Advertisement

              அத்தியாயம் – 5

கலைந்த தலையும், தாடியுமாய், உறங்காத கண்களும் வாடிய முகமாய் கட்டிலில் படுத்து கிடந்தான் விசாகன்.. ஆகிற்று அவன் வீடு வந்து சேர்ந்தும் ஒரு வாரம்.. கௌதமன் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் யசோதரா உடனான அவனது திருமண செய்தியை விசாகனுக்கு எட்ட செய்திருந்தான்..

அவ்வளோதான் அடுத்த நாளே விசாகன் வேத மூர்த்தி வீட்டில் இருந்தான்.. மகன் வீட்டை விட்டு சென்றதற்கு ஒரு கூப்பாடு என்றால் வந்த பின் அதை விட பெரிய கூப்பாடு போட்டார் கலைவாணி..

விசாகனை கண்டதும் தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டாள் சித்தாரா.. தேன்மொழிக்கோ யாரை சமாதனம் செய்ய என்று தவித்து போனார்.. வேத மூர்த்தி தான் ஒருவழியாய் கலைவாணி சித்தாரா இருவரையும் பேசி பேசி சம நிலைக்கு கொண்டுவந்தார்..

ஆனால் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அமர்ந்திருந்தாள் யசோதரா.. அதற்கும் கலைவாணி அவளை நொடித்தார்..

“ஏன் டி இப்படி குத்துகல்லு மாதிரி இருக்க… உன்னால தானே இவன் இப்படி இருக்கான்.. வாய் திறந்து ஏதாவது பேசேன்..” என்று கத்த,

“இங்க பாருங்கத்தை , இத்தனை நாள் உங்க மகன் என்னால தான் போனாருன்னு பேசினிங்க. இப்போ வந்த பிறகும் ஏன் என்னை சொல்றிங்க.. எனக்கு பாக்டரிக்கு நேரமாச்சு. சித்தப்பா இன்னிக்கு நமக்கு ஆடிட்டிங் இருக்கு நீங்க வரிங்களா எப்படி ???”

“இதோ நானும் வரேன் யசோம்மா… விசாகா, போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… சும்மா அழுது ஆர்ப்பாட்டம் செய்யாம எல்லாம் போய் வேலையை பாருங்க… வந்து பேசிக்கலாம் எதுன்னாலும்…” என்று கூறிவிட்டு இருவரும் கிளம்பி சென்றுவிட்டனர்..

அதன் பிறகு என்ன நடந்ததோ கலைவாணி மகனோடு தன் இல்லம் சென்றுவிட்டார்.. ஆனால் விசாகனோ ஒவ்வொரு நொடியும் யசோதராவோடு பேசிட துடித்துகொண்டிருந்தான்.. மகனின் எண்ணம் அறியாதவரா கலைவாணி, எந்நேரமும் அவனுடனே இருந்தார்…

இப்படியே ஒரு வாரம் சென்றிருந்த நிலையில், விசாகனிடம் கலைவாணி “டேய் விசா, நான் சொல்றதை கேளு.. நமக்கு அந்த திமிர் பிடிச்சவ வேண்டாம் டா.. பாரு நீ  அவளுக்காக உருகி மறுகுற ஆனா அவ, நீ இல்லாத நேரம் பார்த்து அந்த வக்கீல் பையனை வலைச்சுட்டா.. உனக்காக உயிரையே குடுக்க இருக்கா சித்து… அவளை கொஞ்சம் நினைச்சு பாரு டா ” என்று மகன் மனதிற்கு தக்க பேசினார்..

அவனோ அவரை வெறித்து பார்த்தானே ஒழிய பதில் எதுவும் பேசவில்லை.. பழையபடி கட்டிலில் சாய்ந்து விட்டதை வெறிக்க தொடங்கிவிட்டான்..

நாட்கள் நகர்ந்தது,…

யசோதரா தன் திருமணதிற்கு வசுந்தராவை சம்மதிக்க வைப்பதற்குள் அப்பாடி என்றானது.. அத்தனை கேள்விகள் கேட்டு தள்ளிவிட்டாள்..

கௌதமன் கூட “யப்பா!!! வசு வக்கீலுக்கு படிச்சிருக்கலாம், எனக்கு தோணாத பாயின்ட் எல்லாம் அவளுக்கு தோணுதே” என்று கூறுமளவு இருவரையும் படுத்தி எடுத்துவிட்டாள்..

