Advertisement

அத்தியாயம் – 4

அருகில் நிற்பது அவன் என்று புரிந்தாலும், பாதி திரும்பி கழுத்தையும், மனதையும் இழுத்து பிடித்து பிடிவாதமாய் நேராய் நிறுத்தினாள் யசோதரா.. பேசு என்று ஒருபுறம் மனம் சொன்னாலும், வேண்டாம் என்று முரண்டியது அதே மனம்..

“இப்போ ஏன் வந்தான்.. இவ்வளோ நடக்கும் போதும் அமைதியா இருந்துட்டு இப்போ மட்டும் ஏன் வரணும்???” என்று மனதில் முனங்கியவளுக்கு,

“இப்போ நான் வரலைனா நீ எனக்கு கால் பண்ணிருப்ப ” என்றான் கௌதமன்..

விலுக்கென்று திரும்பியவள், அவனை ஒரு முறை முறைத்துவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டாள்..

“சரி சொல்லு யசோ நான் என்ன பண்ணனும்??”

“நாலு வருசத்துக்கு முன்ன என்கிட்டே ஒரு கேள்வி கேட்டிங்க கெளதம்”

“ஹ்ம்ம் அந்த கேள்விக்கான ஆயுள் முடிஞ்சு போச்சு யசோ.. அதுவும் இல்லாம இந்த நாலு வருசத்தில நிறைய நடந்து போச்சு உனக்கே தெரியும்.”

“என் முன்னாடி நீங்க வச்ச கேள்விக்கு நான் பதில் சொல்லாத வரைக்கும் எப்படி அதோட ஆயுள் முடியும் கெளதம்.. கேட்கிற வரைக்கும் தான் அது உங்களது, கேட்டபிறகு அது என்னோடது.”

“சந்தோசம்… ”

“எது ????”

“நீ சொல்ல வந்ததை சொல்லு யசோ.”

“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் கெளதம்..”

சில நொடி அங்கே அலைகளின் சத்தத்தை தவிர வேறு எதுவுமே இல்லை… மனதில் தோன்றியதை கூறிவிட்டாள் தான், ஆனாலும் அவன் என்ன சொல்வானோ என்ற நெருடல் இல்லாமல் இல்லை.. முன்னொரு காலத்தில் இதே இடத்தில் வைத்து தான் அவனை உதாசீன படுத்தினாள்..

அதனால் வந்த விளைவுகள், கெளதமனது வாழ்வையே புரட்டி போட்டது அவனுக்கும் அவளுக்கும் தானே தெரியும்…

“கல்யாணம்ங்கிறது இப்படி பட்ட ஒரு சூழ்நிலைல முடிவு பண்ண கூடாது யசோ..”

“உங்கட்ட வில் யு மேரி மீன்னு கேட்கலை.. கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவை தான் சொன்னேன்..”

“ஹ்ம்ம் இந்த திமிர் உன்னை விட்டு போகவே இல்லை யசோ.. அன்னிக்கும் இன்னிக்கும்.”

“உங்களுக்கு இருக்கிறதுக்கு பேர் என்ன கெளதம்…..??”

“ஹ்ம்ம் இப்போ எதுக்கு யசோ இந்த முடிவு எடுத்திருக்க, எதிலிருந்து தப்பிக்க நீ என்னை கல்யாணம் பண்ண நினைக்கிற ???” அவனது முகத்தில் இருந்து எவ்வித உணர்வையும் அவளால் கண்டுகொள்ள முடியவில்லை..

ஆனால் அவனுக்கா தெரியாது யசோதாராவின் மனதில் என்ன இருக்கும் என்று..

“நீங்க சொன்னது தான் கெளதம், ஏதாவது ஒரு சூழ்நிலைல நமக்குன்னு ஒரு ஆள் வேணும், எல்லாத்தையும் விட நமக்கே நமக்குன்னு ஒரு துணை தேவை, தோள் சாய, உரிமையா சண்டை போட,  இன்னும் நிறைய… நீங்க சொன்னதை உங்களுக்கே திருப்பி சொல்லனுமா என்ன ??”

