதாரித்து கலைவாணி தான்,

“அட என் தங்கம்…சித்து.. ஏன் டா இப்படி ஒரு முடிவு?? வேணாம்மா அத்தை நானிருக்கேன்… உன்னை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன் டா..இப்படி எல்லாம் நீ நினைச்சு கூட பார்க்ககூடாது..” என்று சித்துவின் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சாத குறையாய் பேச

சித்தாராவோ “அத்தை நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்தேன்..என்ன கொஞ்சம் லேட்டா எடுத்துட்டேன்.. அத்தான் ஐம் ரியலி சாரி… என்னால நடந்த அத்தனை குழப்பத்துக்கும் ரொம்பவே சாரி அத்தான்..” என்று கலைவாணியில் ஆரம்பித்து விசாகனிடம் அழுத்தம் திருத்தமாய் கூறி முடித்தாள்..

இதற்குமேல் அங்கே என்ன பேச முடியும், அமைதியாய் ஒதுங்கி நின்றார்.. ஆனாலும் வாணியின் மனம் எரிதணலாய் தகித்தது..

விசாகனோ எதிலிருந்தோ விடுபட்ட உணர்வில் “இல்ல சித்து, தப்பு என் மேல தான்.. நானும் குழம்பி எல்லாரையும் குழப்பி ரொம்ப படுத்திட்டேன்… மீ டூ சாரி சித்து.” என்று கூறவும்

தேன்மொழி வேதாவிடம் “என்னங்க இது, சித்து பாட்டுக்கு இப்படி பேசிட்டு இருக்கா.. உங்க அக்காவும் அமைதியா இருக்காங்க.. விசா வேற எதோ சொல்றான்..” என்று கையை பிசைய

வேதமூர்த்தி “நம்ம ஒரு முடிவு எடுத்தோம் தப்பா போச்சு தேனு, இப்போ விசா சித்து ரெண்டும் சேர்ந்து இந்த முடிவு எடுத்து இருக்காங்க, இது சரியா முடியும்னு தோணுது.. கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் ஆற விடுவோம்.. பிறகு பாப்போம்.. நீ இது பத்தி சித்துகிட்ட எதுவும் பேசாத,.,” என்றுவிட

அம்பிகா சித்தராவிடம் “நல்ல முடிவு எடுத்திருக்கம்மா.. கொஞ்ச காலம் பொறுத்து இரு.. நிச்சயம் நல்லது நடக்கும்” என்று கூற அங்கே சூழ்நிலை சற்றே இலகுவானது..

நடப்பதை எல்லாம் எதோ நாடகம் பார்ப்பது போல் பார்த்துகொண்டு இருந்தாள் யசோதரா.. அவளிடம் முதலில் அதிர்ச்சி தோன்றினாலும் பிறகு கெளதமனை போலவே தெளிவாய் அமர்ந்திருந்தாள்.. ஆனால் அவள் மனமோ ஆயிரம் யோசனைகளை போட்டு உருட்டிக்கொண்டு இருந்தது..

விசாகனுக்கு இப்பொழுது தான் இயல்பாய் பேசவே முடிந்தது.. சித்தாராவிற்கும் அப்படியே தான் போல.. இருவரையும் அமர வைத்து வசுந்தரா எதுவோ பேசியபடி இருக்க, கலைவாணி அங்கே இருக்கவும் முடியாமல் கிளம்பவும் முடியாமல்  வேறு வழியே இல்லாமல் யசோதரா கௌதமன் திருமண பேச்சில் அம்பிகா, வேதமூர்த்தி தேன்மொழியோடு கலந்துகொண்டார்..

கௌதமன் யசோதராவை அடிக்கடி திரும்பி பார்த்தான் தான். ஆனால் அவனாலும் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறியமுடியவில்லை..

தன் உள்ளங்கையின் ரேகைகளை படித்தாளோ என்னவோ அதையே பார்த்துக்கொண்டு இருந்தவள் படக்கென்று திரும்பி கௌதமனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்..