கௌதமன் முன் நடந்ததை எல்லாம் சுருக்கமாய் கூறிய பிறகே முழுமனதாய் சம்மதம் கூறினாள். பிறகு தான் யசோதரா முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது…இருவரும் தங்களுக்கு தனிமை வேண்டும் என்று நினைக்கவும் இல்லை, அதற்காய் எந்த முயற்ச்சியும் செய்யவும் இல்லை.. திருமண வேலைகளை வீட்டின் பெரியவர்கள் தலையில் கட்டிவிட்டனர்..

வேத மூர்த்திக்கு மனதில் மகளின் வாழ்வை எண்ணி வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தன் அண்ணன் மகளின் திருமண ஏற்பாடுகளை செவ்வனே செய்தார்.. எந்த விசயமாய் இருந்தாலும் யசோதரா, கௌதமன், அம்பிகா மூவரிடமும் கேட்காமல் செய்வது இல்லை..

கௌதமன் யசோதரா இருவருக்குமே அடம்பர திருமணத்தில் விருப்பம் இல்லை.. தேன்மொழி கூட “நமக்கு என்ன எதுவுமே இல்லையா ?? எதுக்கு சிம்ப்ளா செய்யணும்??” என்று கேட்க

யசோதரா “சித்து கல்யாணத்தை சிறப்பா செய்யலாம் சித்தி ” என்று கூறி வாயடைதுவிட்டாள்..

அம்பிகா ஒரே முடிவாய் தங்கள் குல தெய்வ கோவிலில் திருமணம் நடத்தவேண்டும் என்று கூற அனைவருக்கும் அதுவே சரியென பட்டது..நடக்கும் எதிலுமே கலந்து கொள்ளாமல் இருந்தது இரு ஜீவன்கள் ஒன்று சித்தாரா, மற்றொன்று விசாகன்..

இருவரின் மனதிலும் என்ன இருக்கிறது, என்ன யோசிக்கின்றனர் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.. கலைவாணி கூட வேகமாய் யசோதரா திருமணம் முடிந்தால் தன் மகன் மனம் மாறும் என்று நினைத்து அவ்வபோது அனைத்திலும் கலந்துகொண்டார்..

ஒரு சில முறை விசாகன் யசோதராவை சந்திக்க முயன்றான் ஆனால் அதை அழகாய் தவிர்த்துவிட்டாள் அவள்.. கௌதமன் கூட விசாகனிடம் அனைத்தையும் தெளிவுபடுத்தி விடு என்று கூறினான்.. ஆனால் அவளோ பிடிவாதமாய் இருந்துவிட்டாள்..

சித்தாரா முன்போல் யசோவிடம் நெருங்க முயன்றாலும் அவளையும் ஒரு எல்லை கோட்டில் நிறுத்தினாள்.. தேவையிருந்தால் தேன்மொழி வேதமூர்த்தியிடம் பேசுவாள் இல்லையெனில் அதுவும் இல்லை..

“நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை யசோ ” என்றபடி அவள் முன் அமர்ந்தான் கௌதமன்…

“நான் எதுவும் பண்ணலையே…. ”

“ஏன் இப்படி எல்லார்கிட்ட இருந்தும் ஒதுங்கி நிக்கிற ?? அங்கிள் அவ்வளோ வேதனை படுறார்..”

“ஓ!! என் உட்பி யா வரல போல… லாயரா வந்திருக்கிங்க”

“கேட்டதுக்கு பதில் சொல்லு யசோ”

“இது ஒன்னும் கோர்ட் இல்லை.”

“எனக்கு பொறுமை ரொம்ப கம்மி யசோதரா..”

எப்பொழுதாவது தான் கெளதமன் அவளை முழு பெயர் சொல்லி அழைப்பான்.. அப்படி அழைக்கும் நேரம் ஒன்று கோவமாய் இருப்பான் இல்லை வேறு எதாவது பிரச்சனையாய் இருக்கும்.. அது அவளுக்கும் தெரியும்..

“சொல்லுங்க கெளதம் என்ன ப்ராப்ளம்??”

“நீ ஏன் இப்படி இருக்க ??? இது தான் ப்ராப்ளம்… ”   

“எனக்கு இது தான் கம்போர்டா இருக்கு அதான்..”