“அப்படிப்பட்ட ஒரு உணர்வு தோணும் போது, உனக்காக நான் இருப்பேன்னு சொன்னேன்..”

“ம்ம் அதான் கெளதம் சொன்னேன் கல்யாணம் பண்ணிக்கலாம்னு…”

“ஆனா நான் கல்யாணத்தை பத்தி யோ…….. ”

“நீங்க யோசிச்சு முடிவு சொல்லாமையா ஆன்ட்டி உங்களுக்கு பொண்ணு பாக்குறாங்க அதுவும் நீங்க போட்ட ஆயிரம் கண்டிசனோட…”

பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துகொண்டான் கெளதமன்.. நான்கு வருடத்திற்கு முன்பே இதே இடத்தில் தான் யசோதராவிடம் திருமணம் செய்துகொள்வோமா என்று கேட்டான் கௌதமன்.. அவள் மறுத்ததற்கான காரணங்களோடு இன்னும் சிலதும் சேர்ந்து அப்படியே இருக்கின்றன..

அன்று நடந்தது எல்லாம் அப்படியே அவன் கண் முன்னே வந்து போனது..

“என்ன கெளதம் ???”

“நினைச்சு பார்த்தேன்…. ”

“ம்ம்… ”

“யசோ நீ அன்னிக்கு சொன்ன காரணங்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கு இன்னும். அதே ஏழு வயசு வித்தியாசம்..”

“அப்போ பெரிசா பட்டது இப்போ படல.”

“என் குணத்துக்கும் உன் குணத்துக்கும் ஒத்து போகாதுன்னு சொன்ன… ”

“இப்போ போகும்னு நினைக்கிறேன்..”

“இப்போ நான் ஒரு விடோயர் யசோ…. ”

இதை கூறும் போது அவன் குரலில் பிசிறு தட்டியதோ என்னவோ, யசோதராவின் மனதில் அத்தனை வலி நிரம்பியது..  தன்னுடைய அறியாமையால் எத்தனை பெரிய இழப்புகள் நேர்ந்தன..

ஆனால் இன்று வரைக்கும் கௌதமன் ஒரு வார்த்தை அதை பற்றி பேசியிருப்பானா??

“அதை மட்டும் சொல்லாதிங்க கெளதம்…. உன்… உங்களுக்கு.. உங்களுக்காக எப்போவுமே நான் இருக்கேன்..”

“ஆனா அன்னிக்கு ஏன் இல்லாம போன யசோ… ” அவனது குரலில் அத்தனை வேதனை ஏக்கம் எல்லாம்…

“நான் மறுத்தாலும், நீங்க சித்தப்பா கிட்ட பேசியிருக்கலாமே கெளதம்… ஏன் பண்ணல, நான் வேண்டாம்னு சொன்ன அடுத்த நாளே நீங்க உங்க வீட்ல பார்த்த பொண்ணுக்கு சரி சொன்னிங்களே.”

“நான் ஏன் அப்படி சொன்னேன்னு உனக்கு தெரியாதா ???”

கெளதமனது குரலில் இருந்த கோவம் அவளுக்கு புரிந்தது… எத்தனை ஒரு அழகான வாழ்கை அமைந்திருக்கும்.. ஆனால் அன்று மறுத்துவிட்டு, இன்று  மீண்டும் ஆரம்பிக்கிறாள்.. இழந்ததை எண்ணி அவனது ஏக்கம் எல்லாம் கோவமாய் தோன்றியது..

“அப்கோர்ஸ் தெரியும்.. உங்கப்பாக்காக… அவரோட கடைசி நேரத்து விருப்பத்துக்காக… ஆனா கெளதம்.. நீங்க அன்னிக்கே சித்தப்பா கிட்ட பேசியிருந்தா அவர் நிச்சயம் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருப்பார்..    ”     

“ஆனா நீ… ???நான் உன்னை ஜெயிச்சுட்டதா தானே நினைப்ப…. உன் மனசில என் மேல ஒரு வெறுப்பு தான் தோணியிருக்கும். அது கடைசி வரைக்கும் மாறியிருக்காது.”