சில நொடி இடைவெளியில் கெளதமனும் அவளை தேடி சென்றான்…

“என்ன யசோ ” என்ற கேள்வியோடு..

“உங்களுக்கு ஏன் இந்த வேலை??? ”

“ஏன் வக்கீல் வேலை நல்லா இல்லையா ??? எனக்கு நல்ல வேல்யு இருக்குனு உனக்கு தெரியுமே ” என்றான் புரியாத பாவனையோடு..

“ப்ளீஸ் கெளதம் நடிக்காதிங்க..” அப்பட்டமாய் கோவம் தெரித்தது அவள் வார்த்தைகளில்..

அவனோ பதில் கூறாமல் கேள்வியாய் பார்த்தான்..

“என்ன பாக்குறிங்க ?? இதெல்லாம் உங்க வேலை தானே.. போதாத குறைக்கு வசுவ தூண்டிவிட்டு பேச வைக்கறிங்க.. உண்மைய சொல்லுங்க சித்துவோட இந்த முடிவுக்கு பின்னால இருக்கிறது நீங்க தானே….”

அவள் இப்படி கேட்டதும் அவன் மெச்சுதலாய் பார்த்து “கண்டுபிடிச்சுட்டியே ” எனவும்

“ எனக்கு உங்களை பத்தியும் தெரியும், வசுவை பத்தியும்”

“ஹ்ம்ம் இதுக்கு ஏன் இவ்வளோ கோவம் யசோ…?? ”

“ஏன் உங்களுக்கு என்னை பத்தி தெரியாதா ???”

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை யசோ.. முதல்ல நீ போட்டு இருக்கிற வட்டத்தை விட்டு வெளிய வா..”

“எதுக்கு ?? மறுபடியும் எல்லாரும் என்னை ஏமாத்தவா ???”

“அப்போ உனக்கு என் மேல கூட நம்பிக்கை இல்லை அப்படிதான?? ” என்று கௌதமன் கோவமாய் கேட்க சற்றே நிதானத்திற்கு வந்தாள் யசோ..

“டோன்ட் ஆஸ்க் மீ லைக் திஸ் கெளதம் ” எனும் போது அவள் குரல் எழும்பவே இல்லை..

“ஹே!! யசோ என்ன இப்படி உடனே ஆப் ஆகிட்ட… பதிலுக்கு எகிருவன்னு பார்த்தா.” என்றபடி அவள் அருகே அமர அவளோ இயல்பாய் அவன் தோள்களில் சாய்ந்துகொண்டாள்..

“நம்மளோடது என்ன மாதிரி ரீலேசன்ஷிப் கெளதம் ??? ஏன் எல்லாரும் இதை முழு மனசா அச்செப்ட் பண்ணமாற்றாங்க?? ” 

“ஹ்ம்ம் நமக்குள்ள என்ன இருக்குன்னு நமக்கு தெரிஞ்சா போதும் யசோ… நம்ம கல்யாணம் பண்ணலாம்னு எடுத்த முடிவு சரிதான், பட் எடுத்த நேரம் தான் சரியில்ல.. அதான் எல்லாருக்கும் குழப்பம்.. அவங்கவங்க பாயின்ட் ஆப் வியுல பாக்குறாங்க.. லீவ் இட் மா..”

இருவருக்குள்ளும் காதல் இருக்கிறதா என்பது அவர்களே அறியாத ஒன்று.. ஆனால் ஏதோ ஒன்று அவர்களை பிணைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை..

“ஹ்ம்ம் கெளதம் இது போல இனிமே அடுத்து பண்ண கூடாது.. ” என்றால் மொட்டையாய்..

“நான் என்ன பண்ணேன்..?? ”

“நானே இவங்க விசயத்துல எல்லாம் தலையிடுறது இல்லை.. நீங்க ஏன் இந்த வேலை செய்றிங்க ?? ” என்றதும் அவளையும் நிமிர்த்தி அவனும் நேராய் அமர்ந்து அவள் முகம் பார்த்தான்..