“அதுனால எத்தனை பேர் மனசு கஷ்ட படுது தெரியுமா ??? சித்து அவ்வளோ அழுகுறா.. அவளுக்கு இந்நேரம் உன்னோட ஆறுதல் தேவை யசோ.. ஆன்ட்டி, அவங்களை நினைச்சு பாரு கொஞ்சம்..”

“என்னை பத்தி யாராவது நினைச்சாங்களா கெளதம்..”

“உன்னை பத்தி நான் நினைச்சா மட்டும் போதும் யசோ.”

“ஓ!! அப்படியா வக்கீல் சார். பின்ன ஏன் நாலு வருஷம் முகத்தை தூக்கிட்டு இருந்திங்க ???”

“அது உனக்கு சொல்ல தேவை இல்லை… ”

“அதே போல தான், நானும் ஏன் இப்படி இருக்கேன்னு சொல்ல தேவை இல்லை.”

இருவரின் பேச்சும் சற்று தடிக்கவே இருவருமே அமைதியாகினர்… சில நேர மௌனத்திற்கு பிறகு யசோதராவே ஆரம்பித்தாள்

“என்ன விசயமா வந்திங்க ??”

“மேரேஜ் ரெஜிஸ்டர் செய்யணும்.. அதுக்கு உன் சைன் வாங்க வந்தேன்.”

“ஓ !!!! சிட்டியோட பேமஸ் பிஸி யங் லாயர், ஒரு கையெழுத்துக்காக தன் வேலை எல்லாம் விட்டு இத்தனை தூரம் வந்தாரா??” என்று கிண்டல் செய்தபடி அவன் காட்டிய இடத்தில கையெழுத்திட்டாள்..

“உன் திமிர் எப்போதான் குறையும் யசோ ” என்றான் சிரித்தபடி..

“ஹ்ம்ம் குறையும்னு நினைக்கறிங்களா????”

“திருமதி கௌதமன் ஆனா பிறகு இன்னும் ஏறும்னு தான் நினைக்கிறேன்.” என்று அவன் கூறவும் இருவருமே சிரித்துகொண்டனர்…

சித்தாராவின் நிலை தான் இருக்க இருக்க மோசம் ஆகிக்கொண்டே போனது.. வீட்டில் யாரோடும் பேசுவதும் இல்லை… அவள் அறையை விட்டு வெளியே வருவதும் இல்லை.. தேன்மொழி என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார்..

“டி சித்து, ஏன் டி இப்படி இருக்க??? உன்னை பாக்க பாக்க எனக்கு கஷ்டமா இருக்கே டி” என்று அழுதார்..

“என்னை என்னதான் மா பண்ண சொல்ற???என்னால முடியல மா.. நீங்களும் யாரும் அத்தான்கிட்ட எதுவும் பேசமாற்றிங்க.. எனக்கு நல்லாவே புரிஞ்சிபோச்சு, உங்களுக்கு எப்போவுமே அக்கா தான் முக்கியம்.. இப்போ அவ கல்யாணம்ன்னு சொன்னதுமே எல்லாம் என்னை மறந்துட்டிங்க” என்று கதறி அழுதாள்..

தேன்மொழி மகளுக்கு என்ன ஆறுதல் கூறுவார்..

அவளது தலையை வருடியபடி “அப்படி எல்லாம் சொல்லாத சித்து… நானும் உங்க அப்பாவும் வருந்தாத நாள் இல்லமா.. ஆனா என்ன செய்ய யசோ கல்யாணமும் நம்ம பொறுப்பு தானே.. சொல்ல போனா அவளுக்கு தான் முதல் பேசிருக்கணும் சித்து..”

விலுக்கென்று நிமிர்ந்தவள் “அப்போ… அப்போ எல்லாம் என்னாலன்னு சொல்றியா மா ???” என்றாள் வெடுக்கென..

“ஹேய் என்ன டி.. இப்படி சொல்ற சித்து… நீ ஆசைபட்டன்னு தானே விசாகனை உனக்கு பேசினது.. ஆனா அவன் மனசு இப்படி இருக்கும்னு நாங்க என்ன கண்டோமா ?? இல்லை யசோ தான் எதா பிரச்சனை பண்ணாளா ?? இல்லியே டா.. எல்லாம் சரியா போகும் நீ அழாத..”