அவன் கூறியதை கேட்டு யசோதராவிற்கு அந்நேரத்திலும் சிரிப்பு எழுந்தது..

“இதுவே போதாதா கெளதம்.. உங்களை தவிர வேற யாரும் என்னை இவ்வளோ புரிஞ்சது இல்லைன்னு.. அப்போ எனக்கு இருவது வயசு கெளதம்… நான் கல்யாணத்தை பத்தி அப்போ யோசிக்கவே இல்லை… அதான் மறுத்தேன்.. அதுவும் இல்லாம வயசு…. ஹ்ம்ம் அப்போ நிஜமாவே ரொம்ப வித்தியாசமா தான் பட்டது.”

“ஹ்ம்ம் அப்போ எனக்கிருந்த சூழ்நிலை நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றதை தவிர வேற வழி இல்லை யசோ.. அப்பாக்காக பார்ப்பேனா இல்லை என் காதலுக்காக போராடுவேணா? அவர் மூச்சு திணறலோட என் மணக்கோலத்தை பார்க்கணும் சொல்லும் போது, இல்லயில்ல நான் என் காதலிக்காக காத்திருப்பேன்னு சொல்ல முடியுமா.??”

“நடந்த எதையும் மாத்தவும் முடியாது மறக்கவும் முடியாது கெளதம்.. ஆனா நம்ம அதை எல்லாம் தாண்டி வாழ்ந்து தானே ஆகணும்…”

“இது கூட நான் சொன்னது தான் யசோ… ”

“அதை உங்களுக்கே திருப்பி சொல்றேன் அவ்வளோதான்.. ”

“நீ கல்யாணம் பேசுறது கூட பிசினெஸ் டீலிங் பேசுறது போல இருக்கு..”

“நீங்க கூட வாதாடுற மாதிரி தான் இருக்கு.. வாய்தா வாங்காம இருந்தா சரி..”

மனதை அழுத்தும் பாரம் இல்லை… முன்னே பின்னே நடந்த கசப்பான சம்பவங்கள் நினைவில் இல்லை… எதிர் காலம் பற்றிய கவலையும் இல்லை.. ஆனாலும் மனதில் ஒரு நிம்மதி அமைதி முளைத்தது போல உணர்ந்தனர் இருவரும்..

அதன் காரணம் இருவரும் அறிவர்….

“நாளைக்கு அம்மாகிட்ட பேசிட்டு வந்து உன் சித்தப்பாக்கிட்ட பேசுறேன்… ”     

“ஆன்ட்டி………………???!!!!!!!!!! ”

“என் முடிவு தான் அவங்களதும்… ”

“ஹ்ம்ம் ஆனா ஒன்னு சித்தாரா விசாகன் கல்யாணத்துக்கு முன்ன நம்மளது நடக்கணும்… ”

“விசாகன் ????!!!!!”

“விசுத்தான எப்படி வீட்டுக்கு கொண்டு வரதுன்னு உங்களுக்கு சொல்லி கொடுக்கனுமா என்ன ???”

“ஹ்ம்ம் !! அதுவும் என்னது தானா…. சரி நாளைக்கு பாப்போம்…”

அவனும் கிளம்பிவிட்டான்.. அவளும் கிளம்பி விட்டாள்… வீடு வந்த சேர்ந்தவளை எங்கே போனாய் என்று யாரும் கேட்கவில்லை..

தேன் மொழி மட்டும் காத்திருந்தார்..

“யசோம்மா.. ”

அவரது குரலில் இருந்த தவிப்பு உண்மையா பொய்யா என்று சடுதியில் குழம்பி போனாள் யசோதரா.. எது என்னவாக இருந்தாலும் சரி… தான் இனிமேல் ஏமாளியாக இருக்க கூடாது…

“என்ன சித்தி… ”

“அது.. அது வந்து டா…”

“இங்க பாருங்க சித்தி.. எனக்கு உங்க யார் மேலயும் கோவமோ வருத்தமோ இல்லை.. சோ தயங்காம நீங்க என்ன சொல்லணுமோ சொல்லுங்க..”