“என்ன கெளதம்….?? ”

“என்ன யசோ டிபிகல் வைப் மாதிரி பேசுற?? நான் அவங்க கூட பேசமாட்டேன் நீயும் பேசாதன்னு சின்ன குழந்தை மாதிரி..”

“ஏன் நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு.. நானே அவங்க விசயத்துல தலையிடல அப்படி இருக்கும் போது நீங்க ஏன் இதெல்லாம் செய்யணும்.”

“லுக் யசோ.. உன்னை எனக்கு எப்படி முன்ன இருந்து பழக்கமோ அதே போல தான் அவங்க எல்லாம்.. நீ எனக்கு ஸ்பெசல் தான் அதுக்காக எல்லாரையும் நான் ஒதுக்க முடியாது.”

அவன் கூறியதில் இருந்த உண்மை புரிந்தாலும் ஏனோ இவ்விசயத்தில் கௌதமன் தலையிடுவது அவளுக்கு பிடிக்கவில்லை.. தன் பேச்சு அவனிடம் எடுபடவில்லை என்ற எண்ணமே அவளுக்கு கோவத்தை கொடுத்தது..

அவன் கூறியதற்கு பதிலேதும் கூறாமல் எழுந்தவள் “இன்னும் ரெண்டு நாள்ள கல்யாணம்.. நாளைக்கு கிளம்பனும். சோ அந்த வேலையை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்..” என்றாள் ஒருமாதிரி குரலில்..

அவளையே வாய்த்த கண் வாங்காமல் பார்த்தவன் எதுவும் கூறாமல் தோளை குலுக்கிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்..

அவன் போவதையே வெறித்து பார்த்தவளுக்கு மனம் ஏனோ வெறுமையை சூடியது… வெளியே சென்று அனைவரோடு கலக்கவும் மனமில்லை, தனியே இருக்கவும் பிடிக்கவில்லை.. என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு தன் அன்னையின் நினைவு வர அவரது புகைப்படத்தை எடுத்து வைத்துகொண்டு அரூபமாய் இருக்கும் அவரோடு பேச தொடங்கினாள்..

எத்தனை நேரம் அப்படி கழிந்ததோ, அம்பிகா கூறிக்கொண்டு செல்ல அவளை தேடி வந்தபிறகே தெளிந்தாள்..

சித்தாரா, விசாகனின் இந்த ஒருமித்த முடிவே இருவருக்குள்ளும் ஒரு இலகுத்தன்மையை தர அவர்களின் பேச்சு மிக சுவாரசியமாய் சென்றது.. அதற்கு முக்கிய காரணம் வசுந்தரா என்றே சொல்லவேண்டும்.. அவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்தவளை பாராட்டுதலாய் பார்த்துவிட்டு சென்றான் கௌதமன்…

 

 

அதிகாலையின் செவ்வானம் ஒரு அழகென்றால் அந்திமாலையின் செவ்வானமும் ஒருவித அழகுதான்.. பறவைகள் கூட்டில் அடங்கிடும் கீச் கீச் ஒலியும், இயற்கை எழில் சூழ, வயலும் வரப்புமாய், கண்ணுகெட்டிய தூரம் வரைக்கும் பசுமை மட்டுமே தெரிய, அந்த ஒரத்தநாடு பண்ணைவீடு யசோதராவிற்கு மிகவும் பிடித்து இருந்தது..

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அழகிய கிராமம் தான் ஒரத்தநாடு..  சினிமாக்களில் அதிகம் பார்த்த ஊர் தான் என்றாலும் இன்னும் விவசாயத்தின்  வேர் ஓடிக்கொண்டு இருந்ததும், உழவை உயிராய் இருக்கும் மக்கள் வாழ்வதும் பார்க்கவே மகிழ்ச்சியாய் இருந்தது கௌதமனுக்கு..