“ஹ்ம்ம் நீங்களும் இதை தான் தினமும் சொல்றிங்க மா.. அத்தை அப்படி எனக்காக பேசினாங்க இப்போ அவங்களும் சும்மா இருக்காங்க.. அப்பா என்னை கண்டுக்கவே இல்லை. என்னவோ பண்ணுங்க.” என்ற மகளை சமாதானம் செய்ய மேலும் சில நேரம் பிடித்தது தேன்மொழிக்கு..

 **************************************************************************************************

கௌதமன் யசோதரா திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.. சித்தாராவை வம்படியாய் அழைத்து வந்து அமர வைத்தாள் வசுந்தாரா.. அம்பிகாவும் கெளதமனுமே கூட அங்குதான் இருந்தனர்.. உறவுகளில் ஒருசிலறும் வந்திருக்க அவ்வீடு திருமண கலை கட்டியது..

தேன்மொழி அம்பிகாவிடம் யசோதராவின் நகைகளை எல்லாம் காண்பித்தார்.. “அண்ணி இதெல்லாம் யசோ அம்மா நகை.. அப்புறம் இதெல்லாம் எங்க குடும்ப நகை.. அவரோட அம்மா, அதான் என் அத்தை இதல்லாம் யசோக்கு குடுக்க சொல்லிட்டாங்க…” என்று காட்ட

அதை எல்லாம் பார்த்தபடி இருந்த கலைவாணியோ பொறாமை தீயில் வெந்தார்..

அம்பிகா “என்ன தேனு, இதெல்லாம் எதுக்கு என்கிட்டே காட்டிட்டு.. எங்களுக்கு தேவை யசோ மட்டும் தான்.. இதெல்லாம் போடுறதும் இல்லாததும் அவ விருப்பம்.” எனவும்

கலைவாணி “தேனு, நகை எல்லாம் அதோட அருமை தெரிஞ்சவங்களுக்கு தான் கொடுக்கணும்.. என் மருமகளுக்கு போடு.. என் அம்மா போட்டது எல்லாம் நான் பத்திரமா பார்த்துக்கிறேன்..” என்றார் கண்ணில் ஆசை பொங்க..

கெளதமனும் யசோதராவும் நக்கலாய் பார்த்துகொண்டனர்.. அந்நேரம் யாரும் எதிர் பார்க்காமல் வந்தான் விசாகன்.. அனைவருக்குமே அதிர்ச்சிதான்.. ஆனால் வசுந்தரா மிகவும் இயல்பாய்

“வாங்க விசுத்தான், என்னடா ஒரு கை குறையுதேன்னு பார்த்தேன்.. வந்துட்டிங்க.. வாங்க வாங்க உட்காருங்க” என்று அவனை சித்தாரா அருகில் அமரவைத்தாள்..

யசோதரா புரிந்துகொண்டாள் இது வசுவின் வேலை என்று.. வந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருக்க, வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களோ

“என்ன கலைவாணி சின்னவளுக்கு பரிசம் போட்ட நேரம் பெரியவளுக்கும் கல்யாணம் நடக்க போகுது போல.. ஆமா  அண்ணன் மக கல்யாணத்துக்கு என்ன செய்ய போற ??” என்று கேட்க திருதிருவென முழித்தார் கலைவாணி..

இப்படி பேச்சு ஆரம்பிக்கவுமே இளைய தலைமுறை நகர்ந்துவிட்டனர்.. வசுந்தரா தான் வம்படியாய் விசாகனையும் இழுத்து சென்றாள்.. ஆனாலும் அவர்கள் பேசுவது எல்லாம் கேட்கும் தூரத்தில் தான் அமர்ந்திருந்தனர்..

கலைவாணி “என்ன இப்படி கேட்டிங்க ?? அதெல்லாம் அவளுக்கு நிறைய செஞ்சாச்சு.. அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும், வளர்த்து ஆளாக்கி ஒரு நிலைமைக்கு கொண்டுவரதுன்னா சும்மாவா?? இந்த காலத்துல ஒரு பொண்ண வளர்கிறதே கஷ்டமா இருக்கு.. இதுல என் தம்பி மூணு பிள்ளைகளை வளர்த்தான்.. என் உதவி இல்லாமையா செஞ்சிருப்பான்.. ” என்று நொடிக்கவும்

தேன்மொழி “அண்ணி விடுங்க.. அவங்க எதோ கேட்கிறாங்க  ” என்று சமாதனம் செய்தார்..