“இல்லை.. அது…. விசாகன் எங்க இருக்கான்னு..”

“எனக்கு தெரியாது சித்தி… ”

“இல்லை நீ பேசினா…”

“சித்தி… எனக்கும் இந்த கல்யாணத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை… விசாகன் தான் மாப்பிளைன்னு என்கிட்ட யாரும் சொன்னிங்களா என்ன.. ப்ளீஸ் சித்தி என்னை எதுவும் கேட்காதிங்க.. இதெல்லாம் முன்ன இருந்து நீங்க எல்லாம் எப்படி ஏற்பாடு பண்ணிங்களோ அப்படி பண்ணுங்க என்ன.”

நேற்று வரை யசோதரா இப்படியெல்லாம் பேசியது இல்லை.. ஆனால் இன்றும் கூட அவள் மரியாதை குறைவாய் எதுவும் பேசிடவில்லை தான் இருந்தாலும் அவள் மனம் அத்தனை வருந்தியது..

பதில் எதுவும் கூறாமல் முகம் தொங்க நடந்து போன தேன்மொழியை வருத்தமாய் தான் பார்த்தாள்..

“இப்போ கூட இவங்க பொண்ணுக்காக தானே கேட்கிறாங்க ” என்று எண்ணம் தோன்ற அடுத்த நொடி அவளது வருத்தம் மறைந்தது.. மறுநாள் கௌதமன் மற்றும் அவனது அன்னையின் வரவுக்காய் காத்திருந்தாள்..

வீட்டிற்கு சென்ற கௌதமன் அன்னையிடம் என்ன பேசினான், அவர் என்ன கூறினார் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை.. அதையெல்லாம் யோசித்து யோசித்து யசோதரைக்கு உறக்கம் வராமல் எல்லாம் இல்லை.. மிக நன்றாய் உறங்கினாள்..

அங்கே கௌதமனுக்கோ நேர்மாறாய் இருந்தது…

“என்ன இது.. இவளுக்கு ஆறுதல் சொல்ல போனா, நமக்கே இப்படி திருப்பிட்டா.. அம்மாகிட்ட வேற எப்படி ஆரம்பிக்க..” என்று யோசனையில் இருந்தவனை

“கௌதமா சாப்பிட்டிட்டு போய் எதுவும் யோசனை பண்ணு…” அழைத்தார் அம்பிகா..

அமைதியாய் வந்து அமர்ந்தவனை ”என்ன கெளதம்.. எதுவும் முக்கியமான கேசா?? இவ்வளோ சீரியஸா இருக்கு உன் முகம் ???”

“இல்லைமா…. ” என்று யோசித்தவன்

“முதல்ல சாப்பிடுவோம் மா.. அப்புறமா பேசலாம் சரியா… ” என்று அன்னைக்கும் இட்டு தானும் உண்டான்..

கௌதமனை காணும் போதெல்லாம் அம்பிகாவிற்கு தோணும் இவனது வாழ்கை ஏன் இப்படி ஆனது… ஒரு வார்த்தை வீட்டில் யாரையும் எதிர்த்து பேசியது இல்லை.. அவனது விருப்பு வெறுப்புகளை சொல்லியதில்லை.. பிடித்தமோ இல்லையோ பெற்றோர் சொல்வதை செய்வான். மகனது முகத்தையே பார்த்தபடி இருந்தார்..

“ம்மா இட்லி அங்க இருக்கு.. என் முகத்தில் இல்லை..”

“உனக்கு எப்போடா நல்லது நடக்கும்…?? ”

“ம்மா.. இதை பத்தி நானே உங்கட்ட பேசணும்னு இருந்தேன் ”

“சொல்லு கெளதம்”

“நம்ம யசோ பத்தி என்னமா நினைக்கறிங்க… ”

“அவளுக்கு என்ன டா.. தங்கமான பொண்ணு.. ஆனா அவளுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரவேண்டாம்.. ச்சே எவ்வளோ ஏமாற்றம் இல்லையா.. ஆனா வேதாவும் தேனும் ஏன் இப்படி நடந்துகிட்டாங்க தெரியலையே.. கலைவாணி முன்ன இருந்தே இப்படிதான்… ” என்று அவர் பாட்டில் பேசவும்

“அம்மா அம்மா…. போதும்… நான் யசோதராவை பத்தி பேசிட்டு இருக்கேன்..”