சிறுவயதில் அனைத்து விடுமுறையும் இங்கே தான் கழியும் அவனுக்கு. நாட்கள் ஆக ஆக வாழ்க்கை முறை மாற மாற வருடத்திற்கு ஒரு முறை வருவது கூட அரிதாய் போனது, இருந்த நில புலத்தை எல்லாம் ஆள் வைத்து பராமரித்து வந்தாலும், அவன் தந்தை மறைந்த பிறகு அம்பிகா மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை வந்து போவார்..  பல நாட்களுக்கு பிறகு இங்கே வந்திருப்பதே அவனுக்கு மனதில் ஒரு இதத்தை கொடுத்தது.. 

மறுநாள் விடிந்தால் திருமணம், அனைத்தும் நன்றாய் நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் யசோதரா வந்ததில் இருந்து தன்னோடு முகம் கொடுத்து பேசாதது உருத்தலாகவே இருந்தது. அவளிடம் சென்று பேசலாம் என்றால் அவளோட யாராவது இருந்துகொண்டே இருந்தனர்..

என்ன செயல்லாம் என்று யோசித்தபடி இருந்தவனை பார்க்க ஆட்கள் வர அடுத்ததாய் செய்ய வேலைகள் வரிசை கட்டி நிற்க அவனது எண்ணத்தை தள்ளிவைத்து விட்டு எழுந்து சென்றான்..

வசு “அக்கா நாளைக்கு கல்யாணம் உனக்கு தான்.. இப்ப கூட ஏன் உர்ர்ன்னு இருக்க??” என்று கேட்க அவளை பார்த்து மென்மையாய் புன்னகை பூத்தாள் யசோதரா..

“ஹ்ம்ம் நல்ல பழக்கம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல பிடிக்கலைனா இப்படி சிரிச்சு மழுப்புறது..” என்று கடிந்துவிட்டு சென்றுவிட்டாள் வசுந்தரா..

யசோதராவிற்குமே தான் ஏன் இப்படி நடந்துகொள்கிறோம் என்று விளங்கவில்லை…

“நான் ஏன் இப்படி இருக்கேன்?? கெளதம் பண்றதுல எதுவுமே தப்பில்லை.. ஆனாலும் நான் என்ன எதிர் பாக்குறேன் அவர்கிட்ட… எங்கனால மத்தவங்க போல சாதாரணமா இருக்கவே முடியாது, கண்டிப்பா நிறைய விசயங்கள்ல முட்டும்.. அப்படி இருந்தும் நான் ஏன் கௌதமை ஏன் தேர்ந்தெடுக்கணும்” என்று தோன்ற அவளது மனமோ

“நல்ல கேள்வி மா… கல்யாணத்துக்கு முதல் நாள் தானா உனக்கு இப்படியெல்லாம் தோணும்??” என்று இடிக்க தன்னையே நொந்துகொண்டாள்..

அவன் மீது காதலா என்று கேட்டால் இல்லையென்று அடித்து கூறுவாள். அத்தனை ஏன் அவனிடமே இக்கேள்வியை கேட்டாள் ஆம் என்று உடனே கூறிட மாட்டான்.. காதல் இல்லாமல் ஒரு திருமணமும், கல்யாண வாழ்க்கையும் சாத்தியமாகுமா ??? புரிதலும் நம்பிக்கையும் இருந்தால் காதல் தானாய் வராதா ?? என்று பல கேள்விகளோடு தூங்கியே போனாள் மணப்பெண்..

ஆனால் மறுநாள், மணப்பெண் அலங்காரத்தில், தலை நிறைய மல்லிகை சூடி, கழுத்தில் மாலையிட்டு கௌதமன் முன் நிற்கும் பொழுது மனம் தெளிந்த நீரோடையாய் இருந்தது…

பட்டு வெட்டி சட்டையில், நெற்றியில் சிறிய சந்தன கீற்றிட்டு நின்றிருந்த கௌதமனுக்கு மனம் அத்தனை தெளிவில்லை என்பது அவன் முகமே காட்டிகொடுத்தது..