ஆனாலும் வந்தவர்கள் வாய் சும்மா இருக்காமல் “அதென்ன வாணி இப்படி சொல்லிட்ட, அந்த ரெண்டு பிள்ளைகளும் யாரு ?? இந்த வீட்டு வாரிசு தானே..எதோ போனா போகுதுன்னு வளர்த்த மாதிரி சொல்ற… நீயா பார்த்த உன் தம்பி தானே பார்த்தான்” எனவும்

வந்ததே கோவம் கலைவாணிக்கு “ஆமாம் இந்த வீட்டு வாரிசு தான்.. ஆனா அவளுங்க ரெண்டு பேர்.. என் தம்பி மக ஒருத்தி.. இப்போ புரியுதா யார் பெரிசுன்னு.. நான் சும்மா ஒன்னும் சித்தாராவை பேசல.. எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாம  என் மகன் வாழ்க்கை இருக்கும்னு தான்.. பெரியவளை முடிச்சு இருந்தா சின்னவ பொறுப்பும் என் தலையில் விடிஞ்சிருக்கும்” என்று யார் இருக்கிறார்கள் இல்லையென்று கூட பாராமல் மனதில் இருந்ததை கொட்டி தீர்த்துவிட்டார் கலைவாணி..

அனைத்தும் அனைவரின் காதிலும் விழுந்தபடி தான் இருந்தது.. இதற்கு மறுத்தோ இல்லை பதிலோ வேத மூர்த்தியும் தென்மொழியும் கூறவில்லை..

இதை எல்லாம் கேட்ட சில நொடிகள் யசோதராவும் வசுந்தராவும் திகைத்துவிட்டனர் எனலாம்.. ஆனால் அதெல்லாம் ஒருசில நொடிகள் தான் யசோதரா கௌதமனை கண்டாள், அவனும் தான்..

பிறகு தங்கையை பார்த்து மெல்ல புன்னகை பூத்தாள்.. வசுந்தரா முகமும் தெளிந்துவிட்டது..

எத்தனை கோடி கோடியாய் பணம் இருந்தாலும், திறமை இருந்தாலும், நமக்கென்று இருக்கும் உறவுகள் இல்லையெனில் யாராகினும் இதே நிலைதான் என்று கலைவாணி உணரவில்லை..

வசுந்தரா “என்ன சித்து, இப்படி அமைதியா இருக்க.. அங்க பாரு அத்தை உன்னை பத்தி எவ்வளோ பெருமையா பேசுறாங்க.. நீ ஏன் இப்படி இருக்க ?? பாரு உன்னை பாக்க தானே விசுத்தான் வந்திருக்கார்,, பேசு” என்று அவளை ஊக்கினாள்.

விசாகனோ இதென்ன புது கதை என்பது போல பார்த்தான்..

வசுந்தரா “சி, நம்ம எல்லாருமே சின்ன வயசுல இருந்து ஒண்ணா தான் இருக்கோம்.. யாருக்கும்  யார் மேலவும் தனிப்பட்ட கோவமோ வெறுப்போ இல்லை.. சூழ்நிலை நமக்குள்ள இப்படி ஒரு திரை விழுந்திடுச்சு.. அதுக்காக ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காம பேசிக்காம இருக்கனுமா என்ன ??” என்று கேட்க அவள் கேட்டதில் நியாயம் இருப்பது போல் தான் தோன்றியது அனைவர்க்கும்..

கெளதமன் “வசு, பேசாம நீ என்கிட்டே ஜூனியரா சேர்ந்திடு மா.. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ” என்றான் மேச்சுதலாய்..

“மாமா, ஆனா உங்க எதிர்காலத்துக்கு கட்டம் சரியில்லை போலவே.. பாருங்க அக்கா எப்படி பார்க்கிறான்னு..” என்று அவனை மாட்டிவிட..

அவனோ “பல வருசமா பார்த்துட்டு தான் இருக்கா வசு.. அதுமட்டும் தான் செய்வா” என்று தன் வருங்கால மனைவியை சீண்டினான்..

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த விசாகன் “ஐம் சாரி யசோ ” என்றான் மெல்ல.. அவள் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவில்லை மெல்ல தலையை மட்டும் ஆமோதிப்பாய் ஆட்டினாள்..

தனியே பேச சந்தர்ப்பம் கிடையாது என்றெண்ணி அனைவரும் இருக்கும் பொழுதே பேச்சை தொடங்கினான் விசாகன்..