“அதை தானே டா நானும் சொல்லிட்டு இருக்கேன்.. இன்னிக்கு நடந்ததை தான் பார்த்தோமே..”

“ம்மா நான் இனிமே நடக்க போறதை பத்தி பேசுறேன்…”

“அட என்னன்னு புரியுற மாதிரி தான் சொல்லேன் டா… ”

“அதும்மா… வந்து… நான்.. இல்ல.. நாங்க… அதான் மா…”

“கெளதம்… கோர்டில கூட நீ இப்படி திக்க மாட்டியே டா” என்று கேலி செய்தார்.. மகன் சொல்ல வருவது அவருக்கு புரிந்தாலும் அவனே கூறட்டும் என்று எண்ணினாரோ என்னவோ.. 

“ம்மா.. அது.. யசோவை எனக்கு கேக்குறிங்களா மா???”

இதை கேட்பதற்குள் கெளதம் முகத்தில் எத்தனை பாவங்கள்.. அவன் திருமணத்தின் போது  கூட மிக மிக இயல்பாய் இருந்தான்.. இல்லை அப்படி காட்டிகொண்டானோ என்னவோ…

சில நொடிகள் அவன் முகத்தையே பார்த்தார் அம்பிகா… வேறு எதுவும் கேட்காமல்

“சரி நாளைக்கு போய் பேசிட்டு வரலாம்.. ” என்றுமட்டும் கூறிவிட்டு வேறு எதுவும் கேட்கவும் இல்லை, சொல்லவும் இல்லை..

அன்னையின் சம்மதம் கிட்டினாலும், இப்பொழுது இந்த திருமணம் சரிதானா என்ற கேள்வி கெளதமனது மனதில் எழாமல் இல்லை.. ஆனால் இப்பொழுது விட்டால்  வேறு எப்பொழுதுமே யசோதராவின் மனம் மாறாது… எதுவானாலும் சரி நாளை சென்று பேசியபிறகு அவளிடம் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாய் இருந்துவிட்டான்..

மறுநாள் வேத மூர்த்தி, தேன்மொழி, கலைவாணி, சித்தாரா முகத்தில் அத்தனை அதிர்ச்சி.. அதிலும் சித்தாரா முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது..

அம்பிகா “என்ன வேதா, நல்ல விஷயம் பேச வந்திருக்கேன், இப்படி அமைதியா இருந்தா எப்படி..” எனவும்

“எனக்கொன்னும் இல்லைக்கா.. ஆனா இதுல யசோ விருப்பம் முக்கியம் தானே   ” என்று அவள் முகம் பார்க்கும் பொழுதே கலைவாணி

“இங்க பாரு தம்பி,  நேத்து நடந்ததுக்கும் இன்னிக்கு இவங்க வந்ததுக்கும் யோசிச்சு பாரு.. எல்லாம் இவ வேலை தான்… அப்புறம் ஏன் அவ விருப்பம்னு இழுக்குற. பொறுப்பை முடிக்கிற வேலை பாரு.” என்றார் கறாராய்..

கௌதமன் “அங்கிள், இங்க நடந்ததுக்கும் எங்க கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அப்படிதான்னு நீங்க நினைச்சா எங்கனால எதுவும் செய்ய முடியாது.. எனக்கு யசோவ பிடிச்சு இருக்கு.. அவளுக்கும் இதில் சம்மதம் தான்.. இப்போ உங்க முடிவை தான் கேட்டு வந்திருக்கோம்.”