அவனையும் அறியாமல் அவனது முதல் திருமணம் நினைவு வந்ததோ என்னவோ அவன் முகம் சில பல மாறுதல்களை காட்ட சரியாய் புரிந்துகொண்டாள் யசோதரா..

யாரும் அறியா வண்ணம் அவனது கரங்கள் பற்றி மெல்ல அழுத்தினாள்.. அவளது தீண்டலும் ஸ்பரிசமும் அவனுக்கு என்ன உணர்த்தியதோ, அவளை பார்த்து ஒன்றுமில்லை என்பது போல் கண்கள் மூடி திறந்தான்.. பழமை வாய்ந்த சிவன் கோவிலில் தான் திருமணம்…

கோவிலுக்கு வந்ததில் இருந்து அம்பிகாவின் பிரார்த்தனை தான் அதிகமாய் இருந்தது..

இந்த இரண்டு நாட்களில் விசாகன் சித்தாரா உறவில் நல்ல மாற்றம் தெரிந்தது.. இருவரும் தயக்கம் இல்லாமல் பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருக்க, கலைவாணிக்கு இதைகண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை..

வேத மூர்த்தியும், தேன்மொழியும் எது நடந்தாலும் நல்லதாய் நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க, அய்யர் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்..

கண்கள் மூடி அவரவர் பிரார்த்திக்க, இறைவனுக்கு வண்ண மலர்களால் பூஜை செய்து முடித்தவர், மஞ்சள் தடவிய தேங்காயில் சுற்றிவைக்கபட்டு இருந்த பொன்மஞ்சள் தாலியை கொணர்ந்து அனைவரும் தொட்டு வணங்க நீட்டினார்..

இறுதியாய் கௌதமனிடம் வர, மனதார இறைவனை வேண்டிக்கொண்டு யசோதராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.. கண்களை இறுக மூடி அந்த தருணத்தை மனதில் ஏற்று அவனது சரி பாதியாகினாள்…

சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அர்ச்சதை தூவ, அழகாய் அங்கே கௌதமன் யசோதராவின் திருமணம் நிகழ்ந்தது..

அம்பிகாவிற்கு மகன் மருமகளை காணவும் மனம் நிறைந்துவிட்டது.. வசுந்தரா மூத்தவளை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தாள்.. தேன்மொழி வேதமூர்த்தி மனமார வாழ்த்த, கலைவாணி வேண்டா வெறுப்பாய் ஆசிர்வாதம் செய்தார்..

விசாகனுக்கு கண் முன்னே யசோதரா கழுத்தில் வேறு ஒருவன் தாலிகட்டியது மனதிற்கு ஒருமாதிரி இருந்தாலும் நிதர்சனம் உணர்ந்து அதை ஏற்றுகொண்டான்..

சித்தாரா “கவலை படாதிங்க விசுத்தான், உங்க மனசுக்கு நல்ல வாழ்கை அமையும் ” என்று ஆறுதல் கூற அவனும் மெல்ல புன்னகைத்து கொண்டான்..

பிறகு அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களும் முடித்து மணமக்கள் கௌதமனின் பூர்விக வீட்டிற்கு வர, உறவு பெண்கள் அனைவரும் ஆலம் கரைத்து சுற்றினார்.. ஏனோ கௌதமனின் முகம் இறுகியே இருந்தது..

பழைய நினைவுகள் வந்து அவனை அலைக்களித்தனவோ என்னவோ?? அமைதியாய் இறுகியே இருந்தான்.. யசோதராவிற்கு அவன் மனம் புரிந்தது போல.. எதுவும் அவனை போட்டு கேட்காமல் அவளும் அமைதியாய் இருக்க அம்பிகா இருவரின் நிலையும் புரிந்து

“யசோ மா வா வந்து விளக்கு ஏத்து, கெளதம் நீயும் வா.. இன்னும் நிறைய வேலை இருக்கு.. தேனு எல்லாருக்கும் என்ன வேண்டும்னு பாரு மா.. சித்து வசு போங்க போய் வந்தவங்களை கவனிங்க” என்று ஆளுக்கொன்றாய் பிரித்து கொடுத்து அனுப்ப மற்றவர்களும் அதன்படி செய்தனர்..