“யசோ நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. ப்ளீஸ் கொஞ்சமே கொஞ்ச நேரம் தான்.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத..” என்றான் கெஞ்சாத குறையாய்..

இதற்கு என்ன பதில் கூறுவது என்பது போல் கௌதமனையும் சித்தாரவையும் பார்த்தாள் யசோதரா.. சித்தரவிடம் எவ்வித பதிலும் இல்லை.. கௌதமனோ இன்றாவது பேசி முடி என்பது போல் பார்க்கவும் விசாகனோடு எழுந்து சென்றாள்..

அவர்கள் செல்வதை கண்டதும் வேகமாய் கலைவாணி வர, அவரை தடுத்து நிறுத்தியது வேறு யாருமில்லை சித்தாரா தான்..

“அத்தை ப்ளீஸ் இன்னிக்காவது ஒரு முடிவு வரட்டும்..” என்று அழுத்தமாய் கூறவும் வேண்டா வெறுப்பாய் நகன்றார் கலைவாணி..

விசாகனின் முதல் கேள்வியே “ஏன் யசோ இந்த இப்படி ஒரு முடிவு எடுத்த ???” என்பது தான்..

“ஏன் விசுத்தான் ?? ”

“உனக்கென்ன தலை எழுத்தா ரெண்டாவதா போகணும்னு.. ப்ளீஸ் யசோ இன்னும் நேரம் இருக்கு.. வேண்டாம்னு சொல்லு.. இங்க பாரு உனக்கு என்னை கல்யாணம் செய்ய விருப்பம் இல்லையா சரி.. ஆனா அதுக்காக ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்த ?? உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் யசோ ”

“ஏன் கெளதம்க்கு என்ன குறைச்சல்?? ”

“எந்த குறையும் இல்லை.. ஆனா… நீ… இது.. அவனுக்கு ரெண்டாவது…”

“போதும் விசுத்தான்… கெளதம் பத்தி யாரும் பேசுறதை நான் விரும்பலை.. இது என்னோட சொந்த முடிவு.. ஒண்ணு ரெண்டெல்லாம் இல்லை.. நான் அவரோட மனைவி அதுமட்டும் தான் எங்களுக்குள்ள போதுமா.. எங்களோட உறவு யாருக்கும் சொல்லி புரியவைக்கிறது இல்லை..”

“இதை நான் உன்கிட்ட கொஞ்சம் கூட எதிர் பார்க்கல யசோ…  ”

“நான் கூடத்தான் விசுத்தான்… நீங்க வீட்டை விட்டு போவிங்கன்னு நினைக்கல.. அதுனால வந்த பிரச்சனையை பார்த்திங்களா?? இதோ பாருங்க விசுத்தான் என் லைன் கிளியரா இருக்கு.. இப்போ உங்க வாழ்க்கைக்கு முடிவு எடுக்கவேண்டிய நேரம் இது அதை மட்டும் பாருங்க..”

“இனிமே எனக்குன்னு என்ன இருக்கு யசோ… ”

“எனக்கு சும்மா இப்படி டயலாக் பேசுறதெல்லாம் பிடிக்காது விசுத்தான்.. இதல்லாம் நீங்க சித்துவை பரிசம் போட வரதுக்கு முன்ன யோசிச்சு இருக்கணும்.. அப்போ ஏன் அமைதியா இருந்திங்க ??? ஒன்னும் அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுங்க, இல்லை அவ மனசை மாத்த பாருங்க… அதைவிட்டு இப்படி அமைதியா இருந்தா எதுவும் ஆகபோறது இல்லை..” என்றுவிட்டு அவனது பதிலுக்கு காத்திராமல் கெளதம் இருந்த இடம் நோக்கி வந்துவிட்டாள்..

அவள் முகம் பார்த்தவன் “உன்னை பேசிட்டு வர சொன்னா எதுக்கு அவனை திட்டிட்டு வந்த ??” என்று கேட்டான்..

“பார்த்த மாதிரி பேசுறிங்க ??” என்று புருவம் உயர்த்தினாள்..

“உன் முகம் பார்த்தாலே தெரியுதே.. ஹப்பா மிலகாய் நெடி…” என்று கூறிவிட்டு வேண்டுமென்றே தும்மினான்..

“நீங்க இருக்கிங்களே… ” என்றவள் விசாகன் வரவும் அமைதியாகிவிட்டாள்..