“பாத்தியா பாத்தியா டா தம்பி… நம்ம எல்லாம் இங்க குத்து கல்லாட்டம் இருக்கோம்.. இவளே எல்லாம் முடிவு பண்ணிட்டு, ஒன்னும் தெரியாதவ மாதிரி நிக்கிறா… அய்யோ!!! இந்த திறமை உனக்கில்லாம போச்சே டி என் மருமகளே ” என்று சித்தாராவை பார்த்து நீலி கண்ணீர் வடித்தார்..

அம்பிகாவோ “போதும் கலைவாணி…. நாங்க கல்யாணம் பத்தி பேச வந்திருக்கோம்.. சும்மா இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்றது எல்லாம் நீ தனியா இருக்கும் போது பண்ணு.. வேதா தேனு உங்க முடிவு என்ன?? முடியாதுன்னா அதையும் சொல்லிடுங்க.. நாங்க இப்போவே யசோவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறோம்.. ” என்று அழுத்தமாய் கூறவும் கௌதமன், யசோதராக்கே ஆச்சரியமாய் இருந்தது..

இதற்குமேல் வேத மூர்த்தி என்ன கூற முடியும் சம்மதம் என்பதை தவிர.. அதுவும், ஒரு தகலாகவே இவ்விசயம் தன்னிடம் தெரிவிக்கபடுகிறது என்பதை உணர்ந்த பின்னர்..

சித்தாரா முகத்தில் குழப்ப ரேகைகள் ஓடின.. தேன் மொழிக்கு மகிழ்ச்சிதான்.. அது போல கட்டிகொண்டாரோ என்னவோ..

“உன் மனசுக்கே நீ நல்லா இருப்ப யசோ… ” என்று நெட்டி முறித்தார்..

அடுத்தடுத்து இரு வீட்டாரும் பேசி, ஒருவழியாய் திருமண நாளும் குறித்தாகிவிட்டது. அனைத்தையும் அமைதியாய் தான் யசோதரா பார்த்துகொண்டிருந்தாள்.. மனதில் சந்தோசம் ஏழ வேண்டிய தருணம் தான், ஆனால் அவ்வித உணர்வுகள் எதுவும் இல்லாமல் எதையோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..

தன் கரங்களை யாரோ தொடுவது உணர்ந்து, கௌதமனோ என்ற எண்ணத்தில் நிமிர்ந்தாள், ஆனால் எதிரே இருந்தது சித்தாரா..

“அக்கா…. ”

“சொல்லு சித்து…. ”

“அக்கா… ப்ளீஸ்… என்மேல கோவமா கா… எதுன்னாலும் என்கிட்டே பேசுக்கா.”

“என்ன பேச சொல்ற சித்து…. ”

“அக்கா ப்ளீஸ்… இப்படி யாரோ மாதிரி எல்லாம் பேசாத… ஏன் கா இப்படி இவ்வளோ அவசரமா இந்த கல்யாண முடிவு எடுத்த?? வேண்டாம் கா… அதுவும் ரெண்டாவதா.” என்று சொல்லி முடிக்கவில்லை

“ஷட் அப் சித்து ” கத்திய விட்டாள் யசோதரா…

அரண்டு போய் விழித்தாள் சித்தாரா… இப்படி ஒரு சீற்றத்தை யசோதராவிடம் இருந்து அவள் எதிர்பார்க்கவில்லை..

அவளது தோற்றம் யசோதராவின் மனதை சற்றே அசைத்தது.. ஆனாலும் அதெல்லாம் சில நொடிகள் தான்..

“இங்க பாரு சித்து, உன் கல்யாணத்தை பத்தி நான் கேட்டேனா ?? இல்லை நீ தான் சொன்னியா ?? இல்லயில்ல.. பிறகு நீ மட்டும் என்கிட்டே ஏன் இதை பத்தி பேசுற ?? அப்புறம் இன்னொன்னு, ரெண்டாவது அது இதுன்னு பேசின அப்புறம் நான் செய்வேன்னு எனக்கு தெரியாது…” என்று கோவத்தை அடக்கி, அழுத்தமாய் பேசியவளை விழிகள் விரித்து பார்த்தாள் சித்தாரா..