ஒருவழியாய் எல்லாம் செவ்வனே முடிய கௌதமனின் மனமோ தனிமையை நாடியது.. எப்பொழுதடா எழுந்து செல்வோம் என்று கடிகாரத்தை அடிக்கடி பார்த்தபடி இருந்தான்.. யசோதராவிற்கு அவனை பார்த்து என்ன தோன்றியதோ அம்பிகாவை தேடி சென்றாள்..

அவரோ இருவருக்குமான அறையை தயார் செய்ய தேன்மொழியிடம் எதுவோ கூறிக்கொண்டு இருக்க

“அத்தை ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேட்டு பிறகு இந்த ஏற்பாடெல்லாம் பண்ணுங்க ” எனவும் இரு பெண்களும் அவளை என்னவோ ஏதோவென்று பார்க்க

“அத்தை இதை நான் பேசலாமா என்னானு தெரியலை. இருந்தாலும் கெளதம்காக நான்  பேசித்தான் ஆகணும்.. இந்த ரூம் அலங்காரம் பண்றது இதெல்லாம் வேண்டாமே அத்தை.. அது எப்டி இருக்கோ அப்படியே இருக்கட்டும்.. நீங்களே பாருங்க காலைல இருந்து கெளதம் முகமே சரியில்ல.. மேல மேல எதா பண்ண போக அவருக்கு பழசெல்லாம் நினைப்பு வரும்.. வேண்டாமே ப்ளீஸ் அத்தை” என்று இறைஞ்சுவது போல் கேட்க

அம்பிகாவின் மனம் குளிர்ந்துவிட்டது.. கௌதமனுக்கு வேண்டுமானால் இது இரண்டாவது திருமணமாய் இருக்கலாம். ஆனால் அவளுக்கு இது முதல் தானே.. ஆயிரம் கற்பனைகள் மனதில் நிறைந்திருக்குமே. அதையெல்லாம் அவளால் சடுதியில் ஒதுக்கிட முடியுமா என்ன ??

தேன்மொழி தயங்கி தயங்கி “இல்ல யசோ எல்லாம் பண்ணா தான் நல்லா இருக்கும்.. ” என்று கூற

“இல்ல சித்தி.. வேண்டாம்.. அதுவும் இல்லாம எனக்கே இதெல்லாம் கொஞ்சம் சினிமாடிக்கா இருக்கு.” என்று கூற அதற்குமேல் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை..

வந்திருந்தவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒன்றாய் வேலை செய்ய, வசு, சித்து. விசாகன் மூவரும் தோட்டத்தை சுற்றி பார்க்க என்று கிளம்பி சென்றுவிட்டனர்.. நாள் ஒன்றுக்கு இருபத்தி நான்கு மணிநேரம் போதாமல் சுற்றிய இரு உள்ளங்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் நேரத்தை நெட்டி தள்ளி அமர்ந்திருக்க கலைவாணிக்கு நடப்பது அனைத்தும் எட்டிகாயாய் கசந்தது..

கிராமத்தில் கல்யாணம் என்பதால் உறவில் ஒரு சிலர் வந்து புதுபெண்ணை பார்த்துவிட்டு சென்றனர்.. இதெல்லாம் அவளுக்கு புதிதாய் இருந்தது.. எத்தனை பிசினஸ் டீலிங் பேசியிருப்பாள், எத்தனை பேரை சந்தித்திருப்பாள் அப்பொழுதெல்லாம் வராத தயக்கமும் கூச்சமும் கழுத்தில் தாலி ஏறியதும் வந்து ஒட்டிக்கொண்டது.. ஆனால் நடப்பது எல்லாம் யாருக்கோ என்பது போல இருந்தான் கௌதமன்..

மாலை மங்கி வெண்ணிலா எட்டி பார்த்து நட்சத்திரங்கள் கண் சிமிட்ட, இவர்களுக்கான இரவும் தயாராய் இருந்தது..   திருமணம் முடிந்து இப்படி ஒரு தருணம் வரும் என்று தெரிந்தாலும் அவளுக்கு அறைக்குள் நுழைந்ததுமே குப்பென்று வியர்த்தது..

என்ன செய்வது, என்ன பேசுவது என்றெல்லாம் யோசித்தபடி கதவருகில் நின்றேவிட்டாள்.. ஆனால் அதெல்லாம் சில நொடி தான்.. மனதிற்குள் நான் யசோதரா கௌதமன்.. எனக்கு இப்படிபட்ட தயக்கங்கள் எல்லாம் அறவே கூடாது என்று எண்ணியவள் மேற்கொண்டு முன்னேறி செல்ல அப்பொழுது தான் அவள் வருவதை உணர்ந்த கௌதமன் “தேங்க்ஸ் யசோ ” என்றான் புன்னகையோடு..

“எதுக்கு தேங்க்ஸ் உங்களுக்கு பால் கொண்டு வந்ததுக்கா ???” என்று சிரித்தபடி அவள் கேட்க

“இல்ல எனக்காக அம்மாகிட்ட பேசினதுக்கு..” என்றான்..

“ஓ !! அதுக்கா. தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு கெளதம்.. காலைல இருந்து ஒரு மாதிரி இருந்திங்க அதான்.. அதுவும் இல்லாம அலங்காரம் பண்ணாலும் அது வேஸ்ட் தான்.. நமக்குள்ள நிச்சயமா எந்த ஒரு மாற்றமும் நடக்க போறது இல்லை..” என்றால் தீர்க்கமாய்..

அவள் பேசுவதையே சில நொடிகள் வெறித்து பார்த்தவன் பிறகு என்ன நினைத்தானோ யசோவின் கரங்களை பற்றி தன்னருகில் அமரவைத்தான்..

“சில விஷயங்கள் நீ சொல்லாமையே புரிஞ்சுக்கிறது சந்தோசம் தான் யசோ. ஆனா நீ இப்படி வெளிப்படையா பேசுறது என்கிட்டே மட்டுமா இருக்கட்டும்.. எல்லாரும் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது..”

“ஊப்ஸ்… சின்ன வயசுல இருந்தே உங்கட்ட பிடிக்காதது இந்த அட்வைஸ் தான் கெளதம்.. சோ ப்ளீஸ் இன்னிக்கே கிளாஸ் எடுக்க வேண்டாம்” என்று கூறிக்கொண்டே தலையனையை இழுத்து போட்டு சாய்ந்து அமர்ந்தாள்..

அவள் செய்த வேலையை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“என்ன சிரிப்பு ??”

“இல்ல நீ நடந்துக்கிறத பாத்தா நமக்கு பர்ஸ்ட் நைட் போலவே இல்ல.. உனக்கு கொஞ்சம் கூட இந்த அச்சம் மடம் நாணம் இதெல்லாம் இல்லையா யசோ ??” என்று சீண்டினான்..

“இப்படி ஒரு கேள்வியை என்கிட்டே கேட்க உங்களுக்கு வெட்கமா இல்லையா கெளதம் ???” என்றாள் அவளும் சிரித்தபடி..

“அது உண்மை தான், மேடம் மேரேஜ்கே ஆர்டர் போட்டவங்க தானே.. தப்பு என் பேர்ல தான்” என்றவன் அவளருகில் அவனும் சாய்ந்துகொண்டான்..

அடுத்து என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியவில்லை.. மேலும் சில நொடிகள் கரைந்திருக்க காற்றும் சிலு சிலுவென்று வீச அச்சூழ்நிலையை கண்கள் மூடி அனுபவித்தனர் இருவரும்..

“கெளதம்…. ”

“ம்ம்ம்…. ”

“ஐம் சாரி…. ”

அவளது குரலில் அத்தனை வேதனை எட்டி பார்த்தது… அது ஏன் என்று அவனுக்கு புரிந்தது, இருந்தாலும் அவளே கூறட்டும் என்று எண்ணி

“எதுக்கு யசோ ” என்றான்..

“எல்லாமே என்னால தானே கெளதம்.. நான் அன்னிக்கே உங்களுக்கு சரின்னு சொல்லிருந்தா..”

“சொல்லிருந்தா, என்ன இப்ப நமக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கும்.. நமக்கு நடுவில படுத்துகிட்டு கேள்வியா கேட்டு நமக்கு ஆப்படிக்கும்..” என்று அவனை இலகுவாக்க கூறி கடகடவென்று சிரித்தான்..

அவன் சிரிப்பதையே பார்த்தவள் மெல்ல அவனது கன்னத்தை வருடினாள்..

“இருந்தாலும் சாரிதான் கெளதம்… உங்களோட இந்த வேதனைக்கு, குற்ற உணர்வுக்கு நான் தான காரணம்.”

“ஓ அதுக்கான பிராயசித்தமா தான் இப்போ என்னைய கல்யாணம் பண்ணியா ” என்று அவன் ஒரு மாதிரி கேட்க, தடவிய கன்னத்திலேயே பட்டென்று தட்டினாள்..

“இப்படி பேசினா நான் ஹர்ட் ஆவேன்னு நினைச்சா ஐம் வெறி சாரி.. நான் பண்ண தப்பு எனக்கே தெரியும்.. அப்புறம் இன்னொன்னு பிராயசித்தம் பண்றதுன்ன உங்கள கல்யாணமே பண்ணிருக்க கூடாது.. ஏன்னா இது எனக்கு நானே கொடுக்கிற தண்டனை மாதிரி” என்றவளை இழுத்து தன் மீது சாய்த்துகொண்டான்..

“தண்டனையா ???!!! புரியலையே… ”

“அட என்ன வக்கீல் இது புரியலையா.. வாழ் முழுக்க இப்படி ராத்திரில கூட  உங்க முகத்தை பார்க்கணுமே அது தண்டனை இல்லையா?? ” என்று கூறி சிரித்தவளை புன்னகையோடு பார்த்தான் கௌதமன்..

அதே புன்னகையோடு “யசோ கண்டிப்பா நீ நாளைக்கு உங்க சித்தப்பாகிட்ட அந்த விசயத்தை பேசணுமா ??” என்றான்..

அவளோ அடுத்த நொடி தன் முக பாவத்தை மாற்றி “இதுல நீங்க தலையிட கூடாதுன்னு சொன்னேனே கெளதம்.. உங்ககிட்ட சொல்லாம எதுவும் செய்யல ஆனா என் முடிவில எந்த மாற்றமும் இல்லை..”

“வேண்டாம் யசோ.. நீ ரொம்ப ரியாக்ட் பண்ற மாதிரி இருக்கு..”

“உங்க கிட்ட நான் எந்த சஜசனும் கேட்கல.. முடிஞ்சா நான் சொன்னதுக்கு ஏற்பாடு பண்ணி குடுங்க இல்லை சும்மா இருங்க ” என்று காரமாய் பேச அவனோ ஆழமாய் அவளது விழிகளை நோக்கினான்..

“என்ன கெளதம்?? என்னை பத்தி அவங்க யாராவது நினைச்சாங்களா இல்லையே.. பிறகு நான் நான் மத்ததை எல்லாம் யோசிக்கணும் ??”

“உன்னை பத்தி நான் நினைச்சா மட்டும் போதும்.. இப்ப பேசாம தூங்கு” என்றவன் விளக்கை அணைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான்..

 

 

 

 

 

 

Advertisement