சித்தாரா கேள்வியை விசாகனை நோக்கவும் அவன் தலை குனிந்துகொண்டான்..

“ஹ்ம்ம் இதெல்லாம் வேலைக்காகாது போலவே, விசுத்தான் நீங்க நீங்க சித்துக்கு ஒருபதில் சொல்லித்தான் ஆகணும்” என்று விசயத்தை போட்டு உடைத்தாள் வசுந்தரா..

“வசு ” என்று யசோதரா அதட்ட, எதுவும் பேசாதே என்பது கௌதமன் அவள் கரங்களை பற்றி அழுத்தினான்..

“சொல்லுங்க விசுத்தான்…  ” என்று மேலும் ஊக்கினாள் வசுந்தரா..

“என்ன சொல்லணும் வசு… ”

“நீங்க ஏன் பரிசம் போட சம்மதம் சொல்லிட்டு, அப்புறம் வீட்டை விட்டு வெளிய போனிங்க? தப்பு தானே விசுத்தான்.. ”

சித்தாராவோ எதுவும் பேசாமல் நடப்பது அனைதையும் கவனித்தபடி இருந்தாள்.. அவளை விசாகனிடம் எதுவும் கேட்கவும் இல்லை பேசவும் இல்லை..

“தப்பு தான் வசு..  ” என்றான் விசாகன்..

“ம்ம் சித்து, விசுத்தான் அவங்க தப்ப ஒத்துகிட்டாங்க.. ஆனா நீ எப்போ உன் தப்பை சரி பண்ண போற ??” என்று கேட்டாள்..

சித்தாராவோ எதுவும் புரியாமல் பார்த்தாள்..

“நீ முதல்ல உன் காதலை யாருகிட்ட சொல்லிருக்கணும் விசுத்தான கிட்ட தானே.. அதை சொல்லாம ஏன் நீ வீட்டில் பேசின?? அவர் மனசில என்ன இருக்குனு தெரிஞ்சும் நீ இப்படி பண்ணது தப்புதானே சித்து…” எனவும் அவளும் ஒப்புகொள்வது போல் தலையசைத்தாள்..

“பிறகு ஏன் அப்படி பண்ண சித்து…?? ”

“அவர ரொம்ப விரும்பினேன்.. அவர் மனசில என்ன இருந்தாலும் சரி நான் தான் அவருக்கு மனைவியா ஆகனும்னு வீட்டில் பேசுனேன்.. அத்தை பேச்சை மீர மாட்டார்னு எனக்கு தெரியும் அதனால தான்.. கல்யாணம் ஆகிட்டா  எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்…”

“ஆனா எதுவுமே சரியாகாம பிரச்சனை தானே வந்தது ” என்று கேட்டது கௌதமன்..

“ஆமா அதுக்கு தான் நான் இப்போ ஒரு முடிவு எடுத்திருக்கேன்” என்றாள் சித்தாரா..

இளையவர்கள் பேசும் விஷயம் அறிந்து  தேன்மொழி, அம்பிகா வேத மூர்த்தி அனைவருமே அங்கு வந்து சேர, அனைவரும் சித்தாராவின் பதிலுக்காய் காத்திருந்தனர்..

“எல்லாமே என் தப்பு தான்.. நான் தான் பிடிவாதம் பண்ணேன்.. விசுத்தான் எனக்கு வேணும்னு.. ஆனா அவர் மனசில என்ன இருக்குன்னு கொஞ்சம் கூட யோசிக்கல.. அது என் தப்பு தான்… அதான் நான் பண்ண தப்பை நானே சரி செய்யலாம்னு இருக்கேன்..”

கலைவாணி இவள் என்ன கூற போகிறாளோ என்பது போல் பார்க்க, தேன்மொழி தன் கணவரின் முகத்தை கவலையாய் பார்த்தார்..

“இந்த கல்யாணம் வேண்டாம்…. விசுத்தான் நீங்க என்னை முன்னிட்டு யார் கேள்விக்கும் பதில் சொல்லவேணாம்.. பழைய மாதிரி இருப்போம்.. நான் பண்ண தப்பை மன்னிச்சிடுங்க…” என்றதும் அனைவரின் முகமும் அதிர்ச்சி பாவனை காட்ட கௌதமனின் முகம் மட்டும் துலக்கி வைத்த பாத்திரம் போல் தெளிவாய் இருந்தது..

 

 

 

 

 

 

 

 

Advertisement