யசோதரா மாறிவிட்டாளா இல்லை தாங்கள் தான் மாற்றிவிட்டோமா என்று தோன்றியது.. சில நொடிகளில் உதித்த சுயநலம், அழகிய உறவை அழித்து விட்டது..

விரிசல் விட்டது, விட்டது தானே.. ஓட்டினாலும் வித்தியாசம் தெரியுமே..

அமைதியாய் அமர்ந்திருந்தாள் சித்தாரா.. யசோதராவும் எதுவும் பேசவில்லை.. அனைத்தும் பேசி முடித்து சொல்லி செல்லவென்று கௌதமன்  அங்கே வந்தான்..

அவன் வந்ததும் சித்தாரா இருப்பதா, போவதா என தெரியாமல் திணறினாள்..

“இப்போ ஹெல்த் எப்படி இருக்கு சித்து..” என்று அவன் வினவவும்

“ஹா… ந.. நல்லாருக்கு.. மா.. மாமா… இனிமே அப்படிதானே கூப்பிடனும்..”

சித்தாரா அப்படி கூறியதும் கௌதமனிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

“நீ வேணா அப்படி சொல்லுவ சித்தாரா.. ஆனா உன் அக்கா நிச்சயமா அப்படி சொல்லமாட்டா..” எனவும் யசோதரா முறைத்தாள்..

சித்தாராவிற்கு இவர்கள் இருவரையும் காணும் பொழுது, அத்தனை ஏக்கமாய் இருந்தது.. எத்தனை இயல்பான உறவிது.. தனக்கு மட்டும் ஏன் இப்படி அமையவில்லை.?? என்ற எண்ணம் தோன்ற வேகமாய் கண்களை துடைத்துக்கொண்டு வெளியேறினாள்..

அவள் சென்றதும் “ஏன் யசோ அவகிட்ட கோவமா பேசின ???” என்றான்..

“வேண்டுதல்…. ”

“ம்ம்ச் யசோ… அவ பாவம் உடம்பு சரியில்லாம இருக்கா… அவளோட காதலுக்காக அப்படி முட்டாள் தனமா நடந்துகிட்டா”

“எப்போ இருந்து சித்தாராக்கு வக்கீலா ஆனிங்க??? ”

அத்தனை நக்கலாய் அவள் கேட்கவும் அதற்கான பதில் எதுவும் சொல்லாமல்

“சொல்லிட்டு போகத்தான் வந்தேன் யசோ” என்றான்..

“ம்ம் சரி.. அப்புறம் நான் சொன்னது  ” என்று அவள் இழுக்கவும்

“ஏற்பாடு பண்ணிட்டேன்.. நாளைக்கு எதிர் பார்க்கலாம் ” என்றான்..

“ம்ம் நல்லது”

“சரி கிளம்பட்டுமா… ”

“கெளதம்…. ”

“என்ன யசோ…. ”

“என் மேல எதுவும் கோவமா ??? ”

அவளது இக்கேள்வியை கேட்டு ஆழ்ந்து நோக்கினான் கௌதமன்..

“கேட்கிறேனே….”

“நீ கேட்கிற எல்லா கேள்விக்கும் என்கிட்டே பதில் இருக்காது யசோ… நீ சொன்னதை இப்போ நான் செய்யுறேன்.. அவ்வளோதான்”

“அப்போ எனக்காக தான் கல்யாணம் பேச வந்திங்களா??? ”

“இல்லைன்னு பொய் சொல்லமாட்டேன்…”

“அப்போ உங்க லவ் எல்லாம் அன்னிக்கு ஒருநாளோட முடிஞ்சதா ???”

“உன் மனசில இப்போ என் மேல காதல் இருக்கா என்ன ???”

அவன் கேட்ட கேள்வியில் பதில் கூற முடியாமல் திகைத்துத்தான் போனாள் யசோதரா..

ஆனால் அடுத்த நொடியே இருவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.. மேலும் சில நொடிகள் பேசிவிட்டு விடைபெற்று சென்றான் கௌதமன்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement